Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL கண்டீரவன் கோட்டை - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
கண்டீரவன் கோட்டை – 1

“சரக்..” என்று விசையுடன் வந்த அம்பு புரவியின் மேல் வீற்றிருந்த அவ்வீரனின் தோள்களை உரசிச் சென்றது. காயம் பட்டதை உணராமல் இருளில் தப்பிச் செல்பவர்களை விரட்டிக் கொண்டு அவன் பின்தொடர்ந்தான். வனம் சூழந்த பகுதியில், கரடுமுரடான பாறைகளையும் கற்களையும் பொருட்படுத்தாமல் தன் புரவியை விரட்டிக் கொண்டிருந்தான்.

தன்னுடன் வந்து கொண்டிருந்த மற்றொரு புரவியின் கால்குளம்புகளின் ஓசை கேட்கிறதா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள அவன் திரும்பிய நொடிநேர அவகாசத்தில், தன்னை நோக்கிச் சீரிவந்த அடுத்த அம்பினை அவன் கவனிக்கவில்லை.

அம்பு நேராக அவன் இதயக் கூட்டின் கீழ் துளைக்க, புரவியிலிருந்து நிலை தடுமாறிக் கீழே விழுந்தான். விழுத்த வீரன், தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்து விட முடியாமல் அவன் மேல் இன்னமும் சில வேள்களும், ஈட்டிகளும் வீசப்பட்டன. அவன் கவலை அப்போது அவன் உயிரின் மீது இல்லை.

“மன்னா, வேண்டாம்.. தனியே போக வேண்டாம். திரும்பி வாருங்கள். துணையில்லாமல் காட்டிற்குள் தனியே செல்லாதீர்கள். வேண்டாம்” என்று அந்தக் கானகம் முழுக்க கத்த முற்பட்டான். ஆனால் குரல் ஒத்துழைக்கவில்லை. அவன் சொல்வதை சற்றும் கேளாது அந்த வெள்ளைப்புரவி, கீழே வீழ்ந்துகிடந்த வீரனை பின்வந்த மற்ற வீரர்களிடம் சுட்டிக்காட்டிவிட்டு, அம்பு வந்த திசையினை நோக்கி தனியே சென்றது.

********

“மன்னரைக் காணவில்லையாம்” என்று கிசிகிசுப்பான குரலில் தன்னருகே நின்றிருந்த வாள் வீரனிடம் கூறினான் அந்தக் காவலன். செவியில் விழுந்த செய்தியை மூளை கிரகிக்கும் முன்னர், அவர்களது கண்கள் அரங்கேறிக் கொண்டிருந்த வேறு ஒரு நாடகத்தில் லயித்தன. அங்கேங்கே தீப்பந்த ஒளியில் நின்றிருந்த வீரர்களின் கண்ணில் மன்னர்து ராஜபுரவியை கடிவாளம் பிடித்து நடத்திக் கொண்டு வந்த வீரனும், புரவியின் முதுகில் கிடத்தப்பட்டிருந்த மற்றொரு வீரனும் தென்பட்டனர்.

“தளபதி மட்டுமே கண்டெடுக்கப்பட்டிருக்கிறாரா? மன்னர் கள்வர்களின் பிடியில் சிக்கிக் கொண்டாரோ?” என்று முன்னால் மொழிந்த வீரன், திரும்ப தன் அருகிந்தவனிடம் உரைத்தான். புரவி மெல்ல இவர்கள் நின்றிருந்த இடம் கடந்து, தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த சமதளத்தில் வந்து நின்றது. ப்ய்ரவியின் தோளில் கிடந்த தளபதியை இரு வீரர்கள் கைத்தாங்கலாக பிடித்து பாறையின் மேல் படுக்க வைத்தனர். தளபதி சுயம்புசிம்மன் முகத்திலும் உடலிலும் நிறைய வெட்டுக் காயங்கள். ரத்தம் சொட்டி உடம்பில் பல இடங்களில் அம்பு செய்யப்பட்ட நிலையில் இரு கைகளால் தூக்கி வரப்பட்ட தளபதி அந்த பெரிய பாறையின் மேல் வான்பார்த்து கிடத்தப்பட்டிருந்தான்.

துரிதமான மருத்துவ சேவைகள் நடந்து கொண்டிருந்தன. இரவை நோக்கி சூரியன் மெல்லமாக உளன்று கொண்டிருக்க தன் கூடுகளுக்குத் திரும்பும் ஆவலை வெளிக்காட்டுவதாக எண்ணி, புள்ளிங்கள் இட்ட கூச்சல் மட்டுமே அவ்வனத்தினை நிறைத்திருந்தது.

வீரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு தங்களைச் சுற்றிலும் நடக்கும் விஷயங்களை கிரகித்துக் கொண்டு, அடுத்து செய்ய வேண்டிய செயலுக்கான கட்டளைக்காக காத்திருந்தனர்.

“முதன்மந்திரியார் வந்தாயிற்றா?” என்று மன்னரின் மெய்க்காப்பாளனும், முதன்மைக் காவலனுமான செங்கோடன் தன் வீரர்களிடம் வினவினான். “மந்திரியை கையோடு அழைத்து வர நமது வீரர்கள் சென்று அரை நாழிகைக்கும் மேல் ஆகிறது. இப்போது வந்து கொண்டிருப்பர்” செங்கோடனிடம் பவ்யமாக பதில் உரைத்தான் ஒரு வீரன். அவனை நோக்கி தலையை மட்டும் அசைத்தார் சொங்கோடன்.

மயங்கி கிடந்த தளபதி சுயம்புசிம்மன் மிகவும் கவலைக்கிடமான நிலையிலேயே காட்சியளித்தார். செங்கோடனின் காதுகள் சற்றே விரைப்பாக, சப்தம் வந்த திசை பார்த்து தலையைத் திருப்பினார். அவர்களை நோக்கி வேகமாக வந்து சேர்ந்தது நான்கு புரவிகள் கொண்ட குழு. மூன்று புரவிகள் சுற்றி நின்ற வீரர்களின் பின்னாலேயே நின்று விட, ஒரு புரவி மட்டுமே பாறையின் அருகே மெல்ல வந்து நின்றது.

மேலிருந்து ஒரு காவல் வீரனின் தோளில் கால்வைத்து கீழே இறங்கியது கண்டீரவன் கோட்டை சிற்றரசின் முதன்மந்திரி ரகுனாதபர்வதர். காவலனின் உதவியுடன் கீழே தரையில் இறங்கிய அந்த மனிதர் இவர்களை நோக்கி தன் மேலங்கியை சரி செய்தவண்ணம் விரைந்து வந்து சேர்ந்தார்.

சராசரிக்கும் சற்றே உயரம் குறைவு. அதனாலோ என்னவோ பருமனாகத் தோன்றினார். அதிலும் சிற்றரசு முழுக்க, பல்லக்கில் மட்டுமே பயணம் செய்து பழக்கப்பட்டிருந்தவருக்கு கண்டீரவன் கோட்டையில் இருந்து சில காத தூரத்தில் இருந்த இவ்விடத்திற்கு புரவி மூலம் வந்ததில் மூச்சு வாங்கியது.

“மன்னர் எங்கே? தளபதியின் உடல் நிலை எப்படி உள்ளது? உடனடியாக கோட்டைக்குள் கொண்டு சென்று வைத்தியம் பார்க்காமல் இப்படி வெட்ட வெளியில் கிடத்தப்பட்டிருபதால் என்ன லாபம்?” என்று தன் அதிகாரத் தொனியை சற்றும் இறக்காமல் நேரே செங்கோடனிடம் வினவினார்.

“மன்னரைத் தேடிக்கொண்டிருக்குறோம்.” என்று அமர்ந்திருந்த நிலையிலிருந்து எலுந்து பவ்யமாக அவர் முன்கைகளைக் கட்டியவாரே பதிலளித்தான் செங்கோடன்.

“காணவில்லை என்றால் இன்னமும் நன்றாகத் தேடுவதற்கென்ன? வீரர்களே நன்றாகத் தேடுங்கள். தளபதி கண்டெடுக்கப்பட்ட குயவரிப்பள்ளத்தின் அருகே நன்றாகத் தேடிப்பாருங்கள்..ம்ம்.. செல்லுங்கள்.” என்று சுற்றி நின்ற வீரர்களுக்கு கட்டளை வழங்கினார் முதன்மந்திரி ரகுனாதபர்வதன்.

இருள் கவியத் தொடங்கியிருந்த கானகத்தின் நடுவே வீசிய ஊத காற்றும் கூட அவருக்கு ஊசியாகக் குத்திற்று. அவரின் முதிர்ந்த முகத்தில் முத்தாக துளிர்விட்டு இருந்த வியர்வையை தன்மேல் தலைப்பால் துடைத்துக் கொண்டார்.

“கள்வர்களை விரட்ட படையினரை விடுத்து மாவேலி காட்டிற்குள் செல்ல வேண்டாம் என்று மன்னரை இன்னமும் அதிகமாகத் தான் வலியுறுத்தி இருக்க வேண்டுமோ! தன்னால்தான் மன்னருக்கு இன்று இந்த நிலையோ?” என்ற பயத்தில் அவரின் இதயக் கூடு வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

புரவிக்கு நீர்காட்டிக் கொண்டிருந்த வீரனை அருகே அழைத்து, “உடனடியாக தீபந்தங்களைத் தாயாரிக்க ஏற்பாடு செய். இரவே ஆனாலும், தேடுதல் பணியில் தோய்வு இருக்கலாகாது” என்று கட்டளையிட்டார்.

மன்னர் இல்லாமல் கோட்டைக்கு திரும்பச் செல்வது எப்படி? நான் பலமுறை எடுத்துக் கூறிய பொழுதும் மன்னர் கேட்டாரில்லையே. தன் சொல்பேச்சு கேளாமல் கள்ளர் படையை விரட்டிக்கொண்டு காட்டிற்குள் இத்தனை தூரம் வந்திருக்க வேண்டாம். என் கணவர் எங்கே என்று ராணி விரிஜாதேவியார் என்னிடமல்லவா கேட்பார். கண்ணீர் மல்கும் அம்முகத்திற்கு நான் என்ன பதில் கூறுவேன்?” என்ற கவலை பிடித்துக்கொள்ள செய்வதறியாது அந்தப் பெரிய பாறையின் மேல் அமர்ந்துகொண்டார்.

அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பார்வை நாலாபக்கமும் சுழற்ற, கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் மலை முகடுகளும் அதன் மேல் போர்த்தி இருந்த அடர்ந்த கருமைபடர்ந்திருந்த மரங்களுமே தென்பட்டன. இந்த மலையின் முகட்டிலிருந்து சற்றே வடகிழக்கில் பார்வையை செலுத்த அங்கே கண்டீரவன் கோட்டை சிற்றசும் அதன் சுற்றுப்புறத்தில் அமைந்திருந்த கிராமங்களும் தென்பட்டன. கோட்டை மதில்களின் மேல் இன்னேரம் தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டிருக்கும். ஆனால் இங்கிருந்து பார்க்கையில் அவை சிறுசிறு நட்சத்திரப்புள்ளிகளாய் மட்டுமே காட்சியளித்தன.

கண்டீரவன் கோட்டை, பெயருக்கு ஏற்றார், சிம்மத்தின் முகம் போன்ற அமைப்புடனும், சிம்மத்தின் பிடறி போல் கோட்டையைச் சுற்றிலும் அடர்ந்த காடுகளுடனும் காணப்பட்டது.

சிற்றரசைச் சுற்றிலும் சிறு சிறு கிராமங்கள் சிதறிக்கிடக்க, மலைவளத்தால் அதிக மழை பெற்று, ஆறு, குளங்கள் என நிரம்பியிருக்கும் செழிப்பான ஊர்.
கோட்டையின் மூன்று பக்கமும் சூழ்ந்திருந்த காடுகள் அரசிற்கு எவ்வளவு வருமானம் ஈட்டி தருகிறதோ அந்த அளவிற்கு பிரச்சனைகளையும் தருவித்தது. அடர்ந்த வனம் சூழ்ந்த காரணத்தினால் நிறைய கள்வர் பயமும் மற்ற நாடுகளின் ஒற்றர்களின் நடமாட்டமும் அங்கங்கே சிறு கலகங்களும் தினப்படி நடந்தேறும்.

இன்றும் கூட அப்படித்தான். கண்டீரவம் கோட்டையின் தென் கிழக்கில், மாவேலிகாடுகளில் கள்ளர் கூட்டம் ஒன்று அதிக தொந்தரவு கொடுத்து வந்தது. மன்னர் தளபதியுடனும், நான்கைந்து வீரர்களுடனும் சென்று கள்ளர் கூட்டத்தை விரட்டியடிக்க முனைந்தார்.

சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளை மறந்து தன் கவலையில் மூழ்கியபடிக்கு பாறையின் மேல் அமர்ந்திருந்த முதன்மந்திரி ரகுனாதபர்வதரின் அருகே முதன்மைக்காவலன் செங்கோடன் சற்றே தயக்கத்துடன் குனிந்து நின்றான்.

“சொல் செங்கோட, என்ன செய்தி” என்று முகத்தை திருப்பாமலேயே வினவினார் மந்திரி. “தீப்பந்தங்கள், உணவு, மருந்துகள் என்று அதியாவசியப் பொருட்கள் அதிக கைவசம் இல்லை. கள்ளரை விரட்டவெனவே கிளம்பினோம். இப்படி இராத்தங்கும் நிலை வருமென்று கணிக்கவில்லை. மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தங்களின் கட்டளைக்காக காத்திருக்கிறோம்” என்று மொழிந்த முதன்மைக்காவலனை அமைதியாக நோக்கினார் மந்திரி.

சட்டென ஆவேசம் வந்தவர் போல் முதன்மந்திரி, அமர்ந்திருந்த பாறையிலிருந்து துள்ளி எழுந்தார். “இருள் கவிழ்ந்தாலும் தேடுதலில் எந்தத் தோய்வும் இருக்கக் கூடாது என்று உங்கள் வீரர்களுக்கு கட்டளையிடுங்கள்” என்றார். செங்கோடன் இன்னமும் பவ்யமாகவே நின்றிருந்தான்.

“இன்னமும் என்ன?” என்றார் முதன்மந்திரி. அவர் மனதில் செங்கோடனின் மேலிருந்த கோபம் குரல் வழியே கசிந்தோடியது. மன்னரின் மெய்க்காப்பாளன் என்ற முறையில் அவர் எங்கே சென்றாலும் பிந்தொடர்ந்து செல்லக்கடமைப்பட்டவன் இன்று ஏன் அப்படிச் செல்லவில்லை என்ற கோபம். அவர் மனதின் கேள்வி புரிந்தவன் போல, செங்கோடன் குனிந்த மேனிக்கே பேசினான்.

“கள்வர்கள் திசைக்கொருவராக சிதறிவிட்டனர் ரகுனாதரே. கள்வர்களின் தலைவனைத் தொடர்ந்து மன்னரும் தளபதியும், இன்னும் இரு காவலர்களும் விரைந்து செல்ல, சிதறிப் போன மற்றவரை துரத்திக் கொண்டு நானும் ஏணைய சில வீரர்களும் செல்ல நேர்ந்துவிட்டது” என்று குரலை கொஞ்சமும் ஏற்றாமல் பேசினான் மெய்க்காவலன் செங்கோடன்.

இவன் வார்த்தைகளைக் கேட்ட பிறகும் மந்திரியின் கோபம் குறையவில்லை. இன்னமும் மெளனமாக அவனை ஏறிட்ட வண்ணமே அமர்ந்திருந்தார். செங்கோடனும் முதன்மந்திரியும் தனியே பேசிக் கொண்டிருக்க, செங்கோடனின் வீரன் ஒருவன் அவ்விடம் வந்து சேர்ந்தான். தான் அடுத்து சொல்லவிருக்கும் விஷயத்தை எப்படித் துவங்குவது என்ற தடுமாற்றத்துடன் நின்றிருந்த வீரனைக் கண்ட செங்கோடன், கண்களாலேயே மந்திரியிடம் அனுமதி பெற்று அந்த வீரனை அழைத்துக் கொண்டே சற்றே தூரம் நகர்ந்தார்.

“சொல். என்ன விஷயம்? தளபதியின் உடல்நிலையில் ஏதும் முன்னேற்றம் உள்ளதா?” என்று வினவிய செங்கோடனின் முகம், அவ்வீரன் தெரிவித்த செய்தி கேட்டு, விகாரமாக மாறியது.

“செங்கோடரே ! தளபதியாரின் உடல் நீளம் பாரிக்கத் துவங்கிவிட்டது. வெறும் அம்புக்காயம் என்று எண்ணியே பச்சிலை வைத்தியம் செய்தோம். இப்போது முகம் நீளம் பாரிக்கிறதெனில், அம்புகளில் விஷம் தடவியிருக்க வேண்டும்” என்று உரைத்த காவலனின் கூற்று, சற்றே தள்ளி நின்றிருந்த முதன்மந்திரியின் காதுகளிலும் விழுந்திருக்க வேண்டும்.

தன் வயதையும் மறந்து துள்ளி அருகே வந்தவர், “என்ன சொல்கிறாய், விஷம் தேய்த்த அம்புகளால் தளபதி வீழ்த்தப்பட்டிருக்கிறாரா? அப்படியானால் மன்னரின் நிலை?” எனக் கவலையுடன் வினவினார். காவலனும், செங்கோடனும் பதில் கூறாமல் அமைதிகாத்தனர்.

இந்தச் செய்தியைக் கேட்கவும் முதன்மந்திரியின் மூச்சே நின்றுவிடும் போல் கவலை வந்து இதயத்தை அழுத்தியது. “அந்த அம்புகளால் மன்னரும் அடிபட்டிருந்தால், தளபதிக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் மருத்துவ உதவிகூட இல்லாமல், கானகத்தின் நடுவில் மன்னர் எங்கே கிடக்கிறாரோ?” என்ற அச்சம் அவர் முகத்தில் தெளிவாகவே தெரிந்தது.

இருள் முழுவதுமாக கவிந்து விட்டிருக்க அங்கொன்றும் இங்கொன்றுமாய் காவலர்கள் ஏந்தி பிடித்திருந்த தீபத்தின் ஒளியில் ரகுனாதபர்வதரின் முகம் தீ ஜுவாலையாக காட்சியளித்தது.

செங்கோடன் மனமும் பலவிஷயங்களை கணக்கிட்டுக் கொண்டிருந்தது. உடலில் விஷம் பாறித்தால் அது எவ்விதத் தன்மை கொண்ட விஷம் என்பதைப் பொருத்து உடனடி சிகிட்சை செய்தல் வேண்டும். வனப்பகுதியில் வளர்ந்தவராதலால் சிறிது பச்சிலை வைத்திய ஞயானமும் பெற்றிருந்த செங்கோடருக்கு, இப்பொழுது கைவசம் எந்த மருந்துகளும் இல்லை என்பதும், மன்னரைக் கண்டுபிடித்தாலும் கோட்டைக்குள் கொண்ட சென்ற பின்னரே விஷமுறிவு மருந்து கொடுக்க இயலும் என்ற சிந்தனையும் ஏற்பட்டது.

அவர் சிந்தையை செயலாக்கவும் முனைந்தார். செய்தி கூறிய காவலனிடம், “பரமா! நீ வேகமாக புரவி ஓட்டும் வீரனை அழைத்துக் கொண்டு கோட்டைக்குள் சென்று நான் கூறும் பச்சிலைகளை நம் வைத்தியரிடமிருந்து பெற்று வா. அத்துடன் வீரர்களுக்கு இரு தினங்களுக்குத் தேவையான உணவு, தீபந்தம் போன்ற பொருட்களையும் கொணர்ந்து வரச்சொல். ஒரு நாழிகைக்குள் நீ இங்கே திரும்பியாக வேண்டும்” என்றார். பரமன் என்று அழைக்கப்பட்ட அவ்வீரனும் கட்டளையை ஏற்று வேகமாகப் பறந்தான்.

அருகே நின்றிருந்த மற்றொரு காவலனை அருகே அழைத்த செங்கோடன், “இவ்விடத்திலிருந்து மேற்கே மூன்று காத தொலைவிற்குள் அதிரவல்லி என்ற மலைக்கிராமம் உள்ளது. அங்கே சென்று கிராமத்தலைவனிடம் விவரம் சொல்லி, சில மனிதர்களைக் கூட்டிவா. நம் வீரர்களை விடவும், காடுகளிலேயே அலைந்து திரிபவர்களால் மன்னரைத் தேடும் பணி துரிதமாகும்.” என்று அடுத்தடுத்துக் கட்டளையிட்டார்.

செங்கோடனின் மனம் முழுக்க புழுக்கமாக இருந்தது. கள்வர்களைத் துரத்தி வந்த மன்னரை தவறவிட்டோம் என்ற பழிசொல்லைத் தன் வாழ்நாள் முழுக்க எப்படித் தாங்க இயலும் என்று தெரியவில்லை. என்னவானாலும் மன்னரைக் கண்டுபிடித்தே தீருவது என்று மனதிற்குள் சபதம் செய்துகொண்டார்.

“உக்கிரகாளி! என் மன்னனை எப்படியும் இந்த இக்கட்டிலிருந்து நான் மீட்டுவிட வேண்டும். அல்லாது போனால், மெய்க்காப்பாளனான நான் உயிர்வாழத் தகுதியில்லாதவனாவேன். உடனிருந்து காப்பாற்று” என்று தன் கிராமதெய்வத்தினை மானசீகமாக வழிபட்டான் செங்கோடன்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முதன்மந்திரிக்கும் செங்கோடனின் மேலிருந்த சற்றே கோபம் குறைந்துதான் போனது. “சொல் பேச்சு கேளாமல் தனியே கள்வரை துரத்திக் கொண்டு சென்ற மன்னரின் மேல் தான் நான் கோபிக்க வேண்டும். மன்னருடன் துணையாச் சென்று சந்தர்ப்ப வசத்தால் பிரித்து போய்விட்ட செங்கோடன் என்ன தவறு செய்தான்?” என்ற எண்ணம் தோன்றியது.

சதாசர்வ காலமும் கள்வர் பயமும், கண்டீரவன் கோட்டையைக் கைவசமாக்கத் துடிக்கும் மாவேலிக்காடுகளுக்கு அப்புறம் இருக்கும் வகுளநாடு சிற்றரசும் என ஏற்கனவே கண்டீரவன் கோட்டை அரியனைக்கு இருக்கும் அபயாங்கள் அதிகம். இதில் திருமணம் முடிந்து சில மாதங்களே ஆகியிருந்த மன்னவரைக் காணவில்லை, வாரிசும் இன்னும் உருவாகாத நிலை என்று வகுளநாட்டு ஒற்றர்கள் அறிந்தால் ஐந்தே நாழிகையில் போர்தொடுத்து வரக்கூடும்.

இதையெல்லாம் எண்ணிய முதன்மந்திரி, “மன்னரை எப்பாடு பட்டாலும் தேடி கண்டுபிடிக்க வேண்டும். நாட்டின் நிலைமை உணர்ந்து தேடுதலைச் சற்றே துரிதப்படுத்துங்கள்” என்று கட்டளையிட்ட முதன்மந்திரியின் முகம் முழுக்க கவலை ரேகைகள்.

***********


விரைவில் அடுத்த பதிவுடன் வருகிறேன்.

நான் கண்டீரவன்



கருத்துகளுக்கு என்னைச் சொடுக்கு
 
Status
Not open for further replies.
Top Bottom