Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed ஒரு மாலை பொழுதில் சில வார்த்தைகள் மட்டும்...

Hrishikesh

New member
Messages
8
Reaction score
2
Points
3
என்னதான் மனிதர்கள் இத்தனை சுறுசுறுப்பாக இந்த மாலை வேளையில் வேலை செய்தாலும், ஓயாது உழைக்கும் எறும்பிற்கு முன் சிறியதாகவே எனக்குத் தோன்றுகிறது. எறும்பின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாது என்றாலும், சீரான வேகத்தில் நடப்பது தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஏனென்றால், இதோ, சாலையில் புலி போல் பாய்ந்து சீரும் வாகனங்களின் ஓட்டத்துடன் என் வாழ்க்கையும் போட்டியிட்டுக் கொண்டு ஓட வேண்டாம் என்பதற்காகவே.

மிருதுவான என் மகளின் கரங்களைப் பிடித்து நடக்கும் போது இந்த உலகில் உள்ள அத்தனை பூச்செடிகளும் என்னுடன் நடந்து வருவது போலல்லவா தோன்றுகிறது. பத்து வயதுக்குண்டான பக்குவத்தை மறந்து, ஐந்து வயதுக் குழந்தைக்கான குழந்தைத் தனத்தையும் அப்பாவித் தனத்தையும் கொண்டவள் தான் என் சஸ்மிதா.

“பேக்கரி இன்னும் இவ்வளவு தூரம் மா?” என்றவளின் கேள்வியில் ஆர்வம் சற்றே அதிகமாய் இருந்ததை உணர முடிந்தது.

“அதோ..... ரெண்டு கடை தள்ளி தெரியுது பாரு.. அதுதான் நாம போக வேண்டிய பேக்கரி...” என்றேன்.

என் பதிலைப் பெற்றவளுக்கு ஏராள மகிழ்ச்சி. சந்தோஷத்தில் லேசாகத் துள்ளித் துள்ளிக் குதித்து நடக்கலானாள். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையேனும் இவளை இங்குக் கூட்டிக் கொண்டு வரவேண்டும் என்று பட்டது.

பேக்கரியை அடைந்ததும், “அம்மா, எனக்கு ஒரு வெஜ் பப்ஸ் மட்டும் போதும்” என்றாள் சமர்த்தாக.

இந்த இடத்தில் நாங்கள் இருக்கும் இந்த பேக்கரியின் அமைப்பைப் பற்றி விவரித்தல் அவசியமாக தோன்றுகிறது. சற்று விஸ்தாரமான அறையில், தேவைக்கு மேல் மேசைகளும் நாற்காலிகளும் வீற்றிருந்தன. பெரும்பாலான மேசைகள் காலியாகவே தென்பட்டன. ஒரு சிலர் பருப்பு வடை, காபி, முட்டை போண்டா மற்றும் காளான் பப்ஸை ருசித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் வெய்ட்டரை தங்களது ஆர்டகளினால் ஆச்சரியத்தில் மூழ்கடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் என்ன ஆர்டர் செய்தனர் என்று சொல்லி உங்களை கடுப்பேற்ற விரும்பவில்லை. அவர்களை பார்த்ததும், ‘இது பேக்கரி தானா? அல்லது தவறுதலாக ஏதேனும் உணவகத்திற்குள் நுழைந்து விட்டோமா?’ என்று அடிக்கடி திகைத்துக் கொண்டிருந்தேன். ‘வெஜ் பப்ஸ்’ வரும்வரை நீண்ட கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த வண்ணமயமான கேக், பன், பாஸ்டரி மற்றும் இதர இனிப்பு வகைகளை சஸ்மிதா ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். எதார்த்தமாகத் திரும்பி பார்த்த பொழுது, எங்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்த இருவரைக் கவனித்தேன். கிட்டத்தட்ட என் வயது இருக்கும் பெண்மணி தன்னுடைய எட்டு வயது மகனுடன் நின்று கொண்டிருந்தார். தோற்றத்தில் சற்று வசதி படைத்தவராகக் காட்சியளித்தார். அவரது சாதாரண பார்வையிலும் ஒருவித அலட்சியத்தைக் காண முடிந்தது.

இப்பொழுதுதான் அந்த அதிரடி சம்பவம் நிகழ்ந்தது. பேக்கரியின் இடது புறத்தில் கதவின்றி ஒரு நுழைவாயிலிருந்தது. எனது யூகம் சரியாக இருந்தால், அந்த அறைதான் சமையலறையாக இருக்கக்கூடும். அதிலிருந்து வெளிப்பட்ட ஒரு இளைஞன், வலது கையில் ஓரிரண்டு ஐஸ் கட்டிகள் நிரப்பிய ஆரஞ்சு ஜூஸ் கோப்பையும், மற்றொரு கையில் ஆறு வாழைக்காய் பஜ்ஜிகளை கொண்ட தட்டையும் ஏந்திக் கொண்டு வந்தான். இத்தனை பண்டகளை தாங்கிக்கொண்டு இவ்வளவு வேகமாக அந்த இளைஞன் வந்திருக்க வேண்டாம். அவனது துரதிர்ஷ்டத்தை மேலும் சோதிக்கும் வகையில், ஒரு வாடிக்கையாளர் அவனை விட வேகமாக அவனைக் கடந்து சென்றார். செல்பவர் அவனை இடிக்காமல் சென்றிருந்தால் பரவாயில்லை. அவர் வந்த வேகத்தில், அந்த இளைஞனின் வலது புறத்தில் இடித்து, அவன் கையிலிருந்த ஜூஸ் கோப்பை பாலன்ஸ் தவறி நிலை தடுமாறி, கோப்பையிலிருந்து ஜுஸ் தப்பித்து வெளியேறிச் சிதற, எங்கள் அருகிலிருந்த அந்த எட்டு வயது சிறுவனின் பாண்ட் ஆரஞ்சு ஜுஸை சுவைத்தது. சிறுவனோ செய்வதறியாது அந்த இளைஞனையும் தன் தாயையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். அந்த ‘வேகப் புயல்’ வாடிக்கையாளர் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றார். பின் சுதாரித்து, ‘சாரி தம்பி’ மட்டும் கூறிவிட்டு பேக்கரியிலிருந்து வெளியேறினார், மறுபடியும் அதே வேகத்துடன். அந்த வெய்ட்டர் தம்பியின் முகத்தின் அதிர்ச்சி கலந்த பய ரேகைகள் துள்ளிக் குதித்தன. தன் வாழ்நாளின் ஒட்டுமொத்த பயத்தை இந்த ஒரு நிகழ்வில் சந்தித்து விட்டான் போலும்... பாவம்...

பரிதாபமாக, “ஐ’ம் ஸோ சாரி மேடம்... தெரியாம..” என்று நடுங்கும் கண்களுடன் கெஞ்சினான். அதற்கு மேல் வார்த்தைகளைப் பிரயோகிக்க அவனுக்குச் சக்தியில்லை என்றே தோன்றியது.

எப்பொழுதும் சாந்தமாக இருக்கும் பார்வதி தேவியின் திடீர் காளி அவதாரத்தைத் தரிசித்ததுண்டா? அப்படிப்பட்ட தரிசனம் அடியேனுக்கு இந்த பேக்கரியில் கிடைத்தது, அந்த சிறுவனின் தாயார் வடிவில். அவர் முகத்திலிருந்த கோபக்கோடுகள் அந்த இளைஞனை என்னவெல்லாம் செய்யப் போகிறதோ என்ற கவலை எல்லோரிடமும் தென்பட்டது.

அந்த பெண்மணி மூச்சிரைக்க, “இதுதான் நீங்க வேலை செய்யும் அழகா? ரொம்ப நல்லாயிருக்கே... என் ரேஞ்சுக்கு இந்த மாதிரி சின்ன கடைகளுக்கு வந்தேன்ல... ச்சை...” என்று பொறுமித் தள்ளிவிட்டார்.

தொடர்ந்து, தன் மகனை நோக்கி, “டேய் சந்தோஷ்... உன் பாண்டேல்லாம் நாசமாயிடுச்சு... பாத்துக்கடா... ஒழுங்கா படிக்கலனா இந்த அங்கிள் மாதிரி கிடைச்ச வேலையத்தான் பார்த்தாகனும்.. அதுவும் அரைகுறையா... “ என்று முடித்தவரின் சொற்களில்தான் எத்தனை கடுமையும் துவேஷமும்! இதைக் கேட்டதும் அந்த இளைஞன் மட்டுமல்லாது, நாங்கள் எல்லோரும் ஒரு நொடி அதிர்ச்சிக்கு உள்ளானோம். அந்த இளைஞனைப் பார்த்தால் கல்லூரி மாணவன் போலத் தோற்றமளித்தான். பார்ட் டைமாக இந்த பேக்கரியில் பணிபுரிவான் போலும்.

இல்லை... இந்த நிலவரம் சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. ஒரு வினாடி அதிர்ந்து, மறு வினாடி சிந்தித்து, மூன்றாவது வினாடி பேசலானேன்.

ஜுஸ் பாண்டுடன் நிற்கும் சிறுவனைப் பார்த்து, “இல்லை தம்பி... நீ நல்லா படிச்சு நல்ல குடிமகனா வளர்ந்தீன்னா, நம்ம சமூதாயத்தில இந்த அங்கிள் மாதிரி இருக்குற நிறையப் பேரை முன்னுக்கு கொண்டு வர முடியும் தெரியுமா...?அவங்களும் உன்னை மாதிரியே சந்தோஷமா வாழ முடியும்...” என்றேன். என்னுடைய இந்த பதில் ஒரு கணமேனும் பேக்கரியிலிருந்த அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கும்.

“அப்படியா ஆண்டி..” என்று கண்களில் வியப்புடன் கேட்டான் சந்தோஷ் என்ற அந்த சிறுவன்.

சந்தோஷின் தலையைக் கோதியவாறு இளநகையுடன், “ஆமாம்பா...” என்றேன்.

சந்தோஷோ சட்டென்று அந்த இளைஞனை நோக்கி, “அங்கிள்... கொஞ்சம் வருஷம் வெயிட் பண்ணுங்க... நான் படிச்சு பெரியாளனதுக்கப்பறம் உங்களுக்கு நல்ல லைப் நான் ஏற்படுத்தி தரேன்...” என்றான் புன்னகை பூத்த வதனத்துடன். சந்தோஷின் பதில் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, அவன் தாயைத் தவிர. அவரோ யாருடைய கண்களையும் சந்திக்க திராணி இல்லாது எதையோ வெறித்துக் கொண்டிருந்தார்.

அந்த இளைஞனின் கண்கள் நீர் வார்த்தன. நிச்சயமாக அவை ஆனந்தத்தில் தான்... இதற்கிடையில் சஸ்மிதா கேட்ட பப்ஸும் வர, அதற்குண்டான பணத்தை அளித்துவிட்டு நாங்கள் இருவரும் பேக்கரியிலிருந்து வெளியேறினோம். வெளியேறியது நாங்கள் மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரின் மனதில் இதுவரை படிந்திருந்த கடுஞ்சொற்களும் தான்!
 
Top Bottom