பேசியது வேறு யாருமில்லை அனுஷாவின் தோழி சோனா தான். விஜய்குமார் தன்னை விரும்பாததில் மனமுடைந்து போய் இருந்தவளுக்கு, அவனும் அனுஷாவும் காதல் உலா வந்தது கண்டு பொசுபொசுவென்று இருந்தது.
அவர்களின் அன்யோன்யத்தை காண பொறுக்காமல் விஜய்குமார் இந்தியா சென்றவுடன், அவன் பிறந்த நாளன்று பிலிம் ரோல்களாக மாற்றச்சொல்லி, அனுஷா தனக்கும், சிம்ரனுக்கும் அனுப்பிய புகைப்படங்களையெல்லாம் அக்னிமித்ரனின், அலைபேசி எண்ணைத் தெரிந்துகொண்டு, வன்மத்துடன் அனுப்பி பற்றவைத்தாள்.
அக்னியால் அவள் கூறுவதை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில், அவனின் திருமணத்தின் போது அவர்களுடன் தானே தன்னையும் வீடியோகாலில் அளவளாவச் சொன்னாள் அனுஷா.
அத்தகைய தோழி எப்படி அவளுக்கு கேடு நினைப்பாள் என்று அவன் சோனாவை சந்தேகிக்கவில்லை.
அவன் தனக்கு வந்த புகைப்படங்களை உடனே அசோகமித்ரனுக்கு அனுப்பினான்.
அசோகாவோ அதைப் பார்த்துவிட்டு, "இது ஏதாவது ஏஐ வேலையா இருக்கும். எந்த முடிவையும் நாம அனுஷாகிட்ட பேசிட்டு எடுக்கறதே நல்லது" என்றவன் சொல்ல, அக்னியும் அனுஷாவை கான்ஃபரன்ஸ் காலில் இணைத்தான்.
அந்தப் புகைப்படம் குறித்து விசாரித்தபோதோ, "சாரிண்ணா. இவ்வளவு நாள் உங்கக்கிட்ட இதை சொல்லாம மறைச்சதுக்கு. அவர் தான் நேரம் பார்த்து உங்கக்கிட்ட சொல்றேன் சொன்னாரு. அவரை நான் ட்ரூவா லவ் பண்றேண்ணா. அவர் இல்லாம என்னால முடியாதுணா. சாரி. அவருக்கும் என்னை மாதிரி தாண்ணா. நீங்க அவர்கிட்ட பேசிப் பார்த்தப்பவே தெரிஞ்சிருக்குமே? அவர் ரொம்ப நல்லவர்ணா. ப்ளீஸ்ணா, எங்க கல்யாணத்தை நீங்க தான் வீட்டுல பேசி நடத்தி வைக்கணும்" என்று கெஞ்சினாள்.
அந்த அப்பாவிப்பெண் தவறுதலாக விஜய்குமார் தான் அவர்களிடம் தங்கள் காதலை கடைபரப்பியுள்ளான் என்று நம்பினாள்.
அவளின் கெஞ்சல் மொழியில் பணிந்த இரட்டையர், வேறு வழியின்றி விஜய்குமாரை சந்திக்கச் சென்றனர்.
அப்போது அவன் படப்பிடிப்பிலிருந்தான்.
அவனின் உதவியாளர் வந்து இவர்கள் வந்திருப்பதாகச் சொல்ல, ஒரு மணி நேரம் கழித்தே அவர்களை பார்க்க வந்தான். அதிலொரு ஆத்ம திருப்தி அவனுக்கு. மூவரும் கேரவனுக்குள் சென்றனர்.
"ஹாய் அக்னி, வாட் எ ப்ளசண்ட் சர்ப்ரைஸ்? அட! அசோகா நீயும் கூட வந்திருக்கியா? ம்! சொல்லுங்க? இந்தப் பிச்சைக்காரனை நீங்க எதுக்கு பார்க்க வந்துருக்கீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" என குத்தலாகக் கேட்கவும்,
தன் அலைபேசியில் இருந்த புகைப்படங்களைக் காண்பித்து, இதற்கு என்ன பதில் சொல்கிறாய்? எனும் விதமாய் அவனையே பார்த்திருந்தான் அக்னிமித்ரன்.
விஜய்குமார் வாயைத் திறப்பது போல் தெரியவில்லை.
"நாங்க அனுஷா பத்தி பேச வந்திருக்கோம்?" என்று அசோகமித்ரன் கோபமாகச் சொல்ல,
"சரி, பேசுங்க. அவளுக்கென்ன?" என சோம்பல் முறித்து சோஃபாவில் மேலும் சாய்ந்தான் விஜய்குமார்.
"அனுஷாகிட்ட நீ கல்யாணம் பண்ணிக்கறேனு வாக்குக் கொடுத்திருக்க?"
"ஆமா அதுக்கென்ன? இது நான் பழகற எல்லாப் பொண்ணுங்கக்கிட்டயும் சொல்றது தான். வாட் ஸ்பெஷல் எபவுட் ஹர்? இதை நம்பி எல்லாப் பொண்ணுங்களோட அண்ணன்களும் இப்படி வந்தா, என் கதி அதோ கதி தான்.” என்று நக்கலாக சிரிக்கவும்,
"அப்படியா? சரி நாங்க கிளம்பறோம்" என அசோகமித்ரன் எழுந்து நின்றான்.
அவனை தடுத்த அக்னிமித்ரன், "நீ பொய் சொல்ற விஜி. நீ எப்படிப்பட்டவன்னு விசாரிச்சி தான் நாங்க உன்கிட்ட சம்பந்தம் பேசவே வந்தோம். ஸோ, ப்ளீஸ் விளையாடாத." என்று பம்மியவனை, அருவருப்பாகப் பார்த்தான் அசோகா.
"ஓகே, நான் ஸ்ட்ரைட்டாவே சொல்லிடுறேன். நான் கஷ்டப்படும் போது எனக்கு வாய்ப்பு கொடுத்தது வாழ்க்கைப்பிச்சை போட்டது எல்லாமே ப்ரித்விஹாசன் சார் தான். இப்ப அவர் உன்னால வெளியக் கூட வர முடியாம மன உளைச்சல்ல இருக்காரு. நீ அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு. நான் உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கறேன். அதே மாதிரி இந்த அசோகமித்ரனும், அன்னைக்கு என் சட்டைக்காலரை பிடிச்சதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேட்கனும். இல்லனா, உங்க தங்கச்சிக்கு நீங்க வேற மாப்பிள்ளை பார்த்துக்கலாம்.” என்று அலட்சியமாக சொல்ல,
அசோகமித்ரன் அவனுக்கு தக்க பதிலடி கொடுக்க வாயை திறக்கும் முன், தான் முந்திய அக்னிமித்ரன், "ஓகே, இப்ப என் ப்ரதர் ப்ரித்விஹாசன் கால்ல விழனுமா? வேண்டாமான்னு அனுஷாவே முடிவெடுப்பா" என்றான் தோரணையாக.
"அனுஷாவா எங்க?" என பதற்றத்துடன் அவன் கேரவனின் வாசலைப் பார்க்க,
"அங்க இல்ல விஜி. இங்க" என்று தனது அலைபேசியை தூக்கிக் காட்டினான் அக்னி.
அதில் வீடியோ காலில் அனுஷா அழுது கொண்டிருந்தாள்.
அவன் அதிர்ந்து பார்த்திருக்கும்போது, "ச்சீ! நீயெல்லாம் ஒரு மனுஷனா? உன்னைப்போய் நம்பினேன் பாரு. இவ்வளவு நாள் லூசு மாதிரி உன்னையே நினைச்சேனேடா. நீ அங்க போனதுக்கப்பறம் போன் பண்ணாம இருந்தியே அப்பவே நான் சுதாரிச்சிருக்கணும். என் மேல உனக்கு காதலே இல்லனு இப்ப எனக்கு புரிஞ்சிருச்சிடா. நீ என்னடா சொல்றது. நான் சொல்றேன்டா. நீ எனக்கு வேண்டாம்டா.” என்று ஆத்திரமாகக் கத்தினாள்.
அனுஷா அவனை விரும்பியிருக்கிறாள் என்பதால், அக்னிமித்ரன் அவளை பொறுமை காக்கச் சொன்னான்.
"அனும்மா அவசரத்துல முடிவெடுக்காத" என்று அவளைத் தடுத்தான்.
"இல்லண்ணா, நீங்க யாரும் அவன்கிட்ட மன்னிப்பு கேட்க கூடாது. அவன் எனக்கு வேண்டாம்ணா. நான் உறுதியா தான் சொல்றேன். நீங்க மட்டும் அவன்கிட்ட மன்னிப்பு கேட்டீங்க? அப்பறம் என் பொணத்தை தான் பார்ப்பீங்க" என்று கத்திவிட்டு அலைபேசியை அணைத்தாள்.
அசோகமித்ரனோ அரண்டுபோய் நின்ற விஜய்குமாரை தன் கூலர்ஸை மாட்டி வெறுப்பேற்றினான்.
"சரி போயிட்டு வர்றோம் வீ.கே. நெக்ஸ்ட் எங்க தங்கச்சி கல்யாணப் பத்திரிக்கையோட உன்னை வந்து சந்திக்கறோம். அம்பானி வீட்டு கல்யாணத்துல சினி செலப்ரிட்டீஸ் டான்ஸ் ஆடி கும்மாளம் போட்ட மாதிரி, நீயும் அனுஷா கல்யாணத்துல கும்மாளம் போடனும். வரவா?" என மிதப்பாக சென்ற அக்னியுடனே வெளியேறினான்.
ஆனால், கார்க்கதவை திறந்து உள்ளே ஏறப்போன அக்னியைத் தடுத்து, "டேய்! அனுஷாவுக்கு எப்படா போன் போட்ட?" என்றான் உற்சாகமாக.
"அவன் நம்மளை வெயிட் பண்ண வச்சானே? அப்பவே அவன் ஏதோ பிளான் போட்டிருக்கான்னு புரிஞ்சிக்கிட்டேன். அப்ப தான் போட்டேன்."
"ச்சே! க்ரிமினல் மூளைடா உனக்கு பிளாக்கி. சாரி, அக்னி. ஆனா, அனுஷாவை நினைச்சா தான் ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றான் உண்மையான வருத்தத்தில்.
"ம், கொஞ்ச நாளைக்கு அப்படி இருப்பா. அப்புறம் அவளே நார்மல் ஆகிடுவா. பிரேக்கப் எல்லாம் அவ இருக்கற நாட்டுல சகஜம் தானே? ரெக்கவர் ஆகிருவா. சின்னப் பொண்ணுனால அவனை நம்பியிருப்பா. நீ மனசைப் போட்டு குழப்பிக்காம, உன் டியூட்டியைப் பாரு" என்று சொல்லவும், அரைமனதாக ஒப்புக்கொண்டான் அசோகமித்ரன்.
அவன் காதலின் வலியை அறிந்தவன் அல்லவா?
அக்னிமித்ரன் ஞாபகம் வந்தவனாய், "களக்காட்டு கோயில் கொடைக்கு நான் அடுத்த வாரம் ரதியோட போகலாம்னு இருக்கேன். நீயும் வர்றியா?" என்று கேட்க,
"ஹையர் அஃபிஷியல்ஸ் கிட்ட அனுமதி வாங்கணும். கேட்டுட்டு சொல்றேன்" என்றான் அசோகமித்ரன்.
“ஓ! அப்பறம் அனுஷா விஷயம் வீட்டுல யாருக்கும் தெரிய வேணாம்" என்றான் அழுத்தமாக.
"ம், நானும் அதான் சொல்லனும் நெனச்சேன். பை பார்க்கலாம்" என்றதோடு கிளம்பி விட்டான் அசோகமித்ரன்.
மரகதமும், திருநீலகண்டனும் நீதிதாசனின் மொத்த குடும்பத்தையும் கோவில் திருவிழாவிற்கு அழைத்திருந்தனர்.
ஆனால், அசோகாவுக்கு டிஐஜியிடமிருந்து பெங்களூரில் நடைபெறும் மாநில அளவிலான காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ளுமாறு உத்தரவு வந்ததால், அவன் அங்கு சென்று விட்டான்.
நீதிதாசனும் வேறொரு தொழிலதிபர் மகளின் திருமணத்தில் கலந்துக்கொள்ள வேண்டி வந்ததால், கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது.
அக்னிமித்ரன் மட்டும் தன் காரில் ரதியை அழைத்துக்கொண்டு களக்காடு சென்றான். ஏற்கனவே அவன் மேல் பித்தாகி கிடப்பவளுக்கு அவனுடனான வெளியூர் பயணம் என்றால் கசக்கவா செய்யும்?
தண்ணீர் தாகத்திற்கு குடிக்க தேனே கிடைத்தது போல் துள்ளி குதித்தாள்.
காரில் பயணித்த ஒவ்வொரு நிமிடமும் அவளை ஒரு இளவரசியை போல் உணரச் செய்தான் அக்னிமித்ரன்.
இரவு பத்து மணிக்கு களக்காட்டிற்குள் நுழைந்தனர் இருவரும்.
தொடரும்...