Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதல் உணர்வுப்பூர்வமானது- இந்திரா செல்வம்

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
1

“அத்தை காமாட்சியின் தோள்களை பற்றிக் கொண்டு அழகாக சிரித்தாள் சிவரஞ்சினி

“ரஞ்சனி, வாம்மா இப்பத்தான் வரணும்னு தோணுச்சா? கல்யாண அலைச்சல்ல நான் மட்டும் கிடந்து அல்லாடுறேன். ஒரு வாரத்துக்கு முந்தி வந்திருக்கலாம். ஒரு நாள் முந்தி வர்றீங்க?” செல்லமாக கோபித்து கொண்டார் காமாட்சி.

“எனக்கு காலேஜ்ல ஒரு முக்கியமான பரீட்சையிருந்தது அத்தை. அதான் வரமுடியலை. சாரி அத்தை. என் செல்ல அத்தையில்ல சாரி.. சாரி...” அவளின் தாடையைப் பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“சரி உனக்குத்தான் பரீட்சை உன் அம்மா, அண்ணன், எல்லாம் என்ன பண்ணினாங்களாம்” கோபம் குறையாமல் கேட்பது போல் கேட்டாள்.

“ஆமாம் உன் மருமகளைச் சொல்லு. ஒரு பாத்திரத்தை இங்கேயிருந்து அங்க எடுத்து வைக்க மாட்டா. எல்லா வேலையையும் நான்தான் செய்யணும், இவளை நம்பி வீட்டை விட்டு வந்தா அவ்வளவுதான்” இடை புகுந்து பதில் கூறினார் சிவரஞ்சனியின் அம்மா வைதேகி.

“இங்க வந்தா எல்லா வேலைகளையும் செய்வாளே” சுதாரித்தார் அத்தை

“அது என்னவோ பொண்ணுங்களுக்கு அம்மாங்கன்னா ஒரு தனி இதுதான். எல்லோருக்கும் விழுந்துவிழுந்து செய்வாங்க. ஆனா நமக்கு மட்டும் செய்ய மாட்டாங்க” அலுத்துக் கொண்டார் வைதேகி.

“பாருங்க அத்தை அம்மாவ” முகத்தை பாவமாக வைத்து கொண்டாள்.

“ஏன்.. என் மருமகளை திட்டற” அதட்டினாள் காமாட்சி.

“ஆமாம் நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்திட்டிங்களா, நான் இனி பேசி புண்ணியமில்லை” நழுவினார் அவளின் அம்மா. மற்ற இருவரும் சிரித்தனர்.

“அம்மாடி ரஞ்சனி, உன் பெரியத்தான் உன்னை பார்க்கனும்னு சொன்னான் போய் என்னன்னு கேளு”

“சரி அத்தை கல்யாண மாப்பிள்ளையை ஒரு வழி பண்ணிடறேன். பாருங்க”

“உன் பாடு, அவன் பாடு எப்படியோ போங்க. பின்கட்டில் சமையல் ஆகிவிட்டதா என்று பார்க்கிறேன்” சென்றாள்.

சுரேஷின் அறையை அடைந்தாள், உள்ளேயிருந்து ஒரே சிரிப்பும் கூச்சலுமாக இருந்தது. நடையின் வேகத்தைக் குறைத்தாள். அத்தானின் பிரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க போலிருக்கே. நாம எப்படி போய் பேசறது. யோசனையுடன் கதவை லேசாக தட்டினாள்.

“மே ஐ கம் இன்”

“எஸ்” என்று பதிலளித்து திரும்பினான் சுரேஷ். கதவருகில் சிவரஞ்சனி நிற்பதை பார்த்துவிட்டு,

“ஏய் வாயாடி.. எப்ப வந்த, உள்ள வா” என்றான் உற்சாகமாய்.

அவள், அவன் நண்பர்களைப் பார்த்து தயங்கி நின்றாள்.

இதையுணர்ந்த சுரேஷ், “எக்ஸ்கியுஸ் மிடா...” என்று கூறி எழுந்து வந்தான். இருவரும் அறையின் வெளியே வந்தனர்.

“உன்னை ஒரு வாரத்துக்கு முந்தியே எக்ஸ்பெக்ட் பண்ணினேன் சிவரஞ்சனி”

“ஒரு எக்ஸாம் இருந்தது அத்தான். அதான் வர முடியலை”

“சரி காலேஜெல்லாம் எப்படிப் போகுது”

“எப்பவும் போல் செம ஹாட்”

“என்ன மிர்சில வர்ற மாதிரி பேசுற?”

“அது என்ன சந்தேகம். இது செம ஹாட் மச்சி” கண்ணடித்து சிரித்தாள்.

“சரி சாப்பிட்டியா சிவரஞ்சனி?”

“இந்த சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்தைக் கொடுத்து கல்யாணத்தை முடிச்சிடலாம்னு இருக்கீங்களா?”

“மகாராணிக்கு வேற என்ன வேணும்?”

“பெருசா ஒண்ணுமில்லை ஸ்பென்சர்ல ஒரு ட்ரீட்”

“உங்க ஸ்டேட்டஸ்க்கு ரொம்ப சீப்பா கேட்குறீங்களே” என்று சுரேஷ் கூற இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

“சரி நீ போ ரஞ்சனி, நான் உன் கூட சாவகாசமா உட்கார்ந்து பேசுறேனே. இப்ப பிரெண்ட்ஸ் வெயிட் பண்றாங்க” விடை பெற்றான்.

“யாருடா சுரேஷ் அது சும்மா சூப்பரா இருக்கா?” கேட்டான் ராஜா.

“வேணாம்டா மாமு, அவளை மட்டும் விட்டுரு”

“ஏன்டா” இது ராமு.

“என் அம்மாக்கு இவளை என் தம்பிக்கு கட்டி வைக்கணும்னு ஆசை. என் அப்பா அதுக்கு முதல் எதிரி, எப்படியாவது அம்மா அப்பாவை கன்வின்ஸ் பண்ணிடுவாங்க. அதனால, என் தம்பியோட வருங்கால மனைவியை, நீங்க கிண்டல் பண்றதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்”

“மன்னிச்சிடுடா மாமு, தெரியாம கேட்டுத் தொலைச்சிட்டேன். அதுக்கு இவ்வளவு பெரிய லெக்சரா, தண்டனை ரொம்ப பெரிசா இருக்குடா” கைகளைக் கூப்பி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டான் ராஜா.

“அடி” என்று கைகளை உயர்த்தி கொண்டு எழுந்தான் சுரேஷ், ராஜா ஓட்டமெடுத்தான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
2

அன்றைய ‘கானாப்பாடல்கள்’ செவிப்பறைகளை துளைக்கும் வண்ணம் டேப் ரிக்கார்டரில் ஓடிக் கொண்டிருந்தது .மதிய சாப்பாடு முடிந்தவுடனேயே ராமச்சந்திரன் - காமாட்சி குடும்பம் மண்டபத்திற்கு வந்துவிட்டது. மண்டப அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தாள் சிவரஞ்சனி, வாசலில் உப்பக் கோலம் போட்டிருந்தாள். அது அனைவரின் பாராட்டையும் பெற்றுத் தந்தது. ஆங்காங்கே மாவிலைத் தோரணமும், பூந்தோரணமும் அழகாக கலை நயத்துடன் தொங்க விட்டிருந்தாள்.

இந்த வேலைகளை செய்யும்போதே அவள் யாரையோ தீவிரமாக தேடிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளின் தேடல் தோல்வியையே கொடுத்தது. அவள் தேடியது வேறு யாருமில்லை சுரேஷின் தம்பி தருணைத்தான்.

என்ஜினியரிங் படிக்க கோவை சென்றவன், கையோடு எம்.ஈ.யும் முடித்துவிட்டுத் தான் வருவேனென்று, அங்கேயே ஆறு ஆண்டுகள் இருந்து விட்டான். இடையில் லீவ் கிடைக்கும் போது சில நாட்கள் வீட்டிற்கு வருவான். அந்த சமயங்களில் அவனை பார்க்க முடியாதவாறு, ஏதேனும் ஒரு தடங்கல் வந்து விடும் சிவரஞ்சனிக்கு. எம்.ஈ முடித்து தருண் இங்கே வந்து இரண்டு வாரங்கள் முழுமையாய் ஆகிவிட்டன என்பது, அவள் கேள்விப்பட்டதுதான். ஆனால் அவனைப் பார்க்கத்தான் முடியவில்லை.

ஆறு வருடத்தில் தருண் எப்படியெல்லாம் வளர்ந்திருப்பானோ, பள்ளி பருவத்தில் ஒல்லியாய் அப்போதுதான் அரும்பிய துளிர் மீசை, எப்போது பார் புத்தகமும் கையுமாய் இருக்கும் பழக்கம். அதிகமாய் படிப்பதற்கு அறிகுறியாய் ஒரு கண்ணாடி,ஆக ஒரு நல்ல ஞானப்பழம் போல் இருப்பான்.இப்போதும் அந்த பழம் பழமாகவே இருக்கிறதா என்பதைப் பார்க்க சிவரஞ்சனிக்கு மிகுந்த ஆவல்.

சிறு வயதிலிருந்தே தருண் அவ்வளவாக யாரிடமும் பேச மாட்டான். புத்தகம் தான் அவனது தோழன். இவள் வீட்டிற்கு வந்தால் கூட சுரேஷ் தான் அரட்டைக் கச்சேரி பண்ணுவான். அவன் அதில் சுத்தமாக பங்கெடுத்துக் கொள்ள மாட்டான். பெற்றவர்களிடம் கூட அதிகமாக பேச மாட்டான். மற்றவர்களிடம் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் கொடுப்பான். அதனாலேயே தருணை எப்போதும் வம்புக்கிழுப்பதில் சிவரஞ்சனிக்கு அலாதிப்பிரியம், இப்போது அவனை தேடுவது கூட சீண்டிப் பார்க்கத்தான். மற்றபடி காதல் கத்திரிக்காய் என்ற எந்த எண்ணமும் அவள் மனதில் இந்த நொடி வரை இல்லை.

ஒரு வழியாக பெண்ணழைப்பு முடிந்து, சாப்பாட்டு பந்தியும் ஓய்ந்தது. கடைசி பந்தியில் தான் சிவரஞ்சனி சாப்பிட்டாள். அழகாக தாவணி கட்டி, தலை நிறைய பூ வைத்து, கால்களில் கொலுசு முத்தமிட, காதுகளில் ஜிமிக்கி பரதநாட்டியமாட எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாலும், அதில் ஏற்பட்ட அலுப்பு சிறிதும் முகத்தில் தென்படவில்லை. அந்த நடு சாம நேரமான 12.30 மணிக்கும் அவள் அப்போது பூத்த மலர் போல் பிரகாசமாகத்தான் இருந்தாள். சாப்பிட்டு முடித்து வந்தவளை காமாட்சி நிறுத்தினாள்.

“அம்மாடி ரஞ்சனி, இங்க கொஞ்சம் வாம்மா”

“என்ன அத்தை?”

“மேல்மாடி ரூம்ல சுரேஷோட பிரண்ட்சும்,தருணோட பிரண்ட்சும் இருக்காங்க, தருண் அவங்க கூட பேசிக்கிட்டிருக்கான், நீ அவனிடம் போய் எல்லோரையும் பால் குடிக்க அத்தை கீழே கூப்பிட்டாங்கன்னு சொல்றியாம்மா?”

“சரி அத்தை”

“பாவம் பசங்க ஒன்பது மணிக்கு சாப்பிட்டது. இந்நேரம் செய்த வேளையில் செரிச்சிருக்கும். வெறும் வயித்தோட படுத்தா எப்படி தூக்கம் வரும்” தாய் மனசு எப்பவும் போல் கசிந்தது.

தாய்மை உணர்வுதான் எப்போதும் பாகுபாடோ, வேறுபாடோ பார்க்காது என்பது எத்தனை உண்மை. தன் பிள்ளையை மட்டும் நினைக்காமல் அடுத்த பிள்ளைகளையும் தன் பிள்ளையாய் நினைப்பது என்பது தாய்மைக்கே உரியது. சும்மாவா சொன்னார்கள். “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்” என்று இதை நினைவில் எண்ணியவளாய்...

நான் சொல்றேன் அத்தை, நீங்க போய் முதல்ல தூங்குங்க, அப்பத்தான் நாளைக்கு வீடியோ எடுக்கும்போது ரொம்ப அழகா இருப்பீங்க” ஓரக்கண்ணால் அத்தையைப் பார்த்துச் சொன்னாள்.

‘குறும்பைப் பாரு” குமட்டில் செல்லமாய் குத்திவிட்டு நகர்ந்தாள் காமாட்சி.

குத்து வலிக்காத பட்சத்தில் கூட ‘ஆ’ வென்று இழுத்து கன்னத்தை தேய்த்துக் கொண்டே, மாடிப் படிகளில் கால் வைத்தாள்.

தருண் அத்தான் மேலே இருக்கிறார். இன்னிக்கு முழுக்க தேடினதுக்கு இப்பத்தான் கடவுள் கண் திறந்திருக்கிறார். அவனை பார்க்கும் ஆவலில் பாவாடையை கைகளில் பிடித்துக் கொண்டு இரேண்டிண்டு படிகளாக தாவித்தாவி ஏறினாள். அது ஒரு முயல்குட்டி குதித்து படிகளில் ஏறுவது போலவே இருந்தது.

இவள் வருவதை முதலில் பார்த்தவன் தருண் தான், மாடியறையின் வாசலில் தான் நின்றிருந்தான். வருவது மயிலா என்று ஒரு கணம் திகைத்து விட்டான். அவளின் உடை, கொலுசொலி, பிரகாசிக்கும் முகம், அதில் கூடுதல் பிரகாசம் சேர்க்கும் சிரிப்பு வழியும் உதடுகள். இப்படி ஒரு கொள்ளையழகு, தன்னை நோக்கி வருவதை பார்க்கும் எந்தவொரு ஆணும் ஸ்தம்பித்து நிற்கத்தான் செய்வான். இந்த ஆண்கள் அகராதிக்கு அவன் மட்டும் விதி விலக்கா என்ன?

ஒரு கணம்தான் நின்றான், அவளை உற்றுப் பார்த்தான். அவள் சிவரஞ்சனி என்பதை உணர்ந்தான். ஆறு வருடத்திற்கு முன்பு பாவாடை சட்டை போட்டிருக்கும் ரஞ்சனியா இவள்? என்னமா வளர்ந்துவிட்டாள். திகைப்பு போய் ஆச்சர்யம் குடி கொண்டது. திடீர் என இயல்புக்கு வந்தான். இதற்குள் அவள் இவனை நெருங்கிவிட்டாள்.

‘அது சரி, இந்த சுனாமி இந்த நேரத்துல ஏன் இங்க வந்தது? யோசித்தான்.

படிகளில் ஏறி திரும்பியவுடனே தருணைப் பார்த்து விட்டாள். நம்ம தருண் அத்தானா இது, நம்பவே முடியலேயே, நல்ல தேக வளர்ச்சி, உயரத்திற்கேற்ற உடல்வாகு. மூக்கிற்கு கீழ் கம்பளி பூச்சி மீசை மிகவும் அடர்த்தியாய், ஷேவ் செய்யப்பட்ட பளபளக்கும் கன்னங்கள், அன்றைய லேட்டஸ்ட் பேஷனில் உள்ள கண்ணாடி ஆக அவள் மனதில் கணக்கிட்ட தருண் அதிகமாகவே மாறிப் போயிருந்தான். இவ்வளவு கம்பீரமான ஆணைப் பார்த்ததும், என்ன தான் குறும்பு பெண்ணாய் இருந்தாலும், எங்கிருந்தோ திடீர் என நாணம் அவளைப் பற்றிக் கொண்டு முகம் சிவந்தது. மெல்ல நடந்து அவன் அருகில் வந்தாள்.

அவள் பேச வாயெடுக்கும் முன்பு அவனே பேசிவிட்டான்.

“இப்ப நீ எதுக்கு இங்க வந்த?’ கோபமாய் முகம் மாறிவிட்டது.

இதைச் சற்றும் எதிர்பார்க்காதவளாய், “அத்தை....”

“என்ன அத்தை.. சொத்தைன்னு கிட்டு” அதட்டினான்.

“அத்தை உங்களையும் உங்க பிரெண்ட்சையும் பால் சாப்பிட கீழே கூப்பிட்டாங்க” கடகடவென கூறி முடித்துவிட்டாள்.

‘பால்தானே, இவனுங்க எல்லா பாலையும் ஓட்டு மொத்தம்மா கலக்கி குடிச்சிட்டாங்கன்னு சொல்லு. அவனவனுக்கு இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இது வேற. நீ இப்ப கீழே போகப் போறியா இல்லையா, பாலெல்லாம் வேண்டாம்னு சொல்லு” தயங்கி நின்றாள். அப்போது தான் அந்த நாற்றம் அவள் மூக்கைத் துளைத்தது. தருணின் மேலிருந்து விஸ்கி வாடை வந்தது. ஒரு நிமிடம் எதுவும் விளங்காமல் ஸ்தம்பித்து நின்றாள்.

“ம்..போன்னு சொல்றேன்ல” அதிகமாக அதட்டினான்.சடார் என திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அறையினுள்ளிருந்து முனங்கல் சத்தம் அவள் காதுகளை துளைத்தது. மனதில் அதிகமான பாரத்தை வைத்தது போல இருந்தது..

கீழே சென்றவள் தன் அண்ணன் ஸ்ரீராம் படுத்திருக்கும் அறையை நோக்கி நடந்தாள். கூட்டத்தில் அவனைக் கண்டு பிடித்து எழுப்பினாள்.

“அண்ணா, அண்ணா!” தூக்கக் கலக்கத்தில் அரைக் கண்ணைத் திறந்து.

“என்ன சிவரஞ்சனி” என்றான் கம்மியக் குரலில்.

“கொஞ்சம் எழுந்து இங்க வாயேன்”

“என்ன?”

“இங்க வாயேன் சொல்றேன்ல” கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு, அறையை விட்டு வெளியே வந்தாள்.

“உம் சொல்லு என்ன?”

“மாடில அத்தானுக்கு ஏதோ பிராப்ளம் போல் தோணுது. கொஞ்சம் என்னான்னு போய்ப் பாரேன்”

“யாருக்கு?”

“தருண் அத்தானுக்கு”

“என்ன பிரச்சனை?”

“அதெல்லாம் தெரியாது நீ போய் பாரேன்” அவனை வலுக்கட்டாயமாக படிகளில் ஏறவைத்து அனுப்பினாள்.

வீட்டில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். காமாட்சி சிவரஞ்சனிக்கு ஒரு பாயும் தலையணையும் கொடுத்து, உறங்குமாறு கூறிவிட்டு, வேலையைப் பார்க்க சென்று விட்டாள். இவளுக்கு தூக்கம் வர மறுத்தது. படியிலேயே காத்திருந்தாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
3

படிகளில் ஏறி மாடியை அடைந்தான் ஸ்ரீராம் தருண் இப்போதும் மாடியில் இடவலமாக உலாவிக் கொண்டிருந்தான்.

“என்ன தருண் இன்னும் தூங்கலையா?” கேட்டுக் கொண்டே அவனருகில் வந்தான்.

“இல்லை ஸ்ரீராம்” என்றான் விரக்தியாய்.

“ஏன், எனி பிராப்ளம்?”

“உள்ளே போய் கொஞ்சம் பாருங்களேன்?”

கதவைத் திறந்து உள்ளே பார்த்தான், விஸ்கி வாடை மூக்கைத் துளைத்தது. அவரவர் ஒவ்வொரு வகையாய் படுத்து உருண்டு கொண்டிருந்தனர். ஏதோ முனங்கினர். ஆங்காங்கே வாந்தி, உடனே கதவையடைத்து விட்டு வெளியே வந்தான்.

“என்ன தருண் இது?” அவன் குரலில் ஆச்சர்யம் இருந்தது.

“அதையேன் கேக்குறீங்க ஸ்ரீராம். இன்னிக்கு முழுக்க நான் வெளி வேலையா இருந்தேன். வீட்லயேயில்லை. ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முந்திதான், மாலை ரெடியாகி விட்டதாவென்று பார்த்து வாங்கி வந்தேன். சாப்பிட்டு விட்டு அம்மா இவங்களுக்கு கம்பெனி கொடுக்கச் சொன்னங்களேன்னு இங்கு வந்தேன். இங்கே எல்லோரும் தண்ணியடிச்சிட்டு பிளாட் ஆயிட்டானுங்க. தட்டி எழுப்பிப் பார்த்தேன் எவனும் எழுந்திருக்கலை. கீழே வாந்தி எடுத்தது பத்தாதுன்னு என் மேலையெல்லாம் வாந்தி செமயா நாறுது. இந்த கருமத்தை எப்படித்தான் குடிச்சானுங்களோ மூக்கை பிடித்துக் கொண்டான்.

“சுரேஷுக்கு இது தெரியுமா?”

“இல்லை தெரியாது அவனை ஒன்பது மணிக்கெல்லாம் தூங்க சொல்லிட்டாங்க”

“வேற யாருக்காவது”

“இல்லை யாருக்கும் தெரியாது”

“ரொம்ப நல்லதாப் போச்சு”

அவசரமாக இருவரும் செயல்பட்டனர். எல்லோரையும் இழுத்து வந்து வெளியே போட்டு, அறையை கழுவி விட்டனர். மின் விசிறியைப் போட்டு காய வைத்து பாய் தலையணையை வெளியே எடுத்து ஒரு மூலையில் போட்டனர். ஒவ்வொருவராக குளிக்க வைத்து, வேறு உடைக்கு மாற்றிவிட்டு அறைக்குள் படுக்க வைத்தனர். இறுதியாக இருவரும் குளித்துவிட்டு வேறு உடையணிந்து கொண்டனர். அவர்கள் கழற்றிப் போட்ட உடைகள் மலைபோல் ஒரு மூலையில் குவிந்து கிடந்தது.

இந்தத் துணியெல்லாம் இங்கேயே இருக்கட்டும் தருண், காலைல ஏதாவது டோபிகிட்ட கொடுத்து துவைக்க்ச் சொல்லலாம். ரூம்ல ரூம் ஃபிரெஷ்னர் போட்டுக்கோ, கொஞ்சம் வாசனையா இருக்கும். இப்ப மணி ரெண்டாகுது. ரெண்டு மணி நேரமாவது தூங்கு. நாலு மணிக்கு எழுந்து கல்யாண வேலை பார்க்கணுமில்ல?”

“சரி ஸ்ரீராம் நீங்க செய்த உதவிக்கு ரொம்ப நன்றி” அவனின் கைகளை பிடித்துக் கொண்டான்

“நன்றியை எனக்கு சொல்லாதே”

“பின்ன?”

“என் தங்கைக்கு சொல்லு, கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டிருந்தவனை எழுப்பி, தருணுக்கு ஏதோ பிராப்ளம்னு அவதான் அனுப்பி வெச்சா” கூறிவிட்டு படிகளில் தாவினான்.

ஆஹா என்ன அறிவான பெண், என் முக பாவத்தை வைத்தே தனக்கு ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்திருக்கிறாளே, ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு.

படிகளில் இறங்கிய ஸ்ரீராம் கீழே தங்கை விழித்திருப்பதைப் பார்த்தான்.

“ஏன் நீ இன்னும் தூங்கலை?”

“தூக்கம் வரலை”

“ஏன்?”

“உன்னை மேலே அனுப்பிவிட்டு, அப்புறம் அங்கு என்ன நடக்குதுங்கிறதுதான் மனசுல ஓடிக்கிட்டு இருக்கு. அங்கே என்ன ஆச்சு?”

“எல்லோரும் குடிச்சிட்டு மல்லாந்துட்டானுங்க, நான் போய்தான் ரெண்டு பேருமா சேர்ந்து எல்லாத்தையும் ஒழுங்கு படுத்தினோம்”

“....”

“சரி எனக்கு தூக்கம் வருது” அறையினுள் புகுந்தான். எதையோ யோசித்தவளாய் பின்கட்டிற்கு சென்றாள்.

ஒரு மணி நேரம் கடுமையாக உழைத்ததால், உண்ட சாதம் செரித்து விட்டது, பசி வயிற்றைக் கிள்ளியது. ஒரு டம்ளர் பால் குடித்து விட்டு வந்து உறங்கலாம் என்று ஸ்ரீராமை பின் தொடர்ந்தான். அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு படிகளில் நின்றான். சிவரஞ்சனி அங்கிருந்து அகல்வதை பார்த்து அவன் கீழே வந்தான். பால் எங்கே என்று தேடிக் கொண்டு போகவும், எதிரில் அவள் வரவும் சரியாக இருந்தது. அவள் கையில் இரண்டு டம்ளர்கள், அவனைப் பார்த்ததும் இதமாக சிரித்தாள். பதிலக்கு அவனும் சிரித்தான்.

“இந்தாங்க” என்றாள் ஒரு டம்ளரை நீட்டி,

“என்னது?”

“பார்த்தா தெரியலையா?”

“பால் மாதிரி இருக்கு”

“இருக்குல்ல அப்ப அதுதான்”

“எதுக்கு?”

“பால் எதுக்கு குடிக்கத்தான். பசியோட படுத்தா எப்படி தூக்கம் வரும். எங்கண்ணன் கூட தூங்கியிருக்க மாட்டான். புரண்டு புரண்டு படுத்திட்டிருப்பான். அதான் ரெண்டு பேருக்கும் பால் கலக்கினேன்”

“ரொம்ப தேங்க்ஸ்”

“ஆல்வேஸ் வெல்கம்” சிரிப்பை உதிர்த்துவிட்டு நடையைத் தொடர்ந்தாள்.

சென்றவள் சிறிது தூரத்தில் நின்றாள், திரும்பினாள், தருண் பாலை பருகிக் கொண்டிருந்தான்.

“ஒரு நிமிஷம்” என்றாள். என்ன என்பது போல் பார்த்தான்

“சின்ன ரிக்வெஸ்ட்”

“எதுக்கு?”

“எனக்கு உங்களை அத்தான்னு கூப்பிடுறதுல உடன்பாடில்ல அதனால...”

“அதனால...?”

“நான் உங்களை தருண்னு கூப்பிட நீங்க அனுமதிக்கனும்” கூறிவிட்டு தரையைப் பார்த்தாள்.

“பர்மிஷன் கிராண்டட்” சொல்லி புன்னகைத்தான்.

சந்தோஷத்தில் நடையை எட்டிப் போட்டு அண்ணனின் படுக்கையை நோக்கி நடந்தாள். அவள் மட்டும் திரும்பிப் பார்த்திருந்தால், ஒரு முக்கிய விஷயம் தெரிந்திருக்கும். தருண் அவளையே பார்த்துக் கொண்டு பால் குடிப்பதை மறந்து நின்றிருந்தான்.

அறையினுள் செல்ல விரும்பாத தருண், மாடியில் வெட்ட வெளியில் மல்லாந்து படுத்துக் கொண்டு கைகளை தலைக்கு முட்டுக் கொடுத்து வானத்தையே பார்த்து கொண்டிருந்தான். நிலவு தேவதை அழகாக சிரித்தாள். ஏனோ அவனுக்கு அது நிலவாகத் தெரியவில்லை. சிவரஞ்சனியின் முகம் தான் தெரிந்தது.

எவ்வளவு நேரம் போனேதென்பதே தெரியவில்லை தருணுக்கு நிலவை பார்த்தபடியே படுத்திருந்தான். எங்கோ கொலுசு சத்தம் கேட்பது போலிருந்தது உடனே கண்களை மூடிக் கொண்டான். அவனருகில் வந்தவுடன் கொலுசொலி நின்றுவிட்டது. பிறகு விலகிச் சென்றது. சிறிது நேரம் மடியில் உலாவுவது போல் இருந்தது. பிறகு சிறிது சிறிதாக குறைந்தது. விழிகளைத் திறந்தவன் வேகமாக படிகளை அடைந்தான். படிகளில் தாவிச் செல்வது அவள்தான் என்பதை அந்த இருட்டிலும், அவன் கண்கள் காட்டிக் கொடுத்தன. அப்படியானால் தன்னருகில் நின்றது அவள்தானா என்னுள் நிகழும் தடுமாற்றம், அவளுள்ளும் நிகழ்ந்திருக்குமா? அவள் கையில் ஒரு மூட்டை இருந்ததே. அது என்ன? யோசித்தான், ஒன்றும் விளங்கவில்லை. திரும்பவும் வந்து படுத்துக் கொண்டான். எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
4

தலையில் அறைந்தாற்போல் அலாரம் அடித்தது. அலறியடித்துக் கொண்டு எழுந்தான். இன்னும் விடியவில்லை, வானத்தில் எந்த மாற்றமுமில்லை, நிலவு மட்டும் இடம் மாறியிருந்தது. தூக்கம் கலைய இங்குமங்கும் நடந்தான். அப்போது தான் அவன் வீட்டு மாடியில் லைட் எரிவது கண்ணில் பட்டது. கல்யாண மண்டபத்திலிருந்து நான்காவது வீடு, காமாட்சி, ராமசந்திரன் தம்பதியருக்கு உரியது. மண்டபத்தின் மாடியிலிருந்து பார்த்தால் அந்த வீட்டு மாடி தெள்ளத் தெளிவாகத் தெரியும். இப்போதும் அப்படித்தான். யாரோ மடியில் உலாவுவது போல் தோன்றியது. கண்களை கூர்மைப்படுத்தி பார்த்தான், அந்த உருவம், கொடிகளில் துணிகளை காயப்போடுவது தெரிந்தது. கொடி பற்றாமல் மாடி கைப்பிடி சுவர்மீதும் துணிகளை விரித்து கற்களை தூக்கி வைத்தது. அந்த உருவம் லைட் பக்கத்தில் வந்ததும் அது யார் என்பதை உணர்ந்து விட்டான். இவள் இந்த நேரத்துல மாடில ஏன் துணி காயப் போட்டுக்கிட்டிருக்கா? தாடையை விரல்களால் தேய்த்தான். ஏதோ ஞாபகம் வந்தவனாய் நேற்று அவர்கள் களைந்து போட்ட துணிகளை தேடினான். அவன் போட்ட இடத்தில் இல்லை. இப்போது அவனுக்கு எல்லாமே விளங்கிவிட்டது. நேற்றிரவு அவள் கையிலிருந்த மூட்டை, இந்த உடைகள் தான். பிறகு வீட்டிற்குச் சென்று அவைகளை எல்லாம் துவைத்து இப்போது உலர்த்துகிறாள். அப்படியானால் அவள் இரவு முழுவதும் சிறிது கூட தூங்கவில்லை. அதிசயப் பெண்ணாக இருக்கிறாளே. அவனது எண்ணங்களில் சிவரஞ்சனி ஒரு படி ஏறினாள்.

கீழே இறங்கி வந்தான் தருண், ஒரு சிலரே விழித்திருந்தனர். பின்கட்டிற்குச் சென்றான். அங்கே சமையல் ஆட்கள் அடுப்பைப் பற்ற வைத்திருந்தனர். அம்மா அவர்களை வந்திருந்த எல்லோருக்கும் டீ போடுமாறு ஏவிக் கொண்டிருந்தாள். அங்கிருந்த பலகையில் அவன் அமர்ந்ததும் காமாட்சி இவனை பார்த்து விட்டு அருகில் வந்தாள்.

“என்ன தருண் சரியா தூங்கலையா?” பாசமாக அவன் தலையை வருடினாள்.

“ம்..”

“சரி, நாளைக்கு சேர்த்து தூங்கிக்கலாம். இங்க கொஞ்சம் சமையலை மட்டும் நீ பார்த்துக்கிட்டா போதும்....”

“சரி”

“டீ போட்ட உடனே குடிச்சிட்டுப் போய் குளிச்சிட்டுவா”

“சரி” அம்மா விலகிச் சென்றாள்.

பானை நிறைய பால் காய்வதற்கே அரை மணி நேரம் பிடித்தது. பிறகு டிகாஷன் போட்டு டீ கலந்து கொண்டிருந்தனர். டீயை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் தருண்.

“குட்மார்னிங் தருண்” இனிமையான குரல் கேட்டு திரும்பியவன் பிரம்மித்து நின்றான்.

பச்சைக்கலர் பட்டுப் புடவையில் தேவதையாய் நின்றாள். புடவைக்கு ஏற்றாற்போல் வளையல்கள், நெக்லஸ், தோடு அணிந்திருந்தாள். கூந்தல் இடையைத் தாண்டி நீண்டிருந்தது. தலை நிறைய பூ வைத்திருந்தாள், கண்களில் சிறிது சோர்வு இருந்தாலும், அது அவள் தோற்றத்தை சிறிதும் பாதிக்கவில்லை. சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள். பதிலேதும் கூறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஹலோ” அவன் முகத்துக்கு நேரே கைகளை ஆட்டினாள். அப்போதுதான் நினைவுக்கு வந்தான்.

“ஆ.. குட்மார்னிங்க”

“ரொம்ப லேட் ரியாக்ஷனா இருக்கே?’’

“சாரி, தூக்கக் கலக்கம்”

“அப்ப உடனே போய் குளிச்சிட்டு வாங்க”

“டீ குடிச்சிட்டு குளிக்கலாம்னு...”

“பல் தேய்ச்சாச்சா...?”

“ம்..ச்...”

“இல்லையா, அய்யோ ! உவ்வே...”

“என்னாச்சு?”

“போய் முதல்ல பல் தேய்ங்க. அப்புறம் டீ குடிக்கலாம்”

அவள் அன்பாய் கூறுவதை அவனால் மறுக்க முடியவில்லை .எழுந்து பாத்ரூமை நோக்கிச் சென்றான். பல் தேய்ந்து குளித்து விட்டே வந்து விட்டான்.

அவனுக்கு என்ன நிகழ்ந்தென்றே தெரியவில்லை அம்மா சொன்னால் கூட பல் தேய்க்காமல் தான் டீ குடிப்பான். ஆனால் இவள் சொல்லை அவன் மனது அப்படியே ஏற்றுக் கொண்டது. இதுதான் காதலா! குழம்பினான்.

காலை 9.00 – 10.30 முகூர்த்தம் ஓடியோடி வேலை செய்து கொண்டிருந்தாள். சிவரஞ்சனி

“சமையல்காரரே சமையல் ஆயிடுச்சா?” அவசரப்படுத்தினாள்.

“ம்.. ஆயிக்கிட்டே இருக்குமா...”

“சீக்கிரம் ஆகட்டும்...”

“சிவரஞ்சனி கொஞ்சம் இங்க வந்து பொண்ணுக்கு அலங்காரம் பண்ணேன்” மாலினி கூப்பிட்டாள்.

“ஆ.. வர்றேன்..”

“அம்மாடி, சிவரஞ்சனி கொஞ்சம் தண்ணி தாடா கண்ணு”

தொண்ணூறு வயதையொத்த மூதாட்டி கேட்டார்.

“இப்படி உட்காருங்க பாட்டி கொண்டு வாரேன்” என்று அவரை பிடித்து பதமாக அமர வைத்தாள், தண்ணீர் எடுத்து வந்து தந்தாள்.

“சிவரஞ்சனி காமாட்சியம்மா எங்க?”

“தெரியலை பெரியப்பா, நானே காலையிலேயிருந்து பார்க்கல”

“சிவரஞ்சனி” மாலினி திரும்பவும் குரல் கொடுத்தாள்.

“வந்துட்டேன்”

“அக்கா நல்லெண்ணெய் எங்கே இருக்குன்னு அம்மா கேட்கச் சொன்னாங்க. குத்து விளக்கு ஏத்தனுமாம்”

“அந்த ரூம்ல இருக்கு” என்று கைகாட்டினாள். குழந்தை முழிப்பதை பார்த்துவிட்டு தானே சென்று எடுத்து வந்து கொடுத்தாள்.

“தேங்க்ஸ் கா” மழலையாய் உதிர்த்தது.

“வெல்கம்” சிரித்துக் கொண்டே சிறுமியின் கன்னத்தில் இதழ் பதித்தாள். குழந்தை துள்ளிக் குதித்து ஓடியது/ மணப்பெண்ணின் அறை நோக்கிச் சென்றாள். சிவரஞ்சனி.

தூரத்திலிருந்து அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருந்தான் தருண் வியந்தான். எத்தனைப் பொறுப்பு இந்த பெண்ணுக்கு, கண்களில் கனவு, குழந்தையின் துள்ளல், டென்ஷனாகாத குணம், எத்தனை வேலை செய்தாலும் சிரிப்பை நழுவ விடாத உதடுகள், எழுந்து விழும் தன்மை அறவேயில்லை.இப்படி ஒருத்தி நம் மனைவியானால், நினைக்கவே இனிக்கிறதே. அந்த சிறுமி அவனை தாண்டித்தான் சென்றது. உடனே குனிந்து அந்தச் சிறுமியை கொத்தாக தூக்கினான்.

“என்ன மாமா” கையில் நல்லெண்ணெய் கவரை வைத்தபடியே கேட்டது.

“ஒண்ணுமில்லைடாக் கண்ணு, ஒரு முத்தம் வேணும்”

உடனே குழந்தை அவன் கன்னத்தில் முத்தமிட்டது பதிலுக்கு அவனும் தருவது போல், அவள் எந்த இடத்தில் முத்தமிட்டாளோ அதேயிடத்தில் இதழ் பதித்தான். இதயம் சிலிர்த்தது. ஆயிரம் பட்டாம்பூச்சிகள் இதயத்தில் சிறகடித்துப் பறந்தது.

“ஏய் ஹரிணி, உன்னை நல்லெண்ணெய் வாங்கி வரச் சொன்னா மாமாவோட என்ன அரட்டை” குழந்தையின் அம்மா அதட்டினாள். குழந்தை நழுவிச் செல்வது கூட அவனுக்குத் தெரியவில்லை.

“டேய் மாமு என்னடா ஆச்சு?” அசோக் தோள்களை குலுக்கிய பிறகே நினைவுக்கு வந்தான்.

“ஆ... ஒண்ணுமில்லை”

“டேய் பொய் சொல்றான்டா” கணேஷ் கிண்டலடித்தான்.

“அதான் ஒண்ணுமில்லைன்னு சொல்றேனே”

“ஆமாமாம். இவன் ஒரு மணிநேரமா சிவரஞ்சனியைப் பார்த்து ஜொள்ளு விடவுமில்லை. அதனால இங்க ஜொள்ளு மட்டம் அதிகமாகி நாங்க முழுகவுமில்லை. அந்த சின்னப் பொண்ணுக்கு அவ முத்தமிட்ட இடத்தில் இவனும் முத்தமிடலை இப்படி ஒண்ணுமில்லைதான். அதை நாங்களும் பார்க்கவேயில்லை தான்” சோகமாக இழுத்து முடித்தான் கார்த்திக்.

“டேய் வேணான்டா....”

“தருணுக்கு வெட்கத்தைப் பாரு” நண்பர்கள் கூட்டம் சிரிப்பில் நிறைந்தது.

மணமகளுக்கு அலங்காரத்தை முடித்துவிட்டு, சமையல் இடத்திற்கு சென்றாள். அவளை பார்த்த காமாட்சி விழிகளை விரித்தாள்.

“என் ராசாத்தி என் கண்ணே பட்டடும் போல் இருக்கே” திருஷ்டி முறித்தார்.

“சேலைல தேவதை மாதிரியிருக்கடா கண்ணு” வெட்கத்தோடு சிரித்தாள் சிவரஞ்சனி.

“ம்... அங்க என்ன அரட்டை முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சி. சீக்கிரம் வா காமாட்சி” அதட்டியக் குரலில் கூப்பிட்டார் ராமச்சந்திரன்.

“ம்.. வந்துட்டேங்க, சிவரஞ்சனி பட்டுச் சேலைல தேவதை மாதிரியிருக்காயில்ல”

“இந்த வயசுல என்ன சேலை வேண்டிக் கிடக்கு, கிழவி மாதிரி சுத்தமா சகிக்கலை” உதாசீனப்படுத்திவிட்டு முன்னே சென்றார். காமாட்சி விக்கித்துப் போய் நின்றாளர். சிவரஞ்சனி சமாளித்துக் கொண்டாள்.

“அவர் என் மாமா முறையில்லையா அத்தை. அதான் கிண்டல் பண்றாரு. மாமாவுக்கு இன்னும் குறும்பு அடங்கலை” என்று சொல்லிச் சிரித்தாள். வேதனையாக சென்றாள் அத்தை.

அவள் அத்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களில் கண்ணீர் துளிர்த்தது. யாருமறியாமல் அதை துடைத்துக் கொண்டாள். இவ்வளவு நேரம் இருந்த உற்சாகம் எங்கே போனதென்றே தெரியவில்லை. சோர்வு வந்து தொற்றிக் கொண்டது. தலையில் பாறாங்கல்லை வைத்ததுபோல் வழித்தது. அங்கிருந்த நாற்காலியில் சரிந்தாள். தலையைப் பிடித்துக் கொண்டாள். மனம் ராமச்சந்திரன் கூறியதையே அசை போட்டது. வலி கூடுவது போலிருந்தது. கண்களை மூடிக் கொண்டாள். ‘டொக்’ என்ற சத்தம் கேட்டு நிமிர்ந்தாள். தருண் நின்றிருந்தான் கையில் ஒரு மாத்திரை, டேபிள் மீது ஒரு டம்ளர்.

“இந்தா இந்த மாத்திரையைப் போட்டுக்கோ”

“என்ன மாத்திரை”

“ஆ.. விஷ மாத்திரை”

“இப்ப நீங்க அதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன்” சுருக்கென்றது அவனுக்கு.

“அப்பா ஏதோ தெரியாம சொல்லிட்டாரு. அவர் எப்பவும் இப்படித்தான். எதையாவது சொல்லிடுவாரு. அப்புறம் வருத்தப்படுவாரு. சமாதானப்படுத்த முனைந்தான்.

“அய்யோ, நான் அதுக்குச் சொல்லலை” அவசரமாக மறுத்தாள்.

“அப்ப சாப்பிடு தலைவலி மாத்திரைதான்”

மாத்திரையை வாங்கி போட்டுக் கொண்டாள்.

“நைட் கொஞ்ச நேரமாவது தூங்கி ரெஸ்ட் எடுக்கனும், இல்லைன்னா தலைவலி வரத்தான் செய்யும்”

“உங்களுக்கு...”

“நான் தான் பார்த்தேனே, நீ மாடில துணி காயப்போடுறதை, தேவையா இதெல்லாம் எதுக்கு செய்யனும்?”

“அத்தானோட பிரண்ட்சுக்கு இதுகூட செய்ய முடியலைன்னா எப்படி?”

“அவனுங்க இன்னும் குடிக்கத்தான் போறானுங்க. இன்றும் தொவைச்சு போடுவியா?”

“அதுக்கு அவசியமே வராது’ கூறியவள், சமையல் இடத்தை விட்டு அகன்றாள்.

“இவ என்ன நினைக்கிறா, என்ன செய்யப் போறா, எதுவுமே புரிய மாட்டேங்குது. இவளை புரிஞ்சிக்கிட்டு தெரிஞ்சிக்கிட்டு கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தறதுக்குள்ள நான் ஒரு வழியாகிடுவேன்.

பெருமூச்சோடு மற்ற வேலைகளில் ஈடுபட்டான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
5

திருமணம் நேர்த்தியாக நடந்து முடிந்தது. மதியச் சாப்பாடும் ஒரு வழியாக முடிந்தது. எல்லாம் முடிந்து புதுமணத் தம்பதிகளை பெண் வீட்டிற்கு அனுப்பிவிட்டு அப்பாடா என்றபோது மணி 4.00 ஒரு மணி நேரம் கண்ணயரலாம் என்று ஒரு ரூமினுள் சென்றாள் சிவரஞ்சனி. பின்னாலேயே வைதேகி வந்து விட்டாள்.

“சிவரஞ்சனி ஸ்ரீராம் உன்னைக் கூப்பிட்டான்”

“எதுக்காம்?”

“அதெல்லாம் தெரியாது. சீக்கிரம் போ வாசல்லதான் இருக்கான்”

“சரி, நீங்க போங்க”

வாசலை நோக்கி நடந்தாள். அங்கே தருண் பைக்கில் அமர்ந்திருந்தான், ஸ்ரீராம் அவனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“என்னண்ணா?” அண்ணனைப் பார்த்து கேட்டாள்.

“ஒன்றுமில்லையம்மா, பொண்ணு வீட்டுலயும் நமக்கு பத்திரிக்கை வெச்சிருக்காங்க, நாளைக்கு அங்க போகணும் வெறுங்கையோட போக முடியுமா? அதான் ஒரு கிப்ட் வாங்கி பிரசென்ட் பண்ணலாம்னு”

“தாராளமா பண்ணு”

“எனக்கு இங்க நிறைய வேலையிருக்கு, நாளைக்கு காலைல மண்டபத்தை காலி பண்ணனும். சமையல்காரனுக்கு செட்டில் பண்ணனும், அத்தை மாமாவுக்கு கூடமாட ஹெல்ப் பண்ணனும்..தருண் இப்போ அந்தப் பக்கம் தான் ஒரு வேலையா போறான். நீயும் அவன் கூடவே போய், ஒரு நல்ல கிப்டா வாங்கிட்டு வந்துடும்மா” என்று ஐநூறு ரூபாய் தாளை அவள் கையில் வைத்தான்.

கிப்ட் வாங்க போவதா? அதுவும் இவனுடனா? குழம்பினாள்.

அண்ணன் சொல்லையும் தட்ட முடியவில்லை. அரை மனதுடன் வண்டியில் ஏறினாள். அவனை உரசாதவாறு இடைவெளி விட்டு அமர்ந்தாள், அது அவனுக்கு இன்னும் பிடித்தது.

ஸ்ரீராமைப் பார்த்து ஆயிரம் கோடி நன்றிகளை கண்களாலேயே கூறினான். பைக் ஒரு புகை மண்டலத்தை கக்கி விட்டு நகர்ந்தது. எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று இரு மனதும் துடித்தது.

“என்ன பேச்சையே காணோம்?”

“ரொம்ப டயர்டா இருக்கு”

“அப்ப வா சூடா டீ குடிக்கலாம்” இதுதான் சாக்கு என்று ஒரு ஹோட்டலின் முன் வண்டியை நிறுத்தினான்.

“எதிரெதிர் சீட்டில் இருவரும் டீயை ருசித்துக் கொண்டிருந்தனர்.

“எங்கப்பா சொன்னதை இன்னும் மனசுலயே போட்டு குழப்பிக்கிறியா?”

“இல்லை” ஒரு வார்த்தையில் பதில் சொன்னாள்.

“ஏன் எங்கிட்ட சரியா பேச மாட்டேங்கிற, நான் ஏதாவது தப்பு செஞ்சேனா?”

“இல்லை”

“நான் நம்ப மாட்டேன் காலைக்கப்புறம் நீ எங்கிட்ட பேசவே இல்லை. என்ன ரீசன்னு எனக்கு தெரிஞ்சாகனும்”

“தெரிஞ்சே ஆகணுமா?”

“ஆமாம்”

“ஒண்ணுமில்லை” என்று கூறி கலகலவென சிரித்தாள். ஒன்றும் விளங்காமல் விழித்தான் தருண்.

“”நான் உங்க கூட பேசாமயிருந்தா, நீங்க எப்படி ரியாக்ட் பண்றீங்கன்னு பார்த்தேன். நான் நினைத்தை விட அதிகமாவே ரியாக்ட் பண்ணிட்டீங்க, அதனால உங்களுக்கு 100-க்கு 110 மார்க்” என்று கூறி கண்ணடித்துச் சிரித்தாள்.

“அடி” அவள் காதைப் பிடித்துத் திருகினாள்.

“ஆ” எல்லோரும் பார்க்கிறாங்க விடுங்க”

அவசரமாக காதை விட்டான். இருவரும் பைக்கில் ஏறி ஒரு நல்ல கிப்ட் கடையை நோக்கிச் சென்றனர்.

“வாவ்’ தாஜ்மஹாலை கையில் வைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன தருண்” வேறு பொருட்களை பார்த்துக் கொண்டிருந்தவள் கேட்டாள்.

“இங்கே வாயேன்” வந்தாள்.

‘இந்த தாஜ்மஹால் ரொம்ப அழகாயிருக்குல்ல, உலக அதிசயங்கள்ல ஒன்று ‘காதலின் சின்னம்’ உருகிக் கொண்டிருந்தான்.

சில்லறைகளை உதிர்த்தது போல் சிரித்தாள்.

“நான் சொன்னது ஜோக்கில்லையே உண்மைதானே” விழித்தான்.

“உண்மையாவே இருக்கலாம். ஆனா எனக்கு அதுல உடன்பாடில்லை”

“எதுல”

“நீங்க சொன்ன மூணு கருத்துல ரெண்டை நான் ஒத்துக்க மாட்டேன்”

“எதை?”

“நீங்க என்ன சொன்னீங்க?”

“ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னேன்”

“அதை ஒத்துக்கிறேன் தாஜ்மஹால் அழகுதான், அப்புறம் என்ன சொன்னீங்க?”

“அதிசயங்களில் ஒன்னுன்னு சொன்னேன்”

“அதிசயம்னு நீங்க எதை நினைக்கறீங்க?”

“நான் இதுல நினைக்க என்ன’ இருக்கு’. அதான் ஏழு அதிசயங்களை வரிசைப் படுத்தியிருக்காங்களே?”

“யாரோ வரிசைப்படுத்தியதையே நீங்களும் ஒத்துக்கணும்ங்கிற அவசியமில்லை. நீங்களாவும் சிந்திக்கலாமில்லையா?”

“சரி தப்புத்தான் நீயே சொல்லேன்”

“அதிசயம்கிறது என்னைப் பொறுத்தவரை மனிதனால் உருவாக்கப்பட்ட விஷயங்கள் அல்ல. மனிதனுக்குள்ளேயே இருக்கிற விஷயங்கள் தான்”

“எப்படி?”

“மனிதனோட ஆறு அறிவுகளும் ஆறு அதிசயங்கள் தான் ஏழாவ்து அதிசயம் என்ன தெரியுமா?”

“என்ன?”

“பிற மனிதர்களிடமும், உயிரினங்களிடமும் பாகுபாடில்லாத அன்பை காட்றதுதான்”

விக்கித்து போய் நின்றான்.எவ்வளவு தெளிவான கருத்து, ஆழ்ந்த அதிசயமான கருத்து.

“அப்புறம் என்ன சொன்னீங்க ஆங்.. காதலின் சின்னம் தானே” அவனைப் பார்த்தாள். அவன் ஆமாம் என்பதுபோல் தலையசைத்தான். அவள் தொடர்ந்தாள்.

“காதலின் சின்னம் கல்லறையா தருண்” தலையை சாய்த்து அவனை நோக்கினாள்,

“...”

“தாஜ்மஹால்ங்கிறது உண்மையில் மும்தாஜின் கல்லறைதானே?”

“....”

“காதலுக்கு சின்னம் எதுன்னு என்னைக் கேட்டா இதயம்னு சொல்லுவேன் காதலை சுமப்பது இதயம்தானே?”

“....”

“என்னாச்சு, தருண் பேச்சையே காணோம்”

“பேச்சே வரலை சிவரஞ்சனி”

“சரி வாங்க, வீட்டுக்கு போகலாம்”

“கிப்ட்”

“அதான் தாஜ்மஹாலை செலக்ட் பண்ணிட்டீங்களே ரொம்ப அழகாயிருக்கு, வாங்க பேக் பண்ணலாம்”

அவன் சாவி கொடுத்த பொம்மையாய் அவள் பின்னால் சென்றான்.கையில் விஸ்கி பாட்டில்களுடன் பேசிச் சிரித்தவாறு, சுரேஷின் நண்பர்களும், தருணின் நண்பர்களும் மாடியறையின் கதவை அடைந்தனர். இவர்களைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டான் தருண். சிவரஞ்சனி என்ன செய்ய போகிறாள் என்பதை பார்க்க மிகவும் ஆவலாக இருந்தான். சற்று தூரம் இடைவெளிவிட்டே அவர்களை தொடர்ந்தான்.

கதவைத் திறந்த நண்பர்கள் சிலையாய் உறைந்தனர். உள்ளே எல்லா வகையான சாமி படங்கள். சாம்பிராணி புகை, இடையில் ஊதுபத்தியும் தன் பங்கிற்கு புகையைக் கக்கிக் கொண்டிருந்தது. கற்பூரத் தட்டில் தகதகக்கும் கற்பூரத்துடன் நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் அனைவரும் கையில் இருந்த பாட்டில்லை முதுகுப்புறமாக மறைந்தனர்.

“டேய் தருணோட ஆளு இங்க எங்கடா வந்தது?” அசோக் கணேசின் கதைக் கடித்தான்.

“தெரியலை டா, ஒரு வேளை தருணை பார்க்க வந்திருப்பாங்க”

“தருண் எங்க கூட வரலைங்க” சுதாரித்துக் கொண்டு பேசினான் கணேஷ்.

“நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்”

“என்ன விசேஷம்?”

“உங்க கைல என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“அது... அ... ஒன்னுமில்லையே?”

“எனக்குத் தெரியும். இப்ப நிதானத்துல இருக்கீங்க. டீசன்சி மெயின்டெயின் பண்றதுக்காக ஒளிச்சிட்டீங்க. நேத்து நிதானத்துல இல்லாம எந்த கோலத்துல கிடந்தீங்க தெரியுமா நினைக்கவே கூசுது”

“....”

“உங்களால எல்லாருக்கும் பிரச்சனை. ஏதோ எனக்கு, எங்க அண்ணனுக்கு தருணுக்கு மட்டும் தெரிஞ்சதால பரவாயில்லை. எல்லோருக்கும் தெரிஞ்சிருந்த என்னவாகியிருக்கும்”

“.....”

“நாம ஒரு வீட்டுக்கு விருந்தினரா போனால் அந்த வீட்டை கோவிலா மதிக்கனும். நீங்க குடிக்கிற பசங்கன்னு தெரிஞ்சா என் மாமா என்ன நினைப்பார் இவனுங்களோட பிரண்ட்சுங்க தண்ணி அடிக்கிறானுங்க. அப்படின்னா நம்ப பசங்களும் அடிப்பாங்க போல் இருக்கும்ன்னு தானே நினைப்பாரு”

“நீங்க நினைக்கிற மாதிரி தருணோ, சுரேஷோ தண்ணியடிக்க மாட்டாங்க” ஒருவழியாக கணேஷால் பேச முடிந்தது.

“அது எனக்கு நல்லாத் தெரியும். என் அத்தான்களைப் பத்தி எனக்கு தெரியாதா? நான் சொன்னது எங்க மாமா நினைப்பைபத்தி. அதான் பழமொழி சொல்லுதே ‘உன் நண்பனைக் காட்டு உன்னைச் சொல்கிறேன்னு”

“...”

“நீங்க கேக்கலாம் குடிக்கிறது எங்க இஷ்டம் நீ என்ன கேக்கிறதுன்னு உங்க இஷ்டம்தான். ஆனா உங்க வீட்ல இருக்கும் போது குடிச்சிட்டு தூங்குங்க கஷ்டமோ நஷ்டமோ அது நம்ம வீட்டோ ஆனா இங்க அப்படியில்லை. தெரிஞ்சா ஊரே நாறிடும் .உங்க பேர் கெட்டுப் போகாம பார்த்துக்க வேண்டியது எங்க பொறுப்பு”

“....”

“இதுக்கு மேலேயும் நாங்க குடிச்சுத்தான் தீருவோம்னு சொன்னா எனக்கு ஆட்சேபனையில்லை. அப்படி வேணாம்னு நினைச்சீங்கன்னா, பாட்டிலை என் கிட்ட கொடுத்துட்டு , இந்த பாத்திரத்துல இருக்கிற பாலை ஒரு டம்ளர் குடிச்சுட்டு சாமி கும்பிட்டு படுங்க”

தங்கள் தவறை உணர்ந்த நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து அவள் கையில் பாட்டிலை அடுக்கினர், சந்தோஷத்துடன் வெளியேறினாள். அப்போது இவ்வளவையும் கேட்டுக் கொண்டு வெளிப்புறமிருந்த தருண் உள்ளே வர யத்தனித்தான்.

இருவரும் மோதிக் கொண்டனர். கையில் இருந்த பாட்டில்கள் நழுவி கீழே விழுந்து உடைந்தன. இருவரும் ஒரே சமயத்தில் முட்டிக் கொண்டனர். தலையைத் தேய்த்தவாறு கீழே குத்துக் காலிட்டு அமர்ந்தாள். கண்ணாடி துண்டுகளை பொறுக்கினாள். தருண் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இன்னைக்கும் அவங்க எங்க தூங்கப் போறாங்க” உள்அர்த்தத்துடன் சொன்னான் அசோக். அர்த்தம் புரிந்தவள் வெட்கத்தில் எழுந்து ஓடினாள். அப்போது அவள் காலில் ஒரு கிளாஸ் துண்டு பட்டு ரத்தம் கசிந்தது. அதையும் பொருட்படுத்தாமல் துள்ளிக் குதித்து மறைந்துவிட்டாள். எல்லோருமாக சேர்ந்து தரையை சுத்தம் செய்தனர். ரத்தக் கறையைப் பார்த்தவன் இதயம் கசிந்தது.

புரண்டு புரண்டு படுத்தான் தருண் தூக்கம் விடாப்பிடியாய் வர மறுத்தது மெல்ல எழுந்தான் நண்பர்கள் அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர் ஒரு பேண்டேஜை தேடி எடுத்துக் கொண்டு கீழிறங்கினான். சிவரஞ்சனி தூங்கும் அறையைக் கண்டுபிடித்து எட்டிப் பார்த்தான். அங்கே அம்மாவும் சிவரஞ்சனியும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

“ஒரு சின்ன கிளாஸ் குத்தினதுக்கு இவ்வளவு பெரிய கட்டு தேவையா அத்தை. எனக்கே பார்க்க பயமா இருக்கு”

“உனக்கு எல்லாமே விளையாட்டு தான். கிளாஸ் குத்தி செப்டிக் ஆயிட்டா?”

“வெளியிலேயே போயிட்டு வீடு வர்ற வரைக்கும் மனுஷனோட உயிருக்கு உத்திரவாதமில்லை. அதுல இந்த செப்டிக் ரொம்ப சின்ன விஷயம் அத்தை”

“ஆமா பாட்டி, கொஞ்சம் வாயை மூடு அங்க இங்கன்னு குதிக்க வேண்டியது. கண்டதைக் குத்திக்கிட்டு வரவேண்டியது. இன்னும் உனக்கு சீரியஸ்னஸ் கொஞ்சமும் வரலை, குழந்தையாவே இருக்க”

“அத்தை நாம வளர்ந்தாலும், நம்ம மனசை வளர விடக் கூடாது எப்பவும் ஜாலியா இருக்கணும். அதுதான் என்னோட ஆசை”

“சரி உனக்கு வரப்போற மாமியார் கொடுமைக்காரங்களா இருந்தா?”

சிரித்தவள், ”என்னதான் கொடுமைக்காரங்களா இருந்தாலும், ஒரு நல்ல விஷயமாவது அவங்ககிட்ட இருக்குமில்லையா. அதுவே போதும் நான் அட்ஜஸ்ட் பண்ணி போயிடுவேன். நாம என்னதான் கணக்கு போட்டாலும், மேல இருக்கிறவன் மனசு வெச்சாதான் என் விதிப்படிதான் எல்லாம் நடக்கும். நடக்கப் போறது மாறாது. அதை நினைச்சு இப்ப ஏன் கவலைப்படணும்”

“சரி, சரி நீ கவலைப்பட வேணாம பேசாம தூங்கு”

காமாட்சி வெளியே வருவதற்குள், தருண் வேகமாக மாடிப்படிகளில் தாவினான். இதைப் பார்த்துவிட்டாள் சிவரஞ்சனி.

அவனிடத்தில் சென்று படுத்துக் கொண்டான். என்னவிட அம்மாதான் அவளிடம் அதிக அன்பு வைத்திருக்கிறாள். அதனால் இந்த விஷயத்தில் அம்மாவை எளிதாக சரிக்கட்டி விடலாம். அப்பாதான்...

அப்பாவை நினைக்கும்போதே மனது நடுங்கியது. எப்படியாவது அப்பாவை சம்மதிக்க வைக்க வேண்டும். இப்படியாக எண்ணங்களை ஓட விட்டவன், நான் அவளைப் பார்த்து இப்போது 24 மணி நேரம் தான் ஆகிறது. அதற்குள் எப்படி என் மனதில் புகுந்தாள். திருமணம் வரை என்னை சிந்திக்க வைத்துவிட்டாளே. அத்தனைப் பெண்களை நான் காலேஜில் பார்த்திருக்கிறேன். எந்த பெண்ணிடமும் இல்லாத ஈர்ப்பு இவளிடம் மட்டும் எனக்கு ஏன் வரவேண்டும்? இவள் சிந்தனை சுறுசுறுப்பு குறும்பு கருத்து எல்லாமே என்னை நிலைகுலைய செய்கிறது ஒருவேளை கடவுள் என் பேருக்கு நேரே அவள் பெயரைத் தான் எழுதியிருப்பார் போலும். அப்படியிருந்தால் காற்றில் மிதப்பவன் நான்தான். பலவாரு சிந்தித்துக் கொண்டே உறங்கிப் போனான்.

6

“தருண் எழுந்திருங்க, தருண்,தருண்...” உலுக்கினாள் சிவரஞ்சனி.

படுக்கையிலேயே புரண்டான் தருண். கண்களை திறக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு திறந்தான், எதிரில் சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள். கண்கள் விரிய அவள் உருவத்தை உள்வாங்கினான். கண்களின் எரிச்சலை தாங்க முடியவில்லை. கண்களையே தேய்த்தான்.

“என்ன கண் எரியுதா?”

“ஆமாம்”

“இந்தாங்க வெள்ளரிக்காய் கண்ல வெச்சிக்கங்க” வட்ட வடிவமாக வெட்டப்பட்ட வெள்ளரிக்காயை நீட்டினாள்.

வாங்கிக் கொண்ட தருண் சுற்றுமுற்றும் பார்த்தான்.

“உங்க பிரண்ட்ஸ் எல்லோரும் குளிச்சிட்டு வீட்டுக்கு சாப்பிட போயிட்டாங்க. இப்ப உங்களையும், என்னையும் தவிர மண்டபத்தில் யாரும் இல்லை. உங்களை எழுப்பி குளிச்சப்புறம் பொண்ணு வீட்டுக்கு வரச் சொன்னாங்க”

“அம்மா அப்பா அங்கயா இருக்காங்க?”

“ஆமாம் இன்னிக்கு அங்கதான் விருந்து, ம் சீக்கிரம் எழுந்திரிச்சு வீட்டுக்கு வாங்க. பிரண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்றாங்க. அவங்களை வழியனுப்பிட்டு பொண்ணு வீட்டுக்கு கிளம்புற வழியைப் பாருங்க”

“ரொம்ப தேங்க்ஸ்...”

“இப்ப சம்பந்தமில்லாம தேங்க்ஸ் எதுக்கு?”

“பிரண்ட்ஸ்சுன்னு சொன்னப்புறம் ஞாபகம் வந்தது.. நேத்து உன்னால தான் அவங்களை கண்ட்ரோல் பண்ண முடிந்தது”

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். சீக்கிரம் வாங்க டயமாச்சு”

வெள்ளரிக்காய்யை வைத்ததாலோ என்னவோ, கண்ணெரிச்சல் கொஞ்சம் குறைந்திருந்தது. குளித்து விட்டு, காலை சிற்றுண்டி உண்டுவிட்டு, நண்பர்களை வழியனுப்பி வைத்தான். பெண் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.

“நீ வரலையா சிவரஞ்சனி?”

“நானும் வர்றேன், ஆனா பொண்ணு வீட்டுக்கு இல்ல, போறவழியில் என்னை வீட்டுல டிராப் பண்ணிடுங்க”

“ஏன் வரலை?”

“அதான் அப்பா, அம்மா அண்ணா எல்லோரும் போயிருக்காங்களே....?”

“கிப்ட் வாங்கிட்டு நீ போகாம இருந்தா எப்படி?”

“கிப்ட் வாங்கினது என் அண்ணன்”

“யாராயிருந்தா என்ன நீயும் போயிருக்கலமில்ல. நீ வாங்கினாலும் ஒண்ணுதான் உன் அண்ணன் வாங்கினாலும் ஒண்ணுதான்”

பைக்கை வாசலுக்கு தள்ளி சைட் ஸ்டாண்ட் போட்டான்.

“எனக்கு கிப்ட் கொடுக்கிற பழக்கமேயில்ல”

பைக்கை ஸ்டார்ட் செய்யப் போனவன் திரும்பினான்.

“வாட்?”

“இதுக்கு ஏன் ஆச்சர்யப்படுறீங்க?’

“இல்ல... என் பிரண்ட்ஸ் பர்த்டே வெட்டிங் டே இப்படி எல்லா விஷயத்துக்கும் கிப்ட் கொடுக்கிறது என் வழக்கம். நீ சுத்தமா இல்லைன்னதும் எனக்கு ஆச்சர்யமா இருக்கு”

“சரி ஆச்சர்யம் அப்புறம் இருக்கட்டும். பைக்கை எடுங்க லேட்டாகுது. போகும்போது பேசிக்கலாம்” என்றாள்.

துப்பட்டாவை சரி செய்தாள்.

அவன் வண்டியை எடுத்தான். பின்னால் ஏறியமர்ந்து கொண்டாள். வண்டி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

“எவ்வளவு யோசிச்சாலும் புரியலை ரஞ்சனி” விரக்தியான குரலில் கேட்டான்.

“என்ன புரியலை தருண்”

“நீ கிப்ட் கொடுக்கும் பழக்கம் இல்லாததன் காரணம்?”

“ஓ.. அதுவா இதையா இவ்வளவு நேரம் யோசிச்சிட்டு வந்தீங்க? கேட்டிருந்தா அப்பவே சொல்லியிருப்பேன்”

“சரி, இப்ப சொல்லு”

“இது என்னோட அணுகுமுறைதான். அதுக்காக கிப்ட் கொடுக்கிறது தப்புன்னு நான் சொல்ல வரலை. கிப்ட் கொடுக்கிறது எதுக்கு தருண்?

“நம்ம அன்பை அவங்களுக்கு எடுத்துக் காட்ட”

“நம்ம அன்பை இந்த உயிரில்லாத பொருட்களால் விலை மதிப்பிட முடியுமா?”

“....”

“இல்லவேயில்லை, நம்ம அன்பை காட்ட எவ்வளவோ வழி இருக்கு. என் பிரண்ட்ஸுக்கு பிறந்த நாள் வந்தா முதல் ஆளா வாழ்த்துவேன், கோவிலுக்கு போய் அவளுக்காக வேண்டிப்பேன். கல்யாணம்னா, ஒரு வாரம் முந்தியே போய் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வேன். கடைசியில் நான் கிளம்புரப்ப, அவங்க அம்மா மன நிறைவோட நீயும் என் பொண்ணா பிறக்கலையேன்னு கண்ணு கலங்க சொல்வாங்க பாருங்க அந்த மன நிறைவை அவங்களுக்கு நான் தருவேன், அதுதான் நான் கொடுக்கிற கிப்ட்”

“......”

“நீங்களே சொல்லுங்க, கிப்ட் கொடுத்தா அதை பார்க்கும் போதுதான் நம்ம ஞாபகம் வரும். நான் சொல்றா மாதிரி செய்தா அவங்க மனசுல நாம எப்பவுமே இருப்போம்”

“......”

“எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான்” இப்போது தான் நினைவுக்கு வந்தான் தருண்.

“என்ன வருத்தம்?”

“சுரேஷ் அத்தான் கல்யாணத்துக்கு மட்டும் என்னால் ஒரு வரம் முந்தி வர முடியலையே?”

“அதனால என்ன இன்னும் ஒரு வாரம் இருந்துட்டுப் போ”

“அதுவும் முடியாத விஷயம்” கவலையாக சொன்னாள்..

“ஏன்?” அவன் குரலில் அதைவிட அதிகமான கவலை.

“எனக்கு செமஸ்டர் எக்ஸாம் நடக்குது. முந்தாநாள் ஒரு எக்ஸாம். அதை முடிச்சுட்டு வரத்தான் லேட்டாயிடுச்சு .நாளைக்கு ஒரு எக்ஸாம் இருக்கு. இதுவரை ஒன்னும் படிக்கலை. இப்ப போய்த்தான் படிக்கணும் அதான்”

“சரி, படிப்புத்தான் முக்கியம் எக்ஸாம் முடிஞ்சப்புறம் சாவகாசமா வீட்டுக்கு வாயேன்”

அவளை சமாதானப்படுத்த கூறிவிட்டானே ஒழிய அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு மேல அவர்களுக்குள் உரையாடல் அத்து போனது.

தருணுக்கு குழப்பமான மனநிலை இவளிடம் எப்படி பேசினாலும் முடிவு குதர்க்கமாகவே தான் இருக்கிறது. தனக்கென்று நிறைய விதிமுறைகள் வகுத்திருக்கிறாள். அதன்படி நடக்கவும் செய்கிறாள். அவள் கூறுவது உலகத்தோடு ஒட்டா விட்டாலும் நியாயமானது. இவளுடன் பேசுவதும், இவள் செய்கையை பார்ப்பதும் விசித்திரமான அனுபவமாகவே இருக்கிறது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
7

ஆறு மாதம் ஓடிவிட்டது, தருணுக்கு ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து விட்டது. அந்த சம்பளத்தினால் அவன் தேவைகளை நிவர்த்தி செய்து கொண்டு மீதியை அம்மாவிடம் கொடுத்தான். அம்மா அதை அவன் பேரிலேயே பேங்கில் போட்டு வந்தாள். சுரேஷும் அவன் மனைவியும் பெங்களூர் சென்று விட்டனர், அங்குதான் அவனுக்கு வேளை, தருணால் சிவரஞ்சனியை அதற்குப் பிறகு பார்க்கவே முடியவில்லை. ஆனால் அந்த ஒன்றரை நாள் அனுபவமே அவனுக்கு போதுமானதாகி விட்டது. அதை நினைக்க நினைக்க அவனுள் இருந்த காதல் பன்மடங்கு பெருகியது.

“அத்தை... அத்தை..” என்று கூவிக் கொண்டே சமையறைப்பக்கம் ஓடினாள் சிவரஞ்சனி. அவள் உள்ளே வரவும் உள்ளிருந்த தருண் யார் கத்துவது என்பதைப் பார்க்க வெளியே வரவும் சரியாக இருந்தது. அவன் மீது மோதிக் கொண்டாள். அவள் வேகத்தை தடுத்து பிடித்து நிறுத்தினான். நிலைமையை உணர்ந்து உடனே விலகி நின்றாள், வெட்கத்தில முகம் சிவந்தது. பேச்சு வர மறுத்தது. உள்ளிருந்து வந்த காமாட்சி இவளை பார்த்து முகம் மலர்ந்தாள்.

“சிவரஞ்சனி, நீ எப்பம்மா வந்தே?”

“இ..இப்பதான் அ... அத்தை...”

“என்ன விசேஷம் திடீர்னு வந்திருக்க...”

“ஒண்ணுமில்லாத எங்க காலேஜ்ல மூன் டி.விகாரங்க வந்து ஒரு பேட்டி எடுத்தாங்க. அதை காலேஜ் கலாட்டாங்கிற பேர்ல , நாளைக்கு மாலை ஏழு மணிக்கு போடுறாங்க. அதுல நானும் வருவேன். அதனால நீங்க கண்டிப்பா பார்க்கணும். அதை சொல்லத்தான் வந்தேன்”

“அப்படியா, கண்டிப்பா பார்க்கிறேன். இப்படி உட்காரு காபி கொண்டு வர்றேன்”

“அதெல்லாம் வேண்டாம் அத்தை. கண்டிப்பா பார்த்தா போதும்.. கண்டிப்பா பார்க்க்கணும்” இப்போது வாசலில் இருந்த தருணின் கண்களைப் பார்த்தாள். கண்டிப்பா பார்க்கணும்’

“கண்டிப்பா பார்க்கிறேன் ரஞ்சனி எத்தனை தடவை சொல்லுவ”

“மறந்துடாதீங்க” என்று கண்கள் அவனிடம் கெஞ்சியது. வேகமாக விடைபெற்று சென்று விட்டாள்.

“ஏய்.. தருண் வாட் எ சர்ப்ரைஸ்” கதவைத் திறந்த சந்தோஷ கிட்டத்தட்ட குதித்தான்.

“சும்மாதான்டா”

“வா, வா உள்ள வா, எத்தனை தடவை என் ரூமுக்கு வாடான்னு கூப்பிட்டிருக்கேன். இப்பத்தான் வழி தெரிஞ்சுதா?”

“ஒரு முக்கியமான வேலைடா”

“ஆபீஸ் விஷயமா?”

“இல்லை. கொஞ்சம் பர்சனல்”

“சொல்லு”

“கொஞ்ச நேரம் டிவி பார்க்கணும்”

“டி,வியா?” குழம்பினான்.

“ஆமான்டா, மூன் டிவில ஏழு மணிக்கு காலேஜ் கலாட்டால என் மாமா பொண்ணு வர்றாலாம். என்னைக் கண்டிப்பா பார்க்கணும்னு கண்ணாலேயே சொல்லிட்டுப் போயிட்டா, அதான்”

“டேய்... சொல்லவே இல்ல பாரேன். மூஞ்சில அரை லிட்டர் ஜொள்ளு வழியுது துடை என்ன காதலா?”

“ஆமாம்” என்பது போல் தலையாட்டினான்.

“வெட்கத்தைப் பாரு” கையில் குத்தினான்.

“டிவி போடுடா”

“இப்ப மணி 6.30 தான்டா ஆகுது. ஏழு மணிக்குதானே?”

“பரவாயில்லை நீ வை சும்மாவாவது பார்க்கலாம்”

“உனக்கு முத்திடுச்சு மாமு” சிரித்துக் கொண்டே ரிமோட்டை இயக்கினான். ஏதேதோ பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன.

“உங்க வீட்ல பார்க்க முடியாதா தருண்”

“முடியும்.அம்மா அதைத்தான் பார்ப்பாங்க. ஆனா என் முகமே எனக்கு எதிரியா இருக்கும் போது நான் அங்க பார்க்கிறது சரியில்லை”

“ஏன்?”

“ஏதாவது ரியாக்ஷன் கட்டினா மாட்டிப்பேன். அதான்”

“அந்தப் பொண்ணுகிட்ட சொல்லிட்டியா?”

“இல்லை”

“என்னடா லூசுத்தனமா இருக்க, என்ன யோசனை, சொல்ல வேண்டியதுதானே?”

“இல்லடா, அவகிட்ட சொல்லவே பயமாயிருக்கு. எனக்கு ஒவ்வொரு விஷயத்திலும் அவ ரொம்ப வித்தியசமானவ. காதல்ல அவளோட கருத்து என்னன்னு தெரியாம, எப்படிடா சொல்றது?”

“என்ன இருந்தாலும்..” என்று ஏதோ பேச வந்தவன் அப்போது டிவியில் காலேஜ் கலாட்டா என்று கொட்டை எழுத்தில் போட, அவன் பேச்சை கையமர்த்தினான் தருண்.

“இந்த வாரம் நாம காலேஜ் கலாட்டால பார்க்கப் போற காலேஜ் தனலட்சுமி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ்; வாங்க கலாட்டவை ஆரம்பிக்கலாம்” என்று மைக்கை ஏந்திய அந்தப் பெண் அழகான தமிழில் பேசினாள்.

“ஹாய் கேர்ள்ஸ்” மைகேந்திய பெண்.

“ஹாய்” என்று ஒரு கோரஸான குரலுக்கு பிறகு டிவியில் கல்லூரி மாணவிகள் பல வகையாய் ஜொலித்தனர்.

“யூ ஆர் ஆல் ரெப்ரசன்டிங்”

“தனலட்சுமி காலேஜ்” கோரஸ்.

“ஓகே கேர்ள்ஸ் உங்கள்ள யார் சூப்பரா பாடுவீங்க?”

“நிர்மலா” கோரஸாக கூறினார்.

“ம்... நிர்மலா பாடுங்க”

சூப்பர் கானா பாட்டை பாடினாள்.

“சூப்பர் நிர்மலா! கங்கிராட்ஸ், சரி யார் நல்லா டான்ஸ் ஆடுவாங்க”

“ராணி” ஒன்றாக கத்தினர்.

ஒரு குத்தாட்டம் போட்டாள்.

“நல்லா ஆடுனீங்க ராணி, பிரபுதேவாவோட சிஷ்யையா?”

குறும்பாகக் கேட்டாள் மைக் பிடித்த பெண். வெட்கப்பட்டாள் ராணி.

“சரி, யார் சூப்பரா கவிதை எழுதுவீங்க?/”

“சிவரஞ்சனி” கோரஸ்.

“ஒரு கவிதை சொல்லுங்க சிவரஞ்சனி”

டிவியில் சிவரஞ்சனி தெரிந்தாள். கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கினான் தருண்

“நட்சத்திர ஆண்கள் தன்னை பார்த்து கண் சிமிட்ட, வெட்கத்தில் முகத்தை மேகத்திரையினுள் மறைந்து பின் மெதுவாக முகம் காட்டுகிறாள், நிலாப்பெண்”

“வாவ் சூப்பர் சிவரஞ்சனி”

“தேங்க்யூ”

“”இது நீங்க முன்பே எழுதின கவிதையா?”

“இல்லை, இல்லை நீங்க மூன் டிவியை ரெப்ரசன்ட் பண்றதால மூனை பத்தி சொன்னா நல்லாயிருக்குமேன்னு இப்ப தோணினதை சொன்னேன்”

“ரியலி கிரேட் சரி கேர்ள்ஸ் இப்ப நம்ம இந்த வயசுக்கே உரிய சப்ஜெக்ட் பத்தி பேசுவோம்”

“என்ன?” கோரஸ்

“லவ்”

“வாவ்” கோரஸ்

“இப்ப ஒரு பையன் வந்து உங்ககிட்ட பிரபோஸ் பண்றான்னு வச்சுக்கங்க. அவன் எப்படி வந்து சொல்லனும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க. பர்ஸ்ட் நீங்க சொல்லுங்க”

“மைக்கை ஒரு பெண்ணின் முன்னால் நீட்டினாள்.

“உங்க பேரு”

“திவ்யா”

“ம் .. சொல்லுங்க”

“அழகான ஒரு ரோஸ் பிரசன்ட் பண்ணி சொல்லணும்”

“ஓகே.. நீங்க” மைக் கை மாறியது.

“என் பேர் லாவண்யா, திவ்யாவுக்கு ஒரு ரோஜா போதும். ஆனா எனக்கு ஒரு போக்கே கொடுத்து சொல்லனும், அப்பதான் ஒத்துப்பேன்”

“உங்க காதல் கொஞ்சம் காஸ்ட்லி போலிருக்கு” அழகாக சிரித்தாள் அந்தப் பெண்.

“சரி நீங்க...”

“என் பெயர் மானசா எனக்கு ரோமியோ ஸ்டைல்ல மண்டி போட்டு ஐ லவ் யூ சொன்னாதான் பிடிக்கும்”

“ரொம்ப ரொமாண்டிக் காதல் சரி, நிர்மலா நீங்க?”

“கண்ணைப் பார்த்து ஐ லவ் யூ சொல்லனும்”

தைரியமான காதல், நீங்க ராணி

“இன்டர்நெட்ல ஐ லவ் யூ சொல்லனும்”

“இதோ பாருடா. இங்க இன்னொரு காதலர் தினம் உருவாகுது’ சிரித்துக் கொண்டே சிவரஞ்சனியிடம் மைக்கை நீட்டினாள்.

“என்ன சிவரஞ்சனி இன்வால்வ்மென்ட் இல்ல?”

“எனக்கு இந்த கான்வர்சேஷன்ல உடன்பாடில்லை அதான்”

“ஏன், காதல்னா உங்களுக்கு பிடிக்காதா?”

தருணுக்கு படபடப்பு கூடிற்று.

“காதல் பிடிக்காதுன்னா எப்படி மேடம் கவிதை எழுத முடியும். கவிஞன் என்பவன் ஒவ்வொரு விஷயத்தையும் காதல் பண்ணுவான்”

“அப்புறம் ஏன் உடன்பாடில்லை?”

“நீங்கள் கேட்ட கேள்விக்கு உடன்பாடில்லை”

“ஏன்?”

“காதலில்லாமல் ஒரு அனுவும் அசையாது. காதலினால் தான் உலகம் இயங்குகிறது. ஒத்துக்கிறேன் .அதை நம்புறேன். ஆனா ஒரு தாய் குழந்தை மேல் வைத்திருக்கும் அன்பை சொல்லிக் காட்டறாங்களா? நான் உன் மீது இவ்வளவு அன்பு வெச்சிருக்கேன்னு இல்லையே. அதேபோல் தான் ஆசிரியர் மாணவரிடம் வைத்திருக்கும் அன்பு, வண்டு பூவிடம் வைத்திருக்கும் அன்பு, பசு கன்றிடம் வைத்திருக்கும் அன்பு. ஆனால் ஒரு பெண்ணிடம் வைத்திருக்கும் அன்பு மட்டும் சொன்னால் தான் புரியுமா?”

“....”

“என்னைப் பொறுத்தவரை, காதல் உணரப்பட வேண்டிய விஷயம், சொல்லப்பட வேண்டிய விஷயமில்லை”

“அப்ப அவங்க நம்மளை காதலிக்கிறாங்கன்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?”

“அதான் உணரப்படனும்னு சொல்லிட்டேனே. உண்மையான காதல் நிச்சயம் உணரப்படும். அப்படி உணரப்படலைன்னா, அந்தக் காதல் தப்புன்னு அர்த்தம்”

“நீங்க பேசறதே கவிதை மாதிரி இருங்குங்க. காதலர்களே, நம்ம சிவரஞ்சனி சொன்ன பாயிண்டை இனி அமுல்படுத்துங்கள்” அழகாக சிரித்தாள்.

அதன் பிறகு டிவியில் ஓடிய எதுவும் கேட்கவில்லை தருணுக்கு.

“டேய் முடிஞ்சிடுச்சுடா” தோள்களை குலுக்கினான்.

“முடிஞ்சிடுச்சா?” விழித்தான்.

“கிழிஞ்சது, இந்தா காபி குடி”

“காபி இருக்கட்டும். எனக்கு இப்ப உடனடியா ஒரு போன் பண்ணனும் அவசரபடுத்தினான்.

“இந்தா என் செல்போன்ல பண்ணு” அவசரம் அறிந்து போனை நீட்டினான்.

எண்களை அழுத்தி காதுக்கு கொடுத்தான். போன் உடனே எடுக்கப்பட்டது.

“ஹலோ “ ரஞ்சனியின் குரல்தான்.

“ஹலோ...” தருண்

“சொல்லுங்க...”

“தருண் பேசறேன்”

“தெரியுது”

“கல்லூரி கலாட்டா பார்த்தேன் உன் கவிதை சூப்பர்”

“தேங்க்ஸ்”

காதல் பத்தின உன் கருத்தை நான் முழுமையா ஏத்துக்கிறேன்”

“அப்படியா?”

“அதுலயும் குறிப்பா காதல் உணரப்பட வேண்டிய விஷயம் சொல்லப்பட வேண்டியதில்லை. அற்புதம் நான் அதைத்தான் பாலோ பண்றேன்” கூறிவிட்டான் இதயம் வேகமாக துடித்தது. சில நிமிட அமைதி நிலவியது.

“நானும் தான்” உடனே போன் வைக்கப்பட்டது.

தருண் சந்தோஷத்தில் குதித்தான். நண்பனை தூக்கிச் சுற்றினான். உடனே அவனை கடைக்கு கூட்டிப்போய் டிரீட் வைத்தான். அவள்அ வனை காதலிப்பது பல நேரங்களில் உணரப்பட்டாலும், அவளுடன் பேசியது ஊர்ஜிதப்படுத்தி விட்டது. காற்றில் மிதந்தான் தருண்.

 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
8

இவர்கள் காதல் மிகவும்’ விசித்திரமானது. தனியாக எங்கும் போக மாட்டார்கள். அதிகம் பேசுவதுமில்லை. தருண் செல்போன் வைத்திருக்கிறான் என்ற பேர் தான். வாங்கிய புதிதில் முதல் குரல் அவளுடையதாகத் தான் இருக்க வேண்டுமென்று பேசினான். அதோடு சரி, பிறகு என்றுமே பேசவில்லை. உணர்வுப்பூர்வமாக காதலித்தனர். நம்ம இளைஞர்க்ளிடம் இப்போது நிலவி வரும் காதல் குப்பைக் காதல், கை கோர்த்துக் கொண்டு நடந்தால் தான் காதலா? பார்க், பீச், சினிமா என்று சுத்தினால் தான் அன்பா? ஒரு மணி நேரம் போனில் பேசினால் தான் நிம்மதியா? இதைக் குப்பையோடு ஒப்பிடுவது சரியே.

தருண், சிவரஞ்சனி காதல் தெய்வீகமானது. காதலுக்கு அகராதி. அவளின் படிப்பு முடிந்தது. இனிப்பு எடுத்துக் கொண்டு, அத்தையின் வீட்டுக்கு மாமா இல்லாத நேரமாக பார்த்து வந்தாள். அப்போதும் இருவரும் பேசிக் கொள்ளவீல்லை கண்கள் மட்டும் நிறைய பேசின. வேலை கிடைத்த போதும் வந்தாள், அப்போதும் அதே நிலைதான். வீட்டில் கல்யாண பேச்சை எடுக்கும் போதும் பேசிக் கொள்ளலாமென்று இருவரும் நினைத்தனர். இந்த நிலையில் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.

தருணின் செல்போன் வரப்போகும் செய்தி அறிந்து, கிட்டத்தட்ட அழுதது. உடனே எடுத்து காதுக்கு கொடுத்தான்.

“ஹலோ...”

“நான் சிவரஞ்சனி பேசறேன்” குரலில் பதட்டமிருந்தது..

“என்னாச்சு குரல் ஒரு மாதிரி இருக்கு”

“அம்மாக்கு திடீர்னு நெஞ்சுவலி தருண். அப்பாவும் ,அண்ணாவும் வெளியூர் போயிருக்காங்க. ஆட்டோ வெச்சு ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டேன். எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை கொஞ்சம் வர முடியுமா? அழுகையினுடே கூறினாள்”

“கூல் டவுன், நான் உடனே வர்றேன், எந்த ஹாஸ்பிடல்”

“சாந்தி”

“சரி” போனை அணைத்து மணி பார்த்தான் 11.00

வீட்டில் அனைவரும் உறங்கி விட்டிருந்தனர். இவன் கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். கம்ப்யூட்டரை நிறுத்திவிட்டு வாசலையடைந்து கதவை திறந்தாள். சத்தம் கேட்டு அப்பா எழுந்து வந்தார்.

“என்ன தருண் இந்த நேரத்தில் வெளில போறே?”

அப்பா வருவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தடுமாறினான்.

“என் பிரண்டோட அப்பாக்கு ஹார்ட் அட்டாக்காம். ரொம்ப பதறி போய் போன் பண்ணினான்பா அவனுக்கு பயமா இருக்காம் என்னை வரச் சொன்னான். அவனுக்கு பக்கத்துல இருந்து ரெண்டு வார்த்தை ஆதரவா சொல்லலாம்னு கிளம்புறேன்” ஒருவாறு கதையை இயற்றிவிட்டான்.

“சரி, சரி சீக்கிரம் போயிட்டு வா”

அப்பா சம்மதிப்பார் என்று இவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை சந்தோஷத்தில் பைக்கை வேகமாகவே ஓட்டினான். சாலைகள சிறிது அமைதியாகவே இருந்தது. பகலில் அந்த ஹாஸ்பிடலுக்கு செல்லும் நேரத்தை விட,இப்போது குறைவான நேரமேயானது. வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு வேகமாக ரிசப்ஷனை நோக்கிப் போனான். அங்கு விசாரித்து விட்டு நேரே ஐசியூவுக்கு விரைந்தான்.கண்ணாடிக் கூண்டின் முன் போடப்பட்டிருந்த இருக்கையில் சிவரஞ்சனி தென்பட்டாள். காலடி ஓசை கேட்டு, இவன் வருவதைப் பார்த்தவள், வேகமாக ஓடி வந்து அவன் மார்பில் முகம்’ புதைத்து, தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். ஆதரவாக அணைத்தான் தருண்.

ஆஹா காதலனின் மார்பில் சாய்ந்து அழுவது கூட ஒருவகை சுகம்தான் இத்தனை நேரம் மனதில் இருந்த கவலை, பாரமெல்லாம் அந்த கண்ணீரில் கரைந்தது போல் இருந்தது. அவள் அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தான் அழுகை படிப்படியாக குறைந்தது.

“என்னாச்சு?” அவள் தாடையை விரல்களால் உயர்த்தி, கண்ணீரை துடைத்து விட்டான்.

“நைட்டு நல்லாத்தான் சாப்பிட்டு படுத்தாங்க. தூங்கிக்கிட்டிருந்தவங்க திடீர்ன்னு நெஞ்ச வலிக்குதுன்னு கத்தினாங்க. பதறியடிச்சு ஹாஸ்பிடல்ல கொண்டு வந்திட்டேன்”

“இப்ப எப்படி இருக்காங்க?”

“ஐ.சி.யு வில் வெச்சிருக்காங்க. நிலைமை என்னன்னு சொல்ல மாட்டேங்கிறாங்க. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு” அவன் தோள்களை அழுந்தப் பிடித்தாள்

“அதான் நான் வந்துட்டேனில்ல, அப்புறம் என்ன பயம், வா டாக்டரைப் பார்க்கலாம்.. ஸ்ரீராமுக்கும், மாமாக்கும் சொல்லிட்டியா?”

“ம்.. அண்ணாவோட செல்லுக்கு கால் பண்ணி சொல்லிட்டேன்”

“எப்ப வருவாங்க”

“காலைல 9.00 மணிக்குள்ள வந்துடுவாங்க” அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். அதில் அவளது பயம் தெரிந்தது இருவரும் டாக்டரின் அறை நோக்கி நடந்தனர்.

“அதான் டாக்டர் ஒன்னுமில்லேன்னு சொல்லிட்டாரில்ல. இந்தா இந்த டீயைக் குடி” தெருமுனையில் இருந்த டீக்கடை 3.00 மணிக்கெல்லாம் திறந்து விட்டது. இரவு முழுவதும் அழுததால் மிகவும் களைத்து விட்டாள். அதனால் டீக்கடைக்கு சென்று டீயும் பிஸ்கட்டும் வாங்கி வந்துகொடுத்தான்.

“வேண்டாம்” லேசாக தலையை வருடினான். பறந்த முடிகளை ஒதுக்கிவிட்டான். கண்ணில் அன்பு பொங்க அவளைப் பார்த்தான்.

“அத்தை இன்னும் ஒரு மணி நேரத்துல கண் முழிச்சிடுவாங்க”. இது பர்ஸ்ட் அட்டாக்தான். பயப்படற மாதிரி ஒண்ணுமில்லை. தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கிட்டா, அடுத்த அட்டாக் வராம தவிர்க்கலாம். நீ அழுததழுது தொண்டை தண்ணி வத்திடுச்சு. உன் உடம்பை நல்லா பார்த்துக்கிட்டாதானே. அத்தையை கவனிச்சிக்க முடியும். பிற்காலத்தில் என்னையும் பார்த்துக்க முடியும் அதுக்காகவாவது இதைக் குடி”

நெகிழ்ந்து போனாள். கூடவே வெட்கமும் வந்தது. அவனையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறானே. அவனே அவளுக்கு ஊட்டியும் விட்டான். வயிறு நிறைந்தது போல் இருந்தது. பொழுது விடிந்து விட்டது. வைதேகி கண் திறந்துவிட்டாள். ஸ்ரீராம்மும், தணிகாசலமும் வந்துவிட்டனர். அவர்கள் வந்த பிறகே வீட்டிற்கு சென்றான் தருண். கண்களாலேயே விடை கொடுத்தாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
9

வைதேகி எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டார். அவளை எந்த வேலையும் செய்யவிடாமல் எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டு கொண்டு செய்தாள்.வேலைக்கும் சென்று வந்தாள், நாட்கள் நகர்ந்தன. அம்மாதான் முதலில் கல்யாணப் பேச்சை எடுத்தார்

“என்னங்க...?” பார்த்துக் கொண்டிருத்த டிவி சீரியலை நிறுத்தினார்.

“ம்...” பேப்பரிலிருந்து முகம் எடுக்காமல் கேட்டார்.

“கொஞ்சம் பேப்பரை கீழே வைச்சிட்டு நான் சொல்றதை கேளுங்கள் பேப்பரை மடித்து டீப்பாயில் வைத்தார் வைதேகியை ஏறிட்டார்.

“என்ன?”

“நம்ம சிவரஞ்சனிக்கு வயசு ஏறிக்கிட்டே போகுது”

“வருஷம் ஒன்னு ஆனா வயசும் ஒன்னு ஏறத்தான் செய்யும்”

“விளையாட்டு வேண்டாம். நான் சிரீயஸா பேசறேன்”

“சரி சொல்லு...”

“எனக்கும் உடம்புக்கும் முடியலை, எனக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆகறதுக்குள்ள அவளை மணக் கோலத்துல பார்க்கணும்னு ஆசைப்படுறேன்”

“ஏன் இப்படியெல்லாம் பேசுற.?”

“நெருப்புன்னா சுட்டுடுமா என்ன?”

“இப்ப என்ன.. கல்யாணம் பண்ணனும் அவ்வளவு தானே, தரகர்கிட்ட சிவரஞ்சனியோட போட்டோவும் ஜாதகமும் கொடுத்துட்டா போச்சு”

“அதுக்கு அவசியமில்லைன்னு நினைக்கிறேன்”

“என்ன சொல்ற? ஆச்சர்ய ரேகை அவர் முகத்தில் ஓடியது.

“வந்து.. வந்து ,, நம்ம தருணை...”

“தருணா?”

“ஏன் அவனுக்கு முறையில்லையா?”

“முறை இருக்கு .நான் இல்லைன்னு சொல்லலை. பையனும் நல்லபையன் ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. மரியாதைத் தெரிந்தவன்”

“அப்புறம் என்னங்க தயக்கம்?”

“பிரச்சனையே அவங்கப்பாதான்”

“அண்ணனா?”

“ஆமாம்”

“எப்படி?”

“அவருக்கும் நம்ம குடும்பத்தைப் பார்த்தாலே பிடிக்கலை கல்யாணத்துல கூட சரியா முகம் கொடுத்து பேசலை”

“அதுக்காக?”

“நம்ம எப்படி போய் பேசறது?”

“நாம பொண்ணை பெத்துட்டோமே பேசித்தான் ஆகணும்”

“இவன் இல்லைன்னா வேற மாப்பிள்ளையே இல்லையா என்ன?”

“நம்ம பொண்ணுக்கு பிடிச்ச மாப்பிள்ளையா இருக்க மாட்டாங்களே?”

“நீ என்னதான் சொல்ல வர்றே?”

“நம்ம பொண்ணு தருணை விரும்புறா” அமைதியாக கூறினார்.

“......” அதிர்ச்சியானார் தணிகாசலம்.

“உங்களால நம்ம பொண்ணோட மாற்றத்தை உணர முடியலை..ஆனா நான் அவளை பெத்த தாயாச்சே, கருவிலிருந்தே அவள் செய்கையை ரசித்து வந்தவள் அவள் மாற்றத்தை உணராமல் இருப்பேனா? சுரேஷ் கல்யாணத்திலிருந்தே நிறைய மாறிட்டா. எப்பவும் வாய்விட்டு படிச்சாதான் புரியும்னு சொல்றவ, அதுக்குப்புறம் மனசுக்குள்ள படிச்சாதான் புரியும்னு சொல்றா. ஆனா எத்தனை மணி நேரமானாலும் ஒரே பக்கத்தையே வெறிச்சு பார்த்துகிட்டு இருந்தா, காலேஜ் கலாட்டாவை பார்த்து முடிஞ்சதும்,போன் பக்கத்துல போய் உட்கார்ந்துகிட்டா. போனும் வந்தது, அவ பேசும்போது அவ முகத்துல தெரிஞ்ச மலர்ச்சியை வர்ணிக்க முடியலை. பேசிவிட்டு வெச்ச அப்புறம் யாருன்னு கேட்டேன். தருண் தான் போன் பண்ணினார், காலேஜ் கலாட்டா நல்லா இருந்ததுன்னு சொன்னார்னு, உண்மையை மறைக்க தெரியாம வெளிப்படையா சொல்லிட்டா. அன்றைய நாள் அவள் ஆடலும்,பாடலுமா எப்படி இருந்தா தெரியுமா? டிவிலயும் காதலைப் பத்தி எவ்வளவு அழகா சொன்ன தெரியுமா? உணர்வுபூர்வமா இருந்தது. எல்லாத்துக்கும் மேல எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்ப அவள் வரவழைச்சது தருணைத்தான். அந்த ஹாஸ்பிடல் நர்ஸ் என்ன தெரியுமா கேட்டா, அவர் உங்க மருமகனான்னு கேட்டா, நான் இல்லைன்னு சொன்னேன். நேத்து நைட்ல இருந்து அவர் தான்மா உங்க பொண்ணுக்கு ஆறுதல் சொல்லி டீயெல்லாம் வாங்கி கொடுத்து டாக்டரிடம் விசாரிச்சார். அவர் பாசமா இருக்கிறதைப் பார்த்து தப்பா நினைச்சுட்டேன்மா மன்னிச்சிடுங்க அப்படின்னு சொன்னா. அப்பவே எனக்கு ஊர்ஜிதமாயிடுச்சு. இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் நேசிக்கிறாங்கன்னு. சின்னஞ் சிறுசுகளை நாம பிரிக்க வேண்டாங்க கிட்டத்தட்ட கெஞ்சினார் வைதேகி.

நீண்ட நேர அமைதிக்குப் பின் ”சரி பேசிப் பார்க்கிறேன், எதுவும் நிச்சயமாகிற வரை சிவரஞ்சனியிடம் சொல்லாத” என்றார்.

நிம்மதி பெருமூச்சு விட்டார் வைதேகி.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
10

ராமச்சந்திரன் வீட்டு காலிங் பெல்லை அழுத்திவிட்டு வெளியே காத்திருந்தார் தணிகாசலம். காமாட்சி தான் திறந்தார். முகம் மலர “வாங்கண்ணா வாங்க” என் வரவேற்றார்

அவரை சோபாவில் அமர வைத்து, கணவரை அழைத்து வந்தார்.

“வாங்க” என்ற ஒற்றை வார்த்தையோடு, எதிரிலிருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டார். காமாட்சி தான் பேச்சு கொடுத்தார்.

“அண்ணி பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா அண்ணா?”

“நல்லாயிருக்காங்கம்மா, நீங்கெல்லாம் சவுக்கியமா?”

“சவுக்கியந்தாண்ணா, ஆனா ஒரே ஒரு வருத்தம், மருமகள் வந்தும் நாமே எல்லா வேலையும் செய்ய வேண்டியதா இருக்கு. வயசு வேற ஆகிட்டே போகுது வேலை செய்ய முடியலைண்ணா”

“அதற்கென்ன தருணுக்கு கல்யாணம் பண்ணி வருகிற மருமகளை வீட்டோட வச்சுக்கோ” கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தினார்.

“ஆமாண்ணா அவனுக்கும் சீக்கிரம் முடிக்கனும். எங்க கடமை அதோட முடிந்தது. அக்கடான்னு இருந்துக்கலாம்”

“ஆமாம், ஆமாம் செஞ்சிட வேண்டியதுதான் . நல்லா அடக்கமா, அதிகம் பேசாம, குடும்பத்தை மதிக்கிற மாதிரி, சும்மா பல்லைக் காட்டி சிரிக்காம ஒரு நல்ல பொண்ணா பார்க்கணும்” ராமச்சந்திரன் கூறினார்.

“மொத்தத்துல பொண்ணு எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கறீங்க” தணிகாசலம் கேட்டார்.

“காமாட்சி, தணிகாசலம் இருவருக்கும் சிவரஞ்சனியைப் போல் இருக்கணும்னு ராமச்சந்திரன் கூறவேண்டுமென்று வேண்டாத தெய்வமில்லை.

“மொத்தத்துல நம்ம சிவரஞ்சனி மாதிரியில்லாம இருந்தா போதும்” வெடுக்கென கூறிவிட்டார்.

இந்த வாக்கியத்தின் முதல் பாதியில் இருவரும் மலர்ந்தனர். இரண்டாவது பாதியில் வாடினர். தணிகாசலத்திற்கு தர்மசங்கடமாய் போயிற்று. அதற்குமேல் அவரால் அங்கு உட்கார முடியவில்லை. உடனே கிளம்பிவிட்டார்.

“என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, அண்ணன் மனசு என்ன பாடுபடும்னு நினைச்சீங்களா?”

“நீயும், அவரும் எதை மனசுல வச்சு பேசுறீங்கன்னு எனக்கு தெரியும். அது நடக்கவே நடக்காது. அதுக்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன், வீணா ஆசையை வளர்த்துக்காதே. என் மகனுக்கு பெண் பார்க்க எனக்கு தெரியும்”

“குடும்பம் நடத்தப் போறது நீங்களா அவனா? கோபமாகக் கேட்டார்.

“என்னடி வாய் நீளுது”

“இந்த வீட்டுக்கு சிவரஞ்சனி தான் மருமக” வேகமாக கூறினார்.

“பளார்” அவள் கன்னத்தில் ராமச்சந்திரனின் கரம் பதம் பார்த்தது.

“அது இந்த ஜென்மத்துல நடக்காது ஜாக்கிரதை” அழுத்தமாக கூறிவிட்டு நகர்ந்தார். வாயடைத்து போனார் காமாட்சி.

மாலை வீடு வந்த மகனிடம் புலம்பித் தீர்த்தார். தருணுக்கு பயங்கர அதிர்ச்சி. அப்பா ஒத்துக்கொள்ள மாட்டார் என்பது அவன் அறிந்ததே. ஆனால் அம்ம சொன்னால் கேட்பார் என்ற நம்பிக்கையில் இருந்தான். அதுவும் இப்போது பொடிபொடியானது. அப்பாவை பார்க்கவே பயமாக இருந்தது. அவர் இப்போது இருக்கும் நிலையில் தான் பேசுவது சரியில்லை என்று உணர்ந்தான். கொஞ்ச நாள் ஆறப்போடலாம் என்று முடிவெடுத்தான். அதற்குள் அடுத்த அடி விழுந்தது.

தணிகாசலம் எதையும் சிவரஞ்சனியிடம் கூறவில்லை. வைதேகியிடமும் கூறவில்லை. தனக்குள்ளேயே புழுங்கினார். தன் நண்பனும் உறவினருமான சங்கரைப் பார்த்து விவரம் கூறினார். அவர் சமாதானப்படுத்தினார். தானே சென்று அவரிடம் பேசுவதாக கூறினார்.

ஒரு வாரம் விட்டு, மறுவார ஞாயிற்றுக்கிழமையில் சங்கர் தருணின் வீட்டுக்கு சென்றார்.

“வாங்க சித்தப்பா” வரவேற்றான். அவனுக்கு விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இருந்தான்.

“அப்பா இருக்காராப்பா”

“ஓ இருக்காரே, அப்பா.. அப்பா...” உள்நோக்கி குரல் கொடுத்தான்.

“அடடே சங்கரா வாடா எப்ப வந்தே...?”

“இப்பத்தான் அண்ணா...?”

“சரி உட்கார். காமாட்சி சங்கருக்கு காபி கொண்டு வா. ம்.. சொல்லு சங்கர் என்ன விஷயம்?”

“ஒண்ணுமில்லை இங்க ஒரு வேலையா வந்தேன். அதான் உங்களையும் பார்த்துட்டு போலாம்னு”

“சரி வீட்டுல ஏதாவது விசேஷம் உண்டா?”

“என் வீட்டுல என்ன விசேஷம் இருக்கப் போவுது. குழந்தைகள் ரெண்டும் படிக்குது. படிப்பு முடிஞ்சு அதுக்கப்புறம் தான் விசேஷம்”

காபி கொண்டு வந்து கொடுத்தார் , வாங்கி பருகிவிட்டு பேச்சைத்’ தொடர்ந்தார்.

“நீ என்னப்பா பண்ற தருண்”

“சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்கிறேன் சித்தப்பா”

“அப்படியா ரொம்ப சந்தோஷம் பர்மனன்ட் வேலை தானே?”

“ஆமாம்”

“அப்புறம் என்ன அண்ணா தடங்கல், தம்பிக்கு ஒரு கல்யாணத்தை முடிக்கவேண்டியதுதானே?”

“செய்யனும்பா, நல்ல பொண்ணா கிடைக்கணுமே?”

சற்று நேரம் யோசிப்பது போல் பாவனை செய்தார்.

“நம்ம தணிகாசலம் பொண்ணு சிவரஞ்சனி, இவனுக்கு முறைதானே வரும் ஏன் பார்க்கக் கூடாது?” கூறிவிட்டார் சங்கர்.

அப்பா என்ன சொல்வாரோ என நெஞ்சு படபடத்தது.

“அவ வேண்டாம் சங்கர்”

“ஏன் அண்ணா?”

“அவ பேச்சு, நடவடிக்கை எதுவுமே சரியில்லை”

“எனக்கு அப்படித் தோணலை அண்ணா, ரொம்ப நல்ல பொண்ணாத்தான் தெரியுறா”

“அதான் வேண்டாம்னு சொல்றேன்ல, அப்புறம் என்ன திருப்பி திருப்பி அதையே சொல்லிக்கிட்டு” விசுக்கென சேரை பின்னோக்கி தள்ளிவிட்டு எழுந்தார்.

“....”

“என் பையனுக்கு எப்போ, எப்படி, எந்த பொண்ணோட கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தெரியாதா? வந்துட்டானுங்க எனக்கு புத்திமதி சொல்ல என்ன நீ அந்த தணிகாசலத்துக்கு கொடுக்கா, உன் வேலையை பார்த்துக்கிட்டு இரும். இந்த நினைப்போட இனி நீ இங்கே வரவேண்டாம்”

“....”

“ம்... போ வெளியே”

“என்னங்க?” காமாட்சி அலறினார்.

“நீ உள்ளே போடி”

“உனக்கு வேற தனியா சொல்லணுமா?”

“வேண்டாண்ணா நான் போயிடறேன். ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் சிவரஞ்சனி மாதிரி பொண்ணு மருமகளா வர நீ கொடுத்து வச்சிருக்கணும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை அவ்வளவுதான்” சொல்லிவிட்டு விறுவிறுவென இறங்கி நடந்து கேட்டை அடைந்தார்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
11

சங்கர் சென்ற ஒரு மணி நேரம் கழித்து அப்பாவின் அறையை அடைந்தான்.

“அப்பா” மெல்ல அழைத்தான்.

“என்ன?” என்பது போல் பார்த்தார்.

“ஏன் சித்தப்பாகிட்ட இப்படி நடந்துக்கிட்டீங்க?”

“உனக்கு உலகம் தெரியலை தருண். அந்த தணிகாசலம் தான் சிவரஞ்சனியை உன் தலைல கட்ட, இந்தாளை அனுப்பி இருப்பார்.”

“சரி, அப்படியே இருக்கட்டுமே. பொறுமையாக பேசலாமில்லை”

“எனக்கு இந்த விஷயம் கொஞ்சம் கூட பிடிக்கலை அதான் கோபம் வந்துடுச்சு”

“அதான் ஏன்னு கேக்கிறேன், சிவரஞ்சனிக்கு என்ன குறை?”

“அவளை எனக்கு பிடிக்கலை”

“எனக்கு பிடிச்சிருக்கே?” போட்டுடைத்தான். அப்பா அதிர்ச்சியடைவார் என்று எதிர்பார்த்தான், ஆனால் அது நடக்கவில்லை.

“தெரியும், இது எனக்கு எப்பவோ தெரியும். அந்த நடுராத்திரியில நீ வெளியே கிளம்பறப்பவே சந்தேகப்பட்டு பாலோ பண்ணி வந்தேன். நீங்க ஹாஸ்பிடல்ல பண்ணின அசிங்கத்தைத் தான் என் கண்ணால பார்த்தேனே? தருண் அதிர்ந்தான். ஆனாலும் சமாளித்தான்.

“அன்பை கொச்சைப் படுத்தாதீங்கப்பா ப்ளீஸ்”

“எதுடா அன்பு, பொது இடத்துல கட்டிப்பிடிக்கிறதா?”

“அப்பா...” கத்தினான்.

“போதும். இதுக்கு மேல தயவுசெய்து பேசாதீங்க. துன்பத்துல இருக்கிற மனதுக்கு ஆறுதல் சொன்னது தப்பா. அது யாராயிருந்தாலும் செய்வதுதான் நானும் அவளும் விரும்புறோம், அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியது என் கடமை”

“வாயை மூடுடா, விரும்புறாராம். அந்த பொண்ணைப் பத்தி இன்னொரு தரம் பேசின பல்லை பேத்துடுவேன்”

“சிவரஞ்சனியை, நீங்க ஏன் ஏத்துக்க மாட்டேங்கறீங்க?”

“அந்த பொண்ணுக்கு மரியாதை தெரியல, அடக்கமில்லை, சிரிச்சுக்கிட்டேயிருக்கா பொறுப்பில்லை, அவகிட்ட எதுவுமே சரியில்லடா?”

“நீங்க பார்த்த கோணம் தப்புப்பா, அவ ரொம்ப நல்லவ குடும்பத்துக்கு ஏத்தவ மத்தவங்க குறிப்பறிஞ்சு நடக்கிறவ”

”வேண்டான்டா சொன்னா கேட்க மாட்டே” கையை ஓங்கி விட்டார் தடுத்துப் பிடித்தான்.

“அப்பா நீங்க சிவரஞ்சனியை வேண்டாம்னு சொல்றதுக்கு எனக்கு ஆழமான காரணம் வேணும். நீங்க சொல்ற காரணத்தையெல்லாம் நான் ஏத்துக்க மாட்டேன்”

“சொல்லித்தான் ஆகணுமா?”

“உங்க பக்க நியாயத்தை நீங்க சொல்லித்தான் ஆகணும்”

“சரி சொல்றேன் கேள். சின்ன வயசிலிருந்தே அவளுக்கு வாய்கொழுப்பு அதிகம். எப்பப் பார்த்தாலும் பல் தெரிய சிரிச்சிக்கிட்டேயிருப்பா, ‘பொண்ணு சிரிச்சா போச்சுன்னு’ சொல்வாங்க. இப்படி அவளை எனக்கு எப்பவுமே பிடிக்காது. இதையெல்லாம் கூட தாலி கட்டினா சரி பண்ணிடலாம். ஆனா நான் போன வருஷம் நான் பார்த்த காட்சி எனக்கு அவமேல தீராத வெறுப்பை உண்டாக்கிடுச்சு”

“என்னப்பா பார்த்தீங்க?” அவனால் தாங்க முடியவில்லை.

“அவளும் ஒரு பையனும் சினிமா தியேட்டர் முன்னாடி சிரிச்சு பேசுறதை பார்த்தேன்”

“என்ன?” அதிர்ந்தான்.

“அந்த நடத்தை கெட்டவ உனக்கு தேவைதானா?”

சிறிது நேரம் மௌனமாக இருந்தான், மனதில் புயல் வீசுவது போல் இருந்தது என் சிவரஞ்சனி நடத்தை கெட்டவளா? இல்லை,இல்லை இல்லவே இல்லை”

“அப்பா அது சிவரஞ்சனியா இருக்காது. வேற யாரையாவது பார்த்திருப்பீங்க நல்லா நிதானமா யோசிச்சு பாருங்கப்பா”

“காதல் உன் கண்ணை மறைக்குதுடா, இருபத்தைந்து வருஷமா வளர்த்த என் மேல நம்பிக்கையில்ல. ஆனா நேத்து வந்தவளை முழுமையா நம்புற, எல்லாம் என் தலையெழுத்து, உன்னை பெத்ததுக்கு ஒரு நாயை பெத்திருக்கலாம் .நன்றியோட இருந்திருக்கும். ஒன்னு மட்டும் சொல்றேன். நீ’ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னா அது நான் செத்தா தான் நடக்கும்” வேகமாக வெளியே சென்றுவிட்டார்.

நொந்து விட்டான். அம்மா ஆதரவாக கரம் பற்றினார். அவர் மடியில் படுத்து கொண்டான். மனதில் பலவிதமான எண்ணங்கள் எழுந்தன. உள்ளம் குமுறியது. ஆனால் அன்னையின் மடியில் தலை வைத்து படுத்ததால் எல்லா துன்பமும் குறைந்தது போல் இருந்தது.

சங்கர் தணிகாசலத்திடம் சகலமும் கூறினார் மிகவும் வருந்தியவர்.

“என்னை மன்னிச்சிடு சங்கர், என்னால்தானே உனக்கு இந்த அவமானம்”

“அது இருக்கட்டும்டா, சிவரஞ்சனி மாதிரி பொண்ணை ஏத்துக்க மாட்டேன் சொல்றானே அந்த ராமச்சந்திரன்”

“சரி, என் பொண்ணுக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்”

“அது தப்பு தருணுக்கு கொடுத்து வச்சது அவ்வளவு தான்” கூறிவிட்டு கிளம்பினார் சங்கர்..

மாலை அலுவலகம் விட்டு வந்த மகள், தன் வேலைகளை முடித்துவிட்டு, இரவு சாப்பிட்டு முடித்ததும் தன் அறைக்கு அழைத்தார். வைதேகியிடம் கூட கூறவில்லை. ஏனென்றால் அவர் இதய பலகீனமுள்ளவர் என்பதற்காக தவிர்த்தார்.

“என்னப்பா?”

“இப்படி உட்கார்ம்மா” கட்டிலைக் காட்டினார். உட்கார்ந்தாள்.

“சின்ன வயசுல இருந்து நீ எதையும் எங்கிட்ட கேட்டதில்லை. ஆனா உன் ஆசை என்னன்னு தெரிஞ்சு நிறைவேத்திட்டு தான் வந்தேன். படிப்புல கூட நீ விரும்பினதை தான் எடுக்கச் சொன்னேன். ஆனா இப்போ உன் வாழ்க்கையை உனக்கு பிடித்த மாதிரி அமைச்சு தர முடியாதவனாயிட்டேனே. ஒரு அப்பாவா, என் கடமையை இதுவரை ஒரு குறையுமில்லாம நிறைவேத்தினேன். ஆனா இப்போ முக்கியமான கடமையில் கோட்டை விட்டுட்டேன்மா” மனசுடைந்து கண் கலங்கினார். ஒன்றும் புரியாமல் விழித்தாள், என்ன பிரச்சனை என்று தெரிந்தால் தானே, ஆறுதல் கூற முடியும்.

“என்னப்பா என்னாச்சு” அவர் தோள்களைப் பற்றினாள்.

“என் வாழ்க்கையிலேயே தோத்துட்டேன்மா, என் கடமையை நிறைவேத்த முடியாம தோத்துட்டேன்”

“என்ன கடமைப்பா”

“உன் கல்யாணம் தான்”

“அப்பா” இப்போது அவள் அதிர்ந்தாள்

நடந்தவைகளை கூறினார். அவரை விட அதிகம் உடைந்து போனாள். அங்கேயே அழுது அப்பாவை சங்கடப்படுத்த விரும்பாமல், வேகமாக அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டாள். கட்டிலில் குப்புற விழுந்து தலையணையில் முகம் புதைத்து அழுதாள். தலையணை கண்ணீரை உள்வாங்கிக் கொண்டது.
 
Top Bottom