Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed அவன் பெயர் ஆதித்தன்

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 11

கூடியிருந்த அவையின் முன்பாக தன்னுடைய முதல் ஆதாரத்தை சாத்தனின் மூலம் வெளிப்பட செய்தான் ஆதித்தன். மான் வேட்டையை பற்றி ஏற்கனவே சாத்தன் கூறிய தகவலால் வியப்பில் இருந்த அரசவை அவன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவன் என்ன சொன்னாலும் நம்ப தயாராக இருந்தது. காடுகளில், விலங்குகளின் குணவியல்புகளை கணிப்பதில் நிபுணனான சாத்தனை இதனாலேயே முதலில் பேச வைத்தான் ஆதித்தன் அவனது திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி விட்டது.

"நாம் அடுத்த ஆதாரத்திற்கு போகும் முன்பு ஒரு சிறிய விண்ணப்பத்தை சபையோர் முன்பு வைக்கிறேன். நஞ்சுண்டனால் அழைத்து செல்லப் பட்ட மன்னர் புலி தாக்கி இறக்கவில்லை. சதிசெயலால் தான் இறந்தார் என்பதை நான் இங்கு ஓவியர்வரைந்த ஓவியத்தின் மூலம் விளக்கப் போகிறேன். சந்தேகத்தின் நிழல் படிந்த நஞ்சுண்டன் தனது தளபதி பதவியை துறந்து விட்டு தான் குற்றமற்றவன் என்பதை நிருபிக்கலாம். அதன் பிறகு தனது பதவியை மீண்டும் ஏற்றுக் கொள்ளலாம். குற்றம் சாட்டப்பட்டவரிடம் அதிகாரம் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. மேலும் அவரது பதவிக்கு பயந்த சிலர் இங்கே உண்மை தெரிந்தும் மவுனமாக இருப்பார்கள் என்பதாலேயே இந்த வேண்டுகோளை சபையினர் முன்னே வைக்கிறேன். என் வேண்டுகோளில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதை சபை சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்" என்றான் ஆதித்தன் வினயத்துடன் .

ஆதித்தனின் வேண்டுகோளை கேட்டசபை சலசலத்தது.நஞ்சுண்டனின் சவமாக வெளுத்த முகம் மேலும் வெளி றத் தொடங்கியது.தான் குற்றமற்றவன் என்றால் தானாகவே முன்வந்து பதவியை துறந்தாக வேண்டும் என்று அவனுக்கு புரிந்தது. ஆதித்தன் தன்னை இப்படியொரு சிக்கலில் மாட்டி விடுவான் என்பதை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சூழ்நிலையை சரியாக பயன்படுத்தி கொள்ள நினைத்த ராயர் தலை தொண்டையைகனைத்து கொண்டு பேச ஆரம்பித்தார்.

" சபையோர்களே!ஆதித்தனின் கோரிக்கை வெகு நியாயமானது என்றே நான் நினைக்கிறேன். குற்றம் சாட்டப்பட்ட நபர் அதிகாரத்தில் தொடர்வது அவ்வளவு நல்லதல்ல. அதனால் நஞ்சுண்டன் தனது பதவியை துறப்பதே நல்லது. நீ என்ன சொல்கிறாய் நஞ்சுண்டா?"

"நான் குற்றமற்றவன் ராயரே! அதனால் எனது பதவியை துறக்க எனக்கு வருத்தமில்லை. நான் குற்றவாளி அல்லவென்று நிருபித்த பின்பு என்பதவியை நான் மீண்டும் ஏற்றுக்கொள்கிறேன்"என்ற நஞ்சுண்டன் தனது வாளை கழற்றி ராயரிடம் ஓப்படைத்தான்.

"இதோ இந்த கணம் முதல் நானும் உங்களில் ஒருவன். தளபதி என்ற அதிகாரம் மிக்க பதவி இப்போது என்னிடம் இல்லை.என் மீதான உங்கள் தீர்ப்பு எப்படியிருந்தாலும் நான் ஏற்று கொள்கிறேன். இது என் விசுவாசத்தின் மக்களை மதிக்கும் தன்மையின் அடையாளம். " என்றான் நஞ்சுண்டன் .

இதை எதிர்பார்த்திருந்த ராயரின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. " நல்லது.ஆதித்தா உன்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டது. நீ உன் விளக்கங்களை தொடரலாம்" என்றார் ராயர்.

" என் கோரிக்கையை நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி. என் நண்பர் சாத்தன் கூறியது போல் புலிகள் தனது இரையின் தொண்டையை குரல்வளையை கவ்வி கொல்வது தான் வழக்கம். ஓவியத்தில் புலி மன்னரின் கழுத்தை சேதமாகவேயில்லை. அடுத்தது?" என்றபடி சாத்தனை பார்த்தான் ஆதித்தன்.

ஆதித்தனின் பார்வையை புரிந்து கொண்ட சாத்தன் தன் கருத்தை தொடர்ந்து சபையின் முன்பு எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

"இரையின் கழுத்தை கல்விய புலி தனது உடலின் மொத்த பாரத்தையும் இரையின் மீது போட்டு அதை மூச்சு திணற செய்து விடும். அப்படி மன்னரை புலி தாக்கியிருந்தால் மன்னரின் நெஞ்சில் புலியின் நகங்கள் பதிந்திருக்கும். அப்படியான சான்றுகள் ஓவியத்தில் இல்லை. மேலும் புலிகள் அவ்வளவு எளிதில் மனிதர்களை தாக்காது.அப்படி தாக்க வேண்டுமென்றால் சில காரணங்கள் தான் உண்டு"

"அவற்றையும் நீ இங்கே விளக்கமாக கூறலாம் நண்பனே?" என்றான் ஆதித்தன்

"காட்டில் தனக்கான போதுமான இரை கிடைக்காவிட்டால் மட்டுமே ஒரு புலி மனிதனை தாக்க துணியும். மன்னர் வேட்டைக்கு சென்ற காட்டில் போதுமான இரை இருக்கிறது. அதனால் உணவுக்கு வழியற்ற புலி அவரை தாக்க வழியில்லை. காயமடைந்த உடல் ஊனமடைந்த புலி மட்டுமே எளிதில் வேட்டையாட மனிதர்களை குறிவைக்கும். இந்த படத்தில் வரையப்பட்ட புலி உடல் ஊனமுற்றதாகவோ காயமடைந்ததாகவோ தெரியவில்லை. அதனால் மன்னரை புலி தாக்கி கொன்றதாக வரையப்பட்ட இந்த ஓவியம் முரண்பாடுகள் நிறைந்தது. ஓவியர் இந்த ஓவியத்தை தவறாக வரைந்திருக்கிறார். " என்றான் சாத்தன்

"தவறாக வரையவில்லை நண்பா. அவருக்கும் உன்னைப்போல் கான க விலங்குகள் பற்றிய அறிவும் மிகுதியாகவே இருந்திருக்கிறது. ஏதோ ஓரு காரணத்தால் ஓவியத்தில் சில தடயங்களை விட்டு வைத்திருக்கிறார். அவற்றை நகரவாசிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாம் இருவர் மட்டுமே சரியாகப் புரிந்து கொண்டோம்" என்றான் ஆதித்தன்.

"தவறாக வரையப்பட்ட ஒரு ஓவியத்தை வைத்துக் கொண்டு என்னை குற்றவாளி என்று தீர்மானிப்பது அநீதி . ஓவியருக்கு மன்னரின் கடைசி நொடிகளை நினைத்து பார்க்கும் போது ஞாபக பிசகு ஏற்பட்டு தவறாக கூட ஓவியத்தை வரைந்திருக்கலாம். என் போன்ற நிரபராதியை ஒரு தவறாக வரையப்பட்ட ஓவியத்தை வைத்து தண்டிப்பது முறையாகாது" என்றான் நஞ்சுண்டன் .

"அவர் தவறாக வரைந்ததன் மூலம் தான் கண்ட உண்மையை வெளிப்படுத்தி விட்டார். மன்னரை புலி கொல்லவில்லையென்றால் வேறு யார் கொன்றார்கள்? ஓவியர் ஓவியத்தை இயற்கைக்கு முரணாக வரைய என்ன காரணம்? இவற்றுக்கெல்லாம் பதில் வேண்டும் நஞ்சுண்டா? இவற்றுக்கு விடை தேட வேண்டியவன் நீ? மன்னரை வேட்டைக்கு அழைத்துச் சென்ற நீதான் மக்களுக்கு உன் மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தையும் தீர்க்க வேண்டும் நீ அதை செய்ய தவறி விட்டாய்"என்றான் ஆதித்தன்.

"அது என்னுடைய தவறுதான். மக்கள் என் மீது சந்தேகம் கொள்வார்கள் என்பதை நான் எதிர்பார்க்க வேயில்லையே? மன்னரை புலி தாக்கிய நிலையில் தான் நான் அவரை பார்த்தேன்.அருகில் திக் பிரமை பிடித்த நிலையில் ஓவியர்தான் நின்றார். ஒரு வேளை உண்மையான கொலைகாரனை ஓவியர் மறைக்க நினைக்கிறாரோ? அப்படி மறைக்க நினைத்தால் அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?" என்று நஞ்சுண்டன் சாதுர்யமாக ஓவியரின் மீது சந்தேகத்தை கிளப்பினான்.

சபையில் குழப்பமான மவுனம் நிலவியது. "பதிலை நான் சொல்கிறேன்" என்ற து ஒரு கரகரத்த கணீர் குரல். குரல் வந்த திசையில் அனைவரும் திரும்பி பார்த்தனர்.அங்கே இடுப்பில் கையை வைத்து கொண்டு நின்றிருந்தான் நீலன்.அவன் இப்போது தனக்கு விருப்பமான நீல நிற சீருடையை அணிந்திருந்தான்.

"இவன் நீலனல்லவா? மன்னரால் நாடு கடத்தப்பட்டவன். இப்போது இவன் இங்கிருப்பதே பெரும் குற்றம். யாரங்கே? இவனை உடனே கைது செய்யுங்கள்" என்றான் நஞ்சுண்டன்.

"நீ இப்போது பல் பிடுங்கப்பட்ட பாம்பு நஞ்சுண்டா. உன் அதிகாரம் இப்போது செல்லாக் காசாகி விட்டது.மன்னரை கொலை செய்தவன் நீதான். அதற்கான கருவியை செய்து கொடுத்தவன் நான். ஆனால் அது மன்னரை கொல்ல பயன்படுத்தப்படும் என்று எனக்கு தெரியாது" என்று தான் செய்த கொலை பாதகத்தை நஞ்சுண்டன் மீதே திருப்பினான் நீலன்.

" என்ன உளறுகிறாய்?" என்றான் நஞ்சுண்டன் நீலனின் அதிரடி மாற்றத்தால் திக்குமுக்காடியபடி. அவனால் நீலனின் குற்றசாட்டை எதிர்கொள்ள முடியவில்லை.

"நான் உளறுகிறேனா? அப்படியானால் இவர்கள் உளறாமல் உண்மையை சொல்வார்கள்" என்று விலகினான் நீலன் அவனுக்கு பின்புறமாக நின்று கொண்டிருந்தார்கள் ஓவியரின் மனைவியும் மகளும்.அவர்களை பார்த்ததும் ஓடி வந்து அவர்களை கட்டியணைத்து கண்ணீர் விட்டார் ஓவியர் .

"இவர்களை எதற்காக பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தாய் நஞ்சுண்டா? உன்னிடம் என் கேள்விக்கு பதில் இருக்கிறதா? "என்றான் நீலன்.

நஞ்சுண்டன் பதில் கூற முடியாமல் தலை கவிழ்ந்தான்.

"நாம் ஒவியத்தில் பார்த்த மனிதனும் என்னிடம் புலி நகத்தை வாங்கியவனும் இவன் தான்" என்று ஆதித்தனிடம் கிசுகிசுத்தான் சாத்தன்.

"இது நீ மவுனமாக இருக்க வேண்டிய நேரம் " என்றான் ஆதித்தன்.

சாத்தன் மவுனமானான்.

" மன்னரை நஞ்சுண்டன் நேரில் கொன்றதை பார்த்தவர் ஓவியர் .அதை புலி அடித்து கொன்றதாக கூறி வரையச் செய்தவன் நஞ்சுண்டன் அதில் ஏதாவது துப்பு கொடுத்து தன்னை காட்டி கொடுத்து விடுவாரோ என்று அவருடைய மனைவி மகளை தன் கைப்பிடியில் பதுக்கி வைத்திருந்தான். அவர்களை ராயரின் சொற்படி நான் இப்போது தான் மீட்டு வந்தேன்.என் செல்ல பிராணிகளை பார்த்ததும் இவன் ஆட்கள் ஓடிய ஓட்டத்தை என்னால் மறக்க முடியாது." என்றான் நீலன்.

"இவன் மன்னரால் நாடு கடத்தப்பட்டவன்." என்றான் நஞ்சுண்டன் படபடப்புடன்.

"ஆம் அதை மறுக்கவில்லை. மறைந்த மன்னர் கடைசியாக எழுதிய ஓலை நீலனை மன்னித்து நாடு திரும்ப சொல்லி எழுதியது தான். அந்த ஓலை என்னிடம் தான் உள்ளது" என்றராயர் அந்த ஓலையை சபைக்கு முன்னால் சமர்பித்தார். அது ராயரால் உருவாக்கப்பட்ட போலியான ஓலை.

"ஆம் இது உண்மையான ஓலை தான். மன்னரின் ராஜ முத்திரையுடன் அவரது கையொப்பமும் இருக்கிறதே?" என்றார் ஓலையை படித்த பெரியவர் ஒருவர்.

ராயரின் மாளிகைக்குள் பதுங்கி நுழைந்த நீலன் அபராஜித வர்மனிடம்ராயர் பேசிக் கொண்டிருப்பதை மறைந்திருந்து கேட்டான் - ராயர் தன் மீது இன்னமும் நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருப்பதை அவரது பேச்சின் வாயிலாக அறிந்து கொண்டவன் ராயரின் பக்கம் சரணடைந்து விட்டான்.நம்ப இயலாத நஞ்சுண்டனை விட நம்பத்தகுந்தராயரிடம் உண்மையை சொல்லி சரணடைவதே மேல் என்று நீலன் நினைத்தான். நீலனின் சேவையை பயன்படுத்தி கொள்ள நினைத்த ராயர் மன்னரின் கையொப்பம் இட்ட ஓலையை போலியாக தயார் செய்தார். ஆதித்தன் தன் கடைசி ஆசையாகராயரின் காதில் கூறியது என்னவென்றால்ஓவியரின் மனைவியையும் மகளையும் மீட்க சொன்னது தான். அதை நீலன் மூலமாக நிறைவேற்றி கொண்டார்ராயர்.. மன்னரை கொன்றது நீலன் தான் என்பதை வெளியே தெரியப்படுத்த வேண்டாம் என்று ஒவியரை கேட்டு கொண்டார்ராயர். நீலன் தன் குடும்பத்தை காப்பாற்றி விட்டதால் அவனை காட்டி கொடுக்க விரும்பாமல் அமைதியாகி விட்டார் ஓவியர் .

நீலன் ஒரு பொய் கதையை கூற ஆரம்பித்தான்.

"அரசியல் பிரமுகர் ஒருவரை கொல்ல வேண்டும் என்று நஞ்சுண்டன் என்னை தேடி வந்தான். அவரது மரணம் விபத்தை போலிருக்க வேண்டும் என்று கேட்டான்.வி சப்ப்ரயோகம் என்னை காட்டிக் கொடுத்து விடும் என்பதால் அவனுக்காக நான் புலிநகம் என்ற ஆயுதத்தை செய்து கொடுத்தேன். படுபாவி.அதை வைத்து மன்னரையே கொல்வான் என்று நான் நினைக்கவேயில்லை.அதுதான் நான் செய்த ஓரே தவறு" என்றான் நீலன்.

" அவன் சொல்வது பொய். மன்னரை கொன்றது அவன் தான் " என்று அலறினான் நஞ்சுண்டன் .

" மன்னர் உன்னுடன் வேட்டைக்கு கிளம்பும் முன்பாகவே இந்த ஓலையை எழுதி என்னிடம் கொடுத்துவிட்டார். நானும் நீலனை தலைநகருக்கு திரும்ப சொல்லி தகவல் அனுப்பி விட்டேன். பிறகெதற்கு அவன் மன்னரை கொல்ல வேண்டும்? அதற்கான முகாந்திரம் இல்லையே? இப்போது கூட நீல நிற உடையில் தான் இங்கே வந்திருக்கிறான் என்பதை நாம் அனைவரும் பார்த்தோம் " என்றார் ராயர்.

"இங்கே எனக்கெதிராக சதி நடக்கிறது" என்றான் நஞ்சுண்டன் .

"நஞ்சுண்டா.! உன் மீதான குற்றசாட்டு ஆதாரத்தோடுநிருபிக்கப்பட்டு விட்டது. நீதான் மன்னரை கொன்ற குற்றவாளி.யார் அங்கே ? இவனை சிறையில் அடையுங்கள். நாளை இவனுக்கான தண்டனை உறுதி செய்யப்படும் .சபை இத்தோடு கலைகிறது " என்றார் ராயர்.

நஞ்சுண்டன் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டான். தன் கையில் விலங்கு பூட்டப்படுவதை நம்ப முடியாமல் பார்த்தான் நஞ்சுண்டன் .தன் அதிகாரத்தை இழந்து சிறையில் வாடப் போவதை அவன் மனதால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

" நீ மட்டும் இங்கே வராவிட்டால் நாட்டின் தலைவிதி தலைகீழாக மாறியிருக்கும்.பிரச்சனையை நல்லபடியாக முடித்து வைத்து விட்டாய் ஆதித்தா. உனக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.நீ இன்று இரவு இங்கு தான் தங்கவேண்டும்" என்றார் ராயர்.

"பெரிய வார்த்தைகள் பேசாதீர் ராயரே. நாட்டு மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பது தான் என் நோக்கம். மக்களை பாடாக படுத்தும் ஆட்சியாளர்களை மாற்றி நல்லாட்சியை உருவாக்குவதே என் நோக்கம். அதற்காகவே நான் இந்த விசயத்தில் தலையிட்டேன். உமது உபசரிப்புக்கு நன்றி ராயரே!நான் என் நண்பனுடன் விருந்தினர் மாளிகையிலேயேதங்கி கொள்கிறேன் ராயரே."

" உன் விருப்பம் ஆதித்தா.நல்ல வேளையாக நீலன் மனம் திருந்தி நம்முடன் இணைந்தான். நாளை முதல் நீலனை நாட்டின் தளபதியாக நியமிக்க இருக்கிறேன்."

"நன்றி ராயரே. என் பணியில் இனி எந்த தவறும் நேராது. புது மன்னருக்கு விசுவாசமாக இருந்து என் செய்த பாவத்தை கழிப்பேன்" என்றான் நீலன் .

அன்று இரவு சிறைச்சாலை அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் நஞ்சுண்டன் சில்வண்டுகளின் ரீங்காரம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த இருளில் அவனது அறை கதவு தட்டப்பட்டது. கம்பிக்குவெளியே நீலன் கையில் பூச்செண்டுடன் நின்று கொண்டிருப்பது தீப்பந்த வெளிச்சத்தில் மங்கலாக தெரிந்தது. தன் கண்களை தேய்த்து கொண்டு அவனை உற்றுப் பார்த்தவன்

"துரோகி. இங்கேயும் வந்து விட்டாயா?" என்றான் நஞ்சுண்டன் .

"இந்த பூச்செண்டை வைத்து கொள் நண்பா. நாளை முதல் உன் பதவியில் நான் இருக்கப் போகிறேன். எனக்காக உன் பதவியை விட்டு கொடுத்ததற்கு என் அன்புபரிசு" என்ற நீலன்பூச்செண்டை கம்பி வழியாக உள்ளே வீசினான். அதை கையால் பிடித்த நஞ்சுண்டன் "மன்னரை நீ கொன்று விட்டு பழியை என் மீது சுமத்தி விட்டாயே? நயவஞ்சகா?" என்றான்.

"நான் என் இனத்தாருக்காக பாவம் செய்ய துணிந்தேன். நீ ஓரு சுயநலவாதி. நீ வாழ பிறரை கொல்ல நினைத்தவன். நான் திருந்தி விட்டேன். நீ எப்போதும் திருந்தப்போவதில்லை" என்றான் நீலன்.

நீலனின் மீதான கோபத்தில் பூச்செண்டை கசக்கிய நஞ்சுண்டனின் கையில் சுருக்கென்று எதுவோ தைத்தது. பூச்செண்டை தூக்கி எரிந்தவன்''சண்டாளா!அதில் என்ன வைத்திருந்தாய்?" என்று அலறினான்.

"மூங்கிலில் வாழும் மண்புழு அளவுள்ள பூநாகம். அதிக விசமுள்ளது. உன் பரலோகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. போய் வா நண்பா "

"இது மட்டும் ராயருக்கு தெரிந்தால், "

" இதை செய்ய சொன்னதே ராயர்தான். போய் வருகிறேன் நண்பா. அடுத்த பிறவியில் சந்திப்போம். "நீலன் திரும்பி பார்க்காமல் கிளம்பி விட்டான்.

"என்னை யாராவது காப்பாற்றுங்கள்" என்ற நஞ்சுண்டனின் குரல் சுவர்களில் பட்டு எதிரொலித்து அடங்கியது.

மறுநாள் காலையில் சாத்தன் ராயரின் முன் நின்று கொண்டிருந்தான்.

"அபராஜிதா ! உன் அன்னையையும் ஆட்சி கட்டிலையும் நெருங்க தடையாக இருந்தவைகள் அகன்று விட்டன. இனி நீ சுதந்திர பறவை." என்றார்.

அருகேயிருந்த அபராஜித வர்மன் " நன்றி ராயரே ! உங்கள் துணை இருந்தால் அதுவே போதும். காலையில் நான் ஒரு செய்தியை கேள்விப்பட்டேன். அந்த விசயம் வெகு விந்தையாயியிருக்கிறது. விருந்தினர் மாளிகையின் கட்டு காவலை மீறி தன் குதிரையுடன் ஒரு விருந்தாளி யார் கண்ணிலும் படாமல் வெளியேறியிருக்கிறான்.யார் அவன்?" என்றான்.

" அவன் பெயர் ஆதித்தன்" என்றார் ராயர்.

கள்வர் புரத்திற்கான பாதையில் ஒரு வெண்ணிற புரவி ஆதித்தனோடு நாலு கால் பாய்ச்சலில் விரைந்து கொண்டிருந்தது.
முற்றும்.
 
Top Bottom