Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதல் தீ...!!!

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 10 :



கல்லூரியில் நடந்த மாணவர்களுக்கானத் தேர்தல் முடிவுகள் வெளியாகின...!பைரவன் அணி வெற்றி பெற்றிருக்க ஒரே ஏகபோக கொண்டாட்டமாயிருந்தது...!தொடர்ந்து இரண்டு வருடங்களாக தோல்வியை சந்தித்த சைதன்யனின் அணி வருத்தத்தில் மூழ்கியிருந்தது.சோகமாய் காட்சியளித்த தனது நண்பர்களை சைதன்யன் தேற்றினான்.



"விடுங்கடா மச்சான்...!யாரு ஜெயித்தால் என்ன...?ஸ்டூடண்ட்சுக்கு நல்லது செய்யணும்...அதுதான் முக்கியம்...!",அதையும் இதையும் கூறி நண்பர்களைத் தேற்றினான்.



எதையுமே நேர்மறையாக எடுத்துக் கொள்ளும் குணம் சைதன்யனுடையது...!எனவே..இந்த தோல்வியையும் அவன் மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொண்டான்.



தேர்தல் முடிவை அறிந்த ஊர்மிளாவிற்கு...சைதன்யன் சந்தித்துப் பேச வேண்டும் போல் இருந்தது.ஆனால்...தான் அவனிடம் பேசுவது பைரவனுக்கு பிடிக்காது என்ற நினைவில் அமைதி காத்தாள்.



ஆம்...!அன்று..பைரவன் கட்டளையிட்டப் பிறகு அவள்...சைதன்யனிடம் அவ்வளவாக பேசுவதில்லை.வெளியே எங்கேயாவது பார்க்க நேர்ந்தாலும் ஒரு சிறு சிரிப்போடு அகன்று விடுவாள்.விடுமுறையும் வராததால்...சைதன்யனுடன் சேர்ந்து ஊருக்கு செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்படவில்லை.அவனும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்ததால்...ஊர்மிளாவின் விலகலை கவனித்திருக்கவில்லை.



நாளொரு வண்ணமும்...பொழுதொரு மேனியுமாக பைரவன்...ஊர்மிளாவின் காதல் வளர்ந்து கொண்டிருந்தது.

அவர்கள் காதலித்தார்கள்...!உயிர் நிறைய நிறைய காதலித்தார்கள்...!தங்களது ஒவ்வொரு அணுவிலும் காதலை இட்டு நிரப்பினார்கள்...!மொத்த ஜென்மத்திற்கும் தேவையான காதலை இந்த ஜென்மத்திலேயே காதலித்து தீர்த்து விடுபவர்களைப் போல் திகட்ட திகட்ட காதலித்தார்கள்...!



பதின்ம வயதில் இருந்தாலும்..ஊர்மிளாவின் காதல் ஆழமானதாக இருந்தது.பைரவனைக் கண்டதும் அவளது கண்களில் மின்னும் காதலுக்கு..அந்தக் காதலே அடிபணிந்தது.மொட்டில் முகிழ்த்த முதல் காதல் அல்லவா...!அழகானதாகவும்...அழுத்தமானதாகவும் இருந்தது.தன் இதயம் என்னும் கோட்டைக்குள் அவனைப் பத்திரமாக சிறை வைத்திருந்தாள்.அந்த ஆண் மகனும் மனம் விரும்பி அந்த சிறைக்குள் கட்டுண்டிருந்தான்.



அவர்களது காதல் எல்லைகளைத் தாண்டாத காதலாக இருந்தது..!உணர்ச்சிகளைத் தூண்டாத காதலாக இருந்தது...!கட்டிக் கொள்ளாமலும்..தொட்டுக் கொள்ளாமலும் அவர்கள் காதலித்தார்கள்...!



தொட தொடத்தான் மலர முடியுமா...என்ன...?தொடாமலும் மலர முடியும் என்பதை அவர்களது காதல் நிரூபித்தது.ஆம்...!அவனது ஒற்றைப் பார்வைக்கே அவளது பெண்மை மலர்ந்து மணம் வீச ஆரம்பித்தது...!அவளது கடைவிழிப் பார்வையில் அந்த ஆண்மகன் சிக்கி சின்னாபின்னமானான்...!



இருவரும் கைகளால் தொட்டுக் கொள்ளவில்லை.ஆனால்...கண்களால் கட்டிக் கொண்டார்கள்.அவளது கவனம் படிப்பிலிருந்து சிதறக் கூடாது என்பதற்காக அவன் எல்லைகளைக் கடக்காமல் பொறுமை காத்தான்.மற்றபடி...அவனுக்கும் பொறுமைக்கும்தான் வெகு தூரமாயிற்றே...!விழிகளை விரித்து...இதழ்களை குவித்து அவள் பேசும் போதெல்லாம்...அந்த ஆறடி ஆண்மகன் தடுமாறித்தான் போனான்.கண்களோடு சேர்ந்து அபிநயம் பிடிக்கும் அவளது இதழ்களைக் கவ்விக் கொள்ள வேண்டும் போல் அவனுக்குள் பேராவல் எழத்தான் செய்யும்...!அந்த மாதிரி சமயங்களில் அவன் பட்டென்று அந்த இடத்தை விட்டு அகன்று விடுவான்.



"நான் பேசிக்கிட்டு இருக்கும் போது எங்கே போறீங்க பைரவ்...?",அவள் கேள்வியெழுப்புவாள்.



"ஒரு முக்கியமான வேலை ஹனி...!",முணுமுணுத்து விட்டு அகன்று விடுவான்.



அவர்களுடைய காதல் விஷயம் பைரவனின் நண்பர்கள் மற்றும் சிந்துவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.



அள்ளிக் கொள்ளாமலும்...முத்தம் பதிக்காமலும் காதலிப்பது சுகமானது...!பரம சுகமானது...!வெறும் பார்வைகளால் மட்டுமே தொட்டுக் கொள்வதும்...கட்டிக் கொள்வதும் அதை விட சுகமானது...!ஒற்றைப் பார்வை..அந்த ஆண் மகனின் ஒற்றைப் பார்வை...அந்தப் பெண்மையை சுழலில் சிக்கிய பூங்கொடியாய் ஆக்கி விடும்...!பெண்ணவளின் கயல் விழியோரப் பார்வை...யாருக்கும் அடங்காத அந்த சிங்கத்தையும் வீழ்த்தி சிறை வைக்கும்....!



வெறும் பார்வைகளால் மட்டுமே கூடிக் கொண்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும்...இது அள்ளித் தெளிக்கும் சுகம்...!



தேர்தலுக்குப் பிறகு செமெஸ்டர் தேர்வுகள் ஆரம்பமாகின...!வழக்கம் போல்..ஊர்மிளாவிற்கு சொல்லிக் கொடுக்கும் பொறுப்பை பைரவன் எடுத்துக் கொண்டான்.அவனது பொறுமையான வழிகாட்டுதலில்...அவள் நல்லபடியாக தேர்வுகளை எழுதி முடித்திருந்தாள்.



தேர்வுகள் முடிந்து..விடுமுறை ஆரம்பமாக ஊருக்குச் செல்வதற்காக பைரவனும் ஊர்மிளாவும் ரயில் நிலையத்தில் நின்றிருந்தனர்.சைதன்யனுடன் செல்வதாகக் கூறியவளைத் தடுத்த பைரவன்,



"நானே உன்னைக் கொண்டு போய் உங்க ஊர்ல விட்டுட்டு...எங்க ஊருக்குப் போய்க்கிறேன்...!",என்றபடி அவளை கிளப்பிக் கொண்டு ரயில் நிலையத்திற்கு வந்து விட்டான்.



"வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்திடறேன்...!நீ இங்கேயே நில்லு...!",கையிலிருந்த இருவரது பைகளையும் இறக்கி வைத்து விட்டு அவளை அங்கிருந்த பெஞ்சில் அமர்த்தி விட்டு சென்றான் பைரவன்.



சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த பயணிகளையும்..."கூ..கூ..." என்ற சத்தத்துடன் வந்து நிற்கும் ரயில்களையும் பார்த்தபடி அமர்ந்திருந்த ஊர்மிளாவை..



"ஹே..ஊர்மி...!நீ இங்கேதான் இருக்கிறயா...?",என்ற சைதன்யனின் குரல் கலைத்தது.



"சைத்து...!நீயா...?",கேள்வி கேட்டபடியே எழுந்தாள் அவள்.



"உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா...?உன்னைக் காணோம்ன்னு அங்கே காலேஜ் முழுக்க தேடிக்கிட்டு இருந்தேன்...!கடைசியில...உன் பிரெண்ட் சிந்து சொல்லித்தான் நீ கிளம்பினதே தெரிந்தது....!இப்படித்தான் சொல்லாம கொல்லாம கிளம்புவியா....?யாரைக் கேட்டு இங்கே வந்த...?",அவளைக் காணோம் என்று அலைந்திருந்தவன் அவளைக் கண்டதும் படபடவென்று பொரிந்தான்.
அவள் பதில் கூறுவதற்கு முன்...வேறு ஒருவனிடம் இருந்து பதில் பறந்து வந்தது.வேறு யாராக இருக்க முடியும்...ராஜ பைரவனைத் தவிர...!



"அவள் என்கூடத்தான் இங்கே வந்தாள்...!",அழுத்தமாகக் கூறியபடி நிதானமாக அவர்களை நெருங்கினான் பைரவன்.



இப்பொழுது,"பைரவன்...!நீயா...?",என கேட்பது சைதன்யனின் முறையாயிற்று.



தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டில்களை ஊர்மிளாவின் கையில் திணித்தவன்,"நானேதான் சைதன்யா...!நான்தான் அவளை இங்கே கூட்டிட்டு வந்தேன்...!",என்றான் அழுத்தமாக.



"ஏன்...?",சைதன்யன் முகம் குழப்பத்தைக் காட்டியது.



"இது என்ன கேள்வி...?ரெயில்வே ஸ்டேஷனுக்கு எதுக்கு வருவாங்க...?ஊருக்குப் போகிறதுக்குத்தான்...!நாங்களும் ஊருக்குப் போகிறதுக்குத்தான் வந்திருக்கிறோம்...!",சிறு நக்கலுடன் கூறினான் பைரவன்.



"ஆனால்...ஊர்மி என்கூடத்தானே ஊருக்கு வருவா...?",கேள்வியுடன் அவன் நிறுத்த..



"அது அப்போ...!இனிமேல் ஊர்மி என்கூடத்தானே ஊருக்கு வருவாள்...!",அழுத்தந் திருத்தமாய் பதில் வந்தது பைரவனிடமிருந்து.



"காரணம்...?",சைதன்யனின் புருவங்கள் முடிச்சிட்டன.



"என் காதலியை வேறு யாரும் பார்த்துக்க வேண்டிய அவசியம் இல்ல...!என் வருங்காலப் பொண்டாட்டியைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்...!",அவனது குரல் ஆண்மையின் கர்வம் மிளிர்ந்தது.



"காதலியா...?",சைதன்யனின் பார்வை ஊர்மிளாவின் மேல் படிந்தது.



அதுவரை...இவர்கள் பேசுவதைக் கேட்டபடி கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தவள்,"ஆ..ஆமாம் சைத்து...!நானும் இவரும் காதலிக்கிறோம்...!உன்கிட்ட...",அதற்கு மேல் சொல்ல வந்தவளை கையை உயர்த்தி தடுத்த பைரவன்..



"வண்டி கிளம்பப் போகுது...!நீ உள்ளே போய் உட்காரு...!",என்றவன் சைதன்யனிடம் திரும்பி..



"காரணம் தெரிஞ்சிடுச்சல்ல...!இப்போ கிளம்பறியா....?",நக்கலுடன் வினவியபடி குனிந்து பைகளை எடுத்தான்.



"பைரவ்...!ஒரு நிமிஷம்...!சைத்துகிட்ட...",பேச வந்த ஊர்மிளாவை நோக்கி அழுத்தமான பார்வையை வீசியவன்..



"நான் உன்னை உள்ளே போய் உட்கார சொன்னேன் ஊர்மிளா...!",ஒவ்வொரு வார்த்தையையும் பல்லைக் கடித்துக் கொண்டு மென்று துப்ப...அவள் மிரண்டு போனவளாய் ரயிலில் ஏறி விட்டாள்.



இருவரது பைகளையும் எடுத்துக் கொண்டவன்...சைதன்யனைக் கவனிக்காமல் வண்டியில் ஏறினான்.



"ஊ....".என்ற கூச்சலுடன் அந்த ரயில் கிளம்ப...அதையே பார்த்தபடி யோசனையுடன் நின்றிருந்தான் சைதன்யன்.



பைரவன்...தங்களுக்காக ஏ.சி கோச்சில் தனி கூபேவை பதிவு செய்திருந்தான்.பெட்டிகளை அதற்குரிய இடத்தில் அடுக்கி விட்டு..."ஹப்பாடா...!" என்றபடி பெருமூச்சுடன் அமர்ந்தவனை ஊர்மிளாவின் கோப முகம் முறைத்தது.



"என்னடி...?இந்த முறை முறைக்கிற...?",எப்பொழுதும் அவள் கோபப்பட்டால் அவனுக்கு உல்லாசம் பிறந்து விடும்...!இப்பொழுதும் அவளுடைய கோபம் அவனை ரசிக்க வைக்க...அவன் குறும்பாய் புருவம் உயர்த்தினான்.



"கிளம்பும் போதே சொன்னேன்...சைத்துகிட்ட இன்ஃபார்ம் பண்ணிடலாம்ன்னு...!நான் சொன்னதை காது கொடுத்து கேட்காம...ஹாஸ்டல்ல இருந்து அவசர அவசரமா என்னை கடத்திட்டு வந்துட்டீங்க....!இப்போ...வெளியில அவன்கிட்ட பேசக் கூட விடாம...வண்டியில ஏறி உட்கார சொல்லிட்டீங்க...!எதுக்கு பைரவ் இப்படியெல்லாம் பண்றீங்க...?சைத்து என்னைப் பத்தி என்ன நினைப்பான்...?",அவள் சற்று கோபத்துடன் வினவ...அவனுக்கும் கோபம் வந்தது.



"அவன் என்ன நினைத்தால் உனக்கென்ன டி....?அவன் நினைப்பை பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் உனக்கில்லை...!அண்டர்ஸ்டாண்ட்....?",எரிந்து விழுந்தான் அவன்.



"சைதன்யன் என்னுடைய பிரெண்ட் பைரவ்...!அவன் நினைப்பை பத்தி நான் கவலைப்பட்டுத்தான் ஆகணும்...!",தங்களது நட்பை அவனுக்குப் புரிய வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வேகமாக அவள் கூறியது...அவனுடைய ஆத்திரத்தை மேலும் தூண்டி விட்டது.



"அது என்ன தேவைக்கு...?",கர்ஜித்தபடியே எழுந்து நின்றவன்...அவளது மருண்ட விழிகளைக் கண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவனாய்..



"ஏய்ய்...!இங்கே பாருடி...!நீ என்னுடைய நினைப்பை பத்தி மட்டும் யோசிச்சா போதும்...!வேற யாருடைய நினைப்பும் உனக்குத் தேவையில்லை...!பிரெண்டாம் பிரெண்ட்...!",அதற்கு மேல் அவன் எதையோ வாய்க்குள்ளே முணுமுணுக்க..



"அவன் மேல உங்களுக்கு அப்படி என்னதான் கோபம் பைரு...?",அவளது 'பைரு' என்ற அழைப்பில் அவனது கோபம் சற்று மட்டுப்பட்டது.இருந்தும் முழுக் கோபம் குறையாதவனாய்..



"அவன் கூட சிரிச்சு பேசிக்கிட்டு என்னை அவாய்ட் பண்ணினயல்ல...!அவனை 'சைத்து'ன்னு கூப்பிட்டுக்கிட்டு...என்னை 'அண்ணா...!'ன்னு கூப்பிட்டவள்தானே நீ....?",மூக்கு விடைக்க...புருவங்கள் முடிச்சிட என்றோ நடந்ததற்கு இன்று சண்டை போடுபவனைப் பார்த்தவளுக்கு பிடிவாதக்கார சிறு குழந்தையைப் போலத்தான் தோன்றியது.



உதட்டை மீறி பொங்கி வந்த சிரிப்பை தனக்குள் அடக்கியவள்,"உங்களை 'அண்ணா...!'ன்னு கூப்பிடத்துக்குத்தான்...உங்க கையால ஒரு அறையையும் வாங்கி கட்டிக்கிட்டேனே...!",கோபம் போல் கூறியவளின் குரலில் நிச்சயமாய் கோபம் இல்லை.மாறாக ஒரு பெருமைதான் இருந்தது.



அது இன்று நேற்று வந்த பெருமையல்ல...!காலம் காலமாய் பெண்களின் மனதுக்குள் ஊறிப் போன உணர்வு தந்த பெருமை அது...!தன்னவனின் முரட்டுத்தனமான ஆளுமைக்கு கீழ் அடங்கி நடக்கத்தான் எந்தப் பெண்மையும் விரும்புகிறது...!அதில்...அந்தப் பெண்மை அனுபவிக்கும் சுகம் அலாதியானதுதான்...!



"அறையை மட்டுமா வாங்கி கட்டிக்கிட்ட....?",குறும்பாய் அவன் கண்சிமிட்ட..



அன்றைய நிகழ்வு நினைவுக்கு வந்ததில் அவளின் முகம் குங்குமத்தைப் பூசிக் கொண்டது.



"சொல்லு டி....?",அவளுக்கு எதிரில் அமர்ந்திருந்தவன் எழுந்து வந்து அவளருகில் ஒட்டி உராய்ந்தபடி அமர்ந்து கொண்டான்.



"தள்ளி உட்காருங்க...!",



"மாட்டேன்...!",பிடிவாதமாய் அவன்...அவளை நெருக்க அவள் ஜன்னலோரம் சென்று ஒட்டிக் கொண்டாள்.



"ம்ப்ச்...!விளையாடாதீங்க...!",



"நான் இன்னும் விளையாடவே ஆரம்பிக்கலை டி...!",விட்டால் அவள் மடியிலேயே அமர்ந்து விடுபவனைப் போல் ஒட்டி உரசினான்.



"பைரு....!",சுட்டு விரலை நீட்டி அவள்...அவனை செல்லமாய் முறைக்க..



"மிரு...!",அவளைக் கொஞ்சியபடியே அவளது விரலைப் பற்றி உள்ளங்கையில் ஒரு முத்தம் பதித்தான்.



வெடுக்கென்று தன் கையைப் பிடுங்கிக் கொண்டவள்...சிவந்த முகத்தை அவன் கண்டு விடாமல் இருக்கும் பொருட்டு...ஜன்னலின் புறம் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.



அவனோ...அவள் புறம் திரும்பி அமர்ந்தபடி ஒற்றைக் கையை அவளுக்குப் பின்னால் செலுத்தி ஜன்னலின் கம்பியை பற்றியவன்...அவளையே குறுகுறுவென பார்க்க ஆரம்பித்தான்.



'என்ன இவன் இப்படி பார்க்கிறான்...?' அவள் தடுமாறித் தத்தளிக்க..



"உனக்கு மட்டும் எப்படி டி இப்படி கன்னம் சிவக்குது....?",அவள் மீதிருந்த தன் பார்வையை அகற்றாமலேயே வினவினான் அவன்.



அவனது பார்வையிலும்...அவன் வினவி வைத்த விதத்திலும் அவள் இன்னும் அதிகமாகவே கன்னம் சிவந்தாள்.



"வாவ்...!மயக்கறே டி...!",கண்கள் செருக அரை மயக்க நிலையில் இருப்பவனைப் போல் அவன் பிதற்ற..



அவளோ...தாள மாட்டாதவளாய் தன் கீழுதடை அழுந்தக் கடித்தாள்.அவனது பார்வை சட்டென்று அவளது இதழ்களின் மேல் பாய்ந்தது.



"நோ ஹனி...!உன் ஹனி லிப்ஸை கஷ்டப்படுத்தாதே...!",அவளது காதோரம் கிசுகிசுத்தவனின் விரல்கள் உயர்ந்து சென்று...பற்களின் பிடியில் சிக்கியிருந்த அவளது இதழ்களை சிறைமீட்டு இதமாக வருடி விட்டது.



ஊர்மிளாவின் இதயமோ...அந்த ரயிலைப் போலவே தடதடத்து ஓடிக் கொண்டிருந்தது.அவனது நெருக்கமும்...அந்த வலிமையான விரல்களின் தீண்டலும் பெண்ணவளின் தளிர் மேனியை நடுங்கச் செய்தது.



அந்தப் பெண்மையின் நடுக்கத்தில் அவன் மயக்கம் கொண்டான்...!அன்று என்றல்ல...எப்பொழுது அவன்...அவளருகில் வந்தாலும் அவள் அப்படித்தான் இதயம் சிலிர்க்க...இமைகள் படபடக்க...மேனி நடுங்குவாள்...!



அந்த நினைவு அவனுக்குள் ஒரு பேரலையை எழுப்பி விட...தாங்க மாட்டாதவனாய் அவன் மெல்ல அவள் முகம் நோக்கி குனிந்தான்.



விழிகளை அழுந்த மூடியபடி...தான் அமர்ந்திருந்த சீட்டை இறுகப் பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தவளின் இதழ்களோடு...தன் உதடுகளை அவன் பிணைக்கும் நேரம்..



"எக்ஸ்க்யூஸ் மீ...!",என்றபடி யாரோ அவர்களின் கூபே கதவைத் தட்ட...இருவரும் அவசர அவசரமாக விலகி அமர்ந்தனர்.



தன் சிகையை அழுந்தக் கோதியபடி அவன் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த போராட...அவளோ...உணர்ச்சிகளின் வேகத்தில் தன் இதழ்களை அழுந்தக் கடித்துக் கொண்டு ஜன்னலின் புறம் பார்வையைத் திருப்பினாள்.



அதற்குள் இன்னொரு முறை கதவு தட்டப்பட...அவன் தன்னை சுதாரித்துக் கொண்டு கதவைத் திறந்தான்.டி.டி.ஆர் தான் நின்றிருந்தார்.இருவரது பயணச் சீட்டுகளையும் சோதித்து விட்டு...அவர் வெளியேறி விட...அவன் கதவை அடைத்து விட்டு வந்து அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.



இருவருக்கும் இடையில் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது.மௌனம் அழகானது...!மௌனம் பேசும் மொழி மிக அழகானது...!அது..இதயமும் இதயமும் பேசிக் கொள்ளும் மொழி..!உயிரும் உயிரும் பிண்ணிக் கொள்ளும் வழி...!



"உங்க ஃபேமிலியைப் பத்தி சொல்லு...?",என பைரவன்தான் அந்த மௌனத்தை முதலில் கலைத்தான்.



"என்னுடையது ரொம்ப குட்டி ஃபேமிலிதான்...!அம்மா..அப்பா..நான்...",என அவள் ஆரம்பிக்க அதன் பிறகு பேச்சு குடும்பத்தின் பக்கம் திரும்பியது.தான் பிறந்த கதையிலிருந்து தற்போது கல்லூரியில் சேர்ந்த கதை வரை அவள் கூறி முடிக்க...அவனும் தன் குடும்பத்தில் ஆரம்பித்து தனக்குப் பிடித்த தொழில் வரை அவளுடன் பகிர்ந்து கொண்டான்.



அவர்கள் பேசினார்கள்...!இதுவரை பேசாததையெல்லாம் பேசினார்கள்...!ரயில் பயணம் அற்புதமானது...!அதிலும்...மனம் விரும்பியவருடையதான ரயில் பயணம் மிக அற்புதமானது...!



"தடக்..தடக்..." சீரான தாள லயத்தோடு ரயில் ஓடிக் கொண்டிருக்க...அந்தக் காதல் கிளிகள் இரண்டும் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தது...!



ஒருவேளை...இனிமேல் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவே போவதில்லை என்பதை அறிந்திருந்தார்களோ...என்னவோ...?தீரத் தீரப் பேசித் தீர்த்தார்கள்...!காதலோடு உரையாடிக் கொண்டிருந்தவர்களுக்குத் தெரியவில்லை...!அந்தக் காதல் என்ற ஒன்று தங்களது வாழ்க்கையை களமாக்கி...விளையாடப் போகிறது என்று..!அந்த விளையாட்டில் அவர்களது காதல் வலிக்க வலிக்க மரிக்கப் போகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை...!





காதல் தீ எரியும்...!!!
 
Top Bottom