கருப்பொருள்
07 செப்டம்பர், 2016
மனிதனின் காலடி படாத முற் செடி புதர் மரங்கள் என வளர்ந்திருந்த ஒரு அடர்த்தியான காடு அது. அப்படிப்பட்ட இடத்தில் கனமான இரும்புக் கழி போல் ஒருவனின் கால் தடம் அழுத்தமாக பதிந்தது. கீழே இருக்கும் காய்ந்த முள் சருகுகள் அவன் பாதத்தை குத்தி புண் படுத்துவதை சற்றே பொருட் படுத்தாமல் நடந்து கொண்டிருந்தான். அவன் முன்னேறி செல்ல செல்ல முற்செடிகள் அவனின் உடம்பை கீறி உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் குருதியை எட்டிப் பார்க்க செய்தது. அவன் அதையும் பொருட் படுத்தாமல் முன்னேறி நடந்துக் கொண்டிருந்தான். அந்த அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் மரம் செடி கொடிகளினால் ஏற்பட்ட இருளை, சூரியன் ஆங்காங்கே உள்ள இலை தழைகளின் இடைவெளிக்குள் நுழைந்து அவனுக்கு ஒரு வெளிச்சத்தை கொடுத்தான். சில விஷப் பூச்சிகள் அவன் மீது ஏறி அவனை கடிக்கத் தொடங்கின. அவன் அந்த பூச்சிகளையும் தட்டி விடாமல் நடந்து முன்னேறிக் கொண்டிருந்தான். நிச்சயமாக, பெரும் மன உறுதி உள்ளவனால் மட்டுமே இந்த வலியையும் வேதனையையும் தாங்கி கொள்ள முடியும். அதே போல மிகுந்த மன தைரியம் உள்ளவனால் மட்டுமே இப்படி ஒரு பாதையை தேர்ந்தெடுக்க முடியும். அவனுடைய உறுதியான நடையை அந்த சரிவான பாதை பின்னே தள்ளியது. அவன் சளைக்காமல் முன்னேறிக் கொண்டிருந்தான். சில மணிநேர நடைக்குப் பின்னர் வானத்தை மூடியிருந்த இலை தழைகள் கலைந்து நீலவானம் தெளிவாக தெரிந்தது. சூரியனின் ஆதிக்கமும் அதிகரித்திருந்தது. அவன் பயணத்தை நிறுத்தி வானத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று 'ஓ ஓ ஓ ...' என்று தன் அடிவயிற்றிலிருந்து மூச்சு விடாமல் ஓலமிட்டான். ஒரு நிமிடம் வரை நீடித்தது அந்த ஓலம். பிறகு வேகமாக சுவாசித்த அவன், நிதானமான பிறகு
'நீ யாரு?... நீ உண்மையா?... அப்படி உண்மையா இருந்தா ஏன் இப்படி என்னை கஷ்டப்படுத்தற?... எனக்கு ஒன்னுமே புரியல?... நான் இந்த மலை மேல ஏறி வரும்போது நிறைய முள்ளு என்னை காய படுத்திச்சு... நிறைய விஷப் பூச்சி என்னை கடிச்சிது... அதையெல்லாம் என்னால தாங்கிக்க முடியுது... ஆனா நீ கொடுக்கற வேதனையையும் வலியையும் என்னால இனிமேல் தாங்கிக்க முடியாது... நான் என் வீட்டை விட்டு ரொம்ப தூரம் வந்துட்டேன்... அவங்களால என்னை தேடி கண்டு பிடிக்க முடியுமான்னு தெரியாது... அதை நான் எதிரும் பாக்கல... என் உடம்பு யாருக்கும் தெரியாம இங்கேயே அழுகி சிதைஞ்சு போனாலும் பரவாயில்ல, நான் அவங்களுக்கு கிடைக்கவே கூடாது...... இதுக்கப்புறமா என்ன நடக்கும்னு எனக்கு தெரிய போறதில்லை... இதோட நீ என்னை விட்டுடு' என்று வானத்தைப் பார்த்து உரக்க கூறிவிட்டு பார்வையை தரையை நோக்கி நகர்த்தினான். கீழே மிக ஆழத்தில் உள்ள அடர்த்தியான காடு அவன் கண்ணிற்கு தெரிந்தது. தன் இரு கைகளை விரித்து அந்த மலை உச்சியிலிருந்து குதித்தான் அவன்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர்
08 ஜூன், 1981
உயரமான ஒரு அலுவலக கட்டிடத்தின் மாடியில் சந்திரனும் ராதாவும் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்த வேளையில் மிகவும் பலத்த காற்று வீசியது. புகையிலை சுருளை (CIGARETTE) தன் இரு உதடுகளுக்கு இடையே சொருகி அதன் மறுமுனையை அங்கு வீசும் வேகமான காற்றில் அணையாமல் பாதுகாப்பாக பற்றவைத்து புகையை உள்ளே இழுத்து வெளியிட்டான் சந்திரன். அந்த புகையின் வாசத்திற்கு எந்த வித அருவெறுப்பையும் காட்டாமல் அவனருகில் கையில் அழைப்பிதழை அவனிடம் நீட்டியவாறு நின்று கொண்டிருந்தாள் ராதா.
அதை பெற்றுக் கொண்ட சந்திரன் அந்த அழைப்பிதழில் மாப்பிள்ளையின் பெயரின் கீழே "ஜுனியர் என்ஜினீயர், ரயில்வேஸ்" என்று அவருடைய பணி விவரம் குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்தான்.
'நல்ல படியா செட்டில் ஆயிட்டே... ரொம்ப சந்தோஷமாயிருக்கு...' - சந்திரன்.
ஒரு பெரு மூச்சை விட்ட ராதா சந்திரனிடம்
'இவ்வளவு நாள் நாம ரெண்டு பேரும் காதலர்களா இருந்தோம்... நேத்து வரைக்கும் உன் மனசு மாறிடும்னு நம்பினேன்... கடைசீல நான் மாறிட்டேன்... ' - ராதா.
சந்திரன் லேசாக நகைத்தவாறே
'நீ என்னோட பேசி பழகும் போதே சொன்னேனே... எனக்கு கல்யாணம், ஒருவனுக்கு ஒருத்தின்ற கான்செப்ட் அப்புறம் கடவுள் மேல எல்லாம் நம்பிக்கையே இல்ல... இதை என்னை லவ் பண்ற எல்லா பெண்கள் கிட்டேயும் முன்னாடியே சொல்லிடுவேன்... அப்படியிருந்தும் எல்லாரும் "உன்னை நான் மாத்தி காட்டேறேன்"னு சொல்லிட்டு என் கூட பழகுவாங்க... அப்புறம் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிடுவாங்க...' என்று கூறினான்.
'மனசுக்கு பிடிச்ச ஆளோட வாழணும்... அந்த வாழ்க்கை தெகட்டிட்ட பிறகு புதுசா மனசுக்கு பிடிச்ச வேற ஒரு ஆளோட வாழணும்... அதுவும் தெகட்டிருச்சா அப்புறம் வேற ஆள்னு உன் ஐடியாலஜி படி என் வாழ்க்கையை வாழணும்னு தான் ஆசை... என்ன பண்றது?... பொண்ணா பொறந்துட்டேனே... உன்னோட ஐடியாலஜி படி பெண்கள் நடந்துக்கறதை ஏத்துக்கறதுக்கு இன்னும் நம்ம சமுதாயம் பக்குவம் அடையலை... அம்மா அப்பாவுக்காகவும், சமுதாயத்துக்காகவும், என்னோட பாதுகாப்புக்காகவும் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் ஆகணும்... ஆனா உன் கடைசி காலம் வரைக்கும் நீ இப்படியே வாழ முடியாது ... நமக்குன்னு உறவுகள் தேவை... நீயும் உன் ஐடியாலஜியை மாத்திக்கிட்டு சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிக்கோ...' - ராதா.
'எனக்குள்ள கருவா இருந்து என்னோட சொல் செயல் எண்ணத்தை ஆட்டுவிக்கறதே என்னோட இந்த ஐடியாலஜி தான்... இந்த கரு எப்படி உருவாச்சுனே தெரியலை... ஒருவேளை என் அம்மா என்னோட சின்ன வயசுலியே சாகாம இருந்திருந்தா என்னோட ஐடியாலஜி வேறமாதிரி இருந்திருக்குமோ என்னவோ... உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்... சின்ன வயசுல என் அப்பா வியாபாரம்னு வெளியூர் போய்டுவாரு... நான் ஹாஸ்டல்ல தான் வளர்ந்தேன்... என் அப்பாவும் என்னை எவ்வளவோ மாத்த முயற்சி பண்ணாரு... இன்னும் பண்ணிக்கிட்டு இருக்காரு... இதுவரைக்கும் எந்த சம்பவங்களும் என் ஐடியாலஜியை மாத்திக்கற அளவுக்கு என் மனச பாதிச்சதில்ல...' - சந்திரன்.
ராதா செயற்கையாக புன்னகையை சிந்தி
'ஒரு நாள் உன் மனசை பாதிக்கற சம்பவம் ஒன்னு கண்டிப்பா நடக்கும்... அது உனக்கு அன்பு பாசம் அப்புறம் பிரிவோட வலியை உனக்கு உணர்த்தும்... நிச்சயமா நீ உன் ஐடியாலஜியை மாத்திக்குவ...' என்று கூறினாள். அப்படி கூறும் போது அவள் கண்கள் கலங்கியது. உடனே சந்திரன் தீவிரமாக
'ஹே... என்னாச்சு?' என்று கேட்டான்.
'ஒண்ணுமில்ல... தானா கண் கலங்குது... நீ இதை சீரியஸ்ஸா எடுத்துக்காதே... அவசியம் என் கல்யாணத்துக்கு வந்துடு... பயப்படாத... எனக்கு உன்னை பாத்தா எந்த குற்ற உணர்ச்சியும் வராது... உன்னோட இருந்த இந்த தற்காலிக உறவுல நான் கத்துக்கிட்டது இந்த மன பக்குவத்தை தான்... நிறைய பேர இன்வைட் பண்ணனும்... நான் கிளம்பறேன்...' என்று சந்திரனிடம் விடைபெற்று சென்றாள் ராதா.
ராதவுடனும் மற்றும் அவனின் முன்னாள் காதலிகளுடனும் நடந்த இனிமையான நிகழ்வுகளை நினைத்து பார்த்துக் கொண்டே வாயில் இருந்த புகை சுருளை முடித்து விட்டு அந்த மாடியிலிருந்து கீழே பார்த்தான். அந்த உச்சியிலிருந்து கீழே பார்க்கும் அவனை ஒரு வித பயம் பற்றிக் கொண்டது. லேசாக தலை சுற்றியது. சட்டென்று தன் பார்வையை விலக்கி அந்த இடத்தில இருந்து நகரத்தொடங்கினான். அவன் மாடி படிக்கட்டுகளில் இறங்கி கொண்டிருக்கும் போது சட்டென்று ஒருவன் முகத்தில் ஒரு வித கலக்கத்துடன் சந்திரனை வேகமாக கடந்து மாடியை நோக்கி படிக்கட்டுகளில் ஓடினான். சில நொடிகள் அவன் ஓடுவதை சந்தேகமாக பார்த்த சந்திரன் கீழே இறங்குவதை தொடர்ந்தான். சட்டென்று சந்திரனுக்கு அந்த உயரமான மாடியிலிருந்து கிழே பார்க்கும் போது உண்டான பயம் அவன் நினைவிற்கு வந்தது, அடுத்து அவனை கடந்து ஒருவன் கலக்கத்துடன் வேகமாக மாடியை நோக்கி ஓடியதும் நினைவிற்கு வந்தது. உடனே தான் நடக்கும் திசையை மாற்றி மாடியை நோக்கி சந்திரனும் ஓடினான். மாடியை அடைந்த அவன் தன்னை கடந்து வந்த ஆசாமியை தேட சற்றே சுற்றும் முற்றும் பார்வையை படரவிட்டுக் கொண்டிருக்கும் போது, சந்திரனுக்கு வந்தவன் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டானா என்ற சந்தேகம் தோன்றியது. அந்த சந்தேகத்தை போக்கி கொள்வதற்கு மாடியிலிருந்து கீழே எட்டி பார்த்தான். கிழே எந்த பதட்டமும் பரபரப்பும் இல்லை, இயல்பான நிலையில் மக்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். மறுபடி அந்த மாடியில் அவனை தேடும் போது, சந்திரனுக்கு அழுகை சத்தம் கேட்டது. உடனே அந்த அழுகை சத்தம் வரும் திசையை நோக்கி போனான். அப்படி அந்த சத்தத்தை நோக்கி சென்ற சந்திரனின் கண்களுக்கு மேலே ஓடி வந்தவன் மாடியின் நுழைவாயில் அறையின் பின்னே அமர்ந்து அழுது கொண்டிருப்பது தெரிந்தது. உடனே அழுது கொண்டிருப்பவனிடம் வேகமாக சென்று அவன் அழுவதை சில நொடிகள் பார்த்துவிட்டு அவனிடம் தயக்கமாக
'சார்... தப்பா எடுத்துக்காதீங்க... என் பேரு சந்திரன்... என்னை உங்க நண்பனா நினைச்சுக்கோங்க... உங்களோட துக்கத்தை என்கிட்ட பகிர்ந்துக்கோங்க...' என்றான். சில நொடிகளில் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்ட அந்த நபர்
'என் பேரு விவேக்... மேனேஜர் கண்ட படி எல்லார் முன்னாடியும் திட்டிட்டார்... அந்த அவமானத்தை என்னால தாங்கிக்க முடியலை' என்றான். அவனின் பதிலை கேட்டு சந்திரன் வியப்பாக நகைத்தவாறே
'சார்... மேனேஜர் னாலே திட்டிகிட்டு தான் இருப்பாங்க... நான் என் மேனேஜர் கிட்ட டெய்லி திட்டு வாங்குவேன்... அந்த ஆள் கிட்ட திட்டு வாங்கலைன்னா எனக்கு தூக்கமே வராது... வாங்க கேன்டீன் போய் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்...' என்று விவேக்கை சமாதான படுத்தி அந்த அலுவலகத்தின் உணவகத்திற்கு அழைத்து சென்றான்.
அங்கே அமர்ந்து உணவகத்தின் பணியாளிடம் தனக்கு வேண்டிய சிற்றுண்டிகளை எடுத்து வருமாறு கூறிக் கொண்டிருந்தான் சந்திரன். அப்போது அங்கு ஒரு அலுவலக பணியாள் விவேக்கிடம் வந்து
'சார்... உங்க அம்மா கிட்டேருந்து உங்களுக்கு போஃன் கால் வந்திருக்கு...' என்றான்.
இதை கேட்டவுடன் விவேக் கோபமாக
'நான் உயிரோட இல்ல செத்துட்டேன்னு சொல்லுங்க...' என்று சொன்னான். உடனே சந்திரன் விவேக்கிடம்
'ஐயோ... சார் ஏன் இவ்வளவு கோபம்?... அதுவும் அம்மா கிட்ட... எனக்கெல்லாம் அம்மா இல்லையேன்னு ரொம்ப வறுத்த பட்டிருக்கேன்... போய் பேசுங்க...' என்றான்.
விவேக் 'ப்ப்ச்...' என்ற சப்தத்துடன் வேறு பக்கம் திரும்பினான். அவனின் முகபாவனையை பார்த்த சந்திரன் அந்த அலுவலக பணியாளிடம்
'நான் அவங்க கிட்ட பேசறேன்...' என்று கூறிவிட்டு அங்கிருந்து அந்த அலுவலக பணியாளுடன் சென்றான். தொலைபேசியின் ஒலிக்கடத்தியை ஏந்தி
'ஹலோ அம்மா...' என்றான்.
'விவேக்கா?' என்று ஒரு தழுதழுத்த குரல் கேட்டது.
'இல்லமா... நான் அவர் ப்ரண்ட் சந்திரன்...' - சந்திரன்.
'ஓ... அவன் எப்படி பா இருக்கான்?... காலைல அவன் என் கூட சண்டை போட்டுட்டு வந்துட்டான்... அதான் எப்படி இருக்கானு கேட்கலாம்னு போஃன் பண்ணினேன்...' - விவேக்கின் தாய்.
'பரவாயில்ல மா... நார்மலா தான் இருக்காரு... என்ன? உங்க மேல தான் கோபம்... அவ்வளவுதான்... நான் அதை பேசி சரி பண்ணிடறேன்...' - சந்திரன்.
'அவனை பத்திரமா பாத்துக்கோ பா... அந்த பொண்ணு அவனை விட்டு போனதுலேருந்தே அவன் ரொம்ப சென்சிடிவ் ஆயிட்டான்...' - விவேக்கின் தாய்.
'யாரந்த பொண்ணு?... என்னாச்சு?... நான் இப்போ தான் அவரோட நட்பா பழக ஆரம்பிச்சிருக்கேன்... எனக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாதுமா...' சந்திரன்.
'விவேக் எங்களுக்கு ஒரே பையன்... அவன் மேல ரொம்ப அன்பையும் பாசத்தையும் கொட்டி வளத்தோம்... படிப்பெல்லாம் நல்ல படியா முடிச்சு நல்ல வேலை கிடைச்சு அவன் வாழ்க்கை நல்ல படியா போய்கிட்டு இருந்தது... அவனுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வெக்கணும்னு எனக்கு ஆசை... அவனும் இப்போ வேணாம் மா னு தான் சொன்னான்... நான் தான் கேக்கலை... ஒரு நாள் அவனுக்கு பொண்ணு பாக்க ஏற்பாடு பண்ணிருந்தோம்... அவன் வேணாம் எனக்கு பிடிக்கலைனு ரொம்ப அடம்பிடிச்சான்... அவனை கட்டாயப்படுத்தி பொண்ணு பாக்க கூட்டிகிட்டு போனேன்... அவளுக்கு பதினெட்டு வயசு தான்... பாக்க ரொம்ப லட்சணமா அழகா இருந்தா... இப்போ கல்யாணமே வேணாம்னு அடம்புடிச்சவன் அந்த பொண்ணை பாத்தவொடனே மனச மாத்திகிட்டான்... அவனுக்கு அவளை ரொம்ப பிடிச்சிருந்தது... அவளோட வரவு அவனுக்கு நல்லதை குடுக்கும்னு நம்பினோம்... ஆனா கல்யாணம் ஆன மூணாவது நாளே அந்த பொண்ணு அவனை விட்டுட்டு போய்டுவான்னு எதிர் பாக்கலை... பொண்ணு பாக்கும் போதே அந்த பொண்ணு பிடிக்கலைனு சொல்லி இருந்தா நாங்க அவன் கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சிருப்போம்... எல்லா சடங்கும் நடக்கும் போது மௌனமாவே இருந்துட்டு கல்யாணம் நடந்த மூணாவது நாளே அந்த பொண்ணு இப்படி பண்ணிட்டாப் பா.. அந்த சம்பவத்துக்கு முன்னாடி என் பையனை சீறாட்டி பாராட்டின சொந்தகாரங்க எல்லாம் “இவனுக்கு ஏதோ குறை இருக்கு அதான் அவ விட்டுட்டு போய்ட்டா” ன்ற மாதிரி ஜாடை மாடையா சொல்லிட்டு போறாங்க... எல்லாரோட உண்மையான முகமெல்லாம் இப்போ தான் பா எங்களுக்கு தெரிய வருது... நாங்களும் அந்த பொண்ணு வீட்டுக்கு போய் எவ்வளவோ பேசி பாத்தோம்... மொதல்ல "நாங்க எப்படியாவது பேசி அவளை அனுப்பி வெக்கிறோம்"னு சொன்னவங்க போக போக "எங்களை மன்னிச்சிருங்க... எங்க பொண்ணுக்கு இப்போ கல்யாண வாழ்க்கைல இஷ்டம் இல்லனு சொல்லிட்டா... மேற்கொண்டு காட்டாயப்படுத்தினா நான் தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டுறா... அதனால உங்க பையனுக்கு வேற கல்யாணம் பண்ணிடுங்க"னு சொல்லிட்டாங்க... நாங்களும் "இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் கிடையாதுப்பா... நாங்க வேற நல்ல பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணி வெக்கிறோம்"னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கறான்... இதை பெரிய அவமானமா எடுத்துக்கிட்டு இதனால தான் தனக்கு நிறைய கெட்ட விஷயங்கள் நடக்குதுன்னு நினைச்சுக்கறான்...' - விவேக்கின் தாய்.
'நீங்க கவலை படாதீங்க மா... நிச்சயமா அவர் நார்மல் ஆவார்... அடுத்த வருஷம் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க மனச திருப்தி படுத்துவார்... இதுக்கு நான் பொறுப்பு... நீங்க கவலை படாம போஃனை வைங்க மா. ' - சந்திரன்.
'இல்லப்பா... அவனுக்கு வர சின்ன சின்ன கஷ்டத்தையெல்லாம் பெரிசா எடுத்துக்கறான்... அவனுக்கு வர கஷ்டத்துக்கெல்லாம் நானும் அவன் அப்பாவும் தான் காரணம்னு எரிஞ்சு விழறான்... நாங்க பொறுமை இழந்து இன்னிக்கு காலைல அவனை திட்டும் போது “நான் உயிரோட இருந்தா தானே பிரச்சனை உங்களுக்கு... நான் இப்போவே போய் சாகறேன்” னு சொல்லிட்டு வீட்டை விட்டு போய்ட்டான்... அதான்பா கால் பண்ணி அவனை கொஞ்சம் ஆசுவாச படுத்தலாம்னு நினைச்சேன்... அவனை கொஞ்சம் பேச சொல்லுப்பா... அப்போ தான் எனக்கு திருப்தியா இருக்கும்...' - விவேக்கின் தயார்.
'சரிங்க மா... லைன்ல இருங்க... நான் போய் விவேக்கை கூட்டிகிட்டு வரேன்...' என்று ஒலிப்பானை மேஜையில் வைத்து விட்டு விவேக்கை அழைத்துவர அலுவலக உணவகத்தினுள் நுழைந்தான். அங்கு ஒரு ஜன்னலின் பக்கம் கூட்டம் கூடி முன்னமுனுத்து கொண்டிருந்தது. அதை பார்த்தவுடன் சில நிமிடங்களுக்கு முன் அந்த அலுவலக மாடி உச்சியிலிருந்து கீழே பார்க்கும்போது வந்த பயம் நினைவிற்கு வந்தது.
உடனே பதட்டமாக என்னவென்று ஒருவரிடம் விசாரித்தான்.
'யாரோ ஒருத்தன் நம்ம ஆபிஸ் மாடியிலிருந்து குதிச்சு தற்கொலை பண்ணிகிட்டான்...' என்று கூறியவுடன் சந்திரன் வேகமாக அந்த அலுவலக கட்டிடத்தின் கீழ் தளத்தை அடைந்து அந்த அலுவலகத்தை விட்டு வெளியே சாலைக்கு வந்தான். அங்கு கூடியிருந்த கூட்டத்தை விலக்கி அந்த சாலையின் தரையை பார்த்தான். அங்கே ரத்த வெள்ளத்தில் உயிரற்று மிதந்து கொண்டிருந்தது விவேக்கின் உடல். அதை பார்த்தவுடன் சந்திரனுக்கு, விவேக்கின் தாயிடம்
“நீங்க கவலை படாதீங்க மா... நிச்சயமா அவர் நார்மல் ஆவார்... அடுத்த வருஷம் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க மனச திருப்தி படுத்துவார்... இதுக்கு நான் பொறுப்பு... நீங்க கவலை படாம போஃனை வைங்க மா. “என்று கூறியதும்
"ஒரு நாள் உன் மனசை பாதிக்கற சம்பவம் ஒன்னு கண்டிப்பா நடக்கும்... அது அன்பு பாசம் அப்புறம் பிரிவோட வலியை உனக்கு உணர்த்தும்... நிச்சயமா நீ உன் ஐடியாலஜியை மாத்திக்குவ..." என்று ராதா கூறியதும் நினைவிற்கு வந்தது. மறுபடி அந்த மாடியின் உச்சியிலிருந்து எட்டி கீழே பார்க்கும் பயம் நினைவிற்கு வந்து அவனின் சொல் செயல் எண்ணங்களின் கருவை உலுக்கி அவனுள் ஒரு அதிர்வை கொடுத்தது. கீழிருந்து அந்த கட்டிடத்தின் உயரத்தை பார்த்தவாறே மயங்கி கீழே விழுந்தான் சந்திரன்.
மேஜையில் இருந்த ஒலிப்பானிலிருந்து
'ஹலோ... சந்திரன்... ஹலோ... யாராவது ரிசீவரை எடுத்து பேசுறீங்களா?... நான் என் பையன் விவேக்கோட பேசணும்... ஹலோ... யாராவது ரிசீவரை எடுங்க ப்ளீஸ்...' என்று அந்த தாயின் குரல் கவனிப்பாரற்று ஒலித்துக் கொண்டிருந்தது.
09 ஜூன், 2016 (35 ஆண்டுகளுக்கு பின்னர்)
தூக்கம் கலைந்து ஐம்புலன்களும் சுற்றுப் புறத்தில் நடக்கும் இயக்கத்தினை மெதுவாக கிரகிக்கத் தொடங்கியது. சுப்ரஜா ராம பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே என்று சுப்ரபாத பாடல் லேசாக காதில் ஒலிக்க, தன் சுயநினைவு மெதுவாக விழிப்படைந்ததை உணர்ந்தாள் நந்தினி.
-தொடரும்