Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL உன் மூச்சுக்காற்றாய் - Tamil Novel

Status
Not open for further replies.

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 17:

தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஓட ஆரம்பித்தான் வெங்கி. எதை நோக்கி ஓடுகிறோம்? அல்லது எதிலிருந்து தப்பித்து ஓடுகிறோம் என எதுவும் அவனுக்குத் தெரியவில்லை. மூச்சு வாங்க ஓடினான். எதிரே ஏதோ கோயில் மண்டபம் போலத் தெரிய அதை நோக்கி ஓடத்தொடங்கினான். மூச்சுத்திணற அந்த கோயில் மண்டபத்தை அடைந்தான். இதற்கு மேல் ஓட முடியாது என அப்படியே அமர்ந்து விட்டான். இப்போது யாரும் அவனை நோக்கி வருவது போலத் தோன்றவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த இடம் தெரிந்த இடம் போல இருந்தது! ஆனால் எந்த இடம்? எங்கே பார்த்திருக்கிறோம் என எதுவும் புரியவில்லை.

மண்டபத்துக்குப் பக்கத்தில் சிறிய வீடு போன்ற ஒன்று இருந்தது. அதன் வாயில் திறந்திருந்தது. உள்ளே பர்த்த போது யாரோ ஒருவர் தியானத்தில் அமர்ந்திருப்பது போலத் தென்பட த்ன்னையுமறியாமல் அந்த வீட்டை நோக்கி நடந்தான் வெங்கி.

"கதவு திறந்து தான் இருக்கு! உள்ள வா" என்று குரல் கேட்க பயந்து போனான்.

"யாரு? யாரு நீங்க? என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்றான் குழறலாக.

"நீ ஆதித்தன் அல்லது வெங்கடேஷ் தானே? நீயும் உன் நண்பனும் நித்யமல்லியை அழிக்க வழி தேடுறீங்க. இல்லியா?" என்றார் அந்த மனிதர்.

அயர்ந்து போனான்.

"அதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? இது என்ன இடம்?" என்றான் மெல்ல.

"இது வனப்பேச்சியம்மான் கோயில் இருக்கப் போற இடம்ன் தான்ப்பா. இங்கே பக்கத்துல தான் கோயில் வரப்போகுது." என்றார்.

"ஐயா! தப்பா நினைக்காதீங்க. வனப்பேச்சியம்மன் கோயில் கட்டி முடிச்சாச்சு. நானும் பாலாவும் கூட கும்பாபிஷேகத்துக்குத்தான் வந்தோம். ஆனா இங்கேயே இருக்கீங்க உங்களுக்கு கோயில் கட்டுனதே தெரியாதா?" என்றான்.

கடகடவென சிரித்தார் அந்தப் பெரியவர்.

"காலம்! காலம்! அது தான் எத்தனை விசித்திரமானது" என்றார்.

"என்ன சாமி சொல்றீங்க? புரியலையே?" என்றான்.

"முதல்ல உள்ள வாப்பா! வந்து உக்காரு. நீ கேக்குற எல்லா கேள்விக்கும் எனக்குத் தெரிஞ்ச பதிலைச் சொல்றேன். பயப்படாதே! நான் நித்யமல்லியோட கையாள் இல்ல. வனப்பேச்சி தான் என் தெய்வம்." என்றார். அவரது தோற்றம் பேச்சு எல்லாமே நம்பிக்கையூட்டும்படி இருக்கவே வீட்டின் உள்ளே சென்று அமர்ந்து கொண்டான்.

"இப்பக் கேளு"

"ஐயா! நீங்க யாரு? என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?"

"உனக்குப் புரியும்படி சொல்லணும்னா உனக்காகக் காத்துக்கிட்டு இருக்கிற ஒரு தூதுவன். வனப்பேச்சியோட தூதுவன். சாமிக்கண்ணு, கரியமணிக்கம், திவ்யா, பாலா இப்படி உங்க எல்லாரையும் எனக்குத் தெரியும்." என்றார்.

"இவ்வளவு தெரிஞ்சு வெச்சிருக்கீங்களே? ஆனா பக்கத்துலயே கோயில் கட்டியிருக்காங்க அது தெரியலையா உங்களுக்கு?" என்றான். அவன் குரலில் சற்றே ஏளனம்.

"அப்படியா? சரி! பக்கத்துல கட்டியிருக்காங்கன்னு சொல்றே இல்ல? எங்கே? அந்தக் கோயிலைக் காட்டு?" என்றார்.

திகைத்துப் போனான் வெங்கி. அவன் வந்த இடத்தில் மரங்களும், செடிகளும் அடர்ந்து இருந்ததே தவிர கோயில் இல்லையே? இது என்ன மாயம்?

"என்னப்பா? பதிலே காணும்?"

"வந்து...ஐயா...நீங்க தான் கோயிலை மறைச்சுட்டீங்களோன்னு...." இழுத்தான் வெங்கி.

"சிவ சிவா! கோயிலை நான் மறைக்கிறதாவது? அதை யாராலயும் செய்ய முடியாதுப்பா. நீ கேக்க தயார்னா விளக்க நான் தயார்." என்றார்.

"எனக்கு எல்லாமே புதிராவும் பயமாவும் இருக்கு சாமி! ஏற்கனவே நித்யமல்லி, மறு பிறவின்னு ஒரே குழப்பம். இதுல நீங்க வேற கோயிலே இனிமே தான் கட்டுவாங்கன்னு சொல்றீங்க! நான் என்னன்னு புரிஞ்சுக்க? சொல்லுங்க சாமி" என்றான் பரிதாபமாக.

"உன்னோட இந்தக் கோயில் குழப்பத்தைத் தீர்த்துட்டு மத்த விஷயங்களுக்கு வரேன். இதோ இப்ப நீ உக்காந்திருக்கியே? இந்த வீடு, இந்த இடத்துல தான் 400 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் வரப்போகுது." என்றார்.

ஐயோ என்று கத்தி தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது.

"சாமி! என்னை ரொம்ப சோதிக்காதீங்க. புரியல்ல" என்றான்.

"அப்பா! நீ இப்ப கடந்த காலத்துல நிற்குறேப்பா. கோயில் 2021ஆம் ஆண்டு கட்ட்ப்படப் போகுது. இது என்ன ஆண்டு தெரியுமா? 1621. எல்லாமே அந்தத் தாய் வனப்பேச்சியோட விளையாட்டு. 1521ல தான் நீ, பாலா, திவ்யா சேர்ந்து நித்யமல்லியைக் கட்டுனீங்க. அதுக்கு நூறாண்டுகளுக்குப் பிறகு சங்கிலி கருப்பனும், சொரிமுத்தையாரும் என்னை இந்த இடத்துக்குக் காவலா நியமிச்சாங்க. ஏன் தெரியுமா? வனப்பேச்சி உன்னை இங்கே கூட்டிக்கிட்டு வருவா! உனக்கு விஷயங்களை விளக்கிச் சொல்லத்தான்." என்றார்.

குழப்பம் அதிகரித்ததே தவிரக் குறையவில்லை வெங்கிக்கு.

"சாமி! அப்படீன்னா நான் டயம் டிராவல் பண்ணி வந்துருக்கேன்னா சொல்றீங்க?"

"ஆமாப்பா! நீயா செய்யல்ல! சங்கிலி கருப்போட குதிரை உன்னை இங்கே கொண்டு வந்ததுப்பா! அந்தக் குதிரையால எந்த காலத்துக்கு வேணும்னாலும் போக முடியும். அது தான் உன்னை இங்கே கொண்டு வந்தது." என்றார் மீண்டும்.

"நான் ஓடியில்ல வந்தேன்? குதிரையில வரலியே?"

"தம்பி! அது சங்கிலி கருப்போட குதிரையப்பா! அதுல உன்னால சவாரி பண்ண முடியுமா? அது துரத்த நீ ஓட, அப்படியே அது உன்னை இந்தக் காலத்துக்குக் கூட்டிக்கிட்டு வந்திடிச்சு." என்றார்.

நம்பவே முடியாத அந்த விஷயத்தை நம்பித்தான் ஆக வேண்டும் போல. ஆனால் டயம் டிராவல்? முடியுமா? ஏன் முடியாது? வெளி நாட்டில் பல அறிஞர்களும் இதைப் பற்றிப் பேசியும், எழுதியும் வந்திருக்கிறார்களே? அப்படிப் பேசிய பல விஷயங்கள் நம் நாட்டில் சாத்தியாமாயிற்றே? ஏன் அதே போல இந்த விஷயமும் நடந்திருக்கக் கூடாது? எண்ணிக் கொண்டான் வெங்கி.

"என்னப்பா? என்ன யோசனை? வேற என்ன சந்தேகம் உனக்கு? கேளு?" என்றார் அந்தப் பெரியவர்.

முதன் முறையாக அவரை நன்றாகப் பார்த்தான் வெங்கடேஷ்.

காவி நிறத்தில் வேஷ்டி, அதற்கு மேல் அதே நிறத்தில் மேல் துண்டு. மிகவும் ஒல்லியான உருவம். நெற்றியில் பளிச்கிட்ட வெண்மையான திருநீறு, அதன் நடுவில் 50 காசு அளவு குங்குமம். சடாமுடி. கழுத்தில் மட்டும் ருத்திராக்ஷ மாலை. மற்றபடி வேறு எந்த ஆபரணங்களும் இல்லை. வணங்கத்தக்க உருவம்.

"சாமி! உண்மையிலேயே நான் யாரு? வெங்கடேஷா? இல்லை ஆதித்தனா? பாலா தன்னை வேங்கையன்னு சொல்லிக்கறான். திடீர்னு ஒரு அழகான பொண்ணு வந்து நான் தான் செம்மலர்னு சொல்லுது. இதைக் கொஞ்சம் விளக்க முடியுமா சாமி?" என்றான் பணிவாக.

"கட்டாயம் விளக்கறேன் வெங்கி! இதையெல்லாம் உனக்குச் சொல்வது தான் என் பணி. அதற்காகவே நியமிக்கப்பட்டவன் நான். வெங்கி நீ தான் வெங்கடேஷும், நீ தான் ஆதித்தனும். ரெண்டுமே நீ தானப்பா. ஒரு நாணயத்தோட இரு பக்கங்கள் மாதிரி." என்றார்.

"சாமி"

"அப்பா! நமது ஆன்மாவுக்கு அழிவே கிடையாது. இறைவனது எண்ணப்படி அவ்வப்போது நமக்குச் சில பிறவிகள் வரலாம். அப்படி வரும் போது சிலர் சில முக்கியமான பணிக்காகக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆரம்பித்த அந்தப் பணியை முடிப்பதற்காக அவர்கள் மேலும் சில பிறவிகள் எடுக்கலாம்."

"உம்! ஓரளவு புரியுது சாமி! இப்ப வெங்கியா என் உடம்புக்குள்ள இருக்குற அதே ஆன்மா தான் ஆதித்தன் உடம்புலயும் இருந்தது. அதே மாதிரி தான் பாலா அப்புறம் திவ்யாவுக்கு. இல்லியா சாமி?"

"ரொம்பவும் சரி! சரியாப் புரிஞ்சுக்கிட்ட"

"சாமி! ஆனா எனக்கோ, பாலாவுக்கோ அந்தப் பொண்ணு திவ்யாவுக்கோ நாங்க நித்யமல்லியை எப்படி கட்டுனோம்? அவளைக் கட்டப் பயன்பட்ட குத்தீட்டியும், வாளும் இப்ப எங்கே இருக்கு? இதெல்லாம் தெரியலியே சாமி? ஒரே ஆன்மான்னா எங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கணுமே?" என்றான் வெங்கி.

"கேக்குறது நியாமான கேள்வி தான். ஆனா இதுக்கு பதில் சொல்றது அத்தனை சுலபமில்ல வெங்கி. நாம தாயோட கர்ப்பத்துல இருக்கும் போது நமக்கு எல்லா நினைவுகளும் இருக்கும். நாம பஞ்ச பூதங்களால் ஆன இந்த உலகத்துக்குள்ள வரும் போது நம்மை சடம் என்ற காற்று தீண்டும். அந்த நொடியே நமக்கு எல்லாமே மறந்து போயிரும். அதை மாயைன்னும் சொல்லுவாங்க. ஆனா மிகப்பெரிய ஞானிகள், ரிஷிகள் இவங்கள்ல சிலர் இந்த சடத்தை வென்றிருக்காங்க. அவங்களைப் போன்றவங்க மனித இனத்தைக் காப்பாத்துறதை தன் கடமையா நெனச்சு செய்வாங்க. அவங்களுக்கு தெய்வம் உதவி செய்யும்." என்றார்.

அவரது பேச்சு முழுமையும் உள்வாங்கி மனதில் யோசித்தபடியே அமர்ந்திருந்தான்.

"மனசுல இன்னமும் கேள்விகள் இருக்கு இல்லே? கேட்டுடுப்பா" என்றார் அன்பாக.

"தெய்வம் மனுசனுக்கு உதவி செய்யும்னு சொன்னீங்க. ஆனா ஏன் விஷயங்களை இத்தனை சுத்தி வளச்சு செய்யணும். நேரா எங்க கிட்ட வந்து வாளும் குத்தீட்டியும் இருக்குற இடம் இது தான். இப்படித்தான் நித்யமல்லியை அழிக்கணும்னு ஏன் சொல்ல மாட்டேங்குது?" என்றான்.

"நெனச்சேன். இதை நீ இதைக் கேப்பேன்னு நெனச்சேன். அப்பா! நம்ம பூமி கர்ம பூமியப்பா! நம்மோட செயல்களால தான் நல்லதும் நடக்குது, கெட்டதும் நடக்குது. நம்ம மனசு, செய்கை, பேச்சு இதெல்லாம் உண்மையா மட்டுமே இருந்தா இந்த உலகம் எப்படி இருந்திருக்கும்? ஆனா நம்மால அப்படி இருக்க முடியுதா? அதனால தான் தெய்வங்கள் மனிதர்கள் மூலமாகவே தான் உதவி செய்யுறாங்க. ஆனா அதுவும் போதாம தெய்வமே எல்லாத்தையும் செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க" என்றார்.

"இல்ல சாமி! வந்து..."

"ஏன் வனப்பேச்சியம்மன் நெனச்சா நித்யமல்லியை அழிக்க முடியாதா? சில நொடிகள்ல செஞ்சிடலாம். ஆனா மனிதர்களானப் பிறந்த உங்க கடமை என்ன? அதை நாம தெரிஞ்சுக்கணும் இல்ல? அம்மா அப்பா ஒரு குழந்தைக்கு 3 வயசு மிஞ்சிப்போனா 6 வயசு வரைக்கும் சாப்பாடு ஊட்டுவாங்க. அதுக்குப் பிறகு தானே சாப்பிடச் சொல்லித்தரதோட, வருங்காலத்துல அவன் உணவை அவனே சாம்பாதிச்சுக்கத் தேவையான கல்வியையும் குடுக்குக்கறாங்க இல்ல? அதுக்குப் பதிலா, என் மகன் எனக்கு ரொம்ப செல்லம். அதனால அவன் படிக்க வேண்டாம், வெளியுலகத்துக்குப் போக வேண்டாம், நானே எல்லாத்தையும் செய்வேன்ன்னு நெனச்சா, அந்தக் குழந்தையோட எதிர்காலம் என்ன ஆகும்? அதே போலத்தான்ப்பா தெய்வமும். நாமளே முயற்சி செய்யணும். நம்மால முடியாத போது இறைவனை நெனச்சாப் போதும் உடனே வந்து உதவி செய்வான். அதுக்காக முயற்சியே செய்யாம எல்லாமே தெய்வம் தான் செய்யணும்னு எதிர்பார்க்குறது தவறு." என்று சொல்லி நிறுத்தினார்.

நன்றாகவே புரிந்தது வெங்கிக்கு.

"புரிஞ்சது சாமி! இத்தனை தூரம் நாங்க வந்ததுக்கு நிச்சயம் தெய்வ அருள் தான் காரணம். இதுக்கு மேல நாங்க என்ன செய்யணும் சாமி?"

"காலத்தைத் தாண்டி நீ வரணும்னு தெய்வம் நெனச்சதால தான் உன்னால வர முடிஞ்சது. அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. நல்லா யோசி. உனக்கு என்ன தேவை? அதை எப்படி அடைய? இதைப் பத்தியோசி."

"யோசிச்சுட்டேன் சாமி! இப்ப எங்க முதல் தேவை, சங்கிலிகருப்பண்ண சாமியும், சொரிமுத்தையனாரும் குடுத்த குத்தீட்டியையும் வாளையும் எப்படியாவது கண்டு பிடிக்கணும், அதைக் கண்டு பிடிச்ச உடனே நித்யமல்லியை எப்படி அழிக்குறதுன்னு தெரிஞ்சிரும்னு நெனக்கிறேன் சாமி" என்றான் பணிவாக.

"சபாஷ்! நல்லாவே யோசிக்கிற. இன்னும் சில நிமிடங்கள்ல நீ 2021ஆம் ஆண்டுக்குத் திரும்பிப் போகப் போற. ஆனா அப்படிப் பொறதுக்கு முன்னால சங்கிலி கருப்பன் குதிரையையும், இந்த குடிசையையும் நல்லா மனசுல பதிய வெச்சுக்கோ. அது உனக்கு உதவும்." என்றார்.

வெங்கியை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தார் அந்த சாமியார். கூப்பிடும் தொலைவில் அழகான கருமையான குதிரை நின்று கொண்டிருந்தது. அதன் மேல் வான நீலத்தில் ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது. அருகில் சென்றான் வெங்கி. அந்த நீலத் துணி துணி போலவே இல்லை. மெல்லிய புகை போல இருந்தது. அதில் சில எழுத்துக்கள் தெரிந்தன. ஊன்றிப் படித்தான் வெங்கி. மொத்தம் மூன்றே எழுத்துக்கள். பாவநாசம், அக்கினி மூலை, பாண தீர்ந்தம். அவ்வளவு தான். அவைகளைப் படித்து மனதில் பதிய வைத்துக்கொண்டான். அவனை உள்ளே அழைத்துச் சென்றார் சாமியார். அந்தக் குடிசையின் ஈசான மூலையில் பெரிய விளக்கு ஒன்று ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. அதன் அடியில் மரப்பலகை புதிதாகக் காணப்பட்டது. அதிலும் சில எழுத்துக்கள் இருந்தன.

ஆனால் வெங்கி அவற்றைப் படிக்க முயல்வதற்குள் மீண்டும் அவனைச் சுற்றி இருள் போலப் போர்த்திக்கொண்டது. தாறுமாறாக மீண்டும் தான் எங்கோ ஓடுவதை உணர்ந்தான் வெங்கி. ஆனால் இம்முறை பயமில்லை. சில விநாடிகளில் தலை கனக்க அப்படியே மயங்கிச் சரிந்தான்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 18:

தன்னைச் சுற்றிலும் மேகப்படலம் சுழல்வது போலத் தோன்றியது வெங்கிக்கு. ஏதேதோ பேச்சுக்குரல்கள் கேட்டன. ஆனால் பேசுவது எதுவும் புரியவில்லை. தான் எங்கே இருக்கிறோம்? எப்படி வந்தோம்? என யோசித்துப் பார்த்தான் ஒரே குழப்பமாக இருந்தது. ஏதோ ஒரு குதிரை தன்னைத் துரத்துவது போலத் தோன்ற சட்டெனக் கண் விழித்தான்.

"என்ன ஆச்சு வெங்கி உனக்கு?" என்று கேட்ட குரலை நிமிர்ந்து பார்த்தான். கவலையோடு திவ்யாவும் பாலாவும் இவனையே பார்த்தபடி நின்றிருந்தார்கள்.

"நீங்களும் இங்க வந்துட்டீங்களா? உங்களையும் சங்கிலி கருப்பசாமியோட குதிரை தான் கூட்டிக்கிட்டு வந்துதா?" என்றான்.

குழப்பத்தோடு பார்த்தார்கள் இருவரும்.

"இவன் என்ன இப்படி சம்பந்தமில்லாம பேசுறான் சாமி? என் கூடவே வந்தவன் திடீர்னு காணமப் போயிட்டான். அப்புறமாப் பாத்தா மண்டபத்துப் பக்கமா மயக்கமா கெடந்தான். இதெல்லாம் நித்யமல்லியோட வேலையா?" என்றான் பாலா கவலையோடு.

"இல்லப்பா! வனப்பேச்சி கோயில் இருக்குற சுற்று வட்டரத்துல கூட நித்யமல்லியால வர முடியாது. இது வேற. நான் தியானத்துல பார்த்தது உண்மைன்னு நினைக்கறேன். வனப்பேச்சி வெங்கிக்கு ஏதோ செய்தி சொல்லியிருக்கா. அவன் நிதானத்துக்கு வரட்டும். அப்புறமா கேக்கலாம்" என்றார் சித்தர்.

வெங்கி தலையைத் திருப்பிப் பார்த்தான். வனப்பேச்சியம்மன் கோயில் அழகாக கோபுரத்தோடு காட்சியளித்தது. அத்தோடு சிறு சிறு கடைகள் வேறு. மனித நடமாட்டமும் இருக்கவே தான் மீண்டும் 2021க்கே வந்து விட்டோம் எனப் புரிந்து கொண்டான். ஆனால் தான் உண்மையிலேயே 1521ஆம் ஆண்டுக்குப் போனோமா? இல்லை மயக்கம் வந்ததால் என் மனதில் தோன்றிய மாயத் தோற்றமா? இதைச் சொன்னால் என்னைப் பைத்தியம் என்பார்களோ? என யோசித்தபடி அமர்ந்திருந்தான்.

"இப்போ எப்படி இருக்கு வெங்கி? முதல்ல இந்த சோடாவைக் குடி." என்று லெமன் சோடவை நீட்டினாள் திவ்யா. அவள் முகத்தில் கவலை, பயம் எல்லாம் இருந்தது. அவள் மேல் அன்பு பெருகியது வெங்கிக்கு. இதைத்தான் விட்ட குறை தொட்ட குறை என்பார்களோ? போன ஜென்மத்தில் இணைய முடியாமல் போனதால் இந்த ஜென்மத்தில் என்னைத் தேடிக்கொண்டு வந்து விட்டாளோ? இவளுக்குத்தான் என் மேல் எத்தனை அன்பு? காதல்? பாலா மட்டும் என்ன? அவனது நட்பும் ஆழமானது அல்லவா? அதனால் தானே அடுத்த பிறவியிலும் எங்களால் நட்பாக இருக்க முடிந்தது? இவை எல்லாமே இறைவன் நடத்தும் திருவிளையாடல். இதில் என் பங்கை நான் சிறப்பாகச் செய்ய வேண்டும். செய்து முடித்தால் தான் என்னால் திவ்யாவைக் கல்யாணம் செய்து கொள்ள முடியும்.

"என்னடா இப்படி முழிக்குற? என்ன ஆச்சு உனக்கு? எதையாவது பார்த்து பயந்துட்டியா?" என்றான் பாலா அன்பாக.

எழுந்து அமர்ந்தான் வெங்கி.

"இங்க வெச்சு எதுவும் பேச வேண்டாம்ப்பா! என்னோட இருப்பிடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிருவோம். அது தான் நல்லது." என்றார் சாமிக்கண்ணு சித்தர். மக்கள் நடமாட்டமும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் நடமாட்டமும் அதிகரித்திருந்தன. ஒரு சிலர் இங்கே என்ன கும்பல் என வேடிக்கை வேறு பார்த்துக்கொண்டிருந்தனர். பேசாமல் கரிமாணிக்கம், பாலா இருவரும் கைத்தாங்கலாக எழுப்பினர் வெங்கியை.

"எனக்கு ஒண்ணுமில்ல! என்னால நல்லா நடக்க முடியும்" என்று சொல்லி விட்டு அவர்களது கைகளை உதறினான் வெங்கி.

"உங்களுக்கு வீடு இருக்குன்னு சொல்லவே இல்லையே? எங்க இருக்கு?" என்றார் கருமாணிக்கம்.

"அதை வீடுன்னு சொல்ல முடியாது. இருப்பிடம் அவ்வளவு தான். ஆனா ஒரளவு வசதியா இருக்கும். என்னைப் போல சித்தனுக்கு அதிக வசதி ஆகாதுப்பா." என்று கூறியபடி வழி காட்டி அழைத்துச் சென்றார். மண்டபத்திலிருந்து சற்றே தூரத்தில் ஒரு குடிசை போலத் தென்பட்டது. புதிதாக ஓலை வேயப்பட்ட குடிசை. வாயில் கதவு திறந்தே இருந்தது. அதைப் பார்த்ததும் மின்னல் வெட்டியது வெங்கியின் கண்களில்.

"இதே போல ஒரு குடிசை தானே நான் பார்த்தேன்? அதுவும் கிட்டத்தட்ட இதே இடத்தில் தானே பார்த்தேன்? அப்படியானால் நான் பார்த்தது மாயத்தோற்றம் இல்லை போல. சாமிக்கண்ணு சித்தர் யார்? ஒருவேளை அவர் தான் நான் பார்த்த சாமியாரோ?" என்று என்ணிக் கொண்டே சித்தரைப் பார்த்தான்.

"எல்லாத்துக்கும் விளக்கம் கிடைக்கும் வெங்கி. முதல்ல உள்ள வா" என்றார். அதே வார்த்தைகள். கோயில் இருக்கிறதா இல்லையா? என தலையைத் திருப்பிப் பார்த்தான். அழகான வண்ணங்கள் அடிக்கப்பட்ட கோபுரம் காட்சியளிக்க நிம்மதியானான். அனைவரும் உள்ளே போய் அமர்ந்து கொண்டனர். சற்று தள்ளி ஒரு குத்து விளக்கு மிகவும் பழைமையான பலகையின் மேல் வைக்கப்பட்டிருந்தது. அதன் சுடரொளி அந்த குடிசையை மஞ்சள் வெளிச்சத்தில் குளிப்பாட்டிக்கொண்டிருந்தது. அந்தக் குத்து விளக்கு, மரப்பலகை என எல்லாமே வெங்கியை யோசிக்க வைத்தது.

"வெங்கிக்கு என்ன ஆச்சு சாமி? ஏன் அவன் மயங்கி விழுந்தான்? அதோட பேசவே மாட்டேங்குறானே? பயமா இருக்கு சாமி" என்றாள் திவ்யா.

"கவலைப்பட ஒண்ணுமில்ல. அவன் இப்ப பெரிய பயணம் போயிட்டு வந்திருக்கான். அதுவும் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்னால போயிட்டு வந்திருக்கான். சரி தானா வெங்கி?" என்றார் சித்தர் புன்னகைத்தபடி.

"ஆமா சாமி" என்றான் வெங்கி. அவனை அதிசயமாகப் பார்த்தனர் அனைவரும்.

"பாலா நீ முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு. அதுல இருந்து ஆரம்பிச்சாத்தான் நல்லா விளங்கும்." என்றார் சித்தர்.

"உங்களை மண்டபத்துல விட்டுட்டு நானும் வெங்கியும் கூல் டிரிங்க் வாங்க நடந்து போயிக்கிட்டே இருந்தோம். ஏதேதோ பேசிக்கிட்டே போனோம். அப்ப திடீர்னு ஏதோ கறுப்பா வந்தா மாதிரி தெரிஞ்சது எனக்கு. ஒரே காத்தடிச்சது. என்னால சரியாவே பார்க்க் முடியல்ல. கொஞ்ச நேரம் நான் அப்படியே நின்னுட்டேன். கண் திறந்து பார்த்தா இவனைக் காணும். எங்கே போனான்னு தேடினேன். கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா இவன் அதே இடத்துல மயங்கி விழுந்து கிடந்தான். கரிமாணிக்கம் ஐயாவும் நானும் தான் இவனை மண்டபத்துக்குத் தூக்கிட்டு வந்தோம்." என்றான் கோர்வையாக.

"இப்ப உனக்கு என்ன நடந்ததுன்னு சொல்லுப்பா! அப்பத்தான் இவங்களுக்குப் புரியும்" என்றார் சித்தர்.

சொல்லத் தொடங்கினான் வெங்கி. குடிசையைப் பார்த்தது, அதில் இருந்த சாமியார் சொன்னது சங்கிலி கறுப்ப சாமியின் குதிரை, இறுதியாக அதன் மேல் இருந்த எழுத்துக்கள், என எல்லாவற்றையும் மெதுவாக ஆனால் நிறுத்தாமல் கூறினான். அவன் பேசப் பேசவே மற்றவர்களை அதிசயமும் ஆச்சரியமும் சூழ்ந்து கொண்டது. இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் இப்படியெல்லாம் நடக்குமா? நம்ப முடியவில்லையே? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில் வெங்கி கிட்டத்தட்ட 25 நிமிடம் காணாமல் போயிருந்தான். அப்படியானால் அவன் சொல்வது உண்மை தான். என எண்ணிக் கொண்டனர்.

"இப்பவாவது நீ நம்புறியா தம்பி?" என்றார் சித்தர் வெங்கியை நோக்கி.

"நிச்சயம் நம்புறேன் சாமி! கண்ணால பார்த்த பிறகும் நம்பலைன்னா நான் மனுசனே இல்ல" என்றான் உணர்ச்சியாக.

வேறு யரும் பேசவே இல்லை. அவரவர் எண்ணத்தில் ஆழ்ந்திருந்தனர்.

"உங்களுக்கு இப்ப என்ன செய்யணும்னு புரிஞ்சிருக்குமே?" என்றார் சித்தர்.

"உங்களை மாதிரி நாங்க அத்தனை புத்திசாலிகள் இல்ல சாமி! கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும்." என்றார் கரியமாணிக்கம்.

அவரை ஒரு மாதிரி பார்த்து விட்டுப் பேசினார் சாமிக்கண்ணு.

"உங்களுக்கு வழிகாட்டியிருக்காருப்பா சங்கிலி கருப்ப சாமி. சில குறிப்புக்கள் காட்டியிருக்காரு. அதைப் புரிஞ்சுக்கிட்டு அது படி செஞ்சீங்கன்னா நிச்சயம் நித்யமல்லியை அழிக்குற வழி கிடைக்கும்." என்றார்.

மௌனம் காத்தனர் அனைவரும்.

"என்னப்பா நீங்க? இன்னமுமா புரியல்ல? குதிரை மேல இருந்த துணியில சில வார்த்தைகள் இருந்ததுன்னு சொன்னே இல்ல? அந்த வார்த்தைகள் என்னென்ன?"

"பாவநாசம், அக்கினி மூலை பாண தீர்த்தம் இந்த மூணு வார்த்தை தான் என்னால படிக்க முடிஞ்சது சாமி"

"உம்! ஒருவேளை பாவநாசக் காட்டுக்குள்ள பாண தீர்த்த அருவி இருக்குற இடத்துக்குப் பக்கத்துல அக்கினி மூலையில ஏன் அந்த வாளும் குத்தீட்டுயும் புதச்சு வைக்கப்பட்டிருக்கக் கூடாது?"

"இருக்கலாம் சாமி! ஆனா அந்த விளக்குக்கு அடியில ஒரு புதுப்பலகை இருந்தது. அதுலயும் சில எழுத்துக்கள் தெரிஞ்சது. ஆனா நான் அதைப் படிக்கு முன்ன இங்கே வந்துட்டேனே? அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சா நமக்கு வேலை இன்னமும் ஈசி இல்ல?" என்றான் வெங்கி.

சித்தரது கண்கள் அந்த குடிலில் இருந்த விளக்கின் அடியை நோக்கின. மிகவும் அழுக்காக எண்ணெய்ப் பிசுக்கு சேர்ந்து பழையதாக ஒரு மரப்பலகை இருந்தது.

"இந்தப் பலகை இல்ல சாமி! அது ரொம்பவும் புதுசா இருந்ததுன்னு வெங்கி சொன்னானே?" என்றான் பாலா.

"ஏன்ப்பா! 1521ல புதுசா இருந்தது 500 ஆண்டுகளுக்குப் பிறகுமா புதுசாவே இருக்கும்? கொஞ்சம் யோசி பாலா" என்றார் கரியமாணிக்கம்.

அப்படீன்னா வெங்கி பார்த்த பலகை இது தானா? இதுல எழுத்துக்கள் இருக்கணுமே?" என்றாள் திவ்யா. பேசியவள் எழுந்து சென்று அந்த விளக்கின் அடியில் இருந்த பலகையை உற்றுப் பார்த்தாள். ம்ஹூம் எதுவும் தெரியவில்லை.

"இதுல எந்த எழுத்தும் இல்ல சாமி" என்றாள் ஏமாற்றமான குரலில்.

"இத்தனை எண்ணெய்ப்பிசுக்கு இருந்தா எழுத்து எப்படித் தெரியும்? முதல்ல நாம இந்த எண்ணெய்ப் பிசுக்கை எடுக்கணும். அப்பத்தான் நம்மால அதுல என்ன எழுதியிருக்குன்னு படிக்க முடியும்" என்றான் வெங்கி.

"உம்! ஏதாவது ஆசிட் வாங்கி ஊத்திப் பாப்போம். ஆசிட்ல எண்ணெய்ப் பிசிக்கு போயிரும்" என்றாள் சிவகாமியம்மாள்.

"எண்ணெய்ப் பிசுக்கும் போகும் அதோட எழுத்துக்களும் போயிரும். ஆசிட் கூடவே கூடாது. பேசாம உப்புக் காகிதத்தை வெச்சுத் தேய்ச்சுப் பார்க்கலாமா?" என்றார் கரியமாணிக்கம்.

"அப்ப மட்டும் எழுத்து போகாதா? என்ன சார் நீங்க?" என்றான் பாலா.

"இப்போ என்ன தான் வழி?" என்றான் வெங்கி.

"எலுமிச்சம் பழம் தான்ப்பா வழி. கொஞ்ச நேரம் ஆகும், உழைப்பும் தேவைப்படும். ஆனா நிச்சயாமா எழுத்துக்கள் மறையாது. நான் சொன்னபடி செஞ்சு பார்க்கறீங்களா?" என்றார் சித்தர்.

"சொல்லுங்க சாமி"

"25 எலுமிச்சம் பழம் வாங்கிக்குங்க அதை நல்லா பிழிஞ்சு சாறு எடுத்து ஒரு பாத்திரத்துல வெச்சிக்கிக்குங்க. அதோட புங்காங்காய் ஊற வெச்ச தண்ணீயையும் கலந்துக்குங்க. மெதுவா மென்மையான துணி வெச்சு அதை பலகை முழுக்க பூசிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு துணியால மெதுவா துடைங்க." என்றார்.

இதை விட நல்ல யோசனை இருக்க முடியாது என்பதால் அவர் சொன்ன பொருட்களை சேகரிக்கச் சென்றனர். நல்லவேளையாக பக்கத்தில் இருந்த நாட்டுமருந்து கடையில் புங்காங்காய் கிடைத்தது. குடிலில் எந்த விதமான பாத்திரங்களுமே இல்லை என்பதால் பிளாஸ்டிக் டப் ஒன்று வாங்கி அதில் குழாயிலிருந்து நீர் நிரப்பி புங்காங்காய்களை போட்டார் கரிமாணிக்கம். அதே நேரத்தில் பை நிறைய எலுமிச்சம் பழங்களோடு உள்ளே நுழைந்தனர் பாலாவும் வெங்கியும். திவ்யாவும் அவள் தாயும் பழைய மெல்லிய காட்டன் துணிகளை கொண்டு வந்தனர். நீரில் போட்ட புங்காங்காய்கள் நுரைத்துக்கொண்டிருந்தன. அவற்றை அவ்வப்போது கைகளால் கசக்கிக் கொடுக்கச் சொன்னார் சித்தர். கரிமாணிக்க அப்படியே செய்ய மேலும் நுரை வந்தது.

"எப்படியும் பத்து நிமிடம் ஆகும்." என்றார் சித்தர். மீண்டும் மௌனமாக அமர்ந்தனர்.

"நான் சில சந்தேகங்கள் கேக்கலாமா சாமி?" என்றான் வெங்கி.

புன்னகையால் கேட்கலாம் என்றார் சாமிக்கண்ணு சித்தர்.

"1521ல நான் பார்த்த சாமியார் நீங்க தானா? ஏன்னா உங்க குடில் இருந்த இடத்துல தான் அந்தக் குடிலும் இருந்தது. அதான் கேக்கறேன் சாமி" என்றான்.

எதிர்பார்ப்போடு அனைவரும் அவரை ஏறிட்டனர்.

"இல்லப்பா! அவர் வேற! அவர் மிகச் சிறந்த சித்த மகான். அவரோடு ஒப்பிட்டா நான் சின்ன எறும்பு தான். காலத்தைத் தாண்டி வாழும் ஆற்றலும், காலங்களைக் கடந்து போகும் ஆற்றலும் அவருக்கு உண்டு." என்றார்.

"அப்படீன்னா இந்தக் குடில்?"

"நீ நினைக்கிறது தவறுப்பா. அந்த மகான் சொன்ன வார்த்தைகளை நல்லா நினைவு படுத்திப் பாரு. இதே இடத்துல தான் வெனப்பேச்சியம்மான் கோயில் வரப்போகுதுன்னு சொன்னாரு இல்லியா?"

"ஆமா சாமி! அப்படீன்னா அந்த குடில் இப்ப கோயிலா மாறிடிச்சா?"

"ஆமாப்பா! நம்ம இந்திய நாட்டுல பல இடங்கள்லயும் பெரிய மகான்கள், ரிஷிகள் வாழ்ந்த இடங்கள் இப்ப கோயிலாத்தான் இருக்கு. இன்னும் சொல்லப் போனா இப்படி மக்கள் வழிபடுற இடங்கள் வேணும்னு தான் அவங்க நாட்டுக்குள்ள சில இடங்கள்ல வந்து தங்குனாங்க." என்றார்.

மலைப்பாக இருந்தது அனைவருக்கும். நம் நாடு தான் எப்படிப்பட்ட தேசம்? எத்தனை மகான்கள்? தங்கள் சுயநலம் பாராமல் மக்களின் நலனுக்காகவே வாழ்ந்தார்களே? அவர்கள் உதவி நமக்குக் கிடைத்திருக்கிறது. நிச்சயம் நம்மால் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும் என எண்ணிக் கொண்டிருந்தனர். பத்து நிமிடம் கடந்து விடவே திவ்யா வாங்கி வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் கப்பில் எலுமிச்சை சாற்றையும் புங்காங்காய் தண்ணீரையும் சேர்ந்தாள். நன்றாக நுரைத்து வந்தது. துணியில் அதனைத் தோய்த்து மிகவும் மென்மையாக அந்தப் பலகையைத் துடைக்க ஆரம்பித்தர் தாயும் மகளும். மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட அரை மணி நேரமாகத் துடைத்தும் பிசுக்கு போனதே தவிர எழுத்துக்கள் கண்ணில் படவில்லை. சோர்ந்து போய் விட்டனர் பெண்கள். இப்போது பாலா, கரியமாணிக்கம் மற்றும் வெங்கி களத்தில் இறங்கினர். அவர்கள் 20 நிமிடம் துடைத்ததும் பலகையின் நிறம் சற்றே வித்தியாசமாக ஆனது.

"வெங்கி! அதோ பாருடா! ஏதோ சில எறும்பு ஊறுறா மாதிரி எழுத்துக்கள் இருக்கு பாரு" என்று கத்தினான் பாலா. மற்றவர்களையும் ஆர்வமும் பதற்றமும் தொற்றிக்கொண்டது. பலகையைச் சுற்றி நின்று கொண்டனர். பாலா சொன்னது போலவே பலகையின் ஒரு ஓரத்தில் சில எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை தெளிவாகவே இல்லை. பலகையின் நிறமும் அந்த எழுத்துக்களும் ஒன்று போல இருந்ததால் அவர்களால் படிக்க இயலவில்லை. ஏமாற்றம் சூழ்ந்து கொண்டது.

"என்ன இது? நாம இவ்வளவு தூரம் முயற்சி செஞ்சும் எழுத்துக்களைப் படிக்க முடியலியே?" என்றாள் திவ்யா ஏமாற்றத்தோடு.

"முடியும்பா! அதுக்கும் நம்ம முன்னோர்கள் வழி செஞ்சிருக்காங்க" என்றார் கரியமாணிக்கம். அவரை நோக்கின அனைத்துக் கண்களும்.

"நான் தமிழ் படிச்சவன். சுவடிகள்ல இருக்குற எழுத்துக்களை நான் படிச்சிருக்கேன். சில சுவடிகள்ல இதே மாதிரி தான் எழுத்துக்கள் தெரியவே தெரியாது. அப்ப நாங்க மஞ்சப்பொடியில தண்ணி கலந்து அதை ஓலை மேல மெல்லத் தய்ப்போம். அப்ப எழுத்துக்கள் பளிச்சுனு தெரியும். அதையே நாம இப்பவும் செஞ்சா என்ன?" என்றார்.

அவரை கட்டிக்கொண்டான் பாலா. "சூப்பர் சார் நீங்க! இப்பவே போயி மஞ்சப்பொடி பாக்கெட் வாங்கிட்டு வரேன்" என ஓடினான். அவர் சொன்னபடியே மஞ்சள் தூளை தண்ணீரில் திக்காக குழைத்து பலகை மேல் தடவ எழுத்துக்கள் இருந்த இடத்தில் மஞ்சள் பொடி போய் தேங்கியது. ஆகையால் எழுத்துக்கள் பளிச்செனத் தெரிந்தன.

"நீங்கள் இதைப் படிக்கும் நேரம் நித்யமல்லி சிலரை வசப்படுத்தியிருப்பாள். வரும் பௌர்ணமியில் தான் அவளை அழிக்க முடியும். சங்கிலி கருப்பசாமியும், சொரிமுத்தையனாரும் உறையும் இடத்தில் ரகசியம் இருக்கிறது. அவளை அழிக்க அதுவே வழி. இளைஞர்களோடு தாய் ஒருத்தியும் செல்ல வேண்டும். நவரத்தினத்தின் பெயர் கொண்டவன் துணை புரிவான். வனப்பேச்சி வழி காட்டுவாள்" என்றிருந்தது.

"நித்யமல்லி சிலரை வசப்படுத்தியிருப்பான்னு போட்டிருக்கே? யாரா இருக்கும்?" என்றான் பாலா.

"இப்ப அது முக்கியமில்ல பாலா. இன்னைக்கு சதுர்த்தி. அப்படின்னான் இன்னமும் பௌர்ணமி வரதுக்கு 10 நாள் தான் இருக்கு. அதுக்குள்ள நாம வாளையும் குத்தீட்டியையும் கண்டு பிடிச்சு அவளை அழிக்குற வழியையும் கண்டு பிடிக்கணும். நேரமே இல்லை நமக்கு" என்றார் கரியமாணிக்கம்.

"முதல்ல பதட்டப்படுறதை விடுங்க. பலகையில இருக்குற செய்தியை நல்லாப் புரிஞ்சுக்குங்க." என்றார் சித்தர்.

அதே நேரம் நித்யமல்லி பல திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்தாள்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 19:

சென்னையிலிருந்து சற்றே தொலைவில் அமைந்திருந்தது ஒரு தென்னந்தோப்பு. தோப்பில் இருர்ந்த மரங்கள் பலவும் பராமரிக்கப்படாமல் காய்ந்து போய் இருந்தன. ஒரு சிலவற்றில் காய்கள் தென்பட்டன. மற்ற தோப்புக்களைப் போலில்லாமல் அது மதில் சுவர்களால் சூழப்பட்டு மிகவும் தனிமைப்படுத்தப்பட்டது போலிருந்தது. அதன் வெளியில் மிகப்பெரிய இரும்புக் கதவு. துருப்பிடித்திருந்தாலும் நல்ல உறுதியாகவே இருந்தது. அதில் பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. இந்த இடம் விற்பனைக்கு என்று போட்டு ஏதோ ஒரு செல் ஃபோன் எண் எழுதப்பட்டிருந்தது. அதன் எதிரே நின்றிருந்தனர் மல்லிகாவும் ரக்ஷிதாவும்.

"எப்படி உள்ள போறது?" என்று ரக்ஷிதா கேட்டு முடிக்குமுன் அவளையும் இழுத்துப் பிடித்தவாறு பறந்தாள் மல்லிகா. அடுத்த கணம் இருவரும் தோப்பின் உள்ளே நின்றிருந்தனர்.

"இத்தனை வருசம் ஆகியும் உன்னோட சக்தி மட்டும் குறையவே இல்ல" என்றாள் ரக்ஷிதா.

"குறையாது" என்றாள் மல்லிகா சுருக்கமாக. அவளது தோற்றமே வேறு மாதிரி இருந்தது. தலை முடி கலையவில்லை, கண்கள் சிவப்பாக இல்லை. ஆனாலும் அவளைப் பார்த்தவர்களுக்கு நெஞ்சில் பயம் ஊடுருவும். இருளும் பயமும் தன்னால் வந்து சூழ்ந்து கொள்ளும். அவளது கண்களை நேரிடையாகப் பார்க்க முடியாது. அப்படியே பார்த்தாலும் அரை வினாடிக்கு மேல் முடியாது.

"இங்க எதுக்கு வந்தோம்?" என்றாள் ரக்ஷிதா.

"சொல்றேன்." என்றவள் அந்தப் பகலிலேயே இருட்டாக இருந்த ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தாள். அவள் எதிரே அமர்ந்து கொண்டாள் ரக்ஷிதா.

"வெங்கியும், பாலாவும் எங்கே போயிருக்காங்கன்னே தெரியல்ல. அவங்களுக்கு பூர்வ ஜென்ம நினைவு வந்திருக்கும் இந்நேரம். அதனால அவங்களை எப்படி அழிக்கலாம்னு திட்டம் போடணும். அதுக்குத்தான் யாருமே தொந்தரவு செய்யாத இடத்துக்கு வந்தேன்." என்றாள் மல்லிகா. அவள் முகம் கொடூரமாக இருந்தது.

"நீ நித்யமல்லியாவும் நான் பொன் வண்டாகவும் இருக்கும் போதே நீ ஆதித்தனை சாகடிச்சிருந்தா இன்னைக்கு நமக்கு இந்த நிமைமை இல்லையே?" என்றாள் ரக்ஷிதா. அவளைக் கடுமையாக முறைத்தாள் மல்லிகா. கைகளில் மிகப்பெரிய புடைப்பு உண்டாகி அதிலிருந்து சீழும், ரத்தமும் வடியலாயிற்று ரக்ஷிதாவுக்கு.

"வலி தாங்க முடியல்ல நித்யமல்லி! என்னை சித்திரவதை செய்யுறதைத் தவிர உன்னால வேற எதுவும் உருப்படியாச் செய்ய முடியாதா?" என்றாள் பொன்வண்டு எரிச்சலோடு.

"என்னை யாரும் கிண்டல் செஞ்சா எனக்குப் பிடிக்காது. அதுவும் நான் செஞ்ச தப்பை சொல்லிக்காட்டினா பிடிக்கவே பிடிக்காது. அதுக்குத்தான் இந்த தண்டனை. " என்றாள் நித்யமல்லி கடுமையாக.

சற்று நேரத்தில் அந்தப் புடைப்பு மறைம்ந்து விட்டது.

"ஹூம்! மேல சொல்லு மல்லி" என்றாள் பொன்வண்டு எரிச்சலாக.

"போன தடவை செம்மலர் அவங்க கூட இருந்தா!. அவளோட அன்பின் சக்தி என்னோட சக்தியை விட அதிகமா இருந்தது. அதனால தான் என்னால அவனைக் கொல்ல முடியல்ல."

"சரி. ஆனா அவங்க உன்னோட கட்டை அவுத்து விட்டாங்க இல்ல? அப்பவாவது அவங்களைக் கொன்னிருக்கலாமே?"

தன் கைகளைக் குத்திக்கொண்டாள் நித்யமல்லி. நரம்புகளும், ரத்தமும் தெறித்தன. ஆனால் எல்லாமே வினாடிக்கும் குறைவான நேரத்துக்குத்தான். சமாளித்துக்கொண்டாள்.

"அப்பவும் அந்த பாலா வெங்கியோடவே இருந்தானே? அவங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சிருக்குற அன்பும் நம்பிக்கையும் என்னால உடைக்க முடியல்ல. அதுவே ஒரு பாதுகாப்பு அரணா மாறி அவங்களைக் காப்பாதிச்சு. எப்படியாவது அவங்க உயிரை எடுத்துடணூம்ன்னு தான் நானும் முயற்சி செஞ்சேன். ஆனா முடியல்ல" என்றாள் நித்யமல்லி.

"இப்ப அடுத்த திட்டம் என்ன?"

"என்னை இந்த பூமிக்கு அனுப்புன முதல் கடமை, இந்த பூமியில மனித இனமே இல்லாம ஆக்கணும். அதுக்குத் தடையா இருக்குறவங்க யாரா இருந்தாலும் அவங்களை நான் கொல்லணும், இல்லை வசியப்படுத்தி எனக்கு அடிமைகளா ஆக்கிக்கணும். இப்ப கொஞ்ச நாளா வெங்கியயியும் பாலாவையும் பாக்கவே முடியல்ல. எங்க இருக்காங்கன்னு கண்டு பிடிக்கவும் முடியல்ல. அது தான் எனக்கு கவலை."

"உன்னாலயே கண்டு பிடிக்க முடியல்லையா?"

"ஆமா பொன்வண்டு! அந்த சித்தரம்மா அதான் நாச்சியா அவளும், அவளோட ஜால்ரா ஒருந்த்தன் இருந்தானே வேம்புசாமி அவனும் சேர்ந்து தான் ஏதோ செய்யுறாங்களோன்னு நெனைக்கிறேன்."

"சித்தரம்மாவும் வேம்புசாமியும் இன்னமுமா இருப்பாங்க?"

"ஆதித்தனும், வேங்கையனும் வெங்கியாவும், பாலாவாகவும் திரும்ப வந்திருக்கும் போது இவங்க வரமாட்டாங்களா? ஆனா செம்மலர் பத்தி தான் ஒண்ணுமே தெரியல்ல. ஆனா அவளைத்தான் நாம குறி வைக்கணும்."

"ஒரு வேளை செம்மலரும் திரும்ப வந்து இவங்களோட சேர்ந்துட்டாங்கன்னா?"

"அதுக்கு ஒரே வழி தான் இருக்கு. அவங்களை இப்போதைக்கு புறக்கணிச்சுட்டு, நம்ம வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான். முதல் வேலையா புதுசா குழந்தைகள் இந்த பூமிக்கு வரதை நாம நிறுத்தணும். அதுக்கு ஆணும் பெண்ணும் சேரவே கூடாது. அந்த மாதிரி செய்யணும். எவ்வளவு உயிரை அழிக்க முடியுமோ, அவ்வளவு அழிக்கணும். அப்படி செஞ்சா நிச்சயம் வெங்கி நம்மை அழிக்க முயற்சி செய்ய வெளிய வந்து தான் ஆகணும். அப்ப அவனை நான் ....." பாதியில் நிறுத்தி விட்டுச் சிரித்தாள் நித்யமல்லி. அவளது தோற்றம் கொடூரமான விலங்கைப் போல இருந்தது.

"கேக்கவே பயங்கரமா இருக்கு. ஆனா எனக்குப் பிடிச்சிருக்கு" என்று சொல்லி பயங்கரமாகச் சிரித்தாள் பொன்வண்டு. அவளது சிரிப்பில் இணைந்து கொண்டாள் நித்யமல்லி.

"முதல்ல புதுசா கல்யாணம் ஆனவங்களைக் குறி வெப்போம். அவங்க சந்தோஷமா இருக்கக் கூடாது. நம்மால பெண்களை நெருங்க முடியாது. இயற்கையோட பாதுகாப்புல அவங்க இருக்காங்க. அதனால ஆண்களை குறி வெப்போம். கணவனுக்கு மனைவி மேல வெறுப்பு வரணும். வெறுப்புலயும் கோபத்துலயும் அவங்க மனைவியைக் கொலை செய்யக் கூடத் துணியணும். அந்த அளவு நாம வெறுப்பை வளக்கணும்." என்றாள்.

"உம்! அது சுலபம் தான்."

"ஆமா! நீயும் நானும் தனித்தனியாப் போய்த்தான் இதைச் செய்யப் போறோம். ஒரு நாளைக்கு குறைஞ்சது அஞ்சு தம்பதிகளாவது பிரியணும். தெரிஞ்சுதா?"

"தெரிஞ்சது மல்லி! ஆனா அவங்களை எப்படித் தேர்ந்தெடுக்க?"

"ஆண்கள் மட்டும் தனியா ஏதாவது பொருள் வாங்க இரவு நேரத்துல வெளிய வருவாங்க. அப்ப நீ அவங்களை உன் வசப்படுத்திக்கோ. அதுக்கான சக்தியை நான் உனக்குத் தரேன். வசப்படுத்தின பிறகு அவங்க மனைவி மேல வெறுப்பு வர வைக்கணும். அவங்க மனைவி அன்பாப் பேசினாலே அவங்களுக்கு வெறுப்பு வரணும். கிட்ட வந்தா, தொட்டா இப்படி எது அவங்க மனைவி செஞ்சாலும் அந்த ஆண்கள் வெறுப்பை மட்டும் தான் காமிக்கணும். அதனால அவங்க மனைவிகளுக்கு கணவன் மேல சந்தேகம் வரும். அது போதாதா அவங்களைப் பிரிக்க?"

"நல்ல யோசனை தான் மல்லி! அப்படி செஞ்சா பெண்கள் மனசு உடைஞ்சு போயிருவாங்க. கணவன் மேல அவங்களுக்குக் கோபம் வரும். வெருப்பும் வரலாம். வாக்குவாதம் முத்தும். அப்ப கணவன் மனைவியைத் தனியாக் கூட்டிக்கிட்டுப் போயி கொலை செய்யப் பாக்கணும். அதானே உன் திட்டம்?"

"ரொம்ப சரி! இதுல எத்தனை பெண்களோட உயிர் போகுதுன்னு பாக்காதே! ஆண்கள் உயிர் போனாலும் கவலைப்படாதே! நாமாளா சாகடிக்குறதை விட அவங்களா சாகுறது நமக்கு வேலையைக் குறைக்கும்." என்றாள்.

"முதல்ல இந்த ஊர்ல இருந்தே அதாவது சென்னையில இருந்து ஆரம்பிப்போம். ஏதாவது செய்தி வெங்கியை எட்டுச்சுன்னா அவன் உடனே இங்க வருவான். அப்ப அவனைக் கொல்லுறது ஈசியா இருக்கும்" என்றாள் பொன்வண்டு.

"உனக்கும் மூளை இருக்கே?" என்றாள் நித்யமல்லி.

"ஆனா எனக்கு ஒரு சந்தேகம்? நாம ரெண்டே பேர் தான். இப்படி எத்தனை தம்பதிகளைப் பிரிச்சு....இந்த உலகத்துல கோடிக்கணக்கான பேர் இருக்காங்களே?" என்றாள் பொவ்ண்டு.

"என்னோட சக்தியை நீ இன்னமும் புரிஞ்சுக்கல்ல. நீயும் நானும் ஒரு ஆளைக் குறி வெச்சு அவங்க உடம்புல நம்ம நகக்கண் வழியா விசத்தை ஏத்திடுவோம். அவங்க முழுக்க முழுக்க வெறுப்பை மட்டுமே கக்குற ஆட்களா மாறிடுவாங்க. அப்புறம் அவங்க 2 பேருக்கு நகக்கண் மூலமா விசத்தை ஏத்துவங்க. இப்படிப் பரவும். 10, 100ஆகும். 100 ஆயிரம்னு இப்படி வேகமாகப் பரவும். யாருக்குமே என்ன காரணம்னு தெரியாது." என்றாள் நித்யமல்லி.

"ரொம்ப நல்ல திட்டமா இருக்கே? அப்ப நாம ஒரு ஆளைக் குறி வெச்சாப் போதும். அப்புறம் மனுஷங்களுக்கு தானா அந்த விசம் பரவ ஆரம்பிச்சிரும். இல்லியா?"

"அதே தான்! ஆனா நமக்கு இன்னொரு முக்கிய வேலையும் இருக்கு. வர பௌர்ணமிக்குள்ள நாம எப்படியாவது வெங்கி, பாலா செம்மலர் இவங்களைக் கண்டு பிடிச்சுக் கொல்லணும். இல்லைனா நமக்குத்தான் ஆபத்து." என்றாள் நித்யமல்லி.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது.

"ஒரு ரியல் எஸ்டேட் ஆளு தான் வரான். இவனும் புதுசாக் கல்யாணமானவன் தான். இவன் கிட்ட இருந்தே நாம வேலையை ஆரம்பிப்போம். இவன் கண்ணுக்கு உன்னைத் தெரியாம ஆக்கிடறேன். நான் மட்டும் தான் இருக்கேன்னு அவன் நினைச்சுக்கட்டும். நான் எப்படி அவனை வசப்படுத்தறேன்னு பார்த்துக்கோ." என்றாள்.

தலையசைத்தாள் பொன்வண்டு. தனது துப்பட்டாவை ஒரு கூடாரம் போலச் செய்தாள். அதனுள்ளே தான் பொன்வண்டு நின்று கொண்டிருந்தாள். யாரோ நடக்கும் காலடிச் சத்தம் கேட்டது. வந்தவன் அங்கே ஒரு பெண் இருப்பதைப் பார்த்து திகைத்து அப்படியே நின்று விட்டான்.

"என்னை ஒண்ணும் செஞ்சிராதீங்க! என்னை விட்டிருங்க" என்று அழுதாள் நித்யமல்லி.

"நான் உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன். பயப்படாதே! ஆமா நீ யாரு? கேட் பூட்டியில்ல இருக்கு? நீ எப்படி உள்ளே வந்த?" என்றான்.

ஓவென அழுதாள் நித்யமல்லி.

"என்னை மூணு பேர் துரத்திக்கிட்டு வந்தாங்க. அவங்க கையில நான் கெடச்சிருந்தேன்னா என் நிலைமை அதோ கதி தான். அப்ப எனக்கிருந்த வேகத்துல கதவுல கால் வெச்சு எம்பிக் குதிச்சுட்டேன். பாருங்க கால்ல காயம்" என்று காட்டினாள். உள்ளங்கலாலில் ஓரே ரத்தமாக இருந்தது.

"சே! பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாமப் போச்சே நம்ம நாட்டுல? ஏம்மா? வந்தவங்க யாரு? உனக்குத் தெரிஞ்சவங்களா? போலீஸ்ல புகார் குடுப்போமா?" என்றான்.

"ஐயோ! அதெல்லாம் வேண்டாம்ங்க! எனக்கு இன்னமும் கல்யாணமே ஆகல்ல. போலீஸ், புகார்னா அப்புறம் என் எதிர்காலமே கேள்விக்குறியா ஆயிடும்" எனப் பேசியபடியே அவனை நெருங்கி வந்தாள்.

"சரிம்மா! உன் வீடு எங்க இருக்குன்னு சொல்லு. நான் கொண்டு போயி விட்டுடறேன். நீ ரொம்ப பயந்து போயிருக்க" என்றான் அவன்.

"உங்க பேரு என்ன சார்? என் பேரு மல்லிகா. உங்களை மாதிரி நல்ல ஆம்பிளைங்க கூட இந்த உலகத்துல இருக்காங்களா?" என்றாள். பேசிக்கொண்டே நெருங்கிச் சென்று அவனது கரங்களைப் பிடித்தாள். அவளது ஆட்காட்டி விரலின் நகம் நீண்டு அவனது சதையைத் துளைத்தது.

"என் பேரு நடராஜன்...ஸ்ஸ்ஸ்ஸ்...ஆஆ...என்னம்மா செய்யுற? நகம் வெட்ட மாட்டியா?" என்றான். அடுத்த கணம் அவனது கண்கள் செருகின, கால்கள் தள்ளானிடன.

"உன் மனைவி பேர் என்ன?"

"அவ பேரு நளினி. என் மேல அவளுக்கு ரொம்ப அன்பு."

" ஹாஹா! நீ சரியான லூசு நடராஜன். தான் நெனச்சதை சாதிச்சுக்க அவ உன்னை நல்லா யூஸ் பண்ணிக்கறா. அவ சிரிக்குறது, பேசுறது எல்லாமே உன் கிட்ட இருந்து பணத்தைக் கறக்கத்தான். உன்னை நல்லா மயக்கி வெச்சிருக்கா. நீயும் அவளை ரொம்ப நல்லவன்னு நெனச்சு அவ கிட்ட அன்பு காட்டுறியே?" என்றாள் நித்யமல்லி.

"அப்படியா? நளினி எங்கூட பணத்துக்காகத்தான் இருக்காளா?"

"ஆமா! அவ உன்னைக் கொஞ்சுறதும், குழையிறதும் எல்லாமே உன்னை தனக்கு அடிமையா ஆக்காத்தான். உன்னை தனக்கு அடிமையா ஆக்கிக்கிட்டு உங்கம்மா, அப்பா எல்லாரையும் கொல்லத் திட்டம் போட்டிருக்கா. அப்பத்தானே உங்க வீடு அவ கைக்கு வரும்? வீடு கைக்கு வந்தாத்தானே அவளோட கள்ளக்காதலனோட அவ ஜாலியா வாழ முடியும்?"

"ஆ...அப்படியா? அவ்வளவு மோசமானவளா நளினி?"

"பின்ன? அவ உன்னை இந்தத் திட்டத்தோட தான் கல்யாணமே செஞ்சுக்கிட்டா. அநேகமா இன்னைக்கே உன்னைக் கொலை செஞ்சாலும் ஆச்சரியப்பட முடியாது. அவ சமைச்சதை சாப்பிடாதே! உன்னை கொஞ்சிக்கிட்டு கிட்ட வந்தா நம்பாதே! எல்லாமே போலி, நடிப்பு. அவ உன்னைக் கோலை செய்யுறதுக்கு முன்ன நீ அவளைக் கொலை செஞ்சிரு." என்றாள்.

அதைக் கேட்டவன் ஆத்திரமானான்.

"இத்தனை நாள் என்னை ஏமாத்திக்கிட்டா இருந்தா அவ? அவளை என்ன செய்யறேன் பாரு" என்றான்.

"அங்க தான் நீ தப்பு பண்ற நடராஜா! அவ உன்னை நம்ப வெச்சு ஏமாத்தினா இல்ல? அதே மாதிரி நீயும் அவளை நம்ப வெச்சு ஏமாத்த வேண்டாமா?"

"என்னை என்ன தான் செய்யச் சொல்ற?" என்றான் விரக்தியாக.

"அவ உன்னை ந்ம்ப வெச்சு ஏமாத்தினா மாதிரி நீயும் அவளை நம்ப வெச்சு ஏமாத்து. சின்னச் சின்ன விஷயங்களுக்கு அவ கூட சண்டை போடு. அப்பத்தான் அவ சுய ரூபம் உனக்குத் தெரியும்."

"அப்படியா?"

"ஆமா! அவ நல்லவ! உன்னை மனசுக்காக மட்டும் தான் நேசிக்குறான்னா அவ பதிலுக்கு உன் கூட சண்டை போட மாட்டா. உன்னைத் திட்ட மாட்டா. ஆனா அவ திட்டுனா இல்லை சண்டை போட்டான்னு வெச்சுக்கோ நான் சொன்னது உண்மைன்னு நீ புரிஞ்சிக்கலாம்." என்றாள் நித்யமல்லி.

மேலும் அரை மணி நேரம் பேசிப் பேசியே நடராஜன் மனதில் அவன் மனைவியைப் பற்றிய கேவலமான அபிப்பிராயத்தை உண்டாக்கினாள். இவற்றையெல்லாம் பொன்வண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தாள். நடராஜன் போய் விட்டான்.

இரு நாட்களுக்குப் பிறகு செய்தித்தாளில் இளம் மனைவி கொலை. என்ற செய்தி வெளி வந்தது.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 19:

நாளுக்கு நாள் செய்தித்தாள்களில் மனைவி கொலை, கணவன் சாவு போன்ற செய்திகள் அதிகம் வந்து கொண்டே இருந்தன. குறைந்தது தினம் இரு பெண்களாவது கொல்லப்பட்டனர். இந்தச் செய்திகள் சாமிக்கண்ணு சித்தர் வரை எட்டியது.

"இந்தப் பலகை சொன்ன செய்தி மாதிரி நித்யமல்லி தன்னோட ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாப்பா! இங்க பாரு. இது வரைக்கும் 10 பொண்ணுங்க, அதுவும் புதுசாக் கல்யாணமானவங்க செத்திருக்காங்க. அவங்க கணவனே கொலை பண்ணியிருக்கான்."

"இது எப்படி நித்யமல்லியோட வேலைன்னு சொல்றீங்க சாமி?" என்றார் கரியமாணிக்கம்.

"உனக்கு நினைவு இல்லையா? அஷ்டகிரக சேர்க்கையின் போது அவ பூமிக்கு வந்த நோக்கமே இந்த பூமியில பெண்கள் இனமே இல்லாம செஞ்சு அதன் மூலமா இந்த உலகத்தை நிர்மூலமா ஆக்குறது தான். அதைத்தான் அவன் செய்ய ஆரம்பிச்சிருக்கா."

"புரியலையே?" என்றான் வெங்கி.

"புதுசா எந்தக் குழந்தையும் பிறக்காமப் பார்த்துக்குறாப்பா! கணவன் மனைவிக்குள்ள வெறுப்பை உண்டாக்கி, கணவனே மனைவியைக் கொலை செய்ய வெக்கிறா. நாம சீக்கிரம் வேலையை ஆரம்பிக்கணும். இல்லைன்னா இன்னும் அவ எத்தனை உயிரை பலி வாங்குவளோ?" என்றார் சாமிக்கண்ணு சித்தர் கவலையாக.

"இப்பவே நாங்க ரெடி தான். ஆனா என்ன செய்யணும்னு சொல்லுங்க" என்றன் பாலா.

"அங்க தானே நாம அப்படியே நிக்கறோம். வனப்பேச்சியம்மான் கோயிலுக்கு வந்தோம், அங்க செம்மலரையும் பார்த்தோம். ஆனா அதுக்குப் பிறகு என்ன செய்யன்னு தெரியலியே நமக்கு?" என்றான் வெங்கி.

"இல்லை வெங்கி. நாம சரியா யோசிக்கல்லன்னு தான் நினைக்கிறேன்." என்றார் கரியமாணிக்கம்.

"என்ன சார் நீங்க சொல்றது? நாம என்ன யோசிக்கல்ல?" என்றான் வெங்கி சண்டைக்கு ரெடியாக.

"எதுக்கெடுத்தாலும் கோபப்படாதே வெங்கி. உன்னை மட்டும் அவர் சொல்லல்ல. முதல்ல நாம இது வரைக்கும் என்ன தெரிஞ்சிருக்கு? அதுல இருந்து மேற்கொண்டு எப்படி செய்யுறதுன்னு தெரியுமான்னு யோசிப்போம்" என்றார் சித்தர் சமாதானமாக.

"குதிரை மேல இருந்த எழுத்துல பாவநசம், அக்கினி மூலை அப்புறம் பாண தீர்த்தம் இது தான் இருந்தது. பலகையில இருந்த எழுத்துல நித்யமல்லி அழிக்க வேண்டிய தருணம் வந்தாச்சுன்னு இருந்தது." என்றான் வெங்கி.

"உம்! அதாவது இப்ப நமக்கு ரெண்டு விஷயம் தெரியணும். முதல்ல சங்கிலி கருப்பசாமியும் , சொரி முத்தையனாரும் கொடுத்த வாளும் குத்தீட்டியும் எங்க மறைச்சு வைக்கப்பட்டிருக்குன்னு தெரியணும். அதுக்குப் பிறகு, அதை வெச்சு நித்யமல்லியை எப்படி அழிக்குறதுன்னு தெரியணும். இல்லியா?" என்றார் சித்தர்.

"ஆமா சாமி! அதே தான்."

"எனக்கென்னவோ பாவநாசத்துக்குப் போனா எல்லாத்துக்குமே விடை கிடைக்கும்னு தோணுது." என்றார் சாமிக்கண்ணு சித்தர்.

"எனக்கும் அதே தான் தோணுது சாமி. அப்ப பேசாம நாம பாவநாசத்துக்குக் கிளம்பிட வேன்டியது தான். ஆனா அதுக்கு முன்னால நித்யமல்லியால அழியுற உசிர்களை காப்பாத்த முடியாதா?" என்றார் கரியமாணிக்கம்.

"நம்மால இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது மாணிக்கம். ஆனா வாள், குத்தீட்டி இது ரெண்டும் கையில கெடச்சாலே அவளுக்கு சக்தி குறைஞ்சிரும். அப்புறம் அவ வசியத்துல இருக்குறவங்க விடுபட்டிருவாங்க" என்றார்.

"சாமி! பாவநசாத்துக்கு நாங்களும் வரணுமா?" என்றாள் சிவகாமியம்மாள்.

"ஆமாம்மா! கட்டாயம் வரணும். உங்க மகளுக்கு இதுல முக்கிய பங்கு இருக்கு. நான் முன்னவே சொன்னேனே?"

"சொன்னீங்க சாமி! ஆனா நாங்க லேடீஸ். நீங்க தங்குற இடத்துல எங்களால எப்படித் தங்க முடியும்?"

"அம்மா! நீங்க நினைக்குறா மாதிரி நாங்க கோயில மண்டபத்துலயோ சத்திரத்துலயோ தங்க மாட்டோம். பாவநாசம் பக்கத்துல அம்பாசமுத்திரம்னு ஒரு ஊர் இருக்கு. அது டவுன் மாதிரி. அங்க லாட்ஜ் இருக்கும். அதுல ஒரு ரூம்ல நீங்களும், திவ்யாவும் பாதுகாப்பா இருக்கலாம்" என்றார் கரியமாணிக்கம்.

"சரி சாமி!" என்றாள் சிவகாமியம்மாள்.

"இன்னைக்கே டிக்கெட் போட்டுடலாமா?" என்றான் பாலா.

"இல்லேப்பா! டிரெயின்லயோ பஸ்லயோ போக வேண்டாம். ஏதாவது வண்டி எடுத்துக்குங்க. அதுல போங்க" என்றார் சாமிக்கண்ணு சித்தர்.

"அப்ப நீங்க வரலியா சாமி?"

"இல்லப்பா! என் வேலை இங்க தான். என்னோட எல்லையை தாண்டி நான் வரக்கூடாது. "

"அப்படின்னா எங்களுக்கு யாரு வழி காட்டுவாங்க ?" என்றான் வெங்கி.

"கவலை படாதேப்பா! தெய்வ அருள் உங்களுக்கு வழி காட்டும். சித்தரம்மா துணை வருவாங்க. இப்போ வனபேச்சி அம்மன் கால்ல வெச்ச தாயத்தை உங்களுக்கு கட்டி விடறேன். எல்லா ஆபாத்துல இருந்தும் அவ உங்களைக் பாதுகாப்பா. " என்று சொல்லி விட்டுக் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து வனப்பெச்சியம்மன் காலடியில் இருந்த மஞ்சளும் சிவப்பும் கலந்த கயிற்றை அனைவருக்கும் கட்டி விட்டார்.

திவ்யாவுக்கும் அவளது தாய்க்கும் மிகவும் பயமாக இருந்தது. இது வரை அவர்கள் இது போல காடுகளுக்குப் போனதே இல்லை. ஏதோ சுற்றிப் பார்க்க போவது என்பது வேறு! என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும் என எதுவுமே தெரியாமல் காட்டில் அலைவது எவ்வளவு புத்திசாலித்தனமான காரியம்? என எண்ணிக் கொண்டார்கள்.

"நீங்க வண்டியில போகும் போதே ரொம்ப எச்சரிக்கையா இருங்க. யாரையும் நம்ப வேண்டாம். முக்கியமா நித்யமல்லி விஷயத்தை யார் கிட்டயும் சொல்ல வேண்டாம். என்ன?" என்றார் சித்தர் சாமிக்கண்ணு.

"ஏன் சாமி அப்படி? அப்படிச் சொன்னா நமக்கு நிறைய நல்லவங்க உதவி கிடக்கும் இல்ல?" என்றாள் சிவகாமியம்மாள்.

"அம்மா! முதல்ல நீங்க ஒண்ணு புரிஞ்சுக்குங்க! உங்க பொண்ணுக்கு பைத்தியம்னு தான் எல்லாரும் சொன்னாங்க. நீங்க கூட ஏதோ ஆவி பேயின்னு தான் நினைச்சீங்க. ஆனா உங்க கண்ணு முன்னால நடந்த விஷயங்கள் உங்களை நம்ப வெச்சது இல்லியா?"

"ஆமா சாமி"

"இப்ப இந்த விஷயங்களை நீங்க வெளிய சொன்னா நிறைய பேரு நம்ப மட்டாங்கன்றது ஒரு பக்கம். ஆனா தேவையில்லாம குழப்பங்களும் பிரச்சனைகளும் வரும். இதைப் பத்தி விவாதங்கள், வாக்கு வாதங்கள்னு கிளம்பும். இதெல்லாம் நம்மை திசை திருப்புமே தவிர உதவாது. ஆனா அதே நேரத்துல நித்யமல்லிக்கு உதவி செய்யுறவங்க எண்ணிக்கை கூடவும் வாய்ப்பு உண்டு."

"என்ன சாமி சொல்றீங்க?"

"ஆமாம்ப்பா! இந்த உலகத்துல பேராசைக்கும் பொறாமைக்கும் பஞ்சமே இல்ல. நித்யமல்லியால நிறைய தங்கம் வைரம்னு கொடுக்க முடியும். அதைக் காட்டி வளைச்சுப் போட்டா நமக்கு எதிரிங்க அதிகமாவாங்களே தவிர குறைய மாட்டாங்க." என்றார்.

சிவகாமியம்மளை அதிகம் பேச விடக் கூடாது எனத் தீர்மானித்துக்கொண்டான் வெங்கி.

கரியமாணிக்கத்துக்குத் தெரிந்த ஒரு வண்டியை வாடகைக்குப் பிடித்தார்கள். பாவநாசம் வரை போக வேன்டும், அதன் பிறகு திரும்பி விடலாம் எனச் சொன்னதுமே ஒப்புக்கொண் டார் அந்த டிரைவர்,

"எனக்கு சொந்த ஊரே அம்பாசமுத்திரம் தானுங்க! உங்களை பாவநாசத்துல விட்டுட்டு என் வீட்டுல ஜாலியா நாலு நாள் இருப்பேன். திரும்ப வரும் போது அப்படியே உங்களைக் கூட்டிக்கிட்டு வந்துட்றேன். ஆனா பாவநாசத்துல இறங்குனதும் பணம் கைக்கு வந்துரணும். போற போது தனி வாடகை" என்றான் செந்தில்.

ஒப்புக்கொண்டு கிளம்பினார்கள். சித்தர் சாமிக்கண்ணு பல அறிவுரைகளைக் கூறினார். அதோடு பாவநசத்துக்குப் போன உடன் கன்னிமார் துறைக்குத்தான் செல்ல வேண்டும். பிறகு சொரிமுத்தையன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். என்றார். இந்த இரு இடங்களைத் தவிர வேறு எங்கும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார். எதற்கும் இருக்கட்டும் என ஒரு சிறிய செல்ஃபோன் வாங்கி அவரிடம் கொடுத்தான் பாலா.

"சாமி! இதை வெச்சுக்குங்க. எங்களுக்கு ஏதாவது சந்தேகம்னா கேக்குறேன்." என்றான். சிரித்தபடியே பாலா கொடுத்ததை வாங்கிக்கொண்டான். வழியில் சாப்பிடவென ஏகப்பட்ட ஐட்டங்களை எடுத்து வைத்துக்கொண்டார்கள் திவ்யாவும் அவளது தாய் சிவகாமியும். புளிசாதம், உருளை பொரியல், தவிர பழங்கள், இரவுக்கு என இட்டிலி சட்னி என எடுத்துக்கொண்டதில் பெரிய மூட்டையாகி விட்டது. வெங்கி கோபப்பட்டான். அவனை அமைதிப்படுத்தினான் பாலா.

"இப்ப சொல்லுவீங்க தம்பி! ஆனா பசிக்கும் போது என்ன செய்வீங்க?" என்றாள் சிவகாமியம்மாள் கோபமாக.

"வழியில எத்தனை ஹோட்டல் ஒருக்கு? அதுல சாப்பிட வேண்டியது தானே? அதுக்காகவா இவ்வளவு பெரிய மூட்டை?" என்றான் அதை விடக் கோபமாக.

என்னடா இது? கிளம்பும் முன்பே இப்படி மனஸ்தாபம் ஏற்படுகிறதே? ஒற்றுமையாக இருந்தால் தானே எல்லாமே நல்லபடியான நடக்கும் என எண்ணிக் கொண்டார் கரியமாணிக்கம். பாலா வெங்கியை சமாதானம் செய்ய, கரியமாணிக்கம் சிவகாமியம்மாளை சமாதானம் செய்தார். ஒருவழியாக பயணம் தொடங்கியது. டிரைவருக்குப் பக்கத்தில் கரியமாணிக்கமும், பின் சீட்டில் ஒன்றில் சிவகாமியம்மாளும் திவ்யாவும், மற்றொரு சீட்டில் பாலாவும் வெங்கியும் என பயணப்பட்டார்கள். சற்று உற்சாகமாகவே இருந்தது பாலாவுக்கு. எப்படியும் எங்களால் நித்யமல்லியை அழித்து விட முடியும். தெய்வ அருள் இருக்கிறது என எண்ணிக் கொண்டான்.

டிரைவர் செந்தில் பேசுவதில் அதிகம் விருப்பம் உள்ளவன் போல. ஏதேதோ பேசிக்கொண் டே வந்தான்.

"வர வர நாட்டுல எங்க பார்த்தாலும் சாவு, கொலை இப்படியே இருக்கே சார்? இதெல்லாம் எங்க போயி முடியுமோ?" என்றான்.

சுருக்கென்றது அவர்களுக்கு.

"ஏன்பா அப்படிச் சொற?"

"என்னத்தைச் சொல்ல சார்? எங்க வீட்டுக்குப் பக்கத்து வீடு. அந்தப் பையன் ஒரு பொண்ணை கிட்டத்தட்ட 3 வருசமா லவ் பண்ணுனான். அந்தப் பொண்ணும் பண்ணிச்சு. வீட்டுல பெரியவங்க எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. கல்யாணத்துக்குத் தேதி கூட குறிச்சாச்சு."

"அப்புறம் என்னப்பா ஆச்சு?"

"ஐயோ! பயங்கரம் சார்! கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னுக்க இருந்தே பையனுக்கும், பொண்ணுக்கும் ஏதோ சண்டை வந்திருக்கு போல. சரி ஏதோ சண்டை போட்டுக்கறாங்க. சின்னஞ்சிறிசுங்க! கல்யாணமானா தானா சரியாயிரும்னு பெரியவங்க பேசாம இருந்துட்டாங்க. ஆனா பாருங்க கல்யாணத்துக்கு மூணு நாள் இருக்கும் போது அந்தப் பையன் பொண்ணை வெட்டிட்டு, தானும் குத்திக்கிட்டு இறந்து போயிட்டான்"

"ஐயையோ! ஏன்?"

"கொடுமைசார்! அந்தப் பொண்ணு நடத்தையில அவனுக்கு சந்தேகம் வந்திரிச்சாம். அதனால தான் இப்படி செஞ்சேன்னு எழுதி வெச்சிருக்கான் சார்! இப்படியெல்லாம் கூட நடக்குமா சார்? என்னவோ நாட்டுகே பேய் பிடிச்சது மாதிரி ஆயிடிச்சு" என்றான்.

இவை அனைத்துமே நித்யமல்லியின் வேலை தான் என சொல்ல முடியாமல் அமைதி காத்தார்கள் மற்றவர்கள்.

"சார்! எங்க ஊரு ரொம்ப பழைமையான ஊரு. அங்க அகத்திய முனிவரே வந்திருக்காருன்னு சொல்வாங்க. அப்படிப்பட்ட ஊருல இப்ப என்னென்ன நடக்குது?" என்றான் மீண்டும்.

யாரும் எதுவும் பேசவில்லை.

"பாவநாசத்துல சாமி கும்பிடப் போறீங்களா சார்?"

"ஆமாம்ப்பா!" என்றார் கரியமாணிக்கம்.

"சொரிமுத்தையனார் கோயிலுக்குப் போகப் போறோம்." என்றாள் சிவகாமியம்மாள்.

"ரொம்ப நல்லது! ரொம்ப சக்தி வாய்ந்த சாமி அவுரு. அவரைப் பார்த்துட்டு அப்படியே அம்பாசமுத்திரத்துல இருக்குற அகஸ்தியர் கோயிலையும், வண்டி மறிச்சியம்மன் கோயிலையும் வந்து கும்பிடுங்க" என்றான் செந்தில்.

வண்டி மறிச்சி என்றதும் மனதில் ஏதோ ஒன்று அதிர்ந்தது வெங்கிக்கு. புகையாக ஏதோ நினைவுகள் வந்தன. மிகப்பிரம்மாண்டனமான படுக்கை வாட்டத்தில் இருக்கும் ஒரு பெண் கடவுளின் சிலையும், பக்கத்திலேயே ஆண் கடவுளின் சிலையும் மனக்கண்ணில் வந்து போனது. அந்தக் கோயிலில் தான் வந்து எதையோ மறைத்து வைத்தது போன்ற உணர்வு. பாலாவின் கையை நிமிண்டினான்.

"என்னடா?"

"அந்த அம்மன் எப்படி இருப்பாங்கன்னு கேளு" என்றான் பாலாவுக்கு மட்டும் கேட்கும்படியாக.

"ஏன்ப்பா செந்தில? அந்த வண்டி மறிச்சியம்மன் கோயில் எங்க இருக்கு? அம்மன் எப்படி இருப்பாங்க? உக்காந்த கோலமா? நின்ற கோலமா?" என்றான்.

தனது ஊரின் கோயிலைப் பற்றிக்கேட்கவும் உற்சாகமாகி விட்டான் செந்தில்.

"வண்டி மறியம்மன் ரொம்ப அபூர்வமான சாமி சார்! அவங்க படுக்கை வாட்டத்துல தான் இருப்பாங்க. ரொம்பவே பெருசா இருக்கும் சிலை. கருங்கல் சிலையில்லை வெறும் சுண்ணாம்பு தான். ஆனா பாருங்க பல ஆண்டுகாலமா அப்படியே இருக்கு" என்றான்.

கேட்டதும் வெங்கிக்கு மீண்டும் புகைப் படலம் போல காட்சிகள் தெரிந்தன.

திவ்யா கண்ணீரோடும், மனம் நிறைய சோகத்தோடும் அந்தக் கோயிலில் நிண்றிருப்பது போலவும் , சிவப்பு வண்ணச் சேலை ஒன்றை அம்மனுக்குப் போர்த்துவது போலவும் தெரிந்தது. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? போன ஜென்மத்தில் நான் அங்கே போயிருக்கிறேனா? ஏன் அத்தனை சோகம்? எதற்காக சிவப்பு வண்ணப் புடவையை போர்த்தினாள் திவ்யா? நானும் பாலாவும் கூட இல்லையே?" என்று எண்ணிக் கொண்டான்.

"ஏன் தம்பி! வண்டி மறிச்சியம்மான் கோயில் ரொம்ப பெருசா?"

"ரொம்ப வருஷம் அந்த அம்மனுக்கு மேற் கூரை கூட இல்லாமத்தான் இருந்தது. இப்பத்தான் கட்டியிருக்காங்க. மெயின் ரோட்டுலயே தான் இருக்கும்"

"பக்கத்துல சந்தை உண்டுல்ல?" என்றாள் திவ்யா.

"ஆமா மேடம்! உங்களுக்கு எப்படி தெரியும்? இதுக்கு முன்னாடி வந்திருக்கீங்களா?" என்றான்.

"ரொம்ப முன்னாடி வந்ததா நினைவு" என்றான் திவ்யா. கரியமாணிக்கத்துக்கும் பாலாவுக்கும் வெங்கிக்கும் புரிந்து போனது. அவளை நோக்கினார். ஆமெனத் தலையசைத்தாள். அதே நேரம் எதுவும் பேச வேண்டாம் என சைகையும் காட்டினான் வெங்கி.

"வண்டி மறிச்சியம்மன் ரொம்ப கோவமான தெய்வம் சார். ஆனா நாம அவளே கதின்னு சொல்லி அவ கிட்ட வழி கேட்டோம்னா எப்படிப்பட்ட கஷ்டத்துல இருந்தும் நம்மைக் காப்பாத்திருவா" என்றான்.

"அப்படியா?"

"ஆமா சார்! அதுக்கு ஆதாரமா எங்க ஊர்ல ஒரு கதை சொல்லுவாங்க! சொல்லட்டா?" என்றான்.

அனைவரும் ஆர்வமானார்கள்.

"ரொம்ப காலம் முன்னால பஸ், கார் வசதியெல்லாம் கிடையாது. சந்தைக்கு சாமான் எடுத்துட்டு வரவங்க மாட்டு வண்டியில தான் எடுத்துட்டு வரணும். அப்படி ஒரு நாள் நிறைய வண்டிங்க சந்தைக்கு வரும் போது வாட்டசாட்டாமான ஒரு பெண்மணி வழியில நின்னுக்கிட்டு வண்டியை மறிச்சாங்களாம். "எனக்கு காணிக்கை குடுத்தா! உங்க எல்லா வண்டியையும் நான் காப்பாத்துவேன். அதோட நீங்க கையுல காசோட வீட்டுக்கு பத்திரமா போற வரைக்கும் காவல் வருவேன்னு" சொல்லியிருக்கு அந்தம்மா. ஆனா யாரும் மதிக்கல்ல. அன்னைக்குன்னு பார்த்து பயங்கரமான காத்தும் மழையும் அடிச்சுருக்கு. வியாபாரிங்க பல பேரோட உசுருக்கே ஆபத்து வந்திருக்கு. கொண்டு வந்த பொருளெல்லாம் மண்ணுல போயி வீணாப் போயிரிச்சு."

"அடப்பாவமே?" என்றாள் சிவகாமியம்மாள்.

" அப்பந்தான் அவங்களுக்கு புத்தி வந்திருக்கு. வழியில பார்த்தமே ஒரு பொம்பளை அவங்க சாமி தான்னு புரிஞ்சுக்கிட்டு அவளைத் தேடிப் போயி வணங்கி மன்னிப்புக் கேட்டாங்க. அதோட அடுத்த தடவை சந்தைக்கு வரும் போது அவளுக்கு முதல்ல காணிக்கை கொடுத்துட்டு தான் சந்தைக்கே போறதுன்னும் சொல்லியிருக்காங்க. அதுல இருந்து இன்னி வரைக்கும் சந்தை கூடுற போது வியாபாரிங்க அவளுக்கு முதல் காணிக்கயா அவங்க கொண்டு வந்த பொருளைக் கொடுத்துட்டுத்தான் வியாபாரத்துக்கே போவாங்க." என்றான்.

"ரொம்ப சக்திவாய்ந்த சாமியா இருக்கும் போல இருக்கே?" என்றாள் சிவகாமியம்மள்.

"ஆமாம்மா! அது மட்டும் இல்ல, கிட்டத்தட்ட ஐநூறு அறநூறு வருசத்துக்கு முன்ன, இங்க ஏதோ பெரிய பிசாசு ஒண்ணு இருந்ததுன்னும், அதை மூணு பேரு சேர்ந்து அழிச்சாங்கன்னும் சொல்லுவாங்க. அதுக்கும் வண்டி மறிச்சியம்மான் உதவி செஞ்சதா சொல்லிக்கிடுவாங்க. அது மட்டுமில்லீங்கம்மா, வண்டி மறிச்சியம்மான் சிலையோட காலடியில இருந்து சொரிமுத்தையன் கோயிலுக்கு ஒரு சுரங்கபாதை இருந்ததுன்னும் சொல்லுவாங்க. அதெல்லாம் நிஜமா பொய்யான்னு நாம யாரைக் கேக்க முடியும்?" என்றான் செந்தில்.

பாலா, திவ்யா, வெங்கி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதில் ஆயிரம் அர்த்தங்ங்கள்.

"செந்தில் தம்பி! ரியர் வியூ மிர்ரர்ல பாரு. கொஞ்ச நேரமா அந்த வண்டி நம்மை ஃபால்லோ செஞ்சுக்கிட்டே வருது" என்றார் கரியமாணிக்கம்.

அனைவரும் திரும்பினர். ஆம் அவர் சொன்னது உண்மை தான். ஒரு சிறிய கார் அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. வேகமாக ஓட்டினால் அந்தக் காரும் வேகமாக வந்தது. மெதுவாகச் சென்றால் அந்தக் காரும் ஸ்லோவானது.

அனைவரும் பயத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் போது கத்தினாள் திவ்யா.

"ஐயோ! டிரைவர்! முன்னால ஒரு பெரிய பஸ்" என்று அவள் கத்திய அடுத்த நொடி டிரைவர் ஸ்டியரிங்க் வீலை கை போன போக்கில் வளைக்க ரோட்டை விட்டு வெளியே மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு பருத்த மரத்தில் பெரும் சத்தத்தோடு மோதியது கார்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 20:

டிரைவர் பதட்டத்தில் வளைத்ததில் கார் பெரும் சத்தத்தோடு ஒரு பெரிய மரத்தில் மோதி நின்றது. முன்னால் இருந்த கண்ணாடி சில்லு சில்லாகத் தெறித்து அந்தப் அகுதி முழுவதும் ஒரே கண்ணாடித்துண்டுகள். நல்லவேளையாக டிரைவர் கண்களை மூடிக் கொண்டதில் கண்களைத் தவிர முகத்தின் மற்ற பாகங்களில் கண்ணாடிச் சில்லுகள் குத்தி நின்றன. ஒரு சில விநாடிகள் யாருக்கும் எதுவும் புரியவேயில்லை. சிவகாமியம்மாள் முன்னால் இருந்த சீட்டில் மோதி அப்படியே மயக்கமாகி இருந்தாள். திவ்யா உருண்டு விழுந்து கிடந்தாள். இதில் அதிகம் பாதிக்கப்படாதவர்கள் பாலாவும், வெங்கியும் தான். பாவம் கரியமாணிக்கம் அவரது உடலெங்கும் ஒரே கண்ணாடித் துண்டுகள்.

ஒரே நேரத்தில் பின் கதவைத் திறந்து கொண்டு ஓடி வெளியில் வந்தார்கள் பாலாவும், வெங்கியும். பயம், பதட்டம் என உடலெங்கும் வியர்வை பெருக்கெடுத்தது. அவர்களை நோக்கி வந்த பேருந்தைக் காணவேயில்லை.

"பாலா! பஸ் எதுத்தாப்புல வந்ததால தானே செந்தில் ஸ்டியரிங்க் வீலை வளைச்சாரு? பஸ்ஸே இல்லியே?" என்றான்.

"டேய்! அதைப் பத்தி அப்புறம் பார்க்கலாம்டா! முதல்ல எல்லாரையும் ஆஸ்பத்திரி கூட்டிக்கிட்டுப் போகணும். யாருக்கு என்ன ஆச்சுன்னே தெரியல்ல" என்று கத்தினான் வெங்கி. ஓடிப்போய் முதலில் சிவகாமியம்மாளையும் திவ்யாவையும் கவனித்தனர். நல்லவேளை திவ்யாவுக்கு அடிபடவில்லை. வெங்கியின் உதவியில் எழுந்து விட்டாள்.

"ஐயோ! அம்மா! அம்மா! உனக்கு என்ன ஆச்சு?" என்று கத்தினாள் திவ்யா சிவகாமியம்மாளைப் பார்த்ததும்.

"உஷ்! கத்தாதே திவ்யா! சாதாரண மயக்கம்னு தான் தோணுது. அதிகம் அடிபடல்ல. நீயும் பாலாவும் மெல்ல அவங்களை வேனை விட்டு வெளியே எடுங்க. இதோ தண்ணி பாட்டில்ல கொஞ்சம் தண்ணி இருக்கு. அதைக் கொடுங்க. நான் இவங்க ரெண்டு பேரையும் பாக்கரேன்." என்றான் வெங்கி.

அவன் சொன்னபடியே சிவகாமியம்மாளை மெல்ல வெளியே அழைத்து வந்தனர். மயக்கம் தெளிந்து விட்டது. ஆனால் பாவம் டிரைவரும், கரியமாணிக்கமும். முகமெல்லாம் ஒரே ரத்தம். அதோடு மோதிய அதிர்ச்சி வேறு. கதைவைத் திறந்ததும் கரியமாணிக்கம் அப்படியே சரிந்து விழுந்து விட்டார். ஒரு கணம் இதயமே நின்று விடும் போலாகி விட்டது வெங்கிக்கு. நல்ல வேளையாக கண்ணிமைகள் அசைந்தன.

"திவ்யா! முதல்ல சாருக்குக் கொஞ்சம் தண்ணி குடு. நான் டிரைவர் செந்திலைப் பார்க்கறேன். பாலா நீ 108க்கு ஃபோன் பண்ணு" என்று கத்தினான். அப்படியே அவர்கள் செய்ய செந்திலை பார்த்தான்.

"சார்! என்னை ஆஸ்பத்திரி கூட்டிக்கிட்டுப் போங்க. ஒரே வலி. தலையில நல்ல அடி வேற. எனக்கு சின்னக் குழந்தைங்க இருக்கு சார்! என்னைக் காப்பாத்துங்க சார்!" என அழுதான் செந்தில்.

"சேச்சே! என்ன செந்தில் நீங்க? நீங்க எத்தனை தைரியமான ஆளு? இப்படி மனசு தளரலாமா? உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல ஆம்புலம்ன்ஸ் வந்துரும். கவலைப் படாதீங்க." என்று ஆறுதல் சொன்னான் வெங்கி.

"சார்! பத்து வருசமா வண்டி ஓட்டுறேன். லாரி, பஸ் இப்படி எல்லாமே ஓட்டியிருக்கேன். ஆனா இந்த மாதிரி ஆக்சிடெண்ட் ஆனது இது தான் முதல் தடவை. என் மேல தப்பே இல்ல சார்" என்றான் அழுகையின் ஊடே.

"யார் மேலயும் தப்பு இல்ல செந்தில். கண்டதையும் நெனச்சுக் கவலைப் படாதீங்க." என்று சொல்லி விட்டு மெல்ல அவனை ஆசுவாசப்படுத்தினான். கை கால்களில் அதிகம் அடியில்லை. நல்லவேளையாக ஏர் பேக் வெளி வந்த்தால் நெஞ்சில் அடிபடாமல் தப்பித்துக்கொண்டான்.

"என்னடா? ஆம்புலன்ஸ் வருதா இல்லையா?" என்றான் வெங்கி அவசரமாக.

"இன்னும் அஞ்சே நிமிசத்துல வருந்துவாங்கடா!" என்றான்.

பாலா சொன்னபடியே ஐந்தே நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து அனைவரையும் ஏற்றிச் சென்றது. பாலாவுக்கும் வெங்கிக்கும் காயங்கள் அதிகம் இல்லையென்றாலும் தலையில் அடிப்பட்டுள்ளதா? என ஸ்வேன் எடுத்தார்கள். நல்லவேளையாக எதுவும் இல்லை. மேலாக இருந்த காயங்களுக்கு மருந்து போட்டுக் கட்டி விட்டார்கள். அதே போல சிவகாமியம்மாளுக்கும் கூட வெறும் அதிர்ச்சி மயக்கம் தான். நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்டால் சரியாகி விடும் என உறக்கத்துக்கு ஊசி போட்டிருந்தார்கள்.

டிரைவருக்கும் கரியமாணிக்கத்துக்கும் தான் சரியான அடி. கண்ணாடித்துண்டுகள் நிறையக் குத்தியிருந்ததால் எல்லாவற்றையும் நீக்கி சரி செய்ய ஆப்பரேஷன் செய்தாக வேண்டும் எனச் சொல்லி விட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்தது ஆப்பரேசன். இறுதியில் இனி உயிருக்கு பயமில்லை என்ற நல்ல வார்த்தைகளோடு டாக்டர்கள் போய் விட்டனர்.

"முகத்துல ஆப்பரேசன் செஞ்சிருக்காங்க. அதனால இன்னும் பத்து நாளைக்கு பேண்டேஜ் கட்டுப் போட்டாகணும். சுத்தமா தண்ணியே படக் கூடாது. அதோட இந்த மருந்துகளும் குடுக்கணும். இல்லைன்னா முகத்துல இருக்குற காயம் சீழ் பிடிச்சிரும்." என்றாள் ஒரு நர்ஸ்.

"என்னடா இப்படிச் சொல்றாங்க? கரியமாணிக்கம் குடும்பம் எங்கே இருக்கு? அவங்களை எப்படி தொடர்பு கொள்ள? இது எதுவுமே நமக்குத் தெரியாதே? அதோட செந்தில் வேற? என்ன செய்ய?" என்றான் பாலா கவலையாக.

"எனக்கும் ஒரே குழப்பமாத்தான் இருக்கு பாலா. செந்திலாவது பரவாயில்ல. அவன் செல் ஃபோன்ல இருந்து அவன் ஒய்ஃப் நம்பர் எடுத்து அவங்களை இங்கே வரச் சொல்லிடலாம். ஆனா கரியமாணிக்கம் விஷயம் தான் என்ன செய்யன்னு தெரியல்ல" என்றான் வெங்கி.

இரு நண்பர்களும் ஆஸ்பத்திரியின் முகப்பில் இருந்த ஒரு வேப்ப மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

"முதல்ல செந்தில் வீட்டுக்கு தகவல் சொல்லுவோம்டா! அவங்களுக்குச் சொல்லாம இருக்குறது தப்பு" என்று சொல்லி விட்டு சட்டைப் பையில் தேடினான்.

"செந்தில் ஃபோனை நான் அப்பவே எடுத்து வெச்சுக்கிட்டேன் பாலா. ஆனா ஒய்ஃப் நம்பரை எப்படி கண்டு பிடிக்குறது?"

"லாஸ்ட் டயல் என்ன நம்பர் இருக்கோ அதைக் கூப்பிடு. அவங்க கிட்ட செந்தில் ஒய்ஃப் நம்பர் கேளு" என யோசனை சொல்லிக்கொடுத்தான் பாலா. லாஸ்ட் டயல் நம்பர் ராஜி என்று இருந்தது. அழைத்ததும் மூன்றாவது ரிங்கில் எடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணிடம் விஷயத்தைச் சொன்னான் வெங்கி.

"ஐயையோ! அவரு எங்க வீட்டுக்காரர் தாங்க. இப்ப அவருக்கு எப்படி இருக்கு?" என்று அழுகையோடு ஒலித்தது குரல். அதில் ஏராளமான பயம் வேறு.

"பயப்பட ஒண்ணுமில்லம்மா! உசிருக்கு ஆபத்து இல்ல. ஆனா முகத்துல ஒரே காயம். கட்டுப்போட்டிருக்காங்க. நீங்க இங்க வரீங்களா?" என்றான் வெங்கி இதமாக.

"இப்பவே கெளம்பிட்டேங்கண்ணா! நான் வர வரைக்கும் அவர் கூடவே இருங்க. எங்கே வரணும்?"

இடத்தைச் சொன்னா. வெங்கி.

"எங்க அண்ணனும், அப்பாவும் கூட வருவாங்க. அது வரைக்கும் பார்த்துக்குங்க": என்று மீண்டும் சொல்லி விட்டு ஃபோனை வைத்தாள் அந்தப் பெண்.

"ஒரு பிரச்சனை முடிஞ்சது. கரியமாணிக்கம் விஷயமாத்தான் என்ன செய்யன்னே தெரியலியே" என்றான் வெங்கி. அப்போது திவ்யாவும் வந்து சேர்ந்து கொண்டாள். அவளது கைகளிலும், முகவாயிலும் கட்டுப் போடப்பட்டிருந்தது.

"நீ ஏன் வந்தே திவ்யா? உங்கம்மாவோட இருக்க வேண்டியது தானே?" என்றான் பாலா.

"அம்மா நல்லா தூங்குறாங்க பாலா. அதான் வந்தேன்" என்றாள்.

"கரியமாணிக்கத்தைப் பத்தித்தான் பேசிக்கிட்டு இருந்தோம் திவ்யா. அவரோட வீட்டுக்கு ஃபோன் பண்ணி யாரையாவது வரச் சொல்லணும். ஆனா...." என்று இழுத்தான் வெங்கி.

"என்ன ஆனா? அவங்க வர வரைக்கும் நாம தான் பார்த்துக்கணும் வெங்கி. நமக்காகத்தானே அவர் வந்தாரு?" என்றாள் திவ்யா.

"நான் அதுக்குச் சொல்லல்ல திவ்யா. அவருக்கு உடம்பு குணமாக எப்படியும் பத்து நாளாவது ஆகும்னு நர்சு சொன்னாங்க. ஆனா நமக்கு இருக்குறதே மொத்தமே ஆறு நாட்கள் தானே? இன்னும் ஆறே நாள்ல பௌர்ணமி வந்துருமே திவ்யா? என்ன செய்ய?" என்றான் வெங்கி கவலை தோய்ந்த குரலில்.

யாரும் எதுவும் பேசவில்லை. வேப்பமரம் காற்றில் ஆடும் சத்தம் மட்டுமே கேட்டது. இந்த கோர விபத்து நடந்ததிலிருந்து பாலாவுக்கும், திவ்யாவுக்கும் வேறு எந்த நினைவுமே இல்லை. ஆகையால் வெங்கி சொன்ன உடன் தான் தாங்கள் இருக்கும் சூழ்நிலையின் கனம் புரிந்தது.

"அவரை விட்டுட்டு நாம மட்டும் போக வேண்டியது தான். வேற என்ன செய்ய முடியும்?" என்றான் பாலா மெல்லிய குரலில்.

"ம்ச்! அது எப்படி முடியும் பாலா? சித்தர் சொன்னதை மறந்துட்டியா? அவரும் நம்ம கூட சேர்ந்தா தான் நம்மால நித்யமல்லியை அழிக்க முடியும்." என்றான் வெங்கி. மீண்டும் மௌனம் சூழ்ந்தது அந்த இடத்தை. அரசு மருத்துவமனை என்றாலும் மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட்டிருந்தது அது. கூட்டம் அதிகம் இல்லை. மாலை மயங்கி இரவு வரத் தொடங்கும் நேரம். சுத்தமாக உணவு என்பதையே பார்க்கவில்லை அவர்கள். வெங்கியும் பாலாவும் மிகவும் சோர்ந்து காணப்பட்டனர்.

"முதல்ல நீங்க போயி ஏதாவது சாப்பிட்டுட்டு வாங்க. உங்க முகமே நல்லா இல்ல" என்றாள்.

"இந்த நேரத்துல போயி சாப்பிடச் சொல்றியே? உனக்கு மனசாட்சியே இல்லையா?" என்றான் வெங்கி கோபமாக. அவனை அமைதியாகப்பார்த்தாள் திவ்யா.

"சரி! சாப்பிடாதே! நீ சாப்பிடாம இருக்குறதால நம்ம பிரச்சனை எல்லாம் தீர்ந்திருமா சொல்லு? இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிரும். நான் எங்கம்மா கூட ராத்திரி தங்கிருவேன். நீங்க ரெண்டு பேரும் என்ன செய்வீங்க? பாவநாசத்தை நோக்கிப் போகணும்னு முடிவு செஞ்சாக்கூட அதுக்கு வண்டி வேணும் இல்ல?" என்றாள்.

"திவ்யா சொல்றது தான் சரி! வெறும் வயத்தோட இருந்தா எந்த யோசனையும் வராது. முதல்ல சாப்பிடுவோம். அப்புறமா தங்குறதைப் பத்தி யோசிக்கலாம்." என்றான் பாலா. திவ்யாவும் பசியோடு இருக்கிறாள் என்பதால் மூவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தனர். சற்று தூரத்தில் ஒரு சிறிய கடை சூடாக பஜ்ஜி, போண்டா போட்டுக்கொண்டிருந்தாள் கடைக்காரி. ஆளுக்கு ரெண்டு பஜ்ஜி, ரெண்டு போண்டா சாப்பிட்டு விட்டு டீயும் குடித்த பிறகு தெம்பு வந்தது மூவருக்கும்.

"அக்கா! நாங்க வெளியூருக்குப் போய்க்கிட்டு இருந்த வண்டி ஆக்சிடெண்ட் ஆயிர்ச்சு. இன்னைக்கு ராத்திரி மட்டும் இவங்க ரெண்டு பேரும் தங்குறதுக்கு நல்ல இடம் ஏதாவது கிடைக்குமா சொல்லுங்க" என்றாள் திவ்யா அந்தக் கடைக்காரியிடம்.

மூவரையும் ஏற இறங்கப் பார்த்தாள் அந்தப் பெண்மணி.

"நீ இவங்க கூடத்தான் தங்குவியா?" என்றாள்.

"இல்லக்கா! எங்கம்மா ஆஸ்பத்திரியில இருக்காங்க. அவங்க கூட நான் இருந்துப்பேன்." என்றாள்.

"சரி! என் தம்பி வீடு அதோ தெரியுதே அது தான். ரெண்டு ரூம் தான். நீங்க அவன் கூட தங்கிக்கலாம். ஆனா பணம் குடுக்கணும். 300 ரூவா" என்றாள்.

சம்மதித்துத்து அட்வான்சாக 150 ரூபாயும் கொடுத்து விட்டு மெல்ல மருத்துவமனை நோக்கி நடந்தனர். கரியமாணிக்கத்தையும், செந்திலையும் சாதாரண வார்டுக்கு மாற்றியிருந்தனர். செந்தில் மயக்க மருந்தின் தாக்கத்தில் தூங்கிக்கொண்டிருக்க, கரியமாணிக்கம் கண் விழித்துப் படுத்திருந்தார். முகமெங்கும் பெரிய கட்டு. கண்கள் மட்டுமே தெரிந்தன. இவர்களைப் பார்த்ததும் கை அசைத்து அருகில் அழைத்தார்.

"யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லையே?" என்றார் மிகவும் மெதுவாக.

"இல்ல சார்! நீங்க கவலைப்படாம ஓய்வு எடுத்துக்குங்க!" என்றான் பாலா.

"பாலா! நான் பார்த்தேனப்பா! நான் பார்த்தேன்" என்றார் கிசுகிசுப்பான குரலில்.

"என்ன சார் பாத்தீங்க?"

"நித்யமல்லி மிகப்பெரிய பஸ்ஸா மாறிட்டாப்பா, அவ தான் அவ தான்...." முடிக்க முடியாமல் தடுமாறினார். முகத்தில் இருந்த பேண்டேஜிலிருந்து லேசாக ரத்தம் வர பதட்டமானான் பாலா.

"சார்! இப்ப எதைப் பத்தியும் யோசிக்காதீங்க! முதல்ல நீங்க முழுசா குணமாகணும். எல்லாத்தையும் அப்புறம் யோசிக்கலாம். உங்க வீட்டுக்கு தகவல் சொல்ல வேண்டாமா? யாரைக் கூபிடணும் சொல்லுங்க?" என்றான் பாலா.

"எனக்கு யாரும் இல்லப்பா! அதனால யாருக்கும் சொல்ல வேண்டாம். ஆனா....இன்னும் ஆறே நாள்ல பௌர்ணமி வருதே? நான் இப்படிக் கெடக்கேனே?" என்றார். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்தது. தனது கைகளால் அதைத் துடைத்து விட்டான் வெங்கி.

"மனசை அலை பாய விடாதீங்க! வனப்பேச்சியம்மன் நம்மைக் கைவிட மாட்டா. உங்களுக்கு நல்லா ஆயிரும். நாம கட்டாயம் நித்யமல்லியை அழிக்கத்தான் போறோம்." என்றான் வெங்கி இதமாக.

அவனது கைகளைப் பிடித்துக்கொண்டார் கரியமாணிக்கம்.

"என்னைப் பத்திக் கவலைப் படாதீங்க! நான் பொழைச்சுக்குவேன். ஆனா நமக்கு இப்ப டயமில்ல. நீங்க ரெண்டு பேரும் திவ்யாவைக் கூட்டிக்கிட்டு பாவநாசம் நாளைக்கே கிளம்பிருங்க. வாளும், குத்தீட்டியும் எங்க இருக்குன்னு விவரம் தெரிஞ்சா போதும் நமக்கு. போறீங்களா?" என்றார்.

"சார்! முதல்ல நீங்க பேசுறதை நிறுத்துங்க, பேசப் பேச பாருங்க முக காயத்துல இருந்து ரத்தம் வருது. உங்களை இந்த நிலையில விட்டுட்டு நாங்க எங்கயும் போக மாட்டோம். இப்ப நல்லா தூங்குங்க. விடிஞ்சதும் யோசிப்போம்." என்று கண்டிப்பாகச் சொன்னான் வெங்கி. நர்ஸ் வந்து ஊசி போட கண்கள் செருக உறங்கி விட்டார் கரியமாணிக்கம். செந்திலையும் பார்த்து விட்டு அவனது மனைவியும் உறவினர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்லி விட்டு நடந்தனர்.

யாரோ தங்களைப் பின் தொடர்வது போலிருக்க நின்று நிதானித்தான் வெங்கி. பின்னால் திரும்பினான். யாருமே இல்லை. ஆனால் பாலா பாட்டுக்க நடந்து கொண்டே இருந்தான். அவனுக்கு எதுவும் தோன்றவில்லை போலும்.

"பாலா! யாரோ நம்மை ஃபல்லோ பண்றா மாதிரி இல்ல?"

"உளறாதே! யாரும் இல்ல" என்றான் பாலா. கடைக்கார அம்மாள் சொன்ன அந்த வீட்டுக்குள் நுழைந்தனர் இருவரும். விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி, அதோடு களைப்பு வேறு, எல்லாம் சேர்ந்து கொள்ள படுத்ததும் உறங்கிப் போனார்கள் இருவரும். திடீரென யாரோ தொட்டு உலுக்கும் உணர்வு வர விழித்துக்கொண்டான் வெங்கி. அறையிலிருந்த இரவு விளக்கு மெல்லிய வெளிச்சத்தை சிந்திக்கொண்டிந்தது. அந்த மங்கிய வெளிச்சத்தில் டிரைவர் சீருடை அணிந்த ஒருவன் வெங்கியின் கால் மாட்டில் அமர்ந்திருந்தான்.

"யாரு நீங்க? உங்களுக்கு என்ன வேணும்? எப்படி உள்ள வந்தீங்க?" என்றான் வெங்கி கோபமாக.

"என் பேரு வாசு! குளோபல் இண்டர்னேஷனல் கம்பெனி முதலாளி ராகுல் கார்த்திகேயனோட டிரைவர் நான். அவர் உங்களைப் பார்க்கணும்னு வந்துருக்காரு. கொஞ்சம் வரீங்களா?" என்றான்.

"சார்! ராத்திரி மணி ரெண்டு. இந்நேரத்துல அவரு எதுக்கு இங்க வரப்போறாரு. அதுவும் போக, அவரு எதுக்கு என்னை இங்க வெச்சுப் பார்க்கணும்? போய்யா பேசாம. பொய் சொல்ல ஒரு அளவில்லையா?" என்றான் வெங்கி.

"ரொம்ப உஷாரா இருக்குறதா நெனப்போ? நீ போன மாசம் அவர் கம்பெனிக்கு மேனேஜர் வேலைக்கு அப்ளை பண்ணியிருந்தே இல்ல? அது விஷயமாத்தான் அவர் உன்னைப் பார்க்க வந்திருக்காரு. எழுந்து வா நீ" என்றான் எரிச்சலாக.

அதிசயத்தில் மூழ்கிப்போனான் வெங்கி. அவன் குளோபல் இண்டர்னேஷனல் கம்பெனியில் மேனேஜர் பதவிக்கு அப்ளை செய்திருந்தது உண்மை தான். அது பாலாவுக்கே தெரியாதே? அப்படியானால் உண்மையிலேயே வந்திருப்பது ராகுல் கார்த்திகேயன் சார் தானா? அவருக்கு எப்படி நான் இங்கே இருப்பது தெரியும்? என யோசித்தான்.

"என்ன யோசிக்குற?"

"இல்ல, அவருக்கு நான் இங்க இருக்குறது.....எப்படி.....?"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன்னை கூட்டிக்கிட்டு வரச் சொன்னாரு. நீ தானே வெங்கடேஷ்? எழுந்து வா" என்றான் மீண்டும் அந்த டிரைவர். போய்த்தான் பார்ப்போமே என்ற ஆர்வம் உந்த எழுந்தான். பாலா விழிக்கவே இல்லை.

தெரு விளக்கின் வெளிச்சத்தில் ஒரு மிகப்பெரிய வெளிநாட்டுக்கார் ஒன்று நின்றிருந்தது.

அத்தியாயம் 21:

ஒரு பெரிய தேர் போல அந்தக் கார் நிலவொளியில் நனைந்தபடி நின்றிருந்தது. கதவுகள் மூடியிருந்தன. பின்னால் திரும்பிப் பார்த்தான் வெங்கி.

"சார் உள்ள தான் இருக்காரு! போ" என்றான் அந்த டிரைவர். காரை நெருங்கும் போதே வெளி நாட்டு செண்டின் மணம் தூக்கியது. பின் பக்கக் கதவைத் திறந்து கொண்டு வேளியாஎ இறங்கினார் ஒரு நடுத்தர வயது ஆள். அவரது உடலில் ஒவ்வொரு செண்டி மீட்டரும் பணத்தில் குளித்து எழுந்தவை என பார்த்தாலே விளங்கியது. மிக உயர்ந்த துணியில் தயாரிக்கப்பட்ட சூட் அணிந்திருந்தார். வெங்கியைப் பார்த்ததும் இயல்பாகப் புன்னகைத்துப் பேசினார்.

"ஹலோ! மிஸ்டர் வெங்கடேஷ்! என்னை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம். குளோபல் இண்டர்னாஎஷனல் சேர்மேன்" என்றார்.

பேசவே நா எழவில்லை வெங்கிக்கு. உண்மையிலேயே வந்தது அவர் தான் என்றால் அத்தனை பெரிய மனிதர், உலக முதல் ஐந்து பணக்காரர்ஃப்களில் ஒருவர், தன்னைத் தேடி வந்திருக்கிறார் என்றால் என் அதிர்ஷ்டத்தை என்ன சொல்ல? இல்லை நிச்சயம் இவர் போலி மனிதர். போலி என்றே வைத்துக்கொண்டால் என்னைத் தேடி வர வேண்டிய அவசியம் என்ன? இதன் பின்னால் என்ன நோக்கம் இருக்கிறது? ஆனால் இது பெண்டெலி கார். இதன் ஆரம்ப விலையே கோடிகளில் தான். இவரது ஃபோட்டோவை பிசினஸ் இண்டியாவில் நான் பார்த்திருக்கிறேன். இப்படித்தானே இருப்பார்? அப்படியானால் இவர் உண்மையிலேயே ராஹுல் கார்த்திகேயன் தானா? இப்படி பல வாறு எண்ணிக் குழம்பி அசட்டுப் புன்னகை பூத்தபடி நின்றான்.

"என்ன யங்க் மேன்? உன்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கேன்? நீ இப்படி முழிக்கிறியே?" என்றார் அவர்.

"சார்! வணக்கம் சார்! வந்து என்னால யோசிச்சுப் பார்க்கக் கூட முடியல்ல. அதான் பேச்சே வரல்ல. வாங்க சார்! வீட்டுக்குள்ள வாங்க!" என்றான் உபசாரமாக.

"யார் வீட்டுக்கோ கூப்பிடுற? என் காருக்கள்ள வா மேன்! அதை விட வசதியா இருக்கும்" என்றார்.

"சார்! நான் இங்க இருக்குறது உங்களுக்கு எப்படித் தெரியும்? இது என் வீடு இல்லேன்னு உங்களுக்கு யார் சொன்னா?" என்றான் சுதாரித்துக்கொண்டு வெங்கி.

பெரிதாகச் சிரித்தார் அந்த மனிதர்.

"எத்தனை பெரிய பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை கட்டிக் காக்குறேன். உலகம் முழுக்க எனக்கு ஆளுங்க இருக்காங்கப்பா. ஒருத்தன் என் கம்பெனிக்கு அப்ளை பண்றான்னா அவனோட ஜாதகமே என் கைக்கு வந்துரும்." என்றார்.

இதைப் பற்றி அவன் முன்னமே கேள்விப்பட்டிருக்கிறான். ராகுல் கார்த்தியேன் தன் கம்பெனியில் வேலை செய்யும் ஆட்களின் குடும்பம், அவர்கள் பின்னணி எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்து கொண்டு தான் சேர்த்துக்கொள்வார் என சொல்லக் கேட்டிருக்கிறான்.

"என்னப்பா? காருக்கள்ள வரியா?" என்றார் அவர் பொறுமையிழந்து.

வாயே திறக்காம டிரைவர் முன் கதவைத் திறந்து விட ஏறினான். ஏறியதுமே எங்கோ ஊட்டிக்கு வந்தது போல இருந்தது. வெளியே பார்க்கத்தான் கார். உள்ளே சிறிய வீடு போல இருந்தது.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 21:

ஒரு பெரிய தேர் போல அந்தக் கார் நிலவொளியில் நனைந்தபடி நின்றிருந்தது. கதவுகள் மூடியிருந்தன. பின்னால் திரும்பிப் பார்த்தான் வெங்கி.

"சார் உள்ள தான் இருக்காரு! போ" என்றான் அந்த டிரைவர். காரை நெருங்கும் போதே வெளி நாட்டு செண்ட்டின் மணம் தூக்கியது. பின் பக்கக் கதவைத் திறந்து கொண்டு வேளியே இறங்கினார் ஒரு நடுத்தர வயது ஆள். அவரது உடலில் ஒவ்வொரு செண்டி மீட்டரும் பணத்தில் குளித்து எழுந்தவை என பார்த்தாலே விளங்கியது. மிக உயர்ந்த துணியில் தயாரிக்கப்பட்ட சூட் அணிந்திருந்தார். வெங்கியைப் பார்த்ததும் இயல்பாகப் புன்னகைத்துப் பேசினார்.

"ஹலோ! மிஸ்டர் வெங்கடேஷ்! என்னை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம். குளோபல் இண்டர்னேஷனல் சேர்மேன்" என்றார்.

பேசவே நா எழவில்லை வெங்கிக்கு. உண்மையிலேயே வந்தது அவர் தான் என்றால் அத்தனை பெரிய மனிதர், உலக முதல் ஐந்து பணக்காரர்களில் ஒருவர், தன்னைத் தேடி வந்திருக்கிறார் என்றால் என் அதிர்ஷ்டத்தை என்ன சொல்ல? இல்லை நிச்சயம் இவர் போலி மனிதர். போலி என்றே வைத்துக்கொண்டால் என்னைத் தேடி வர வேண்டிய அவசியம் என்ன? இதன் பின்னால் என்ன நோக்கம் இருக்கிறது? ஆனால் இது வெளி நாட்டுக்கார். இதன் ஆரம்ப விலையே கோடிகளில் தான். இவரது ஃபோட்டோவை பிசினஸ் இண்டியாவில் நான் பார்த்திருக்கிறேன். இப்படித்தானே இருப்பார்? அப்படியானால் இவர் உண்மையிலேயே ராகுல் கார்த்திகேயன் தானா? இப்படி பல வாறு எண்ணிக் குழம்பி அசட்டுப் புன்னகை பூத்தபடி நின்றான்.

"என்ன யங்க் மேன்? உன்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கேன்? நீ இப்படி முழிக்கிறியே?" என்றார் அவர்.

"சார்! வணக்கம் சார்! வந்து என்னால யோசிச்சுப் பார்க்கக் கூட முடியல்ல. அதான் பேச்சே வரல்ல. வாங்க சார்! வீட்டுக்குள்ள வாங்க!" என்றான் உபசாரமாக.

"யார் வீட்டுக்கோ கூப்பிடுற? என் காருக்கள்ள வா மேன்! அதை விட வசதியா இருக்கும்" என்றார்.

"சார்! நான் இங்க இருக்குறது உங்களுக்கு எப்படித் தெரியும்? இது என் வீடு இல்லேன்னு உங்களுக்கு யார் சொன்னா?" என்றான் சுதாரித்துக்கொண்டு வெங்கி.

பெரிதாகச் சிரித்தார் அந்த மனிதர்.

"எத்தனை பெரிய பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை கட்டிக் காக்குறேன். உலகம் முழுக்க எனக்கு ஆளுங்க இருக்காங்கப்பா. ஒருத்தன் என் கம்பெனிக்கு அப்ளை பண்றான்னா அவனோட ஜாதகமே என் கைக்கு வந்துரும்." என்றார்.

இதைப் பற்றி அவன் முன்னமே கேள்விப்பட்டிருக்கிறான். ராகுல் கார்த்தியேன் தன் கம்பெனியில் வேலை செய்யும் ஆட்களின் குடும்பம், அவர்கள் பின்னணி எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்து கொண்டு தான் சேர்த்துக்கொள்வார் என சொல்லக் கேட்டிருக்கிறான்.

"என்னப்பா? காருக்கள்ள வரியா?" என்றார் அவர் பொறுமையிழந்து.

வாயே திறக்காம டிரைவர் முன் கதவைத் திறந்து விட ஏறினான். ஏறியதுமே எங்கோ ஊட்டிக்கு வந்தது போல இருந்தது. வெளியே பார்க்கத்தான் கார். உள்ளே சிறிய வீடு போல இருந்தது. குளிர்பானம் வைக்க ஒரு சிறிய ஃப்ரிட்ஜ், நொறுக்குத் தீனிகள் ஒரு ஷெல்ஃபில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. டிரைவர் சீட்டுக்கும் பக்கத்து சீட்டுக்குமே இடைவெளி ஒரு மீட்டருக்கு மேல் இருக்கும் போல. பின்னால் பார்த்ததும் மயக்கமே வந்து விட்டது வெங்கிக்கு. மிகப் பெரிய அகலமான சீட்டுகள். முதுகு வலித்தால் பிடித்து விட மசாஜ் கருவிகள், விமானத்தில் உள்ளது போல உணவு வைக்க மேஜை இப்படி ஆடம்பரமாக இருந்தது.

"என்னப்பா? காரைப் பார்த்து பிரமிச்சுப் போயிட்டியா? ரொல்ஸ்ராய்ஸ் கார் இது. நாம ஆர்டர் குடுத்தாத்தான் செய்யவே ஆரம்பிப்பாங்க. இஞ்சின் எல்லாமே வெள்ளியில செஞ்சது. சும்மா அப்படியே பறக்கும்." என்றார்.

பேச்சிழந்து போனான் வெங்கி. எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டான். இருக்கை அப்படியே அமிழ்ந்து அவனை உள்வாங்கிக்கொண்டது. மெத்மெத்தென்று இதமாக இருந்தது.

"நீ ஏதோ சில ஐடியாக்கள் உங்கிட்ட இருக்குறதாகவும், அதை குளோபல் கார்ப்பரேஷனால மட்டும் தான் செய;படுத்த முடியும்னும் உன்னோட அப்ளிகேஷன்ல குறிப்பிட்டிருந்த, அதனால தான் வேலை கேக்குறதாகவும் குறிப்பிட்டிருந்தே இல்லியா?" என்றார் ராகுல்.

"ஆமா சார்! நிறைய புராஜெக்ட்சுக்கு ஐடியா வெச்சிருக்கேன் சார்." என்றான்.

"குட்! சாம்பிளுக்கு ஒண்ணு சொல்லு. உனக்கு ரெண்டு நிமிஷம் டயம். உன்னோட ஐடியா எனக்குப் பிடிச்சதுன்னா, நாளையில இருந்தே நீ குளோபல் கார்ப்பரேஷனோட புராஜெக்ட் மேனேஜர். மாசம் அஞ்சு லட்சம் சம்பளம், பெங்களூர்ல வீடு, கார் வேலையாட்கள் எல்லாம் உண்டு. சொல்லு" என்றார்.

எச்சில் விழுங்கிக்கொண்டான் வெங்கி. எந்த ஐடியாவைச் சொன்னால் இவருக்கு மிகவும் பிடிக்கும்? என யோசித்தான். ராகுல் கார்த்திகேயன் அவர்களுக்கு எதையும் வீணாக்குவது பிடிக்காது, அதோடு சுற்றுச் சூழலை பாழாக்குவதும் பிடிக்க்காது என அவரைப் பற்றிய ஒரு கட்டுரையில் படித்தது நினைவுக்கு வந்தது. முடிவு செய்து கொண்டு பேசினான்.

"சார்! இப்போ நான் சொல்லப்போற ஐடியா, வெறும் என் மனசுல இருக்குற யோசனைன்னு நினைக்காதீங்க. அதை எப்படி செயல்படுத்துறது? அதுக்கு என்னென்ன நாம செய்யணும்? எப்படி பிராசஸ் பண்ணனும்? எவ்வளவு செலவாகும்னு எல்லாமே ஸ்கெட்ச் போட்டு வெச்சிருக்கேன்." என்றான்.

"நீ முதல்ல உன் ஐடியாவைச் சொல்லு. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்"

"கேளுங்க! இன்னைக்கு லேப்டாப்பாகட்டும், இல்லை டெஸ்க் டாப் கப்யூட்டராகட்டும் எல்லாரும் அஞ்சுல இருந்து ஆறு வருசம் யூஸ் பண்றாங்க. அப்புறம் அதைத் தூக்கிப் போட்டுட்டு புதுசு வாங்கிடறாங்க. கம்பெனிகள்ல இது இன்னும் அதிகம். அதுல இருக்குற பார்ட்ஸ் எல்லாமே ஈ வேஸ்ட்னு சொல்லப்படுற நச்சுத்தன்மை கொண்டவை. மண்ணுக்குள்ள போன மக்கவும் மக்காது. இது மாதிரி கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை வெச்சு நம்மால தரமான, எலெக்டிரிக் கார் தயாரிக்க முடியும், எலெக்டிரிக் கார் மட்டுமல்ல சாதாரண கார்லயே இந்த பாகங்களை பயன் படுத்தலாம். அப்படி செய்யுறதால கார் தயரிப்பு செலவு குறையும், கார் விலையும் குறையும். குறைஞ்ச விலையில நல்ல தரமான கம்ப்யூட்டர் கண்டிரோல் கார்களை மக்களுக்கு நம்மால கொடுக்க முடியும்" என ஒரே மூச்சில் பேசி நிறுத்தினான்.

அவனது தோளைத் தட்டிக்கொடுத்தார் ராகுல்.

"நல்ல ஐடியா தான்ப்பா. ஆனா நடைமுறைக்கு ஒத்து வருமா? பழைய கம்ப்யூட்டர் பாகங்களை எவ்வளவு தூரம் நம்பலாம்? கார்ல அடிக்கடி ரிப்பேர் வந்துதுன்னா நம்ம கம்பெனி பேர் கெட்டுப் போயிருமேப்பா?" என்றார்.

"சார் ஹார்டு டிஸ்கை மட்டும் தான் நம்மால பயன்படுத்த முடியாது. ஆனா மத்ததெல்லாம் நல்லா இருக்கும். அவைகளை திரும்பவும் புதுசு மாதிரி ஆக்குறதுக்கே நிறைய ஆட்கள் இருக்காங்க. இதை ஒரு தனி இண்டஸ்டிரியாகவே போடலாம் சார். நிறைய இஞ்சினியர்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுக்கலாம்" என்றான்.

சற்று நேரம் அமைதியாக அமர்ந்து யோசித்தார் ராகுல்.

"உம்! சரிப்பா! நல்ல யோசனை தான். ஆனா இதை நான் தமிழ்நாட்டுல தொடங்க விரும்பல்ல. பெங்களூர்ல கூட வேண்டாம்னு தோணுது. ராஜஸ்தான்ல தான் நிறைய இடம் நமக்குக் கெடைக்கும். பிக்கானீர் பக்கத்துல இதை ஆரம்பிக்கலாம்னு பார்க்கறேன். " என்றார்.

மகிழ்ச்சிப் பூ பூத்தது வெங்கியின் மனதில். இது அவனுடைய கனவு. இதை நிறைவேற்ற சரியான நபர் ராகுல் கார்த்திகேயன் ஒருவர் தான். அவரை ஒரு முறை பார்த்தால் போதும் என எண்ணியது போக, இப்போது அவருடைய காரில் அவரோடு அமர்ந்து பேசிகிறான். அவருக்கு ஐடியாவும் பிடித்திருக்கிறது என்கிறார். துள்ளியது மனம்.

"முழுக்க முழுக்க நீ தான் இந்த புராஜெக்டைப் பார்த்துக்கணும். உன்னை சிஈஓவாப் போட்டு புதுசா ஃபேக்டரி ஆரம்பிச்சுடலாம். நீ நாளைக்கே ராஜஸ்தான் கிளம்பிப் போ! அங்க இருக்குற நம்ம ஆபீசுக்கு மெயில் அனுப்பிடறேன். உனக்குத் துணையா நீ இங்க இருந்து மூணு அல்லது நாலு பேரைக் கூட்டிக்கிட்டுப் போ! முதல்ல ஜெய்ப்பூர் ஆபீசுக்குப் போனியானா அங்க இருந்து உன்னை கார்ல அவங்க பிக்கானீர் கொண்டு விட்டுருவாங்க. வீடு, வேலைக்கு ஆள், கார் எல்லாமே அங்க உனக்குத் தயாரா இருக்கும். நாளைக்கே கிளம்பறியா?" என்றார்.

தயங்கினான் வெங்கி.

"நாளைக்கேவா சார்? எனக்கு இங்க...சென்னை ஆபீசுல நான் நோட்டீஸ் குடுக்கணுமே? மூணு மாச நோட்டீஸ் குடுக்கலைன்னா எனக்கு ரிலீவிங்க் ஆர்டர் தர மாட்டாங்களே?" என்றான் மெதுவாக.

"நீ எங்க கம்பனியில தானே ஜாயின் பண்ணப் போற? எனக்கு ரிலீவிங்க் ஆர்டரே வேண்டாம்னு சொல்றனே? அப்ப எதுக்கு நோட்டீஸ்? யோசிக்காம நாளைக்கே ஜாயின் பண்ணிரு" என்றர் மீண்டும்.

எங்கோ இடித்தது வெங்கிக்கு.

"மன்னிச்சுக்குங்க சார்! எனக்கு பர்சனலா சில வேலைகள் இருக்கு. அதை முடிச்சுட்டு நான் அடுத்த வாரமே ஜாயின் பண்றேனே?"

"அறிவோட தான் பேசுறியா? நீ இப்ப சீனியர் எக்சிக்யூட்டிவ்வா இருக்கியா? என்ன பெரிய சம்பளம் வந்துரப் போகுது? குளோபல் கார்ப்பரேஷன் கம்பெனி உலகத்துல பல நாடுகள்ல இருக்கு. நாளைக்கே நீ அமெரிக்கா போறதுக்கும் சான்ஸ் இருக்கு. இதையெல்லாம் விடப்போறியா?" என்றார். அவர் கண்கள் கோபத்தில் பளபளத்தன.

"இல்லை சார்! விடப் போறேன்னு நான் சொல்லவே இல்லையே? எனக்கு ஒரு வாரம் டயம் குடுங்கன்னு தானே கேக்குறேன்."

"முடியாதுப்பா! அது மட்டும் தர முடியாது. நாளைக்குக் காலையில நீ முத ஃப்ளைட் பிடிச்சு ஜெய்ப்பூர் போயிடணும். உனக்குத் தேவையான துணிமணி, ஷூஸ், இதெல்லாம் வாங்க இப்பவே கேஷா ஒரு லட்ச ரூவா தரச் சொல்றேன். இதை விட என்ன வேணும்?" என்றார்.

மேலும் சந்தேகம் வலுக்க பலமாக தலையை ஆட்டினான்.

"இல்ல சார்! என்னால உடனடியா ஜாயின் பண்ண முடியாது. என்னை மன்னிச்சிருங்க. இத்தனை பெரிய மனுஷன் என்னைத் தேடி வந்தீங்க. ஆனா என்னால உங்க ஆஃபரை ஏத்துக்க முடியல்ல! சாரி சார்" என்றான். அவன் பேசி முடிக்கும் முன் அவன் காரிலிருந்து தூக்கியெறியப்பட்டான். தட்டென்ற சத்தத்தோடு மண்ணில் விழுந்தவனுக்கு கண்ணைக் இருட்டிக்கொண்டு வந்தது. என்ன ஆயிற்று? யார் என்னைத் தூக்கி எறிந்தது? என எதுவும் தெரியாமல் சுற்றுமுற்றும் பார்த்தான்.

அந்தப் பெரிய வெளி நாட்டுக்கார், டிரைவர், ராகுல் கார்த்திகேயன் என ஒருவரையும் காணோம். ஒரே இருளாக இருந்தது. அந்த இருளில் செக்கச் சிவந்த கண்கள் இரண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தன. அந்தக் கண்களில் அப்படி ஒரு கொலைவெறி. ஓவனெக் கத்தினான் வெங்கி.

"என்னடா? எவ்வளவு ஆசை காட்டினாலும் நீ ஒப்புக்க மாட்டியா? உன்னைக் கொலை செய்ய வேண்டாம்னு நானும் பார்த்துப் பார்த்து எல்லாமே செய்யறேன். ஆனா நீ ஏண்டா என் பொறுமையை சோதிக்குற" என்ற கரகர குரல் கேட்டது.

திடுக்கிட்டுப் பயந்து போய் எழுந்து ஓட முயன்றான்.

"விபத்து நடக்க வெச்சு பயமுறுத்திப் பார்த்தேன், நிறைய பணம் கெடைக்கும்னு ஆசை காட்டிப் பார்த்தேன். ஆனா நீ தான் எல்லாத்தையும் வேண்டாம்னு சொல்லிட்ட. உன்னோட முடிவை நீயே தேடிக்கிட்ட." என்றது அந்தக் குரல் மீண்டும்.

பயத்தில் நாக்கு உலர்ந்து வியர்வை சொதசொதத்தது.

"போன தடவையும் இப்படித்தான் நீ பேசிப்பேசி ஆதித்தனை தப்பிக்க விட்ட. இப்பவும் அதையே செய்யாதே நித்யமல்லி. வேலையை முடி. இவன் கதையை முடிச்சா மத்தவங்க எல்லாம் பயந்து போயிருவாங்க. அவங்களுக்கு தைரியம் சொல்லவும், வழி சொல்லவும் ஆளே இருக்காது. உம்! சீக்கிரம் முடி." என்றது மற்றொரு பெண் குரல். சித்தர் சொன்ன பொன்வண்டு போலும் என நினைத்துக்கொண்டான். அவனுக்குள் பயம் விசுவரூபம் எடுத்தது. ஆசைஆசையாக இஞ்சினியரிங்க் படித்தது, வேலைக்கு அமர்ந்தது எல்லாமே இப்படி யாருமில்லாத அனாதையாக சாகத்தானா? என் உடலையாவது என் அம்மா அப்பாவிடம் சேர்ப்பார்களா? நான் இறந்த பிறகு திவ்யா என்ன செய்வாள்? பாலா என்ன ஆவான்? என சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நினைத்துபடி அமர்ந்திருந்தான்.

"நீ இவ்வளவு பேசுற இவன் அசையுறானா பார்த்தியா? இவனோட சாவைப் பார்த்து மத்தவங்களுக்கு பயம் வரணும், நித்யமல்லி விஷயத்துல தலையிட்டா என்ன ஆகும்னு அவங்க தெரிஞ்சுக்கணும். யோசிக்காதே மல்லி. இவனுக்கு ரோம தண்டனை குடு." என்றாள் பொன்வண்டு.

நெஞ்சுக்கூட்டுக்குள் பயம் இருளாகப் பாய்ந்தது. ரோம தண்டனை என்றால் என்ன? தெரியவில்லையே? என நடுங்கியபடி அமர்ந்திருந்தான்.

"டேய்! ஆதித்தா! ரோம தண்டனைன்னா என்னன்னு தெரியுமா? நித்யல்லிக்கு நிறைய சக்திகள் இருக்கு அதுல ஒண்ணு தான் ரோம தண்டனை. அவ தன்னோட இடது கை சுட்டு விரலால உன்னோட உச்சந்தலையைத் தடவுனாப் போதும். என்ன ஆகும் தெரியுமா? உன்னோட உள்ளுறுப்புகள் எல்லாத்துலயும் துவாரம் விழுந்து ரத்தம் பீய்ச்சியடிக்கும். வலி, வேதனை உன்னால தாங்க முடியாது. புழுவைப் போல துடிப்ப! நீ எந்தப் பக்கம் திரும்பினாலும் ரத்தம் வந்துக்கிட்டே இருக்கும். சாவு வராதான்னு கத்துவ, கதறுவ. ஆனா சாவு அவ்வளவு சீக்கிரம் வராது." என்றாள் பொன்வண்டு.

தன் உயிர் இப்போதே போய் விடாதா? இந்தக் கொடுமையெல்லாம் அனுபவிக்காமல் சாவு இப்போதே வராதா? என கலங்கினான் வெங்கி. பயத்தில் உடல் நடுங்கியது. அரை இருளில் மெல்ல ஒரு உருவம் அவனை நெருங்கி வருவது போலத் தோன்றியது. இதோ! என் விதி முடியப்போகிறது. முடிந்தாலும் பரவாயில்லை. சித்திரவதையை அல்லவா அனுபவிக்க வேண்டும் போல இருக்கிறது. தாயே வனப்பேச்சி! சங்கிலி கருப்பா! சொரி முத்தையனாரே! என்னைக் காப்பாற்ற மாட்டீர்களா? என பிரார்த்தித்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டான். இதோ இன்னும் சில நொடிகள் தான் அவனது கதை முடிந்து விடும். இல்லை இல்லை சித்திரவதை தொடங்கி விடும். நல்லவேளை பாலாவும், திவ்யாவும் தப்பித்துக்கொண்டார்கள். நான் தான் முட்டாள்தனமாக வந்து மாட்டிக்கொண்டேன். தாயே வனப்பேச்சி! சித்திரவதை தொடராமல் என் உயிரை சீக்கிரம் போகச் செய்" என்று வேண்டிக்கொண்டிருந்தான்.

காலடிச் சத்தம் சமீபத்தில் கேட்டது. கண்களைத் திறக்கவே இல்லை. கிரீச்சென்ற அலறலும் அதைத் தொடர்ந்து குளிர்ந்த காற்றும் வீசியது. ஆனால் ஏனோ வெங்கிக்கி வேர்த்துக் கொட்டியது.

"கண்ணைத் திற வெங்கி! நித்யமல்லி போயிட்டா" என்ற திவ்யாவின் குரல் கேட்க சட்டென நிமிர்ந்தான். இப்போது நல்ல வெளிச்சம் தெரிந்தது. தெருவிளக்குகள் கூட எரியத் தொடங்கியிருந்தன.

"திவ்யா? நீ எப்படி இங்க? நித்யமல்லியை நீ எப்படி விரட்டி அடிச்சே?" என்றான் திக்கியபடி.

"நீ முதல்ல வனப்பேச்சி குங்குமத்தை நெத்தியில இட்டுக்கோப்பா. உன்னைத் தீண்டுன தீய சக்தி போயிரும்" என்றது மற்றோரு குரல். குரல் வந்த திசையை நோக்கினான். அமைதியாகப் புன்னகைத்தபடி நாச்சியாரம்மாள் என்கிற சித்தரம்மாள் நின்று கொண்டிருந்தார்.

"அம்மா" என்ற அலறலுடன் அவரை வணங்கினான் வெங்கி.

"உன்னைச் சுத்தி நிறைய ஆபத்து இருக்கு. இரவு நேரத்துல வெளிய வராதேன்னு நான் எச்சரிக்கை செஞ்சேனேப்பா? அதையும் மீறி ஏன் வந்தே?" என்றார் அந்த அம்மாள்.

தலை குனிந்தான் வெங்கி.

"சரி சரி! வருத்தப்படாதே! நித்யமல்லி ரொம்பவே மாயக்காரி. அவளோட மாயத்துக்கு ஆட்படாம தப்பிக்குறது கஷ்டம் தான்." என்றார் மீண்டும்.

"அம்மா! நீங்க எப்படி சரியான நேரத்துக்கு வந்து என்னைக் காப்பத்துனீங்க? திவ்யா தான் உங்களைக் கூட்டிக்கிட்டு வந்தாளா? அவளுக்கு எப்படி நீங்க இருக்குற இடம் தெரியும்?" என்றான் அடுக்கடுக்காக.

"முதல்ல நாம வீட்டுக்குள்ள போயிப் பேசுவோம்ப்பா! ரொம்ப நேரம் இப்படி இருட்டுல நிக்கிறது நல்லதில்ல" என்று இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார் சித்தரம்மாள். பாலா இன்னமும் நிச்சலனமாக உறங்கிக் கொண்டிருந்தான். கடைக்காரியின் தம்பி தன் அறையில் இருப்பான் போலும் என எண்னிக்கொண்டே பாலாவை எழுப்பின்னான் வெங்கி.

"என்னடா? ஏதாவது கெட்ட கனவு கண்டியா?" என்று கேட்டபடியே எழுந்து அமர்ந்தான் பாலா.

"பாலா! சித்தரம்மா வந்துட்டாங்கடா! அதோ பாரு திவ்யாவும் இருக்கா" என்றான் வெங்கி மெதுவான குரலில். சட்டென எழுந்து அமர்ந்தான் பாலா.

"அதுக்குள்ள விடிஞ்சிருச்சா? நான் தூங்கியே போயிட்டேன் போலயே" என்று உடையைச் சரி செய்து கொண்டு கைகளால் முடியைக் கோதி விட்டுக்கொண்டான்.

"இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிரும் தம்பி!" என்றாள் சித்தரம்மாள்.

"டேய்! எதுக்குடா திவ்யாவை இங்க கூட்டிக்கிட்டு வந்த? கடைக்காரம்மா பார்த்துடிச்சுன்னா அசிங்கமாப் போயிரும். எங்கே? அந்த ஆளு? அவன் பார்த்தான்னா அப்படியே போயி அவங்க அக்கா கிட்ட போட்டுக்குடுத்துருவானே?" என்றான் பாலா கவலையோடு.

பேசிய அவனை கனிவோடு பார்த்தார் சித்தரம்மாள்.

"பதட்டப்படாதே பாலா! நீங்க இன்னமும் பல அதிர்ச்சிகளைத் தாங்கணும். அதுக்கு உங்களை தயார் செஞ்சுக்கோங்க! அதுல இனிய அதிர்ச்சியும் இருக்கு. முதல்ல இருந்து சொல்றேன்." என சொல்ல ஆரம்பித்தார் சித்தரம்மாள். மூவரும் மௌனமாகக் கேட்கத் தொடங்கினர்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 22:

பாலாவுக்கு இன்னமும் என்ன நடக்கிறது எனப் புரியவில்லை போல. திரு திருவென விழித்தான்.

"என்னடா இப்படி முழிக்குற பாலா? இவங்க தான் சித்தரம்மா. நம்ம உதவிக்கு வந்துட்டாங்க. இவங்க வந்ததால தான் நான் இன்னைக்குப் பொழைச்சு உசிரோட உக்காந்திருக்கேன்." என்றான்.

"என்ன சொல்ற வெங்கி? நீ என் பக்கத்துல தானே படுத்திருந்த? என்ன ஆபத்து வந்தது?" என்று பதறினான் பாலா.

"பதறாதேப்பா! உன் நண்பனுக்கு ஒண்ணும் ஆகல்ல! நித்யமல்லி பல மாயங்கள் செஞ்சு இவனை மயக்கப் பார்த்தா. வனப்பேச்சி எனக்கு உத்தரவு கொடுக்கவே என்னால வந்து காப்பாத்த முடிஞ்சது. எல்லாம் அந்த அம்மனோட அருள்" என்றாள்.

"அப்படி என்ன தான் நடந்தது வெங்கி? சொல்லேன் பிளீஸ்" என்றான் பாலா.

ராகுல் கார்த்திக்கேயனைப் போல உருமாறி நித்யமல்லி வந்தது, காரோடு இவனை கொல்ல முயன்றது என அல்லாவற்றையும் சொன்னான். கேட்டுக்கொண்டே வந்தவன் தலையில் அடித்துக்கொண்டான்.

"சே! என்ன ஃபிரெண்டுடா நான்? எப்பப் பார்த்தாலும் நீ ஆபத்துல இருக்கும் போது உன்னை கை விட்டுடறேனே?" என வருந்தினான்.

"அப்படி நினைக்காதேப்பா! அந்த நித்யமல்லி மாயக்காரி. உன்னை மயக்க நிலையில வெச்சிருந்தாலும் வெச்சிருப்பா." என்றாள் சித்தரம்மாள்.

"எப்படியோ? வெங்கியைக் காப்பாத்திடீங்க. ரொம்ப நன்றியம்மா உங்களுக்கு" என்றாள் திவ்யா.

"ஆமா! நாம இவ்வளவு நேரமா பேசிக்கிட்டு இருக்கோம். ஆனா கடைக்காரம்மாவோட தம்பி எழுந்து வரவே இல்லையே?" என்றான் வெங்கி.

ஒரு மர்மச் சிரிப்பு சிரித்தாள் சித்தரம்மாள்.

"நீங்க மூணு பேரும் இப்ப எங்கூட கொஞ்சம் வெளிய வரீங்களா? நான் சில விஷயங்களை உங்களுக்குக் காட்டணும்." என்று எழுந்து நடந்தார். அந்த வயதிலும் அவரது வேகமான நடை வியக்க வைத்தது. மூவரும் அவரைப் பின் தொடர்ந்து வெளியே வந்தனர். சாலையில் கூட சற்றே வேகமாக நடந்தார் சித்தரம்மாள். சுமார் 100மீ தூரம் சென்றதும் அவர்களை நிற்கச் சொன்னார்.

"இப்ப திரும்பி நீங்க தங்குன வீட்டைப் பாருங்க" என்றார்.

சட்டென திரும்ப வயிற்றில் அமிலம் அருவியெனப் பாய்ந்தது. காரணம் அங்கு கட்டிடமே இல்லை. ஏதோ பெரிய மைதானம் போலக் காட்சியளித்தது. அப்படியானால் அவர்கள் தங்கிய வீடு எங்கே? கடைக்காரியின் தம்பி எங்கே? யோசிக்க யோசிக்க மூளை மரத்துப் போனது.

"அம்மா" என்றான் வெங்கி. அந்த அழைப்பில் ஆயிரம் அர்த்தங்கள்.

"ஆமாம்ப்பா! நீங்க பார்த்த்து பேசினது எல்லாமே நித்யமல்லியோட தான். நல்ல வேளை திவ்யா அவங்க அம்மா கூட தங்குனதால தப்பிச்சா. இல்லைன்னா முதல்ல அவ தான் ஆபத்துக்கு உள்ளாயிருப்பா" என்றார் சித்தரம்மாள்.

திக்கென்றது மூவருக்கும். தங்களை எத்தனை நெருக்கமாக கண்காணிக்கிறாள். நமது ஒவ்வொரு அசைவும் அவளுக்குத் தெரிந்திருக்கிறதே? என யோசித்தான் வெங்கி.

"முதல்ல நீங்க மூணு பேரும் ஆஸ்பத்திரியில இருக்குற கோயிலுக்கு வாங்க. அங்க வெச்சு விவரமாப் பேசலாம்" எனச் சொல்லி அழைத்து வாந்தார் சித்தரம்மாள். வாகாக இடம் தேடி அமர்ந்து கொண்டனர். சற்றே உயர்ந்த இடத்தில் அமர்ந்தார் சித்தரம்மாள்.

"நித்யமல்லிக்கு தன்னை அழிக்கக் கிளம்பிட்டாங்கன்னு தெரிஞ்சி போயிரிச்சு. அதான் ரொம்ப உக்கிரமா வேலை செய்யுறா. இந்த ஒரு மாசத்துக்குள்ள கிட்டத்தட்ட 25 பெண்கள் இறந்து போயிருக்காங்க. அதுக்காக அவங்க வீட்டுக்காரங்க கைது செய்யப்பட்டிருக்காங்க. இது நித்யமல்லிக்குக் கெடச்ச சின்ன வெற்றி. இதையே நம்மால தாங்க முடியாத போது, இன்னமும் அவ என்னென்ன செய்வான்னு நெனச்சா பயமா இருக்குப்பா" என்றார் அம்மாள் வெங்கியை நோக்கி.

"எனக்கென்னவோ நாம காரணமில்லாம அவளுக்கு பயப்படுறோமோன்னு தோணுது! கட்டையால ரெண்டு அடி அடிச்சா சுருண்டுருவா. அப்புறம் நாம அவளை வனப் பேச்சி கோயில்ல வெச்சு அழிச்சிடலாமே?" என்றான் வெங்கி.

"இல்லப்பா! அது முடியாது. ஏன்னா அவ பூமியைச் சேர்ந்தவ இல்ல. இந்த பூமியில இருக்குற எந்தப் பொருளாலயும் அவளை அழிக்கவோ மயங்கச் செய்யவோ முடியாது. இதைப் பத்திப் பேசத்தான் நான் வந்தேன்." என்றார்.

சித்தரம்மாளை நெருங்கி அமர்ந்து கொண்டாள் திவ்யா.

"விளக்கமா சொல்றேன் கேட்டுக்குங்க! நான் இந்தப் பகுதிக்கு இந்த நேரத்துக்கு வரணும்னு எனக்கு வனப்பேச்சி உத்தரவு வந்தது. அப்ப நான் கொல்லிமலையில தவம் செஞ்சுக்கிட்டு இருந்தேன். உடனே கிளம்பி வந்தேன். அப்படி எனக்கு உத்தரவு கொடுத்த வனப்பேச்சி சில விஷயங்களைப் புரியவெச்சா. நாம தேடுற விஷயங்கள் நிச்சயம் பொதிகை மலைச் சாரல்ல தான் இருக்கு. இன்னும் சொல்லப் போனா வண்டி மறிச்சி அம்மன் கோயிலுக்குப் போனா உங்களுக்கே சில விஷயங்கள் புரிய வரும்னு எனக்குத் தெரிஞ்சது. அதைச் சொல்லத்தான் நான் வந்தேன்." என்றாள்.

"அம்மா! நாங்க வந்த காரை ஓட்டிக்கிட்டு வந்த டிரைவர் கூட வண்டி மறிச்சி அம்மன் பத்தி சொன்னான். அப்படிப் பேசிக்கிட்டு வரும் போது தான் ஆக்சிடெண்ட் ஆச்சு." என்றாள் திவ்யா.

"எதிர்பார்த்தேன். காத்துல கலந்து பொன்வண்டு உங்களைத் தொடருறாப்பா." என்றாள் அம்மாள்.

பயத்தோடு சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டனர் மூவரும்.

"பயப்படாதீங்க! கோயிலுக்குள்ள அவளால வர முடியாது. உங்க அம்மாவுக்கு நாளைக்கே குணமாயிரும் திவ்யா. கரியமாணிக்கத்துக்கும் நல்லா ஆயிரும். பயப்படாதீங்க." என்றார் சித்தரம்மாள்.

உடலில் ஏதோ ஒரு சக்தி தோன்றுவது போல உணர்ந்தான் வெங்கி. அம்பாசமுத்திரம் வண்டி மறிச்சியம்மன் இதெல்லாம் அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட பெயர்களாகவும் முன்பே போயிருக்கிறோம் எனவும் தோன்றியது.

"என்ன ஆச்சு வெங்கி?" என்றனர் பாலாவும் திவ்யவும் ஒரே நேரத்தில்.

"ஒண்ணுமில்ல! இதெல்லாம் எங்கேயோ எப்பவோ போன மாதிரி இருக்கு எனக்கு" என்றான்.

முகத்தில் மகிழ்ச்சி படர்ந்தது சித்தரம்மாளுக்கு.

"இது நல்ல சகுனம் தான் வெங்கடேசா! அம்பாசமுத்திரத்துக்குப் போனதும் என்ன செய்யணும்னு சொல்றேன்." என்றார் சித்தரம்மாள்.

"அப்படீன்னா? நீங்க எங்க கூட வரப்போறதில்லையா?" என்றாள் திவ்யா. அவள் குரலில் ஏமாற்றம்.

"வருவேன் கண்டிப்பா வருவேன். ஆனா உங்க கூட இல்லை. வனப்பேச்சி உத்தரவு கொடுப்பா. அப்ப வருவேன். முதல்ல உங்களைச் சுத்திச் சுத்தி வர பொன்வண்டு கிட்ட இருந்து நீங்க தப்பிக்கணும். இல்லைன்னா உங்க ஒவ்வொரு அசைவும் நித்யமல்லிக்குத் தெரிஞ்சு போயிரும். அப்படி ஆயிடிச்சுன்னா உங்களால அவளை அழிக்கவே முடியாம போயிரும். ஏன்னா உங்க எல்லா காரியங்களையும் அவ கெடுத்துருவா" என்றார்.

"சொல்லுங்கம்மா நாங்க என்ன செய்யணும்?" என்றான் வெங்கி.

"முதல்ல நான் இப்ப மந்திரிச்ச தகடு ஒண்ணு தரேன். அதை நீங்க மூணு பேரும் எப்போதும் உங்க கூடவே வெச்சிக்கணும். அந்தத் தகடு எக்காரணம் கொண்டும் மண்ணுல விழக் கூடாது. அப்படி விழுந்துட்டா அதோட சக்தி போயிரும். அதனால உங்க உடம்புல அதை சேர்த்து கட்டிக்குங்க." என்று சொல்லி மிகவும் சிறிய அளவிலான செப்புத் தகடு மூன்றை எடுத்து அதனை அப்படியே சுருட்டி தாயத்து போலச் செய்து சிவப்பு நிறக்கயிற்றில் கோர்த்துக் கொடுத்தார்.

"இதை எப்பவும் கழுத்துல போட்டுக்குங்க! பொன்வண்டால உங்களை உளவு பாக்க முடியாது" என்றார்.

அவ்வாறே மூவரும் கழுத்தில் அணிந்து கொண்டனர். அவர்கள் அணிந்து முடித்தது தான் தாமதம் சற்று தள்ளி இருந்த மரத்திலிருந்து கிரீச்சென்ற சத்தம் கேட்டது. அதோடு தொப்பென ஏதோ விழும் சத்தமும் கேட்க மூவரும் வெளியில் ஓடினார்கள். பின்னாலேயே சித்தரம்மாளும் சென்றார்கள். அங்கே கரிய நிறப் பூனை ஒன்று செத்துக் கிடந்தது. ஆனால் அதன் ரத்தச் சிவப்பான கண்கள் திறந்து இவர்களையே பார்ப்பது போலிருக்க பயந்து போனாள் திவ்யா.

"எல்லாம் அந்த பொன்வண்டு செய்யுற வேலை தான். இந்த பூனையோட உடம்புல புகுந்து உங்களை வேவு பார்த்திருக்கா. இப்ப நீங்க தகடு கட்டிக்கிட்டதும் அவளால தாங்க முடியல்ல. அப்படியே ஓடிட்டா. பூனை தான் பாவம் செத்துப் போச்சு." என்றார் சித்தரம்மாள்.
'
திவ்யாவுக்குத் தலையைச் சுற்றி வாந்தி வருவது போல ஆகி விட்டது. கால்கள் தள்ளாடின. அவளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டாள் சித்தரம்மாள்.

"பயப்படாதீங்க! வெறும் களைப்பு தான். நான் காவலுக்கு இருக்கேன். நீங்க மூணு பேரும் நல்லா தூங்கி எழுந்துருங்க., அப்பத்தான் உங்களால அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற முடியும்." என்றார் சித்தரம்மாள்.

அம்மாள் காட்டிய இடத்தில் படுத்ததும் உறக்கம் கண்களைத் தழுவ அப்படியே தூங்கி விட்டார்கள். மீண்டும் எழுந்த போது அதே நாள் ஆனால் மாலை நேரம் எனத் தெரிந்ததும் வியப்பும் அதிர்ச்சியும் ஒரு சேர எழுந்தது. காலை ஐந்து மணிக்கு உறங்க ஆரம்பித்தோம். இப்போதும் மாலை 6 இருக்கும். கிட்டத்தட்ட 12 மணி நேரமா தூங்கியிருக்கிறோம்? என எண்ணி எழுந்து அமர்ந்தான் வெங்கி.

திவ்யாவும் பாலாவும் அடுத்தடுத்துக் கண் விழித்தனர். சித்தரம்மாளைக் காணவில்லை.

"என்ன இவங்க? நம்மைத் தூங்கச் சொல்லிட்டு காணாமப் போயிட்டாங்க?" என்றான் வெங்கி.

"காணாமப் போக்கல்லப்பா! திவ்யாவோட அம்மாவையும் கரியமாணிக்கத்தையும் பார்த்துட்டு வந்தேன். அவங்களுக்கு இப்ப எவ்வளவோ நல்லா ஆயிடிச்சும்மா. ஆனா பயணம் செய்ய முடியாது. என்றார் அம்மாள்.

"அம்மா! தவறா நினைக்காதீங்க! நாங்க போறதோ ஆபத்தான பயணம். அதுல இவங்க வந்து என்ன செய்யப் போறாங்க? " என்றான் வெங்கி.

"அவங்களும் கட்டாயம் வரணும்ப்பா! அதனால இப்போதைக்கு அவங்க என் கூட இருக்கட்டும்! எப்ப தேவையோ அப்ப நான் கூட்டிக்கிட்டு வரேன். நீங்க கவலைப் படாம கிளம்புங்க" என்றாள் அம்மாள்.

"இப்பவா?"

"ஆமா! இப்பத்தான். இங்க இருந்து ஒரு பஸ் ராத்திரி 8 மணிக்குக் கிளம்புதாம். நான் விசாரிச்சுட்டேன். நீங்க தனி வண்டியில போகாம இப்படி மத்தவங்க கூடப் போனா உங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு."

"அம்மா! ஏதோ விஷயம் சொல்றேன்னு சொன்னீங்களே?" என்றான் வெங்கி.

"உம்! சொல்றேன். நீங்க அம்பாசமுத்திரம் போனதும் முதல்ல வண்டிமறிச்சியம்மன் கோயிலுக்குப் போகாதீங்க. பக்கத்துலயே அகத்தியர் கோயில் இருக்கு. அங்க போயி சாமி கிட்ட உத்தரவு வாங்கிக்கிட்டு அப்புறமா வண்டி மறிச்சியம்மன் கோயிலுக்குப் போங்க! அகத்தியர் கோயிலுக்குப் உங்க தகட்டை அம்மனோட காலடியில படுமாறு வைங்க. ஆனா கழட்டாம வைக்கணும். அதாவது உங்க உடம்பும் அதுல படணும் அம்மனோட பாதமும் அதுல படணும். அப்ப சில அனுபவங்கள் உங்களுக்கு உண்டாகும். குறிப்பா வெங்கடேசனுக்கு உண்டாகும். அதை வெச்சுத்தான் நீங்க அடுத்தது என்ன செய்யன்னும் தீர்மானிக்கணும்."

"அம்மா! ரொம்ப நன்றிங்க!"

"அவசரப்படாதப்பா வெங்கடேசா! உங்க கவனமெல்லாம் வாளையும் குத்தீட்டியையும் கண்டு பிடிக்குறதுல தான் இருக்கணும். அதை எடுத்த பிறகு நேரா பாவநாசம் வனப்பேச்சி கோயிலுக்கு வந்திருங்க. அதுக்குப் பிறகு தான் நித்யமல்லிக்கும் உங்களுக்குமான ஜீவ மரணப் போராட்டம் ஆரம்பிக்கும். எப்படியாவது உங்களை கோயிலுக்குப் போக விடாம, கும்புட விடாம தடுக்கப் நெனப்பா நித்யமல்லி. அதுக்கு நீங்க இடம் கொடுத்துடக் கூடாதுப்பா. எக்காரணம் கொண்டும் உங்களுக்குள்ள பிரச்சனையோ தகறாரோ வராமப் பார்த்துக்குங்க! அது மூலமாத்தான் நித்யமல்லி உங்களுக்குள்ள நுழையப்பார்ப்பா." என்றார்.

எல்லாவற்றுக்கும் தலையாட்டினான் வெங்கி. அவர்களது பைகள் பத்திரமாக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. பாலா அதைப் பார்க்கவும், திவ்யா தன் தாயைப் பார்க்கவும் புறப்பட்டனர். இப்போது சித்தரம்மாவும், வெங்கியும் தனித்து விடப்பட்டனர். அவனது கரங்களைப் பிடித்து கோயிலின் கர்ப்பகிரகத்துக்குள் அழைத்துப் போனார் அம்மாள்.

"வெங்கி! இதுல நீ தான் ரொம்ப முக்கியமான பொறுப்பு வகிக்கப் போற! நீ மன உறுதியும், நேர்மையும் நெறஞ்சவன். அதனால தான் தெய்வம் உனக்கு எப்பவும் பக்க பலமா இருக்கு. ஆனா திவ்யாவும் பாலாவும் மாறலாம். அப்படி மாறினா அவங்களை விட்டுடாம எப்படியாவது உன் வசத்துக்குக் கொண்டு வந்துடு! உன்னால முடியவே முடியாதுன்னு நீ நெனச்சா மட்டும் இப்ப நான் தர்ர பொருளை நெருப்புல போடு. அப்படி போட்ட அடுத்த கணமே நீ இவங்களைக் கூட்டிக்கிட்டு எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அவ்வளவு தூரம் ஓடிரணும். ஏன்னா இந்தப் பொருள் கக்குற புகை உசுருக்கே ஆபத்து. ஆனா நித்யமல்லியை அரை மணி நேரம் செயலிழக்க வைக்கும். " என்றார்.

வெங்கிக்கு வியர்வை வெள்ளமெனப் பெருகியது.

"எத்தனை பெரிய பொறுப்பு இது? எனக்கு பாலாவும், திவ்யாவும் துணையாக இருப்பார்கள் என நம்பித்தானே இந்த ஆபத்தான வேலையில் இறங்கினேன்? ஆனால் சித்தரம்மாள் இப்படிச் சொல்கிறார்களே? என்னால் இந்த காரியத்தில் வெற்றி பெற முடியுமா? அப்படி வெற்றி பெறவில்லையென்றால் என்ன ஆகுமோ தெரியவில்லையே?" என யோசித்தபடி நின்றான்.

"தம்பி! மனசு தளராதே! நிச்சயமா வெற்றி உனக்குத்தான். ஒரு வேளை உன்னால நித்யமல்லியைக் கட்ட முடியாது, அவ உங்களை மீறிட்டான்னு உனக்குத் தோணுச்சுன்னா நீ உயிர்த்தியாகம் செய்யத் தயாராக இருக்கணும்ப்பா" என்றார் சித்தரம்மாள்.

தூக்கிவாரிப் போட நிமிர்ந்தான்.

"அம்மா?"

"ஆமாம்ப்பா! பழைய காலத்துல நீ ஆதித்தனா இருந்தப்ப உன்னைக் காதலிச்சா நித்யமல்லி. அவளுக்கு அது இன்னமும் மறக்கல்ல. அதனால நிலைமை கை மீறிப் போகும் போது, நான் குடுத்த தகட்டை தரையில எறிஞ்சிடு! அதுல இருந்து பச்சை நிற நெருப்பு உண்டாகும். அவளைக் கட்டியணைச்சுக்கிட்டு நீயும் அவளோட அந்த நெருப்புல இறங்கிடணும்ப்பா! இந்த உலகத்தைக் காப்பாத்த நீ இந்த தியாகத்தை செய்யத்தான் வேணும்." என்றார்.

இனம் புரியாத உணர்வுகள் ஊஞ்சலாட தலையாட்டினான் வெங்கி.

"கவனம்! இப்ப நான் சொன்ன விவரம் உனக்கு மட்டும் தான். வேற யாருக்கும் தெரியத் தேவையில்ல. புரிஞ்சதா? இப்ப நீங்க கிளம்புங்க! அகத்தியர் அருளும், வனப்பேச்சி அருளும் இருந்தா இன்னும் ஒரு வாரத்துல சந்திப்போம்." என்றார் சித்தரம்மாள்.

பயம், கலக்கம், வீரம், கொஞ்சம் சோகம் என எல்லாம் கலந்த உணர்வுகளில் தத்தளித்தாள் வெங்கி. கையில் பைகளோடு பாலாவும் திவ்யாவும் வந்து கொண்டிருந்தார்கள்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 23:

சித்தரமாள் சொன்னபடி படி பஸ்ஸில் பயணித்து அம்பாசமுத்திரம் வந்து இறங்கி விட்டார்கள். பஸ் பயணத்திலும் எத்தனையோ இடைஞ்சல்கள் செய்யப் பார்த்தாள் நித்யமல்லி. நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருக்கும் போது பஸ் சட்டென நிறுத்தப்பட்டது. நடு நிசி. அனைவரும் அசந்து உறங்கிக் கொண்டிருக்க பெருத்த குலுக்கலோடு பஸ் நின்றது. அதில் விழித்துக்கொண்ட சிலரில் வெங்க்யும் திவ்யாவும் இருவர்.

"என்ன ஆச்சு சார்?" என்றார் ஒருவர் டிரைவரிடம்.

"அதோ பாருங்க, ரோட்டுல ரெண்டு பேரு ரத்தக் காயத்தோட அடிபட்டுக் கெடக்காங்க. எவனோ அடிச்சுப் போட்டுட்டுப் போயிட்டான் போல. பாவம் ரெண்டும் சின்ன வயசுப் பொண்ணுங்களா இருக்குதுங்க" என்றார்.

குபீரென ரத்தம் தலைக்கேறியது போல உணர்ந்தான் வெங்கி. இது நிச்சயம் நித்யல்லி, பொன்வண்டின் வேலை தான். எப்படியாவது எங்களைத் தடுத்து நிறுத்த இப்படிச் செய்கிறார்கள் என ஊகித்துக்கொண்டான். திவ்யாவும் அதையே தான் நினைத்தாள் என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டினாள்.

"சார்! நாம ஆம்புலன்சுக்கு ஃபோன் செஞ்சிட்டு போயிட்டே இருக்கலாம் சார்! இந்த அகால வேளையில எதுக்கு பஸ்ஸை நிறுத்தணும்?" என்றான் வெங்கி.

சே! நீயெல்லாம் ஒரு மனுஷனாப்பா? ரெண்டு பேரு உசிருக்குப் போராடிக்கிட்டு இருக்கங்க! பார்த்துட்டு பேசாமப் போகலாம்னு சொல்றியே? டிரைவர் நீங்க வண்டியை எடுக்காதீங்க. நான் போயிப் பார்த்துட்டு வரேன்." என ஒரு பயணி இறங்கினார்.

"சார் சார்! போகாதீங்க! எனக்கென்னவோ நல்லதாப் படல்ல. தயவு செஞ்சு நான் சொல்றதைக் கேளுங்க" எனப் பதறினாள் திவ்யா.

அந்தப் பயணியின் முன்னால் போய் நின்று கைகளால் அவரைத் தடுத்தான் வெங்கி.

"சார்! என்னைப் பார்த்தா உங்களுக்கு இப்ப வெறுப்பு தான் வரும். எனக்கும் அது புரியுது. ஆனா பாருங்க, ஆக்சிடெண்ட் நடந்திருக்குன்னு நீங்க சொல்றபடியே வெச்சுப்போம். ஏதோ ஒரு வண்டி தானே இடிச்சுட்டுப் போயிருக்கணும்? அதுக்கான அடையாளமே இல்லையே? கண்ணாடி துகள்கள் எதுவுமே இல்லாம ரோடே சுத்தமா இருக்கே?" என்றான் வெங்கி.

சற்றே யோசனையாக சாலையைப் பார்த்தனர் பயணிகள். இப்போது அவர்கள் கண் முன்னே கண்ணாடித்துகள்கள் இங்குமங்கும் சிதறிக் கிடந்தன. தங்கள் கண்களையே நம்ப முடியாமல் பார்த்தனர்.

"சார்! நீங்களே பாருங்க! முதல்ல பாக்கும் போது கண்ணாடியே இல்ல. ஆனா இப்ப எப்படி திடீர்னு வந்தது? எங்களை நம்புங்க. இது எல்லாமே மாய வேலை" என்றாள் திவ்யா.

"அட என்னம்மா நீ? 21ஆம் நூற்றாண்டுல வாழ்ந்துக்கிட்டு மாயமாவது ஒண்ணாவது? நாம தூக்கக் கலக்கத்துல பார்த்ததால கண்ணாடி தெரியல்ல. இப்ப தெரியுது. இதைப் போயி மாயம் அது இதுன்னுக்கிட்டு. வாங்கய்யா எல்லாரும். இந்தக் காலத்துப் பசங்க எதுக்கும் உதவாதவங்க. " என்று கத்திக்கொண்டே வெங்கியைத் தள்ளி விட்டு இறங்கினார் அந்தப் பயணி. அப்போது கணீரென ஒரு குரல் கேட்டது.

"எல்லாரும் அப்படியே உக்காரப் போறீங்களா இல்லையா?" மைக்கே இல்லாமல் அனைவருக்கும் கேட்டது அந்த ஆணையிடும் குரல். அனைவரும் அப்படி அப்படியே அமர்ந்து விட்டனர். குரல் வந்த திசையை நோக்கினான் வெங்கி. நெற்றி நிறைய திருநீறும், நடுவில் வட்டமாகக் குங்குமமும் அணிந்த ஒருவர் தான் அப்படிப் பேசியது. இடுப்பில் கச்சம் வைத்துக் கட்டப்பட்ட பளீரென்ற வெள்ளை வேட்டி, முறுக்கிய மீசை, ஆனால் கண்களில் அப்படி ஒரு கருணை என அவரைப் பார்க்கவே பரவசமாக இருந்தது .

" நாங்க எப்படிச் சொல்லி இவங்களுக்குப் புரிய வைக்கிறதுன்னு தெரியல்ல சாமி! நீங்களே சொல்லுங்க" என்று அவரை வணங்கினாள் திவ்யா.

திவ்யாவுக்கு பதில் சொல்லாமல் கூட்டத்தை நோக்கிப் பேசினார் அந்த மனிதர்.

"இதைப் பாருங்கப்பா! உங்க இரக்க உணர்ச்சியை நான் பாராட்டுறேன். ஆனா அதே நேரத்துல புத்திக்கு எட்டாத சில விஷயங்களும் இந்த உலகத்துல இருக்கு. முதல்ல பஸ்ஸை எடுத்துட்டு நூறு மீட்டர் தூரம் போங்க. பிறகு திரும்பி வந்து பாருங்க. அப்பவும் இந்த காட்சி அப்படியே இருந்ததுன்னா நீங்க தாராளமா உதவி செய்யலாம்." என்றார்.

அவரது பேச்சுக்கு மறு பேச்சுப் பேசாமல் வண்டியைக் கிளப்பினார் டிரைவர். நூறடி தூரம் சென்று பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து வரவும் பயணிகள் துள்ளிக் குதிக்காத குறை. காரணம் சாலையில் எதையுமே காணவில்லை. அப்படி இரு பெண்கள் ரத்தம் வழிய அடிபட்டுக் கிடந்தார்கள் என்ற சுவடே தெரியவில்லை. நடுங்கிப் போய் விட்டார்கள் அனைவரும்.

"சாமி! இதெல்லாம் என்ன? எங்களுக்குப் புரியலியே?"

"உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்ல. இந்த வண்டியில வர மூணு பேரு ஒரு புனிதப்பயணம் மேற்கொண்டிருக்காங்க. அவங்களை அழிக்கத்தான் தீய சக்திகள் இப்படி நாடகம் ஆடுது. அதனால கவலைப் படாம வண்டியை விடுங்க" என்றார் அவர்.

அதன் பிறகு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வண்டி அம்பாசமுத்திரம் வந்து நின்றது. அந்த மனிதரை சந்தித்துப் பேச வேண்டும் என எண்ணி அவரைத் தேடினான் வெங்கி. எங்கேயுமே காணவேயில்லை.

"எல்லாமே அற்புதமா இருக்கு திவ்யா! யாரு அந்த மனிதர் தெரியலியே?" என்றான் வெங்கி.

"நிச்சயமா சித்தரம்மா அனுப்புன ஆளாத்தான் இருக்கு. அதை விடு! இப்ப நாம என்ன செய்யணும்?" என்றாள் திவ்யா.

"ஏதாவது லாட்ஜுல நல்ல ரூம் போட்டு குளிச்சிட்டு அகத்தியர் கோயில் போகணும். அங்க போன பிறகு தான் நமக்கு அடுத்து என்னன்னு தெரிய அரும். சித்தரம்மா சொன்ன மாதிரி, நம்ம முதல் வேலை, சொரிமுத்தையனாரும், சங்கிலி கருப்பனும் குடுத்த வாளையும் குத்தீட்டியையும் கண்டு பிடிக்கணும். அதோட நித்யமல்லியை எப்படி அழிக்குறதுன்ற வழியையும் கண்டு பிடிக்கணும்." என்றான் வெங்கி. அம்பை மண்ணில் காலடி எடுத்து வைத்தவுடன் அவனுள் பல உணர்வுகள். அதோடு மனதில் நம்பிக்கை வேறு பிறந்தது. அதனால் தெளிவாகத் திட்டமிட்டான்.

வெங்கி சொன்னது போலவே ஒரு நல்ல லாட்ஜில் இரு ரூம்கள் போட்டுக் குளித்துத் தயாரானார்கள். அகத்தியர் கோயில் அவர்களை வரவேற்றது. அகத்தீஸ்வரர் என்ற பெயரில் சிவ பெருமானுக்கான கோயில் தான் அது என்றாலும் அகத்தியர் வந்து பூஜித்த தலம் என்பதால் அவருக்கு என தனி சன்னதி இருந்தது. சிவனை வணங்கி விட்டு அகத்தியர் சன்னதிக்கு வந்தனர். மனமாற வேண்டினான் வெங்கி.

"சாமி! எங்களுக்கு வழி காட்டு! நாங்க ஒரு மிகப்பெரிய காரியத்துக்காக வந்திருக்கோம். முதல்ல எங்களுக்கு வாளும், குத்தீட்டியும் இருக்குற இடம் தெரியணும். அதோட நித்யமல்லின்ற தீய சக்தியை அழிக்குற வழியும் தெரியணும். எங்களுக்கு தெய்வம் தான் வழி காட்டணும் சாமி! நீங்களும் தெய்வம் தான்னு நான் பலரும் சொல்லிக் கேட்டிருக்கேன். வழி காட்டுங்க சாமி" என மனமுருகி வேண்டினான். சித்தரம்மாள் சொன்னது போல அம்மன் சன்னதியில் தனது தகட்டை அம்மனின் காலில் படுமாறு வைத்தான். ஏதேதோ காட்சிகள், எண்ணங்கள் தோன்ற அப்படியே நின்றான் வெங்கி.

அப்போது சன்னதியில் ஏற்றி வைத்திருந்த விளக்கு ஆடியது. அகத்தியர் கழுத்திலிருந்த மாலை கீழே விழுந்தது.

திகைத்துப் போனார்கள் மூவரும். இவையெல்லாம் நல்ல சகுனங்களா? இல்லை தீய சகுனங்களா? தெரியவில்லையே? எனக் குழம்பினர். அப்போது நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி அணிந்து கையில் ஏதோ துணி பொட்டலம் வைத்துக்கொண்டு ஒரு மனிதர் அவர்களை நெருங்கினார்.

"நீங்க தான் சென்னையில இருந்து வந்திருக்கீங்களா?" என்றார்.

தலையசைத்தனர் மூவரும்.

"உங்க பேரு சொல்லுங்க"

கூறினர்.

"உம்! அப்ப ஆதித்தன், செம்மலர், வேங்கையன் தான் நீங்க. நேத்து எனக்கு கனவுல அகத்தியரோட உத்தரவு வந்தது. வாங்க! அதோ தெரியுதே பிராகாரம் அங்க போயிப் பேசலாம்" என்று அவர்களை அழைத்துப் போனார்.

"ஐயா! நீங்க யாரு? எங்களை எப்படித் தெரியும்?" என்றான் வெங்கி.

"சொல்றேன் சொல்றேன். நான் ஒரு வள்ளுவன்ப்பா! என் பேரு பாலகுரு. வள்ளுவன்ன்னா ஜோசியன். எங்கிட்ட பல ஏட்டுக்கட்டுக்கள் உண்டு. அதுல சிலது அகத்தியரோட மாணவர்கள் எழுதுனதுன்னு சொல்லுவாங்க. அகத்தியரை நான் என் மானசீக குருவா நெனச்சு வணங்கித்தான் ஜோசியம் சொல்லிக்கிட்டு இருக்கேன்."

"நல்லதுங்க ஐயா"

"மூணு நாள் முன்னால பெருசா பொட்டு வெச்சிக்கிட்டு ஒரு அம்மா வந்தாங்க. பாக்கவே கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. கிட்டத்தட்ட ஆறடி உயரம் அதுக்கேத்த பருமன். நல்ல சிவப்பு நிறத்துல சேலை. அவங்களைப் பார்த்ததும் எனக்கு என்னவோ போல ஆயிரிச்சு. அப்படியே விழுந்து வணங்குனேன். அவங்க என் கையில சில சுவடிகளைக் கொடுத்தாங்க. இதை வெச்சுக்கோ. யார் கிட்டக் கொடுக்கணும்னு உனக்கு உத்தரவு வரும்னு சொல்லிட்டு தண்ணி வாங்கிக் குடிச்சுட்டுப் போயிட்டாங்க." என்றார்.

வந்தவர் சித்தரம்மாவாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தனர் மூவரும்.

"வந்தவங்க சித்தரம்மா தான் சாமி! அவங்க தான் எங்களை இங்க அனுப்புனாங்க." என்றான் பாலா.

"இல்லப்பா! நாச்சியாரம்மாவை எனக்கு நல்லாத் தெரியும். இவங்க வேற. நான் நினைக்குறது சரின்னா, வந்தது வண்டி மறிச்சியம்மானாத்தான் இருக்கணும்." என்றார் பாலகுரு அமைதியாக.

திவ்யா அழுதே விட்டாள். வெங்கியும் பாலாவும் உணர்ச்சி வசப்பட்டனர். ஜோசியர் தொடர்ந்தார்.

"நானும் மூணு நாளா உத்தரவு வரும்னு பார்த்துகிட்டே இருந்தேன். நேத்து தான் வந்தது. நேத்து கனவுல அந்த அம்மா வந்து, இந்த மாதிரி மூணு பேரு வெங்கடேஷ், பாலகிருஷ்ணன், திவ்யான்னு வருவாங்க. அவங்க கிட்ட இந்த ஓலைகளைக் கொடுத்திடு! ன்னு சொன்னாங்க. இதோ அந்த ஓலைகள்" என்று நீட்டினார். மொத்தம் மூன்று ஓலைகள் இருந்தன.

அவற்றை பயபக்தியோடு வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டனர்.

"எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்லிட்டேன். இப்ப உங்க முறை. இதெல்லாம் ஏன் நடக்குது? என்ன காரணம்? நிச்சயமா உங்களுக்குத் தெரியும். சொல்லுங்க. என்னால முடிஞ்ச உதவியை நான் செய்யுறேன்." என்றார் அந்த ஜோசியர்.

"ஐயா! எங்களுக்கும் முழுமையா எதுவும் தெரியாது! தெரிஞ்சதைச் சொல்றோம்" என ஆரம்பித்து பாவநாசக் காட்டில் நடந்தது, நித்யமல்லியும் பொன்வண்டும் அவர்களைத் தேடி சென்னை வந்தது என எல்லாவற்றையும் சொன்னார்கள். ஆதித்தன், பொன் வண்டு மற்றும் செம்மலர் பற்றியும் சொன்னார்கள். தங்களது இப்போதைய நோக்கத்தையும் சொல்லவே அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்.

"அப்பா! நீங்க ரொம்பவும் இளைஞர்களா இருக்கீங்க. அதனால தான் உங்களை நான் வணங்கல. எப்பேர்ப்பட்ட காரியத்துல நீங்க ஈடுபட்டிருக்கீங்க தெரியுமா? உங்களுக்கு வெற்றி கிடைக்க நான் பிராத்திக்கறேன். " என்றார்.

"ரொம்ப நன்றி ஐயா. ஆனா இப்ப நாங்க என்ன செய்யணும்னு தெரியலையே?" என்றாள் திவ்யா.

"என்னம்மா நீங்க? கையில வெண்ணெயை வெச்சுக்கிட்டு நெய்க்கு அலையறீங்க? உங்க கையில தான் ஓலை இருக்கே? அதைப் படிங்க. கண்டிப்பா அதுல இருந்து உங்களுக்கு ஏதாவது தெரிய வரும்" என்றார்.

ஆர்வத்தோடு மூவரும் அந்த ஒலைகளைப் பார்க்க கண்களில் ஏமாற்றம் பிதுங்கியது.

"ஐயா! இதுல என்ன எழுதியிருக்குன்னு படிக்கத் தெரியலையே? வேற மாதிரி தமிழா இருக்கே?" என்றாள் திவ்யா.

"இதுக்குப் பேரு வட்டெழுத்தும்மா! உங்களுக்குத் தெரியலைன்னா நான் படிச்சு சொல்றேன். " என்று கூறி விட்டு அமைதியாகப் படிக்கத் தொடங்கினார்.

மூவரும் அவரைத் தொந்தரவு செய்ய வெண்டாம் என்று எண்ணி சற்றே வெளியில் வந்தனர்.

"இவரை எப்படி நம்புறது? இவர் ஏன் நித்யமல்லியோட ஆளா இருக்கக் கூடாது?" என்றான் வெங்கி.

"இருக்க வாய்ப்பே இல்ல வெங்கி. இது வரைக்கும் நித்யமல்லியும் பொன்வண்டும் கோயிலுக்குள்ள வந்ததே இல்ல. இவரு சொல்லுறதை வெச்சுப் பார்த்தா வண்டி மறிச்சியம்மன் நமக்கு வழிகாட்ட வந்துட்டாங்கன்னு தோணுது. " என்றான் பாலா. அவன் சொன்னது ஏற்புடையாதாக இருக்கவே மௌனமானான் வெங்கி. தாகம் நாக்கை வறட்டவே ஏதாவது ஜூஸ் குடிக்கலாம் என எண்ணி சுற்று முற்றும் பார்த்தான். கோயிலுக்கு வெளியே சற்று தொலைவில் தள்ளுவண்டியில் வண்ண வண்ண குளிர் பானங்களை வைத்துக்கொண்டு ஒருவன் நின்றிருந்தான்.

"என்ன சார்? கூல் டீரிங்க் வேணுமா? எத்தனை கிளாஸ்?" என்றான் அங்கிருந்தே.

"நாலு கிளாஸ் குடுப்பா." என்றான் பாலா.

சட்டென இருவரையும் கையைப் பிடித்து உள்ளே இழுத்தாள் திவ்யா.

"அறிவிருக்கா உங்க ரெண்டு பேருக்கும்? இப்படித்தானே எதையோ வாங்கிச் சாப்பிட்டு நித்யமல்லி கிட்ட மாட்டிக்கிட்டீங்க? கோயிலுக்குள்ள இருக்குற ஜோசியரை சந்தேகப்படுறீங்க? ஆனா இவன் மேல சந்தேகம் வரலியா?" என்றாள்.

சட்டென சுதாரித்தார்கள் இரு நண்பர்களும். கையில் நான்கு பாட்டில்களை வைத்துக்கொண்டு அவர்களை அழைத்தான் அந்த வண்டிக்காரன்.

"வாங்க சார்! சில்லுன்னு மோர் கூட இருக்கு. வந்து சாப்பிடுங்க" என்றான்.

"ரொம்ப வெயில்லா இருக்கு அண்ணே! நீங்க இங்க வந்து குடுங்களேன்." என்றாள் திவ்யா சமயோஜிதமாக.

"கடையை விட்டுட்டு என்னால வர முடியாது" என்றான் அவன் பட்டென.

"இங்க தானே இருக்கு கடை. ஒரு நிமிசம் கூட ஆகாது. வாங்கண்ணே" என்றாள் திவ்யா பிடிவாதமாக. அவள் பேசப் பேசவே அந்த வண்டிக்காரரின் முகம் மாறியது. சட்டென இருட்படலம் சூழ அதில் நித்யமல்லியின் முகம் நீலமாகத் தெரிந்தது.

"என்னடி? உன் அண்ணனையும் காதலனையும் காப்பாத்திட்டதா நெனப்பா? உங்களை நான் போன தடவையும் இணைய விடல்ல. இப்பவும் விட மாட்டேன். ஆதித்தனா இருந்த போதும் சரி, வெங்கியா இருக்கும் போதும் சரி, அவன் எனக்குத்தான். எனக்குக் கிடைக்கலைன்னா யாருக்கும் கிடைக்க விட மாட்டேன்" என்றாள் கடூரமாக. இருளும் நீல நிறமும் கரைந்து போனது. பயந்து நடுங்கி விட்டாள் செம்மலர். தெருவில் நடப்பவர்கள் எதுவுமே நடக்காதது போல நடந்து சென்றார்கள். தங்கள் மூவருக்கும் மட்டும் தான் இவை தெரிந்திருக்கின்றன என புரிந்து கொண்டனர்.

"அவ இங்கேயே வந்துட்டா வெங்கி. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நாம எடுத்து வைக்குற ஒவ்வொரு அடியும் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். தண்ணியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்." என்று அவர்களை இழுத்துக்கொண்டு உள்ளே ஓடினாள் திவ்யா. அங்கே பத்மாசனமிட்டு ஓலைகளைப் படித்துக்கொண்டிருந்த ஜோசியரைப் பார்த்ததும் தான் சமாதானமாயிற்று. இவர்களைப் பார்த்ததும் கண்ணாடியைக் கழற்றி விட்டு நோக்கினார்.

"உக்காருங்கப்பா! ஓலையில பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு! " என்றார் ஜோசியர்.

"முதல்ல தண்ணி வேணும் சாமி! தாகம் ரொம்ப அதிகமா இருக்கு. " என்றான் பாலா. அவனை முறைத்தான் வெங்கி.

கோயிலின் அலுவலக அறைக்குச் சென்று ஆளுக்கு இரண்டு செம்பு தண்ணீர் குடுக்க வைத்தார். பிறகு தான் உயிரே வந்தது அவர்களுக்கு. மீண்டும் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

"இது நீங்க எழுதுன ஓலைதான்ப்பா" என்றார் எடுத்ததும்.

வாயைப் பிளந்து விட்டனர் மூவரும். அவர்களை நோக்கி சிரித்தபடி பேசினார் ஜோசியர்.

"நீங்க இப்ப எழுதுனது இல்லம்மா. நீங்க ஆதித்தன், வேங்கையன்,, செம்மலரா இருந்தீங்க இல்ல, அப்ப எழுதுனது தான் இது. இது ரொம்ப காலமா வண்டி மறிச்சியம்மன் காலடியில இருந்தது. அதை அவ பத்திரமா வெச்சிருந்து குடுத்திருக்காம்மா." என்றார்.

"அதுல என்ன எழுதியிருக்கு சாமி?" என்றாள் திவ்யா.

படிக்க ஆரம்பித்தார் ஜோசியர்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 24:

ஜோசியர் படிக்கப் படிக்க அவர்களுக்கு புகைப்படலமாக நினைவுகள் தோன்றின. அதிலும் வெங்கிக்கு எல்லாமே பளிச்சென நினைவு வந்தது.

"ஆதித்தனாகிய நான் எழுதும் ஓலை. சித்தரம்மாளும், வேம்பு சாமி ஐயாவும் சொன்னபடி நான் இந்த ஓலையை எழுதுகிறேன். இது வெறும் குறிப்புத்தான். நாங்கள் மூவரும் நித்யமல்லியைக் கட்டுவதற்கான பெரு முயற்சியில் இறங்கி இப்போது சிங்கப்பட்டி அரசரின் விடுதிக்குச் செல்ல இருக்கிறோம். எங்கள் உயிரே இதில் போனாலும் போகலாம் என ஐயுறுவதாலும், அடுத்து மீண்டும் நாங்கள் வருவோம் என சித்தரம்மாள் சொன்னதாலும் இந்த ஒலையை எழுதுகிறேன். இதைப் படிக்கும் ஆள், சிங்கப்பட்டி ஜமீனுக்கு சொந்தமான விடுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள வாளையும் குத்தீட்டியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு வேங்கையனையும், செம்மலரையும் கண்டு பிடித்து அவர்களையும் உதவிக்கு அழைத்துக்கொண்ட பிறகே காரியத்தில் இறங்க வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு உதவியாக ஒரு அன்னையும், நவரத்தினத்தின் பெயர் கொண்ட ஒருவரும் வர வேண்டும். நவரத்தினத்தின் பெயர் கொண்டவராலேயே தான் ஆதித்தனாகிய நானும், செம்மலரும் காப்பாற்றப்பட முடியும். அவர்களையும் கண்டுபிடிக்க வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்."

ஓலை முடிந்து போயிருந்தது.

"சாமி! எனக்கு நல்லா நினைவு வந்துட்டுது சாமி. நித்யமல்லியை எப்படி அழிக்குறதுன்னு எனக்கு சொரிமுத்தையனும், பிரம்ம ராட்சசி அம்மனும் சொன்னாங்க கனவுல வந்து. அது எனக்கு இப்பமும் நெனப்பிருக்கு சாமி" என்றான் வெங்கி உணர்ச்சிவசப்பட்ட நிலையில். அப்போது அவனைப் பார்க்க இன்றைய நவ நாகரீக இளைஞன் போலவே இல்லை. அந்தக் காலத்திலிருந்த ஒரு மனிதன் பேசுவது போலிருந்தது. அவனை வியப்புடன் பார்த்தான் பாலா.

"பொறுங்க! இன்னமும் ரெண்டு ஓலைங்க பாக்கி இருக்கு. அதையும் படிச்சுட்டு பிறகு பேசுவோம்" என்றார் ஜோசியர்.

வாசிக்க ஆரம்பித்தார். அது வேங்கையன் எழுதிய ஓலை.

"வேங்கையனாகிய நான் என் தங்கை செம்மலருடன் இணைந்து எழுதும் ஓலை. சிங்கப்பட்டி அரசருக்கு சொந்தமான விடுதி தான் நித்யமல்லியைக் கட்ட ஏற்ற இடம் என்று சித்தரம்மாள் சொன்னதால் குத்தீட்டியையும், வாளையும் அதோடு பூஜித்த மலர்களையும் எடுத்துக்கொண்டு செல்கிறோம். வெற்றி கிடைக்கும். ஆனால் நாங்கள் உயிரோடு இருப்போமா என்பது நிச்சயமில்லை. ஆனால் நாங்களே அவளை அழிக்க மீண்டும் வருவோம் என சித்தரம்மாள் நம்புகிறார்கள் என்பதால் இந்த ஓலை. செம்மலரின் அன்பு தான் என்னையும் ஆதித்தனையும் காக்கும் கவசம் எனக் கண்டு பிடித்து விட்டோம். அவளது தியாகமே எங்களை வாழ வைக்கும் எனச் சொல்கிறார் சித்தரம்மாள். என் தங்கைக்காக நான் தியாகம் செய்ய வேண்டுமே அன்றி எனக்காக அவள் தியாகம் செய்வதை நான் அனுமதிக்க முடியாது. என் தங்கை நலமாக பல காலம் ஆதித்தனோடு வாழ வேண்டும். அதற்காக என்னைத் தியாகம் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். பிறகு எல்லாம் அகத்தீசுவரரின் விருப்பம்."

கண்களில் நீர் தேங்கியிருக்க பாலாவை ஏறிட்டாள் திவ்யா.

"தங்கச்சிக்காக ஒரு அண்ணன் எவ்வளவு தூரம் வரைக்கும் போவான்னு வேங்கையன் நிரூபிச்சுட்டாரே!" என்றாள் கண்ணீர்க் குரலில். பாலா ஆடாமல் அசங்காமல் அமர்ந்திருந்தான். அவனுள்ளும் பல நினைவுகள். "அண்ணா! என்னைப் பத்திக் கவலைப்படாதே! ஈட்டியை வீசு" என செம்மலர்க் கத்துவது போன்ற காட்சி வந்து போனது. கண்கள் தானாக நீரால் நனைந்தன. சற்று நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. கனத்த மௌனம் நிலவியது.

தொண்டையைக் கனைத்துக்கொண்டார் ஜோசியர்.

"இன்னும் ஒரு ஓலை இருக்கு. அதையும் வாசிக்கவா?" என்றார். அவரது அந்த வார்த்தைகள் மூவரையும் நிகழ் காலத்துக்குக் கொண்டு வந்தது.

"ஆதித்தன் காதலியும், வேங்கையனின் தங்கையுமான செம்மலர் எழுதும் ஓலை இது. நித்யமல்லியை அழித்த பிறகு இதை நான் எழுதுகிறேன் சித்தரம்மாளின் உத்தரவுப்படி. பௌர்ணமிக்குள் ஆதித்தனோடு சேர்ந்து குழந்தை பெற முயன்றாள். அவளுக்குப் பொன் வண்டு வேறு துணையாக இருந்தாள். இருவரையும் சேர்த்து சிங்கப்பட்டி அரசரின் விடுதியில் கட்டி விட்டோம். காவலுக்கு பூ ஜாடியில் மலர்களை வைத்திருக்கிறார்கள் சித்தரம்மாளும் வேங்கையனும். அவற்றைத் தாண்டி நித்யமல்லியால் வர இயலாது. அவளது சக்தியை நாங்கள் சற்றே குறைத்து மதிப்புப் போட்டு விட்டோம். பூஜைக்குப் பிறகும், சில சமயம் ஆதித்தனது மனதை அவள் ஆக்கிரமித்துக்கொண்டாள் அவள். அந்நேரங்களில் அவரைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. நித்யமல்லியின் கண்பார்வை ஆதித்தன் மேல் பட விடக் கூடாது என்பதை சற்றே தாமதமாகப் புரிந்து கொண்டேன். முதலில் அவளது கண்களை பிரம்மராட்சசி அம்மன் எனக்கு அளித்த அம்புகளால் குத்தியிருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும். ஆனால் அதை நான் உணரவில்லை. அதனால் என் ஆருயிர்க் காதலர் ஆதித்தனும், என் அருமை அண்ணன் வேங்கையனும் நித்யமல்லியைக் கட்டும் முயற்சியில் வெற்றி பெற்றார்களே தவிர அவர்களால் உயிர் வாழ முடியவில்லை. இதோ நானும் அவர்களைத் தேடி புறப்பட்டு விட்டேன். ஆனாலும் சித்தரம்மாள் கட்டளையிட்டதால் இதை எழுதுகிறேன்.

அவ்வளவு தான். ஓலை முடிந்து விட்டது.

மனம் கனத்துப் போனது மூவருக்கும். திவ்யாவுக்கு நெஞ்சை அடைத்து மயக்கம் வருவது போலிருந்தது. பாலாவும், வெங்கியும் அவளை தாங்கிக்கொண்டார்கள். வெளியில் ஏதோ பயங்கரமான சத்தம் கேட்க ஜோசியர் எழுந்து ஓடினார். திரும்பவும் ஓடி வந்தவர் வெங்கியிடம் கத்தினார்.

"நமக்கு நேரமில்லப்பா! நித்யமல்லி பிரம்ம ராட்சசி அம்மன் குடுத்த அம்புகளைத் தேடிப் போறா. அது மட்டும் அவ கையில கெடச்சதுன்னா அவ்வளவு தான். அவ சக்தியை நம்மால அழிக்கவே முடியாது. உம் சீக்கிரம் போங்கப்பா" என்றார்.

திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தார்கள்.

"சாமி! அது எப்படி உங்களுக்குத் தெரியும்?"

"கோயில் வாசல்லப் போய் பாரு. அங்க ஒரே ரத்தம். அதுல சின்னக் குழந்தையோட கை விரல்கள் இருக்கு. இது தான் வண்டி மறியம்மன் எனக்கு சொன்ன சூசகம். அதுல ரெண்டு விரல் இருக்கு. அப்படீன்னா நமக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு." என்று மீண்டும் கத்தினார். அவரை ஆசுவாசப்படுத்தினர் வெங்கியும் பாலாவும். திவ்யா தண்ணீர் கொடுத்தாள். சற்று நேரம் பெரிய பெரிய மூச்சுக்களாக விட்டார். கண்களை மூடி தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.

"சாமி! இப்ப சொல்லுங்க! அம்மன் உங்களுக்கு என்ன சூசகம் கொடுத்தா?" என்றான் வெங்கி.

"நான் ஒரு வள்ளுவனப்பா! எனக்கு சில நிமித்தங்களும், அது தொடர்பான சுவடிகளும் கையில வரும். வண்டி மறிச்சியம்மன் கொடுத்துட்டுப் போன சுவடிகளை நான் என்னோட மத்த சுவடிகளோட வைக்கப் போனப்ப விளக்கோட சுடர் வேற சில சுவடிகளைக் காட்டுனா மாதிரி எனக்குத் தோணுச்சு. உடனே நான் அந்தச் சுவடிகளை எடுத்துப் படிச்சேன். அதுல ஏதோ ஒரு தீய சக்தியை அழிக்க மூணு பேரு வருவாங்கன்னு இருந்தது. அது மட்டுமில்லப்பா, இப்ப அந்த தீய சக்தி மிகவும் பலம் வாய்ந்ததா ஆகியிருக்கும். எவ்வளவு மரணம் நடக்குதோ அவ்வளவு பலம் அதுக்குன்னு எழுதியிருந்தது."

திவ்யாவுக்கு உடல் நடுங்கியது. வெங்கியும் பாலாவும் நாக்கு உலர்ந்து போனார்கள்.

"வண்டி மறிச்சியம்மன் கொடுத்த ஏதோ ஒரு ஆயுதத்தை அது கைப்பத்த நினைக்குது, அப்படி செய்யணும்னா அதுக்கு ஒரு குழந்தையை பலி கொடுக்கும். ஆனா அந்தக் குழந்தையோட விரல் உனக்கு நேரத்தை உணர்த்தும்னு இருந்துதுப்பா. இப்ப கோயிலுக்கு வெளிய ஒரு விபத்து. அதுல பெற்றோர்களுக்கு எதுவுமே ஆகல்ல. ஆனா அந்த ஒரு வயசுக்குழந்தை நசுங்கி இறந்துடிச்சு. அதோட விரல் மட்டும் தான் தெரிஞ்சது." என்று சொல்லி விட்டுத் தேம்பினார்.

நெஞ்சைப் பிடித்துக்கொண்டான் வெங்கி.

"பாதகி! கொலை பாதகி! அந்த சின்னக் குழந்தை உன்னை என்ன செஞ்சது! கொன்னு போட்டிட்டியே" என நித்யமல்லியை வைதான்.

"அப்பா! நமக்கு நேரமில்லப்பா! நான் படிச்ச ஓலைகள்ல சொல்லப்பட்ட விஷயம் உங்களுக்குப் புரிஞ்சதா இல்லையா?" என்றார்.

"நிறைய விஷயம் புரிஞ்சது சாமி. ஆனா ...." என்றான் பாலா.

"சீக்கிரம் சொல்லுங்கப்பா! நமக்கு நேரமில்ல." என்று அவசரப்படுத்தினார் ஜோசியர்.

"சொரிமுத்தையனாரும், சங்கிலி கருப்பனும் குடுத்த ஆயுதங்கள் எங்கே இருக்குன்னு தெரிஞ்சு போச்சு. அதை எப்படிப் பயன்படுத்தணும்னு தெரிஞ்சது. ஆனா செம்மலருக்கு பிரம்ம ராட்சசி அம்மன் அம்புகள் குடுத்ததா எங்களுக்கு இது வரை தெரியலியே சாமி? அதைப் பயன் படுத்துற விதம் தெரிஞ்சிருந்தும் அது எங்க இருக்குன்னு தெரியலையே?" என்றான் வெங்கி.

யோசனையில் ஆழ்ந்தார் ஜோசியர்.

"ஆமா! இவங்க சொன்ன சம்பவங்கள்ல கூட பிரம்ம ராட்சசி அம்மன் கொடுத்த அம்புகளைப் பத்தி எதுவுமே இல்லையே?" எனத் தனக்குள் முணூமுணுத்துக்கொண்டார்.

"சரி! உங்களுக்கு நித்யமல்லியைஎப்படி அழிக்கணும்னு தெரிஞ்சு போச்சுன்னு சொன்னீங்க! ஆனா நவரத்தினத்தோட பேரு கொண்டவரு, அதோட ஒரு அன்னை இவங்களும் வரணும்னு எழுதியிருந்ததே? அவங்க யாரோ? எங்க இருக்காங்களோ? தெரியலியே? அகத்தீசுவரா! இதென்ன சோதனையப்பா?" என்றார் கலக்கமாக.

"எங்களுக்கு அவங்களை ஏற்கனவே தெரியும் சாமி. எங்களுக்கு வழி காட்டுனாருன்னு சொன்னேனே கரிய மாணிக்கம், அவரு தான் நவரத்தினத்தோட பேரு கொண்டவரு. திவ்யாவோட அம்மா தான் அந்த அன்னை. இவங்க ரெண்டு பேரும் இப்ப அரசு ஆஸ்பத்திரியில சித்தரம்மாவோட கவனிப்புல தான் இருக்காங்க" என்றான் வெங்கி.

ஜோசியரின் முகம் சற்றே நிம்மதியானது. ஆனால் திவ்யா கலங்கிப்போனாள்.

"எங்கம்மாவுக்கு சீக்கிரம் குணமாயிரும் தான். ஆனா கரியமாணிக்கம் ஐயாவுக்கு முகம் முழுக்க கண்ணாடி குத்தியிருக்கே? எப்படியும் பத்து நாள் ஆயிரும்னு டாக்டர் சொன்னதை நீ கேட்டே தானே?" என்றாள் திவ்யா. அதை பாலாவும் ஆமோதித்தான்.

"என்ன இது? சிக்கலுக்கு மேல சிக்கலா இருக்கே?" என்றான் வெங்கி.

"உம்! அப்படித்தான் இருக்கு. சரி முதல்ல நாம நமக்குத் தெரிஞ்ச நம்மால முடிஞ்ச விஷயங்களைப் பத்திப் பேசுவோம். இது வரைக்கும் வழி காட்டுன வனப்பேச்சி நமக்கு திரும்பவும் வழி காட்டாமலா போயிருவா?" என்றான் பாலா.

"அது தான் சரி! முதல்ல நீங்க எப்படி நித்யமல்லியை அழிக்கணும்ன்ற முறையயும், அதுல யாரு என்ன செய்யணும்ன்ற விவரத்தையும் திட்டமிட்டுக்கோங்க. எப்பவுமே திட்டமிடல் ரொம்ப முக்கியம். அதுவும் இது நித்யமல்லி விஷயம். சிறு அலட்சியம் கூட நம்ம உயிருக்கே ஆபத்து." என்றார்.

வயிறு பசித்தது. அதனால் மூளை வேலையே செய்யவில்லை. வயிற்றைப் பிடித்துக்கொண்டான் பாலா.

"என்னப்பா? பசிக்குதா? நான் ஒரு மடையன் காலையில சாப்பிட்ட பிள்ளைங்களை உக்காத்தி வெச்சு இத்தனை நேரம் பேசியிருக்கேனே? முதல்ல வீட்டுக்கு வாங்கப்பா. என்னால முடிஞ்சதை போடுறேன். சாப்பிடுங்க" என்றார் ஜோசியர் பாலகுரு. அவரது அன்பு நெகிழ வைத்தது.

"ஐயா! இங்க ஹோட்டல்..." என இழுத்தான் வெங்கி. அவனை கைகளால் தடுத்தாள் திவ்யா.

"இல்ல வெங்கி! நமக்கே தெரியாத ஆயுதம் எப்ப நித்யமல்லிக்குத் தெரிஞ்சு அதை அவ எடுக்கப் பார்க்குறாளோ? அப்பவே நாம உஷாரா இருக்கணும். பௌர்ணமிக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்குற நிலையில அவ உன்னை தன் வசப்படுத்திக்க எது வேணும்னாலும் செய்வா. அதனால நீ வெளிய எங்கேயும் சாப்பிடவும் கூடாது, குடிக்கவும் கூடாது" என்றாள் கண்டிப்பான குரலில்.

அவள் சொன்னது நியாயமாகப் படவே மூவரும் ஜொசியரின் வீட்டுக்குச் சென்றார்கள். அவர்கள் தெருவில் நடக்கும் போது பலத்த காற்று வீசியது. பகல் நேரமே இரவுப் போழுது போல இருண்டது. வெங்கியின் கழுத்தில் இருந்த தகடு காற்றில் பறந்தது. நல்ல வேளை அதனை அப்படியே பிடித்துக்கொண்டாள் திவ்யா. அவளைக் காற்று உருட்டித் தள்ள, அந்தத் தகடை வாங்கி சட்டென வெங்கியின் கழுத்தில் மீண்டும் போட்டான் பாலா. சட்டென காற்று இருள் என எல்லாம் மறைய ஒரு வாறு வீடு வந்து சேர்ந்தார்கள். கீரை, புளிக்குழம்பு சாதத்தை ஒரு பிடி பிடித்து விட்டு மீண்டும் அமர்ந்தார்கள்.

"சாமி! நித்யமல்லி உங்க வீட்டுக்குள்ளயும் வந்துட்டா என்ன செய்ய?" என்றான் பாலா கவலையாக.

"கவலைப்படாதே! என் மனைவி பிரம்மராட்சசி அம்மனோட பெரிய பக்தை. அவளோட சிலையை வெச்சு பூஜை செய்யுறா. எந்த சக்தியாலயும் என் வீட்டுக்குள்ள அடியெடுத்து வைக்க முடியாது. நாம தைரியமாப் பேசலாம்" என்றார்.

"சாமி! சொரிமுத்தையன் எனக்குக் கொடுத்த ஆயுதம் வெள்ளியால செய்யப்பட்ட வாள். அதைக் கொண்டு நான் நித்யமல்லியோட கால்களை முதல்ல வெட்டணும். அப்பத்தான் அவளால எங்கேயும் போக முடியாது. அதுக்குப்பிறகு சங்கிலி கருப்பு குடுத்த ஈட்டியால பாலா அவளோட கைகளை வெட்டும் அதே நேரம் நான் அவளோட நெஞ்சுல இந்த வாளை இறக்கணும். அதோட அவ சக்தி அழிஞ்சிரும். ஆனா அவளோட உடலோட எந்த பாகமும் பூமியில புதையக் கூடாது. அப்படி புதைஞ்சிடுச்சுன்னா அவளுக்கு மீண்டும் 100 ஆண்டுகளுக்குள்ள சக்தி வருவது மட்டுமல்ல உருவமும் வந்திடும்" என்றான்.

பிரமிப்போடு கேட்டிருந்தார் பாலகுரு.

"உங்களை என்ன சொல்லிப் பேசுறதுன்னே எனக்குத் தெரியல்ல. இத்தனை சின்ன வயசுல எவ்வளவு பெரிய விஷயங்களைப் பேசுறீங்க செய்யுறீங்க? எல்லாம் கடவுள் செயல். ஆனா தம்பி! எப்படி இத்தனை நுணுக்கமான விஷயங்கள் தெரியும் உங்களுக்கு?" என்றார்.

"ஆமா வெங்கி! இதெல்லாம் எங்களுக்கு தெரியவே இல்லையே? உனக்கு மட்டும் எப்படி தெரிஞ்சதுடா?" என்றான் பாலா.

"இன்னைக்குக் காலையில வரைக்கும் எனக்கும் தெரியாது பாலா. ஆனா பஸ்சுல நாம வணங்குனோமே ஒரு ஆளு, அவரு பூசியிருந்த விபூதி என் கண்ணுல வந்து விழுந்தது. அப்ப சில விநாடிகளுக்கு என் கண் முன்னால சில படங்கள் ஓடுறா மாதிரி தெரிஞ்சது. அதுக்குப்பிறகு அகத்தியர் கோயில்ல வெச்சு அம்மன் பாதத்துல என்னோட தகட்டை படும்படி வெச்சேன். அப்ப இன்னும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சது. நாம நித்யமல்லியைக் கட்டுறதுக்கு என்ன செஞ்சோம்னு எனக்குத் தெளிவா தெரிஞ்சு போச்சு. போனதடவை முதல்ல அவ காலை வெட்டாம நெஞ்சை நான் வெட்டுனதால அவ அங்கேயும் இங்கேயும் ஓடி நமக்கு பல காயங்களை ஏற்படுத்திட்டா. நல்லவேளையா செம்மலர் ஓடி வந்து அவ கண்ணுல அம்பை செருகவே நம்மால அவளைக் கட்ட முடிஞ்சது. ஆனாலும் அவளால ஏற்பட்ட காயத்தால நாம துடிச்சு துடிச்சு செத்தோம்." என்றான். கேட்கவே பயங்கரமாக இருக்க பாலாவின் உடல் ஒரு முறை தூக்கிப் போட்டது.

திவ்யா ஓவென அழுதே விட்டாள். அவளை சமாதானப்படுத்தினான் பாலா.

"எல்லாமே ஏதோ ஒரு கனவு போல எனக்கு மனசுக்குள்ள வந்து போகுதுண்ணா! என்னால தாங்க முடியலியே?" என நெஞ்சடைக்க விம்மினாள்.

"திவ்யா! ப்ளீஸ் கொஞ்சம் திடமா இரு. நீ இப்ப செம்மலர் இல்ல. இதோ பாரு, வெங்கி நல்லா இருக்கான். நானும் நல்லா இருக்கேன். நமக்கு இதுக்கெல்லாம் நேரம்மில்ல தங்கச்சி. சமயம் குறைவா இருக்கும்மா" என மென்மையாகப் பேசினான் பாலா.

அவர்களைப் பார்த்தால் சிறிது காலமே அவர்களுக்குள் பழக்கம் என்பது போல இல்லை. ஒரே தாயின் வயிற்றில் பிறந்து பல ஆண்டுகாலம் அண்ணன் தங்கையாக வாழ்ந்தவர்கள் போல இருந்தது. தலையை உலுக்கிக் கொண்டான் வெங்கி. திவ்யாவும் சற்றே சமாதானமானாள்.

ஜோசியர் தவித்துக்கொண்டிருந்தார்.

"தம்பிங்களா! நீங்க யாரை பஸ்சுல வெச்சுப் பார்த்தீங்க? விவரமாச் சொல்லுங்கப்பா." என்று படபடத்தார்.

"நாங்க பயணம் செய்யும் போது எங்களை நித்யமல்லி வசியப்படுத்தப் பார்த்தா. ஆனா பஸ்சுல நெத்தி நிறைய விபூதி பூசி, பெரிய குங்குமம் வெச்சு ஒரு ஆளு பேசவுமே அவளால எதுவுமே செய்ய முடியல்ல. அவரோட விபூதி தான் என் கண்ணுல விழுந்தது."

"அந்த ஆளு எப்படி இருந்தாரு? வயசானவரா?"

"இல்ல சாமி! இளமையாத்தான் இருந்தாரு. பெரிய மீசை. ஆனா கண்ணுல அப்படி ஒரு கருணையும் அமைதியும். எப்படியும் ஆறடிக்கு மேல உயரம் இருப்பாருன்னு நினைக்கிறேன். முகம் ரொம்ப அழகான முகம். வீரமும், கருணையும் தெரிஞ்சது." என்றான் வெங்கி.

அவன் முடிக்குமுன் இரு கரங்களையும் உயரே தூக்கி வணங்கினார் ஜோசியர் பாலகுரு.

"ஐயா சாமி! சொரிமுத்தையனாரே! உன் குழந்தைங்களை காப்பாத்த நீயே வந்தியா? எஞ்சாமி" என்றார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

மெய் சிலிர்த்தது பாலாவுக்கு. திவ்யாவால் பேசவே முடியவில்லை.

"வந்தது சொரிமுத்தையானார்னு எப்படி சொல்றீங்க சாமி? அது சங்கிலி கருப்பனாக் கூட இருக்கலாமே?" என்றான் வெங்கி.

"இல்லப்பா! சங்கிலிகருப்பைப் பத்தி உனக்குத் தெரியல்ல. அதான் கேக்குற. அவன் ராமரோட மகனப்பா. அதனால நாமம் தான் போடுவாரு. சொரிமுத்தையன் அந்த சிவன் மகன். அதனால பட்டையா விபூதி போட்டு அம்மா பார்வதி நினைவா குங்குமமும் பூசுவாருப்பா" என்றார்.

"எங்களை அந்த சாமி தான் காப்பாத்துச்சு. சொரிமுத்தையனாரே மத்த விஷயங்களையும் தெரிய வெச்சிருப்பா! ஏன்னா இன்னமும் சில விஷயங்கள் நமக்குத் தெரியலையே?" என்றான் பாலா.

"உம்! உதாரணமா செம்மலருக்கு பிரம்ம ராட்சசி அம்மன் குடுத்த அம்புகள் எங்கே இப்ப? அதோட நித்யமல்லியை சிங்கப்பட்டி காட்டு பங்களாவுக்கு எப்படி வரவழைக்க? இதுக்கெல்லாம் நமக்கு பதில் தெரியல்ல. ஆனா கால அவகாசம் மட்டும் குறைஞ்சுக்கிட்டே வருதே?" என்றான் வெங்கி கவலையாக.

"அது தான் எனக்கும் கவலையா இருக்கு. நல்லா யோசிச்சுப் பாருங்க! வேற ஏதாவது விஷயம் நீங்க மறந்துட்டீங்களா?" என்றார் ஜோசியர்.

சிந்தனையில் ஆழ்ந்தனர். வரிசையாக யோசித்துக்கொண்டே வந்தான் வெங்கி. பாவநாசம் காட்டில் கன்னிமார் துறையில் நடந்தது முதல் கோயிலில் கரியமாணிக்கத்தை சந்தித்தது வரையில் வந்து போக ஒரு இடம் இடறியது.

சென்னையில் தானே நாங்கள் கரியமாணிக்கத்தை சந்தித்தோம். அப்போது அவர் என்ன சொன்னார்? நாங்களும் அப்போது ஏதோ பெருமாள் கோயில் பற்றியல்லவா பேசிக்கொண்டிருந்தோம்? ஏதோ ஒரு காடு என்று வருமே? அந்தப் பெருமாள் கோயிலுக்கு நாங்கள் இன்னமும் போகவே இலலையே? அது என்ன கோயில்? அவருக்கே ஃபோன் செய்து கேட்டால் என்ன? என யோசித்தான் வெங்கி.

"என்னடா?"

"நாம ஒரு கோயில்லே வெச்சு தானே கரியமாணிக்கம் சாரை முத முத பார்த்தோம்? அப்ப, ஏதோ ஒரு கட்டுக்கோயிலுக்குப் போகணும்னு நாமளும் பேசிக்கிட்டு இருந்தோம், அவரும் வந்தாரே? நினைவு இருக்கா உனக்கு? அந்தக் கோயிலுக்கு இது வரையில நாம போகவே இல்லையே?" என்றான் வெங்கி.

சட்டென சொடுக்குப் போட்டான் பாலா.

"ஆங்க்! நல்லா நினைவு இருக்கு. நாம ஒரு பெருமாள் கோயில் பத்திப் பேசிக்கிட்டு இருந்தோம். அது....வந்து...ஏதோ காடு....களக்காடுன்னு நினைக்கிறேன்." என்றான்.

"களக்காடாப்பா? நல்லா நினைவு இருக்கா? ஏன் கேக்குறேன்னா அங்க தான் காட்டுக்குள்ள அழகிய பெருமாள் கோயில் இருக்கு." என்றார் ஜோசியர்.

அழகிய பெருமாள் பெயரைச் சொன்ன அதே நேரம் ஒரு விநாடி காற்று அப்படியே நின்றது போல ஆகி விட்டது. சுவாசிக்கத் தேவையான காற்று கூடக் கிடைக்கவில்லை நால்வருக்கும். மூச்சு விட முடியாமல் திணறினார்கள் அவர்கள். நேரம் ஆக ஆக காற்றே இல்லாத வெற்றிடம் போல ஆனது அந்த அறை.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 24:

மூச்சு விட முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர் நால்வரும். அதிலும் ஜோசியர் வயதானவர் பாவம். அவரது கண்கள் வெளியே பிதுங்கத் தொடங்கி விட்டன. பாலாவோ மயக்க நிலையை அடைந்து கொண்டிருந்தான். சட்டென முடிவெடுத்தாள் திவ்யா. தனது மூச்சு முட்டலை அலட்சியப்படுத்தி அந்த வீட்டில் இருந்த சாமி அறையை நோக்கி முடிந்த மட்டும் வேகமாகப் போனாள். ஆனால் அவளால் நகரவே முடியவில்லை. கத்த நினைத்தால் ஏதோ பந்து போல தொண்டையை அடைத்தது. இன்னும் சிறிது நேரம் இப்படியே இருந்தால் போய்ச் சேர வேண்டியது தான். கோடாக மூக்கிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது திவ்யாவுக்கு. ஆனாலும் வெங்கியையும், பாலாவையும் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற உத்வேகம் அவளை உந்தியது. "வனப்பேச்சி, சங்கிலி கருப்பா, சொரிமுத்தையனாரே" என மந்திரம் போலச் சொல்லியபடி ஊர்ந்தாள். கதவு வருவதற்குள் அவர்களுக்கு ஏதேனும் ஆகி விடக் கூடாதே என்ற பயம்.

"அம்மா! வனப்பேச்சி! ஏற்கனவே ரெண்டு பேரு ஆஸ்பத்திரியில ரொம்ப முடியாம இருக்காங்கம்மா. பாவம் ஜோசியர். எங்களுக்கு உதவி செஞ்ச பாவத்துக்கு அவரோட உசுரும் போகணுமா தாயே?" என மனதுக்குள் கதறினாள். கால்களுக்கு சற்றே சக்தி உண்டாக சட்டெனப் பாய்ந்து அந்த பூஜை அறைக்கதவைத் திறந்தாள். திறந்ததுமே குளிர்ந்த காற்று அவளது சுவாசத்தைத் தழுவியது. வாயைத் திறந்து காற்றைக் குடித்தவற்றே அங்கிருந்த பிரம்ம ராட்சசி அம்மன் சிலையை பயபக்தியோடு தூக்க முயற்சி செய்தாள். அதே நேரம் "அகத்தீசுவரா" என்ற ஜோசியரின் அலறல் கேட்க அப்படியே அமர்ந்து விட்டாள்.

"பாவம் ஜோசியர்! எங்களுக்கு உதவப்போய் இப்படி அநியாயமாக இறந்து போய் விட்டாரே? நித்யமல்லி? நீயெல்லாம் ஒரு பெண்ணாடி? உனக்கு ஈவு இரக்கம் என்பதே இல்லையா? உன்னை அழித்தே தீருவேன்! இன்னமும் நீ என்னென்ன வேலைகள் செய்து யார் யாரை சித்திரவதை செய்யப் போகிறாயோ? அதற்கு நான் விட மட்டேன்." என்று உறுதி எடுத்துக்கொண்டு மீண்டும் கூடத்துக்கு வந்தாள் திவ்யா. அங்கே அவள் கண்ட காட்சி.....

ஜோசியர் தரையில் கிடந்தார். வெங்கியும், பாலாவும் அவரை நோக்கிக் குனிந்திருந்தனர்.

"என்ன ஆச்சு வெங்கி?" என்று பதறியபடி பயத்தோடு அருகில் சென்றாள். ஜோசியரின் கண்கள் மூடியிருந்தாலும் ஏறி இறங்கும் அவரது மார்பு உயிர் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால் கழுத்திலிருந்து ரத்தம் மெல்லிய கோடாய் வழிந்து கொண்டிருந்தது. அப்போது மஞ்சள் பூசியமுகமும், சற்றே குண்டான உடலமைப்பும் உள்ள ஒரு பெண் வந்தாள்.

"என்ன ஆச்சு இவருக்கு?" என்றாள். அவரது குரலில் அதிகாரம். அவளைக் கண்டதும் திவ்யாவுக்கு அழுகை பெருகியது. "அம்மா" என்ற அலறலுடன் கட்டிக்கொண்டாள். அந்தப் பெண்மணியும் தட்டிக்கொடுத்து சமாதானப்படுத்தினாள்.

"அம்மா! நாங்க பேசிக்கிட்டு இருந்தோம். களக்காடு பெருமாள் கோயில் பத்தி ஐயா சொல்லிக்கிட்டு இருக்கும் போதே, காத்தே இல்லாமப் போச்சு. எங்களுக்கு கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வந்தது. அப்ப திடீர்னு கத்திக்கிட்டே ஜோசியர் கீழே விழுந்துட்டாரும்மா. கண்ணே தொறக்கல்ல. கழுத்துல இருந்து ரத்தம் வருது. பயமா இருக்கும்மா. எங்களால அவருக்கு இந்த நிலை வந்துட்டுதே" என்று கதறினான் வெங்கி.

அவனை அமைதியாக ஒரு பார்வை பார்த்தாள் அந்த அம்மாள். எதுவும் பேசாமல் குனிந்து ஜோசியரைப் பார்த்தாள். சாமி அறைக்குள்ளே சென்று ஏதோ வேர்கள், காய்ந்த பச்சிலைகளைக் கொண்டு வந்தாள். வேரை எடுத்து மூக்கில் காட்ட மெல்லக் கண்கள் திறந்தார் ஜோசியர். பச்சிலையை கழுத்தில் வைத்துக் கட்டினாள் அந்த அம்மாள். சிறிது நேரத்தில் எழுந்து அமர்ந்து கொண்டார் ஜோசியர்.

"நீ எப்படி இங்கே வந்த பேச்சியம்மா? நீ திருநெல்வேலிக்கு உன் தம்பி வீட்டுக்கு இல்ல போயிருந்த?" என்றார் ஜோசியர். அப்போது தான் அந்த அம்மாள் ஜோசியரின் மனைவி எனத் தெரிந்தது அவர்களுக்கு.

"உம்! அங்க தான் போனேன். ஆனா அதை விட முக்கியமான வேலை இங்க இருக்குன்னு மனசுக்குள்ள அம்மன் உத்தரவு குடுத்தா!. அதான் வந்தேன். இவங்க மூணு பேரும் தானா?" என்றாள். ஆமெனத் தலையசைத்தார் ஜோசியர்.

"நித்யமல்லி ரொம்ப பலம்மா எதிர்க்குறா ரொம்பவே எச்சரிக்கையா இருக்கணும். வனப்பேச்சியோட அண்ணன் கோயிலுக்கு போயிட்டு வாங்க. எல்லாம் சரியாப் போகும். முதல்ல மூணு பேரும் இந்த மூலிகை கலந்த தண்ணியைக் குடிங்க. கொஞ்சம் அதிர்ச்சி விலகும்." என்று வாசனையாக இருந்த தூய நீரை கொடுத்தாள். ஆவலோடு வாங்கிப் பருகினர்.

"சரி! அப்ப நான் கிளம்புறேன். வந்த வேலை முடிஞ்சது." என்றாள்.

"பேச்சி! எதுக்கு இப்ப வெளியூர்ப் போற? இன்னமும் நிறைய விஷயம் தெரிய வேண்டியிருக்கும்மா. எங்களுக்கு ஒத்தாசையா இருக்கலாம் இல்ல?" என்றார்.

"நான் எப்பவும் உங்களுக்கு உதவியாத்தான் இருக்கேன். ஒரு நாள் என் தம்பி வீட்டுக்குப் போறதுக்கு இப்படி மூஞ்சியைத் தூக்குறீங்களே? " என்றாள். "சரிம்மா உன் இஷ்டம்" என்பதோடு நிறுத்திக்கொண்டார் ஜோசியர். சற்று நேரத்தில் அந்த அம்மாள் போய் விட்டாள். திவ்யாவின் தலையில் கை வைத்து ஆசீர்வாதமும் செய்தாள். "உன் மனசுல இருக்குற பாசமும், காதலும் என்னைக்கும் இப்படியே இருக்கட்டும்" என்றாள்.

அவள் போன பிறகி சாமி அறைக்கதவைத் திறந்தே வைத்தார்கள்.

"ஐயா! நீங்க களக்காடு பெருமாள் கோயில்...அழகிய..." என்று சொல்லி விட்டு பயத்தியடு சுற்றுமுற்றும் பார்த்தான் பாலா. அவனை சமாதானப்படுத்தினாள் திவ்யா. "இனிமே பயமில்ல அண்ணா! நாம தைரியமா திட்டம் போடலாம்." என்றாள்.

"நானே கேக்கணும்னு நெனச்சேன். என்ன ஆச்சு ஐயா உங்களுக்கு? எப்படி நமக்கு சுவாசிக்க காத்து கெடச்சது?" என்றான் வெங்கி ஆர்வமாக.

"நான் ஒண்ணுமே செய்யல்லப்பா! காலம் காலமா ஆண்களை ஆபத்துல இருந்து காப்பாத்துற பெண்ணோட சக்தி தான் இப்பவும் நம்மைக் காப்பாத்திச்சு." என்று சொல்லி விட்டு திவ்யாவைப் பார்த்தார், எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள் அவள்.

"ஐயா?"

"ஆமாம்ப்பா! திவ்யா தான் நம்மைக் காப்பாத்துனா! நாம சுவாசிக்க முடியாமத் திணறும் போது நம்மை எப்படியாவது காப்பாத்தணும்குற எண்ணம் அவளுக்கு வலு குடுத்தது. எப்படியோ கஷ்டப்பட்டு சாமி அறைக் கதவைத் திறந்துட்டா. அங்க தான் பேச்சி பூஜிக்குற பிரம்மராட்சசியோட சிலை இருக்கே? அதுல இருந்து வெளியேறின சக்தி நித்யமல்லி ஏற்படுத்தின காற்றுக்கட்டை அவிழ்த்து விட்டுடுச்சு. அதைத் தாங்க முடியாத அவ என் கழுத்துல தன் நகத்தால குத்திட்டிப் போயிட்டா. நல்லவேளை பேச்சியம்மா வந்து என்னைக் காப்பாத்துனா! இல்லேன்னா என் கதி என்ன ஆகியிருக்குமோ?" என்றார்.

இரு பெண்கள் சேர்ந்து மூன்று ஆடவர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். நன்றியோடு திவ்யாவை நோக்கினார்கள். ஏதோ பேச வாயெடுத்த வெங்கியை அதட்டினாள் திவ்யா.

"இப்ப இந்த பாராட்டுப் பேச்சுக்கெல்லாம் இடமில்ல வெங்கி. நமக்கு சமயம் ரொம்ப குறைவா இருக்கு. முதல்ல பெருமாள் கோயிலுக்குப் போகணும். அப்பத்தான் எல்லாமே சரியாகும்." என்றாள்.

"ஆமா தம்பிங்களா! இந்தப் பிள்ளை சொல்றதும் உண்மை தான். அழகிய பெருமாள் கோயிலுக்குப் போனா எல்லாம் விளங்கிரும்." என்றார்.

"ஐயா! நாளை ஒரு நாள் தான் நமக்கு சமயம். இதுல நாம அம்புகளைத் தேடணும். அதோட நித்யமல்லியை காட்டு பங்களாவுக்கு வரவழைக்கணும். அவளுக்குத் தெரியாம நாம முன்னாடியே போய் அந்த வாளையும் குத்தீட்டியையும் எடுக்கணும். இவ்வளவு வேலை இருக்கும் போது .....நாம .....இப்பப் போயி களக்காடுன்ன்னா..." இழுத்தான் வெங்கி.

"வேற வழியில்லப்பா! களக்காடு இங்க இருந்து ரொம்பத் தள்ளி இல்ல. மலைஅடிவாரம் வரை பஸ் போகுது. அங்க இருந்து காட்டுக்குள்ள ஜீப்ல கொண்டு போயி விடுவாங்க. அரை நாள்ல போயிட்டு வந்துடலாம்" என்றார் ஜோசியர் நம்பிக்கையாக.

"ஐயா! டயம் பார்த்தீங்களா? இப்பவே நாலு மணி."

"இருக்கட்டும்! கிளம்புங்க" என்று எழுந்தார் பெரியவர். வேறு வழியில்லாமல் அவரைத் தொடர்ந்து எழுந்தனர் மூவரும். அம்பாசமுத்திரம் பஸ் ஸ்டேண்டுக்குச் சென்று பஸ் பிடிப்பது என முடிவு செய்து கொண்டார்கள். கார் அனுபவத்திலிருந்து அவர்களுக்கு தனிப்பட்ட வண்டியை வாடகைக்குப் பேசவே பயமாக இருந்தது. அம்பை பஸ் ஸ்டேண்ட் அந்த நேரத்தில் மிகவும் கலகலவென இருந்தது. ஒரு புறம் டீக்கடைகள், ஒரு புறம் பழக்கடைகள், ஒரு புறம் பஜ்ஜி போண்டா விற்கும் கடைகள் என நிறைந்திருந்தது. மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. வெங்கிக்கு வெறுப்பாக வந்தது. எப்போது பஸ் வந்து, எப்போது இவர்கள் களக்காடு போய்ச் சேர? எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்கிறார்கள். அப்படியானல் ஆறரை மணியாகி விடும். இருட்டிய பிறகு எங்கே போய் எதைத் தேட? சே! அறிவு கொண்டே யாரும் யோசிக்கவில்லை.

"சார்! வண்டி களக்காடு போகுது! ஏற்கனவே ஒரு பாசஞ்சர் இருக்காங்க. நீங்களும் வரீங்களா? ஒரு ஆளுக்கு 300 ரூவா" என்றான் ஒருவன்.

வெங்கி சட்டெனக் கலைந்து அவனைப் பார்த்தான். டாக்சி டிரைவர்கள் அணியும் யூனிஃபாரம். கழுத்தில் ஏதோ துளசி மாலை போல. இவனை நம்பலாமா கூடாதா? இவனும் நித்யமல்லியின் ஆளாக இருந்து, களக்காடு என்று சொல்லிக் கூட்டிப் போய் எங்காவது விட்டு விட்டால் என்ன செய்ய? " யோசித்தான்.

"தம்பி! ரொம்ப கனமா இருக்குப்பா! இதைக் கொஞ்சம் வாங்கு" என்று அவனிடம் ஏதோ ஒரு பையை நீட்டினார் ஜோசியர். அவனும் வாங்கி வைத்துக்கொண்டான்.

"சரிப்பா! நாங்க வரோம். வண்டி எங்கே இருக்கு?" என்றார் ஜோசியர். அவரை இழுத்தான் வெங்கி.

"ஐயா...என்ன நீங்க?...இவன் யாருன்னு தெரியாம..." இழுத்தான்.

"அதுக்குத்தான் அவன் கிட்ட சிவலிங்கம் அடங்கிய பையைக் கொடுத்தேன்ப்பா. நித்யமல்லியால அதைத் தொடக் கூட முடியாது. பாரு. இவன் சாதாரணமா இருக்கான். நம்பலாம் இவனை" என்றார். சமாதானமானான் வெங்கி.

"வண்டி எங்கேப்பா?" என்றார் ஜோசியர் மீண்டும். அவன் காட்டிய வண்டியைப் பார்த்ததும் அந்த நிலையிலும் சிரிப்பு வந்து விட்டது. அநேகமாக 1960களில் அந்த வண்டியை செய்திருப்பார்கள் போல. அரதப்பழசாக காட்சியளித்தது அந்த வெள்ளை அம்பாசிடர் வண்டி.

"இது களக்காடு வரைக்கும் போகுமா? அப்படியே போனாலும் நாளைக்குக் காலையில தான் கொண்டு போயி விடுவே போல! நாங்க அவசரமாப் போகணும்ப்பா. பஸ்சிலயே போய்க்கறோம்" என்றான் பாலா. திவ்யா சிரித்து விட்டாள்.

"சார்! வெளியில பார்த்துட்டு எடை போடாதீங்க சார்! என் அழகு சும்மா காத்துல பறப்பான். ஒரு மணி நேரத்துல களக்காடு போயிரலாம்." என்றான் டாக்சிக்காரன்.

"அழகா? அது யாருப்பா? நீ வண்டி ஓட்ட மாட்டியா?"

"என் பேரு நல்லமுத்து. என் வண்டி பேரு தான் அழகு. வாங்க போகலாம்." என்றான். சிரித்தபடியே வண்டியில் ஏறினர். நால்வரும். முன் சீட்டில் ஏற்கனவே ஒரு பயணி அமர்ந்திருந்தார். வயதான மனிதர். கோயிலில் வேலை செய்பவரைப் போலத் தோற்றம். நெற்றி பட்டையாக நாமம். நாலு பேரும் நெருக்கி அமர்ந்து கொண்டனர். பாவம் திவ்யா தான் ஜன்னலோர சீட்டில் ஒண்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். தவறுதலாகக் கதவு லேசாகத் திறந்தாலும் போதும் அவள் வெளியில் விழ வேண்டியது தான்.

"ஏம்ப்பா! இப்படி ஒரு வண்டியில கூட்டிக்கிட்டுப் போயிட்டு மனசாட்சியே இல்லாம 300 ரூவா கேக்குறியே? நியாயமா?" என்றார் ஜோசியர்.

"பஸ் சர்ஜே 120 ரூவா ஆகும் சார். சும்மா அழகு உங்களை அப்படியே தூக்கிட்டுப் போயி விட்டுருவான். அதுக்கு 300 குடுக்க மாட்டீங்களா?" என்றான்.

"ஏண்டா அம்பி! இவா கிட்ட 300 ரூவா தான் வாங்குற. எங்கிட்ட மட்டும் ஏண்டா 325?" என்றார் முன் சீட்டில் அமர்ந்திருவர்.

"சொகுசா முன் சீட்டுல உக்காந்து வரீங்க இல்ல? அதுக்குத்தான் 25 எக்ஸ்டிரா" என்றான்.

அவருடன் பேசி ஆண்கள் அனைவரும் பின் சீட்டில் அமர்ந்து கொள்வது எனவும், திவ்யா சௌகரியமாக முன் சீட்டில் அமர்வது எனவும் முடிவு செய்து அப்படியே செய்தார்கள். போகும் வழியெங்கும் நல்ல முத்துவும், அந்த கோயில் ஐயரும் சளசளவெனப் பேசிக்கொண்டே வந்தார்கள்.

நல்லமுத்து சொன்னது போல உண்மையிலேயே வண்டி நல்ல கண்டிஷனில் தான் இருந்தது. அறுவரைச் சுமந்து கொண்டு வேகமாகவே போனது. ஏசி இல்லாததால் ஜன்னலைத் திறந்து கொண்டு வந்தார்கள். மெல்ல மெல்ல இருட்டத்தொடங்கியது. வழியில் சின்னதாக ஒரு ஊர் வர வண்டியை நிறுத்தினான் நல்லமுத்து. ஏனென்று கேட்க

"பெட் ரோல் போடணும் சார்" என்றான்.

"பக்கத்துல எங்கேப்பா பம்ப் இருக்கு?"

"பெட் ரோல் வண்டிக்கு இல்ல சார். எனக்கு. ஒரு டீ குடிச்சாத்தான் என்னால ஓட்ட முடியும். வாங்க வந்து நீங்களும் டீ சாப்பிடுங்க. இங்க டீ சூப்பரா இருக்கும்." என்றான். கோயில் ஐயரும் போனார். வெங்கிக்கு பயம். இனிமேல் ஆயுளில் டீயோ காப்பியோ நிம்மதியாக பயமில்லாமல் குடிக்க முடியுமா? என்ற எண்ணம் ஓடியது. மணியைப் பார்த்தான் ஐந்தேகால் என்றது. பரவாயில்லையே வண்டி வேகமாகத்தான் வந்திருக்கிறது போல.

"ஏன்ப்பா! இன்னும் அரை மணியில களக்காடு போயிரலாமா?" என்றான் பாலா.

"முடியாது சார்" என்றான் நல்லமுத்து.

"என்னப்பா? சீக்கிரமா கூட்டிக்கிட்டுப் போறேன்னியே?"

"சொன்னேன் தான். அதான் கூட்டிக்கிட்டு வந்துட்டேன் இல்ல. இது தான் களக்காடு. அதோ தெரியுது பாருங்க மலை" என்று காண்பித்தான்.

தூரத்தில் பஞ்சுப் பொதிகளாய் மேகங்கள் விளையாட வானுயரத்தில் மலை அழகாகக் காட்சியளித்தது.

"ஓ! கோயிலுக்குத்தான் வரேளா? வாங்கோ! நான் தான் அந்தக் கோயில் பூசாரி. சாமி கும்பிட வந்தேங்குறேள் ஆனா கையில வெத்திலை பாக்கு பழம் எதுவுமே இல்லையே?" என்றார்.

"இங்க வந்து வாங்க்கிகலாம்னு இருந்தோம் சார்" என்றான் வெங்கி.

கார் மீண்டும் விரைந்தது. ஐந்தே நிமிடத்தில் மலை அடிவாரம் வந்து விட்டது. ஆங்காங்கே ஜீப்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தேங்காய், பழம், கற்பூரம் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.

"மலைக்கோயில்னாங்க? பார்த்தா கோயில அடிவாரத்துலயே இருக்கே?" என்றான் வெங்கி. அதானே என அதை ஆமோதித்தார்கள் திவ்யாவும் பாலாவும். கோயில் ஐயரை நோக்கிப் போனார்கள்.

"இது தான் கோயிலா சாமி? எங்க கிட்ட மலை மேல இருக்குன்னு சொன்னாங்களே?" என்றான் பாலா.

"ஓ! உங்களுக்கு மலை நம்பியை சேவிக்கணுமா? அந்தக் கோயில் மலை மேலே தான் இருக்கு. நான் தான் பூசாரி. என்னைக்காவது உங்களை மாதிரி யாராவது வந்து கேட்டா தான் போவேன். இல்லைன்னா தினம் தினம் ஜீப்புக்கு பணம் குடுத்துப் போக என்னால முடியுமா?" என்றார்.

மலை நம்பி தான் அழகிய பெருமாள் எனத் தெரிந்து கொண்டு ஜீப்பை வாடகைக்குப் பேசி அமர்ந்தார்கள். அவர்களுடனே பூசாரியும் ஏறிக்கொண்டார். அரை மணி நேரத்தில் திரும்பி விட வேண்டும் இல்லையென்றால் இருட்டில் மலைப்பாதையில் ஜீப் ஓட்ட முடியாது என்றார் ஜீப்காரர். சம்மதித்துச் சென்றனர். மேலே ஏற ஏற குளுமையும் இருளும் அதிகரித்தது. ஆனாலும் மனதில் பயம் வரவில்லை. மூலிகைகளின் வாசம், ஆங்காங்கே பாறைகளில் ஓடும் காட்டொடைகள் என பார்த்துக்கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

சற்றே சமவெளியாகத் தெரிந்த ஒரு இடத்தில் ஜீப்பை நிறுத்தினார் டிரைவர். இறங்கிச் சுற்று முற்றும் பார்த்தனர். அதற்குள் ஓரளவு இருட்டி விட்டது என்றே சொல்ல வேண்டும். அவர்களைத் தவிர யாரும் இல்லை. பூசாரி நடக்க அவரைத் தொடர்ந்து மூவரும் வேகமாக நடந்தனர்.

"பூஜையை சீக்கிரம் முடிங்க சாமி." என்றார் டிரைவர் மீண்டும். தலையசைத்து விட்டு நடந்தார் பூசாரி.

கோயில் என்றதும் வானளாவிய கோபுரம், நீண்ட பிரகாரங்கள், மண்டபங்கள் என கற்பனை செய்து வைத்திருந்த வெங்கிக்கும் ஏமாற்றமாக இருந்தது. சிறு இரும்புக் கதவு அதன் பின்னே தெரிந்த சிறிய கோயில். அவ்வளவு தான்.

"இதுவா கோயில்?" என்றான் வெங்கி.

"ஆமாம்ப்பா! மத்த கோயில்கள் எல்லாம் கல், இல்லை செங்கல்லால கட்டியிருப்பா. ஆனா இது அப்படி இல்லை. மலையில இயற்கையா அமைஞ்சிருந்த குகையை நன்னா ஆழப்படுத்தி அந்தக் கல்லுலயே பெருமாளை செதுக்கியிருக்கா. பாருங்கோ" என்று சொல்லி அவர்களை உள்ளே அழைத்துப் போனார்.

மின்சார இணைப்பு இல்லை. ஆகையால் பூசாரி விளக்கேற்றியதும் அந்த இடமே தங்க நிற வெளிச்சத்தில் ஜொலித்தது. சிலையைப் பார்த்தவர்களுக்கு ஏன் இவருக்கு அழகிய பெருமாள் என்று பெயரிட்டனர் எனப் புரிந்தது. முகத்தில் அத்தனை அழகு, அத்தனை கருணை. அர்ச்சனையை முடித்து அனைவருக்கும் பிரசாதமாக பழத்தைக் கொடுத்தார். சாமி கும்பிடும் போதே ஏதாவது நடக்கும் என எதிர்பார்த்தனர் நால்வரும். அப்படி எதுவும் நடக்கவில்லை. படிகளில் இறங்கும் போது ஜோசியரிடம் இது பற்றிக் கேட்டாள் திவ்யா. அவருக்கும் ஒன்றும் தெரியவில்லை என்பதை அவரது மௌனம் சொல்லியது. வெங்கிக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. சமாளித்துக்கொண்டு படியிறங்கினர்.

பூசாரி ஜீப்பில் ஏறி விட்டார். வெங்கி தான் முதலில் படியிறங்கினான். அவனது கால் நிலத்தில் பட்டது தான் தாமதம், எங்கிருந்தோ பயங்கரமான காற்று வந்து தாக்கியது. காற்றென்றால் சாதாரணமானது இல்லை. காற்றில் ஒரே மண். அதனால் அவர்களால் பார்க்கவே முடியவில்லை. ஜீப்பிலிருந்த பூசாரியும் டிரைவரும் ஓவெனக் கத்தினார்கள். வெங்கி எப்படியாவது ஜீப்பை அடைந்து விட வேண்டும் என முன்னேற நினைத்தான். ஒரு அடி முன்னால் வைத்தால் காற்று அவனை இரண்டடி பின்னால் தள்ளியது. படியில் அப்படியே அமர்ந்து விட்டான் அவன். அவனைத் தொடர்ந்து இறங்கிய ஜோசியராலும் நடக்கவே முடியவில்லை. திவ்யா கோயிலுக்குள்ளே தான் இருந்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஜீப் டிரைவர் என்ன நினைத்தானோ ஜீப்பை எடுத்துக்கொண்டு பறந்து விட்டான். பூசாரி "அவாளை விட்டுட்டுப்போறோமே?'"எனக் கத்தியதை அவன் லட்சியமே செய்யவில்லை. ஜீப் கண் பார்வையை விட்டு மறைந்ததும் காற்றும் சட்டென நின்று விட்டது. கொயில் வாசலில் சிதறிக்கிடந்த மண் மற்றும் இலைக் குவியலிலிருந்து தான் அப்படி ஒரு காற்று சில விநாடிகள் முன்பு வரை வீசியது எனத் தெரிந்து கொள்ள முடியும். மற்றபடி இலை கூட சையவில்லை.

பயத்தோடு படியில் அமர்ந்தார்கள்.

"என்ன இது? நடக்குறது எல்லாமே ஒரே மாயமா இருக்கே?" என்றான் ஜோசியர்.

மாயம் என்றதும் வெங்கிக்கு நித்யமல்லியின் நினைவு வந்தது. இது எல்லாமே அவளின் மாய வேலை தானோ? எங்களை மலையிலேயே தங்க வைத்து தீர்த்துக்கட்டப் பார்க்கிறாளோ? அப்படியானால் என்ன செய்ய? எங்களோடு ஜோசியர் வேறு வந்திருக்கிறார். அவரைப் பாதுகாப்பது தான் முதல் கடமை. பேசாமல் நடந்து கீழே இறங்கலாமா? ஏனெனில் ஜோசியரை இரவு நேரத்தில் இங்கே தங்கச் செய்வது நல்லதல்ல. அவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் எங்களால் பதில் சொல்ல முடியாது. என யோசித்துக்கொண்டிருந்தான்.

"பேசாம நாம நடந்து போயிடலாமா?" என்றான் வெங்கி.

"அதைத்தான் நானும் நெனச்சேன் வெங்கி. ராத்திரி நேரத்துல நாம இங்க தங்குறது நல்லதில்ல." என்றாள் திவ்யா.

பாலா, வெங்கி, திவ்யா மூவரும் எழுந்தனர். ஆனால் ஜோசியர் அப்படியே அமர்ந்திருந்தார்.

"ஐயா?" என்றான் கேள்வியாக பாலா.

"நல்லா இருட்டிட்டதுப்பா. காட்டுப்பாதையில இருட்டுல எப்படி வழி தெரியும்?" என்றார்.

தங்கள் கைகளில் இருக்கும் செல்ஃபோனைக் காட்டினர் மூவரும். சிரித்து விட்டார் ஜோசியர்.

"ஐயா! இது விளையாட்டு இல்ல. சித்தரம்மாவும் சாமிக்கண்ணு சித்தரும் நித்யமல்லியோட மாய வேலைகளைப் பத்தி நிறையச் சொல்லியிருக்காங்க. காத்தை வரவெச்சு, நம்மை இங்கேயே தீர்த்துக்கட்டப் பிளான் பண்றா அவ. நாம இங்க தங்கக் கூடாது" என்றான் வெங்கி அழுத்தமாக.

"இது நித்யமல்லியோட மாய வேலையா? இல்லை மாயக்கண்ணனோட வேலையான்னு நமக்குத் தெரியாதேப்பா? என்ன தான் நித்யமல்லி மாயக்காரின்னாலும், அவளால கோயிலுக்குள்ள எதுவும் செய்ய முடியாது. அதனால நாம கோயிலுக்குள்ள தங்குவோம். காலையில பார்த்துக்கலாம்." என்றார் முடிவாக.

அரைமனதோடு சம்மதித்தனர் இளைஞர்கள்.

"காலையில பார்த்துக்கலாம்னு ஜோசியர் நம்பிக்கையோட சொல்றாரு. காலையில வரைக்கும் உசிரோட இருந்தா பாப்போம்." என்றான் எண்ணிக் கொண்டான் வெங்கி.

மெல்ல மெல்ல மாலை மயங்கி இரவு நேரம் வர ஆரம்பித்தது அந்த அத்துவானக் காட்டில்.
 
Status
Not open for further replies.
Top Bottom