Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காற்றினில் கலந்தவன்.....ராம் ஸ்ரீதர் - சிறுகதை

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
172954316_10223198894175248_572473646832839009_n.jpg


ஆவிகளைச் சட்டென்று கைது செய்யமுடியாது. அதற்கு நிறைய நேரம் தேவைப்படும்.

எனக்கு ஆவிகள், பேய், பிசாசுகள் மேல் நம்பிக்கை இல்லை (நான் மனைவிகளை இதில் சேர்க்கவில்லை).

உங்களில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும் நான் ஒரு நிரந்தர பேச்சிலர் என்பது).ஆவிகள், பேய்கள் போன்றவைகளை நான் நம்புவதில்லை.

என் பாஸ் கணேஷ், ஒரு கேஸ் விஷயமாக பிரான்ஸில் இருக்கும் பாரீஸ் நகருக்குப் போய்விட்டார்.

எனக்கு வாய்த்தால் சென்னை நகர் பாரீஸ் (பாரி முனை) தான் மாட்டும்.

அன்று என் அலுவலகத்துள் வந்தபோது எங்கள் காரியதரிசி ஷில்பா, அவளை விட மேலும் சற்று அழகான ஒரு பெண்ணுடன் உள்ளே நுழைந்து, அந்தப் பெண்ணை என் முன்னால் உட்காரவைத்துவிட்டு, "ஸில்வியா" என்று அறிமுகப்படுத்திவிட்டு அகன்றாள்.

"சொல்லுங்கள், ஸில்வியா, நான் வஸந்த், டெய்லியே இப்பிடிதான் அழகா இருப்பீர்களா? " என்றேன்

அவளுக்குப் புரிந்து, சட்டென கண்களைச் சுருக்கிக்கொண்டு, "ஐ பெக் யுர் பார்டன்" என்றாள் பொய்க்கோபத்துடன்.....

"எனக்கு ஒரு ஆவியைப் பிடிக்க வேண்டும்."

"என்னது?"

"ஆம், ரொம்ப சீரியஸாகக் கேட்கிறேன்" என்றாள்.

"ஆவி...." என்று இழுத்தேன்.

"ஆம், அந்த ஆவி ஏற்கனவே ஒருவரைக் கொன்றுவிட்டு, மேலும் இருவரைக் கொல்லப் பார்க்கிறது" என்றாள்.

எனக்கு, இந்த சமயத்தில் என் பாஸ் கணேஷ் இல்லையே என்ற ஆதங்கமும், இந்த மாதிரி கீழ்பாக் செல்லவேண்டிய கேஸை இங்கே கொண்டுவந்து உட்கார வைத்த ஷில்பா மீது ஆயாசமும் வந்தது.

"மிஸ் ஸில்வியா நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டிங்கன்னு நினைக்கிறேன்" என தமிழுக்கு மாறிவிட்டேன்.

"இல்லை, வஸந்த்" என்று பிடிவாதமாக ஆங்கிலத்தில் தொடர்ந்தாள்.

அவளுடைய மேலாடை வேறு வெளிர் மஞ்சளில் மிகவும் டைட்டாக, எனக்கு மூச்சுத் திணறும்படி தைக்கப்பட்டிருந்தது.

"நான் உங்களிடம் சற்று விரிவாகப் பேசலாமா?" என்றாள்.

"பேசலாம். அப்போதுதானே எனக்கும் புரியாத விஷயங்கள் புரியும்" என்றேன் அவளுக்காக செப்பனிடப்பட்ட ஆங்கிலத்தில்.

எங்களுடைய எல்லாக் கேஸுகளுமே இப்படி தம்புச்செட்டி அலுவலகத்துக்கு வரும்போது ஆங்கிலத்தில் யாரும் பேசவேண்டிய அவசியம் இருந்ததில்லை.

"நீங்கள் மேலும் தொடரும் முன் சில விஷயங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதைப் போல பாராநார்மல் (paranormal) விஷயங்களில் எனக்கும், என் பாஸ் கணேஷுக்கும் நம்பிக்கையில்லை. எதற்குமே ஒரு காரண, காரியமிருக்க வேண்டும். அதே சமயம் கண்ணில் தெரிவதை / படுவதையெல்லாம் நம்பும் ஆள் நாங்கள் இல்லை....."

என் மொபைலில் அழைப்பு வரவே, ஸில்வியாவிடம், ஒரு விரலை உயர்த்திக்காட்டிவிட்டு, "எஸ்," என்றேன் ஸ்டைலாக.

"வஸந்த், யாருடா அந்த அழகான பொண்ணு?' கணேஷ் குரல் தெளிவாகக் கேட்டது.

"பாஸ், கில்லாடி பாஸ், நீங்க. எப்பிடி இருக்கு அங்க வெதர் ? இங்க ஒரு புது கேஸ், மிஸ் ஸில்வியான்னு..."

தொடர்வதற்கு முன், வெட்டிய கணேஷ்,"தெரியும், இப்போதான் ஷில்பா கம்ப்ளயின் பண்ணா..." என்று சொல்லிவிட்டு,

"சரி, ஒரு ஒன் அவர் கழிச்சுப் பேசறேன்" என்று துண்டித்தார்.எனக்கு ஷில்பாவை நினைத்துக் கோபம் வந்தது.

"அந்தப் பேய் ஏற்கனவே ஒருவரைக் கொன்று விட்டு இப்போது மேலும் ஒருவரை கொன்று விட வாய்ப்புகள் உள்ளன”திடீரென ஸில்வியா சொன்னதைப் புரிந்து கொண்டு, "ஸாரி, திரும்பச் சொல்லுங்க" என்றேன்.

அவள் மறுபடியும் சொல்லவும், ஒரு நிமிடம் அந்த சில்வியாவை உற்று நோக்கினேன்.

இவள் உண்மையாகவே இப்படிப் பேசுகிறாளா அல்லது இதற்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்குமா என்று மனதில் ஓடிக் கொண்டிருந்ததை அவளிடம் வெளிப்படையாக சொல்ல யோசனையாக இருந்தது.

“மிஸ் ஸில்வியா, அப்படியே கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு ஆவி அல்லது பேய் அலைந்து கொண்டிருந்தாலும் அதைத் தனி ஒருவனாக நான் எதுவும் செய்ய முடியாது. இதற்கென்று போலீஸ் டிப்பார்ட்மென்டில் உதவி செய்வதற்கு நிச்சயம் ஆட்கள் யாராவது இருக்க வாய்ப்பு உண்டு, மேலும் என் பாஸ் கணேஷ் வேற ஊர்ல இல்ல …”

நான் மேலும் தொடரும் முன் ஸில்வியா குறுக்கிட்டாள்.

“ நிச்சயம் நான் போலீஸ் உதவியை இதற்கு நாட முடியாது” என்ற அவள் குரலில் தீர்மானம் இருந்தது.

“ஏன் அப்படி?”

“அப்படிச் செய்தால் என்னுடைய சகோதரர்களில் ஒருவரை நான் காட்டிக் கொடுத்த மாதிரி ஆகிவிடும்” என்றாள்.

“ புரியவில்லை’ என்றேன்.

“இதைப்பற்றி போலீஸில் சொல்லுவதற்கும், உங்கள் சகோதரர்களில் ஒருவரைக் காட்டிக் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்?” என்றேன் புரியாமல்.

“விபரங்களை விளக்கமாகச் சொல்வதற்கு நான் ரெடி. அதை பொறுமையாகக் கேட்க நீங்கள் ரெடியா?”

“ சொல்லுங்களேன், நம்புகிற மாதிரி” என்றேன்.

என் குரலில் இருந்த கிண்டல் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.

“என் குடும்பத்தில் நான்கு பேர் இருந்தோம். என்னையும் சேர்த்து…. எனக்கு மூன்று மூத்த சகோதரர்கள் உண்டு. மூத்தவன் பெயர் ஆத்மா. அவன் ஒரு வருடம் முன்பு இறந்து விட்டான்…..”

“ என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். எப்படி அவர் இறந்தார் என்று சொல்ல முடியுமா?”

“இறந்தார் என்பது சற்று முரணான விளக்கம். அவர் சாதாரணமாக இறக்கவில்லை. உண்மையில் கொலை செய்யப்பட்டார். ஆத்மாவுக்கு அடுத்துப் பிறந்த விவேக், ஆத்மாவை மலையுச்சியிலிருந்து தள்ளிக் கொன்று விட்டான்…..”

மேற்கொண்டு அவள் கதையைத் தொடரும் முன் குறிக்கிட்டேன்.

“இப்போது இது நிச்சயம் போலீஸ் கேஸ் தானே? இதில் போலீசிடம் சென்று முறையிடுவதில் எது தவறு? உங்கள் மூத்த அண்ணனைக் கொலை செய்துவிட்டு அடுத்த அண்ணன் நிரபராதியாக நடமாடுவது மிகப்பெரிய குற்றமல்லவா?”

“இந்த சம்பவத்தை போலீஸ் தற்கொலை என்றே பதிவு செய்துள்ளது. இதில், ஆத்மாவை விவேக் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு கொன்றது உண்மையா என்பதில் எனக்கும் மூன்றாவது அண்ணன் முரளிக்கும் சில ஆதார சந்தேகங்கள் உள்ளன. நடந்தது உண்மையிலேயே ஒரு தற்கொலையா அல்லது கொலையா என்பது பற்றி தீர்மானமாக ஒரு முடிவுக்கு வர எங்கள் இருவராலும் முடியவில்லை. மேலும், விவேக்கும் இப்போது உயிருடன் இல்லை.”

“ ஸில்வியா. உங்களுடைய விளக்கங்கள் தலை சுற்ற வைக்கின்றன. எங்க ஆபிஸ்ல பாய் இல்ல. இருந்தா அதைப் பிராண்டலாம். ஆத்மா இறந்தது கொலை, அவரை மலையுச்சியிலிருந்து விவேக் தள்ளிவிட்டு கொன்றான் என்று சில வரிகளுக்கு முன் நீங்கள்தான் சொன்னீர்கள். இப்போது அதில் சந்தேகம் என்று சொல்கிறீர்கள். அடுத்த அண்ணன் விவேக் இறந்துவிட்டார் என்கிறீர்கள். குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது”

“இல்லை. நடந்தது என்ன என்று முழுவதுமாக நீங்கள் கேட்டு முடிக்கும் போது அந்தக் குழப்பம் உங்களுக்கும் வரும்” என்றாள் ஸில்வியா.

“ சொல்லுங்கள்” என்றேன்.

"என்னுடைய மூத்த அண்ணன் ஆத்மாவுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட 25 வருட வயது வித்தியாசம். சொல்லப்போனால், நான் பிறந்து சில நாட்களில் என் தந்தை இறந்து போனதால், ஆத்மா அண்ணன் தான் ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து என்னை வளர்த்தார். அவருக்கு பிறகு, ஆறு வருடங்கள் கழித்து பிறந்தவன் விவேக். விவேக் பிறந்து நான்கு வருடங்கள் கழித்து பிறந்தவன் முரளி, கடைசியாக பிறந்தது நான்".

"ஆத்மா அண்ணன் பல வருடங்களாக ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். எங்களுடைய அப்பா இறக்கும்போது விட்டுச் சென்ற சொத்து கணிசமான அளவில் இருப்பதால், சகோதரர்கள் யாருக்குமே நன்றாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் படவில்லை.விவேக், நண்பர்களுடன் இணைந்து ஒரு தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறான். அதிர்ஷ்டவசமாக அதில் நிறையவே பணமும் சம்பாதித்து விட்டான். மூன்றாவது அண்ணன் முரளி, சொந்தமாக ஒரு ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறான். இதில் நான் ஒருத்திதான் கடைசியாகப் பிறந்ததால், அதுவும் ஒரே பெண்ணாகப் பிறந்ததால், என்னை வேலைக்கு போகச் சொல்ல யாரும் வற்புறுத்தவில்லை".

"சிறுவயது முதலே, எனக்கு மிமிக்ரி செய்வதிலும், பிறகு வென்ட்ரிலாக்விஸம் (ventriloquism) கற்றுக்கொண்டு, அதில் ஆர்வம் அதிகம் இருப்பதால், நிறைய மேடைகளில், வெளிநாடுகள் உட்பட ஒரு தொழில்முறை வென்டரிலாக்விஸ்ட் ஆக நிறைய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். இன்று வரை என் சகோதரர்கள் யாரும் இதற்குத் தடை விதித்ததில்லை.”

சற்று மூச்சு வாங்கிய சந்தர்ப்பத்தில், அவளுடைய மேலுடையை நொந்து கொண்டு, நான் என் எண்ணத்தை வெளியிட்டேன்.

“ மிமிக்ரி, வென்ட்ரிலாக்விஸம்……. சுவாரஸ்யமாக இருக்கிறது. மேலே சொல்லுங்கள்” என்றேன்.

“என் தந்தை விட்டுச் சென்ற உயில் பற்றி நான் சொல்ல வேண்டும். மிகத் தெளிவாக சொத்துக்கள் முழுவதும் எங்கள் மூத்த சகோதரர் ஆத்மா பேரிலும், நாங்கள் மூவரும் ஆத்மாவின் பாதுகாப்பில்தான் இருக்க வேண்டும் என்றும், ஆத்மாவுக்கு ஏதேனும் ஆகி அவர் இறந்துவிட்டார் என்றால் , அது அடுத்த சகோதரர் விவேக் வசம் செல்லவேண்டு, அவர் மீதமிருக்கும் என்னையும் முரளி அண்ணனையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று..."

"புரிகிறது. ரெஸிப்ரோகல் அல்லது ம்யூச்சுவல் வில் (reciprocal or mutual will ) என்பார்கள்...."

நான் முடிக்கும்முன் ஆமோதித்து, குறிக்கிட்டாள் ஸில்வியா,

"ஆம், அதேதான். எனவே, இப்போது சொத்து முழுவதும், இரண்டாவது அண்ணன் விவேக் பேரில் வந்துவிட்டது. எங்கள் யாருக்குமே மூத்த அன்னான் ஆத்மா மீது எந்த வெறுப்புமில்லை. அதீத அன்பும் இல்லை. என்ன காரணமோ தெரியவில்லை, மூன்று சகோதரர்களும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை....."

நான் மறுபடி குறிக்கிட்டேன், "மன்னிக்கவும், உங்களுடைய வயது என்னவென்று சொல்ல முடியுமா?""இருபத்தி நான்கு" என்றாள்.

"மறுபடியும் மன்னிக்கவும், டெய்லி என்ன சாப்பிடுவீர்கள் என்று சொல்லமுடியுமா?" என்றேன் சீரியஸான குரலில்.

"வஸந்த்..." என்று அவள் சிணுங்கியபோது, வலது கையை வெட்டிக்கொடுத்துவிடலாம் என்று தோன்றியது.

அப்புறம், பாஸ் கணேஷ் கேட்கும் பிரீஃப்களை யார் தட்டச்சுவது?

ஷில்பாவுக்கு இந்த விஷயத்தில் சாமர்த்தியம் போதாது என்பார் பாஸ். அவளுக்கு எந்த விஷயத்தில் நல்ல சாமர்த்தியம் என்று எனக்குதான் தெரியும்.

ஸில்வியா தொடர்ந்தாள். “வெகு காலமாகவே ஆத்மா அண்ணன் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்து வந்தார். ஒரு வருடம் முன்பு, திடீர் என்று தனக்கு ஷேர் மார்க்கெட்டில் சமீபத்தில் செய்த ஒரு பரிவர்த்தனையில் மிகப்பெரிய லாபம் கிட்டியது என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு, நால்வரும் எங்கேயாவது விடுமுறைக்கு செல்லலாம் என்று சொன்னார்.”

“ சென்றீர்களா?”

"ஆம், சுவிட்சர்லாந்து சென்றோம். அதில் மிகப்பெரிய ரிஸார்ட் ஒன்றில் தங்கிய இரண்டாம் நாள், பயணக்களைப்பில் ஆத்மா அண்ணன் சீக்கிரமாகவே உறங்கச் சென்று விட, நாங்கள் மூவரும் கதகதப்பான கணப்பருகே அமர்ந்துகொண்டு, கொஞ்சம் அதிகமாகவே மது அருந்தினோம் என்று நினைக்கிறேன்",

"திடீரென்று விவேக் அண்ணன், தனக்கு அலுவலக ரீதியாக மதுவந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவள் மூலமாக நிறைய செலவுகள் செய்து, மிகுந்த பண நெருக்கடி உண்டாகி விட்டது என்றும், இதைச் சரிசெய்ய ஆத்மா அண்ணனிடம் கடனாக கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் கேட்டபோது அவர் அதை தர மறுத்ததோடு அல்லாமல் மிகவும் கீழ்த்தரமாக தன்னைத் திட்டி விட்டார் என்று வருத்தப்பட்ட விவேக் அண்ணன், ஆத்மா அண்ணன் ஒழிந்தால்தான் தனக்கு நிம்மதி, அவர் இறந்துவிட்டால், உயிலின் படி தனக்குத் சொத்துகள் யாவும் வந்து விட வேண்டும், எனக்கும், முரளி அண்ணனுக்கும் எந்தவிதக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று சொல்லிவிட்டு, அதனால் நாங்கள் சுவிட்சர்லாந்து சென்றுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, ஆத்மா அண்ணனை கொலை செய்யப்போவதாக சொன்னபோது எனக்கும் முரளி அண்ணனுக்கும் மிகுந்த அதிர்ச்சியாகவே இருந்தது.”

“ நீங்கள் இருவரும், உங்கள் ஆத்மா அண்ணனுக்கு ஆதரவாகப் பேசி, விவேக் அந்த மாதிரியான பாதகச் செயலை செய்யாமல் தடுத்திருக்கலாம் அல்லவா?”

இருந்தாலும் அண்ணன்களுடன் மது அருந்தினேன் என்று இந்த அழகான பெண் சொன்னது எனக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது.

“உண்மை. ஆனால், மதுவின் ஆதிக்கமோ என்னவோ, சிறுவயது முதலே ஆத்மா அண்ணனின் அரட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பயந்துபோய் நடந்துகொண்டதால், எங்கள் இருவருக்கும் விவேக் அண்ணனின் ஐடியா சரி என்றே தோன்றியது. அப்படியே செய்துவிடலாம் என்று மூவருமே ஒரு முடிவுக்கு வந்தோம்."

”மறுநாள் நாங்கள் மூவரும் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் ஸெர்மாட் (Zermatt) என்னும் ஊருக்கு போகும்போது கிட்டியது. மிக அழகான பள்ளத்தாக்குகளுக்கு இடையே நடந்து செல்லும்போது, ஒரு மலைமுகட்டருகே, விவேக் அண்ணன், சரேலென்று ஆத்மா அண்ணனை கீழே தள்ளி விட்டு விட்டார். நடமாட்டமே இல்லாததால், போலீசுக்குத் தகவல் அனுப்பி, அவர்கள் வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. போலீஸ் மருத்துவர், ஆத்மா அண்ணனின் உடலை மீட்பத இரண்டு நாட்கள் ஆகும் என்றும், அதற்குப் பிறகு எதுவும் சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டு, கிட்டத்தட்ட 13 மணி நேரத்தில் உடலை மீட்டு விட்டார்கள். பிரேத பரிசோதனை செய்துவிட்டு, ஆத்மா அண்ணன் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து இருக்கவேண்டும் என்ற எங்களுடைய ஐயத்தை உறுதி செய்தார்".

இதன் பிறகு, நாங்கள் வீடு திரும்பினோம்.”

“உங்களுடைய வீட்டு விலாசத்தை சொல்ல முடியுமா ஸில்வியா”” என்று கேட்டு அவளுடைய வீட்டு விலாசத்தை வாங்கிக்கொண்டு,

“ இன்னும் சொல்ல வேண்டியது எவ்வளவு பாக்கி இருக்கிறது?” என்று கேட்டேன்

“இன்னும் கொஞ்சம். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன், நான் ஒரு நாள் என் வீடு திரும்பியபோது, வீட்டினுள் ஆத்மா அண்ணன் எனக்காக காத்திருந்தார்….”

மேற்கொண்டு ஸில்வியா எதுவும் சொல்லும் முன், நான் திகைத்துப்போய் அவளை கேட்டேன், “ ஆத்மா அண்ணன் இறந்து போய்விட்டதாக சொன்னீர்களே?...”

“அவரேதான், இறப்பதற்கு முன் கடைசியாக அணிந்திருந்த உடையோடு என் வீட்டு ஹாலில், ஒரு நாற்காலியில் அமர்ந்து எனக்காக காத்துக் கொண்டிருந்தார். பிறகு, என்னிடம் விவேக்கும், முரளியும் சேர்ந்துகொண்டு தன்னைக் கொலை செய்துவிட்டதாக சொல்லி வருத்தப்பட்டார். இந்த லிஸ்டில் என் பெயரை சேர்க்காதது பற்றி எனக்கு முதலில் மகிழ்ச்சியாகவே இருந்தது.”

மறுபடியும் குறுக்கிட்டேன், “ இறந்தவர் உங்கள் வீட்டுக்கு வந்து உங்களுடன் பேசினார் என்றால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. அவருடைய குரல் எப்படி இருந்தது?"

"எப்போதும் போல. ஆத்மாவிற்கு நடிகர் அமிதாப்பச்சன் போல நல்ல கனமான பாரிடோன் (baritone) குரல். அதில் எந்த மாற்றமும் இல்லை. முதலில் விவேக்கை பழி வாங்கி விட்டு பிறகு முரளியையும், அதன் பிறகு என்னையும் கொல்லப்போவதாக மிகச் சாதாரணமான குரலில் அவர் சொன்னார். பிறகு ஒரே நொடியில் காணாமல் போய்விட்டார்"…...

“யூ மீன், அவர் எப்படி வெளியே சென்றார் என்பது உங்களுக்குத் தெரியாதா?”

“ நிச்சயம் நடந்து செல்லவில்லை. பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று காணாமல் போய்விட்டார்….”

எனக்கு குழப்பம் மிக அதிகமாக இருந்தது. ஸில்வியா சொல்லுவதை கேட்டால், தேவையில்லாமல் பொய் சொல்லுவது போல எனக்குத் தெரியவில்லை.

அதேசமயம், அவள் சொன்ன கதையையும் என்னால் முற்றிலும் நம்ப முடியவில்லை.

“ உடனே விவேக் மற்றும் முரளி இருவரையும் தொடர்புகொண்டு நடந்த எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னேன். இருவரும் முதலில் பயந்தாலும், விவேக் அண்ணன் என்னை பயப்பட வேண்டாம் என்று சொல்லி, எல்லாமே ஒரு ஹலூஸினேஷன் ஆக இருக்க வாய்ப்பு உண்டு என்று ஒரு சைக்கியாட்ரிஸ்ட் மாதிரி ஆறுதல் சொன்னார். முரளி அண்ணன் பயந்து போய் விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இது நடந்த அன்று இரவு விவேக் அண்ணன் தன்னுடைய வீட்டு பாத்ரூமில், இடது கை மணிக்கட்டில் கத்தியால் நரம்பை அறுத்து கொண்டு இறந்து கிடந்தார்…….

"மை காட், இது ஏதோ ஆங்கில பேய் படம் பார்ப்பது போல இருக்கிறதே?” என்றேன் சந்தேகக் குரலில்.

“விவேக் அண்ணனின் மரணத்திலும், விளக்க முடியாத ஒரு மர்மம் இருந்தது. இறந்து கிடந்த அவர் உடல் அருகே எந்த ஆயுதமும் கிடைக்கவில்லை. அவர் வீட்டின் கதவுகள் உள்புறமாக தாளிடப்பட்டு இருந்தன. யாருமே அத்துமீறி நுழைந்தது போல எந்தவித அடையாளமும் இல்லை. போலீஸ் இன்னமும் குழம்பிப்போய் தான் இருக்கிறது. இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் நான் வீடு திரும்பியபோது, முதலில் அமர்ந்திருந்த அதே நாற்காலியில் ஆத்மா அண்ணன் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்து மெலிதாக புன்னகைத்துவிட்டு, “ அடுத்தது முரளி தான்” என்று ஒரு வரி சொல்லிவிட்டு மறுபடியும் காற்றோடு மறைந்துவிட்டார்".

"இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு ஒருவிதமான மயக்கம் வந்து நான் சுய நினைவை இழந்துவிட்டேன். எனக்கு மறுபடியும் நினைவு வந்தபோது, என் வீட்டுக் கதவுகள் யாவும் உட்புறமாக தாழிடப்பட்டு இருந்தன. யாரும் வந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை.”

“ உங்கள் முரளி அண்ணன் வசம் இதைச் சொன்னீர்களா?”

“ உடனே சொன்னேன். அவனும் மிகுந்த குழப்பத்தில் இருந்ததால் எது உண்மை என்று அவனுக்குத் தெரியவில்லை. எனக்கு ஓரிரு வார்த்தைகள் ஆதரவு சொல்லிவிட்டு, தொலைபேசியை வைத்துவிட்டான்”

"பிறகு?”

“ இதோ உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். ஆத்மா அண்ணனால் மிச்சமிருக்கும் என்னுடைய ஒரே சகோதரனுக்கும், எனக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்றே உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்,”

சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்த நான்,

“ ஸில்வியா வாருங்கள் உங்கள் வீட்டுக்குப் போகலாம்” என்றேன்.

============================

வெளியே வந்த நான், எனக்கு முன்னால் ஸில்வியாவை அவளுடைய காரை எடுக்க நடக்க விட்டுவிட்டு,

"என்ன ஷில்பா? கொழுப்பா? ஆபிஸுக்கு யார் வந்தாலும் உடனே பாஸுக்கு போன் செஞ்சு சொல்லிடணுமா?" என்றேன் மிரட்டல் குரலில்.

"முக்கியமா, உங்களைப் பார்க்க யாராவது அழகான பொண்ணுங்க வந்தா கவனிக்கச் சொல்லியிருக்கார் பாஸ்" என்றவளைப் பார்த்து முறைத்து விட்டு,

"இதோ, ஸில்வியா வீட்டுக்குப் போயிட்டு வந்து உன்னை வச்சிக்கிறேன்" என்றேன்.

இப்போது சிணுங்குவது ஷில்பா முறை. "வஸந்த்....பாஸ் இல்லாதபோது இப்பிடிக் கெட்ட வார்த்தை பேசாதீங்க" என்றாள்.

நான் எதுவும் சொல்லும் முன், ஸில்வியா கார் ஹாரனை அடிக்கவே, நகன்றேன்.

============================

அவள் சொன்னது போலவே அவளுடைய அப்பார்ட்மெண்ட், மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பரபரப்பான, பணக்கார ஏரியாவில் இருந்தது. மிகச்சிறிய வீடாக இருந்தாலும், எல்லா வித வசதிகளும் இருந்தன என்றே சொல்ல வேண்டும்.

இதைப்போல வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்து தரும் நண்பன் பாலாஜியை அழைத்து, அந்த வீட்டின் கதவுகளுக்கு கூடுதல் தாழ்ப்பாள்களை பொருத்தச் சொன்னேன்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் எல்லாம் முடிந்து விட உள்ளே தாழிட்டுக் கொண்டு பத்திரமாக படுத்து உறங்கும் படி அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

============================

திரும்பியபோது, என்னை பார்க்கக் காத்திருந்த முரளியை கண்டு வியப்புற்றேன்.

“ உங்களுடைய புகைப்படங்களை எல்லாம் இப்போதுதான் ஸில்வியா வீட்டில் பார்த்துவிட்டு வருகிறேன்” என்றேன்.

“ உங்களைப் பற்றி ஸில்வியா என்னிடம் நேற்றுதான் சொன்னாள். சற்று உங்களிடம் பேச முடியுமா?” என்றான்

முரளி.சத்யம் தியேட்டர் அருகே உள்ள அமிதிஸ்ட் கிளப் (Amethyst Club) சென்று நாற்காலி தேடி அமரும்போது மணி இரவு ஒன்பதைத் தாண்டிவிட்டது.

“ சொல்லுங்கள்” என்றேன்.

“என் தங்கை ஸில்வியா பற்றி மிகுந்த கவலையாக இருக்கிறது. அவள் உங்களிடம் இறந்த ஆத்மாவைப் பற்றிச் சொன்னது, அவர் இரண்டு முறை ஆவியாக வந்து அவளுடைய வீட்டில் அவளிடம் பேசியது எல்லாமே அவளுக்கு ஏற்பட்டுள்ள மன வியாதியின் விளைவு என்றே கருதுகிறேன். ஆத்மா அண்ணன் இறந்தபோது நாங்கள் அனைவரும் சுவிட்சர்லாந்தில் இருந்தோம் என்பது உண்மை. அவருடன் ஸேர்மாட் சென்றபோது, எங்களுக்கு முன்னால் மகிழ்ச்சியில் கிட்டத்தட்ட சிறுவனைப் போல துள்ளிக் குதித்து சென்றவர் உண்மையிலேயே கால் தவறி பள்ளத்தாக்கில் இருந்து விழுந்து இறந்து விட்டார். அதில் நாங்கள் மூவருமே மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். இதை எங்கள் எல்லாரையும் விட வயதில் மிகவும் இளைய சில்வியாவுக்கு மிக அதிகமான அதிர்ச்சி என்றே சொல்ல வேண்டும்.ஊருக்குத் திரும்பிய பிறகு, கைதேர்ந்த சைக்கியாட்ரிஸ்ட் விஜயகுமாரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொண்டும் அவள் முழுவதுமாக குணமாகவில்லை என்றே நினைக்கிறேன்".

"அதனால் தான் அதன் பிறகு, ஆத்மா அண்ணன் இழந்த மன அழுத்தத்தினாலும், மதுவந்தி என்ற கூடா நட்பினால் ஏற்பட்ட பொருள் நஷ்டத்தினாலும் விவேக் அண்ணா இறந்தது ஸில்வியாவை மேலும் மனரீதியாக பாதித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதனால், என்னென்னவோ செய்துகொண்டு, உங்களைப்போல யார் யாரையோ சந்தித்து, தேவையில்லாத விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறாள்…”

முடிக்கும் முன் நான் குறிப்பிட்டேன்,

“மறுபடியும் அதே சைக்கியாட்ரிஸ்ட்டிடம் செல்லக்கூடாதா?"

"இல்லை எவ்வளவோ கூப்பிட்டு பார்த்தும் அவள் வர மறுத்து விட்டாள். அதுமட்டுமில்லாமல் அவர் கொடுத்த மருந்துகளை அவள் தொடர்ந்து சாப்பிட்டாளா என்பதும் பெரிய கேள்விக்குறிதான்"

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால், உங்கள் தங்கை ஸில்வியா ஏராளமான விஷயங்களைக் கற்பனை செய்து கொண்டு, மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார் என்றே தோன்றுகிறது."

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து நான் கிளம்பிவிட்டேன்.

============================

நள்ளிரவில், ஸில்வியா விடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்தபோது, அதிக அலட்டல் இல்லாமல் ”என்ன வேண்டும்?" என்றேன்.

மிகுந்த பதைபதைப்புடன், “ வஸந்த், நீங்கள் உடனே என் வீட்டுக்கு வர முடியுமா? ஆத்மா அண்ணன் மறுபடியும் இங்கே வந்து என்னை கொல்வதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்” என்றாள் குரலில் மிகுந்த பயத்துடன்.

போலீஸ் உதவியோடு ஸில்வியாவின் வீட்டை அடைந்தபோது கதவு உள்ளே தாழிட்டு இருந்தது.

“ஸில்வியா கதவைத் திற, போலீஸுடன் வஸந்த் வந்திருக்கிறேன்” என்றேன்.

உள்ளே இருந்து அவள் குரல் மிகுந்த பயத்துடன் ஒலித்தது,” வஸந்த், அவசரப்பட்டு எதுவும் செய்து விடாதீர்கள். என் அண்ணன் ஆத்மா என் கழுத்தில் ஒரு கத்தியை வைத்துக் கொண்டு என்னை கொன்று விடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்….”

அவள் முடிக்கும் முன் ஒரு கனமான ஆண் குரல்,

“யாராக இருந்தாலும் சரி, உள்ளே வர முயற்ச்சித்தால் இவள் செத்து விடுவாள்” என்றது.

தாமதம் ஏதுமின்றி கதவை உடைத்துக்கொண்டு போலீஸ் உதவியுடன் உள்ளே சென்றபோது, கீழே கிடந்த ஸில்வியா, கழுத்தில் பெரிய வெட்டுடன், ஏராளமான ரத்தம் வெளியேற துடித்துக் கொண்டிருக்க, அருகே ரத்தத்துடன் ஒரு பெரிய கத்தி கிடந்தது.

அவளைத் தவிர வீட்டில் யாருமே இல்லை

.======================
 

R.Nivetha

Member
Messages
47
Reaction score
35
Points
18
apo unmailaye athu murder thaanava:rolleyes:kolai pannunathu aavi thaanava:rolleyes:murali sonnathu poi aah🤔
 

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
தயவு செய்து குழப்பிக்கொள்ள வேண்டாம். தெளிவான கதைதான். சற்று நிதானமாகப் படித்தால் நடந்தது எதுவும் கொலை அல்ல என்பதும் , முரளி எதுவும் பொய் சொல்லவில்லை என்பதும் புரியும். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள உங்கள் தமிழைப் படித்தால் சிரிப்பு வருகிறது . - ஆவி தானாவா? - மர்டர் தானாவா? - எந்த ஊர் தமிழ் இது? 😀
 

R.Nivetha

Member
Messages
47
Reaction score
35
Points
18
தயவு செய்து குழப்பிக்கொள்ள வேண்டாம். தெளிவான கதைதான். சற்று நிதானமாகப் படித்தால் நடந்தது எதுவும் கொலை அல்ல என்பதும் , முரளி எதுவும் பொய் சொல்லவில்லை என்பதும் புரியும். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள உங்கள் தமிழைப் படித்தால் சிரிப்பு வருகிறது . - ஆவி தானாவா? - மர்டர் தானாவா? - எந்த ஊர் தமிழ் இது? 😀
🙈 மன்னிக்கவும்🙏
 
Top Bottom