Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

தடம் மாறிய தடயம்
 
Notifications
Clear all

தடம் மாறிய தடயம்  

  RSS

Barkkavi Murali
(@barkkavi)
Eminent Member Writer
Joined: 12 months ago
Posts: 36
11/10/2019 7:51 pm  
தடம் மாறிய தடயம்

இடம்: கொடைக்கானல் காவல் நிலையம்
நேரம்: காலை 5.00 மணி

இருள் விலகாத காலை வேளை. உறைபனி யின் உபயத்ததால் வீதியே ஆள் அரவமற்று இருந்தது. சூரியனின் சோம்பல் பெரிதோ அல்ல மக்களின் சோம்பல் பெரிதோ என்ற சூழ்நிலை. இச் சூழ்நிலைக்கு காவல் நிலையம் மட்டும் தப்புமா என்ன?

அங்கே கைதிகளோடு அதிகாரிகளும் உறங்கிக்கொண்டிருந்தனர். நிஷப்தமான நேரத்தைக் கிழித்துக்கொண்டு வந்தது ஒரு பெண்ணின் அழுகுரல்.

சட்டென்று எழுந்தார் கான்ஸ்டபிள் கந்தசாமி.

வெளியே ஒரு பெண் அழுது ஓய்ந்த தோற்றத்தில் அங்கங்கே இரத்தக் கறையோடும் கண்களில் பதற்றத்தோடும் நின்றுக் கொண்டிருந்தாள்.

“யாருமா நீ? இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிட்டு இருக்க?”
விம்மல்கள் மட்டுமே அவளிடத்தில்.

“சார்…. என்… ஹஸ்… ஹஸ்பண்ட்…”

“முதல்ல அழாம சொல்லுமா”

அப்போது அவ்விடத்தில் கம்பீரமாக வந்து நின்றது அந்த ரெட் ஸ்கார்பியோ. உள்ளே திமிரின் மறுஉருவமாக, அழுத்தத்தை மொத்தமாக குத்தகை எடுத்தவனாக, எவரின் கணிப்பிற்கும் அப்பாற்பட்டவனாக, கம்பீரக் காவலனாக அவன். அவன் அபிஜித் மஹாதேவ் இன்ஸ்பெக்டர். இன்ஸ்பெக்டராக பதவியேற்ற அரை வருடத்தில் 3 இடமாற்றல்கள், எக்கச்சக்க பாராட்டுக்கள், சிற்சில ஹாட்நியூஸ்கள் . இவற்றின் மத்தியில் டெரர் போலீஸ் என்ற இமேஜோடு திரியும் இவன், இந்த தசாப்தத்தில் பொறுக்கி எடுக்கக்கூடிய சிறந்த காவலர்களுள் ஒருவன். எடுத்த காரியம் யாவிலும் வெற்றிவாகை சூடியவன் இக்காவல் நிலையத்தில் பொறுப்பேற்று ஒரு வாரமாகிறது.
இந்த ஒரு வாரமும் இவன் குணநலன்களை கணிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றனர் அதிகாரிகள்.

“என்ன பிரச்சனை கந்தசாமி?” – அவனின் கூர்மையான பார்வை அந்த பெண்ணின் மீது.

“அததான் சார் நானும் கேட்கிறேன். இந்தம்மா வந்ததிலிருந்து அழுத்துட்டே இருக்கு சார்.”

“அழுகாம என்ன நடந்ததுனு சொல்லுங்க” – என்றான் வெகு அழுத்தமாக. அது ‘நீ சொல்லித்தான் ஆக வேண்டும்’ என்ற குரல். மனதிற்குள் பயந்தாலும் தன் மௌனம் கலைத்து நடந்ததை கூற ஆரம்பித்தாள் அவள்.

“என் ஹஸ்பண்ட்ட கொன்னுட்டாங்க சார்”

“என்னம்மா சொல்ற…… யாரு கொன்னா?” பதறினார் கந்தசாமி.
“கந்தசாமி அவங்கள முழுசா சொல்ல விடுங்க. உங்க பேரு எங்க இருந்து வரிங்கனு சொல்லுங்க.”

“சார் என் பேரு நிகிதா. நான் ஒரு அநாதை. சென்னை ல **** சாப்ட்வேர் சொல்லுஷன்ஸ்ல வேலை பாக்குறேன். எனக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் கல்யாணம் ஆச்சு. எங்களோடது லவ் மேரேஜ். அவரு என் கம்பெனி சி.இ.ஓ வோட ப்ரென்ட். ஆறு மாசம் லவ் பண்ணோம். அவரு
வீட்டுல எங்க லவ்வ அக்ஸப்ட் பண்ணல. அதனால நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். இந்த ஒரு வாரமா இங்க கொடைக்கானல்ல ஹனிமூன் முடிச்சுட்டு நேத்து ராத்திரி தான் சென்னை கிளம்பினோம். போற வழில எங்க கார ஒரு லாரி இடிச்சுட்டு போயிடுச்சு. அதிர்ச்சில நான் மயங்கிட்டேன். முழுச்சுப் பாக்குறப்போ நான் ஒரு புதருக்குப் பக்கத்துல விழுந்துக் கிடந்தேன். என் ஹஸ்பண்ட் அங்க இல்ல. நாங்க வந்த காரும் அங்க இல்ல.” – இடையிடையே விம்மல்களுடன் கூறினாள்.

“எத வச்சு உங்க ஹஸ்பண்ட்ட கொன்னுட்டங்கன்னு சொல்றிங்க? உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?”

“எனக்கு என் மாமனார் மேல தான் சார் சந்தேகமா இருக்கு. அவருக்கு தான் முதலில் இருந்தே நாங்க கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பமில்ல. அவரு தான் இதை செஞ்சுருப்பாரு.” – கதறினாள் அவள்.
கந்தசாமிக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. “பொறுமையா இருமா. உன் ஹஸ்பண்ட்ட கண்டுபிடிச்சுரலாம்.”

“கந்தசாமி அவங்க கிட்ட கம்ப்ளைன்ட் எழுதி வாங்குங்க.”

“உன் ஹஸ்பண்ட் பேரு என்ன மா?”

அவள் சிறிது தயங்கினாள். “அது வந்து… அது….”

“என்ன மா வந்து போயினு. சொல்லுமா…”

“நான் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க சார்… அவரு பேரு பிரதீப். எக்ஸ் மினிஸ்டர் கங்காதரனோட பையன்.”

இதை அவள் சொன்னதும் அங்கிருந்தவர்கள் அவளை ஒரு மாதிரி பார்த்தனர்.

“என்ன மா சொல்ற எக்ஸ் மினிஸ்டர் பையனா உன் ஹஸ்பண்ட்?”

“ஆமா சார். நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணது கங்காதரன் சார்க்கு பிடிக்கல. எப்படி பிடிக்கும்? நான் ஒரு அநாதை. அவரு பையனுக்கு பெரிய சம்பந்தம் பார்க்கணும்னு ஆசைப்பட்டார். எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை விலகிடச்சொல்லி மிரட்டினார். ஆனா கடைசில அவரு பையனையே கொல்லுவார் னு நான் நினைக்கல.” என்று கூறிவிட்டு அழுதாள் அவள். கந்தசாமிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவள் கூறியதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

“என்ன கந்தசாமி கம்ப்ளைன்ட் எழுதி வாங்கிட்டீங்களா?”

“சார் அது வந்து…. எக்ஸ் மினிஸ்டர்….” – தந்தி அடித்தார் அவர்.

“எனக்கு கேட்டுச்சு கந்தசாமி. ப்ரோசிட் பண்ணுங்க.”

பின் நிகிதாவைப் பார்தது, “ஆக்சிடெண்ட் எங்க நடந்துச்சுனு தெரியுமா?” என்று வினவினான்.

“எக்ஸாக்ட்டா எங்கனு தெரியாது சார். அடுக்கம் பக்கத்துல தான் சார்.”

“அடுக்கம் னு உங்களுக்கு எப்படி தெரியும்?” – சந்தேகத்தோடு கேட்டான்.

“அங்க போர்டு ல இருந்துச்சு சார்” நடுக்கத்ததோடு சொன்னாள் அவள்.
அடுக்கம் என்ற பெயரைக் கேட்டவுடன் லேசாக அதிர்ந்தார் கந்தசாமி. அதையும் கவனித்துக் கொண்டான் அபிஜித்.

பின்னர் ஒரு கான்ஸ்டபிள் மற்றும் ஒரு லேடி கான்ஸ்டபிளோடு நிகிதாவை மருத்துவமனை அழைத்துச்செல்லுமாறு பணித்தான். முதலில் தயங்கினாலும் காயங்கள் கவனிக்கப்பட வேண்டியமையால் மறுக்காமல் சென்றாள்.

“கந்தசாமி வண்டிய ரெடி பண்ண சொல்லுங்க…. ஆக்சிடெண்ட் ஸ்பாட்டுக்குப் போகணும்.” - உத்தரவிட்டான்.

வண்டியில் அமைதியே ஆட்சி செய்துக்கொண்டிருந்தது. அப்போது அபிஜித், “கந்தசாமி அடுக்கம் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டான்.

கந்தசாமி முகத்தில் குழப்பமும் பயமும் விரவிக்கிடந்தது. “எனக்கு ஒன்னும் தெரியாது சார்.”

அபிஜித் அதை நம்பவில்லை என்றாலும் மறுபடியம் கேட்கவில்லை.

இடம் : தேநீர்க் கடை, அடுக்கம்
நேரம் : காலை 6 மணி

அந்த ரெட் ஸ்கார்பியோ அந்த தேநீர்க் கடை முன்னே நின்றது. அதிலிருந்து இறங்கிய அபிஜித், கந்தசாமி மற்றும் மூன்று காவலரைக் கண்ட அந்த தேநீர்க் கடை உரிமையாளர் சிறிது பதற்றம்
கொண்டார்.

“வா..ங்க… சார்…” – பயத்தில் திக்கினார் அவர்.

“உன் பேரு என்ன?” – கந்தசாமி.

“என் பேரு முனுசாமி. இங்க 2 வருசமா கடை போட்ருக்கேன் சார்.” – பதற்றத்தில் கேட்காததிற்க்கும் பதில் சொன்னார்.

“காலையில் எப்போது கடையை திறப்பீர்கள்?” – அபிஜித்.

“காலைல 4.30 மணிக்கெல்லாம் நான் முழிச்சுருவேன் சார். 5 மணி போல கடைய தொரப்பேன் சார்.”

“இன்னைக்கு காலைல ஏதாவது ஆக்சிடெண்ட் நடந்த மாதிரி சத்தம் கேட்டுச்சா?”

“அப்பிடியெல்லாம் எதுவும் கேட்கலை சார். ஆனா தினமும் நைட்டு சத்தம் கேட்கும் சார்.” அவன் இப்படி சொன்னதும் கந்தசாமிக்கு வேர்த்தது.

“எங்க இருந்து சத்தம் கேட்கும்?” – அபிஜித் கந்தசாமியைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.

“எங்க இருந்துனு கரெக்டா தெரியல சார்.” – மண்டையை சொரிந்துக் கொண்டே பின்னால் இருந்த கந்தசாமியை பார்த்தார். கந்தசாமியோ எதுவும் சொல்லிவிடாதே என்பது போல தலையை ஆட்டினார். அபிஜித் இதை கவனித்தாலும் கண்டுகொள்ளாததுப் போல பின் பக்கமிருந்த
காட்டைப் பார்த்தான்.

சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்கள் கூர்மையுடன் அக்காட்டிற்குள் செல்லும் பாதையை அலசின. உடனே கந்தசாமியைப் பின் தொடருமாறு கூறிவிட்டு அந்த பாதையை நோக்கி ஓடினான். கந்தசாமியும் தன் விதியை நொந்தவாறே பின் தொடர்ந்தார்.

“கந்தசாமி இந்த டயர் மார்க்ஸ்ஸ ட்ரேஸ் பண்ணி அந்த பொண்ணு சொன்ன காரானு கண்டுபிடிக்கச் சொல்லுங்க. இந்த மார்க்ஸ் காட்டுக்குள்ள தான் போற மாதிரி இருக்கு. 2 பேர உள்ள போய் பாக்க சொல்லுங்க. கம்ஆன் குயிக்.”

தான் சொன்னதைச் செய்யாமல் தயங்கிக் கொண்டே நின்றிருந்தவரைப் பார்த்தவனுக்கு கோபம் வர, “என்ன கந்தசாமி இப்படியே நின்னுட்டு இருந்தா தானா க்ளுஸ் கிடைக்குமா? ஹரி அப்.”

அவனின் அதட்டலில் தானாக அவரது கால்கள் அங்கிருந்த 2 காவலர்களை நோக்கிச் சென்றது. அவர்களிடம் அபிஜித் கூறிய வேலைகளை கூறியவுடன் இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர்
பார்த்துக் கொண்டனர். அவர்களின் பயத்தையும் அபிஜித் கண்டுக்கொண்டாலும் மேலும் அதைப் பற்றி விசாரிக்கவில்லை.

அவ்விரு காவலர்களும் அவ்விடத்தை விட்டு அகன்றதும், கந்தசாமியைப் பார்த்து, “இந்த காட்டுல அப்படி என்ன ரகசியம் இருக்கு கந்தசாமி?”, என கேட்டான்.

கந்தசாமிக்கோ பயத்தில் முகம் வெளிரியது. “அது…. வ..ந்த்…த்து… சார்….”

“என்ன கந்தசாமி வந்து போயினு இழுத்துட்டு இருக்கீங்க. என்னனு சொல்லுங்க.” எப்படியும் தான் சொல்லாமல் விட மாட்டான் என்று புரிய, அக்காட்டைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

“சார் இந்த காட்டுகுள்ள பிரிட்டிஷ் காலத்துல கட்டுன பங்களா ஒன்னு இருக்கு. பிரிட்டிஷ் ஆட்சி முடிஞ்சதுக்கப்பறம் ஜமீன்தார் ஒருத்தர் கிட்ட ரொம்ப நாள் இருந்துச்சுன்னு சொல்லுவாங்க. அவர் காலத்துக்கு அப்பறம் சரியாகப் பராமரிக்கப்படாம ஆளரவமில்லாம இருந்துச்சு. 2 வருஷத்துக்கு முன்னாடி நைட் நேரத்துல மட்டும் அங்கேயிருந்து சத்தம் வரதா நெறைய கம்ப்ளைன்ட்ஸ் வந்துச்சு. அது பத்தி விசாரிக்கப்போன 2 பேரு இறந்துட்டாங்க. அப்போலிருந்து அது பேய் பங்களா னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.”

“என்ன கந்தசாமி திரில்லர் கதையா சொல்லுவீங்கனு பாத்தா ஹாரர் கதையை சொல்றிங்க. பேய்நம்பிக்கை இருக்கோ?”

“ஆமா சார் இருக்கு. எல்லாரும் பேய் னு தான் நெனச்சுட்டு இருந்தோம் கடந்த 6 மாசம் வரைக்கும்.”

“ஏன் 6 மாசத்துக்கு முன்னாடி என்ன நடந்துச்சு கந்தசாமி?”

“6 மாசத்துக்கு முன்னாடி கருணாகரன் சார் தான் இன்ஸ்பெக்டரா இருந்தாரு.”

“இப்போ பொண்ணுங்க விஷயத்துனால சஸ்பென்ஷன்ல இருக்காரே அவரா?”

“ஆமா சார் அவரே தான். அப்போ ஒரு ரிப்போர்ட்டர் வந்து சார் கூட ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தாரு. கடைசில எல்லாத்தையும் நான் பாத்துக்குறேனு அந்த ரிப்போர்ட்டர் கிட்டேயிருந்த எவிடென்ஸ்ஸ வாங்கி வச்சுக்கிட்டாரு. எங்க யாருக்கிட்டயும் எதுவும் சொல்லல. 2 நாள் கழிச்சு அந்த ரிப்போர்ட்டர் மறுபடியும் வந்து கருணாகரன் சார ரொம்ப திட்டினாரு. அப்போ தான் தெரிஞ்சுது அந்த பங்களால ஏதோ இல்லீகல் ஆக்ட்டிவிட்டீஸ் நடக்குதுனும் அதுல ஒரு எக்ஸ் மினிஸ்டர் சம்மந்தப்பட்டுருக்காருனும் தெரிஞ்சது. அதப்பத்தின எவிடேன்ஸ்ஸ தான் கருணாகரன் சார் அந்த மினிஸ்டர் கிட்டேயே குடுத்துட்டு அதுக்கு காசு வாங்கிட்டாரு. அத தெரிஞ்சுகிட்ட அந்த ரிப்போர்ட்டர் வந்து சார் கிட்ட கோபப்பட்டாரு. அதுக்கு சார் இந்த விஷயத்த இப்படியே விட்டுட்டா உனக்கு நல்லது இல்லனா நீ தான் அனுபவிப்பனு அந்த ரிப்போர்ட்டர் கிட்ட சொன்னாரு. அதுக்கு அந்த ரிப்போர்ட்டர், எனக்கு இதை எங்க
சொல்லனும்னு தெரியும்னு சொல்லிட்டு கெளம்பிட்டாரு. அவரு போனதுக்கப்பறம் எங்களப் பாத்து இந்த விஷயம் வெளிய தெரியக் கூடாதுனு சொன்னாரு. நாங்களும் பெரிய இடத்து விஷயம் நமக்கெதுக்குன்னு அதபத்தி வெளிய சொல்லல. அடுத்த நாள் அந்த ரிப்போர்ட்டர்க்கு ஆக்சிடென்ட் ஆகி சீரியஸ்ஸா இருக்காருன்னு தகவல் வந்துச்சு. அது தெரிஞ்சதுலயிருந்து அந்த பங்களா பத்தி என்ன கம்ப்ளைன்ட்ஸ் வந்தாலும் அத நாங்க எடுக்க மாட்டோம்.” இதைக் கேட்ட அபிஜித் யோசனையாய் புருவம் சுருக்கினான்.

கந்தசாமிக்கு காட்டிற்குள் சென்ற இரு காவலர்களிடமிருந்து செய்தி வந்தது. அதில் அக்காட்டுப்பாதையில் 5 நிமிட தொலைவில் ஒரு கார் இருப்பதாகவும் அக்காரின் எண் நிகிதா குறிப்பிட்ட எண்ணுடன் ஒத்துப்போவதாகவும் கூறியிருந்தனர். அதைக் கேட்ட அபிஜித் கந்தசாமியுடன் அங்கு விரைந்தான். அங்கு ஒரு புதருக்குப் பக்கத்தில் அந்த கார் எவ்வித சேதரமும் இன்றி இருந்தது.

“கந்தசாமி இந்த காரைப் பாத்தா உங்களுக்கு என்ன தோணுது?”

“இந்த காரைப் பாத்தா ஆக்சிடென்ட் ஆன மாதிரி தெரியல. இங்க வந்து பார்க் பண்ணி இருக்க மாதிரி தான் தெரியுது.”

அவரை ஒரு மெச்சும் பார்வை பார்த்து விட்டு, “இந்த காருக்குள்ளேயும் ஒரு பொண்ணு இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்ல.” இவர்கள் இருவரும் இதைப் பற்றி உரையாடிக்கொண்டிருக்கும்போது, அங்கு வந்த ஒரு காவலர், “சார் அந்த பிரதீப் 2 வாரமா இந்தியாவிலேயே இல்லையாம்.” என்றார் பரபரப்பாக.

கந்தசாமி அதிர்ச்சியாக அபிஜித்தைப் பார்த்தார். ஆனால் அவன் முகம் நிர்மலமாக இருந்தது.

“இதை கண்டுபிடிக்க உங்களுக்கு இவ்ளோ நேரமாச்சா?” – அபிஜித் அக்காவலரைக் கடிந்தான்.

“சார் பிரதீப் எங்க போனாருன்னு அவர் PA க்கு கூட தெரியல. அப்பறம் அவரோட க்ளோஸ் பிரெண்ட்ஸ் கிட்ட விசாரிச்சப்போ தான் அவரு 2 வாரத்துக்குமுன்னாடி லண்டன் போறதா சொன்னாருன்னு அவங்க சொன்னாங்க. இதை கலெக்ட் பண்றதுக்குத்தான் இவ்ளோ லேட்டாச்சு
சார்.”

“பிரதீப்போட பிரெண்ட்ஸ் வேற எதாவது சொன்னாங்களா?”

“சார் பிரதீப் அவங்கட்ட 1 வாரம் ட்ரிப் போறதா தான் சொல்லிருக்காரு. ஆனா 2 வாரம் ஆகியும் இன்னும் யாரையும் கான்டக்ட் பண்ணல. அடுத்த வாரமும் அவர் வரலேனா அவங்களே போலீஸ் கம்ப்லைன்ட் கொடுக்குறதா தான் இருந்தங்களாம்.”

இதைக் கேட்டதும் அவன் நெற்றியைச் சுருக்கினான். கந்தசாமி, அபிஜித் என்ன கூறப் போகிறான் என்றுப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவரின் கைப்பேசி அலறியது. அதை எடுத்துப் பேசிய அவரின் முகத்தில் சிந்தனைக்கோடுகள்.

“சார் அந்த பொண்ணு தங்கியிருந்ததா சொன்ன **** ஹோட்டலுக்கு போய் செல்வம் விசாரிச்சுருக்காரு. அவரு உங்க கிட்ட பேசனும்னு சொல்லுறாரு.”

“என்ன செல்வம் அங்க ஏதாவது தகவல் கிடச்சுதா?” – நீ சொல்லப்போவதை நான் ஏற்கனவே அறிவேன் என்பது போன்ற குரலில் கேட்டான்.

“சார் இங்க பிரதீப் – நிகிதா ங்கிற பேர்ல எந்த ரூமும் புக்காகால. இங்க இருக்க CC TV யையும் செக் பண்ணிட்டேன் சார். அதுல அவங்க 2 பேரும் வந்த மாதிரி எந்த கிளிப்பிங்கும் இல்ல.”

“ஓகே செல்வம் நீங்க ஹாஸ்பிட்டலுக்கு போய் அங்கயிருக்க கான்ஸ்டாபிள்ஸ் கூட இருங்க.”

“ஓகே சார்”

“கந்தசாமி இப்போ ஹாஸ்பிட்டலுக்கு போன் பண்ணி நிகிதாவோட கண்டிஷன விசாரிங்க”

மருத்துவமனைக்குத் தொடர்பு கொண்ட கந்தசாமிக்கு கிடைத்ததோ நிகிதா அங்கு இல்லை என்ற அதிர்ச்சியானத் தகவலே.

“சார் நிகிதா இப்போ ஹாஸ்பிடல்ல இல்ல. நிகிதாவ தேடுறதுக்கு ஒரு சர்ச் டீம்ம அனுப்பலாமா சார்?” என்றார் பதட்டமான குரலில்.

நீண்ட பெருமூச்சு விட்ட அபிஜித், “கந்தசாமி நிகிதாவ தேடுறது இருக்கட்டும், இந்த பங்களாவோட ஓனர் யாருன்னு சொன்னீங்க?”

‘அந்தப் பொண்ணு காணோம்னு எல்லாரும் பதறிக்கிட்டு இருக்கோம் இவரு என்னடானா அந்த பங்களா பத்தி இப்போ கேக்குறாரு’ என்று மனதிற்குள்ளே குழம்பினார்.

‘என்ன கந்தசாமி அவ்ளோ கஷ்டமான கேள்வியா நான் கேட்டேன்?” என்று கேட்டவனின் முகத்தில் எதையோ கண்டுப்பிடித்ததிற்கான சாயல்.

“சார் அந்த பங்களாவோட ஓனர்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவரின் முகம் பிரகாசித்தது. “அதோட ஓனர் எக்ஸ்-மினிஸ்டர் கங்காதரன் சார்.”

“வாங்க கந்தசாமி அந்த பங்களாக்கு ஒரு விசிட் போகலாம். உங்களோட பிரதீப் பத்தி விசாரிச்சவரையும் வர சொல்லுங்க.”

“ஓகே சார்”

“சார் என்ன வர சொன்னிங்களா?” என்று வந்தவர் பிரதீப்பைப் பற்றி விசாரித்த காவலர்.

“பிரதீப்போட பிகேவியர்ஸ் பத்தி அவரோட பிரெண்ட்ஸ் ஏதாவது சொன்னங்களா?”

“சார் 2 மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் பிரதீப்புக்கு எல்லா கெட்ட பழக்கமும் இருந்துச்சாம்.

அதுக்கப்பறம் அவரு ஒரு பொண்ண சீரியஸா லவ் பண்ண ஆரம்பிச்சதுலயிருந்து எல்லா கெட்டப் பழக்கத்தையும் விட்டுட்டாராம்.”
“ஓ…. கெட்டப் பழக்கம் னா டிரக்ஸ் கூடவா?”

“ஆமா சார் அதுல இருந்து வெளிய வரதுக்கு டிரிட்மெண்ட் கூட எடுத்துக்கிட்டதா சொன்னாங்க.”

“யாரு அந்த பொண்ணு?”

“மும்பைல இருக்குற பிசினிஸ்மேன் ரவீந்தர் பரத்வாஜ் பொண்ணு நிகிதா பரத்வாஜ்.”

இவ்வளவும் பேசிக் கொண்டே அந்த பாழடைந்த பங்களாவிற்கு வந்தடைந்தனர்.

“கந்தசாமி எதுக்கும் எக்ஸ்ட்ரா போலீஸ் போர்ஸ வர சொல்லுங்க.” என்று கூறிக்கொண்டே தனது கால்சராயிலிருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். அவர்கள் இருவரையும் தன் அழைப்பு வரும் வரையிலும் வெளியே காத்திருக்குமாறு கூறிவிட்டு உள்ளே சென்றான்.

அந்த பாழடைந்த பங்களாவிற்குள்ளே குப்பையும் தூசியும் குவிந்துக்
கிடந்தன. கீழே உள்ள அறைகளை யாரும் உபயோகப்படுத்தியது போன்ற எந்த சான்றும் இல்லை. மேலே செல்ல படிகளில் கால் வைத்த போது அப்படிகளில் இருந்த காய்ந்து கிடந்த இரத்தத் துளிகளைக் கண்டான். மேலும் சில படிகளில் ஏறும் போது பெண்களின் உள்ளாடைகள், உடைந்த வளையல்கள் என ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இதையெல்லாம் பார்த்த அபிஜித்திற்கு அங்கே என்னென்ன பயங்கரங்கள் நிகழ்ந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது. அந்த பங்களாவின் மேற்புறத்தில், மூன்று அறைகள் இருந்தன. அவற்றில் ஒன்று பூட்டப்பட்டிருந்தது. மற்றொரு அறையைத் திறந்தவனின் கண்கள் அங்கே இருந்தனவற்றை ஆராய்ந்தன. அவ்வறை முழுவதுமே சோதனைக்குழாய்களும் அளவைகளும் இரசாயனங்களும்
நிறைந்திருந்தன. ஒவ்வொன்றையும் அளவெடுத்துக்கொண்டே நடந்தவனின் கால்கள் அவ்வறையின் ஓரத்தில் இருந்த மேசையிடம் சென்றன. அங்கேயிருந்த வெள்ளை நிறப்பொடியை ஆராய்ந்து அது போதை மருந்து என்பதை உறுதி செய்தான். ஆம் அவ்வறையே போதை மருந்து தயாரிக்கும் தொழிற்ச்சாலையின் மினியேச்சர் போன்று தான்
இருந்தது. அங்கிருந்த ஒவ்வொரு மருந்தும் பல புதிய சேர்க்கைகளினால் வீர்யமிக்கவையாக இருந்தது. கிட்டத்தட்ட 2 வருடங்கள் இவை நடந்துக்கொண்டிருக்கின்றன என்பதை ஏற்கனவே யூகித்திருந்தான். மேலும் இவை யாவும் எந்த வித இடர்பாடுமின்றி தொடர்ந்து நடந்துவருகிறதென்றால் இன்னும் சில பெரிய தலைகளின் தொடர்பும் இதிலிருக்கும் என்பதையும் புரிந்துக்கொண்டான்.

அப்போது பக்கத்து அறையிலிருந்து மெல்லிய முனங்கல் ஒலி கேட்டது. அங்கிருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் நிலை பற்றி அறியாமல் அங்கு செல்வது நல்லதில்லை என்றறிந்த அவன், கந்தசாமியைத் தொடர்பு கொண்டான்.

“என்ன கந்தசாமி போலீஸ் போர்ஸ் வந்தாச்சா?”

“வந்தாச்சு சார். நாங்க உள்ள வரவா?”

“ம்ம்ம் உள்ள வாங்க கந்தசாமி. மேல ரைட்ல இருக்க ரூம்லயிருந்து தான் சத்தம் வருது. சோ எல்லாரையும் அந்த ரூமை ரவுண்டப் பண்ண சொல்லுங்க” என்று உத்தரவிட்டான். பிறகு அங்கிருந்தனவற்றில் சிலவற்றை ஆதாரத்திற்காய் எடுத்து வைத்துக்கொண்டான். அபிஜித் அந்த அறையை விட்டு வெளியே வந்தபோது மற்ற காவலர்கள் மற்றொரு அறையை சுற்றி வளைத்திருந்தனர். அனைவரும் அவனின் ஆணைக்காக காத்திருக்க, அவனோ அறைக்கதவை லேசாகத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான். ஆனால் இவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் வீணாகுமாறு அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரு வித போதையில் இருந்தனர். அவர்களின் அருகே சென்று பார்த்தவன் அவர்கள் போதையின் பிடியிலிருந்து வெளிவர நீண்ட நேரமாகும் என்பதை கணக்கிட்டான். பின் மற்றவர்களைப் பார்த்து அங்குள்ள ஆதாரங்களைச் சேகரித்து அங்கிருப்பவர்களைக் கைது செய்யுமாறுக் கூறினான். தானும் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தவன் கந்தசாமியின் சத்தம் கேட்டு அங்கு சென்றான். அங்கு ஒருவன் உயர்ரக ஆடை அணிந்து தலை கலைந்து ஒருக்களித்து படுத்திருந்தான். அபிஜித் கந்தசாமியை யாரிவன் என்பது போல பார்த்தான்.

“சார் இவர் தான் பிரதீப், எக்ஸ் மினிஸ்டர் கங்காதரனோட மகன்.”

அவன் சிறு தலையசைப்புடன் அங்கிருந்து நகர்ந்து மற்ற ஆதாரங்களைப் பார்வையிட ஆரம்பித்தான். ஆனால் அவன் மனதிற்குள் அப்பெண்ணைப் பற்றிய சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

‘அந்த பொண்ணு எதுக்காக பொய் சொல்லணும். உண்மையவே சொல்லிருக்கலாமே.’

இவனின் எண்ணவோட்டத்தை தடைச் செய்வதுப் போல அங்கிருந்த காவலர்களில் ஒருவர் வந்து, “சார் உங்கள பாக்க பிரஸ் வெளிய வெயிட் பன்றாங்க.”

“அதுக்குள்ள பிரஸ்க்கு யாரு இன்போர்ம் பண்ணது?” சற்று எரிச்சலுடனே கேட்டான்.

“சார் பக்கத்துல ஏதோ சூட்டிங் நடக்குது. அது பேமஸ் ஹீரோ **** வோட படம்ங்கிறதால அவரை பேட்டி எடுக்க பிரஸ் வந்திருக்காங்க. இந்த எடம் ஏற்கனவே பல கிசுகிசுக்களுக்குப் பேர்போனதால இங்க போலீஸப் பாத்தவோடனே ஏதோ பிரச்னைன்னு அவங்க வந்ததா சொல்றாங்க சார்.”

“சரி நான் வரேன்னு சொல்லுங்க.” தன் தலையைக் கோதியவாறு நடந்து சென்றான்.

அங்கிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்துத் தலையசைத்தான்.

“சார் இங்க என்ன நடக்குது? காலைலயிருந்தே இந்த பக்கம் போலீஸ் கூட்டமா இருந்துச்சு. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த பங்களால ஏதோ சர்ச் பண்ண மாதிரி இருந்துச்சு. சோ இங்க என்ன நடக்குதுன்னு சொல்லுங்க சார்.”

“வெல் உங்க எல்லாருக்கும் இந்த பங்களா பத்தின நெறய கட்டுக்கதைகளைத் தெரியும். இதைப் பத்தின ஹாரர் ஜெனர்ல வந்த நெறய ஆர்ட்டிக்கிள்ஸ் நானும் படிச்சுருக்கேன். பட் கொஞ்ச நாளாவே இந்த பங்களா பத்தி கம்ப்ளைன்ட்ஸ் வந்துட்டு இருந்துச்சு. நேத்து நைட் இங்க நெறய இல்லீகல் ஆக்டிவிட்டிஸ் நடக்குறதா வந்த கம்ப்ளைன்ட் படி நாங்க இங்க விசாரிச்சுட்டு இருக்கோம்.”

“சார் உங்க விசாரணை எந்த அளவுல இருக்கு. இங்க நடக்குற இல்லீகல் ஆகிட்டிவிட்டிஸுக்கான ஆதாரங்கள் ஏதாவது கெடச்சுதா? அப்படி என்ன இல்லீகல் ஆக்ட்டிவிட்டீஸ் இங்க நடக்குது?”

ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு, “இந்த பங்களா ஒரு மினி போதை மருந்து தொழிற்ச்சாலையா இயங்கிட்டிருந்துருக்கு. தமிழ்நாட்டிலிருந்து போதை மருந்து கடத்தலுக்கு மெயின் சப்ளை இங்க இருந்து தான் அனுப்பப்பட்டிருக்கறதுக்கான ஆதாரங்கள் கெடச்சுருக்கு. இப்போதைக்கு இவ்ளோ தான் சொல்ல முடியும். மத்தத விசாரணை முடுஞ்சதுக்கப்பறம் சொல்றோம்.”

“இதுல நிறைய பெரிய புள்ளிகள் சம்மந்தப்பட்டிருப்பங்கன்னு சொல்றாங்க. இது எந்த அளவு உண்மை?”

“இதைப் பத்தி இப்போ நான் எதுவும் சொல்ல முடியாது. சோ ப்ளீஸ் அண்டெர்ஸ்டாண்ட் அவர் சிட்ஸுவேஷன்.”

“சரி சார். நீங்க அவங்க பேர இப்போ சொல்ல வேண்டாம். பட் இதுல சம்மந்தப்பட்டிருக்கவங்க பெரிய புள்ளியா இருந்தா பார் எக்ஸாம்பில் எக்ஸ் மினிஸ்டராவோ இல்ல அவரோட மகனாகவோ இருந்தா என்ன பண்ணுவீங்க? பெரிய இடத்து விஷயம்னு கண்டுக்காம விட்டுருவிங்களா இல்ல சட்டத்தின் படி தண்டனை வாங்கி குடுப்பீங்களா?” – ஒரு துடுக்குத்தனமான பத்திரிக்கையாளர் இப்படி கேள்வி கேட்டார்.

அவரின் கேள்வியிலேயே பிரதீப் மற்றும் கங்காதரன் இதில் சம்மந்தப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரிந்துவிட்டது என்பதை அறிந்துக்கொண்டாலும், தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு மேம்போக்காகவே பதில் கூற விரும்பினான்.

“இதைப் பத்தி விசாரணை முடுஞ்சவோடனே ஒரு பிரஸ் மீட்ல சொல்றேன். மேலும் எனக்கு சொல்லுறத விட செயல்ல காட்டுறது தான் பிடிக்கும். சோ செஞ்சிட்டு அதப் பத்தி விரிவா சொல்றேன். நன்றி.”
ப்ரஸில் பேசிவிட்டு அபிஜித் தனிமையை நாடினான். அவனுக்கு இன்று காலையிலிருந்து நடந்தனவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டியிருந்தது. ஒரு பெண் தன் கணவனைக் காணவில்லை என்று புகார் கொடுத்தது, 2 மாதமாக தன்னை நல்லவனாகக் காட்டிக்கொள்ளும் பிரதீப்
திடீரென்று அந்த பங்களாவிற்கு வந்தது, பத்திரிக்கையின் கவனத்தை ஈர்க்க பெரிய ஹீரோ ஒருவரின் படபிடிப்பைப் பயன்படுத்திக்கொண்டது என்று எல்லாமே முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தியிருப்பதாகத் தோன்றியது. ஆனால் எதற்காக இந்த நாடகம் என்று தான் புரியவில்லை. அப்போது அவனின் கைப்பேசியில் ஒரு காணொளி வந்ததற்கான அறிவிப்பு வந்தது. அது இன்று காலையில் புகார் கொடுத்த பெண்ணுடையது என்று அறிந்து அதை ஓடவிட்டான்.

 

“ஹாய் சார். நான் சுஷ்மிதா சுப்ரமணியன். நான் உண்மைச் சுடர் பத்திரிக்கையின் ஜூனியர் ரிப்போர்ட்டர். இன்னிக்கு காலைலயிருந்து நடந்த விஷயங்கள் உங்கள குழப்பியிருக்கும்னு நினைக்கிறேன். முதல்ல நான் இதில் எப்படி சம்மந்தப்பட்டிருக்கிறேன்னு சொல்லிடுறேன். 6 மாசத்துக்கு முன்னாடி நீங்க இப்போ இருக்க அதே ஸ்டேஷன்ல ஒரு ரிப்போர்ட்டர் வந்து அந்த பங்களால நடக்குற விஷயங்களைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணாறு. ஆனா அவருக்கிட்டேயிருந்து ஆதாரங்களை ஏமாத்திப் பறித்து காசுக்காக அதை விற்று அந்த ரிப்போர்ட்ரையும் அடிச்சுப் படுக்க வச்சுட்டாங்க.அந்த ரிப்போர்ட்டர் வேற யாரும் இல்லை என்னோட அண்ணா அர்ஜுன் சுப்ரமணியன் தான். அவனோட லட்சியமே ஜர்னலிஸம் படிச்சு மக்கள்கிட்ட அன்றாடம் நடக்குற நிகழ்ச்சிகளை நேர்மையாகக் கொண்டுபோய் சேர்க்குறது தான். அதுக்காகத் தான் அவன் ரொம்ப கஷ்டப்பட்டு ஆதாரங்களையெல்லாம் சேகரிச்சான். அவன் பண்ண ஒரே தப்பு தப்பான ஒருத்தர்கிட்ட அந்த ஆதாரங்களைக் கொடுத்தது. அதுவே அவனைப் படுத்தப்படுக்கை ஆக்கிருச்சு.”

அவளின் முகம் ஒரு நிமிடம் வேதனையைத் தத்தெடுத்தது. மறுநிமிடமே முகத்தை நிர்மலமாக்கித் தொடர்ந்தாள்.

“அவனோட லட்சியத்தைக் காப்பாற்றவே இந்த கேஸக் கையில் எடுத்தேன். திருப்பி ஆதாரங்களை முதல்ல இருந்து சேகரிச்சேன். அது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. ஒரு மாசம் அவங்கள ஃபாலோ பண்ணி பல தகவல்களைச் சேர்த்தேன். 2 மாசத்துக்கு முன்னாடி பிரதீப் அந்த பங்களாக்கு வரதில்லைன்னு கேள்விப்பட்டேன். அப்போதான் அவனோட பிரெண்ட்ஸ் கேங்க்லேயிருந்து அவன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்துறதா தகவல் கிடைச்சது.எனக்கு சந்தேகமா இருந்துச்சு. அந்த பொண்ணு பேரு நிகிதா பரத்வாஜ். அந்த பொண்ணப் பத்தி பேக்ரௌண்ட் செக் செஞ்சப்போ தான் அந்த பொண்ணோட அப்பா ரவீந்தர் பரத்வாஜ் மும்பை போர்ட்ல பெரிய பவர்ல இருக்கறவரு. அவர பிடிச்சு இங்க தயாரிக்குற போதை மருந்த வெளிநாட்டுக்கு எக்ஸ்ப்போர்ட் பண்ணுற பிளான்ல இருந்துந்துருக்காங்க. அதுக்காகத் தான் அந்த பொண்ண லவ் பண்ணுற மாதிரி ஏமாத்த நல்லவன் மாதிரி நடிச்சுருக்கான். இந்த பிளனெல்லாம் எங்களுக்கு தெரிஞ்சப்போ இதுக்கு மேல விட்டா பிரெச்சனை பெருசா ஆகிடும் பிளஸ் அவங்களுக்கு சரியான தண்டனை வாங்கி தர முடியாத அளவுக்கு பெரிய ஆளாகிடுவங்கனு தோணுச்சு. அப்போ தான் அந்த ஸ்டேஷனுக்கு புது போலீஸா நீங்க வந்துருக்கிங்கன்னு தெரிஞ்சுது. உங்களப் பத்தி விசாரிச்சதுல நீங்க நேர்மையானவருன்னு தெரிஞ்சாலும் முன்னாடி மாதிரி எதுவும் தப்பாகிடக் கூடாதுன்னு இந்த ட்ராமாவ போட வேண்டியதாகிடுச்சு. இதுக்காக நாங்க ரொம்ப பிளான் பண்ணி சரியான நாளுக்காக காத்திட்டிருந்தோம். பிரதீப்பை அந்த பங்களாக்கு வர வைக்குறதுக்காக அவங்க பங்களால சில குளறுபடிகளைப் பண்ணோம். அவன் வந்ததும் மீடியாவோட கவனத்தை இவங்க பக்கம் திருப்பனும்னு **** ஹீரோவோட ஷூட்டிங்க டார்கெட் பண்ணி இந்த டேட்ட பிக்ஸ் பண்ணோம். அப்பறம் உங்க ஸ்டேஷன்ல ப்ளாக் கலர் பேக்ல இது சம்மந்தப்பட்ட எல்லா ஆதாரங்களும் இருக்கு. உங்க நேர்மையும் திறமையும் பார்த்து இந்த எவிடேன்ஸ்ஸ உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். நீங்க அவங்க எல்லாத்துக்கும் சரியான தண்டனை வாங்கி தருவீங்கனு நம்புறேன்.” இத்துடன் அக்காணொளி முடிவடைந்தது.

அதைப் பார்த்த அபிஜித்திற்கு அப்பெண்ணை வியக்காமல் இருக்கமுடியவில்லை. அவனுக்குத் தெரியும் அவள் அந்த ஆதாரங்களைஸ் சேகரிக்க என்னென்ன கஷ்டங்களை அனுபவித்திருப்பாளென்று.

அவன் உடனே தன் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு அங்கு அந்த கருப்பு நிற பை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டான். பின்பு அக்காணொளிக் காட்சிகளைப் பற்றி கந்தசாமியிடம் விவாதித்து தங்களது விசாரணையை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று
கலந்துரையாடினர்.

கிளம்பும் சமயம் சுஷ்மிதாவிற்கு தொடர்பு கொண்டு அவளைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தான். அவனுக்கு அந்த காணொளி வந்த அலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டான். ஆனால் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை கந்தசாமியிடம் கூறினான். கந்தசாமி உடனே உண்மைச் சுடர் பத்திரிக்கையின் தொலைப்பேசி எண்ணை அழுத்தி அபிஜித்திடம் கொடுத்தார்.

“ஹலோ நான் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் அபிஜித் பேசுறேன்.”

“வணக்கம் சார். நான் உண்மைச் சுடரோட இன்-சார்ஜ் மனோஜ் பேசுறேன். இப்போ தான் டிவில உங்க இன்டெர்வியூ பாத்தேன். கங்கிராட்ஸ் சார். உங்க விசாரணை நல்லா அமைய வாழ்த்துக்கள்.”

“தேங்க் யூ சார். நான் உங்களுக்கு கால் பண்ணது மிஸ்.சுஷ்மிதா சுப்ரமணியன் பத்தி பேசத்தான். அவங்க சேகரிச்ச ஆதாரங்கள் தான் இந்த கேஸ்ல ரொம்ப யூஸஃபுல்லா இருக்கப்போகுது. சோ அவங்ககிட்ட தேங்க்ஸ் சொல்லத் தான் கூப்பிட்டேன்.”

“சார் சுஷ்மிதா இப்போ உயிரோட இல்லை. அவங்க இந்த ஆதாரங்களையெல்லாம் கலெக்ட் பண்றதுக்காக அவங்க உயிரையே பணயம் வச்சுருக்காங்க. அவங்க கடைசியா அந்த பிரதீப் கேங்க ஃபாலோ பண்ணத அவங்க கேங்லயிருக்க ஒருத்தன் பாத்துட்டான். அதுக்கப்பறம் சுஷ்மிதா இந்த பிளான எங்ககிட்ட சொல்லி ஒரு வீடியோவ ரெகார்ட் பண்ணங்க. அப்பறம் அவங்ககிட்ட இருந்த ஆதாரங்களையெல்லாம் எங்க கிட்ட கொடுப்பதாகச் சொல்லி அத எடுத்துட்டு வர போனவங்க ஆக்ஸிடெண்ட்ல இறந்துப் போய்ட்டாங்க. அந்த ஆதாரங்களையும் அவங்க இடத்தில காணோம். நாங்க என்னப் பண்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தப்போ தான் இன்னிக்கு காலைல உங்க இன்டெர்வியூ பாத்தோம். நீங்க அந்த குற்றவாளிகளுக்கு வாங்கி தர தண்டனை தான் அந்த பொண்ணுக்கும் அவங்க அண்ணனுக்கும் கெடைக்கப்போற நியாயம்.”

அபிஜித்திற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தான் சட்டப்படி ஆவண செய்வதாகக் கூறி தொடர்பைத் துண்டித்தான்.

சுஷ்மிதா ஒரு வாரத்திற்கு முன்பே இறந்துவிட்டாளென்றால் இன்று காலையில் வந்த பெண் யார்?????

இடம்: திண்டுக்கல் **** தனியார் மருத்துவமனை
நேரம்: காலை 9 மணி

தூங்கிக் கொண்டிருக்கும் தன் அண்ணனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு வெளியில் வந்து அமர்ந்தாள் அவள். அங்கு தொலைக்காட்சியில் செய்திகளில் கொடைக்கானல் பங்களாவில் அபிஜித்திடம் நடந்த நேர்க்கானல் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட அவளின் கண்கள் மின்னின. அவள் அஷ்மிதா சுப்ரமணியன்!!!

முற்றும்

--- பார்கவி

 

 
This topic was modified 12 months ago by Barkkavi Murali

Quote
Share: