Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

ஒரு மெல்லிய கோடு - மீனாக்ஷி சிவக்குமாா்  

  RSS

Meenakshi Sivakumar
(@meenakshi-sivakumar)
Active Member Writer
Joined: 4 months ago
Posts: 18
08/06/2019 7:17 am  

ஒரு மெல்லிய கோடு - மீனாக்ஷி சிவக்குமார்

நாமக்கல் மாவட்டம் பெரியகுளம் கிராமத்தில் உள்ள குளத்தில் சகாதேவனுக்கு காலை ஏழு மணி அளவில் திதி கொடுத்துக்கொண்டு இருந்தனர் சகாதேவனின் குடும்பத்தினர்.

பாரதிக்கும் திருமுருகனுக்கும் பிறந்த ஐந்து ஆண்குழந்தைகளில் ஐந்தாவது மகன்தான் சகாதேவன்.

பத்தாவது படிக்கும்போது பள்ளி
ஆண்டு விழாவிற்கு சென்றவன் அன்றில் இருந்தே காணவில்லை.

சமீபத்தில் கிடைத்த தகவலின் படி சகாதேவன் இறந்ததாக உறுதி செய்து இன்று திதி கொடுக்கின்றனர் அவனது குடும்பத்தினர்.

அந்த நிகழ்வு நடந்து மூன்று மாதம் கடந்த நிலையில்,

இரவு ஒன்பது மணி,

வசந்தி அரியலூர் மாவட்டம் கூவத்தூரில் உள்ள டஸ்ட் லேஸ் சாக் பீஸ் என்ற சாக் பீஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலையை முடித்துவிட்டு,

தனது மூன்று மாத ஆண் குழந்தையை தோளில் படுக்கவைத்துக்கொண்டு, ஆண்டிமடத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல பேருந்தை எதிர் பார்த்து காத்துகொண்டு இருந்தாள்.

இருட்டாகவும், அதிக ஆள் நடமாட்டம் இல்லாமலும், மார்கழி மாதம் குளிர் சற்று தூக்கலாகவே இருந்தது,

தனது குழந்தைக்கு குளிராமல் இருக்க காதிற்கு குல்லா, சுவடர், காலுக்கு காலுறை என்று பலவித பாதுகாப்பு கவசம் அணிவித்து இருந்தாள் வசந்தி.

அன்பு செல்வன் ஒரு மாற்று திறனாளி குழந்தை, இடது காலை விட வலது கால் சிறியது. வசந்தி தனது குழந்தையை பார்த்து பார்த்து கொஞ்சிக்கொண்டு இருந்தாள்.

அந்த நேரத்தில்,

யாரோ மூவர் வசந்தியின் முகத்தில் பைக் வெளிச்சத்தை அடித்தனர்.

“யாரது, ஏன் இப்படி வெளிச்சம் அடிக்கிறீங்க” என்று சத்தமாக கேட்டாள், தனது ஒரு கையால் வெளிச்சம் முகத்தில் படாமல் தடுத்தபடி.

“டேய், செம்மையா இருக்கல, மச்சி வாடா” என்று ஒருவன் சொல்ல மற்ற இருவரும், வண்டியை நிறுத்தி விட்டு, வசந்தியின் அருகில் சென்றனர்.

வசந்திக்கு பயமாக இருந்தது, அவர்கள் அருகில் வருவதுக்குள்ளே, ஓட்டம் பிடித்தாள்.

வசந்தி ஓடுவதை பார்த்த மூவரும் தனது பைக்கில், ஏறி அவளை விரட்டினர்,

சிறிது தூரத்தில் வசந்தின் அருகில் சென்று அவளை வண்டியில் இருந்தபடியே கையை பிடித்து இழுத்தனர் அந்த மூவரும்,

அவர்களை தள்ளி விட்டு, சாலையோரமாக இருந்தாலும் சற்று பள்ளத்தில் உள்ள ஒரு மாடி வீட்டின் கேட்டை திறந்து, மாடிப்படியின் இடுக்கில் ஒளிந்துக்கொண்டாள் வசந்தி,

மூவரும் சிறிது நேரம் தேடலுக்கு பின், அந்த இடத்தை விட்டு சென்று விட்டனா்.

வசந்திக்கு வேர்த்து, வெலவெலத்து போய் இருந்தது. தன் முந்தானையால் முகத்தை துடைத்தாள், அன்பு சிணுங்கி  கொண்டு இருந்தான்.

சிறிது நேரம் கழித்து இந்த இடத்தை விட்டு போகாலாம் என்று தீர்மானித்து வசந்தி, அந்த இடுக்கிலே ஒளிந்து இருந்தாள்.

“குழந்தையும் கையுமா இருக்கேன், என்னை இப்படி துரத்துராங்களே, இவங்களாம் மனித ரூபத்துல இருக்குற மிருகம்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் வசந்தி.

அன்பு “வீல்” என்று கத்தினான்.

“யாரு இங்க வெளியில வாங்க” என்று ஒரு அறுபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெரியவா் குரல் கொடுத்தாா்.

நாராயணன், ஒய்வு பெற்ற அரசினா் மகளிர் பள்ளியின் தலைமை ஆசிரியர்.

தலையில் ஆங்காங்கே தெரியும் கருப்பின புரட்சி, கண்ணோடு ஒட்டி உறவாடும் கண்ணாடி,

நெற்றியில் திருநீறு, கழுத்தில் ருத்திராட்சம், ஆறடி உயரம், நிதானமான பார்வை,

நேர்த்தியான நடை, பேச்சில் ஆசிரியருக்கான உயிரோட்டம். தீவிர சிவ பக்தன் என்று பார்க்கையிலே தெரியும் அளவிற்கு பக்குவமான மனிதர்.

இடுக்கில் இருந்து வெளியே வந்தாள் வசந்தி.

“பாா்வதி இங்க வாயேன்” என்றார் நாராயணன்.

பாா்வதி, அறுபது வயது மதிக்கத்தக்க முதியவள். குடும்பாங்கான தோற்றம், நடு நெற்றியில் குங்குமம், மங்கலகரமான முகம், சுமாா் ஐந்தடி உயரம், காட்டன் புடவையை மடிப்பு கலையாமல் கட்டி இருக்கும் அழகு,

“சொல்லுங்க” என்று வந்து வாசலில் நின்றாள் பாா்வதி.

அன்பு தொடர்ந்து அழுதபடியே இருந்தான், அந்த அழுகையை எந்த ஒரு தாயாலும் தாங்கிக்கொள்வே முடியாது.

“யாரும்மா நீங்க, ஏன் இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க,அதுவும் 11 மணிக்கு” என்றாள் பாா்வதி மென்மையான குரலில்.

“நான் வேலையை முடிச்சிட்டு வரும்போது, மூன்று பேரு என்னை துரத்திட்டு வந்தாங்கம்மா, அதான் என்னை காப்பாத்திக்க, இங்க வந்து ஒளிஞ்சிக்கிட்டேன் மா” என்றாள் மெதுவாக.

நாராயணன், அங்கு உள்ள மர ஊஞ்சலில் அமர்ந்து இருந்தாா்.

“குழந்தை ரொம்ப கத்துத்து பாரு, முதல பசியாதுங்க” என்றாள் பாா்வதி தாய்மை உணர்வோடு.

“அம்மா, எனக்கு பால் சுரக்கல மா, நீங்க பால் இருந்தா, கொஞ்சமா தாங்கம்மா” என்றாள் வசந்தி.

நாராயணண் எழுந்து மாடிக்கு சென்றாா்.

“என்னம்மா சொல்லுற குழந்தை பொறந்து எத்தனை மாசமாகுது” என்றாள் கனிந்த குரலில்.

“மூணு மாசமாகுது மா” என்றாள் வசந்தி, அன்பை தோளில் தட்டியபடி.

“மூணு மாசமா, நீங்க உள்ள வந்து உட்காருங்க பாலு எடுத்திட்டு வரேன்” என்று பாா்வதி அடுப்பங்கறையை நோக்கி நடந்தாள்.

சிறிது நேரத்திற்கு பின்,

ஒரு டம்பளரில் பாலை ஊற்றி எடுத்து வந்தாள் பாா்வதி.

பாலை அன்பிற்கு குடுத்தாள் வசந்தி, அன்பு பாலை மூச்சை விடாமல் முழுவதும் குடித்தான்.

வசந்தி, 25 வயது மதிக்கத்தக்க பெண், நல்ல மாநிறம், கழுத்து வரை நீண்டு இருக்கும் கூந்தல், நன்கு சீர்திருத்தம் செய்யப்பட்ட புருவங்கள்,

கிளி போன்ற மூக்கு, அதில் சிகப்புக்கல் மூக்குத்தி, ஆரஞ்சு பழம் இரண்டை ஒட்டி வைத்ததுப்போல் உதடு,

கையிலும், காலிலும் மருதாணியை சில நாட்களுக்கு முன்பு வைத்து இருந்த தடம், கழுத்தில் மெல்லிய செயின் அதை ஒட்டிய தாலி,

இரண்டு கையிலும் ஒவ்வொரு வளையல், சிறிது கூட தன் உடல் தெரியாமல் கட்டிருந்த புடவை என பெண்மையின் சாஸ்திரத்தில் உள்ள அனைத்தும் கொண்ட இருந்தாள் வசந்தி.

“ஏன் மா? உன் புருஷன் எங்க? என்ன பண்ணுறாரும்மா?” என்றாள் பாா்வதி.

“என் புருஷன் என்னை விட்டுட்டு போயிட்டாரும்மா” என்றாள் வசந்தி, கவலையோடு.

“என்னாச்சிம்மா, உனக்கு எந்த ஊரு, என்ன வேலை பாா்க்குற” என்றாள் பாா்வதி.

“குழந்தை ஊனமா பொறந்துச்சினு விட்டுவிட்டு போயிடாருமா, நான் கைக்குழந்தையை வச்சிக்கிட்டு சாக் பீஸ் கம்பெனியில சாக் பீஸ் பாக்ஸ்ல அடுக்கி வைக்கிற வேலை பாத்துக்கிட்டு இருக்கேன் மா, ஆண்டிமடத்தில பிள்ளையார் கோவில்கிட்ட வீடு எடுத்து இருக்கேன் மா” என்றாள் வசந்தி.

“உன் அப்பா,அம்மாகிட்ட போகவேண்டியது தானே வசந்தி” என்றாள் பாா்வதி.

“நான் இப்படி ஆயிடேன்னு, எங்க வீட்டுல எல்லாரும் வெறுக்குறாங்க மா” என்று கண்ணீர் விட்டு அழுத வசந்தியை பாா்த்த பாா்வதிக்கு கண்ணீரே வந்துவிட்டது.

“நான் கிளம்புறேன் மா” என்றாள் வசந்தி.

“ஒரு நிமிஷம் இருமா” என்றபபடி நாராயணனிடம் எதையோ சொன்னாள் பாா்வதி.

சிறிது நேரத்திற்கு பின்.

“வசந்தி நாங்க ஒன்னு சொன்னா செய்வீயாமா” என்றாள் பாா்வதி.

“சொல்லுங்கம்மா, என் பிள்ளைக்கு ஒரு வேளை பசிய போக்குனீங்க, செய்வேன்” என்றாள் வசந்தி.

” எங்களுக்கு இரண்டு பசங்க, இரண்டு பேருமே டாக்டருக்கு படிச்சாங்க, வெளி நாட்டுல வேலை கிடைச்சதும் போயிட்டானுங்க, அவனுங்க விருப்பத்திற்கு கல்யாணம் பண்ணிக்கிட்டானுங்க, வெளிநாடுலையே குழந்தையும் பொறந்துச்சினு தகவல் மட்டும் தான் சொன்னாங்கம்மா, அவனுங்க இரண்டு பேரும் ஒற்றுமையாதான் இருக்காங்க, நாங்க தான் இங்க தனிமையில கஷ்டப்படுறோம், 25 வருஷத்துக்கு அப்புறம் கேக்குறோம் குழந்தை சத்ததே இந்த வீட்டுல, நீ எங்க கூடவே இருந்துக்க வசந்தி” என்றாள் பாா்வதி தனிமையின் தவிப்போடு.

வசந்திக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை,

” அம்மா என்ன சொல்லுறீங்க, நான் எப்படி இங்க?” என்றாள் வசந்தி.

“எங்க வீட்டுல வேலை பாக்குறீயா” என்றாள் பாா்வதி.

வசந்திக்கு தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று தோன்றியதாள், சம்மதித்தாள்.

பாா்வதி அன்பை வசந்தி இடம் இருந்து வாங்கினாள்,

“வீட்டுக்குள்ள போமா” என்றாள் பாா்வதி.

வசந்தியும் அன்பும் அங்கேயே தங்கினா்.

பாா்வதியும், நாராயணனும் தன் பேரக்குழந்தை போல பாசமாக வளர்த்தனா், வசந்தி இருவரின் மகளாகவே வாழ தொடங்கினாள்.

பாா்வதியே அனைத்து வேலையும் செய்து விடுவதால், வசந்தி அன்பை பாா்வதியிடம் விட்டுவிட்டு மீண்டும் சாக் பீஸ் கம்பெனிக்கே வேலைக்கு சென்றாள்.

நாட்கள் வேகமாக உருண்டு ஒடின,

இரண்டு வருடங்கள் கழித்து,

சாக் பீஸ் கம்பெனியில் வேலை பாா்க்கும் குமரன், வசந்தியை இரண்டு வருடங்களாக ஒரு தலையாக காதலித்தான்.

வசந்தி, முதன் முதலாக வேலைக்கு சேர்ந்ததில் இருந்தே, குமரன் வசந்தியை விரும்பி இருக்கிறான்.

வசந்தி திருமணமாகி, குழந்தை உடையவள் என்று தெரிந்தும் காதலில் விழுந்தான் குமரன்.

வசந்தியின் பாசம், யாரிடமும் அதிகம் பேசாத குணம், அடக்கம்,யாரையும் தலை நிமிர்ந்து பாா்க்கமாட்டாள், குமரன் காதலிப்பது கூட வசந்திக்கு தெரியாது இது மொத்தமாக குமரனை கவா்ந்து இருக்கலாம்.

“குமரன், இன்று தன் காதலை எப்படியாவது சொல்லிவிட வேண்டும்” என்று முடிவோடு இருந்தான்.

மதியம் உணவு இடைவேளை,

குமரன் வசந்தியிடம் காதலை சொல்ல, மகளிர் உணவு உண்ணும் அறைக்கு முன் நின்றுக்கொண்டு இருந்தான்.

வசந்தி கடைசியாக மதிய உணவை முடித்து விட்டு, அறையின் வெளியே வந்தாள்.

“ஏங்க, ஒரு நிமிஷம், உங்ககிட்ட பேசணும்” என்றான் குமரன்,

“சொல்லுங்க,” என்பது போல் எடுத்து வைத்த அடியிலே அப்படியே நின்றாள் வசந்தி.

குமரனுக்கு தன் காதலுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று மேல் பேச தொடங்கினான்.

” உங்கள நான் உயிருக்கு உயிரா காதலிக்கிறேன், வாழ்ந்தா உங்களோடு தான் வாழனும்னு நினைக்கிறேன், நீங்க இப்ப உடனே எதுவும் சொல்லவேண்டாம், இது என் நம்பா் உங்களுக்கு எப்போ தோணுதோ அப்ப சொன்னா போதும்” என்று தன் நம்பரை நீட்டினான் குமரன்.

அதை வாங்கி கொள்ளாமல் தன் நடையில் வேகத்தை காட்டினாள் வசந்தி.

ஒரு வருடம் கழிந்த நிலையில்,

குமரன் வீட்டில் குமரனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது.

“இன்று முடிவை கேட்டு விட வேண்டும்” என்று கோபமாக வந்தான் குமரன்.

வசந்தி பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுக்கொண்டு இருந்தாள்.

“வசந்தி எனக்கு என் வீட்டுல கல்யாணம் முடிவு பண்ணிருக்காங்க, நீங்க என்னை காதலிக்கிறீங்களா, இல்லையா” என்றான் குமரன்.

“குமரன், நீங்க நல்லவர் தான் இல்லைனு சொல்ல. என் வாழ்க்கை என் குழந்தை மட்டும் தான், என்னை தொந்தரவு பண்ணாதீங்க குமரன்” என்று சொல்லிவிட்டு பேருந்தில் ஏறி சென்றாள் வசந்தி.

அறை மனதோடு கலா வை திருமணம் செய்துக்கொண்டான் குமரன். குமரனால் வசந்தியை மறக்கவே முடியவில்லை.

திருமண வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல், கலாவிடம் முகம் கொடுத்துக்கூட பேசாமல் இருந்தான் குமரன்.

பாா்வதியின் வீட்டிற்கு அன்பும்,வசந்தியும் வந்து மூன்று வருடங்கள் கழிந்த நிலையில்,

கைக்குழந்தையாய் வந்த அன்பு ஒரு காலை தாங்கி தாங்கி நடந்துக்கொண்டு இருந்தான், முத்து போன்ற பேச்சை கேட்க பாா்வதிக்கும் நாராயணனுக்கும் 24 மணி நேரம் போதவில்லை.

தன் பேரக்குழந்தையின் மேல் காட்ட முடியாத மொத்த பாசத்தையும் கொட்டிக்கொட்டி வளா்த்தனா் அன்புவை.

அன்பும் பாசமாய் இருந்தான் இருவர் மேலும்.

நாராயணனும் பாா்வதியும் காசிக்கு போய் வருவது என்று முடிவு எடுத்தனா்,

“வசந்தி, பயபடாதம்மா, நீ வேலைக்கு போகாம வீட்டிலே இரு, நாங்க போயிட்டு ஒரு வாரத்துல வந்துருவோம்” என்று சொல்லி அன்பை கட்டிப்பிடித்து கொஞ்சினா்.

நினைவு வந்ததில் இருந்து, ஒரு தடவைக்கூட பிரியாத அன்பு, அவர்களுடன் போக அழுதுவான் என்று அன்பு தூங்கும் போது கிளம்பினா்.

தூக்கத்திலிருந்து எழுந்த அன்பு பாா்வதியையும், நாராயணனும் காணவில்லை என்று தெரிந்து அழுதப்படியே இருந்தான், சாியாக சாப்பிடாமல், அடம்பிடித்தப்படி இருந்தான் அன்பு.

அழுது அழுது தூங்கிய அன்பிற்கு, நடு இரவில் அதீத காய்ச்சல் வந்துவிட்டது.

மருத்துவமனைக்கு சென்றாக வேண்டும், துணைக்கு ஆள் இல்லை, மூன்று ஆண்டுகள் முன்பு நடந்த நினைவு வேற ஒரு கணம் நினைவுக்கு வந்துவிட்டு சென்றது.

என்ன செய்வது என்று அறியாமல் இருந்த, வசந்திக்கு குமரனின் நினைவு வந்தது.

குமரனின் திருமணப்பத்திரிக்கையில் உள்ள குமரனின் தொலைப்பேசி நம்பருக்கு தொடர்புக்கொண்டாள் வசந்தி.

நீண்ட நேரத்திற்கு பின் அழைப்பு எடுக்கப்பட்டது.

“ஹலோ, நான் வசந்தி பேசுறேன், அன்புக்கு காய்ச்சல் அடிக்குது, துணைக்கு ஆள் இல்ல, நான் சொல்லுற இடத்துக்கு, ஆட்டோ புடிச்சிட்டு வர முடியுமா குமரன்” என்று கதறினாள் வசந்தி.

“நீங்க பயப்படாதீங்க வசந்தி, இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்” என்றான் குமரன்.

சுமாா் 20 நிமிஷத்திற்கு பிறகு, தூரத்தில் ஆட்டோ வரும் சத்தம் கேட்டது,

வசந்தி அன்புவை இடுப்பில் வைத்துக்கொண்டு, அழுதுக்கொண்டு நின்று இருந்தாள்.

ஆட்டோ வந்ததும் இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சென்றனா்.

காய்ச்சல் அதிகமாக இருப்பதால், ஒரு நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினா்.

குமரனும் ஒரு நாள் முழுவதும் வசந்திக்கு துணையாக இருப்பது என முடிவு செய்தான்.

அவன் ஆறுதல் தேவை என்று உணா்ந்த வசந்தியும் சம்மதித்தாள்.

கலாவிற்கு குமரன் நேற்று இரவு சென்ற கணவன் இன்று இரவு வரை வரவில்லை என்றதும் கோபமாக வந்தது.

குமரனுக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்குமோ, அதனால் தான் என்னை வெறுக்கிறாரோ என்று நினைத்தாள் கலா.

பொறுத்து இருந்து பார்ப்போம், காலையில் தன் மாமியாரிடம் கேட்டாள் விவரம் தெரியும் என்று நினைத்தப்படியே தூங்கிவிட்டாள் கலா.

மறுநாள் காலையில் கலா கண் விழிக்கும் போது, குமரன் அவள் அருகில் படுத்து இருந்தான்.

கலாவிற்கு கோபமாக இருந்தது, குமரனின் போனை எடுத்து வேறு யாராவது பெண் நம்பர் இருக்கிறதா, என்று பாா்த்தாள் வசந்தி என்று ஒரேஒரு பெண் நம்பர் மட்டுமே இருந்தது.

குமரன் திரும்பி படுக்க, போனை வைத்து விட்டு, மாமியாரை பாா்பதற்காக சென்றாள் கலா.

“அத்தை உங்க மகன் எப்போ வந்தாரு தெரியுமா?” என்றாள் கோபத்தோடு.

“காலையில 2 மணிக்கு வந்தான் மா” என்றாள் யதார்த்தமாக.

“எங்க போனாராம்” என்றாள் புடவையின் முந்தானையை கசக்கிக்கொண்டு.

“கலா, வசந்தி மகன் அன்புக்கு உடம்பு சாியில்லையாமா, அதான் போயிட்டு வந்தானாம், வசந்தி யாரு தெரியுமில்ல, உன் புருஷன் அவளதான் கட்டுவேனு ஒத்த காலுல இருந்தான், அப்புறம் அவ வேணாமுனு சொன்னதும் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான்” என்றாள் மாமியார் என்ற முறையில்.

“இப்போ, அவ எங்க இருக்கா” என்றாள் கோபத்தோடு.

“தனியார் ஆஸ்பத்திரியில தான் இருக்காளாம், நீ ஒன்னும் தப்பா நினைக்காத கலா, இவன் தப்பு பண்ணமாட்டான், இருந்தாலும் கொஞ்சம் அவன் மேல ஒரு கண்ணை வை” என்று சொல்லிய படி தன் வேலையை தொடந்தாள்.

கலாவிற்கு தன் வாழ்க்கை பறிப்போயிவிடுமோ, என்று பயமாக இருந்தது, வசந்தியை கண்டித்தாள் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவு எடுத்தாள்.

வேகமாக கிளம்பினாள் வசந்தியை பார்க்க,

மருத்துவமனையின் வரவேற்பு அறையில், அன்பு என்கிற பையன் இருக்குற ரூம் எது என்று கேட்டாள் கலா.

103 என்றாள் பணிப்பெண்.

அந்த அறையிலிருந்த வசந்தியை சரமாரியாக பேசினாள் கலா,

“என்னடி, என் புருஷன வலச்சிப்போட பாக்குறீயா, இங்க பாரு மரியாதை கெட்டு போயிடும், மானகெட்டவளே, ஊரல வேற யாரும் கிடைக்கலையா, அப்பவே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான, என் வாழ்க்கையை கெடுக்குற” என்று கொட்டி தீர்த்தாள் கலா.

வசந்திக்கு கூட்டம் கூடியது அசிங்கமாக போயிவிட்டது.

“உன் புருஷனுக்கு நான் கால் பண்ணினாலோ, இல்ல உன் புருஷன் எனக்கு கால் பண்ணினாலோ அப்போ வா, இப்ப இடத்தை காலி பண்ணு” என்று அன்பை தூக்கிக்கொண்டு வெளியே சென்றாள்.

வீட்டிற்கு நுழைந்த கலாவை குமரன் “எங்க போயிட்டு வர” என்றான் தலையை துவட்டிக்கொண்டு.

கலாவிற்கு வசந்தி எதாவது சொல்லிருப்பாளோ என்று பக்கு பக்கு என்றது.

“இல்ல அது வந்து” என்று இழுத்தாள் கலா.

“கோயிலுக்கு போலாமா? போய் கிளம்பு” என்றான் குமரன்.

கலாவை சுற்றி பல நூறு பட்டாம்பூச்சி பறப்பது போல இருந்தது.

கலாவும் குமரனும் கோயிலுக்கு பைக்கில் சென்றனா்.

கலாவிற்கு சந்தோஷமாக இருந்தது, கோயில் மூலபிராகரத்தில் வைத்து கலாவிற்கு குங்குமம் வைத்துவிட்டான் குமரன்.

“கலா நான் இவ்வளவு நாளா என் மேல நீ எவ்வளவு பாசமா இருக்கேனு, தெரிச்சிக்காமலே இருந்துட்டேன், என்னை மன்னிச்சிடு, இப்ப இருந்து நம்ம சந்தோஷமா இருப்போம், வசந்தி சொன்னதுக்கு அப்புறம் தான் உன் அருமையே எனக்கு தெரிஞ்ச்சி” என்றான் குமரன்.

 
வசந்தியை தான் திட்டியதை தான் சொல்லிருப்பாளோ என்று எண்ணியப்படி.

“என்னை மன்னிச்சிடுங்க” என்று அவன் காலில் விழுந்தாள் கலா.

“ஏய், நடந்தத மறப்போம்,நடக்குறத நினைப்போம்” என்றான் குமரன் சிரித்த முகத்தோடு.

இருவரும் சந்தோஷமா இருந்தனா்,

இரண்டு வருடம் கடந்த நிலையில்,

அன்புக்கு ஐந்து வயது வந்துவிட்டதால், அவனை அருகில் உள்ள நகராட்சி பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்த்து விட்டார் நாராயணன்.

கலாவிற்கும், குமரனுக்கு ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.

நாட்கள் உருண்டு ஒடிக்கொண்டு இருந்தன.

கும்பகோணம் தேரடி தெருவில் உள்ள முதல் வீட்டில் ஏதோ கூட்டம் கூடி இருப்பதையும், யாரோ அழுது புலம்புவது போல சத்தம் கேட்ட சந்திரா, அருகிலுள்ள டீக்கடையில் இருந்தப்படி பாா்த்துக்கொண்டு இருந்தாள்,

யாரோ ஒரு பெண் தலையிலே அடித்து, அழுதுக்கொண்டு இருப்பது போல இருந்தது.

சந்திராவிற்கு தலையும் புரியவில்லை,காலும் புரியவில்லை. ஆனால் அவள் அழுதுவது மட்டும் உயிரை பிசைந்து எடுத்தது.

வழியில் சென்ற பானு மாமியை அழைத்து விசாரித்தாள் சந்திரா.

“என்னடி சந்திரா, புதுசா டீக்கடையில் நிற்கிற” என்றாள் பானு ஐயர் வீட்டு பாஷையில்.

“மாமி, இங்க வாங்க, என்ன பிரச்சனை அங்க, ஏன் அந்த பொண்ணு அழுவுது” என்றாள் சந்திரா.

“அது பெரிய கதை சந்திரா, வா நடந்துக்கிட்டே பேசுவோம்” என்றாள் பானு மாமி.

“இப்போ அழுதுக்கிட்டு இருக்காளே இவ பேரு அஸ்வினி, இவள நம்ம மளிகைக்கடை அண்ணாச்சியோட ஒரே மகன் பெருமாளுக்கு கல்யாணம் பண்ணிவச்சாங்க, 

 
இவளுக்கு தலைப்பிரசவதுக்கு சேலத்துல இருக்குற அவ அம்மா வீட்டுக்கு போயிட்டா, பிரசவ வலி வந்து ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க, 
 
அப்பறம் பாத்தா குழந்தை செத்துப்போச்சினு சொல்லிடாங்க, அதுக்கு அப்பறம் அஞ்சு வருமா குழந்தையே இல்லை,
 
 இப்போ பெருமாளுக்கு வாரிசு தேவைனு ரெண்டாவது கல்யாணம் பண்ணிவைக்க அவங்க வீட்டுல முடிவு பண்ணிருக்காங்க, 
 
உன் சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னாலும் ஒத்துக்க மாட்டேன் னு சொல்லுறா, டைவஸ் பத்திரத்துல கையெழுத்து போடுனா, 
 
என் குழந்தை சாகலனு சொல்லுறா, சாி சாகல னு சொல்லுற குழந்தை எங்க இருக்குனு கேட்டாளும் தெரியல னு சொல்லுறா, 
 
இப்படி பிரச்சனை பண்ணுனா எப்படி சந்திரா” என்றாள் கரிசனத்தோடு.

“சந்திரா, வீடு வந்துச்சி, வரேன்” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள் பானு.

சந்திரா ஏதோ சிறிது நேரம் யோசித்து விட்டு அஸ்வினி இருந்த அண்ணாச்சி வீட்டிற்கு சென்றுக்கொண்டு இருந்தாள்.

செல்லும் வழியிலே அஸ்வினி எதிர்க்கொண்டு வந்தாள்.

“அஸ்வினி, உன் குழந்தை உண்மையிலே செத்துப்போச்சா,” என்றாள் சந்திரா.

“ஏய், நீ வந்து” என்று மேலும் கீழும் பார்த்தாள் அஸ்வினி.

“என்னை பாக்குறது இருக்கட்டும், நீ உண்மைய சொல்லு” என்றாள் சந்திரா.

“என் குழந்தை சாகல, நான் தான் தப்பு பண்ணிட்டேன்” என்று கதறினாள் அஸ்வினி.

அஸ்வினி ஏதோ சொல்ல,

“உன் குழந்தை உயிரோட தான் இருக்கு, என் கூட வா” என்றாள் சந்திரா.

இருவரும் பேருந்தில் ஏறி பல மணி நேர பயணத்துக்கு பின், பாா்வதியின் வீட்டிற்கு முன் நின்றனா்.

மதியம் 3:30 மணி.

பாா்வதியின் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினாள் சந்திரா,

“என்னங்க, அதுக்குள்ளவா அன்புவ வசந்தி அழைச்சிட்டு வந்துட்டா” என்றாள் பாா்வதி.

பாா்வதி கதவை திறந்தாள்.

“யாரும்மா வேணும்” என்றாள் பாா்வதி.

“வசந்திய பாக்கனும்மா, இருக்காங்களா” என்றாள் சந்திரா.

“இல்லம்மா, அவன் பையன் அன்ப அழைச்சிட்டு வர போயிருக்கா,பத்து நிமிஷத்தில் வந்துடுவா, உட்காருங்க,” என்றாள் பாா்வதி மரியாதையோடு.

வந்து இருவரும் ஷோபாவில் அமர்ந்தனா்.

“இருங்க காபி எடுத்துட்டு வரேன்” என்று பாா்வதி செல்ல.

அம்மாச்சி என்று தாங்கி தாங்கி வந்து கட்டிக்கொண்டான் அன்பு.

அஸ்வினிக்கு இருப்பு கொள்ளவில்லை.

பாா்வதியிடம் இருந்து அன்பை பிடுங்கி வாரி அணைத்துக்கொண்டாள் அஸ்வினி.

பாா்வதி செய்வது அறியாது நின்றாள்.

இந்த நிகழ்வு நடந்துக்கொண்டு இருக்கும் போது உள்ளே நுழைந்த வசந்தி.

சந்திராவை அக்கா என்று கட்டிக்கொண்டாள்.

பாா்வதிக்கு வியப்பாக இருந்தது.

“என்னம்மா பாக்குறீங்க, நானும் வசந்தியும் ஒரு திருநங்கை” என்றாள் சந்திரா.

“வசந்தி நீ ஒரு திருநங்கையா?” என்றாள் பாா்வதி வியப்பாக.

இதற்கிடையில் குமரன் வீட்டில்,

“என்ன சொல்லுறீங்க வசந்தி, ஒரு திருநங்கையா?” என்றாள் கலா.

“ம்ம, வசந்தி ஒரு திருநங்கை. அவங்கள திருநங்கைனு தெரியாமதான் காதலிக்க ஆரம்பிச்சேன், 

 
ஆனா, என் கிட்ட இருந்து விலகி விலகி போனாங்க,  நம்ம கல்யாணத்துக்கு முதல் நாள்
காரணத்தை சொல்லு, என்னை ஏன் கல்யாணம் பிடிக்கலனு அவங்கள ரொம்ப மரியாதை குறைவா பேசுன கலா,

அப்போதான் வசந்தி தான் ஒரு திருநங்கைனு சொன்னாங்க, என்னால நம்பவே முடியல அவங்க அப்படியே பொண்ணுங்க மாதிரியே இருந்தாங்க,

அப்பறம் அவங்க வாழ்க்கையில நடந்ததை சொன்னாங்க, எனக்கு என் குழந்தை தான் முக்கியம், என்னை தொந்தரவு பண்ணாதீங்கனு சொல்லிட்டு போயிட்டாங்க” என்றான் குமரன்.

மறுநாள் காலையில நமக்கு கல்யாணம். 

“ஒரு நாள்  ராத்திரி  அவங்க பையன் அன்புக்கு உடம்பு சாியில்ல சொன்னாங்க  அதான் கிளம்பிப்போனேன், அன்னக்கி என்ன நடந்தது தெரியுமா கலா”

வசந்தி உன்னைபத்தி கேட்டாங்க, உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கலைனு சொன்னேன்,

“அப்போ அவங்க சொன்னத கேட்டதும், புரிஞ்சிக்கிட்டேன் உன் அருமைய ” என்றான் குமரன்.

“என்னைபத்தியா,என்ன சொன்னாங்க” என்றாள் கலா.

“குமரன், ஒரு பொண்ணா இருந்து புருஷன் கூட வாழாம, அவரோட பாசம் கிடைக்காம தனிமையில வாழற கொடுமை, உங்களுக்கு தெரியாது,

திருநங்கையா இருக்குற எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடையாது குமரன். எங்கள இந்த சமுதாயம் பாக்கற விதம் வேற,
ஆனா, ஒரு பொண்ணுக்கு கல்யாணமாகி ரொம்ப நாள் குழந்தை இல்லைனா, இந்த உலகம் பாா்க்குற விதமே வேற,

புரிஞ்சிக்கோங்க குமரன், இப்போ நீங்க இங்க இருக்கீங்க,உங்க மனைவி என்ன நினைப்பாங்க, அவங்க உணர்வுக்கு மதிப்பு குடுங்க குமரன், கிளம்புங்க, நான் காலையில அன்ப அழைச்சிட்டு கிளம்பிடுறேன், நீங்க கலையோட நூறு வருஷம் சந்தோசமா இருக்கணும்,  இது உங்கள உண்மையான நேசித்த வசந்தியோட ஆசை” என்றாள் வசந்தி.

அப்போதான் உணர்ந்தேன் கலா. உன்னோட அருமைய, இப்போ நான் உன் மேல வச்சிருக்க பாசம் உண்மையானது, யாராலும் பிரிக்க முடியாத பாசம் என்றான் குமரன் காதலோடு.

“தப்பு பண்ணிட்டேன், அவங்க வீடு எங்க இருக்குனு தெரியுமா, வாங்க போகலாம்,” என்று குமரனை இழுத்துக்கொண்டு கிளம்பினாள்.

“கலா, என்னாச்சு உனக்கு ஏன் இப்படி பண்ணுற” என்றான் வண்டியை ஒட்டிக்கொண்டே,

“எனக்கு வாழ்க்கை தந்த தெய்வத்தை பழிச்சிட்டேன்,” என்று புலம்பிக்கொண்டு இருந்தாள் கலா.

இருவரும் வசந்தியின் வீட்டை நோக்கி வந்துக்கொண்டு இருந்தனா்.

இதற்கிடையில் பார்வதியின் வீட்டில் நடந்தவை,

“ஆமா,  நான் ஒரு திருநங்கை தான்” என்றாள் வசந்தி.

பாா்வதிக்கும்,நாராயணனுக்கும் வியப்பாகவும், ஒரு திருநங்கையாலும் தாய்க்கு இணையான பாசத்தை காட்ட முடியும் னு நினைக்கும் போது பெருமையாகவும் இருந்தது.

” எப்படி மா, நீயா நம்ப முடியலை, பொண்ணு மாதிரியே இருக்க, கடவுளோட படைப்ப நினைச்சாலே மலப்பா இருக்கு” என்றாள் பாா்வதி.

“என் குழந்தைய என்கிட்ட குடுத்துரும்மா, என் வாழ்க்கையே போயிடும், குடுத்துட்டு” என்ற அஸ்வினி, அன்பை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள்.

“யாரும்மா நீ, 3 மாச கைக்குழந்தையா இருந்த அப்போ, இங்க வந்தான் இவன், இவ தான் வளா்த்தா, இப்போ நீ வந்து உன் குழந்தைனு சொல்லுற,” என்று கோபமாக பேசினாள் பாா்வதி.

அஸ்வினி அழுதுக்கொண்டே இருந்தாள்.

“என்ன நடந்துச்சி வசந்தி, நீயாவது சொல்லேன்” என்றான் நாராயணன்.

“எனக்கு  சொந்த ஊரு நாமக்கல் பெரிய குளம், எனக்கு என் வீட்டுல வச்ச பேரு சகாதேவன்.எனக்கு 7 வயசுல இருந்தே பொண்ணு மாதிரி தான் நடந்துக்குவேன், எனக்கு 4 அண்ணன், நான் தான் கடைக்குட்டி, கொஞ்ச கொஞ்சமா எனக்கு பொண்ணாகனும் போல இருந்துச்சி,  என் வீட்டுல அண்ணன், அப்பா எல்லாம் திட்டிபாத்தாங்க, அடிச்சிப்பாத்தாங்க என்னை மாத்தவே முடியல, பத்தாவது வரைக்கும் படிச்சேன், என்னை எல்லாரும் கேலி,கிண்டல் செஞ்சாங்க, வெறுத்தாங்க,

சந்திரா அக்கா, எங்க ஊரு பையன் தான். அவங்க வீட்டுல இவங்க திருநங்கையா மாறிபோனதும் அடிச்சி துரத்திட்டாங்க,

நானும் ஆண்டு விழானு சொல்லிட்டு வீட்ட விட்டு போகலாமுனு முடிவு பண்ணி, மடத்துல இருந்தேன், அப்போ அக்கா தான் என் நிலைமைய புரிஞ்சிக்கிட்டு அவங்களோட அழைச்சிட்டு போயிட்டாங்க,

நான் முழுசா திருநங்கையா மாறி, பத்து வருசம் கழிச்சி வந்தேன், என் வீட்டுல யாருமே ஏதுக்கல, நான் செத்துட்டாத சொல்லிரதாவும், இன்னிமே வராதுனு சொல்லிட்டாங்க,

நானும், அக்காவும் திரும்பி எங்க இடத்துக்கு போகலாமுனு நடந்து போயிட்டு இருந்தோம்.

நடு ராத்திரி ஆனதும், நாங்க ஆத்துக்கு பக்கத்துல இருந்த, சிமெண்ட் தண்ணி குழாய்க்குள்ள படுத்துருந்தோம்.

அப்போ, யாரோ பொறந்து ஒரு மணி நேரம் கூட ஆகாத குழந்தைய பக்கத்துல இருந்த முள் காட்டுல தூக்கிப்போட வந்தாங்க,

நாங்க யாரு னு குரலு கொடுத்ததும், பயந்து அப்படியே போட்டு போயிட்டாங்க,

நான் தான் முதல்ல குழந்தைய தூக்குன, குழந்தை வயிதுல இருந்து வெளிய வந்த சூடுக்கூட குறையல,

ஒரு நாள் ராத்திரி முழுக்க பச்சை தண்ணிய குடிச்சி உயிரோட இருந்தான்  அன்பு. குழந்தை ஊனமுனு தெரிஞ்ச்சி, தூக்கி போட வந்துருக்காங்க.

அக்கா குழந்தைய அனாதை ஆசிர்மத்துல போட்டுனு சொன்னாங்க, எனக்கு மனசு வரல,நானே வளாக்குறேனு சொன்னேன்,

யாருகிட்டையும் திருநங்கைனு சொல்லாத, குழந்தைய வளா்த்துக்க நீ அரியலூா் பக்கம் போயிடு நம்ம ஆளங்க நிறைய இருக்காங்க னு சொல்லி விலாசம் குடுத்தாங்க,

நான் வந்து இறங்கியதும் சளக் பீஸ் கம்பெனியில் வேலைக்கு ஆள் எடுக்குறாங்கனு சொன்னாங்க, வேலைய வாங்கிட்டு அப்படியே, இங்கையே தங்கிட்டேன்.

இப்ப வந்து குழந்தையை குடுனா எப்படி? என்றாள் வசந்தி.

“அதானே, அவ்வளவு அக்கறை இருக்குற நீ, ஏன்ம்மா தூக்கிப்போட்டு போன” என்றாள் பாா்வதி.

“அய்யோ, குழந்தை ஊளனமா இருக்கு ஊரு தப்பா பேசும், கொளரவம் போயிடும்னு என் அப்பா பேச்ச கேட்டுதான் நான் தூக்கிப்போட சம்மதிச்சேன்,

நான் செஞ்ச பாவம் எனக்கு குழந்தையே இல்லை, என் புருஷனுக்கு வேற கல்யாணம் பண்ணப்போறாங்க என் குழந்தைய குடுத்துடு வசந்தி, உன்னை கெஞ்சிக்கேக்குறேன்” என்று அழுதாள் அஸ்வினி.

“வசந்தி குடுத்துரும்மா பாவமா இருக்கு, உனக்கு நம்ப சமூகம் இருக்கு, நீ அங்க வந்துடுமா, ஒரு தாயோட பாவத்தை சுமக்காதம்மா” என்று பரிந்துரைத்தாள் சந்திரா.

“அக்கா நீயே எனக்கு புள்ளை பாசத்தை காமிச்சிட்டு, இப்போ குடுத்துங்குறீயே நியாமா அக்கா” என்றாள் வசந்தி.

“என் குழந்தை என்கிட்ட வராதா?” என்றாள் அஸ்வினி கோபத்தோடு,

“வந்தா கூட்டிட்டுப்போ” என்றாள் வசந்தி.

“நான் சுமந்தவ,”என்று  விடாப்பிடியாக  குழந்தையை  பிடித்து இழுத்தாள் அஸ்வினி, 

அஸ்வினியின் கையை கடித்து விட்டு, தன் காலை தாங்கியப்படியே நடந்து வந்து வசந்தியை அம்மா என்று கட்டிக்கொண்டான் அன்பு.

“புரியுதா வளர்த்த பாசம், நீ தாய்பால் குடுத்தியா?, அப்படி நீ குடுத்து இருந்தா, உனக்கு தூக்கிப்போடனும் னு எண்ணமே வந்துருக்காது,

நீ மட்டுமில்ல. உன்னைமாதிரி எத்தனையோ கல்மணம் படைச்ச தாய்மார்கள் ஊளனமான குழந்தை, பொம்பள குழந்தை எல்லாத்தையும் நாய்க்கும்,நாிக்கும், குரங்குக்கும் தான இரையாக்குறீங்க,

குப்பை தொட்டி, முள்ளுக்காடு னு, கண்ட இடத்துல போட்டுட்டு போயிடுறீங்க, மனசாட்சி வேணாம், உங்க உதிரத்தால தான வளருது , எப்படி தூக்கிப்போட மனசு வருது,

கடவுள் உங்களுக்கு உயிர உருவாக்குற பாக்கியம் கொடுத்துருக்காரு அந்த பாக்கியதோட அருமை உங்களுக்கு தெரியல,

மாற்று திறனாளி குழந்தைனு தானே தூக்கிப்போட்ட, இந்த மாற்று திறனாளி இருக்கா அவன பாத்துக்க நீ போகலாம். உனக்கு என் பிள்ளைய தரமுடியாது” என்று அழுத்த திருத்தமாய் சொன்னாள் வசந்தி.

“பெத்தவகிட்ட தான் குழந்தை இருக்கனும்” என்றாள் அஸ்வினி.

” நீங்க வேண்டாம்னு தூக்கிப்போட்ட ஒவ்வொரு குழந்தையும், என்னை மாதிாி இருக்குற திருநங்கைக்கிட்ட கிடைத்தால், ரோட்டுல பிச்சை எடுத்தாவது இந்த சமுதாயத்துல அந்த குழந்தைய, ஒரு நல்ல அந்துஸ்தோட வளா்ப்போமே தவிர, உங்கள மாதிரி கல் நெஞ்சம் படைச்சி தூக்கிப்போடவும் மாட்டோம், கொலை பண்ணவும் மாட்டோம்”

“பெத்தவளா? இன்னோரு தடவை சொல்லாத, குழந்தையை முதல்ல நான் கையில எடுக்கும்போது உணர்ந்தேன் தாய்மையை,” என்று அஸ்வினியின் மனதில் உள்ள அன்பு தான் பிள்ளை என்ற பாச வேரை அறுத்து வெந்நீரை  ஊற்றினாள்.

“அம்மா, நான் கிளம்புறேன், இங்க இருந்தா இவங்க எங்களை தொந்தரவு பண்ணிக்கிட்டு இருப்பாங்க, நான் கண் கானாத இடத்துக்கு என் குழந்தைய தூக்கிட்டு போறேன் மா” என்றாள் வசந்தி.

“நீயும் போயிட்டா, யாரு இருக்கா எங்களுக்கு” என்றாள் பாா்வதி.

“நாங்க எங்க இருந்தாலும், எங்க நினைப்பு உங்கள சுத்திக்கிட்டுத்தம்மா இருக்கும்” என்று கிளம்பினாள் வசந்தி.

“உன்னால எப்படியாவது குழந்தை பெத்துக்க முடியும், என்னால முடியாது இதான் உனக்கும், எனக்கும் இடையே உள்ள ஒரு மெல்லிய கோடு” என்றாள் வசந்தி.

 
"நீ மட்டும் தாய் இல்ல, வசந்தியும் தாய் தான் அன்புக்கு" என்று சொல்லி சந்திராவும் வசந்தியுடனே கிளம்பினாள்,

வெளியே, நடந்ததை எல்லாம் கேட்டப்படி குமரனும் கலாவும் நின்றுக்கொண்டு இருந்தனா்.

“உன் புருஷன் உனக்கு மட்டும்தான் கவலைப்படாதே” என்றாள் வசந்தி,

தன் கண்ணாலே நன்றியை தெரிவித்தாள் கலா.

பாா்வதி,நாராயணன்,அஸ்வினி மூவரும் கண்ணீரும் கவலையோடு நின்றுக்கொண்டு இருந்தனா்.

அன்பை இடுப்பில் வைத்தப்படி வசந்தி நடந்தாள், அருகில் சந்திராவோடு.

சேயாகி,ஆணாகி, பின் பெண்ணாகி தாயான வசந்தியின் பயணம் இனிதே தொடரட்டும்.

-மீனாக்ஷி சிவக்குமார்


Quote
Share:

error: Content is protected !!

Please Login or Register