Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

அரிதாரம் - மீனாக்ஷி...
 

அரிதாரம் - மீனாக்ஷி சிவக்குமார்  

  RSS

Meenakshi Sivakumar
(@meenakshi-sivakumar)
Active Member Writer
Joined: 6 months ago
Posts: 19
16/06/2019 7:20 pm  

                  அரிதாரம்

சமத்துவபுரம், 1980 - 1990 களில்  (தட்டச்சில் அச்சு இடும் ஒலி போல கற்பனை செய்துக்கொள்க)

சமத்துவபுரம், பெயர் அளவிலேயே சமத்துவத்தை பறைச்சாற்றி, பழமைவாதிகளால் பல நூறு வருடங்களாக பழக்கப்பட்ட, 

 
சாதியின் சவுக்கடியால்  தரித்த தழும்புகளை ஊன்றிய களத்தில், வெள்ளை பூக்கள் விளையும் நிலத்திலேயே நீலப்பூக்களும் தன் நிறம் காட்ட, 
 
பசுமையும்,பகைமையும், வன்மையும், மென்மையுமாய், தொழில்கள் இடையே தொகுதிகளை தொகுத்து, 
 
வகுப்புகளை வகுத்து, வன்முறையை நடைமுறை படுத்திய ஒரு உண்மையான வலியை தாங்கிய சாதாரண கிராமம் தான் நம் கதையின் கதைக்களம்.

காலை நேரம், பனி தாங்கிய வயல்வெளி, விவசாய வாசனை வீதி எங்கும் வீச, உழுதல்,களை எடுத்தல் என விவசாயிகள் வேகத்தை கூட்ட,

 
தூக்குவாலியில் சோற்றை தாங்கி நிற்கும் ஒற்றை ஆலமரம், குழந்தைகளுக்கு தொட்டிலுக்கு இடம் குடுத்து, தாலாட்டுக்கு தலையாட்ட, காலை பொழுது கடந்துகொண்டு இருந்தது, 

விஷ்ணுவர்தன், முத்தழகியை திருமணம் செய்துக்கொண்டு மணக்கோலத்தில், தன் வீட்டின் வாசல் முன் வந்து நின்றான்.

"என்ன காரியம் பண்ணிவச்சிருக்க மகனே, அவள அவங்க வீட்டுல போய் விட்டுட்டு வந்துரு, நம்ம ஆளுங்க ஒத்துக்க மாட்டாங்க" என்று வீட்டின் வாசலிலே வைத்து பஞ்சாயத்து செய்துக்கொண்டு இருந்தார் விஷ்ணுவர்தனின் தந்தை சாரங்கபாணி.

"நான் ஒன்னும் உங்க வீட்டுல இருந்து, விருந்து சாப்பிட வரலை, என் துணிங்க, பள்ளி, கல்லூரி சான்றிதழ் எடுத்துட்டு போக வந்தேன், என் மனைவியோட கால் தூசிக்கூட இந்த வீட்டோட வாசல்ல படாது," என்ற விஷ்ணுவர்தன், தன் தந்தையை தள்ளிவிட்டு, வீட்டினுள் நுழைந்தான்.

தன் அறையில் உள்ள துணிகளை எடுத்து பையினுள் சொருகினான், தகர பெட்டியினுள் உள்ள, தன் சான்றிதழை எடுத்து வைத்துக்கொண்ட விஷ்ணுவர்தன், வீட்டை விட்டு வெளியே வேகமாக கிளம்பினான்,

வீட்டின் முற்றைத்தை அடையும் போது,

"அண்ணா, பாத்து போ" என்று குரல் கேட்க, நின்றவன் ஒலி வந்த திசையை நோக்கினான்,

இருள் சூழந்த அறையில், ஒரு 19 வயது மதிக்கத்தக்க பெண்ணின் போட்டோவில் மாலை போடப்பட்டு, காமாட்சி விளக்கு ஏறிந்துக்கொண்டு இருந்தது, அதில் நாச்சியார் என்று பெயர் அச்சிடப்பட்டு இருந்தது. 

பாா்த்த கணமே, கண்ணீர் முன்னோக்கி உதிர்ந்தது, அவனது நினைவுகளோ பின்னோக்கி நகர்ந்தது.

5 வருடங்களுக்கு முன்பு. 

சமத்துவபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசினர் கலைக்கல்லூரியில் இளங்கலை தமிழ் சேருவதற்கான சேர்க்கை நடைப்பெற்றுக்கொண்டு இருந்தது.

விஷ்ணுவர்தனும், சேர்க்கைக்காக அன்று சென்று இருந்தான், அவன் நினைத்தப்படியே இளங்கலை தமிழ் சேர்ந்து விட்ட, விஷ்ணு.

 
அடுத்தக்கட்டமாக விடுதிக்காக அனுமதி பெற காத்துக்கொண்டு இருந்தான்.

விஷ்ணுவிற்கு, சாதிகளின் மீது பற்று அற்று, சாதிகளை சாக்கடை என்று கூறி அவன் தந்தையிடம் அடிக்கடி சண்டை இடுவது சகஜம்.

அவனுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்ற விஷ்ணு, அந்த அறையில் இதற்கு முன்பாகவே யாரோ இருப்பது போல தெரிந்ததால்.

 அறையின் முன், நின்று கவனித்து கொண்டு இருக்கையில், 

உள்ளிருந்து வெளியே வந்து, கதவை பூட்டி விட்டு திரும்பினான் திருமாவளவன் என்கிற திரு.

"நீங்க?" என்ற விஷ்ணுவர்தனுக்கு பிரமிப்பாக இருந்தது,

திருவும்,விஷ்ணுவும் சமத்துவபுரத்தை சேர்ந்தவா்களாயினும், சாதிகளின் பிரிவினையால் பிரிந்து இருந்தனா்.

"உங்கள நான் சமத்துபுரத்துல பாத்துருக்கேன், நீங்க இங்க எப்படி" என்ற விஷ்ணுவர்தனின் பாா்வையே திருவிற்கு சங்கடத்தை கொடுத்தது.

"ஆமா, நான் சமத்துவபுரம் தான், இங்க இளங்கலை தமிழ் சேர்ந்துருக்கேன், இந்த ரூம் எனக்கு குடுத்துருக்காங்க" என்ற வேகத்தில் படிக்கட்டியில் வேகமாக நடந்து, 

 
உணவு அளிக்கும் இடத்திற்கு சென்று இரவு உணவை முடித்துவிட்டு அறைக்கு திரும்பிய திருவிற்கு, 
 
விஷ்ணு தன் அறைக்கு முன்பு அமர்ந்து இருந்தது, அதிர்ச்சியாகவும், சங்கடமாகவும் இருந்தது.

திரு கதவை திறந்து, உள்ளே சென்று தாழிட்டு கொண்டு, அங்கு இருந்த தகர கட்டிலில் போய் படுத்துக்கொண்டான், 

 
இதயத்துடிப்பு இயல்பை விட, அதிகமாக துடித்தது, வெளியே இருந்து கதவை வேகமாக தட்டும் சத்தம் கேட்டது.

கதவை திறந்த மாத்திரம், கண்களை முடிக்கொண்டு பேச ஆரம்பித்தான் திரு.

"இந்தா பண்ணை வீட்டுக்காரே, உங்க அய்யன் எங்க ஆளுங்கள ஊர விட்டு ஒதுக்கி வச்ச நாள்ல இருந்து, 

 
இந்த தேதி வரைக்கும் உங்க ஆளங்கக்கூட நாங்க வரது இல்ல, ஏன் உங்க ஆளுங்க வச்சிருக்க டீக்கடையில் கூட நாங்க டீ குடிக்கிறது இல்ல,
 
 நான் படிக்க வந்துருக்கேன்,பிரச்சனை வேணாம்" என்று முடித்த பின் கண்ணை திறந்தான் திரு.

தன் இரு கையையும் கட்டிக்கொண்டு, அவன் பேச்சை கேட்டப்படி இருந்தான் விஷ்ணுவர்தன்.

"நம்ம உள்ள போய் பேசலாமா, வா" என்று தோளை அணைத்தப்படி, உள்ளே வந்தான் விஷ்ணு.

"திருகிட்ட யாரும் சண்டை போட வரல,எனக்கும் இந்த ரூம் தான் குடுத்து இருக்காங்க, நானும் நீயும் மட்டும் தான் சமத்துவப்புரத்துல இருந்து, வந்துருக்கோம், நம்ம நல்ல நண்பர்களா இருப்போம்" என்றப்படியே விஷ்ணு தன் பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே வைத்தான்.

திரு அமைதியாக தன் கட்டிலில் போய் படுத்துக்கொண்டான்.

மறுநாள் வகுப்பின் முதல் நாள்,

ஒவ்வொருவரும் தன்னை வகுப்பில் அறிமுகப்படுத்தி கொண்டனர், 

 
புது நண்பர்கள், சாதி தீயின் தாக்கம் சற்றும் அற்ற ஒரு உண்மையான சமத்துவ சூழல், திருவிற்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தது.

தன் கிராமத்தையும் பண்ணையாரின் கட்டுப்பாட்டுக்குள், நசுங்கி, புழுதியின் புழுக்கத்தில் வாழும் வாழ்க்கையின் மீது வெறுப்பும், 

 
ஊர் மக்களை கல்வியின் மூலம் மாற்றவேண்டும் என்ற எண்ணமும் திருவிற்கு புது வேகத்தையும், தெம்பையும் குடுத்தது.

விஷ்ணுவின் அன்பும், குணமும் திருவிற்கு இனம்புரியாத ஒர் உணர்வை அளித்தது.

" நீ மட்டும் எப்படி சாதி வித்தியாசமே பாக்கமாட்டுற, உங்க அப்பா எங்க ஆளுங்கிட்ட வேலைய அதிக வாங்கிட்டு, கருணையை கொஞ்சமா குடுக்குறாரு,

 
 உங்க அப்பா எங்க ஆளுங்கள எவ்வளவு கொடுமை படுத்துறாரு தெரியுமா விஷ்ணு, 
 
உன்கிட்ட பழகுன ஒரு மாசத்துல நான் எந்த குறையையும் பாக்கல," என்றான் திரு வலியை சுமந்த பாா்வையோடு.

" எனக்கு எங்க அப்பா பண்ணுறத பாத்து,பாத்து சாதி மேல வெறுப்புதான் அதிகமாருக்கு, 

 
சாதி வெறும் பெயர் தானு நினைக்கிறேன் திரு, 
 
அன்பும்,பாசமும் தான் வாழ்க்கையின் ஆழத்தை உணர்த்தும், சாதியில்ல" என்றான் விஷ்ணு.

விஷ்ணுவும்,திருவும் இணைப்பிரியாத நண்பர்களாய் இருந்தனா்.

இதற்கிடையில், கல்லூரியில் உடல் உறுப்பு தானம் முகாம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.

"டேய்,விஷ்ணு வாடா,  நம்மளும் போய் உடல் உறுப்புகளை தானம் செய்வோம்" என்றான் திரு, உரிமையோடு.

"ஏய், என் உடல், உயிர் அனைத்தும் உன் அன்புக்கு சமர்பணம்னு சொல்லுவ, இப்போ என்னனா, வா தானம் பண்ணுவோனு சொல்லுற, டேய் என்னை ஏம்மாத்துற நீ," என்றான் விஷ்ணு நக்கலாக.

"அப்படி சொல்லலடா, கிளம்பப்போறாங்க வாடா போய் பேரு குடுத்துட்டு வந்ததுருவோம்" என்றான் திரு விஷ்ணுவின் கையை பிடித்து இழுத்தப்படி.

"டேய், விடுடா நானே வரேன்" என்று விஷ்ணு வந்தான்.

இருவரும் உடல் உறுப்பு தானம் தர சம்மதித்து, பெயர் கொடுத்து விட்டு வந்தனா்.

திரு மட்டும் சோகமாக இருந்தான்,

"என்னம்மா கண்ணு சௌக்கியமா, " என்று பாடல் பாடிக்கொண்டுருந்தான் விஷ்ணு.

"என்னடா ஆச்சி உனக்கு, ஏண்டா இப்படி இருக்க" என்றான் திருவின் தோளில் கையை வைத்து விஷ்ணு.

"விஷ்ணு என் அன்பு மேல சந்தேகம் படாத டா, உனக்கு ஒண்ணுனா என் உயிர குடுப்பேன் டா" என்றான் திரு.

"டேய், போடா உன்னை எனக்கு தெரியாதாடா" என்ற விஷ்ணு பேசிக்கொண்டு இருக்கும் போதே.

தூரத்தில் யாரோ விஷ்ணுவர்தன் என்று அழைப்பதுபோல சத்தம் கேட்க, இருவரும் திரும்பி பாா்த்தனா்.

இங்கு வா என்பது போல கை சைகை செய்தான் அவனது நண்பன்..

இருவரும் சென்று பாா்த்தப்போது, அங்கே ஒரு 17 வயது மதிக்கத்தக்க பெண் நின்றுக்கொண்டு இருந்தாள்.

இருவரும் வரும் சத்தத்தை கேட்டு  திரும்பினாள் நாச்சியாா்.

நாச்சியாா், நல்ல உயரம், உயரத்திற்கு ஏத்த உடல்வாகு, பட்டு பாவாடை, தாவணி, கழுத்தில் தங்க செயின் பெரிய டாலர் வைத்து, சுந்தர முகம், தலை நிறைய மல்லிகைப்பூ, காலில் மெத்த ஜால்ரா கொலுசு, கை நிறைய தங்க வளையல், குறும்புத்தனம், வெகுளித்தனமான  சிரிப்பு, என்று நின்றவளை விஷ்ணு ஒரு தரம் சுற்றி வந்தான்.

"என்ன ஆச்சி, இங்க வந்துருக்க தனியாவா வந்த" என்றான் விஷ்ணு.

 
(விஷ்ணு தன் தங்கையை ஆச்சி என்றுதான் அழைப்பான்)

"இல்ல அண்ணன், உன்ன பாக்கத்தான் வந்தேன், நான் 12 வது படிக்க நம்ம டவுன்ல தான், அய்யன் சேத்துவிட்டாரு, அதேன் உன்னை ஒரு எட்டு பாத்துப்புட்டு போகலாமுனு வந்தேன்" என்றாள் கொஞ்சிய குரலில்.

திருவிற்கு நாச்சியாரை பார்த்த முதல் கணமே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. இனம் புரியாத உணர்வு, அவள் மேல் உருவானதை உணர்ந்தான் திரு, 

ஒவ்வொரு முறையும் நாச்சியார் விஷ்ணுவை பார்க்க கல்லூரிக்கு வரும் போது ஏற்படும்  உணர்வுக்கு பெயர் என்ன என்று யோசித்தே பல இரவுகள் இவனுக்கு விளங்காமலே விலகியது.  . 

தன் நண்பனின் தங்கையை காதலிக்கிறோமே என்ற குற்றஉணா்வு வந்தாலும், அதைத்தாண்டி நாச்சியாரின் நினைவுகள் பசுமரத்து ஆணி போல புதைந்து இருப்பதை மறைக்கமுடியாமல் ஒரு இருதலை கொள்ளி போல வாடினான் திரு.

நாச்சியார், திருவிடம் அதிகம் பேசவில்லை என்றாலும், அவள் கண் மட்டும் எதையோ திருவிடம் பரிமாறிக்கொண்டு தான் இருந்தது.

விஷ்ணுவின் தாய்,தந்தையர் வந்தால் திரு அங்கு செல்லமாட்டான்,  நாச்சியார் வந்தாள் மட்டும் விஷ்ணுவோடு செல்வான் திரு.

அன்று விஷ்ணுவிற்கு தந்தி வந்தது, அவனது பாட்டி இறந்து விட்டதாகவும், உடனே விஷ்ணுவை சமத்துவபுரத்துக்கு வர சொல்லி, எழுதிருந்தது.

விஷ்ணுவும், திருவிடம் மூன்று நாட்களுக்குள் வருவதாக சொல்லிவிட்டு, சமத்துவபுரத்துக்கு சென்றான்.

திரு தனிமையில் இருந்தாலும், நாச்சியாரின் நினைவுகள் ஒருவித அமைதியும்,நிம்மதியும் கொடுத்தது.

திரு கல்லூரியின் நூலகத்தில், கண்ணதாசனின் சேரமான் காதலி நூலை படித்துக்கொண்டு இருந்தான்.

"ஒரு நிமிஷம்" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டதும்,

படிப்பதை நிறுத்திவிட்டு, தலையை உயர்த்தினான் திரு, எதிரில் நாச்சியார் நின்றுக்கொண்டு இருந்தாள்.

கனவா, நினைவா என்று பாா்த்தப்படியே இருந்தான்.

"ரொம்ப யோசிக்காதீங்க, நான் நாச்சியார் தான் வந்துருக்கேன்" என்றாள் நாச்சியார் தன் தலையை குனிந்தபடி .

திரு, தீடீரென புத்தகத்தை மூடிவிட்டு, எழுந்து நின்றான்.

"உங்க பாட்டி இறந்துட்டதா விஷ்ணு ஊருக்கு போயிட்டான்," என்றான் திரு, முகத்தை திருப்பிக்கொண்டு,

"எனக்கு தெரியும், நான் உங்கள பாக்கத்தான் வந்தேன், என்னை ஊருக்கு வரவேண்டாம்னு அய்யன் சொல்லிட்டாரு," என்றாள் நாச்சியார், வெக்கத்தோடு.

திரு மெளனமாக இருந்தான்.

"பொண்ணுங்குற  வெக்கத்தை விட்டு சொல்லுறேன், உங்கள என் மாமாவா நினைச்சிட்டேன், வாழ்ந்தா உங்க கூடதான் வாழ்வேன், உங்க மனசுல நான் இருக்கேனு, எனக்கு தெரியும், நீங்க என்னை விரும்புனா, நாளைக்கு மாரியம்மன் கோயிலுக்கு வாங்க" என்ற நாச்சியார், திருவை திரும்பி திரும்பி பாா்த்தப்படியே  நடந்து சென்றாள்.

திருவிற்கு மனதில் பாரத்தை தூக்கி வைத்தது போல இருந்தது. நண்பனின் தங்கை, சாதியின் ஏற்றத்தாழ்வு, இரண்டு காரணங்களும் திருவின் காதலுக்கு தடையாக இருந்தது, 

திரு யோசித்தபடியே , உணவு உண்ணாமல், உறக்கம் இல்லாமல் இருந்தான்.

திருவின் மனசாட்சி அவன் முன் வந்து பேசியது.

"என்னடா, நண்பனின் தங்கையை காதலிக்கிறோமே, இது நட்புக்கு செய்ற துரோகம்னு நினைக்கிறீயா?, இல்ல, சாதிய நினைச்சி உன் காதல தூக்கி ஏறிய போறீயா, சாதி,மதம் பாத்து காதல் வராது, திரு தூங்கு, காலையில கோவிலுக்கு போயி நாச்சியாரை  பாரு" என்றது திருவின் மனசாட்சி.

மறுநாள் காலை மாரியம்மன் கோவிலில் முதல் அர்ச்சனை நடந்துக்கொண்டு இருந்தது.

நாச்சியாரும்,திருவும் பூஜையை முடித்துவிட்டு, வேப்பமரத்தின் அடியில் வந்து அமர்ந்தனா்.

திரு தயங்கியப்படி பேச ஆரம்பித்தான்,

"உங்க அண்ணனுக்கு  இது மட்டும் தெரியவந்தா என்ன ஆகும், எங்க நட்ப களங்கப்படுத்துற மாதிரி இருக்கு நாச்சி" என்றான் திரு மெதுவாக.

"நான் உங்கள முதல்முறையா பாக்கும் போது நீங்க, என் அண்ணுக்கு நண்பன் இல்ல,  உங்கள எனக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே தெரியும், நான் உங்க தெருவ ஒட்டி இருக்குற மண்ரோட்டுல சைக்கிள் ஒட்டி கத்துக்கிட்டு இருந்தேன், அப்போ என் தாவணி சைக்கிள் செயின்ல மாட்டிக்கிட்டதுல, தடுமாறி உங்க வயலுல விழுந்துட்டேன், அப்போ என் தாவணி சுத்தமா கிழிஞ்சி

 போச்சி, அப்போ நீங்க தான்  உங்க அத்தாச்சி புடவைய எனக்கு குடுத்தீங்க, நியாபகம் இருக்கா" என்றாள் திருவின் கண்களை பார்த்தப்படி.

இருவரும் இரண்டு நிமிடங்கள் கண்ணோடு கண் வைத்து பார்த்தப்படியே இருந்தனா்.

சிறிது நேரம் இருவரும் பார்வையை பாிமாறிய பின், 

இருவரும் முகத்தை திரும்பிக்கொண்டனா்.

"ம்ம, நியாபகம் இருக்கு,அது நீயா ஆளே மாறி போயிட்ட" என்றான் திரு காதலோடு.

"உங்க அப்பாக்கு எங்க ஆளுங்கள கண்டாலே பிடிக்காது, நம்ம காதல ஏதுக்குவாறு னு நினைக்கிறீயா, நம்ம காதலோட ஆயுள் ரொம்ப கம்மி நாச்சி, ஆசைய வளர்த்துக்காத" என்றான் திரு முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு.

"மாமா, நம்ம காதலோட ஆயுள் நம்ம வாழ்ற நாள்ல தான் இருக்குனு சொல்லுறீங்களா?" என்றாள் நாச்சியார்.

"பின்னே" என்றான் திரு, 

" நாச்சியார் னு ஒருத்திருந்தா, அவ திரு வ காதலிச்சி, அவனுக்காகவே வாழ்ந்து, அவனுக்காக செத்தானு இருக்கனும், நான் சாகும் போது உங்க மனைவியா சாகனும்," என்று நாச்சியார் சொல்லி முடிக்கும் போது, 

திரு, நாச்சியாரை தன் வலது கையால் இழுத்து, தன் மார்போடு அணைத்துக்கொண்டான். இருவரின் காதலால் உண்டான கண்ணீர் மட்டும் கங்கையாய் பெருகி ஒடியது.

வீதியில் 2 போட்டோ 5ரூபாய், வாங்க அம்மா வாங்க,  என்று தோளில் கேமராவை வைத்து கத்திக்கொண்டு இருந்தான் ஒரு இளைஞன்.

"நம்ம போட்டோ எடுத்துப்போம்" என்ற நாச்சியார், எழுந்து சென்று, அந்த இளைஞனை கோவிலுக்குள் அழைத்து, இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.

விஷ்ணுவிற்கு தெரியாமலே திருவும், நாச்சியாரும் காதலித்து வந்தனா்.

மூன்றாண்டு கல்லூரி படிப்பை முடித்த திருவும், விஷ்ணுவும்.  12வது முடித்து நாச்சியாரும் சமத்துவப்புரத்துக்கே வந்து விட்டனா்.

இதற்கிடையில், விஷ்ணு விற்கு, பட்டணத்தில்  வேலை கிடைத்து, வெளி ஊருக்கு சென்று விட்டான், 

திருவின் மீது  விஷ்ணு வைத்த பாசம் அதிகரித்தை தவிர, ஒரு போதும் குறைந்தப்பாடியில்லை.

திரு, அவர்கள் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு இருந்தான். நாச்சியாரும்,திருவும் மலைக்கோவிலில் சந்தித்து வந்தனா்.

ஒருவருக்கு ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனா்.

நாச்சியாரின் அறையை சுத்தம் செய்த வேலையாள், நாச்சியரும்,திருவும் உள்ள போட்டோவை நாச்சியாரின் தாயிடம் கொடுத்தனா்.

நாச்சியாரின் தாய், எதுவும் தெரியாத போல இருந்து கொண்டு, நாச்சியாரை நோட்டமிட்டாள்.

சிறிது கால கவனிப்புக்கு பின், நாச்சியார் திரு என்ற வேறு சாதி பையனை காதலிப்பதை கண்டுபிடித்தாள்.

அன்று யதார்த்தமாக, திருவை சந்திக்கப்போன போது, நாச்சியாரின் தாய்மாமன்கள் திருவிற்கு மயக்கம் வரும் வரை, நாச்சியாரின் கண்முன்னே வைத்து அடித்தனா்.

நாச்சியாரை குதிரை வண்டியில் இழுத்து போட்டு, வீட்டிற்கு அழைத்து வந்தனா். நாச்சியார் தன் கையை நீட்டி, கதறியப்படியே வந்தாள்.

நாச்சியாரை வீட்டினுள் சிறை வைத்தனா், அத்தை,மாமா,பெரியம்மா, பெரியப்பா என்று சொந்தங்கள் அனைவரும் திட்டியும் ,அடித்தும் பார்த்தனா்.

நாச்சியாரின் முன், தற்கொலை செய்வது போல நாடகம் நடத்தினா். நாச்சியாரின் மனம் திருவை நினைத்து கனிந்துக்கொண்டு இருந்தது.

நாச்சியார் முடிவாக,

" நான் ஒரு நாள் வாழ்ந்தாலும் திருவோட பொண்டாட்டியாத்தான்  வாழ்வேன், என்னை தடுத்தீங்க செத்து போயிடுவேன்" என்று தலைவிரி கோலமாக நடு வீட்டில் நின்று சொன்னாள்.

பல மாதங்களாக தனி அறையில் முடங்கியப்படியே, உடல் மெலிந்து, கலையிழந்து காணப்பட்டாள் நாச்சியார்.

நாச்சியாரின் காதல் விவகாரம் ஊரெங்கும் காய்ச்சல் போல பரவியது. 

நாச்சியாரின் காதலுக்கு துணையாக நாச்சியாரின் அக்கா மகள் ஸ்ரீபிரியா இருந்தாள்.

நாச்சியாரின் நிலைமையை திருவிடமும், திருவின் நிலைமையை நாச்சியாரிடமும் பாிமாறிக்கொண்டு இருந்தாள்.

 
 நாச்சியாருக்கு துணையாக ஸ்ரீபிரியாவை வைத்து இருந்தனா், நாச்சியாரின் குடும்பத்தினா்.
 
 இருவரின் மனமும் காதலால் இணைந்து இருந்ததால், சாதியின் தீயினால் தீண்டக்கூட முடியவில்லை.

நாச்சியாரின் தந்தை நாச்சியாரிடம் வந்து, 

"சாிம்மா, உன் விருப்படியே பண்ணி வைக்கிறேன்,நாளைக்கு ஆத்தாக்கூட போயி உனக்கு தேவையானது எல்லாம் சந்தையில வாங்கிட்டு வா" என்று சொல்லி, தலையை தடவினான்.

நாச்சியாரும் தன் காதல் வெற்றி பெற்ற களிப்பில் தூங்கினாள், 

மறுநாள் காலை,

நாச்சியாரை தங்க தட்டில் வைத்து தாங்கினா், அவளது விரும்பத்திற்கு மாறாக யாரும் எதுவுமே பேசவில்லை,

 
 சந்தைக்கு அழைத்து சென்று, புது துணியை வாங்கி கொடுத்து, மௌன ராகம் படத்திற்கு அழைத்து சென்று, ஹோட்டலில்  மதியம் உணவு வாங்கி கொடுத்து, சந்தோஷமாக வைத்து இருந்தனா், மாலை  வீட்டிற்கு திரும்பி வந்தனா்.

வீட்டில் அவளது தாய் மட்டும் இருந்தாள்,

நாச்சியாரின் தாய்மாமன்,

"அக்கா, நாச்சியார பத்திரமா, அவ நினைச்ச இடத்துக்கு அனுப்பி வைக்கனும், சும்மா திட்டாம பக்குவாமா பேசு" என்று வீட்டின் வாசலில் இருந்தது சொன்னப்பின் குதிரை வண்டியில் இருந்து  நாச்சியாரை இறக்கிவிட்டு கிளம்பினான்.

நாச்சியாரும் தன் காதல் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருந்தாள்.

நாச்சியாரின் தாய், கையில் எண்ணெய் எடுத்துக்கொண்டு வந்தாள்,

"அம்மாடி, வா குளிக்கலாம்" என்றாள் பாசமாக.

"நான் காலையில தானமா குளிச்சேன்," என்றாள் தாவணியை மாத்திக்கொண்டே,

" வா, வெயில உடம்பு சூடாகி போய் இருக்கும், நீ போயிட்ட அப்புறம் நானா வந்து பண்ணிவிடுவேன், சொல்லு" என்றாள் கரிசனமாக.

நாச்சியாரை தலையில் எண்ணெய் வைத்து குளிப்பாட்டி, முகத்திற்கு மஞ்சள் பூசி,தலையை காய வைத்து, அழகாக பிண்ணி, தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து, நல்ல பட்டு புடவையை கட்டிவிட்டு, புது பெண் போல அலங்காரம் செய்தாள் நாச்சியாரின் தாய்.

அம்மாடி, இந்தா இளநீர் குடிம்மா, அப்பதான் சூடு குறையும் என்று அவளை குடிக்க வைத்தாள்.

"நாச்சி, நான் செத்தா இந்த குடும்பம் ஒன்னும் இல்லாம போயிடும், உங்க அப்பா செத்தா நான் விதவையாகனும், உன் அண்ணை செத்தா, கொள்ளி போட வாரிசு இல்லாம போகும், ஆனா, நீ செத்தா மட்டும்தான் குடும்பத்தையும்  கெளரவத்தையும் காப்பாத்த முடியும், நீ செத்து போடீ என்று காலால் நாச்சியார் அமர்ந்து இருந்த நாற்காலியை ஏட்டி உதைத்தாள் நாச்சியாரின் தாய், 

"ஏய், பிஞ்ச விளக்கமாறுக்கு பட்டு குஞ்சம் கேக்குதோ, குப்பைக்குள்ளே டமுக்குறான்(பூச்சி மருந்து), ஒளிச்சி வச்சிருக்கேன், ஒழுகு மரியாதையா, குடிச்சிட்டு படுத்துரு, ஊர் பஞ்சாயத்துக்கும், எங்களுக்கும் எழுதுற மாதிரி எழுதி வச்சிருக்கேன் கையெழுத்து போடு டீ", என்று நாச்சியாரின் கழுத்தில் காலை வைத்து நசுக்கியப்படியே சொன்னாள், நாச்சியாரின் தாய்.

"நான், அவர் கூட போய் வாழ்ந்துடுறேன் மா" என்று கதறினாள் நாச்சியார்.

இதை கேட்டு மேலும் ஆத்திரம் அடைந்த நாச்சியாரின் தாய், அவளது தலையை பிடித்து தூக்கி, தூணில் இடித்தாள்.

"நான் கிழக்க போயிட்டு வரதுகுள்ள நீ செத்தனு செய்தி எனக்கு வரனும், இல்ல நீ உன் அண்ணன் கூட ஒரு நாள் இரவு இருந்ததுக்கு சம்ம" என்றாள் நாச்சியாரின் தாய், சாதி வெறியின் உச்சத்தில்.

"நெல்ல கொட்டுனா அள்ளிடலாம், நீ சொல்ல கொட்டிட்ட, பெத்த பிள்ளையை  எப்படி மா, உன்னால  இப்படி பேச முடியுது,

மறு ஜென்மத்துல நான் உனக்கு மட்டும் மகளா பிறக்கக்கூடாது னு வேண்டிக்கிறேன். 

 
செத்தாலும் என் முகத்துல முழிக்காத, சீ" என்று முகத்தை சுளித்தப்படி தன் அறையின் மெத்ததையில் போய் விழுந்து குமுறி குமுறி அழுதப்படியே இருந்தாள் நாச்சியார்.

நாச்சியாரின் தாய்க்கு தான் அவ்வாறு கேட்டது, தவறு என்று குற்ற உணர்வே வண்டு துளைப்பது போல் அவளது இதயத்தை துளைத்தது, மறுமுறை நாச்சியாரின் முகத்தை பார்க்கும் அளவிற்கு சக்தியும் இல்லை.

நாச்சியாருக்கு தன்னை தன் தாயே இழிவுப்படுத்தியதை ஏற்க மனம் இல்லை,

வேகமாக சென்று, குப்பையில் மறைத்து வைத்த விஷத்தை எடுத்து தண்ணீரை குடிப்பது போல குடித்தாள் நாச்சியார்.

(குழந்தைகள் எடுத்து விளையாடாக  பூச்சி மருந்து குடித்துவிடுவார்கள் என்று குப்பைகளில் மறைத்து வைப்பார்கள், இது இன்றளவிலும் பல கிராமங்களில் வழக்கத்தில் உள்ளது)

நாச்சியாருக்கு மயக்கம் வருவது போல இருந்தது, தட்டி  தடுமாறி வீட்டின் முற்றைத்தை அடைந்து, அப்படியே தூணை பிடித்தப்படியே அமர்ந்தாள்.

நாச்சியாரை பாா்க்க அவளது அக்கா மகள் ஸ்ரீபிரியா வந்தாள்,

வந்தவள் நாச்சியாரை அப்படியே பிடித்தப்படி சித்தி என்னாச்சி,

"அய்யோ, பெருமாளே" என்றாள் நாச்சியாரை தன் மடியில் சுமந்தப்படி ஸ்ரீபிரியா.

"ஆச்சி, திரு,திரு வ பாக்கனும்" என்று கெஞ்சினாள்.

சித்தி இரு, என்று அவளை படுக்க வைத்து விட்டு, ஒத்த அடி பாதையில் விழுந்து அடித்துக்கொண்டு ஒடி, வயலில் விவசாயம் பாா்த்துக்கொண்டு இருந்த திருவிடம் நடந்ததை விளக்கி அழைத்தாள் ஸ்ரீபிரியா.

திருவும் பதறி  போய் ஒடிவந்தான், வீட்டினுள் ஒடி வந்த திருவை மாமா என்று அழைத்தாள் நாச்சியார் வாயிலிருந்து நூரை தள்ளியபடி ,

"நாச்சி, என்னாச்சிம்மா ஏன் மா இப்படி பண்ணுன" என்றான் திரு நாச்சியாரை தன் மார்பில் அணைத்தப்படி, 

"மாமா, நான் உங்கள விட்டு ரொம்ப தூரம் போறேன், திரும்பி வரமாட்டேன்" என்றாள் மயங்கிய நிலையிலே,

"அப்படி எல்லாம் சொல்லாத மா, உன்னை பிரிஞ்சி என்னால வாழ முடியாது மா " என்றான் திரு கண்ணீரோடு.

"மாமா, நான் சாகும் போது உன் பொண்டாடியா தான்  சாகனும், இந்தா மாமா கட்டிவிடு" என நீட்டினாள் தாலியை.

நாச்சியாரின் உயிர் கொஞ்ச கொஞ்சமாக பிரிந்துக்கொண்டு இருந்தது,

திரு தாலியை கட்டிவிட்டு, நாச்சியாரின் நெற்றியில் முத்தமிட்டான், 

தாலியை இறுக்கி  பிடித்தப்படி, திருவின் மடியில்  சிரித்தப்படியே உயிரை விட்டாள் நாச்சியார். ஒரு சுமங்கலியாக, அதுவும்  திருவின் மனைவியாக.

திரு, நாச்சியார் முகத்தை தட்டினான், "நாச்சி, ஏய் விளையாடாத, என் உயிரை மொத்தமா புடுங்குன மாதிரி இருக்கு மா, ஏய் நாச்சி" என்ற திருவிற்கு அழுகைய அடக்க முடியவில்லை,

மடியில் வைத்துக்கொண்டு, கட்டிப்பிடித்து புலம்பிக்கொண்டு இருந்தான், அவளது கையால் தன்னையே பலமுறை அடித்துக்கொண்டான்.

அவன் அவளை அணைத்து புலம்பிக்கொண்டு இருந்த வேளையில்,

நாச்சியாரின் தாய்மாமன்கள் திருவை சரமாரியாக தாக்கினா், அவனை துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டினா்,

இதற்கிடையில் நாச்சியாரின் கழுத்திலிருந்து தாலி கயிறு அறுக்கப்பட்டு, அந்த நிகழ்வு மற்றவர்களுக்கு மறைக்கப்பட்டு, அவளது இறுதி சடங்கு நடந்துக்கொண்டு இருந்தது.

விஷ்ணுவிற்கு நாச்சியார் இறந்த செய்தி அறிவிக்கப்பட்டது,  பட்டணத்தில் இருந்து தன் ஊருக்கு வந்த விஷ்ணு, தன் வீட்டிற்கு செல்ல  அவசரமாக மாடு வண்டியில் போய்க்கொண்டுஇருந்தான்.

இதற்கிடையில், திருவை அரிவாளால் துரத்தி, துரத்தி வெட்டினா், திருவிற்கு நாச்சியார் இருந்தால் அவனை தொடக்கூட முடியாது, 

நாச்சியார் இறந்த பின், திரு இப்போ வெறும் எலும்புக்கூடு தான், இருப்பினும் தன் உயிரை தூக்கிக்கொண்டு திரு ஒடக்காரணம் தன் நண்பன் விஷ்ணுவை பார்க்கதான்.

விஷ்ணு வேகமாக வண்டியில் வருவதை பார்த்தும், விஷ்ணு என்று வேகமாக கத்தினான்.

இதற்கிடையில், விஷ்ணு வந்த வேகத்தில் வண்டியின் அச்சாணி கழண்டு, நிலை தடுமாறிய விஷ்ணு கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் கண்ணில் அச்சாணி குத்தியது, 

மூன்று  மாதத்திற்கு பின், 

கண் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட விஷ்ணு, தன் நண்பனை தேடி அவனது வீட்டிற்கு பல எதிர்ப்புகளை மீறி சென்றான்.

திரு இல்லை என்பதை மெல்ல, மெல்ல அவன் அவனது தெருவில்  நுழையும் போதே உணர ஆரம்பித்தான்.

வீட்டினுள் விஷ்ணு நுழைந்த மாத்திரமே.

திருவின் அம்மா வைத்தாள் ஒப்பாரிய, 

"நான் கண்டுங்காலு தண்ணியில காச பரப்பி வச்சா, காசு எடுக்க பிள்ளை உண்டு, எனக்கு கருமம் செய்ய பிள்ளை இல்ல,
 
முழங்காலு தண்ணியில முத்த பரப்பி வச்சா, முத்து எடுக்க பிள்ளை உண்டு, நான் பெத்த திரு மகனே எங்களுக்கு மோசம் செய்ய பிள்ளை இல்ல". என்று புலம்பி அழுதாள்.
 

உள்ளே நுழைந்த விஷ்ணுவிற்கு, வீட்டில் பார்த்து அழுவதற்கு திருவின் புகைப்படம் கூட இல்லை, சுவரில் ஆணி அடித்து, அதில் பூவை வைத்து, விளக்கு எரிந்து கொண்டு இருந்தது.

விஷ்ணு விடம் கூட திருவின் போட்டோ இல்லை,போட்டோ எடுத்தால் பிரிந்து விடுவோம்னு இருவரும் எடுத்துக்கவே இல்லை.

விஷ்ணுவிற்கு, தன் உயிர் நண்பன் இந்த உலகத்தில் இல்லை என்பதை எற்றுக்கொள்வே முடியாத நிதர்சனமாய் அவனை நிலைகுலைத்தது.

" என் மகன் செத்துட்டான், இல்ல இல்ல கொன்னுட்டீங்க, ஆனா, சாகும்போது கூட அவன் உடல் உறுப்புகளால் நாலு பேரு இந்த உலகத்துல  வாழுறாங்க, என் மகள பெரிய இடத்துல கட்டி குடுக்குறேனு என் மகன் சொன்ன, உன்னால முடியுமா சொல்லு," என்று விஷ்ணுவின் சட்டைப்பிடித்து கேட்டான் திருவின் தந்தை.

திருவின் தங்கையை பிடித்து இழுத்துக்கொண்டு அய்யனார் கோயிலுக்கு சென்றான் விஷ்ணு.

வெள்ளை கயிறை எடுத்து, மஞ்சளில் நனைத்து, மஞ்சள் வைத்து தாலியை கட்டினான் விஷ்ணு, முத்தழகியின் கழுத்தில்.

சிகிச்சையை முடித்து தன் வீட்டிற்கு வந்துக்கொண்டு இருந்த, விஷ்ணுவை வழி மறித்த ஸ்ரீபிரியா. திரு மற்றும் நாச்சியாரின் காதலையும், அவர்கள் குடும்பம் செய்த ஆணவக்கொலையும் சொன்னதால்  தான், 

விஷ்ணு முத்தழகியின் கழுத்தில் தாலி கட்ட காரணம். 

இப்போது, நினைவுகளில் இருந்து மீண்டு, வீட்டை விட்டு வெளியே வந்தான் விஷ்ணு.

முத்தழகியின் கைபிடித்து நடக்க ஆரம்பித்தான்,

"நில்லுடா மகனே, எங்கடா போற" என்றான் சாரங்கபாணி.

"மகனா, நானா உன் மகன் எப்பயோ செத்துட்டான், இப்போ உன் முன்னாடி நிக்கிறது வீரமணி மகன்,  சாதி என்ற அரிதாரத்தை பூசிக்கிட்டு ஏன்யா, அநியாயம் பண்ணுறீங்க, என் தங்கச்சியையும், நண்பனையும் கொன்னுடீங்களே பாவிங்கள, 

கொள்ளி போட வாரிசு வேணும்னு தானே என்கிட்டே நடத்தாத மறைச்சி, தங்கச்சிய சாக சொன்ன, கொள்ளி போட ஆளு இல்லாம அனாதை பிணமா போகனும், 

நான் உங்கள தலை முழுகுறேன் என்று தன் தலையில் தண்ணீரை ஊற்றினான் விஷ்ணு. உன் சாதிவெறியால உன் புள்ளையங்கள இழந்துட்ட,

நான்  இப்போ மருமகனா மட்டும் போகல, மறுமகனாவும் போறேன், என்ற விஷ்ணு முத்தழகியோட திருவின் வீட்டிற்கு புறப்பட்டான்.

விஷ்ணுவின் தந்தை,தாய் மற்றும் உறவினர்கள், நாச்சியாரையும், விஷ்ணுவையும் சாதி என்னும்  இரையாகினர்.

 
அங்கு திருவின் உடல் உறுப்புகளோ வேற்று சாதியினருக்கு மறு வாழ்க்கையை தந்தது.

சாதி என்னும் காட்டு தீயில் இருந்து தப்பித்த இந்த குயில், நீலகுயிலாய் மாறி தன் கூட்டை தேடி சென்றது.

 
சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர், என்ற பாரதியின் கனவை இவர்களின் வாழ்க்கை நிஜமாகியது.

-மீனாக்ஷி சிவக்குமார்

 

Quote
Share:

error: Content is protected !!

Please Login or Register