Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


"அன்பு அப்பா! சிறுகதை_ கதை திரி"

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
Hi friends,
எல்லோரும் எப்படி இருக்கீங்க..
அனைவருக்கும் தந்தையர் தின நல் வாழ்த்துகள்..
இதோ தந்தையர் தினத்திற்காக நான் எழுதிய சிறுகதை உங்கள் பார்வைக்கு..படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...

அன்பு அப்பா

வெளியில் பொழியும் அடை மழையை சாளரத்தின் வழியாக கண்டவளின் மனமும் ஊமையாய் அழுதது.

எத்தனை எளிதாக சொல்லிவிட்டான்! நீ போக கூடாதென்று. இதென்ன விட்டு விடும் உறவா?
தொப்புள் கொடியை விட புனிதமானதல்லவா !

உயிரும்,மூச்சும் உள்ளவரை தொடரும் ஆத்மார்த்தமான உறவல்லவா ? அப்படிப்பட்ட உறவை துச்சமாக சொல்லிவிட்டானே!

எனக்காக தன் வாழ் நாள் முழுவதும், உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போனவரை, நான் பார்க்ககூடாதா? அவருக்கு எதுவும் செய்யக் கூடாதென்று சொல்ல எப்படித் தான் மனம் வந்ததோ?

போன மாதம் தன்னை பார்க்க வந்த பொழுது கூட, தனக்கு இப்படியொரு வியாதி இருக்கிறதென்று காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகமாகவே பேசியவரின் ஆசை முகம் அவள் மனதில் பசுமரத்து ஆணி போல் நினைவு வந்தது.

அந்த கண்களில் தான் எத்தனை அன்பு!
பேரக் குழந்தைகளுக்கு கை நிறைய தின்பண்டங்களை வாங்கி கொண்டு பார்க்க வந்தார்.

ஓர் அரைமணி நேரம் கூட இருக்காமல் , இவள் கொடுத்த காபியை வாங்கி குடித்துவிட்டு "கொஞ்சம் வேலை இருக்கு பாப்பா.. நான் போய்ட்டு இன்னொரு நாள் வரேன் " என்று கூறிவிட்டு வாசல் வரை சென்றவர், என்ன நினைத்தாரோ..?

திரும்பி வந்து "உடம்பை பார்த்துக்கோ பாப்பா,நீ எப்போதும் சந்தோஷமா இருக்கனும் டா " என்றவர், மென்மையாக தலையை வருடிச் சென்றார்.

தெரு முனை தாண்டும் வரை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே போனார்‌.

அன்று விடை பெறும் போது அவர் கண்களில் தேங்கிய நீரின் அர்த்தம் இந்த மடச்சிக்கு அப்போது புரியவில்லை.

'நீ ஒத்த பெண்ணே வச்சு இருக்கீயே ! நாளைக்கு நீ படுத்தா யார் பார்ப்பாங்க ?'என்று ஊர் பேசிய போது " என் பொண்ணு பார்த்துக்குவா.." என்று கர்வமா சொல்லுவாரே.

இன்னைக்கு மருத்துவமனையில் படுத்திருப்பவரை, பார்க்க கூட முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேனே! என்று அவள் மனம் கூப்பாடு போட்டது.

எத்தனை உழைப்பு !எப்படியெல்லாம் வளர்த்தார்!

'பொட்ட பிள்ளையே படிக்கவச்சு என்ன ஆகப்போகுது.
நாளைக்கு சம்பாரிச்சு உனக்கா கொடுக்கப் போற !'என்று பேசிய சொந்ந பந்தங்களிடமெல்லாம்,
"எனக்கு கொடுக்க வேண்டாம். யாரையும் நம்பி இருக்காமல், அவ கால்ல நிற்கத் தான் இந்த படிப்பு . ஆண்பிள்ளையை படிக்க வைத்தால், அந்த குடும்பம் மட்டும் தான் தலை எடுக்கும்.
அதே பெண் பிள்ளையை படிக்க வைத்தா! ஒரு சமூகமே தலை தூக்கும்" என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் அவள் அப்பாவுக்கா இப்படி ஒரு வியாதி?

ஈ,எறும்புக்கு கூட கஷ்டம் கொடுக்காதவர். எந்த தீய பழக்கமும் இல்லாதவர். அப்படி பட்டவருக்கா இப்படி ஒரு துன்பம் ?

இன்றோடு அவர் மருத்துமனையில் அனுமதிக்கபட்டு பத்து நாட்களாகிவிட்டது.

ஓய்வறியாமல் உழைத்தவரின் சிறுநீரகம் இரண்டும் வேலை நிறுத்தம் செய்து
விட்டனவாம். மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை ஒன்று தான் வழி என்று மருத்துவர்கள் கையை விரித்து விட்டனர்.

இவளும் கடந்த வாரம் முழுவதும் வேற்று வழி இருக்கிறதா ?என்று போராடி பார்த்து விட்டாள்.
இப்போதைக்கு டயாலிசிஸ் ஒன்று தான் வழி என்று கூறிவிட்டனர்.

இரண்டு நாட்களாக யோசித்து யோசித்துப் பார்த்தவளுக்கு தெரிந்த
ஒரே வழி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான்.

அவள் அப்பாவை எப்படியாவது காப்பற்ற வேண்டும். அதுக்காக அவள் எதை செய்யவும் தயார்.

தனக்கென்று இதுவரை அவர் ஒன்றுமே செய்து கொண்டதில்லை. இவள் இன்று கணிணி பொறியாளராக, தன் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக இருக்கிறாள் என்றால், அதற்கு அவருடைய உழைப்பு மட்டுமே காரணம்.

ஒரு சுடு சொல் இதுவரை பேசியதில்லை. தனக்கு பெண் குழந்தை பிறந்து விட்டதே என்று ஒரு போதும் வருந்தியதில்லை.

தன் ஆசைக்கு மறுபேச்சு பேசியதில்லை. அப்படி பட்டவரை காப்பது அவளின் கடமையல்லவா?

'கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வா ..அவரின் தலையெழுத்து என்னவோ அது படி நடக்கட்டும்' என்று பேசிய புகுந்த வீட்டு உறவுகளுக்கு தெரியவில்லை. அவள் தெய்வமே அவர்தானென்று.அவள் போக வேண்டியது கோவில் இல்லை மருத்துவமனை.

மருத்துவர்கள் அவளின் சிறுநீரகம் அவருக்கு பொருத்த முடியுமா? என்று சோதித்து பார்க்க இன்று மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருந்தார்கள்.

இனி யோசிப்பதற்கு ஒன்றுமே இல்லை. தன்னை சோதனைக்கு உள்ளாக்கி கொள்ளலாம் என்றும், தன் சிறுநீரகத்தின் ஒன்றை தன் தந்தைக்கு கொடுப்பதென்று முடிவு செய்து விட்டாள்.

யார் என்ன சொன்னாலும் இனி அவள் முடிவில் மாற்றமில்லை.

அவர் கொடுத்த உயிர் அவருக்கின்றி மண்ணுக்கா?என்று தீர்க்கமான முடிவுடன்
அழுது வீங்கிய முகத்தை கழுவி துடைத்து,உடை மாற்றிக் கொண்டு மருத்துவமனை செல்ல தயாரானாள்.

முடிவு செய்யும் முன் ஆயிரம் முறை யோசிக்கலாம். ஆனால், முடிவு செய்த பின் யோசிப்தற்கு ஒன்றுமே இல்லை. அவள் வாழ்க்கையே கேள்வி குறியானாலும் பரவாயில்லை. அவளின் அப்பா நன்றாக வேண்டும். அது தான் அவருக்கு அவள் செய்யும் நன்றி கடன்.

பெற்றவர் பிள்ளைகளுக்கு செய்வதற்கு எதைக் கொண்டும் ஈடுகட்ட முடியாது. ஆனாலும் தன்னால் முடிந்ததை செய்ய‌ வேண்டும் என்று எண்ணினாள்.

யாரிடமும் சொல்லாமல் வாசல் வரை சென்றவளிடம் "எங்க போற?" என்ற கேள்வி அவள் காதுகளை எட்டியது..

தன் மகளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்த கணவனிடம் பதிலேதும் சொல்லாமல், கண்களில் கனல் வீச திரும்பி பார்த்தவளின் பார்வையிலேயே தன் கேள்விக்கான பதிலை தெரிந்து கொண்டான்.

தன் மனைவி முடிவெடுத்து விட்டாள் . இனி அது மாறாது என்பது அவளின் பார்வையே உணர்த்தியது.

அடை மழையையும் பொருட்படுத்தாது , மருத்துவமனை நோக்கி வேக நடை போட்டாள் தன் தெய்வத்தைக் காண..

இனிதா மோகன்
 
Top Bottom