முன்னுரை
ஒரு கணம் ஒரு பொழுதும் பிரிய கூடாது. நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாது.. பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. முகிலிடம் இருந்து விவாகரத்து வாங்கிய யதிரா ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் இந்த ஒரு பாடலையே.
♥️♥️♥️
இது உண்மை சிலவும், கற்பனை பலவும் கலந்து எழுதப்படும் கதை. என் பிரெண்ட் ஒருத்தர் சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து ஆனவர். மேலே சொன்ன பாடலை ஸ்டேட்டஸில் வச்சி இரு நாட்கள் என் மனசையும் சேர்த்து வாட விட்ட காரணத்தால் இந்த கதை எழுதும் எண்ணம் எனக்கு வந்துச்சி.
இந்த கதையில வர சௌந்தர்யா அன்ட் ரூபன் கதாபாத்திரத்தை விடவும் சுயநலமான கதாபாத்திரங்களை நானும் லைப்ல பார்த்திருக்கேன்.
அப்புறம் இன்னொரு தோழி. அவளோட கல்யாணம் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தது. முதல் தம்பதிக்குள்ள பிரச்சனை வந்ததுன்னு இவங்களையும் சேர்த்து பிரிக்கிற முயற்சி நடந்தது அப்போது. இரண்டு பேரும் இரண்டு வீட்டுலயும் சண்டை போட்டு தனிக்குடித்தனம் போய் இப்ப அந்த சகோ நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டுட்டோமோ என நினைக்கிற அளவுக்கு அவரை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கா அந்த மவராசி. (என்னா டார்ச்சர்ன்னு கேட்கறிங்களா.? டெய்லியும் அவரையே சமைக்க சொல்லி கொடுமை பண்றாப்பா.. பாவம் இல்லயா அவரும்.?)
அந்த இடத்துல அவங்க ஒருவேளை கொஞ்சம் தடுமாறி இருந்து அவங்களோட காதல்ல உறுதியா இல்லாம இருந்திருந்தா இன்னேரம் அவங்க பிரிஞ்சி போன பல ஜோடிகளில் ஒன்றா இருந்திருப்பாங்க.
ஒருவேளை அந்த இடத்துல அவங்க பிரிஞ்சிருந்தா.?
அதான் இந்த இரண்டையும் காம்பினேசன் பண்ணி இந்த கதையை உருவாக்குறேன். அந்த பாட்டை கேட்டதுல இருந்து மனசே சரியில்லப்பா. கதையா எழுதிட்டாலாவது கொஞ்சம் நிம்மதி இருக்குமோன்னு எழுத ஆரம்பிச்சிருக்கேன்.
(ஏற்கனவே எந்தன் நேசம் பிரிந்து சேர்ந்த ஒரு ஜோடிதான். அந்த வரிசையில இந்த கதையை எழுதணுமான்னு தயக்கம் இருந்தது. ஆனா அந்த பாட்டையே பொழுதனிக்கும் பாடி கொல்றேன்னு வீட்டுல இரண்டு நாளா திட்டு விழுதுப்பா.🤧 கனவுல கூட ஆயிரம் முறை அந்த பாட்டேதான்ப்பா வருது. பாவம் இல்ல நானும். அதான் இதை எழுதி முடிச்சிடலாம்ன்னு. ஏற்கனவே அரைச்ச மாவு போல் இருந்தாலும் இதுல கொஞ்சம் வேற விதமான மசாலா தூவி தரலாம்ன்னு இருக்கேன்..)
நட்புள்ளங்கள் அனைவரும் கதையை படிச்சிட்டு உங்க லைக்கையும் கருத்தையும் வாரி வழங்குங்க..
காதலிழையில் 1
யதிரா தன் முன் இருந்த தனது அண்ணனை பயத்தோடு பார்த்தாள்.
"நீயும் அண்ணியும் பிரிஞ்சதுக்கு நானும் மாமாவும் ஏன் பிரியணும் அண்ணா.?" கண்ணீரை அடக்கியபடி கேட்டாள்.
"அதெல்லாம் அப்படிதான். உனக்கு சொன்னா புரியாது.
அவங்க வீட்டோட இனி நமக்கு எந்த ஒட்டும் உறவும் இருக்க கூடாது. நீ முகிலை விட்டு பிரிஞ்சிதான் ஆகணும் யதி.." என்று சொன்னான் அவளது அண்ணன் ரூபன். அவள் முடியாதென தலையசைப்பதை கண்டும் காணாதவன் போல அவளது அறையை விட்டு வெளியே நடந்தான்.
யதிரா அண்ணன் வெளியே சென்றதும் அவசரமாக தனது போனை எடுத்தாள். முகிலுக்கு அழைத்தாள். மறுமுனையில் 'ஒருநொடி ஒருகணம் பிரிய கூடாது..' என்று ரிங் ஒலித்தது.
"சீக்கிரம் ஃபோனை எடுங்க மாமா.." என்று கண்ணீரோடு கெஞ்சினாள்.
அந்த ரிங் கட்டாகும் நேரத்தில் ஃபோனின் மறுமுனையில் முகில் "ஹலோ.." என்றான்.
"மாமா எங்க இருக்கிங்க நீங்க.? 'உன் அண்ணனுக்கு ஆறுதல் சொல்லிட்டு இரு'ன்னு சொல்லி இங்கே கொண்டு வந்து விட்டு போனிங்க.. இரண்டு நாளைக்கு மேல ஆச்சி. ஆனா இன்னும் வந்து கூட்டி போகல. உடனே வந்து என்னை நம்ம வீட்டுக்கு கூட்டி போங்க.. அண்ணியும் அண்ணனும் பிரிஞ்சதுக்கு என் அண்ணன் நீங்களும் நானும் பிரியணும்ன்னு சொல்றான். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. சீக்கிரம் இங்கே வாங்க.." என்றாள்.
"அவங்க என்ன சொல்றாங்களோ அதையே செய் யதி.." என்றான் முகில்.
"நீங்களும் இப்படி சொல்லாதிங்க மாமா.. உடனே வந்து என்னை கூட்டிப்போங்க. எதுவா இருந்தாலும் நாம நம்ம வீட்டுல பேசிக்கலாம்.." என்றாள்.
"நான் இனி எப்பவும் அங்கே வர மாட்டேன் யதி. நீயும் இங்கே வர வேண்டிய அவசியம் கிடையாது. உன் அண்ணன் என்ன சொல்றானோ அதையே செய்.." என்றவன் போன் இணைப்பை துண்டித்துக் கொண்டான்.
அவன் சொன்னதை நம்ப இயலாதவளாக மீண்டும் அவனுக்கு ஃபோன் செய்தாள். அவன் அழைப்பை எடுக்கவே இல்லை. யதி ஓயாமல் ஃபோன் செய்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
யதியின் அண்ணன் ரூபனும் முகிலின் அக்கா சௌந்தர்யாவும் கல்லூரி படிக்கும் போது காதலித்தார்கள்.
கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்கு சென்றதும் இரு வீட்டிலும் சம்மதம் வாங்கி பெரிய மண்டபத்தில் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் அழைத்து ஆசி வாங்கி திருமணம் செய்துக் கொண்டனர்.
அதற்கடுத்த வருடத்தில் சௌந்தர்யா வீட்டிலிருந்து முகிலுக்கு யதியை பெண் கேட்டு வந்தார்கள். கல்லூரி முதலாமாண்டு சேர்ந்திருந்தாள் யதிரா அப்போதுதான்.
மகளை இன்னும் சில வருடங்கள் படிக்க வைக்க போவதாக சொன்னார் அப்பா. ஆனால் சௌந்தர்யாவும் ரூபனும் தினம் அரைமணி நேரம் அருகில் அமர்ந்து கெஞ்சி கொஞ்சி பேசி அப்பாவின் மனதை மாற்றினர்.
"கல்யாணம் பண்ணி வைங்க. அவளை நாங்க படிக்க வைக்கிறோம்.." என்றாள் சௌந்தர்யா.
அப்பாவும் யோசித்துவிட்டு சரியென தலையசைத்தார். நாள் நட்சத்திரம் பார்த்து யதிக்கும் முகிலுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
ஒரு வருடம் எல்லாமே நல்லபடியாகதான் சென்றது. ஆனால் திடீரென ஒரு மாதத்திற்கு முன்னால் ரூபனும் சௌந்தர்யாவும் மனமொத்து விவாகரத்து வாங்கினர். அதன் காரணம் ஏதும் யதிராவுக்கு தெரியாது.
அவர்கள் பிரிந்ததையே யதிராவால் தாங்கி கொள்ள முடியவில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் இப்போது யதிராவுக்கும் முகிலுக்கும் விவாகரத்து வாங்க முடிவு செய்து விட்டனர்.
***
இரு ஊரும் இரு வீட்டு உறவுகளும் அந்த ஊர் கோவிலின் வெளி மண்டபத்தில் கூடியிருந்தது. முகிலுக்கும் யதிராவுக்கும் இடையில் நடந்த திருமணம் மிக எளிமையான எதிலும் பதிவு செய்யாத திருமணம் என்பதால் அவர்களது விவாகரத்தையும் மிக எளிமையாக ஊர் பெரியவர்கள் முன்னால் பெற்று விட நினைத்து இரு வீட்டாரும் அங்கு கூடியிருந்தனர்.
யதிரா அழுது வீங்கிய கண்களோடு நின்றிருந்தாள்.
இன்னமும் அழுதுக் கொண்டேதான் இருந்தாள்.
முகிலை நோக்கி நடக்க இருந்தவளை கை பிடித்து நிறுத்தி வைத்திருந்தாள் அவளது அம்மா.
"தாலியை வாங்கிக்க உனக்கு சம்மதமா.?" முகிலை பார்த்து கேட்டார் ஊர் பெரியவர் ஒருவர்.
தரை பார்த்து நின்றிருந்தான் அவன். தன்னெதிரில் நின்றபடி விம்மி அழுதுக் கொண்டிருந்த யதிராவை நொடி நேரம் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை அவன்.
"சம்மதம்.." என்றான் தரையை பார்த்தபடியே.
"இப்படி சொல்லாதிங்க மாமா.. நீங்க என்னை நேசிக்கறதா சொன்னிங்களே. என்னை விட்டுட்டு இருக்க முடியாதுன்னு சொன்னிங்களே.. நீங்க இல்லன்னா இனி நான் எப்படி இருப்பேன்.?" என்றவளுக்கு கண்ணீர் ஆறாக பெருகியது.
அவன் தன் முகத்தை பார்க்க மாட்டானா என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தாள். அவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவளுக்கு மறுமொழியும் சொல்லவில்லை.
"மாமா என்னை கொஞ்சம் பாருங்களேன்.." என்று கெஞ்சினாள் யதிரா. அவளருகே நின்றிருந்த ரூபன் அவளது கன்னத்தில் ஒரு அறையை தந்தான்.
"பொம்பள புள்ளை மாதிரி நடந்துக்க.. ஊர் பார்த்திருக்க இப்படி ஒருத்தன் முன்னாடி கெஞ்ச உனக்கு வெட்கமா இல்ல.?" பற்களை கடித்தபடி கேட்டான் அவன்.
"என் மாமாகிட்ட நான் கெஞ்சுறேன்.. ஊர் பார்த்திருக்க என் கழுத்துல தாலி கட்டியவர்கிட்ட அதே ஊர் பார்த்திருக்க நான் கெஞ்சினா என்ன தப்பு.?" என கேட்டவள் முகிலை ஏக்கமாக பார்த்தாள். ஒரு வார்த்தை வாய் திறந்து பேச மாட்டானா என்று தவமாய் இருந்தாள். அவன் அசையாத கல் சிலையாக நின்றிருந்தான்.
"அத்தை நீங்க ஏன் பேசவே மாட்டேங்கிறிங்க.? உங்களுக்கு என்னை பிடிக்கவே இல்லையா.?" என விம்மியபடியே கேட்டாள் யதிரா.
முகிலின் அம்மா வானம் பார்த்தாள். பூமி பார்த்தாள்.
ஆனால் யதிராவை மட்டும் பார்க்கவே இல்லை.
"அண்ணி நீங்களாவது ஏதாவது சொல்லுங்க அண்ணி.." சௌந்தர்யாவை பார்த்து அழுகையோடு கேட்டாள் யதிரா. சௌந்தர்யா முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.
"யார் உனக்கு அண்ணி.?" என கேட்டு ரூபன் யதிராவின் காதோரம் ஒரு அறையை விட்டான்.
"சரிதான் நிறுத்துப்பா.. ஊர் மனுசங்க இத்தனை பேர் இருக்கோம். நீ எங்க யாரையும் மதிக்காம அந்த பொண்ணை சும்மா அறைஞ்சிக்கிட்டே இருக்க. அப்புறம் எங்களுக்கு என்ன மரியாதை.? விருப்பம் இல்லாம அந்த பொண்ணை அவ புருசன்கிட்ட இருந்து பிரிக்கிறது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா.? ஆனா அத்தனையையும் தாண்டி உன் பேச்சை கேட்டு இந்த பொண்ணையும் அவ புருசனையும் பிரிச்சி விட வந்திருக்கோம். உன் பேச்சை நாங்க எப்படி கேட்டோமோ அதே மாதிரி எங்க பேச்சை கேட்டு நீ கொஞ்சம் சும்மா இருப்பா.." என்றார் ஊர் பெரியவர் ஒருவர்.
"இந்த பாரும்மா யதிரா இது நீங்க நினைக்கிற மாதிரி சின்ன விசயம் கிடையாது. உனக்கும் அவனுக்கும் நடுவுல பிரிச்சி விடலன்னா அப்புறம் நாளை வரும் நாளெல்லாம் உனக்கு மட்டும்தான் பிரச்சனை இருக்கும். உனக்கு இன்னும் வயசும் வாலிபமும் இருக்கு. இப்பவே பிரிஞ்சி போயிட்டாதான் உனக்கும் நல்லது அவனுக்கும் நல்லது.." என்றார் அவரே யதிராவிடம்.
"முடியாது. நான் தாலியை தர மாட்டேன்.. எனக்கு என் மாமாதான் வேணும். நான் அவரை விட்டு பிரிய மாட்டேன்.." முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் அவள்.
"இந்த புள்ளை போக்குல விட்டா இப்படிதான் கண்ணை கசக்கிட்டு இருக்கும்.. நீங்க சீக்கிரம் இதை முடிச்சி விடுங்க.." என்றான் ரூபன்.
"அந்த தாலியை கழட்டி உன் புருசன்கிட்ட கொடுத்துட்டு திரும்பி பார்க்காம இங்கிருந்து போம்மா.. மீதியை அப்புறம் பேசிக்கலாம்.." என்றார் அரை போதை மனிதர் ஒருவர்.
"நான் கொடுக்க மாட்டேன்.." என கதறியவளின் கழுத்தில் இருந்த தாலியை கழட்ட முயற்சித்தாள் அம்மா. தன் கழுத்தில் இருந்த தாலிக்கயிற்றை இறுக்க பிடித்தாள் யதிரா. முடியாதென தலையசைத்தாள்.
"வேண்டாம்மா.. ப்ளீஸ்ம்மா.. உன் காலுல கூட விழறேன். என் தாலியை விட்டுடும்மா.." என்று கதறலோடு கெஞ்சியவளின் கையை விலக்கி தாலியை கழட்டினான் ரூபன்.
"ஐயோ அண்ணா.. இப்படி பண்ணாத.. என் உயிரையே பறிக்கிறியே.." என்று தலையில் அடித்தபடி அழுதவள் அழுதபடியே இருந்த நேரத்தில் எதிரில் இருந்த முகிலிடம் சென்று அவனது கையை பற்றி அவனது கையில் தாலியை தந்தான் ரூபன்.
"வேண்டாம்.. என்னை விட்டுட்டுங்களேன். நான் என் மாமாவோடே இருந்துக்கறேன்.." என்று கதறி அழுதவளை அங்கிருந்து இழுத்துக்கொண்டு நடந்தான் ரூபன்.
"மாமா.. மாமா.." என்று முகிலை பார்த்து அழுதுக் கொண்டிருந்தவளின் முகத்தை பற்றி மறுபக்கம் திருப்பினான் ரூபன். "தாலி வாங்கிட்ட பிறகு நீ அவனை திரும்பி பார்க்க கூடாது.. நேரா பார்த்து நட.." என்று திட்டினான். ஆனால் அவள் முகிலையே பார்த்தபடிதான் நடந்தாள்.
ஒரு கணம் ஒரு நொடி தன்னை நிமிர்ந்து பார்க்க மாட்டானா அவன் என்று காத்திருந்தாள். கண் மறையும் வரையிலுமே அவன் தலை நிமிரவில்லை.
வீட்டின் முன் கார் நின்றதும் யதிராவை இழுத்துக் கொண்டு வீட்டு வாசலுக்கு நடந்தான் ரூபன். அழுதுக் கொண்டிருந்தவளின் தலையில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றினான். அம்மா அவசரமாக உள்ளே சென்று துண்டு ஒன்றை எடுத்து வந்து மகளின் தலையில் வைத்து துவட்டினாள். கண்ணீர் திரண்டு நிற்க அவளை உள்ளே அழைத்து சென்றாள்.
இரவு சூழ்ந்த வேளையில் முகில் தன் நண்பன் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான். இறுக்கி பிடித்திருந்த வலது கையில் யதிரா கழுத்தில் இருந்த தாலி இருந்தது. "மாமா.. மாமா.." என்று கதறிய யதிராவின் குரல் இன்னமும் காதில் தெளிவாக கேட்டுக் கொண்டிருந்தது.
"ஏன்டா இப்படி செஞ்ச.? உன் அக்காவும் மாமாவும் பிரிஞ்சா நீங்களும் ஏன்டா பிரியணும்.?" கோபமாக கேட்டான் அவனது நண்பன்.
"வேற என்ன பண்ண சொல்ற.? நான் அவளை விட்டு பிரியாம இருந்தா என் அக்காவும் என் அம்மாவும் அவளை தினம் திட்டி திட்டியே கொன்னுடுவாங்க. அவங்க குணம் என்னன்னு எனக்கு நல்லா தெரியும். யதிராவை இவங்க இங்கே நிம்மதியா வாழ விட்டிருக்கவே மாட்டாங்க.." என்றவனுக்கு நிரம்பிய கண்ணீர் கடைக்கண்ணில் வழிந்தது.
"தனிக்குடித்தனம் போயிருக்கலாம் இல்ல.?" என கேட்டவனிடம் தலையசைத்து மறுத்தான் முகில்.
"எனக்குன்னு எந்த வேலையும் இல்லாத இந்த நேரத்துல அவளை தனிக்குடித்தனம் கூட்டிப்போய் கூலி வேலை செஞ்சி கூட அவளை காப்பாத்த நான் தயார்.. ஆனா என்னோட நேரமும் காலமும் என்னோடு சேர்ந்து வரலையே..நான் இன்னும் மூணு நாலு மாசத்துல செத்து போயிடுவேன்டா.." என்றான் நெஞ்சை அடைத்த துக்கத்தோடு.
விசயம் புரியாமல் பதட்டமாக முகிலின் முகத்தை பற்றினான் நண்பன்.
"என்னடா சொல்ற.?"
"எனக்கு ப்ளட் கேன்சர். இன்னும் மூணு மாசத்துல செத்துடுவேன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. நான் செத்து அவ விதவை ஆகறதுக்கு பதிலா நான் உயிரோடு இருக்கும்போதே அவ இப்படி பிரிஞ்சி போறது நல்லது.." என்றான் கண்ணீரோடு.
நண்பன் அவனை கட்டி அணைத்துக் கொண்டான்.
சௌந்தர்யா தன் கையில் இருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை இரண்டாய் நான்காய் கிழித்தாள். "நான் ஆசைப்பட்ட மாதிரியே இந்த இரண்டு குடும்பத்துக்கும் இடையில் எந்த ஒட்டும் உறவும் இல்லாம போயிடுச்சி. இனி எதுக்கு இந்த பொய்யான மெடிக்கல் ரிப்போர்ட்.?" என கேட்டபடி தான் டாக்டரிடம் சொல்லி தயாரித்திருந்த முகிலின் பொய்யான மெடிக்கல் ரிப்போர்ட்டை நெருப்பில் போட்டு எரித்தாள்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
Word count 1084
LIKE
COMMENT
SHARE
SUBSCRIBE
Ena sis .. starting aa...summa Vera level la irukku😍😍😍😘😘😘
காதலின் இழையில் 2
'ஒரு கணம் ஒரு பொழுதும் பிரிய கூடாது.. நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாது..' காலை நேர அலார பாடலின் சத்தத்தில் எழுந்து அமர்ந்தாள் யதிரா. கைப்பேசி மணி எட்டு என நேரத்தை காட்டியது.
சமையலறையில் குக்கர் விசிலடிக்கும் சத்தம் கேட்டது.
கலைந்த கேசத்தை அள்ளி முடிந்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள். ஈர தலையில் துணியை சுத்தியபடி வெளியே வந்தவள் துண்டை உருவி கட்டிலின் ஒரு ஓரத்தில் எறிந்தாள். ஈர தலையை உலர விடாமல் அப்படியே பின்னிக் கொண்டாள். சிறு பொட்டை நெற்றியின் நடுவே வைத்து கொண்டாள். புடவையை சரிபார்த்து கட்டிக் கொண்டாள். மேஜையின் மேல் இருந்த கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள்.
அவள் வெளியே வந்தபோது அண்ணி நீலா தன் குழந்தைக்கு காலை உணவை ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள். இவளை கண்டதும் மெலிதாக புன்முறுவல் பூத்தாள். யதிராவும் கண்கள் தொடாத புன்னகையை தந்தாள்.
அம்மா உணவை சாப்பாட்டு மேஜை மேல் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். "யதி.. சாப்பிட வாம்மா.." என்றாள்.
"எனக்கு பசிக்கலம்மா.." என்று சின்னதாக குரல் தந்தவள் வெளியே நடந்தாள்.
அவளின் அண்ணன் தனது கார் சாவியை சுட்டு விரலில் சுழற்றியபடி அவளெதிரே வந்தான். அண்ணனை கண்டதும் தலை கவிழ்ந்துக் கொண்டாள் யதிரா. ரூபன் அவளை தாண்டிக் கொண்டு உள்ளே நடந்தான்.
"குட்டிம்மா.. சாப்பாட்டு டேஸ்டா இருக்கா.?" என கேட்டு தன் குழந்தையை எடுத்து கொஞ்சினான். வாசலில் நின்று தனது காலணியை அணிந்துக் கொண்டே அவனது கொஞ்சலை வெறித்து பார்த்தாள் யதிரா. அந்த குழந்தையை கையில் தூக்கி கொஞ்ச அவளுக்கும் ஆசைதான். ஆனால் மனம் வரவேயில்லை. சிறிதும் மனம் வரவில்லை.
அவளுக்கும் முகிலுக்கும் இடையில் இருந்த பந்தம் உடைந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டது. முகில் தன் வீட்டை விட்டு புறப்பட்டும் மூன்று வருடங்கள் ஆகி விட்டது.
முகிலுக்கும் இவளுக்கும் பந்தம் உடைந்த மறுவாரமே புது திருமணம் செய்து மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தான் ரூபன். தந்தை இறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அவன் திருமணம் செய்து வந்ததை கண்டு உள்ளம் நொந்தாள் யதிரா.
ஆனால் அதற்கடுத்த வாரத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை கண்டாள். ஆனால் அவளின் அண்ணன் அவளை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்கையில் முழு மனமும் உடைந்து போனாள். அந்த நாள் இன்னமும் நினைவில் இருந்தது அவளுக்கு.
அன்று விசயம் அறிந்த மறு நொடியே முகிலுக்குதான் ஃபோன் செய்தாள். ஆனால் அவன் பந்தம் உடைந்த மறுநாளே ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துவிட்டு எங்கேயோ சென்று விட்டான். அவன் எங்கோ சென்று விட்ட விசயம் தெரிந்திருந்தாலும் கூட ஏதோ ஒரு நப்பாசையில் ஏதோ ஒரு புது நம்பிக்கையில் அவனுக்கு ஃபோன் செய்தாள்.
ஆனால் மறுமுனை வழக்கம் போல ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. அவனை தேடி அவனது வீடு சென்றாள். அவனின் அம்மாவும் அக்காவும் ஒரு அடிப்பட்ட நாயை பார்க்கும் சில அருவெறுப்பு நிறைந்த கண்களை போல இவளையும் அருவெறுப்பாக பார்த்தனர்.
"அத்தை நான் கன்சீவா இருக்கேன்.." முகமெல்லாம் ஒளிர அவள் சொல்ல முகிலின் அம்மா பதிலேதும் சொல்லாமல் தனது அறையில் ஏதோ ஒரு பொக்கிஷத்தை தேடி செல்வதை போல சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.
"அண்ணி.." என்று சௌந்தர்யாவின் முகத்தை ஏக்கமாக பார்த்தாள்.
"மாமாக்கிட்ட சொல்லுங்க அண்ணி.. இல்லன்னா அவர் எங்கே இருக்காருன்னாவது என்கிட்ட சொல்லுங்க அண்ணி.." என்று கெஞ்சினாள்.
"உன் அண்ணனையே வேணாம்ன்னு வந்துட்டேன்.. இனி என்னடி நான் உனக்கு அண்ணி.?" என கேட்டாள்.
கண்ணீர் ததும்பும் கண்களோடு இருந்த யதிராவை பார்த்தவள் "ஊர் உலகத்துல உனக்கு வேற ஆம்பளையே கிடைக்கலையா.? எதுக்கு என் தம்பியோட நிழலையே தேடிட்டு இருக்க.? அவன்தான் உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டு தாலியை வாங்கிக்கிட்டான் இல்ல.? அப்புறம் என்ன மாமா மாமான்னு வந்துட்டு இருக்க.?" என பாம்பாக சீறிவிட்டு அவளும் வீட்டுக்குள் சென்று விட்டாள்.
அவளின் மாமனார் தயக்கமாக அவளருகே வந்தார். "அவன் எங்கே போனான்னு எங்களுக்கும் தெரியாதும்மா.. உன்னை மாதிரி ஒரு பொண்ணை அத்து விட்டது எங்க குடும்பத்தோட நஷ்டம்தான். ஆனா நீயும் சில விசயத்தை புரிஞ்சிக்கம்மா.. உன்னை நாங்க இந்த வீட்டுல வச்சிருந்தா அப்புறம் உங்க வீட்டு ஆளுங்க இங்கே வருவாங்க. அதை பார்த்து என் பொண்ணு மனசு கஷ்டப்படும் இல்லையா.? நீ இங்கே இருக்கற ஒவ்வொரு செகண்டும் என் பொண்ணு உன் அண்ணனோட முகத்தை உன்கிட்ட பார்ப்பா.. அவ மனசு உடைஞ்சா நல்லா இருக்குமாம்மா.?" என்று கேட்டார்.
"அப்ப என் மனசு கஷ்டப்பட்டா பரவால்லையா மாமா.? உங்க பொண்ணு தான் பிரிஞ்சி வந்த குடும்பத்தை மறுபடி பார்க்கவே கூடாதுங்கற ஒரே ஒரு காரணத்துக்காக என்னை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புறிங்களே.
உங்களுக்கே இது நியாயமா இருக்கா.?" துக்கத்தோடு கேட்டவளை முறைத்தார் அவர். தனது குற்ற உணர்ச்சி தன்னை கொல்வதை அவர் விரும்பவில்லை.
"இதுக்கெல்லாம் காரணம் உன் தலைவிதிதான்.. என் பொண்ணு வாழ்க்கைதான் எனக்கு முக்கியம்.. நீ இங்கிருந்து கிளம்பு.." என்றவர் அந்த வீட்டின் கதவை அறைந்து சாத்தி விட்டு சென்றார்.
அந்த கதவையே கண்ணீர் வழிய பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தாள் யதிரா. சில நிமிடங்கள் கழித்து அங்கு வந்த ரூபன் அவளை அங்கிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான்.
"இன்னொரு முறை அந்த வீட்டு பக்கம் போனதை பார்த்தா நான் உன் காலை உடைச்சிடுவேன். பார்த்துக்க.." என்று சீறினான்.
"அப்பா இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு நிலமை வந்திருக்குமா.? என்னோட அப்பா இறந்து போனாரு. என்னோட ராஜா என்னை விட்டு போனாரு. ஆளாளும் என்னை இப்ப அதிகாரம் பண்ணுறிங்க.." என்று முகம் மூடி அழுதாள் யதிரா.
"சும்மா ஒருத்தரை டிபைன் பண்ணி இருக்கிறதை நிறுத்து. நீயும் பொண்ணுதானே.? ஒருத்தரை சார்ந்தே வாழணுங்கற சராசரி நினைப்போடுதான் இருப்பியா.?" என்று எரிச்சலாக கேட்டான் அவன்.
"சிந்திக்க தெரிஞ்ச எனக்கு என்னோட வாழ்க்கைக்கு யார் தேவைன்னு முடிவெடுக்கற உரிமை இல்லையா.?" என்று திருப்பி கேட்டாள்.
"இப்படிப்பட்ட திமிர்தான் உன் வாழ்க்கையை நாசமாக்குது.." என்றவன் அவளை நேராக மருத்துவமனை அழைத்து சென்றான். ஒரு பெண் மருத்துவரிடம் தனியே சென்று எதையோ பேசி வந்தான். பின்னர் வலுக்கட்டாயமாக அவளை அந்த பெண் மருத்துவரிடம் அனுப்பி வைத்தான். அந்த மருத்துவரை பார்த்த நொடியே நடக்க இருக்கும் விபரீதம் அறிந்து கதறி அழுதாள்.
"வேண்டாம்ண்ணா.. என்னை விட்டுட்டுண்ணா.. நீ வேற என்ன சொன்னாலும் கேட்கறேன் அண்ணா.. ஆனா இப்படி மட்டும் எனக்கு துரோகம் செஞ்சிடாதிங்க அண்ணா.." என்று அவள் கதற கதற அந்த மருத்துவமனை அறையின் கதவை சாத்தினான் ரூபன்.
"டாக்டர் நீங்களும் ஒரு பொண்ணுதானே.? தயவுசெஞ்சி எனக்கு இப்படி துரோகம் செய்யாதிங்க.. என் குழந்தையை என்கிட்ட இருந்து பிரிச்சிடாதிங்க.. ப்ளீஸ் டாக்டர்.. வேணாம்.. கெஞ்சி கேட்கிறேன். என்னை விட்டுடுங்க.." என்று கண்ணீரோடு கை கூப்பினாள்.
"இது எல்லாம் உன் நல்லதுக்குதான்மா.. இன்னைக்கு உனக்கு இப்படிதான் இருக்கும். ஆனா வருங்காலத்துல இந்த குழந்தை இல்லாததை நினைச்சி நீ சந்தோசப்படுவ.. நாளைக்கு நீ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கும்போது இந்த குழந்தை அப்ப தடையா வராம இருக்கதான் இப்படி செய்றோம்.." என்று மருத்துவர் சொல்ல இன்னும் அதிகமாக துடித்தாள் யதிரா.
"என் மாமாவை மறந்துட்டு இன்னொருத்தனை கல்யாணம் செய்றதா.? கனவுல இப்படி ஒரு நினைப்பு வராதே எனக்கு.. என் குழந்தை இங்கே யாருக்கும் தடையாக இருக்காது டாக்டர்.. என்னை இப்படியே விட்டுடுங்க.. நான் எங்கேயாவது ஓடிப்போய் கூட என் குழந்தையை நல்லபடியா வளர்த்துக்கறேன்.." என்று கெஞ்சினாள்.
"ரியாலிட்டி புரியாம சீன் போடாதம்மா.. ஒரு பொட்டபுள்ளை தனியா குழந்தையோடு என்னன்னு வாழ முடியும்.?" என்று சீறி விட்டு அவளை மருத்துவமனை பெட்டில் படுக்க வைத்தாள் அவள்.
"ஒரு பொண்ணு நினைச்சா நடக்காத ஒன்னு இருக்கா.? ஒரு அம்மாவா இருந்து நினைச்சா இந்த உலகத்துல நடக்காத ஒரு காரியம் இருக்கா.?" என கேட்டு விம்மியழுது திமிறியவளின் கையில் ஊசியை குத்தினாள் அந்த டாக்டர்.
அவள் மயக்கத்திலிருந்து கண் விழித்தபோது எல்லாம் முடிந்து போனதை புரிந்துக் கொண்டாள். முகம் மூடி அழுதுக் கொண்டிருந்தவளின் அருகே வந்து அமர்ந்து அவளது கையை பற்றினான் ரூபன்.
"இது இன்னைக்கு உனக்கெதிரான அநியாயமா தெரியும் யதி. ஆனா இதுல எவ்வளவு நல்லது இருக்குன்னு வருங்காலத்துலதான் உனக்கு புரியும்.. அது மட்டுமில்ல இதை எனக்காக செஞ்ச சின்ன உதவியா நினைச்சிக்க.. இது நீ உன் அண்ணனுக்காக செஞ்ச சின்ன தியாகம். அவ்வளவுதான்.. நாளைக்கே அந்த முகிலை விட ஏழு மடங்கு நல்லவனா அழகானவனா அன்பானவனா ஒருத்தனை பார்த்து அண்ணன் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. அவனை மறந்துடு. அவனோட நீ வாழ முடியாது.. வாழ கூடாத இடத்துல வாழ கூடாத ஒருத்தனோடு வாழ நினைக்கிறது நம்ம வாழ்க்கைக்கு நாம செய்ற துரோகம்.." என்றான் அவன்.
யதிரா புரிந்துக் கொண்டாள். அண்ணனின் சொற்கள் மட்டுமல்ல அவளை சுற்றியிருந்த யாருடைய வார்த்தைகளிலும் நியாயமே இல்லை என்பதை நன்றாக அறிந்து கொண்டாள் அவள். இப்படிப்பட்ட அநியாயங்களுக்கு தன்னை பலி தந்துவிட்டு சென்ற முகில் இந்த நொடி தன் முன் வந்து நிற்க மாட்டானா என்ற எண்ணம் மட்டும் நினைப்பை விட்டு அகலவே இல்லை. காலங்கள் மட்டும் நகர்ந்தது. ஆனால் அவளது எண்ணியபடி அவன் மட்டும் வரவேயில்லை.
தன் குழந்தையை கொஞ்சும் அண்ணனை வெறித்து பார்த்தபடி வெளியே நடந்தாள். அவளது வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகைக்கடை ஒன்றில் கேஷியராக இருக்கிறாள் யதிரா. சரசரவென செல்லும் வாகனங்களை பார்த்தபடி சாலையில் நடந்துக் கொண்டிருந்தாள். நிமிடத்திற்கு ஒரு முறை கடக்கும் பேருந்துகளில் ஏற மனம் வருவதே இல்லை அவளுக்கு.
செல்லும் வாகனங்களில் ஒன்று திசைமாறி வந்து தன் மீது ஏறி செல்ல கூடாதா என்று எண்ணம் வந்ததே தவிர அந்த வாகனத்தின் முன் சென்று நிற்க தைரியம் வந்ததில்லை ஒருநாளும். பார்க்கும் முகமெல்லாம் முகிலை போலவே அவளுக்கு பிரமையை தந்தாலும் ஒரு நாள் கூட முகில் வந்து அவளிடம் தன் முகம் காட்டவில்லை.
இன்றும் அப்படிதான் தன்னை கடந்து செல்லும் கார் ஒன்றின் ஜன்னல் வழி தெரிந்த உருவமும் முகிலாக அவளின் எண்ணத்தில் தோன்றியது.
அவளை கடந்து சென்ற அந்த கார் சற்று தொலைவில் நின்றது. ஜன்னல் வழியே எட்டி பார்த்தான் முகில்.
"யதி.." என்று மனதுக்குள் அழைத்தவனுக்கு அவளை பார்க்கும்போது இதயம் இரண்டாய் துண்டு பட்டது போல இருந்தது. மூன்று வருடங்களில் அரையாய் கரைந்திருந்தாள் அவள். அவளது முகம் பார்த்த கணமே துணுக்குற்று போனான் முகில். எலும்பாக தெரிந்த அவளது கழுத்தில் தாலி ஏதும் இல்லை. இரண்டாய் உடைந்த இதயம் நான்காய் உடைந்தது.
"யதிராவுக்கு நேத்து கல்யாணம் முடிஞ்சிடுச்சி.." இரண்டே முக்கால் வருடங்களுக்கு முன்னால் தனது அப்பா தன்னிடம் சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது. நெஞ்சை விட்டு அகலாத அந்த வார்த்தைகள் அன்று தந்த ரணத்தை விட இன்று அதிகமான ரணத்தை தருவதை உணர்ந்தான் முகில்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
Word count 1119
LIKE
COMMENT
SHARE
காதலின் இழையில் 3
உயிர் தொலைத்த பார்வையோடு நடந்து சென்றாள் யதிரா.
அவளையே விழியெடுக்காமல் பார்த்தபடி காரில் அமர்ந்திருந்த முகிலுக்கு அவளை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் தன் உயிரையே நெருப்பினில் போட்டு உருக விட்டது போல வலித்தது.
"யதிரா.." என்று முனங்கினான் இதயம் பறித்தெறியும் வேதனையோடு.
மனமெங்கும் வேதனையும் சோகமும் இருந்தது அவனுக்கு.
தன் சொந்த தந்தையே தன்னிடம் இப்படி ஒரு பொய்யை சொல்லி தன்னை நடமாடும் பிணமாக மாற்றியது அவனுக்குள் நெருப்பை கொழுந்து விட்டு எரிய செய்வதை போல இருந்தது. துரோகத்தின் உச்சத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவனுக்கு தன் மொத்த உலகத்தையுமே நெருப்பிடும் அளவுக்கு அவ்வளவு கோபம் வந்தது.
அவனுக்கு பின்னால் வந்து நின்றிருந்த வாகன ஓட்டி வழிவிட சொல்லி ஹாரன் அடித்தான். முகில் காரை ஸ்டார்ட் செய்து ஓட்டினான். வேகும் நெஞ்சத்தில் வேகாத தன் காதலை நினைத்தபடியே சென்றவன் வீட்டின் முன் காரை நிறுத்தி விட்டு இறங்கினான்.
அந்த வீட்டை விட்டு அவன் சென்று முழுமையாக மூன்று வருடங்கள் முடிந்து விட்டது. என்று அவன் கட்டிய தாலி யதிரா கழுத்தில் இருந்து அவிழ்க்கப்பட்டதோ அன்றே தன் ஜீவனில் பாதியை தொலைத்து விட்டான் அவன்.
ப்ளட் கேன்சரில் தான் இறக்கப்போகும் செய்தியை யதிரா அறிய வேண்டாம் என எண்ணி தன் வீட்டில் உள்ளோருக்கு மட்டும் விசயத்தை சொல்லி விட்டு ஹைதராபாத்தில் இருந்த தன் நண்பனின் ஒருவனின் வீட்டுக்கு சென்று விட்டான் முகில். வெளிநாடு சென்று விட்ட அவனது நண்பன் முகில் கேட்டான் என்று அந்த வீட்டை வாடகையில்லாமல் இவன் குடியிருக்க விட்டான்.
அங்கு சென்ற ஆரம்ப நாட்களில் மருத்தவமனைக்கு சென்று பரிசோதிக்க பயந்து நாட்களை கடத்தி கொண்டிருந்தான் முகில். ப்ளட் கேன்சரால் இறப்போருக்கு வரும் அறிகுறிகளை தேடி தேடி படித்து பயந்து அறை ஒன்றினுள் முடங்கினான். உடல் சிறிது வாடினாலும் தனது நோய் முற்றி போனதோ என நினைத்து அறையின் மூலையில் அமர்ந்து அழுதான். உயிர் போகும் பயம் உயிரோடு இருக்கும்போதே அவனை கொன்று தின்றது.
தினம் இரவிலும் பகலிலும் பயத்தோடும் கண்ணீரோடும் யதிராவின், அவளது அழுகை சத்தம் கேட்கும் விலகா நினைவோடுமே நாட்கள் கடந்தது. இவன் ஹைதராபாத் சென்ற அடுத்த மாதத்தில் சௌந்தர்யாவுக்கும் அவளது நண்பன் ஒருவனுக்கும் திருமணம் முடிந்ததாக செய்தி வந்தது. அத்தனை வேதனையிலும் கூட அக்காவின் மறுவாழ்க்கையை எண்ணி மனம் மகிழ்ந்தான் முகில்.
சௌந்தர்யா திருமணம் முடிந்த இரண்டாம் மாதத்தில் யதிராவுக்கும் திருமணம் நடந்து முடிந்ததாக அப்பா போனில் தகவலை சொன்னார். அடுத்து வந்த நாட்களில் இன்னும் அதிகமாக அழுதான் முகில். தன் மனைவியை மாற்றான் ஒருவன் மாலையிட்டு சொந்தமாக்கி கொண்டான் என்ற செய்தி அவனது நெஞ்சத்தையே உடைத்து விட்டது.
அடுத்து வந்த ஒன்றிரண்டு மாதங்கள் பைத்தியக்காரனை போலவே இருந்தான் அவன். நேரத்துக்கு நேரம் உண்ண ஆசையில்லாமல் போனது. நடு இரவிலும் நிலவு பார்த்து பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருந்தான்.
பகலெல்லாம் வெற்று சுவற்றை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
தன் மனைவி இந்த நேரம் இந்த நொடிகளில் என்ன செய்துக் கொண்டிருப்பாள் என்று ஒவ்வொரு நொடியும் நினைத்தான்.
எவனோ ஒருவனின் மடியில் தலை சாய்ந்து படுத்திருப்பாளோ.. தன் ஸ்பரிசம் மறந்து புது ஸ்பரிசத்தில் தன்னை தொலைத்திருப்பாளோ.. கன்ன குழியில் கவி பாடிய புது கணவனுக்கு கதவை பிடித்தபடி கை அசைத்து வேலைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருப்பாளோ.. உணவில் உப்பு அதிகம் சேர்ந்ததென்று அவன் அடித்தேதும் வைத்ததில் கண்களின் கண்ணீரை கன்னத்தில் வழிய விட பயந்து என்னை நினைத்திருப்பாளோ.. நொடிக்கு நூறாக வந்த நினைவுகளின் பிடியிலிருந்து தப்பி செல்ல இயலாதவனாக எந்த தற்கொலை வலி இல்லாதது என்று பட்டியலிட்டுக் கொண்டிருந்தான். ஆனாலும் கடைசி நொடிகளில் வந்த தயக்கம் காரணமாய் அந்த தற்கொலைகளிலும் சிக்காமல் மனதுக்குள் வாடி வதங்கினான்.
தன் மனைவி மாற்றான் கை சேர்ந்ததில் தான் இன்னும் அதிகமாய் இரண்டு மாதங்கள் எந்த அறிகுறியும் இல்லாமல் நலமாய் இருப்பதை மிகவும் தாமதமாகதான் உணர்ந்தான்.
சிறு அறிகுறி கூட தனக்கு இல்லை என்பதை அடுத்து வந்த நாட்களில் கண்டுக்கொண்டவன் பயத்தோடே மருத்துவமனை சென்று தன்னை பரிசோதித்தான். தனக்கு எந்த வித நோயும் இல்லை என அவன் அறிந்துக் கொண்ட நேரத்தில் வானம் முழுவதும் தன் கையில் வசப்பட்ட ஆனந்தத்தை அடைந்தான். ஆனால் அந்த வானமும் யதிரா இல்லாததால் தன் கையை விட்டு சென்றதை உணர்ந்தான்.
அன்று மட்டுமல்ல இன்று வரையிலுமே கூட அவனுக்கு சௌந்தர்யாவின் பொய்கள் பற்றி ஏதும் தெரியாது. வீணாய் போன ஒரு மருத்துவர் தனக்கு ப்ளட் கேன்சர் உள்ளதாக சிறு தவறாய் ரிப்போர்ட்டில் மாற்றி எழுதி விட்டார் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறான்.
தனக்கு கேன்சர் இல்லை என்று அவன் அறிந்துக் கொண்ட பிறகு அவனது நாட்கள் இன்னும் நரகமாக மாறி போனது.
"யதிரா யதிரா.." என்று ஓயாமல் புலம்ப ஆரம்பித்து விட்டான். புது கணவனோடு உள்ளவளை கடத்தி வந்து விடலாமா என்று தினம் ஆயிரம் முறை எண்ணினான். ஆனால் விதியால் பிரிந்து சென்றவளை மீண்டும் சேர அதே விதியில் இடமேதும் இல்லை என்ற நிதர்சனம் உரைத்ததில் கண்ணீரோடு தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான்.
அதன் பிறகு ஏனோ வாழ்வின் மீது பிடிப்பு ஏதும் இல்லை. நேரம் போகாமல் தன்னிடமிருந்த பணத்தை பங்கு சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தான். லாபம் பற்றியும் மகிழவில்லை. நட்டம் பற்றியும் கவலைபடவில்லை. மூன்று மாத லாபங்களையும் ஒரே நாளில் தொலைத்தான். மூன்று மாத சரிவுகளையும் ஒரே இரவில் கைப்பற்றினான். அவனை கண்டு குருட்டு அதிர்ஷ்டம் என்று அவனை போல முதலிடும் சிலர் பேசிக் கொண்டார்கள். ஆனால் அது அவனது மனம் உடைந்ததில் வந்த குருட்டு தைரியம் என்பதை அவனும் அப்போது அறியவில்லை.
நிமிடங்கள் நாட்களாய், நாட்கள் மாதங்களாய், மாதங்கள் வருடங்களாய் மாறியது. எதில் எந்த நேரத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் வரும் எவ்வளவு சரிவை சந்திக்க நேரும் என்று மனதுக்குள்ளேயே துல்லியமாக கணக்கு போடும் அளவுக்கு அந்த நாட்களில் பங்கு சந்தை முதலீட்டில் புகுந்து விளையாடி விட்டான்.
வேலைக்கு செல்லும் முன் திருமணம் வேண்டாம் என்று மறுத்தவனுக்கு வலுக்கட்டாயமாக திருமணத்தை நடத்தி வைக்கப்பட்டது அப்போது. அன்றைய நாட்களில் தன் மனைவிக்கு பத்து ரூபாய் பூ வாங்கி தர கூட தந்தையிடம் பணத்திற்காய் காத்து நின்றவன் இன்று பணத்தை பணமாய் பாராமல் செலவு செய்யும் அளவுக்கு சம்பாதித்து வைத்து கொண்டிருந்தான்.
இவன் ஊரை விட்டு சென்றதில் இருந்து அம்மா மட்டும் வாரம் ஒருமுறையாவது ஃபோன் செய்வாள். அப்பா ஏதாவது செய்தி சொல்ல வேண்டும் என்றால் மட்டும் அழைப்பார்.
அக்கா அவளுக்கு திருமணம் முடிந்த மறுநாளில் இருந்தே ஃபோன் செய்யவில்லை. 'தம்பி செத்தானா பிழைத்தானா என்று கூட கேட்க தோணவில்லையா அக்கா உனக்கு.?' என்று அவ்வப்போது காற்றோடு கேட்டு கொள்வான்.
தனக்கு ப்ளட் கேன்சர் இல்லையென தெரிந்ததும் ஆசையோடு அன்றே அம்மாவிற்கு சொன்னான். அம்மா குலதெய்வத்திற்கு பொங்கல் வைக்க போவதாக போனில் சொன்னாள். அன்று அந்த நொடியில் அதுவே அவனுக்கு முழு சந்தோசத்தை தந்தது.
காலங்களின் பயணத்தில் ஊர் பக்கமே வர கூடாது என்று எண்ணி முடிவெடுத்து இருந்தவன் அவன். மூன்று வருடங்களாய் கண்டும் காணாமல் இருந்த அக்கா 'தன் குழந்தைக்கு காது குத்த தாய்மாமன் மடி வேண்டும், காது குத்து அழைப்பிதழில் பெயர் போட்டாகி விட்டது' என்று சொல்லி அழைத்திருந்தாள். மறக்காமல் மருமகனுக்கு நாலு சவரனில் பட்டையாய் இழையோடும் தங்க சங்கிலி வாங்கி வரவேண்டும் என்றும் சொன்னாள். சிறு வயதில் சோறூட்டி வளர்த்த அக்கா தன் மறுமணத்திற்கு அழைக்கா விட்டாலும் கூட குழந்தையின் காது குத்துக்காவது அழைத்திருக்கிறாளே என்று ஆவலோடு ஊர் வந்தவன் ஊருக்குள் நுழையும் முன்பே யதிராவைதான் முதலில் பார்த்தான்.
தன் மனைவி மாற்றான் வீட்டு தலைவியாய் உள்ளதை தூரத்தில் இருந்தாவது ஒரு நொடி பார்த்து செல்லலாம் என்று நினைத்திருந்தவன் வரம் தரும் தேவதை நேரில் வந்ததை போல அவளை கண்டதை நினைத்து முதல் நொடி மகிழ்ந்து போனான். ஆனால் தாலியில்லா வெறும் கழுத்தோடும், தன்னை போலவே அடையாளம் தெரியாத அளவுக்கு ஆள் உருகி தூரத்து ஏக்க பார்வை பார்த்து நடந்தவளையும் கண்டவனுக்கு காலடியில் இருந்த தரை உடைந்து விழுந்ததை நன்றாக உணர முடிந்தது.
காரில் இருந்து முகில் இறங்குவதை கண்டு கொலுசொலியோடு ஓடி வந்தாள் சௌந்தர்யா.
"நல்லாருக்கியாடா.?" என்று நலம் விசாரித்தாள். "ம்.." என்றவனுக்கு தனது அப்பாவின் பதில் உடனடியாய் தேவைப்பட்டது. அவரை பார்வையால் தேடினான்.
"இப்படி இளைச்சிட்டியேடா.." என்று கண்களை துடைத்து கொண்டாள் அக்கா.
"அப்பா எங்கே.?" கட்டை குரலில் கேட்டான் முகில்.
"அவர் காது குத்து பத்திரிகை வைக்க நம்ம பெரியம்மா ஊருக்கு போயிருக்காரு.. நைட்டுக்குள்ள வந்துடுவாரு.. நீ உள்ளே வா.. வந்து சாப்பிடு.." என்று அவனை கை பிடித்து உள்ளே இழுத்து சென்றாள்.
வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்த ஒருவன் இவனை கண்டதும் புன்னகைத்தான். அவனை அக்காவின் கல்லூரியில் அடிக்கடி பார்த்த நினைவு உண்டு முகிலுக்கு. பதில் புன்னகை தந்தான் முகில். நடு ஹாலில் இருந்த தொட்டிலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது குழந்தை. இரண்டு வருடங்கள் இருக்கும் குழந்தைக்கு. அக்கா சென்று குழந்தையை தூக்கி வந்தாள்.
"மாமா பாரு செல்லம்.." என்று குழந்தையிடம் சொன்னவள் "இந்தாடா.." என்று இவனிடம் குழந்தையை தந்தாள்.
குழந்தையை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான். அவனை போன்ற நிறத்தில் இல்லாமல் அக்காவை போலவே சிவந்த நிறத்தில் அழகாய் இருந்தது குழந்தை. "மாமா.." என்று மழலையில் அழைத்தது. அதன் அழைப்பில் சொக்கி மீண்டும் முத்தம் தந்தான்.
"முகில்.." அம்மாவின் குரலில் திரும்பி பார்த்தான். மாடி படிகளில் இருந்து இறங்கி ஓட்டமாய் இவனருகில் வந்தாள் அம்மா.
"நான் பெத்த ராசா.. இந்த அம்மாவை கூட இத்தனை வருசம் பார்க்காம இருக்க உனக்கு எப்படி மனசு வந்தது.?" என கேட்டு அழுதாள். குழந்தையை அக்காவிடம் தந்துவிட்டு அம்மாவை தன்னோடு அணைத்துக் கொண்டான் முகில்.
"சாரிம்மா.." என்றான் கரகரத்த குரலில்.
"ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி இளைச்சி போயிட்டியேடா.." என்று அழுதாள் அம்மா. அவளது அழுகை கண்டு அவனுக்கும் கண்ணீர் வந்தது.
"சரி விடும்மா.. வந்தவுடனே உன் அழுகாச்சியை ஆரம்பிக்காத.." என்று சொன்ன அக்கா "வாடா சாப்பிடுவ.." என்றாள்.
அம்மாவை விலக்கி நிறுத்தியவன் "குளிச்சிட்டு வரேன் அக்கா.." என்று மாடிக்கு நடந்தான்.
சாத்தியிருந்த தன் அறையின் கதவை திறந்தான்.
லைசாலின் வாசம் நாசியை தாக்கியது. அம்மா இன்று அறையை சுத்தம் செய்துள்ளாள் என்பதை புரிந்து கொண்டான். அந்த லைசால் வாசத்தின் இடையே யதிராவின் வாசம் இயல்பாய் மணந்தது.
அறையின் கதவை சாத்தி விட்டு உள்ளே நடந்தான். யதிரா சிரிப்போடு கட்டிலில் அமர்ந்திருப்பது போல தோன்றியது. நிலை கண்ணாடியில் இருவரும் ஒன்றாய் நின்று தங்களின் பிம்பம் பார்த்த நாட்கள் நினைவுக்கு வந்தது. தானாய் நடந்த கால்கள் நிலை கண்ணாடியின் முன்னால் வந்து நின்றது. மூன்று வருடங்களுக்கு முன்னால் பிம்பமாய் தெரிந்த குண்டு பையன் இன்று மூன்றில் ஒரு பகுதிதான் இருந்தான். யதிரா கிள்ளி விளையாடிய குண்டு கன்னங்கள் இன்று இருந்த இடம் தெரியவில்லை.
"எனக்கு தலையணை வேணாம் மாமா.. நீங்களே நல்லா புசுபுசுன்னு இருக்கிங்க.." என்று ஆனந்த சிரிப்போடு அவள் தலை வைத்து தூங்கிய நெஞ்சை தொட்டு பார்த்தான். புசுபுசுவென இல்லை இன்று. அவனின் மனதை போலவே கல்லாய் மாறி போய் இருந்தது.
"உங்களுக்கு அவங்க வேலை தரலன்னா பரவால்ல மாமா.. இன்னொரு நல்ல கம்பெனியில் உங்களுக்கு நல்ல வேலையா கிடைக்கும்.. உங்களுக்கு வேலை கிடைக்கற வரைக்கும் நான் பூ பொட்டு கூட வாங்கி தர சொல்லி கேட்க மாட்டேன்.. ஆனா வேலை கிடைச்ச முதல் மாசம் சம்பளம் வாங்கும் போது அத்தைக்கு புடவை வாங்கும்போது எனக்கும் புடவை வாங்கிட்டு வரணும்.. இல்லன்னா நான் உங்களை வீட்டுக்குள்ளயே விட மாட்டேன்.." என்று வேலை கிடைக்காமல் சோர்ந்து போய் வீடு திரும்பியவனின் மூக்கை பிடித்து ஆட்டியபடி சொன்னவள் இன்றும் நேரில் இருப்பதாய் அவனின் பிரமை சொன்னது.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
word count 1215
LIKE
COMMENT
SHARE
Ena sis...Achu avnga akka & anna kum...so 😪 😪 😪 ivanga life la velyaduranga
காதலின் இழையில் 4
முகில் கூரையை பார்த்தபடி கட்டிலில் விழுந்தான். அருகே இருந்த தலையணையை எடுத்து முகத்தை மூடிக் கொண்டான்.
"மாமா.. மாமா.." என்ற யதிராவின் குரல் ஓயாமல் செவிகளில் ஒலித்தது. அவளை பார்த்த முதல் நாள் நினைவுக்கு வந்தது.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒருநாள்..
சௌந்தர்யா தான் ஒருவனை காதலிப்பதாக வீட்டில் சொன்னாள். அம்மா முதலில் கத்தினாள். ஆனால் சௌந்தர்யா அப்பாவின் செல்ல மகள் என்பதால் அப்பா சிறிது தயக்கத்திற்கு பிறகு அவளது காதலை ஏற்றுக் கொண்டார்.
அதே வேளையில் ரூபனும் தன் வீட்டில் தனது காதலை சொன்னான். அப்பா அம்மாவும் மகன் மீது இருந்த நம்பிக்கையில் உன் இஷ்டம் என்று சொல்லி விட்டார்கள்.
அடுத்து வந்த வாரத்தில் சௌந்தர்யாவை பெண் கேட்டு ரூபன் வீட்டிலிருந்து வந்தார்கள்.
அப்போது முதுகலை கடைசி வருடம் படித்து கொண்டிருந்தான் முகில். அவன் படிப்பில் சுட்டி. ஆனாலும் புத்தகத்தை எப்போதுமே புரட்டி கொண்டிருப்பான். அப்படி அவன் வாசலில் அமர்ந்து புத்தகம் ஒன்றை புரட்டி கொண்டிருந்த நேரத்தில்தான் ரூபனின் குடும்பம் அங்கு வந்தது. தனது பெரிய கண்ணாடியை கழட்டி புத்தகத்தின் இடையே வைத்துவிட்டு எழுந்து நின்றான் முகில்.
"வாங்க.. வாங்க.." முகிலின் அம்மாவும் அப்பாவும் ரூபனின் குடும்பத்தை ஆவலோடு வரவேற்றனர்.
ரூபனின் அப்பா முகிலை பார்த்து புன்னகைத்தார்.
"எங்க பையன்தான்.. எப்பவும் புத்தகமும் கையுமாதான் இருப்பான்.." என்று சொன்ன முகிலின் அம்மா அவர்களை உள்ளே அழைத்து சென்றாள்.
ரூபனும் அவனது பெற்றோரும் உள்ளே சென்ற பிறகு அவர்களை பின்தொடர்ந்து நடந்தான் முகில். அவன் வீட்டின் வாசற்படியில் கால் எடுத்து வைத்த நேரத்தில் "ஸ்ஸ்.." என்றொரு திணறலாய் ஒரு குரல் கேட்டது.
திரும்பி பார்த்தான். காரிலிருந்து ஒரு பெண் இறங்கிக் கொண்டிருந்தாள். இறங்கி கொண்டிருந்தாள் என்பதை விட இறங்க முயற்சித்து கொண்டிருந்தாள் என்றே சொல்லலாம். கையில் பழத்தட்டை வைத்திருந்தவளின் காலுக்கடியில் அவளின் துப்பட்டா சிக்கி கொண்டதில் காலை அப்படியும் இப்படியுமாக திருப்பி திருப்பி அந்த துப்பட்டாவை விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
இரு கையிலும் பிடித்திருந்த பழத்தட்டு ஒரு பக்கமாக சாய்ந்துக் கொண்டிருந்ததை கூட அவள் கவனிக்கவில்லை. அந்த தட்டில் இருக்கும் பழங்கள் கீழே விழும் நிலையில் இருப்பதை கண்டு புத்தகத்தை தான் முன்பு அமர்ந்திருந்த நாற்காலியில் வைத்து விட்டு அவசரமாக வாசலுக்கு ஓடினான் முகில். பழத்தட்டை தன் கையில் வாங்கி கொண்டான். பழத்தட்டு தன் கையை விட்டு பறி போனதில் அதிர்ந்து நிமிர்ந்தாள் அவள்.
முகிலுக்கு பெண் பிள்ளைகள் மீது அவ்வளவாக எந்த ஈடுபாடும் கிடையாது. குண்டு பையா என்றும் கருவா பையா என்றும் அவனுக்கு பட்டப்பெயர்கள் இருந்தது. பெரிய சைஸ் கண் கண்ணாடி அணிந்து கொண்டு இருந்தவனை பெண்களும் சுத்தி வந்து ரசிக்கவில்லை. அதனால் அவனுக்கு இந்த காதலை பற்றி யோசிக்க ஒரு காரணமும் கிடைக்கவில்லை.
தனது கையிலிருந்த பழத்தை வாங்கி கொண்ட முகிலை நிமிர்ந்து பார்த்த யதிரா சிறு வெட்க புன்னகையோடு "தேங்க்ஸ்.." என்றாள் மெல்லமாக. அவள் சொன்னது அவன் காதில் விழவே இல்லை. அவ்வளவு மெல்லமாக சொல்லியிருந்தாள் அவள். அவளது உதட்டசைவை வைத்து அதை தேங்க்ஸ் என யூகித்திருந்த முகில் ஓகே என தலையசைத்தான்.
யதிரா தனது துப்பட்டாவை காலின் சிக்கலில் இருந்து எடுத்து கழுத்தை சுற்றி சரியாக போட்டு கொண்டு கீழே இறங்கினாள். முகில் அவளது கையில் பழத்தட்டை தந்து விட்டு உள்ளே நடந்தான்.
யதிராவுக்கு அப்பாவையும் அண்ணனையும் தவிர வேறு ஆண்களோடு அதிகம் பழக்கம் கிடையாது. எப்போதும் அப்பாவின் சட்டையை பிடித்துக் கொண்டு சுற்றுபவள் அவள். அக்கம்பக்கத்து கடைக்கு செல்வதென்றால் கூட அப்பாவை அழைத்துக் கொண்டுதான் செல்வாள்.
அப்பாதான் தினம் பள்ளியில் கொண்டு சென்று விட வேண்டும். மீண்டும் கூட்டி வர வேண்டும். தன் தந்தையின் நிழலில் முழுக்க முழுக்க தந்தையையும் குடும்பத்தையும் மட்டுமே சார்ந்து வாழ்ந்தவள் அவள். தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்பதை விட தன்னிசையாக ஏன் செயல்பட வேண்டும் என்று எண்ணுபவள் அவள்.
முகில் பெண் கேட்டு வந்தவர்களை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு சென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டான். மீண்டும் அக்காவின் திருமண நாள் அன்று மண்டபத்தில்தான் யதிராவை பார்த்தான் அவன். அவளின் அப்பாவின் சட்டையின் கையை பிடித்தபடி அவளது அப்பாவின் வாலை போல சுற்றிக் கொண்டிருந்தாள். எதேச்சையாக அவ்வப்போது கண்ணில் படுபவளை மீண்டும் திரும்பி பார்க்க தோன்றவில்லை முகிலுக்கு.
அக்காவிற்கு திருமணம் முடிந்தது. அடுத்து வந்த சில நாட்களில் முகில் படிப்பு முடிந்து வேலை தேட ஆரம்பித்தான். யதிரா அந்த வருடத்தில் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தாள்.
முகிலுக்கு விரும்பியபடியான வேலைகள் கிடைக்கவில்லை. கிடைத்த வேலைகளை ஈடுபாட்டோடு செய்வோம் என்ற நம்பிக்கையும் இல்லை அவனுக்கு. அதையும் மீறி அந்த வேலைகளில் சேர்ந்தாலும் கூட சில மாதங்களில் அந்த வேலையை விட்டுவிட்டு அடுத்த வேலையை தேட ஆரம்பித்தான். தனக்கு பிடித்த வேலை எதுவென்று தேடிக் கொண்டிருந்தான் அவன்.
அந்த வருடம் முடிய இருந்த நேரத்தில் சௌந்தர்யா முகிலுக்கு யதிராவை திருமணம் செய்து வைக்கலாம் என்று பேச்சை ஆரம்பித்தாள். முகிலுக்கு திருமணம் பற்றி அவ்வளவாக கனவில்லை. அதனால் தனக்கு நல்ல வேலை ஒன்று கிடைத்த பிறகு திருமணம் பற்றி யோசிக்கலாம் என்று சொன்னான். ஆனால் அக்கா திருமணம் முடித்த பிறகு ராசி கூடி வரும். வேலை கிடைக்கும் என்று சொன்னாள். அவனுக்கு இந்த ராசியின் மீதும் நம்பிக்கை இல்லை. ஆனால் அக்காவின் பேச்சில் அம்மாவும் அப்பாவும் கரைந்து போனார்கள்.
யதிரா சின்னபெண். அவளை நிறைய படிக்க வைக்க தனக்கு ஆசையுள்ளதாக அவளின் அப்பா சொன்னார்.
"அதுக்காக காலம் முழுக்க வீட்டுலயா வச்சிருக்க முடியும்.? அவளை முகிலுக்கு கட்டி வைங்க அப்பா. கல்யாணம் முடிஞ்ச பிறகு படிக்கட்டுமே. அதுல என்ன போயிடபோகுது.? முகிலை மாதிரி ஒரு நல்ல பையன் மறுபடி கிடைப்பானா.?" என்று கேட்டான் ரூபன்.
"நல்ல பையன்தான்.. இன்னும் மூணு நாலு வருசம் போன பிறகு கல்யாணம் நடத்தி வைக்கலாமே.." என்றார் அப்பா.
ஆனால் தினம் ரூபன் அதையே பேச ஆரம்பித்தான். முகிலை பற்றியே இந்த வீட்டில் பேச்சு ஓடியது. முகிலின் வீட்டில் யதிராவை பற்றியே பேச்சு ஓடியது.
சௌந்தர்யாவும் ரூபனும் நினைத்தபடியே விரைவிலேயே இரு வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதித்து யதிரா முகில் திருமணத்தையும் நடத்தினர்.
முகிலும் யதிராவும் பெற்றோர் ஆட்டி வைத்த பொம்மையாகதான் அதுநாள் வரையிலுமே இருந்தனர்.
அவர்களது வாழ்க்கையை பற்றி இருவருமே நொடிநேரம் கூட சுயமாக சிந்தித்தது கிடையாது. நடப்பது நடக்கட்டும். நடத்துபவர்கள் நடத்தட்டும் என்ற ஒரு மனநிலையில் இருந்தனர் இருவரும். பெற்றோர் மீது கொண்ட நம்பிக்கையா இல்லை வாழ்வின் மீது கொண்ட பற்றற்ற நிலையா என்று அவர்கள் இருவருக்குமே தெரியாது.
யதிரா எதற்காய் தன்னை திருமணம் செய்தாள் என்று கேள்வியை திருமணம் முடிந்த நான்காம் நாள்தான் கேட்டான் முகில். "ஏனா எங்க அப்பாவுக்கு உங்களை பிடிச்சிருந்தது. அவர் உங்களை கல்யாணம் பண்ணிக்க சொன்னாரு. அதான் கட்டிக்கிட்டேன்.." என்று சொன்னாள் அவள். அந்த இடத்தில் அவளின் அப்பா யாரை கை காட்டி இருந்தாலும் அவள் கல்யாணம் செய்திருப்பாள் என்பது அவனுக்கும் புரிந்தது.
இருவருமே பல விசயங்களில் ஒரே மாதிரியான குணாதிசயங்களை கொண்டிருந்ததை அடுத்து வந்த நாட்களில் புரிந்து கொண்டனர்.
பெற்றோரின் ஆசைக்காக திருமணம் செய்துக் கொண்டவர்கள் ஒன்றாய் சேர்ந்து வாழ ஆரம்பித்த சில நாட்களிலேயே ஒருவரையொருவர் நேசிக்க ஆரம்பித்து விட்டனர். இயல்பாய் அமைந்த காதலில் அவர்களின் ஒவ்வொரு நொடியும் அழகாகிக் கொண்டிருந்தது.
வேலை தேடி அலைந்தான் அவன். அவளோ கல்லூரியை தேடி ஓடினாள். மீதி இருந்த நேரங்களில் சலிக்காத கதைகளை பேசினர் இருவரும். பேச பேச அவனை அதிகமாக பிடித்து போனது அவளுக்கு. பார்க்க பார்க்க, பழக பழக அவளை அளவுக்கு அதிகமாகவே பிடித்து போனது அவனுக்கு.
அவர்களின் திருமணம் முடிந்த ஆறாம் மாதம் அவளின் தந்தை மாரடைப்பில் இறந்து போனார். அவள் அதிகம் சார்ந்திருந்த தந்தை இறந்ததில் அதிகம் உடைந்து போனவள் தோள் தந்த கணவனிடம் முழுமையாக சார்ந்து போய் விட்டாள். பார்ப்பவர் கண்களுக்கு ஒட்டுண்ணி போல் இருந்தது அவள் முகிலோடு கொண்ட சொந்தம். வாழ்வியலையோ அனுபவத்தையோ அதிகம் கற்றிறாத யதிராவுக்கு தான் முகிலோடு கொண்ட பந்தம் எத்தகையது என்று அப்போது புரியவில்லை.
அடுத்து வந்த ஆறாவது மாதத்தில் சௌந்தர்யாவும் ரூபனும் விவகாரத்தை வாங்கி கொண்டனர். தாய் வீடு வந்து சேர்ந்த சௌந்தர்யா யதிராவை முறைக்க ஆரம்பித்தாள். யதிராவும் முகிலும் சிரித்து பேசுவது அவளுக்குள் அனலாய் எரிந்தது. தனக்கு வாழ்க்கை பாலையாய் ஆனதாலோ என்னவோ யதிராவின் சிறு சிரிப்புகளையும் சிணுங்கல்களையும் சௌந்தர்யாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தான் வெறுத்து வந்த ஒருத்தனை தினம் தினம் நினைவுபடுத்திக் கொண்டிருந்த யதிராவை வீட்டிலிருந்து வெளியேற்ற நினைத்தாள் அவள்.
அதற்காய் அவள் போட்ட திட்டம்தான் கேன்சர் என்றொரு பொய். ஜீரண கோளாறால் மருத்துவமனை சென்றவனுக்கு தான் பேசி வைத்த மருத்துவர் மூலம் ரத்த மாதிரி எடுக்க வைத்து கேன்சர் என்று ஒரு ரிப்போர்ட்டை தர வைத்தாள் அவள். தனக்கு கேன்சர் உள்ளதாக அக்காவிடம் அழுது புலம்பினான் அவன். 'இனி எப்படி யதிராவோடு வாழ முடியும்' என்று கேட்டு அழுதான்.
அப்போது அவள் சொன்ன யோசனைதான் விவாகரத்து. 'என் அக்கா வாழாத வீட்டின் பெண்ணை என்னால் மனைவியாக வைத்து கொள்ள முடியாது என்று சொல்லி விவாகரத்து செய்து விடு..' என்றாள் அவள்.
சுய புத்தியை அதிகம் செலவிடாமல் எப்போதும் பெற்றோர் மற்றும் சகோதரியின் அறிவுரையிலேயே வாழ்ந்து வந்தவன் அன்றும் அப்படி ஒரு அறிவுரையைதான் கேட்டான்.
யதிரா தன்னை எந்த அளவு சார்ந்து வாழ்கிறாள் என்பதை அவன் நன்றாக அறிவான். தந்தையின் இறப்பையே தாங்காதவள் தான் இறந்தால் தற்கொலை செய்து கொள்ளவும் தயங்கமாட்டாள் என்று பயந்தான். அதையும் மீறி அவள் இங்கு வாழ்ந்தாலும் கூட அம்மாவும் அக்காவும் அவளை ஏதாவது திட்டி தீர்ப்பார்கள் என்று மனம் நொந்தான். அவன் கண்ணெதிரிலேயே அவள் பலநாள் திட்டு வாங்கியுள்ளாள். காதலினால் அவள் வாங்கும் திட்டில் முழு வலியை இவனும் உணர்ந்தாலும் கூட அவளை போலவே இவனும் ஏதும் எதிர்த்து பேசாத அளவுக்கு அப்பாவியாகதான் இருந்தான். இறப்பால் பிரிவதை விட இப்படி பிரிந்தால் தன் மீது உள்ள கோபத்திலாவது அவள் நல்வாழ்வு வாழ்வாள் என்று நம்பிக்கை கொண்டான். அது போலவே அவளை விவாகரத்து செய்து விட்டு ஊரை விட்டே ஓடிப்போனான். தனது செயலின் ஆரம்பமே தவறு என்று விரைவில் புரிந்துக் கொண்டவன் அந்த ஆரம்பத்தின் தவறு ஒரு சதி என்று எப்போது அறிவானோ.?
"முகில்.. முகில்.." அம்மாவின் குரலில் எழுந்தான்.
யதிராவை பற்றிய நினைவில் உறங்கி போனதை கண்டு சின்னதாக சலித்துக் கொண்டான். அறை கதவை சென்று திறந்தான். அம்மா நின்றுக் கொண்டிருந்தாள்.
"குளிக்க போனவனை ஆளே காணமேன்னு தேடி வந்தேன்டா.." என்றாள் அம்மா.
"தூங்கிட்டேன்ம்மா.. கொஞ்ச நேரத்துல குளிச்சிட்டு வரேன்.." என்று மீண்டும் உள்ளே நடந்தான். துண்டு ஒன்றை எடுத்து கொண்டு குளிக்க சென்றான். குளித்து முடித்து வந்தவன் அலமாரியை திறந்த பிறகே அங்கிருந்த அனைத்து உடைகளும் அளவில் பெரியது என்ற நிதர்சனம் உணர்ந்தான்.
"அக்கா.." இவனது அழைப்பில் "ஏன்டா..?" என குரல் தந்தாள் அவள்.
"என் சூட்கேஸை கீழேயே விட்டுட்டு வந்துட்டேன்.. எடுத்துட்டு வாயேன்.." என்றான்.
டவலோடு நிலை கண்ணாடியின் முன் நின்று தன் முகத்தை பார்த்தான். ஜீவனிழந்த விழிகள் கண்ணாடியில் பிரதிபலித்தது. சில நொடிகளுக்கு பிறகு கதவு தட்டப்பட சென்று கதவை திறந்தான். இளம்பெண் ஒருத்தி வெட்கத்தோடு நின்றுக் கொண்டிருந்தாள்.
"அண்ணி இதை உங்ககிட்ட கொடுத்துட்டு வர சொன்னாங்க.." என்று தரையிலிருந்த சூட்கேஸை கண் காட்டினாள். அவன் சூட்கேஸை உள்ளே எடுத்துக் கொண்டு கதவை மூட இருந்த வேளையில் "உங்க ரூமை பார்க்கலாமா.?" என்று கேட்டாள் அவள்.
"இங்கே பொருட்காட்சி நடக்கல.." என்றவன் கதவை சத்தமாக சாத்தினான்.
"யார் இந்த அதிக பிரசங்கி.?" என கடுகடுத்தபடியே உடையை மாற்றினான். சற்று நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்பட்டது. இந்த முறை அக்கா வந்திருந்தாள்.
"நகை கடைக்கு வரியாடா.?" என்று கேட்டாள் அவள்.
"அங்க வேற நான் எதுக்கு.?" என கேட்டவன் சூட்கேஸில் இருந்த பர்ஸை எடுத்து வந்தான்.
"கிரெடிட் கார்ட் தரேன்.. நீயே பார்த்துக்க.." என்று கார்டை அவளிடம் நீட்டி விட்டு திரும்பி நடந்தான்.
"நான் உன்கிட்ட பணத்துக்காக வந்தேன்னு நினைக்கிறியா.?" கோபமாக கேட்டாள் அக்கா. அவன் சலிப்போடு திரும்பினான். "வெளியே வர பிடிக்கலக்கா.." என்றான்.
"எப்பவும் ஒரே மாதிரிதான் இருப்பியா நீ.? கலகலப்பா மனுசங்களோடு பழகி நாலு இடம் சுத்தி வந்தா என்ன குறைய போற.?" என்று திட்டினாள்.
அவளிடம் சமாதானம் சொல்ல முடியாது என்று எண்ணியவன் "சரி விடு நானும் வரேன்.." என்றான்.
நகைக்கடை ஒன்றின் முன் காரை நிறுத்தி விட்டு அக்காவும் அந்த அதிக பிரசங்கி பெண்ணும் முன்னால் நடக்க அவர்களை பின்தொடர்ந்து நடந்த முகில் அந்த கடையில் யதிராவை மீண்டும் பார்ப்போம் என்று நினைத்து கூட பார்க்கவேயில்லை.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
Word count 1307
LIKE
COMMENT
SHARE
காதலின் இழையில் 5
நகைக்கடைக்கு செல்ல வேண்டும் என்று முகிலை இழுத்துக் கொண்டு காருக்கு நடந்தாள் சௌந்தர்யா.
அவன் காரை ஸ்டார்ட் செய்த நேரத்தில் அதிக பிரசங்கி பெண் ஓடிவந்து காரில் ஏறி அவனருகில் அமர்ந்தாள்.
அவன் அக்காவை திரும்பி பார்த்தான்.
"இது யார்.?" என்றான்.
"இவ என் பிரெண்ட் மேக்னாவோட சிஸ்டர். இரண்டு வருசமா என்னோட பாதுகாப்பில்தான் இருக்கா.." என்று அவள் சொன்னதும் முகிலுக்கு மனதுக்குள் ஒரு நெருடல் ஏற்பட்டது.
'மேக்னா.. எங்கேயோ கேள்விப்பட்ட பேரா இருக்கு..' என்று யோசித்தபடியே காரை கிளம்பினான் அவன்.
வழிநெடுக்க அந்த அதிக பிரசங்கி பேசிக் கொண்டே வந்தாள்.
"நான் சுபா.. நீங்க.." என்று அவனுக்கு கை தந்தாள்.
"நான் டிரைவ் பண்றேன்.." என்று வெடுக்கென சொன்னான் அவன்.
"கொஞ்சம் சிரிச்ச முகமா பேசினா என்னடா குறைய போற.?" என்று எரிந்து விழுந்தாள் அக்கா.
'சிரிச்ச முகமா பேச என்ன இருக்கு.?' என யோசித்தான் அவன். இயல்பை திடீரென மாற்றிக்கொள்ள யாரால் முடியும்.?
காரை நிறுத்திவிட்டு மூவரும் இறங்கினர். தன் முன் இருந்த நகைக்கடையை நிமிர்ந்து பார்த்தான் முகில். பட்ட பகலிலும் பல்வேறு விளக்குகளை ஒளிர விட்டபடி ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த கடை.
சௌந்தர்யாவும் சுபாவும் முன்னால் நடந்தனர். பேண்ட் பாக்கெட்டில் கை இரண்டையும் விட்டபடி நடந்துக் கொண்டிருந்த முகில் கேஷ் கவுண்டரில் நின்றிருந்தவளை கண்டதும் நடையை சட்டென நிறுத்தினான். யதிரா கூட்டம் நிறைந்த அந்த கடையில் தனது வேலையில் கவனமாக இருந்தாள். வாடிக்கையாளர் ஒருவர் தந்த பணத்தை மெஷினில் வைத்து எண்ணிக் கொண்டிருந்தாள்.
'யதிரா.. வேலை செய்றாளா.?' என்றுதான் அவனுக்குள் முதல் கேள்வி எழுந்தது. அவள் அந்த வாடிக்கையாளரை பார்த்து நின்ற வேளையில் சௌந்தர்யா சிலையாய் நின்ற தம்பியை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நடந்தாள். யதிரா தலை கவிழ்ந்து பில்லை டைப் செய்துக் கொண்டிருக்க அவளையே பார்த்தபடி கடந்தான் முகில்.
சௌந்தர்யா ஒரு இடத்தில் நின்றாள். நகைகளை எடுத்து காட்ட சொல்லி அங்கிருந்த பெண் ஒருத்திக்கு கட்டளையிட்டாள். முகில் யதிராவையே பார்த்தபடி நின்றிருந்தான்.
"அவளையே ஏன் பார்க்கற.? இந்த நகை நல்லா இருக்கான்னு பாரு.." என்று கடுகடுத்தாள் அக்கா. மூன்று வருடங்களுக்கு முன்னால் என்றால் அவளது வார்த்தைக்கு மரியாதை தந்து திரும்பியிருப்பான் அவன். ஆனால் இன்று அறிவுரை எது வீண் வார்த்தைகள் எதுவென நன்கு புரிந்துக் கொண்ட பின் அக்காவின் வார்த்தையை கேட்டு உடனே திரும்பி விட மனம் வரவில்லை.
யதிரா முகில் இருந்த திசையில் பார்க்கவேயில்லை. அடுத்தடுத்து வந்து நின்ற வாடிக்கையாளர்களுக்கு பில் போட்டு தரவும் தன் அருகே அமர்ந்திருந்த கடை முதலாளியின் கேள்விகளுக்கு பதில் சொல்வதிலுமே கவனமாக இருந்தாள்.
"அத்து விட்ட ஒருத்தியை ஏன்டா இப்படி பார்க்கற.?" எரிந்து விழுந்த அக்கா நகை ஒன்றை அவசரமாக தேர்ந்தெடுத்தாள்.
"இந்த மூதேவி இங்கே இருப்பான்னு தெரிஞ்சிருந்தா நான் வேற ஏதாவது கடைக்கு கூட்டி போயிருப்பேன்.." வெறுப்போடு அவள் கூற, அவளின் வார்த்தைகள் முகிலின் நெஞ்சில் நேரடியான பாதிப்பை தந்தது.
வார்த்தைகளில் வன்மம் கொண்டு திட்டும் அளவிற்கு யதிரா என்ன தவறு செய்தாள் என்று கோபப்பட்டான்.
"குடியை கெடுத்தவ இன்னும் ஏன் உயிரோடு இருக்கா.? இவளுக்குன்னு ஒரு முழம் கயிறு கூடவா கிடைக்கல.?" சௌந்தர்யா மெதுவான குரலில் திட்டியது அவன் காதில் தெளிவாக விழுந்தது.
"வார்த்தையை பார்த்து பேசுக்கா.." என்று ஆத்திரத்தோடு கர்ஜித்தான் முகில். அவனது திடீர் கர்ஜனையில் சௌந்தர்யா பயந்து விட்டாள். அவன் என்றுமே அதிர்ந்து பேசியதில்லை. அப்படி இருக்கையில் இன்று இப்படி கர்ஜித்தது அவளுக்கு இது தன் தம்பிதானா இல்லை வேறு யாரோவா என்ற சந்தேகத்தை தந்தது.
"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இந்த கத்து கத்துற.?" என்று கண்களை கசக்கினாள் அவள். அவன் பற்களை கடித்தபடி பணத்தை எடுத்து அவளது கையில் திணித்தான்.
"நான் கிளம்பறேன்.." என்று வெளியே நடந்தான். மூன்று வருடங்களுக்கு முன்னால் அக்காவின் அழுகையை கண்டால் மனம் வாடியவன் அவன். இன்று ஏனோ அவளது அழுகை எரிச்சலைதான் தந்தது.
பணத்தை எண்ணி முதலாளியிடம் தந்துவிட்டு பில்லையும் நகையையும் வாடிக்கையாளரிடம் தர நிமிர்ந்த யதிரா தன் கண் முன் நடந்து சென்ற முகிலை கண்டாள்.
அவசரமாக பில்லையும் நகையையும் வாடிக்கையாளரிடம் தந்தவள் "ஒரு நிமிசம் சார்.." என்று முதலாளியிடம் சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக வெளியே ஓடினாள்.
கடையின் வெளியே வந்ததும் சுற்றும் முற்றும் பார்த்தாள். முகில் சற்று தொலைவில் நடந்துக் கொண்டிருந்தான்.
"மாமா.." என்று கத்தி அழைத்தாள்.
யதிராவின் பார்வையில் படாமல் சென்று விடலாம் என்று நினைத்து நடந்த முகில் அவளது அழைப்பில் சட்டென நின்று விட்டான். உதட்டை கடித்தபடி திரும்பினான்.
ஓடிவந்து முகிலின் அருகில் நின்றாள் அவள். "எங்கே மாமா போனிங்க இவ்வளவு நாளா.? நீங்க வருவிங்கன்னு நான் தினம் வாசலை பார்த்துட்டு இருந்தேன் தெரியுமா.?" என கேட்டவள் சட்டென வழிந்து விட்ட கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.
அவளுக்கு என்ன பதிலை சொல்வதென அவனுக்கு தெரியவில்லை. தன்னை மறந்து விட்டிருப்பாள் என நினைத்த ஒருத்தி தனக்காய் தினம் காத்திருந்தாள் என்ற செய்தி அவனின் இதயதுடிப்பை இரு மடங்காக்கியது. அவளது முகத்தையே பார்த்தபடி சிலையாய் நின்றான். அவளை அருகில் பார்த்தது அவனுக்குள் சிறு வெட்ப சலனத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. அவளது கண்ணீர் அவனது இதயத்திற்கு வலியை தந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னால் இருந்த உணர்வுகள் இப்போது பல மடங்காக வளர்ந்து விட்டிருந்தது. அப்போது தனது வலியையே அதிகம் அறியாமல் ஒதுக்கியவனுக்கு இன்று யதிராவின் கண்ணீர் தந்த வலியை தாங்கி கொள்ள கூட முடியாத அளவுக்கு உணர்ந்தான்.
"உங்களுக்கு இரண்டாவது கல்யாணம் ஆயிடுச்சின்னு என் அண்ணா சொன்னான்.. நீங்க என்னை தவிர வேற எந்த பொண்ணையும் திரும்பி கூட பார்க்க மாட்டேன்னு என் தலையில அடிச்சி சத்தியம் பண்ணியிருந்திங்க இல்ல.. அதனால்தான் என் அண்ணன் சொன்னதை நான் நம்பவேயில்ல.. ஆனா ஏன் மாமா என்னை பார்க்க இத்தனை நாளா வரவே இல்ல.?" என்று அவள் கேட்க அவன் உதடுகள் தாண்டி வர மறுத்த வார்த்தைகளோடு போராடியபடி நின்றுக் கொண்டிருந்தான்.
'எனக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சின்னு ஏன் அவன் அண்ணன் பொய் சொன்னான்.? எங்க இரண்டு பேர்கிட்டயும் ஏன் இப்படி ஒரு பொய்யை சொன்னாங்க இவங்க.? அந்த டாக்டரும் கூட இப்படித்தான்..' அவனது யோசனை சட்டென தடைப்பட்டு நின்றது. 'டாக்டர்.. மேக்னா.. அந்த டாக்டர் பேர் மேக்னா..' ஊருக்கு வந்ததும் மறக்காமல் அந்த மருத்துவரிடம் ஒரு கணக்கு தீர்க்க நினைத்தவன் அந்த மருத்துவரின் பெயர் நினைவு வந்து விடவும் மன குமுறலோடு கையை இறுக்கினான்.
"அடையாளம் தெரியாத மாதிரி இளைச்சிட்டிங்களே மாமா.. நேரா நேரத்துக்கு சாப்பிட கூட உங்களுக்கு தோணலையா.?" என்று கேட்டவளின் புறம் தன் கவனத்தை திருப்பினான்.
அவளது முகத்தில் இருந்த கவலையும் சோகமும் அதே நேரத்தில் தன்னை பார்த்து விட்டதால் உண்டான அளவில்லா மகிழ்ச்சியும் அவனுக்குள் பலவிதமான உணர்வுகளை தந்தது. அவளை கட்டியணைக்க ஆவலாய் இருந்தது.
சிலையாய் நின்றபடி தன்னை பார்த்திருந்தவனின் முகத்தை நோக்கி தனது வலது கையை உயர்த்தினாள் யதிரா. அவனது கன்னத்தில் தன் உள்ளங்கையை பதித்தாள். அவளின் ஸ்பரிசம் பட்டதில் எச்சில் விழுங்கினான் அவன். அவளது உள்ளங்கை ஜில்லென்று இருந்தது. அவளது கரம் லேசாக நடுங்கியதை அவனும் உணர்ந்தான்.
'சாரி யதி.. உன்னை என்னோடு உடனே கடத்திட்டு போக ஆசைதான் எனக்கும். ஆனா ஏன் என் அப்பாவும் உன் அண்ணனும் இப்படியொரு பொய்யை நம்மகிட்ட சொன்னாங்கன்னு தெரிஞ்சிக்காம உன்னை நான் நெருங்க முடியாது.. ஏதோ ஒரு உறுத்தல் எனக்குள்ள இருக்கு. அதை தீர்த்துக்காம உன்கிட்ட நான் வர முடியாது.. உன்னை இப்படியே..' அவனது நினைவிற்கு தடை போடுவது போல யதிரா அவனை விட்டு விலக்கி தள்ளப்பட்டாள்.
முகில் அதிர்ச்சியோடு பார்த்தான். யதிராவை முகிலை விட்டு தூர தள்ளி விட்டிருந்த சௌந்தர்யா தன் தள்ளுதலால் கீழே விழுந்து கிடந்த யதிராவை கோபமாக பார்த்தாள்.
"என் தம்பியை தேடி வராதன்னு எத்தனை முறை சொன்னாலும் உனக்கு புரியாதா.? கொஞ்சமாவது சாப்பாட்டுல உப்பு சேர்த்து சாப்பிடு.." என்று எரிந்து விழுந்தாள்.
'எத்தனை முறை யதிரா என்னை தேடி வந்தா.? எத்தனை முறை அக்கா இப்படி சொன்னா.?' என்று குழம்பினான் அவன்.
யதிராவை பார்த்து அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் முகிலைதான் தாக்கியது. கீழே விழுந்து கிடந்தவளை அவசரமாக தூக்கி நிறுத்தினான் முகில்.
"ச்சீ.. அவளை விடு.." என்ற சௌந்தர்யா அவனை தன் பக்கம் இழுத்தாள்.
'ச்சீயா.? என் பொண்டாட்டியா.?' என்று அவன் அதிர்ந்து நிற்க அவனை சிரமப்பட்டு இழுத்துக் கொண்டு காரின் அருகே வந்தாள்.
முகில் யதிராவை திரும்பி பார்த்தான். அவளோடு வேலை செய்யும் பெண்ணொருத்தி அவளை அங்கிருந்து அழைத்து சென்றுக் கொண்டேயிருந்தாள்.
யதிரா கலங்கும் கண்களோடு இவனையே பார்த்தபடி சென்றாள். அவள் தனது கண்களை துடைத்துக் கொள்ளும்போதுதான் அவளது கை முட்டியில் ரத்தம் கசிவதை பார்த்தான் முகில். சௌந்தர்யா கீழே தள்ளி விட்டதில் உண்டான காயம் அது என்று புரிந்துக் கொண்டான்.
"அவளை என்ன பார்த்துட்டு இருக்க.? காரை எடு.." என்று கதவை திறந்து அவனை உள்ளே தள்ளிவிட்டாள் சௌந்தர்யா. அவன் தடுமாறி விழுந்தான். சௌந்தர்யா அவனை கண்டுக் கொள்ளாமல் சென்று பின் சீட்டில் ஏறினாள்.
தடுமாறி விழுந்தவனுக்கு அந்த நொடியில்தான் தான் யாரென புரிந்தது. தான் இத்தனை வருடங்களும் மற்றவர்கள் கையில் பொம்மை போல் இருந்துள்ளதை புரிந்துக் கொண்டவனுக்கு தனது உண்மையான இடறல் எதுவென்று புரிந்துக் கொண்டான். அதே யோசனையோடு எழுந்து நின்று காரில் ஏறினான்.
யதிரா தூரத்தில் கடையில் நின்றபடி இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நொடிக்கொரு முறை கண்களை துடைத்துக் கொண்டாள்.
"அந்த பிச்சைக்காரியை ஏன் பார்க்கற.?" என்று ஆத்திரமாக அக்கா கேட்கவும் இன்ஜினுக்கு உயிர் தந்தான் முகில். அக்கா யதிராவை திட்டுவதை அவனால் காதால் கேட்க முடியவில்லை.
'ஏன் அக்கா அவளை அப்படி திட்டுறா.?' என தன்னிடமே கேட்டுக் கொண்டவனுக்கு அக்கா விவாகரத்து வாங்கி வந்து வீட்டிலிருந்த மூன்று மாதங்களுமே அவளை இப்படிதான் ஏதாவது திட்டிக் கொண்டிருந்தாள் என்பது நினைவுக்கு வந்தது.
ஏதோ ஒரு பெரிய சிக்கலில் தனது மனம் சிக்கி கொண்டிருப்பதை உணர்ந்தான்.
"ஐயோ எதிரில் பஸ் வருது.." சுபா அவனது தொடையை தட்டியதில் நேராக பார்த்து காரை வளைத்து ஓட்டினான் முகில்.
மெலிதான இசையில் பாடல் ஒன்றை ஒலிக்க விட்ட சுபா அவனது தொடையில் கை தாளத்தை போட ஆரம்பித்தாள். பற்களை அரைத்தான் முகில். "கையை எடு.." என்றான் எரிச்சலாக. சட்டென கையை எடுத்தவள் முகத்தை மறுபக்கம் திருப்பி கொண்டாள்.
வீட்டின் முன் காரை நிறுத்தியவன் அக்காவும் சுபாவும் இறங்கியதும் மீண்டும் எங்கோ கிளம்பினான்.
"இவனுக்கு இன்னைக்கு திடீர்ன்னு எந்த பேய் பிடிச்சது.?" என எரிச்சலாக கேட்டபடி வீட்டுக்குள் சென்றாள் சௌந்தர்யா. முகில் சென்ற திசையை திரும்பி திரும்பி பார்த்தபடியே சௌந்தர்யா பின்னால் நடந்தாள் சுபா.
மருத்துவமனை ஒன்றின் முன்னால் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான் முகில்.
மருத்துவமனையின் வரவேற்பறையினுள் நுழைந்தவன் "டாக்டர் மேக்னாவை பார்க்கணும்.." என்றான். வரவேற்பு மேஜையில் இருந்த பெண் நிமிர்ந்து பார்த்தாள். "அப்படி யாரும் இங்கே இல்லையே.." என்றாள்.
முகில் குழம்பினான். 'இந்த பேர்தானே அந்த டாக்டரோடது.?'
"எனக்கு தெரியும்.. மேக்னான்னு ஒரு டாக்டர் இங்கே இரண்டு வருசம் முன்னாடி வரைக்கும் வேலை பார்த்துட்டு இருந்தாங்க.." என்றாள் அங்கிருந்த இன்னொரு பெண்.
"இப்ப அவங்க எங்கேன்னு சொல்ல முடியுமா.?" என்று அவசரமாக கேட்டான் முகில்.
"அவங்க வேலையை விட்டுட்டு போன பிறகு எனக்கேதும் தெரியாது.." என்றவள் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு "அதோ அந்த நர்ஸ் அவங்களோட பிரெண்ட்தான்.
அவங்ககிட்ட கேளுங்க.. தகவல் கிடைக்கும்.." என்றாள்.
அவள் கைகாட்டிய நர்ஸை நோக்கி நடந்தான் முகில்.
"ஹலோ சிஸ்டர்.. டாக்டர் மேக்னாவை பார்க்கணும்.. ஒரு பர்சனல் மேட்டர். அட்ரஸ் தரிங்களா.?" என்றான்.
அவள் இவனை மேலும் கீழும் பார்த்தாள். "அவங்க மேற்படிப்புக்காக பிரான்ஸ் போயிட்டாங்க.." என்றாள். முகிலுக்கு ஏமாற்றமாக இருந்தது.
"அவங்க போன் நம்பர் தரிங்களா.?" என்று கேட்டான் கடைசி முயற்சியாக.
"சாரி சார்.. அவங்க போன் நம்பர் ரொம்ப பர்சனல்.. நான் தர முடியாது.." என்றவள் அவனது வாடிய முகம் கண்டு "அவங்க இன்ஸ்டா ஐடில போய் பேசி பாருங்களேன்.." என்றாள்.
முகில் உடனடியாக தனது ஃபோனை எடுத்து இன்ஸ்டாகிராமை டவுண்லோட் செய்து உள்ளே நுழைந்தான். மேக்னாவின் ஐடி எதுவென அந்த நர்ஸ் காட்டினாள்.
"தேங்க்ஸ்ங்க.." என்றவன் வெளியே நடந்தான்.
காரில் அமர்ந்த பிறகு அவளுக்கு "ஹாய்.." என்று ஒரு மெஸேஜை அனுப்பினான்.
"என் மூணு வருச வாழ்க்கையை அழிச்சிட்டு நீ மேல் படிப்பு படிக்க போயிருக்கியா.?" என கோபத்தோடு அவளது புகைப்படத்தை பார்த்து கேட்டான். அவளது புகைப்பட பட்டியல்களை எதேச்சையாக பார்க்க துவங்கியவன் மேக்னாவோடு சுபா இருக்கும் புகைப்படம் கண்டு அதிர்ந்தான்.
"அவ இந்த டாக்டரோட தங்கச்சியா.?" என கேட்டவனின் அதிர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியது அடுத்ததாக இருந்த புகைப்படம். மேக்னாவும் சௌந்தர்யாவும் கட்டியணைத்தபடி நின்றிருந்த புகைப்படத்தை கண்டவன் அதிர்ச்சியை தாங்க இயலாமல் ஃபோனை கை தவற விட்டான்.
"அக்கா தன் பிரெண்ட் மேக்னான்னு சொன்னது இந்த டாக்டரைதானா..? அக்காவோட பிரெண்ட் ஏன் ரிப்போர்ட்டை மாத்தி எழுதி தரணும்.? இது எல்லாமே கோ இன்சிடென்டா.?" என கேட்டவனுக்கு சந்தேகம் ஒன்று உதித்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்ள மனம் தயங்கியது.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
Word count 1356
VOTE
COMMENT
SHARE