Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

கன்ஃபஷன் - யாழ் மொழ...
 
Notifications
Clear all

கன்ஃபஷன் - யாழ் மொழி - Tamil Short Story Online  

  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 572
31/05/2020 9:10 pm  

கன்ஃபஷன் - யாழ் மொழி

This topic was modified 1 month ago by Nithya Karthigan

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


Quote
யாழ் மொழி
(@saranya-venkatesh)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 112
07/06/2020 9:35 pm  

மெரினாவின் உப்புக்கடல் காற்று உடலைத் உருக்கி, ஊடுருவி செல்ல, உடல் மீது படிந்திருந்த உப்பு படலத்தின் மீது, உங்களை இன்னும் அழுக்காக மாற்ற நானும் இருக்கிறேன், என எண்ணத்தக்க வகையில் வீசும் மாசு நிறைந்த காற்றை கொண்ட சென்னை மாநகரம்.

 

புழல் சிறை வளாகம் .....

 

சூரியன் தன் கோபத்தை குறைத்து ஓய்வெடுக்க விரைந்து கொண்டு இருக்க, அதற்கு நேர்மாறாக அந்த சிறை வளாகம் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.

 

நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்திய, ஆறு கொலைகளை செய்த, கொலைக் குற்றவாளிக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

 

காவலர்கள் ஒருபுறம் தூக்கு மேடையில் தூக்குப் போட பயன்படும் லீவரின் மீது எண்ணை தடவி பளபளப்பாக மாற்றிக்கொண்டு இருக்க, மற்றொரு காவலரோ.... குற்றவாளியின் எடையைப் போன்று மூன்று மடங்கு எடை கொண்ட மணல் மூட்டைகளை கொண்டு தூக்கிலிடப் பயன்படும் கயிறு வலுவாக உள்ளதா என பரிசோதித்து கொண்டிருந்தார்.

 

பொதுவாக மணிலா கயிறு எனும் வகையைச் சேர்ந்த கயிற்றைத் தான் குற்றவாளிகளை தூக்கிலிட பயன்படுத்துவார்கள், இந்த வகை கயிறு ஆனது கல்கத்தா மாநிலத்திலிருந்து தருவிக்கப்படும்.

 

கடந்த ஒரு வாரமாக அங்கு இருந்த காவலர்களுக்கு இது மட்டும் தான் வேலை, ஏற்கனவே, மும்முறை தூக்குக் கயிறின் விளிம்பு நுனிவரை வந்த, அந்த குறிப்பிட்ட கொலையாளியின் தூக்கு தள்ளிப் போய் இருந்தது.

 

ஒருமுறை உயர்நீதிமன்றத்தில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய, அங்கு இவனது தண்டனை உறுதி செய்யப்பட்டது, உச்சநீதிமன்றத்தில் மறுமுறை தண்டனையை குறைக்க மனு செய்திருந்தான்.

 

அந்த முயற்சியும் பயனற்றுப் போக, இருட்டில் கிடைத்த சிறு வெளிச்சம் போல், அந்த கொலை குற்றவாளிக்கு கடைசி வாய்ப்பாக ஜனாதிபதியிடம் கருணை மனு செய்யும் வாய்ப்பு கிடைத்தது, ஆறு கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை தான் சரியானது என நினைத்தாரோ என்னவோ ஜனாதிபதி அவன் மனுவை நிராகரித்து விட்டார்.

 

இம்முறை எவ்வளவு முயன்றும் மரணம் எனும் பரிசு, தன் முறையற்ற வாழ்விற்கான விடை தானிருக்கும் சிறை வாசற்படி வரை வந்துவிட்டதை அறிந்த அந்த குற்றவாளியோ தன் மரணத்திற்கான இறுதி கணங்களை ஏற்க மனதளவில் தயாராகிக் கொண்டிருந்தான்.

 

கொலைக் குற்றவாளிக்கு தண்டனை அளிக்க தேவையான ஆயத்த பணிகள் ஒருபுறம் நடக்க, மறுபுறம், அந்த சூழ்நிலைக்கு எந்த வகையிலும் பொருந்தாத, சம்பந்தமில்லாத பெண்ணொருத்தி கேமராவின் முன் நின்று....

 

"வணக்கம் நேயர்களே..., இன்று நாம் பேட்டி காண போகும் கொலை குற்றவாளி....., 6 பேரை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்...., கொலை செய்யப்பட்ட 6 பேரும் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்து அவர் வீட்டிலேயே புதைத்து வைத்துள்ளார்....", 

 

" அதுமட்டுமின்றி மேற்கூறிய குற்றவாளி சிறுவயதிலிருந்து பணக்காரராக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்துள்ளார்....",

 

"கேரளாவைச் சேர்ந்த கோபாலுக்கும், ஜெயலட்சுமிகும் பிறந்தவர் தான் இந்த கொலையாளி...., தொடக்ககாலத்தில் டீ கடை வைத்து நடத்தி வந்த கோபாலுக்கும் ஜெயலட்சுமிக்கும் இடையே கோபாலின் குடிப்பழக்கத்தின் காரணமாக அடிக்கடி தகராறு எழ...., ஜெயலட்சுமி தன் ஏழு வயது மகனை விட்டு இரண்டாவதாக வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார்....", 

 

"சிறுவயதில் தாயின் அரவணைப்பு இல்லாமல் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்த அந்த சிறுவனும்...., முரட்டுத் தனத்தின் மறு உருவமாக இருந்து உள்ளான்...", என அந்தக் குற்றவாளியின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றை சுவாரசியமாக தங்கள் சேனலின் டிஆர்பி ஏற்றுக்கொள்ளும் வகையில் பகிர்ந்து கொண்டிருக்க, 

 

இவ்வளவு பரபரப்பிற்கும், முஸ்தீபுகளுக்கும் காரணமான அவனோ... , சாவதானமாக சிறைக் கம்பிகளின் பின்னணியில் மேடை போன்ற அமைப்பில் படுத்து கால்களை ஆட்டிக்கொண்டே அன்றைய பிரபலமான சினிமா பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான். 

 

அவன் கருணாகரமூர்த்தி, அவனின் பேட்டையிலும், சம்பவம் செய்யும் பொழுதிலும், அரசியல்வாதிக்கு சேவகம் செய்யும் பொழுதிலும், கத்தி கருணா என செல்லமாக அழைக்கப்படுபவன், ஆறு கொலை செய்துவிட்டு நாளை தூக்கினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மரண தண்டனை குற்றவாளி.

 

பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தவனின் கவனத்தை ஆக்கிரமிக்கும் பொருட்டு, வேகமான மற்றும் அழுத்தமான காலடித்தடங்கள் உடன், உள்ளே நுழைந்தார் கலியமூர்த்தி, 

புழல் சிறையில் சிறையின் கண்காணிப்பாளர், அவருடன் 2 துணை காவலர்களும் ஒரு மருத்துவரும் வந்திருந்தனர்.

 

" என்ன செய்கிறாய் கருணா....., என கலியமூர்த்தி கேட்ட கேள்விக்கு 

 

"சும்மாதான் சார்.... ரொம்ப போர் அடித்தது, அதான்....., பாட்டு பாடிட்டு இருந்தேன்....", என்றான் கருணா.

 

"நாளைக்கு உனக்கு தூக்கு தெரியுமா கருணா...", என அவர் கேட்க 

 

"தெரியும் சார்...., நான் வேண்டாம்னு சொன்னா மட்டும் விடவா போறீங்க..., எப்படி இருந்தாலும் குண்டுகட்டாக தூக்குல போட தான் போறீங்க....., இருக்கறது கொஞ்ச நேரம்...., அதுவரை நான் வாழ்க்கையை என்ஜாய் பண்றேன் சார்...., என்று கூறியவனின் கண்களில் துன்பத்தையும் மீறி வாழ்வதற்கான ஆசை தெரிந்தது, உதடுகள் புன்னகையில் விரிந்து இருந்தாலும், முகத்தில் ஒரு வலி, அவன் கருப்பு பக்கங்களின் முறையற்ற வாழ்வின் மிச்சங்கள், அவனை வாழவிடாமல் உள்ளுக்குள் வதைக்க செய்தது, ஆனாலும் உயிர் வாழவேண்டும் என்ற ஆசை விடவில்லை.

கலியமூர்த்திக்கும் கருணாவுக்கும் ஜெயில் கைதி என்ற சம்பந்தத்தையும், தாண்டி மெல்லிய நட்பு எனும் இழை அவர்களை பிணைத்து இருந்தது.

 

கலியமூர்த்தியின் இத்தனை வருட போலிஸ் வாழ்க்கையில், இதுபோன்ற ஒருவனை அவர் இதுவரை கண்டதில்லை, தான் செய்த தவறுகளை ஒத்துக் கொண்டாலும், கண்களில் துளியும் அச்சமின்றி, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, "ஆமாம்...., நான் தவறு செய்தேன்...., அதனால் என்ன..., எனக்கு.... அதில் துளி வருத்தமும் இல்லை.... அச்சமும் இல்லை.... என்று கூறும் மனிதனை எந்த வகையில் சேர்ப்பது.

 

அதற்குள் அவருடன் வந்த மருத்துவர் கருணாகரமூர்த்திக்கு தேவையான அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை எல்லாம் முடித்துவிட்டு, அவன் உடலில் இருந்த சட்டை நீக்கச் சொல்லி அவன் அங்க அடையாளங்களை குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.

 

மருத்துவ பரிசோதனைகள் நடப்பதை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த கலியமூர்த்தி அவன் உடலில் பச்சை குத்தப்பட்டு இருந்த பெண்களின் பெயரை அதிசயமாக பார்த்து....

 

"கருணா...., எதுக்கு இத்தனை பெண்களின் பெயரை உடலில் பச்சை குத்தி இருக்க....", எனக்கேட்க 

 

தன் உடலில் உள்ள பெயர்களை வருடியபடி "அதுவா சார்.....இவங்க எல்லாம் என்னோட லவ்வர்ஸ்....", என சிரித்தபடி கூற 

 

நான் கூறியதைக் கேட்க கலியமூர்த்தி புன்னகையுடன் தலையாட்டி "பெரிய காதல் மன்னனாக இருந்திருப்பாய் போல....." என கூறிவிட்டு,

 

"அதை விடு....., கருணா...., உன்னோட வாழ்க்கையில...., நீ செய்த கொலைகளை பற்றி உன்னிடம் கடைசியாக பேட்டி எடுக்க டெல்லியிலிருந்து டிவி சேனல் ஒன்று கவர்மெண்ட்கிட்ட பர்மிஷன் வாங்கி இருக்காங்க...., நீ பேட்டி கொடுக்க தயாராக இருந்தால்...., அவங்க கிட்ட பேசலாம்...., நான் தான் உன்னிடம் கேள்விகள் கேட்கப் போகிறேன்..., உனக்கு இதில் விருப்பம் இருந்தால் சொல்லு...., பேசலாம்...., விருப்பம் இல்லை என்றாலும் சொல்லு...., நான் அவர்களை திருப்பி அனுப்பி விடுகிறேன்....,"அவனின் விருப்பத்தை முதன்மைப் பொருளாக கொண்டு அவர் கேட்க,

 

கண் மூடி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவர் "அவங்களை வரச் சொல்லுங்க சார்...., அப்படியாவது இந்த ஜனங்களுக்கு வாழ்க்கையை எப்படியெல்லாம் தவறாக வாழக்கூடாதுனு என் வாழ்க்கை உதாரணமாகக் காட்டி சொல்கிறேன் சார்....", என்று கூறியவன் அருகில் இருந்த மேடையில் அமர்ந்து கொள்ள 

 

நாடு முழுவதும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட, பெரும் பரபரப்பை ஏற்படுத்தப் போகும், மரண தண்டனை குற்றவாளியின் பேட்டி ஆரம்பமானது.

 

அடுத்த சில நிமிடங்களில் படப்பிடிப்பு குழு முழுவதும் தயாராக இருக்க, லைவ்வில் இருவரின் முகத்தையும் உள்வாங்கிய கேமரா, அதனை வெளியில் நிமிடத்தில் உமிழ தயாராக இருந்தது.

 

நொடி நேர நிசப்தத்திற்கு பிறகு கலியமூர்த்தி தன் கேள்விகளை கேட்க துவங்கினார்.

 

"எப்பொழுது நீ....உன்னுடைய முதல் குற்றத்தை செய்தாய்...", என அவர் கேட்க 

 

"நானும் என்னோட அப்பாவும் சிறுவயதிலிருந்து திருவான்மியூரில் தான் இருந்தோம்.....பியூசி முடிச்சுட்டு வேலையில்லாமல் சுத்திட்டு இருக்கும் போது..., எங்க தெருமுனையில் இருந்த ஆட்டோக்காரர்கள் கூட பழக்கம் ஆச்சு...., நானும் பணத்திற்கு ஆசைப்பட்டு அவங்ககூட ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன்...., அப்படி ஒருநாள் ஆட்டோ ஓட்டிட்டு இருக்கும்போது வந்த சவாரிதான் முருகன்..., 

 

திருவான்மியூரில் இருந்து கோவளம் வரை தண்ணீர் கேன் ஏத்திட்டு போகணுன்னு....,என்னை கூப்பிட்டான்..., அன்று நான் போகாமல் இருந்திருந்தால் என் வாழ்வு சீராக இருந்திருக்குமோ என்னவோ யார் கண்டார்...., நாங்க ஆட்டோவுல, திருவான்மியூரில் இருந்து கோவளம் நோக்கி போயிட்டு இருக்கும்போது..., போலீசார் எங்களை வழிமறித்தனர்...., எனக்கு அப்போ ஒன்னும் புரியல...., எதுக்காக எங்களை வழி மறிக்க வேண்டும்...., நாம எந்த தப்பும் பண்ணலை, தண்ணீர் கேன் தானே ஆட்டோல ஏத்திட்டு போறோம்னு நினைச்சேன்...., 

ஆனா முருகன் போலீஸ் கிட்ட பேசும்போதுதான் எனக்கு தெரிந்தது...., நான் என்னோட ஆட்டோல கொண்டு போறது தண்ணீர் இல்லை சாராயம் என்று...., முதல்ல இந்த விஷயம் தெரிஞ்சு அப்போ அதிர்ச்சியாய் இருந்தது..., உடனே முருகன் கிட்ட இத பத்தி கேட்ட போ...., அவன் என்கிட்ட ஒரு கத்தை நூறு ரூபாய் நோட்டை கொடுத்து என்னோட வாயை அடைத்து விட்டான்...., நானும் பணத்துக்கு ஆசைப்பட்டு, வெளியில யார்கிட்டயும் இதை பத்தி சொல்லல...., அப்புறம் இதுவே வாடிக்கையாகி போனது...., நானும் மெதுமெதுவாக குடிக்கு அடிமையாகி விட்டேன்..."

 

"கருணா..., உன்னோட பேருக்கு முன்னாடி...., கத்தினு.... ஒரு அடைமொழி இருக்கு...., அது எப்படி வந்தது...., என கலியமூர்த்தி அடுத்த கேள்வியை தொடுக்க, 

 

"முருகன் கூட சாராயம் கடத்தும் பொழுது எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்வாதிகள் கூட பழக்கம் வந்தது...., அப்படி....., ஒருநாள்...., எம்எல்ஏ குலோத்துங்கனை சந்திக்க போன பொழுது...., அவரை கத்தியால் ஒருவன் குத்த வந்தான்...., அதைப் பார்த்துட்டு நான் சுதாரித்து அவன் எம்எல்ஏவை குத்துவதற்கு முன், அவன் கையில் இருந்த கத்தியை பிடுங்கி..., அவன் வயித்துல இறங்கிட்டேன்...., அதுதான் நான் செய்த முதல் கொலை முயற்சி என்று கூட சொல்லலாம்..., அந்த சம்பவத்துக்கு பிறகு தான்.... கத்தி என்ற அடைமொழி என்னோட பேர் கூடவே ஒட்டிக்கிச்சு சார்...," எனக் கூறினான்.

 

"அமைச்சர் குலோத்துங்கனுகும், உனக்கும் இடையே என்ன தொடர்பு கருணா.....", என அவர் வினவ

 

"அந்த கத்திக்குத்து சம்பவத்துக்கு அப்புறம், நானும் எம்எல்ஏவும், ரொம்ப நெருக்கமாகி விட்டோம்...., இந்த நெருக்கம் எதுவரை என்றால்...., அவருக்கு தேவையான பொண்ணுங்களை அவர் சொல்ற இடத்திலிருந்து கூட்டிட்டு வந்து திருப்பி கூட்டிட்டு போற அளவுக்கு இருந்தது..., 

 

அப்படி வரப்போகும் இருக்கும்போது....., பழக்கமான ஆனவன் தான் சுடலைமுத்து..., அவனைப் பார்த்த பிறகுதான், என்னோட வாழ்க்கை பாதை அடியோடு மாறிப் போச்சு..., அவன் கையில் அதிக பணம் புழங்குவது பார்த்தேன்..., எப்படி? உன்கிட்ட இவ்ளோ பணம் வருது என விசாரிக்கும் போதுதான்...., அவன் அரசியல்வாதிகளுக்கு பொண்ணுங்களை சப்ளை பண்ற விஷயம் எனக்கு தெரிஞ்சது...., பணம் அதிகம் கிடைக்கும்...., நீயும்...., என் கூட வரியா...., அவன் கேட்டதுக்கு நானும்...., அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு சுடலை சொல்ற ஆட்களுக்கு எல்லாம் பொண்ணுங்களை சப்ளை செய்ய ஆரம்பித்தேன்".

 

"சுடலை கூட இவ்வளவு நெருக்கமாக இருக்கும்போது...., எதுக்காக? அவனை கொலை செய்தாய்? என ஜெயிலர் கலியமூர்த்தி கேட்க 

 

கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் மூக்கு விடைக்க, கண்கள் இரண்டும் கோவைப்பழம் போல சிவக்க, "அவன்.... எனக்கு..., துரோகம் பண்ணிட்டான் சார்... , 

 

என்னோட முதல் மனைவி, சுப்புலட்சுமி நான் செய்த தவறு எல்லாம் பிடிக்காமல் என்னை விட்டு குழந்தைகளுடன் பிரிந்து போய்விட்டாள்...., அவளோட நினைவாகவே சுத்திட்டு இருந்த எனக்கு..., சுடலை தான் முதன்முதலில்...., சுதா என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைத்தான்..., எனக்கு அவளை மிகவும் பிடித்து இருந்தது...., அவளை தொழிலுக்கு அனுப்பாமல்...., தாலிகட்டி நான் தனியாக வீடு பார்த்து வச்சுட்டேன்..., அவளோட ஞாபகமா..., என்னோட உடலில் அவள் பெயரை பச்சை குத்தி வச்சேன்..., அடுத்து ராதா...., என்ற மற்றொரு பெண்ணை, வடநாட்டிலிருந்து கூட்டிட்டு வந்தான்...., எனக்கு அவளையும் பிடித்துப்போக...., என்று பேச்சை இடையில் நிறுத்தியவன், மணியை பார்க்க அது 8 என காட்டியது.

6 மணிக்கு தொடங்கிய நேர்காணல் நிகழ்ச்சி இரண்டு மணி நேரம் எந்தவிதத் தொய்வும் இல்லாமல் நகர்ந்து இருந்தது.

 

" ஏன்? கருணா பாதியில பேசறதை நிறுத்திட்ட...,"என ஜெயிலர் கேட்க, 

 

" நாளைக்கு....எப்படி இருந்தாலும்...., நான் உயிரோட இருக்க போவதில்லை...., இப்ப...., எனக்கு பசிக்குது சார்...., சாப்டுட்டு தெம்பா நான் செய்த குற்றங்களை சொல்கிறேன் சார்..., என்றான்.

 

அவருக்கும் அவனைப் பார்க்கப் பாவமாக இருந்ததோ என்னவோ, அவனை சாப்பிட சொல்லி விட்டு, பேட்டி எடுக்க வந்த அந்த சேனலில் வேலை செய்யும் அனைவரும் சாப்பிட கலைந்து சென்றனர். அடுத்த அரை மணி நேரம் யாருக்கும் நிற்காமல் கடந்து இருக்க, மீண்டும் லைட்டிங், கேமராவின் அங்கில், என எல்லாம் சரிபார்த்து நேர்காணல் நிகழ்ச்சி தொடர்ந்தது.

 

"அதன் பிறகு.... என்ன நடந்தது கருணா....", என ஜெயிலர் கலியமூர்த்தி அவன் செய்த குற்றங்களைப் பற்றி கூற சொல்லி அவனை ஊக்க , 

 

"குரலை செருமி சரிசெய்தபடி "ராதாவையும் நான் திருமணம் செய்து, தனி வீடு பார்த்து வைத்துவிட்டேன்....., அவளோட பெயரையும் என்னோட நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டேன்....., நான் சுதாவையும், ராதாவையும், தொழிலுக்கு அனுப்பாமல் என்னோட நிறுத்திக்கொண்டது....., சுடலைக்கு பிடிக்கலை போல....., அவன் எனக்குத் தெரியாமல்....., என் மேல் வன்மம் வளர்க்க ஆரம்பித்திருந்தான்...., இது எல்லாம் நடந்து மூணு வருஷம் கழித்து....., பத்மினி என்ற ஒரு பெண்ணை ஆந்திராவில் குண்டூர் ஊரில் இருந்து கூட்டிட்டு வந்தான்..., அந்த நிமிஷம் என்னோட வாழ்க்கை தடம் மாறியது...., பத்மினி யோட அழகில் மயங்கி நான்...., அவளை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்...., ஏன்? வெறியா இருந்தேன்னு கூட சொல்லலாம்..., என்னோட அழிவு அங்க இருந்துதான் தொடங்கியது என்று எனக்கு அப்போது தெரியாது..., பத்மினி மேல சுடலைக்கு ஒரு கண்ணு இருந்திருக்கு, இந்த விஷயம் தெரியாமல், நான் பத்மினி திருமணம் செய்து கொண்டேன்....., எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது...., பத்மினிக்கு என்னோட முரட்டு சுபாவம் பிடிக்காமல், என்னை விட்டு ஒருநாள் விலகிப் போய்விட்டாள்...., 

 

எனக்கு தெரியாமல், சுடலையும், பத்மினியும், தனியாக பல்லாவரத்தில் வீடு எடுத்து குடியிருந்தார்கள்....., நான் அங்கு போய் பத்மினியை பார்த்து, எதுக்காக....., என்னை விட்டு விலகினாய்...., என கேட்டதற்கு அவள், என்னை தகாத வார்த்தைகளால் திட்டினாள், எனக்கு...., கண்ணு மண்ணு தெரியாமல் கோபம் வந்தது, கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் பக்கத்துல....அடுப்பு எறிக்க இருந்த விறகை எடுத்து, அவளின் நடு மண்டையில் நச்சென்று அடிச்சேன், ஒரே அடி தான்...., அவள் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்து விட்டாள்..., 

 

அவள் இறந்ததற்கு அப்புறம் தான், எனக்கு நான் பண்ண தப்போட வீரியம் புரிந்தது...., எனக்கூறி அவன் இரு கைகளால் முகத்தை தேய்த்து தன்னை நிலைப்படுத்தினான்.

 

இரண்டு நிமிடங்கள் அமைதியாக சுவற்றை வெறித்தவன், எங்கோ இலக்கில்லாமல் பார்வையை பதித்தபடி, 

 

"அவளை ரொம்ப விரும்பினேன் சார்...., கடைசியில..., இதே கையால அவளைக் கொன்று விட்டேன்....", எனக் குரல் கமர உரைத்தான்.

கலியமூர்த்தியின் முகத்தை பார்த்தபடி "நான் செய்த கொலை, யாருக்கும் தெரியாமல் இருக்க...., பத்மினியை அவள் இருந்த அதே வீட்டின் சமையலறையிலேயே குழி தோண்டி புதைத்து விட்டேன்....", என்றான்.

 

"பத்மினியை நீதான் கொலை செய்தாய் சரி...., எதற்காக? சுடலையை கொன்றாய்....," எனக் கலியமூர்த்தி பேச்சினை நிறுத்த....

 

"பத்மினியை காணாமல் சுடலை என்னைத்தேடி வந்து, அவளைப் பற்றி விசாரித்தான்..., அவனைப் பார்த்தவுடன் எனக்கு அவன் செய்த துரோகம் தான் நினைவுக்கு வந்தது...., அதே இடத்திலேயே அவனைக் கொல்லும் வெறி வந்துச்சு...., என்னோட கூட்டாளிங்க ஆட்டோ மணி, பாபு ஜெயவேல், கிட்ட சுடலை பற்றி சொல்லி, சரக்கு வாங்கிட்டு வர சொன்னேன்....., 

 

வாங்கிட்டு வந்த சரக்கை சுடலைக்கு மூச்சு முட்ட ஊத்திக் கொடுத்தேன், அவன் போதை ஏறி மட்டை ஆனபிறகு..., அவனோட கழுத்துல என்னோட காலை வைத்து அழுத்தி அவனை கொன்றேன்...., டெட்பாடியை எப்படி அப்புறப்படுத்துவது என்று புரியாமல் நின்ன, அப்போ..... ஜெயவேல் அவனை எரித்து சாம்பலை கடலில் கலந்து விடலாம், அவன் இறந்தது யாருக்கும் தெரியாது..., என ஐடியா கொடுத்தான்..., 

 

ஜெயவேலு சொன்னமாதிரி..., சுடலை பிணத்தை எரித்து, அவன் சாம்பலை கடலில் கரைத்து விட்டோம்..., 

 

அதோட பிரச்சனை முடிந்ததாக நினைத்துக்கொண்டிருக்க...., மூணு மாசம் கழிச்சு...., இல்லை....., இன்னும்...., பிரச்சனை முடியலன்னு...., சொல்வதுபோல, சுடலையோட நண்பன்...., ஆட்டோ ரவி....., என்னைத்தேடி வந்தான்" என கருணாகரமூர்த்திதன் பேச்சை நிறுத்த, 

 

உடல் முழுவதும் பரபரப்புடன், "ரவியை..., என்ன செய்தாய்? கருணா...., என வினவினார் கலியமூர்த்தி, 

 

"கொன்னுட்டேன் சார்...., அவனையும் கொன்னுட்டேன்....,எனக்கு எதிராக யாரும் இருக்கக்கூடாது இல்லையா...., அதான் இப்படி...., இந்தமுறை...., டெட்பாடி அப்புறப்படுத்த நேரம் இல்லாததுனால...., என்னோட வீட்டுக்கு பின்னாடி குழிதோண்டி அவனே புதைத்துவிட்டேன்...., 

 

"அவங்க மூணு பேரும் தப்பு செய்தார்கள் அதனால் கொலைசெய்த சரி...., சம்பத், மோகன், கோவிந்தராஜ், இவங்க..... மூணு பேரும் என்ன தப்பு செஞ்சாங்க...., ஏன்? அவர்களை கொலை செய்தாய் கருணா...., என கலியமூர்த்தி கேட்க, 

 

"அவங்க மூணு பேரும் என்னோட கஸ்டமர் சார்...., ஒவ்வொரு முறை வரும்போதும் பணம் கொடுக்காமல் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பிச்சிட்டு இருந்தாங்க...., கடைசியாக வந்த போது பணம் கொடுக்காமல் பொண்ணுங்ககிட்ட தகராறு செய்தனர், எனக்கு வந்த கோபத்துக்கு ஏன்டா...., இப்படி பண்றீங்கன்னு கேட்டதற்கு, திமிரா... , அப்படிதான் பண்ணுவோம்னு சொன்னாங்க....,

 

இவங்களை இப்படியே விட்டா, என் மேல இருக்கிற பயம் போயிடும், என் பேட்டையில் இருக்க யாரும் என்னை மதிக்க மாட்டார்கள் என்று நினைத்து...., என் தம்பி மோகன் அவன் நண்பர்கள் ஆறு பேர் கூட சேர்ந்து, அந்த மூணு பேரையும் மட்டை போட முடிவு செஞ்சோம்...., பிளான் செய்தபடி அவங்கள மட்டையாகி...., (கொலை செய்து) திருவான்மியூரில் இருக்கும் என்னோட வீட்டில், ரவியை புதைத்த அதே வீட்டில், அவர்களை புதைத்து வைத்தோம்.

 

இந்த மூன்று கொலை குற்றம் தான் கருணாகரமூர்த்தி செய்த அனைத்து கொலைகளையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது, கத்தி கருணா என்ற அரக்கன் சிறைக்கு செல்ல காரணமாகியது.

 

9.5. 1988 ஆம் ஆண்டு காலை வேளை அனைவருக்கும் ஒரு ஒருவிதமாக விடிந்தது என்றால், தமிழ்நாட்டு மக்களுக்கு மோகன், சம்பத், கோவிந்தராஜை, கத்தி கருணை கொலை செய்து விட்டான் என்ற கொட்டை எழுத்துக்களில் ஹெட்லைன்ஸ் தாங்கிய செய்தித்தாள்களின் அதிர்ச்சியான தகவலுடன் விடிந்தது.

 

செய்திச் சானல்கள் முழுவதும் அவன் முகம் நொடிக்கு ஒரு முறை மின்னலாக தோன்றி மறைந்தது , டீ கடை, சலூன், மக்கள் கூடும் தெருமுனை, கல்யாண வீடு என அனைத்து இடங்களிலும் கருணாகரமூர்த்தி மட்டுமே பேச்சு பொருளாகி போனான்.

 

மோகன், சம்பத், கோவிந்தராஜ்,மூவரும் காணவில்லை என காவல் நிலையத்தில் வழக்கு பதியப் பட, போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

 

விசாரணை செய்த அனைத்து வழியும் கருணாகரமூர்த்தி என்ற ஒற்றை மனிதனிடம் சென்று முடிவடைய, விளைவு அன்று மாலை கருணா கைது செய்யப்பட்டான், உடன் அவன் கூட்டாளிகள் பாபு, மணி, ஜெயவேல் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

 

கருணாகரமூர்த்தி இதுவரை வெளி உலகிற்கு உருவாக்கி வைத்திருந்த ரவுடி, ஆனாலும்...., நல்லவன் என்ற பிம்பம் தூள் தூளாக உடைந்து சிதறியது, கருணா இப்பொழுது அனைவரிடமும் கொலைகாரனாக அடையாளம் காட்டப்பட்டு இருந்தான்.

 

போலீஸ்காரர்கள் எவ்வளவு துன்புறுத்தியும், அடித்தும், மிரட்டியும், கருணா எனும் மனிதனின் வாயிலிருந்து, ம்ம்.... என்ற ஒற்றைச் சொல்லை கூட பிடுங்க முடியவில்லை, பாபு மட்டும், போலீசாரின் அடி பொறுக்கமுடியாமல் அப்ரூவராக மாறியிருந்தான்.

 

அவன் அளித்த தகவலின் அடிப்படையில், திருவான்மியூர் பெரியார் நகரில் உள்ள கருணாகரமூர்த்தியின் வீட்டை தோண்ட, வரிசையாக அழுகிய நிலையில் மூன்று பிணங்கள் எடுக்கப்பட்டது, வீட்டின் பின்புறம் ரவியின் பிணம் எலும்புக்கூடாக தோண்டி எடுக்கப்பட்டது.

 

பத்மினி, சுடலை உடன் வாழ்ந்த வீட்டில், அவள் உடலும் அழுகிய நிலையில் இருந்து கையகப்படுத்தப்பட்டது, சுடலையின் மரணம் குறித்து கேள்வி எழ, அவன் உடலை கருணாவுடன் சேர்ந்து எரித்து கடலில் கரைத்து விட்டதாக கூறியிருந்தான் பாபு.

 

பாபு அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு, கருணாவின் மற்ற கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட 11 குற்றவாளிகளும், கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை நடுவர் இடம் ஆஜர் செய்யப்பட்டனர், ஐபிசி செக்சன் 320~ சதி செய்தல், 147 ~ கூட்டாக கலவரம் செய்தல், 148 ~ பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்தல், 364 ~ கொலை செய்வதற்கு ஆட்களை கடத்துதல், 302 ~ கொலை, 201 ~ கொலைக்கான சாட்சியங்களை மறைத்தல், முதலிய குற்றப் பிரிவுகளின் கீழ் 11 பேரின் மீதும் வழக்கு பதியப்பட்டது. 

1100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது, குழந்தையின் கையில் அகப்பட்ட ஜவ்வுமிட்டாய் போல வழக்கு இழுபட்டு செங்கல்பட்டு கூடுதல் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

 

ஐந்து காவல் ஆய்வாளர்கள், நடிகை புவனி உட்பட 134 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, இறுதியாக தமிழ்நாட்டில் எம்ஜிஆர் மனைவி ஜானகி ஆட்சி கலைந்து, ஆளுனர் ஆட்சி நடை பெறும் காலத்தில், அதாவது மே மாதம் 31-ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றம் கருணாவிற்கு மரண தண்டனை அளித்தது.

 

வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, கருணாகரமூர்த்தி தன் பண பலத்தை பயன்படுத்தி, கோட்டூர்புரத்தில் உள்ள தன் வீட்டில், ஆற அமர விருந்துண்டு அதன்பின் பொறுமையாக நீதிமன்றம் வந்த கதைகளும் உண்டு.

 

வெளி உலகில் அனைவரின் கண்களுக்கும் முன்பும் தன் காதல் காவியத்தை அரங்கேற்றிய கருணா, சிறைக் கம்பிகளுக்கு பின்னால் யாருக்கும் தெரியாமல், காதல் பயிரை வளர்க்க முற்பட்டான், 

 

அவனது ஐந்தாவது காதலி, இல்லை இல்லை ஐந்தாவது மனைவி, அவனுடன் சிறை அறையை பகிர்ந்து கொண்ட பாண்டியனின் மனைவி.

 

பாண்டியனை பார்க்க வரும்போதெல்லாம், கருணா கற்பகத்துக்கு காதல் வலையை வீச, வலையில் கற்பகம் என்னும் மீன் வசமாக மாட்டிக்கொண்டது, விளைவு 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி, வலையை விரித்து அவனும், வலையில் மாட்டிக்கொண்ட கற்பகம் எனும் மீனும், காதல் பறவைகளாக சிறைக் கம்பிகள் எனும் வேலியை தாண்டி காதல் பயிர் வளர்க்க ஒரிசாவை நோக்கி பறந்து விட்டனர்.

 

இருவரும் மோதிரம் மாற்றி, திருமணம் செய்து கொண்டதாக ஒரு வதந்தியும் அப்போது உலவியது.

 

கருணா சிறையிலிருந்து தப்பித்து, தன் காதலியுடன் தலைமறைவான செய்தி தமிழக சிறைத் துறைக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்த, சிபிசிஐடி, மாநகர காவல்துறை மற்றும் சிறைத்துறை என 3 தனிப்படை அமைக்கப் பாட்டு கருணாவை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

 

தேடுதலின் முடிவில் கருணாவின் கூட்டாளிகளுடன் ஒரிசா மாநிலத்தில் ரூர்கேலா எனுமிடத்தில் தனி வீடு எடுத்து தங்கியிருந்ததாக செய்தி கிடைத்தது, 12 நாட்களுக்கு பிறகு கருணாவும் அவன் கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

 

அதற்கு அடுத்த வந்த வாரத்திலேயே, கருணாவிற்கு தூக்கு தண்டனை அளிக்க சிறைத்துறை ஏற்பாடு செய்ய , அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான் கருணா.

 

தன் வீட்டில் நடைபெற்ற கொலைகளுக்கும், தனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை, நான் எந்த கொலையும் செய்யவில்லை என்பது கருணாவின் தரப்பு வாதமாக இருக்க, கண்டெடுக்கப்பட்ட உடல்களின் மண்டையோட்டினை சூப்பர் இம்போசிஷன் என்ற முறையில் ஆய்வு செய்து, கொலைகளை கருணாகரமூர்த்தி தான் செய்தான் என நிரூபிக்கப்பட்டது.

 

சூப்பர் இம்போசிஷன் முறை என்பது மண்டை ஓட்டின் முக வடிவை இறந்து போனவரின் முகத்துடன் ஒத்துப் போகிறதா என கண்டறியும் முறையாகும்.

உயர் நீதிமன்றம் அளித்த தண்டனையை தகர்க்க, அடுத்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்தான் கருணா, அம்மனுவில் சிவப்பு ரோஜா திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசம் நிறைந்த காட்சிகள் இருந்ததாகவும், அந்த சினிமாவின் பாதிப்பால் மற்றும் தாக்கத்தால் தான் நான் இந்தக் கொலைகளை செய்தேன் என குறிப்பிட்டு இருந்தான், மேலும் நான் செய்த தவறுகளுக்கு எல்லாம் அந்த சினிமாவின் தயாரிப்பாளர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், எனவே தனக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தான்.

 

உச்சநீதிமன்றம் கருணாகரமூர்த்தி குறிப்பிட்ட அனைத்து வாதங்களையும், அறுதியாக மறுத்து, கீழமை நீதிமன்றம் அவனுக்கு அளித்த தண்டனையை உறுதி செய்தது. 

 

விடுதலைக்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு, கடைசியாக மரணத்திலிருந்து தப்பிக்க, அவனுக்கு இருந்த கடைசி துருப்பு சீட்டை கையில் எடுத்தான் கருணா.

 

ஆம் ஜனாதிபதிக்கு தன் தண்டனையைக் குறைக்கச் சொல்லி, கருணை மனு செய்திருந்தான், ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மா அவன் அனுப்பிய மனுவினை தயவு தாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்தார்.

 

அதோ..., இதோ...., என கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த மரணம், அவன் கழுத்துக்கு வெகு அருகில், நாளை காலை விடியல் என்பது அவனுக்கு காணக்கிடைக்காத அறுதி இல்லாத ஒன்று.

 

நான் செய்த அனைத்து குற்றங்களையும், யாருடைய தூண்டுதலும், வற்புறுத்தலும், இல்லாமல் வெளிப்படையாக எந்தவித கூச்சமின்றி, அனைவர் முன்பும் கேமராவின் முன்பு வாக்குமூலமாக அளித்துக்கொண்டிருந்தான் கருணாகரமூர்த்தி.

 

அவன் கூறிய அனைத்தையும், ஒரு வித பயத்துடன் கண்களில் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார் ஜெயிலர் கலியமூர்த்தி.

 

தொலைக்காட்சி குழுவினரும் ஒரு வித நிலையில்லாத மனநிலையிலேயே இருந்தனர், எந்த வகையைச் சேர்ந்த மனிதன் இவன்..., ஆறு கொலைகளை செய்துவிட்டு, அதற்கான காரண காரியங்களை வரிசையாக, ஏதோ...., ஹோட்டலில் சென்று உணவு உண்டேன் என்பது போல சர்வசாதாரணமாக சொல்கிறான், என்பது அவர்களின் மனநிலை.

 

கருணாகர மூர்த்தி இருந்த அறையின் கடிகாரம், மும்முறை கூறி மணி 3 என அனைவரின் கவனத்தையும் கலைத்தது.

 

"கடைசியாக ஏதாவது சொல்ல நினைக்கிறாயா கருணா...., என கலியமூர்த்தி கேட்க, 

 

"என்னோட வீட்டில் குளியலறை ஜிங்கிட்ட ஒரு சின்ன கம்பி இருக்கு சார்...., அதைப் பிடித்து இழுத்தாள் ஒரு டைரி வெளியில் வரும்...., அந்த டைரியில் நான் சம்பாதிச்ச பணத்தை எல்லாம் எங்க வைத்துள்ளேன் என்ன எழுதி இருக்கிறேன்...ம், அதுமட்டுமில்லாமல்...., நான் செய்த குற்றங்களுக்கு பின்புலமாக இருந்த அரசியல்வாதிகள்...., யார்...., யார்...., அவர்கள் இதுவரை என்னென்ன தப்பு செய்து இருக்கிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறேன்..., நீங்களும், ஊரும், உலகமும், மதிக்கிற, மரியாதை தருகிறா.....போற்றுகிற...., அரசியல்வாதிகளின் திருகுதளங்கள், தவறுகள் குற்றங்கள், எல்லாமே அதில் இருக்கு...., டைரியை படித்ததுக்கு அப்புறம்...., இவனுக்காக நாம் மரியாதை செய்தோம்...., என்று நீங்கள் வருத்தப்படாமல் இருந்தால் சரி...", என்று, 

 

அன்று அரசியலில் ஏறுமுகத்தில் இருந்த, அனைத்து அரசியல்வாதிகளின் முகத்திரையைக் எல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக அனைவரின் முன்பும் நாறு நாராக  கிழித்துக் கொண்டிருந்தான் கருணாகரமூர்த்தி.

 

பேசிக்கொண்டிருக்கும்போதே நெஞ்சை அடைக்க தொண்டையை இருகைகளால் தடவி விட, 

"தண்ணீர் வேணுமா கருணா ...., என்ன ஜெயிலர் கேட்க, 

 

"இல்லை சார் வேண்டாம்...., ஒரு பாண்டா இருந்தால் சொல்லுங்க...., நாளை எப்படி இருந்தாலும் சாகப்போகிறேன்...., கடைசி ஆசையாக நினைத்து...., தாங்கள் சார்...", என்றான்.

 

சிரித்தபடி அவன் தோள்களில் தட்டிய கலியமூர்த்தி," இன்னும்கூட...., உனக்கு குசும்பு போகல டா...", என அருகில் இருக்க காவலரிடம் அவன் கேட்டதை கொண்டுவரச் சொன்னார்.

 

அவன் கேட்ட குளிர்பானத்தை காவலர் கொண்டுவந்து கொடுக்க குளிர்பானத்தை மிடறு மிடறாக அருந்தியவன் கையில் காலியான குளிர்பான பாட்டிலை வைத்துக் கொண்டு, 

 

"சார்....., எனக்கு ஒரு சந்தேகம்...., என கலியமூர்த்தி பார்த்து கேட்க, 

 

"என்ன சொல்லு...", என்றார் அவர்

 

"ஒண்ணுமில்ல சார்..., இப்போ, என் கையில் இருக்க பாட்டிலை உடைத்து, நான் என் கையை கிழித்து கொண்டேன் என்றால்...., கை காயம் ஆறும் வரை..., எனக்கு தண்டனை தள்ளிப்போகும் இல்லையா சார்...., ஏன் கேட்கிறேன் என்றால்..., 

 

இன்னும், ஒரு வாரம் நேரம் கிடைத்தாலும் போதும்...., நான் ஜெயிலில் இருந்து தப்பித்து போயிடுவேன...., அதான்.....",என்றான்.

 

அவன் கூறியதைக் கேட்ட கலியமூர்த்தி மென்னகை உடன் அவன் அருகில் வந்து கைகளிலிருந்த கண்ணாடி பாட்டிலை வாங்கியபடி "நீ.....கூல்ட்ரிங்ஸ் கேட்கும்போதே நான் இதை எதிர்பார்த்தேன் கருணா, நீ கையை கிழித்து கொண்டாலும், அதனை....., மறைத்து உன்னை, கண்டிப்பாக தூக்கில் தொங்கவிட தான் போகிறேன், நானாக வெளியில் சொல்லும் வரை, நீ வெட்டிக் கொண்டது யாருக்கும் தெரியாது...., என்றார் .

 

" மணி இப்போ மூன்றரை...., உன்னோட குடும்பத்துக்கு ஏதாவது சொல்லணும் என்று நினைத்தால் இந்த பேப்பரில் எழுதி வை..., நான் ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன்...., என்று கூறி அங்கிருந்து அகன்றார் கலியமூர்த்தி.

 

நேரலை நிகழ்ச்சியை அத்துடன் முடித்துக்கொண்ட தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்களும், தங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.

 

கடைசியாக தன் முதல் மனைவி சுப்புலட்சுமி க்கும், மகளுக்கும் தன் இறுதி எண்ணங்களை எழுதிக் கொண்டிருந்தான் கருணா, தன் கடைசி ஆசையாக தன் கண்களை தானம் செய்ய வேண்டும் என கேட்டிருந்தான், ஆனால் சட்ட சிக்கல்களில் விளைவால் அவன் ஆசை நிறைவேறவில்லை.

 

மணி நான்கரை அடிக்க, அவன் இருந்த அறைக்குள் நுழைந்தார் கலியமூர்த்தி.

 

"கருணா.... நேரம் ஆகிடுச்சு, குளிக்கிறதா இருந்தால் குளித்துக் கொள்....., என்று சொல்ல 

 

"இல்லை சார்...., நான் குளிக்கல..., என்று மறுத்துவிட்டு நிமிர்ந்த நடையுடன் தன் மரணத்தை ஏற்க தயாரானான் கருணாகரமூர்த்தி.

 

மணி 5 ஆனதும் காபி அளிக்கப்பட, அதை பருகியவன், அதன்பின்பு அங்கிருந்த காவலர்களால் தூக்கு மேடைக்கு அழைத்து வரப்பட்டான்.

 

தூக்குமேடை வாசலில் நிற்கும் போதுதான் வாழ்க்கையில் அவன் செய்த தவறுகளின் விரியம் அவனுக்கு புரிந்தது, வாழ்க்கையின் சாராம்சம் தெரிந்தது, புரிந்தும், அறிந்தும், தெரிந்தும், என்ன பயன்? இப்பொழுது மரணத்தின் விளிம்பில் அல்லவா... அவன் நின்று கொண்டிருக்கிறான், புரிந்தவைகளை வாழ்ந்து பார்க்க, அவனுக்கு வாழ்க்கை இல்லையே..., இப்பொழுது புரிந்த விஷயம் முதல் குற்றம் செய்யும் போது புரிந்திருந்தால், இந்த தண்டனைக்கு அவசியமில்லை, அவன் வாழ்வு மலர்ந்து இருக்குமோ என்னவோ....,

 

தூக்கு மேடையில் படிகளில் தன் பாதத்தை அழுத்த வைத்து ஏறியவன், கலியமூர்த்தியை பார்த்து இறுதியாக, " இந்த மரண தண்டனை எனக்கு தேவையானது தான் சார்...., நான் செய்த குற்றங்களுக்கும், தவறுகளுக்கும், பாவங்களுக்கும், இதுதான் சரி...., இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை...., ஒரு மனிதன் எப்படி எல்லாம் வாழக்கூடாது என்பதற்கு நான் தான் சரியான உதாரணம்...., ஒரு வேளை என்னோட அம்மா இருந்து, என்னை சரியா வளர்த்திருந்தால், நான் நல்லவனாக இருந்திருப்பேனோ என்னவோ, முதல் தவறு செய்தபோது, என் தந்தை...., என்னை கண்டித்து இருந்தால்...., எனக்கு இப்போது இந்த நிலை வந்திருக்காது..., என மனத்தாங்கல் உடன் உரைத்தவனின், முகத்தில்...., முகம் முழுவதும் மறைக்கும் படியான முகமூடி போடப்பட்டது, கைகள் இரண்டும் பின்புறம் இறுக்கி கட்டப்பட்டது...., கழுத்தில் தூக்கு கயிறு சுருக்கு மாட்டப்பட்டது.

 

கலியமூர்த்தியும், மற்ற காவலர்களும் தூக்குமேடையில் இருந்து விலகி நிற்க, ஒரு காவலர் மட்டும் தூக்கு போடுவதற்கான. லீவரை விசையுடன் இழுத்தார்.

 

படார்...., என்ற சத்தத்துடன் கதவுகள் திறக்க, கீழே இருந்த சுரங்கம் போன்ற அமைப்பு திறந்து கொண்டது, அதேவேளையில் மரணத்தை எதிர்நோக்கி காத்திருந்த கருணாவின் உடல் அதிக விசையுடன் கீழே இறங்கியது.

 

பொதுவாக மரண தண்டனை குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் பொழுது அவர்களின் கழுத்து இழுக்கப்படுவதால், உடல் வெட்டி, வெட்டி துடிக்கும், கைகள் கால்கள் எல்லாம் உதறும்.

 

ஆனால் கருணாவின் உடல் துடிக்கவில்லை, துவளவில்லை , உதறவில்லை, உதடுகளில் தவழும் புன்னகையுடன், இறுதி நிமிடங்களில், தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை, பயமின்றி ஏற்றுக்கொண்டான் கருணாகரமூர்த்தி.

 

கண்கள் மெதுவாக இருட்டிக் கொண்டு வந்தது, கண்களை மூடி வலியை உட்கிரகிக்க முற்பட்டான், கயிறு கழுத்தை இறுக்கியது உடலை விறைப்பாக வைத்து வலியை தாங்கினான், நிமிடங்களாக கரைய ஹுக்கும்.... என்ற சத்தத்துடன் அவன் தலை தொங்கி விழுந்தது.

 

தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அரைமணி நேரத்திற்கு, பின்பு உடல் கீழே இறக்கப்பட்டு, அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் முடிக்கப்பட்டு, காலை 7:00 மணிக்கு, கருணாகரமூர்த்தியின் உடல் அவன் முதல் மனைவி சுப்புலக்ஷ்மியிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

கருணாகர மூர்த்தியின் உடலைக் கண்டு அவன் மனைவியும், குழந்தைகளும் கதறி அழுதனர், மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதற்கு கருணாவின் வாழ்வு ஒரு சாட்சி, ஆறு கொலைகளை, நெஞ்சில் எந்த வித ஈரமும் இல்லாமல் செய்தவனின் மரணம், அவன் மனைவி மற்றும் குழந்தைகளின் நெஞ்சில் குருதியை வடிய செய்தது, மனைவிக்கு அவன் உண்மையாக இல்லை என்றாலும், தன் தாயால் தனக்கு ஏற்பட்ட அவல நிலை தன் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான், கடைசிவரை ஒரு நல்ல தந்தையாகவும் செயல்பட்டான்.

 

கருணா அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், அவன் வீட்டில் இருந்த டைரி கைப்பற்றப்பட்டது, டைரியிலிருந்து தகவல்களின் விளைவால், அரசியல்வாதிகள் பெரும்புள்ளிகளின் கருப்பு பணம் பதுக்கி வைத்து இருத்த மறைமுக இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது, அதன் பிறகு தமிழ்நாட்டின் பெரும் புள்ளிகளும், அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட்டனர், தமிழ்நாடே...., கருணா தூக்கில் இடப்பட்ட அன்று பற்றி எரிந்தது.

 

கத்தி கருணா, எனும் ஒற்றை மனிதனின் இறுதி வாக்குமூலம் நாட்டையே உலுக்கியது, கருணாகரமூர்த்தி எனும் ஓற்றை மனிதனின் வீழ்ச்சி, அரசியவாதிகளின், பெரும் புள்ளிகளின் விழ்ச்சிக்கும், அவர்களின் அரசியல் வாழ்வு, அஸ்தமனம் ஆவதற்கு முதன்மை பொருளாக அமைந்தது.

 

இன்றளவும்..., 20 வருடங்கள் கடந்தும்...., கருணாகரமூர்த்தி என்னும் மனிதனின் வீழ்ச்சி பேசப்படுகிறது, காரணம் மரணிக்கும் தருவாயில் அவன் அளித்த இறுதி வாக்குமூலம்.

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 572
08/06/2020 1:02 pm  

சூப்பரா எழுதியிருக்க சரண்யா... படிக்கும் போது ஆறு கொலை செஞ்சவனா இருந்தாலும், மனசறிஞ்சு.. விருப்பம் இல்லாம இன்னும் கொஞ்ச நேரத்துல ஒரு மனுஷன் சாக போறங்கறது ஜீரணிக்க கஷ்ட்டமா இருந்தது. தன்னோட கடைசி நிமிடங்களை எண்ணிகிட்டே இருந்து சாகரதுங்கறது ரொம்ப பெரிய கொடுமை. அவனே சொன்ன மாதிரி அந்த தண்டனைக்கு அவன் தகுதியானவன் தான் அப்படின்னாலும், அவன் இடத்துல நம்மள கொண்டு போயி உட்கார வச்சுட்ட உங்களோட எழுத்து பாராட்டுக்குரியது. 👍 👍 👍 

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote
யாழ் மொழி
(@saranya-venkatesh)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 112
08/06/2020 1:48 pm  

நன்றி சிஸ் மிகவும் மகிழ்ச்சியாக தருணம் தங்களிடம் இருந்து இந்த வார்த்தைகளை நான் எதிர் பார்க்க வில்லை

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்


ReplyQuote
Share: