Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil novel  

Page 2 / 5
  RSS

Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
29/05/2020 12:57 pm  

அத்தியாயம் 13

 

மலரும் நினைவுகள்

திடீரென வந்திருந்தவர்களை கண்டு, ஒரு நொடி அதிர்ந்து போய் நின்று, மறுநொடி சுதாரித்து, "வாங்க! வாங்க! உள்ள வாங்க!" என்று முகத்தை இயல்பாக்கி வரவேற்றாள் சுஹாசினி.

 

அவர்களும் சாதாரணமாய் உள்ளே வர, சுஹாசினியின் செயலை கண்டிக்கும் விதமாய், "சுஹா…!!" என்று அவளை அதட்டினார் மேகலா.

 

சுஹாசினி அதனை கண்டு கொள்வதாய் தெரியவில்லை.

 

மேகலாவின் முறைப்பையும் மீறி அவர்களிருவரையும் ஹாலில் இருந்த சோபாவில் அமர வைத்தாள்.

 

"மாம், க்ரான்பாவுக்கும் ஆன்ட்டிக்கும் இன்னைக்கு லன்ஞ் நம்ம வீட்டுல தான்" என்று மேகலாவின் கோபப் பார்வையையும் கண்டு கொள்ளாமல் மொழிந்தவள், "ஈஸ்வரி, ஜூஸ் கொண்டு வா!" என்றும் இரைந்தாள்.

 

"மாம், என்ன நீங்க பேயறைஞ்ச மாதிரி நிக்குறீங்க?.. வந்திருக்கவங்கள வாங்கன்னு கூட சொல்ல மாட்டேங்குறீங்க?.. க்ரான்பா, உங்களை பார்த்த அதிர்ச்சி போல மாம்க்கு.. வேறொன்னுமில்ல" என்று சமாளிக்கவும்,

 

"வா மேகலா, வந்து உட்காரு" என்றார் அந்தப் பெரியவர்.

 

"நானே கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளுறதுக்குள்ள, வெளிய போய்டுங்க" என்று தன் ரத்தம் சூடேற கத்தினார் மேகலா.

 

"மாம், என்னதிது?.. இப்படி மரியாதை இல்லாம பேசுறீங்க?.." என்று சுஹாசினி கோபமாய் கேட்க,

 

"ஆங் மரியாதை, அதை நீ எப்படி உன் புகுந்த வீட்டுல காட்டினேன்னு தான் உன் மாமனாரோட அம்மா நேத்து விலாவரியா சொன்னாங்களே சுஹா.. யாரை எங்க வைக்கணும்னு எனக்கு தெரியும், நீ சொல்லத் தேவையில்ல" என்று அதட்டியவரின் குரலில் அதிகாரம் தொனித்தது.

 

"இவ்ளோ நாள் நீ பண்றதுக்கெல்லாம் காரணம் நான் உன் கெஞ்சலையும் மீறி மறு கல்யாணம் பண்ணிக்கிட்டது தான்னு நெனச்சேன்.. பட், இப்போ தான் உனக்கு பின்னாடி யாரு தூண்டி விட்டுக்கிட்டு இருந்திருக்கான்னு புரியுது" என்று அவளை உக்கிரமாக பார்த்தார்.

 

"சொல்லு உனக்கு எவ்ளோ நாளா இவங்களை தெரியும்?" என்றும் குரலை உயர்த்தி கேட்டார்.

 

"ஐந்து வருடமாக.." என்று சுருதி இறங்கிய குரலில் கூறிய சுஹாசினி,

 

"அந்த ராஜாராம் தான் பிளான் பண்ணி நம்ம டேடிய கொன்னாரு.. அவரை எப்படி மாம் உங்களால கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சது?.. நம்ம டேடிய எப்படி உங்களால மறக்க முடிஞ்சது?.. நான் எவ்வளவோ கதறுனேனே மாம், அந்தாளை நம்பாதீங்கன்னு.. அவரை விட்டு நம்ம தூரமா எங்கேயாவது ஓடிப் போயிடலாம்னு கூட சொன்னேனே.. நீங்க கேட்டீங்களா?.. அதான் கோபத்துல எனக்கு பிடிக்காததை எல்லாம் நீங்க செஞ்ச மாதிரி, உங்களுக்கு பிடிக்காததை யெல்லாம் நான் செய்ய ஆரம்பிச்சேன்.. அதுக்கும் இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது" என்றபடியே நிமிர்ந்து பார்க்க, கண்கள் கனலை கக்க நின்றிருந்தார் மேகலா.

 

"உங்கப்பா சாகக் காரணமே இவங்க தான் சுஹா" என்று வேதனை நிரம்பக் கூறியதோடு கொஞ்சம் திடமாக நின்று,

 

"நீ ரொம்ப வளர்ந்துட்ட, உன் மூளையும் வளர்ந்திருச்சின்னு நெனச்சேன் சுஹா.. பட் அப்படியே தான் இருக்கு.. உங்கப்பா சாகும் போது அவரு பெரிய லட்சாதிபதியெல்லாம் கிடையாதுங்கிறது உனக்கும் ஞாபகமிருக்கும்னு நெனக்கிறேன்.. எந்தவொரு ஆதாயமுமே இல்லாம உன் டேடிய அவர் எதுக்கு கொல்ல நினைக்கணும்?.. வெளிலயிருந்து உங்கப்பாவை பார்த்த எல்லாருக்கும் அவருக்கிட்ட பணம் புரள்வதா தான் தெரிஞ்சிருக்கும்" என்றவாறே முதியவரின் அருகிலிருந்தவளை உற்றுப் பார்த்தார்.

 

"நோய்வாய் பட்ட உங்க பாட்டியை பாத்துக்க அவர் எவ்வளவு செலவழிச்சாருங்கிறதும், அதுக்காக எவ்வளவு கடன் வாங்கினாருங்கிறதும் எனக்கும் ராஜாராம் அவருக்கும் தான் தெரியும்.. அப்படியிருக்க அவர் ஏன் உங்க அப்பாவை கொலை பண்ண முயற்சிக்கனும்?" என்று 'கொஞ்சமாவது யோசியேன் சுஹா' என்று மேகலா தன் கேள்வியில் ப்ரேக் போட்டு நிற்க,

 

"அதற்கான காரணத்தை சொல்லத்தான் நான் இங்க வரவேண்டியதா போச்சு அண்ணி" என்று கரகரத்த குரலில் கூறியவளின் அடுத்த வார்த்தையை எதிர்நோக்கி சுஹாசினியின் செவிகள் கூர்மையடைந்தது.

 

'முக்கியமான விஷயத்தைப் பற்றி கூற வந்திருக்கிறேன்' என்று கூறிவிட்டு, அதை சொல்லத் தயங்கியவளை கண்டு, "ம்ம்? என்னன்னு சொல்லுங்க ஆன்ட்டி?" என்றவள் ஊக்குவிக்க, தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து டைரியொன்றை எடுத்து வெளியே வைத்தாள் அவள்.

 

பொறுமை காக்க முடியாத சுஹாசினி, "இது யாருடையது ஆன்ட்டி?" என்று வினவ,

 

"அண்ணாவுடையது" என்றாள் அவள்.

 

"இதுல என்ன எழுதியிருக்கு?" என்று கேட்க நினைத்த சுஹாசினி வாய் திறக்கும் முன்,

 

"வந்தவேலை முடிந்து விட்டால் கிளம்பலாமே?" என்றார் மேகலா.

 

அவரின் பேச்சில் தன்மானம் சீண்டப்பட, உடனே எழுந்து வெளியேறி விட்டார் பெரியவர். உடன் வந்தவளும் அவரைப் பின் தொடர்ந்து வெளியேற, தன் அன்னையை முறைத்துக்கொண்டே டைரியுடன் தன் அறைக்கு மாடிப்படி ஏறினாள் சுஹாசினி.

 

மதியம் ஒரு மணியளவில் சாப்பிட கீழே வந்தவள், "அவர் ஏன் உங்கப்பாவை கொல்ல நினைக்கணும்னு காரணம் கேட்டீங்களே மாம்?, இதை படிச்சுப் பாருங்க.. உங்களுக்கே காரணம் புரியும்.." என்றபடியே அவர் கையில் டைரியை திணித்தாள்.

 

பின் டைனிங் ஹாலில் பாத்திரங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த ஈஸ்வரியிடம், "சாப்பாட்டை என் ரூமுக்கு எடுத்துட்டு வந்திரு.." என உத்தரவிட்டு, மீண்டும் தன்னறைக்கே சென்றுவிட்டாள்.

 

டைரியுடன் தன் படுக்கையறைக்குள் நுழைந்த மேகலா, அதை திருப்பி திருப்பி பார்த்தார்.

அந்த டைரியின் அட்டையில் வருடம் 1990 என அச்சிடப்பட்டிருந்தது.

 

அதனைப் பார்த்த உடனே மேகலாவின் நினைவுகள் பின்னோக்கி சுழன்றது, அவரின் கல்லூரிக் காலத்தை நோக்கி பயணித்தது.

 

…………………….

 

வருடம் 1990

மதுரை.

மதுரை மாநகரின் பெருமையை உலகிற்கு எடுத்துச்சொல்ல மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்.

 

தங்கையின் திருக்கல்யாணத்தை காண இயலாத கோபத்தில் வீறுகொண்டு செல்லும், தங்கை பாசத்தில் பாசமலர் சிவாஜியையும் ராவணனையும் மிஞ்சிவிடும் மனங்கவர் கள்ளனான கள்ளழகர். அவ்வழகனின் கோபத்தை சித்ரா பௌர்ணமியன்று தணிக்க முயலும் வைகையாறு.

 

ஆம் வைகையாறு தான். வைகை ஆற்றுக்கென எத்தனையோ சிறப்புகளை வரலாறு கூறியிருந்தாலும், சிவபெருமானையே பிட்டுக்கு மண் சுமக்க வைத்த பெருமையினை கொண்ட ஆறல்லவோ அது?!

 

தற்போது ஆறில்லை எனினும் ஆறிருந்த தடயம் இருக்கும் இடத்தில் அழகரின் விஷேஷக் குளியலை காணவும், அடுத்து அந்த அழகன் அணியவிருக்கும் பட்டின் வர்ணத்தைக் கொண்டு, அந்த வருட செழுமை வளமையெல்லாம் கணக்கிடவும், இன்னமும் மக்கள் லட்சோப லட்சக் கணக்கில் குவிவதை கண்டால் நமக்குத்தான் பிரமிப்பாக இருக்கும்.

 

கள்ளழகனின் மனதை குளிர்விக்க முடியாவிட்டாலும் வருடந்தோறும் அவன் உடலை குளிர்வித்துக் கொண்டிருக்கும் ஆற்றை பின்புறத்திலும், அகலமான படிகளும் அருணோதயம் நிகழும் நேரம் தங்கம் பூசிய தடாகமுமாய் மின்னும் தெப்பக்குளத்தை முன்புறத்திலும் கொண்ட சிறப்பினைக் கொண்டது மதுரை காமராசர் கலைக்கல்லூரி.

 

ஏழை மாணவர்களின் நலனை மட்டுமே கருத்திற் கொண்டு கட்டப்பட்ட கல்லூரி அது. கல்லூரியின் நுழைவு சீட்டு, தேர்வில் அடையும் அதிக மதிப்பெண் மட்டுமே. லஞ்சத்தின் வாசனை கொஞ்சமும் படாத கல்வி நிறுவனம் அது. கல்லூரியில் மேற்கோள் காட்டிக் கூற சிறப்பு வாய்ந்த இடங்கள் பல இருந்தாலும் மேகலா எப்போதும் வசிப்பதென்னவோ நூலகத்தில் தான்.

 

அண்மையில் அவள் சொன்ன கூற்று, "நூலகத்தில் வாழலாம்". ஆம் நாம் இறந்த பின்பும் நம் புத்தகங்களின் மூலம் பிறர் மனதிலும் நூலகத்திலும் வாழலாம். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் அவை.

 

கண்முன் கட்டுக் கட்டாக பெயர் பலகையுடன் பிரிக்கப்பட்ட புத்தக அலமாரிகள். அவற்றில் கண்களை ஓடவிட்டு தமிழிலக்கிய பிரிவுக்குள் பிரவேசித்தால், ஓரத்தில் சாளரமிருந்த இடத்தில், தரையில் முட்டிப்போட்டமர்ந்து, மார்பிலிருந்து கருநிற அருவியாக வழிந்து தரையை துழாவிக்கொண்டிருக்கும் பின்னலிட்ட சடையை பின்னால் தூக்கி போட்டவாறே, சாண்டில்யனின் அற்புதப் படைப்புகளில் ஒன்றான ராஜமுத்திரையின் நடுப்பக்கத்தை விரித்து வைத்து, வீரப்பாண்டியனின் இளநங்கையாகவே மாறி கனவுலகில் அவனுடன் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மேகலாவை காணலாம் நாம்.

 

"அந்த வயோதிகரோட எழுத்துல அப்படி என்ன தான் இருக்குதோ?, இப்படி முதுகு கூன் விழும் அளவுக்கு குனிந்து குனிந்து பொடிப் பொடி எழுத்துக்களை ஜன்னல் வெளிச்சத்துல உட்கார்ந்து படிக்கிறியே மேகா?!" என்று நூறாவது முறையாக கேட்கும் தன் தோழியை, ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தவள், தன் இதழில் குறுநகையை தவழவிட்டவாறே மீண்டும் கண்களை புத்தகத்தில் ஓட விட்டாள்.

 

"ஹேய் சிரிச்சு சமாளிக்காதேடி.. சொல்லுடி?" என்று விடாப்பிடியாய் வினவினாள் நிவேதா.

 

நிதானப் பார்வையுடன் நிமிர்ந்த மேகலா, "பாண்டிய மன்னனின் தலைநகரமாக நம் மதுரையை சேர்த்து இன்னொன்றும் இருந்தது என்று தெரிந்திருக்கிறது.. எங்க? அது என்னன்னு சொல்லு பார்க்கலாம்?" என்று குறும்பாக கேட்க,

 

விடை தெரியாமல் முழித்தாள் நிவேதா.

 

இளமுறுவலுடன் "கொற்கை"  என்றவள், அத்துடன் விடவில்லை அவளை.

 

"பொருநை எங்குள்ளது?" என வினவினாள்.

 

வழிந்து தலையை சொறிந்து கொண்டே "எங்கேடி இருக்கு?" என்று திருப்பிக்கேட்டாள் நிவேதா.

 

"திருநெல்வேலியில் மங்கையரின் மேனியில், தாமிரத்தை பூசியது போல், அவர்களின் பூவுடலை மினுங்க செய்தபடி, தாமிரபரணியாக ஓடுவதே பொருநை என்கிறார் சாண்டில்யன்" என நெற்றியை முட்டி கவித்துவமாக பேசியவளை, வலியில் முகத்தை சுருக்கிக்கொண்டே தள்ளி நிறுத்தினாள் நிவேதா.

 

"செண்டுவெளி பற்றி கேள்விப்பட்டிருக்கியாடி?.. எரிபரந்தெடுத்தல் பற்றி?.. கொட்டுந்தளம் பற்றி?.. ம்ஹூம் தெரியாதில்லையா?.. படிச்சுப் பாருடி எவ்வளவு பெருமையும் வீரமும் மிக்க தமிழினத்தில் நம்ம உயிர்த்துக் கொண்டிருக்கோம்ன்னு புரியும்" என்று உணர்ச்சி வசப்பட்டு பேச,

 

கையில் சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' என்னும் புத்தகத்தை வைத்திருந்தவள், "நீ சொல்றதெல்லாம் சொன்னபடியே எனக்கும் தெரியாதுன்னு நானும் ஒத்துக்கிறேன்டி.. எங்க நீ கேட்ட மாதிரியே நானும் சில கேள்விகளை உன்கிட்ட கேட்கிறேன், நீ பதில் சொல்லுடி பார்க்கலாம்?" எனத்தன் மார்பில் உறவாடிக் கொண்டிருந்த இரண்டு பின்னல்களில் ஒன்றை மட்டும் பின்புறம் எடுத்துப் போட்டவாறே அவள் கேட்க,

 

"ம்ம் கேளுடி" என்று கேள்விகளை எதிர்நோக்க தயாரானாள் மேகலா.

 

"ஆர்க்கிமிடிஸ் தத்துவம் பற்றி உனக்கு தெரியுமாடி?" என்று முதல் கேள்வியை நிவேதா மிடுக்காய் கேட்க,

 

"ஆர்க்கிமிடிஸா?.. யாரு?.. குளிச்சுக்கிட்டு இருக்கும் போதே உரேக்கான்னு (கண்டுபிடிச்சிட்டேன்னு) கத்திக்கிட்டு அரண்மனை நோக்கி ஓடி, பல கன்னிப்பெண்களோட தூக்கத்தை கெடுத்தாரே அந்த மகானா?" என்று தன் முத்துக்கள் சிதற சிரித்தாள் மேகலா.

"உனக்கு அவரப்பத்தி அது மட்டும் தான் தெரியுமாடி?.. சீச்சீ என்கூட சேர்ந்து ரொம்பவே கெட்டுப்போய்ட்டேடி நீ.. இப்போவே அணில்வாள் மீசைக்காரருக்கு ட்ரெங்கால் ஒன்னு போடணும்டி" என்று கோபம் கண்ணிலும் புன்னகை இதழிலும் தேங்கி நிற்க கூறிய நிவேதா,

 

"சிறு குண்டூசி போட்டாலும் அகோர பசிக்கொண்டு அதனை விழுங்கி கொள்கிற கடல், அவ்வளவு பெரிய கப்பலை மட்டும் ஏன் விழுங்காம இருக்கு, அப்படிங்கிறதுக்கான காரணத்தை சொன்னவருடி அவரு.. அவரைப்போய் எப்படி ஞாபகம் வச்சிருக்க நீயி!" என்றவள் வருத்தம் தெரிவிக்க,

 

"ஓஹோ.." என்று மட்டும் சொல்லிக்கொண்டாள் மேகலா.

 

"உனக்கு நியூட்டன் சொன்ன ஈத்தேன் ஊடகம் பற்றி தெரியுமாடி?"

 

"ம்ஹூம் தெரியாது.. மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் ஆப்பிளுக்கும் உள்ள தொடர்பை காட்டிலும் அந்தாளுக்கும் ஆப்பிளுக்கும் உள்ள தொடர்பு தான் ரொம்ப வலுன்னு தெரியும்" என்று கூறி கண்ணடிக்க,

 

"என்னடி?, பக்கா மதுரக்காரிக்கிட்டயே லந்தக் கூட்டுறியா?.. கொஞ்சம் டீசண்ட்டா உன்கிட்ட பேசிறக் கூடாதே." என்று களத்தில் இறங்கி மிரட்டிய நிவி,

 

"சீக்கிரம் புக் எடுத்துட்டு வாடி, ஹாஸ்டலுக்கு வேற போகணும்.. இப்போவே மணி அஞ்சு.. லேட்டா போனா ஹாஸ்டல் வார்டன் விசாரணை கமிஷன் வச்சிரும்.. அம்மாடியோவ் இதுக்கு மேல என் வயிறும் தாங்காது.. வயிறு எனக்கு ஏதாவது கொடேண்டின்னு அப்போயிருந்து சத்தம் போட்டுக்கிட்டே இருக்கு.. ம்ஹூம் எப்போடா எங்க புது வீட்டுக்கு போவோம்னும் இருக்குடி.. லைப்ரரியன் உன்னை இங்க உள்ள வச்சு பூட்டிட்டு போனாலும் மேடம் சந்தோசமா புத்தகம் படிக்க ஆயத்தமாகிடுவீங்க, என்னால அப்படி புத்தக புழுவாயிருக்க முடியாதுப்பா.." என்று எப்போதும் போல பரபரத்தாள்.

 

"ஹேய் நிவி, ப்ளீஸ்டி.. இந்த ஒரு அத்தியாயம் மட்டும்டி.. அதிலும் அவர் அண்டர்லைன் பண்ணிருக்கிற வரிகள் எல்லாம் படிக்க படிக்க அவ்வளவு அற்புதமா இருக்குடி.. ச்ச என்னவொரு ரசனைடி அவருக்கு?!" என்று சிலாகிக்க,

 

"அட! உன்னோட அந்த அவர் இந்த புத்தகத்தையும் விட்டு வைக்கலையா?" என்றாள் நிவேதா.

 

"ஆமாடி..." என்ற மேகலாவின் கண்கள் புத்தகத்திலேயே இருக்க,

 

"சரி சரி சீக்கிரம் படி" என்று சொன்னவள், ஐந்து நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அவளை கிளம்பும் படி அனத்தியெடுக்க ஆரம்பித்து விட்டாள்.

 

அனத்தல் தாங்காமல், தான் எடுத்த புத்தகத்துடன் நூலகரை நோக்கி நகர்ந்தாள் மேகலா.

 

தானும் தன் கையில் வைத்திருந்த புத்தகத்துடன் புத்தகத்தை திருப்பி அளிக்கும் இறுதிநாள் பதியப்படும் வரிசையில் கலந்துகொண்டாள் நிவேதா.

 

இறுதிநாள் குறிப்பிடப்பட்டவுடன் நிவேதா தன் புத்தகத்தை கையிலெடுக்க, காத்திருந்த மேகலா தன் புத்தகத்தை மேசையின் மேல் வைத்தாள்.

 

அப்பொழுது தான் நூலகர் உதிர்த்தார் அந்த வார்த்தைகளை.

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்...

 

அத்தியாயம் 14

 

உயிர் வாங்கும் சுவாசம்

இன்று 2020

காலை 11 மணி

சென்னை.

கைவிலங்கு மாட்டப்பட்ட ராஜாராமை தன் ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்றான் அர்ஜுன்.

 

அங்கு அழைத்துச் சென்றதும் தனியறையில் கண்காணிப்பு கேமிராக்களுக்கு மத்தியில் அமர்த்தப்பட்டார் ராஜாராம்.

 

அவரிடம் கிராபைட்டை டைமண்டாக மாற்றுவதற்கான சூத்திரங்கள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? ஏன் அது அரசாங்கத்திடமும், இந்திய அறிவியல் ஆராய்ச்சி குழுவிடமும் காண்பிக்கப்படவில்லை போன்றவையான கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அதற்கு அவர் வாய் திறப்பதாயில்லை.

 

எதற்கும் பதிலளிக்காமல் இருந்தவரிடம் பல படங்கள் காட்டப்பட்டது. அதற்கும் அவர் அசைவதாயில்லை.

 

"ஏதோ ஆதாரங்கள் சிக்கியுள்ளதா சொன்னியே? அத வச்சு எனக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டியது தானே?.. எதுக்காக இவ்ளோ ட்ரை பண்ற அர்ஜுன்?" என்று சோர்ந்து போய் தலையில் கைவைத்து அமர்ந்திருந்த அர்ஜுனை பார்த்துக் கேட்டார் ராஜாராம்.

அவர் கேள்வியில் நிமிர்ந்தவன், "அதுல நீங்க இதுவர செஞ்சது தான் இருக்குதே தவிர, காரணமில்ல.. அது தெரிஞ்சா உங்களுக்கு கிடைக்கவிருக்க தண்டனைய குறைக்கலாம்ன்னு தான் கேட்குறேன்.. உண்மைய சொல்லுங்க?" என்றான்.

 

"உன் அனுதாபத்திற்கு நன்றி அர்ஜுன்" என்று முகம் மாறாமல் கூறிய ராஜாராம், வேறுபக்கம் திரும்பி கொண்டார்.

 

அந்நேரம் அவனுக்கு அவனின் உயரதிகாரியிடம் இருந்து போன்கால் வந்தது. அதில் அர்ஜுன் அனுப்பியிருந்தவை அனைத்தும் தப்பான சூத்திரங்கள் என்று சொல்லப்பட, அது அவனின் தீவிரத்தை இன்னும் கொஞ்சம் தூண்டிவிட்டது.

 

அவன் அவரிடம், "அந்த ஃபார்முலா என்னன்னு சொல்லப்போறீங்களா? இல்லையா?" என்று கேட்க, வாய்விட்டு நகைத்தார் ராஜாராம்.

 

அதில் அவன் கண்கள் சிவப்பாகிக்கொண்டே போனது. மறுபடியும் போன் ஒலிக்க, எடுத்துப்பார்த்தான். திரையில் மின்னிய பெயரைக்கண்டு இப்போது அவனின் கண்கள் மின்னியது.

 

அவர் என்னவென்று பார்க்க," நீங்க தான் எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க.. உங்க பொண்ணாவது ஏதாவது சொல்றாளான்னு பார்ப்போம்" என போனை அவரிடம் காட்டினான். அவரிடம் எந்த அசைவும் இல்லை.

 

அதில் பெருமூச்சொன்றை வெளியிட்டவாறே, "ஃபார்முலா என்னன்னு சொல்லுங்க மிஸ்டர் ராஜாராம்?" என பழைய கதையையே ஆரம்பித்தான் அர்ஜுன்.

 

"நான் ஏதும் பண்ணல.. எனக்கு எதுவும் தெரியாது" என்றார் டேப்ரிக்காடர் போல.

 

"பொய்.." என ஓங்கி கத்தியவன்,

 

"ஓகே.. ஓகே.." என சீறும் பாம்பாய் வெளிவிட்ட வார்த்தைகளை தொடர்ந்து,

 

"நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உங்களை கண்காணிக்கத்தான் உங்க கம்பெனிக்கு வேலைக்கு சேர்ந்ததே.. ஆனால் நான் சுஹியை கல்யாணம் செஞ்சது, நானே எதிர்பார்க்காத ஒன்னு.. குடும்ப வாழ்க்கை வேற, கடமை வேறன்னு தான் நேத்து வரை நெனச்சேன்.. நீங்க ரெண்டையும் ஒன்னா இணைச்சுருவீங்க போலயே?' என்றான் தன் தலையை கோதியவாறே.

 

அதில் அவர் முகம் கொஞ்சம் திகிலடைந்தது.

 

"நீ என்ன சொல்ல வர்றன்னு எனக்கு புரியல" என்றார்.

 

"நீங்க உண்மைய சொல்லலைன்னா பெரிதும் பாதிக்கப்படப்போறது உங்க மக சுஹாசினி தான்" என்று ஒவ்வொரு வார்த்தையாக அவன் கோர்க்க.

 

கலீரென நகைத்தார் ராஜாராம்.

 

"சுஹாவ பணயப்பொருளா வச்சு உண்மைய வாங்கப்பாக்குறியா அர்ஜுன்?.. என் பலவீனம் தான், உன்னதும்ன்னு நெனக்கிறேன்.. சோ, உன் ஐடியாவை கைவிட்டுடு" என்று சொல்லவும், போனை அணைத்தவன் விரக்தியில் வெளியே வந்து, அவருக்கு உணவினை வழங்குமாறு காவல் இருப்போர்களிடம் பணித்துவிட்டு, தனக்கு நிம்மதி தரும் இடத்தை நோக்கி விரைந்து விட்டான்.

 

…………..

வருடம் 1990

இடம்: மதுரை

 

பசுமை எங்கும் விளையாடி, விவசாய பெருங்குடி மக்களின் உழைப்பை, காண்போருக்கு எடுத்துச்சொல்லும் விதமாய் அமைந்த சிற்றூர், சிந்தாமணி.

 

நாகரீகம் வளர்ச்சியடைந்து, போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் என குற்ற செயல்களை தடுக்கவும் தண்டனை வழங்கவும், ஆட்களும் இடங்களும் பல நியமிக்கப் பட்டிருந்தாலும் சிந்தாமணியில் வாழும் மக்கள் என்னவோ உக்கிரப்பாண்டித் தேவரின் வார்த்தைகளைத் தான் வேதவாக்காக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

 

அவரின் பூட்டன் காலத்திலிருந்தே மக்களுக்கு அவர்கள் செய்து வரும் உதவிகள் அளவற்றவை என்பதால் அவரின் மீது ஒரு நன்மதிப்பும் மக்களிடத்தில் நிலவி வந்தது.

 

ஊரில் யாரும் பெண்பிள்ளைகளை படிக்க அனுப்பாத நிலையில், தான் மட்டும் தன் ஒரே மகளின் ஆசைக்கிணங்கி, அவளை படிக்க வைக்க சம்மதித்து, டவுனிற்கு அனுப்பினார், உக்கிரப்பாண்டித்தேவர்.

 

அவள் படிக்க போகும் கல்லூரிக்கும் தங்கள் ஊரிற்கும் இடைப்பட்ட தொலைவு மிக அதிகம் என்பதால் அவளை கல்லூரியின் உள்ளேயே இருக்கும் விடுதியில் தங்கி படிக்கவும் ஒப்புக்கொண்டார்.

 

ஆனால் மனிதர், தான் சீராட்டி பாராட்டி வளர்த்த தன் செல்ல மகளின் நலனை அடிக்கடி கண்காணித்து வர, தனது மூன்று மகன்களையும் ஷிப்ட் கணக்கில் வாரம் ஒருமுறை அந்த விடுதிக்கு அனுப்பவும் தவறவில்லை.

 

தன் அணில்வால் மீசைத்தந்தையை வற்புறுத்தி கல்லூரியில் சேர்ந்து வணிகவியல் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்த நாச்சியார் என்ற மேகலாவிற்கு தமிழின் மீதும் தமிழ்மொழியின் மீதும் பற்று அதிகம்.

 

அதன் காரணமாக தனது வகுப்பு நேரம் தவிர்த்து பெரும்பாலான நேரங்களை அவள் நூலகத்திலேயே கழித்தாள்.

 

தமிழின் மீது கொண்ட பிரியத்தால் அப்படியொரு நாள் அவள் எடுத்து வந்திருந்த புத்தகத்தைப் பார்த்த நூலகர், "அட! இந்த புத்தகமா ம்மா ரொம்ப நல்லாயிருந்ததுன்னு போனவாரம் தான்மா ஒரு பையன் சொல்லிட்டு போனான்" என்று சொல்லவும்,

 

"யார் அவர்?.. யார் அவர்?.. அவர் பெயரென்ன?" என்று உற்சாகமடைந்தாள் மேகலா.

 

அவளை முதலில் வித்தியாசமாய் பார்த்த நூலகர், பின் இளமுறுவல் பூத்து, "இந்த புக்கை இதுக்கு முன்னாடி எடுத்தவன் பேரு ராம்.. கடைசியா இதை திருப்பி கொடுக்க வரும் போது, ஏற்கனவே இந்த எழுத்தாளரோட ஐந்து புத்தகங்களை தொடர்ந்து வாசிச்சிருந்தவன், இந்த புக்கை எழுதினவரு மட்டும் என் கண்ணு முன்னாடி நின்னா என் உயிரையே அவருக்கு எழுதிவச்சிருவேன்னு சொன்னான்" என்றவர் சிரித்துக் கொண்டே சொல்ல, புத்தகத்தை பெற்றுக்கொண்ட தோழிகள் இருவரும் மந்திரிக்கப்பட்ட நிலையிலேயே நூலகத்தை விட்டு வெளியே வந்தனர்.

 

"ஏய்! மேகா...?"

 

"என்னடி...?"

 

"இந்த புத்தகத்தை படித்தவருக்கு கிறுக்கு தான்டி பிடிச்சிருக்கு" என்றாள் நிவி.

 

"ஆமாடி கிறுக்கு தான் பிடிச்சிருக்கு.. தமிழ் கிறுக்கு" என்றாள் மேகலா, அவனை காணும் ஆவலில்.

 

"அவரை என்றாவது சந்திக்க வேண்டும்" என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டவள், அதன் பின் அதற்கான முயற்சிகளில் எதுவும் இறங்கவில்லை.

 

நூலகரிடம் கேட்டு அவன் படிக்கும் புத்தகங்களை மட்டும் கேட்டு தெரிந்துக்கொண்டு, ஓடியோடி தேடித்தேடி படித்தவளுக்கு அவனைக் காணும் பேராவல் மட்டும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. அதற்கு தூபம் போடும் விதமாய் நூலகரின் பேச்சுக்களும் அமைந்தது. ஆனால் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாகியும் அவள் மனம் தேடும் ராம் மட்டும் அவள் கண்களில் சிக்கவேயில்லை.

 

அதற்கான வாய்ப்பை உக்கிரப்பாண்டித்தேவரின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டவள் உருவாக்காவிடினும் விதி உருவாக்கியது.

 

கல்லூரியில் அன்று கடைசி வருட மாணவர்கள் அனைவரும் பிரியாவிடை கொடுக்கும் நாள்.

 

அனைத்து மாணவர்களும் விழாவிற்காக அந்த வெள்ளிவிழா கட்டிடத்தில் நண்பர்களின் பிரிவை எண்ணி, அழுது கரையும் தங்கள் மனங்களைப் போல் தங்களுக்கு துணையாக கையில் அழுது கரையும் மெழுகுவர்த்திகளுடன் நின்றிருந்தனர்.

 

அனைத்து கதவுகளும் சாத்தப்பட்ட அந்த அந்தகாரக் கட்டிடத்தில் மேடையில் வீசிய ஸ்பாட் லைட்டின் ஒளியை தவிர்த்து, மெழுகுவர்த்தியின் ஜோதி தான் அதிக ஆதிக்கம் செலுத்தியிருந்தது.

 

கல்லூரியின் முதல்வர் வந்த பின்பே விழா தொடங்குவதாக இருக்க, அவர் வர தாமதமானதால் மாணவர்கள் அனைவரும் கூச்சலிட தொடங்கினர்.

 

கூச்சலை கட்டுப்படுத்த தன் நண்பர்களின் வற்புறுத்தலால் மேடையேறினான், அந்த கல்லூரியின் சிறந்த பேச்சாளன் ஒருவன்.

 

ஏற்கனவே அவனின் பேச்சுத்திறமையை அறிந்திருந்த மாணவர்கள் சிலர் அவன் கையில் மைக்கை பிடித்துக் கொண்டு முன் வந்து நிற்கவும் கப்சிப்பென்றாகி விட, அந்த கட்டிடத்தின் இருளை கலைக்கவென வெண்ணிலவொன்று வேகமாக உட்புகுந்தது. அது மேடையில் நின்றிருந்தவனின் விழிகளுக்கும் தப்பவில்லை.

 

தனது தோழி நிவேதாவின் கையை இழுத்தவாறே உள்ளே நுழைந்திருந்த மேகலா, "ஹேய் உண்மையாவே ஸாரி எனக்கு நல்லாயிருக்காடி?.. இங்கனப்பாரு மொந்துன்னு  என் தொப்பை அப்படியே தெரியுது.. நான் கர்ப்பமா இருக்க மாதிரி இருக்கு.. போய் சேன்ஞ் பண்ணிட்டு வந்திடவா?" எனவும்,

 

அவளை நோக்கி தன் கூர்விழிகளை செலுத்திய நிவி, "நீ இந்த மாதிரி கேட்குறது பத்தாவது தடவ.. ஒழுங்கு மரியாதையா பேசாம நில்லு.. இல்ல நானே துச்சாதனனா மாறி சேலையை உருவி விட்ருவேன்" என்று ரகசிய குரலில் எச்சரிக்க,

 

"சரி.. சரி.. மேடையைப்பாரு!" என்றாள் மேகலா.

 

இவ்வளவு நேரமும் அவளையே பார்த்துக்கொண்டு, அவள் வாசனையின் யோசனை தன் சுவாசம் தாக்க, வார்த்தைகளற்று நின்றிருந்தவன், அவள் தன்புறம் திரும்பவும்,

 

"அரங்கில் கூடியிருக்கும் பேண்ட் சர்ட் போட்ட ராஜாக்களுக்கும் சேலை அணிந்த ரோஜாக்களுக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக்கூறி தன் காந்தக்குரலால் கூச்சலிட்டுக் கொண்டிருந்த மீதி கூட்டத்தையும் தன்புறம் திசை திருப்பினான்.

 

தன் மனத் தடுமாற்றத்தை சிறிது நேரம் தள்ளி வைத்தவன், கொஞ்சம் நாட்களாகவே தன் மனதை உறுத்திக் கொண்டிக்கும் ஒரு கொடூர சம்பவத்தைப் பற்றி பேச ஆரம்பித்தான்.

 

"சிறிது நேரம் உங்கள் செவியை மட்டும் எனக்கு கடன் தாருங்கள்!" என்று பணிவாக கேட்டவன், அழுத்தம் திருத்தமான தமிழில், உணர்ச்சி கலந்த குரலில், பேச ஆரம்பித்தான்.

 

"டிசம்பர் 2,1984 கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு போபாலில் ஒரு துயரச்சம்பவம் அரங்கேறியது.. அது யாருக்காவது நினைவிருக்கிறதா?" என்று கேட்டவன் தானே அந்த கொடூர சம்பவத்தைப்பற்றி விளக்கவும் செய்தான்.

 

"நடுஜாமம் பனிரெண்டறை மணி.. பால்குடி குழந்தையும் தன் தாயின் அமுதகங்களை மறந்து வாயில் விரல் வைத்து தூங்கும் நேரம். யாரும் எதிர்பார்த்திராத அந்த சமயத்தில் நிகழ்ந்தேறியது அந்த எதிர்பாராத விபத்து, மன்னிக்கவும் குறிக்கோளில்லா கொலை."

 

"செரின் என்னும் பூச்சிக்கொல்லி மருந்தை தயாரிக்கும் இடமாக அயல்நாட்டினரால் இந்தியாவின் இதயமான மத்தியபிரதேசத்தில் துவங்கப்பட்ட தொழிற்சாலை

யூனியன் கார்பைடு.. அந்த செரின் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கச் சேர்க்கப்பட்ட மூலப்பொருட்களில் மீத்தைல் ஐசோசயனைடு என்று அழைக்கப்படும் உயிர்கொல்லி வாயுவும் ஒன்று.. அந்த வாயு அடைக்கப்பட்ட ராட்சத பைப்பானது, அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் உண்டான அதிக அழுத்தத்தால், அந்நடு ஜாமத்தில் விரிசல் அடைந்தது. அதைக்கண்டு பயந்து போன அறிவாளிகள் அபாயச்சங்கை அவசர அவசரமாக ஊதினார்கள்.

 

"ஏதோ ஆபத்து என்பதை மட்டும் உணர்ந்து கொண்ட மக்கள், என்ன ஏதென்று புரியாமல் வெள்ளி விழித்திருக்கும் அந்த நள்ளிரவில் பேயைக்கண்டு அஞ்சுபவர்கள் போல எட்டுத்திசையும் ஓடினார்கள்.. காற்றின் வேகத்திற்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.. சுவாசித்தார்கள் ஆம் அனைவரும் அந்த நச்சுக்காற்றை சுவாசித்தார்கள்" என்று பெருமூச்சு விட்டு, ஏற்ற இறக்கத்துடன் அந்த பேச்சாளன் கூறும் போது அரங்கம் முழுவதும் நிசப்தம் நிலவியது.

 

அடுத்து என்ன நடந்தது என்பதை அறிய அனைவரின் செவிகளும் கூர்தீட்டப்பட்டது.

 

"வீட்டிற்கு காவலாய் தங்கிப்போன சிலந்தி துவங்கி, நன்றி மறவாமல் ஆபத்திருக்கும் திசை நோக்கி, குரைத்து கொண்டே உடன் ஓடிவந்த நாய்கள் வரை மீத்தைல் ஐஸோசயனைடின் விருந்தாளிகளாகினர். மீத்தைல் ஐஸோசயனைடு அனைத்து உயிர்களும் சமமென கருதியது போலும், பாரபட்சமின்றி காவு வாங்கியது.

 

"அதை நுகர்ந்ததுமே முதலில் கண்ணெரிச்சலுக்கு ஆளான மக்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே வான் நோக்கி பயணமானார்கள்.. அதிகார வர்க்கங்கள் உருவாக்க முயன்ற பூச்சிக்கொல்லி மருந்திற்கு மக்களே பூச்சிகளாகி போனது தான்  விந்தையிலும் விந்தை.. கண்மண் தெரியாமல் அடுத்துக்கிளம்பி ஓடி வந்த நச்சுப்புகை அனைத்து தலைகளையும் தரையில் உருட்டியது.. முடிந்தது எல்லாம் முடிந்தது.. மொத்தம் ஐயாயிரத்து முன்னூறு உயிர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து லட்சத்திற்கும் மேல். கண் போய் மண் போன பிஞ்சு முகங்களை காணும் போது உயிர்க்கசிகிறது"

 

இவ்விடத்தில் பேச்சாளனின் குரல் உடைந்து போய் ஒலித்தது. அவன் பேச்சில் மொத்தமாய் அழுது முடித்த மெழுகுவர்த்திகள் அனைத்தும் தன்னை பிடித்திருந்தோரின் கைகளைச்சுட்டது.

 

"எந்தவித தற்காப்பு உபகரணங்களும், எச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாத அந்த தொழிற்சாலை அமைய அனுமதியளித்தது யார்?.. அந்த நிறுவனத்தை இந்தியாவில் அமைத்த வாரன்ஆண்டர்சன் தற்போது அமெரிக்காவில் ஸ்விம்மிங்பூலில் ஆனந்த குளியலை அனுபவிக்க காரணமானது யார்?.. இன்னுமிருக்கும் கொஞ்ச நஞ்ச உயிரையும் குடிக்கக்காத்திருக்கும் அத்தொழிற்சாலையின் ரசாயன கழிவுகளை ஜெர்மனி தாங்களே கொண்டு செல்வதாக கூறிய போதும் தயக்கம் காட்டுவது ஏன்?.." என்று வெடித்ததும்,

 

கீழிருந்த ஒருவன் "அறிவியல் மாணவனே! உன்  அறிவியல் வளர்ச்சி தான் இதற்கு முழு முதற்காரணம்.. உன்னை நீயே முதலில் அழித்துக்கொள்" என்று தன் கையிலிருந்த மெழுகுவர்த்தியை மேடையை நோக்கி தூக்கியெறிய, இதழில் புன்முறுவல் கூட்டியவன் தன் நண்பர்கள் ரவிவையும் ரகுவையும் பார்த்து,

 

"நாம் முட்டாள்கள் என்பதை மாற்றவே முடியாதில்லடா.. அறிவியல் தப்பல்ல அதன் விளைபொருளும் தப்பல்ல அதை அழிவுப்பாதைக்கு பயன்படுத்தும் நம்மில் தான் தப்பிருக்கிறது, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத நம் காவலன் மீது தான் தப்பிருக்கிறது என்பதை இவனுங்க புரிஞ்சிக்கவே மாட்டானுங்க இல்ல?" என்று விரக்தியாக சிரிக்க, அவன் தோளில் வலிய கரமொன்று விழுந்து, திரும்பிப்பார்த்தான். அவன் கல்லூரி முதல்வர் தான் தன் சகாக்களுடன் நின்றிருந்தார்.

 

அவன் கையிலிருந்த மைக்கை தன் கைக்கு மாற்றியவர், "இம்மாணவன் கூறவிளைவது என்னவென்றால், இந்த வருடம் நம் கல்லூரியிலிருந்து வெளியேறும் அனைத்து பட்டதாரிகளும் தாங்கள் கற்றதை, தங்கள் அறிவை, ஆக்கப்பூர்வமான வழிகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதே. இல்லையா?" என்று அழுத்தமாக அவன் தோளை பற்றியபடி கேட்க,

 

அவனும் அதை "ஆமாம்" என ஆமோதித்தான்.

 

அதைத்தொடர்ந்து எப்போதும் போல் நிகழும்  முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் ஆரம்பமாக, அச்சூழ்நிலையின் கனம் குறைந்தது.

 

பேச்சாளனின் பேச்சைக்கேட்டு மனம் கனத்துப்போய் நின்றிருந்த தோழிகளின் அருகில் வந்த நூலகர், "இவன் தான்ம்மா ராம்" எனவும், திகைத்து விழித்த மைவிழிகள் நான்கும் ராமிருந்த திசையை நோக்கி பயணித்தது.

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்…

 


ReplyQuote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
29/05/2020 1:03 pm  

அத்தியாயம் 15

 

நெஞ்சம் மறப்பதில்லை

"இவன் தாம்மா ராம்" என்றவுடன் ஏற்பட்ட வியப்பில் தோழிகளிருவரும் ராமையே பார்த்திருக்க, அவனோ திரையின் மறைவில் நின்றிருந்த தனது நண்பர்களை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

 

அவன் உள்ளே சென்று மறைந்தவுடன் சுய நினைவடைந்த தோழிகளிருவரும் அவனை பார்த்துவிட்ட பிரம்மிப்பிலிருந்து மீண்டு ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

 

அதன்பின் தங்கள் கண்களை கலை நிகழ்ச்சிகளின் பக்கமும் செலுத்தினர்.

 

தோழிகளிருவரும் கட்டிடத்தினுள்ளே புகுந்தது முதல் அவர்கள் ராமையே ஆர்வமாய் வெறித்து வெறித்துப் பார்த்தது வரை கண்ணாடித் திரைச்சீலையின் வழியே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த ராமின் தோழர்கள் ரகுவும், தனாவும் ராம் தங்களருகே வந்ததும், "டேய் மச்சி, ரைட் சைடுல செகண்ட் ரோவ்ல நிக்கிற ரெட் ஸாரி பொண்ணப்பாரேன்.. பட்சி அம்சமா இருக்கா இல்ல?.. நானும் ரகுவும் அரைமணி நேரமா அவளைத் தான்டா பாத்துக்கிட்டு இருந்தோம்.. உன்னையே வச்சக்கண்ணு வாங்காம பாத்துக்கிட்டு இருந்தாடா.. சும்மா லைன் போட்டு பாருடா" எனவும்,

 

"ஆமாடா கிளி உன்னைத்தான்டா லுக்கு விடுது" என்று ரகுவும் தனாவிற்கு ஒத்தூதினான்.

 

அவர்களை அற்பமாய் பார்த்த ராம்,

"டேய் பொண்ணுங்க பின்னாடி சுத்தி நீங்க டைம் வேஸ்ட் பண்றதுமில்லாம என்னையும் வேற கூட்டு சேர்க்க பார்க்குறீங்களாடா?.. இந்தாடா ரவிச்சந்திரா இதெல்லாம் நீ கேட்குறதில்லையாடா?" என்று பதட்டமாக சொன்னபடியே பின்பக்க படிகளில் இறங்கி வெளியேச்செல்ல,

 

அவனைப் பார்த்து அர்த்தத்துடன் தலையாட்டிய தோழர்கள் மூவரும், "பய வசமா சிக்கிட்டான்டா" என தங்களுக்குள்ளேயே பேசிச் சிரித்துக் கொண்டனர்.

ராமை பேச்சாளனாக பார்த்த நாளிலிருந்தே படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு தவித்த மேகலாவின் சிந்தை முழுவதும் அவனைப்பற்றியே யோசித்து தவித்தது.

 

இறுதியாண்டு என்பதால் ப்ராக்டிக்கல் எக்ஸாமில் பிஸியாகி விட்ட நிவியாலும் அவளை ஊன்றி கவனிக்க முடியாமல் போனது.

 

அவனை அதன் பின் நேரில் சந்திக்க முடியவில்லை எனினும் அவனை புத்தகம் வழியாக பின் தொடர்வதை மட்டும் விடவில்லை அவள்.

 

தான் படித்து முடித்த புத்தகங்களை எப்போதும் போல் நிவியிடமும் கொடுக்க தவறவில்லை. ஆனால் இம்முறை அவன் பென்சிலால் கோடிட்டிருக்கும் வரிகள் முழுவதையும் அழிப்பானால் அழித்த பின்பே அவளிடம் சேர்ப்பித்தாள்.

 

இந்தக் காதல் தான் பெண்களை எப்படி மாற்றிவிடுகிறது. காதல் வந்தால் தன்னுடைமை என்கிற எண்ணமும் தோழியாய் உடன் வந்துவிடும் போலிருக்கிறது. ஆனால் நிவியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

நூலகர் மூலமாக அவள் தன்னை பின் தொடர்கிறாள் என்று அறிந்திருந்த ராம், அதை அவளிடம் காட்டிக்கொள்ளவில்லை. தனக்கான காலம் கனியக் காத்திருந்தான்.

 

அந்தக் கல்வியாண்டு முடிவடையவிருந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகளும் ஆரம்பமானது.

 

முதல் நாள் தேர்வை முடித்துக் கொண்டு நிவியின் வற்புறுத்தலால் அவர்களின் புதுவீட்டிற்கு சென்று திரும்பிய மேகலா, வெகுநேரமாய் நின்றும் ஒரு ஆட்டோவும் வராததால் வெறுத்துப் போய் அடிக்கடி தன் டைட்டன் வாட்ச்சையும் மேற்கு திசையையுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

பகலவன் தன் பணியை முடித்துக்கொண்டு டிபன் கேரியரை தூக்கும் சமயம் நெருங்கியதும்

எங்கும் காரிருள் கவிழத் துவங்கியது.

 

ஆளரவமற்ற சாலையில் தன்னந்தனியாக நின்றிருந்த மேகலாவின் மனதில் கிலி பிடித்துக் கொண்டது. நிவி தன்னிடம் தன் தந்தையிடம் கூறி காரில் கொண்டு இறக்கி விடச்சொல்லவா? என வினவியும், வேண்டாம் என வீராப்பாய் மறுத்துவிட்டு வந்த தன் மடத்தனத்தை எண்ணி இப்போது நொந்தாள்.

 

அச்சமயம் தூரத்தில் மங்கலாக ஒளியை துப்பிக்கொண்டே ஸ்கூட்டர் ஒன்று வந்து நின்றது. தனித்து நின்றவளின் பதற்றமும் இன்னும் அதிகமானது. துப்பட்டாவின் முனையை சுழற்றிக்கொண்டே நாலாப்புறமும் கருவிழியை நாட்டியமாட விட்டாள்.

 

அவளை சமீபித்த ஸ்கூட்டர் இடிப்பது போல் அருகில் வந்து நிற்க, ஏறி இறங்கிய நெஞ்சுடன் பின் நகர்ந்தாள் மேகலா.

 

தான் என்று அறிந்தும், பின் நகர்ந்தவளை கண்டு, கோபம் கொண்ட ராம், ஸ்கூட்டரை இயக்கநிலைக்கு தயாராக வைத்தவாறே, "ம்ம் வண்டியில ஏறு!" என்று உறுமினான்.

 

ஏற்கனவே பயத்தில் பலமாக அடித்துக் கொண்டிருந்த இதயம், தன்னவன் என்று தெரிந்ததும் இன்னும் கொஞ்சம் தாறுமாறாக துடிக்க, கர்ச்சீஃப்பை கசக்கிக்கொண்டு நின்றிருந்தவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

 

அவள் தன்னை அலட்சியம் செய்வதாக நினைத்துக் கொண்டவன், "ஏறுன்னு சொல்றேன்ல!" என்று அதட்டினான்.

 

வேறுவழியின்றி அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே அவன்பின் ஏறி தள்ளியமர்ந்துக் கொண்டாள் மேகலா.

 

தன்னை தீண்டத்தகாதவன் போல் அவள் நடத்தியதில் இன்னும் கடுப்பானவன், விடுதி வாசலில் அவளை இறக்கி விட்டு திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான்.

 

அவன் அப்படிப் போனதில் தவித்துப் போனவள், "ஆமா? இப்போ எதுக்கு இவர் வந்தாராம்?.. இப்படி கோவிச்சிக்கிட்டும் போறாராம்?.. ச்சே பயத்துல ஒரு தான்க்ஸ் கூட சொல்லல.. சரியான பயந்தாங்கோலிடி நீ" என்று தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.

 

அவன் போகும் வரை அவன் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அன்றிரவும் உறக்கம் உறவாகவில்லை.

 

இருபுறமும் சட்டையின் கைகளை மடக்கிவிட்டதால் தெரிந்த அவனின் முரட்டு கைகளும், டெலிபோன் பூத் இணைப்பிற்காக தோண்டி மூடப்பட்ட பள்ளங்களை கடக்கும் போதெல்லாம் நாசி உணர்ந்த அவனுக்கே உரித்தான நறுமணமும் அந்நங்கையை புரட்டி தான் போட்டது.

 

அச்சம்பவத்தை தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து பரீட்சை எழுதி முடித்ததும் ராமைத்தேடி அவனிருக்கும் துறைக்குச் சென்றாள் மேகலா. நிவியும் அத்துறையைத் தான் சேர்ந்தவள் என்பதால் கொஞ்சம் பதுங்கி பதுங்கியே தான் சென்றாள்.

 

பிஎஸ்சி பிரிவிலிருந்து எஸ்ஸாகி ஒரு வழியாக எம்எஸ்சி பிரிவிற்குள் வருவதற்குள், அவளுக்கு போதும் போதும் என்றானது. அவள் இவ்வளவு வெகு பிரயத்தனப்பட்டு அவனைக் காண வர, தன் நண்பர்கள் புடைசூழ வலம் வந்த ராமோ அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் தலையைத் திருப்பிக் கொண்டு சென்றுவிட்டான்.

 

அதில் சொல்லவொண்ணா வலி ஒன்று எழுந்தது மேகலாவின் நெஞ்சில். கலங்கிய கண்களை இமைச் சிமிட்டி சரி செய்தபடியே நூலகம் சென்று, பெரிய புத்தகம் ஒன்றை முகமூடியாக்கி ஒருபாடு அழுது தீர்த்தாள்.

 

கொஞ்சம் மனது இலகுவாகிய நிலையில் புத்தகத்தை கீழிறக்கினாள். சுற்றி அனைத்து இருக்கைகளும் காலியாக இருக்க, திடீரென எதிரேயிருந்த இருக்கையின் அடியிலிருந்து ஒருவன் பூதமென கிளம்பி தலையைத்தூக்க, பயத்தில் எச்சில் விழுங்கிக்கொண்டாள்.

 

யாரென பார்த்திருந்தவள், அவன் தலை நிமிரவும் தான், தன் கனவு நாயகன் என தெரிந்துக் கொண்டாள்.

 

அவன் தன்னை கண்டு கொள்ளாமல் போனது ஞாபகம் வர, தானும் அவனை பழிவாங்க எண்ணி, முறைத்துக் கொண்டே அவனைத்தாண்டி செல்ல முற்பட்டாள்.

 

அவளை கைபிடித்து நிறுத்தியவன், "மேகா..!" என்றழைக்க, தேன்வந்து பாய்ந்தது நங்கையின் காதில். இருப்பினும் எச்சரிக்கை ஒலி மனதில் இசைக்க, இருக்குமிடம் கருதி, கரத்தை விடுவித்துக் கொண்டு அந்த மரப்படிகளில் தாவி ஓடினாள்.

 

அவனும் அவளை பின்தொடர்ந்தான்.

கடைசிப்படியில் அவனை பார்த்துக்கொண்டே தவறி விழப்போனவளின் இடையை அவன் வலியகரங்கள் வளைத்துப் பிடித்து நிறுத்த,

நான்கு கண்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து கவி பேசியது.

 

"அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்" எனும் ரவிச்சந்திரனின் கேலிக் குரலில் விலகி நின்ற இருவரும் சங்கடத்திற்கு உள்ளாகினர்.

 

"டேய்! ரவி, நீ எப்போடா வந்த?" என்று கேட்டு நிலைமையை இயல்பாக்க முயன்றான் ராம்.

 

"வந்து ஒருமணி நேரமாச்சு மச்சி.. ஆனா நீதான் என்னை கவனிக்கிற நிலைமைல இல்ல" என்று காலை வாரினான் ரவிச்சந்திரன்.

 

தன் தலையை கோதிக்கொண்ட ராம், "நீ போ!" என அவளை அவ்விடம் விட்டு கிளப்பிவிட, நடந்ததை நினைத்து அன்றிரவும் மேகலாவின் கண்களை விட்டு நெடுந்தூரம் சென்றது உறக்கம்.

 

பதின்மவயதின் முதல் முதலான அந்நிய ஆடவனின் தொடுகை அவளுக்குள் பல அச்சத்தையும் வேதியியல் மாற்றத்தையும் உண்டு பண்ணியது.

 

மறுநாள் காலையில் அவனை பார்த்ததும் அவள் சிரித்த முகமாய் அருகில் வர, என்னக் காரணமோ அவள் எதிரே வந்தும், அவள் முகம் பாராதவனாய் தலை குனிந்து கொண்டே சென்றான் ராம். அதில் கோபம் துளிர்விட நேராய் அவனிடம் சென்று "நில்லுங்க...!" என வழியை மறைத்தாள் மேகலா.

 

மிக அவசரமாக தன் நண்பன் தனாவுடன் கல்லூரி முதல்வரை காணச்சென்று கொண்டிருந்தவன், இவள் வழியை வந்து மறைக்கவும் தனாவின் விஷம விழிகளை அடையாளம் கண்டு கொண்டவனாய், "என்ன வேணும்?" என்று சிடுசிடுத்தான்.

 

"இல்ல.. இல்ல.. ஒன்னுமில்ல" என பயத்திலும் பொங்கி வந்த அழுகையிலும் உலறியவள், அழுகையைக் கட்டுப்படுத்தியவாறே நகர்ந்துவிட்டாள்.

 

மேகலா திரும்பிச் செல்லவும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராமின் தோளைத்தொட்ட தனா, "என்னடா?, பாசமா பேச வந்த பொண்ணைப்போய் இப்படி விரட்டி விட்டுட்டியே?" என்று அக்கறையாக கேட்க, அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவன், முதல்வர் அறையை நோக்கி பாதங்களை இயக்கினான்.

 

அவன் வரவை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தவர்கள் போல் ரவியும் ரகுவும் முதல்வர் அறைக்கு வெளியே போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். ராமைக் கண்டதும் அவனுடன் இணைந்து கொண்டார்கள்.

 

முதல்வர் அறைக்குள் நுழைந்தவனுக்கு இனிப்புத் தடவிய வேப்பங்கொட்டை செய்தியொன்று காத்திருந்தது. அச்செய்தியை கேட்டப்பின் ராம் மகிழ்ந்ததை காட்டிலும் அவன் நண்பர்கள் மகிழ்ந்தது தான் அதிகம். அப்போதே அவனைக் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார்கள் அவர்கள்.

 

"டேய் ராம், இந்த வருஷம் இந்த வாய்ப்பு உனக்கு கிடைக்கும்னு நாங்க நினைக்கவே இல்லடா.. வெளிநாட்டுல வேலை, பிஹெச்டி படிச்சிக்கிட்டிருக்கும் போதே சம்பளம், தங்குவதற்கும் இலவச வீடுன்னா சும்மாவாடா.. ஹ்ம்ம் மூணு வருஷம் உன்னைப் பார்க்க முடியாதே தவிர, உங்க குடும்ப கஷ்டமெல்லாம் தூசு மாதிரி பறந்திரும்டா.. பின்னாடி உன்னை நாங்க ஒரு நல்ல நிலைமைல பார்க்கலாம்டா.. ஓகேன்னு சொல்லுடா" என ரவிச்சந்திரன் அவனின் இருதோள்களையும் பிடித்துக் கொண்டு, கண்ணில் மின்னல் தெறிக்க, அந்த வாய்ப்பை தான் பெற்றது போலவே பூரித்துச்சொல்ல,

 

மனம் முழுவதும் அப்பிக் கிடந்தவளை வாய்ப்பு கிடைத்ததும் தூக்கி மூலையில் வீச திராணியில்லாதவன், "என் பேரண்ட்ஸை கேட்டுட்டு வந்து முடிவை சொல்றேன் சார்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

 

"தலை ரொம்ப வலிக்கிற மாதிரி இருக்குடா.. ரகு நான் இப்போ ஸ்கூட்டர் ஓட்டுற நிலைமைல இல்லடா.. நீ ஓட்டிட்டு வர்றியா?" என்றுக்கேட்டு அவன் தோளை பற்றியபடியே, பின்னே அமர்ந்து கொண்டான்.

 

இங்கு ராமின் சிடுசிடுப்பில் உள்ளுக்குள் உடைந்து போன மேகலா, அதையடுத்த ஒருவாரமும் அவனை நெருங்காதவளாய் இருந்தாள்.

 

அந்தக் கல்வியாண்டின் கடைசித் தேர்வையும் முடித்துவிட்டு, சிறிது நேர அலைப்புறுதலை போக்க, விளையாட்டு மைதானத்தில் வந்து உட்கார்ந்தவள், "நாளைக்கு காலைல சின்னண்ணா கூப்பிட வந்திருவாங்க.. ஊருக்கு போயிட்டா அதுக்கப்பறம் ரிசல்ட் பார்த்து டீசி வாங்கத்தான் இங்க வர்ற மாதிரி இருக்கும்.. அவரை இனிமேல் பார்க்கவே முடியாது.. அவரும் ஊருக்கு வர வழியில்ல" என்பது போன்று யோசித்து யோசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அங்கு கூடைப்பந்து விளையாடுபவர்களின் கையிலிருந்து தாவிய பந்து கூடையில் விழாமல் நழுவியதைப் போல் தன் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாய் கைநழுவி போவதை புரிந்து கொண்டாள் பேதை. தான் வீணாய் மனக்கோட்டை கட்டிக் கொண்டிருப்பதையும் உணர்ந்து கொண்டவள் நேராய் விடுதியை நோக்கி நடையைக் கட்டினாள்.

 

மிகுந்த மன உளைச்சலில் இரவு ஏழு மணிக்கு தங்கள் விடுதிக்கு நேர் எதிரேயிருந்த பூங்காவிற்கு வந்தவளுக்கு பெரும் அதிர்ச்சியொன்று காத்திருந்தது.

 

தான் முற்றிலும் எதிர்ப்பார்த்திராத ஒருவனைக் கண்டு ஒருநொடி திக்கு முக்காடிப் போனவள் மறுநொடித் தன்னை நிலைபடுத்திக் கொண்டு திரும்பி செல்லப்போனாள்.

 

அருகில் ஓடி வந்து அவளின் கரம் பிடித்து நிறுத்தியவன், "பிடிக்கலையா?" என்று ஒற்றை வார்த்தை கேட்க, அதற்கே முற்றிலுமாய் உருக்குலைந்து போனவள், அதற்கு மேலும் தன் கண்ணீருக்கு அணைகட்ட முடியாமல் அவன் நெஞ்சிலேயே அடைக்கலமாகி கண்ணீரை கட்டவிழ்த்தாள்.

 

அவன் கரங்களும் ஆதரவாய் நீண்டு அவளை அரவணைத்துக் கொண்டது.

 

அழுகை கொஞ்சம் மட்டுப்பட்டவள், அவன் அணைப்பிலிருந்து விலகி நின்று "உங்களுத்தான் என்னை பிடிக்கலை" என்று மூக்குறிஞ்சினாள்.  

 

தலைக்கலைந்து, அழுதழுது மூக்குச்சிவந்து, பின்குத்தாத துப்பட்டாவை மட்டும் அடிக்கடி சரிசெய்தபடியே நின்றிருந்தவளின் வதனம் என்னவோ அவனை வெகுவாக ஈர்த்தது.

 

அந்த வேகத்திலேயே, "மேகா நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?"

என்று கேட்க, அக்கேள்வியில் பளீச்சிட்ட மேகலாவின் கண்கள், இமைதாழ்த்தி சரியென்றது.

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்...


ReplyQuoteShivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
29/05/2020 1:06 pm  

Comments please 🙂


ReplyQuote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
30/05/2020 12:46 pm  

அத்தியாயம் 16

 

சட்டென்று மாறுது வானிலை

அவளின் மௌனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்டவன் "அப்போ வர புதன்கிழமையே உன்னை பொண்ணு கேட்டு உங்க ஊருக்கு வந்திடவா மேகா?" என்று எதிர்பார்ப்புடன் கேட்க,

 

தன் தந்தையை நினைத்த மாத்திரத்தில் முகம் வெலவெலத்துப் போனவள், "இல்ல வேண்டாங்க.. " என்று, அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் நிலம் பார்த்தாள்.

 

"வேணாம்மா?.. அப்போ சொர்க்கத்துல தான் நமக்கு கல்யாணமா?" என்று கொதித்துப்போய் ராம் கேட்க,

 

அவன் கோபத்தைக் குறைக்க அவன் வலக்கையை எடுத்து தன் இரு கரங்களுக்குள்  பொத்தி வைத்துக் கொண்டவள், "நான் நீங்க ஊருக்கு வர வேணாம்னு சொன்னதுக்கு காரணம், அப்பா ரொம்ப கோவக்காரருங்கிறது தாங்க.. அவருக்கு இந்த காதல் கீதலெல்லாம் சுத்தமா பிடிக்காது.. பஞ்சாயத்துல என் கண்ணு முன்னாடியே எத்தனை பேரை பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?.. தண்டனையும் கடுமையா குடுத்திருக்காங்க.. அப்பாகிட்ட இப்போ பேச வேணாங்க.. நானே பொறுமையா எடுத்து சொல்லி, உங்களுக்கு லெட்டர் போட்டு கூப்பிடுறேன், அப்போ வாங்க" என்று பொறுமையாக சொல்லி முடிக்கவும், இது வேலைக்காகாது என்று தலையாட்டியவன்,

 

"சரி உனக்கு ஒரு வாரம் டைம் தரேன். அதுக்குள்ள உன்னால உங்க வீட்டுல பேச முடியுதா பாரு.. இல்ல? இன்னையிலிருந்து பத்தாவது நாள் நான் உன்ன பொண்ணு கேட்டு, உங்க வீட்டுக்கு வருவேன்.. அவ்வளவு தான்" என்று சொல்லிவிட்டு, அவள் கையிலிருந்த தன் வலக்கையை விடுவித்து, பின்புறம் தான் மறைத்து வைத்திருந்த சிறிய பார்சலை எடுத்துக் கொடுத்து விட்டு, "நாளைக்கு தானே நீ ஊருக்கு கிளம்புற?.. பாத்து போ என்ன?.." என அவளின் கன்னத்தை தட்டிவிட்டு, இருளில் மறைந்து விட்டான்.

 

அவன் தந்து விட்டு போன பார்சலை தன்னறைக்குச் சென்று வேகவேகமாய் பிரித்துப் பார்த்தாள் மேகலா.

 

ஜெயகாந்தனின் 'நான் இருக்கிறேன்' என்னும் புத்தகம் அவளைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தது.

 

'நான் இருக்கிறேன்'  எழுத்துக்களை தடவிப் பார்த்தாள். அவனே நேரில் கூறுவது போன்று ஒரு புத்துணர்வு. பிறந்த புது நம்பிக்கையுடன் படுக்கையில் சரிந்தவளை அன்னையாய் நித்ராதேவி அரவணைத்துக் கொண்டாள்.

 

…………………..

 

வருடம் 2020

மதியம் 3 மணி.

 

'டிங்டாங்.. டிங்டாங்' என்று ராகம் இசைத்து, மணி மூன்று என்று காட்டிய கடிகாரத்தில் தானிருக்கும் இடம் ஞாபகம் வந்து, எதிரேயிருந்த மாலை சூட்டப்பட்ட தன் கணவன் புகைப்படத்தை பார்த்த மேகலா, "பத்து நாலுல பொண்ணு கேட்டு வரேன்னு மட்டும் சொல்லிட்டு என்னை பொண்டாட்டியாவே மாத்தி ஊரை விட்டு கூட்டிட்டு போன தைரியம் எல்லாம் உங்களைத் தவிர வேற யாருக்கும் வராது" என்று அவர் நேரில் உள்ளது போலவே பேசிக்கொண்டாள்.

 

பின் தன் கையிலிருந்த டைரியை பிரித்தாள்.

 

"புத்தகம் நிகழ்த்திய அற்புதம்!

இயற்கை போல்..

இணை சேர்க்க தொடங்கிவிட்டது புத்தகம்!

 

என் விழிச்சுவடுகளில்..

அவளும் பயணிக்கிறாள்..

புத்தகங்களின் வாயிலாய்!

 

மாணவக்காதலனுக்கு..

நூல் விடத்தெரியவில்லை..

நூலகரை விடவும் தூதுவன் தெரியவில்லை!

 

நாளைய பொழுதை எதிர்நோக்கி,

ராம்"

இதனை வாசித்ததும் நாட்குறிப்பு தனது கணவனது என்பதை புரிந்து கொண்டாள் மேகலா.

 

"ஓஹோ அந்த லைப்ரரியன் உங்க ஆள் தானா?.. அதான் உங்களை ஆஹா ஓஹான்னு புகழ்ந்து தள்ளினாரா மனுஷன்?.. நானும் இது தெரியாம இத்தனை வருசமா அவரை நல்லவருன்னு வேற நம்பிக்கிட்டு இருந்திருக்கேன்.. அவரைப்பற்றி ஒரு தடவை கூட உங்களுக்கு சொல்லத் தோணலைல்ல?"

 

இம்முறை கோபமாய் முகம் திருப்பிக் கொண்டாள்.

 

அடுத்த பக்கத்தைப் புரட்டினாள்.

 

"பலத்த கூச்சல்

பாவையவளின் வருகை

பல லட்சம் கவிதை

படிக்க ஆசைப்பட்டேன்!

 

இங்கீதம் கருதி

சங்கீத ஜாதிமுல்லை விட்டு

கொஞ்சம் என் மனிதநேயம் தொட்டு

இறங்கிவிட்டேன் மேடையை விட்டு"

 

இவ்வரிகளை படித்த மேகலாவிற்கு, அன்று அவன் பேசிய ஆவேச சரவெடி பேச்சுக்கள் அனைத்தும், ஹச்டி பிரிண்ட் வீடியோவாய் மனதுள் ஓடியது.

 

"ம்ம் அன்னைக்கு நீங்களும் என்னை பார்த்திருக்கீங்க" என்ற பெருமூச்சும் வெளிப்பட்டது அவளிடம்.

 

அடுத்தப் பக்கத்தை நோக்கி பயணித்தாள்.

 

"தனஞ்செழியன் நண்பனாய்ப் போனான்.. இல்லையெனில் பேசிய பேச்சிற்கு பல்லை தட்டியிருப்பேன்.

 

என்னிடமே என் தேவதையை பட்சி என்கிறான்.. பார்க்குது என்கிறான்.. ராஸ்கல்"

 

இவ்விடம் கசப்பான புன்னகையொன்று வெளிப்பட்டது மேகலாவின் இதழில்.

 

"அவனைப்பத்தி இவ்வளவு தெரிஞ்ச நீங்க, அவனை உங்க தொழிலில் கூட்டு சேர்த்திருக்க கூடாது.. ஆனா சேர்த்துக்கிட்டீங்க.. ஏன்?" என ராமின் போட்டோவை பார்த்துக் கேட்டாள்.

 

"ம்ம் உங்க தங்கச்சி விஜிதாவை மட்டும் அவன் ஏமாற்றி திருமணம் செய்யாமல் இருந்திருந்தால், அவளின் தாலிக்கு நல்லது செய்வதாய் நினைத்துக் கொண்டு அவனை உங்களுடன் கூட்டு சேர்த்திருக்க மாட்டீங்க தானே?.. ஆனா அந்த நன்றி இருந்ததா அவனிடம்?" என்று அவளே தனஞ்செழியனை ராம் தன் தொழிலில் சேர்த்துக் கொண்டதற்கான காரணத்தை சொல்லிக் கொண்டாள்.

 

தனஞ்செழியன் பற்றி வெறுப்பாக மனதிற்குள் நினைத்துக் கொண்டவளுக்கு, அதற்கு மேல் அந்த டைரியை வாசிக்க மனம் வரவில்லை. அதை தூரத் தூக்கிப் போட்டாள்.

 

சரியாக அந்நேரம் கதவும் தட்டப்பட்டது.

 

கதவைத் திறந்த மேகலா, உடல் மட்டும் தன்புறமிருக்க, முகத்தை வேறு புறம் திருப்பி தன்னை கண்டுகொள்ளாத பாவனையுடன் நின்றிருந்த தன் மகளைக் கண்டு, காலையிலிருந்து அவள் செய்ததையெல்லாம் நினைத்து கோபம் எழுந்தாலும், இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல என்று சலித்தபடியே, "ஹாலில் உட்காரு வரேன்" என்று அரைமணித் திவலயத்தில் கிளம்பி வந்தார்.

 

"டைரியை படிச்சீங்களா?.. அந்த ராஜாராமைப் பத்தி புரிஞ்சுக்கிட்டீங்களா?" என ஆர்வமாய் வினவியவளை கண்டு கொள்ளாமல் வெளியே வந்தவர், தாங்கள் செல்ல வேண்டிய முகவரியை டிரைவரிடம் தெரிவித்து விட்டு, காரிலேறி அமர்ந்தார்.

 

இருவரும் காரினுள்ளே அமரவும், அவர்களின் கார் காஞ்சிபுரம் செல்லும் சாலையை நோக்கி பயணித்தது.

 

சென்னையிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த இடம். தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை நெருங்க நெருங்க ஒரு பரவசம் வந்து தொற்றிக் கொண்டது சுஹாசினியிடம். மேகலா மட்டும் எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டாமல் கண்மூடி சயனித்திருந்தார்.

 

ஏற்கனவே செல்ல வேண்டிய இடம் பற்றி டிரைவருக்கு தெரிவிக்கப் பட்டிருந்ததால், சரியாக அந்த குறுக்கு பாதையை நோக்கி காரை திருப்பினார் அவர்.

 

பயணித்துக் கொண்டிருந்த பாதையில் கடைவீதிகள் ஏதுமின்றி வெறிச்சோடி இருந்ததற்கு காரணம் புரியவில்லை சுஹாசினிக்கு. உள்ளேச்செல்ல செல்ல அவளுக்கு பழைய இடங்கள் ஒவ்வொன்றும் புலப்பட ஆரம்பித்தது.

 

சர்பத் கடை, துணிக்கடை, ராட்டினம் நிற்கும் இடம் என அனைத்தையும் அடையாளங் காண முடிந்தது அவளால். ஆனால் அதே சமயம் அந்த இடத்திலெல்லாம் மிகப்பெரும் கலவரமொன்று நிகழ்ந்திருந்ததற்கான சான்றுகளையும் காண முடிந்தது.

 

அனைத்து இடங்களும் சிதிலமடைந்து காட்சியளித்தது. ஆனால் சுஹாசினியின் வலிமையான நினைவுகள் மட்டும் அனைத்து இடங்களையும் கண நேரத்தில் வெள்ளையடித்து புதுப்பித்தது.

 

கண்ணில் பத்து ரூபாய் கண்ணாடியை மாட்டிக்கொண்டு தன் தந்தையின் கரத்தை பிடித்துக்கொண்டு அனைத்து கடைகளையும் ருசி பார்த்துவிட்டு வந்த நினைவுகள் அனைத்தும் போட்டோ பிளாஷ்களாய் வந்து வந்து போனது அவளுக்கு.

 

குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்ததும் டிரைவர் கதவை திறந்து வைத்து காத்திருக்க, மாம் என்று அவரை கைத்தொட்டு எழுப்பினாள் சுஹாசினி.

 

எழுந்தவர் அவளுடன் இறங்கி வரவும், "மாம்,

இந்த இடத்துக்கு என்னாச்சு?.. ஏன் இப்படியிருக்கு?.. இந்த இடம் இப்படி வெறிச்சோடி கிடந்து நான் பார்த்ததே இல்லையே மாம், எப்பவும் கூட்டமாத்தானே இருக்கும்?" என்று கேட்டவளை பார்த்து, வாயில் விரல் வைத்து, அமைதியாக வருமாறு சைகை செய்தவர், பத்தடி முன்னே நகர்ந்து டிரைவரிடம் அந்த பெரிய கேட்டை திறக்குமாறு கூறினார்.

 

அவனும் ஓடிப்போய் திறக்க, "வா சுஹா!" என்றழைத்தவர்,

 

அவள் அருகில் வந்ததும் ஒற்றை விரலை நீட்டி "அங்கே பார்!" என்றார்.

 

பதினைந்து வருடங்களுக்கு முந்தைய நிலையானால் அவர் விரல் நீட்டிய இடத்தில் டிக்கெட் கவுண்டர் ஒன்று இருந்திருக்கும். முழுதாய் அடைக்கப்பட்ட சிறிய பெட்டிக்கடை போன்றதொரு இடத்தில், கைவிடவும் முகம் பார்க்கவும் மட்டுமே தெரியும் அந்த சிறு துவாரத்தின் வழியே மக்கள் டிக்கெட் வாங்குவதற்காக வரிசை வரிசையாய் நின்று தள்ளு முள்ளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காட்சியும் தென்பட்டிருக்கும்.

 

ஆனால் இப்போது அந்த இடத்தில்.. அந்த இடத்தில்.. வரிசை வரிசையாய்..

 

சுஹாசினியால் அதனை நம்ப முடியவில்லை. "நடந்தது பெரிய விபத்து தான்.. ஆனால் அனைத்தும் இங்கேயே நடந்து முடிந்து விட்டதா?" என்ற மிகப்பெரும் கேள்வி எழுந்தது அவளுக்குள்.

அவளின் அதிர்ச்சியை பொருட்படுத்தாத மேகலா "உள்ளே வா சுஹா!" என்றார்.

 

அதிர்ச்சியிலிருந்து மீண்டவள் உள்ளே நுழையவில்லை. நிமிர்ந்து அந்த கட்டிடத்தின் மேலிருந்த பதாகையை கவனித்தாள். பல கல்லடிகளை தாங்கி ஒரு பக்கமாய் சாய்ந்து சிரித்துக் கொண்டிருந்தது அந்தப்பதாகை. தானும் தலையைச் சரித்தாள் சுஹாசினி.

 

"ராம்ஸ் தி கிராண்ட் மேஜிக் ஷோவ்" பெரிய பெரிய கொட்டை எழுத்துக்கள்.

 

அதைக்கண்டு கண்கள் கலங்கியது அவளுக்கு.

 

மேகலாவே கைப்பிடித்து அவளை உள்ளே அழைத்து செல்ல, அங்கு குவியல் குவியலாய் மணல் மேடுகள். அடுத்தடுத்த நெருக்கமான மணல் மேடுகள். பெயர்ப்பலகைகள் தாங்கிய மணல் மேடுகள்.

 

"அப்படின்னா இது?.. இது?"

 

"ஆமா கல்லறை தான்" சுஹாசினியின் கேள்விக்கு பதில் கூறினார் மேகலா.

 

தலை சுற்றியது அவளுக்கு. இதயமும் பலமாக அடித்துக் கொண்டது.

 

"மாம்?.. மாம்?.." என பயத்தில் இடக்கையால் தன் மணிவயிற்றையும், வலக்கையால் தன் அன்னையையும் பிடித்துக் கொண்டாள். கால்கள் துவள, கண்கள் இருட்ட, சுயநினைவிழந்து தன் அன்னையின் மீதே சரிந்தாள் சுஹாசினி.

 

எப்போதும் வரும் கனவு இப்போதும் வந்தது. பதினைந்து வயது பருவப்பெண்ணாக பாவாடை சட்டையணிந்து முன் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த சுஹாசினி, மேடையை நோக்கி "டேடி!.. டேடி!.. டேடி!" என்று மும்முறை கத்தி அழைத்தாள்.

 

எப்போதும் தன் முதல் அழைப்பிலேயே "குட்டிம்மா! டேடி வந்துட்டேன்" என்று முன் வந்து நிற்கும் தன் தந்தையிடமிருந்து இன்று அவளுக்கு எந்தவொரு பதிலும் கிட்டவில்லை.

 

கோபத்தில் தலைகுனிந்து அமர்ந்திருந்தவள், தாமதமாக, "குட்டிம்மா! டேடி வந்துட்டேன்" என்ற குரல் கேட்கவும், இருக்கையிலிருந்து எழுந்து மேடையை பார்த்தாள். ராம் தன் கைகளை விரித்துக் கொண்டு அவளை வாவென்று அழைத்தபடி நின்றிருந்தார்.

 

"டேடி..!" என்று அவளும் சந்தோசமாய் கத்திக்கொண்டே மேடையை நோக்கி ஓடினாள்.

 

ஓடிக் கொண்டிருந்தவளை திடீரென்று பின்னிருந்து ஒருகுரல், "சுஹி..!" என்றழைக்க, சற்று நிதானித்தாள்.

 

குரலிலிருந்து கூப்பிட்ட நபரை அடையாளம் கண்டு கொண்டவள், "அஜு.." என்றபடியே ஆனந்தத்துடன் திரும்பினாள்.

 

இருகைகளையும் தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் விட்டபடியே ஸ்டைலாக நின்றிருந்தவன், இரு கைகளையும் விரித்து கண்ணடித்தபடியே வாவென்றழைக்க, இவள் திரும்பி மேடையைப் பார்த்தாள். அவளின் டேடியைக் காணவில்லை.

 

தன் பாவாடையைத் தூக்கிப் பிடித்தவாறே அவனை நோக்கி ஓடியவள், புயல்காற்றாய் அவனைத் தாக்கி கட்டியணைத்துக் கொண்டாள். பின் "அஜு.. அஜு" என்று உருப்போட்ட படியே  அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள்.

 

அவனும் தன் வலிமையை அணைப்பின் இறுக்கத்தில் காட்ட, திடீரென குழந்தையின் ஞாபகம் வரப்பெற்றவள், இடையை சுற்றியிருந்த அவனின் கரங்களை கொஞ்சம் தளர்த்த முயற்சி செய்தாள். அவளின் பயம் புரிந்தவன் தானும் தன் கரங்களை தளர்வாக்கினான்.

 

சற்றே குனிந்து அவள் உச்சியிலிருந்து முத்தம் பதிக்க தொடங்கியவன், நெற்றி, கண்கள், மூக்கு என பயணித்தான். சீராய் வந்து கொண்டிருந்தவன், அவளிதழை நெருங்கும் நேரம் சற்று நிதானிக்க, எதையோ எதிர்பார்த்து காத்திருந்த அவளின் இதழ்கள், இதயத்திற்கு போட்டியாய் துடித்துக் கொண்டிருந்தது.

 

அந்நேரம் பார்த்து, 'டக்.. டக்' என கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, தூக்கம் கலைந்து எழுந்த சுஹாசினி, "அம்மா சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்.. கதவைத்திறங்க" என்ற ஈஸ்வரியின் குரலில், நடந்தது அனைத்தும் கனவு என்று புரிந்து கொண்டாள்.

 

"ப்ச் ஈஸ்வரிக்கு மூக்கு வியர்த்துடுச்சி" என்றவள் சலித்துக்கொள்ள,

 

அருகில் ஒரு குரல் அதை ஆமாம் என ஆமோதித்தது.

 

திடுக்கிட்டு திரும்பியவளை பார்த்து, அவளின் அதிர்ச்சியை கண்டு கொள்ளாதவனாய், "ஏய் சுஹி! போய் என்னனு கேட்டுட்டு வா.. ரொம்ப நேரமா அவங்க கதவை போட்டு தட்டிட்டு இருக்காங்க" என்று அர்ஜுன் சொல்ல, அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தவள், அவன் தன் முகத்தினருகே அவன் முகம் கொண்டுவரவும், துள்ளியெழுந்து தன் விழிகளை அகல விரித்தபடி, "அஜூ..?!" என்றாள்.

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்...

அத்தியாயம் 17

 

சிம்பாவும் சிக்கிய ஆதாரமும்

அஜு என்றவளை முறைத்தபடியே, "ஆமா இப்படி அஜு கிஜூன்னு சொல்லித் தான்டி உன்னை பார்க்க இப்போ சுவரேறி குதிக்க வச்சிருக்க.. போயி கதவைத் திறப்போ" என்று விரட்டியவன் தான் சென்று பாத்ரூமிற்குள் ஒளிந்து கொண்டான்.

 

அவன் ஒளிவதை பார்த்துக் கொண்டே கதவை திறந்தவளை கண்டு, "கதவைத் திறக்க இவ்வளவு நேரமா?" என கடிந்து கொண்டே உள்ளே வந்தார் மேகலா.

 

"இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு சுஹா?" என்று கேட்டுக்கொண்டே, "ஈஸ்வரி! சாப்பாட்டை கொண்டு போய் கட்டிலில் வை!.. அவ சாப்பிடுவா" என்று பணிக்க, ஈஸ்வரியும் அதேபோலவே செய்தார்.

 

தான் தன் தந்தையின் நினைவுகளை சேமித்து வைத்திருக்கும் அந்த நினைவகத்திற்கு சென்றது, அதன் பின் அது கல்லறையாய் மாறியிருந்ததைக் கண்டு மயக்கம் போட்டது என எல்லாம் ஞாபகம் வர, "மாம் நான் எப்படி இங்க வந்தேன்?" என்று குழம்பிப் போய் கேட்டாள் சுஹாசினி.

 

"நானும் டிரைவரும் தான் உன்னை குண்டு கட்டா தூக்கிட்டு வந்து காருக்குள்ள போட்டோம். அங்கயே தண்ணித்தெளிச்சி பாத்தப்போ தான் உன் கண்ணு கொஞ்சம் அசைஞ்சது தெரிஞ்சுச்சு.. அதான் டிரைவரை காரை வீட்டுக்கு விடச்சொல்லி டாக்டரை இங்க வரவச்சேன்.. அவங்களும் பாத்துட்டு பயப்பட ஒன்னுமில்லை சின்ன ஷாக் தான்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.. இப்போ நீ நல்லாயிருக்க தானே?.. ஆமா நீ எப்போ எந்திருச்ச?.. கதவை வேற பூட்டி வச்சுருக்க?.. நான் டாக்டரோட இங்க வந்து பாத்தப்போ கதவு திறந்து தானே கிடந்துச்சி?" என விசாரிக்கவும், திருதிருவென விழித்தவள்,

 

பாத்ரூம் கதவை பார்த்துக்கொண்டே, "இப்போ தான் மாம் எந்திருச்சேன்.. ட்ரெஸ் சேன்ஞ் பண்ணலாம்னு கதவை சாத்தினேன்.. அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க" என்று சமாளிக்க, அவளை நம்பாத மாதிரியே பார்த்தார் மேகலா.

 

அவரின் அருகில் வந்து கையைப் பிடித்தவள், "மாம் அந்த இடம் எப்படி?.. எப்படி?.. கல்லறையாச்சு?" எனக்கேட்டு அவரை திசை திருப்ப முயல,

 

"இறந்தவங்க எல்லாரையும் அங்கேயே புதைச்சுட்டாங்க சுஹா.. கோர்ட் உத்தரவை யாரும் மீற முடியாதில்லையா?" என்ற குரல் சோகமாய் ஒலித்தது மேகலாவிடமிருந்து.

 

கண்ணீர் துளிர்க்க மங்கலாய் தெரிந்தவரிடம், "அதனால் தான் என்னை நீங்க அங்க அனுப்பவே இல்லையா மாம்?" என்றவள் கேட்க,

 

"ஆமாம்.." என்றார் மேகலா.

 

"நான் அங்க பழையபடி மக்களை வரவைக்கணும்.. சிரிப்பு சத்தத்தை கேட்க வைக்கணும்னு நெனச்சேன் மாம்.. அது நடக்கவே நடக்காதில்ல" என குலுங்கி குலுங்கி அழுதவள் திடீரென,

 

"ஆனா தனஞ்செழியன் அன்க்கிள் மட்டும் அதுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னாரே மாம், அதெப்படி?" என சந்தேகமாக கேட்டாள்.

 

அவளின் முதுகை ஆதரவாய் நீவி விட்டவர், "நம்ம நெனக்கிறது எதுவும் அப்படியே நடக்கிறதில்ல சுஹா.. நீ அதையே நெனச்சு உன்னை ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத.. அது குழந்தைக்கும் நல்லதில்ல.. உனக்கும் நல்லதில்ல.. அப்புறம் இப்படி கதவைப்பூட்டி வைக்காத.. ஏதாவது ஒன்னுன்னா நாங்க உடனே உள்ளே வர முடியாது.. சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடு என்ன?" என்று விட்டு நகர, தன் யோசனையிலேயே உழன்று தவித்தவள், பின் பாத்ரூமிலிருக்கும் தன் கணவனின் ஞாபகம் வந்து சுற்றுப்புறத்தை உணர்ந்தாள்.

 

மேகலா அங்கிருந்து கிளம்பிய பின்னும் சாப்பாட்டை வைத்துவிட்டு நகர மறுத்த ஈஸ்வரியைக் கண்டு, கோபத்தில், "சீக்கிரம் போ!" என்று எரிந்து விழவும் செய்தாள்.

 

அவளின் கத்தலை கண்டு கொள்ளாமல் அருகில் வந்த ஈஸ்வரி, "அம்மா இந்த பொம்மத்துப்பாக்கிய எனக்கு கொஞ்சம் தர்றீங்களாம்மா?.. என் சின்ன பையன் தீபாவளி வரப்போகுதுன்னு துப்பாக்கி கேட்டு அழறான்" என்றவாறே மேசை விளக்கின் அருகிலிருந்த அர்ஜுனின் நிஜத் துப்பாக்கியை தடவியவாறே கேட்டாள்.

 

"ஹே!.. ஹே!" என்று கத்திக்கொண்டே, வேகமாக அவளின் அருகில் வந்து அதைப் பிடிங்கிய சுஹாசினி,

 

"கிட்சன்ல வேற வேலையிருந்தா போய் பாரு.. போ!" என அவளை வெளியே விரட்டி அனுப்பி வைத்தாள்.

 

ஈஸ்வரியும், " இதை வச்சிக்கிட்டு இந்தம்மா என்ன செய்யப்போகுதோ தெரியல?" என்று புலம்பிக்கொண்டே கீழே சென்றுவிட்டாள்.

 

ஓடிப்போய் கதவை சாற்றிய சுஹாசினி, கதவின் மேல் சாய்ந்து நின்று கொண்டே பெருமூச்சு விட்டாள்.

 

பின்பு பாத்ரூம் கதவைத்தட்டி, "ம்ம் வெளிய வா அர்ஜுன்!" என்றாள்.

 

சிரித்துக்கொண்டே வெளியே வந்தவன், "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை அஜு, இப்போ அர்ஜுனா?, நல்ல முன்னேற்றம் தான்" என்று நக்கலாக கூற,

 

"நீ இப்போ எதுக்கு இங்க வந்த?" என்று கடுப்பாய் கேட்டாள் சுஹாசினி.

 

"ம்ம் யாரோ என்கிட்ட பேசாம துடிச்சிப்போய் மதியம் போன் போட்டாங்க.. அதான் என்னன்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்" என்று அவளையே மடக்கினான் அவன்.

 

என்ன சொல்வதென்று தெரியாமல், "அது?.. அது?.. ஹான் என் கை தவறி போன் போயிடுச்சி" என்று திக்கி திணறி சமாளித்தவள், கட்டிலில் அமர்ந்து, ஈஸ்வரி வைத்துவிட்டு போன சப்பாத்தியை பிட்டு பிட்டு மசாலாவில் தோய்த்து சாப்பிட்டாள்.

 

பின் சாப்பாட்டை பார்த்தபடியே, "அது தான் தெரியாம வந்துடுச்சின்னு சொல்றேன்ல?.. இன்னும் ஏன் இங்கயே நிக்கிற?.. இடத்தை காலி பண்ணு" என்று முகம் சுளித்தாள்.

 

எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அவளின் அருகிலமர்ந்து, "நான் என் சிம்பாக்கிட்ட பேசிட்டு முத்தம் குடுத்துட்டு போய்டுறேன்" என்றான் அர்ஜுன்.

 

அடுத்த துண்டு சப்பாத்தியை பிய்த்தெடுத்து வாய்க்கு கொண்டு செல்ல போனவள், அதை கீழிறக்கிய படியே, "சிம்பாவா? யாரது?" என்று யோசனையாய் கேட்டாள்.

 

"ம்ம் என் சிங்கக்குட்டி" என்று அவளின் வயிற்றருகே குனிந்தவன்,

 

"சிம்பாக்குட்டி என்ன பண்றீங்க?.. சப்பாத்தி சாப்பிடுறீங்களா?.. உங்க மம்மி லூசுத்தனமா ஏதாவது பண்ணினான்னு வச்சுக்கோங்க ஒரே உதை தான்.. அதுலயே அவ காலி.. ம்ம்?.. டேடி உங்களை தினமும் வந்து பார்க்கிறேன் என்ன?" என்று தன் கையை சுஹாவின் வயிற்றில் வைக்கச் செல்ல,

 

அதை தட்டி விட்டவள், "ஓஹோ.. இது தான் உன் சிம்பாவா?.. ஆனா இது இப்போ என் வயிறு.. நீ தொடக்கூடாது.. ஏழு மாசம் கழிச்சி வந்து உன் சிம்பாக்கிட்ட பேசு, தொடு, என்னவேணா பண்ணு.. இப்ப நடையை கட்டு" என்று அவன் குழந்தையை முன்னிறுத்தி தன்னிடம் பேசியதில் பொரிந்து தள்ளினாள்.

 

"உன் வயிறா?.. உள்ள இருக்கிறது என் சிம்பாடி.. என் சிம்பாவைப் பார்க்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டு வாட்ச்மேனை கரெக்ட் பண்ணி ரெண்டு நாளா சுவரேறி குதிச்சிக்கிட்டிருக்கேன் தெரியுமா?" எனக் கேட்கவும்,

"என்னாது? ரெண்டு நாளாவா?" என வாயைப்பிளந்தாள் சுஹாசினி.

 

அவள் சப்பாத்தியை, தான் பிய்த்து உண்டு கொண்டே, "ஆமா.. நேத்தும் பனிரெண்டு மணிக்கு இதே மாதிரி தான் நான் உள்ள வந்தேன்.. அப்போ நீ அஜு அஜுன்னு புலம்பிக்கிட்டு கிடந்த.. நானும் பக்கத்துல வந்து என் சிம்பாக்கு கிஸ் கொடுத்தா.. நீ..." என்று ஆரம்பித்தவனை அடுத்தடுத்த சம்பவங்கள் ஞாபகம் வரப்பெற்று, குறுக்கே புகுந்து "ஸ்டாப் இட்" எனத்தடுத்தவள்,

 

"அப்போ நேத்து நடந்ததெல்லாம் கனவில்லையா?.. நிஜமா?" என்று கண்களை பெரிதாக்கி வினவினாள்.

 

இவ்வுலகிலேயே தான் தான் மிகப்பெரும் அப்பாவி என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு ஆமென தலையாட்டினான் அர்ஜூன்.

 

அவன் தன்னைக் காண நேற்றிரவும் இங்கு வந்திருக்கிறான் என்ற செய்தி கொஞ்சம் மகிழ்ச்சியை தந்தாலும், அவன் குழந்தையிடம் பேசவே வந்தேன் என்றது, அவளுக்கு கொஞ்சம் குழந்தையின் மேல் பொறாமையை உண்டு பண்ணியது.

"அதான் உன் சிம்பாகிட்ட என்னை அடிக்கச் சொல்லியாச்சில்ல?.. அப்புறம் என்ன? கிளம்ப வேண்டியது தானே?" என்று அவள் எங்கோ பார்த்துக் கொண்டு கூற,

 

அவள் நாடியை பிடித்து திருப்பி, தன்னை பார்க்கச் செய்தவன், "எல்லாம் அவ்வளவு தான் இல்ல?.. ஜஸ்ட் ஃபைவ் மந்த்ஸ், அதுக்குள்ள நான் உனக்கு போரடிச்சிட்டேன் இல்ல?.. நீ என்னை மாத்திட்டடி.. நேத்து மதியத்திலிருந்து என்னவோ இந்த உலகத்துல நீயொருத்தி மட்டும் தான் இருக்க மாதிரி, நீ தான் எனக்கு எல்லாம்னு தோணுது.. ஆனா உனக்கு அந்த மாதிரியெல்லாம் எதுவும் தோணலையில்ல.. ம்ம்? அப்பறம் என்ன சுஹா?" என அவளிடமே கேட்டவன்,

 

"ஹான் ஞாபகம் வந்துருச்சி.. ஓகே ஃபைன் என்ன வேணாம்னு சொன்ன நீ எனக்கும் வேணாம்.. அய்யயோ இப்போ உன்கிட்ட கழட்டி கொடுக்க என் கழுத்துல தாலி கூட இல்லயே.. சபிக்கப்பட்ட ஆண் சமூகத்துக்குன்னு கோபம் வந்தா கழட்டிக் கொடுக்கன்னு ஒன்னுமே இல்லையே கடவுளே?.. அய்யகோ இப்போது என் செய்வேன்?.. சரி அடுத்த வசனத்துக்கு போவோம்.. அப்புறம் நான் உன்கூட இருந்ததுக்கு சம்பளமா?.. சம்பளமா?.." என நிறுத்தவும்,

 

இவ்வளவு நேரம் அவன் கூறியதனைத்தையும், சிரிப்பில் இதழ்கள் நெளிய கேட்டுக் கொண்டிருந்தவள், இந்த இடத்தில் அவன் கூறப்போவதை எதிர்நோக்கி தன் காதுகளை தீட்டி வைத்தாள்.

 

"நான் உன்கூட இருந்ததுக்கு சம்பளமா?.. சம்பளமா?.. நீ என் கூட இருந்திடேன்" என்று அவன் சொல்லி முடிக்கவும் விழுந்து விழுந்து சிரித்தாள்.

 

"அதான் உன்னாலயும் என்னைப் பார்க்காம இருக்க முடியலைல?, அப்புறம் எதுக்கு என்னை இங்க வந்து உட்கார வச்சிருக்க?.. அதுவுமில்லாம நீ போலீசா இருக்கிறதை வேற என்கிட்ட சொல்லவே இல்ல.. போனாப் போகுதுன்னு நான் தான் உன்னை மன்னிச்சு விட்டிருக்கேன்" என்றபடியே, அவன் நெஞ்சில் தலை சாய்த்தமர்ந்து, சட்டைப் பட்டன்களை திருகிக் கொண்டிருந்தவள், ரவிச்சந்திரனைப் பற்றிய உண்மைகளை கூற முற்பட்டு, நிமிர்ந்து பார்த்தாள்.

 

அவனும் என்னவென குனிய, "ராஜாராம் மாதிரியே உன் அப்பாவும் கெட்டவர்ன்னு தெரிஞ்சா அவரையும் ஜெயிலுக்கு அனுப்பிடுவியா அஜு?" என்று கேட்க.

 

சட்டென்று அவளை விட்டு விலகினான் அர்ஜுன்.

 

"நீ என்னை பிரிஞ்சு, இங்க வந்து உட்கார்ந்திருப்பதற்கு காரணமே, நீ என் அப்பாவை பழி வாங்க நெனச்சது தான் சுஹி"

என்று இவ்வளவு நேரமும் அவளிடம் இழைந்ததை எல்லாம் மறந்துப்போய் அவன் கத்த,

 

"மொத அவர் என்ன பண்ணினாருன்னு தான் கேளேன் அஜு" என்று தானும் பதிலுக்கு அவனிடம் கத்தினாள் சுஹாசினி.

 

"தேவையில்லை.. அன்னைக்கு நீ போதையில உளறினப்போவே எல்லாத்தையும் கேட்டுட்டேன்.. இனிமே கேட்குறதுக்கு ஒன்னுமில்ல" என்று வெளியேற ஜன்னலை நோக்கிச்சென்றான்.

 

"ராஜாராமை பத்தி சொல்லி ஆதாரத்தையும் கையில கொடுத்தா என் மாம் நம்ப மாட்டேங்குறாங்க.. உன் அப்பாவை பத்தி சொன்னா நீ நம்பமாட்டேங்குற.. என்னை, என் பேச்சை யாருமே நம்ப மாட்டீங்களா?" என்று சொல்லித்தன் இழிநிலையை எண்ணி, அவள் தன் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழ, ஜன்னலை நோக்கிச் சென்றவன் திரும்பி அவளருகில் வந்து அமர்ந்தபடியே முகத்திலிருந்து அவள் விரல்களை பிரிக்க முயற்சி செய்தான்.

 

மெதுவாய் கைகளை கீழிறக்கியவள், "இப்போதாவது என்னை நம்புறியா அஜு?" என்று நம்பிக்கையுடன் கேட்க,

 

அவளின் கேள்வியை புறம் தள்ளியவன், "நீ உன் அம்மாக்கிட்ட ராஜாராமைப் பத்தி ஏதோ ஆதாரம் குடுத்ததா சொன்னியே?.. அது என்ன ஆதாரம் சுஹி?.. ம்ம்? சொல்லு சுஹி?" என்று அந்த ஆதாரத்திலேயே அவன் தீவிரமாயிருக்க,

 

அவனின் இந்த தீவிரத்தில் மனம் ரணமாகிப்போனவள், "அது ஒரு டைரி" என்றாள் வெறுப்பு மண்டிய குரலில்.

 

கண்கள் சுடர் விட, "யாருடைய டைரி?" என்றான் அர்ஜுன்.

 

"ராஜாராம் அவரோட டைரி" என்று சொல்லி முடிக்கும் முன், அவன் இறுகிய அணைப்புக்குள் கிடந்தாள் சுஹாசினி.

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்...


ReplyQuote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
30/05/2020 12:51 pm  

Comments please❣️


ReplyQuote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
31/05/2020 2:49 pm  

அத்தியாயம் 18

 

எதிர்பாராத எங்கேஜ்மெண்ட்

சுஹாசினியின் அறையிலிருந்து கீழிறங்கி வந்த மேகலா, டைனிங் டேபிளில் அமர்ந்து இரவு உணவை முடித்த கையோடு, ரவிச்சந்திரனுக்கு தன் போனிலிருந்து அழைப்பு விடுத்தார்.

 

அழைப்பு ஏற்கப்பட்டவுடன், "மேகலா பேசுறேண்ணா.. அவர் இப்போ எங்கயிருக்கார்ண்ணா?" என்றதும்,

 

எதிர் முனையில் கேட்ட ரவிச்சந்திரனின் குரலிலிருந்து, "என்னது விசாரணை நடக்குதா?.. இன்னும் என்னண்ணா விசாரணை?, அவரைப்பத்தி உங்களுக்கு தெரியாதா?.. அவர் அப்படி செய்யக்கூடியவர் இல்லையேண்ணா.. சுஹாவோட அப்பா இறந்தப்போ கூட, இவர் சொல்படி எங்கப்பா வீட்டிலிருந்து நான் வாங்கிய சொத்தை வித்து, ஆரம்பித்தது தானேண்ணா இந்த கெமிக்கல் கம்பெனி கூட.. உங்களுக்கும் அது தெரியுமேண்ணா.. அவர் கண்டுபிடிச்ச சில மருந்துகளால தான் கம்பெனி உலக புகழ் பெற்றதே.. எந்தவொரு நிலையிலும் அவர் இந்த மாதிரி குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லையே.. இன்கம் டேக்ஸ் கூட சரியாத்தான் கட்டிட்டு வர்றோம். இந்த நிலையில இப்படி அவர் மேல வீண் பழி சுமத்துறது சரியில்லைண்ணா.. எப்படியாவது அவர வெளிய கொண்டு வந்துருங்கண்ணா" என்று கெஞ்சவும்,

 

"எல்லாமுந்தான் எனக்கும் தெரியுமேம்மா.. எனக்குத் தெரிஞ்ச வரை அவன் அப்படி  செஞ்சிருக்குறதுக்கான வாய்ப்பே இல்லம்மா.. எந்த ஆதாரத்தோட அடிப்படையில அவனை கைது பண்ணிருக்காங்கன்னும் எனக்குத் தெரியல.. அர்ஜுன்கிட்ட தான் கேட்கணும்.. ஆனா அவன் போனையே அட்டன் பண்ண மாட்டேங்குறான். எப்படியிருந்தாலும் கேஸை உடைச்சிடலாம், நீ வருத்தப்பட வேணாம் மேகலா. நான் பார்த்துக்கிறேன்" என்றார் ரவிச்சந்திரன்.

 

கொஞ்சம் விடுதலை உணர்வு பெற்ற மேகலா, தன்னறைக்குச் சென்று கண்மூடி சாய்ந்து, மதியம் தான் பாதியில் விட்ட நினைவலைகளை தட்டியெழுப்பினார்.

 

………………………..

வருடம் 1990

இடம்: மதுரை

இறுதித்தேர்வு முடிந்து கல்லூரி விடுமுறைக்கு தனது சின்ன அண்ணனுடன் ஊருக்குச் சென்ற மேகலாவிற்கு தன் வீட்டில் மிகப்பெரும் அதிர்ச்சியொன்று காத்திருந்தது.

 

ஊரில் வந்திறங்கிய உடனேயே தன் வீட்டின் முன்பு கூடியிருந்த கூட்டத்தைக் கண்டு ஏன்? எதற்கு இவ்வளவு கூட்டம்? என்று குழம்பிப்போனவள், "அண்ணே! என்னண்ணே இது?.. ஏன் நம்ம வீட்டு முன்னாடி இப்படி கூட்டம் கூடி நிக்கிறாக?.. நம்ம கூனிக்கிழவி ஏதும் மண்டைய கிண்டைய போட்டுடுச்சா?" என்று எப்போதும் போல் துடுக்குத் தனத்துடன் விசாரித்தாள்.

 

அந்நேரம் அவளின் சின்ன அண்ணி திலகா, "வந்துருக்கவகளுக்கு வெளில உக்கார சேரு பத்தல.. நம்ம ராசாத்தி கடையில போய் தூக்கியாங்க" என்று வந்து நிற்கவும்,

 

"சரி நான் போய் தூக்கியாரேன்.. இந்தா இந்த பையப்புடி.. இவளை உள்ளக் கூட்டிட்டு போ" என்று தன் தங்கையை தன் மனையாளுடன் அனுப்பிவிட்டு, சேர் தூக்கச் சென்று விட்டான் மேகலாவின் சின்னண்ணன் சந்தனப்பாண்டி.

 

வாசலில் தன் அண்ணியுடன் வந்து கொண்டிருந்தவளை பார்த்த உடனேயே, பெண்கள் இருவர் வந்து விருட்டென்று அவளை உள்ளே அழைத்துச் சென்றனர்.

 

வீட்டில் ஏதேனும் விசேஷம் விருந்து வைத்தால் மட்டுமே தென்படும் முகங்கள் நான்கும், தெரியாத முகங்கள் ஒன்றிரண்டும், தன்னை சுற்றி நின்று, தான் அணிந்திருந்த சுடிதாரை அவிழ்த்து குளிப்பதற்காக பாவாடை கட்டி வரச்சொல்ல, திக்கு தெரியாத காட்டில் நின்றிருப்பவளைப் போல திருதிருவென விழித்தாள் மேகலா.

 

அந்நேரம் பார்த்து கையில் கலக்கி வைத்த மஞ்சளுடன் உள்ளே வந்தார் அயனேஸ்வரி.

 

தன் தாயைக்கண்டதும் ஒருவித பரிதவிப்புடன், "அம்மா, என்னம்மா இதெல்லாம்?.. என்ன நடக்குதிங்க?.. எல்லாரும் சுத்தி நின்னு ஏதேதோ சொல்றாக?" என்று பதறினாள்.

 

"எல்லாம் செத்த நேரத்துக்கு தான் மேகலா.. எல்லாரும் கலைஞ்சு போனதுக்கப்புறமா நான் சாவகாசமா என்னன்னு சொல்றேன்.. இப்போதைக்கு இவக சொல்ற படி கேளு" என்று முதலில் அனுசரணையாகவும், முடிவில் அதிகாரமாகவும் சொன்ன அவளின் தாய் அயனேஸ்வரி,

 

"திலகா, மேகலா எல்லாரும் புது ஆளுகளா நிக்கவும் சங்கடப்படுறா பாரு.. செத்த கூட வந்து நில்லு" எனத்தன் மூன்றாம் மருமகளை அழைத்து, தன் மகளின் அருகில் நிற்க வைத்தார்.

 

பின் டீ போட்டுக் கொண்டிருக்கும் தன் மூத்த மருமகளிடம் வந்து, "ம்ம் வெரசா டீ எடுத்துட்டு போ அம்சா.. எல்லாரும் காத்திருக்காக பாரு.. செத்த லேட்டானாலும் உன் மாமா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பிச்சிடுவாக" என்று பரபரத்தார்.

 

அவளும் ஆவி பறக்கும் டீயை டம்ளர்களில் அளந்து ஊற்றி சபைக்கு எடுத்துச் சென்றாள்.

 

மேகலாவின் தந்தை நடுவிலும், அவளின் தாய் மாமன்மார்கள் இரு புறத்திலும், மற்ற தூரத்து உறவுமுறைகள் எல்லாம் பின்பக்கத்திலும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிர் புறத்தில் ஒரு படையையே திரட்டிக்கொண்டு வந்து மேகலாவிற்கும் தங்கள் பையன் மருதுவிற்கும் நிச்சயம் முடிக்க வந்திருந்தார், பக்கத்து ஊரான வெத்தலப்பட்டியின் நாட்டாமை வீரபாண்டியத்தேவர்.

 

அம்சவல்லி அனைவருக்கும் முதலில் டீயை நீட்ட, அவளுக்கு பின்னேயே மேகலாவின் இரண்டாம் அண்ணனின் மனைவி, மிக்சர் தட்டுகளுடன் வந்து நின்றாள்.

 

"ஏப்பா! உக்கிரப்பாண்டி, பொண்ணப் பெத்தவன் நீ தான்.. அவக தான் கேக்க வேண்டியதெல்லாம் முன்னாடியே கேட்டுட்டாக இல்ல?..  நீ அதுக்கு இசையுறியா இல்லையா?.. வீட்டுலயும் ஒரு வார்த்தை கலந்துக்கிட்டியாப்பா?" என்று பெரியவர் ஒருவர் இடையில் விட்ட பேச்சை தொடங்கி வைக்க,

 

"இதுல பேச என்னப்பு இருக்கு?.. எங்க மச்சானுக்கு இருக்குறதே ஒரே பொட்டப்புள்ளதேன்.. அவரால செய்ய முடியாததில்ல.. ஒரு வேளை சம்பந்தம் அவரு கையப் புடிச்சிச்சின்னா புள்ளைக்கு தாய்மாமங்காரனுகளா நாங்க எதுக்கு இருக்கோம்?.. சும்மா வுட்ருவோமா?.. சீர் செனத்தின்னு அசத்திர மாட்டோம்" என்று தோள் கொடுக்க தயாராய் நின்றார் அயனேஸ்வரியின் பெரியண்ணன்.

 

"மொத புள்ளையும் மாப்பிள்ளையும் பாக்கட்டுமப்பா.. பின்னாடி பேச வேண்டியதெல்லாம் பேசிக்கிடலாம்.. எங்க மருதுவுக்கு புள்ளைய நேர்லயும் புடிச்சிப் போச்சுன்னா மேற்கொண்டு பேசுவோம்.. அவன் என்ன சொல்றியானோ அதேன் முடிவு" என்று அந்த பேச்சுகளுக்கு முற்று புள்ளி வைத்தார் மாப்பிள்ளை மருதுபாண்டியனின் தாய் நீலாவதி.

 

கருநீல பார்டர் கொண்ட சிவப்பு நிறப்பட்டுக்கட்டி, நுனி வரை பின்னிய சடையில் சிவப்புநிற ரிப்பனால் குஞ்சமிட்டு, ஊரையே மணமணக்கச்செய்யும் மதுரைமல்லிப்பூ சரங்களை ஐந்தடுக்குகளாய் பின்னலின் இறுதிவரை தொங்கவிட்டு, இவ்வளவு நாளும் உள்ளே பனைவோலை பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருந்த கற்கள் பதிக்கப்பட்ட கொண்டை ஊசியிலிருந்து கழுத்தாரங்கள் வரை ஒன்றுவிடாமல் அனைத்தையும் எடுத்து மேகலாவிற்கு அணிவித்துவிட்டு, அவளை அழகுச்சித்திரமாய் மாற்றி, இறுதியில் கண்ணு படுமென கன்னத்திலும் கண்மையால் சிறு பொட்டு வைத்துவிட்டனர் அவளின் உறவுக்காரப் பெண்மணிகள்.

 

அவையனைத்தையும் கண்டு ஏக்க பெருமூச்சு விட்ட திலகா, அலங்காரம் முடிந்ததும் அனைவருடனும் இணைந்து அவளை சபைக்கு அழைத்து வந்தாள்.

 

"எல்லாரையும் விழுந்து கும்பிடு மேகலா" என்று  திலகா அவளின் காதில் கிசுகிசுக்க, அவளும் அனைவரையும் பார்த்து இருகை கூப்பி கும்பிட்ட படியே முட்டி போட்டமர்ந்து விழுந்து வணங்கினாள்

 

"பொண்ணப் பாத்தாச்சுல்லப்பா?" என்று அதே பெரியவர் கேட்க,

 

"டேய் ராசுக்குட்டி, போய் மருது கிட்ட புள்ளைய புடிச்சிருக்கான்னு கேளுடா!" என்று ஓரத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த தன் மகனை நோக்கி, ஆளை ஏவினார் நீலாவதி.

 

அவனும் சிறிது நேரத்தில் வந்து, "அண்ணே அத்தாச்சிய ரொம்ப புடிச்சுருக்குன்னு சொல்லுது, பெரியம்மா" என்று கத்தி சொல்ல கூட்டத்தில் சிரிப்பலை எழுந்து அடங்கியது.

 

பின்பு அந்த தைரியத்தில் தட்டை மாற்றுமாறு தன் கணவருக்கு கண்ஜாடை காட்டினார் நீலாவதி. நாட்டாமையும் துணிவுடன் வெற்றிலைப்பாக்கு தட்டைத் தூக்கி நீட்ட, உக்கிரப்பாண்டித்தேவர் அதனை பெற்றுக் கொண்டு, தானும் தன் புறமிருந்து வெற்றிலை பாக்குத் தட்டை நீட்டி திருமணத்தை நிச்சயம் செய்தார்.

 

"சரிப்பா ஏற்கனவே முடிவு பண்ணின மாதிரி மாரியம்மன் கோவில் திருவிழா முடிஞ்ச நாலாவது நாள் வெள்ளனே கல்யாணத்தை முடிச்சு போட்டுறலாம் என்னப்பா சொல்றீக?" எனவும் அனைவரும் அதற்கு சம்மதித்தனர்.

 

இவ்வளவு நேரமும் சூத்திரப்பாவை போலவே அனைத்தையும் செய்து கொண்டிருந்த மேகலாவின் கண்ணிலிருந்து ஒருதுளி கண்ணீர் சிந்தியது. அதை கவனிப்பாரும் இல்லை. கவனித்தாலும் கண்டு கொள்வாரும் இல்லை. சுற்றிலும் உறவுக்காரர்கள் சூழ்ந்திருக்க, தான் மட்டும் தன் காதலுடன் தனித்து நிற்பதாய் உணர்ந்தாள் மேகலா.

 

அதன் பின் விருந்து உபச்சாரங்கள் அனைத்தும் தடபுடலாக நடைபெற்றது. மேகலாவை மாப்பிள்ளை மருதுபாண்டியனின் அருகில் அமர வைத்து விருந்தினையும் பரிமாறினர்.

 

அதைக்கண்டு, ''என் கண்ணே பட்டுரும் போலயிருக்கு" என்று அனைவரின் முன்பும் பெருமைப்பட்டுக் கொண்டார் நீலாவதி.

 

இந்தச்சம்பவத்தில் உள்ளே எரிமலையாய் வெடித்துச் சிதறி கொண்டிருந்தவள், அக்னிப் குழம்பாய் கண்ணீரை வெளியிட்டாள்.

 

இடையில் வந்து சாப்பாடு பரிமாறிய அயனேஸ்வரி, "ம்ம் சாப்புடு மேகலா.. வெஞ்சனத்த தின்னு.. என்னதிது?.. கண்ணத்தொட!" என்று அதட்ட, இரண்டு வாய்மட்டும் உணவு உண்ட மேகலா, அத்தோடு இலையை மூடிவைத்து எழுந்து விட்டாள்.

 

அனைத்து பரபரப்புகளும் நிறைவு பெற்றவுடன், இரவில் வீட்டின் மொட்டை மாடியில் உட்கார்ந்து, "எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துவேன்?.. எப்படி அவரிடம் தகவல் தெரிவிப்பேன்?" என்று அழுது கொண்டிருந்தவளை பார்த்துவிட்ட உக்கிரப்பாண்டித்தேவர்,

"என்ன கண்ணு?.. என்னாச்சு?.. ஏன் இப்புடி தனியா வந்து உக்கார்ந்திருக்க?.. ஈஸூ! ஈஸூ! ஏய் எங்கடி இருக்கவ?.. புள்ள தனியா மச்சில பனில உக்கார்ந்திருக்கிறத எல்லாம் இங்க வீட்டுல யாரும் கவனிக்கிறதில்லையா?" என்று திட்டியபடியே தன் மகளை அழைத்துக்கொண்டு அவளின் அறைக்குச் சென்றார்.

 

காலையில் மேலேயிருந்து எடுத்த நாழியை தானே நாற்காலியை எடுத்துப்போட்டு பரண் மேல் வைத்து கொண்டிருந்த அயனேஸ்வரி,

"இப்போ எதுக்கு வெசனப்படுறீக?" என்று கேட்டபடியே திரும்பிப்பார்த்தார்.

 

"புள்ளைய விட்டுட்டு நீ இங்க என்னத்த பண்ணிட்டு இருக்குறவ?" என்று பதிலுக்கு சடைத்தார் உக்கிரப்பாண்டி.

 

"அடியாத்தி, இப்போ என்ன நடந்து போச்சு?.. அதிகாரி மக பனில உக்காந்தா கருத்துப் போயிருவான்னு யாரும் சொன்னாகளா என்ன?.. இப்படி கிடந்து குதிக்கிறவரு?.. ஏன்டி நீயுந்தேன் அங்கனப்போய் எதுக்கு உக்காந்த?" என்று கேட்க,

 

அழுது கொண்டேயிருந்தவள், "அப்பா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்ப்பா" என்றாள்.

 

"அடியாத்தே, கூறு கெட்டு போச்சாடி உனக்கு?.. எவ்வளவு பெரிய சம்பந்தம் இது. மாப்பிள்ளைத் தம்பியும் உன்ன மாதிரியே டவுனுக்கு போய் படிச்சிட்டு வந்தவகதேன்.. இப்போ அப்பன் ஆத்தாளுக்கு உதவியா இங்கிட்டு கூடவே சுத்திட்டு இருக்காக. உக்காந்து சாப்ட்டாலும் பத்து தலைமுறைக்கு சொத்து கரையாதுடி.. அப்படிப்பட்ட சம்பந்தத்தைப் போய் கெடுக்க பாக்குறியே.. வாயில அடி" என்று கைவோங்க,

 

"ஏய்! செத்த பொறு ஈஸூ" என்று தன் மனைவியை கையமர்த்தினார் உக்கிரப்பாண்டி.

 

பின் தன் மகளிடம் திரும்பி, "எல்லாப் பொண்ணுங்களுக்கும் வர பயந்தான்மா இது.. கல்யாணமானா சரியாப் போயிடும் என்ன?.. போய்த்தூங்கு" என்று அவளின் தலையை தடவி விட்டவாறே சொல்லி, யோசனையாய் வெளியே சென்று விட்டார்.

 

மறுநாளே ராமிற்கு தன் நிலையை விளக்கி கடிதம் ஒன்றை எழுதிய மேகலா, தன்னை இங்கிருந்து உடனே அழைத்து செல்லுமாறும் கூறி கடிதத்தை நிறைவு செய்து, காலைக்கடனை முடிக்க செல்லும் போது, வழியிலிருந்த தபால் பெட்டிக்குள் யாருக்கும் தெரியாமல் கடிதத்தை போட்டுவிட்டாள். தன் தந்தையிடம் தன் காதலைச் சொல்லப் பயந்திருந்தவள் அழுதழுதே அந்த நான்கு நாட்களையும் கடத்தினாள்.

 

நான்காம் நாள் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அன்றிரவில் ஏழுமணியளவில் பெண்கள் அனைவரும் தங்கள் முலைப்பாலிகைகளை தூக்கி வந்து மையமாக வைத்து ஆடிப்பாடி கும்மித்தட்டினர்.

 

மேகலாவும் தன் அன்னையின் வற்புறுத்தலால் கோவிலுக்கு வந்து கும்மிதட்டினாள். அவளுடன் வந்திருந்த திலகா, விளக்கு பூஜை முடிந்ததும், "மேகலா நீ வீட்டுக்கு போய்ட்டிரு.. நான் இந்த சட்டில வீட்டுல இருக்கவகளுக்கு பொங்கல் வாங்கியாந்திர்றேன்" எனவும், அவளும், "ம்ம்" என தலையை உருட்டியபடியே, மனதில் ராமை நினைத்துக்கொண்டே நடை பழகினாள்.

 

கோவில் தெருமுனையை தாண்டியதும் இருளடைந்த அந்தப் பகுதியில் திடீரென ஒரு கரம் அவளை அந்த முக்கு சந்தில் வாயைப் பொத்தி தள்ளிக்கொண்டே போக, பயத்தில் தன் கையில் வைத்திருந்த குத்துவிளக்கை கொண்டு அவன் தலையை அடித்து நொறுக்கி விடலாமா? என்று கூட ஒரு நொடி யோசித்த மேகலா, கொஞ்சம் முகம் பார்க்கும் வெளிச்சத்திற்கு வந்ததும், தன் வாயைப் பொத்தியிருந்தவன் கரத்தை வலுக்கட்டாயமாய் விலக்கி, திரும்பி பார்த்தாள். அங்கு நின்றிருந்தவனை கண்டு, அரை மாத்திரை நேரத்தில், பாயாசத்தில் பல்லியைக் கண்டவள் போல் பேரதிர்ச்சியுமடைந்தாள்.

 

காரணம் அவள்முன் நின்றிருந்தது வெத்தலப்பட்டி நாட்டாமையின் மகன் மருதுபாண்டியன். உடன் அவன் கையில் தான் ராமிற்கு எழுதிய கடிதமும்.

 

அதில் மாரியம்மனை மனதிற்குள் சபித்துக் கொண்டிருந்தவளை, சொடுக்கிட்டு அழைத்து,  தன்னை பார்க்கச்செய்தான் மருதுபாண்டியன்.

 

அவன் சொடுக்கிட்டதில் சித்தம் தெளிந்தவள், அவன் தன்னைத் தொட்டு இழுத்து வந்த கோபத்தில் கைநீட்டி ஏதோ திட்டவர, சுருட்டை தன் வாயிலெடுத்து பற்ற வைத்தவன் அவ்விரலைப் பிடித்து வளைத்தான்.

 

"அய்யோ வலிக்குது விடு" என்று பொறியில் சிக்கிய எலியாய் அவள் கதறிக்கொண்டிருக்க,

 

அதை கிஞ்சுத்தும் செயலெடுக்காதவன், "யாருடி அந்த ராம்?" என்று அவள்மீதே சாய்ந்தான்.

 

அப்போது சாராய நெடியானது அவன் மேல் கொடி கட்டிப்பறக்க, முகம் சுளித்தவள், தன் விரலை அவன் பிடியிலிருந்து உருவியவாறே பின்னால் நகர்ந்தாள்.

 

"ம்ம் சொல்லுடி?.. யாருடி அவேன்?.. இந்த ஊரு ஃபுல்லா இப்போ என் ஆளுக தான்டி நிக்கிறாய்ங்க.. மவளே ஏதாச்சும் குழப்பம் பண்ணனும்னு நெனச்ச, வகுந்துருவேன் வகுந்து" என்று தள்ளாடியவன்,

 

பின் தன் கையிலிருந்த லெட்டரை காட்டி, "இது நீ எழுதுனது தானே?" என அவளின் கண்ணெதிரிலேயே சுருட்டின் கங்கால் அதனை கொளுத்திப்போட்டான்.

 

அவள் மிரண்டு பார்க்கையில், "என்ன பார்க்குற?.. எப்போ உனக்கும் எனக்கும் நிச்சயம் நடந்துச்சோ அப்போவே நீ என் பாதி பொண்டாட்டி ஆகிட்ட.. இதுக்கப்புறம் ஏதாவது திருகுத்தனம் பண்ணி விலகலாம்னு நெனச்சன்னு வச்சுக்க, கொன்னே போட்டுருவேன்டி.. என்ன முழிக்கிற?.. கொன்னே போட்டுருவேன்னு சொன்னது உன்னையில்ல, அவன" என்று குரூரமாய் நகைத்தபடியே தன் பக்கடா மீசையை நீவி விட்டுக் கொண்டான்.

 

அவன் பற்ற வைத்த நெருப்பில் தன் காதலும் உடன் சேர்ந்து கருகுவது போல் நினைத்து பதறிப்போன மேகலா, லெட்டர் பாதியெறியும் போதே பற்றிய தீயை தன் கைகளால் அணைத்தாள்.

 

பாதியெறிந்த கடிதம் இப்போது கண்முன்னே வாஸ்கோடகாமாவின் நன்னம்பிக்கை முனையாய் காட்சியளிக்க, நெஞ்சில் அணைத்துப் பிடித்திருந்த லெட்டருடன் விருட்டென்று அவ்விடம் விட்டு ஓடினாள் மேகலா.

 

அதில் அவள் சென்ற திசையில் தன் சுருட்டை வீசி எறிந்த மருதுபாண்டியன், "உன் லெட்டர் கிடைச்ச புண்ணியத்துல அந்த நோஞ்சாம் பயலுக்கு ஆளனுப்பி, உனக்கும் எனக்கும் கல்யாணமாகப் போறதை பத்தி சொல்லச் சொல்லிருக்கேன்டி.. எப்படியும் அவன் இங்க வருவியான்.. அவன் சாவு என் கையில தான்டி.. அந்த ராமன் இங்க எப்படி வந்து, இந்த சீதாதேவிய தூக்கிட்டு போய்டுறியான்னு நானும் பாத்துடுறேன்டி" என்று சூளுரைத்துக் கொண்டான்.

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்...

அத்தியாயம் 19

 

மணவினைகள் யாருடனோ?

மருதுபாண்டியனை இருளில் பார்த்த நாளிலிருந்து, அவனைப் பற்றி வெளியே சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல், அடைமழைக் காலத்து மேகமாய் நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்த மேகலாவின் தத்தளிப்பிற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாய் திருமண நாளும் வந்தது.

 

திருமணம் மருதுவின் வீட்டில் தான் நடக்க வேண்டும் என முன்பே பேசி வைக்கப் பட்டிருந்ததால், அவனின் வீட்டு முற்றத்திலேயே திருமண மேடை அமைக்கப்பட்டது.

 

தாய்வீட்டு பட்டுக்கட்டி நின்றிருந்த மேகலாவிடத்தில், மருதுபாண்டியன் வீட்டில் எடுக்கப்பட்ட காஞ்சிபுரம் பட்டு, தாம்பூலத்தில் வைத்து கொடுக்கப்பட, அவளும் அதனை வாங்கிக்கொண்டு தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள்.

 

அவளைப் பின் தொடர்ந்து போன மருதுவின் அத்தையொருவர், "நீங்க எல்லாரும் இங்கன வெளில இருங்க, நான் புள்ளைக்கு சேலக்கட்டி கூட்டியாறேன்" என்று சொல்ல, அனைவரும் சரியென்று வெளியிலேயே நின்றனர்.

 

உள்ளே இருந்தவர் திடீரென பதறியடித்து வெளியே ஓடி வர, அனைவரும் அவரைப் பார்த்து, "என்னாச்சு பொம்மி?.. ஏன் இப்புடி ஓடியாற?" என்று வழி மறித்து கேட்டனர்.

 

அவரோ எவரையும் கண்டு கொள்ளாமல், மருதுவின் அன்னை நீலாவதியுடன் மருதுவின் அறைக்குள் நுழைந்தார்.

 

அவரைப் பார்த்தவுடன், "என்னத்த? ஏன் இப்புடி ஓடி வர்றீக?" என்று மருதுவும் தன் பொறுமைக்கு எல்லையின்றி கேட்க,

 

"ஏப்பா மருது! தப்பு நடந்து போச்சுப்பா" என்றபடியே மருதுவின் தாயைப் பார்த்தவர்,

 

"இது தான் நீங்க என் மருமகனுக்கு பொண்ணு பாக்குற லட்சணமா அத்தாச்சி?" என்று நீலாவதியிடமும் பாய்ந்தார்.

 

"ஏன்? என்னாச்சு?ன்னு நீ இப்புடி குதிக்கிறவ?" என்று நீலாவதியும் அவரிடம் முகம் கோண,

 

"என்ன நடந்துச்சா?.. அந்தப்புள்ள இப்போ நாலு மாசம் முழுகாம இருக்கு அத்தாச்சி.. அந்தப் பாவத்தை புடுச்சி என் மருமகேன் தலைல கட்டப் பார்க்குறீங்களா?" எனவும்,

 

அதில் திகைத்து விழித்த நீலாவதி, "உறுதியா தெரியுமா?" என சந்தேகமாய் கேட்டார்.

 

"அட! நீங்க வேற அத்தாச்சி, அஞ்சு புள்ள பெத்தவளுக்கு தெரியாதா, பித்த வாந்தி எது? மத்த வாந்தி எது?ன்னு.. அடிச்சி சொல்லுறேன், அந்த புள்ள முழுகாமத்தான் இருக்கு.. நான் கண்டுப்புடுச்சி கேட்டப்போ, அது தான் அழுதுக்கிட்டே நாலு மாசம்னும் சொல்லுச்சு.. நீ வேணா என் கூட வந்து பாரேன் அத்தாச்சி" என்று அவரை வம்படியாய் மேகலாவின் அறைக்கு இழுத்து வந்து, மொந்தென்று தெரிந்த அவளின் வயிற்றைக்காட்டி உறுதிப்படுத்தி விட்டு மீண்டும் மருதுவின் அறைக்கே வந்தார்.

 

தன் அன்னையும் அச்செய்தியை உறுதிபடுத்தியதில் கன்னத்தில் அரை வாங்கிய உணர்வில் அமர்ந்திருந்த மருது, கதவு தட்டப்படும் சத்தத்தில் நீலாவதி சென்று திறக்கவும், உள்ளே வந்தவனை பார்த்து, "என்னடா?" என்று எரிந்து விழுந்தான்.

 

"அண்ணே! அந்தப்பய நாம எதிர்பார்த்த மாதிரியே நம்மூர்ல வந்து இறங்கிட்டாண்ணே.. சொல்லுங்க போட்டுறலாமா?" என்று மருதுவிடம் நற்பெயர் வாங்கும் எண்ணத்தில் அவன் கேட்க,

 

"வேணா.. வேணா.. அவன அப்படியே இங்கிட்டு கூட்டிட்டு வா" என்று சொன்னவன்,

 

"ம்மா! இங்கப்பாருங்க! இந்த விஷயத்தை அப்பா காதுல மட்டும் கொஞ்சம் போட்டு வைங்க, வேறெங்கேயும் இந்த விஷயம் கடுகளவு கூட கசியக்கூடாது.. புரிஞ்சுச்சா?.. அத்த இது உனக்குந்தான் கேட்டுச்சா?" என்றபடியே சென்று மனையில் அமர்ந்தான்.

 

மேகலா மருதுவின் அருகில் வந்து உட்கார்ந்த சமயம் ராமுவும் பதறியடித்து அவ்விடம் வந்து சேர்ந்தான்.

 

மேகலா குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள். ராமைப் பார்த்தவுடன் ஐயர் நீட்டிய தாலியை வாங்கி, கர்வத்துடன் மேகலாவின் கழுத்தில் கட்டுவதற்கு எத்தனித்தான் மருது.

 

"கெட்டிமேளம்! கெட்டிமேளம்!" என ஐயர் சொல்லியது தான் தாமதம் மேளதாள வாத்தியங்கள் முழங்க, சுற்றி அனைத்து கூட்டமும் அட்சதைப் போட தயாரானது.

 

வேகமாய் மணவறை நோக்கி ஓடி வந்த ராம், ஏதும் செய்ய இயலாதவனாய் அக்காட்சியை பார்த்தபடியே நின்றிருக்க, வேண்டுமென்றே தாலியை மேகலாவின் கழுத்தில் கட்டுவது போல் கொண்டு சென்ற மருது, பின் கட்டாமல் கையை கீழிறக்கி, எழுந்து ராமின் அருகில் சென்றான். பின் பதைப்பதைப்புடன் நின்றிருந்த ராமின் கையை அழுத்தமாக பற்றியவன், தன் கையிலிருந்த தாலியை அவன் கையில் கொடுத்து, அவனை மணவறையில் இழுத்து வந்து அமரச்செய்தான்.

 

ராம் அவனை வினோதமாய் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், "சம்பந்தி! என்ன இதெல்லாம்?" என்று போர்க்கொடி தூக்கிக் கொண்டு வந்தார் உக்கிரப்பாண்டி.

 

தன் மனையாளின் மூலம் உண்மை தெரிந்திருந்த வீரபாண்டியத்தேவர், "என் மகேன் செய்யுறது சரி தாமைய்யா.. நீரு கொஞ்சம் சும்மாயிரும்" என்றார்.

 

வீரப்பாண்டியரின் பதிலில் திகைத்துப்போய் நின்றிருந்த உக்கிரப்பாண்டித் தேவரின் அதிர்ச்சியை பயன்படுத்திக் கொண்ட ராம், மேகலாவின் கழுத்தில் தாலியைக் கட்டி மூன்று முடிச்சிட்டிருந்தான்.

 

நடந்து முடிந்த நிகழ்விலிருந்து வெளி வந்திருந்த மேகலாவின் அண்ணன்கள் மற்றும் தாய்மாமன்மார்கள் வீரப்பாண்டியரை விரோதியைப் போல் முறைத்து பார்த்து,

"என்ன நாட்டாமக்காரய்யா இதெல்லாம்?.. பெரிய மனுஷன் நடந்துக்கிற முறையாயிது?.. உங்க பையனுக்கு தான் எங்க பொண்ணுன்னு வாக்கு கொடுத்திட்டு இப்புடி வார்த்தைத் தவறிட்டீகளே? நியாயமா?" என்று வரிந்து கட்டிக்கொண்டு வர,

 

"ஏற்கனவே வேற ஒருத்தன் கிட்ட கெட்டுப்போயி வவுத்துல வாங்கிக்கிட்டு வந்தவளை எங்க புள்ளைக்கு கட்டிக்கொடுக்க எங்களுக்கென்ன கெரகமா?" என்று உதட்டைச் சுளித்தார் நீலாவதி.

 

"யாரப் பாத்து என்ன வார்த்தைமா சொல்றீங்க?.. பத்திரை மாத்து தங்கம்மா எங்க பொண்ணு.. பாத்து பேசுங்க.. இல்ல வெத்தலப்பட்டி பேருக்கேத்தாப்புல சிவந்து போயிரும்" என்று தன் மருமகளுக்கு ஏந்து பேசினார் அயனேஸ்வரியின் அண்ணன்.

 

"யோவ் நாங்க சொல்லலையா.. அவ நாடி தான் அப்படி சொல்லுது.. எங்க அத்தையோட நாடி வைத்தியம் என்னைக்கும் தப்பாதுயா.. அதுவுமில்லாம இவ காலேஜ்ல படிக்கும் போதே, இவனை விரும்பிருக்கா.. அதான் எல்லாம் கூட்டிக்கழிச்சி பாத்து கெடுத்தவனையே அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டேன்.. கெட்டுப்போனவளை கட்டி வாழ்க்கைக் கொடுக்க என்னைப் பாத்தா என்ன பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா?.. வெத்தலப்பட்டிக்காரேன் ஒன்னும் இளிச்சவாயனில்லைன்னு நிரூபிக்கத்தான், நானே அவனை மேடைக்கு கூட்டியாந்து தாலிகட்ட வச்சேன்.. வெத்தலப்பட்டிக்காரனா? கொக்கா?" என மருது உண்மையை உடைத்து, தன் மீசையை நீவி நீளம் பார்த்துக் கொண்டான்.

 

"அவக சொல்றது உண்மையா?.. உனக்கு காலேசுலயே இந்தப்பய கூட பழக்கமா?" என மனையில் அமர்ந்திருந்த மேகலாவின் தோளை இறுகப்பற்றிய படியே அயனேஸ்வரி கேட்க, ஆமென சொல்வது போல் அவள் மௌனத்தையே கடைபிடித்து கொண்டிருந்தாள்.

 

நம்பிய மகள் ஊரின் முன்னால் தன் குடும்பத்தை தலை குனிய வைத்த கோபத்தில், "சந்தி சிரிக்க வச்சிட்டியேடி பாவி.. நீயெல்லாம் உருப்படுவியா?.. உன் புத்தி ஏண்டி இப்படி ஊர் மேய போச்சு?" என்றவளை மேலே தூக்கி நிறுத்தி, மேடையில் வைத்தே அவளின் கன்னத்தில் பளார் பளாரென அறைந்தார் அயனேஸ்வரி.

 

அவர்களிருவரின் குறுக்கே புகுந்து, மேகலாவை தனக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்திய ராம், "அவ மேல எந்த தப்பும் இல்ல.. எல்லாத்துக்கும் காரணம் நான் தான்" என்று தன் நெஞ்சை நிமிர்த்தி கூறினான்.

 

அவனையும் கோபத்தில் அறைந்து தள்ளிய அயனேஸ்வரி, மேகலா வந்து தன் கையைப் பிடித்து தடுக்கவும், அவளையும் கீழே பிடித்து தள்ளிவிட்டார்.

 

நாற்பத்தியெட்டு வயதானாலும் ஐந்தரையடி உயரத்தில் கனத்த உடலுடன் இருந்த அயனேஸ்வரியை பிடித்து நிறுத்த முடியாமல், சுற்றியிருந்த பெண்கள் அனைவரும் திணறித்தான் போயினர்.

 

"என் குடும்பத்த இப்படி ஊர் சிரிக்க வச்சிட்டியேடா.. நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டடா.. வயிறெரிஞ்சு சொல்றேன் உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா" என அவன் மேல் மண்ணை வாரி தூற்றினார் அயனேஸ்வரி.

 

அதில் மனதளவில் அடிபட்டு போன மேகலா, "அம்மா! நாங்க ரெண்டு பேரும் காதலிச்சதென்னவோ உண்மை தான்.. ஆனா, நான் ஒன்னும் கர்ப்பமா இல்ல.. இவங்க சொல்றதெல்லாம் பொய்.. நான் இந்த கல்யாணம் முடியுற முன்னாடி தற்கொலை செஞ்சுக்கிறதுக்காக ஒளிச்சு வச்சிருந்த விஷப்பாட்டில பாத்துட்டு, இந்தம்மா கேட்டப்போ தான், நான் இவரை லவ் பண்றதையும், இவர் இல்லாம வாழ முடியாதுங்கிறதையும் சொன்னேன்.. உடனே இவங்க தான் ஐடியா பண்ணி கல்யாணத்தை நிறுத்திட்டாங்க.. அவர் மேல எந்த தப்பும் கிடையாது.. தப்பெல்லாம் என் மேல தான், என்னை அடி, என்னை திட்டு என் மேல மண்ணை வாரிப்போடு.. அவரை எதுவும் சொல்லாதம்மா" என்று அவரின் அருகில் வந்து, அவரின் இரு கைகளையும் எடுத்து, தன் கன்னத்தில் மாறி மாறி அடித்துக்கொண்டாள்.

 

அதிலும் அயனேஸ்வரியின் கோபம் மட்டுப்படவில்லை. அவளை போடி என கீழே பிடித்து தள்ளிவிட்டார்.

 

இதற்கிடையில், "அத்த! நீ பொய் சொன்னியா?" என உச்சக்கட்ட அதிர்ச்சியில் தன் அத்தையைப் பார்த்து உறுமினான் மருதுபாண்டியன்.

 

அவனது உறுமலை இம்மியும் மதியாத பொம்மி, "ஆமா, நான் பொய் தான் சொன்னேன்.. அதுக்கு இப்ப என்னங்குற?.. அந்தப்புள்ள கையில விஷத்த தூக்கிக்கிட்டு நிக்குதேன்னு மட்டும் நான் பொய் சொல்லலடா மருமகனே, ராமுக்காகவும் தான் இப்புடி சொன்னேன்.. ராமும் என் மகேனும் ஒரே காலேசுல தான் படிக்கிறாய்ங்க.. ராம் என் புள்ள மாதிரி.. அதனால தான் அவனுக்கேந்து கல்யாணத்த நிப்பாட்டினேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ போ?" என மருதுவிடம் அலட்சியமாய் பேசியவர்,

 

"சத்தியமா சொல்றேன்மா.. என் பையனை, மருமகனை விடவும் ராம் ரொம்ப நல்லவன்.. உங்க பொண்ணுக்கு ரொம்ப பொருத்தமானவன்.. நீங்க வேணா பாருங்க, அவங்க நல்லாயிருப்பாங்க" என்று ராமிற்கு ஆதரவாய் அயனேஸ்வரியிடமும் பேசினார்.

 

பொம்மி நன்னடத்தை சான்றிதழ் கொடுத்தும், ராமை வெட்டவா? குத்தவா? என பார்த்துக் கொண்டிருந்த உக்கிரப்பாண்டித் தேவர், "இந்தா ஈஸூ! எல்லாரையும் கிளம்பச் சொல்லு!.. வீட்டுக்கு போனதுக்கப்றம் எல்லாருக்கும் வாசல்லயே குளிக்கவும் ஏற்பாடு பண்ணு.. ஏன்னு பாக்குறியா?.. வீட்டுல எழவு விழுந்தா தல மொழுகணும்ல அதான்.. இத்தோட நம்ம பொண்ணு செத்து போய் பத்து நிமிஷம் ஆச்சு.. கிளம்பு!" என்று தன் தோளிலிருந்த துண்டை எடுத்து உதறி, புறப்பட்டுவிட, உக்கிரப்பாண்டித் தேவரின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து, மொத்தக்கூட்டமும் அவரின் பின்னேயே ஊரைப்பார்த்து கிளம்பி விட்டது.

 

தான் ஏமாந்து போய்விட்ட அவமானத்தில் மருதுவும் அங்கிருந்த குத்துவிளக்குகளை தள்ளிவிட்டு விட்டு கள்ளு விற்கும் இடம் தேடி சென்றுவிட்டான்.

 

பொம்மியிடம் நன்றி தெரிவித்துவிட்டு, மேகலாவுடன் அவரின் காலில் விழுந்து வணங்கிய ராம், அதன்பின் அவளுடன் காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டுவிட்டான்.

 

பேருந்தில் செல்லும் வழியில், முதன் முறையாக வாயை திறந்த மேகலா, "நீங்க மதுரக்காரர் இல்லையா?" என்று கேட்க,

 

"இல்ல மதுரக்காரன் தான்.. வேலை எதுவும் சரியா அமையாததால, எனக்கு சின்ன வயசிலயே பொழப்பு தேடி அம்மாவும் அப்பாவும் இங்க காஞ்சிபுரம் சைடு வந்துட்டாங்க… நல்லவேளை மேகா உன்னை பார்க்கணும்கிற ஆசையில முன்னாடியே நான் உங்க ஊருக்கு திருவிழா அன்னைக்கு வந்தேன்.. இல்லைன்னா அந்த மருதுவ ஏமாத்தியிருக்க முடியாது" என்றவன் சொன்னதும்,

 

"என்னது மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு நீங்களும் வந்தீங்களா?!" என்று வார்த்தையில் ஆச்சரியத்தை கூட்டிக் காட்டினாள் மேகலா.

 

ஆமாம் என்றவன், அன்று மருது அவளை தனியாக கூட்டி வந்து மிரட்டியதையும் தான் பார்த்ததாகக் கூற, அவள் அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கியமர்ந்து, "உங்க அப்பா அம்மாவாவது நம்மள ஏத்துக்குவாங்களாங்க?" என்று, பிணிக்குண்டானவள் போல் நலிந்த குரலில் கேட்டாள்.

 

"கண்டிப்பா ஏத்துக்குவாங்க" என ராம் அடித்துச்சொல்லவும்,

 

"எப்படி?" என்று உற்சாகமானாள் அவள்.

 

"எங்க அப்பா அம்மாவுக்கு கல்யாணமாகி குழந்தையே இல்லாம பதினஞ்சு வருஷம் கழிச்சி பிறந்த பையன் தான் நானு.. அதுனால என் விருப்பத்துக்கு மாறா அவங்க எதுவும் செய்ய மாட்டாங்க மேகா.. நீ பயப்படாம வா" என்று அவளைத் தேற்றி தன் வீட்டிற்கு அழைத்துச்சென்றான்.

 

அவன் சொன்னது போலவே அவன் பெற்றோரும் மேகலாவை வாழையிலை போட்டு வரவேற்றனர். ராமின் தங்கை விஜிதாவும் அவளுடன் அண்ணி அண்ணியென்று நன்றாக ஒட்டிக்கொண்டாள்.

 

செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானதும், ஒருவாரம் கழித்து தன் மனைவியுடன் சென்று மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட ராமிற்கு, கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் தெருத்தெருவாக அலைந்தும் வேலை மட்டும் கிடைக்கவேயில்லை.

 

இறுதியில் தன் தந்தையுடன் இணைந்து மந்திர தந்திரங்களை கற்றுக்கொண்டவன் தங்கள் மேஜிக் ஷோவை பெரிய அளவில் விரிவுபடுத்தினான்.

 

அதற்கு கொஞ்சம் பலனும் இருந்தது. ஷோவானது ஆகா ஓஹோவென்று சொல்லுமளவிற்கு ஓடவில்லையானாலும் தினமும் அவர்களது வயிற்றை காயப்போட விடாத அளவிற்கு ஓடியது.

 

தொழிலில் என்ன தான் கஷ்ட நஷ்டங்கள்  ஏற்பட்டாலும், மேகலாவை மட்டும் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டான் ராம்.

இப்படியே நாட்கள் இனிமையாக செல்லும் வேளையில் தான் ஒருநாள் லேசாக தொடங்கிய வாய்த்தகராறில், "படிக்கும் போதே ஒழுங்கா படிப்பில் கவனத்தை செலுத்தியிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா?.. நல்ல வேலைக்கும் போயிருக்கலாம்ல?.. இப்போ பாதிக்கப்பட்டு நிக்கிறதாரு நீதானே?.. இந்த இடத்து மேல வாங்குன கடனோட வட்டி வேற முதலை தாண்டிருச்சி.. வெளிநாட்டுக்கு போய் பணம் அனுப்புறேன்னு சொன்னவனும் ஒரேடியா வனவாசம் போய்ட்டான்.. இப்போ என்ன தான்டா நீ பண்ணப்போற?" என்று தன் தந்தை கேட்கவும்,

 

தன் முன்னிருந்த சாப்பாட்டுத் தட்டை தள்ளிவிட்டு எழுந்த ராம், "என்ன நான் படிக்கல?.. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியாதுப்பா.. என்னைய எப்பவும் யாரோடையும் கம்பேர் பண்ணாதீங்கன்னு முன்னாடியே சொல்லிருக்கேன்ல?.. ஏன் எப்போ பார்த்தாலும் அவனோடயே என்னைய கம்பேர் பண்றீங்க?.. அவனுக்கு வாய்ப்பு வந்தது ஃபாரின் போய்ட்டான்.. அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்?"

 

"இத்தனைக்கும் நம்ம குடும்ப கஷ்டத்தை சொல்லித்தான் அவனை நான் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வச்சதே.. ஆனா அவன் பணம் அனுப்பாம தானே எல்லாத்தையும் அனுபவிச்சிக்கிட்டு இருக்கான்.. நல்லா கேட்டுக்கோங்க.. நான் ஒன்னும் அவனை நம்பியில்ல.. அவன் பணம் அனுப்பலைன்னா என்ன?,  எனக்கும் கைகால் இருக்கு, அவ்ளோ சீக்கிரம் இந்த இடத்தை விட்டுக்கொடுத்திட மாட்டேன்.. நீங்க பயப்படத் தேவையில்ல" என்று வீரப்பாய் பேசிவிட்டு, தன்னறைக்கு வந்து நகத்தை கடித்த படியே தீவிர யோசனையில் இறங்கி விட்டான்.

 

கதவை தாழிட்டு அறைக்குள் வந்த மேகலா தானும் அவனை கோபப்படுத்த விரும்பாமல் கட்டிலில் சாய்ந்தமர்ந்து, அவனை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு மெதுவாக அவன் தலைமுடியை கோதிவிட்டாள். அச்சுகத்தில் மயங்கியவனும் தன்னிரு கைகளால் அவளிடையைக் கட்டிக்கொண்டான்.

 

அவன் மயக்கத்தை அடையாளம் கண்டுகொண்ட மேகலா மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

 

"அப்பா! இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத்தான் கோபம் வருது.. மாமாக்கிட்ட ஏன் அப்படி கோபப்பட்டு பேசுனீங்க?" என்றவனை பேசத்தூண்டினாள். அவன் அதற்கு பதில் உரைக்கவில்லை.

 

"ஆமா? யார் ஃபாரின் போனாங்க?" என்று நறுவிசாக வினவிப் பார்த்தாள்.

 

நீண்ட இடைவெளிக்குப் பின் "என் அண்ணன்" என்றான் ராம்.

 

"உங்கள் அண்ணனா?" என்று பிரமித்து கேட்டவள்,

 

"ஆனா, நீங்க இவ்வளவு நாளா உங்களுக்கு ஒரு அண்ணன் இருக்கிறதா சொல்லவே இல்லையே?" என்று குழம்பிப்போய் கேட்டாள்.

 

அக்கேள்வியில் கோபமடைந்த ராம், "அதுக்கான அவசியம் வரல.. சொல்லல" என்றான்.

 

தன் மனம் அவன் பதிலில் சமாதானமாகவில்லை எனினும், அவன் கோப முகத்தில் பயந்து போனவள், "ஏதாவது தப்பா கேட்டிருந்தா மன்னிச்சுருங்க" என்று சொல்ல,

 

தன்  கோபத்தை கட்டுப்படுத்தி அவளுக்காக இறங்கி வந்தவன், "ம்ம் ஆமா எனக்கொரு அண்ணன் இருக்கான்.. அவனும் எம்எஸ்சி கெமிஸ்ட்ரி என் கூடத்தான் படிச்சான்.. ரொம்ப அறிவாளி அவன்.. கிளாஸ்ல பர்ஸ்ட் ஸ்டூடெண்டும் கூட.. அதான் நம்ம கல்லூரி நிர்வாகமே அவன மேற்படிப்புக்காக ஃபாரினுக்கு அனுப்பி வச்சிருச்சி.. சோ அதை வச்சு தான் என்னப் பெத்தவங்க எப்போப் பார்த்தாலும், அவனோட என்னை கம்பேர் பண்ணியே திட்டுறாங்க" என்று தன் போக்கில் பேசிக்கொண்டே முகம் கசங்கினான்.

 

"எல்லாம் சரி தான்.. ஆனா நீங்க அன்னைக்கு உங்க அப்பா அம்மாவுக்கு நீங்க பதினஞ்சு வருசம் கழிச்சு பிறந்த பையன்னு சொன்னீங்களே?.. இப்போ உங்களுக்கு அண்ணன் ஒருத்தர் வேற இருக்கிறதா சொல்றீங்க?.. ஒரே குழப்பமா இருக்குங்க" என்றவள் தன் தலையை சொறிய,

 

அவன் அவள் முகம் பார்த்துச்சொன்னான்,

"நானும் என் அண்ணனும் ட்வின்ஸ்.." என்று.

 

அவள் தன் கேள்வியை நிறுத்தவில்லை.

 

ஆர்வமாய், "அவர் பெயர் என்ன?"வென்று கேட்டாள்.

 

அவன் யோசியாமல் சொன்னான் ராம் என்று.

 

"ராமா?. உங்கப்பெயரும் ராம் தானே?" இம்முறை அவள் குரல் வியப்புடன் ஒலித்தது.

 

அவன் குரலும் திடமாக வெளிவந்தது.

"அவன் ராஜாராம், நான் ரகுராம்" என்று.

 

வேறு கேள்விகள் கேட்கத் தோன்றவில்லை மேகலாவிற்கு. அவனையே இமைக்கொட்டாமல் பார்த்திருந்தாள்.

 

"வேற ஏதாவது சந்தேகம் இருக்கா உனக்கு?" என்று வினவியவன்,

 

அவள் இல்லை என்று தலையாட்டவும், சிரித்துக் கொண்டே, "எனக்கிருக்கிறதே…!!" என்றபடியே, ஏதோ சொல்லி அவள் காதை கடிக்க, கன்னம் சிவந்துப்போனவளின் கைகள் முகத்தை அணைத்தது. பதிலுக்கு அவனின் கைகள் விளக்கை அணைத்தது.

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்...

 


ReplyQuoteShivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
31/05/2020 2:58 pm  

கதை பற்றிய உங்களது கருத்துக்களை தளத்தில் பதிவிட்டு செல்லுங்கள் ப்ரெண்ட்ஸ். அதுவே என் எழுத்துக்களை திருத்தவும் தீட்டவும் உதவும்❣️


ReplyQuote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
01/06/2020 3:11 am  

அத்தியாயம் 20

 

சில்லுன்னு ஒரு காதல்

வருடம் 1992

இடம் : ரஷ்யா

இளநங்கையின் கார்குழலை போன்ற நீண்ட அடர்த்தியானதொரு இரவில், ரஷ்யாவின் வடமேற்கு திசையில் உள்ள நேவா நதிக்கரையில் உட்கார்ந்து, தாயின் கருவறையிலிருந்து முட்டி மோதிக்கொண்டு வெளிவரும் சிசுவை போல், கற்பாறைகளில் இருந்து முட்டி மோதிக்கொண்டு வரும் நதியலைகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தான் ராம்.

 

இருளை விடவும் அந்தத்தனிமை ரொம்பவே பயமுறுத்தியது அவனை. நங்கையவளின் பார்வை ஸ்பரிசத்திற்கு ஆளாகாதவனாய் இருந்திருந்தால் கண்டிப்பாய் அந்த அந்தகாரத்தின் இனிமையை ரசித்து ஆற்றுப்படை யொன்றும் எழுதியிருப்பான். ஆனால் இப்போதோ தன்னை ஆற்றுப்படுத்துவதற்கே ஆளின்றி தவித்தான்.

 

அவன் தவிப்பை அறியாத, வானிலிருந்து இறங்கி வந்து, ராமின் அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்து, காதல்கதை பேசவிரும்பிய நிலவுப்பெண்ணோ, அடிக்கடி தழுவிய காற்றில் நழுவிய முடிகளை அவன் வலக்கையால் இடப்புறமிருந்து அள்ளி வலப்புறமாய் சேர்ப்பித்த அழகைக் கண்டு, அவனுக்கு நாம் பொருத்தமோ இல்லையோ என தன்னையே கேள்வி கேட்டுக்கொண்டு, அடிக்கடி முகிலெனும் திரையை இழுத்து இழுத்து விட்டு, அவன் தன்னை பெண் பார்க்க வந்திருப்பதைப் போல் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அழகன் ஒருவன் கரையில் கால்கட்டி உட்கார்ந்திருக்கிறான் என்ற தன் தோழி ஒருத்தியின் பேச்சை நம்பி, கயலானவளும் நதியில் அங்கிங்குத் துள்ளித்துள்ளி, அவனைப் பார்க்கும் ஆசையில் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தாள்.

 

அலையானவளும் சும்மாயிருக்கவில்லை. மற்றவர்களின் வயிற்றெரிச்சல்களை கட்டிக்கொள்ளும் பொருட்டு, ஒருபடி மேலேப் போய் சரண் புகுந்தேன் என அவனின் பாதங்களை தொட்டே விட்டாள்.

 

அதில் கோபமுற்று அலைமேல் விழுந்த நிலவு மகளோ அவன் காலைத்தொட்ட ஒவ்வொருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பிளவுபட்டுக் கொண்டிருந்தாள்.

 

அக்கரையிலிருந்த தென்றலானவளும் கப்பலேறி வந்து தான் பெண்ணென்பதையும் மறந்து சில்மிஷத்தில் ஈடுபட்டாள். அவன் ஆடை பிடித்திழுத்து உடல் உரசினாள்.

 

உடம்பில் வளையல்கள் மாட்டிய திருமண நிச்சயமானவளும், வெட்கமேயன்றி நிழலாய் அவன்மேல் விழுந்து அவனை ஆகர்சித்து கொண்டிருந்தாள்.

 

மேலும் அவள் தனக்கு போட்டியாய் நிற்பவள்களின் முயற்சியை அறிந்தாளோ என்னவோ அவனை தன்புறம் திருப்ப, கிளுக்கிச் சிரித்து முத்துக்களைச் சிதறவிட்டாள்.

 

அதன் பலனாய் அவனருகில் விழுந்ததொரு இளநீர் கூடு. அதைக் கையிலெடுத்து பார்த்தான். தன் காதல் கடிதத்தை அவன் ஏற்றுக்கொண்டது போல் தன் உடலையே அங்குமிங்கும் அசைத்து குத்தாட்டம் போட்டாள் அந்த இளவயசுக்காரி.

 

கையிலெடுத்து பார்த்தவனின் மனமோ இலக்கியத்தில் எங்கோ ஓரிடத்தில் தான் படித்த நிகழ்வை நோக்கிச் சென்றது. அதில் காதலியானவள் தன் காதலனுக்கு இளநீர் கூட்டின் வழியாக நீரில் தூதனுப்பினாள் போன்றதொரு வரி இடம்பெற்றிருக்கும்.

 

அதை இப்போது நினைத்துப் பார்த்து அப்படியே நாமும் செய்யலாமா என ஒருநொடி யோசித்தான். பின்பு தான் தாங்கள் காதலர்களே கிடையாதே என்ற உண்மையை உணர்ந்தான்.

 

"அவள் எனக்கு காதலி தான், அதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.. ஆனால் நான் அவளுக்கு காதலனா?.. சத்தியமாக இல்லை.. முதலில் என் முகம் கூட அவளுக்கு ஞாபகம் இருக்காது.. ரகுவின் பேச்சை கேட்டுக்கொண்டு நான் அவளை பிரிந்து இங்கு வந்திருக்கக்கூடாது.. அவளுடைய அப்பா எப்பேர்ப்பட்ட வீரசூரனாயிருந்தால் என்ன?.. அவளின் ஒரு சம்மதம் போதுமே, அனைத்தையும் நான் தூள் தூளாக்க.. ஆனால், குடும்பம் என்ற ஒன்றை முன்னிறுத்தி என்னை கரைத்துவிட்டானே அந்தப்பாவி..

உன் காதலியை இனி நீ நினைத்தே பார்க்கக்கூடாதெனவும் சத்தியம் வாங்கி விட்டானே!" என தன் உள்ளக்குமுறல்களை எல்லாம், அருகிலிருந்த தன் டைரியிலும் குறித்து வைத்துக் கொண்டிருந்தான்.

 

சுற்றி அத்தனை மங்கைகளும் அவன் கடைவிழி பார்வைக்காக தவம் கிடக்க, அவனோ கண்மூடி தியானித்தான்.

 

அன்று தன் கல்லூரியில் பிரியா விடை கொடுக்கும் நாள், அரக்கு நிறப் பட்டுக்கட்டி தன் தோழியுடன் உள்ளே நுழைந்தவளை, தான் போட்டோயெடுத்து தன் மனப்பெட்டகத்தில் பெவிகால் போட்டு ஒட்டி வைத்ததை, உயிர்ப்பசை தீரும் வரை பார்ப்பேன் என சபதம் செய்தவன் போல், அவளின் உருவத்தை கண்மூடி பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அந்நேரம் 'டிங்.. டிங்.. டிங்..' என அழைத்தது மணியோசை.

 

"இதோ வந்துவிட்டேன்!" என டைரியை நெஞ்சில் அழுத்தி பிடித்துக் கொண்டே பின்னங்கால்கள் பிடரியில் பட, சயின்ஸ் அகாடெமியை நோக்கி தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தான் அவன்.

 

அவன் அவ்விடம் விட்டு அகன்றதும், "இந்த ஆண்களுக்கு எப்போதும் கிட்டியவளை விட எட்டியவளை தான் ரொம்ப பிடிக்கும் போல" என  தங்களுக்குள்ளேயே சலசலத்துக்கொண்டு, பின் தங்கள் வேலைகளில் கவனத்தை செலுத்தினர் அவ்வியற்கையெனும் இளைய கன்னிகள்.

 

ஓடியவன் தனக்கு நேரேயிருந்த கட்டிடத்தை அடைந்ததும் மூச்சுவாங்கி நின்றான். வாட்ச்மேனிடம் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் வைத்திருந்த ஐடியை எடுத்து காண்பித்து விட்டு உள்ளே நுழைந்தான்.

 

நடந்து கொண்டிருக்கும் போதே, தானும் அந்த ஐடியைப் பார்த்துக்கொண்டான். அதில் செயின்ட் பீட்டேர்ஸ்பர்க் அகாடெமி ஆப் சயின்ஸ் எனும் எழுத்துகள் மட்டும் பெரிதாய் பட்டையாய் இடம்பெற்றிருக்க, அதற்கு கீழே ராஜாராம், ரிசர்ச் ஸ்காலர், கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட், ஓ பாசிட்டிவ் பிளட் குரூப் போன்ற தகவல்களும் வரிசை வரிசையாய் அச்சிடப்பட்டிருந்தது.

 

அதில் வலப்பக்கம் இருந்த தன் புகைப்படத்தை மட்டும் கூடுதலாய் ஒருமுறை பார்த்துவிட்டு, பத்து மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்தின் லிப்ட்டில் ஏறி மூன்றாம் மாடிக்குச் சென்றான்.

 

சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டோமா? என தனது கையை திருப்பியும் வாட்சை ஒருமுறை பார்த்து கொண்டான்.

 

அங்கிருந்த பிளாக்கில் இருந்த ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கேபினுக்குள் தலையைக் கொடுத்து, ஒவ்வொரு வேலையை பார்த்துக் கொண்டிருக்க, இவன் தன் வெள்ளை நிறக்கோர்ட்டை அணிந்த படியே தன் கேபினுக்கு சென்றான்.

 

கிராபைட்டை ஏற்கனவே ஐட்டிவோ ப்ளேட்டில் மெல்லிய படலமாக படியச் செய்திருந்தவன், அதனில் ஹைட்ரஜனை சேர்க்கும் செய்முறை ஒன்றையும் செய்துவிட்டு, தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்த, நகச்சுத்தி வந்த நோயாளிக்கு, சுகர் டெஸ்டிலிருந்து யூரின் டெஸ்ட் வரை அனைத்தையும் எடுப்பதை போல அந்த ப்ளேட்டையும் யூவி, ஐஆர், ராமன் என அனைத்துச் சோதனைகளுக்கும் உட்படுத்தினான்.

 

பின் எதையெதையோ குறிப்பெடுத்துக் கொண்டு, தனது வழிகாட்டி ஆசிரியரின் அறைக்கதவை தட்டினான்.

 

"எஸ் கமின்" என்று உள்ளிருந்து வந்தது கம்பீர குரல்.

 

கையில் ஐட்டிவோ ப்ளேட் மற்றும் கோப்புடன் உள்ளே நுழைந்தவன், அங்கே ஏற்கனவே நின்றிருந்த தன்னை போன்ற சக மாணவனாகிய கிருஷ்ணாவை பார்த்து, சிநேகமாய் புன்னகைத்தான். பின் பதிலுக்கு அவன் புன்னகையை எதிர்பாராதவனாய் நேராய் சேவியர் கிளிண்டனிடம் தனது ஆராய்ச்சிக் குறிப்பையும் ப்ளேட்டையும் காண்பித்தான்.

 

அவரும் அனைத்தையும் பார்த்து விட்டு, "அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு செல்லலாம் ராஜ்!" என சொல்லிவிட, அதில் திருப்தியானவன், திரும்பி செல்ல எத்தனித்து, பின் ஒருகணம் தயங்கி நின்று, "சார், எப்போ சார் என் சாலரி என் அக்கவுண்டில் ஏறும்?" என ஆங்கிலத்தில் கேட்டான்.

 

தன் கண்ணாடியை சரி செய்து கிருஷ்ணாவின் கோப்பிலிருந்து விழிகளை விலக்கியவர்,  "சீக்கிரமே!" என்று ஒற்றை வார்த்தையை உதிர்த்தார்.

 

கடந்த இரண்டு வருடமாக தன் ஆராய்ச்சிக் குறிப்பைக் காட்டவரும் போதெல்லாம் இறுதியில் அவன் கேட்கும் அதே கேள்விக்கு அவர் கூறும் அதே பதில். சலிப்புடன் வெளியே செல்ல கதவில் கைவைத்தான். அவனை தடுத்து நிறுத்தியது அவரது குரல்.

 

என்னவென திரும்பியவனிடம், "நாளைக்கு உங்க நாட்டிலிருந்து நம்ம இன்ஸ்டிட்டியூட்டில் எம்பில் பயில ஒரு பெண் வருகிறாள்.. அவளை நீ தான் கைட் பண்ணனும்.. மற்றவர்களுக்கெல்லாம் உன்னை விடவும் வேலை அதிகம் என்பதால் இவ்வேலையை இப்போதைக்கு உன்னிடம் ஒப்படைக்கிறேன்.. அப்புறம் அவள் வேறு யாருமில்லை.. உன் பழைய கல்லூரியின் முதல்வர் மிஸ்டர் ராம கிருஷ்ணனின் மகள் தான் அவள்.. இதில் தான் அவளைப் பற்றிய தகவல்கள் எல்லாம் உள்ளது.. நாளை இங்கே நம் க்ளேர்வாடேர் விமான நிலையத்திற்கு அவள் வருகிறாளாம். அவளை அழைத்து வந்து நீ தங்கியிருக்கும் நம் இன்ஸ்டிட்டியூட்டின் விடுதியில் ஒரு அறையில் தங்க வைத்து விடு!" என்று சொல்லி கோப்பை அவனிடம் திணிக்க, அதனை ஒரு அலுப்புடன் வாங்கிக்கொண்டு, வெளியே சென்றான் ராஜாராம்.

 

வேலை நிறைவு பெற்று அடுத்த ஷிப்ட்டிற்கான மணி அடிக்கப்பட, ராஜாராமும் தன் கோர்ட்டை கழற்றி வைத்து விட்டு, கீழே செல்ல லிப்டில் ஏறினான்.

 

ஓடி வந்து அவனுடன் லிப்டில் சேர்ந்துக்கொண்ட கிருஷ்ணா, "என்ன ராஜ்? நாளைக்கு ஒரு பொண்ணு வர்றாலாமே?!.. நம்ம கிளிண்டன் கூட அவளை உனக்கு தெரியும்னு சொன்னாரு, பார்க்க எப்படியிருப்பாடா அவ?. ஏதாவது தேறுமா? தேறாதா?.. ஏன் கேட்குறேனா நம்ம ஒன்ன எக்ஸ்பெக்ட் பண்ணி, நாளைக்கு அது வேற ஒன்னா வந்து நின்னுடுச்சின்னா, நாம ஏமாந்து போயிட கூடாது பாரு.. அதான் இப்போவே எதுனாலும் மனச தேத்தி வச்சிக்கலாம்னு கேட்குறேன்" எனவும், அவனை அற்பமாய் பார்த்த ராஜாராம், லிப்ட் கீழ் தளத்தை அடையவும்,

 

"சீனியர் என்னைவிட ரெண்டு வயசு மூத்தவரா போய்ட்டீங்க நீங்க.. இல்ல நடக்கிறதே வேற.. நானே எப்படிடா அவக்கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு நெனச்சிக்கிட்டிருக்கேன்.. நீங்க வேற" என்றபடியே வேகமாய் லிப்ட்டில் இருந்து வெளியேறினான்.

 

"ஏன்டா படு கேவலமா இருப்பாளா அவ?"

 

"சீனியர் இன்னைக்கு உங்களுக்கு நேரம் சரியில்லன்னு நெனக்கிறேன்.. பேசாம வாங்க"

 

"டேய் ராஜ்!.. என்னடா ஆச்சு?.. ஒன்னுமே சொல்லாம அப்படி இப்டின்னு குதிச்சா எப்புடி? என்னன்னு சொல்லுடா?"

 

"ப்ச் என்னத்த சொல்றது?.. இங்க வந்து ரெண்டு வருஷமாச்சு.. பிஹெச்டி ப்ராஜெக்ட்டும் முடிச்சுட்டேன்.. இன்னும் எனக்கு இங்க வேலை பாத்ததுக்கான சம்பளம் போடல.. எங்க வீட்டுலயும் யாருக்கிட்டயும் பேச முடில.. போன் போட்டாலும் போக மாட்டிக்குது.. மனசுல என்னென்னவோ கோட்டைக்கட்டி, என்னை இங்க அனுப்பி வச்சுச்சு என் குடும்பம்.. ஆனா, நானே இங்க வந்த நாள் முதலா சிறைக்கைதி மாதிரி இந்த ஆராய்ச்சிக்கூட விடுதிக்குள்ளயே அடைஞ்சு கிடக்கேன்"

 

"இங்க எனக்கு சாப்பாடு தங்குமிடத்துக்கு பிரச்சனை இல்லைன்னாலும் வெளியே எங்கேயும் போக முடியாது.. இங்கிருந்து இருபதடி தூரத்திலிருக்க என் விடுதிக்கு மட்டும் தான் போக முடியும். ஏன்னா என்கிட்ட காசு கிடையாது.. என்னக் கொடுமை பாத்தீங்களா?.. என் காலேஜ்ல இருந்து ஏற்கனவே இங்க படிக்க வந்தவங்களும் பெரிய இடத்து பிள்ளைங்கங்கிறதால என்கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்குறாங்க."

 

"பிஹெச்டி ப்ராஜெக்ட் எல்லாம் முடிச்சும் இந்த சேவியர் கிளிண்டனும் என் நேரத்துக்கு கையெழுத்து போட மாட்டேங்குறாரு.. போட்டால் நானும் எல்லாம் முடிஞ்சதுன்னு ப்ளைட்ல என் ஊரைப் பாத்து கிளம்பிடுவேன்.. அங்கேயாவது இந்த சர்ட்டிபிகேட்ஸை வச்சு வேலை தேடி பிழைச்சுக்குவேன்.. ஆனா எதுக்கும் வழியில்லாம இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதாயிருக்கு.. இந்த கிளிண்டனும் மேல மேல வேலையா கொடுத்து கொல்றாரு.. எனக்கிருக்க வொர்க் டென்ஷனுக்கு ஒரு நாள் இந்த நேவா நதியில குதிச்சு சூசைட் பண்ணிக்குவேனோன்னு எனக்கே பயமா இருக்கு சீனியர்."

 

"இப்போ இது பத்தாதுன்னு புது பிரச்சனை வேற ப்ளைட் ஏறி வருது.. எங்க காலேஜ் ப்ரின்சிபால் பொண்ணு சரியாவே படிக்காது.. லூசு மாதிரி அங்க இங்கன்னு சுத்திக்கிட்டே திரியும்.. அவளுக்கெப்படி இங்க படிக்க சான்ஸ் கிடைச்சதுன்னு தெரியல?" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

 

"டேய்! டேய்! என்ன சொன்ன?.. சரியாப் படிக்க மாட்டாளா?.. ஹேய்! புரிஞ்சு போச்சுடா!.. புரிஞ்சு போச்சு!" என்று அவன் தோளை திருப்பி சுற்றினான் கிருஷ்ணா.

 

"என்ன புரிஞ்சுப்போச்சு?" என்று அசுரத்தையாய் வினவினான் ராஜாராம்.

 

"உங்க ப்ரின்சிக்கு உன் மேல ஒரு கண்ணுடா"

 

"சீனியர்..."  

 

"ஹேய் ச்சீ ச்சீ தப்பா சொல்லலைடா.. அவருக்கு உன்னை அவரோட மாப்பிள்ளை ஆக்கணும்ன்னு ஒரு எண்ணம்.. அதான் உன்னை வளைச்சுப்போட அவரு பொண்ணை இங்க அனுப்பி வைக்கிறாருடா" என்று கொண்டாட்டமாய் சொன்னான் கிருஷ்ணா.

 

அதில் கோபமாய் அவனை கடந்து சென்றான் ராஜாராம்.

 

ஓடிவந்து அவனுடன் நடந்தவாறே, "ப்ச் நீயே யோசிச்சு பாருடா.. எப்பவும் இந்த இன்ஸ்டிட்யூட்க்கு என்னை மாதிரி எம்பில் முடிச்சவங்களைத்தான் தமிழ்நாட்டிலிருந்து அனுப்புவாங்க.. ஆனா நீ எம்எஸ்சி முடிச்ச உடனேயே இங்க வந்திருக்கேனா யோசிச்சு பாரு.. உன் ப்ரின்சிபால் இன்ப்ளூயன்ஸ்  இல்லாம இது சாத்தியமே இல்ல.. புரியுதா?" என்று கண்கள் பளபளக்கக் கேட்டான்.

 

"ப்ச்.." என்று அவன் கூற்றை கருத்தில் கொள்ளாதவன் போல உச்சு கொட்டியவன்,

 

"சீனியர், உங்களோட இந்த அறிவை ஆராய்ச்சியில கொஞ்சம் காமிச்சீங்கன்னா, நிச்சயம் இந்த வருஷம் நீங்க பிஹெச்டி முடிச்சிருவீங்க" என்று கூறிவிட்டு, வேகமாய் நடந்து, தன் விடுதிக்கு போயே விட்டான் ராஜாராம்.

 

மறுநாள் காலையில் கிளிண்டன் கூறியது போல், அவளை அழைத்துவர, கிளேர்வாடேர் விமான நிலையம் சென்றான் ராஜாராம்.

 

தான் எதிர்பார்த்த விமானம் ஏற்கனவே வந்தடைந்து விட்டதாக அங்கு வேலை பார்ப்பவர்கள் தெரிவிக்கவும், அவளைத் தேடி உள்ளே சென்று பார்த்தான்.

 

அங்கு பயணிகள் அமரும் இருக்கைகளில் மூன்றாவது வரிசையில் தன் மடியில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு, அதனுடன் பேசியபடியே, அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள், ராமின் பழைய கல்லூரி முதல்வரின் மகளும், மேகலாவின் நெருங்கிய தோழியுமான நிவி என்னும் நிவேதா.

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்...

 


ReplyQuote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
01/06/2020 4:28 am  

அத்தியாயம் 21

 

 மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

க்ளேர்வாடேர் விமான நிலையத்தில் ஏர்ப்லோட் விமானத்தின் ஜெட் வருகையை அறிந்து, பயணிகள் அரைவல் ஹாலில் அவளை தேடிக்கொண்டிருந்தவன் தூரத்தில் ஒரு குழந்தையுடன் அவளைக் கண்டு கொண்டான்.

 

கடுங்குளிர் உடலை கவ்வாமலிருக்க தான் போட்டிருந்த தொடைத்தொட்ட கனமான கருப்பு நிறக்கோர்ட்டை சரி செய்தபடியே அவளை  நெருங்கினான்.

 

அபிநயம் பிடித்துக் கொண்டிருப்பவளின் அருகில் வந்தவன், "ம்ம் கிளம்பு!" என்று சொல்லியபடியே எங்கோ பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருக்க, அவளோ தன் பாஷை புரியாமல் தன் வாயையே பார்த்து கொண்டிருக்கும் அந்த இரண்டு வயது பூங்கொத்திடம், "என் தங்கம்.. கண்ணம்மா.. தங்கமயிலு" என தமிழில் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

 

குழந்தையும் அவள் முக பாவனையில் கிளுக்கி கிளுக்கி சிரித்தது.

 

அவள் தன்னை கண்டு கொள்ளாமல் குழந்தையை கொஞ்சுவதிலேயே குறியாய் இருந்ததில் கோபமடைந்தவன், சுற்றி முற்றி பார்த்துவிட்டு அவளின் பேக்கை தூக்கி, அருகில் அனாதையாய் நின்றிருந்த ட்ராலியில் வைத்து நகர, "ஹேய்! ஹலோ மிஸ்டர்.. என் பேக்கை குடுங்க!" என்று பக்கத்திலிருந்த பெண்மணியிடம் குழந்தையை கொடுத்துவிட்டு அவளும் தன் பெட்டி ஒன்றை தள்ளிக்கொண்டே அவனின் பின்னேயே ஓடி வந்தாள்.

 

வேகமாய் அவனை முந்திக்கொண்டு வந்து நின்றவள், "என் பேக்கை கொடுங்க!" என்று கேட்க,

 

"முடியாது" என்றான் ராம்.

 

"முடியாதா?"

 

"ஆமா முடியாது.. ஏற்கனவே லேட் ஆகிடுச்சி  இன்னும் ஒன்னவர்ல நான் லபோரட்டரில இருக்கணும்" என்றபடியே 'THANK YOU' என மின்னிய நியான் விளக்குகளை பார்வையிட்டவாறே வெளியே வந்தான்.

 

"லேட்டாகிடுச்சா?.. இங்க நான் வந்து ஹாப்பனார் ஆகுது.. நீங்க லேட்டா வந்துட்டு, இப்போ டைம்ம பத்தி வேற பேசுறீங்களா?. என்னை வம்படியா இழுத்துட்டு வேற போறீங்க.. நான் யார் தெரியுமா?.. எங்கப்பா யார் தெரியுமா?"

 

"தெரியுமே யார் உங்க அப்பான்னு.. அவர் தானே  ரஷ்யாவோட நியூ ப்ரெசிடெண்ட்.. இப்போ சோவியத் யூனியன் கலைஞ்சதால உண்டான குழப்பத்தை கூட, உங்க அப்பா தானே சமாளிக்க போகிறார்.. இது எனக்கு தெரியாமலிருக்குமா?" என்று முகத்தை தீவிரமாய் வைத்தபடியே அவன் கூற,

 

யுரேனியத்துடன் மோதிய நியூட்ரான், மூன்றாய் பல்கி பெருகுவது போல் தன் கோபமும் கட்டுக்குள் அடங்காமல் பெருக, "என்ன கிண்டலா?.. யூ.. யூ.. ஒழுங்கு மரியாதையா லேட்டா வந்ததுக்கு சாரி கேளுங்க.. இல்லைனா.." என்று கனல் கக்கிய கண்களுடன் அவ்வசனத்திற்கு அவள் நிறுத்தற் குறியிட,

 

"இல்லைனா...?" என்றபடியே அவனும் நேராய் பார்த்தான் அவளை.

 

"இல்லைனா இந்த இடத்த விட்டு ஒரு அடி கூட நகர மாட்டேன்" என்று தன் வசனத்திற்கு தானே முற்றுப்புள்ளி இட்டுக் கொண்டாள் நிவேதா.

 

"யூ சீ நான் கரெக்ட் டைமுக்கு தான் இங்க வந்தேன். பட் ஃப்ளைட் சீக்கிரமா லேண்ட் ஆகிடுச்சி, நான் என்ன பண்ண?.. என் மேல இல்லாத தப்புக்கெல்லாம் என்னால மன்னிப்பு கேட்க முடியாது.. சாரி" என்று கூறி நக்கலாக சிரித்தவன்,

 

மேலும் அவளுடன் வம்பளக்க மனமின்றி கார் பார்க்கிங்கில் நின்றிருந்த லடா ரிவாவை ஒரு சுழற்று சுழற்றி ஓட்டிவந்து அவளை இடிப்பது போல் அருகில் கொண்டு வந்து நிறுத்தினான்.

 

காரிலிருந்து இறங்கி வேகவேகமாய் அவளின் பொதிகளை காரின் பின்புறத்தில் பத்திரப்படுத்தியவன், ஒருமுறைக்கு இருமுறையாய் ஹாரனை அழுத்தி, அவளை அழைத்தான்.

 

நான் வரமாட்டேன் என்று அவளின் உதடுகள் சொல்லவில்லை எனினும் அதை அவளின் உடல்மொழி உறுதியாய் சொல்லியது அவனிடம்.

 

"சந்தோசம் இங்கேயே கிட.. கிளிண்டன் சார் கேட்டா உன்னை இங்க பார்க்கவே இல்லைன்னு சொல்லிடுறேன். இங்கேயிருந்து நீ தங்கப்போற இடத்துக்கு போகணும்னா டூ ஹவர்ஸ் ஆகும்.. பொறுமையா வா.. நான் கிளம்புறேன்" என கிளிண்டனின் காரை கிழக்கு நோக்கி அவன் திருப்ப,

 

ஓடிவந்து காரின் முன்னே கை மறைத்து உள்ளே ஏறிக்கொண்டாள் நிவி.

 

அவளைப் பார்த்து எள்ளலாய் புன்னகைத்தவன், அப்போது வெளியான, 'தி ரஷ்யா ஹாம்' எனும் புது திகில் படத்தின் பாடலினை ஒலிக்க விட்டான். அப்பாடலின் இசையானது நொடிக்கு நொடி நிவியின் ரத்த அழுத்தத்தை உச்சத்திற்கே கொண்டு சென்றது.

 

காரின் வேகத்திற்கும் அவ்விசைக்கும் ஒவ்வொரு முறையும் அவளின் உடல் தூக்கிவாரிப்போட்டது.

 

பயத்தில் ஓடிய பாடலை வேகமாய் அணைத்தாள் அவள். நடுங்கிய வலக்கையை இடக்கையால் பிடித்து சமாளித்து கொண்டவள், இதழை குவித்து குவித்து ஊதுபத்தியாய் வெண்ணிற புகையையும் வெளியிட்டாள். அதைக்கண்டவன் தன் சிரிப்பை கடைவாய்க்குள் கட்டுப்படுத்தி கொண்டான்.

 

அவன் காரின் ஸ்டியரிங்கை வளைத்து திருப்பித் திருப்பி ஓட்டிக்கொண்டிருக்க, ஹோட்டலை வந்தடையும் வரை முகத்தை உர்ரென்று வைத்திருந்தாள் நிவி. ராம் அவளை கவனிக்கும் நிலையில் இல்லை. அவள்புறம் திரும்பினால் தன் கண்கள் கொஞ்சம் அலைபாய்வதை உணர்ந்திருந்ததால் சாலையின் மீதே இருந்தது அவனது கண்களும் சிந்தையும்.

 

கிட்டத்தட்ட அரை மணிநேர பயணத்திற்கு பின், கார் முப்பது ரிசர்ச் ஸ்காலர்கள் மட்டுமே தங்கியிருக்கும் அந்த ஐந்து மாடி கண்ணாடிக் கட்டிடத்தை வந்தடையவும், கீழேயிறங்கி பைகளை வெளியே தூக்கி வைத்து, அங்கிருந்த வேலையாள் ஒருவனிடம் அவற்றை தூக்கிவருமாறு பணித்துவிட்டு, அவளிடம் "வா!" என்று மட்டும் சொன்னவன் விறுவிறுவென உள்ளே சென்று விட்டான்.

 

அவளும் அவன் பின்னேயே தன் கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு கிட்டத்தட்ட ஓடினாள்.

 

உள்ளே நுழைவில் அமர்ந்திருந்த ரிசப்ஷனிஸ்ட்டிடம் கூறி, அவளின் வருகையை பதிவு செய்து கொண்டு, அவளின் அறைக்கான சாவியையும் பெற்றுக்கொண்டவன், இரண்டாம் மாடியில் ரூம் நம்பர் பதினேழில் வந்து நின்றான்.

 

"இது தான் உன் ரூம்.. இந்தா கீ" என கொடுத்துவிட்டு, திரும்பியும் பாராமல் அவ்வறைக்கு எதிரேயிருந்த தன்னறைக்குள் ஓடி, தன் ஐடியை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

 

"இங்கேயிருந்து 400 மீட்டர் டிஸ்ட்டன்ஸ்ல தான் நம்ம இன்ஸ்ட்டிடியூட் இருக்கு.. நீ டூ ஹவர்ஸ் கழிச்சி அங்க வர மாதிரி இருக்கும்" என்று சொல்லிவிட்டு, வேகமாய் அவ்விடம் விட்டு கிளம்பி விட்டான் அந்த அவசரக்காரன்.

 

அவனுருவம் மறையும் வரை அங்கு நின்றிருந்தவள், வேலையாள் வந்து தன் உடைமைகளை உள்ளே வைத்துவிட்டு செல்லவும், கதைவை பூட்டிவிட்டு, தன் பேக்கை திறந்து உடைகளை வெளியே எடுத்தவாறே,

 

"ச்ச்ச ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் எவ்ளோ கெஞ்சிக் கதறி அப்பாக்கிட்ட இவரை இங்க அனுப்பி வைக்க ஏற்பாடு பண்ணினேன். இவர் என்னன்னா என்னையவே கோபப்படுத்தி பார்க்குறாரு" என்று ஆளரவமற்ற அறையில் தன்னிடமே பேசிக்கொண்டு, ஜெட்லாக் தீர மிதமான வெப்பத்தூறலில் குளித்துவிட்டு ஜோராய் தூங்கினாள் நிவேதா.

 

மதியம் போல் கிளம்பி அவன் சொன்னபடி நேவா நதிக்கரையில் அமைந்திருக்கும் செயின்ட் பீட்டேர்ஸ்பர்க் அகாடெமி ஆப் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டிற்கும் வந்தாள்.

 

கிளிண்டனிடம் சிறிது நேரம் தனது ப்ராஜெக்டிற்கான தலைப்பைப் பற்றி விவாதித்தவள், அவர் ராமிடம் வழிகாட்டுதல் பெறுமாறு சொல்லிவிட, அவனைத்தேடி வெளியே வந்தாள்.

 

அவனோ மத்தளம் கொட்டி ஆடியவாறே சுழலை உருவாக்கிக் கொண்டிருந்த மேக்னெட்டிக் ஸ்டிரரில்(கலக்கியில்) வைக்கப்பட்டிருந்த கரைசலையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவனருகில் வந்தவள் "க்கும்.. க்கும்" என்று தொண்டையை செரும, அவனோ திரும்புவதாய் இல்லை.

 

கோபம் எல்லையைக் கடக்க, "சார், உங்களை கிளிண்டன் சார் கூப்பிடுறாங்க" என்றாள். அவனும் உடனே அவர் அறையை நோக்கி ஓடினான்.

 

மேடையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த கரைசல் உள்ள பீக்கரை ஒரு பார்வையிட்டு விட்டு மேக்னெட்டிக் ஸ்டிரரின் வெப்பநிலையை அதிகமாக கூட்டி வைத்தவள், ஏதுமறியாதவள் போல தள்ளி நின்றாள்.

 

இரண்டு நிமிடத்தில் கிளிண்டனின் அறையிலிருந்து வெளியே வந்தவன், "பொய் சொன்னியா?" என்று கோபமாய் கேட்கவும், பீக்கர் வெடிக்கவும் சரியாய் இருந்தது.

 

தங்கள் கேபினில் கெமிக்கலுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒருகணம் இங்கு எட்டிப்பார்த்து விட்டு, மறுபடியும் தங்கள் வேலையில் கவனமாகினர்.

 

"அய்யோ உங்களை கூப்பிடலையா அவரு?.. அவரு ரொம்ப பாஸ்டாப் பேசுறதால என்ன பேசுறாருன்னே எனக்கு புரியலைங்க.. சாரி" என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், பீக்கர் வெடித்த சத்தத்தை கேட்டு வெளியே ஓடிவந்தார் சேவியர் கிளிண்டன்.

 

"யூ இடியட்.. வந்து ரெண்டு வருஷத்துக்கும் மேலாகுது.. இன்னும் மேக்னெட்டிக் ஸ்டிரர எப்படி ஹேண்டில் பண்ணனும்னு கூட உனக்கு தெரியாதா?.. இப்போ நீ உன் கையாலயே எல்லாத்தையும் க்ளீன் பண்ணனும்.. பாஸ்ட்." என்றவனை துரிதப்படுத்த, சிறுத்து போன முகத்துடன் அவளை முறைத்தவாறே அனைத்தையும் துடைத்தெடுத்தான் ராஜாராம்.

 

அதில் திருப்தியடைந்தவளாய், அதன் பின் தான், தன்னுடைய வேலைகளை சரி வர செய்ய முடிந்தது நிவியால்.

 

இவை அனைத்தையும் தூரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவிற்கு, அவள் செய்த திருகு தாளங்கள் எதுவும் கண்ணில் படவில்லை. தங்கள் இருவரைச் சுற்றியும் வெண்ணிற கவுனில் நடனமாடிக் கொண்டிருந்த தேவதைகள் மட்டும் தான் முதன்மையாய் தெரிந்தனர்.

 

மாலையில் அனைவரையும் மீட்டிங் ஹாலிற்கு வரச்சொல்லிய கிளிண்டன், ராமுடன் சேர்த்து தன் இருபது மாணவர்களின் பெயரையும் உரைத்து, அவர்களின் பெரும் உதவியால் தனக்கு இருபது கோடி ரூபாய் பெறுமானமுள்ள புதிய ப்ராஜெக்ட் ஒன்று கிடைத்திருப்பதாகக் கூற, அனைவரும் அதற்கு கைத்தட்டி உற்சாகமாகினர்.

 

அதனைக் கொண்டாடும் விதமாய் இரவு விருந்து ஒன்றும் ஏற்பாடு செய்திருப்பதாக கிளிண்டன் கூற, அவர்களின் சந்தோசம் இரட்டிப்பானது.

 

அனைவரையும் இரவு எட்டு மணிக்கு ஹோட்டல் அஸ்டோரியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்த சேவியர் கிளிண்டன், அவர்கள் அனைவரும் வருவதற்கு ஏதுவாய் கார்களையும் புக் செய்து அனுப்பி வைத்தார்.

 

அனைவரும் அவரின் அழைப்பை ஏற்று இரவு எட்டு மணிக்கு அந்த ஹோட்டலின் மூன்றாம் மாடியில் உள்ள ரெஸ்டாரண்டில் ஒன்று கூடினர்.

 

ஆண்கள் அனைவரும் கழுத்தில் கறுப்பு நிற டை கட்டி கோர்ட் சூட்டில் டிப்டாப்பாய் வந்திருக்க, அவர்கள் கூட்டத்தில் ஒரேயொரு பெண்ணான நிவேதா, மெஜஸ்டிக் ஹேர் ஸ்டைலும், வான்நீல நிற பனாரஸ் பட்டுப்புடவையுமாய் வந்து, அனைவரின் இதயங்களும் அவர்களின் கண்ணில் வந்து நிற்க காரணமானாள்.

 

அவளை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணா, அவளின் அருகில் வந்து அமர்ந்து கொள்ள, அந்த நீள செவ்வக வடிவ டைனிங் டேபிளின் அடுத்த பக்கத்தில் கிருஷ்ணாவிற்கு எதிரில் வந்து அமர்ந்து கொண்டான் ராம்.

 

அவ்வறையின் சீலிங்கில் பெரிய திராட்சை கொத்து வடிவத்தில் தொங்கி கொண்டிருந்த மின்சார விளக்கொன்று பிரகாசமாய் புன்னகை வீசிக்கொண்டிருக்க, அதன் வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருந்த அனைவரையும், டேபிளைச் சுற்றிலும் ஆக்கிரமித்திருந்த, சிவப்பு ரிப்பன் கட்டிய வெண்ணிற இருக்கைகள் மடி தாங்கியிருந்தன.

 

அனைவரும் வந்து சேர்ந்த பத்து நிமிடத்தில் வித விதமான பதார்த்தங்கள் கொண்டு வந்து அடுக்கப்பட்டது.

 

கண்ணாடித்தட்டுகளில் பீட்சா, சீஸ் பர்கர், ப்ளம் கேக், கிரில் சிக்கன் மற்றும் ஃபிஸ் ரோஸ்ட் என ஆட்சி செய்ய, உயர்ந்து நின்ற கண்ணாடி கோப்பைகளில் பழ ரசமும், உச்சியில் செர்ரிப்பழத்தை தாங்கிய ஐந்தடுக்கு ஐஸ்க்ரீம்களும் இலாகா ஒதுக்கப்பட்ட அமைச்சர்களாய் பகுமானம் காட்டின.

 

சாப்பிட உட்கார்ந்திருக்கும் ஒவ்வொருவரின் முன்பும், சிறிய சிவப்பு நிற கண்ணாடிக் குடுவைக்குள் வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்திகள், காற்றின் இசைக்கேற்ப ஆடி ஒரு மனோகர மனநிலையை உண்டாக்கியது.

 

சேவியர் கிளிண்டனின் வரவேற்புரைக்குப் பின், அதற்கு மேலும் தங்கள் வயிற்றை காத்திருக்கச் செய்யாமல் எல்லோரும் சேர்ந்து உணவு பதார்த்தங்களை வெளுத்துக் கட்டினர்.

 

இதுவரை ஆர்டர் செய்த அனைத்திற்கும் பணம் செலுத்திய கிளிண்டன், நன்றி கூறிவிட்டு தன் காரில் புறப்பட்டுவிட, சாப்பிட்டு முடித்தவுடன் ஒவ்வொருவராய் கிளம்பி மேல் மாடிக்குச் சென்றனர். மதுவின்றி விருந்து நிறைவு பெறாது என எண்ணிய கிருஷ்ணாவும் அவர்களுடன் கலந்து கொண்டான்.

 

அனைவரும் கிளம்பிய பின்பும் மெதுவாய் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் நிவேதா.

 

கண்ணாடிக் கதவின் வழியே நேவா நதியில் விழுந்து தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள துடித்துக் கொண்டிருந்த அஸ்டோரியா ஹோட்டலின் பிம்பத்தை அங்கு இசைக்கப்பட்ட பியானோவின் பின்னணியில் ரசித்துக் கொண்டிருந்த ராஜாராம்,

 

"எனக்காக ஒன்னும் யாரும் காத்திருக்க தேவையில்ல.. மேல ட்ரிங்ஸ் பார்ட்டிக்கு போறதுனாலும் போகலாம்" என்று தட்டைப்பார்த்து சொன்ன நிவியை முறைத்துப் பார்த்துவிட்டு, மறுபடியும் அந்த நீரோட்டத்தில் தன் கண்ணோட்டத்தை செலுத்தினான்.

 

சாப்பிட்டு முடித்தவள், ஸ்பூனால் தட்டை ஒரு தட்டு தட்டிவிட்டு எழுந்து நின்றாள். அவனும் அவள் சாப்பிட்டு முடித்ததை புரிந்துக்கொண்டு அவளுடன் வெளியே கிளம்பினான்.

 

ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் நின்று, இங்கு தங்களை சுமந்து வந்திருந்த கார் எதுவும் இல்லாமல் போக, குழம்பி போனவள், ஹோட்டலின் வாயிலில் நின்று டாக்சிக்காக கை காட்டினாள்.

 

அவளின் கையைப் பிடித்து கீழிறக்கியவன், "டாக்சிக்கு ரூபிள்ஸ் வச்சிருக்கியா?" எனக் கேட்கவும்,

 

"கேஷா இல்ல.. பட் கார்ட் இருக்கு" என்றாள் நிவி.

 

"டாக்சிக்காரன் கேஷ் தான் கேப்பான்.. இங்கயிருந்து நம்ம ரெசிடென்ஸ் ஒரு கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல தான் இருக்கு" என்று சொன்னவன் நடக்கவும் ஆரம்பிக்க,

 

"ஏன் எனக்காக நீங்க கேஷ் பே பண்ண மாட்டீங்களா?" என ஏதோவொரு எதிர்பார்ப்புடன் கேட்டாள் நிவேதா.

 

"மாட்டேன்.. நான் ஏன் பே பண்ணனும்?.. நீ என் மனைவியா? இல்ல காதலியா?" என்று வார்த்தையில் தனலை அள்ளிக் கொட்டியவன், தன்போக்கில் போய்க் கொண்டிருக்க,

அவனின் கேள்வியில் விழிகளில் கண்ணீரைக் கூட்டியவள் மெதுவாய் நடந்தாள்.

 

இரண்டாம் நிக்கோலஸின் பாயும் குதிரைச்சிலையை சுற்றி நடந்து கொண்டிருந்தவளின் மேல் திடீரென டிசம்பர் மாதத்து வெண்பனிமழை பொழிய, ஓடிவந்து தன் கருப்பு நிற ப்ளேசரைக் கழற்றி இருவருக்கும் குடை பிடித்தான் ராஜாராம்.

 

தன்னை நெருங்கி நின்றிருந்தவனின் ஆடையோடு தன் ஆடையும் உரச விக்கித்து போனவள், நிமிர்ந்து அவன் முகம் காணப்போகும் சமயம் தானும் கீழே குனிந்துப் பார்த்தான் ராம்.

 

இருவரின் விழிகளும் சந்தித்து முட்டி மோதி நின்றது.

 

விழி மொழி பேசும் என்பார்கள். ஆனால் இங்கு விழியும் மொழியற்று நின்றது விந்தையே!

 

அவளை பார்த்தபடியே அவன் இன்னும் கொஞ்சம் நெருங்கி வர, அவனின் அருகாமை பிடித்திருந்தாலும் வெட்கம் மேலிட, அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டு, பனிமழையில் தன் புடவையின் கீழ் மடிப்புகளை தூக்கிப்பிடித்தவாறே விலகி ஓடினாள் நிவேதா.

 

அவளின் பின்னேயே தானும் ஓடி வந்தவன், அவளை கைபிடித்து நிறுத்தி, "என் மேல நீ வச்சிருக்க நல்லெண்ணத்துக்கு ரொம்ப தான்க்ஸ்.. இந்தா.." என தன் ப்ளேசரை அவளின் தலையில் போர்த்திவிட்டு விட்டு, அவளைத்தாண்டி நேவா நதிக்கரையின் ஓரமாய் தான் தங்கியிருக்கும் ஹோட்டலைப் பார்த்து ஓடினான்.

 

அழுகையில் இதழ் துடிக்க, அவன் போர்த்தி விட்டுப் போன ப்ளேசரை இறுக்கிப் பிடித்தவாறே நடந்தவள், ஹோட்டலை வந்தடைந்ததும் தன்னறையின் ஹீட்டரை ஆன் செய்துவிட்டு, தன் ஆடையைக் களைந்து டீ-சர்ட்டும், ஜீன்ஸும் அணிந்துகொண்டு அவன் ப்ளேசரை திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற யோசனையில் வெளியே வந்தாள்.

 

அவனறைக் கதவில் கை வைத்தவுடன், திறந்து கொண்டது கதவு. விடிவிளக்கின் ஒளிமட்டுமே ஆட்சிசெய்த அவ்வறையை சுற்றிலும் திரைச்சீலை சூழ்ந்திருக்க, பனியைத் தாங்க தரைக்கூட கம்பளி விரிப்பை போர்த்தியிருந்தது.

 

அவன் கட்டிலில் கனமான பெட்ஷீட்டை கட்டிப்பிடித்து படுத்திருப்பது தெளிவாய் தெரிய, கையிலும் காலிலும் சாக்ஸ் அணிந்திருந்தவள் மெதுவாய் மேசையை நோக்கி நடந்து வந்து, "நீ மட்டும் ஏன் எதுவும் போர்த்தாமல் குளிரில் தவிக்க வேண்டும்?!" என மயிலுக்கு போர்வை போர்த்திய பேகன் போல், கையிலிருந்த அவன் ப்ளேசரை அங்கிருந்த சேரின் மேல் அணைவாய் போர்த்திவிட்டாள்.

 

பின் அவன் குளிரில் போர்வையை இன்னும் இன்னும் தன்னுள் புதைத்துக் கொள்வதைப் பார்த்து, பரிவாய் புன்னகைத்து விட்டு, அறையையும் ஒருமுறை சுற்றி முற்றி பார்த்துவிட்டு வெளியே செல்லும் வேளையில் தான் அவள் கருத்தை கவர்ந்தது அந்த டைரி.

 

எடுத்துப் பார்த்தவளுக்கு முதலிரண்டு பக்கங்களை படிக்கும் போது ஒன்றும் விளங்கவில்லை.

 

அன்று பிரியாவிடை கொடுக்கும் நாளின் போது அவன் சிறந்த பேச்சாளன் என்றும், படிப்பாளி என்றும் அறிந்திருந்ததால் தான், தன்னையறியாமலேயே தான் அவன் மேல் நன்மதிப்பு கொண்டு, தன் தந்தையிடம் அவனை மேற்படிப்புக்கு ரஷ்யா அனுப்புமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டது. ஆனால் இப்போது அவன் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறான் என்பதை அறிந்ததும், அவளுக்கு தனக்குள்ளாகவே எதையோ இழந்தது போல் ஒரு தவிப்பு. இதயத்தில் கத்தி குத்திய வலி.

 

"நாம் அவசரப்பட்டு இவரை இங்கு அனுப்பி வைத்து விட்டோமோ?.. இவர் காதலை பிரித்துவிட்டோமோ?" என மனதிற்குள் புலம்பி தவித்தாள்.

 

மேகலாவின் மூலம் அவன் அடிக் கோடிட்டிருந்த வரிகளை வாசித்ததால் அவன் ரசனைகளையும், நூலகரின் மூலம் அவன் புத்தகங்களின் மேல் கொண்ட பிரியத்தையும் புரிந்து கொண்டிருந்தவள், தன்னையறியாமலேயே அவன் புறம் சாயத் தொடங்கியிருந்தாள்.

 

பிஎஸ்சி படிக்கும் போது, அந்த மூன்று வருடங்கள் தன் தந்தை தான் கல்லூரி முதல்வர் என்ற கர்வத்தில் அவள் ஆடாத ஆட்டமில்லை. செய்யாத சேட்டையில்லை.

 

ஆனால் என்று அவன் ரஷ்யா சென்றானோ, அந்த நாளிலிருந்து தன் ஆட்ட ஓட்டங்களையெல்லாம் மறந்து, படிப்பில் தீவிர கவனத்தை செலுத்தினாள் நிவேதா. எம்எஸ்சியின் முடிவில் அந்த வருடத்தின் சிறந்த மாணவியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

 

"உன்னைப்பிரிந்து என்னால் இருக்க முடியாது.. மாட்டேன்" என மறுத்த தன் தந்தையிடம் இரண்டு மாதங்களாக பிடிவாதமாய் நின்று, இங்கு ரஷ்யாவும் வந்துவிட்டாள்.

 

"நான் அவனால் அவனைத்தேடி இங்கு வந்தால் அவன் வேறு ஒருத்தியை நினைத்துக் கொண்டிருக்கிறானா?" என்று நினைக்கும் போதே அந்த நினைவு கசந்தது.

 

அடுத்தடுத்த பக்கங்களை புரட்டினாள். பதினோராம் பக்கத்தில் அவன் வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்து இதயம் பலகீனமானவள், டைரியை நெஞ்சோடு அணைத்து பிடித்துக் கொண்டு நிற்க முடியாமல் தான் ப்ளேசர் போர்த்திய அந்த சேரிலேயே அமர்ந்தாள்.

 

………….

 

நிகழ் காலத்தில் அதே டைரியில் அதே பக்கத்தை புரட்டிய மேகலாவின் கண்களும் அதிர்ச்சியில் விரிந்தது. அவளின் அதிர்ச்சிக்கு முழு முதற்காரணம் அந்த ஓவியத்தின் கீழே போடப்பட்டிருந்த ராஜாராம் என்ற கையெழுத்தே.

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்...


ReplyQuote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
01/06/2020 2:35 pm  

அத்தியாயம் 22

 

கண்மணியே காதல் என்பது...

முதலில் டைரியை வாசித்து உள்ளம் மறித்து போன நிவேதா, பின் டைரியில் வரையப்பட்டிருந்த ஓவியத்தைக் கண்டு ஒருநொடி ஆடித்தான் போனாள்.

 

அதிர்ச்சியில் அமிழ்ந்திருந்து, முழு டைரியையும் வாசித்து முடித்தவளை திசை திருப்பியது ராமின் முனங்கல் குரல்.

 

அவனருகில் போனவள், அவன் வாயருகில் காதினை கொண்டு சென்று, அவன் என்ன பேசுகிறான் என கேட்க முயல, எதுவும் தெளிவாய் கேட்கவில்லை.

 

தன் கையில் மாட்டியிருந்த வெண்ணிற கிளவுஸை கழட்டிவிட்டு, மெதுவாய் அவன் நெற்றியில் கைவைத்து பார்த்தாள். காய்ச்சலில் நெருப்பாய் கொதித்தது அவனது உடல்.

 

"அய்யோ பனில நனைஞ்சு காய்ச்சல் வந்துடுச்சு போலயே.." என புலம்பியவாறே, அவன் அலமாரியிலிருந்து கிளவுஸையும் சாக்ஸையும் தேடி எடுத்து வந்து, அவனுக்கு மாட்டிவிட்டாள். காய்ச்சலில் சுயநினைவின்றி கிடந்தவனுக்கு அவள் செய்யும் உபகாரங்கள் எதுவும் புத்தியில் உரைக்கவில்லை.

 

மேலும் இரண்டு கம்பளிப் போர்வைகளையும் எடுத்து வந்து அவன் மேல் போர்த்தினாள் நிவேதா. துரிதமாய் செயல்பட்டு அறையின் வெப்பநிலையும் உயர்த்தி வைத்தாள். ஆயினும் அவன் முனங்கல் நின்றபாடில்லை.

 

அவன் அருகிலமர்ந்து நெற்றி தொடும் முடிகளை நகர்த்தி மென்மையாய் முத்தமிட்டாள்.

அவன் முகத்தில் ஒரேயொரு நொடி புன்னகையொன்று தோன்றி மறைந்தது.

 

அவனை இவ்வாறு விட்டுவிட்டு தன்னால் தன் அறையில் நிம்மதியாக தூங்க முடியாது என்ற முடிவுக்கு வந்தவள், அவன் அறையின் கதவை தாழிட்டு வந்து அவனருகிலேயே படுத்துக் கொண்டாள்.

 

மங்கிய ஒளியில் அவன் முகவடிவை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவள், திடீரென அவன் உடல் நடுங்க தொடங்கவும், பயந்து போய் வேகமாய் தன் கைகளை தேய்த்து தேய்த்து அவன் கன்னத்தில் வைத்தாள்.

 

அவள் கரத்தின் இளஞ்சூடு அவனுக்கு இதமாய் இருந்தது போலும் தன் கைகளுக்கிடையில் அவற்றை பிடித்து வைத்துக்கொண்டான். கையை விடுவிக்க முயன்றவள், பின் அவன் தன் கையை விட்டவுடன் என்ன நினைத்தாளோ அவன் கம்பளியை நீக்கி அவன் சுவெட்டருக்குள் தான் புகுந்து கொண்டாள். பின் விலகிக் கிடந்த கம்பளியையும் தங்களிருவரின் மேலும் போர்த்திக்கொண்டாள்.

 

அவளின் உடல் உஷ்ணத்தில், அவன் உடல் நடுக்கம் கொஞ்சம் மட்டுப்பட்டது.

 

காலையில் முழிப்பு தட்டியவுடன் ராம் புரண்டு படுக்க முயற்சிக்க, அது முடியாமல் போகவும் கண்ணை திறந்துப் பார்த்தான். தன் ஆடைக்குள் புகுந்து தன்னை அணைத்தபடியே தன் கழுத்து வளைவில் முகம் புதைத்து தூங்கி கொண்டிருப்பவளைக் கண்டவுடன் பதறிப்போய்  திடுதிடுவென எழ முயன்றான்.

 

எழக்கொஞ்சம் கடினமாகவே இருக்க, அவளையும் தூக்கிக்கொண்டு எழுந்தமர்ந்தான். அவன் உட்கார்ந்த வேகத்தில், அவள் அவனின் மடியில் உட்காருவது போல் ஆகிவிட, தன் ஸ்வெட்டரை தலை வழியே கழற்றி வீசியவன், தன் கையிலிருந்த கிளவுஸையும் உருவி வீசிவிட்டு, தன் மார்பில் தொய்ந்து விழுந்து தூங்கியவளை, "நிவி!.. நிவி!" என அவளின் கன்னம் தட்டி அழைத்தான்.

 

கண்ணை கசக்கியவாறே விழித்தவள், நிமிர்ந்து அவன் முகம் பார்த்து "குட் மார்னிங்" என்று சொல்லி விட்டு ,மறுபடியும் அவன் தோளில் தலை வைத்து தூங்க முற்பட்டாள்.

 

"ஹேய் நிவி!.. கண்ணைத்திற!" என அவளின் கன்னத்தில் தட்டியவன், அவளை நிமிர்த்தி உட்கார வைத்து,

 

"ஹேய் நிவி!.. இங்க பாரு.. நீ எப்போ இங்க வந்த?.. உன்னை யாரு என் பெட்ல வந்து படுக்க சொன்னது?.. ம்ம் சொல்லு?" என்று இரைந்து கத்தி கொண்டிருக்க, கொட்டாவி விட்டுக்கொண்டே அவனை அவதானித்தவள்,

 

"ப்ச் நைட்டு தான் வந்தேன்.. நீங்க தூங்கிக்கிட்டு இருந்தீங்கன்னு உங்க ப்ளேசரை அதோ அந்த சேர்ல வச்சிட்டு போக போனப்போ தான், நீங்க நிவி ஐ லவ் யூ, நிவி ஐ லவ் யூன்னு புலம்பிக்கிட்டு கிடந்தீங்க.. நானும் என்னடா இவரு நம்ம பேரை சொல்றாரேன்னு கிட்டக்க வந்து உங்க உதட்டுக்கிட்ட என் காதை கொண்டு வந்து கேட்டப்போ தான், படக்குன்னு என்னை கட்டிப்புடிச்சி விடமாட்டிக்கிட்டீங்க.. சரி நானும் வேற வழியில்லன்னு, உங்களுக்கு காய்ச்சல் வேற அடிக்குதேன்னு தெர்மோ டைனமிக்ஸ் பர்ஸ்ட் லாவ இங்க அப்ளை பண்ணி உங்களை பொழைக்க வச்சேன்.. நீங்க என்னடான்னா நன்றியே இல்லாம என்னையே திட்டிக்கிட்டு இருக்கீங்க" என்று தன் காதை ஆட்காட்டி விரலால் குடைந்து கொண்டே சொல்ல,

 

அவளை நம்பாத மாதிரியே பார்த்தவன், "யாரு?.. நான் நிவி ஐ லவ் யூன்னு சொன்னேன்?" என்று தன் புருவங்களை மட்டும் ஏற்றி இறக்கி கேட்க,

 

பச்சைப்பிள்ளை போல், "ம்ம்ம்.." என்று தலையாட்டினாள் நிவேதா.

 

"பொய் சொல்லாத.. நான் அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை" என்றான் ராம்.

 

"அட! என் கிட்ட ப்ரூஃப் கூட இருக்கு" என்று, நேற்று தான் வாசித்த, அவன் டைரியின் கடைசி வரியை காண்பித்தவள்,

 

"இதை எழுதினது நீங்க தானே?.. ம்ம் சொல்லுங்க?.. இதை டைரில எழுதியிருக்கறவரு வெளில சொல்ல எவ்ளோ நேரமாகும்?" என்று கேட்க,

 

அனைத்தும் அவளுக்கு தெரிந்துவிட்டது என்று "ஷிட்" என தன் தலையில் அடித்துக் கொண்டவன், "நீ உன் ரூமுக்கு போ!" என்றான் நிமிராமல்.

 

"என் கேள்விக்கு பதில் தெரியாம நான் போக மாட்டேன்" என்று பிடிவாதமாய் நின்றாள் நிவேதா.

 

"என்ன பதில்?" என்றவன் நிமிர்ந்து கோபமாய் கேட்க,

 

"நீங்க ஏன் என்ன லவ் பண்றத இவ்ளோ நாளா மறைச்சு வச்சீங்க?.. இங்க நான் வந்த பின்னாடியும் ஏன் என்னை பிடிக்காத மாதிரியே நடந்துக்கிட்டீங்க?.. அப்புறம் நம்ம கல்யாணத்தை இங்க வச்சுக்கலாமா? இல்ல இந்தியாவுலயே வச்சுக்கலாமா?" என்று நக்கலாய் கேட்டவள், சட்டமாய் சென்று அவன் கட்டிலில் அமர்ந்தபடியே, அவன் முகம் பார்த்தாள்.

 

அவளின் கடைசி கேள்வியில் சுதாரித்தவன், "நான் உன்னை காதலிச்சதென்னவோ உண்மை தான்.. ஆனா, நானும் நீயும் சேர முடியாது.. சேரவும் கூடாது" என்றபடியே வலப்புறம் இருந்த ஜன்னலின் திரைச் சீலையை விலக்கி, கண்ணாடி கதவின் வழியே, தூரத்தே தெரிந்த மேகங்களை வெறித்தான்.

 

"சேர முடியாதா?.. ஏன்?" என்று நிவேதா கரகரத்த குரலில் கேட்க,

 

"ஏன்னா எனக்கு உன்னை விட என் குடும்பம் ரொம்ப முக்கியம்" என்றான் ராஜாராம்.

 

அவனின் இந்த பதிலில், "ஓஹோ.. குடும்பம் மேல அவ்வளவு அக்கறையா இருக்கிறவரு, என்னை எதுக்கு லவ் பண்ணுனீங்க?.. லைப்ரரியனை தூது விட்டு என் மனசில ஏன் இடம் பிடிக்க நினைச்சீங்க?" என்று ஆத்திரத்துடன் கேட்டாள் நிவேதா.

 

"வயசுக்கோளாறு..." என்று ஒரே வார்த்தையில் சொல்லியவன்,

 

பின் தன் தலையை அழுந்த கோதியவாறே, "ஃபர்ஸ்ட் உன் அழகு என்னை ரொம்ப கவர்ந்துச்சி நிவி.. திரும்ப திரும்ப உன்னை பார்க்கவும் தூண்டுச்சி.. காலேஜ்ல எல்லார்கிட்டயும் வம்பு பண்ணிக்கிட்டு திரியுற உன் குறும்புத்தனம் கூட என்னை உன் பின்னாடியே முட்டாள் மாதிரி சுத்த வச்சுச்சு.. அந்த முட்டாள்தனத்தோடயே, நீ தினமும் உன் ஃப்ரெண்ட் கூட லைப்ரரி வர்றதையும், அவ படிச்சிட்டு குடுக்குற புக்கை வாங்கிப் படிக்கிறதையும் தெரிஞ்சிக்கிட்டு, உன் ஃப்ரெண்ட் படிக்கிற புத்தகத்துல எல்லாம் பென்சிலால அண்டர்லைன் பண்ணி வச்சு, உங்களை என்னைப்பத்தி பேச வச்சேன்.. லைப்ரரியன் கிட்டயும் உன்னை லவ் பண்றதா சொல்லி, அவரை எனக்கு ஹெல்ப் பண்ணவும் கேட்டேன்.. யெஸ், நான் உன்னை லவ் பண்ணினேன் நிவி. பட், உன் ஸ்டேட்டஸ் வேற, என் ஸ்டேட்டஸ் வேறங்கிறதை, நான் எப்போ இங்க வந்தேனோ, அப்போவே புரிஞ்சுகிட்டேன்.. உன் கூட சேர்ந்து வாழற தகுதி எனக்கில்லை நிவி.. அதோட இப்போ நீ என் மனசுலயும் இல்ல" என்று, திரும்பி நின்றபடியே சொன்னான்.

 

அதில், "பொய்.. " என்று கத்திய நிவேதா,

 

"உங்க வாய் தான் அப்படி சொல்லுது.. பட், உங்க டைரி இன்னமும் நீங்க என்னை எந்த அளவுக்கு லவ் பண்றீங்கன்றத வெளிச்சம் போட்டு காட்டுது.. ஒருவேளை என் ஸ்டேட்டஸும் உங்க ஸ்டேட்டஸும் தான் உங்களுக்கு பிரச்சனைன்னா, நீங்க அதைப்பத்தி எல்லாம் யோசிக்கவே தேவையில்ல.. என் அப்பாகிட்ட எப்படி சம்மதம் வாங்கணும்னு எனக்கு தெரியும்.. நீங்க கவலைப்படாதீங்க.. நாளைக்கே நான் என் அப்பாவுக்கு போன் பண்றேன்" என்று, அவன் கைபிடித்து சொல்லியது தான் தாமதம்,

 

"ஹேய்!!.. உனக்கு அறிவே இல்லையா?.. நான் இதெல்லாம் நடக்காதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன், நீ என்னடான்னா லூசு மாதிரி அப்பாக்கிட்ட பேசுறேன், ஆட்டுக்குட்டிக்கிட்ட பேசுறேன்னு சொல்லிக்கிட்டு இருக்க.. நமக்குள்ள எதுவும் நடக்காது.. அவ்ளோதான்.. நம்ம சேராம இருக்குறது தான் எல்லாருக்கும் நல்லது" என்று வம்படியாய் அவளை வெளியே இழுத்து வந்து தள்ளினான்.

 

"இப்போ என் மனசுப்பூராவும் நீங்க மட்டும் தான் இருக்கீங்க.. நான் இங்க வந்ததே உங்களைப் பார்க்கத்தான்.. உங்களை என்னால மறக்க முடியாது.. நீங்க இன்னும் முடியாது அது இதுன்னு சொன்னீங்கன்னா கண்டிப்பா நான் சூசைட் பண்ணிப்பேன்" என்று தன்னறைக்கு ஓடியே விட்டாள் நிவேதா.

 

வெகு நேரமாக தன்னறையில் தலையில் கைவைத்து யோசித்துக் கொண்டிருந்த ராஜாராம், பின் அந்த நினைவை விடுத்து ஆய்வகத்திற்கு கிளம்பிச்சென்றான்.

 

அங்கு சென்றவனுக்கு மூளை ஒன்றை உத்தரவிட, கைகள் ஒன்றை செய்தது. ரிசர்ச் ரிசல்ட்டும் சரியாக கிடைக்கவில்லை.

 

அந்த டென்ஷனில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவனின் தோளில் கைவைத்த கிருஷ்ணா, "டேய்! என்னடா? என் காதல் தேவதைய இன்னும் காணோம்?" என்று கேட்க, அவனைத் தன் ஏகே பார்ட்டிசெவன் கண்களால் சுட்டுப்பொசுக்கியவன்,

 

"தெரியாது" என்றபடியே, தன் ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு, சேவியர் கிளிண்டனின் சுயரூபத்தை இன்று தான் காணப்போவதை  அறியாமல், அவரின் அறைக்குள் நுழைந்தான்.

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்…

 

அத்தியாயம் 23

 

சண்டை கோழி

சேவியர் கிளிண்டனின் அறைக்குள் நுழைந்த ராஜாராம் தன் ரிசர்ச் ரிபோர்ட்டை நீட்ட, அதை வாசித்து பார்த்த கிளிண்டன், "என்னாச்சு ராம்?..  ஏன் இன்னைக்கு ரிசல்ட் இப்படி வந்திருக்கு?.. நீ இன்னும் ஒரு வாரத்துல இந்த ரிசர்ச்சை சக்சஸ்ஃபுல்லா முடிப்பன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா இப்படி பண்றியே.. ஆமா? நிவி ஏன் இன்னைக்கு வரலையாம்?" என ஆங்கிலத்தில் அடுக்கடுக்காய் கேள்விகளை அவிழ்த்துவிட்டு காத்திருக்க,

 

மற்றைய கேள்விகளுக்கு பதிலளிக்காமல்,

நிவி ஏன் வரவில்லை என்பதற்கு மட்டும் தெரியவில்லை சார் என்றவன்,

 

"உன் ப்ராஜெக்ட் முடிஞ்சதும் அதை நீ எனக்குத்தான் எழுதித்தரணும் ராம்" என்றவரை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

 

பின் தாமதமாய் அவரின் எண்ணத்தை புரிந்து கொண்டவன், "இதுக்கு பதிலை நான் யோசிச்சு சொல்றேன் சார்" என்றுவிட்டு, அன்றைய வேலை முடிந்தவுடன் ஹோட்டலிற்கு கிளம்பினான்.

 

திரும்பி அறைக்குச் சென்றவன் மனம் கேளாமல் நிவியின் அறைக்கதவை தட்டினான்.

 

அவள் கதவை திறக்கவில்லை எனவும் பயந்து போனவன், "நிவி.. நிவி" என்று தன் தொண்டைத் தண்ணீர் வற்றும் வரை கத்தினான்.

 

சிறிது நேரம் கழித்து மனம் வந்து கதவை திறந்தவள், நேற்று இரவு விருந்திற்கு தான் கிளம்பி இருந்தது போலவே இன்றும் பட்டுப்புடவைக் கட்டி கிளம்பியிருந்தாள்.

 

அதைப்பார்த்து, "ஹேய் என்னாச்சு உனக்கு?.." என்றவன் கேட்க,

 

"ம்ம் கிறுக்கு பிடிச்சிருச்சி.. நான் இன்னைக்கு சாகலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.. அதான் சாகறதுக்குள்ள என் அம்மா அப்பாவுக்கு ஒரு போட்டோ எடுத்து அனுப்பிடலாம்னு கிளம்பி நிற்கிறேன்.. அதுவுமில்லாம ஒரு பொண்ணு இந்தியாவிலிருந்து பல லட்சங்களை செலவு பண்ணி ரஷ்யா வந்து சூசைட் பண்ணி செத்துருக்கான்னா, கண்டிப்பா எல்லா ஃப்ளாஷ் நியூஸ்லயும், காதல் தோல்வியால் கயிற்றில் தொங்கிய கன்னிப்பெண்ணுன்னு ஹெட்லைன்ல என் போட்டோவோட போட்டுக் காமிப்பாங்க.. அதுலயெல்லாம் நான் அழகாத் தெரிய வேணாம்?.. அதான் ஃபுல் மேக்கப்புல கிளம்பி நிற்கிறேன்" எனவும்,  

 

அவளை தள்ளிக்கொண்டு உள்ளே போய் கதவை சாற்றி தாழ் போட்டவன், "நீ என்னை புரிஞ்சிக்கவே மாட்டியா நிவி?.. ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்குற?.. நம்ம சேரமுடியாதுன்னா முடியாது தான்.. ஏன் இப்படி என்னை சித்திரவதை பண்ற?" என்று பொரியவும்,

 

"யாரு சித்திரவதை பண்றா? நானா?.. நீங்க தான் என்னை தற்கொலை முயற்சிக்கு தூண்டுறீங்க. என் அப்பாவுக்கு நான்னா உசுரு.. நான் என் அப்பாக்கிட்ட சொன்னா, உடனே நம்ம கல்யாணத்தை நடத்தி வச்சிருவாரு.. ஆனா நீங்க தான் பயந்தாங்கோலி மாதிரி பயந்துசாகுறீங்க.. என்னையும் சாகத்தூண்டுறீங்க" என அங்கிருந்த சோபாவில் சென்று சாய்ந்தாள் நிவேதா.

 

அங்கிருந்த கட்டிலுக்கு மேலிருந்த சீலிங் ஃபேனில் அவள் தன் புடவையைக் கொண்டு தூக்கிடுவதற்காக முடிச்சு போட்டிருப்பது தெரிய, தன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டவன், "உன் அப்பாவுக்கு நீ என்னை லவ் பண்றதா முன்னாடியே சந்தேகம் வந்துருச்சி நிவி.. அதான் அவரு உடனே என்னை ரஷ்யா அனுப்பி வச்சிட்டாரு.. உன்னை நெருங்கினா உயிரை எடுத்துருவேன்னும் சொல்லி மிரட்டிருக்காரு" என்று சொல்லி முடிக்கும் முன்,

 

"இல்ல.. நீங்க பொய் சொல்றீங்க.. என் அப்பா அப்படியெல்லாம் கிடையாது" என அவன் பேச்சை இடைமறித்தாள் நிவேதா.

 

"நீ நம்பினாலும் நம்பலைனாலும் நான் சொல்றதெல்லாம் உண்மை நிவி.. அவர் என் உயிரை எடுத்துருவேன்னு சொன்னாக்கூட, அது எப்போதும் உனக்கு தான், உனக்காக போறதுல சந்தோசம் தான்னு நான் தைரியமா நெஞ்சை நிமிர்த்தி முன்னாடி நின்னுருப்பேன். ஆனா அவர் எடுத்துருவேன்னு சொன்னது என் குடும்பத்தோட உயிரை"

 

"இந்த ஃபாரின் ஆஃப்பர் குடுத்த மறுநாள் அவர் ரகுவிடம் நான்னு நெனச்சி, நீ கண்டிப்பா ஃபாரின் போயே ஆகணும், அப்படி போகலைன்னா உன் குடும்பம் சின்னாப் பின்னமாகிடும்னு சொல்லி மிரட்டிருக்காரு.. எனக்கு எப்பவும் என் பொண்ணோட நலன் மட்டும் தான் முக்கியம், அவமேல உன் கண்ணு பட்டுச்சுன்னு தெரிஞ்சது மொத்த குடும்பத்தையும் மேலோகத்துக்கு பார்சல் பண்ணி அனுப்பிருவேன்னும் சொல்லி மிரட்டிருக்காரு.. இங்க இப்போ நம்ம காதலிக்கிறதோ, கல்யாணம் பண்ணிக்கிறதோ அவருக்கு தெரிஞ்சா சும்மா இருப்பாரா சொல்லு?.. கண்டிப்பா ஏதாவது பிரச்சனை பண்ணுவாரு.. உன் அப்பாவால தான் நான் இந்த ரெண்டு வருசமா இங்கேயிருந்து கிளம்ப, முனைப்பா எந்த முயற்சியும் செய்யாம இருக்கேன்" எனவும்,

 

தன் தந்தையா இப்படி என மிரண்டு போய் நின்றவள், அதை நம்ப முடியாமல் தவித்தாள்.

 

பின் அவனின் அருகில் வந்து தோளில் சாய்ந்து கொண்டு "அப்போ நம்ம சேரவே முடியாதா?" என்று சிறிய நட்பாசையுடன் கேட்க,

 

"முடியும் நீ இன்னும் ஒரு ரெண்டு வருஷம் எனக்காக காத்திருந்தால்" என்றவன்,

 

"இப்போ தான் ஒரு குள்ளநரியோட சுயரூபம் எனக்கு தெரிஞ்சுருக்கு.. இங்கேயிருந்து நான் எப்படியாவது கிளம்பி இந்தியா போய்ட்டா, கண்டிப்பா என் ப்ராஜெக்ட் மூலமா பெரிய நிலைக்கு வந்துருவேன்.. அப்போ வந்து உன்னை பொண்ணு கேட்டா உன் அப்பாவால மறுக்க முடியாது நிவி" என்று நம்பிக்கையாய் கூறவும்,

 

புரிந்து கொண்டது போல் தலையாட்டியவள், பிடிவாதம் பிடித்து அன்று முழுவதும் அவனை தன்னறையிலேயே இருக்கச்செய்தாள்.

 

மறுநாள் காலையில் லேபில் தான் செய்த பழைய ப்ராஜெக்ட்டை விட்டு, நிவியுடன் இணைந்து செயல்படுவதற்கு ஏதுவாய் புது ப்ராஜெக்ட்டை ராஜாராம் கையிலெடுக்க, அந்த ரிசல்ட் பைலை தூக்கி வேறு பக்கம் கிடாசிய கிளிண்டன், "நீ இதுவரை செய்த ப்ராஜெக்ட் என்னானது ராஜாராம்?.. கிராபைட்டை டைமண்டாக மாற்றும் ஃபார்முலாவை கண்டுபிடித்து விட்டாயா என்ன?" என்று அந்த கோபத்திலும் ஆர்வமாக வினவினார்.

 

"1900 ஆம் ஆண்டு இப்போதைய டிவிக்கு டெலிவிஷன்னு சொல்லி பெயரிட்ட, உங்க நாட்டைச் சேர்ந்த, கான்ஸ்டன்டின் பெர்ஸ்கியே கிராபைட் கரிலயிருந்து வைரம் எடுக்கிறேன்னு அதை கொதிக்க வச்சு, வீட்டை கொளுத்திட்டாரு. ஆஃப்ட்ரால் ரிசர்ச் ஸ்காலர், நான் எப்படி சார் அதுக்கான ஃபார்முலாவை கண்டுபிடிக்க முடியும்?.."

 

"நம்ம நெனக்கிற மாதிரி அது ஒன்னும் சாதாரண விஷயமும் இல்லையே சார். பென்சிலோட ஹூக்குல இருக்குற கிராபைட்டுக்கும் வைரத்துக்கும் மூலப்பொருள் கார்பன் தான்னாலும், ரெண்டுலயும் கார்பன் டிஃபரன்ட் ஸ்ட்ரக்ச்சர்ல இருக்குதே. கிராபைட்டுல கார்பன் அறுகோண வடிவமைப்பிலும், வைரத்துல நான்முகி வடிவமைப்பிலும் இருக்கிறதால, ஒன்னை இன்னொன்னா மாத்துறது ஒன்னும் ஈஸியான காரியம் இல்ல சார். யாரும் இருக்கிற இடத்தை வச்சு தான் மதிப்புங்கிறதை இந்த உதாரணத்தை வச்சு ஈஸியா சொல்லிடலாம் சார்.. அந்த ப்ராஜெக்ட் தோல்வியினால, இனி நான் என் புது ப்ராஜெக்ட்டைத் தான் சார் தொடரப் போறேன்" என்று ராம் நிதானமாய் சொல்லி முடிக்கவும்,

 

அவனின் மிதப்பான பேச்சிலேயே அவனுக்கு அந்த ஃபார்முலாவை தன்னிடம் தருவதில் விருப்பமில்லை என்பதை புரிந்து கொண்ட கிளிண்டன், "அந்த ப்ராஜெக்ட்டை நீ என்கிட்ட கொடுத்தா, இதுவரை ஏறாத உன் சாலரி அமௌண்ட் உன் அக்கவுண்டில் ஏறும் ராம்.. நீயும் உன் ஊருக்கு போகலாம்" என்று நயமாய் பேசினார்.

 

அவரை அதிர்ச்சியுடன் பார்த்தவன், "உங்களால் எப்படி முடியும்?" என்று கேட்க,

 

"அதை என் நண்பன் ராமச்சந்திரனின் பேச்சைக்கேட்டு நிறுத்தி வச்சிருக்கிறதே நான் தானே" என்று, உண்மையை களிமண் உண்டியலைப் போல் போட்டு உடைத்தார் சேவியர் கிளிண்டன்.

 

"அவன் மிரட்டலுக்கு பயந்து உன் குடும்பத்துக்காக தான் நீ இங்கே இருக்கேனும் எனக்கு தெரியும் ராம்.. அவன் அவனோட பொண்ணை இங்கு அனுப்பும் முன்னமே எனக்கு போன்போட்டு உன்னுடைய சாலரியையும் உன் பிஹெச்டி ப்ராஜெக்ட்டிற்கான சைன்னையும் போட்டு இந்தியா அனுப்பி விடத்தான் சொன்னான்.. ஆனால், நான் தான் வேண்டுமென்றே உன்னை நிவேதாவுடன் பழக விட்டேன்.. அப்போது தானே நீ இங்கு அவளுடனேயே செட்டிலாகி விடுவாய்.. எனக்கும் புதுப்புது ப்ராஜெக்ட்டாக கிடைக்கும்.. தங்க முட்டையிடும் வாத்தை அறுக்க நான் என்ன பைத்தியமா?.. உன்னை என் பார்ட்னராக சேர்த்து கொள்கிறேன் ராம்.. நீ நிவியுடன் இங்கேயே சந்தோசமாக இருக்கலாம்" எனவும், அவரின் சுயரூபம் தெரிந்ததில் மேலான அதிர்ச்சியுடன் எழுந்து நின்றவன்,

 

"நீங்க ஒரு சுயநலவாதியா இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்ல சார்.. என் பிள்ளைக்கு நீங்க இனிஷியல போட்டுக்குறேன்னு கேட்குறது உங்களுக்கே கேவலமாத் தெரியல?" என்று சினந்து கேட்கவும், வழிசல் புன்னகையுடனேயே தன் தவறை நியாயப்படுத்த முயன்றார் சேவியர் கிளிண்டன்.

 

"இதில் என்ன கேவலம்?.. பெரிய பெரிய கண்டுபிடிப்பாளர்கள் கூட சிறிய கண்டுபிடிப்பாளர்களின் வறுமையை சாக்காக வைத்து அவர்களின் கண்டுபிடிப்பை பேட்டன்ட் முறையில் தங்களது பெயருக்கு மாற்றிக் கொள்வதில்லையா ராம்?.. தாமஸ் ஆல்வா எடிசன் தெரியுமா?, பலவகையான விஞ்ஞான சாதனங்கள் கண்டுபிடிச்சிருக்காருன்னு சொல்றாங்களே அவரு தான்.. அவரு கண்டுபிடிச்சதா சொல்ற மின்பல்பு ஜோசப் ஸ்வானுடையதாம்.. எரி-லாந்தால் வில்லியம் ஜோசப் உடையதாம்.. தனது உதவியாளர் டெஸ்லாவிடமிருந்து தான் மின் உற்பத்தியையே அவர் தனதாக்கினாராம். கிட்டத்தட்ட 789 கண்டுபிடிப்புகள் அவருடையதே இல்லையெனவும் சொல்லப்படுது. இதைப்போலவே இங்கு பல கதைகள் உண்டு.. இதில் கோபம் கொள்ள ஒன்றுமில்லை ராம்" என்று அவனை மூளைச்சலவை செய்ய முயன்றார்.

 

"சாரி சார்.. என்னால் என் கண்டுபிடிப்பை கொடுக்க முடியாது.. இப்போ நீங்க என் பிஹெச்டி ப்ராஜெக்ட்ல சைன் பண்ணலைன்னா நான் உங்களோட ட்வென்டி க்ரோஸ் ப்ராஜெக்ட் என்னது தான்னு கோர்ட்ல கேஸ் போட்டுருவேன் சார்.. ரஷ்ய அரசைப் பற்றி உங்களுக்கே தெரியும்" என்று சேரில் தெனாவட்டாய் சாய்ந்து கொண்டு மிரட்ட,

 

அதில் பயந்து போனவர் மறுநாளே அவனின் பிஹெச்டி பேப்பரில் சைன் போட்டு, விடுதிக்கு அனுப்பிவைத்தார். அந்த பேப்பரை வாங்கிக்கொண்டவன் ஒரு வாரத்தில் தாய்நாடு புறப்பட்டான்.

 

அவன் கிளம்பி இந்தியா செல்லவிருக்கும் அந்த வாரம் முழுவதும் நிவியுடன் இணைந்து ரஷ்யாவின் எழிற்கோலங்களை, எந்தவித மன சஞ்சலமுமின்றி கண்டு களித்தான்.

 

நிவேதா வந்த முதல் நாளில் ராஜாராமும் அவளும் ரஷ்யக் கொடியில் உள்ள கழுகு தலைகளைப் போல் வெவ்வேறு திசையில் முறைத்துக் கொண்டு நின்றிருந்ததை பார்த்திருந்த கிருஷ்ணாவிற்கு, தற்போது அவர்களிருவரும் அதே கொடியில் உள்ள ஒரே உடல் இரு கழுத்து கழுகைப் போல் இணை பிரியாமல் இருப்பது போல் தெரிய, குழப்பத்தில் ஆழ்ந்தான்.

 

அழகு சிற்பமான நிவி, தற்போது ராமை நவ்விக்கொண்டு திரிவது கண்டு, பொறாமையும் அவன் தலையில் ஆங்காங்கே உள்ள வெள்ளை முடியைப்போல் எட்டிப்பார்த்தது. இருப்பினும் இருவரையும் மனமார வாழ்த்தினான் அவன்.

 

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் உள்ள ஒரு பூங்காவில் அமர்ந்து, யாரும் சுவாசித்திராத, அப்போதே உற்பத்தியான ஆக்சிஜன் சுமந்த காற்றை சுவாசித்து, தன் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தவளை, "நிவி.." என்று மயக்கும் குரலில் அழைத்த ராம், "நமக்கு பின்னாடி ஒரு சிலை இருக்கே கவனிச்சியா?" என்று கேட்டான்.

 

அவளும் தன் கையிலிருந்த வெள்ளை நரம்புகள் இழையோடிய பச்சை இலையை சுழற்றிய படியே, "ஆமா பாத்தேன்.. ஒரு ஆணும் பெண்ணும் குடைக்கு அடியில நிக்கிறாங்க.. அதுக்கென்ன?" என்றாள் அசுவாரஸ்யமாய்.

 

"அந்த பொண்ணு பேரு எமிலி.. பையன் பேரு கார்ல்.. ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமா லவ் பண்ணினாங்க நம்மளை மாதிரியே.. அவங்க வீட்லயும் அதுக்கு அவ்ளோ எதிர்ப்பு.. ஒரு நாள் ரெண்டுபேரும் சேர்ந்து சூசைட் பண்ணிக்கிட்டாங்க.. அதுக்கப்புறம் தான் அவங்க காதல் உண்மைக் காதல்னு எல்லாராலும் நம்பப்பட்டுச்சி.. இவங்க தான் இப்போ இந்த டவுனோட ரோமியோ ஜூலியட்.. ஸ்டோரி ரொம்ப டச்சிங்கா இருக்குல்ல நிவி?.."

 

"நாளைக்கு இது மாதிரியே நம்ம வீட்டுலயும் எதிர்ப்பு கிளம்பலாம்.. ஆனா எப்பவும் நம்ம மட்டும் இந்த மாதிரி முடிவுக்கு வரவே கூடாது நிவி.. தற்கொலைங்கிறது கோழைகளோட முடிவு.. காதலோட வெற்றி சாகுறதுல இல்ல.. வாழ்றதுல தான் இருக்கு.. தைரியமா வாழ்க்கைய வாழ்ந்து பார்த்திடனும்.. சரியா?" எனக்கேட்கவும், அவன் பேச்சுக்கு சொன்ன அந்த ஒரு பிரிவையே தாங்க முடியாமல் குமைந்து குமைந்து அழுதாள் நிவேதா. அவளை தன் மடியில் போட்டு, தட்டிக்கொடுத்து சமாதானப் படுத்தினான் ராஜாராம்.

 

இப்போதைய அவளின் கண்ணீர் நாளை அவளை வேறொரு முடிவையும் எடுக்க வைத்தது.

 

தனது இரண்டு வருட ஜெயில் வாழ்க்கைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, விமானத்தில் சொந்த நாடு செல்லும் குதூகலத்தில் வரவேண்டிய ராம், தனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த நிவியை கண்டு முறைத்துக்கொண்டே வந்தான்.

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்...


ReplyQuotePage 2 / 5
Share: