Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலில் விதிகள் ஏதடி - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
காதலில் விதிகள் ஏதடி

அத்தியாயம் 1


பொதுவாக புயலுக்கு முன்னும் பின்னும் அமைதி என்று நம் முன்னோர்கள் கூறுவது உண்டு. ஒருவேளை அந்த இரண்டும் ஒரே தருனத்தில் நிகழ்ந்தால் எத்தனை அமைதியாக இருக்குமோ, அத்தனை அமைதி நிலவியது அக்கிராமத்தில். கிராம மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருந்த அம்மக்களின் பார்வை, எப்போது வேண்டுமானாலும் வெடிக்க தயாராக இருக்கும் எரிமலையைப் போல கோபத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்த ஆதிரையின் மீதே இருந்தது. ஆனால் ஆதிரையின் பார்வையோ தன் கழுத்தில் சுமார் ஒரு ஒரு மணி நேரத்துக்கு முன் தாலி கட்டியவனின் மீதே இருந்தது. கதைகளில் வருவதை போல அவளுக்கென சக்திகள் இருந்திருந்தால் அவனை தன் கண்களாலேயே எரித்திருப்பாள் என்றால் மிகையாகாது.

ஆதிரையால் நடந்த நிகழ்வுகளை நம்பவே முடியவில்லை. சிறு வயதில் இருந்தே அப்பா, அம்மா, தம்பி அவள் இதுவே அவள் குடும்பம் என்று வாழ்ந்து வந்தாள். உறவினர்கள் என்றால் அது தந்தை வீட்டு உறவினர்களே. தாய் வீட்டு உறவினர்கள் என யாரையும் அவள் இதுவரை பார்த்ததே இல்லை. வளர வளர இது கருத்தில் படவும் ஆதிரையே ஒரு முறை தன் தாயிடம் கேட்டது உண்டு

“ஏன் அம்மா! உங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லையா? ஏன் யாரையுமே நான் பார்த்தது இல்லை?” என்றாள்.

ஆனால் அதற்கும் தாயிடம் இருந்து சரியான பதில் கிடைக்காததால், ‘முதலில் காதல் திருமணமாக இருக்குமோ! அதை தாய் வீட்டு பெரியவர்கள் யாரும் ஏற்று கொள்ளவில்லையோ’ என்று எண்ணினாள். கூடவே “ கல்யாணத்தின் முன்பே இவரை பற்றி தெரிந்திருந்தால் இவரை திருமணமே செய்திருக்க மாட்டேன்” என சண்டைகளுக்கு நடுவில் கூறும் தாயின் புலம்பல்கள் நினைவு வர இவர்கள் திருமணம் காதல் திருமணம் இல்லை என்று நினைத்தவள், தன் தாய்கென உறவினர்கள் யாரும் இல்லை போல எனதான் எண்ணியிருந்தாள். ஆனால் உண்மைகள் என்றுமே இரகசியமாக இருந்திடுவது இல்லையே!.

ஒரு வாரத்திற்கு முன்பு முத்து என்பவர் ஆதிரையின் தாய் மாமா என்று கூறிக்கொண்டு அவள் வீட்டிற்கு வரும் வரை அவளும் தன் தாய்கென உறவினர்கள் யாரும் இல்லை என்றே நம்பி கொண்டிருந்தாள். திடிரென ஒருவர் அவள் வீட்டிற்கு வந்ததும் இல்லாமல் அவர்தான் அவளது தாய் மாமா என்றும் அவளது தாயின் பூர்விகம் தஞ்சைக்கு அருகில் ஒரு கிராமம் என்றும் கூறினார். அவரது மகள் திருமணத்திற்கு அழைக்க வந்திருப்பதாகவும் கூறினார். முதலில் கிராமத்திற்கு வர மறுத்த பெற்றோர்களும் நீண்ட நேர பேச்சி வார்த்தகளுக்கு பிறகு

‘திருமண நாள் அன்று வருகிறோம்’ என்றனர்.

முத்துவோ அதையெல்லாம் காதில் வாங்காமல் கையோடு கூட்டி வருவதாக ஊரில் கூறி வந்தேன். எத்தனை நாட்கள் ஆனாலும் இருந்து கூட்டி செல்கிறேன் என பிடிவாதமாக இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டிலேயே தங்கி ஆதிரையின் குடும்பத்தை இந்த கிராமத்திற்கு அழைத்து வந்தார்.

நடப்பவை எதுவுமே புரியாமல் முழித்து கொண்டிருந்த பிள்ளைகளிடம் எதுவாக இருந்தாலும் இந்த திருமணம் முடிந்து மீண்டும் நம் வீட்டிற்கு வந்த பிறகு பேசி கொள்ளலாம் என்று பெற்றோர்கள் கூறியதால் பிள்ளைகளும் அதற்கு மேல் எதுவும் பேசி கொள்ளவில்லை. இவ்வாறே சென்னையில் இருந்து ஆதிரையின் குடும்பம் தஞ்சைக்கு அருகில் உள்ள அவளது தாயின் பூர்விகமான இக்கிராமத்திற்கு வந்தனர்.

ஆனால் தோண்ட தோண்ட புதையல் வரும் என்பார்களே அதைப்போல் கிராமத்திற்கு வந்த பிறகும் ஆதிரைக்கும் அவள் தம்பிக்கும் பல ஆச்சிரியங்கள் இருந்தன. உறவினர்களே இல்லை என்று நினைத்திருந்த தாய்க்கு முத்து என்பவரோடு சேர்த்து இரண்டு அண்ணன்களும் ஒரு அக்காவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றாகவே அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய பிள்ளைகள் என ஆதிரையின் வயதுடைய ஆறு ஏழு பிள்ளைகள் இருந்தனர். முதலில் யாருடனும் அதிகம் சேராமல் இருந்த ஆதிரையும் அவள் தம்பியும் இரண்டு நாட்களில் அங்குள்ள பிள்ளைகளுடன் நன்றாக ஒட்டி கொண்டனர்.

அங்குள்ள அனைவரும் இவர்கள் இருவரிடமும் நன்றாக பழகினாலும் கூட அவர்களது தாயுடன் அங்குள்ள அனைவருக்கும் என்ன பிரச்சனை என்றோ அல்லது இத்தனை ஆண்டுகளாக ஏன் யாரும் அவர்களை பார்க்க வரவில்லை என்பதை பற்றியெல்லாம் அங்கு யாரும் பேசவே இல்லை.

ஒரு வாரம் முழுவதுமாக திருமண வேலைகள் மற்றும் கடைசி நேர சாப்பிங் என அனைவரும் மிகவும் மும்மரமாக இருந்தனர். ஒருவழியாக அவர்கள் வந்த கல்யாண நாளும் வந்தது. திருமணத்திற்கு வந்த அனைவரும் ஆதிரையும், அவள் தம்பியையும் இவர்கள் தான் மங்களத்தின் மக்களா என நலம் விசாரித்து சென்றனர்.

அந்த குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம் என்பதால் உறவினர்கள் நண்பர்கள் என கூட்டம் அலைமோதியது. பெரியவர்கள் அனைவரும் விருந்தினர்களை வரவேற்பதிலும் திருமண வேலைகளிலும் மும்மரமாக இருந்ததால், இளைஞர்களே அனைவரையும் உணவிற்கு அழைத்து செல்வது மற்றும் வந்த அனைவரும் உண்டார்களா என்று கவணிக்கும் பொறுப்புகளையும் எடுத்து கொண்டனர். ஒருவழியாக கூட்டம் குறைய தொடங்கியது.

சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என இளைஞர்கள் பட்டாலம் அமரும் வேலையில் திடிரென மண்டபத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. என்ன நடக்கின்றது என்று புரியாமல் அனைவரும் பார்க்க ஒரு பத்து பதினைந்து பேர் கைகளில் தாம்பழ தட்டுகளுடன் அங்கு வந்து கொண்டிருந்தனர். அதில் பட்டு புடவைகள் அணிந்து ஆறு ஏழு பெண்களும் அவர்களுக்கு பின்னால் நான்கைந்து ஆண்கள் மிகவும் கம்பீரமாகவும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை பார்த்ததும் மண்டபத்தில் இருந்த அனைவரும் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டனர். “பெரிய வீட்டிலிருந்து வந்திருக்கின்றார்களே! என்ன நடக்க போகிறதோ?” எனறு சிலர் பேசிக்கொள்வது ஆதிரையின் காதுகளில் விழுந்தது.

“பெரிய வீடா? அவர்கள் வந்தால் என்ன பிரச்சனை?” என எண்ணிக் கொண்டே அவள் குடும்பத்தை பார்த்த ஆதிரைக்கு அதிலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

அவள் குடும்பத்தில் யாருமே வந்தவர்களை கண்டுகொண்டதை போல் தெரியவில்லை. மேடையிலிருந்து அனைவரும் விலகிக் கொண்டிருந்தனர். வந்த விருந்தினர்களும் இவர்களது வரவேற்பை எதிர்பார்பது போல் தெரியவில்லை. அவர்கள் நேராக மேடையில் ஏறி விழாவின் நாயகியான மணப்பெண்ணுக்கு அவர்கள் கொண்டு வந்த வரிசைகளையும், தங்கத்தில் நகைகளும் பரிசு அளித்தனர். முதலில் தயங்கிய மணப்பெண் அவளது பெற்றோர்களை ஒருமுறை பார்த்துவிட்டு பரிசுகளை வாங்கிக் கொண்டாள்.

வந்தது பரிசு கொடுக்கதான் என்பதை போல புகைபடத்திற்காகவும் நிற்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். அவர்கள் செல்லும் போது சில விருந்தினர்கள் அவர்களுக்கு வணக்கம் வைப்பதையும் பார்க்க முடிந்தது. வணக்கம் வைப்பவர்களுக்கு நடக்கும் பொழுதே ஒரு சிறிய தலை அசைப்புடன் எங்கும் நின்று சிறு தாமதம் கூட இல்லாமல் சென்று விட்டனர்.

‘யார் இவர்கள்?’ என்று கேட்கலாம் என உடன் இருக்கும் நண்பர்களை பார்த்தால் அவர்களோ அங்கு நடந்த எதையுமே பார்காதவர்கள் போல அமர்ந்திருந்தனர்.

‘என்ன இது’ என்று ஆதிரை சிந்திக்கும் பொழுதே அவள் காதருகில் ஒரு குரல் கேட்டது. அது வேறு யார் குரலும் இல்லை ஆதிரையின் தம்பி விக்ரம் தான்.

“என்ன அக்கா, இந்த ஊரில் நம் வீட்டைப் போலவே பல மர்மங்கள் இருக்கும் போல?” என விணவினான்.

“இங்கிருந்து சென்ற உடனே, அம்மாவை பிடித்து முழு கதையையும் கேட்டு விட வேண்டும் இல்லையெனில் எனது குட்டி தலை வெடித்துவிடும் அக்கா” என்று விக்ரம் அவனது தலையை ஆட்டி ஆட்டி கூறவும் ஆதிரைக்கு சிரிப்பு வந்து விட்டது. ஆனால் அதுவே அவர்கள் வாழ்வில் பல மாற்றங்கள் வர போகிறது என்றோ அந்த தருனத்தில் அவர்கள் அறியவில்லை.

திருமணம் முடிந்த அன்றே ஊருக்கு கிளம்புகிறோம் என ஆதிரையின் பெற்றோர்கள் கூறியதை அங்கு யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு நாட்களாவது தங்கிதான் ஆக வேண்டும் என்று கூறவும் வேறு வழியில்லாமல் தங்கினர்.

மறுநாள் காலை பொழுது மிகவும் அழகாக விடிந்ததை போல் இருந்தது ஆதிரைக்கு. கண்கள் திறக்கும் முன்பே அவளது காதுகளில் பல பறவைகளின் சத்தங்கள் கேட்டன. மெதுவாக கண்களை திறந்து பார்த்தால், கல்யாண வேலையில் இரவு பகலாக வேலை பார்த்ததின் அசதியில் அனைவரும் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

யாரையும் தொந்தரவு செய்ய மனம் இல்லாமல் மெதுவாக எழுந்து முகம் கழுவி விட்டு வீட்டின் வாசலிற்கு வந்தாள். வாழ்நாளில் அதிகமாக நகரத்திலேயே வாழ்ந்த ஆதிரைக்கு அந்த கிராமத்தின் தோற்றம் மிகவும் இரம்மியமாக தோன்றியது.

நகரத்தில் காலையில் எழுந்தாலே வாகனத்தின் சத்தங்கள் தான் முதலில் காதில் விழும், காலையில் எழுந்தவுடனே வாகன நெரிசலில் மாட்டினால் நேரம் ஆகிவிடும் என்ற பயத்தில் அன்றைய நாள்காக ஓட தொடங்கிவிட வேண்டும். அதற்கும் இதற்கும் எவ்வளவு வேற்றுமைகள் உள்ளன என ஆதிரை மிகவும் வியந்து போனால்.

சிறிது நேரம் சாலையில் நடக்கலாமா என்று நினைத்தவள் அவளது பெரிய அத்தை பத்மாவின் குரலில் திரும்பி பார்த்தால்.

“என்னடா ஊர்மீ? என்ன சிந்தனையில் உள்ளாய்?” என்று கேட்டார்.

“ஊர்மியா?” என்று ஆதிரை கேட்கவும்.

“ஊர்மியா? அப்படியா சொன்னேன்! இல்லையேடா. ஒருவேளை தூக்க கலக்கத்தில் ஏதாவது சொல்லிருப்பேன் அதைவிடு இங்கு என்ன செய்கிறாய்?” என்றார்.

“பரவாயில்லை அத்தை, சும்மா நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் எவ்வளவு அழகாக இருக்கின்றது. எங்கும் பசுமையாகவும் அமைதியாகவும் உள்ளது, அதனுடன் இந்த பறவைகளின் சத்தம் கேட்கும் பொழுது மிக நன்றாக உள்ளது அத்தை” என்றாள். அவள் கண்ணில் இருந்த பலபலப்பும் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் பத்மாவை ஏதோ செய்யவும்

“அதற்கென்னடா கண்ணு அனைவரும் தூங்கி எழுந்தவுடன் உனக்கு ஊரை சுற்றி காட்ட சொல்கிறேன், சரியா? இப்போது காபி குடிகிறாயா?” என்றார்.

வந்தநாள் முதல் ஊரைச் சுற்றி பார்க்க வேண்டும் என தாயிடம் கேட்டு கேட்டு அழுத்து போன ஆதிரைக்கு இன்று ஊரைச் சுற்றி பார்க்கலாம் என்றவுடன் மகிழ்ச்சியில் அவளுக்கு தலைகால் புரியவில்லை.

“சரி அத்தை” என்று கூறிவிட்டு துள்ளிகுதித்து வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.

காலை உணவு முடிந்தவுடன் பத்மா பிள்ளைகளிடம் ஆதிரைக்கும் விக்ரமிற்கும் ஊரைச் சுற்றி காட்ட சொல்லி கூறவும் பிள்ளைகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியானாலும் ஆதிரையின் பெற்றோர்கள் முதலில் தயங்கினர். ஆனால் பிள்ளைகள் அனைவரும் செல்வதால் எதுவும் சொல்லாமல் அனுமதித்தனர்.

பத்மாவின் இளைய மகள் கவிதா தான் அங்கு வந்ததில் இருந்து ஆதிரைக்கு மிகவும் நெருக்கமாக இருந்தாள். அனைவரும் சேர்ந்து நடந்தே ஊரைச் சுற்றி பார்கலாம் என கிளம்பி விட்டார்கள். செல்லும் வழியில் கவிதா ஆதிரையிடம் “நாம் முதலில் எனக்கு மிகவும் பிடித்த இடத்தை தான் பார்க்க போகிறோம்” என்றாள்.

“அப்படி என்ன இடம்?” என்ற ஆதிரையிடம்

“நாமே வந்து விட்டோம்” என கூறி அவர்களுக்கு முன் இருந்த இடத்தை கை காட்டினாள்.

அவள் கை காட்டிய இடத்தை பார்த்த ஆதிரை ஒரு நிமிடம் அப்படியே உரைந்து விட்டாள். நகரத்திலேயே வாழ்ந்த ஆதிரைக்கு அந்த காட்சி மிகவும் இரம்மியமாக இருந்தது.

அவர்களுக்கு எதிரில் ஒரு பெரிய ஆறு ஒன்று இருந்தது. அதற்கும் ஒரு கரையில் இவர்கள் நின்றுக் கொண்டிருந்தனர். மறுகரையில் அவர்கள் கண்கள் எட்டும் வரை வயலாக இருந்தது. அதை பார்க்கும் பொழுது பூமிதாய் பச்சை நிற பட்டு உடுத்தி அழகாக சிரிப்பது போல் இருந்தது ஆதிரைக்கு. அவர்கள் நிற்கும் இடத்திற்கு அருகில் கல்லால் ஆன இருக்கைகள் சில இருந்தனர். அதைக்காட்டி அதில் சிறிது நேரம் அமருவோம் என்று அனைவரும் சென்று அமர்ந்தனர். பெண்கள் அங்கு அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். ஆண்கள் அங்கிருந்த ஆறில் இறங்கி விளையாடி கொண்டிருந்தனர்.

கவிதா “இந்த இடம் தான் ஆதிரை எனக்கு மிகவும் பிடித்த இடம். பரிச்சையின் போது கூட நான் இங்கு தான் அமர்ந்து படிப்பேன்” என்றவளை இடைமறித்து.

“ஆமாம். ஆமாம். வீட்டில் அத்தையிடம் அடி வாங்கினாள் கூட அழுதுக் கொண்டே இங்கு தான் வருவாள்” என்று கூறி அவளை போல அழுது காட்டினான் ஆதிரையின் பெரியம்மா மகன் ராம்.

ராம் கவிதாவை போல் அழுது காட்டவும் அங்கொரு சிரிப்பலை பரவியது. உடனே கோபத்துடன் கவிதாவும் ராமை அடிக்க ஓடவும், அவளது கைகளில் சிக்காமல் ராம் ஓட தொடங்கி விட்டான். இவை அனைத்தையும் பார்த்த ஆதிரையும் விக்ரமும் அடக்க முடியாமல் சிரிக்க தொடங்கி விட்டனர்.

திடிரென அனைவரும் சிரிப்பை நிறுத்தி விட்டு ஒருவகையான பதட்டத்துடன் காணப்பட்டனர். ஆற்றுக்குள் விளையாடிக் கொண்டிருந்தவர்களும் வேகமாக கரையேறி பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்திர்க்கு வந்து அவர்களை மறைத்தவாரு நின்று கொண்டனர். சிறிது வினாடிகளில் ஒரு ஜீப் ஒன்று அவர்களை கடந்து சென்றது. அது சென்றதும் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர். என்ன நடக்கிறது என்று புரியாமல் ஆதிரையும் விக்ரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு “என்ன நடந்தது? ஏன் அனைவரும் பதட்டமாக இருக்கின்றீர்கள்” என கேட்டார்கள்.

ஒன்றுமில்லை என்று பதில் வரவும் விக்ரம் “அந்த ஜீப் யாருடையது” என்றான்.

“எந்த ஜீப்பை பற்றி கேட்கிறாய்” என்று ராம் பதட்டத்துடன் கேட்கவும்

“இப்போது நம்மை கடந்து போனதே. அதை பார்த்து தானே அனைவரும் பதட்டம் அடைந்தீர்கள்?” என்றான்.

“அது தேவ் அண்ணனின் ஜீப்” என்று கவிதா கூறவும்

“யார் தேவ்” என்று ஆதிரை கேட்டாள்.

“அது” என்று ஆரமித்த கவிதாவை இடைமறித்த கவிதாவின் அண்ணன் மணி.

“அன்று அக்காவின் திருமணத்தில் கடைசியாக ஒரு கும்பல் வந்ததே. அவர்கள் வீட்டு பையன், அதை தவிர பெருசாக ஒன்றுமில்லை” என்றான்.

“ஓ!” என்று ஆதிரை முடித்தாலும் விக்ரம் விடுவதாக இல்லை. அவன் மேலும் கேள்வி கேட்டான். அவனுக்கு அப்படி என்ன தான் இந்த குடும்பத்தில் மர்மம் என்று தெரிந்த்து கொள்ள வேண்டும் என ஆர்வம்.

“அவர்கள் யார்? ஏன் அவர்களை யாரும் வரவேற்கவில்லை அப்படி என்ன பிரச்சனை” என்றான்.

இவன் பதில் தெரியாமல் விடபோவதில்லை என்று அங்குள்ள அனைவருக்கும் புரிந்ததால் மணியே தொடர்ந்தான்.

“அவர்கள் தாத்தாவும் நம் தாத்தாவும் சகோதரர்கள். அவர்கள் நம்மை பல விஷயங்களில் ஏமாற்றிவிட்டார்கள், அங்கு யாரும் நல்லவர்களும் இல்லை. பணம் தான் முக்கியம். அதனால் இரு வீட்டுக்கும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. இப்போதைக்கு இந்த அளவு தெரிந்தால் போதும்” என்று கூறி பேச்சை முடித்து விட்டான்.

பேச்சு வேறு பக்கம் போவதை கவணித்த ராம் “சரி பேசியது போதும். ஆதிரைக்கும் விக்ரமிற்கும் ஊரைச் சுற்றி காட்ட தான் வந்தோம், மதியம் சாப்பிடவேறு வீட்டிற்கு போகனும். ஒரே இடத்தில் அமர்ந்து கதையடிக்காமல் கிளம்புங்கள். அருகில் உள்ள கோவிலுக்கு செல்லலாம்” என்றான். விக்ரம் ஏதோ சொல்ல வந்தவனை ஆதிரையின் பார்வை அடக்கவும், அனைவரும் கோவிலுக்கு சென்றனர்.

கோவிலா அல்லது திருமண மண்டபமா என்னும் அளவு கோவில் மிகவும் பெரியதாக இருந்தது. கிராமத்தில் அத்தனை பெரிய கோவிலை அக்காவும் தம்பியும் எதிர் பார்க்கவில்லை. அவர்கள் எண்ண ஓட்டத்தை படித்தது போல் ராம் “சிலர் இங்கு வேண்டிக் கொண்டு இங்கே திருமணமும் நடத்துவார்கள்” என்றான்.

கோவிலில் வழிபட்டு விட்டு அனைவரும் வீட்டுக்கு செல்லலாம் என நடக்க தொடங்கினர். செல்லும் வழியெல்லாம் கேலியும் சிரிப்புமாக சென்றனர். திடிரென அவர்கள் வழியில் காலையில் பார்த்த ஜீப் வந்து நின்றது.

அதில் இருந்து ஒரு முப்பது வயதை ஒட்டிய இளைஞன் ஒருவன் இறங்கினான். வெள்ளை நிற வேஷ்டியின் ஓரத்தில் சிவப்பு நிற கோடிட்டும் அதற்கு ஏற்றவாறு சிவப்பு நிற சட்டையும் அனிந்திருந்தான். வெள்ளையாகவும் இல்லாமல் கருப்பாகவும் இல்லாமல் மாநிறமாக இருப்பதே அவனுக்கு மேலும் அழகை சேர்த்தது. தனது உடம்பில் அதிக அக்கரை செலுத்த வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலே அது சாத்தியம் என்பதை போல தேகம் வைத்திருந்தான். யாரையும் மயக்கி விடும் அவனது கண்கள் மிகவும் திடமாக ஆதிரையின் மீது இருந்தது. அவனை பார்த்ததும் முதலில் புரியாமல் முழித்தார்கள். அதிலிருந்து தன்னை உடனே சுதாரித்துக் கொண்டு பேசியது மணிதான்.

“என்ன? பிரச்சனை எதுவும் செய்ய வேண்டும் என்றே வழியை மறைக்கின்றாயா?” என்றான்.

அவன் கூறியதை காதில் கூட வாங்காதவன் யாரும் எதிர் பார்காத நேரத்தில் ஆதிரையின் கழுத்தில் தாலி கட்டிவிட்டான்.

ஆதிரையின் உடன் இருந்தவர்கள், அந்த சாலை வழியில் சென்றவர்கள் என அனைவரும் உரைந்து நின்று விட்டார்கள். ஆனால் அங்கு உரையாமல் இருந்தது விக்ரம் மட்டும் தான். அவனது கைகள் அவன் அக்கா கழுத்தில் தாலி கட்டியவனை பதம் பார்த்து கொண்டிருந்தது சிறிது வினாடிகளில் அவனுடன் ராமும் மணியும் கூட சேர்ந்து கொண்டார்கள். அதற்குள் ஊர் மக்கள் அனைவரும் அங்கு கூடிவிட்டனர். ஒரு வழியாக சண்டையை விலக்கிவிட்டு இரு வீட்டு பெரியவர்களுக்கும் சொல்லி அனுப்பவும், அவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.

விக்ரம் அங்கு ருத்ரதான்டவம் ஆடிக்கொண்டிருந்தான். அனைவரது பார்வையும் ஆதிரையின் மீதே இருந்தது. ஆனால் தாலி கட்டிய நொடியில் இருந்து இந்த நொடி வரை அவளிடம் எந்த அசைவும் இல்லை. அவளது பார்வையும் தன் மீது தாலி கட்டியவனின் மீதிருந்து மாறவில்லை. அவனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.​

தொடரும்...

வாசகர்களின் கருத்துகளே எழுத்தாளர்களை அதிகம் ஊக்கப்படுத்தும். எனது கதை அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது உங்கள் கருத்துகளும் விமர்சனங்களும் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் பதிவிடவும். நன்றி.

 
Last edited:

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
அத்தியாயம் 2

நீண்ட நேரமாக சிலைப் போல் நின்றவளை பார்க்க அங்கிருந்த அனைவருக்குமே சிறிது பாவமாக தான் இருந்தது. அதைவிடவும் இவள் அடுத்து என்ன செய்ய போகிறாள் என்ற பயமும் ஏற்பட்டது. கடைசியில் ஆதிரையின் தாய் மங்களம் தான் அவளது இரு தோள்களையும் குழுக்கி, சத்தமாக “ஆதிமா... ஆதிமா... ஆதிரை! என்னை பாரடா? என கூறி அவளை நிகழ்காலத்திற்கு வரவைக்க வேண்டியதாக இருந்தது.

ஒரே வினாடியில் உலகத்தையே சுற்றி வரக்கூடிய மனம் ஆதிரைக்கு அவளது கடந்த சில நாட்களிள் அவள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி சென்றது. யார் என்றே தெரியாத ஒருவன் தன் கழுத்தில் தாலி கட்டியதை உணர்ந்தவள் தன் அருகில் அவள் பெயரைச் சொல்லி அழுது கொண்டிருந்த தாயை பார்த்தாள். அதற்குள் அங்கிருந்த ஒருவர்,

“மங்களம். அழாதே மா. நடக்க கூடாத சம்பவங்கள் நடந்துவிட்டன. இனி என்ன என்பதை பற்றிதான் நாம் சிந்திக்க வேண்டும்” என்றார்.

அந்த பெரியவர் பேசியதை கவனித்த ஆதிரை ‘அடுத்து என்ன’ என்று யோசிக்கும் பொழுதே விக்ரம் “ இனி என்று எதுவும் இல்லை, யார் என்றே தெரியாதவன் தாலி கட்டினான் என அவனுடன் என் அக்கா வாழ வேண்டுமா? நான் இருக்கும் வரை அது நடக்காது” என யாரையும் பேச விடாமல் கத்திக்கொண்டிருந்தான்.

கூட்டத்தில் இருந்த இன்னொரு மனிதர் “தம்பி, தவறு எங்கள் தேவா தம்பியின் பெயரில் இருப்பதால் தான் பொறுமையாக நிற்கின்றோம். அதற்காக அவரை மரியாதை இல்லாமல் பேசினால் நன்றாக இருக்காது” என்றார்.

மரியாதையுடன் பேச சொல்லி கூறவும் விக்ரமின் கோபம் இன்னும் கூடுவதை ஆதிரை கவனிக்க தவறவில்லை.

அவருக்கு பதில் கூற விக்ரம் ஏதோ கேட்கப்போக அதற்குள் ஆதிரை “போதும். நிறுத்துங்கள்” என கத்தியவள் அதற்கு மேல் தாங்காமல் நின்ற இடத்திலேயே அமர்ந்து அழ தொடங்கி விட்டாள். தன் அக்கா அழுவதை பார்த்த விக்ரமின் கண்களிலும் நீர் பெருக்கெடுத்தது.

அங்கிருந்தவர்கள் மாறி மாறி பேசிக்கொள்ள விக்ரம் ஒரு கட்டத்தில் தன் பொறுமையை இழந்து விட்டான். தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்த தமக்கையின் கைகளை பற்றி இப்பொழுதே நாம் ஊருக்கு செல்வோம் வா என அழைத்து செல்ல ஆரமித்தான்.

இத்தனை நேரம் அமைதியாக நின்ற பிரச்சனைக்கு காரணமானவன் முதல்முறையாக அசைந்து விக்ரமின் வழியை மறைத்து நின்றான்.

“என்ன? வாங்கியது போதவில்லையா?” என்று கேட்ட விக்ரமிடம்

“என் மனைவியை எங்கும் அனுப்புவதாக இல்லை” என்றான். கூட்டத்தில் இருந்த சிலர் அவனிடம் “தேவா தம்பி நீங்கள் செய்வதும் தவறு” என்றனர்.

ஆனால் யார் பேச்சையும் காதில் வாங்கும் மனநிலையில் அந்த தேவாவும் இல்லை என அவன் நிற்பதிலேயே தெரிந்தது. அவன் மனைவி என்று கூறியதில் ஆத்திரமடைந்த விக்ரம் அவனது சட்டையை பிடித்து “யாருக்கு யாருடா மனைவி? இன்னொரு முறை கூறிப்பார் உன்னை இங்கேயே வெட்டி விட்டு நான் சிறைக்கு செல்கிறேன்” எனவும் அங்கு மீண்டும் ஒரு கைகலப்பு ஏற்பட்டது.

அத்தனை நேரம் ஆதிரையை போலவே அங்கு இன்னும் இருவரும் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தது ஆதிரையின் தந்தை மற்றும் தேவா என்பவனின் தந்தையும் தான். விக்ரமை தேவாவிடம் இருந்து விளக்கியபின் முதல்முறையாக தேவாவின் தந்தை சதாசிவம் ஆதிரையின் தந்தை முருகனிடம் பேசினார்.

“என் மகன் செய்தது மிகவும் தவறு அதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை, உங்கள் குடும்பத்திற்கு இது எவ்வளவு பெரிய அதிர்ச்சி என்று எனக்கும் புரிகின்றது. நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். என் மகனால் எந்த பிரச்சனையும் வராது. அதற்கு நான் பொறுப்பு” என்றார் முருகனோ “இதில் நான் முடிவெடுக்க எதுவும் இல்லை. எதுவாக இருந்தாலும் ஆதிரை தான் கூற வேண்டும்” என்று கூறவும் விக்ரம் தன் அக்காவிடம் திரும்பி “சொல் அக்கா. சொல்லிவிட்டு வா, நாம் இப்பொழுதே இங்கிருந்து செல்வோம்” என்றான்.

சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்ற ஆதிரை “நான் எங்கும் வரவில்லை, தாலி என கட்டியபின்... அவருடனேயே வாழ்கிறேன்” என்றாள். ஆதிரையின் இந்த முடிவு அங்கிருந்த அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.

விக்ரம் ஒரு பக்கம் “அக்கா! உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா?” என கத்திக் கொண்டிருந்தான்.

ஆனால் தாலி கட்டியவனுடன் வாழ்கிறேன் என்று கூறிய போது ஆதிரையின் கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை. அவள் மிகவும் திடமாக தான் கூறினாள், அதை தேவாவும் கவனிக்க மறக்கவில்லை.

கத்திக் கொண்டிருந்த மகனை மங்களம் அமைதிப்படுத்த முயற்சித்து கொண்டிருக்கும் பொழுது முருகன் ஆதிரையை குழப்பமாக பார்த்து விட்டு தேவாவிடம் திரும்பி

“நீங்கள் செய்த விஷயத்தில் நியாயம் அநியாயம் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால் நீங்கள் செய்தது தவறு என நீங்களே ஒத்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என்றவரை இடைமறித்த தேவா

“நான் செய்தது முற்றிலும் தவறு தான், நான் முழுமையாக ஒற்றுக் கொள்கிறேன். அதற்கான தண்டணையையும் ஏற்க தயாராக உள்ளேன்”என்றான்.

“நான் கூற வந்தது தண்டனையைப் பற்றியல்ல. இது வேறு தம்பி. நான் ஆதிரையின் தந்தை. அவளைப் பற்றி அனைத்தும் அறிவேன். உங்களுடன் வாழ்கிறேன் என்று அவள் சொல்வது நல்லதாக எனக்கு படவில்லை. எனவே அவளை நான் என்னுடன் அழைத்து செல்கிறேன். எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக்கொள்ளலாம்” என்ற முருகனிடம்

“என் மீது நம்பிக்கை இல்லையா?” என்று தேவா கேட்கும் பொழுதே விக்ரம்

“உன்மீது நம்பிக்கை ஒன்றுதான் இப்போது குறைச்சல் அல்லவா” என்றவனை முறைத்து விட்டு முருகன்

“என் மகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்பதே உண்மை. நீங்கள் அவளுக்கு செய்ததற்கு உங்களை அவள் மன்னிப்பது அவ்வளவு எளிதல்ல” என்றார்.

“வாழ்க்கை முழுவதும் கூட என்னை மன்னிக்காமல் இருக்க அவளுக்கு முழு உரிமையும் உள்ளது. மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றவனிடம் அதற்குமேல் முருகனாலும் எதுவும் பேச இயலவில்லை.

ஊர் பெரியவர்கள் பேசியும் கூட ஆதிரையின் தாய்வழி சொந்தங்கள் யாரும் இந்த திருமணத்தை ஏற்று கொள்ளவில்லை. எனவே அவளை அவள் கணவன் வீட்டில் விட யாரும் வருவதாக இல்லை. ஆதிரை பெற்றோருடன் முத்து மட்டுமே வர சம்மதித்தார். அதுவும் வீட்டிற்கு வெளியில் வரை வருவதற்கு மட்டுமே.

ஒருவழியாக பிரச்சனைகளை பேசி முடித்து ஆதிரையை அழைத்துக் கொண்டு தேவாவின் இல்லத்திற்கு சென்றனர். வீட்டிற்கு சென்றதும் ஆரத்தி எடுக்க வேண்டும் என கூறி வாசலில் நிற்க வைத்தனர். வீட்டில் இருந்த பெண்மணிகளை ஆதிரை ஏற்கனவே பார்த்திருந்தாள்.அவர்கள் அன்று திருமணத்தில் வரிசை கொண்டு வந்தவர்கள் என்பது அவளது நினைவில் வந்து சென்றது.

ஒரு பெண் மட்டும் முன் வந்து ஆரத்தி எடுக்க முயற்சித்த பொழுது ஆதிரை அந்த பெண்ணிடம்

“ஒரு நிமிஷம். என்ன செய்கிறீர்கள்? மிகவும் முறைப்படி நடந்த கல்யாணம் என்பதால் முறைகளை கடைப்பிடிக்கின்றீர்களோ!” என்றாள்.

அவள் பேசியதின் அர்த்தம் புரியாமல் அந்த பெண் முழிக்கவும் ஆதிரையின் அருகில் நின்ற தேவா

“ஆதிரை, உன் கோபம் புரிகிறது ஆனால் இது நமது பழக்கத்தில்” என்பவனை இடைமறித்து ஆதிரை

“யார் என்றே தெரியாத பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவது தான் நம் பழக்கமோ?” என்றாள்.

தாலி கட்டியவனுடன் வாழ்கிறேன் என்று கூறியதில் இருந்தே ஆதிரையின் பேச்சில் அதிக நக்கலும், குத்திக்காட்டுதலும் அதிகமாக இருந்ததை தேவாவும் கவனிக்க தவறவில்லை. கோபமாக பேசினால் கூட பரவாயில்லை இதை எப்படி சமாளிப்பது என்றே அவனுக்கு புரியவில்லை. பற்றாக்குறைக்கு இவள் பேச பேச அவள் அருகில் நின்ற விக்ரம் வேறு நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தான். தேவாவின் இந்த எண்ண போக்கை மீண்டும் ஆதிரையின் குரல் களைத்தது.

“எப்படி என் தம்பியிடம் என்னை அழைத்து செல்ல இயலாது என்று கூறினாயோ. அதே போல் இந்த வீட்டிற்குள் நீ வந்தாலும் என்னால் உள்ளே வர முடியாது. அதற்காக வேறு வீட்டிலும் நீ சென்று தங்கக்கூடாது. நாம் நின்று கொண்டிருக்கும் இதே இடத்தில், அதாவது உன் வீட்டு வாசலில் தான் நீ இருக்க வேண்டும்” என்றாள்.

ஆதிரை தேவாவுடன் வாழ்கிறேன் என்று கூறியதை விடவும் அவள் இப்படி கூறியதே அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. விக்ரமே ஒரு நொடி அதிர்ச்சியில் உரைந்து விட்டான். முருகன் பதறிப்போய்

“என்னம்மா கூறுகிறாய்? எதில் விளையாடுவது என்றில்லையா?” என்றார்.

ஆனால் ஆதிரையோ எந்த ஒரு பதட்டமோ கோபமோ இல்லாமல் மிகவும் உறுதியாகவும் அமைதியாகவும் “விளையாடுவதா! விளையாடுவதில். அதிலும் வாழ்க்கையில் விளையாடுவதில் முதன்மையானவரை வைத்துக் கொண்டா?” என்று தேவாவைக் காட்டிக் கூறினாள்.

வாழ்க்கையில் விளையாடுபவன் என ஆதிரைக் கூறியபோது அடி வாங்கியவனை போல தேவா மனதால் துடித்ததை அவள் அப்போது கவனிக்கவில்லை. அவள் கவனிக்காமல் இருந்ததும் தேவாவிற்கு நல்லது தான். இல்லையெனில் ஆதிரை அன்று இருந்த மனநிலைக்கு தேவாவின் பாடு தான் படாத பாடு ஆகியிருக்கும். இவனது நிலை தெரியாத ஆதிரையின் வார்த்தைகளிளோ சாட்டை சூழன்று கொண்டிருந்தனர்.

தன் தந்தையிடம் கேள்வி எழுப்பியவள் அவரது பதிலுக்காக கூட காத்திராமல் தேவாவிடம் திரும்பி

“ஆம் கேட்க மறந்தே போனேன். உன் பெயர் என்ன” என்றாள்.

அந்த நொடியில் தேவாவின் இதயம் வெளியில் விழுந்து விடும் போல் இருந்தது அவனுக்கு. அதை மறைத்து கொண்டு “தேவா” என்றான்.

“எனது நிபந்தனைகள்?” என்றவளிடம் அவளைப் போலவே

“ஏற்கப்படுகிறது” என்றான்

‘நக்கலா?’ என்று எண்ணியவள் பிறகு ஒன்றும் கூறாமல் ஆரத்தி தட்டுடன் நின்ற பெண்ணைப் பார்த்து

“நான் எங்கு தங்க வேண்டும்? நிச்சயம் உங்கள் தேவாவின் அறையில் தங்க இயலாது” என்றாள்.

ஏதோ கூற வாய்யெடுத்த முருகனையும் தேவாவின் சைகை நிறுத்தியது. ஆரத்தியுடன் நின்ற பெண்ணிற்கு பின் நின்ற பெண்மணி முன் வந்து

“இங்கு ஒரு அறை இருக்கின்றது. இதுவரை அதை யாரும் உபயோகம் செய்தது இல்லை. அதை நீ எடுத்து கொள்” என்றார்.

அந்த பெண்மணியை தான் ஆதிரை திருமண மண்டபத்தில் பார்த்தால், வந்த பெண்களில் முதலில் நடந்து வந்தவர், அவரது அன்றைய உருவம் இன்னும் ஆதிரையின் மனதில் அப்படியே தோன்றியது.

அழகான பாசி பச்சை நிறத்தில் பட்டு புடவை உடுத்தியிருந்தார். முடிகளை அள்ளி கொண்டையிட்டு, அதை சுற்றி மல்லிகைப்பூ சூடியிருந்தார், மிகவும் பெரிதாகவும் இல்லாமல் அதற்காக சிறியதாகவும் இல்லாமல் நடுத்தரமாக குங்குமத்தால் பொட்டு வைத்திருந்தார். அதற்கெல்லாம் ஏற்றவாறு அவரது இதழ்களில் ஒரு அளவான புன்னகை. அன்பிற்கு ஒரு உருவம் இருந்தால் அது அவரைப்போல் தான் இருக்குமோ என்று கூட ஆதிரை சிந்தித்தால். ஆனால் இன்று! இன்றும் அதைப் போல் தான் இருந்தார்.

பட்டு புடவைக்கு பதிலாக காட்டன் புடவை. அவரது உதடுகள் இன்று புன்னைகைக்கவில்லை. மாறாக அவரது கண்கள் வழிகளை பிரதிபலித்தன. ஆதிரை அவரையே பார்ப்பதை பார்த்தவர் ஓரளவு அவளது எண்ண ஓட்டங்களையும் ஊகித்து

“நான் தேவாவின் தாய். என் பெயர் மீனாட்சி” என்றார்.

“ஓ!” என்று ஆதிரை கூறும் பொழுதே

“முதல் முறையாக தேவாவின் தாய் என்று கூற வெட்கப்படுகிறேன்” என்றும் மீனாட்சி கூறினார்.

‘இப்படி ஒரு பிள்ளையை பெற்றால் அவமானமாகத்தான் இருக்கும்’ என்று மனதில் மட்டும் நினைத்துக் கொண்டாள் ஏனோ அவரிடமும் அவளால் தேவாவிடம் பேசுவதைப் போல் எடுத்தெரிந்து பேச தோன்றவில்லை.

தன் தாய் பேசியது வருத்தமாக இருந்தாலும், தன் தாயிடமும் ஆதிரை எடுத்தெரிந்து பேசவில்லை என்பது மட்டும் சிறிது ஆறுதலாக இருந்தது.

பிரச்சனைகள் ஏதுமின்றி ஆதிரையை வீட்டில் விடலாம் என்று உடன் வந்த ஊர் மக்களும், முருகன் மற்றும் முத்துவும் கூட தேவாவிடம் ஆதிரை கேட்டது அநியாயம் என்றே கூறி வாதிட்டனர். ஆனால் தேவா

“அவளுக்கு நான் செய்ததும் அநியாயம் தானே. இதை நான் பார்த்துக் கொள்கிறேன்”, என்று கூறியதால் யாராலும் அதற்கு மேல் பேச இயலவில்லை. ஊர் மக்கள் தான் பாதி பேர் தேவாவுக்கு ஆதரவாகவும் இன்னும் சிலர் “எந்த பெண் தான் திடீரென தாலி கட்டினால் சும்மா விடுவாள்” என்று ஆதிரைக்கு ஆதரவாகவும் பேசி சென்றனர்.

முருகனும் ஒரு முறைக்கு பல முறை தேவாவிடம் பேசிப் பார்த்தார். தேவாவோ அனைத்தையும் நானே பார்த்துக் கொள்கிறேன் என்றதால் அவராலும் எதுவும் பேச முடியவில்லை. விக்ரம் தான் தேவாவைப் பார்த்து நக்கலாக சிரித்து சென்றான். ‘இவன் வேறு, அக்காவுக்கு தம்பி தப்பாமல் பிறந்திருக்கிறான்’ என்று எண்ணிக் கொண்டான் தேவா.

அன்று முழுதுமே ஆதிரை எதுவும் சாப்பிடவில்லை. அவளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறைக்குள்ளே ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள். அங்கிருந்து பார்த்தாலே தேவா வெளியில் அமர்ந்திருந்த இடமும் நன்றாகவே தெரிந்தது. அப்படி ஒருமுறை அவனை எட்டிப் பார்க்கும் பொழுது தான் அவனுக்காக அங்கு போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலை கவனித்தாள்.

‘மகாராஜாவிற்கு கட்டில் ஒன்று தான் இப்போது முக்கியம்’ என்று நினைத்தவள், கட்டிலையும் எடுக்க சொல்லுவோமா என எண்ணினாள். அவளுக்கே அந்த எண்ணம் அதிகப்படியாக தோன்றவும் அதைக் கைவிட்டாள்.

‘அவனது வீட்டினுள் அவனையே அவக் கூடாது என்று அவள் கூறியது, தனிமையில் சிந்திக்கும் பொழுது அவளுக்கே தவறோ என்று தேன்றியது, ஆனால் அவளுக்கு நடந்தது மட்டும் அநியாயம் அல்லவா? அதற்கு தானே இந்த தண்டனை, நன்றாக அனுபவிக்கட்டும்’ என அவளது மனதுடனையே வாதாடிக் கொண்டிருந்தவளை மீனாட்சியின் குரல் நிகழ் உலகத்திற்கு அழைத்து வந்தது.

“ஆதிமா.. நீ ஒன்றுமே சாப்பிடவில்லையே! சிறிது சாப்பிடலாம் அல்லவா? வெறும் வயிற்றுடன் உறங்க கூடாது” என்றவரை ஆதிரை ஒன்றுமே கூராமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளிடம் இருந்து எந்த விதமான பதிலும் வராததால் “என்னமா?” என்றாள்.

“இது மருமகள் மீதான அக்கறையோ? அப்படியெனில்.. நேரவிரயம். நான் சீக்கிரம் என் தந்தை இல்லத்திற்கே.. அதாவது என் வீட்டிற்கே சென்று விடுவேன். மற்றும் தற்போது எனக்கு உணவும் வேண்டாம்” என கூறிவிட்டு அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பதை போல உறங்குவதைப் போல் படுத்துக் கொண்டாள்.

அவளது இந்த பதிலை எதிர் பார்க்காத மீனாட்சிதான் அதிர்ந்துபோய் நின்றுவிட்டாள்.​

தொடரும்...

வாசகர்களின் கருத்துகளே எழுத்தாளர்களை அதிகம் ஊக்கப்படுத்தும். எனது கதை அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது உங்கள் கருத்துகளும் விமர்சனங்களும் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் பதிவிடவும். நன்றி.

 
Last edited:

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
அத்தியாயம் 3

ஆதிரை ஒரு பக்கம் அந்த அறையை விட்டு வெளிவராமலும் உண்ணாமலும் இருந்தாள் என்றால் மறுபக்கம் தேவாவும் எதுவும் உண்ணவில்லை. மீனாட்சி அம்மாளுக்கும் நிலமை புரியாமல் இல்லை. ஆனாலும் கூட மகனுக்கு ஆறுதல் கூறுவதா, மருமகளுக்கு கூறுவதா என குழம்பிப்போய் இருந்தார். அன்று இரவு அனைவரது மனதையுமே கவலை ஆட்கொண்டிருக்க, அனைவரும் நித்திரையை துறக்க நேர்ந்தது.

மறுநாளும் ஆதிரை உண்ண மறுத்ததும், இதற்கு மேல் இவள் உண்ணாமல் இருந்தால் மயக்கம் போட்டுவிடுவாள் என்றதால் மீனாட்சியும் விடாமல் அவளிடம் சாப்பிட சொல்லி வற்புறுத்தச் செய்தார். ஆதிரையும் ஒரு நிலைக்கு மேல் தன் பொறுமையை இழந்து”எனக்கு இந்த அறையை விட்டு வெளியில் வர விருப்பம் இல்லை, போதுமா? எனக்கு யாரையும் பார்க்க வேண்டாம்” என கூறி விம்பிவிம்பி அழ தொடங்கி விட்டாள்.

மீனாட்சி எவ்வளவோ சமாதனம் செய்ய முயற்சித்தும் முடியாமல் போனதால், அமைதியாக உள்ளே சென்று அவளுக்கான உணவை அவளது அறைக்கே எடுத்து வந்து வைத்துவிட்டு சென்றார். அவள் அருகிலேயே இருந்து அவள் உண்கிறாளா இல்லையா என்று பார்க்கத்தான் அவருக்கும் ஆசை. ஆனால் அதற்கும் வீம்பு புடித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்தாள் என்றால் என்ன செய்வது என்று அவருக்குள் பயம் எனவே அங்கிருந்து சென்று விட்டார்.

அவர் ஊகித்ததும் ஒரு வகையில் உண்மையே, அவர் நின்றிருந்ததால் நிச்சயம் ஆதிரை உண்டிருக்க மாட்டாள் தான். ஆனால் அவர் சென்றதும் அவர் வைத்த உணவை முழுவதுமாக உண்டுவிட்டாள்.

முதல் நாள் முழுவதுமாக எதுவும் சாப்பிடாமல் இருந்ததும், அவள் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும் அளவு நடந்த நிகழ்வுகளும் அவளை மிகவும் பாதித்திருந்தது. அவளது பசியைக் கூட அவள் அறிந்திடும் நிலையில் இல்லை, வைத்து சென்ற இட்லிகளை முழுதும் அத்தனை வேகத்தில் எப்படி தான் உண்டாளோ உண்டுவிட்டாள் உண்ட கலைப்பில் உறங்கியும் விட்டாள்.

சிறிது நேரத்தில் அவள் உண்டாளா என்று பார்க்க வந்த மீனாட்சி, அவள் உறங்குவதை பார்த்து சிறிது நிம்மதி அடைந்தார். குழந்தையைப் போல் உறங்கி கொண்டிருந்தவளைப் பார்த்த அவருக்கு வேதனையாக இருந்தது. இவளது வாழ்க்கையில் ஒரே நாளில் எத்தனை மாற்றங்கள். அதற்கெல்லாம் காரணம் தன் மகன் தான் என்று எண்ணும் பொழுதே அவரது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இங்கே நின்று அவளது உறக்கத்தை கலைக்க மனமின்றி மெதுவாக பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறியவர் மகனுக்கும் உணவு எடுத்து சென்றார்.

என்ன தான் மகன் செய்த தவறினால் அவன் மீது கோபம் இருந்தாலும், தாய் மனம் மகன் நேற்றில் இருந்து உண்ணாமல் இருப்பதில் வேதனையாக இருந்தது.

தேவாவோ பனி, வெயில் என பாராமல் ஆதிரை கூறிய இடத்திலேயே ஒரு கயிற்று கட்டிலில் படுத்திருந்தான். சிறு வயதில் இருந்தே மிகவும் வசதியாக வாழ்ந்தவன் தேவா. கிராமத்து இளைஞர்களும், சிறுவர்களும் அவனைத்தான் முன்மாதிரியாக வைத்திருந்தனர். ஆனால் அவனது செயலால் இன்று அவனே தலை குனிந்து கூனிக்குருகிப் போய் இருந்தான்.

தன் தாய் தட்டுடன் வந்து நிற்பதை பார்த்தவன் மெதுவாக எழுந்து தரையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்தான். அவரது முகத்தை நிமிர்ந்து பார்க்க அவனுக்கே தயக்கமாக இருந்தது. அவன் ஏதும் பேசாமல் இருக்கவும் மீனாட்ச்சியே

“தேவ்மா, இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி சாப்பிடாமல் இருக்க போகிறாய்? இதில் இட்லி இருக்கின்றது கொஞ்சமாவது சாப்பிடுமா” என்றார்.

“இல்லை வேண்டாமா.” என்றவன் சிறிது வினாடிகளில்

“அவள் சாப்பிட்டாளா?” என்றான்.

மகனின் வேதனை புரிந்ததும்

“முதலில் வேண்டாம் என்று தான் கூறினாள். ஆனால் பிறகு சாப்பிட்டு விட்டு, இப்போது உறங்குகிறாள்” என்றார்.

ஆதிரை உணவு உண்டாள் என தெரிந்த பின் மகனும் உண்பான் என நினைத்தால் அவன் எதுவும் கூறாமல் அமைதியாகவே அமர்ந்திருக்கவும்

“இங்கே பார் தேவ்மா, நீ எதையும் சிந்திக்காமல் இப்படி செய்திருக்க மாட்டாய் என நம்புகிறேன், விளைவுகளை பற்றியும் சிந்தித்திருப்பாய் தானே? அதன் படி அவள் உடனே நம்முடன் நன்றாக பழகுவாள் என எதிர் பார்க்கக்கூடாது தானே?” என்றார்.

“நான் செய்தது தவறு தான் அம்மா, என் செயல்களை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. என் பயம் எல்லாம் அவள் என்னை புரிந்துக்கொள்வாளா? இல்லை அடியோடு வெறுத்து விடுவாளா? என்பது தான்” என்றான்.

“உண்மைகள் கடைசி வரை இருட்டிலேயே இருக்காது, ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்து தான் ஆகும் என கேள்விப் பட்டது இல்லையா? என்றாவது அவளுக்கும் உண்மைகள் தெரியும் போது அவள் சமாதானம் ஆகிவிடுவாள்” என்றவர் ஏதோ தோன்றியவராக

“ஏன் தேவ்மா.. நாம் ஏன் அவளிடம் உண்மையைக் கூறக்கூடாது” என்றார்.

தேவா “இல்லை அம்மா. அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவளுக்கு உண்மைகள் தெரிந்தால் நமக்கு எதிராக மாறவும் வாய்ப்பு உள்ளது. சில காலம் போகட்டும் நானே அவளிடம் உண்மையை கூறுகிறேன்” என்றான்.

தேவா சொல்வது சரியாகவே மீனாட்சிக்கு தோன்றியதால் அவர் அதற்கு மேல் அதைப்பற்றி பேசவில்லை. ஆனால் மீண்டும் தேவாவை சாப்பிட சொன்னார். அவரது கவலை அவருக்கு சாப்பிடாமல் தன் தாய் விட போவதில்லை என தெரிந்ததால் தேவா

“சாப்பிடுகிறேன் அம்மா. ஆனால் அதற்கு முன் ஒரு உதவி” என்றான்.

உதவி என்றெல்லாம் மகன் கேட்கவும் பதறிய மீனாட்சி “என்னப்பா.. உதவி என்றெல்லாம் புதிதாக.. என்ன என்று கூறு” என்றவரிடம்

“அவளது அறையில் உள்ள சன்னல்களை சிறிது நேரம் திறக்க முடியுமா” என்றான்.

இதற்கு அவர் என்னவென்று கூற முடியும்? மகனின் வேதனையும் அவருக்கு புரியாமல் இல்லை. ஆனால் மருமகளுக்கு தெரிந்தால் என்ன ஆவது என்று யோசித்தார். ஆனால் இரவெல்லாம் அழுது விட்டு கலைப்பில் உறங்குபவள் நிச்சயம் இப்போது முழித்துக் கொள்ள வாய்பில்லை தான். மகனை பார்க்கவும் பாவமாக இருக்கவும் சரியென்று விட்டார்.

தயக்கத்துடனே மருமகள் அறைக்கு சென்றவர், எதற்கும் உறங்கி கொண்டுதான் இருக்கின்றாளா என ஒருமுறை உறுதிப்படுத்துக் கொண்டு சன்னல்களை திறந்து விட்டார். வெளியில் நின்று சன்னல் வழியே ஆதிரை உறங்குவதை சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு அவனது இடத்திற்கு சென்று அவனுக்கு வைத்திருந்த உணவை உண்டுவிட்டு உறங்கி விட்டான். இவர்கள் நிலையைப் பார்க்க பார்க்க மீனாட்சிக்கு தான் வேதனையாக இருந்தது.

இரண்டு நாட்கள் எந்தவித மாற்றங்களும் இன்றி இவ்வாறே சென்றனர், ஆதிரையும் அறையை விட்டு வெளிவரவில்லை, தேவாவும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

ஆதிரை உறக்கமின்றி அறைக்குள்ளேயே உலாத்திக் கொண்டிருந்தாள். நீண்ட நேரமாக இருமல் சத்தம் கேட்கவும், எங்கிருந்து வருகிறது என கவனித்தவள் வீட்டின் வெளிப்புறத்தில் இருந்து சத்தம் வரவும் சன்னல் வழியாக எட்டிப் பார்தாள்.

இரவு நேரம் என்பதால் நிலவின் ஒளியில் நன்றாக உத்து பார்க்க வேண்டி இருந்தது. அவள் ஊகித்தது போலவே அங்கு இருமிக் கொண்டிருந்தவன் தேவா தான். முதலில் தயங்கியவள் அவனது இருமல் நிக்காமல் இருக்கவும், தன் அறையை விட்டு வெளியேறி அவன் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.

தேவா அங்கு கண்களை மூடி படுத்திருந்தபோதும் இருமல் மட்டும் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. ‘இவனிடம் என்ன என்று கேட்கலாம் என்று பார்த்தால் கண்களை மூடி வைத்திருக்கிறானே! இப்போது என்ன செய்வது?’ என்று நினைத்தவள் அவனை “இங்கே பார்... ஏய்... உன்னைத்தான் கூப்பிடுகிறேன்” என்று பலவாறு கூப்பிட்டு பார்த்தாள். ஆனால் அவனிடம் இருந்து எந்த விதமான அசைவுகள் இல்லை.

சரி உள்ளே சென்று யாரையாவது அழைத்து வரலாம் என்று திரும்பிய போது தான் அவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது. இந்த இரவு நேரத்தில் யாரைப் போய் எழுப்புவது. அப்படியே எழுப்புவது என்றாலும் கூட, முதலில் இந்த வீட்டில் யார்யார் இருக்கின்றார்கள் எனவும் தெரியாது. இரண்டாவதாக இவ்வளவு பெரிய வீட்டில் யார் எந்த அறையில் இருப்பார்கள் என்றும் தெரியாதே! என முதல் முறையாக அந்த வீட்டை பார்த்து பிரமித்தாள்.

அவள் பிரமித்தது போலவே தேவாவின் வீடு மிகவும் பெரியதாகவும், பிரமாண்டமாகவும் அவள் முன் கம்பீரமாக நின்றது. அவளது அறை வீட்டில் நுழைந்தவுடனேயே முதலாவதாக இருந்ததாலும் அறையை விட்டு அவள் வெளியில் வராததாலும் அந்த வீட்டை அவள் கவனிக்கவே இல்லை என்பதே உண்மை. முதல் முறையாக அறையை விட்டு வெளிவராமல் இருந்ததை நினைத்து தன்னையே நொந்து கொண்டாள்.

அவள் சிந்தித்துக் கொண்டிருந்த வேலையில் தேவாவின் உடல்நிலை இன்னும் மோசமாகிக் கொண்டிருந்தது. அவனது இருமல் அதிகமாவதைப் போல் இருந்தது ஆதிரைக்கு. வேறு வழியில்லை நாமேதான் ஏதாவது செய்தாக வேண்டும் என நினைத்தவள்”தேவா” என அவனது நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். அவள் நினைத்ததைப் போலவே அவனுக்கு காய்ச்சல் இருந்தது. ஆனால் அவள் லேசாக இருக்கும் என்றே நினைத்திருந்தாள், தேவாவின் உடலோ அனலாக கொதித்துக் கொண்டிருந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் “தேவா... தேவா...” என்று அவனை எழுப்ப முயற்ச்சித்தாள், அவளது குரலில் எழுந்தானோ அல்லது அவள் அசைத்ததில் எழுந்தானோ என்று அவள் அறியவில்லை. ஆனால் மெதுவாக கண்களை திறந்தவன், தன் எதிரே நின்றவளிடம்

“ஆதிரை! இங்கே என்னடா செய்கிறாய்? பனியாக இருக்கின்றது பார்... காய்ச்சல் வந்து விடும் முதலில் வீட்டிற்குள் செல்” என்றான்.

இந்த நிலையிலும் தன் ஆரோக்கியத்தைப் பற்றி நினைக்கின்றானே என நினைக்கவும் அவளது கண்களில் இருந்து கண்ணீர் பொங்கியது.

எப்படியோ ஒரு வழியாக அவனை எழுப்பியவள் மெதுவாக அவளது அறைக்கு அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்தாள். அடுத்து என்ன என்று யோசித்தவளுக்கு, சென்னையில் இருந்து கிளம்பும் போது

“புது இடத்திற்கு செல்கிறோம், தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் உடல் நிலை சரியில்லாமல் போகவும் வாய்ப்பிருப்பதால் எதற்கும் காய்ச்சலுக்கு மாத்திரை எடுத்து கொள்” என்று மங்களம் கூறியதும், அவள் மாத்திரை எடுத்து வைத்ததும் அவள் நினைவுக்கு வந்தது.

இங்கு வந்த பிறகு விக்ரம் அவளது துணிப்பையைக் கொடுத்து விட்டு போயிருந்தான். அதில் தேடிய பொழுது மாத்திரைகளும் இருந்தது. காய்ச்சலுக்கான மாத்திரையை எடுத்து தேவாவிடம் கொடுக்கவும், அதை வாங்கி உண்டவன் அப்படியே உறங்கி விட்டான்.

ஆதிரை ஒன்றும் சிறு பிள்ளை இல்லை, அவள் கூறியதற்காக வெயில், பனியென பாராமல் வாசலிலேயே இருந்ததன் விளைவு தான் இந்த காய்ச்சல் என்று அவளுக்கும் புரியாமல் இல்லை. அதற்காக குற்றவுணர்ச்சியாக உணர்ந்தாலும் தேவாவின் மீது இருந்த கோபம் அதைப் பின்னுக்கு தள்ளியது.

ஒருபுறம் காய்ச்சலில் முனங்கி கொண்டிருந்தவனைப் பார்க்க பாவமாக இருந்தாலும், மறுபுறம் ‘இவனுக்கு எல்லாம் தேவைதான், எத்தனை திமிராக அன்று நடந்துக் கொண்டான்’ என்றும் தோன்றியது.

அவன் தூக்கத்தில் ஏதோ கூறுவதை போல் இருக்கவும் என்ன என்று கவனிக்கலானாள், நீண்ட நேரம் கவனித்தும் அவன் ஏதோ ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் கூறுகிறான் அதில் ஒரு எழுத்து ‘மீ’ என்பதை தவிர அவளுக்கு வேறு ஒன்றுமே புரியவில்லை.

நீண்ட நேரமாக அவன் கூறும் அந்த ஒற்றை வார்த்தையை கண்டுபிடிக்க முயற்சித்து அவளால் முடியாமல் போனதால் வேறுவழியின்றி

‘எங்கிருந்து இவனும் இவனுடைய இந்த ஊரும் வந்ததோ! உடல் நிலை நன்றாக இருந்த போது திடிரென தோன்றி தாலி கட்டுகிறேன் என்று என் வாழ்க்கையில் கிரிக்கெட் விளையாடினான். இப்போது காய்ச்சலில் படுத்துக் கொண்டு என் உரக்கத்தில் வாலிபால் ஆடுகிறான். இந்த குடும்பம் வேறு கும்பக்கர்ணன் வகையரா போல. ஒரு மனிதன் இருமுவது கூட தெரியாமல் உறங்கிறார்கள்’ என்று அவளது அறையின் தரையில் அமர்ந்து கொண்டு தேவாவில் தொடங்கி அவனது பரம்பரையே திட்டி தீர்த்து கொண்டிருந்தாள். பாவம்! அவளும் அவர்கள் வழி வந்தவள் என்பதை அப்போது அவள் மறந்துவிட்டாள்.

எப்பொழுது உறங்கினாளோ, தரையில் படுத்து அப்படியே உறங்கியவள் காலையில் எழுந்து பார்த்த போது அந்த அறையில் அவள் மட்டுமே இருந்தாள்.

‘இரவு ஒருவன் இங்கு இருந்தானே!’ என்று சன்னல் வழியாக வெளியில் பார்தாள். வாசலில் அமைதியாக அமர்ந்திருந்தவனைப் பார்க்க அவளுக்கு கோபம் தலைக்கேறியது.

அவன் மீது வந்த கோபத்தை விடவும் அவள்மீதே அவளுக்கு அதிக கோபம் வந்தது.

‘இவன் யார் என்றே தெரியாது, காய்ச்சல் என்பதால் தான் அறைக்குள் விட்டதும் கூட, யாரோ ஒருவன் அறைக்குள் இருக்கும் பொழுது தூங்கியதே தவறு, இதில் அவன் எழுந்து வெளியில் சென்றதுக் கூட தெரியாமல் தூங்கி தொலைத்திருக்கிறாயே ஆதி! விக்ரம் சொல்வதைப் போல உனக்கு அறிவென்பதே இல்லை’ என்று தன்னைத் தானே மனதிற்குள்ளேயே வருத்தெடுத்துக் கொண்டு அவன் இருக்கும் இடத்திற்கு போய் சேர்ந்தாள்.

ஆதிரை எதையோ பலமாக சிந்தித்துக் கொண்டே வருவதைப் பார்த்த தேவாவோ நேற்றைய இரவுக்காக நன்றி கூறுவோமா? என்று யோசித்தான். நன்றி கூறினாள் உன் நன்றி தேவை இல்லை என்பாளோ என்ற ஐயமும் இருந்ததால் அமைதியாக அவளையே பார்த்த படி அமர்ந்திருந்தான்.

தன் முன் சோர்வாக அமர்ந்திருந்த தேவாவிடம் வந்து நின்றவள் சில வினாடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவும் அவளே

“ஒரு நன்றி கூட கூற இயலாதா?” என கோவமாக கேட்டாள்.

“அதற்காக தான் காத்திருந்தேன். நன்றி” என்றான். ஆனால் அதை கேட்ட ஆதிரையோ

“உன் நன்றிக்காக ஒன்றும் நான் செய்யவில்லை இருந்தாலும் நன்றியெல்லாம் தானாக சொல்ல வேண்டும் கேட்ட பிறகு சொல்லக்கூடாது” என்றாள்.

அவன் நினைத்ததைப் போலவே அவள் கூறவும், அவனால் வந்த சிரிப்பை முதலில் அடக்கவே முடியவில்லை. ஆனால் இப்போது சிரித்தால் தன் மனைவி காளி அவதாரம் எடுத்து விடுவாளே என்பதால் மிகவும் முயற்சித்து வந்த சிரிப்பை தரையைப் பார்த்து அடக்கினான், கணவனின் செயலுக்கு பின் இருந்த காரணம் புரியாமல் ஆதிரை மேலே பேச தொடங்கினாள்.

“தலை குனியும் அளவு இது பெரிய தவறு இல்லை, சரி அதைவிடு, நீ உன் அறையிலேயே தங்கிக்கொள்” என்றவளை இடைமறித்து

“பரவாயில்லை என்றவனை முறைத்துவிட்டு

“நீ இங்கு இருந்து இருமுவது என் உறக்கத்தைக் கெடுக்கின்றது. மற்றபடி உன்மீது அக்கறை என்றெல்லாம் ஒன்றுமில்லை”, உன் அறையில் தங்கிக்கொள். ஆனால் என் கண்முன்னே வராதே” என்று மூச்சுவிடாமல் கூறிவிட்டு அவனது பதிலைக் கூட எதிர் பார்க்காமல் வேகமாக உள்ளே சென்றுவிட்டாள். உள்ளே சென்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்களில் ஒரு சிறிய புன்னகை தவழ்ந்தது.​

தொடரும்...​

வாசகர்களின் கருத்துகளே எழுத்தாளர்களை அதிகம் ஊக்கப்படுத்தும். எனது கதை அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது உங்கள் கருத்துகளும் விமர்சனங்களும் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் பதிவிடவும். நன்றி.

 

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
அத்தியாயம் 4

இரவு நடந்த நிகழ்வுகள் மீனாட்சியம்மாளுக்கு சிறிது நம்பிக்கையை அளித்தாலும் உண்மைகள் அனைத்தும் தெரியும் பொழுது ஆதிரை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்கின்ற பயமும் அவருக்கு இருந்தது. ஆனால் அதற்காக இப்போது என்ன செய்தாலும் அது எதிர்மறையாக மாறவும் வாய்ப்பு இருப்பதால் அவர் அமைதியாகவே இருந்தார்.

இந்த சூழ்நிலையில் தான் மீனாட்சியம்மாளின் தந்தை வழி மாமா ஒருவர் இறந்ததாக செய்தி வந்தது. குடும்பம் முழுவதும் துக்கத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் திருமணம் ஆன பிறகு முதன் முதலில் ஒரு துக்கக்காரியத்திற்கு செல்ல கூடாது என்ற பழக்கம் அந்த ஊர் பக்கம் இருந்ததால் தேவாவையும் ஆதிரையையும் வீட்டில் விட்டு சென்றனர். ஆனாலும் முதலில் இந்த செய்தியை ஆதிரையிடம் கூறவே அனைவரும் தயங்கினர்.

வேண்டும் என்றே தனியாக விடுவதாக கூறுவாளோ என்று பயந்தார்கள் ஆதிரையோ செய்தியை கூறியதும் ‘சரி’ என்றதற்கு மேல் எதுவும் கூறவில்லை. கிழம்பும் பொழுது மட்டும் எப்போது வருவீர்கள் என மட்டும் கேட்டுக் கொண்டாள். இரவு வந்து விடுவோம் என்று கூறியதால் வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

மீனாட்சி போவதற்கு முன் காலை உணவை ஆதிரையின் அறையில் வைத்து விட்டே சென்றிருந்தார். உணவை உண்டுவிட்டு அறைக்குள்ளேயே நடந்து கொண்டிருந்த போது அவளது அறை கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

‘வீட்டில் அனைவரும் கிழம்பிய பிறகு யாராக இருக்கும்? ஒருவேளை தேவாவாக இருக்குமோ’ என யோசிக்கும் பொழுதே “ஆதிரை” என தேவாவின் குரல் கேட்டது.

‘இவனுக்கு எத்தனை திமிரு இருக்க வேண்டும். வீட்டில் யாரும் இல்லை என்றதும் தைரியமாக கதவை தட்டுகிறான். தட்டிக் கொண்டே இருக்கட்டும்’ என மனதில் அவனை திட்டிக் கொண்டு அவளது கட்டிலில் அமர்ந்து கொண்டாள். தேவா சிறிது நேரம் கதவை தட்டி விட்டு அவளிடம் இருந்து பதில் வராமல் போகவும் சன்னல் பக்கம் சென்று தட்ட தொடங்கினான்.

‘இவன் அமைதியாக சொன்னால் கேட்க மாட்டான் போல’ என அவனை திட்ட ஆயத்தமாகிக் கொண்டு சன்னலை திறந்தாள். தேவாவோ இவளை பேச விடாமல் மிகவும் அவசரமாக

“ஆதிரை.. உன்னிடம் பேச வேண்டும், நான் உள்ளே வரவில்லை. எனவே அதற்காக ஒரு வாக்குவாதம் வேண்டாம்” என்றான்.

“சரிகூறு என்ன? எப்படியும் நீ செய்த செயலுக்கு நியாயம் பேச போகிறாயா” என்றவளை இடைமறித்து

“இது நம்மை பற்றிய விஷயம் இல்லை. உன்னால் என்னுடன் பக்கத்து ஊர் வரை வர இயலுமா” என்றான்.

அதற்கு அவள் பதில் கூறாமல் அவனைப் பார்த்து முறைத்து விட்டு சன்னல் கதவை மூட முற்படவும், தேவா தன் கைகளைக் கொடுத்து மூட விடாமல் செய்ததுடன்

“நான் அங்கு உள்ள பள்ளிக்கூடத்திற்கு தான் கூப்பிடுகிறேன் வேறு ஒன்றும் இல்லை” என்றான்.

அவனது குரலில் இருந்த அவசரம் அவளை சிந்திக்க வைத்தது. அதோடு இல்லாமல் ‘பள்ளிக்கூடத்திற்கு ஏன் கூப்பிடுகிறான்?’ என்ற சந்தேகமும் எழுந்தது. ஆகவே மீண்டும் சன்னல் கதவை முழுதாக திறந்து

“என்ன? ஏன் வரவேண்டும்? அடுத்த நாடகமா?” என்றாள்.

“ஆமாம். அந்த பள்ளியில் ஒரு மேடை இருக்கின்றது. அதில் ஏறி நாடகம் போட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை” என்று கூறிக் கொண்டிருந்தவன் ஆதிரை சந்தேகமாக பார்க்கவும் அவனது விளையாட்டுப் பேச்சை நிறுத்திவிட்டு

“அது ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்னால் தனியாக போக இயலாத சூழ்நிலை. இந்த ஒரு முறை மட்டும் எனக்கு உதவி செய்” என்றான்.

“பெண்கள் பள்ளியில் உனக்கு என்ன வேலை” என்றாள்.

“அந்த பள்ளி மாலையில் முடிந்து விடும். அதுவரை இப்படியே பேசிக் கொண்டிருப்போமா? எனக்கு சந்தோஷம் தான்” என்று அவன் கூறவும் அதற்கு மேல் அவனை பேச விடாமல் சன்னல் கதவை மூடினாள்.

‘இவன் ஏதாவது கதை கூறவும் வாய்ப்பு இருக்கின்றது தான். ஆனால் அவசரமாக கூப்பிட்டானே!’ என சிந்தித்தவள் ‘சரி பள்ளிக்கு தானே கூப்பிடுகிறான், என்ன தான் கதை என்று போய் பார்போம். உதவி என்றும் கேட்கிறான். ஒரு வேளை அனைத்தும் பொய்யாக இருந்தால் பிறகு இவனுக்கு இருக்கு’ என்று மனதிற்குள்ளேயே வழக்கம் போல் அவனை வறுத்து எடுத்துக் கொண்டு கிழம்பி வீட்டின் வாசலிற்கு வந்தாள்.

அவளுக்கு முன் ஒரு காரை தேவா கொண்டுவந்து நிறுத்தவும் அவனிடம் குனிந்து

“உன் ஜீப் எங்கே” என்று கடுப்புடன் கேட்டாள். முதலில் முழித்தவன், அவளது கேள்வி புரியவும்

“ஜீப்பை வெளியில் இருந்தும் பார்க்க முடியும் தான். ஆனால் ஜீப்பில் சென்றால் நீ முன் இருக்கையில் அமர வேண்டும். என் அருகில் அமர ஆசையென்றால் சொல் உடனே காரைப் போட்டு விட்டு ஜீப்...” என்றவனிடம்

“போதும் நிறுத்து.” என கூறிவிட்டு பின் இருக்கையில் வேகமாக ஏறி அமர்ந்தாள்.

அவள் கோபமாக கூறுவதைப் பார்த்து தேவா சிரித்துக் கொண்டே தலையை வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் ஆட்டவும் ஆதிரை

“பார்த்து ... அப்படியே இழுத்துக் கொள்ள பேகிரது” என்றாள் அவளுக்கு பதில் சொல்லி அவளை சீண்டிப் பார்க்க தேவாவிற்கும் ஆசைதான். ஆனால் ஏற்கனவே அவளுடன் வாதாடி நேரம் போயிற்றதால் சிரித்துக் கொண்டே காரை செலுத்தினான்.

தேவா அமைதியாக இருந்தாளும் ஆதிரை அமைதியாக செல்வதாக இல்லை. செல்லும் வழியெல்லாம் பேசிக் கொண்டே.. இல்லை.. இல்லை.. கேள்விக் கேட்டு கொண்டே

“இது என்ன?... அது என்ன?... பள்ளி எவ்வளவு தூரம்... அங்கு எவ்வளவு நேரம் ஆகும்?..”

அவளது கேள்வி நீண்டு கொண்டே போகவும் தேவா

“உன் வயது என்ன?” என்றான்.

அவனது இந்த கேள்வியால் சிறிது முழித்தவள்

“ஓ! என் வயதே தெரியாதா? என் பெயராவது தெரியுமா?” என்றாள்.

அவன் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கவும் ஆதிரையே

“என் பெயர் ஆதிரை” என்றாள்.

மீண்டும் அவன் எதுவும் கூறாமல் அமைதியாக சாலையை மட்டும் கவனித்து கொண்டிருக்கவும்

“என்ன உன் கண்ணுக்கு ஒரு பத்து லாரி தெரிகிறதா? ஏனெனில் எனக்கு ஒரு ஆடும் ஒரே ஒரு சைக்கிளும் தான் தெரிகிறது” என்றாள்.

அவள் கூறுவது புரியாமல் என்ன? என்று தேவா கேட்கவும்

“இல்லை சாலையை உத்து உத்து பார்க்கவும் இந்த நெரிசலில் எப்படி காரை ஓட்டுவது என்று சந்தேகமோ என்று எண்ணினேன்” என்றாள்.

தேவா உடனே காரை காலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, பின்பக்கம் இருந்த தன் மனைவியைப் பார்த்து முறைக்க ஆரமித்தான்.

அவன் திடீரென காரை நிறுத்திவிட்டு முறைக்கவும் ஆதிரைக்கு முதலில் பயம் வந்ததே உண்மை. ஆனால் அதைக் காட்டி கொள்ளாமல்

“முறைத்தால் பயந்துவிடுவோமா? பெயர் கூட தெரியாமல் தாலிக் கட்டியது உன் தவறு” என்றாள்.

“உன்னை விடவும் உன் பெயர் எனக்கு நன்றாக தெரியும்” என அவளது கண்களை பார்த்து ‘பெயர்’ என்னும் வார்த்தையைஅழுத்தி கூறினான்.

அவன் கூறியதின் பொருள் அப்பொழுது ஆதிரைக்கு முழுதாக புரியாததால்

“ஓ! பெயர் தெரியும். ஆனால் வயது தெரியாதோ” என்றாள்.

“இன்னும் என் கேள்விகான பதில் வரவில்லை” என்று அவன் அதே கேள்வியில் நிற்கவும் ஆதிரையும்

“இருபத்தி ஐந்து” என்றாள்.

“ம்ம்.... செல்லும் இடத்தில் உன் வயதுக்கு ஏற்றவாரு நடந்துக் கொள்”, என்று கூறிவிட்டு காரை எடுத்தான்.

இதைக் கேட்டதும் ஆதிரையின் கோபம் தலைக்கேறியது.

“நான் ஒன்றும் உன்னுடன் வருகிறேன் என்று கூறவில்லை. நீ தான் உதவி செய் என்று என்னிடம் கெஞ்சினாய் என மறக்காதே” என கத்திக் கொண்டிருந்தாள்.

“என் விதி. வேறு வழியின்றி உன்னிடம் கெஞ்சும் நிலையாகிவிட்டது. அதுமட்டுமல்ல என் வாழ்க்கையிலேயே நான் செய்த தவறு எதுவென்று தெரியுமா? உனக்கு தாலி கட்டியது அல்ல. இன்று உன்னைக் கூட்டி வந்தேன் பார்தியா அதுதான்” என்றான்.

காரில் ஏறும் பொழுதே தேவா வேண்டும் என்றே தன்னை கிண்டல் செய்கிறான் என்று ஆதிரை தெரிந்துக் கொண்டாள். அதனால் தான் அவனை வெறுப்பேத்த வேண்டும் என்றே ஆதிரை ஓயாமல் கேள்விக் கேட்டு கொண்டே வந்ததும்.

ஆனால் அவனோ எதற்கும் கோபப்படாமல் ஒரு சிறிய புன்னகையுடன் பதில் கூறி வந்தான். அந்த கோபத்தில் தான் ஆதிரை அவர்களது திருமணத்தைப் பற்றி பேசியதும். அவனை அது காயப் படுத்தும் என்று அவள் அறிவாள். ஆனால் அவன் கோபப்படுவான் என்று அவள் அறியவில்லை.

அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டன. இதற்குமேல் அழுகையை கட்டு படுத்த முடியாதோ என்ற பயம் அவளுக்கு வரவும்

‘இவனது வேலை என்ன ஆனால் நமக்கு என்ன? நாம் கிழம்புவோம்’ என்று நினைத்தவள் காரை நிறுத்த சொல்லி வாய் எடுக்கும் போதே தேவா காரை பள்ளிக்குள் செலுத்தி நிறுத்தினான். காரை நிறுத்தியவன் கீழே இறங்காமல் தன் இருக்கையிலேயே கண்களை மூடி சாய்ந்துக் கொண்டான். சில நிமிடங்கள் காருக்குள் அமைதி நிலவியது. அந்த அமைதி ஆதிரைக்கும் தன்னை சரி செய்துக் கொள்ள தேவைப்பட்டது.

அவள் தன் அழுகையை அடக்கி சரிசெய்யவும் தேவா பேச ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.

“ஆதிரை. ஸாரிடா. நான் வேறு எதுவோ நினைத்துக் கொண்டிருந்தேன்” என்று அவன் கூறும் பொழுதே ஆதிரை காரை விட்டு கீழே இறங்கிவிட்டாள்.

ஆதிரையின் கோபம் நீண்ட நேரம் இருக்காது என்று தேவா அறிவான். ஆனால் அதற்காக அவள் அதை சும்மாவும் விடமாட்டாள் என்றும் அவனுக்கு தெரியும் தான்.

ஏற்கனவே அறையை விட்டு வெளியே வருவதில்லை. இப்போது இதுவேறு என்று தன்னையே திட்டிக் கொண்டு காரிலிருந்து கீழே இறங்கியவன் ஆதிரையிடன்

“இந்த பக்கம்” எனக் கூறி ஆசிரியர்களின் அறைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கிருந்த ஒரு ஆசிரியை தேவாவைப் பார்த்ததும் எழுந்து நின்று வணக்கம் வைத்து

“வாங்க.. வாங்க.. என்ன இந்த பக்கம்” எனக் கேட்டுக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் அவர்கள் இருவரையும் அமர வைத்தார்.

தேவா அவர்களிடம் “கவிதா ஆசிரியை அழைத்திருந்தார்கள் அவர்கள் வகுப்பில் படிக்கும் மல்லிகா என்னும் பெண்ணிற்காக” என்று கூறவும் அந்த ஆசிரியையும் ஏதோ புரிந்துக் கொண்டவரைப் போல

“ஓ. சரி, சரி, நான் இதோ அவர்களை வர சொல்கிறேன்” என்று எழுந்தவர் ஆதிரையை பார்த்து “இது?” என்றார்.

கேட்கிறார்கள் அல்லவா நீயே பதில் கூறிக்கொள் என்பதைப் போல அமைதியாக இருக்கவும் தேவாவே

“என் மனைவி” என்றான்.

அவரும் அமைதியாக போயிருக்கலாம் தான். தேவாவின் நேரமோ என்னமோ

“மனைவியா! திருமணம் ஆகிவிட்டதா? எங்கள் யாரையுமே கூப்பிடவில்லையே” என்றார்

தேவாவிற்கோ ஆதிரை ஏதாவது கூறிவிடுவாளோ என்று உள்ளுக்குள் பயம். அதை மறைத்துக் கொண்டு

“திருமணம் திடீரென்று முடிவானதால் யாரையும் கூப்பிட முடியவில்லை. நிச்சயம் வரவேற்பிற்கு அழைக்கிறேன்” இருந்தாலும் அழைத்திருக்கலாம். சரி வரவேற்புக்கு நிச்சயம் கூற வேண்டும் என கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.

அவர் காது எட்டாத தூரம் செல்லவும் ஆதிரை “ஆம் திடீர் திருமணம் தான். கல்யாண பெண்ணிற்கே தெரியாதே. அவ்வ...ளவு திடிர் திருமணம்” என்றவள் அதற்கு மேல் எதுவும் கூறாமல் அமைதியானாள்.

தேவாவிற்கு அப்போது தான் போன உயிர் வந்தது போல் இருந்தது. நல்லவேளை இதை அந்த ஆசிரியை இருந்த போது கூறவில்லை. அதே நேரம் வரவேற்பை பற்றி கவனிக்காமல் விட்டாள் என அமைதியானான்.

சென்ற ஆசிரியை வேறு ஒருவருடன் வரவும் தேவா எழுந்து நின்றான். வந்த அந்த புது ஆசிரியை தேவாவிடம்

“வாருங்கள் யாரையும் அழைத்து வரவில்லையா” என்று கேட்டுக் கொண்டே அந்த அறையுனுள் வந்தார். தேவா எழுவதைப் பார்த்து தானும் எழுந்து நின்ற ஆதிரையை அந்த ஆசிரியை அப்போது தான் கவனித்தார்.

அவளை பார்த்தவர் “ஓ, இருக்கின்றார்களா, நீங்கள்?” என்று ஆதிரையைப் பார்த்து கேட்கவும் தேவாவிற்கு தான் ‘என்ன திரும்பவும் முதலில் இருந்தா?’ என்பதைப் போல் இருந்தது. எப்படியும் அவள் கூறப்போவது இல்லை என்று தெரிந்ததால் தேவாவே அவளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

நல்லவேளையாக இவர்கள் வேறு எதுவும் கேட்காமல் அவளை உடன் வருமாறு கூறி பக்கத்து அறைக்கு அழைத்து சென்றார்.

அந்த ஆசிரியை ஆதிரையை தன்னுடன் வருமாறு கூறவும் ஆதிரை ஒன்னும் புரியாமல் தேவாவை தான் பார்த்தாள்.

தேவா “நான் காரில் இருக்கின்றேன். நீ வேலையை முடித்து விட்டு காருக்கே வந்துவிடு” எனக் கூறிவிட்டு அவளது பதிலிற்காக கூட நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான். ஆதிரைக்கு தான் கோபம் தலைகேறியது..

‘எதற்கு அழைத்து வந்தான் என்றே தெரியவில்லை. இதில் வேலையை முடிக்க வேண்டுமாம்’ என்று நினைத்தவளுக்கு அப்படியே கத்த வேண்டும் போல் இருந்தது.

ஆனால் அப்படி கத்தினால் சுற்றி உள்ள அனைவரும் அவளை தான் பைத்தியம் என்பார்களே தவிர அவளை ஆட்டி வைக்கும் அவனை யாரும் ஏதும் சொல்ல போவதில்லை என்று எண்ணி அமைதியாகவே அந்த ஆசிரியையுடன் சென்றாள்.

அந்த ஆசிரியை ஆதிரையை அழைத்து சென்ற அறைக்குள் ஒரு மாணவி அழுதுக் கொண்டே அமர்ந்திருந்தாள். அவளை தவிர அந்த அறையில் யாருமில்லை. ஆதிரைக்கோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போல் இருந்தது. அவளது நிலமை தெரியாமல் அந்த ஆசிரியையும்

“இவள் தான் மல்லிகா” எனவும் ஆதிரைதான் திருவிழாவில் காணாமல் போன சிறுவிள்ளையைப் போல் முழித்துக் கொண்டிருந்தாள்.

ஆதிரை அப்படியே நின்றுக் கொண்டிருக்கவும் அந்த ஆசிரியை “என்னமா? என்னவாயிற்று?” என்று கேட்கவும் ஆதிரைக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் யோசித்தவள்

“இவள் ஏன் அழுகிறாள்” என மல்லிகாவை காட்டி கேட்டு ஒருமாதிரி சமாளித்தாள்.

அவரும் அதற்கு சிரித்துக் கொண்டே “பயந்துவிட்டாள் போல” என்றார்.

இந்த ஊரில் அனைவரும் மொட்டை மொட்டையாக தான் பேசி தொலைவார்கள் போல எரிச்சலாகியது ஆதிரைக்கு. ஆனால் அவள் ஏன் என்று கேட்பதற்கு முன்பாகவே அவரே பேசத் தொடங்கினார்.

“பள்ளிக்கு வந்த பிறகே பெரிய மனுஷி ஆகிருக்கிறாள் எட்டாம் வகுப்பு படிப்பவள் தானே. தனியாக வேறு உக்கார வைத்ததும் பயந்து விட்டாள். நீங்கள் அழைத்து செல்லுங்கள். ஆனால் அதிக நாட்கள் விடுமுறை எடுக்க விடாமல் அனுப்பி விடுங்கள்” என்றார்.

ஒரு வழியாக ஆதிரைக்கு ஓரளவு விஷயம் புரிந்தது ‘ஆக இந்த பெண்ணை அழைக்கதான் தன்னை அழைத்து வந்திருகிறான்’ என நினைத்தவளும் வரிசையாக பல கேள்விகள் தோன்றின.

‘முதலில் இந்த பெண் மல்லிகா யார், ஏன் இவன் அழைக்க வர வேண்டும். அடுத்து என்ன’ என்று பல கேள்விகள் வரிசையாக தோன்றவும் அதற்கான பதிலை தேவா தான் கூறியாக வேண்டும் என்றும் அவளுக்கு புரிந்ததும், அங்கு நின்ற ஆசிரியையிடம் சரியென கூறிவிட்டு மல்லிகாவை அழைத்துக் கொண்டு காரை நோக்கி சென்றாள்.

செல்லும் வழியில் மல்லிகாவின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வரவும் ஆதிரை அவளிடம் மெல்ல பேசத் தொடங்கினாள்.

“உன் பெயர் என்ன?” என்று ஆதிரை கேட்கவும்

“மல்லிகா” என்று பயந்துக் கொண்டே பதில் கூறினாள்.

காருக்கு செல்லும் வரை இவளிடம் பேசிப் பார்ப்போம் பயம் கொஞ்சம் குறைந்து சகஜமாக பேசுவாள் என நினைத்து ஆதிரை பேச பேச அவளது பயம் அதிகமாவதைப் போலவே தோன்றவும் ஆதிரை மல்லிகாவிடம்

“உனக்கு என்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறதா” என்று கேட்கவும் மல்லிகாவும் ஆமாம் என்பதைப் போல் தலையாட்டினாள்.

“அடிப்பாவி!!” என்ற ஆதிரை “என்னைப் பார்த்தால் உனக்கு என்ன பயமா? அப்படியா கொடூரமாக இருக்கின்றேன்? என்றாள்.

“இல்லை” என்று மல்லிகாவிடம் இருந்து பதில் வரவும்

“பிறகு ஏன் என்னைப் பார்த்து பயப்படுகிறாய்” என்றாள்.

“நீங்கள் தானே சென்னையில் இருந்து இங்கு வந்து தேவ் அண்ணாவை வீட்டின் வெளியே உக்கார வைத்தது?” என்று மல்லிகா கேட்கவும் ஆதிரைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவழியாக தன்னை சமாளித்துக் கொண்டு

“இது எல்லாம் உனக்கு எப்படி தெரியும்” என்றாள்.

“நான் அங்கே விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது பார்த்தேன்” என்றாள்.

இவளிடம் என்னவென்று கூறுவது என யோசித்த ஆதிரை

“உன் பள்ளியில் யாராவது தவறு செய்தால் என்ன செய்வார்கள்” என்றாள்.

மல்லிகாவோ “தண்டனை தருவார்கள்” என்றாள்.

“அதைத்தான் நானும் செய்தேன்” என்றாள் ஆதிரை.

ஆனால் ஆதிரை எதிர் பார்க்காத கேள்வியை மல்லிகா அவளிடம் கேட்டாள்.

“எங்கள் தேவ் அண்ணா தவறு செய்தாரா? வாய்ப்பேயில்லை? என்றாள்.

அவள் அப்படி கேட்ட போது அவளது அழுகை கோபம் எல்லாம் காணாமல் போய் இருந்தது. மாறாக அதில் மல்லிகா தேவாவின் மீது வைத்திருந்த நம்பிக்கையே இருந்தது.​

தொடரும்...​



வாசகர்களின் கருத்துகளே எழுத்தாளர்களை அதிகம் ஊக்கப்படுத்தும். எனது கதை அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது உங்கள் கருத்துகளும் விமர்சனங்களும் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் பதிவிடவும். நன்றி.

 
Last edited:

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
அத்தியாயம் 5

மல்லிகாவிற்கு தேவாவின் மீது இருந்த நம்பிக்கை பார்க்க ஆதிரைக்கு ஆச்சரியமாக இருந்தது. இதே போல் தான் அவர்கள் திருமணத்தன்று அங்குக் கூடியிருந்த மக்களும் சிலர் கூறியதும் ஆதிரையின் நினைவிற்கு வந்தது. அதற்காக அப்படியே விடவும் அவளுக்கு மனம் வரவில்லை.

எனவே மல்லிகாவிடம் “ஏன் உங்கள் தேவ் அண்ணா என்ன கடவுளா? அவரும் மனிதன் தானே. அவரும் சில நேரங்களில் தவறு செய்வார்” என்றாள்.

மல்லிகாவோ “அதுவெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் தேவ் அண்ணா தவறு செய்ய மாட்டார். உங்களுக்கு தான் அவரைப் பற்றித் தெரியவில்லை” என்றாள்.

ஆதிரைக்கோ இதற்கு மேல் எதுவும் கூற விருப்பம் இல்லை. அது சின்ன பிள்ளையின் மனதில் நஞ்சை கலப்பது போல் இருக்கும் என்று நினைத்து அமைதியானாள். ஆனால் மல்லிகா விடுவதாக இல்லை.

“உங்களுக்கு தெரியுமா என்னைப் போல் இங்குப் பல பேரை தேவ் அண்ணா தான் படிக்க வைக்கிறார். சிலர் கல்லூரியில் கூட படிக்கிறார்கள்” என்று மல்லிகா கூறவும் ஆதிரைக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவளது நீண்ட நேர சந்தேகத்திற்கும் பதில் கிடைத்தது. மல்லிகா தேவ் படிக்க வைக்கும் பெண். ஆனால் இவள் கூறுவதைப் பார்த்தால் இவளைப் போல் இன்னும் பலரைப் படிக்க வைக்கிறாரா என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் பேசிக் கொண்டே வந்ததில் மல்லிகாவின் பயம் போயிருந்தது. ஆதிரையோ சிந்தனை உலகத்திற்குள் புகுந்து கொண்டாள்.

இருவரும் வேறு வேறு மனநிலையில் காரில் ஏறுவதைத் தேவாவும் கவனிக்கத் தவறவில்லை. ஆதிரை பயணம் முழுவதுமே ஏதோ சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தாள். காரே மிகவும் அமைதியாக இருந்தது.

கார் கடைசியாக ஒரு குடிசை வீட்டின் முன் நின்றது. உடனே மல்லிகா ஆதிரையிடம்

“இதுதான் எங்கள் வீடு. உள்ளே வாருங்கள்” என்று அழைக்கவும் சிந்தனை உலகிலிருந்து நிஜவுலகிற்கு வந்தவள், ஒரு புன்னகையுடன் சரியெனத் தலையசைத்து காரை விட்டு கீழே இறங்கினாள்.

கார் சத்தம் கேட்டு அவசரமாக அந்த வீட்டின் உள்ளேயிருந்து வெளிவந்த பெண்மணி இவர்களைப் பார்த்ததும் பரபரப்பாக “வாருங்கள். வாருங்களம்மா”. என வீட்டினுள் அழைத்தாள்.

காரை விட்டு கீழே மல்லியை இறக்கிய தேவா ஒரு புன்னகையுடனே “இல்லை, விட தான் வந்தோம். மல்லியின் தந்தை இரவு வந்துவிடுவார். அம்மா வந்ததும் வரச் சொல்கிறேன்” என்று கூறி அந்த பெண்மணியின் அழைப்பை மறுத்துவிட்டு ஆதிரையுடன் கிளம்பி விட்டான்.

அங்கிருந்து கிளம்பியதில் இருந்தே ஆதிரை எதுவும் பேசாமல் கோபமாக இருப்பதைப் போல் தெரியவும் தேவா அவளிடம்

“என்ன சிந்தனையில் இருந்து கோபத்திற்கு மாறியாச்சு போல” என்றான்.

இந்த கேள்விக்காகவே காத்திருந்தவள் போல “மல்லி எவ்வளவு ஆசையாக வீட்டிற்குக் கூப்பிட்டாள். அவளது அம்மாவும் கூப்பிட்டார். உள்ளே போக எவ்வளவு நேரம் ஆகப் போகிறது? ஏன் குடிசை வீடாக இருந்ததும் உள்ளே வர மனமில்லையோ?” என்று மூச்சு விடாமல் பேசி முடித்தாள்.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன் அவள் பேசி முடிக்கவும் சிரித்து விட்டு “நான் கூட வேறு நினைத்தேன். குடிசை வீடு மாடி வீடு என்று எதுவும் இல்லை ஆதிரை. இந்த பக்கத்தில் பொதுவாக ஒரு பழக்கம் இருக்கின்றது. மணமக்களின் தாய்மாமாக்கள் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றபின் தான் மற்ற வீடுகளுக்குச் செல்வது வழக்கம். அதற்காகத் திருமணம் வழக்கப்படி தான் நடந்ததா என்று கேட்காதே” என்றான்.

“ஓ! இருந்தாளும் அவர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா? அப்படியில்லை என்றாலும் வருத்தமாவது ஆகியிருப்பார்கள்” என்றாள்.

“அவர்களுக்கும் வழக்கமும் நிலைமையும் தெரியும். புரிந்து கொள்வார்கள். அதோடு இல்லாமல் நாளை அம்மாவும் செல்வார்கள் கவலைப்படும் அளவு எதுவும் இல்லை” என்றான்.

அவ்வாறு அவன் கூறும் பொழுது அவன் குரல் மாறியிருந்தது. அந்த குரலிலிருந்த ஏதோ ஒன்று ஆதிரையை பாதித்தது ஆனால் அது என்னவென்று அவளுக்குப் புரியவில்லை. அதைப் பற்றி யோசிப்பதற்குள் அவர்களது வீடும் வந்து விட்டது.

இருவரும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் தன் அறைக்குள் நுழையப் போன ஆதிரையிடம் தேவா “ஒரு நிமிடம் உன்னிடம் பேச வேண்டும்” என்றான்.

“என்ன” என்று கடுப்பாகக் கேட்டவளிடம்

“மல்லியின் தந்தை தான் நம் காரின் டிரைவர். அதோடு, காலையில் பள்ளியில் இருந்து செய்தி வந்ததும் அவள் அம்மாவைத் தான் தேடிப் போனேன். அவர்கள் வீட்டில் இல்லை. வேலைக்குப் போய் விட்டதாகப் பக்கத்தில் கூறினார்கள். அவர்களுக்குச் செய்தி அனுப்பி விட்டுத் தான் உன்னை அழைத்துச் சென்றேன். அவர்கள் செய்தி கிடைத்து எப்போது வருவார்கள் என்று தெரியாது அல்லவா” என்றான்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவள் “இதையெல்லாம் ஏன் என்னிடம் கூறுகிறாய்” என்று புரியாமல் கேட்டாள்.

தேவா “எப்படியும் மல்லியின் பெற்றோர் இருக்கும் போது இவன் ஏன் போனான். அதிலும் நம்மை ஏன் அழைத்து போனான். இவனுக்கு இதில் என்ன லாபம் என்று தான் யோசித்திருப்பாய்” என்று கூறவும் ஆதிரை பதில் ஏதும் கூறாமல் அமைதியாகவே நின்றாள்.

தேவா கூறுவதும் உண்மை தான், ஆதிரை அப்படிச் சிந்தித்தாள் தான். அதிலும் மல்லியின் தாயைப் பார்த்த பிறகு அவளது சந்தேகம் அதிகமாகத் தான் ஆகியிருந்தது. அவளிடம் இருந்து பதில் வராததால் தேவாவே தொடர்ந்தான்

“அவ்வாறு நினைப்பதில் தவறில்லை தான். நான் உன்னிடம் நடந்து கொண்டதில் அப்படிதான் நினைக்கத் தோன்றும்” என்று காரில் நிலைமை அவர்களுக்குத் தெரியும் என்று கூறிய அதே குரலில் கூறிவிட்டு அவளது பதிலுக்கு கூட நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு சில வினாடிகள் நின்றவள், தன் அறைக்குள் சென்று அன்று நடந்த நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் மனத்திரையில் ஓட்டிப் பார்த்தாள்.

எத்தனை முறை யோசித்தாலும் அவளுக்குத் தெரிந்த தேவாவிற்கும் மல்லி கூறிய தேவாவிற்கும் சம்பந்தம் இல்லையென்றே தோன்றியது. மல்லியின் பெற்றோர் இல்லாததால் தான் அவன் அழைக்கச் சென்றேன் என்று கூறினானே தவிர அவன்தான் மல்லியைப் படிக்க வைப்பதாகக் கூறவில்லையே! மணி கூறியதைப் போல பணம் தான் முக்கியம் என்று நினைப்பவர்கள் எப்படி அந்த பணத்தைச் செலவு செய்து மற்றவர்களுக்கு உதவுவார்கள் என்று பல கேள்விகள் அவளுக்குள் தோன்றி மறைந்தன.

நீண்ட நேரம் அப்படியே சிந்தித்துக் கொண்டிருந்தவள் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும் எழுந்து கதவைத் திறந்தாள். அங்குத் தேவா மதிய உணவோடு நின்று கொண்டிருந்தான்.

“அம்மா இல்லாததால் தான் நான் கொண்டு வந்தேன்” என்றவன் அவள் அதை வாங்கியதும் ஒரு நொடி கூட நிற்காமல் அங்கிருந்து போய் விட்டான். எங்கே நின்றால் நீ கொண்டு வந்த உணவு எனக்கு வேண்டாம் எனக் கூறிவிடுவாளோ என்று பயம் அவனுக்கு.

அங்கிருந்து சென்ற தேவா நேராக தன் அறைக்குள் சென்றான். அவனுக்கு அவனை நினைத்தாலே கோபமாக இருந்தது. அவள் முன் நின்று கூட பேச முடியாத சூழ்நிலையை அவன்தானே உருவாக்கிக் கொண்டான். என்ன செய்தால் அவன் செய்த தவறை சரி செய்ய இயலும் என அவனும் பலவாறு யோசித்தாலும் அவனுக்கு எந்த ஒரு விடையும் கிடைக்கவில்லை. செய்த தவறை மாற்ற இயலாது என்று அவனுக்கே புரியவும் அடுத்து என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான்.

ஆதிரையின் நிலையோ அங்கு வேறுமாறி இருந்தது. மணி கூறியதும் மல்லி கூறியதும் மாறி மாறி நினைவில் வந்தது என்றால் இன்னொரு புறம் ஏதோ ஒரு உணர்வு. அது இன்று என்று இல்லை முதன்முதலில் அவனைப் பார்த்த போது தோன்றியது, அது என்னவென்று பலமுறை யோசித்தாலும் அவளுக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் ஏதோ ஒன்றை அவள் மறந்ததைப் போல அவளுக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது.

சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உறைவிடம் என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது ஆதிரைக்கு நினைவு வந்தது. இப்படியே இந்த அறைக்குள்ளேயே அமர்ந்திருந்தாள் பைத்தியம் பிடித்துவிடும் என அவளுக்கு தோன்றவும் அறையை விட்டு வெளியில் வந்தாள்.

வெளியில் வந்தவளுக்கு வீட்டில் யாரும் இல்லாதது நினைவுக்கு வரவும், அறைக்குள்ளேயே மீண்டும் செல்ல எத்தனித்தாள். அதேசமயம் மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த தேவா ஆதிரையைப் பார்த்து விட்டான். வெளியில் வந்தவள் மீண்டும் உள்ளே செல்லவும் தேவா அவளை அழைத்தான்.

“ஆதிரை. என்னமா, எதுவும் வேண்டுமா? வெளியில் வந்துவிட்டு உடனே உள்ளே செல்கிறாயே?” எனப் படியிலிருந்து இறங்கியவாறே கேட்டான்.

அவன் குரல் கேட்டு நின்றவள் சிறிது யோசித்துவிட்டு “இல்லை. அறையின் உள்ளேயே இருப்பது... ஒரு மாதிரி இருந்ததால்..” என்று அவள் இழுக்கவும்

தேவா “தென்னை மரம் எப்படி இருக்கும் என்று தெரியுமா?” என்றான்.

முதலில் அவன் கேள்வியில் இருந்த கேலி புரியாமல் முழித்தவள் உடனே புரிந்து கொண்டு

“அங்கே என் வீட்டிலேயே இரண்டு தென்னை மரங்கள் இருக்கும். உலகத்திலேயே உன் ஊரில் மட்டும் தான் தென்னை மரங்கள் இருப்பதைப் போலப் பேசாதே” எனக் கோபமா பேசிக் கொண்டே போனவளைப் பார்த்து தேவா சிரிக்கவும் பேச்சை நிறுத்தி விட்டு அவனைப் பார்த்து முறைக்கத் தொடங்கி விட்டாள்.

அவள் பேச்சை நிறுத்தியும் சிரிப்பை நிறுத்தாதவனைப் பார்த்து “நீ சைக்கோ மாறியான ஆளா? அடுத்தவர்களைக் கோபமாக்கி, அதை இரசிப்பவனா?” என்றாள்.

அவளது கேள்விக்கு இன்னும் அதிகமாகச் சிரித்தவன் “அப்படி என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஓரளவு நீ கூறியதும்கூட உண்மையே” என்றவன் மீண்டும் அவனே பேசத் தொடங்கினான்.

“நான் தென்னந்தோப்பை பார்க்கப் போகிறேன். உனக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் வருகிறாயா என்று கேட்பேன் தான். ஆனால் அதற்கும் நீ ஏதாவது வாக்குவாதம் செய்வாய்” என்றவனை இடைமறித்து

“அதனால் என்னை கோபப்படுத்தி நீ விளையாடுகிறாய்” என்று ஆதிரை முடித்தாள்.

“அப்படி இல்லை. நீ தவறாக நினைத்துக் கொள்வாயோ என்று எண்ணினேன்” என்றான்.

அவன் கூறியதைக் கேட்டு சிந்தித்தவள் “உன்னுடன் வருவதற்கு எனக்கு விருப்பமில்லை தான். ஆனால்...” என்று இழுத்தவள் அவனும் “ஆனால்” என்று இழுக்கவும் “ம்ம்... ஆனால் அங்கே வேறு யாராவது இருப்பார்கள் என்றால் வருகிறேன்” என்றாள்.

அவள் கூறியதற்குத் தேவா எந்தவித பதிலும் கூறாமல் அவளைப் பார்த்து முறைக்கவும்

“என்ன?” என்றாள்.

“நான் கேட்பதற்கு சரியா பதில் கூறு” என்றவன் அவனே தொடர்ந்து “நாம் இப்பொழுது எங்கே இருக்கின்றோம்?” என்றான்.

அவனது இந்த கேள்விக்கு அவளுக்கும் பதில் கூற விருப்பம் இல்லை தான் ஆனால் அவனது குரல் அவளே அறியாமல் அவளுக்குள் பயத்தைத் தூண்டவும் எந்த விதமான விவாதமும் செய்யாமல்

“உன்னுடைய வீட்டில்” என்றாள்.

“நம்முடைய” என்று தேவா திருத்தவும் அதற்கு ஆதிரையிடம் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை.

அமைதியாகத் தரையை பார்த்து நின்று கொண்டிருந்தவளிடம் தேவாவோ “இங்கு உன்னையும் என்னையும் தவிர வேறு யாராவது இருக்கின்றார்களா?” என்றான்.

அவனது கேள்விகளின் நோக்கம் ஆதிரைக்குப் புரியவும், தான் கூறியதிலிருந்த தவறு அவளுக்குப் புரிந்தது தான். ஆனால் தன் தவறுகளை அதிலும் தேவாவிடம் ஒப்புக்கொண்டால் அது எப்படி ஆதிரை ஆவாள்.

எனவே அவனது கேள்விக்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து விட்டு “நீ இப்படி தான் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பாயா என்ன? இப்பொழுது என்னை தென்னந்தோப்பிற்கு அழைத்துச் செல்ல முடியுமா முடியாதா?” என்றாள்.

தேவாவும் பதிலுக்கு “நானா! நானா பேசிக் கொண்டே இருக்கின்றேன். நீதான் பக்கம் பக்கமாகப் பேசுகிறாய்” என்றான்.

அவனது குரலிலிருந்த கோபம் மறைந்திருப்பதை ஆதிரையும் கவனிக்கத் தவறவில்லை அதற்கு பின்புமாய் அவளது பயம் அவளிடம் இருக்கும்? அப்படி ஒரு உணர்வு இருப்பதையே ஆதிரை மறந்துவிட்டாள்.

“நான் ஒன்றும் பக்கம் பக்கமாகப் பேசவில்லை...” என இருவரும் மாறி மாறி ஒரு பெரிய வாக்குவாதத்தையே தொடங்கி விட்டனர்.

எத்தனை நேரம் அது தொடர்ந்ததோ “தம்பி” என்று வீட்டின் வாசலிலிருந்து குரல் வரவுமே அவர்கள் சண்டையை நிறுத்தி விட்டு வெளியில் சென்று பார்த்தனர்.

அங்கே அறுபது வயதையோற்றிய முதியவர் ஒருவர் நின்று கொண்டிருக்கவும் அவரைப் பார்த்து தேவா “வாங்க முத்தையா. அங்கு தான் வந்துகொண்டிருந்தோம் அதற்குள் நீங்களே வந்து விட்டீர்களே! எதுவும் அவசர செய்தியா?” என்றான்.

அதற்கு அந்த முதியவர் “இல்லை தம்பி. வருகிறேன் என்றீர்களா. நேரமாகி விட்டது காணுமே! மறந்துவிட்டீர்களோ என்று ஒரு எட்டு பார்த்து போகலாமென்று வந்தேன் தம்பி” என்றார்.

“அங்கு தான் இருவரும் வந்து கொண்டிருந்தோம்” என்றவன் ஆதிரையிடம் “ஆதிரை. இவர்தான் முத்தையா. நம் தென்னந்தோப்பில் பல வருசமாக வேலை செய்கிறார். நம் குடும்பத்தில் ஒருவர் போல” என அறிமுகம் செய்து வைத்தான்.

அந்த முதியவரும் ஆதிரையை பார்த்து “வணக்கமா” என வணக்கம் வைக்கவும் இவளும் மரியாதையாக ஒரு புன்னகையுடன் வணக்கம் கூறினாள். பின்பு முத்தையா “நான் முன்னே செல்கிறேன் தம்பி. நீங்கள் பொறுமையாக வீட்டை பூட்டிவிட்டு வாருங்கள்” எனக் கூறி சென்றார்.

அவரிடம் சரியென்றுவிட்டு பூட்டை எடுக்க உள்ளே சென்ற தேவாவின் பின்னாலேயே சென்ற ஆதிரை அவனிடம் “இதுவரை நீ நம் வீட்டைச் சுற்றி பார்க்கவே இல்லையா?” என மிகவும் ஆச்சரியமாகக் கேட்டான்.

“இல்லை. ஏன்?” என்றவள் தொடர்ந்து “உன்னால் எதையும் நேரடியாகக் கூறவே முடியாதா?” என்றாள்.

“ஓ! தெளிவாகவே கூறலாமே” என்றவன் எதுவும் கூறாமல் அவளை அழைத்துக் கொண்டு வீட்டின் வெளிப்புறம் வந்து வீட்டைப் பூட்டு போட்டு மூடினான்.

இவன் செய்கையில் பொறுமை இழந்து கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்து வீட்டின் நுழைவாயிலைக் காட்டி “அங்கே என்ன தெரிகிறது?” என்று கேட்டான்.

ஆதிரையும் தன் பொறுமையை இழந்து பிடித்துக் கொண்டு “வீட்டின் காம்பௌன்ட்” என்றவளிடம் “அதிலிருந்து உள்ளே வந்தால்?” என்று அடுத்த கேள்வியை ஆரம்பித்தான்.

அதற்குப் பதில் கூறாமல் ஆதிரை முறைக்கவும் “சொல். நான் தெளிவாகச் சொல்கிறேன்” என்றான். இவள் பதில் கூறாமல் அவன் எதுவும் கூறப்போவதில்லை என்று தெரிந்ததால் “வீடு” என்றாள்.

“ம். வீடு, ஆனால் வீட்டை தாண்டியதும்?” என்று கேட்டுக் கொண்டே இரண்டு அடி பின்னாடி நடந்தான்.​

தொடரும்...​

வாசகர்களின் கருத்துகளே எழுத்தாளர்களை அதிகம் ஊக்கப்படுத்தும். எனது கதை அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது உங்கள் கருத்துகளும் விமர்சனங்களும் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் பதிவிடவும். நன்றி.

 
Last edited:

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
அத்தியாயம் 6

தேவா எதுவும் கூறாமல் பின் நோக்கி நடக்கவும் ஆதிரையும் இரண்டடி முன் நோக்கி நடந்தவள் அவர்கள் வீட்டைத் தாண்டியதும் இருந்த தென்னந்தோப்பை முதன் முதலாகப் பார்த்தாள்.

கண்கள் எட்டும் தூரம் வரை தென்னை மரங்களே இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்தன. அத்தனை மரங்களை ஒன்றாக இதுவரை ஆதிரை உண்மையாகவே பார்த்தது இல்லை தான்.

தன்னையும் மீறிய ஆச்சரியத்தில் தேவாவிடம் “இத்தனை மரங்களா?” என்றாள்.

அதுவரை ஆதிரையையே பார்த்துக் கொண்டிருந்தவன் சிரித்துவிட்டு “மொத்தமாக இருநூற்று பதினெட்டு மரங்கள் இருக்கின்றன. சரி வா, முத்தையா காத்திருப்பார்” என அவளை அழைத்துக் கொண்டு அந்த தோப்பினுள் சென்றவனிடம் ஆதிரை

“நான் ஒரு சந்தேகம் கேட்கலாமா?” என்றாள்.

கேள் என்பதைப் போல அவன் சமிங்கை செய்யவும் “பொதுவாக நான் கேள்விப் பட்ட வரை தோப்பு என்பது தனியாக வீட்டில் இருந்து தூரமாகத் தானே இருக்கும்?” என்றாள்.

“அப்படியா? யார் கூறி கேள்விபட்டீர்கள்?” என்றவனிடம் “இல்லை, ஊரில் என் பாட்டி வீடு கூட ஒரு கிராமத்தில் தான் இருக்கின்றது. அங்கே மாந்தோப்பெல்லாம் இருக்கும். ஆனால் வீட்டிலிருந்து தூரமாகத் தான் இருக்கும்” என்றாள்.

தேவா “பொதுவாக மரங்கள் அதிகமாக இருக்கும் பொழுது வீட்டிற்கும் தூரமாக இருக்கும் தான். அது இடவசதிக்காகக் கூட இருக்கலாம். அதோடு இல்லாமல் வீடுகள் அடுத்தடுத்து இருக்கும் பொழுது ஒரு தோப்பை உருவாக்க முடியாதல்லவா” என்றான்.

அவன் கூறுவதைக் கேட்டு சிந்தித்தவள் அவனிடம் “பிறகு உன் வீட்டில் எப்படி ஒரு தோப்பை உருவாக்கினீர்கள்?” என்றவனிடம் தேவா “நம் வீட்டில்” என ‘நம்’ எனும் வார்த்தையில் அழுத்தம் கொடுத்துக் கூறவும் “சரி சொல்லு” என்றாள் ஆதிரை.

அதற்குள் இருவரும் பேசிக் கொண்டே முத்தையா இருக்கும் இடத்திற்கு வரவும் தேவா “மீதி வேலை முடிந்ததும் கூறவா” என்று கேட்டான்.

அதற்கு “சரி” என்றவள் “ஆனால் என்ன வேலை” என்று கேட்டாள்.

“ஒரு சிறிய வேலைதான். முடித்ததும் வீட்டிற்குச் செல்லலாம். உனக்கு நேரம் போகவில்லை என்றால் வீட்டிற்குப் போவதற்கு முன் கூறிவிட்டுச் செல், சரியா” என அவளிடம் கூறிக் கொண்டே தன் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டவன், தன் சட்டையையும் கிழட்டி அங்குள்ள தண்ணீர் தொட்டியின் கட்டை மீது வைத்தான்.

இவன் என்ன தான் செய்கிறான் என்று ஆதிரை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே முத்தையா எங்கோ சென்று சில கூடைகளுடன் அங்கு வந்தார். அவரிடமிருந்து கூடைகளை வாங்கிக் கொண்டே

“சரி ஆதிரை நீ அமர்ந்து கொள்” எனக் கூறவும் ஆதிரை “என்ன வேலை என்று கூறப்போகிறாயா இல்லையா?” என்றாள்.

முத்தையாவிடம் வேலையை ஆரமிக்க கூறிவிட்டு ஆதிரையிடம் “தேங்காய் பறித்து கீழே கிடக்கின்றது பார். அவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் போட வேண்டும்” என்றவனிடம் ஆதிரை

“இவ்வளவு தானா? இதற்கா வேலை, வேலை என்று அவ்வளவு பில்டப் கொடுத்தாய்?” என்றாள்.

“என்னம்மா? இரநூற்று பதினெட்டு மரங்களின் தேங்காய்களையும் ஒரே இடத்தில் சேர்ப்பது சிறிய வேலையா?” என்றான்.

“ஆமாம். இதுவெல்லாம் ஒரு வேலையா? நானும் செய்கிறேன்” என்று ஆதிரை கூறவும் தேவா பதறிக்கொண்டு “அதெல்லாம் வேண்டாம் ஆதிரை. உன்னால் முடியாது” என்றான்.

அவ்வளவுதான் ஆதிரை வழக்கம் போல முருங்கை மரம் ஏறிவிட்டாள். பொதுவாகவே உன்னால் முடியாது என்று யாரும் கூறினால் வேண்டும் என்றே அதைச் செய்பவள். அதில் பாதி உண்மையாகவே அவளால் செய்ய முடியாமல் போவதும் உண்டு. ஆனால் இன்று கூறியது தேவா எனும் போது அதை எப்படி செய்யாமல் இருப்பாள்.

அவனிடம் சண்டையிட்டுச் செய்தே தீருவேன் என்று அவள் நிற்கவும் வேறு வழியின்றி தேவாவும் ஒரு நிபந்தனையுடன் ஒத்துக்கொண்டான்.

“சரி. ஆனால் உன்னால் எப்போது முடியவில்லையோ அப்போது அமைதியாக அமர்ந்துவிட வேண்டும் சரியா?” என்று கேட்டவனிடம் சரியெனத் தலையாட்டிவிட்டு வேலையில் இறங்கினாள்.

கூடைகளில் தேங்காய்களை எடுத்து மட்டும் வைத்தால் போதும் என்று அவளிடம் கூறியிருந்தனர். அவன் எடுத்து வைக்க வைக்க அவர்கள் அதை எடுத்துச் சென்றனர். முதல் ஐந்து பத்து நிமிடங்களுக்கு அவளை பொருத்தவரை நன்றாகத் தான் இருந்தது போக போகத்தான் தேவா கூறியதின் உண்மை அவளுக்கு புரிந்தது.

ஒவ்வொரு மரமாக போய் குனிந்து தேங்காய்களைப் பொறுக்கவும் அவள் கை,கால்கள் எல்லாம் வலி தொடங்கிவிட்டது. பொதுவாகவே ஆதிரை வீட்டில் எந்த வேலையும் பார்த்தது இல்லை. சமையலில் மட்டுமே தன் தாய்க்கு உதவி செய்தது உண்டு அதுவும் அபூர்வமாக நடந்தால் தான் உண்டு.

கேட்பதற்கு சுலபமாக இருக்கவும் தேவையில்லாமல் வாய் கொடுத்து மாட்டிக்கொண்டோமோ என்று இருந்தது அவளுக்கு. பேசாமல் தேவாவிடம் கூறிவிட்டு ஓரமாக அமர்ந்து விடலாமா என்று யோசித்தவள்

‘இல்லை, இல்லை, ஏற்கனவே என்னால் முடியாது என்று கூறினான். அவனிடம் சென்று எக்காரணம் கொண்டும் நிற்கக் கூடாது’, என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் இவள் கூறாவிட்டாலும் இவளது வேலையின் வேகம் குறைந்திருப்பதை மற்ற இருவரும் கவனிக்க தவறவில்லை.

முத்தையா “அம்மா. நீங்கள் பட்டனத்திலிருந்தவர். உங்களுக்கு இதுவெல்லாம் பழக்கம் இருக்காது. நீங்கள் அமருங்கள்” என்றார்.

அவளுக்கும் அமர தான் ஆசை. ஆனால் அமர்ந்து விட்டால் தேவா கூறியது அல்லவா உண்மையாகிவிடும். எனவே அமர மறுத்து விட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தாள்.

சிறிது நேரத்தில் தேவா முத்தையாவிடம் பணம் கொடுத்து எங்கோ அனுப்புவதை ஆதிரை கவனித்தாள். அவரை அனுப்பி விட்டு நேராக ஆதிரையிடம் வந்தவன் அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்கும் அருகில் இருந்த கட்டையில் அவளை அமர கூறிவிட்டு அவனும் அமர்ந்தான்.

“எங்கே அவரை அனுப்பினாய்” என்று அவள் கேட்கவும் “தேநீர் குடித்துவிட்டு நமக்கும் வாங்கிவர” என்றான்.

ஆதிரையிடம் அவன் பேசிக் கொண்டிருந்தாலும் அவனது பார்வை வேறு எங்கோ இருக்கவும் ஆதிரை அதைப்பற்றி கேட்டாள். அதற்குத் தேவா

“இல்லை இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று பார்த்தேன்” என்றவன் “உன்னால் முடியவில்லை எனும் போது பேசாமல் அமர்ந்தால் என்ன?” என்றான்.

“யாரால் முடியவில்லை. நான் நன்றாக வேலை செய்கிறேன் என்று உனக்குப் பொறாமை” என்றவளைத் தேவா புருவம் உயர்த்தி பார்க்கவும் “சரிசரி. ஏதோ பழக்கம் இல்லாத வேலை என்பதால் சிறிது மூச்சுவாங்குகிறது அவ்வளவுதான்” என்றாள்.

ஆதிரைக்கே தான் சொல்வது அப்பட்டமான பொய் என்று தெரியும் தான். ஏனென்றால் அவளே வியர்த்து, அவள் கூறியது போல் சிறிதளவு இல்லாமல் நன்றாகவே மூச்சுவாங்கியும் கொண்டிருந்தாள்.

தேவா “சரி. உன்னால் முடியும் என்று நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம்” என்று கூறவும் ஆதிரை தான் செய்தே தீருவேன் என்றாள். தேவா அதை ஏற்று கொள்வதாக இல்லை எனவும் சின்ன உதவிகளாவது செய்கிறேன் என்றாள். சரி ஆனால் முத்தையா வந்த பிறகே செய்யலாம் அதுவரை ஓய்வெடு என்று கூறிவிட்டு அவன் வேலையைத் தொடர்ந்தான்.

ஒன்றாக போடப்பட்டிருந்த தேங்காய்களை இரண்டு வாரியாக பிரித்துக் கொண்டிருந்தவனிடம் ஆதிரை “நீயும் ஓய்வெடுத்தால் என்ன” என்றாள்.

“முத்தையா வர அரைமணி நேரமாவது ஆகலாம்” என்று அவன் கூறவும்​

“ஏன் அவ்வளவு கூட்டமாக இருக்குமா” என்றாள்.

தேவாவும் வேலைகளைப் பார்த்துக் கொண்டே “இல்லை. ஊருக்குள் சென்றால் தான் கடைகள் இருக்கும்” என்று கூறவும்

ஆதிரை “ஊருக்குள்ளா? அப்போது நாம் ஊருக்குள் இல்லையா?” என்றாள்.

அவளது பாணியிலேயே தேவாவும் “இல்லையே” என்று கைகளை விரிக்கவும் ஆதிரை அவனைப் பார்த்து முறைக்க தொடங்கினாள்.

“சரி. சரி. கோபம் கொள்ளாதே” என்றவன் அவனே தொடர்ந்து “நமக்கு ஒரு வீடு ஊருக்குள் இருக்கின்றது ஆதிரை” என்றான்.

“பிறகு ஏன் நாம் அங்கு இல்லாமல் இங்கு இருக்கின்றோம்” என்றவளிடம்

“கேள்விகள் கேட்காமல் உன்னால் இருக்க முடியாதா?” என்றான்.

அவன் கேட்டு முடிப்பதற்குள் ஆதிரை “முடியாது” எனவும் தேவாவிற்கே சிரிப்பு வந்துவிட்டது.

சிரித்து கொண்டிருந்தவனைப் பார்த்து “சிரித்துச் சமாளிக்காமல் பதில் சொல்” என்று அவள் அதிலேயே நிற்கவும் வேறுவழியின்றி தேவாவும்

“நமக்கு ஒரு வீடு ஊருக்குள் இருக்கிறது தான் ஆதிரை. அதில்தான் நான் பிறந்து கொஞ்ச வருடங்கள் வளர்ந்தேன். நம் தாத்தாக்கள் கட்டி ஒன்றாக வாழ்ந்த வீடு. ஆனால் சில காரணங்களால் நம்மால் இப்போது அங்குச் செல்ல முடியாது. சில பிரச்சனைகள் என்று வைத்து கொள்ளேன். அவைகள் தீரும் வரை நம்மால் அங்குச் செல்ல முடியாததால் இந்த வீட்டிற்கு வந்து விட்டோம். உண்மையைக் கூறவேண்டும் என்றால் இது நம் பண்ணை வீடு”, என்றவன் தொடர்ந்து “அடுத்த கேள்வியாக அப்படி என்ன பிரச்சனை என்று கேட்காதே. இப்போது என்னால் உன்னிடம் கூற இயலாது” என்று முடித்துவிட்டான்.

ஓ. என்றதுடன் ஆதிரையும் பெரிதாக எதுவும் கேட்கவில்லை. ஆனால் தற்போது தேவா முழுமையாகக் கூறாமல் விடுவதால் அவர்கள் வாழ்க்கையே மாறப்போகிறது என்று அன்று இருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேலைத் தெரிந்திருந்தால் தேவா அன்றே முழுமையாகக் கூறியிருப்பான்.

ஆனால் அதுதான் விதியென்று இருக்கையில் அதை யாரால் மாற்றிடமுடியாது.

அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இருவரும் வீடு திரும்பப் பொழுதாகிவிட்டது. வீட்டை திறக்கும் பொழுது ஆதிரையிடம்

“ஆதிரை, எனக்காக நீ ஒரு உதவி செய்ய வேண்டும்” என்று தேவா கூறவும்

ஆதிரை “காலையில் இருந்து ஒரு உதவி, ஒரு உதவி எனப் பல உதவிகளாகி விட்டது” என்றாள்.

தேவா “அதுசரி, இதே.. நான் உன்னிடம் வந்து இதைச் செய் அதைச் செய் என்றால் செய்துவிட்டு தான் அடுத்த வேலையைப் பார்ப்பாய் அல்லவா” என்று அவன் கேட்கவும் ஆதிரை அதுவும் கூறாமல் வீட்டினுள் சென்றாள்.

பதில் கூறாமல் உள்ளே சென்றவளைத் தேவா கூப்பிடவும் நின்றவள் “என்ன உதவி என்று சொல்” என்றாள்.

அவள் கேட்டதே பெரிது என நினைத்தவன் “நாளை அண்ணனும் அண்ணியும் ஊரிலிருந்து வருகிறார்கள்” என்று அவன் கூறும் பொழுதே இடைமறித்து

“அண்ணன், அண்ணியா?” என்றாள்.

“எனக்கு ஒரு அண்ணன் உண்டு”, என்றான்.

“ஓ” என்று ஆதிரை கூறவும் தேவாவே தொடர்ந்து “அண்ணியின் அம்மா வீட்டிற்குச் சென்றிருந்தார்கள். நான் உன்னைத் திருமணம் செய்ததும், அப்பா அவர்களை சில நாட்கள் அங்கேயே இருக்கச் சொல்லிக் கூறிவிட்டார். ஆனால் அங்கேயே இருக்க இயலாது அல்லவா. அதனால் நாளை வருகிறார்கள்” என்றான்.

அமைதியாகக் கேட்டு கொண்டிருந்த ஆதிரை அவன் முடிக்கவும் “ஏன்?” என்று ஒற்றை வார்த்தையில் கேட்கவும் தேவாவிற்கு அவளது கேள்வி புரியவில்லை.

புரியாமல் முழித்தவன் “என்ன? என்ன ஆதிரை ஏன் என்றால் என்ன அர்த்தம்?” என்றான்.

“நீ என்னை திருமணம் செய்ததற்கு ஏன் அவர்கள் வரக்கூடாது என்று உன் அப்பா கூறினார்” என்றாள்.

“ஓ, அதுவா.. அது, நீ அன்று என்னை வெளியில் அதாவது வீட்டின் வாசலில் அமர வைத்தாய் அல்லவா அதைப் பார்த்துப் பயந்து விட்டார்” என்று சிரித்தான்.

ஆதிரை ஒன்றும் புரியாமல் புருவத்தைச் சுருக்கவும் தேவாவே

“கோபித்துக் கொள்ளாதே தவறான அர்த்தத்தில் கூறவில்லை. நீ மிகவும் கோபமாக இருந்தாய். அதை வீட்டில் உள்ள அனைவர் மீதும் காட்டி விடுவாயோ என்று எங்கள் அனைவருக்கும் பயம். அண்ணனை எதுவும் கூறினால் பரவாயில்லை. ஆனால் அண்ணியை ஏதாவது கூறிவிட்டால், அண்ணி எதுவும் நினைக்க மாட்டார்கள் தான், புரிந்துகொள்வார்கள், ஆனால் அவர்களை யாராவது ஏதேனும் கூறிவிட்டால், எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால் தான் உன் கோபம் குறைந்ததும் வரலாம் என்று கூறினார்” என்றான்.

“இப்போது என் கோபம் குறைந்து விட்டது என்று யார் கூறினார்கள்” என்றாள்.

அவள் குரலில் இருந்த வித்தியாசத்தைக் கண்டவன் “உன் கோபம் குறைந்து விட்டது என்று யாரும் கூறவில்லை. அது அவ்வளவு சீக்கிரம் குறையும் என்று நாங்கள் யாரும் நினைக்கவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் என் மீதுள்ள கோபத்தை நீ வேறு யார்மீதும் காட்ட மாட்டாய் என்று புரிந்து கொண்டோம்” என்றான்.

அவன் கூறியதற்கு எந்தவித பதிலும் கூறாமல் தன் அறைக்குள் செல்ல போனவள் ஒரு நிமிடம் நின்று தேவாவை பார்த்து “உன் தந்தை எங்கே?” என்று கேட்டாள்.

அவளது கேள்விக்கு தேவா “அவர் வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார்” என்று தரையைப் பார்த்துக் கூறியவன் அதற்குமேல் அங்கு நிற்காமல் படியேறிச் சென்றுவிட்டான்.

பழக்கம் இல்லாமல் ஒரே நாளில் வேலை பார்த்ததின் களைப்பில் படுத்தவுடன் ஆதிரை உறங்கிவிட்டாள். காலையில் எழுந்த பொழுது வீடே ஒரே பரபரப்பாக இருந்தது. சன்னல் கதவைத் திறந்து பார்த்த போது அங்கு நின்றிருந்த கார், அவளது மாமியார் மீனாட்சி வீட்டிற்கு வந்துவிட்டதை அவளுக்கு உணர்த்தியது.

அறையை விட்டு வெளியில் சென்று பார்க்கலாமா என்று நினைத்தவள் அப்போது தான் மணியைப் பார்த்தாள். மணி ஏழரையை நெருங்கிக் கொண்டிருந்தது காலையில் எட்டு மணிக்கெல்லாம் காலை உணவைக் கொண்டு வந்து வைப்பது மீனாட்சியின் வழக்கம்.

எப்படியும் அரைமணி நேரத்தில் அவரே உள்ளே வந்துவிடுவார் என்று எண்ணியவள் அவசரமாக எழுந்து அவளது படுக்கையைச் சரிசெய்து விட்டுக் குளிக்கச் சென்றாள். குளித்து விட்டு வரும்பொழுது அவளது உணவை மீனாட்சியை அல்லாமல் வேறு ஒரு நாற்பது வயதையொட்டிய பெண் வைப்பதை கவனித்தவள் அந்த பெண்மணியிடம் “நீங்கள் யார்?” என்று கேட்டாள்.

அந்த பெண் ஆதிரையை எதிர் பார்க்கவில்லை என்று அவள் பதறியதில் தெரிந்தது. அவளது பதற்றத்திற்கான காரணம் புரியாமல் ஆதிரை தனது புருவங்களை உயர்த்தியவாறு “என்ன ஆகிற்று? யார் நீங்கள்” என்று பொறுமையாகவே கேட்டாள், அவளது குரலில் வியப்பும் இருக்கத் தவறவில்லை.

அந்த பெண் பயந்த குரலோடு “நான் இங்கு சமையல் வேலை பார்கிறவளம்மா பெரிய அம்மாதான் உங்களுக்கு உணவு வைக்கச் சொன்னார். நான் வந்த பொழுது நீங்கள் குளியல் அறையிலிருந்தீர்கள் அதனால் தான் உணவை வைத்து விட்டுச் செல்லலாம் என்று உள்ளே வந்தேன்” என்றாள்.

அந்த பெண் பேசவும் ஆதிரைக்கு அவளது பயத்தின் காரணம் ஓரளவு புரிந்தது. அனுமதியின்றி அறையினுள் வந்ததற்காகப் பயந்திருக்கிறாள் என்று நினைத்தவள் அவளிடம் புன்னகைத்து “பரவாயில்லை நான் எதுவும் நினைக்கவில்லை” என்றாள்.

ஆதிரை அவளிடம் சாதாரணமாகப் பேசிய பிறகே அந்த பெண் சிறிதளவு பயத்திலிருந்து வெளிவந்தாள்.

அவளும் பதிலுக்கு ஆதிரையிடம் புன்னகைத்துவிட்டு “மறக்காமல் உணவு உண்டுவிடுங்கள்” எனக் கூறி அறையை விட்டு வெளியேற முயன்றவளிடம் “அவர்கள் எங்கே” என்று ஆதிரை வினவினாள். யாரை கேட்கிறீர்கள் என்று அந்த பெண் கேட்கவும் என்ன கூறுவது என்று யோசித்து ஆதிரை “அத்தையைக் கேட்டேன்” என்றாள்.

“பெரிய அம்மாவை கேட்டீர்களா? இன்று ராம் தம்பியும், சின்னம்மாவும் வருகிறார்கள் அல்லவா. அவர்களுக்கு மதிய உணவு தயார் ஆகிறது. அதை மருமகளுக்காகப் பெரிய அம்மாவே தன் கையால் சமைக்கிறார்கள் பெரிய மருமகள் என்றால் அவருக்கு உயிர்” என்று கூறியவள் விடைபெற்றுச் சென்றாள்.

அந்த பெண்மணி எந்த நோக்கத்தில் கூறினாளோ ஆனால் ஆதிரைக்கு இனம்புரியாத ஒரு உணர்வு தோன்றியது. ஏனோ திடீரென வேறு ஒருவரது வீட்டில் தான் இருப்பதாக உணர்ந்தாள்.

முதல் நாள் இரவு தேவா எங்கள் அண்ணியை யாரும் ஏதேனும் கூறினால் எங்களால் தாங்க முடியாது என்று கூறியதும் இன்று அந்த பெண்மணி பெரிய மருமகள் என்றால் மீனாட்சிக்கு உயிர் என்று கூறியதும் நினைவுக்கு வர வர இதுவரை முகம் பார்க்காத யார் என்றே அறியாத, இவ்வளவு ஏன் பெயர் கூட தெரியாத தேவா வீட்டின் மூத்த மருமகள் மீது ஆதிரைக்குக் கோபம் கோபமாக வந்தது.​

தொடரும்...
வாசகர்களின் கருத்துகளே எழுத்தாளர்களை அதிகம் ஊக்கப்படுத்தும். எனது கதை அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது உங்கள் கருத்துகளும் விமர்சனங்களும் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் பதிவிடவும். நன்றி.

 
Last edited:

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
அத்தியாயம் 7

ஆதிரையின் கோபம் அதிகரிப்பதைப் போலவே அடுத்தடுத்த நிகழ்வுகளும் வரிசையாக நடந்தேறின. கோபத்தின் உச்சியில் அமர்ந்திருந்தவள் காரின் சத்தம் கேட்டு தன் அறையின் கதவுகள் வழியே எட்டிப் பார்த்தாள் அங்கே காரில் இருந்து ஒரு ஜோடி இறங்குவதைப் பார்த்ததும் தேவாவின் அண்ணனும் அண்ணியும் வந்து விட்டார்கள் என்று ஆதிரைப் புரிந்து கொண்டாள்.

ஆதிரைக்கு விருப்பம் இல்லாமல் தான் அவளது திருமணம் நடந்தது. இன்றுவரையிலும் தேவாவையும் அவள் கணவனாக ஏற்றுக்கொள்ளவில்லை, அந்த வீட்டையும் தன் புகுந்த வீடாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஏனோ அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அவளை விடவும் வேறோரு பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

காரிலிருந்து தேவாவின் சாயலில் இறங்கிய இளைஞனைப் பார்த்ததுமே அவன் தான் தேவாவின் அண்ணன் என்று புரிந்து கொண்டவள், அவனுக்கு அருகிலிருந்த பெண்ணை கவனிக்கத் தொடங்கினாள்.

அந்த பெண் மீனாட்சியம்மாளிடம் சிரித்து ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். மீனாட்சியும் தன் கைகளால் அவளது தலையை தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த காட்சியைப் பார்த்தவளுக்கு இதுநாள் வரை மீனாட்சி தன் அருகாமையில் கூட வந்து பேசாதது முதன்முறையாகக் கருத்தில் பட்டது. காட்சிக்கு அழகுகாட்டுவதைப் போல அல்லது எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல என்றும் கூறலாம். அதைப்போலத் தேவாவும் அங்கு வந்து சேர்ந்தான்.

அனைவரும் சில விநாடிகள் பேசிவிட்டு வீட்டின் உள்ளே சென்றார்கள். பேசியவர்களுக்கு இடையில் சிரிப்பிற்குக் குறையில்லாமல் இருந்தது.

‘சரி. எப்படியும் அறிமுகம் செய்து வைக்க என்னிடம் தானே வந்தாக வேண்டும். அப்போது பார்த்துக் கொள்கிறேன்’ என்று நினைத்தவள் அவர்கள் வருகைக்காக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து காத்திருக்க ஆரமித்தாள்.

நீண்ட நேரமாகியும் அவள் அறைக்குள் யாரும் வந்ததைப் போலத் தெரியவில்லை. நேரம் போகப் போக ஆதிரை தான் அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்தவாறே உறங்கிவிட்டாள்.

சிறிது நேரத்தில் யாரோ கதவைத் திறந்து உள்ளே வரும் சத்தம் கேட்கவும் கண்களைத் தூக்கம் கலைந்து பார்த்தாள். அங்கே காலையில் பார்த்த அதே சமையல் செய்யும் பெண் மதிய உணவு வைப்பதை பார்த்தாள். ஆதிரை எதுவும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருக்கவும் வந்த பெண்ணும் எதுவும் கூறாமல் உணவை அங்கிருந்த மேஜையின் மீது வைத்துச் சென்றாள்.

யாரோ ஒருத்தி வந்ததால் வீட்டில் வேலை செய்பவர்கள் கூட தன்னை மதிக்கவில்லை என்று ஆதிரை நினைத்தாள். ஆனால் ஆதிரை அறியாத வேறு சில விஷயங்கள் இருந்தன. அது அங்கு வேலை பார்த்த அனைவரும் ஆதிரையைப் பார்த்துப் பயந்தார்கள் என்பது தான். ஆனால் அதற்கு ஒரு காரணமும் இருந்தது. அந்த காரணம் ஆதிரையின் கணவன் தேவாதான்.

தேவாவின் தாத்தா தான் ஊரிலேயே பணக்காரராக இருந்தார். அதே சமயம் அனைவருக்கும் உதவுவதிலும் முன் நிற்பவராகவும் இருந்தார். தேவாவை வளர்த்தவரும் அவர்தான். அவரை பார்த்து வளர்ந்ததாலோ ஏனோ அவரைப்போலவே தேவாவும் அனைவருக்கும் உதவுவதை தன் முக்கியமான கொள்கையாக வைத்திருந்தான்.

சதாசிவம் மீனாட்சிக்கு முதல் மகனாக ராம் இருந்தாளும் அவர்களது முக்கியமான குடும்ப தொழில்களை எல்லாம் தேவாதான் பார்த்துக் கொண்டிருந்தான். அதே போலப் படிப்பிலும் முதலிடம் வாங்கிவிடுவான்.

அக்கிராமத்தில் யார் வீட்டு விஷயமாக இருந்தாலும் துக்கமான நிகழ்வுகளாக இருந்தாலும் தேவாதான் முதல் ஆளாக இருப்பான். அக்கிராமம் மட்டுமின்றி சுற்றியிருந்த கிராம மக்களும் தேவாவின்மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். தன் வீட்டுப் பிள்ளைகளையும் தேவாவைப் போல் வளர்க்க ஆசைப்பட்டார்கள். சிறுவர்களும் இளைஞர்களும் கூட தேவாவையே தன் முன்மாதிரியாக வைத்திருந்தனர்.

அனைவரும் தேவாவை தன் வீட்டில் ஒரு உறுப்பினராகவே கருதினர். அந்த கிராமத்தில் சுற்றுவட்டாரங்களில் உள்ள பணக்காரர்களில் கல்யாண வயதில் பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்களுள் பலரும் தங்கள் பெண்ணை தேவாவிற்குத் திருமணம் செய்து வைக்கச் சதாசிவத்திடம் முயன்று கொண்டிருந்தனர். ஆனால் சதாசிவம் இப்போது திருமணம் செய்யும் எண்ணம் இல்லையென்றே கூறி தட்டிக்கழித்து வந்தார்.

ஆனால் சதாசிவம் உட்பட யாருமே தேவா இப்படி ஒரு திருமணம் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. என்னதான் தேவா அப்படி ஒரு திருமணம் செய்திருந்தாளும், பலர் ஆதிரை மிகவும் கொடுத்து வைத்தவள் என்று தான் நினைத்தார்கள்.

ஆனால் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாத, அனைவரும் மதிக்கும் தேவாவையே ஆதிரை வீட்டை விட்டு வெளியில் போகச் சொன்னது அனைவருக்குமே பெரிய ஆச்சரியம் என்றால். அவள் அதற்குப் பின் யாருடனும் பேசாமல் தனி அறையில் இருப்பதும் ஊர் முழுவதும் பரவி இருந்தது.

இதற்கு முன் அறியாத ஊரில், தன் விருப்பம் இல்லாமல் தாலி கட்டியவனை ஆட்டி வைக்கிறாள் என்று சிலர் பேசிக் கொண்டாலும், அவனிடம் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் தங்கள் முதலாளியையே இப்படி ஆட்டி வைப்பவள் தங்களையும் பாடாய்ப் படுத்தி விடுவாளோ என்று அவள்மீது அனைவருக்கும் பயம் இருந்தது.

ஆனால் இது எதுவும் தெரியாத ஆதிரையின் கோபம் முழுவதும் அந்த வீட்டின் மூத்த மருமகள் மீதே இருந்தது. அதை யார்மீது காட்டுவது என்று தெரியாமல் அவளது மதிய உணவின் மீதே காட்டினாள். அதன் விளைவாக அவள் மதியம் உண்ணாமல் இருந்ததே மிச்சமானது. இப்போது அவளது கோபத்துடன் பசியும் சேர்ந்து கொண்டது.

அவள் உணவு உண்டிருப்பாள் என்று அந்த பாத்திரங்களை எடுக்க வந்த பெண் அவள் உண்ணாமல் இருக்கவும் தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்தாள்.

“எனக்கு பசியில்லை” என்று ஆதிரை கூறவும் வேறு வழியின்றி கொண்டு வந்து வைத்திருந்த உணவுகளை எடுத்துச் சென்றாள் அந்த பெண்.

ஆதிரை உணவை திருப்பி அனுப்பி விட்டாள் என்று தெரிந்ததும் மீனாட்சி அல்லது தேவா என யாராவது அவளைத் தேடி வருவார்கள் என்று உள்ளுக்குள் அவள் எதிர்பார்த்தாள் தான். அவள் எதிர் பார்த்ததைப் போல அவளைத் தேடி தேவா வந்தான் தான். ஆனால் அது மதிய உணவை அனுப்பிய பிறகு இல்லாமல் இரவு உணவை அனுப்பிய பிறகே வந்தான்.

வந்தவனும் அமைதியாக இருந்திருக்கலாம் தான். ஆனால் வாயை கொடுத்து வாங்கியே கட்டிப்பேன் என்று இருப்பவனை யார்தான் காப்பாற்ற முடியும்?.

“என்ன ஆதிரை? உடம்பு எதுவும் முடியவில்லையா? இன்று முழுவதும் நீ உணவு எடுத்துக் கொள்ளவே இல்லையா?” என்று அறையினுள் வந்தவன் பல கேள்விகளுடனேயே வந்தான்.

அவன் பல கேள்விகள் கேட்டும் ஆதிரை பதில் ஏதும் கூறாமல் அமைதியாக அவனையே பார்த்து கொண்டிருந்தாள். என்ன தான் வாயைத் திறந்து பதில் கூறாமல் இருந்தாளும் அவளது வழக்கம் போல அவனை மனதினில்

‘வந்தது ஒரு நாள் முடிந்த பிறகு ஆனால் கேள்விகள் மட்டும் ஏதோ என் மீது இந்த உலகத்திலேயே இவன் தான் அக்கரையாக இருப்பதைப் போல் கேட்பது. என்ன ஒரு நடிப்பு!’ என்று திட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அவனது கேள்விகளுக்கு எதுவும் கூறாமல் அமைதியாகவே இருக்கவும் “என்ன ஆயிற்று? ஏன் அப்படிப் பார்க்கிறாய், உடம்பிற்கு எதுவும் மிகவும் முடியவில்லையா?” என்று மீண்டும் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகவும் ஆதிரை “நான் ஒருத்தி” என்று ஆதிரை கூற ஆரம்பித்தாள். அவளை முழுதாக பேச விட்டிருந்தால் அவள் என்னவெல்லாம் பேசியிருப்பாளோ தெரியாது. ஆனால் அதற்குள் பாதி மூடியிருந்த அவளின் அறையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கவும் அவள் பேசுவதை நிறுத்திவிட்டு கதவைப் பார்த்தாள்.

ஆதிரை ‘கதவைத் தட்டுவது கண்டிப்பாக மீனாட்சியாகத்தான் இருக்கும், உள்ளே வரட்டும் அம்மா, பிள்ளை இருவரையுமே வைத்து கொண்டு பேசலாம்’ என நினைத்துக் காத்திருந்தாள்.

தேவாவும் கதவை தட்டும் சத்தம் கேட்டதும் யார் என்று வெளியே எட்டிப் பார்த்தவன்

“வாருங்கள் அண்ணி! என்ன இந்த நேரத்தில்? எதுவும் வேண்டுமா?” என்று கேட்கவும் வந்திருப்பது தேவாவின் அண்ணி என்று ஆதிரை புரிந்து கொண்டாள். ஆனால் இவள் ஏன் இப்போது இங்கு வருகிறாள்? என்று ஆதிரை சிந்திக்கும் பொழுதே தன் கையில் ஒரு கிளாஸ் முழுதும் பாலுடன் அறையினுள் வந்தவள்

“ஏன்? நான் வந்து உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேனா?” என்று தேவாவிடம் சிரித்தபடியே கேட்டுக் கொண்டு உள்ளே வந்தாள்.

அவளது கேள்விக்கு தேவா வேகமாக “அதெல்லாம் இல்லை அண்ணி. எதுவும் வேண்டுமோ என்று நினைத்தேன்” என்று கூறவும்

“அதுசரி கொழுந்தானாரே, நீங்கள் இங்கே இந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள்?” என்றவள் அவனது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் ஆதிரையிடம் திரும்பி “ஆதிரை. நீ காலையிலிருந்து சாப்பிடவில்லையா?” என்றாள்.

‘இவளை யார் என்றே தெரியவில்லை. இதில் இவளிடம் சாப்பிட்டேனா இல்லையா என்று கூறவேண்டுமோ’ என்று ஆதிரை நினைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

இவளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராமல் போகவும் தேவா தன் அண்ணியிடம் “என்னவென்று தெரியவில்லை அண்ணி. காலையிலிருந்து சாப்பிடவில்லையாம். கேட்டாலும் பதில் கூறாமல் அப்படியே இருக்கிறாள்” என்று கூறவும் ஆதிரை

“காலையில் சாப்பிட்டேன் மதியத்திலிருந்து தான் சாப்பிடவில்லை” என்று கூறினாள்.

ஏனோ தேவாவிற்கு அவளது குரலில் நக்கல் இருப்பதாகத் தோன்றியது. நேற்று முழுவதும் நன்றாக இருந்தவளுக்கு இன்று என்ன ஆனது என்றே அவனுக்குப் புரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அவள் கோபமாக இருப்பதாகத் தோன்றியது. தேவா சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவனது அண்ணி தன் கையில் வைத்திருந்த பாலை ஆதிரையிடம் நீட்டி

“நீ காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை என்று கூறினார்கள் ஆதிரை. அதான் பால் காய்ச்சி எடுத்து வந்தேன்” என்று கூறியவளை இடைமறித்து தேவா

“அண்ணி, ஆதிரைக்குப் பால் பிடிக்காது” என்றான்.

தேவா ஆதிரைக்கு பால் பிடிக்காது என்று கூறிய வேகத்தில் ஆதிரை பிடிக்கும் என்று கூறிவிட்டு பாலை தன் கையில் வாங்கி மூச்சுவிடாமல் குடித்து முடித்தாள்.

தேவா கூறியதைப் போல ஆதிரைக்குப் பால் என்றாலே பிடிக்காதுதான். இன்னும் கூறவேண்டும் என்றால் அதன் நறுமணமே அவளுக்கு ஆகாது. சிறு வயது முதலே ஆதிரையை வெறுப்பேற்ற விக்ரம் கையாளும் சில பழக்கங்களில் பாலை அவள் அருகில் கொண்டு செல்வதுதான் முதன்மையானது கூட.

தேவா மீது இருந்த கோபத்தில் அவன் என்ன சொல்வது என்றுதான் பாலை குடித்து முடித்தாள். ஆனால் அதற்காக பால் என்ன வேறு மணமா வீசப்போகிறது? வழக்கம் போலப் பாலை சேர்த்த உடனேயே ஆதிரைக்கு குமட்டத் தொடங்கி விட்டது. அதிலும் அதைக் குடித்து முடித்ததும் அவளுக்கு வாந்தியே வந்து விட்டது.

அவள் பாலை குடித்து விட்டு குமட்டத் தொடங்கவுமே தேவா “ஆதிரை! ஆதிரை!” என அழைக்கத் தொடங்கி விட்டான். இதில் ஆதிரை ஓடிச் சென்று வாந்தி வேறு எடுக்கவும் தேவாவிற்குத் தான் செய்த தவறு புரிந்தது.

என்னதான் ஆதிரை அனைவரிடமும் சாதாரணமாக நடந்து கொண்டாலும் அவள் இன்னும் தேவாவைக் கணவனாக ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் சிறு சிறு நிகழ்வுகள் கூட அவளது கோபத்தைத் தூண்டுகின்றது. ஏற்கனவே கோபமாக இருந்தவளிடம் அவன் சாதாரனமாக பேசியதே தவறு. இதில் தான் கூறுவதற்கு அப்படியே எதிர்மறையாகச் செய்பவளிடம் குறைந்தபட்சம் இந்த பாலை பற்றியாவது பேசாமல் இருந்திருக்கலாம் எனத் தன்னையே நோந்து கொண்டான்.

தேவாவின் நிலை இப்படி என்றால் ஆதிரையின் நிலை அதைவிட மோசமாக இருந்தது. உணவு உண்ணாமல் இருந்ததுடன் வாந்தியும் சேர்ந்து கொள்ள மிகவும் சோர்ந்து போய் விட்டாள். ஆனாலும் கூட அதன்பிறகு இருவரும் எவ்வளவோ சமாதானம் செய்தும் வேறு எதையும் உண்ண மறுத்து விட்டவளை தேவாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

தேவாவிடமும் ஆதிரை எதுவுமே பேசாமல் இருக்கவும் தான் இருப்பதால்தான் எதையும் உண்ண மறுக்கிறாளோ என்று நினைத்தவன் தன் அண்ணியிடம் கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினான். ஆதிரையை அப்படியே விட்டுச் செல்லவும் மனமில்லாமல் அறையின் வாசலிலேயே ஒரு இருக்கையில் அமர்ந்து விட்டான்.

அறையின் உள்ளே மிகவும் சோர்வாக ஆதிரை படுத்திருந்தாளும் கண்களை மூடாமல் தன்னை பார்த்து கொள்ளவென்று தன் எதிரில் ஒரு இருக்கையைப் போட்டு அமர்ந்திருந்த தேவாவின் அண்ணியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னையே ஆதிரை பார்த்து கொண்டிருந்ததைக் கவனித்தவள் “என்ன ஆதிரை? என் மீது எதுவும் கோபமா?” என்று கேட்டாள்.

கேள்வி கேட்டவள் விளையாட்டாகத்தான் கேட்டாள். ஆனால் அதற்கு ஆதிரை ஆம் என்று பதில் கூறுவாள் என அவள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் ஆதிரையின் பதில் அவளை அதிர்ச்சியடையச் செய்தது.

“என்மீது கோபமா” என அதிர்ச்சியாகக் கேட்டவள் தொடர்ந்து “என்மீது என்ன கோபம்? பால் கொடுத்தேன் என்றா? உனக்குப் பால் பிடிக்காது என்று எனக்குத் தெரியாதே” என மிகவும் பாவமாகக் கூறவும் ஆதிரைக்கே ஒரு நொடி தான் செய்தது தவறோ என்று தோன்றியது.

ஆதிரையிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவும் தேவாவின் அண்ணியே தொடர்ந்து “என்ன ஆதிரை? எதுவும் கூறாமல் என்னையே பார்த்தால் என்ன அர்த்தம்” என்று கேட்டாள்.

ஆதிரை அவளது எந்த ஒரு கேள்விக்கும் பதில் கூறாமல் “உன் பெயர் என்ன?” என்று கேட்டாள்.

“என் பெயரா? என் பெயரை உன்னிடம் யாரும் கூறவில்லையா?” என்று கேட்டவள் தொடர்ந்து “கயல்” என அவளது பெயரையும் கூறினாள்.

வாய்ப்பிற்காகக் காத்திருந்த ஆதிரை எப்படி இதை சும்மா விடுவாள் “ஓ! பெயரா? இப்படி ஒருவர் இருப்பதையே நேற்று வரை யாரும் கூறவில்லை. இதில் பெயர் கூறாததைப் பற்றிக் கேட்கிறீர்களே!” என்றாள்.

“அத்தைகூடவா என்னைப் பற்றிக் கூறவில்லை?” என்று அவள் கூறி முடிப்பதற்குள் ஆதிரை “அத்தையா? அவர்களுக்கு உங்களுக்குப் பிடித்ததைச் சமைப்பதற்கே நேரம் போதவில்லை. இதில் என் ஞாபகம் எப்படி இருக்கும்? என் ஞாபகம் இருந்தால் தானே என்னிடம் பேசுவார். பேசினால் தானே உங்களைப் பற்றி கூறுவதற்கு” என்றாள்.

கயலிற்கு அவள் கூறுவதன் அர்த்தம் முழுதாக புரியவில்லை. என்ன கூறவருகிறாள் என்று சிந்திக்கும் பொழுதே ஆதிரையே கயலிடம் “எனக்குப் பசிக்கின்றது” என்றாள்.

தோசை எடுத்து வரவா எனக் கயல் கேட்கவும் ஆதிரையும் சரியென்றாள். தோசை ஊற்றுவதற்காக அறையை விட்டு வெளியில் வந்த கயலிடம் தேவா

“அண்ணி! என்ன ஆகிற்று மீண்டும் வாந்தி எடுக்கின்றாளா? மருத்துவமனைக்குச் செல்வோமா அண்ணி” என வரிசையாகக் கயலை பேசக்கூட விடாமல் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே போனான்.

தேவாவைப் பார்க்கக் கயலுக்கே பாவமாக இருந்தது. ஆனால் ஆதிரையின் மனநிலை என்னவென்று அவளுக்கே புரியாத நிலையில் இவனிடம் என்னவென விளக்க முடியும்.

“அவள் நன்றாகத் தான் இருக்கிறாள் தம்பி. பசிக்கின்றது எனக் கூறினாள் அதான் தோசை ஊற்றலாம் என்று” என்றவளிடம் தேவா

“அவள் உங்களிடம் நன்றாகத்தான் பேசினாளா? உங்களை எதுவும் கூறவில்லையே” என்றான்.

இதற்கு என்ன பதில் கூறுவது என்று யோசித்தவள் “அவள் என்னிடம் எப்படிப் பேசுகிறாள் என்று தெரியவில்லை தம்பி. ஆனால்...” என்று ஆரமித்து ஆதிரை பேசிய அனைத்தையும் தேவாவிடம் கூறி முடித்தாள்.

கயல் கூறகூற தேவாவிற்கு ஓரளவு ஆதிரையின் கோபத்திற்குப் பின் இருந்த காரணம் புரிந்தது. கயலிற்காக மீனாட்சி சமைத்தது ஆதிரைக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. ஆனால் காலையிலிருந்து மீனாட்சி வீட்டில் இல்லை என்பது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இதில் இருவரையுமே குறைகூற இயலாது. ஆனால் தேவாவின் நிலை அப்படி இல்லையே. அவனாகத் தான் காலையிலிருந்து ஆதிரையை வேண்டும் என்றே தவிர்த்தான். ஆனால் அதன் காரணத்தை தற்போது இருக்கும் நிலையில் அவனால் அவளிடம் கூறவும் முடியவில்லை.​

தொடரும்...​

வாசகர்களின் கருத்துகளே எழுத்தாளர்களை அதிகம் ஊக்கப்படுத்தும். எனது கதை அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது உங்கள் கருத்துகளும் விமர்சனங்களும் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் பதிவிடவும். நன்றி.






 

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
அத்தியாயம் 8

தன் எதிரில் தீவிர சிந்தனையில் நின்று கொண்டிருந்தவனின் எண்ண ஓட்டங்களைக் கயலால் தெரித்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் அவனது துன்பத்தை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனது துன்பம் பொறுக்காமல் கயல் தேவாவிடம்

“இப்படி அனைவரும் கஷ்டப் படுவதற்குப் பதிலாக ஆதிரையிடம் அனைத்து உண்மைகளையும் கூறிவிடலாம் இல்லையா, தம்பி” என்றாள்.

“எனக்கே சில நேரங்களில் தோன்றுவது உண்டுதான் அண்ணி. ஆனால் ஏற்கனவே என்னை ஒரு வில்லன் அளவிற்குச் சித்தரித்து வைத்து இருக்கிறாள். இப்போது போய் நான் இதைக் கூறினால் வேண்டும் என்றே வேறு விதமாகப் புரிந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதனால் தான்..” என்று தேவா இழுக்கவும் கயல் “அதுவும் சரிதான்” என்றாள்.

கயல் தோசையை ஊற்றி, எடுத்து வந்து ஆதிரையிடம் கொடுக்கவும் அவள் வாங்கி வேக வேகமாக உண்ணத் தொடங்கினாள். அதைப் பார்த்த கயலிற்குச் சிரிப்பதா அல்லது பரிதாபம் படுவதா என்றே தெரியவில்லை. தான் சாப்பிடுவதையே எதிரில் உள்ளவள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு

“உங்களை உங்கள் கணவர் தேடப் போகிறார் நீங்கள் செல்லுங்கள். நான் நன்றாகத்தான் உள்ளேன்” என்றாள்.

“அது சரி! நான் இங்கு இருப்பதால் உனக்கு எதுவும் பிரச்சனையா?” என்று கயல் கேட்கவும்

“அதெல்லாம் இல்லை. உங்களைத் தேடுவார்கள்” என்று ஆதிரை கூறும் பொழுதே

கயல் “தேடுவதற்கு யாரும் வீட்டில் இல்லையே” என்று கூறவும் ஆதிரைக்கு எதுவும் புரியாமல் முழித்தாள். ஆதிரை முழிப்பதைப் பார்த்துச் சிரித்துவிட்டு கயலே தொடர்ந்து “முழிக்காதே ஆதிரை. அவரும் அத்தையும் வெளியில் சென்றுள்ளார்கள். நாளைதான் வருவார்கள். அதைத்தான் அப்படிக் கூறினேன்” என்றாள்.

“என்ன? எப்பொழுது சென்றார்கள்” என்று ஆதிரை கேட்கவும் கயல் “காலையில் நாங்கள் வந்தவுடனேயே சென்று விட்டார்கள். காலையிலிருந்து நானும் தனியாகத்தான் இருந்தேன். உன்னிடம் பேசலாமா என யோசித்தேன். ஆனால் நீ பேசுவாயா என்று தெரியவில்லையா” என்று கூறவும்

ஆதிரை “ஏன்? நான் என்ன ஊமையா?” என்று கேட்டாள். ஆதிரை அப்படி கேட்கவும் என்ன கூறுவது என்றே தெரியாமல் முழிப்பது தற்போது கயலின் முறையானது. அவள் முழிப்பதைப் பார்த்ததும் ஆதிரை சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கி விட்டாள்.

தன் முன் காரணமேயன்றி விழுந்து விழுந்து சிரிப்பவளைப் பார்க்கக் கயலிற்கே எரிச்சலாக வரவும் “என்ன?” என்றாள்.

ஆதிரை “சும்மா விளையாட்டிற்காக கூறினேன் அக்கா” என்றாள்.

கயல் அதற்கும் அதுவும் கூறாமல் அமைதியாக இருக்கவும் ஆதிரையே “என்னக்கா கோபமா?” என்றாள்.

கயல் “என்ன திடீரென மரியாதை எல்லாம் வருகிறது?” என்றாள்.

கயலின் கேள்விக்கு ஆதிரை தன் தோள்களைக் குலுக்கி விட்டு எந்தவொரு பதிலும் கூறவில்லை. சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு “அத்தை எங்கே சென்றுள்ளார்கள்” என்றாள்.

இந்த கேள்வியை ஆதிரையிடமிருந்து கயல் எதிர் பார்த்திருந்ததால் யோசிக்காமல் “அது தெரியவில்லை ஆதிரை. நாளை வந்த பிறகுதான் கேட்க வேண்டும்” என்று கூறி சமாளித்தாள்.

இருவரும் இரவு வெகு நேரம் பேசி முடித்துவிட்டு உறங்கியும் போனார்கள். ஆனால் அந்த இரவு முழுவதும் உறக்கத்தை தொலைத்தது தேவாதான் ஆதிரையை எப்படிச் சரிசெய்வது என்றே புரியாமல் வேதனை அடைந்தவனுக்கு ஆதிரையின் இன்றைய கோபம் சிறிது மன அமைதியையும் கொடுத்தது. அவளைவிடவும் இன்னொருவருக்கு முக்கியத்துவம் அளித்ததால் வந்த கோபம் அல்லவா, எனவே ஆதிரையின் கோபம் தேவாவிற்குச் சிறிது நிம்மதியாக இருந்தது.

காலையில் ஆதிரை கண்விழித்து பார்த்த பொழுது அவளுடன் கயல் இல்லை. நீண்ட நேரம் ஆகிவிட்டதோ என்று மணியைப் பார்த்தால் மணி அதிகாலை ஆறைக் காட்டியது. கயல் எங்கே சென்றிருப்பாள் என எழுந்து முகம் கழுவிவிட்டு தன் அறையைவிட்டு வெளியில் வந்து பார்த்தாள்.

ஆனால் அறையின் வாசலில் ஒரு இருக்கையில் தேவா கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்க்கவும் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த நேரத்தில் இவன் இங்கு என்ன செய்கிறான் என அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே வந்த கயல்

“என்ன அப்படி பார்த்துக்கொண்டிருக்கிறாய்? உன் கணவன் தான் வேறு யாரும் இல்லை” எனக் கிண்டல் செய்து கொண்டே வரவும் ஆதிரை

“காலையிலேயே தவம் செய்து கொண்டிருக்கவும் ஏதோ சாமியார்தான் நம் வீட்டுக்குள் வந்து விட்டாரோ” என்று நினைத்தேன் என்றாள்.

“தவம்தான். தன் மனைவிக்கு இரவு உடல்நிலை சரியில்லாமல் போனதால், இரவு முழுவதும் அமர்ந்தே தவம் போல” என்று கூறி கைகளை விரிக்கவும் ஆதிரை தன் பளிங்கி விழிகளை விரித்து

“என்ன இரவு முழுவதும் உறங்கவில்லையா!” என்றாள்.​

“தன் அறைக்கே போகவில்லை என்கிறேன்..” என்றாள் கயல்.

ஆதிரைக்கு தேவாவின் செயல்கள் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தனது சிறிய வயதிலிருந்து இன்று வரை அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அவளது தாய்தான் இரவு முழுவதும் உறங்காமல் அவள் அருகிலேயே இருப்பாள். விக்ரம்கூட பலமுறை அவளது தாயை அதற்காக கிண்டல் செய்ததும் உண்டு. சில நாட்களில் அவளுக்கென்றால் மட்டும் உறங்காமல் இருக்கின்றீர்கள், எனக்கென்றால் இருப்பதில்லையே எனச் சண்டையெல்லாம் போட்டது உண்டு.

மங்களமோ “அவள் வேறு வீட்டிற்குப் போக போகிறவள்டா. அதோடு இல்லாமல் நீ என்றாள் தாங்கிக்கொள்வாய் அவள் அப்படி இல்லையே” என்று காரணம் கூறி அவனைச் சமாதானம் செய்வதும் உண்டு. ஆனால் தேவா ஏன் இரவு முழுவதும் உறங்காமல் முழித்திருக்க வேண்டும். அப்படி என்ன தன்மீது பாசம் என்று ஆதிரைக்குக் குழப்பமாக இருந்தது.

அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவர்களது சத்தம் கேட்டு எழுந்த தேவா ஆதிரையிடம் அவளது உடல்நிலையை விசாரித்து விட்டு அதற்குமேல் வேறு எதுவும் பேசாமல் தன் அண்ணியிடம் ஒரு சிறு தலையசைப்புடன் மேலே ஏறிச் சென்று விட்டான்.

ஆதிரையின் வாழ்க்கையில் காலம் மிகவும் வேகமாக ஓட தொடங்கியது. திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. இதுவரையிலும் அவள் ஏன் அந்த வீட்டில் இருக்கின்றாள் என அவளுக்கே தெரியவில்லை. இன்னும்கூட ஆதிரையால் அந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காக அவர்கள் யாரையும் வெறுக்கவும் அவளால் முடியவில்லை. தேவாமீது இருந்த கோபங்களும் அப்படியே தான் இருந்தன.

இந்த இரண்டு மாதங்களில் மாறியிருந்தது மிகவும் அற்பமான சில விஷயங்களே. ஆதிரையின் பெற்றோர் அவளிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள ஆரம்பித்திருந்தனர். ஆனாலும்கூட நேரில் வர மறுத்துவிட்டனர். விக்ரம் பலமுறை அழைத்து நீ கூறினாள் உடனேயே உன்னை அங்கிருந்து அழைத்து வரத் தயார் என தன் தமக்கையிடம் கூறிக்கொண்டிருந்தான். இவற்றுடன் ஆதிரையும் கயலும்கூட மிகவும் நெருக்கமாக மாறிவிட்டனர்.

ஒருமுறை ஆதிரை கயலிடம் அவளைப் பார்த்ததும் மரியாதையில்லாமல் பேசியதற்கும் மன்னிப்பும் கேட்ட பிறகு இன்னும் நெருக்கம் கூடிவிட்டது. இத்தனை நிகழ்வுகள் நடந்தேறிய பின்னும்கூட ஆதிரை தன் மனதில் தோன்றிய சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

அவளது முதல் கேள்வியே தேவா என்பவன் உண்மையில் யார்? அவன் ஏன் அவளைத் திருமணம் செய்தான்? முன்பின் அறியாத ஒரு பெண்ணின் மீது இவ்வளவு அன்பாக ஒருவரால் இருக்க முடியுமா? என்பதாகத் தான் இருந்தது.

இப்பொழுதெல்லாம் தேவா ஆதிரையிடம் முன்பு போலப் பேசுவதும் இல்லைதான் அதற்காகப் பேசாமலும் இருப்பதில்லை இதைச் செய், அண்ணியைக் கூப்பிடு, சாப்பிட்டாயா, என்ன வேண்டும் என்பவற்றைப் போல எதார்த்தமான பேச்சுக்கள் இருவருக்குள்ளும் எந்த வாக்குவாதங்களும் இல்லாமல் பரிமாறப்பட்டு வந்தன.

இவ்வாறு ஆதிரையின் வாழ்க்கை மிகவும் அமைதியாகச் செல்ல செல்ல அவள் மனதிற்குள்ளும் கேள்விகள் பெருகிக் கொண்டே சென்றன. அதன் விளைவாக அடிக்கடி தன்னையும் தன் சுற்றத்தையும் மறந்து சிந்தனை உலகத்திற்குள் புகுந்து கொண்டாள். இதை மீனாட்சியும் கவனிக்க தவறவில்லை. தான் கேட்டால் ஆதிரை எப்படியும் உண்மையைக் கூறப்போவதில்லை என்று தோன்றவும் கயலிடம் இதைப்பற்றி ஆதிரையிடம் பேசச் சொல்லி அவளை ஆதிரையிடம் அனுப்பியிருந்தார்.

ஆதிரை அவளது சிலகால வழக்கமான பழக்கத்தைப் போலத் தென்னந்தோப்பில் உள்ள ஒரு கட்டையில் அமர்ந்து சிந்தனை உலகத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். தன் முன் கயல் வந்து நிற்பதைக் கூட கவனிக்காமல் ஆதிரை எதையோ ஆதிரை சிந்தித்துக் கொண்டிருந்தவள் கயல் “ஆதிரை” என்று பல முறை அழைத்த பிறகே நிகழ் உலகத்திற்குத் திரும்பினாள்.

ஆதிரை “அக்கா! இங்கு என்ன செய்கிறீர்கள். எப்போது வந்தீர்கள்” என்றாள்.

கயல் “அடிப்பாவி! நான் வந்தது கூட தெரியாமல் அப்படி என்ன சிந்தனை உனக்கு?” என்றாள்.

சும்மா எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தேன் என்று ஆதிரை சமாளிக்கவும் கயல் “ஆதிரை. இன்று என்று இல்லை, சில நாட்களாக நானும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். எதையோ சிந்தித்துக் கொண்டே இருக்கின்றாய். எதுவானாலும் வெளியில் சொன்னால் தானே தெரியும் ஆதிரை” என்றாள்.

கயல் கேட்ட தோணியிலேயே அவள் பதிலைப் பெறாமல் விடப் போவதில்லை என்று ஆதிரை புரிந்து கொண்டாள். ஆனால் இப்போது இவளிடம் என்ன கூறி சமாளிப்பது என்று யோசித்தவளுக்குச் சட்டென ஒன்று தோன்றியது.

அது, அந்த வீட்டில் ஒரு அலுவலக அறை இருந்தது அதற்குள் ராமும், தேவாவும் அடிக்கடி ஒன்றாகச் சென்று நீண்ட நேரம் பேசுவது உண்டு. ஆதிரை அறிந்த வரை தேவா குடும்ப தொழில்களைப் பார்த்துக் கொள்கிறான். அதில் முக்கியமானது விவசாயமும் அதைச் சார்ந்த வேலைகளும் ஆகும். ஆனால் ராம் தனக்கென்று தனியாக ஒரு தொழில் நடத்தி வந்தான், அது கட்டடம் சம்பந்தம் பட்டவை. அதனுடன் சிமெண்ட் தொழிற்சாலையும் நடத்தி வந்தான். அவனது தொழிலிற்கும் தேவாவின் தொழிலிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. பிறகு எதற்கு அவர்கள் அவ்வளவு நேரம் அதுவும் அலுவலக அறையில் பேச வேண்டும். இதுவும் ஆதிரையின் மனதில் இருந்த பல கேள்விகளுள் ஒரு கேள்விதான். எனவே அதையே தன் சந்தேகமாகக் கயலிடம் கேட்டாள். கயல் “உண்மையாகவே இதுதான் உன் சந்தேகமா ஆதிரை?” என்று நம்பாமல் கேட்டாள்.

ஆதிரை “ஆம் அக்கா. நீங்கள் வேறு என்ன நினைத்தீர்கள்” என்று கேட்கவும் “ஒன்றுமில்லை” என்று கூறியவள் ஆதிரையின் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.

கயல் “ஆதிரை, ஏன், எதற்கு என்றெல்லாம் எனக்கும் தெரியாது. ஆனால் நம் வீட்டில் இருக்கும் அனைத்து தொழில்களும் சொத்துக்களும் அவரது பெயர் தேவா தம்பியின் பெயர் என இருவரின் பெயரிலும் தான் இருக்கின்றன. ஒருவரின் தொழில் விபரத்தை இன்னொருவரும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். வங்கி முதல் அனைத்து கணக்கு வரவு செலவுகளிலும் இருவரது கையெழுத்தும் நிச்சயம் அவசியம். அதைப்பற்றித்தான் இருவரும் வீட்டில் ஒன்றாக இருக்கும் நேரத்தில் பேசுவார்கள்” என்றாள்.

ஆதிரை அதற்கு “ஓ” என்று கூறவும் கயல் “இதைக் கேட்டால் கூறப்போகிறோம். ஆனால் இதற்காகத் தான் இப்படி இருந்தாய் என்று என்னால் நம்பமுடியவில்லையே? என்றாள்.

ஆதிரை கயலின் கேள்விக்கு பதில் கூறும் முன்பே மல்லிகா அங்கு ஓடி வந்தாள். வேகமாக ஓடி வந்ததின் தாக்கத்தால் மூச்சு வாங்கிக் கொண்டே “அக்கா” என்று அவள் கூறவும் இருவரும் “முதலில் மூச்சு வாங்கிக் கொண்டு பிறகு சொல்” என்றனர். சில வினாடிகள் மூச்செடுத்து கொண்டவள் கயலைப் பார்த்து

“அக்கா, பெரிய ஐயா பெரிய அம்மாவை நாளை வருமாறு கூறி அனுப்பினார். பெரியம்மா கோவிலுக்கு சென்றுள்ளாராம் அத்தை கூறினார்கள். அம்மா வந்ததும் கூறிவிடுகிறீர்களா?” என்றாள்.

ஆதிரைக்கு மல்லி பெரிய ஐயா என்று கூறுவது தேவாவின் தந்தையைத் தான் என்று புரிந்தது. ஆனால் அவரை எப்படி மல்லி பார்த்திருக்க முடியும் என்ற குழப்பத்தில் மல்லியிடம்

“பெரிய ஐயாவா? யாரைக் கூறுகிறாய் மல்லி? மாமாவையா?” என்றாள் வேகமாக.

கயல் ஆதிரை என்று அழைத்ததையும் பொறுங்கள் அக்கா என்று கூறி அவளைத் தடுத்து விட்டு மல்லியிடம் விசாரணையைத் தொடர்ந்தாள் பாவம் மல்லி. சிறுபிள்ளைக்கு தன் தந்தை வேலை செய்யும் அந்த பெரிய வீட்டின் உள்ளரசியல் புரியவில்லை. தனக்குத் தெரிந்த உண்மைகள் அனைத்தையும் ஆதிரை கேட்கக் கேட்க ஒப்பித்து விட்டாள்.

“ஆமாம் அக்கா. அவரை தான் சொன்னேன் ஏன் கேட்கிறீர்கள்” என்றாள் மல்லி.

ஆதிரை “அவரை எங்கே எப்போது பார்த்தாய்?” என்று கேட்கவும்

மல்லி “இப்போது தான் அக்கா வயல் வீட்டில் பார்த்தேன்” என்றாள்.

ஆதிரை கேள்விகளால் மல்லியை தொலைத்தெடுக்கவும் ஒரு கட்டத்தில் மல்லியே முழிக்க ஆரமித்து விட்டாள். நடுவில் கயல் பேசப் பல முறை முயற்சித்தும் அவளது முயற்சிகள் அனைத்தும் வீணெனச் சென்றது. ஆனாலும் கூட ஆதிரை விடுவதாக இல்லை

“அங்கே என்ன செய்கிறார் மல்லி? எப்போதிலிருந்து அங்கு இருக்கிறார்” என்றாள்.

மல்லி பதில் ஏதும் கூறாமல் கயலை பார்த்து முழிக்கவும் ஆதிரை “என்னை பார்த்து பதில் கூறு மல்லி” என்று அதட்டினாள்.

ஆதிரையின் குரலில் பயந்த மல்லி கண்கள் கலங்க “இரண்டு மாதமாக அங்குதானே அக்கா இருக்கிறார்” என்றாள்.

மல்லியின் பதிலில் ஆதிரை குழம்பிப் போனாள். இரண்டு மாதமாக இங்கு தான் இருக்கிறார் என்றால் பிறகு எதற்காக தேவா என்னிடம் பொய் கூறவேண்டும் என்று யோசித்தவள் தன் அருகில் அமர்ந்திருந்த கயலைப் பார்த்தாள். அவளது முகத்தில் இருந்த கலவரமே ஆதிரைக்கு, கயலிற்கும் உண்மை அனைத்தும் தெரியும் என்பதை புரியவைத்தது.

ஆதிரை மல்லியிடம் “நாளை அத்தையை வயல் வீட்டிற்கு போகச் சொல்லி நானே கூறிவிடுகிறேன் மல்லி” என்று கூறவும் அவளும் சரி என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.

மல்லி அங்கிருந்து செல்லவும் கயல் “ஆதிரை. அதுவந்து..” என ஆரம்பிக்கவும் ஆதிரை “வீட்டில் அனைவரும் வந்த பிறகு கூறுங்கள். நான் பேச வேண்டும்” என்றவள் அங்கிருந்து நேராக தன் அறைக்குள் சென்று விட்டாள் கயலிற்கு தான் என்ன செய்வது என்றே புரியாமல் போனது.

வேறு வழியின்றி தேவா முதல் மீனாட்சி வரை அனைவருக்கும் தொலைப்பேசியில் அழைப்புகள் பறந்தன, அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் அந்த வீட்டில் ஆதிரையின் அறைக்கு வெளியில் நின்றனர்.​

தொடரும்...​

வாசகர்களின் கருத்துகளே எழுத்தாளர்களை அதிகம் ஊக்கப்படுத்தும். எனது கதை அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது உங்கள் கருத்துகளும் விமர்சனங்களும் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் பதிவிடவும். நன்றி.

 
Last edited:

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
அத்தியாயம் 9

நீண்ட நேரமாக ஆதிரை அறையிலிரிந்து எந்தவித சத்தமும் இல்லாமல் வீட்டில் அனைவரின் முகத்திலும் பயம் குடிக்கொண்டிருந்தது. அடுத்து என்ன செய்ய போகிறாளோ என்ற பதற்றம் அங்கு நின்றவர்கள் மட்டும் இன்றி அந்த வீட்டின் வேலை ஆட்களிடமும் தெரிந்தது.

என்னதான் ஆதிரை வந்த புதிதில் அவளை பார்த்து அனைவரும் பயந்தாலும் இந்த இரண்டு மாதங்களில் அவளது குணத்தை அங்கிருந்த அனைவரும் புரிந்து கொன்டனர். அவளுடன் நன்றாக அனைவரும் பேசி பழகவில்லைஎன்றாலும் கூட அவள்மீது இருந்த பயம் காணாமல் போய் இருந்தது. எனவே ஆதிரையின் இந்த கோபம் அனைவரையும் பதற்றமாக்கி இருந்தது.

நீண்ட நேரம் ஆகியும் ஆதிரை வெளி வராததால்கயல் அவளது அறை கதவை தட்ட தொடங்கினாள்.

“ஆதிரை. எதுவானாலும் பேசிக் கொள்ளலாம் ஆதிரை. இப்படி பேசாமல் இருந்தால் என்னவென்று எப்படி தெரியும்?”என்றாள்.

அதற்கும் ஆதிரையிடம் இருந்த்து எந்த வித பதிலும் வராமல் போகவும் கயல் மீண்டும்​

“ஆதிரை... இது என்ன பழக்கம்? நீ கூறியதை போல அனைவரும் வந்து விட்டார்கள். இன்னும் கதவை” என்று அவள் கூறும் பொழுதேஆதிரை கதவை வேகமாக திறந்து கொண்டு வெளியில் வந்தாள்.

வெளியில் வந்த ஆதிரையின் பார்வை தன் தாய்க்கும்தமையனுக்கும் பின் நின்று கொண்டிருந்த அவளது கணவனின் மீது பாய்ந்தது.அவள் தேவை வெறித்து பார்ப்பதை பார்த்த மீனாட்சி ஆதிரையிடம்

“ஆதிரை. தவறு என்மீது தான்மா” என்று வேகமாக பழியை தன்மீது போட்டு கொண்டார்.

ஆனால் ஆதிரை அதையெல்லாம் காதில் வாங்கும் மனநிலையில் இல்லை.அவள் கவனம் முழுதும் தேவாவிடமே இருந்தது. அது அவளது பார்வை அளவில் முடிந்து விடாமல் அவளது வார்த்தையிலும் தொடர்ந்தது. ஆதிரை தேவாவை பார்த்து மிகவும் அமைதியான குரலில்

“இவ்வளவு தான் பொய்களா? இல்லை இன்னும் மிச்சம் இருக்கின்றதா?”என்றாள்.

அவளது அமைதியே அவள் எந்த அளவு கோபமாக இருக்கிறாள் என்று அனைவருக்கும் உணர்த்தியது.

‘இப்போது தான் ஓரளவு அனைத்தும் சரியாகிவருவதை போல் இருந்தது அதற்குள் இப்படி ஆகிவிட்டதே’ என்று மீனாட்சிக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது.

ஆதிரையின் கேள்விக்கு தேவாவிடம் இருந்து எந்தவிதபதிலும் வராமல் போகவும் அவளே மீண்டும் தொடர்ந்தாள்

“என்ன? கேள்விக்கும் பதில் வரவில்லையா? இன்னும் எத்தனை பொய்கள் என்று கணக்கு வரவில்லையா?”என்றாள்.

மீனாட்சி வேகமாக “ஆதிரை இதில் தேவாவிற்கு எந்த சம்மந்தமும் இல்லையம்மா” என்றவரை இடைமறித்து ஆதிரை

“உங்கள் வயல் வீடு வெளி ஊரில் இருந்தது என்று எனக்கு இத்தனை நாட்கள் தெரியாதே! அதிலும் அது மல்லியிடம் செய்தி சொல்லிவிடும் அளவு தூரத்தில் இருக்கும் என்று நான் நினைத்து கூட பார்த்தது இல்லை” என்றாள்.

சில காலங்களாகவார்த்தைக்கு வார்த்தை வரும் அத்தை எனும் சொல் இப்போது வரவில்லை தான். அதையும் யாரும் கவணிக்க தவறவில்லை. ஆதிரை கத்தி ஆர்பாட்டம் செய்யவில்லை தான், ஆனால் அவள் எத்தனை கோபமாக இருக்கிறாள் என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் சமாதானம் செய்யதான் யாரலும் முடியவில்லை. அவர்கள் அனைவரும் முழித்து கொண்டிருக்கும் பொழுதே அங்கே ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கியவர் வேறு யாரும் இல்லை, அந்த வீட்டின் தலைவர் சதாசிவம் தான்.

வெள்ளை வேஷ்டி சட்டையுடன் வீட்டின் உள்ளே மிகவும் கம்பிரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். என்னதான் வீட்டின் தலைவர் மற்றும் ஊரில் பெரிய மனிதராக இருந்தாலும் அவையெல்லாம் நம் ஆதிரயின் கருத்தில் படுமா என்ன? அவரிடமும் தன் வார்த்தை போரை தொடர்ந்தாள்.

“வாருங்கள் மாமா.. வெளி ஊர் பயணம் எல்லாம் நன்றாக அமைந்ததா?” என்றாள்.

ஆதிரை இன்று யாரையுமே விடும் எண்ணத்தில் இல்லைதான். ஆனால் சதாசிவம் இதை எதிர் நோக்கியே வந்தார் போல!

“ஐயோ! அம்மாடி ஆதிரை. நானும் உன் கட்சிதான்மா. அதனால் அம்பை என்மீது திருப்பாதே. எதுவானாலும் பேசி தீர்த்து கொள்வோம்” என்றார்.

ஆதிரை அதற்கு எதுவும் சொல்லாமல் அமதியாக நிற்கவும் சதாசிவமே தொடர்ந்து

”வேண்டுமானால் வெள்ளை கொடி கூட காட்டிவிடுகிறேன்மா.” என்றார்.

இப்படி கூறுபவரிடம் என்னவென்று சன்டையிடுவது என்றே ஆதிரைக்கு புரியவில்லை. அவள் புரியாமல் முழிக்கவும் அவரே தொடர்ந்து

“பேசி தீர்க்க முடியாதது என்று எதுவும் இல்லையம்மா” என்றார்.

ஆதிரையும் விடுவதாக இல்லை “பேசினால் தான் பொய்யாக வருகிறதே!” என்றாள்.

அவரும் பதிலுக்கு “அதுசரி. உன்னிடம் வார்த்தை போரில் தோற்று விட்டேன். இப்பொழுதாவது என் வெள்ளை கொடியை ஏற்று கொள்கிறாயா?” என்றார்.

அவர் கூறிய தொனியில் ஆதிரைக்கு சிரிப்பு வந்துவிட்டது. இதற்கு மேல் இவரிடம் என்னவென்று மல்லுகட்டுவது என்று நினைத்து கொண்டாள். ஆனால் வீட்டில் கயல் உட்பட யாரிடமும் அவள் பேச தயாராக இல்லை.

ஆதிரையின் மனவோட்டத்தை சதாசிவமும் புரிந்து கொண்டார்.

“வாமா. நீண்ட நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்து உள்ளேன். சேர்ந்து சாப்பிடுவோம்.” என்று அவளை அழைத்தார்.

ஆதிரை இந்த இரண்டு மாதங்களில் அங்கு நன்றாக பழகி இருந்தாலும் கூட அவளிடம் மாறாத குணமாக இருந்தது தன் அறைக்குள்ளேயே சாப்பிடுவதும், தன் அறையை தவிர அந்த வீட்டிற்குள் வேறு எங்கும் போகாததும் தான். ஆனால் இன்று சதாசிவம் கூப்பிடவும் இதை எப்படி அவரிடம் கூறுவது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தாள்.

என்னதான் சதாசிவம் அந்த வீட்டில் தங்கவில்லை என்றாலும் கூட ஒரு வீட்டின் தலைவராக அந்த வீட்டில் நடப்பவை அனைத்தையும் தன் மனைவி மூலமாகவும் தன் மூத்த மகன் மூலமாகவும்தினமும் கேட்டு தெரிந்து கொண்டுதான் இருந்தார். அப்படி உள்ளவர் ஆதிரையை சாப்பிட அழைக்கவும் அதுவும் மாலை வேலையில் அழைக்கவும் யாருக்கும் எதுவும் புரியவில்லைதான். இருப்பினும் அவரது செயலுக்கு எந்த ஒரு பின் நோக்கும் இல்லாமல் இருக்காது என்று அந்த குடும்பத்தினருக்கு தெரிந்திருந்ததால் யாரும் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தனர்.

சதாசிவம் தொடர்ந்து “மதியம் வேறு சாப்பிடவில்லை பசிகிறது” என்று கூறவும் ஆதிரை அவருடன் உணவு உண்ண சம்மதித்தாள்.

பிறகு ஆதிரையை அவர் அந்த வீட்டிற்குள் அழைத்து சென்றார். இந்த இரண்டு மாதங்களில் ஆதிரை அவளது அறையை தான்டி வீட்டிற்குள் செல்வது இதுவே முதல்முறை. அவளது உணவு அவளது அறைக்கு வந்துவிடும் என்பதாலும் அவளது அறைக்குள்ளேயே அனைத்து வசதிகளும் இருந்ததாலும் அவள் இதுவரை எந்த தேவைக்காவும் அந்த வீட்டினுள் சென்றது இல்லை. அதற்கு ஏற்றவாறு அவளது அறையும் முதலாவதாகவே இருந்தது. கயலுடன் சேர்ந்து அங்கிருந்த தென்னை தோப்பில் நேரம் செலவிடுவதை போக மீதி நேரத்தில் எல்லாம் அவளது அறையினுள் தான் இருந்து வந்தாள்.

இன்று சதாசிவம் அழைக்கவும் வேறு வழியின்றி உள்ளே செல்ல வேண்டியதாகி விட்டது. முதல்முறையாக அந்த வீட்டினுள் செல்வதை போலவே ஆதிரைக்கு தோன்றவில்லை ஏற்கனவே அவளுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம் போல் தோன்றியது அவளுக்கு. வீடு மிகவும் பெரியதாகவும் அழகாகவும் இருந்தது. அதற்கு ஏற்றவாறு வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருந்தனர்.

‘நேராக வீட்டினுள் சென்றால் இரண்டு அறைகள் தாண்டி வலது புறமாக திரும்பினால் சமையல் அறையும் இடது புறமாக திரும்பினால் சாப்பிடும் அறையும் வரும் தானே!’ என ஆதிரை நினைப்பதை போலவே அந்த வீடு இருந்தது ஆதிரைக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

இதுவரை பார்த்திராத ஒரு வீடு எப்படி அச்சு அசலாக அவளது நினைவில் இருக்கிறது என்றே அவளுக்கு புரியவில்லை.

“ஆதிரை. அப்படி என்னம்மா சிந்தனையில் இருக்கிறாய்” என்ற சதாசிவத்தின் குரல் ஆதிரையை சிந்தனை உலகத்தில் இருந்து நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தது.

சதாசிவத்தின் கேள்வி அவளது கருத்தில் படவும் தனது சிந்தனையை அவரிடம் கூறாமல் மறைத்து விட்டாள். அவளுக்கே புரியாத விசயத்தை யாரிடமும் கூற அவள் மனம் வரவில்லை. அதற்கு மாறாக

“நீங்கள் ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று யோசித்து கொண்டிருந்தேன்” என்றாள்.

“நிச்சயம் கூறுகிறேன்மா. பதில் கூறாமல் ஓடும் அளவு கூட உடம்பில் சக்தி இல்லை. பாவம் நான், வயதாகி விட்டது அல்லவா?” என்றார்.

ஆதிரை அதற்கும் எந்தவித பதிலும் கூறாமல் பார்த்து கொண்டே இருக்கவும் சதாசிவமும் விடாமல் தொடர்ந்து

“என்ன ஆதிரை அப்படி பார்கிறாயே! அவ்வளவு மோசமாகவா நகைச்சுவை செய்கிறேன்?”என்றார்.

ஆதிரையும் பதிலுக்கு “நகைசுவை மட்டும் தானே வருகிறது, எனது கேள்விக்கான பதில் வரவில்லையே! அதைதான் பார்க்கிறேன். எப்பொழுது வரும் என்று” என்றாள்.

“அதானே பார்த்தேன். உன் தாயை போல அதே பிடிவாதம்.” என்றவர் அவரே தொடர்ந்து

“என்னுடன் அமர்ந்து உணவு உண்டால் கூறுகிறேன்” என கூறி அவளையும் அவருடன் சேர்த்து கொண்டார். இருவரும் உணவு உண்ண அமர்ந்த பின் மீனட்ச்சி அவர்களுக்கு உணவு பரிமாற தொடங்கினார். மீனாட்சி பரிமாறி முடிக்கவும் சதாசிவம் அங்கு நின்று அடுத்து என்ன நடக்க இருக்கின்றது என்று ஆவலாக பார்த்து கொண்டிருந்த குடும்பத்தினர்களிடம் திரும்பி

“எனக்கு தெரிந்து நாங்கள் இருவரும் உணவு தான் உண்ண போகிறோம். வேறு எதுவும் இங்கு கண்காட்சி நடத்தும் எண்ணம் இல்லை. அதற்காக காத்திருந்தீர்கள் என்றாள் மன்னிக்கவும்” என்றவுடன் அங்கிருந்த அனைவரும் செல்வதற்கு மனமின்றி அங்கிருந்து சென்றனர்.

என்னதான் சதாசிவம் நகைச்சுவை கலந்து கூறினாலும் கூட அது அவர்களுக்கு வைத்த குட்டுதான் என்று ஆதிரையும் புரிந்து கொண்டாள். அதற்குள் மீனாட்சியும் பறிமாறி முடிக்கவும் சதாசிவம் அவரையும் அனுப்பி விட்டார். தன் கணவன் மருமகளுடன் தனியாக பேச விரும்புகிறார் என அறிந்ததும் மீனாட்சியும் அமைதியாக விலகி விட்டார்.

இத்தனை ஆண்டு கால திருமண வாழ்க்கையில் மீனாட்சி தன் கணவனை பற்றி நங்கு புரிந்து வைத்திருந்தார். அவர் ஆதிரையிடம் பேசுகிறார் என்றால் நிச்சயம் இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்ததால் மீனாட்சி சிறிது அமைதியானார். தேவாவும் சதாசிவம் மீண்டும் வீட்டிற்கு வந்ததுமே இந்த பிரச்சனையை அவர் சுலபமாக தீர்த்து விடுவர் என்ற நம்பிக்கையில் இருந்தான்.

ஆனால் ஆதிரையோ சதாசிவம் என்னதான் கூற போகிறார் என்று பார்ப்போம் என்ற மனநிலையில் தான் இருந்தாள். அனைவரும் போன பிறகு ஆதிரையை சாப்பிட கூறியவர், அவரும் அவளுடன் உண்டு கொண்டே

"ஆதிரை நான் சென்றதை உன்னிடம் யாரும் கூறவில்லை என்றுதான் கோபமாக இருக்கிறாய் என்று கேள்வி பட்டேன்" என்று அவர் கூறவும் ஆதிரை, தான் உண்டு கொண்டிருந்ததை நிருத்தி விட்டு அவரை பார்த்தாள்.

"சாப்பிடும் போது சாப்பாட்டை பாதியில் நிருத்த கூடாது. அதே போல அதை வீணாக்கவும் கூடாது. அது இரண்டும் எனக்கு பிடிக்காதுமா." என்றார். அவரது பேச்சில் அதிகபடியான கண்டிப்பும் அதில் கலந்திருக்கவும் ஆதிரை புரியாமல் முழித்தாள். எனவே அவரே தொடர்ந்து

"நமது தொழில் விவசாயம் தானேமா.. ஒரு நெல்லை சாதமாக மாற்றி தட்டில் சேருவதற்கு எவ்வளவு கஷ்டத்தை ஒரு விவசாயி கடக்க வேண்டும் தெரியுமா?" என்றார்.

ஆதிரை எதுவும் கூறாமல் அவரை ஆச்சரியமாக பார்க்கவும் சதாசிவம் "என்னமா? அப்படி என்ன ஆச்சரியமாக பார்த்து கொண்டிருக்கிராய்?" என்றார்.

ஆதிரை "இல்லை. சாப்பாட்டை நானோ அல்லது விக்ரமோ மீதி வைத்தால் அம்மா இதே வார்த்தைகள் தான் கூறுவார்கள். இதே கோபத்துடனும் கூட.. அதைதான் பார்த்தேன். ஆனால் நான் இப்போது சாப்பாட்டை வைக்க பார்க்கவில்லையே" என்றாள்.

"நான் பேச தொடங்கவும் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு என்னை பார்த்தாய். அதே போல் மேலே பேச போவதையும் கேட்டு பாதியில் எழுந்துவிட கூடாது அல்லவா? அதனால்தான் முன்பாகவே கூறிவிட்டேன்" என்றவர் அவரே தொடர்ந்து

"ஆதிரை. நான் கூறுவதை பொறுமையாக கேட்ப்பாய் என்று நம்புகிறேன்.” என்றார்.​

தொடரும்...​
வாசகர்களின் கருத்துகளே எழுத்தாளர்களை அதிகம் ஊக்கப்படுத்தும். எனது கதை அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது உங்கள் கருத்துகளும் விமர்சனங்களும் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் பதிவிடவும். நன்றி.

 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom