அன்றில் 25
நடந்தவை என்ன என்று சற்றும் புரியாது, திகைப்பில் உறைந்திருந்தாள் வாணி. அவளால் இந்த திருமணத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை. முதலில் இது திருமணமா...
நெற்றியிலும், முன்னுச்சியிலும் குங்குமம் இடுவது திருமண சடங்கெனில், ஆம், இவளுக்கு திருமண நிகழ்வு முடிந்தது. ஆனால், இதை இதயம் ஏற்க மாட்டேன் என்கிறதே?
வீட்டில் நடந்தவற்றை சொன்னால் நம்ப மாட்டார்களே! அதுவும் ரஞ்சன் கையில் இருந்து குங்குமம் தவறி என்னில் விழுந்தது என்றால் என்னாலேயே நம்ப முடியாது. அவள் மனம் திரும்ப திரும்ப நடவற்றில் உழல கோவிலுக்கு வந்தவர்கள் உட்கார்ந்து இருந்தவளை காட்சி பொருள் போல் பார்த்துசென்றனர்.
வாணியின் கூட வந்தவர்கள் அவளை அணை போல் காத்து நிற்க, ரஞ்சனின் பெற்றோருக்கு தர்மசங்கட நிலை. அடுத்து நடக்க வேண்டியுள்ளது நிறைய இருக்கும் நிலையில், இந்த பெண்ணை தேற்றுவதே பெரும்பாடு என்பது அவர்களுக்கு நன்றாக புரிந்தது.
ரஞ்சனுக்கு மகிழ்ச்சி ஒரு புறம் என்றாலும், வாணியின் நிலைக்கு சற்றும் குறைந்தது இல்லை அவன் நிலை. அவனும் மிகவும் பக்குவப் பட்டவன் என்று சொல்ல முடியாது. எதிர்பாராத இந்நிலையில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென்பது அவனுக்கும் புரிபடவில்லை.
வாணியின் குளிர்ந்த கைகளை தனது கைகளில் அடக்கி ஆறுதல் சொல்ல, நானிருக்கிறேன், கவலை படாதே என்று தைரியம் சொல்ல அவனுக்கு அவா. இந்த நிமிடம் அவனுக்கு உரிமை இருந்தும் உரிமையற்ற நிலை. நொந்துதான் போனான் ரஞ்சன். கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு அமைதியாய் இருப்பது கொடுமை...
அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்ற கடவுளுக்கு மனமார இத்துடன் ஆயிரம் முறை நன்றி சொல்லிவிட்டான் ரஞ்சன். நிதர்சனமான அடுத்த கட்டம் இனிமேல் தானே?
ரஞ்சனின் பெற்றோர் அடுத்து நடக்கவேண்டிய விஷயங்களை கவனிக்க முனைந்தார்கள். பெண்ணின் வீட்டில் பேசியாகவேண்டும். முறைப்படி திருமண நிகழ்வை பதிவு செய்தாக வேண்டும். ஏதேனும் பிரச்சனைகள் வந்தால்... பிள்ளைகள் தனியாக சமாளிக்க முடியாதே?
வாணியை தேற்றி, ஒரு வழியாக சிவாவிற்கு அழைத்து, அவனை உடனே வீடு வரச் சொல்லி, வாணியையும் அவளுடன் வந்தவர்களையும் ஒரு காரில் ஏற்றி அனுப்பிவிட்டு, பின்னால் ரஞ்சன் அவன் பெற்றோருடன் அவன் காரில் வாணியின் வீட்டை நோக்கி விரைந்தான்.
வழியில் ஒரு உணவகம் கண்ணில் பட பத்து பேருக்கான இரவு உணவும், கொஞ்சம் இனிப்பும் வாங்கிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தான் ரஞ்சன் .
அவன் நேரே வாணி வீடு நோக்கி செல்ல இவனுக்கு அந்த பெண்ணின் வீடு எவ்வாறு தெரியும் என்று அவன் பெற்றோருக்கும் சந்தேகம்.
வாயை திறந்து கேட்க அவர்கள் விரும்பவில்லை.
சீக்கிரம் வீடு வந்து சேர்ந்த வாணிக்கு, கண்ணீர் எட்டி பார்க்க பக்கத்து வீட்டு மாமியோ நடந்தது நடந்தாச்சு. "இதை ஒத்துக்கறதா, இல்லை ஒதுக்கிறதான்னு"நீதான் முடிவு பண்ணனும். ஒரு வேளை உனக்கு ஓகேன்னா வீட்டுல சொல்லி விசாரிக்க சொல்லு. பிறகு பாக்கலாம். வேணாம்னா அவங்க இங்க வந்த பிறகு பேசி அனுப்பிடலாம். சிவா வரட்டும் என்றார்.
எனக்கு அவரை ஏற்கனவே தெரியும் மாமி, என்ற வாணி பெண் பார்த்த வைபவத்தை சொல்லி முடிக்க பக்கத்து வீட்டு மாமிக்கும், கூட இருந்தவர்களுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை.
வீட்டுக்கு வந்த சிவாவிடம் அனைத்தும் சொல்லபட, ஹாலில் அமந்திருந்த ரஞ்சன் குடும்பத்தை ஆழ்ந்த மூச்சு எடுத்து கொண்டு, அம்மா -அப்பா, சித்தி -சித்தப்பாவை ஸ்கைப்பில் அழைத்து மொத்தமாக விஷயத்தை போட்டு உடைக்க, அனு மயங்கி சரிந்தாள்.
ஆனந்த் தனது இன்னோவாவில் குடும்பத்தை அழைத்து கொண்டு உடனே கிளம்புவதாக ஏற்பாடு ஆக, இங்கு சிவா எல்லோரிடமும் விஷயத்தை சொல்ல, உணவு வாங்கப் பட்டிருப்பதை கண்டவன் 'முதல்ல எல்லோரும் சாப்பிடலாம், பிறகு பேசலாம் என்றவன் உணவு பொட்டலங்களை பிரிக்க, மாமி அண்ட் கோ, வீட்டுக்கு சென்று சாப்பிட்டு கொள்வதாக சொல்லி கிளம்பிவிட்டனர். அவர்களுக்கு உணவும் இனிப்பும் கொடுத்து வழி அனுப்பிவிட்டு, சிவா உள்ளே வந்தான். வாணியை பார்க்க பாவமாக இருந்தது. ரஞ்சன் வாயை திறக்கவில்லை.
ரஞ்சன் அப்பாவோ இன்று இரவு வீடு சென்றுவிட்டு, மறுநாள் வாணியின் பெற்றோர் வந்த பிறகு வருவதாக சொல்லி கிளம்பினார்கள்.
ரஞ்சனின் ஏக்கம் நிரம்பிய பார்வை, வாணியை ஏதோ செய்ய சட்டென தன் பார்வையை தாழ்த்திக் கொண்டவளுக்கு அவன் பார்வை சொன்ன செய்தி தெளிவாய் புரிந்தது. முகம் குங்கும நிறைமாய் சிவக்க அவன் பார்வை வதைத்தது. முதன்முறையாய் பெயரிடப்படாத ஒரு உணர்வலையை மொத்தமாய் அனுபவித்தாள் பாவை. அவன் வீட்டிற்கு செல்லும் பொழுது அவனுடன்
உடனே சென்று விட வேண்டும் என்ற ஏக்கம் அவளைப் பாடாய்ப் படுத்தி தொலைத்தது...
வெட்கம் கெட்ட மனது என்று தன்னைத்தானே அவள் திட்டிக் கொண்டாலும்,வைதாலும், மாலையில் நடந்த விஷயங்கள் அவள் மனதில் பெரிய தாக்கத்தை பயிர் செய்திருப்பது நிஜம்தான்!
இத்தனை நேரம் தனக்கு நடந்த திருமணம் தானா என்ற பெரிய குழப்பத்தில் இருந்தவளுக்கு தன் கணவன் தன்னை விட்டு செல்கிறான் எனும் எண்ணம் ஏனோ அவளை துளைத்து எடுத்தது. உன்னுடன் வருகிறேன் என்ற அவளது பதில் சொ(கொ)ல்லும் ஏக்கப்பார்வை அவனுக்கான விடையைச் சொல்ல கர்வம் மேலோங்க நாளை வருகிறேன், என்று அவளையே பார்த்துக்கொண்டு சொன்னவனுக்கு அங்கு சிவா தன்னை உற்று நோக்கி கொண்டிருப்பது சற்றும் புரியவில்லை. இருவரின் காந்த பார்வைகள்- காதல் பார்வைகள் அவை கொடுத்த இயக்க பரிமாறல்கள், இவை எதுவுமே சிவாவின் கண்ணில் இருந்து தப்பவில்லை.
தங்கையின் மன நிலையை நன்றாக புரிந்து கொண்டவன் நாளை வீட்டு மனிதர்களிடம் எவ்வாறு பேச வேண்டும் என்று மனதில் ஒத்திகை பார்க்க தொடங்கி விட்டான்.
காதலில் சிக்கி தவிக்கும் சிவாவிற்கு, தங்கையின் நிலையும் ரஞ்சனின் நிலையும் நன்றாகவே புரிந்தது.
மேற்கொண்டு நடக்க வேண்டியவற்றை தங்கையின் மனோநிலையை உத்தேசித்து நடத்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் சிவா.
அன்று இரவு சிவாவிற்கு மட்டுமல்ல, ரஞ்சனுக்கும் வாணிக்கும் கூட உறக்கம் என்பது கனவாயிற்று.
ஏற்கனவே காதல் கொண்டிருந்த ரஞ்சன் வாணியின் மனம், இன்று நடந்தவற்றை மீண்டும் மீண்டும் மனதில் அசை போட்டு சந்தோஷமும் துக்கமும் பாதி பாதி நிலை என மனதை அலைக்கழித்தது.
தெய்வ சந்நிதானத்தில் நடந்த திருமணம், இதை ஒப்புக் கொள்வதற்கு தயக்கம் என்ன என்பது ரஞ்சனின் வாதம்.. காதல் கை சேர்ந்த பின்னும் இப்படி பிரித்து வைப்பதில் லாபம் என்ன?
ஏன் இவ்வாறு நடக்கிறது என்று அவனுக்கு ஒரு பக்கம் எரிச்சல். மற்றொருபுறம் வாணியின் வீட்டில் ஒப்புக்கொள்ள வேண்டுமே எனும் தவிப்பு. வெகு நாட்களாகி தன்னுள் அவளை புதைத்து வைத்துக் கொண்டிருந்த மோகம் அவனை வெகுவாக வாட்டியது. அவளை அணைத்துக்கொண்டு,
அவளின் நிலவு முகம் பார்த்துக் கொண்டு, அவளின் கூட மூக்கை உரசிக் கொண்டு, அவளின் கழுத்து வளைவில் முகம் புதைக்க, மொத்தமாய் தன்னை அவளுள் தொலைக்க, அவன் மனம் ஏக்கப்பட்டது.
வாணியின் நிலை இங்கு சற்றும் ரஞ்சனுக்கு குறைந்ததாக இல்லை. அவனுடனேயே சென்றுவிடவேண்டும் எனும் உணர்வு அவளை பிரளயம் போல் சுருட்டியது.
ஏனோ இந்த க்ஷணம் வீட்டில் மறுக்கக் கூடும் என்ற கலக்கம் அவளுக்கு சிறிதும் ஏற்படவில்லை. மஞ்சள் கயிறு மேஜிக், என்று குறிப்பிடப்படும் திருமண உறவிற்கான அடிப்படை விதை விழுந்தது எந்த நொடி என்பது இந்த நொடி வரை அவளுக்கு புரியவில்லை. ஆனால் ரஞ்சன் தனது கணவன் என்பதில் அவளுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. திருமணம் என்பது ஒருவருடன்தான்.
அந்த நிகழ்வு அவள் வாழ்க்கையில் நடந்துவிட்டது. வீட்டில் ஒப்புக் கொண்டாலும் சரி ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி, நடந்தது நடந்ததுதான் அதை மாற்ற முடியாது. உள்ளூர பெரும் நெருப்பாய் பற்றி எரிந்துகொண்டிருந்த உணர்வு, மாலையில் ஏற்பட்டிருந்த அதிர்ச்சி, இரண்டும் இப்பொழுது அவளிடம் இல்லை. உறை பனியை ஒத்து உறைந்திருந்த காதல் உணர்வுகள் இந்த இரவில் அணையை உடைத்துக் கொண்டு வெளிவரும் பிரவாகம் போல் அவளிடம்.
ஆனந்திற்கு விஷயம் தெரிவிக்கப்பட்டு சென்னையிலிருந்து ஆனந், தனது காரில் தன் பெற்றோரையும், சித்தி சித்தப்பாவை மறைத்துக்கொண்டு மறுநாள் விடி காலையிலேயே கிளம்பி விட்டார்கள். அவர்கள் பெங்களூர் வந்து சேர மதியம் இரண்டு மணிக்கு மேலாகிவிட்டது.
அனுவிற்கு நடந்தவற்றை சிவா சொல்ல சொல்ல அவளால் சற்றும் இதை நம்பமுடியவில்லை. வாணி ரஞ்சனை உனக்கு பிடித்து இருக்கிறது என்று சொல்லி இருந்தால் நாங்களே இந்த திருமணத்தை செய்து வைத்திருப்போமே, இவ்வாறு வீட்டிற்கு தெரியாமல் இதுபோல திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன?என்று கதறி தீர்த்து விட்டாள். அவளை சமாளிப்பதே பிரசாத்திற்கு பெரிய சவாலாக இருந்தது. அவராலும் நடந்தவற்றை ஜீரணிக்க முடியவில்லை. வாணி எப்படிப்பட்ட பெண் என்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்ததுதான். நடந்தவற்றை அதிர்ச்சி அவர்களை மீள முடியாமல் கட்டி வைத்திருக்கிறது.
ஒருவாறு இராமனும் பிரசாதும் சேர்ந்து அனைவருக்கும் மெதுமெதுவே ஆறுதல் சொல்லி அவளைத் தேற்றி முடிவாக ரஞ்சன் மற்றும் அவன் வீட்டினரை கூப்பிட்டு பேசுவது என்று முடிவெடுத்தார்கள்.
ரஞ்சன் வீட்டில் மாலை வருவதாக சொல்லிவிட அவர்களுக்கும் சேர்த்து உணவு தயாரிப்பில் இறங்கினார்கள் பாலாவும் அனுவும்.
வாணி பாலாவின் பின்னாடி இருந்து மெதுவே பெரியம்மாவின் காதுகளில் மட்டும் விழுமாறு'பெரியம்மா ஏதாவது ஸ்வீட் சேர்த்து பண்ண முடியுமா என்று கேட்க பாலாவுக்கு உள்ளூர வாணியின் மனம் புரிந்து விட்டது.
வாணியின் மெல்லிய குரல் அனுவின் காதுகளை எட்டியது தான். ஆனால் பெற்ற அவளிடம் சொல்லக் கூட இந்த பெண்ணிற்கு எதற்கு தயக்கம், நடந்ததை எப்படியும் ஒப்புக்கொள்ள தயாராகிவிட்ட பிறகு எதற்காக இந்த பெண் தன்னிடம் புதிதாக ஒதுக்கத்தை காண்பிக்கிறாள்?
தான் இடுப்பில் இடுக்கிக் கொண்டு சுற்றி திரிந்த தன் செல்ல மகள் அல்ல இந்த வாணி. இப்பொழுது அவள் ரஞ்சனின் மனைவி எனும் மனோநிலைக்கு சென்று விட்டாளோ? என்று அனுவிற்கு மனது வலித்தது. வெளியே காட்டிக்கொள்ளாமல் புன்னகை முகம் பூசிக்கொண்டு, இதை என்கிட்ட கேட்கலாம் இல்ல... உங்க வீட்டு ஆளுங்களுக்கு ஸ்வீட் செய்ய மாட்டேன்னு நான் சொல்லுவேன்? என்று பதில் கொடுக்க, அத்தனை நேரம் அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒரு தயக்க உணர்வு சட்டென அறுந்து விழ தன் அம்மாவின் தோளில் முகம் புதைத்து அழுது தீர்த்தாள் வாணி. இரண்டு நாட்களாக அவள் அனுபவித்து கொண்டிருந்த கலவையான உணர்வுகள், அதை தாங்கிக்கொள்ள அம்மாவின் துணை கொடுக்கும் தோள் வளைவு... அங்கு பார்த்துக்கொண்டிருந்த பாலா, ராமன், பிரசாத், ஆனந்த், சிவா அனைவரின் கண்களுமே, உணர்ச்சிகளை வெளியேற்ற கண்ணீர் பெருகியது.
இந்த கண்ணீர் ஆனந்த கண்ணீராய்...
பெண்ணின் திருமண நிகழ்வு ஆசாத்தியமானது.
மீண்டும் சந்திப்போம்.
உங்கள் தோழி
சுகி.
சுகீ