Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL ஒழுகும் நிலவு வழியும் இரவு - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
அத்தியாயம் - 1

பூமி வருடம் - 4000

ஒழுகும் நிலவு!
வழியும் இரவு!
இமைக்கும் விண்மீன்!
அலையும் காற்று!
மருகும் தனிமை!
மிரளும்‌ நான்!

பால்நிலவு ஒழுகிக் கொண்டிருந்தது. அதற்கு நேரெதிராக இரவு வழிந்து கொண்டிருந்தது. மைத் தொட்டு இருள் வரைந்த தூரிகை, திருஷ்டி கழிக்க, நிலாப் பொட்டொட்டி அழகு பார்த்ததாம். நான்காயிரம்‌ வருடங்களாக இந்த உலகத்தில் மாறாத சில விடயங்கள் உண்டென்றால் அது திரண்ட இருளும், உருண்ட நிலவும்தான். மற்றவையெல்லாம் மருகித் தவித்து, மருவி, புள்ளிகளாய் மறைந்துவிட்டது. உலகத்தில் மாற்றம் காணாத மாண்புகளைச், சொக்கும் விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

விழிகளில் களைப்புத் தட்டியதுபோல. அவளறியாமலே அது சுருங்கி மூடிக்கொண்டது. விழாக்கோலம் பூண்டு, அல்லி ராணியாய் உலாச் சென்ற ஒற்றை நிலவையும், கற்றை நட்சத்திரங்களையும் அடக்கம் செய்தது பகல். புலரும் வேளையில் உடலில் ஏற்பட்ட அசௌகரியத்தால் முகம்சுழித்து விழிகள் திறந்தாள் அவள்.

வண்ணப் பாறைகளால் கட்டப்பட்ட சிறிய வீடு அவளது வீடு. அனலைக்‌ கக்கும் சூரியனின் வெட்பம் உள்‌நுழையாதபடி வீட்டின் வெளிப்புறத்தில் சாந்துகள் பூசப்பட்டிருந்தது. அந்தப் பூச்சுகளில்லாமல் வீடுகள் கட்டுவது வீண். பாலைவனத்தில் வாழ்வதற்குச் சமம். ஏனெனில் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிடுமளவு வெட்பத்தைக் கக்கிக்கொண்டிருக்கிறான் சூரியன். அளவான இடைவெளியில் ஒன்றுபோல் வீடுகள் கட்டப்பட்டிருந்தது. சற்று தூரத்தில் மாபெரும் ஏரியொன்று இருந்தது.

"அதோ அங்க பார் அனிச்சம்" என்று சட்டத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த ஓவியத்தை காட்டினாள் அன்னை. மாநிறத்தில் கொழுகொழு கன்னங்களுடன், மிழிகளை திரட்டி உருட்டி அந்த ஓவியத்தைக் கண்டாள் சிறுமி. அவள் மனம் ஏனோ படபடத்து அடங்கியது ஒருமுறை.

"அது நம்ம பூமி. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி இப்படிதான் இருந்துச்சு" என்ற தன் அன்னையின் குரலில் ஆச்சரியம் பொங்கப் பார்த்தாள். அழகாய் இருந்தது அந்தக் கோள். உருண்டையாய் நீலமும், பச்சையும் கலந்த கலவையில் கொள்ளை கொண்டது.

அன்னையின்‌‌ குரல் அசரீரியாக ஒலித்துக் கொண்டிருந்தது மனதில். அந்த பசுமையான நினைவுகள் எப்பொழுது மனதில் தோன்றினாலும், மனம் சஞ்சலப்பட்டு, அடுத்த வேலை செய்யமாட்டேன் என சத்தியாகிரகம் செய்துவிடும். சண்டித்தனம் செய்து, எங்கோ அலைந்து கொண்டிருந்த மனதை‌ இழுத்துப் பிடித்து வைத்தாள். அவள் அனிச்சம். இருபது வயது நிரம்பியவள்.

கல் மேசையின் மேலேயிருக்கும் தொடுதிரையை உயிர்ப்பித்து, பூமியின் நுணுக்கங்களைக் கண்டாள் அவள். அது அவள்‌ உருவாக்கியது. அன்னையின் ஓவியங்களை உயிர்ப்பித்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் செய்தது. ஆயிரம் முறை அதைப் பார்த்திருந்தாலும், ஒவ்வொருமுறை காணும் பொழுதும் உயிர்ப் பூ ஒன்று‌ பூத்துவிடும் அவளது மனதில். ஓவியத்தில் தீட்டப்பட்டிருக்கும் புவி உண்மையில் உயிர் பெற்று வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து நினைத்து சிலாகித்துக் கொள்வாள். ஆனால் நினைக்க மட்டுமே முடியும். அதுவே நிதர்சனம்.

அவள் கிளம்பும் நேரம் என்று அறிவுறுத்தியது கூண்டுக் கடிகாரம். எழுந்து அவசரமாகத் தயாரானாள்.
வீட்டிற்கு வெளியில் வந்தவள் அன்றைய தட்பவெட்பநிலை கண்டு அலுத்துக் கொண்டாள். வெய்யோனின் வெந்தழல் உயிரை உறிஞ்சிக் குடித்துவிடும்போல. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வெட்பத்தைக் கட்டுப்படுத்தும் வழியறியாது திகைத்திருந்தது பூமி. அவள் உடையின் மேல் ஒரு வெளியங்கி அணிந்திருந்தாள். அது உயிர்வளியை(ஆக்சிஜன்) அளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சிறிய மகிழுந்தில் ஏறி அதை இயக்கினாள் அவள். அதை மகிழுந்து என்று சொல்லவும் இயலாது. இருசக்கர வாகனம்போல் தோற்றம் உடைய உந்துவண்டி. கண்ணாடிக் கூரையுடன் அழகாய் இருந்தது அந்த வாகனம். அதில் ஏறி உள்ளே அமர்ந்தவள் அதை இயக்க ஆரம்பித்தாள்‌. அதன் உருளை சக்கரம் சாலையில் உரசி மேலெழும்பியது. வண்டி இறக்கைகளின்றி பறக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் வாகனத்தை தரையிறக்கி‌, சாலையில் இயக்க ஆரம்பித்தாள். வானில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால் தரையிலும் வாகனத்தை இயக்கும் படி வடிவமைக்கப்பட்டிருந்தது. அவள் விரைவாக நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. அவள் ஒரு வழக்கறிஞர்.

உலகத்தில் கோவிலாகப் போற்றப்படுவது நீதிமன்றம் மட்டும்தான். அங்கு யாரும் பொய் கூறிட இயலாது. நீதிபதி ஆதிபகவனிடமிருந்து குற்றவாளிகள் தப்பிக்க இயலாது. உண்மையைத் திரித்துக் கூறினாலோ, இல்லை பொய்யுரைத்தாலோ தண்டனை நிச்சயம். அதேபோல் நேரம் தவறாமை மிக முக்கியமான ஒன்று. தாமதமாக நீதிமன்றத்திற்குள் நுழைந்தால் அதற்கும் சிறை தண்டனை விதித்து விடுவார் ஆதிபகவன். அவர்‌ அழிவில்லாதவர்.


எப்படியோ அனிச்சம் சரியான நேரத்திற்கு அங்கு வந்துவிட்டாள். உள் நுழைந்ததும் அவளது வாதி அவளிடம் வந்து உரையாடினார்.

"திரு. திரவியம். கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க சொல்றது எல்லாம் உண்மைதானே?. மிகைப்படுத்தல் ஏதும் இல்லையே?" என்று அவனுடைய கூற்றுகளை உறுதி செய்தாள்.

"வழக்கு உங்க பக்கம் இருந்தாலும், தீர்ப்பு எளிதா வரணும்னு சில விஷயங்களை மிகைப்படுத்தி சொன்னாக்கூட உங்களுக்கும் தண்டனை. அதை‌ மனசுல வச்சுக்கோங்க" என்று அவள் கூற, எதிரில் இருந்தவனோ, தான் உண்மையாக இருப்பதாக நூறு சதவிகிதம் வாக்களித்தான்.

பிறகு ஆதிபகவன் நீதிமன்றத்துக்குள் நுழைந்தார் அவரது இருக்கையில் சென்று அமர்ந்தார். ஆதிபகவன் என்பது மனிதன் அல்ல, கடவுளும் அல்ல. ஒரு எந்திரம். அனைத்தும் அறிந்த எந்திரம்.

(சுருக்கமாக புரியும்படி சொல்ல வேண்டுமானால் எந்திரன் படத்தில் வரும் எந்திரன் போல். அதைவிட அறிவு அதிகம் உள்ளவன்.")

உணர்வுகள் அற்றவன். ஆனால் உணர்வுகளைக் கணிப்பதில் வல்லவன். அவன் ஆராய்ந்த வழக்குகள் அனைத்தும் வெற்றிதான். வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்ட சரித்திரங்கள் இல்லை எனலாம். சொன்ன தேதிக்கு நீதிமன்றம் வரவேண்டும். இல்லை கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

வாதி, பிரதிவாதி இருவரின் தலையிலும் சில உபகரணங்கள் மாட்டப்படும். அதன் கட்டுப்பாடுகள் ஆதிபகவனிடம் இருக்கும். வழக்கின் தகவல்கள் உள்ள கோப்பு அளிக்கப்படும். அதைப் படித்து, சில வினாக்கள் எழுப்பப்படும் ஆதிபகவனால். இருவரும் விடையளிக்க வேண்டும். விடைகளின் உண்மைத்தன்மையை அவர்களின் மூளை‌ தோற்றுவிக்கும் உணர்வுகள் விளக்கிவிடும். உண்மை மட்டுமே பேசுபவர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை. பொய்யுரைப்பவர்கள் ஏதாவது ஒரு வினாவில் மாட்டிக்கொள்வார்கள். பொதுவாக முகத்தில் எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் மூளைக்கு நன்றாகவே தெரியும். பொய்யுரைக்கிறோமா இல்லையா என்று. விடையின் காலதாமதம், குழப்பம், குரலில் தோன்றும் பிசிறு என்று‌ அனைத்தையும் துல்லியமாக கணித்துவிடும். ஆதிபகவனை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது. யாராவது ஊடுருவல் செய்ய முற்பட்டால் அதுவே அதன் தன்மையை மாற்றியமைத்துக் கொள்ளும்படி நிரலாக்கம் செய்யப்பட்டிருந்தது. அடுத்த நிரலாக்கம் இயங்க ஆரம்பித்த பின்னர் முதல் வேலையே, ஊடுருவ முற்பட்டவனை கண்டறிந்து தண்டனை நிறைவேற்றுவதுதான். அதன் வயது 200. அவர்களை ஆண்ட புரட்சியாளர் ஒருவரின் திட்டம் இது. அவரது பெயர் ஆதிபகவன். அதையே இதற்கும் வைத்துவிட்டனர். பல சோதனைகளைக் கடந்து சாதனைகள் படைத்துவிட்டது ஆதிபகவன்.

இன்று ஒரு கொலை வழக்கு. அதில் இரண்டு நபரின் மேல் சந்தேகம். அதன் பொருட்டு விசாரணை தொடங்கியது. ஆதிபகவன் கேட்ட வினாக்களுக்கு இருவரும் விடையளித்தனர்.

வெகு நேரம் கேள்வி கேட்ட பின்னும் ஆதிபகவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஏனெனில் இருவரும் தெளிவாக பயமின்றி பதிலுரைத்தனர்.

இது எப்படி சாத்தியம்?. அங்கிருந்த அனைவருமே குழம்பி தவித்தனர். இவர்கள் இருவரும் கொலை செய்யவில்லை என்றால் கொலை செய்தது யார்?. அந்த மூன்றாம் நபர் யாராய் இருக்கும்?. தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் இவர்கள் இருவர் மட்டுமே சம்மந்தப்பட்டிருக்கின்றனர்.
நல்லாட்சியில் முதல்முறையாக ஒரு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்னும் போதிய தரவுகள் இல்லாததால் இந்த வழக்கை இன்னும் சில நாட்கள் ஒத்தி வைக்கிறேன் என்று ஆதிபகவன் கம்பீரமான குரலில் கூறிவிட்டு சென்றது.

அனிச்சம் இன்னும் நினைவு உலகத்திற்கு திரும்பவில்லை. அவள் இந்த தொழிலுக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஒருமுறை கூட இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்ததில்லை. இவ்வளவு ஏன்? ஒரு வழக்கு கூட நிலுவையில் இல்லை. எங்கு தவறு நிகழ்ந்தது. தவறுதான் நிகழ்ந்ததா இல்லை யாரேனும் பின்னிருந்து இந்த சூழ்நிலைகளை இயக்குகிறார்களா என்ற பெரியதொரு ஐயம் அவளது மனதில் எழுந்தது. சிந்தனையினூடே தன் பயணத்தையும் தொடர்ந்தாள்‌.

வீட்டிற்கு வந்தவள் குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாள். யோசனையாக அவளுடைய படிக்கும் மேசையின் முன் சென்று அமர்ந்தாள். நினைவுகள் சில வருடங்கள் பின்னோக்கி சென்றது. அவளது அன்னை அவளுக்கு பூமியைப் பற்றி கூறிய கதைகள் எல்லாம் நினைவில் வந்தது. என்றுமே அது ஒரு பெரிய ஆச்சரியம்தான். அவள் நினைத்து நினைத்து வியந்து வியந்து மனதில் சேமித்து வைத்திருக்கும் பொன்னான தருணங்கள் அவை. தருணங்கள் மட்டுமல்ல அவள் தாயின் கதைகளும் கூடத்தான். அவள் தாயின் கதைகள் உண்மையா என்று கூட தெரியாது. அவையெல்லாம் கட்டுக்கதைகள் என்று கூறுவோர் அநேகம்‌ பேர்.

மீண்டும் அதே வார்த்தைகள். அதே உணர்வுகள்.

"அதோ அங்க பார். அது நம்ம பூமி. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி இப்படிதான் இருந்துச்சு" என்ற தன் அன்னையின் குரலில் ஆச்சரியம் பொங்க பார்த்தாள்.

"அம்மா... பூமியில் இவ்வளவு தண்ணீர் இருந்துச்சா அம்மா?"

"ஆமாமா. பூமி முழுக்க நீரால் சூழப்பட்டிருந்தது. ஆழிசூழ் அவனின்னு சொல்லுவாங்க பூமியை."

"ரொம்ப அழகா இருக்குமா. எனக்கு அந்த பூமிக்குப் போய் வாழணும் போல ஆசையா இருக்கு."

"அங்கதான் செல்லம் நீ இருக்க."

"இல்லமா... எனக்கு இது பிடிக்கல. இந்த படத்தில் உள்ள மாதிரியா பூமி இருக்கு?. இப்போ வெறும் கருப்பும், வெள்ளையும் மட்டும்தானே இருக்கு பூமியில."

"பூமி இப்படி மாறணும்னு விதி இருந்திருக்கு. இது ஒரு சாபம்தான். நம்ம கற்பனைக்கு எட்டாத விஷயங்கள் எல்லாம் பூமியில் இருந்திருக்கு."

"அப்பறம் ஏன் மா இந்த பூமி இப்படி ஆச்சு?."

"கோடி வருஷத்துக்கு முன்னாடியே இந்த பூமிப்பந்து உருவாகிருச்சு. அப்பறம் சில வேதியியல் மாற்றங்களால் நீர் உருவாச்சு. அப்பறம் உயிரினம். காலம் காலமாக நம்மைப் போல் மக்கள் வாழ ஆரம்பிச்சாங்க. நாகரிகம் வளர்ந்து, செழிப்பான வாழ்க்கை வாழ ஆரம்பிச்சாங்க‌. ஏதோ ஒரு அழுத்தம் பூமியில் உருவாகியிருக்கணும். ஒரு கட்டத்துக்கு மேல பூமியால் தாங்க முடியல. வெடிக்க ஆரம்பிச்சிருச்சு."

"எப்படிமா? வெடிச்சுச்சா?.. வெடிச்சா சின்ன சின்ன பாகமா சிதறி போயிருக்காதா?"

தன் ஐந்து வயது பிள்ளையின் அறிவாற்றலை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டாள் அன்னை.

"பூமி சின்ன பொருள் இல்லமா.. நீ கற்பனை செய்ய முடியாத அளவு பெரியது‌. பூமிக்கு நடுவில் பாறைக் குழம்பு இருக்கு. வெப்பம் ஏற ஏற, அங்க அழுத்தம் கூடியிருக்க வேண்டும். அதனால் அது பல இடங்களில் ரொம்ப பெரிய அளவுல வெடிச்சுதாம்" என்று கூறியவள், ஓவியத்தொடர் ஒன்றை எடுத்து கடைபரப்பினாள். அதில் பூமியின் முப்பரிமாண தோற்றம் தோன்றி அதன் அடுக்குகள் தெரியுமாறு விளக்கப்பட்டிருந்து முதல் படம். அதன்பிறகு பூமியில் நீர் தோன்றியதில் தொடங்கி தொழில்நுட்ப வளர்ச்சி வரை மேல்தளத்தில் நிகழும் மாற்றங்களையும், அந்த மாற்றங்களால் பூமிக்கு அடியில் நிகழும் மாற்றங்களையும்‌ ஒன்றாக எடுத்துரைக்கும் படி அடுத்தடுத்த ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது. அதை விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அனிச்சம். திடீரென, பூமியின் மையப்பகுதியில் கொதித்துக் கொண்டிருந்த பாறைக் குழம்பு அழுத்தம் தாளாமல் அங்குமிங்கும் கலங்கி தவித்தது. அதைப் பார்க்கவே படுபயங்கரமான காட்சியாய் இருந்தது. ஒரு கட்டத்தில் அது உருண்டையாய் இருந்த பூமிக்கோளத்தில் ஒரு வெடிப்பை உருவாக்க, மருகித் தவித்த செந்தழல் குழம்பு அதிலிருந்து ஒழுக ஆரம்பித்தது. பசும் பூமிக்கோளம் சில நிமிடங்கள் குருதி வடித்தது. ஆனால் சில நொடிகளில் அந்த சிறுவெடிப்பு‌ போதாமல் பல பெருவெடிப்புகள் உருவாக, பாறைக்குழம்புகள் பெருமளவு பூமியின் மேல்பரப்பில் ஒழுகி, பசுமைகளை கரியாக்கி, நீர்நிலைகளை ஆவியாக்கியது. சற்று நேரத்திற்கெல்லாம் பூமியின் ஒரு பாகம் முழுக்க கருமையும் மறுபாகம் முழுக்க வெண்மையும் மட்டுமே மிச்சமிருந்தது. பூமித்தட்டுகள் இடம்பெயர்ந்திருந்தது. வெடிப்புகள் ஒரு பக்கமாக உருவாக, ஒரு பக்கம் முழுக்க கருப்பு மற்றும் சாம்பல் தவிற வேறு நிறமில்லை. பூமித்தட்டு நகர்ந்ததில் வடதுருவமும் தென்துருவமும் ஒரு பக்கமாக இணைந்தது. அதில் மற்றொரு பக்கம் மட்டும் குளுமையைத் தக்க வைக்க, அது வெள்ளையாக காட்சியளித்தது. வெள்ளையும், கருப்புமாய் ஒரு பந்து. அதுவே பூமிப்பந்தானது என்று முடிந்தது அந்த ஓவியத் தொடர்.

இந்த ஓவியங்களை வைத்துதான் அவள் ஒரு காணொளி தயார் செய்திருந்தாள்.

அது அப்படியே அவளது மூளையில் பதிந்துபோனது.

அவளின்‌ எண்ணங்களை கலைக்கும் வண்ணம் அழைப்பு மணியடிக்க, எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
அவளுடைய வருங்கால கணவன் நளந்தன் நின்று கொண்டிருந்தான்.
அவன் அவளுக்கு உற்சாகமாக வணக்கம் வைக்க, அவளோ இன்னும் வேற்றுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.

"அனி! என்ன ஆச்சு?. என்ன குழப்பத்துல இருக்க?"

"உள்ள வா நளன். அப்புறம் பேசலாம். குடிக்கத் தண்ணி வேணுமா?"

"ம்ம்ம்.. குடு.." என்றுவிட்டு அமர்ந்தான்.

அவள்‌ நீர் எடுக்க உள்ளே சென்றாள்.

நளன் அவளின் மேசையின் முன் அமர்ந்து, சற்றுமுன் அவள் கண்ட அசைவூட்டியினை இயக்கினான்.

அவள் நீர் எடுத்து வந்ததும் அதை வாங்கி பருகியவன், "இன்னும் எத்தனை முறை இதை பாத்துட்டே இருப்ப? இதெல்லாம் நம்பறியா என்ன?" என்றான்.

"நளன்.. உங்களுக்கு வேணா இதெல்லாம் வெறும்‌ கட்டுக்கதையா இருக்கலாம். ஆனா என்னோட மண்டைக்குள்ள சதா சர்வகாலமும் ஓடிட்டே இருக்க விஷயம்."

"ஆயிரம் வருஷம் முன்னாடி உலகம் இப்படி இருந்திருக்கலாம் என்று ஒரு அனுமானம்தான் இது. அதாவது யாரோ எழுதி வச்ச சில தரவுகளை வச்சு இப்படி ஒரு காணொளி தயார் செய்துருக்க. இது இப்படித்தான் இருந்ததுன்னு இன்னும் நிரூபிக்கப்படல. அப்புறம் எப்படி நம்பற?.."

"நெருப்பில்லாம புகையாது. மனிதர்கள் கொஞ்சம் மிகைப்படுத்தி எழுதி வச்சிருக்கலாம். ஆனால் கொஞ்சமேணும் உண்மையில்லாம இருக்க வாய்ப்பு இல்லை. இந்த காணொளில வர்ற மாதிரி உலகம் அழிஞ்சு போயிருந்துச்சுன்னா, துருவத்தில் இருந்த சொற்ப நபர்கள் மட்டும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கு. அவங்களுக்குத் தெரிஞ்சதை எழுதி வச்சிட்டு போயிருக்கணும். நிச்சயம் இதற்கான தரவுகள் கிடைக்கும். நீ வேணா பாரேன்" என்றாள் அவள்.

"இத்தனை வருஷமா கிடைக்காத ஆதாரம் இனி கிடைக்கும்னு சொல்றியா?"

"நிச்சயமா!! எனக்கு நம்பிக்கை இருக்கு."

"நீ தேவையில்லாம கற்பனைகளை மனதில் வளர்க்கறயோன்னு தோணுது.‌ அதீத கற்பனைகளும் கனவுகளும் நல்லதில்ல. இது உன் மனநிலையை பாதிக்குமோன்னு எனக்கு பயமா இருக்கு."

"ப்ப்ச்... உனக்கு புரியாது விடு."

"புரியற மாதிரி நீ எதுவும் சொல்லல அனி. எப்போ உன்னைப் பார்க்க வந்தாலும் இதை மட்டுமே பேசி என்னை எரிச்சலாக்குற" என்றே அவன் எரிச்சலுடன் மொழிய, அவள் கோபம் கொண்டாள்.

"உங்களுக்கு நான் சொல்ற விஷயத்தில் நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாத விஷயம் எப்படி புரியும்?."

"இந்த உருப்படாத பேச்சு வேண்டாம். உலகம் ஒண்ணுதான். அது கருப்பும்‌ வெள்ளையும் கலந்த உருண்டை. அவ்ளோதான். உயிரே இல்லாத கதைக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கிற. உன்னோட மனசுல நான் எங்க இருக்கேன்னு எனக்குத் தெரியல. உன் கூட வாழப்போற நாட்கள் எப்படி இருக்குமோன்னு பயமா இருக்கு" என்றான்‌ கோபமாக.

அனிச்சம் எதுவும் பேசவில்லை. அமைதியாக அமர்ந்துவிட்டாள் அங்கிருந்த கல் நாற்காலியில். பூமியில் இருக்கும் 80 சதவீதம் பொருட்கள் கல்லினால் ஆனவை. அவளின் அமைதி அவனை ஏதோ செய்ய, அருகில் சென்று அமர்ந்தான்.

அதீத உணர்ச்சிகளின் பிடியில் இருக்கும்பொழுது, அவள் இப்படித்தான். உரையாடமாட்டாள். அவள் அன்னையின் மரணம்‌ நிகழ்ந்த பொழுதும் இப்படித்தான். அமைதியாக ஓரிடம் சென்று அமர்ந்துவிட்டாள். அரசு தகனம் செய்யும் ஏற்பாடுகள் ‌அனைத்தும் செய்து, அவளது அன்னையின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட பொழுதும், விட்டத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மனிதன் உயிர் வாழும் சராசரி வருடங்கள் நாற்பத்தி ஐந்து. அதுவரைதான் உயிர் வாழ முடியும். அதன் பின்னர் சொற்ப நபர்களே வாழ்வதுண்டு. யாரும் ஐம்பதைக் கடந்ததாக சரித்திரம் இல்லை.

இரண்டு வருடங்களாக அனியைத் தெரியும் அவனுக்கு. அவள் அன்னை இருந்த பொழுது மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால் இப்பொழுது தனிமையை உணர்கிறாள் என்பதை நன்கு அறிந்திருந்தான். அதனால் விரைவில் அவளைத் திருமணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும், அவனின் பணி அதற்கு ஒத்துழைக்கவில்லை. அவனுடைய விடுப்பு கோரிக்கை நிலுவையிலேயே இருந்தது. அதனால் அவனுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வந்து பார்த்துவிட்டு செல்வான். என்ன பேசிக்கொண்டிருந்தாலும், இறுதியில் அன்னையின் ஓவியங்களிலும், கதைகளிலும் வந்து நிற்பாள். அவனிடம் ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று தர்க்கம் செய்வாள். எப்பொழுதும் பொறுமையாக கையாளும் அவன் இன்று சற்று அதிகப்படியாக கோபம் கொண்டுவிட்டான்.

அவள் அருகில் அமர்ந்தவன், அவளின் கைகளில் விரல் கோர்த்தான். அவள் விழிகள் ஊறிக் கொண்டிருக்கும் ஊற்றாய், கண்ணீர் உகுக்க ஆரம்பித்தது.

"அனி,‌ உங்க அம்மாவ ரொம்ப தேடுறியா? எனக்கு என்ன செய்யணும்னு தெரியல. இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கோ. நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று அவன்‌ கூற, அவள் தலையை மட்டும் ஆட்டினாள்.

"பதில் சொல்ல மாட்டியா? நீ என்னைத் தேடலையா? ஆனா நான் உன்னை ரொம்பவே தேடுறேன்" என்றான் வருத்தத்துடன்.

"மன்னிச்சிடுங்க நளன். நான்... நான்..." என்று திணறினாள் அவள்.

"வேண்டாம் விடு. சிரமப்படாத. உன்கூட நிறைய வருஷம் வாழணும். உனக்கே தெரியும் நம்ம மனசு நல்லா இல்லைன்னா வாழ்நாள்‌ குறையும்னு. எனக்கு பயமா இருக்கு" என்றான் அவன்.

அவன் பயத்தில் உள்ள நிதர்சனம் உணர்ந்திருந்தாலும், அவளால் அந்த நினைவுகளைவிட்டு வெளியே வரமுடியவில்லை.

சற்று நேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது. அவள் எழுந்து சென்று சிறிது நேரத்தில் திரும்பி வந்தாள்.

"யாரு வந்தா?"

"தெரியலை. உயிர்காற்று தீர்ந்து போச்சாம். அதான் குடுத்துட்டு வரேன்" என்றாள்.

யார் வந்து உயிர்க்காற்று கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வழங்குவது உலகத்தின் மரபு. ஒவ்வொரு வீட்டிலும் உயிர்க்காற்று சேமிக்கும் கொள்கலன்கள் இருக்கும். அவற்றை வீட்டினர் உபயோகப்படுத்திக்கொள்வர். இப்படி யாராவது வந்து உயிர்க்காற்று வேண்டும் என்று வினவினாலும், அதைக் கொடுப்பது அவர்களின் வழக்கம். குடிநீர் கூட இப்படித்தான். இரண்டுமே அரசின் மேற்பார்வையில் இருக்கும். பெரிய பெரிய தொழிற்சாலைகளில் இருந்து காற்றும் நீரும் உற்பத்தி செய்யப்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் நிரப்பப்படும். அதை அவர்கள் விரயமாக்காமல் உபயோகம் செய்கிறார்களா என்றும் கண்காணிக்கப்படும். வீடுகளே இல்லாத இடங்களில், இதற்கென்று அரசு சில ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தது. அவர்களைப் பொறுத்தளவு, ஒவ்வொரு துளி நீரும், காற்றும், அவர்களின் உயிருக்குச் சமமானவை. அப்படி ஒருவருக்குதான் அவள் உயிர்க்காற்று வழங்கிவிட்டு வருகிறாள்.

அதன்பிறகு அவள் மனம் இலகுவானது. இயல்பை மீட்டிருந்தாள். நளனுடன் சிறிது நேரம் உரையாடினாள்.

"பேசாம என்னோட வேலையை நீ செய்யலாம்."

"பூமியை அகழ்ந்தெடுத்து, அதன் தொன்மையை ஆராய்வது உண்மையாவே எனக்கு மனசுக்கு பிடிச்ச வேலைதான். ஆனால் என்ன செய்றது?. எனக்கு அதுக்கு படிக்க கொடுப்பினை இல்லையே. என்னோட நரம்பியல் மண்டலம், நான் இதைப் படிக்கத்தான் லாயக்குன்னு சொல்லிருச்சே. அரசாங்கத்தை மீறி நாம என்ன செய்ய முடியும்" என்று வருத்தப்பட்டாள் அவள்.

"அதுக்கென்ன?.. நம்ம கல்யாணம் நடந்த அப்புறம் என் கூடவே எல்லா இடத்துக்கும் வா. என்னைவிட நல்லாவே‌ அந்த வேலையை செய்வ."

"அது சட்டப்படி குற்றமாச்சே."

"அட‌ ரொம்ப யோசிக்காத.. எப்படியும் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷம் நீ வேலைக்கு போகப் போறதில்ல. அதுக்குள்ள குழந்தை பெத்துக்கணுமே. அதனால வீட்ல இருக்க நேரத்தில், நான் என்னோட அகழ்வு பணியைப் பத்தி சொல்றேன். நீ எனக்கு உதவி செய்" என்றான்.

அது உலகத்தின் வழக்கம். திருமணம் முடிந்த பெண்கள் முதல் இரண்டு வருடத்திற்கு வேலைக்கு செல்ல முடியாது. இரண்டு மாதங்களுக்கு பிறகு, சோதனைக் குழாயில் தம்பதியரின் கரு உருவாக்கப்படும். அதன்பிறகு அந்த கருவின் மரபணுக்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, கருவில் உள்ள தவறுகளைக் களைந்துவிட்ட பின், அது பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும். ஒவ்வொரு கருவுக்குள்ளும் சில பிரத்யேகமான மரபணுக்கள் செலுத்தப்படும். அது மிக முக்கியமான ஒரு செயல். ஏனெனில் அந்த செலுத்தப்பட்ட மரபணுவே, கருவின் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறது. அவர்களுக்கு தெரிந்து உலகின் வெட்பம் அதிகரித்துக் கொண்டே செல்வதால், பாதிக்கும் மேல் கரு தங்குவதில்லை.
அப்படியே கரு தங்கினாலும்‌ குழந்தை இறந்து பிறக்கும். இதனால் மனித இனம் பேரழிவை சந்தித்துக் கொண்டே இருந்தது.

இரண்டாயிரம் வருடத்திற்கு முன் உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்ததால் , மனித இனம் வாழ்வதற்கு தகுதியற்ற பூமியாக இது மாறிவிட்டது. ஆனாலும் மாற்றங்களை நூல் பிடித்து செல்லும் உயிர்கள் மட்டுமே இங்கு வாழமுடியும். அதாவது பரிணமிக்க வேண்டும். இயற்கையாக பரிணமிக்க இன்னும் சில நூற்றாண்டுகள் தேவைபோல. அதனால் செயற்கையாக பரிணமித்தனர் மனிதர்கள். அவர்களின் மூளை அவர்களுக்கு பேராயுதம். தொன்று தொட்டு வந்த கற்காலத்தில் இருந்து மனிதனின் அறிவாற்றலே அதிசயம் நிகழ்த்தியிருக்கிறது.

இருவரும் யோசனையில் இருக்க, வெளியில் அறிவிப்பு ஒன்று கேட்டது. அதுவும் ஆபத்துக் கால அறிவிப்பு. இவ்வகை அறிவிப்புகளுக்கு முன் ஒலிக்கவிடும் மனதை பிசையும் ஒலியே கிலியை ஏற்படுத்தும்.

இருவரின் முகங்களும் பேரச்சத்தை தத்தெடுத்திருந்தது.
 
Last edited:

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
அத்தியாயம் - 2

வெண் பாலை!
உறையும் பனி!
உலர்ந்த திரேகம்!
நடுங்கும் விரல்கள்!
விதிர்த்த நான்!
சூடாய் நீ!!!
அனைவரும் இந்த இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்லுமாறு அரசாங்கம் கட்டளை இடுகிறது. ஏனெனில் இங்கு இருக்கும் சிவப்பு ஏரியில் சேகரிக்கப்பட்ட நச்சு வாயுக்கள் அனைத்தும் வெடித்துச் சிதறும் என்று எதிர்பார்ப்பதாக அறிவித்தனர். அதனால் இந்த ஊர் முழுக்க உள்ள மக்கள் அனைவரும் வேறு இடத்திற்கு சென்றுவிடுங்கள் என்றும், உதவி தேவைப்படுவோர் அரசாங்கத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்தனர்.

"ம்ம்ம்.... இது என்னைக்கு நடக்குமோன்னு நினைச்சிட்டே இருந்தேன்" என்றாள் அனிச்சம் முகத்தில் அப்பியிருக்கும் பயத்துடன்.

"இது நடக்கறது வழக்கம் தானே... சரி.. வா என்னோட வீட்டுக்கு போகலாம். தேவையான எல்லாத்தையும் எடுத்து வை" என்று கட்டளையிட்டான்.

அந்த சிவப்பு ஏரிக்கு அடியில் ஒரு மாபெரும் எரிமலை இருக்கிறது. நான்காயிரம் வருடம் பழமையான எரிமலை. அடிக்கடி வெடித்துச் சிதறும். ஆனால் ஏரியின் நீரால் அது வெளியே தெரியாது. ஆனால் அதிலிருந்து வெளியாகும் நச்சு வாயுக்களை அந்த ஏரி சேமித்து வைத்துக் கொண்டே இருக்கும். அதனால் அந்த ஏரியின் நிறமே சிவப்பாய் இருந்தது.

நீரில் அந்த நச்சுக்காற்றின் அடர்த்தி அதிகமானதும் பெரும் சப்தத்துடன் வெடிக்கும் என்று எதிர்பார்த்தனர். அந்த நாளும் வந்துவிட்டதுபோல. எப்பொழுது வேண்டுமானாலும் அந்த ஏரியில் உள்ள வாயுக்கள் வெடித்து வெளியாகலாம். அதனால் இந்த முன்னேற்பாடுகள்.

முன்பொருமுறை இதே போல் ஓரிடத்தில் நிகழ்ந்தது. அங்கு வாழ்ந்த பல மக்கள் மறுநாள் விடியலில் பிணமாய்க் கிடந்தனர். அதனால் ஒவ்வொரு எரிமலை ஏரியிலும் உணரி(சென்சார்) பொருத்தப்பட்டிருந்தது. அது தகவல் மையத்திற்கு தகவல் அளித்துவிடும். அந்த ஏரியைச் சுற்றிலும் பத்து கி.மீ தூரம் வாழும் மக்களை அப்புறப்படுத்துவர்.

அனிச்சத்தை அழைத்துக்கொண்டு நளந்தன் அவனுடைய வீட்டிற்கு சென்றான். இருவரும் மகிழுந்தில் சென்றனர். அவனுடைய வீட்டை அடைந்த பின்னர், அவளை உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தான்‌.

"சரி.. நீ ஏன் குழப்பமா இருந்த?.. அதை சொல்லு முதல்ல.." நளன்.

"இந்த உலகத்தில் என்னென்னமோ நடக்குது. என்னால நம்பவே முடியல. ஒரே அதிர்ச்சி மேல அதிர்ச்சிதான்" என்றாள் கவலையோடு அவள்.

"விஷயம் என்னன்னு சொல்லாமலே புதிர் போடுறதை வழக்கமா வச்சிருக்க. நீ இன்னும் விஷயத்தை சொல்லல."

"அது இன்னைக்கு ஆதிபகவனால வழக்குக்கு தீர்ப்பு வழங்க முடியலை. தீர்ப்பு தேதி ஒத்தி வச்சுட்டாங்க" என்று அவள் முடிப்பதற்குள் அவன் எழுந்துவிட்டான்.

"என்ன சொல்ற நீ!!. இது எப்படி சாத்தியம்?.. கனவு ஏதாச்சும் கண்டியா?" என்றான் அவன். அவள் அமைதியாக‌ அங்கிருந்த தொடுதிரையை‌ இயக்கி, அன்றைய செய்திகளை ஓடவிட்டாள்.

அதில் நீதிமன்றத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட, அதைக் கண்டு திடுக்கிட்டான் நளன்.

"என்ன அனி இது?. இது எப்படி நடந்துச்சு?."

"அதுதான் தெரியல. வரலாறு காணாத விஷயமெல்லாம் நடக்குது. கொஞ்சம் பயமா இருக்கு. ஆதிபகவன் இருக்கதாலதான் தவறுகள் செய்யாமல் நாம எல்லாம் அமரரா வாழ்ந்திட்டு இருக்கோம். இல்லை நிலைமை தலைகீழா மாறி எல்லாரும் அரக்கனா வாழ ஆரம்பிச்சா, எஞ்சியிருக்கும் இடுகாடு‌கூட இல்லாமப் போயிடும்."

"ஒருவேளை இது திட்டமிட்ட சதியா இருக்குமோ?"

"இதுல சதி செய்ய யாருக்கு தைரியம் இருக்கு சொல்லு."

"ரெண்டு விஷயம் தான் அனி. ஆதிபகவனின் பிம்பத்தை‌ உடைக்க, யாரோ செய்த சதி வேலை. இல்லைனா, வாதியோ,பிரதிவாதியோ பொய்‌ சொல்லியிருக்கணும்."

"பொய் சொல்றது சாத்தியமேயில்லையே. மூளை நினைப்பதைதான் ஆதிபகவன் கண்டுபிடிச்சுருவாரே."

"மூளையையும் மனசையும் குற்றவாளி கட்டுப்படுத்தியிருந்தா" என்றான் சிறிது நேர யோசனைக்கு பின்.

"அப்படியெல்லாம் முடியுமா?"

"அது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் முடியாதுன்னு சொல்ல முடியாது. பல வருஷம் மனதை தியான நிலையில் வைத்திருந்தா, மனம் நம்ம சொல்றதைக் கேக்கும்னு மனோதத்துவம் சொல்லுது. இப்போ கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளுள் அதுவும் ஒன்று."

"ஆனா அவ்ளோ மனோதிடம் உள்ளவன், உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்வானா?"

"திட்டமிட்டு செஞ்சிருக்கலாமே?"

"இல்லை.. இந்தக் கொலை முழுக்க முழுக்க எந்த திட்டமிடலும் இல்லாம நடந்திருக்கு."

"சரி‌ கடைசியா இப்போ என்ன செய்யணும்னு ஆதிபகவன் சொன்னாரு?."

"வாதி, பிரதிவாதி ரெண்டு பேரையும்‌ சில நாட்கள் அவருடைய கட்டுப்பாட்டில் வைக்கப் போறது உறுதி."

"அதுவும் சரிதான். எவ்ளோ நாள் மனோதிடத்தோட வலம்வர முடியும். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். நீ என்ன செய்யலாம்னு இருக்க?.."

"நானும் அவங்களைப் பின் தொடரலாம்னு இருக்கேன். ஏதாச்சும் ‌சாட்சி கிடைக்குதான்னு பார்க்கணும். அவங்க நடவடிக்கைகள் கண்காணிக்கப்படணும்."

"செய்யலாம். ஆனா என்னால இன்னும் நம்ப முடியல.." என்றான் நளன்.

"நம்பித்தான் ஆகணும். எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு... இருக்கு... என்ன செய்றது..."

"சரி... உனக்கு எந்த அகழாய்வுக் களத்தில் பணியிடம்‌."

"எனக்கு தெற்குப் பாறையில்."

"எப்போ கிளம்பற?"

"நாளைக்கு.."

"நான் இங்க தனியா இருக்கணுமா? நினைச்சாலே வெறுப்பா இருக்கு."

"பேசாம நீயும் என்னோட வந்துடு. அங்க கொஞ்சநாள் தான் இருப்பேன். அடுத்து இந்த வழக்கு திரும்ப நீதிமன்றத்துக்கு வர இன்னுமும் நாள் இருக்கே. நீ என் கூட அங்க வா. வந்ததும் நாம இந்த வழக்கைப் பத்தி விசாரிக்கலாம்."

"உன் கூட அவ்ளோ நாள் எல்லாம் என்னால இருக்க முடியாது. ஆனா எனக்கும் அங்க வந்து பார்க்கணும்னு ரொம்பவே ஆசை. வேணா ஒருநாள் வரேன். அப்புறம் திரும்பி இங்க வந்துடுறேன். எனக்கு நிறைய வேலையிருக்கு."

"சரி.. எப்படியோ நீ‌ வந்தா சரி. இந்த தெற்குப் பாறை ரொம்பவே வித்தியாசமான இடம். உனக்கு ரொம்பவே பிடிக்கும்."

அதன்பிறகு இருவரும் தேவையான பொருள்களை வாங்கலாம் என்று கடைவீதி சென்றனர்.

செல்லும் வழியில் அனிச்சம் வாதாடிய வழக்கின் எதிர்வாதியைப் பார்த்தனர். அவனும் எங்கோ பயணித்துக் கொண்டிருந்தான். அனிச்சம் அவனை அடையாளம் கண்டுகொண்டு நளனிடம் உரைக்க, நளன் அவனைப் பின்தொடர்ந்தான்.

"நளன் என்ன செய்றீங்க?.." அனி.

"இப்பவே அவனைப் பின்தொடர்ந்து பார்க்கலாம். ஏதாவது துப்பு கிடைக்குதான்னு" நளன்.

இருவரும் அவனைப் பின்தொடர்ந்து செல்ல, அவன் அவனுடைய வீட்டிற்கு சென்றான். சாரளத்தின் வழியே அவனை நோட்டமிட்டனர்.

சென்றவன் நேராக தண்ணீர் குழாய்க்கு சென்று தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தான். பல துளிகள் வீணாய் கீழே சிந்தியது.

அதன் பிறகு "நான் சாதித்துவிட்டேன்" என்று ஒரு சொல்லை மட்டும் உதிர்த்தவன் அறையில் சென்று படுத்துக்கொண்டான்.

"அனி, இவன் என்ன இப்படி நடந்துக்கிறான்?. அவனோட நடத்தையில் ஏதோ வித்தியாசமா இல்லை. அவன் சொன்னதைக் கேட்டியா? நான் சாதித்துவிட்டேன்னு சொல்லிட்டு போறான். அப்போ ஏதோ பெரிய தப்பு பண்ணி இருக்கான்னுதானே அர்த்தம்" நளன்.

"நளன், உனக்கு அவன் சொன்ன வார்த்தை பெரிசா தெரியுது. ஆனா அவன் செஞ்சதெல்லாம் கவனிச்சியா?"

"அப்படி என்ன பெருசா செஞ்சான்?. வந்தான், தண்ணி குடிச்சான், ரெண்டு வார்த்தை பேசினான், போய் படுத்துட்டான்."

"தண்ணி குடிக்கும்போது என்ன நடந்துச்சு?" என்று சொல்லவும் அவன் விழிகளில் மின்னல் வெட்டியது.

"என்ன இருந்தாலும் வக்கீல் வக்கீல் தான்!!."

"இதுல என்ன பெரிய விஷயம் இருக்கு. அவன் தண்ணி குடிச்சப்ப கீழ சிந்திருச்சு. நம்மள பொறுத்தவரை தண்ணி சிந்துனது பெரிய விஷயம். ஏன் ஒரு பெரிய தப்பு கூட" அனி.

"நீ சொல்றது ரொம்ப சரி. அப்படியே தவறுதலா கீழ சிந்திருந்தாக் கூட நெஞ்சு பதறும் இல்லையா. ஆனா அவன் கிட்ட அந்த பதட்டம் எதுவுமே இல்லை" நளன்.

"ஏதோ ஒண்ணு முரண்பாடா இருக்கு. அது என்னன்னு கண்டுபிடிக்கலாம். இன்னும் கொஞ்சநாள், அவனைப் பின்தொடர்ந்து வந்தா, உனக்கு ஏதாவது தகவல் கிடைக்கும்னு நினைக்கிறேன்."

"இவன் பெயர் என்ன?"

"தீரன்."

"உன்னோட கட்சிக்காரன் பெயர் என்ன?"

"திரவியன்."

இருவரும் அவ்விடத்தைவிட்டு அகன்றனர். இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அடுத்த நாள் புறப்பட்டு செல்ல அனைத்தும் தயார் செய்தனர். நளன் அனிச்சத்திற்கு தேவையான குளிர் தாங்கும் அங்கியை எடுத்து வைத்தான். அவர்கள் செல்லப்போவது ஒரு குளிர்ப்பிரதேசம்.

அனிச்சம் ஜன்னல் வழியாக அவளுடைய கற்பனை உலகில் சஞ்சரித்தாள். மீண்டும் ஒழுகும் நிலவும் வழியும் இரவும் அவள் உலகத்தை நிரப்பிவிட்டது.

அவளின் ரசனையை‌ ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் நளன். அழகியலை ரசிப்பதில் அவனுக்குப் பிடித்தம் இல்லை. இருக்கும் நேரத்தை அறிவிற்கு அளிப்பதே அவனுக்குப் பிடித்தம். ஓரிடத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பது நேரத்தை விரயம்‌ செய்வதாக தோன்றும். அரசாங்கத்திற்கு சரியான வேலைக்காரன். அவன் மண்டைக்குள் அவன் வேலை மட்டுமே ஓடும். இப்பொழுது அனைத்தையும் துறந்தது மூளை. மனம் அனிச்சத்தை ரசித்துக் கொண்டிருந்தது விசித்திரத்திலும் விசித்திரமாய். அவள் அருகில் சென்று அமர்ந்தான். அனிச்சை செயல்போல் அவன் நெஞ்சினில் சாய்ந்து கொண்டாள். அவன் அதரம் மெல்லிய மூரல் ஒன்றை உதிர்த்தது.
சற்று நேரம் யோசித்த நளன் மீண்டும் ஒரு வினாவைத் தொடுத்தான்.

"அவனோட வார்த்தைக்கு என்ன அர்த்தம்?" என்று அமைதியை உடைத்தான்.

"யாரோட வார்த்தை?" என்றாள் அவள்.

"தீரன்... இன்னைக்கு பார்த்தோமே."

"ஆதிபகவனை ஏமாத்தியாச்சுங்கற மமதையா இருக்கும்."

"ஆனா எப்படிங்கறது குழப்பமா இருக்கே? ஆதிபகவனைக் குழப்ப இவன் என்னவெல்லாம் செஞ்சிருக்க வாய்ப்பிருக்கு?"

"நளன், ஒண்ணு நீ‌ சொன்ன மாதிரி மனசையும்‌ மூளையையும் திடப்படுத்தியிருக்கணும். இல்லை ஆதிபகவனைக் குழப்ப, அவரோட நிரலாக்கம் (ப்ரோக்ராம்) ஊடுருவல்(ஹேக்) செய்யப்பட்டிருக்கணும்."

"ரெண்டாவது சொன்னது நடக்காதே. அப்படி ஒரு சூழ்நிலையை கையாளுறது ஆதிபகவனுக்கு புதுசா என்ன? இதுல வேற என்னமோ இருக்கு."

எவ்வளவு யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை அவர்களுக்கு. இவர்களின் சிந்தனையின் நாயகன் கருப்பாய் இருந்த தொடுதிரையின்முன் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தான். மீண்டும் மீண்டும் ஏதோ ஒன்றை செய்ய நினைத்து, அது வெற்றி பெறாமல் போக, மனதில் மூண்ட பயத்துடன் அந்த அறையைத் தன் பாதம் கொண்டு அளந்து கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் என்ன நினைத்தானோ, ஒரு பையை தோளில் மாட்டிக்கொண்டு எங்கோ புறப்பட்டான்.

நளந்தன் அனிச்சத்தை அந்த மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்றான். அங்குதான் அகழாய்வு பணிகள் நடந்து கொண்டிருந்தது. வெடிப்பு நிகழ்ந்ததால் பிரபஞ்சத்தில் நம்முடைய பால்வெளி உருவானதாக கருத்துப்படிவம் இருக்கிறது. அதேபோல் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பூமியில் நிகழ்ந்த பேரழிவால் பாறைக்குழம்புகள் பூமியின் தளத்தில் வெளிப்பட்டு, பூமியின் ஒரு பக்கத்தை கரும்பாலைவனமாக மாற்றியது. மற்றொரு பக்கம் குளிர்ந்து பனிப்பிரதேசமாக உருக்கொண்டது. இந்த இரண்டிற்கும் இடையில் இருக்கும் சொற்பமான நிலப்பரப்பில்தான் மனிதப்பிறவிகள் வாழ்ந்து கொண்டிருந்தது. அதுவும் பாறைகளால் உருப் பெற்ற நிலம்தான்‌. உறைந்திருக்கும் பனிப்பிரதேசத்தில் சில அடிகளுக்கு மேல் முக்கால் பங்கு உப்பு உறைநீர்க்கட்டிகள்தான். பாறைக்குழம்புகள் குளிர்ந்து கட்டிப்பட்டு பாறைகளாகவே இருந்தது ஒரு பக்கம் முழுக்க. அதற்கு அடியிலும் உப்புத்தன்மை கொண்ட உறைந்த மலைகள் பல இருப்பது அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உவர்நீர்க்கட்டிகளாய் இருக்கும் மலைகள் எல்லாம் ஒரு காலத்தில் மீப்பெரு நீர்நிலைகளாய் இருந்திருக்கலாம் என்று கணித்தனர் ஆராய்ச்சியாளர்கள். இதை ஆதரிக்கும் ஆய்வாளர்களும் இருந்தனர். எதிர்ப்பவர்களும் இருந்தனர்.

எப்பொழுதுமே அறிவியலைப் பொறுத்தவரை இருவேறு கூற்றுகள் உலா வருமே. அப்படி இதற்கு எதிர்மறையான கருத்துப்படிவமும் இருந்தது. அதாவது உலகம் உருவாகும் பொழுதே இப்படித்தான் இருந்திருக்கும் என்று கூறியது ஒரு கூட்டம். கடல் என்ற ஒன்றை அறியாததால், உயிர்கள் நிலப்பரப்பில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்றும் கூறினர். அதனால் இதனை அறிய பல இடங்களில் அகழாய்வு நடந்து கொண்டிருந்தது. அந்தப் பணியில்தான் நளன் இருந்தான்.

மொத்த மக்கள் தொகையே கோடிகள் தான். நாடு, மொழி, இனம் என்ற பிரிவினை எல்லாம் இல்லை. அவர்களின் தலையாய பணியே, உயிர்வாயு உருவாக்கமும், மனிதர்களின் மூலம் அறிவதும்தான்‌. விவசாயம் அறியாதவர்கள். மரம் என்ற ஒன்றையே அவர்கள் பார்த்ததில்லை. அவர்களின் பிரதான உணவே சில வகையான பாசிகள்தான். அவை பாறைகளில் வளர்ந்து கொண்டே இருக்கும். அதை அறுவடை செய்து உண்ணுவர். பாறைக்குழம்பால் உருவான பாறைகளில் ஏராளமான தாதுக்கள் இருக்க, தொழில் வளர்ச்சிக்குப் பஞ்சமில்லை என்றுதான் கூறவேண்டும்.‌

சில தினங்களில் நளனுக்கும் அனிச்சத்துக்கும்‌ திருமணம் என்று முடிவு செய்திருந்தனர். திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று அரசின் பதிவேட்டில் பதிய வேண்டும். அவர்களின் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்தான் ஒப்புதல் வழங்கப்படும். ஏனெனில் அவர்களின் மரபணுக்கள் மூலம் குழந்தை ஆரோக்கியமாக பிறக்குமா என்று பரிசோதனை செய்வர். ஏனெனில் பிறப்பின் விகிதத்தை விட இறப்பின் விகிதம் சற்று அதிகமாய் இருந்தது. அதை சரிவிகிதத்தில் மாற்றியிருந்தனர் தற்பொழுது. மனிதனின் வாழ்நாளே சுமார் 45-50 வருடங்கள்தான். எல்லா வகையிலும் இந்த பூமியில் வாழ்வது ஒரு சவாலான காரியமே. பெரும்பான்மையினர் அடுத்து வரப்போகும் சந்ததியினருக்கு ஏதேனும் தகவல் திரட்டவே வாழ்ந்தனர். வாழ்ந்தும் முடித்தனர். திருமணம்‌, காதல் எல்லாம் இனப்பெருக்கத்திற்கு ஒரு வழி. மற்றபடி உணர்வுகள் குவிந்து கிடக்காது மனதில். மனிதனாய் பிறப்போம். அரசால் நமக்கு கட்டளையிடப்பட்ட காரியங்கள் முடிப்போம். உயிர் துறப்போம். மனித இனம் அழிந்துவிடாமல் இருக்க, இடையில் ஒரு வாரிசு. அவ்வளவே.

இப்படித்தான் சமதளத்தில் ஓடும் நீரோட்டம் போல் அவர்கள் வாழ்வு சென்றுகொண்டிருந்தது.

அனிச்சமும் நளனும் பனிமலைப்பிரதேசத்திற்கு வந்திருந்தனர். அங்கு பெரிய பெரிய கருவிகள் கொண்டு அகழாய்வு நடந்து கொண்டிருந்தது. அந்த பனிப்பாறைகளுக்கு அடியில் வானலையுணரி(ரேடார்) போன்ற கருவிகள் கொண்டு ஏதேனும் தொன்மப்படிவம் இருக்கிறதா என்று ஆராய்ந்தனர். 100 அடியில் இருந்து சில அடிகள் மட்டும் பனிப்பாறைகள் அல்லாமல் வேறு ஏதோ சில பொருள்கள் இருப்பதுபோல் தென்படுவதாய் சுட்டிக்காட்டியது அந்தக் கருவி.

உண்மையில் பனிப்பாறைகளை உடைப்பது மிகவும் கடினமான செயல். ஆனால் அந்த தோண்டும் கருவி அதை எந்தவித சிரமமுமின்றி அழகாக நிறைவேற்றிக் கொண்டிருந்தது.

இவர்கள் ஆராய்ச்சி செய்யும் பகுதி புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு ஞாயிற்றுவெப்பம் மிகக் குறைந்த அளவே வந்துசேர்கிறது. பூமியின் ஒரு பக்கம் முழுவதும் ஏறக்குறையப் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. அதில் துருவங்கள் இரண்டிலும் சூரிய ஒளியில்லாமல் அதீத குளிர். ஆண்டில் ஆறு மாதங்கள் சூரிய வெளிச்சமே இருக்காது. மழைப் பொழிவு 200 மில்லிமீட்டர் அளவு மட்டுமே. பூமியின் அந்தப் பகுதியை பனிக்கட்டிப் பாலைநிலம் என்றும் கூறலாம். இந்தப் பகுதியில் நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது. வெவ்வேறு ஆய்வுக்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன.

பூமியில் வசிப்பவர்களுக்குத் தேவையான நன்னீரில் கிட்டத்தட்ட 80 சதவீதமானது இங்கேயிருந்து கிடைப்பதுதான்.‌அதற்கான தொழிற்சாலைகளும் அங்கே உண்டு. அங்கிருக்கும் நன்னீர் உறைக்கட்டிகளை உருக்கி நீராய் மாற்றி, குழாய்‌ வழியில் மக்களின் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் தொழிற்சாலைகள் ஏராளம். அந்தப் பணியாளர்கள் வாழ்வதற்கு மட்டுமே வாழ்வாதாரம் அங்கு உள்ளது. துருவத்தையொட்டியும், அவர்கள் வாழும் நிலத்தின் சற்று அருகிலும் மட்டுமே அவர்களால் இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் மேற்கொள்ள முடிந்தது. ஏனெனில் மேற்குப் பகுதி முழுக்க முழுக்க பனியால் சூழப்பட்டிருக்க, உள்ளே செல்ல செல்ல குளிர் உதிரத்தை உறைய வைத்து, உயிர் குடித்துவிடும்.

நளன் அனிச்சத்தை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை சுற்றிக் காண்பித்தான்.

"இந்த இடம் ரொம்ப வித்தியாசமா இருக்கு நளன். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு."

"ஆமா அனி. இந்த இடம் ரொம்ப வித்தியாசமான இடம்தான். ஏன்னா இங்க தினமும் சூரிய உதயத்தை பார்க்க முடியாது" என்று நளன் கூறியதும் அவனை நம்பாமல் பார்த்தாள் அவள்.

"கிண்டலா நளன்?. சொல்ற பொய் பொருத்தமாவாச்சும் இருக்க வேண்டாம்" என்று நக்கல் அடித்தாள் அவள்.

"வக்கீலுக்குப் படிச்சா மட்டும் பத்தாது. கொஞ்சம் அறிவையும் வளர்த்துக்கணும். நான் சொல்றது நூறு சதவிகிதம் உண்மை" என்றான் நளன்.

"உண்மையாவா? புவியோட அமைப்புகளைப் பற்றி எனக்குத் தெரியாது. நீதான் சொல்லேன். தெரிஞ்சுக்கிறேன்" என்றாள் அவள்.

"இந்த இடத்தில ஒரு வருஷத்துக்கு ஒரு தடவைதான் சூரியன் உதிக்கும்" என்று அவன் கூற, அவள் ஆச்சரியம் பொங்க அவனைப் பார்த்தாள்.

"அது எப்படி ஒரு வருஷத்துக்கு ஒரு தடவைதான் உதிக்கும்?"

"இது பூமியோட தென்துருவம். பூமி அட்சரேகையில் கொஞ்சம் சாய்ந்த வண்ணம் சூரியனை சுற்றி வர ஆறு மாசம் முழுக்க ஆகும். உதித்த சூரியன் மறையாது ஆறு மாசம் முழுக்க, மறைந்த சூரியன் திரும்பி வராது. பூமி சுழலும்போது தன்னோடு அந்த அச்ச கொஞ்சம் கொஞ்சமா நகர்த்தி சூரியனை சுற்றி வரும். ஆறு மாசம் இந்தத் துருவம் முழுக்க சூரியனைப் பார்த்து இருக்கும். ஆறுமாசம் சூரியனுக்கு எதிர்த்திசையில் இருக்குறதுனால சூரிய உதயம் கிடையாது" என்று விளக்கம் அளித்தான் அவன்.

அதைக் கேட்ட அனி வாயைப் பிளந்தாள்.

"கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு. ஆறு மாசம் இந்த இடத்தில இருக்க முடியாது போல. பூமி எவ்வளவு விசித்திரமா இருக்கு!!. ஒரு பக்கம் பார்த்தா வெப்பம் நம்மளால தாங்க முடியல. இன்னொரு பக்கம் குளிர் தாங்க முடியல."

"சரி இப்போ சொல்லு நம்ம இன்னும் ஒரு நாலு நாள் இங்க இருந்துட்டு போலாமா?."

"அதுதான் நாள் கணக்கே கிடையாதுன்னு சொல்லிட்டியே. எனக்கெல்லாம் சூரியன் உதித்து மறைந்தால்தான் ஒரு நாள் முடிவுக்கு வரும். இங்கதான் அந்த கணக்கே கிடையாதே. எனக்கு நிலாவைப் பார்க்காம இருக்க முடியாது" என்றாள் அறிவிப்பாக.

"சரி அப்போ இங்க தென்துருவத்தோட கணக்குப்படி இங்கே இருந்திடலாம் பேசாம. சூரியன் உதிக்கணும். சூரியன் மறையணும். ஒரு வருஷம் ஆகும். நிலாவையும் பார்த்துட்டு போகலாம்" என்றான் கேலியுடன்.

"நான் எதோ விளையாட்டுக்கு சொன்னா, அதை பிடிச்சுப்பியா. எனக்கு என்ன தலையெழுத்தா இங்க இருக்கணும்னு? நான் நாளைக்கு கிளம்பணும். எனக்கு வண்டி ஏதாவது ஏற்பாடு பண்ணிக் கொடுத்திடு. நான் என்னோட வழக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கணும்."

"இல்ல நாளைக்குப் போக வேண்டாம். ஒரு ரெண்டு நாள் கண்டிப்பா இருக்கணும்."

"ரெண்டு நாள் இங்க இருந்து நான் என்ன பண்ணப் போறேன்?. ரெண்டு நாளில் இங்க என்ன பெருசா மாற்றம் வரப் போகுது. அந்த சூரியன் இருந்துட்டே தான் இருக்கப் போகுது" என்றாள் சலிப்புடன்.

"சூரியன் மறையும் காட்சியைப் பார்க்கலாம். இன்னும் ரெண்டு நாள்ல ஆறு மாசம் முடியப் போகுது. பூமியோட அட்சரேகை சூரியனுக்கு எதிர்திசையில் நகரப்போகுது" என்றான் அவன்.

அவள் பதிலேதும் கூறாமல் அவனை முறைத்தாள்.

"சூரியன் மறையறத நிச்சயம் நீ பார்க்கணும். அப்புறமா இங்க ஒரு நாள் இரவு மட்டும் தங்கிட்டு போகலாம். அந்த இரவில் ஒரு அழகியல் இருக்கும்" என்றான் அவன்.

"என்ன அழகியலா? இதைப்பத்தியெல்லாம் நீயா பேசுற? இரவுல என்ன அழகு இருக்கப்போகுதுன்னு சொல்லுவியே. பூமி ஒரு பக்கம் வெள்ளையாகவும், மற்றொரு பக்கம் கருப்பாகவும் இருக்கிற மாதிரி, இங்க ஆறு மாசம் முழுக்க பகலும், ஆறுமாசம் முழுக்க இரவும் இருக்கு. நீ என்னைத் தங்க வைக்க இதெல்லாம் சொல்றியா?"

"நானே இப்படி சொல்றேன்னா யோசிச்சு பாரு. ஆனா நான் என்னன்னு உனக்கு சொல்லமாட்டேன். நீ இருக்க கண்டிப்பா. உனக்கு பிடிக்கும். நீ உங்க வீட்ல பார்த்துட்டு இருந்தியே அசாத்தியமான சில காணொளிகள். அந்த மாதிரி அந்த இரவு கூட ஒரு அசாத்தியமான இரவாய் இருக்கும். அது அனுபவிச்சாதான் தெரியும் உனக்கு."

அவள் யோசனையுடன் சரியென்றாள்.

"நளன்.. பூமியோட ஒரு பகுதியாவது அழகா இருக்கே" என்றாள் பெருமூச்சுடன்..

"இந்த அழகுக்குப் பின்னாடி பெரும் ஆபத்து இருக்கு அனி" என்றான் நளன்.

"நம்மளால பூமியோட இன்னொரு பகுதியில் வாழ முடியிதா என்ன? எவ்ளோ வெப்பம்!!!" என்றாள் அவள்.

"இங்க இருக்க ஆபத்து தெரியாம பேசற. பனிப்புயல் கேள்விப்பட்டிருக்கியா?... பனிப்புயல் 300 கி.மீ. வேகம் வீசும். இப்போ‌ இதமான சீதோஷ்ணநிலை இருக்குன்னு சொல்றியே. பனிப்புயல் வந்தா இந்த நிலை சுமார் அரைமணி நேரத்திற்குள் நம்மள உயிருக்குப் போராட வச்சிடும். குளிரால எற்படும் ஆபத்தை விட பனிப்புயலால் விளையும் ஆபத்தே அதிகம். பூமியில் அதிர்ச்சி ஏற்பட்டால், பனிப்பாளங்களில் பிளவுகள் உண்டாகும். உடைந்த பகுதி, சரிவு நோக்கி மெல்ல நகரும். அந்த சமயம் குளிரின் தாக்கம் அதிகமானால், நகர்ந்த பாளங்கள் அப்படியே நிற்கும். புதிதாக விழும் பனியானது அப்பிளவுகளை மேலே இலேசாக மூடிவிடும். இந்த மாதிரி பனிப்பிளவுல எச்சரிக்கை உணர்வின்றி கால் வைத்து எத்தனை பேர் செத்துருக்காங்க தெரியுமா?" என்று நளன் கூற, அவள்‌ ஆச்சர்யம் பொங்க அவனைப்‌ பார்த்தாள்.

"நளன்.. உண்மையா செத்துருவாங்களா?" என்றாள் சந்தேகத்துடன்.

"ஆமா... பனிப் பிளவான இடத்தில் பனிக்கட்டியா இல்லாம கொஞ்சம் தளர்ந்து இருக்கும். அந்த நபர் அதலபாதாளத்தில் விழுந்து, உடனடி உறைதல் காரணமா உறைந்து போவாங்க. பனிப்புயலின் வேகத்தால் உறைபனிப்பாளங்கள் சீவி விடப்படுவதால், பனிப்பாளங்கள் சமதரையாக இல்லாமல் மேடு பள்ளமாகவே இருக்கும். அவற்றின்மீது நடக்க முற்பட்டால், உடைந்துபோன கண்ணாடித் துண்டுகள்போல் கால்களைக் கிழிக்கும்" என்று அந்த இடத்தின் உச்சங்களைக் கூறி அச்சுறுத்தினான் அவளை.

அவன் கூறிய விஷயங்களைக் கேட்டு அதிர்ச்சி தாளாமல் அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவனுடைய குழுவில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அவளையும் அழைத்துக்கொண்டு அகழாய்வு நடக்கும் இடத்திற்கு வந்தான்.

சில மணி நேரங்களில் 100 அடியையும் தோண்டி இருந்தனர். அதன்பிறகு ஒரு செயற்கை நுண்ணறிவு படைத்த ஒரு இயந்திரத்தை உள்ளே செலுத்தி அங்கு அமிழ்ந்து இருக்கும் பொருளை எடுத்து வந்தனர். கொஞ்சம் பழுப்பு நிறத்தில் ஏதோ ஒரு வித்தியாசமான பொருள். அவர்கள் இதுவரை கண்டதில்லை. இதுவரை பூமியை அகழ்ந்ததில் இப்படி ஒரு பொருள் கிடைத்ததும் இல்லை. அனைவரும் அந்தப் பொருளின் விசித்திரத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
Last edited:

Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
கற்பனை எதிர்காலம் வாழ்வதற்கு சவாலான ஒன்றா இருக்கு. தீரன் என்ன வேலை பண்ணிருப்பான் ஒருவேளை ஹேக் பண்ணி அதை ஆதிபகவன் கண்டுபிடிச்சுட்டாரா? நளன் சொல்ற அந்த அழகியல பார்க்க எனக்கும் ஆர்வமா இருக்கு. மேல இருட்டு(கருப்ப) கீழ பனி(வெள்ளை) இதா அவன் சொன்ன அழகியல்? பனிபுயல் பத்தின செய்தி 👌👌👌. ஒருவேளை அந்த பழுப்பு நிறப் பொருள் மரமா இருக்குமோ🤔 பனில இருக்றதுனால அது கலர் மாறாம அப்படியே இருக்கோ? எபி👌👌👌👌
 

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
கற்பனை எதிர்காலம் வாழ்வதற்கு சவாலான ஒன்றா இருக்கு. தீரன் என்ன வேலை பண்ணிருப்பான் ஒருவேளை ஹேக் பண்ணி அதை ஆதிபகவன் கண்டுபிடிச்சுட்டாரா? நளன் சொல்ற அந்த அழகியல பார்க்க எனக்கும் ஆர்வமா இருக்கு. மேல இருட்டு(கருப்ப) கீழ பனி(வெள்ளை) இதா அவன் சொன்ன அழகியல்? பனிபுயல் பத்தின செய்தி 👌👌👌. ஒருவேளை அந்த பழுப்பு நிறப் பொருள் மரமா இருக்குமோ🤔 பனில இருக்றதுனால அது கலர் மாறாம அப்படியே இருக்கோ? எபி👌👌👌👌
நன்றி மணிமாலா... உங்க எல்லா கேள்விக்கும் பதில் வருது... இந்த எபி போஸ்ட் பன்னும் போது உங்களை நினைச்சேன். அற்றைத் திங்களில் கொஞ்சம் போரிங்கா போன மாதிரி போகுதோன்னு...🥰🥰🥰🥰🥰🥰
 

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
அத்தியாயம் - 3

புடவி - வருடம் - 1891

மாசறு திங்கள்!
மகிழம் பூக்கள்!
மங்கும் மாலை!
மயங்கிய இரவு!
விருட்சமாய் நான்!
காற்றாய் நீ!

சூரியன் இருளென்னும் போர்வை கொண்டு இழுத்து மூடித் துயில் கொண்டிருக்கிறான். நிசியின் வனப்பிற்கு கதகதப்பு அளிக்கும் வகையில் நிலவுப் பெண் காய்ந்து கொண்டிருந்தாள். ஊதையோ கூதையோ ஓலமிட்டு விரைந்தோட, இரவு மூளிப் பொழுதாய் கோலம் கொண்டது.

அதில் ஒரு விருட்சத்தின் வரிவடிவம். கிளைகிளையாய்ப் படர்ந்திருந்திருந்த விருட்சத்திற்கு கிளைக் கதைகளும் அதிகம். ஒவ்வொரு விழுதுக்கும் பல கதைகள் போல. ஓராயிரம் விழுதுகள். ஈராயிரம் கதைகள். போவோர் வருவோர் புனைந்த பெருங்கதைகளால் அம்மரம் நுகர்வோரின்றி, அமங்கலச் சின்னமாய் கைம்பெண் நோம்பு நோற்று நின்றது.

தீடிரென பச்சைமரம் பற்றி எரிந்தது. துயில் கொண்டிருக்கும் ஆதவன் நடுநிசியில் மீண்டெழுந்துவிட்டானோ என்ற ஐயம் எழுகிறது மனதில். மரத்தின் மென்மையான பாகங்கள் மொத்தமும் எரிந்து முடிந்திருந்தது. ஊதைக்காற்றுக்கு சற்று எரிச்சல் ஏற்பட்டது, மேலெழும்பும் புகையைச் சுவாசிக்க முடியாமல். மூச்சுத் திணறல் அதிகரித்து, ஓலமிட, மேகக்கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் வானம் பொத்துக்கொண்டது. விருட்சத்தை நனைத்து செந்தழலுக்கு விடுதலையளித்தது. 'சுர்' என்ற ஒலியெழுப்பி அடங்கியது நெருப்பு. காயம்பட்ட மரம், பட்ட மரமாய்க் கருகி நின்றது‌. இலைகளும் விழுதுகளும் எரிந்து சாம்பலாய் மழையின் புனலில் கரைந்தோட, கரிக்கட்டை ஒன்று வேரூன்றி நின்றிருந்தது.

தன் பருத்த உடலை‌ மண்ணைவிட்டு பெயர்த்தெடுத்தது அம்மரம். மெதுவாய்த் தன் ராட்சத வேர்களால் சாலையில் நடக்க ஆரம்பித்தது. வேகத்தைக் கூட்டி அது உருண்டு திரண்டு சென்றதில் பாளம் பாளமாக வெடித்தது மண்தரை. சற்று தூரத்தில் இருந்த கிணற்றுக்குள் சென்று அமிழ்ந்து போனது.

முகத்தில் முத்துமுத்தாய் வியர்வைப்பூ பூத்திருக்க அலறியடித்து எழுந்தாள் கொடி. புழுக்கம் அதிகமாய் இருந்தது. எழுந்து சென்று ஜன்னலைத் திறந்தாள். அவள் கனவில் வந்த ஆலம், பிரபஞ்ச ரூபத்துடன் காட்சியளித்தது. எரியவும் இல்லை. மழையும் இல்லை. விருட்சம் தற்கொலை செய்யவும் இல்லை. அனைத்துமே அவள் ஆழ்மனதின் அதீத கற்பனைகள். அதிகாலை ஐந்து மணி என்றது புலர்ந்திருந்த பொழுது. அந்த மரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் கொடி. பாட்டி கூறிய பல கதைகள் மண்டைக்குள் ஓடியது.

அந்த மரத்தைப்‌ பற்றிய யோசனையில் இருந்ததால் விடிந்தது‌கூடத் தெரியாமல் இருந்தாள்.

"கொடி... கொடி..." என்று‌ கத்திக் கொண்டே‌ வந்தாள் மலர்.

இவர்கள் இருவரும் உயிர்த்தோழிகள். தூங்கும் நேரம் தவிர இருவரும் ஒன்றாய் சுற்றுவது வழக்கம்.

"ஏ... கொடி என்னடி‌ ஆச்சு?.. பேயடிச்ச மாதிரி இருக்க!!!.." மலர்

"அந்த மரம்!..."

"இவ ஒருத்தி. வேற பொழப்பே இல்லயாடி உனக்கு.. அந்த மரம் அங்கதான் புள்ள இருக்கு நூறு வருசமா. அது உன்னைய என்ன செஞ்சிச்சு?.."

"ராத்திரி ஒரு கனவு வந்துச்சு.. அந்த மரம் பத்தி எரியுது.. அதுவா நடந்து போய் கிணத்துல விழுந்திருச்சு" என்று குரலில் நடுக்கத்துடன் உரைத்தாள் கொடி. உண்மையில் அந்தச் சம்பவம் அவளை ஒரு உலுக்கு உலுக்கியிருந்தது. பச்சை மரத்தில் அடித்த பசுமரத்தாணியாய் மனதில் பதிந்துவிட்டது. இந்தக் கனவு என்ன உணர்த்துகிறது அவளுக்கு!!..

"அடிக் கிறுக்கி.. பச்சை மரம் எப்படி பத்தி எரியும். உம்ம மூளை ஏன் இப்படி சண்டித்தனமா யோசிக்கிது?."

"கனவு பலிக்கும்னு சொல்லுவாங்களே. இந்தக் கனவுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கும்ல. எனக்கு பயமா இருக்கு மலர். ஆச்சி சொன்ன கதையெல்லாம் நினைச்சா பயமா இருக்குடி."

"ஏய்..‌ கொடி.. அதெல்லாம் இங்க இருக்க கிழவிகளுக்கு பொழுது போகாம கட்டிவிட்ட கதை."

"இல்லடி... எங்க ஆச்சி சொல்லுச்சு.. இந்த மரம் அறுவது வருஷத்துக்கு முன்னாடி சாமியா இருந்துச்சாம். பல பேருக்கு கல்யாணம் முடிச்சு வச்சிருக்காம். பல பேருக்கு குழந்தை‌ பாக்கியம் கொடுத்துருக்காம்" என்றாள் கொடி.

"அட... கேடுகெட்டவைங்க... வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லி வச்சுட்டு செத்துப் போயிருச்சுக எல்லாம். புள்ள வேணும்னா புருஷன சுத்துனா அதுல ஒரு ஞாயம் இருக்கு" என்று அலுத்துக் கொண்டாள் மலர்.

"அந்த மரம் ஏதோ சொல்ல வருது.. எனக்கு சில சமயம் அந்த மரத்தைப் பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு. சில சமயம் அந்த மரத்தைப் பார்த்தா ஏதோ பயமா‌ இருக்கு" என்று‌ தன் மனதின்‌ தெளிவின்மையை விளக்கினாள் அவள்.‌

"ஆமா... புள்ளையாரு அசரமரத்தடியில போய் உக்கார்ந்து ஒண்டிக்கட்டையா போயிட்டாரு. இந்த மரத்தை சுத்துனா ஒண்டிக்கட்டையா வேணா போகலாம். கல்யாணமும்‌ ஆகாது. புள்ளையெல்லாம் பொறக்காது. நீ அந்த மரத்தை‌ப் பத்தி நினைக்கிறதையே நிறுத்து."

"ஏய்.. சும்மா இரு.. எல்லாத்தையும் கிண்டல் பண்ணிக்கிட்டு. நெருப்பில்லாம புகையுமா?... ஏதோ நடந்திருக்கு.."

"ஒண்ணும் நடக்கல... இருவது வருஷத்துக்கு முன்னாடி, இந்த மரத்துல ஒருத்தி தூக்குப் போட்டு தொங்கிட்டா.. அதனால இந்த மரமும் ராசியில்லாத மரமா போச்சு.. ஆமா வாழாம செத்த அவ, யாரு பக்கத்துல போனாலும் வாழ விடுறதில்லையாம். இப்படித்தான் சொல்லிக்கிட்டு திரியிறாங்க" என்றாள் மலர்.

"யாரோ ஒருத்தி தூக்குப்போட்டு செத்தா மரம் என்னடி செய்யும். அதுதான் அந்த மரம்‌ கோவமா‌ இருக்கோ? அதுதான் என் கனவுல வந்திருக்கு."

"அது சரி... அப்பறம் நீ ஏன் அந்த மரத்தை பாத்து பயப்புடுற."

"என்னமோ தெரியல. அந்த மரத்தை பார்க்கும் போதுலாம் மனசுல ஏதோ ஒரு உணர்வு. அது என்னனு சொல்லத் தெரியல."

"ஏய்.. நீ ஏன் இந்த கிழடுக சொல்றதெல்லாம் நம்புறியா?" என்றாள் கேள்வியாக.

"தெரியல டி... ஆனா அந்த மரத்தை பார்த்தா பயமா இருக்கு."

"எனக்கென்னமோ அதுல தூக்குப் போட்டு செத்தவ, ஆம்பளைங்களுக்கு மட்டும்தான் எதிரின்னு தோணுது. நமக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு இருக்கு. நம்மள கொன்னா அதுக்கு என்ன லாபம். எதுவும் புரியாம ஒரு கதையைத் திரிச்சு விடுறாங்க. நான் வேணா ஒன்னு செய்றேன். ஒருநாள் ராத்திரி அந்த மரத்துக்கு பக்கத்துல போய் கொஞ்ச நேரம்‌ இருந்துட்டு வரேன். அப்போ‌ உனக்கு பயம் போகுதான்னு பாக்கலாம்" என்று கூறிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பினாள்.
அதன்பிறகு வழக்கம் போல் ஊரையே சுற்றிவிட்டனர்.
*****************
********
***

அந்த ஊர் கோதையூர். பெயருக்கேற்றாற் போல் மங்கலம் நிறைந்திருக்கும் அந்த ஊரில்‌. ஊரின் பெண்கள் அனைவரும் மஞ்சள் குங்குமத்துடன் மங்கலகரமாக வலம் வருவார்கள். அவர்களை பார்த்துவிட்டு ஒரு காரியம் செய்ய சுழி போட்டால் நிச்சயம் நிறைவேறிவிடும். மஞ்சள் பூசிய முகமும், அரக்கு நிற வட்டப் பொட்டும், மனம் கமழும் வெள்ளை மல்லிகையும் எங்கும் நிறைந்திருக்கும். இந்த மங்கலத்திற்கு பின்னணியில் மாபெரும் காரணம் ஒன்றும் இருக்கிறது.

ஊரின் நடுவில் அலங்கார மாளிகை ஒன்று. அதன் மதில் சுவரின் பிரமாண்டம் அந்த வீட்டின் செல்வ செழிப்பை உணர்த்தியது. காலம் காலமாக அரச பரம்பரையைச் சேர்ந்த குடும்பம் அது‌.

குடும்பத்தின் அங்கத்தினர் அனைவரும் மேசையில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர்‌. இது அவர்கள் குடும்பத்தின் வழக்கம். அந்த குடும்பத்தலைவர் தேவர் பிள்ளை. குடும்பத் தலைவி கோகிலம் அம்மையார். அவர்களுக்கு ஒரே வாரிசு. அவன் செழியன். வாரிசில்லாமல் தவித்து தவமிருந்து பெற்ற பிள்ளை அவன். அதனால் அதீத செல்லம். அன்னையிடம் மட்டுமே. தந்தையிடம் செல்லம் செல்லுபடியாகாமல் போனது. ஊரில் உள்ள அனைவருக்கும் அவனின் தந்தையைக் கண்டால் பயம். அந்த ஊரின் ராஜா அவர். அவனுக்கும் அதே பயம் இருக்கிறது. அன்னையின் செல்லம் அவனை தவறான பாதையில் இட்டுச் சென்றதில்லை. நல்ல பிள்ளைதான்.

அனைவருக்கும் கோகிலம் அம்மையார் பரிமாறிக் கொண்டிருந்தார். இவர்கள் மூவருக்கு வேலைப் பார்க்க பல நூறு ஆட்கள்.

"அம்மாடி... இன்னைக்கு அந்த தரகர் வரதா சொல்லிருக்காரு. நம்ம புளளைக்கு சில பெரிய இடத்து சம்பந்தம் வந்திருக்காம். வந்தா என்னைய மில்லுல வந்து பாக்க சொல்லு" என்றார் அவர். மகனின் முகத்தில் நொடிக்கும் குறைவாய் நிகழ்ந்த மாற்றத்தையும் கணிக்கத் தவறவில்லை. அதுவரை கந்தன் சொன்னதில் பொய் இருக்குமோ என்று எண்ணினார். ஆனால் இப்பொழுது உறுதியாகிவிட்டது.

"அப்பா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான்‌‌ அமைதியாக. பெற்ற இருவருக்கும் இது அதிர்ச்சிதான். மகன் தந்தையின் சொல்லை இதுவரை மீறியதில்லை. அவன் பேச வேண்டும் என்று மட்டும்தான் கூறியிருக்கிறான். இருந்தும் அவன் கூறிய சொல்லின் அழுத்தமும் வலிமையும் பல சங்கதிகள் உரைத்துவிட்டது இருவருக்கும்.

அவர்களின் அதிர்ச்சியைப் பொருட்படுத்தாது, "சாப்பிட்டு முடிச்சோன பேசலாம்ப்பா. இப்போ சரிவராது" என்று அடுத்த அஸ்திரத்தை தொடுத்தான்.

தேவர்பிள்ளையின் முகத்தில் ருத்ரம் தாண்டவமாடியது‌. பின் அவரின் சொல்லுக்கு உரிச்சொல் கூறும் கூட்டங்களுக்கு நடுவே எதிர்ச்சொல் கூற விழையும் மகனின் மேல்‌ சீற்றம்‌ பொங்கி வழிவதில் பிழையில்லையே.

அவர் பதிலேதும் கூறவில்லை. அவனும் உணவில் கவனமாய் இருந்தான்.

கோகிலம் அம்மையார் மனதில் பெரும்‌ புயல் ஒன்று‌ அடித்துக் கொண்டிருந்தது.

சாப்பிட்டு ‌முடித்ததும் வரவேற்பறையில் இருவரும் அமர்ந்திருந்தனர்.

அவனே சொல்லட்டும்‌ என்று அமைதி காத்தார் தேவர் பிள்ளை.

"அப்பா... நா கொடிய கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்.."

இதைக் கேட்டதும்‌‌ அவர் மறுப்பைப் தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவர் வேறொரு வினாவை அவன் முன் வைத்தார்.

"ரொம்ப நல்லது தம்பி. அவ எந்த ராசா வீட்டு ராசகுமாரி தம்பி? பொண்ணு கேட்டு அனுப்பிவிடுறேன். விலாசம் சொல்லு" என்றார்.

"ராஜா வீட்ல மட்டும்தான் ராஜகுமாரி இருக்கணுமா அப்பா?" என்று எதிர்வினா தொடுத்தான் அவன்.

"நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னா ராசா வீட்டு மகளா இருக்கணும்" என்றார் அழுத்தமாக.

"என்னோட முடிவை நான் மாத்திக்கிறதா இல்லை" என்றான் அறிவிப்பாக.

அடம் பிடிக்கும் மகனுக்கு, அறிவுரை கூறுவதால் இந்த சிக்கலை களைய முடியாது என்று புரிந்து கொண்டார்.

"அவ்வளவு தூரம் ஆயிருச்சா.. யார் அது?" என்றார் அடுக்கப்பட்ட கோபத்துடன்.

அவருக்கு அரட்டி உருட்டி மிரட்டியெல்லாம் பழக்கமில்லை. நச்சென்று உச்சந்தலையில் அடிப்பது போல் நாலு வார்த்தையில் நடுங்க வைத்துவிடுவார். இவரின் குணம் அறிந்த கோகிலத்தின் மனிதில் புயல் சுழன்றடித்தது.

"நம்ம வீட்ல வேலை செய்ற குமரன் வீட்டு ராஜகுமாரிப்பா?" என்றான் மகன். அவருக்கு அவனும் சளைத்தவனல்ல என்று நிறுபணம் செய்தான்.

சில வினாடிகள் அமைதி. கோகிலம் பயந்து நடுங்கி நின்றிருந்தார். அவருக்கு நன்றாக தெரியும். இதற்கு தன் கணவனின் பதில் என்னவாக இருக்கும் என்று.

"ராசா வீட்டுக்கு வேலை செய்ய வந்துட்டாலே அவன் வீட்ல உள்ள எல்லாரும் வேலைக்காரங்கதான். நீ ராசா வீட்டு புள்ள. உனக்கு அந்த புள்ளைய புடிச்சிருக்குன்னா..... கூடவே வச்சுக்கலாம்... பொண்டாட்டியா இல்ல.. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இது ராசாவுக்கு புதுசு‌ ஒன்னும் இல்ல" என்று‌ சொன்னவர், துண்டை எடுத்து உதறி, தன் மகனின் தலையில் தலைப்பாகையாக கட்டினார்.

"இந்த மரியாதை இந்த ஊர்லே உனக்கு மட்டும்தான் இருக்கு. அது நிலைச்சு இருக்கணும். நான் சொல்றத கேளுன்னு கெஞ்ச மாட்டேன். நான் நினைக்கிறதை உன்னை செய்ய வைப்பேன்."

அவன் அதிர்ந்து நின்றான். அவர் எதிர்க்கக்கூடும் என்று நினைத்திருந்தான். ஆனால் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை.

"அப்போ‌ என்னோட ‌சந்தோஷம்?" என்றான் குரலில் வருத்தத்துடன்.

"அதைப் பத்தி முன்னாடியே யோசிச்சிருந்தா, இப்படி வந்து நின்னிருக்கமாட்ட" என்று அவனிடம் தன் பிடியைத் தளர்த்தாமல் பதிலுரைத்தவர், அடுத்த காரியத்தை செய்யப்‌ புறப்பட்டார்.

கோகிலம் சிலையாய் சமைந்து நின்றிருந்தார். பெற்ற பிள்ளையிடம் உரைக்கும் சங்கதியா இது. அவர்கள் பரம்பரையில் இது ஒன்றும் புதிதில்லைதான். அதை தவறென்றும் எவரும்‌ கூறமாட்டர். ஆனால் அவர் கணவன் சற்று கரடுமுரடானவராக இருந்தாலும், இந்த விஷயத்தில் இதுவரை தவறியதே இல்லை. அதை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்வார். இவ்வளவு ‌ஏன். அந்த ஒன்றுதான் அவரை அவருடன் பிடிப்புடன் வாழ வைத்தது என்றும் கூறலாம். பிணக்குள் இல்லாமல் இல்லை. எதிர்த்து ஒரு சொல் சொல்லவும் உரிமையில்லை. ஆனால் அனைத்து துக்கங்களையும் இந்த ஒற்றை விஷயம் சரிகட்டிவிடும். ஆனால் இன்று....

தன் வயிற்றில் உதித்த பிள்ளைக்கு அப்படி ஒரு வழியை தெரிவு செய்து கொடுத்திருக்கிறார் அந்த உத்தமர். இதுவரை அவரை பிடிக்கும் என்ற போர்வைக்குள் தன்னையே பிடித்துவைத்திருந்த, முலாம் பூசப்பட்ட ஒரு காரணம். இன்று பொய்த்து போய் பிரபஞ்ச ரூபம்‌ எடுத்து நிற்கிறது.

செழியன் சிலையாய் அமர்ந்திருந்தான்.

"செழியா.... இந்த அம்மா சொல்றத கேப்பியா?"

"நீ‌ என்னம்மா சொல்லப் போற.‌ அதான் உனக்கும் சேர்த்து ‌அவர் பேசிட்டு போய்ட்டாரே" என்று தனது‌ இயலாமையை அன்னை மீது கொட்டினான்.

"அந்த புள்ளையோட நல்லா வாழணும்னு நீ‌ நினைக்கிற. ஆனா ஒரு விஷயம் முடிவு கட்டிக்க. அந்த புள்ள வாழணும்னு நினைச்சா, அவள மறந்துட்டு அப்பா சொல்றத கேளு" என்று கூறிவிட்டு சென்றார்.

***************

பருவ மழை, வசந்த‌ காலம், வற்றாத ஜீவநதி, கோடையில் மழை,
மண் வாசனை, மரகத வயல்வெளிகள்,
புல்லினங்களின் மெல்லிசைகள்,
கூதிரின் மென்னூதை காற்று,
உதிர்ந்து‌ உரமான இலைகள்,
நன்னீர்‌ சூழ் நிலங்கள்,
தூர் வாரப்பட்ட ஏரிகள்,
உயிர் உரமூட்டப்பட்ட நன்செய்கள் என்று ஊர் முழுக்க செழிப்பாய் இருந்தது.

இவ்வாறு அழியா பசும் நினைவுகளை பகலென்னும் பொழுதில் சுமந்திருக்கும் இடம் இப்பொழுது சூன்யமாக தெரிந்தது. இரவை எழுதிய தூரிகை கையெழுத்தாய் ஒற்றை நிலவை வெண்மையில் எழுதிவிட்டது. வெளிச்சம் நன்றாகவே இருந்தது போல் இருந்தது. நிலவின் ஒளியில் மரத்தின் வடிவம் சுந்தரமாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் அச்சுருத்துவதாய் இருந்தது.

ஒரு பெண் அந்த மரத்தின் அடியில் அமர்ந்திருந்தாள். உயிர் வாயு தாராளமாக இருந்த போதிலும் மூச்சு முட்டுவது போல் ஓர் உணர்வு.

திடீரென காற்று அதிவேகமாக சுழன்றடிக்க, மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தது. மரத்தில் அன்று பூத்திருந்த புது மலர்கள் அருவி போல் கொட்டிட, மனதை மயக்கும் புது மனம் ஒன்று தோன்றியது.

மரத்தை சுற்றியிருந்த கழனியில் யாரோ ஓலமிடும் சப்தம் மனதைப் பிழிந்தது. நேரம்‌ செல்ல செல்ல அந்த ஓலம் அதிகமாகி, காற்றுக்குள்‌ ஊடுருவல் செய்து செவிப்பறையைக் கிழித்தது.

விழிகள் பிதுங்கி நின்றிருந்தாள் அந்த பெண். அந்த பெண்ணை யாரோ அந்தரத்தில் தூக்கியடித்தனர். பின்‌ காற்றுடன் சுழன்றிடிக்கப்பட்டாள் அவள். மரத்திலிருந்து ஒரு கிளை உடைந்து அவள் கழுத்தினுள் இறங்கியது. அவளின் மரண ஓலம் கேட்காதபடி காற்று அதீத ஒலியெழுப்பியது.

அலறியடித்து எழுந்தாள் கொடி. மீண்டும் கனவு போல.

எழுந்து சென்று ஜன்னல் அருகில் நின்றாள். நேற்றைய தினம்போல் மரம் அமைதியுடன் இருந்தது. கூதிரின் மென்னூதைக் காற்று ஜன்னல் வழியே உள் நுழைய, அவளின் திரேகம் சிறிது நடுங்க ஆரம்பித்தது. விடிந்ததும் மலரைக் காண அவள் வீட்டுக்கு சென்றாள்.

"மலரு... மலரு" என்று பதறிக்கொண்டே அவள் வீட்டிற்கு ஓடினாள்.

"கொடி.. என்னடி ஆச்சு.. ஏன் இப்படி ஓடி வர்ற.."

"இல்லடி.... திரும்ப கனவு வந்துச்சு.."

"உனக்கு வேற பொழப்பே இல்லையா? அந்த மரத்த என்னைக்கு மறக்குறியோ அன்னைக்குதான் நல்லாயிருப்ப சொல்லிட்டேன்" என்றாள்‌ கோவமாக.

"நான் சொன்ன மாதிரி இன்னைக்கு ராத்திரி நான் அந்த மரத்துக்குப் பக்கத்துல போயிட்டு வரேன்... அப்போவாச்சும் நம்பித் தொலை" என்று அவளைக் கடிந்து கொண்டாள் அவள்.

"இல்ல..‌இல்ல.. நாம போகவே கூடாது" என்று‌ கூறி கனவில் வந்த மொத்தத்தையும் கூறினாள்.

அதைக் கேட்ட மலரும் சற்று அரண்டுதான் போய்விட்டாள்.

"சரி விடு.. பயப்படாத.. நாம போக வேண்டாம்.. நீ சொல்ற‌ கதையைக் கேட்டா எனக்கும் பயாமாத்தான் இருக்கு."

"கொடி.. நானே‌ உன்னை பார்க்க வரணும்னு நினைச்சேன். செழியன் அண்ணே உன்னைப் பாக்கணும்னு சொல்லுச்சு. ஏதோ பிரச்சினை போல வீட்ல.." என்று மலர் கூறியதும் கொடியின் முகத்தில் யோசனை படர்ந்தது.

"ஏய்...‌ என்னடி‌ சொல்ற?... நான் எப்படி போய் பாக்க முடியும்?."

"உனக்கும் அவரை ரொம்பவே புடிக்கும்னு எனக்குத் தெரியும். போய் பாருடி. இல்ல வாழ்க்கையே திசை மாறிப்‌போனாலும் போயிரும்" என்றாள் மலர்.

அவளும் நிதர்சனம் ‌அறிந்திருந்தாலும், தனது தோழிக்கு ஏதேனும் நல்லது நடந்துவிடாதா என்ற ஏக்கம்தான்‌.

"ஊர்‌க் கட்டுப்பாட்டையெல்லாம்‌ மீறி எப்படிடி போய் பாக்குறது?. எனக்கு பயமா இருக்கு.."

"உனக்கு வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னா சரியா?" என்று அவள் கேட்ட கேள்வியே கொடியைக் கூராய் ஆய்ந்துவிட்டது.

"இன்னைக்கு சாயங்காலம் உன்னைக் கோவிலுக்கு கூட்டுட்டு வர சொல்லுச்சு எங்கிட்ட. நாம ரெண்டு பேரும் போய் பாத்துட்டு வரலாம்" என்றாள் அவள்.

அந்த ஊரின் கட்டுப்பாடுகள் அவை. செழியன் உயர்ந்த சமூகத்தில் பிறந்தவன். உண்மையில் மனித சமூகம் மட்டுமே புடவியில் உயர்ந்ததாய் இருந்தது. இந்த பாழாய்ப் போன மூளை என்று சிந்தனை செய்ய ஆரம்பித்ததோ‌, அன்று இந்த பிரிவினைகளும் வந்துவிட்டது போல. மனிதனின் இன்பம், துன்பம் அனைத்திற்கும் ‌காரணம் மூளையே. பல இடங்களில் மனதைத் தின்று விடுகிறது மூளை.

கொடியும்‌ செழியனும் நேரில் சந்தித்து உரையாடியதில்லை. ஆனால் இருவரும் பார்வையில் உள்ளப் பரிமாற்றம் செய்து கொண்டது என்னவோ உண்மை. அவர்கள் தம்பதியராய் சேர்ந்து வாழும் நாளைப் பற்றியெல்லாம் அவள் எண்ணியதில்லை. அதை நினைக்கவே அவளுக்கு பயமாக இருக்கும்.


தேவர் பிள்ளை தனது வேலையாள் குமரனை அழைத்தார்.

குமரன் வந்ததும், அவரை அமரச் சொல்ல, அவர் கீழே சென்று அமரப் போக, தடுத்து நிறுத்தினார் தேவர்.

"ஐயோ..‌ குமரா நீ போய்‌ கீழ உக்காரலாமா? இங்க வா. இதுல வந்து உக்காரு" என்று தான் அமர்ந்திருக்கும் நாற்காலியை விட்டு எழுந்துகொண்டு வழிவிட, குமரன் பதறிவிட்டார்.

"ஐயா!!!. என்னங்கய்யா இதெல்லாம்?. நீங்க இந்த ஊரோட மகராசன்.‌ என்னைப் போய் உங்க நாக்காலில உக்கார சொல்றீக. நீங்க உங்காருங்க ஐயா" என்று அவன்‌ கடிந்து கொண்டான்.

"அப்படியா சொல்ற?. உனக்குப் புரியுது. ஆனா உன்னோட மகளுக்குப் புரியலையே" என்றார் ஏற்ற இறக்கத்துடன்.

"என்னய்யா சொல்றீங்க! அவ என்ன செஞ்சா? எனக்கு ஒண்ணும் புரியலைங்களே" என்றான் குமரன்.

"ராசா வீட்டு மருமகளாகனுமாம் உன்னோட பொண்ணுக்கு" என்று அவர் கூற, குமரன் திடுக்கிட்டார்.

"அது அவளுக்கு ஏதோ வயசுக் கோளாறு. நான் உன்னை நம்புறேன். அதனால உன் பொண்ணுக்கு எடுத்து..... இல்ல... அது சரிவராது. வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிரு. என் மகனோடதான் வாழணும்னு ஆசைப்பட்டா வாழலாம்... பொண்டாட்டியா இல்ல.." என்று வக்கிரத்தை வஞ்சனையின்றி வசைமாரியாக பொழிந்துவிட்டு சென்றார்.

*******

கொடி கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அன்னையிடம் உரைத்துவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டவளை குமரன் வழிமறித்து நின்றார்.

"எங்க கிளம்பிட்ட கொடி?" என்றார் அடக்கப்பட்ட கோபத்துடன். எவ்வளவு முயன்றும் வார்த்தைகளில் கடுமை குடியேறியதைத் தடுக்க இயலவில்லை.

"கோவிலுக்கு அப்பா. மலர் வரேன்னு சொன்னா. அவ கூடதான் போறேன்." அவரின் அதிர்ந்து ஒலித்த குரலில், சற்றே பயந்தாலும், பிசிறில்லாமல் பதிலுரைத்தாள்.

"அம்புட்டு அழகா பொய் சொல்ல பழகிட்ட போல."

"நான் ஏன் பொய் சொல்லணும்ப்பா?."

"சரி.. இப்போ இப்படி கேக்குறேன். யாரைப் பார்க்க போற?" என்றதும் சற்றே திடுக்கிட்டாள்.

குமரன் கொடியை அடித்து துவைத்துவிட்டார். கொடியின் அன்னை மங்களம் வந்து தடுத்துப்பார்த்தார். அவருக்கும் அடி விழுந்தது. மேலும் ஏச்சுக்களும் பேச்சுக்களும் என்று ஒரு யுத்தகளமாய் காட்சியளித்தது அவர்களது வீடு. மலர் வந்து பார்த்துவிட்டு ஒன்றும் செய்ய இயலாமல் சென்றுவிட்டாள்.

"ராசா வீட்டு பிள்ளை மேல ஆசப்படலாமா? உன்னைப் பெத்ததுக்கு என்னைத் தலை குனிய வச்சிட்டியே. ராசா வீட்ல எனக்கு‌ எம்புட்டு மரியாதை தெரியுமா? உன்னால அம்புட்டும் போச்சு. ஒரு அப்பனா கேட்கக்கூடாத வார்த்தையை நான் கேட்டுட்டேன். சொல்லவே நாக்கு கூசுது. ராசாவோட மவனுக்கு கூ.... " என்று மிச்சத்தை முடிக்க முடியாமல் அழுதார் அவர்.

வாங்கிய அடியால் கொடி துவண்டு சுருண்டு போய்‌கிடந்தாள். நெஞ்சில் விழுந்த அடி ஆறா வடுவாய் வாழ்க்கை முழுக்க வரப்போகிறது. எத்தனை முறை மூளை எடுத்துரைத்தாலும் மனம் கேட்கவில்லை. செய்த தவறுக்கு தண்டனையாக இப்பொழுது தற்கொலை செய்து கொள்ளட்டும் மனம். அது இருந்தால்தானே கண்டதையும் பிதற்றி, மூளையின் நியாயங்களை ஆசை கொண்டு துடைத்தெறியும். வேண்டாம். இனி அந்த பாழாய்ப்‌போன மனம் வேண்டாம் என்று மனதிற்குள்ளே அரற்றி உருட்டினாள். இனி நடப்பது நடக்கட்டும் என்று முடிவெடுத்தாள்.

அன்று முழுக்க அவர்கள் வீடே மயான பூமியாய் காட்சியளித்தது. உணவு உண்ணவும்‌ மறந்திருந்தனர். கொடி ஜன்னலோரம்‌ அமர்ந்திருந்தாள். மீண்டும் அந்த மரம்‌ நடுநிசியில் வரிவடிவமாய் தெரிந்தது. இப்பொழுது அது அவளுக்கு ஆறுதல் சொல்வதுபோல் இருந்தது.

மறுநாள் விடியலில் குமரன் எழுந்து உறுமிக் கொண்டிருந்தார்.

"இன்னைக்கு சாயங்காலம் கொடிய பொண்ணு பார்க்க வராங்க. எல்லாரும் தயாரா இருங்க" என்றார் அறிவிப்பாய். இது அவள் எதிர்பார்த்ததுதான். அதனால் அமைதியாகவே இருந்தாள் கொடி.

அவளைத் தயார் செய்ய மலர், கொடியின் வீட்டிற்கு வந்தாள்.

"கொடி உயிரோட வாழணும்னா, அவளுக்கு நல்லத எடுத்துச் சொல்லு" என்றார் மலரிடம். கட்டளையாகத்தான். இதைச் செய்ய வேண்டும் என்ற தொனி குரலிலிருந்து வெளிப்பட்டது.

மாப்பிள்ளை வீட்டினர் அனைவரும் வந்தாயிற்று. மணப்பெண் கோலம் பூண்ட பின்னும், அவள் முகத்தில் அப்பட்டமாக அப்பியிருந்த குழப்பம் மட்டும் அழிவதாய் இல்லை. தன் காதலை புதைக்குழியில் புதைத்து, மூளியாய் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் மங்கலத்தின் மறுவுருவமாய் மருவி நின்றிருந்தாள் சபையில். சுபமுகூர்த்த நேரத்தில் வெற்றிலை பாக்கு மாற்றி, திருமணத் தேதி நிச்சயிக்கப்பட்டது. அதுவும் அடுத்த சுபமுகூர்த்த தினத்தில் என்று லக்ன பத்திரிகை எழுதினர். அலங்கார மூளியாய் அமர்ந்திருந்தாள் கொடி.
 
Last edited:

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
அத்தியாயம் - 4


பூமி வருடம் 4000

அந்தகாரம்!
மஞ்சள் விளக்கு!
நலுங்கிய இரவு!
நாயின் ஓலம்!
வேக நடை!
இரையும் நிசப்தம்!
கரையும் நேரம்!
மருகிய தனிமை!
இறுகிய தசைகள்!
நடுங்கும் திரேகம்!
அச்சம் நீ!
தவிர்க்க நான்!!!


நளனும் அனிச்சமும் தங்களின் ஏகாந்தப் பொழுதினை, எழிலோவியமான பனிமலையைக் கண்டு களிப்பதில் செலவிட, அங்கு ஓடிவந்த ஒருவன், "நளன், அந்தப் பொருளைத் தேடி எடுத்தாச்சு. அது ஏதோ ஒரு விசித்திரமான பட்சியா இருக்கும்‌ போல. என்னன்னு வந்து கொஞ்சம் பார்க்க முடியுமா?. உங்களை‌ அழைச்சிட்டு வர சொன்னாங்க" என்றான்.

நளன்‌ அவ்விடம் விரைந்து சென்றான். அவனுக்குள் அவனுக்கே பிடிபடாத ஆர்வம் மேலோங்கியிருந்தது. அது என்னவென்று அறிந்துவிட வேண்டுமென்று. இத்தனை வருடங்களில் அவன் எத்தனையோ பொருளைத் தோண்டி எடுத்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் ஒரு கர்வம் இருக்கும். அரசு கொடுத்த வேலையை நனி சிறக்கச் செய்து முடித்த நிம்மதியும் முகத்தில் குடிகொண்டிருக்கும். ஆனால் இன்று வேறொரு விசித்திர உணர்வு. கொஞ்சம் அதிகமாய்த் துடித்தது இதயம். அவனது முகத்தில் தெரிந்த ஆர்வம் அனிச்சத்தையும் தொற்றிக்கொண்டது. அவளும் ஆர்வமாக அவன் பின்னே ஓடினாள். இதுவரை எந்த சுவாரசியமும் இல்லாமல் சென்று கொண்டிருந்த வாழ்க்கை ஏனோ இந்தத் தீவிற்கு வந்த பிறகு சிறிது சுவாரஸ்யம் கூடிப் போனதாகவே தோன்றியது அவளுக்கு. இத்தனை‌ தினங்களில் முகாந்திரமின்றி ரணமாய் எரிந்த மனது கூட, சற்றே வேதனையிலிருந்து தெளிந்திருந்தது. அவள் மனதிற்கு ஒத்தடம் கொடுக்கும் அளவு அந்தப் பனிமலையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று அவளுக்கே விளங்காத புதிராக இருந்தது.

அகழாய்வில் கிடைத்த பொருளை வாங்கிப் பார்த்தான் நளன். நீண்டிருக்கும் மயிர்க்கற்றைகள் சற்றே கணமாய் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்தத் தொல்படிமத்தின் தோற்றம். அதில் ஆங்காங்கே கூராய் மெல்லிய புடைப்புடன் சில பாகங்கள் நேர்த்தியாக. பழுப்பு நிறத்திலிருந்த படிமத்தின் மேல் ஆங்காங்கே வெள்ளைப் பனித்துகள்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

"இது விலங்கினம் போல இல்லையே..." என்றான் நளன் யோசனையுடன்.

"ஆமா நளன். விலங்கினம் இல்லை. இதுவரை நமக்குக் கிடைத்த தொன்மப்படிவம்‌ எல்லாத்துக்கும் காலும் கையும் இருந்திருக்கு. இல்லை கண்கள், வால் போன்ற உறுப்பு இருக்கும். ஆனா இது என்ன?"

"ஏதாவது உயிரனத்தோட ஒரு பாகமா இருக்கலாம்" என்றான் நளன் தீவிர யோசனையுடன்.

"ஆனாலும் திடமான எலும்பு ஒண்ணுமே இல்லையே."

"இந்தத் தீவே ஒரு விசித்திரமான தீவா இருக்கு. பல மனித எலும்போட படிவங்கள் கூட கிடைக்கும்னு தோணுது."

"எனக்கும் அப்படிதான் தோணுது. பார்க்கலாம்."

"இதை ஆராய்ச்சிக்கூடத்தில் கொடுக்க ஏற்பாடு செய்யுங்க. இது பன்னெடுங்காலமாக பனிமலைக்குள்ள உறைஞ்சு கிடந்ததுனால உயிர் உறைந்து இருக்கவும் வாய்ப்பு இருக்கு இல்லையா? ஒருவேளை நம்ம உணவு மாதிரி ஏதாவது உயிரியா இருந்தா நிச்சயம் அதை உயிர்ப்பிக்க முடியும்" என்று எடுத்துக் கொடுத்தான்‌ நளன்.

"நிச்சயம் செய்யலாம்" என்றான் அவனுக்கடியில் வேலை பார்ப்பவன்.

"இத ரொம்ப நேரம் கையில் வச்சு ஆராய்ச்சி பண்ண வேண்டாம். கொள்கலன் இருந்துச்சுன்னா அதுல பாதுகாப்பா இதை பத்திரப்படுத்தி ஆராய்ச்சிக்கூடத்துக்கு அனுப்பி விடுங்க. அதுக்குப் பக்கத்தில் நிச்சயம் இன்னும் சில பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கு. நாம தேடி எடுக்கலாம்" என்று நளன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே காதுக்குள் காற்று ரீங்காரமிடும் சப்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அங்கிருந்த பனித்துகள்கள் ஒருங்கிணைந்து மேலெழும்பி ராட்டினம் போல் சுற்ற ஆரம்பித்தது. மையப்பகுதியில் அடர்ந்து திரண்டிருந்த பனித்துகள்கள் சற்று வேகமெடுத்துச் சுழல ஆரம்பிக்க, அருகிலிருந்த பனிக்கட்டிகளை எல்லாம் உடைத்து அதனுடன் சேர்த்துக்கொண்டு பேயாட்டம் ஆடியது சூறாவளி. அனைவரும் விழிகளை உயர்த்தி மேலே பார்க்க ஆரம்பித்தனர். காந்தசக்திக்குள் ஈர்க்கப்படும் பொருள் போல பனிக்கட்டிகள் உடைந்து சிதற, அந்த மையப்பகுதியின் சுற்றுப்பாதையில் இணைந்து சுழல ஆரம்பித்தது.

அதைக்கண்டு ஆடிப் போயினர் அங்கிருந்த அகழாய்வு குழுவினர். அதன் பிறகு அனைவரையும் பாதுகாக்கும் பொருட்டு அவர்கள் அங்கு அமைத்திருந்த வீடுகளை நோக்கி வண்டி செலுத்தப்பட்டது. இந்தப் புயலில் அழியா வண்ணமே அவர்கள் தங்குமிடம் உருவாக்கப்பட்டிருந்தது. அவர்கள் கட்டியிருந்த பனிக்கட்டி குடிலுக்குள் சென்று பாதுகாப்பாக இருந்தனர். உள்ளுக்குள் இருந்து வெளியில் வீசும் பனிப்புயலைப் பார்த்தனர்.

காற்றுக்கு நிறமில்லை என்றுதான் இத்தனை தினம் நினைத்திருந்தாள் அனிச்சம். ஆனால் இங்கு வெள்ளைக் காற்று வீசுகிறதே. ஏற்கனவே அந்தத் தீவு முழுக்க முழுக்க வெள்ளைக் கம்பளம் விரித்திருந்தது. இப்பொழுது காற்றும் வெள்ளை நிறம் பேணி வீசியடிக்க, வெள்ளை தவிர அங்கு வேறெதுவும் இல்லை. பனிச் சூறாவளி சுழலும் சப்தம், மனதில் கிலியைத் தோற்றுவித்தது. மையப்பகுதியின் உயரம் மேலெழும்ப எழும்ப, இவர்களின் வயிற்றுக்குள் அதே உணர்வு. ஏதோ ஒரு ஒவ்வாமையுடன் வயிற்றிலிருந்து தலைக்கு ஏற, தலை சுற்றுவது போல் இருந்தது அவளுக்கு.

நளனுக்கு இவையனைத்தும் பழக்கமே. எப்பொழுதும் இந்தத் தீவில் சூரியன் உதிக்கும்பொழுது வேலைக்கு வந்து விடுவார்கள். ஆறு மாத காலம் இங்கேதான் பணி. இடையில் ஓய்வு எடுப்பதற்கு என்று ஒவ்வொருவருக்கும் மாற்றிமாற்றி விடுமுறைகள் அளிக்கப்படும். அந்த விடுமுறையில் அவர்களின் வீட்டிற்குச் சென்று, மீண்டும் பணிக்குத் திரும்புவார்கள். இப்படித்தான் இடைக்காலத்தில் அளிக்கப்பட்ட விடுமுறையில் அனிச்சத்தை சந்திக்கச் சென்றிருந்தான் நளந்தன். வரும்பொழுது அவளையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.
அனிச்சத்திற்கு இதுவே முதல்முறை, இந்தத் தீவிற்கு வருவதும், இவ்வகையான சூறாவளி காண்பதும். அடிவயிற்றில் ஏற்பட்ட அதிர்ச்சியுடன், மனதில் கலக்கம் குடிபுக பயத்தில் உறைந்திருந்தாள் அவள். அங்கிருந்த சீதோஷ்ண நிலை வேறு அவளின் தசைகளை உறையச் செய்திருந்தது. நளன் அவள் கைகளுக்கு உஷ்ணம் அளித்து, அவளை மீட்டெடுக்க முனைந்து கொண்டிருந்தான்.

"அனி பயந்துட்டியா?"

பதிலேதும் கூறாமல் அந்தப் பனிப்புயலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இது எப்பவும் நடக்குறதுதான். நான்தான் சொன்னேனே" என்றான் அவளை‌ சமாதானம் செய்யும் முனைப்புடன்.

"சிலசமயம் நிகழ்வுகளைக் கடத்தும் பணியை வார்த்தைகள் சரிவர செய்வதில்லை" என்றாள் அதிர்ச்சி விலகாத குரலில்.

"பயமா இருக்கா?" என்றான் அவளின் கைகளைப் பிடித்து.

"நீ இருக்கும்போது என்ன பயம் எனக்கு?" என்றவள், சில கணங்களில் முன்னுக்குப் பின் முரணாக உரைத்தாள்.

"ஆனா இந்த சூறாவளியை நினைச்சா உண்மையாவே பயமாத்தான் இருக்கு" என்று அவள் கூறவும் அவன் நகைத்துக் கொண்டான்.

"உனக்கு என்ன ஆச்சு?"

"எனக்கே தெரியல.. ஆனா என்னமோ ஆகுது. நல்லதா கெட்டதான்னும் தெரியல" என்று தன் மனத்தெளிவின்மையைத் தெளிவாக உரைத்தாள் அனிச்சம்.

"நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம். எல்லாம் சரியாயிடும்" என்றான் ஏக்கம் கலந்த குரலில். அவள் பதிலேதும் கூறாமல் பனிப்புயலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் உரையாடும் பொழுது சிறிது பிசிறுகள் இருந்தது குளிரில். வாயிலிருந்து வெண்புகை வெளியில் வந்தது.

"என்ன பதிலே காணோம்?" என்று அவளை அருகில் இழுக்க, கூதையின் கோலத்தில் உறைந்திருந்தவள், பனிப்பந்தென அவன் மேல் விழுந்தாள்.

அவனுக்குக் கோபம் வந்தது. அவன் குழைவுடன் காதல் சுமந்த மொழிகள் உதிர்க்கையில், இவள் பனிப்புயலைப் பார்த்துக் கொண்டிருந்ததால் வந்த கோபம். அவளின் விழிகளை மூடினான் அவன் விரல் கொண்டு. அதைத் தடுக்க முற்பட்டாள் அவள்.

"என்னோட பேச்சு‌ எதுவும் உனக்கு கேக்கலயா அனி? எப்பவும் நீ இப்படி இருக்கறது எனக்குப் பிடிக்கல" நளன்.

"எப்படி இருக்கறது?" என்று எதிர்வினா ஒன்று எழுப்பினாள்.

"உனக்கு என் மேல காதல் இருக்கா இல்லையான்னு சொல்லு"

"காதல்னா என்னன்னு நீ சொல்லு" என்றாள் அனி.

"எனக்கு உன் மேல இருக்கறதுக்கு பேரு."

"நான் செத்துட்டா என்ன செய்வ?" என்றாள்‌ நிதானமாக.

"இது என்ன கேள்வி?" என்று கடிந்து‌ கொண்டான் அவளை.

"எனக்கு பதில் வேணும்."

"நான் செத்துட்டா நீ என்ன செய்வியோ அதைத்தான் நானும் செய்வேன்?" என்றான் நிதானமாக. பல கற்பனைகளை மனதில் சுமந்து கொண்டு இவள் தவிப்பது மட்டுமல்லாமல் அவனையும் அல்லவா சேர்த்து தவிக்கவிடுகிறாள்.

அவள் பதில் கூறாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள்.

"என்ன பதிலே காணோம்?... இந்த கேள்விக்கு பதில் உன்னால சொல்ல முடியாதப்போ என்னால மட்டும் எப்படி சொல்ல முடியும்?" என்றான் ஆதங்கத்துடன். அவளை விட்டு விலகி நின்றான் கொஞ்சம் கோபத்துடன்.

"ஏன் சொல்ல முடியாம? என்னால சொல்ல முடியும்" என்றாள் அவள்.

இப்படி ஒரு பதிலை அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

"சரி.. நீ‌ சொல்லு.. நான் தெரிஞ்சுக்குறேன்" என்றான் நளன்.

"இதுல நீ தெரிஞ்சுக்க என்ன இருக்கு?. நீ செத்துட்டா கொஞ்ச நாள் வருத்தப்படுவேன். அப்பறம் வேற ஒருத்தரோட வாழத் தயாராயிடுவேன். ஒரு குழந்தை பெத்துக்கணும். இதைத்தான் நம்ம அரசாங்கம் எதிர்பார்க்குது. இதை வேண்டாம்னு சொல்ல முடியுமா இல்லை அந்த உரிமைதான் எனக்கு இருக்கா?. இங்க உள்ள யாருக்குமே தன்னுடைய தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் உரிமை இல்லையே" என்று அவள் கூற, நளன்‌ மலைத்து நின்றான்.

"அனி..‌ ஏன் இப்படி எல்லாம் பேசுற?."

"நான் பேசுனதுல எதுவும் தப்பிருக்கா? இல்லை இதெல்லாம் நடக்காதா?"

"நீ பேசுனது எல்லாம் சரிதான். அப்போ அரசு தப்பா‌ செயல்படுதுன்னு சொல்றியா?"

"இல்லை.. காதல்ங்கிறதுக்கு உன்னோட விளக்கம் சரியில்லைனு சொல்றேன். இந்த நூற்றாண்டில் காதல் ஒரு பண்டமாற்று பொருள்தான்."

"காலங்காலமா நாம பின்பற்றும் ஒரு செயலை நீ தப்புன்னு சொல்ற."

"காலங்காலமா பின்பற்றும் ஒரு செயல் தப்பா இருக்கக்கூடாதா என்ன?"

"வாழ்க்கை ரொம்ப சின்னது. ரொம்பப் போட்டு‌ கஷ்டப்படுத்திக்கிற நீ."

"இஷ்டப்பட்டு வாழ முடியலையேங்கிறதுதான் என் ஆதங்கம். கஷ்டப்பட்டு ஏன் வாழணும்.என்ன வாழ்க்கை இது?"

"ஏன் இந்த வாழ்க்கைக்கு என்ன குறைச்சல்."

"எல்லாமே குறைச்சலாதான் இருக்கு நளன்."

"உன்னோட கற்பனை உலகம் நிஜத்தை ஏத்துக்க மறுக்க சொல்லுது. இந்த மனப்பான்மை நல்லதுக்கில்ல."

"ஒரு இயந்திரத்துக்கு வாழ்க்கை இருக்கா?"

"இல்லை."

"அதே மாதிரிதான் நாமும் வாழ்ந்துட்டு இருக்கோம். காலையில் இத்தனை மணிக்கு எழுந்திரிக்கணும். இத்தனை மணிக்கு சாப்பிடணும். இவ்வளவுதான் சாப்பிடணும். தண்ணி கூட இவ்வளவுதான் குடிக்கணும். அப்புறம் நம்ம மூளையோட அறிவுத் திறனை பரிசோதிச்சு, இதுதான் படிக்கணும். இந்த வேலையைத்தான் செய்யணும்னு ரொம்ப முன்னாடியே சொல்லிடுறாங்க. இதுல என்ன சுவாரசியம் இருக்கு?. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நூறு அடியைத் தோண்டி ஒரு பொருளை‌ எடுத்த இயந்திரத்துக்கும் நமக்கும் என்ன பெரிய வித்யாசம்‌ சொல்லு?. இயந்திரம் மாதிரி தான நாமளும் இருக்கோம்" என்று பொரிந்து தள்ளினாள் அவள்.

அவனுக்கு அவளை எப்படி சமாளிப்பது என்றே விளங்கவில்லை. இந்த உலகில் ஆசைகளுக்கும் எல்லை உண்டு. அதற்கும் அப்பாற்பட்ட ஒன்றை அவள் வேண்டுகிறாள். அவள் சொல்லும் உலகம் அவன் கற்பனையிலும் எட்டாமல் இருக்க, அதை எப்படி அளிக்க முடியும்?.

"சரி விடு... ரொம்ப யோசிக்காத. இருக்குற சூழ்நிலையில் நம்மளால எவ்ளோ சந்தோஷமா இருக்க முடியுமோ, அவ்ளோ சந்தோஷமா இருக்கலாம். என்னால அதை மட்டும்தான் கொடுக்க முடியும் உனக்கு" என்று வாக்களித்தான். அவளை திசை திருப்பிவிடும் நோக்கோடும் இப்படி உரைத்தான்.

"அந்த இயந்திரத்தை நூறு அடி தோண்டுன்னு நீ சொன்னதும் நூறு அடி தோண்டுச்சு. அப்புறம் ஏதோ ஒரு பொருளை எடுக்கணும்னு சொன்ன. அதையும் அது சரியா எடுத்து கொடுத்துச்சு. இதுமாதிரி தான் நாமளும் இருக்கோம் இல்லையா? இந்த வாழ்க்கையே பிடிக்கல எனக்கு. எங்க அம்மா சொன்ன கனவு உலகத்துல வாழணும் போல ஆசையா இருக்கு. அந்த உலகம் கற்பனையிலையே‌ இவ்ளோ அழகா இருக்கே. ஒருபக்கம் நீலம். இன்னொரு பக்கம் பச்சை.
அதைப் பார்க்கவே அவ்வளவு அழகாய் இருந்தது. பார்க்கும் போதே அதை நுகர்ந்து பார்க்கணும்னு ஒரு ஆர்வம். அதைத் தடவிப் பார்க்கணும் ஒரு ஆர்வம். அதை உணரனும்னு ஒரு ஆர்வம். அது தீரா ஆசையா என் மனசுல பதிஞ்சிடுச்சு."
"நான் அதுவே கனவு உலகம்னு சொல்லிட்டு இருக்கேன். கட்டுக்கதைன்னு கூட சொல்லலாம். கடுமையான விமர்சனத்துக்கோ விதண்டாவாதத்துக்கோ ஆளாகும் கருத்துப்படிவம் அது. அவ்ளோதான்" நளன்.



"அது எப்படி அவ்வளவு உறுதியா நீ சொல்ற. ஏன் இருக்கக்கூடாது?."

"எனக்கு என்னமோ தோணல."

"இன்னைக்கு ஏதோ ஒரு உயிரினத்தோட தொன்படிமம் எடுத்தோமே.. நான் சொல்ற பச்சை அல்லது நீல உயிரினமா அது ஏன் இருந்திருக்கக்கூடாது?."

"இத்தனை‌ வருஷமா ஏன் அது கிடைக்காமல் போகணும்?"நளன்.


"எனக்கு என்னமோ அந்த தொன்படிமத்தால பல முடிச்சுகள் அவிழும்னு தோணுது."



"ஆனாலும் உன்னோட நம்பிக்கை அபார நம்பிக்கைதான். பார்க்கலாம். அது எப்படின்னு ஆராய்ச்சிக்கூடத்தில். நாம தினமும் சாப்பிடுற பாசி வகையைச் சேர்ந்ததா இருக்கலாம்ங்கிறது என்னோட கணிப்பு."

சிறிதுநேர அமைதி... அவனும் கோபமாய் அமர்ந்திருந்தான்.
அதன்பிறகு அவளே மௌனம்‌ கலைத்தாள்.

"ஆமா எப்படி கண்டுபிடிச்சீங்க சூறாவளி வரப்போகுதுன்னு?. ஏதோ ஒரு சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சு. திடீர்னு பாத்தா பக்கத்துல பெருசா வெள்ளை நிறத்தில் சுருள் மாதிரி சுத்திகிட்டே வருது" என்று தன்னுடயை வித்தியாசமான முதல் அனுபவத்தைப் பகிர்ந்தாள்.

"பொதுவா இங்க வேறு எந்த சத்தமும் கேட்காது. காத்து கூட அமைதியாத் தான் அடிக்கும். சமதளமாவே இருக்குறதால காத்து கடந்து போற சத்தம் நமக்கு கேக்காது. ஆனா சூறாவளி சுழலும் போது வித்தியாசமா ஒரு சத்தம் வரும். அகழாய்வு பணியோட சேர்த்து இதையும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்காங்க."

புயல் ஓரளவு அந்த இடத்தைக் கடந்து சென்றிருந்தது.

அதன் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் பணியைத் தொடங்கலாம் என்று எண்ணியிருக்க, பனிப்புயலின் தாக்கம் அங்கு நிறைந்திருந்தது. அதனால் மறுநாள் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.
அந்தகாரம் கருமையை அரைத்துப் பூசியிருந்தது பகல் என்னும் சித்திரத்தில். தினமும் இருளில் பூக்கும் நட்சத்திரங்களையும், வெள்ளை மதியையும், இருண்மையின் கோரக் கரங்கள் கொஞ்சமும் ஈரமின்றி அள்ளிப் புசித்திருந்தது. இருளின் பேரொளியாய் காரிருள் மட்டுமே கசிந்திட, அவள் மூச்சிசைந்ததோ இல்லை அவளுக்கே தெரியாமல் கசிந்ததோ? நிலவற்ற வானமும், விண்மீன் தின்ற இரவும் அவளுக்குச் சாதகமான சூழ்நிலையாக இருப்பினும், அவளின் அதீத இதயத்துடிப்பு சர்வ நிச்சயமாக அவளுக்குப் பாதகம் விளைவிக்கக் காத்திருந்தது. எவ்வளவு முற்பட்டும் மூச்சை சீர்படுத்த முடியவில்லை. மூச்சடக்கி பழக்கமும் இல்லை. மூச்சடக்கும் நிலையில் அவளும் இல்லை. குனிந்து தன் பெருத்த வயிற்றைப் பார்த்தாள். நிறைமாத கருவைச் சுமந்து நிற்கிறாள். ஒரு விருட்சத்தின் மறைவில் நின்று கொண்டிருந்தாள். ஆளில்லா சாலையில், மூளிப் பொழுதினில் உயிர்‌ காக்க இறுதிக் கட்ட போராட்டம்.

ஓடி வந்ததில் துவண்ட கால்களும், நடுங்கும் திரேகமும், நிசியின் வனப்பும் அடிவயிற்றில் சுருக்கென்று தைத்த வலியும் தாளாமல் வெடித்து அழக் காத்திருந்தது விழிகள். வலியைக் கட்டுக்குள் கொண்டு வர, அவளது‌ மணிக்கட்டை அழுந்த கடித்தாள்.

சிடுக்கி முடிந்த தருணத்திற்குச் சிகரம் வைத்தாற் போல் தடதடவென்று ஒலியெழுப்பிய காலடி ஓசைகளால் அவளின் சப்த நாடியும்‌ அடங்கி ஒடுங்கிப் போயிற்று.

சிறிது நேரத்தில் அவள்‌ உச்சந் தலையில் யாரோ‌ பெரு ஆணியை அடிக்கும் ஒலி கேட்டது. பாவை‌ சரிந்து கீழே விழுந்தாள் வயிற்றைப் பிடித்துக்கொண்டு. உயிர் துறக்கும்‌ தறுவாயில் மனதின் வலி முகத்தில் அப்பட்டமாய்‌ தெரிந்தது. அவள் உயிர் போகும்‌ வேளையிலும், ஏதோ பிள்ளையைக் காக்கும் ஆபத்பாந்தவன் போல வயிற்றை தடவித் தடவிக்‌ கொடுத்தாள்.
 
Last edited:

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
அத்தியாயம் - 5

புவி வருடம் 4000

பனி மலை!
வெள்ளைக் கம்பளம்!
விளிம்பற்ற வானம்!
சிவந்த பொழுது!
மலர்ந்த இரவு!
ஒளியின் கோலம்!
மினுக்கும் விண்மீன்!
விகசித்த நீ!
வசீகரிக்க நான்!!!



அலறியடித்து எழுந்தாள் அனிச்சம். அது பனிப்பிரதேசம்‌ அல்லாது அவளின் வீடாய் இருந்திருந்தால், நிச்சயம் வியர்வைப் பூக்கள் கொப்புகளாய் மலர்ந்திருக்கும் அவள் வதனத்தில். அதீத குளிரில் விறைத்து‌ப்‌ போயிருந்தாள். நளன் அவளை இறுக்கி அணைத்துப் படுத்திருந்தான். குளிருக்கு இதமாக இருந்திருக்க வேண்டும். அதிர்ச்சியில் எழுந்ததும்‌ அவன் கரங்களில் இருந்து விடுபட்டுவிட்டாள். அதனால் உடல் நடுங்கத் தொடங்கியது. அவன் அசதியில் உறங்கிக் கொண்டிருந்தான்.

கனவில் வந்த பாவையின் முகம் அவ்வளவு தெளிவாகப் புலப்படவில்லையெனினும், ‌உயிர் போகும் வலியை அவள் அனுபவித்தாள். தன் உடலிலிருந்து உயிர் பிரிவது போல் ஒரு வலி. திடீரென என்ன நினைத்தாளோ எழுந்து ஓட ஆரம்பித்தாள். அவள் எழுந்து ஓடிய அதிர்வில் நளன் விழித்துக் கொண்டான். நித்திரை கலையாததால், அவனுக்கு நிகழும் நிகழ்வை மூளைக்குக் கடத்துவதே பெருங்காரியமாய்ப் போயிற்று. மரத்துப்போன கால்களை உதறி எழுந்தவன் அவளைப் பின்தொடர்ந்து ஓடினான்.

இரவாக இருந்தாலும் சூரியன் மறையவில்லை. வெளிச்சம் இருந்தது. சற்று மங்கலாக இருந்தது. பனிப்புயலின் தாக்கம் இன்னும் இருந்தது. அதனால் கொஞ்சம் பனி மூட்டத்துடன் காணப்பட்டது அவ்விடம். பனி மழை பெய்து கொண்டிருந்தது. அனிச்சை செயலாக அவன் காலணியை அணிந்து கொண்டு வெளியில் சென்றான். ஆனால் அனிச்சத்திற்கு இது பழக்கமில்லை, ஆதலால் வெற்றுப் பாதங்களுடன் பனியில் ஓட, பனிப்புயலால் கத்தி‌போல் சீவிவிடப்பட்ட பனியில் கால் வைத்தாள். அது வாளின் முனையாய் அவளின் காலைப் பதம் பார்த்தது. வெள்ளைப்‌ போர்வையில் ஆங்காங்கே சிவப்பு வர்ணங்கள். ஒருகட்டத்தில் கால் முழுக்க ரணமாய் மாறி, உதிரத்தால் பாதச்சுவடைப் பதித்தாள் அனிச்சம். ஓரிடம் சென்று மூச்சு வாங்க முழங்கால் மடித்து அமர்ந்தாள். நளன்‌ அவள் பின்னே‌ வந்திருந்தான். அவன் கத்திக் கொண்டுதான் வந்தான். ஆனால் அவள் செவியில் விழவில்லை.

"அனி... என்ன‌ ஆச்சு உனக்கு? பைத்தியம் பிடிச்சிருக்கா? கால்ல ரத்தம் வருது பாரு.. வா போகலாம்" என்று கத்தினான்.

வார்த்தைகள் திக்கி திணறி வந்தது. ஓடி வந்ததால் மூச்சு அதிகமாய் வாங்க, அதீத குளிர் அவன் குரலைத் தடை செய்தது.

"இங்க.. ஒரு பொண்ணு... கொலை... நான் பார்த்தேன்" என்று அவள் கனவில் வந்த அனைத்தையும் கோர்வையின்றிக் கூறி முடித்தாள்.

"உனக்கு என்‌ன பைத்தியமா? ஏன் இப்படி நடந்துக்கிற?"

"இல்ல..‌ இங்க இருக்கணும் அந்தப் பொண்ணு..‌ பாவம்..." என்று பனியைத்‌ தோண்ட ஆரம்பித்தாள்.

இனி அவளை விட்டால் சரிப்படாது என்று நினைத்தவன், அவளை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு சென்றான். உள்ளே சென்றதும் கணப்பின் அருகே அவளை அமர வைத்தான். கைகால்களை நடுக்கம் போக நன்றாகத் தேய்த்தான். பாதம் முழுக்கத் துடைத்து மருந்திட்டான்.

அவள் அந்தக் கனவில் வந்த காட்சியைப்‌ பிதற்றிக் கொண்டிருந்தாள்.

"அனி.. யாருக்கும் ஒண்ணும்‌ ஆகல.. இப்போ கொஞ்சம் வெளிச்சமா இருந்தாலும் நடுநிசி மா.. எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க. காலைல நாம போய் அங்க தேடலாம். நாம அந்தப் பொண்ணைக் காப்பாத்தலாம்" என்று அவளைச் சமாதானம் செய்து உறங்க வைத்தான். அவளைத் தன் தோள் மீது போட்டுக் கொண்டே நீவி விட்டான். இழந்த தாயின் அன்பான கணப்பு அவனிடம் கிடைத்ததில் அனிச்சம் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள்.

சிறிது நேரத்தில் உறங்கிவிட்டாள்‌. மறுநாள் எழுந்து அவள் என்ன நடந்ததென்று வினவ, நளன்‌ வேலையிருப்பதாகச் சொல்லி நழுவினான். அவளின் பாதங்களுக்கு மருந்திட்டு, ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்திவிட்டுச் சென்றான். அதீத குளிரில் கால்களில் வெடித்துப் புண்ணாகிவிட்டது என்று கூறியிருந்தான் அவளிடம். அவளும் சரியென்று படுத்துக்கொண்டாள்.

திடீரென அவள் இதயம் எக்குத்தப்பாக எகிறி குதிக்கத் தொடங்கியது. மண்டைக்குள் சில பிரித்தறிய முடியா நினைவுகள். கசங்கிய நினைவுகள் என்றும் கூறலாம். ஏனெனில் ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை. யாரோ சிலர் மாறி மாறித் தோன்றி, ஏதோ குரல்கள் ஒலிக்க, அவள் மூளை மரத்துப்போனது. மயக்கம் வருவது போலிருந்தது. வெளியில் எழுந்து சென்றவள் வீல் என்று அலறிவிட்டு ஓர் இடத்தில் மயங்கி சரிந்தாள்.

சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் அவளைச் சுற்றி ஒரு கூட்டம் நின்றிருந்தது. அகழாய்வு பணிக்கு வந்திருந்த குழுவினர் மொத்தமும் அவளைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். நளன் அவளை மடியில் கிடத்தி இருந்தான். மயக்கம் தெளிவிக்கச் சில முதலுதவிகள் அளிக்கப்பட்டிருந்தது. மயக்கம் தெளிந்ததும் தலையைப் பிடித்துக்கொண்டு விழிகளை மிகவும் பிரயத்தனப்பட்டுத் திறந்தாள். அனைவரும் கலைந்து சென்றனர்.

"என்ன ஆச்சு அனி?" நளன்.

"என்னன்னு தெரியல நளன். ஆனா இந்த இடத்திற்கு வந்தவுடன் எனக்குள் ஏதோ சில மாற்றங்கள். என்னென்னமோ நிகழுது. என்னன்னு சரியா சொல்லத் தெரியல. இந்த இடத்துல என்னமோ இருக்கு."

"உன்னோட அதீத கற்பனைகளுக்கு அளவே இல்லையா? இந்த இடத்தில் அப்படி என்ன இருக்குன்னு நினைக்கிற?. ஆதிபகவனை விட சக்தி வாய்ந்த யாராவது இருக்காங்களா என்ன? இல்லை உங்க அம்மா சொன்ன கட்டுக்கதைகளில் இருக்கிற ஆவிகள் இருக்கா என்ன?" என்று கேலி பேசினான்.

"நிறுத்து நளன்!!. எப்பப் பார்த்தாலும் கட்டுக்கதை கட்டுக்கதைன்னு சொல்லிக்கிட்டு. என்னைப்‌ பொறுத்தவரை ஏதோ ஒண்ணு இருக்கு. அதை வைத்துதான் இந்தக் கதைகளும் உருவாகி இருக்கு" என்றாள்‌ அழுத்தமாக. அதே சமயம்‌ குரலில் கொஞ்சம் கண்டிப்பும் கலந்திருந்தது.

"சரி எல்லாரும் பார்த்துட்டு இருக்காங்க. நம்ம சண்டையை அப்புறம் வெச்சுக்கலாம். நீ போய்ப் பனிக்குடிலில் ஓய்வெடு. நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்."

சரி என்று திரும்பிச்செல்ல, இரண்டு அடிகள் எடுத்து வைத்தவளின் பாதம் அந்தரத்தில் தடைப்பட்டு நின்றது. மீண்டும் திரும்பினாள்.

நளனைப் பார்த்து, "நளன், எனக்கு என்னமோ இந்த இடத்தில தோண்டிப் பார்த்தா என்னன்னு தோணுது" என்று‌ அவள்‌ கூற அவன் அதிர்ந்துவிட்டான். முந்தய தினம் அவள் பைத்தியம் போல் கைகளால் குழி‌ தோண்டிய இடம் அது.

"அனி.. என்ன உளறிக்கிட்டு‌ இருக்க?..."

"எனக்காக" என்றாள் பாவமாக.

"இந்த இடத்தைக் கருவியால ஊடுருவல் செய்யல.. ஏதாவது இருக்குன்னு உறுதியா தெரிஞ்சாதான் தோண்ட முடியும். அடம் புடிக்காத" என்றான் கண்டிப்புடன்.

"சரி என்ன செய்யணுமோ செய்யேன் தோண்டிப் பார்க்கலாமே. நிச்சயம் இந்த இடத்துல ஏதாவது ஒரு தொன்மப்படிவம் கிடைக்கும்னு எனக்குத் தோணுது."


"ஏன் அப்படித் தோணுது?."

"அதெல்லாம் தெரியல. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மூளைக்குள்ள ஏதேதோ ஒரு சில உருவங்கள். அதுவும் எனக்கு சொல்லத் தெரியல. ஆனா இந்த இடத்தைத் தோண்டிப் பார்க்கணும்னு தோணுது."

அதன் பிறகு சிறிது நேரத்தில் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தனர். ஆராய்ந்துப் பார்த்ததில் அந்த இடத்தில் தொன்மபடிவங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிந்தது. முன்பு போல் கருவிகள் கொண்டு தோண்டினர். சில அடிகள் தோண்டியதும் எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது.


சிறிது நேரம் ஓய்வெடுத்த அனிச்சமும் மீண்டும் திரும்பி வந்திருந்தாள். ஏனோ அந்த இடத்தில் அவள் காலடி எடுத்து வைத்ததும், அவளுடைய இதயம் மீண்டும் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்தது. ஏன் என்ற காரணம் விளங்கவில்லை. அதனால் அந்த இடத்தில் என்ன கிடைக்கிறது என்று அறிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தாள். ஒருவேளை அன்னை கூறிய கதைகளில் இருந்து ஏதேனும் கிடைக்க வாய்ப்புண்டு என்று ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அங்குக கிடைத்தது என்னவோ எலும்புக்கூடு. அதைச் சிதையாமல் மீட்டெடுத்தனர் அகழாய்வு பணியிலிருக்கும் வீரர்கள். அதை எடுத்து சுத்தப்படுத்தினர்.

ஒரு கர்ப்பிணி பெண்ணின் எலும்புக்கூடு. அவள் கர்ப்பமாய் இருந்ததற்கு ஆதாரமாய் வயிற்றுப்பகுதியில் சிறிய எலும்புக்கூடு பின்னிப் பிணைந்திருந்தது.

அதைக் கையில் எடுத்தவுடன் அனிச்சத்தை ஆச்சரியமாகப் பார்த்தான் நளன்.

அவனால் இன்னும் நம்ப முடியவில்லை. நேற்று கனவில் ஏதோ தோன்றியிருக்கலாம். இன்று அவள் இந்த இடத்தைத் தோண்டுமாறு கூறியதும் எதார்த்தமாக இருக்கலாம். ஆனால் இவை இரண்டையும்‌ மெய்ப்பிக்கும் வகையில் மூன்றாவதாக நிகழ்ந்த இந்தச் சம்பவம். இது உண்மைதானே. இது உண்மையெனில் அவளின் கட்டுக்கதைகள்.....

இப்பொழுது அவளின் கட்டுக்கதைகளின் மேல் சிறிது நம்பிக்கைத் துளிர்க்கச் செய்தது. அதை இன்னும் உறுதி செய்யும் வகையில் கிடைத்த எலும்பில் இருந்த தடயங்களில் அவன் விதிர்விதிர்த்துப் போனான்.

அதன் பிறகு இரண்டு நாட்கள் சென்றதே தெரியவில்லை. அனிச்சமும் அமைதியாகவே வலம் வந்தாள். அவள் தீவிர சிந்தனையில் இருந்தது நன்றாக விளங்கியது நளனுக்கு. அவனும் தீவிர சிந்தனையில் இருந்தான். அவள் கூறுவது போல் சிங்கார உலகம் சிருங்காரம் பேசினால், எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய முற்பட்டான்.

அன்று சூரியன் இருக்கும் இறுதி நாள். அவன் எதிர்பார்த்த நாளும் கூட. இரவு உதிக்கும் வேளை அவளை மகழ்ச்சியில் ஆழ்த்தும் என்று அவனும் மகிழ்ந்திருந்தான். பனிக்குடிலிலுக்குள் இருந்தால் அந்தப் பொழுதை அவள் ரசிக்க முடியாது என்று, திறந்த வெளியில் கணப்புடன் உள்ள விரிப்பை விரித்து அதில் அமர வைத்தான். விரிப்பின் உஷ்ணமும் அவள் அணிந்திருந்த உடையின் உஷ்ணமும் அவளைக் குளிரில் நடுங்காமல் பாதுகாத்தது.

அவள் செவ்வானம் பார்த்திருக்கிறாள். செம்மஞ்சள் வானமும் பார்த்திருக்கிறாள். அந்திவானம் வெட்கம் கொண்டு‌ மஞ்சள் அரைத்துப் பூசிக்கொண்டதையும் பார்த்திருக்கிறாள். ஆனால் இது... அவ்வனைத்தையும் ஒரு விழுக்காடில் அடக்கிவிடும். அவள்‌ பேச்சற்ற நிலைக்குச் சென்றிருந்தாள்.

வானத்தில் ஒரு பகுதியில் தோன்றும் செம்மைக்கே செருக்கிருக்கும். ஆனால் இங்கு மொத்தக் ககனமும் செம்மையுடன் காட்சியளித்தால் என்னவென்று சொல்வது. நேரம் செல்லச் செல்ல சிவப்பின் செறிவு அதிகரித்துக்கொண்டே சென்றது. மொத்தமாகச் சிவப்பு ஏறிப்போய் மாயவித்தை நிகழ்த்தியது. சிவப்பு வர்ணம் வெள்ளைப்பனியில் பட்டுத் தெறிக்க, அதன் தன்மையும் மெருகூட்டப்பட்டுச் சிவப்பாய் மாறிப்போனதோ? இல்லை சிவப்பேறிப்போனதோ? என்று பேரொரு விவாதம் செய்துவிடலாம்.

சற்று நேரத்தில் எங்கிருந்தோ தோன்றிய பச்சை வர்ணம் அலையலையாய்‌ ஒழுங்கற்ற வானவில் போல் வானத்தையும் பூமியையும் இணைத்தது.‌ கொஞ்சம் கொஞ்சமாகச் செம்மைப் பூசிய ககனம் கறுத்துக்‌ காட்சியளித்தது. ஆனால் பச்சை வண்ணத்தில் தோன்றிய ஒளிகோலம் நிலைத்திருந்தது. திரைச்சீலைப் போல் நிலையற்று நடனமாடிக் கொண்டிருந்தது.
இயற்கையின் வானவேடிக்கை இது. ஒளிக்கோலங்களின் நடனங்கள் வேற்றொரு உலகில் சஞ்சரிக்கும் மாயையை ஏற்படுத்தியது.
இருவருக்கும் கண்ணிமைக்கவும் பிடிக்கவில்லை. அவனுக்கு அவளைக் கண்டு. அவளுக்கு அங்கிருந்த வர்ணங்களைக் கண்டு.

"அனி... எப்படி இருக்கு?" என்றான்.

"சொல்லத் தெரியல நளன். பிரபஞ்சத்தில் இருக்க மாதிரி இருக்கு!!."

உண்மையில் அப்படித்தான் இருந்தது. விண்மீன்கள் வண்ணமயமாய் மின்னியது‌. கறுமை பூசிய ககனம். அதைச் சீராகக் கூட்டிப் பெருக்கி, அதில் நீர்வாளியில் வண்ண மலர்கள் நிரப்பி, அள்ளித் தெளித்தது போல், வாரி இறைக்கப்பட்ட வர்ணம் பூசிய நட்சத்திரப்பூக்கள்.

அவளால் எழுப்பப்பட்ட வினாவிற்கு அவனால் இயன்ற அளவு பதிலளித்ததாகவே தோன்றியது அவனுக்கு. அவளின் உணர்வுகள் பாதி புரிந்தும்‌ பாதி புரியாமலும். அவர்கள் உலகில் காதல் இல்லாமல் இல்லை.‌ ஆனால் வரைமுறைகளோடு வரையறுக்கப்பட்ட காதல். காதல் என்ற ஒற்றைச் சொல்லை விட, அழிந்து வரும் அவர்களின்‌ இனத்தைப் பேணிக் காக்கும் பெரும் பொறுப்பு அவர்களிடம் இருந்தது. அவள் ஏன் அதைத் தவறு என்று உரைக்க வேண்டும்?. இறந்தவர்களை நினைத்து அழுது கரைவது, அவர்களுக்காக வாழ்வை நிராகரிப்பது என்பது எல்லாம், அவர்களின் குறுகிய‌ வாழ்நாளை மேலும் குறுக்கிவிடும். அவன் சிந்தனையில் உதித்திருந்த கருத்துக்களைச் சீர்தூக்கிப்பிடித்திருந்ததில் தன்னிலை மறந்திருந்தான். அனிச்சம் எழுந்து தட்டாமாலை‌ச் சுற்ற ஆரம்பித்திருந்தாள். நடனமாடும் ஒளிக்கோலம் நோக்கி அவள் ஓட, அதுவும் ஓடிக்கொண்டிருந்தது. இந்த விளையாட்டு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளின் மகிழ்ச்சிக் கூவல்கள் அவனைச் சுயநிலை மீட்டது. அவனும் எழுந்து சென்றான் அவள் அருகில். அவளைப் பிடித்து இழுக்க, அவனைத் தள்ளிவிட்டு ஓடினாள்.

"அனி, அந்த ஒளி‌ பக்கத்தில போகமுடியாது‌" என்றான்.

"எனக்கு‌‌ அதைக் கையில் பிடிக்கணும்" என்றாள் அவள்.

"அது பார்க்கப் பக்கத்தில் இருக்க மாதிரி இருக்கும். ஆனா அது ஒரு மாயை. அது பக்கத்தில் உன்னால போக முடியாது" என்று அவன் கூறியதும் ஏமாற்றத்துடன் திரும்பி நின்றாள்.

அந்தத் தீவில் இப்பொழுது அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். மற்ற அனைவரும் வேலை முடித்துக் கிளம்பிச் சென்றிருந்தனர். அவள் மனதின் முனகல்கள்‌ மறந்து மகிழ்ச்சியாக இருந்தாள்.

"சரி அனி, நாம கிளம்பலாமா?" என்றான் அவன்.

"அதுக்குள்ளையா?" என்றாள் அவன் பெருத்திருந்த தோள் வளைகுடாவில் தன்னைப் புகுத்தி.

"எனக்குப் பொதுவா இந்தப் பொழுதில் இங்க இருக்கப் பிடிக்காது. ஏதோ தனியா இருக்க உணர்வைக் கொடுக்கும் இந்தப் பொழுது" என்று நளன் கூற, "அப்போ இப்பவும் பிடிக்கலையா?" என்றாள் அவள் ஏக்கத்துடன்.

"இப்போதான் நீ இருக்கியே" என்று‌ அவளை இன்னும் இறுக்கிக் கொண்டான் அவன்.

"நாம‌ அடிக்கடி இங்க வரலாமா?" அனி.

"இன்னும்‌ ஆறு மாசம்தான் இந்த இரவு விடியாம இருக்கும். அப்புறம் திரும்ப ஆறு மாசம் ஆகும் நிலவு உதிக்க" என்றான் அவளின் கேள்விக்குப் பதிலாக.

அதன்பின் சற்று நேரம் அங்கிருந்துவிட்டு இருவரும் தங்கள் இடத்துக்குக் கிளம்பிச் சென்றனர்.

அனிச்சம் அவளுடைய வீட்டில் அவளை விட்டுவிடுமாறு கூற, இருவரும் அவளின் வீட்டிற்குச் சென்றனர். அங்கு சென்று பார்த்தவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

அனியின் வழக்கில் குற்றவாளியாக இருக்கலாம் என்று‌ எண்ணிய தீரன், அவளது வீட்டில் பிணமாய்க் கிடந்தான்.

அதைப்‌ பார்த்த இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். அனி நளனின் கைகளை இறுகப்பற்றினாள். நளன் அரசுக்குத் தகவல் அளித்தான். உரிய‌துறையில் இருந்து அங்கு வந்து பிணத்தை அப்புறப்படுத்தினர்.

முந்தய வழக்கில் பெரும்பள்ளம் இருக்க, அதில் சம்மந்தப்பட்டவன் இறந்துவிட்டான். அதுவும் வழக்காடியவளின் வீட்டில். அவன் எதற்காக இங்கு வரவேண்டும். யார் அவனைக் கொன்றிருக்கக்கூடும். அவனைப் பின் தொடர்ந்தால் வழக்கில் பெரும் திருப்புமுனை இருக்கும் என்று நினைத்திருக்க, இது என்ன வழக்கில் மீண்டும் ஒரு பின்னடைவு?. இவள் வீட்டில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததால், அவளும் இதில் சம்மந்தப்பட்டவளாகப் போய்விடுவாளே. பதில் கூற வேண்டும். அவளுக்குத் தெரிந்ததைக் கூறலாம்தான். ஆனால் தடயம் ஏதேனும் வேண்டுமே, இந்த வழக்கில் உள்ள முடிச்சுகளை அவிழ்க்க. இனி என்ன செய்வது என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தவளை நளன் அவனுடன்‌ அழைத்துச்‌ சென்றான்.

துருவத்தைப் பற்றிய தகவல்கள்:

மேற்கூறிய நிகழ்வுகள் இன்றளவும் துருவங்களில் நிகழும் நிகழ்வு. சூரியத் துணிக்கைகள் அதிகூடிய எண்ணிக்கையில் பிரபஞ்ச வெளியில் வீசப்படும்போது, அவை வேகமாக நகரும். இவை பூமியின் காந்தப்புலத்தினுள் வரும்போது, இரு துருவப் பகுதிகளையும் நோக்கி இழுக்கப்படுகின்றன. அந்தப் பகுதியிலிருக்கும் வளிமண்டலத்தில் இருக்கும் சில வாயுக்களுடன் இந்தச் சூரியத் துணிக்கைகள் மோதும்போது உருவாகும் ஆற்றலே, இத்தகைய ஒளிச் சிதறல்களாய் உருவாகி, வானத்தில் அழகான ஒளிக்கற்றைகள் அசைவது போன்ற தோற்றத்தைத் தருகிறது.

இந்த ஒளிச் சிதறல் தோன்றும் உயரத்தைப் பொறுத்து, அந்த உயரத்தில் வளிமண்டலத்தில் இருக்கும் வாயுக்களின் கலவையைப் பொறுத்து, இந்த ஒளித்தோற்றத்தின் நிறமும் மாறும். பச்சை, சிவப்பு, நீலம், ஊதா போன்ற நிறங்கள் இந்தத் துருவ ஒளியில் அவதானிக்கப்பட்டுள்ளன. அதேபோல் இதன் தீவிரத்தின் அளவும், தோன்றும் இடத்திற்கேற்ப மாறுபடும். அதி தீவிரமான ஒளியானது சந்திர வெளிச்சத்திற்கு ஒத்ததாக இருக்குமெனவும், ஏனையவை அதைவிடக் குறைவான ஒளி அளவையே கொண்டிருக்குமெனவும் கூறுகின்றனர். இந்த ஒளியின் உருவமும் வில் போன்றோ, பட்டிகள் போன்றோ, அல்லது கற்றைகள் போன்றோ வேறுபட்ட நிலைகளில் தோன்றும்.
 
Last edited:

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
அத்தியாயம் - 6


புடவி வருடம் 1891

வெள்ளைக் காகிதம்!
உதிர்ந்த முத்து!
மரபுக் கவிதை!
மயங்கொலிச் சொற்கள்!
அணி இலக்கணம்!
இயைந்த பாக்கள்!
பொருண்மை நீ!
சந்திப்பிழை நான்!!!

கொடிக்கு இன்னும்‌ இரண்டு தினங்களில் திருமணம். அடம்பிடிக்க முடியவில்லை அவளால். அடம்பிடிக்க வழியுமில்லை. யார் மாப்பிள்ளை என்றெல்லாம் அவளிடம் கூறவில்லை. மலர், செழியனுக்கு ஒருவர் மூலம் தகவல் அளித்திருந்தாள். கொடிக்கு ஆறுதல் மொழிகள் அளிக்க முடியாமல் தவித்தாள் மலர். வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது அந்த மரத்தையே பார்த்திருந்தாள் கொடி. ஏனோ‌ அடைக்கலம் தேடி அலைந்து திரியும் மனதிற்கு, அந்த மரம் அடைக்கலம் அளிக்கப் போவது போல் ஒரு பிரமை.

வாழ்க்கை பற்றிய பயம் தோன்றவில்லை அவள் மனதில். வெற்றிடம்‌ தோன்றியிருந்தது. அதில் மனம் மரத்துப் போனது. மரித்துப் போக இன்னும் காலம் இருக்கிறது போல. அமைதியாய் அனைத்தையும் ஏற்றாள். இவர்களின் காதல் காவியக் காதல் இல்லைதான். ஆனால் சிறுதுளிப் பற்று பெரு வெள்ளமாய்ப் பெருகி நெஞ்சம் நிறைத்திருந்தது.

மலரின் மடியில் படுத்து அழுது கொண்டிருந்தாள் கொடி. செழியனுடன் உடன்போக்கில் செல்ல‌ இது காவியக்காலம் இல்லையே.

ஏன் இந்த மாற்றம் நிகழ்ந்தது. காதலும் களவொழுக்கமும் பெரிதாய்ப் போற்றப்பட்ட சான்றுகள் பல இலக்கியத்தில் இருந்தாலும், இந்த இன வெறி எப்பொழுது தோன்றியது?. மனதின் ஆசைகளை எடைபோடும்‌ துலாக்கோலின் மெய்நிகர் முள் என்றுமே அதிகாரத்தின் பக்கம் சிரம் தாழ்ந்துவிடுகிறது. அதனால் சமூகமும் தரம் தாழ்ந்துவிடுகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி என்பதே இல்லையா? நானும் காற்புள்ளியாய் வாக்கியத்தின் எச்சம் சுமந்து நிற்கப் போகிறேன். அவனுடன் வாழ வேண்டும் என்ற ஆவல் இருந்தது உண்மைதான். ஆனால் செழியனை இழப்பது மனதின் ஓரம் வலித்தாலும், இந்தக் குரூரம் நிறைந்திருக்கும் நாடகத்தின் நாயகியாக அவள் வலம் வருவதே மனதை வாள் கொண்டு அறுத்தது.

வெளியில் அமைதியாய் வலம் வருவதுபோல் இருப்பவளின் மனம் எரிமலைக்கு அடியில் கொதித்துக் கொண்டிருக்கும் பாறைக்குழம்பு போல் கொதித்துக் கொண்டிருந்தது.

********

இங்கு செழியனின் மனமோ தந்தையின் துரோகத்தால் அடி வாங்கி அயர்ந்து போய்க் கிடந்தது. செழியன், திருமணத்தை நிறுத்த வீட்டிலிருந்து கிளம்ப, தேவர் பிள்ளை வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார்.

"துரை எங்க கிளம்பிட்டீக?" என்றார் நக்கலும் நையாண்டியுமாக.

அவன் பதிலேதும் கூறாமல் அவரைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

"அப்பா.. ஏன் இந்த வெறி உங்களுக்கு?. அதிகாரத்தாலும் அடக்குமுறையாலும் நீங்க கட்டியிருக்க கோட்டை எவ்ளோ நாள் நிலைக்கும்னு நினைக்கிறீங்க?"

"என்னோட பரம்பரை ‌அழியிற வரைக்கும்" என்றார் தெனாவெட்டாக.

அதைக் கேட்ட செழியன் அதிர்ந்து நின்றான்‌.

"நீங்க இப்படிச் செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கல. எனக்குத் துரோகம் செஞ்சுட்டீங்க" என்றான்‌ ஆத்திரத்துடன்.

"உனக்கு நான் எப்போ வாக்குக் கொடுத்தேன், துரோகம் செய்ய?.." என்று நக்கலாய் வினவியவர் கோகிலத்தை நீர் எடுத்து வருமாறு பணித்தார். அவரும் அவசர அவசரமாக அவரது கட்டளையை நிறைவேற்றினார். கூடத்தில் பெருத்த அமைதி. அந்த அமைதி அவரின் மனதை ஞெழிகோல்‌ கொண்டு கடைந்தெடுத்துவிட்டது.

"என்ன..? துரைக்குப் புரிஞ்சிச்சா?" என்று மௌனத்தின் மொழியைக் கொன்ற தேவர் பிள்ளையின் குரல் அபஸ்வரமாக ஒலித்தது.

"இப்போ நானும் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோங்க. அப்படிப் பரம்பரை அழிஞ்சி போனாதான் இது மாறும்னா, நான்தான் இந்தப் பரம்பரையோட கடைசி வாரிசா இருப்பேன்" என்று செழியன் உரைக்க, கோகிலம் அலறிவிட்டார்.

தேவர்பிள்ளை அவனை உஷ்ணத்துடன் பார்த்தார்.

"தம்பி... என்ன வார்த்தை டா சொல்லிட்ட!!. இதுக்குத்தான் உன்னைத் தவம் இருந்து பெத்தேனா?" என்று அறற்றினார் கோகிலம்.

"நான் நினைச்சது நடக்கலைன்னா, இப்போ நான் சொன்னது நடக்கும்" என்றான் உறுதியாக.

தேவர் பிள்ளை சற்றே தடுமாறியது அவன் விழிகளில் விழாமல் இல்லை. நேத்திரங்களைச்‌ சுருக்கி புருவமத்தியில் விழுந்த கர்வ முடிச்சுடன், அதரத்தில் ஏளனநகையொன்றைத் தேக்கி அவரைப் பார்த்தான் செழியன்.

அது அவரை எரிச்சல் படுத்தியிருக்க வேண்டும். சிறிதும் சளைக்காமல், அவனை ஏளனமாகப் பார்த்தார் அவரும். அவனுக்குத் தந்தையாயிற்றே. பெற்றவனாய் நானிருக்க, எனக்கு ஆசானாக மாறிவிடுவாயா நீ? என்றது அவர் பார்வை.

"நீ தாராளமா வெளில போகலாம். இனி இந்த வீட்டுக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லைன்னு சொல்லிலாம் உன்னை பயமுறுத்த மாட்டேன்" என்று அவர் நிதானமாக நிறுத்த, பிள்ளை நன்றாகவே அறிந்துவிட்டான், அவர் மூளையில் தரமான திட்டமொன்று உதித்துவிட்டதை.

அதனால் அவரே அதையும்‌ கூறட்டும் என்று பொறுமைக் காத்தான்.

"நீ போய்ட்டு திரும்பி வரலாம். அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கூடக் கூட்டிட்டு வரலாம். ஆனா வரும் போது ஆலம் சுத்த உன்னோட அம்மா உயிரோட இருக்கமாட்டா" என்று அலுங்காமல் குலுங்காமல், அவனை அதிர வைத்தார்.

தன் கணவரின் சுயரூபம் வெளிப்பட்டதில் கோகிலமும் சற்றே ஆடிப்போனார்.

அதிர்ச்சியில் அவனுக்குப் பதில் வரவில்லை. செழியனுக்கு மூளை சிந்தனையிழந்து சீர்பட முடியாது தவித்தது.

"அம்மாவையும்‌ கூடவே கூட்டிட்டு போகலாம்னு நினைக்கிறியா? சரி உனக்கு ஒரு வாய்ப்பு தரேன்‌. முடிஞ்சா உங்க அம்மாவையும் கூட்டிட்டு போ" என்று மர்மமான புன்னகை ஒன்றை உதிர்த்தார்.

அடுத்து அவன் அதைத்தான் சிந்திப்பான் என்று அனுமானித்து, அதற்கான பதிலும் கூறிச் சென்றுவிட்டார்.

கோகிலம் அவரின் அந்தச் சொல்லில் மடிந்து அமர்ந்து அழ ஆரம்பித்தார். பல வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. மனதில் பெரும்பாறை ஒன்றை ஏற்றி வைத்தது போல் உணர்வு.

தேவர் பிள்ளையின் வார்த்தையில் இருந்தது நிச்சயம் அச்சுறுத்தல் மட்டுமல்ல. அதையும் மீறி ஒன்று வெளிப்பட்டது. அது அவனை அச்சுறுத்துவதாகவே இருந்தது.‌ இந்த வீட்டைப் பற்றி அவன் அறியப்படாத, அறிய வேண்டிய பக்கங்கள் இன்னும் ஏதேனும் இருக்கிறதோ. அவர் சொல்லின் தாக்கத்திலோ‌ அதிர்ச்சியிலோ அன்னை அழவில்லை. ஏதோ பெரிதாக ஒன்றை இழந்தது போல் அல்லவா அழுகிறார். என்னவாக இருக்கும் என்று தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். உண்மையில் அன்னையின் அழுகையை நிறுத்த வேண்டும் ‌என்று கூட அவனுக்குத் தோன்றவில்லை. இந்த அழுகைக்குப் பின் இருக்கும்‌ கொடூரத்தை நினைத்தே அவன் நெஞ்சம் பதைபதைத்தது.

அன்னை அவனை அன்பாய் வளர்த்திருந்தாலும், பல நேரங்களில் தனித்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பது போலவே தோன்றும். ஆனால் என்னவென்று அவன் வினவியதில்லை. அவருக்கு என்ன பெரிய சங்கடங்கள் ‌இருக்கப்போகிறது என்று தான் எண்ணினான். ஆனால் அதுதான் பெரும் பிழையோ என்று இன்று‌ தோன்றியது. தனக்குச் சங்கடம் வந்த பிறகே‌ மற்றவரின் சங்கடங்களை நெஞ்சம் உணரும்‌போல. சுயநலம் பிடித்த மனம்.

சிறிது நேரம் ‌அவரை‌ அழவிட்டான். ஏனோ‌ துக்கம்‌ நடந்த வீட்டில் அழுவது போல் அழுது கொண்டிருந்தார் கோகிலம். ஒருவேளை துக்கம் நிகழ்ந்த அன்று அழும் வாய்ப்பு கிட்டவில்லையோ அவருக்கு. மொத்தமாக வெடித்து அழுதவர், தன் மகன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, "இப்போ என்ன முடிவு பண்ணியிருக்கத் தம்பி?" என்றார்.

"இந்தக் கேள்விக்கு‌ நீதான் பதில் சொல்லணும்‌ அம்மா. எங்கிட்ட பதில் இல்லை. அப்பா பேசிட்டுப் போயிருக்க வாக்கியத்துக்குப் பின்னாடி பெரிய‌ கதை இருக்கணும்" என்றான் உறுதியுடன்.

அவர் சற்று நேரம் ‌அமைதியாக இருந்தார்.

பிறகு எழுந்து, அவரது மகனையும்‌ அழைத்துக் கொண்டு, மேல் மச்சிற்கு‌ சென்றார். அவரை‌ யோசனையுடன்‌ பார்த்துக் கொண்டே, அவர் இழுத்த இழுப்பிற்குச் சென்றான் செழியன். அவரின் வேகநடை ஓரிடத்தில் தேங்கி நின்றது. அங்கிருந்த அலமாரியை‌ அவனைச் சற்று நகர்த்தி வேறிடம்‌ வைக்கச் சொன்னார். எதற்காக இதை‌ செய்ய வேண்டும் என்ற யோசனையினூடே‌ நகர்த்தியும்‌ வைத்தான் செழியன்.

அலமாரியை‌ அகற்றியதும் அங்கிருந்த பெரும் கதவைக் கண்டு விழிவிரித்து நின்றான் செழியன். உபயோகப்படுத்தாமல் இருந்ததால் ஒட்டடைப்‌ பிடித்துப் பழமையின் சாயல் பூசிக் காணப்பட்டது.

அங்கு அருகில் இருந்த துடைப்பம்‌ எடுத்து சுத்தப்படுத்தினார்‌ கோகிலம். பல புதிர்களின் வாயில் திறக்கப்படப்போகிறது என்று தான் செழியனுக்குத் தோன்றியது. இந்தக் கதவின் பின்னணியில் இருக்கப்போவது இரண்டு விடயங்கள்தான். ஒன்று செழியன் அடையப்போகும் இன்னல்களுக்குப் பதில் இருக்கலாம். இல்லை இனி வரப்போகும் இன்னல்களுக்குத் துவக்கமாக இருக்கலாம்.

துடைத்து முடித்தவர், முந்தியில் இருக்கும் சாவியை‌ எடுத்து அந்தப் பூட்டில் போட்டு அறையைத் திறந்தார். அவன் அனைத்தையும் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். கோகிலம் அமைதியாகவே வந்தார். அந்த அறையின் உள்ளே சென்றாலே, செழியனுக்குப் பாதி விளங்கிவிடும் என்று எண்ணினார்.

உள்ளே சென்ற செழியனுக்கும்‌ ஏதோ விளங்குவது போல்தான் இருந்தது.

பல பொருட்கள் குவியலாகக் குவிந்து கிடந்தது. அதில் சில நிழற்படங்களும் அடக்கம். அதில் ஒரு பெண்ணின் நிழற்படம். சாயல் தந்தையின் சாயல். தந்தையின் சகோதரி என்று புடம் போட்டு விளக்கியது‌ உருவ ஒற்றுமை.

அந்தப் படத்தைப் பார்த்ததும் அன்னையைக் கேள்வியாய் பார்த்தான் செழியன். அந்தப் பெண் யாரென்ற வினா இல்லை. அவளுக்கு என்ன ஆனது என்ற வினா தொக்கி நின்றது அவன் விழியில்.

"இவ அரசி. உனக்கு‌ அத்தை வேணும். இப்போ உயிரோட இல்ல. உயிரோட இருந்த சுவடு கூட‌ இல்ல" என்று கூறியவர் சற்று நிதானித்து, "செத்துப் போன சுவடும் இல்லை" என்று கூறி, அதிர வைத்தார் அவனை.

ஒரு உயிர் இருந்த அடையாளங்கள் அழிக்கப்படும் அளவு என்ன நடந்திருக்கும் என்று அவன் இதயம் துடிதுடித்தது.

"ஏன் மா... என்ன காரணம்? எனக்கு ஒரு அத்தை இருந்தாங்கன்னு சொல்லவே கூடாத அளவு என்ன காரணம்?. இதுக்கும் அப்பாவுக்கும் என்ன சம்மந்தம்?. இவங்கள நினைச்சுதான் நீ அழுதியா?" என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை அடுக்கினான்.

"அரசி ஒருத்தனைக் காதலிச்சா. இப்போ அவளும் இல்லை. அவனும் இல்லை. அவனோட குடும்பமும் இல்லை. இதுக்குச் சாட்சியா இருக்க ஒருத்தி நான் மட்டும்தான். அதுவும் உன்னால.." என்றார் அழுது கொண்டே.

முப்பது வருடங்களுக்கு முன்பு அரசி ஒருவனைக் காதலித்தாள். கோகிலம் திருமணமாகி வந்து ஆறு ஆண்டுகள் முடிந்திருந்தது. பிள்ளை இல்லை. அதனால் அரசிதான் அவருடைய பிள்ளையாய் வளர்ந்தாள். அரசிக்கு பன்னிரெண்டு வயது இருக்கும் பொழுது பெற்றோர் இறந்துவிட்டனர். அதனால் கோகிலம்தான் அரசியை வளர்த்தது. மகளாய் நினைத்தே வளர்த்தார். ஆனால் அன்னையின் ஸ்தானத்தில் இருந்தாலும், தோழி போலும் பழகினார்கள் இருவரும். அதனால் தன் உள்ளம் சார்ந்த அனைத்து விடயங்களையும் கோகிலத்திடம் பகிர்ந்து கொள்வாள் அரசி.

அவள் ஒருவரைக் காதலிப்பதாகக் கூற, அதிர்ச்சி அடைந்தார் கோகிலம். அண்ணனுக்கு இது பிடிக்காது என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும்‌ அவள்‌ கேட்பதாக இல்லை. கோகிலம் அவளுக்காகத் தேவர் பிள்ளையிடம் பேச, அமைதியாகக் கேட்ட அவர், "அடுத்த முகூர்த்தத்தில் அவளுக்குத் திருமணம். இந்த வீட்டை விட்டு அவ வெளில போகணும்னா, நான் பார்த்த மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கணும். இல்லை சகல மரியாதையோட பிணமாய்ப் போக வேண்டும்" என்று கூறினார்.

அரண்டு போன கோகிலம் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார். அதுவும் தேவர் பிள்ளை பார்த்திருக்கும் மாப்பிள்ளையைப் பார்த்த பின்னர், கோகிலம் உடைந்தே போனார். அவனைத் திருமணம் செய்து வைப்பதற்குப் பதில் அவளைப் பிடித்துப் பாழும் கிணற்றில் தள்ளலாம். இப்பொழுது அவர் மனம் தாயாய் மாறி சிந்திக்க, சில வருடங்கள் வாழ்ந்தாலும், அவள் மனதிற்குப் பிடித்தவனுடன் வாழ வேண்டும் என்று எண்ணி அன்று இரவே, அவர்கள் இருவரையும் ஊரைவிட்டுச் செல்லுமாறு கூறினார். கோவிலில் இருவருக்கும் திருமணமும் முடித்து வைத்தார் இரவோடு இரவாக. கையில் கொஞ்சம் பணமும் கொடுத்துத் தொலைவில் உள்ள ஊருக்குச் சென்றுவிடுமாறு பணித்தார். தன்னுடன் எந்தவித கடிதத்தொடர்பும் இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்திக் கூறி அனுப்பினார். அவருக்குப் பயம். எங்கு அவருக்கு அந்தத் தகவல் தெரிந்தால், அவருடைய கணவர் அறிந்து விடுவாரோ என்று.

அவளைக் காணாமல் தவித்த தேவர்பிள்ளை கோகிலத்தைச் சந்தேகமாகப் பார்க்க, அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்துவிட்டார். ஆனால் அவர் நம்பவில்லை.

"அவளைத் தந்திரமா அனுப்பி வச்சிட்டதா நினைக்காத. உன்னை அடிச்சு கஷ்டப்படுத்துவேன்னும் நினைக்காத. நீ‌ செத்தாலும் அவளைக் காட்டிக் கொடுக்க மாட்ட. உன்னை ஒரேயடியா சாகடிக்க மாட்டேன். கொஞ்சம் கொஞ்சமா செத்துப் போ. எப்போ வேணா அரசி செத்துட்டான்னு செய்தி வரும். இறுதிச்சடங்கு செய்யத் தயாரா இரு" என்று வார்த்தையால் அவரைக் கொன்றுவிட்டார் தேவர்பிள்ளை.

இதற்கு உண்மையில் வெட்டிக் கொலையே செய்திருக்கலாம் என்றுதான் தோன்றியது. கோகிலத்தை அடித்துத் துன்புறுத்தாதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. ஏழு வருடங்கள் கழித்து அவர் பிள்ளை உண்டாகியிருந்தது பெரும் காரணம். அதன்பின் ஒவ்வொரு நாள் விடியலும் கோகிலத்திற்குக் கொடும் நரகமாய் விடிந்தது. வீட்டிற்குத் தபால் வந்தால் அவருடைய நெஞ்சம் பதைபதைத்துப் போகும். அப்பொழுதெல்லாம் தேவர் பிள்ளையின் உதட்டில் ஏளனமாய்க் குரூர நகையொன்று குடியேறும்.

அவர் பயந்து பயந்து செத்த நாட்களுக்கும் ஒரு முடிவு வந்தது. நான்கே மாதங்களில் பிணமாய் வீடு திரும்பினாள் அரசி என்றுதான் சொல்ல வேண்டும்.

அவர்கள் ஊரில் நூறாண்டுகளாகத் தழைத்து நிற்கும் மரத்தில் அவள் தூக்கிட்டு தொங்கிவிட்டாள் என்று பேசிக்கொண்டனர். அழக்கூடத் திராணியற்றுக் கோகிலம் அமர்ந்திருந்தார். அந்தப் பையனின் குடும்பம்‌ முழுக்கப் பழி தீர்த்தாயிற்று. அவன் அரசியை ஏமாற்றிவிட்டதாகவும், அதனால் அவள் தூக்கிட்டு இறந்ததாகவும் கதைகள், ஊர்த் தெருக்களில் திருவரங்கன் உலாப்போல் உலாவியது. பெரிய இடத்து விவகாரம். யாருக்கும் அதைப் பற்றி விவாதிக்க பயம். அதனால் விடயம் பரப்பப்பட்ட சில தினங்களில் மரித்தும்‌ போனது. அது இயல்பாக நிகழ்ந்ததா இல்லை அதுவும் திட்டமிட்டே நிகழ்ந்ததா என்றெல்லாம் கோகிலத்திற்கு இன்றுவரை தெரியாது. கொடியைப் போல் அந்த மரத்தை விரும்பும்‌ மற்றொரு ஜீவன் கோகிலம்.

அரசியின் இறப்பிற்குப் பிறகு, அந்த மரத்தின் அடியில் சில அசம்பாவிதங்கள். அந்த மரத்தையே‌ ராசியில்லாத மரமாக மாற்றிவிட்டனர். அதன்பிறகு அரசி அந்த மரத்தில் தூக்கிட்டு இறந்த வரலாறு கூட மறந்தது அனைவருக்கும்.

இந்தக் கதை‌ மொத்தமும் கோகிலம் செழியனிடம் கூறி முடித்தார். தந்தையின் கோர முகம் அவனை ஆட்டிப்படைத்தது.

"சொல்லு தம்பி.. இப்போ நான் என்ன செய்றது?. அரசிய ஏதாவது செஞ்சிருவாரோன்னு ஒவ்வொரு நாளும் நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும். என் வயித்துல பொறக்கலைன்னாலும் அரசி என்னோட மகதான். அவளை இழந்துட்டு நான் தவிச்ச தவிப்பு வார்த்தைல சொல்லி மாளாது. என்னை உசுரோட கொன்னு புதைச்சுட்டாரு. நான் உயிரோட இருக்கறதே உனக்காகத்தான். நீ‌ பொறந்த அப்புறம் உங்க அப்பாக்கிட்ட நிறையவே மாற்றம். அது பிள்ளைப் பாசம்னு நினைச்சேன். ஆனா கௌரவப் பசின்னு இப்போதான் எனக்குப் புரியுது" என்று சோகமாகத் தன்‌ மனதின் அரிப்புகளை மொத்தமும் இறக்கி வைத்தார்.

அனைத்தையும் கேட்ட செழியன் விக்கித்துப் போய் அமர்ந்திருந்தான்.

"அரசிக்காக போகாத உயிர் உனக்காகப் போறதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனா சம்மந்தமே இல்லாம கொடியோட குடும்பம் அழியிறது எந்த விதத்திலும் ஞாயம் இல்லை. நீ நினைக்கலாம். நானும்‌ ஆம்பிள்ளைதானே. அவரோட ரத்தம்தானே என் உடம்புலையும்‌ ஓடுது. அவரை எதிர்த்து கொடியோட வாழ முடியாதான்னு. ஆனா நிதர்சனம் யோசிச்சு பாரு. எத்தனை நாள் கொடிக்கும்‌ அவங்க குடும்பத்துக்கும் நீ பாதுகாப்பு தருவ?. வாழ்க்கை முழுக்க பாதுகாப்பு தர்றதுலே போனா எப்போ வாழ ஆரம்பிப்பீங்க?. ஒவ்வொரு நிமிஷமும் செத்து செத்து வாழறதுக்குப் பேரு வாழ்க்கை இல்லை தம்பி. நான் அன்னைக்குச் சொன்னதுதான். கொடி உன்னோட வாழ்ந்தா நல்லா வாழுவா. அதுல மாற்றமில்லை. ஆனா அதுக்கு அவ உயிரோட இருக்கணும் தம்பி" என்றார் கோகிலம்.

அன்னையின் வார்த்தையில் செதுக்கி வைத்த சிலையென மாறிப்போனான் செழியன். தந்தையின் சாதி வெறி அணையா நெருப்பாய் எரிந்து கொண்டிருக்க, அதில் காகிதமாய்க் கருகிப்போனது அவனது காதல்.

இனி இதற்குத் தீர்வென்று ஒன்று இருக்கிறதா?. கொடி என்ன ஆவாளோ? என்று நினைத்து நினைத்து வெதும்பினான்.

மழையடித்து‌ ஓய்ந்தது. காட்சிப்பிழையாய் பல வர்ணங்கள் கொண்ட வானவில் தோன்றி மறைந்தது. அவற்றை வெறித்துக் கொண்டிருந்தான் செழியன். அந்த மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தான். இலைகள் கொத்தாய் உதிர்ந்தது அவன் மேல். இன்னொரு கொலை தற்கொலையாய் சித்தரிக்கப்பட்டு உலா வரவேண்டாம் என்று மன்றாடியது போல் இருந்தது செழியனுக்கு.
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom