Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம்,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

நன்றி
- நித்யா கார்த்திகன்

 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை.

அத்தியாயம் - 1

அவன் ஒரு கொலை செய்வதற்காக இரவின் இருளில் காத்திருந்தான். அது ஒரு நெடுஞ்சாலை.சாலையோர மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்கள் நிறமிழந்து வாடிப்போய் கிடந்தன. அவற்றின் மீது கால் வைத்து அவன் நடந்து கொண்டிருந்தான். தூரத்து வானில் பெளர்ணமி நிலா யாரும் பார்க்காமல் காய்ந்து கொண்டிருந்தது. தெருவோர விளக்கு ஒன்று விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதன் மின்னல் வெட்டு வெளிச்சத்தில் அவன் ஜெர்கினும் காட்டன் பேண்டும் அணிந்திருப்பது தெரிந்தது. தூரத்தில் தெரிந்தஓன்றிரண்டு வீடுகளில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. எங்கோ ஒரு நாய் தனியாக ஊளையிட்டு கொண்டிருந்தது.

அவன் நிலை கொள்ளாமல் தவித்து கொண்டிருந்தான். முன்னும் பின்னுமாக பூக்களின் மேல் நடக்கத் துவங்கியவன் படபடப்பாக இருந்தான். கையில் கட்டியிருந்த வாட்சை நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்து கொண்டிருந்தான்.அவனது அவசரம் புரியாமல் சின்னமுள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அவன் எதிர்பார்த்திருந்த ஆள் வரக்கூடிய நேரம் நெருங்கி கொண்டிருந்தது. அவன் அவசர அவசரமாக பேண்ட் பாக்கெட்டில் இருந்து கையுறைகளை எடுத்து சாவகாசமாக அணிந்து கொண்டான்.
பேண்டின் பின்புறத்தில் சொருகி வைத்திருந்த அந்த வினோத வடிவமைப்பு கொண்ட கத்தியை உருவிக்கொண்டான். அந்த கத்தி நடுவில் ஓட்டைகளோடு துணியில் ரம்ப பற்களோடு இருந்தது. அது அவனே உருவாக்கியகத்தி. கடைகளில் அந்த மாதிரியான கத்தியை நீங்கள் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.

தன்னுடைய பழி தீர்க்கும் வைபவத்திற்காக அவனே பிரத்யேகமாக உருவாக்கிய அந்த கத்தி நிலவின் ஓளியில் பளபளத்தது. அந்த கத்தியை லாவகமாக ஒரு சுற்று சுற்றியவன் அதை காற்றில் ஒரு வீசுவிசினான். கத்தியின் கூர்முனை பட்டு அருகிலிருந்த செடியின் இலை ஒன்று துண்டிக்கப்பட்டு காற்றில் மிதந்துதரையிறங்கியது. அவன் திருப்தியுடன் தலையசைத்து சிரித்து கொண்டான். மீண்டும் கடிகாரத்தை பார்த்தவனின் முகத்தில் பரபரப்பு கூடியது. அவன் வரும் நேரம் நெருங்கி விட்டது. அவன் ஜெர் கினுக்குள் கத்தியை பதுக்கினான்

சாலையின் வளைவை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். அவனது பிடறியில் ஒரு வேர்வை கோடு இறங்க ஆரம்பித்தது. அவனது இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. பெருமூச்சு விட்டு அவன் மூச்சை ஸ்திரப்படுத்தி கொண்டான். சாலையின் வளைவில் வெளிச்சப்புள்ளிகள் இரண்டு தோன்றின. அவை காரின் ஹேட்லைட்டுகள் அவனது கண்கள் கூர்மையாகின. ஹேட்லைட் வெளிச்சத்திற்கு கீழே இருந்த நெம்பர் பிளேட்டை பார்த்தவன் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள். அவன் எதிர்பார்த்த வண்டி இதுதான். வளை விற்கு பிறகு இரண்டாம் கியரிலிருந்து மூன்றாம் கியருக்கு மாறிவண்டி வேகம் பிடித்தது.

அவன் நடுச்சாலைக்கு வந்தான். தனது வலது கையின் கட்டை விரலை தலைகீழாக காட்டினான். வேகம் பிடித்த கார் பிரேக்கடித்து தன் வேகத்தை குறைத்தது. காரை ஓட்டி வந்தவனுக்கு எரிச்சல் மண்டியது. இதுவரை சாலை ஓரத்தில் லிப்ட் கேட்பவர்களை அவன் பார்த்திருக்கிறான். யார் இவன்? நடுரோட்டில் நின்று லிப்ட் கேட்கிறான். அவன் கோபத்தோடு வண்டியை நிறுத்தினான்.

ஹேட்லைட் வெளிச்சத்தில் நடுரோட்டில் நின்றவன் தன் முகத்தை மறைத்திருந்த இடது கையை எடுத்தான்.
காரை நிறுத்தி கோபத்துடன் இறங்கியவன் அவனது முகத்தை பார்த்ததும் ஆச்சர்யத்துடன் "நீங்களா? இங்கே எங்கே வந்தீர்கள்?" என்றான்.

நடுச்சாலையில் நின்றவன் காரை நெருங்கினான். "உன்னை பார்க்கத்தான் இவ்வளவு நேரமாக காத்திருக்கிறேன்"

" போன் செய்திருந்தால் நானே உங்களை பார்க்க வந்திருப்பேனே? என்னை எதற்காக சந்திக்க நினைத்தீர்கள்?"

"உன்னை கர்த்தரிடம் அனுப்ப."

" என்ன சொல்கிறிர்கள்?"

அவன் மின்னல் வேகத்தில் ஜெர்கினில் இருந்த கத்தியை உருவினான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் என்ன நடக்கிறதென்று சுதாரிக்கும் முன்பாக அவன் நெஞ்சில் சரமாரியாக குத்தினான். அவன் அலற முயன்ற போது கத்தி அவனது குரல்வளையை அறுத்தது. அவனது துடிப்பு அடங்கும் வரை நிதானமாக பார்த்து கொண்டிருந்தவன் அவனது மூச்சு நின்று விட்டதை உறுதி செய்தவனாக அவனது வலது கையில் கத்தியால் ஒரு வட்டத்தை போட்டான். அதனுள் 4 / 10என்று எழுதினான். பிறகு தன் நெற்றியில் சிலுவை குறியை போட்டு கொண்டு கத்தியோடு இருளில் மறைந்தான்.

அவன் உறுதியாக காரில் இறந்து போயிருந்தான்.​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 2


தன் செல்போனில் பப்ஜி விளையாடி கொண்டிருந்தான் வினோத். தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்த அருண் ஹால் சோபாவில் விளையாட்டில் மூழ்கியிருந்த வினோத்தை பார்த்தான்.

"முன்பெல்லாம் வேலை இல்லையென்றால் ஈஓட்டுவார்கள். இப்போது ஈ ஓட்டுவதற்கு பதிலாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்."

"எந்த கேசும் கையில் இல்லை. வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் பாஸ்.?"

"உன்னை கேம் விளையாடுமளவிற்கு ப்ரீயாக விட்டது என்னுடைய தப்பு.அலாவுதீன் பூதம் மாதிரி உனக்கும் ஏதாவது ஒரு வேலையை கொடுத்து கொண்டே இருக்கனும் போல."

"வேலை ஏதாவது இருந்தால் கொடுங்கள் பாஸ்சும்மா இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது."

"என்னடா!வடிவேல் மாதிரி பேசிக் கொண்டு இருக்கிறாய்?" என்ற போது கதவு தட்டப்பட்டது

அருண் "கிளைண்ட்" என்றவன் "நீ போய் கம்யூட்டர் முன்னால் உட்கார்ந்து இதே வேலையை செய்"

"பிசியாக இருப்பது போல் நடிக்க சொல்கிறீர்கள். புரிகிறது."

"அதே " என்ற அருண் "எஸ் கமின் " என்றான் கதவை பார்த்து.

கதவை திறந்து உள்ளே நுழைந்தவர் ரகுவரனின் உயரத்தில் இருந்தார்.. கண்ணில் உயர்தரமான கூலிங் கிளாசும் உதட்டில் ஒரு பைப்பும் தொங்கியது. எதிரே நின்ற அருணை பார்த்தவர் "ஐ ஆம் பிரான்சிஸ் அன்பரசு " என்று கையை நீட்டினார். அவரை சுற்றி ஒரு வினோத வாசனை சுற்றி சுழன்றது.

நீட்டிய கையை பற்றி குலுக்கிய அருண் "பிளீஸ். உட்காருங்கள்" என்றான்

அன்பரசு சோபாவில் புதைந்தார். தன் கையில் இருந்த ஸ்டிக்கை சோபாவின் ஓரத்தில் வைத்தவர் " சம்பிரதாயமான பேச்சுகள் வேண்டாம் மிஸ்டர் அருண்.நான் ஒரு பிஸ்னஸ்மேன்.என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை"

"அப்படியானால் நேரடியாக விசயத்திற்கு வந்து விடுங்கள்" என்றான் அருண் அவர் கூலிங் கிளாசை நேராக பார்த்தபடி.

" என் தம்பி சாமுவேல் ரத்னகுமாரை நேற்று இரவு யாரோ கொன்று விட்டார்கள். அந்த விலைமகள் மகனை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். இது பிளாங்க் செக். எவ்வளவு வேண்டுமோ அதை நிரப்பி கொள்ளுங்கள்" என்ற அன்பரசு கோட் பாக்கெட்டி லிருந்து ஒரு பிளாங்க் செக்கை நீட்டினார்.

அதை வாங்காமல் நின்ற அருண் "நீங்கள் முழு விவரத்தையும் சொல்லவில்லையே?" என்றான்.

செக்கை டீப்பாயின் மேல் வைத்த அன்பரசு தன் போனை எடுத்து யாரையோ அழைத்தார்.

"ரஞ்சன். நீ சொல்லித்தான் நான் இங்கு வந்தேன். நீயே பேசு." என்றபடி போனை அருணிடம் நீட்டினார்.

"ஹலோ" என்றான் அருண்.

"நான் கமிசனர் ரஞ்சன். நான் தான் உங்களைரெக் கமண்ட் செய்தேன். இந்த கேசை எடுத்து கொள்ளுங்கள். எல்லா விவரங்களையும், உதவிகளையும் நான் செய்கிறேன்"

"ஒகே சார். நான் உங்களை அலுவலகத்தில் வந்து சந்திக்கிறேன்." என்று போனை அன்பரசுவிடம் நீட்டினான்.

"அப்புறம் பேசுகிறேன்" என்று போனை அணைத்த அன்பரசு" என்பால்ய சினேகிதன் எனக்காக எதை வேண்டுமானாலும் செய்வான்"என்று புன்னகைத்தார்.

"ஓகே.இதை நான் எடுத்து கொள்கிறேன்" என்று செக்கை எடுத்து கொண்டான் அருண்.

"குட். பாருங்க அருண். அவன் எனக்கு உயிரோடு வேண்டும். நான் பாரின் டிரிப் போகிறேன். திரும்பி வர இரண்டு மூன்று வாரங்கள் ஆகும். அதற்குள் அந்த வேசி மகனை கண்டு பிடித்து விடுங்கள்"

"வீ டூ இட் சார்"

"இதோ என்னுடைய விசிட்டிங் கார்டு. ஏதேனும் அவசரம் என்றால் இதில் உள்ள எண்களுக்கு அழையுங்கள். எந்த எண்ணில் அழைத்தாலும் சிறிது நேரத்தில் நான் லைனில் வந்து விடுவேன்."

"உங்கள் தம்பியை பற்றி எதுவும் சொல்லவில்லையே?"

"அவனை பற்றி என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. எல்லா பணக்கார குடும்பங்களிலும் குடும்ப பெயரை கெடுக்கவென்றே சிலர் பிறப்பார்கள் அல்லவா? என் தம்பியும் அந்த தத்தாரிகளில் ஓருவன். என்னுடைய பணத்தையும், செல்வாக்கையும் நான் அதிகமாக அவனுக்காகத் தான் பயன்படுத்தியிருக்கிறேன். அந்த இடங்கள் போலீஸ் ஸ்டேசனாக சில நேரம் கோர்டாக கூட இருந்திருக்கிறது. இதிலிருந்து அவனது கேரக்டரை முடிவு செய்து கொள்ளுங்கள்."

" உங்களைப்போல் மாட்டி கொள்ளாமல் தவறு செய்ய உங்கள் தம்பிக்கு தெரியவில்லை போலும். இதை சொன்னதற்காக என்னை மன்னித்து விடுங்கள்"

"லீவ் இட். நீ சொன்னதில் உண்மை இருக்கிறது. நான் அதை ஆமோதிக்கிறேன். மாட்டி கொள்ளாத குற்றவாளிகள் நிறையவே வெளியே இருக்கிறார்கள்."

" ரத்னகுமாருக்கு மனைவி, குழந்தைகள் யாராவது?"

"மனைவி இல்லை. குழந்தைகள் இருக்கிறார்களா என்று எனக்கு தெரியாது"

"அப்படி யாராவது வாரிசு இருந்தால் நீங்கள் பங்கு கொடுக்க வேண்டியதாயிருக்கும் "

" என் தம்பி அந்த விசயத்தில் அலட்சியமாக இருந்திருக்க மாட்டான். பாதுகாப்பு சாதனங்கள் நிறையவே பத்து ரூபாய்க்கு மூன்று என்று மெடிக்கல் ஷாப்களில் விற்கின்றன"

"உங்கள் தம்பியிடம் ஏதாவது இரவு நேரத்தில் அந்த பத்து ரூபாய் கூட இல்லாமல் இருந்திருக்கலாம்."

பிரான்சிஸ் அன்பரசு மெலிதாக சிரித்தார்.

"சொத்துக்காக என் தம்பியை நானே ஆள் வைத்து கொன்று விட்டேன் என்று நினைக்கிறீர்களா? எனக்கு பேஸ் ரீடிங் அதிகமாகவே தெரியும் " என்றவர் கூலிங் கிளாசை கழற்றி அருணை கண்ணுக்குள் பார்த்தார். அந்த தீர்க்கமான பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அருண் தலை குனிந்தான்.

"சேச்சே'நான் அப்படி நினைக்கவில்லை"

" உன் டவுட் எனக்கு பிடித்திருக்கிறது. நான் சரியான ஆளிடம் தான் வந்திருக்கிறேன். என்னையே நீ சந்தேகப்பட்டு விட்டாய். உன்னால் அந்த கொலைகாரனை கண்டுபிடித்து விட முடியும் என்று நம்புகிறேன். நான் வருகிறேன்"

பிரான்சிஸ் அன்பரசு அங்கிருந்து போன பின்பும் அவர் மீதான பர்ப்யூம் வாசனை போகாமல் அறையை சுற்றி சுற்றி வந்தது.

"பார்ட்டி பசையுள்ள பார்ட்டி போல் தெரிகிறது" என்றான் வினோத்.

" மேலிடத் தொடர்புக்கும் பஞ்சமில்லை. நினைத்ததை சாதித்து விடுவான் போல் தெரிகிறது.

"செல்வம் உள்ள இடத்தில் குற்றமும் இருக்கும் "

"அந்தரத்னகுமார் யாருகிட்ட என்ன செய்து தொலைத்தானோ தெரியவில்லை. வாழ்க்கையை வாழாமல் போய் சேர்ந்து விட்டான்."

"சாமுவேல் ரத்னகுமார். பிரான்சிஸ் அன்பரசு.வித்தியாசமாக இருக்கிறது பெயர் .ஒரு வெளிநாட்டு பெயரும் தமிழ் பெயரும் சேர்ந்திருப்பது கொஞ்சம் வினோதமாக இருக்கிறது."

"பிரான்சிஸ் அன்பரசு.அபூர்வ சகோதரர்கள் படத்தில் டெல்லி கணே சோட பெயர். "

"அது வில்லன் கேரக்டர் இல்லையா?"

அதே நேரம் அருணின் போனில் மெசேஜ் மணி அடித்தது.

கமிசனர் ரஞ்சித் டெக்ஸ்ட் செய்திருந்தார்.

"இதற்கு அர்த்தம் தெரியுமா அருண் ?" என்றன வார்த்தைகள். அருண் பார்த்ததும் இரண்டு ப்ளூ கோடுகள் நிறம் மாறின.

கீழிருந்த மங்கலான புகைப்படத்தில் பச்சை நிறம் சுற்றி வந்து தெளிவானது. அது சாமுவேல் ரத்னகுமாரின் கை. அதை ஜூம் செய்தான் அருண்.ரத்த கோடுகளாய் பொறுக்கு தட்டி போயிருந்த அந்த எண்கள் கண்ணுக்கு தட்டுப் பட்டன.

4/10

என்றது டிஸ்ப்ளே.அருண் அது என்னவாக இருக்கும் என்று மண்டையை பிய்த்து கொள்ள ஆரம்பித்தான்.​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 3

அருணும் வினோத்தும் கமிசனர் ரஞ்சனின் அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்த போது அவர் கைகளை பின்னால் கட்டி கொண்டு சன்னல் வழியாக எதையோ வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அருண் அவரது கவனத்தை கலைக்க மெலிதாக இருமினான்.

கவனம் கலைந்து திரும்பி பார்த்த ரஞ்சன் "உட்காருங்கள்" என்று காலியான இருக்கைகளை காட்டினார். இருவரும் உட்கார்ந்தபின்பு சேரில் உட்கார்ந்தரஞ்சன் "அந்த போட்டோவை பார்த்தீர்களா?" என்றார்.

"பார்த்தோம். அந்த 4/10 ஐவகுத்தால் இன்பினிட்டியாக விடை வந்து கொண்டே இருக்கிறது. அதனுடைய உண்மையான அர்த்தம் என்னவென்று எங்களுக்கு விளங்கவில்லை. உங்களுக்கு அதைப் பற்றி ஏதாவது ஐடியா இருக்கிறதா?"

"நத்திங் . பாருங்கள் அருண்.இங்கே எனக்கு வேலை பளு அதிகம். அதனால் என்னால் இதில் இறங்க முடியவில்லை. அந்த அன்பரசுவின் அப்பா தான் என்னை படிக்க வைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்தவர். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது மகனுக்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும். அதனால் தான் உங்களை சிபாரிசு செய்தேன். நீங்கள் பரிபூரண சுதந்திரத்தோடு இந்த வேலையில் இறங்கலாம் பணத்தை பற்றி கவலைப்படாதீர்கள்."

"நாங்கள் குற்றவாளியை கண்டு பிடித்ததும்?"

"அதை அப்படியே மறந்து விட்டு இயல்பு வாழ்க்கைக்கு போய் விடுங்கள். அவனை என்ன செய்வதென்று அன்பரசு முடிவு செய்து கொள்வான்."

"அப்படியானால் அவனை நீங்கள் சட்டப்படி தண்டிக்க போவதில்லையா?"

"பிரான்சிஸ் அன்பரசு எப்போதும் சட்டத்தை நம்புவதில்லை. சட்டத்தை விட தன் பணம் சக்தி வாய்ந்தது என்பது அவன் நம்பிக்கை. அவனது தம்பி சாமுவேல் ரத்னகுமாரை காப்பாற்ற நீதிபதியின் மகளையே கடத்தி தீர்ப்பை மாற்றி எழுதச் செய்தவன் அவன்."

"நீங்களும் இதற்கு துணை போகிறீர்களா?"

"வேறு வழியில்லை அருண்.அன்பரசுவின் கைகள் வெகு நீளமானவை. அவற்றிலிருந்து தப்பிப்பது கடினம். அவன் தம்பியை கொலை செய்தது அவனது ஈகோவிற்கு விடப்பட்ட சவாலாக அவன் நினைக்கிறான். அதனால் அந்த கொலைகாரனை தன் கையாலேயே கொல்ல நினைக்கிறான். அவன் தனது வெளிநாட்டு டிரிப்பை முடித்துவிட்டு திரும்ப வரும் போது ஆசாமி அவன் கண் எதிரே இருக்க வேண்டும்"

" ரத்னகுமாரை பற்றி உங்களிடம் ஏதாவது தகவல் இருக்கிறதா? இல்லை நாங்கள் வெளியில் தான் விசாரிக்க வேண்டுமா?"

"இந்த பைலில் நாங்கள் சேகரித்த விசயங்கள் இருக்கிறது. இதற்கு மேலும் விவரங்கள் வேண்டுமென்றால் நீங்கள் வெளியே தான் விசாரிக்க வேண்டும். " என்ற ரஞ்சன் தன் டேபிள் டிராயரை திறந்து ஒரு பைலை எடுத்து மேஜையில் வைத்தார்.

"போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் "

" அதன் உள்ளேயே இருக்கிறது. அவனை கொல்ல பயன்படுத்திய ஆயுதம் வழக்கமான ஆயுதங்களுடன் ஓத்து போகவில்லை என்கிறது அறிக்கை."

"அப்படியானால் அந்த ஆயுதம் கொலைகாரன் இதற்கென்றே உருவாக்கியது தான் "

"அப்படித்தான் இருக்க வேண்டும். நெஞ்சின் தசைகள் ரம்பத்தால் அறுக்கப்பட்டிருப்பது போல் இருக்கிறது."

" ரத்னகுமார் எதற்காக அந்த சாலையில் காரை நிறுத்த வேண்டும்? அவர் அந்த டைமில்தான் வீட்டுக்குவருவார் என்று கொலைகாரனுக்கு எப்படி தெரிந்திருக்கும்?"

"கொலைகாரன் அவரை பின்தொடர்ந்து கண்காணித்திருக்கலாம். இல்லை ரத்னகுமாரின் பழக்க வழக்கங்கள் நன்றாக தெரிந்த நபராக கொலைகாரன்இருக்க வேண்டும்"

"இந்த இரண்டில் ஓன்றாகத்தான் இருக்க வேண்டும்"

"பெண் தொடர்புகள் ஏதாவது?"

"இருந்திருக்கலாம். விசாரித்தால் தெரியும் "

" ரத்னகுமாரின் பிஸ்னஸ் , வீட்டு அட்ரஸ்?"

" எல்லாமே பைலில் இருக்கிறது. நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம்."

அருண் சிறிது நேரம் யோசித்து கொண்டிருந்தான்.

" என்ன யோசனை அருண் ?"

"இது முன்விரோதத்திலோ, பெண் விவகாரத்திலோ நடந்த கொலை போல் தெரியவில்லை."

" என்ன சொல்கிறாய் அருண் ? "

" ரத்னகுமாரின் கையில் இருக்கும் அந்த தசம பின்ன எண்கள் வேறு சேதி சொல்கின்றன."

" என்ன நினைக்கிறாய் நீ?"

"இது ஒரு சைக்கோபாத் கில்லரின் வேலை என்று நினைக்கிறேன். அவர்கள் தான் தங்களுக்கென்று குறிப்பிட்ட பேட்டர்ன் வைத்து கொண்டு அதன் படி கொலை செய்வார்கள். இது ஆரம்பம் தான். இனியும் இதே மாதிரி எண்கள் எழுதிய கொலைகள் தொடர்ந்து நடக்கும் என்பது என்னுடைய யூகம்."

கமிசனர் ரஞ்சன் திடுக்கிடலோடு நிமிர்ந்து உட்கார்ந்தார்.

" என்ன சொல்கிறாய் அருண் ?"

" என் மனதிற்கு அப்படித்தான் தோன்றுகிறது" என்றான் அருண்.

அதே நேரம் பாழடைந்த லேத் பட்டரை ஒன்றில் அவன் தன் வினோத ஆயுதத்தை கூர் தீட்ட தொடங்கியிருந்தான்​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 4


மறுநாள் மாலை அருணும் வினோத்தும் சாமுவேல் ரத்னகுமாரை பற்றிய விசாரணைகளை முடித்துவிட்டு அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். அருண் மேஜையின் மேல் அலங்காரத்திற்காக வைத்திருந்த பேப்பர் வெயிட்டை கையில் உருட்டி கொண்டிருந்தான்.

"முதலில் நீ போய் வந்த விசயத்தை சொல் வினோத் " என்றான் அருண்.

"நான் முதலில் அவனது ஸ்பின்னிங் மில்லிற்கு போனேன் பாஸ். அங்கே ரத்னகுமாரை நல்லவிதமாகத்தான் சொல்கிறார்கள். மற்ற எல்லா ஸ்பின்னிங் மில்களிலும் ஞாயிற்று கிழமை விடுமுறை என்றாலும் கூட நம் ரத்னகுமார் தன் மில்லிற்கு விடுமுறை விட்டதில்லை. எப்போதும் அடையா நெடுங் கதவாக இருக்கிறது அவனது மில்லின் கதவு."

"ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்ய தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொள்ளதே?"

"அதையும் விசாரித்தேன். ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்தால் டபுள் சம்பளம் தருவதாக ரத்னகுமார் அவர்களிடம் ஆசை வார்த்தை கூறியிருக்கிறான். அதனால் அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆனால் தொழிலாளிகளிடம் கொஞ்சம் அதிருப்தி இருக்கிறது."

" என்னவென்று ?"

"ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள். அன்றும் வந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறதே என்று தான் "

"அதுவும் சரிதானே? அன்று தானே மனைவி குழந்தைகளுடன் ஓய்வாக இருக்க முடியும்?"

"அதனால் ஞாயிற்றுகிழமை வேலை செய்ய விரும்பாதவர்கள் விடுமுறை எடுத்து கொள்கிறார்கள். பணம் வேண்டும் என்பவர்கள் வேலைக்கு வருகிறார்கள். ரத்னகுமார் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து கொள்வதில்லையாம்."

"வேறு ஏதாவது தெரிந்ததா?"

" ரத்னகுமாருக்கும் அன்பரசு விற்கும் அவர்களின் அப்பா சொத்துகளை சரிசமமாக பிரித்து கொடுத்தாராம். ரத்னகுமார் சூதாட்டம், குடி, பெண்கள் என்று எல்லாவற்றையும் தொலைத்து விட்டாராம். அப்போது தன்னை ஏமாற்றிய ஓருவனை கொலை செய்து விட்டதாக கேள்வி.அண்ணன் அன்பரசுதான் இதில் தலையிட்டு ரத்னகுமாரை காப்பாற்றினாராம்.இந்த ஸ்பின்னிங் மில் கூட அன்பரசு வைத்து கொடுத்ததுதானாம்."

"அப்படியானால் ரத்னகுமாருக்கு என்று தனியாக சொத்துக்கள் எதுவும் இல்லை. அன்பரசுவின் தயவில் தான் அவன் வாழ்ந்திருக்கிறான்."

"ஆமாம். சொத்து விவகாரத்தில் அன்பரசு தன் தம்பி ரத்னகுமாரை தீர்த்து கட்ட முகாந்திரமில்லை. ஸ்பின்னிங் மில்லை பார்த்து கொள்ளும் மேனேஜர் போன்ற வேலையில் தான் ரத்னகுமார் இருந்திருக்கிறான். வெளியே தான் முதலாளி . இப்போது ரத்னகுமாரின் இறப்பு அன்பரசு விற்கு தொல்லை தான்."

" ரத்னகுமார் கொன்ற அந்த ஆசாமியை பற்றி அவனது குடும்பத்தை பற்றி?"

"விசாரித்து விட்டேன். அவன் ஒரு வட மாநில தொழிலாளி. அவனது இறப்புக்கு பிறகு அவனது குடும்பம் சொந்த ஊருக்கே திரும்ப போய்விட்டது. நீங்கள் போன விசயம் என்னவானது?"

"நான் ரத்னகுமாரின் வீட்டிற்கு சென்றேன். அங்கே எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. நிறைய மது பாட்டில்களும் பெண்கள் மறந்துவிட்டு சென்ற ஸ்டிக்கர் பொட்டுக்களும் கண்ணாடியில் கிடைத்தன. அவை சொல்லும் விசயங்கள் வேறு."

"தன்னுடைய சுகத்திற்காக ஏராளமான பணத்தை அள்ளி இறைப்பவன் போல் தோன்றுகிறது."

"தன் தம்பி இறந்த மறுநாளே எவனாவது பாரின் டிரிப்புக்கு கிளம்பி போவானா? அவனது மனநிலையை என்னால் யூகிக்க முடியவில்லை."

"தன் தம்பி சட்டென்று இறந்து போனதை அவனால் நம்ப முடியவில்லை என்று நினைக்கிறேன். அதனால் இறுதி சடங்கை அன்பரசு தவிர்த்துவிட்டது போல் தெரிகிறது. தன் தம்பி இன்னும் உயிரோடு இருப்பதாக அவன் நம்பநினைக்கிறான்."

"நான் ஒரு விசயத்தை சொல்ல மறந்து விட்டேன்.ரத்னகுமாரின் மில்லில் வேலை செய்பவர்களில் சரிபாதி பேர் கிறிஸ்தவர்கள்."

" என்ன சொல்கிறாய் நீ ?"

" உண்மை தான் பாஸ்.வருகை பதிவேட்டை பார்த்த போது கிடைத்த விசயம் இது .அதில் நிறைய கிறிஸ்தவ பெயர்களை நான் பார்த்தேன்.நம்புங்கள்"

"அப்படியானால் அவர்கள் ஞாயிற்றுகிழமை கண்டிப்பாக சர்ச்சிற்கு போயாக வேண்டுமே? அவர்கள் ஞாயிற்றுகிழமை வேலை செய்ய மாட்டார்களே? கடவுளின் ஓய்வு நாளில் வேலை செய்யக்கூடாது என்று அவர்களின் மதம் கூறுகிறதே?"

"ஆமாம் பாஸ். அவர்களுக்கு முதலில் விடுமுறை தர மறுத்து விட்டானாம் ரத்னகுமார். அவர்கள் அத்தனை பேரும் பாதர் அடைக்கலராஜிடம் மொத்தமாக சென்று முறையிட்டார்களாம். அவர் தலையிட்ட பின்புதான்அவர்களாகவே ஞாயிற்றுகிழமைவிடுமுறை எடுத்து கொண்டு விடுகிறார்கள். அந்த விசயத்தில் ரத்னகுமார் அதன் பிறகு தலையிடுவதில்லையாம். இதனால் பாதர் அடைக்கலராஜிற்கு ரத்னகுமாரின் மீது வருத்தமாம்."

" ஆனால் அவரால் வெளிப்படையாக ரத்னகுமாரை பகைத்து கொள்ள முடியாது."

"ஆமாம். அவன் தரும் தசமபாக பணம் பெரிதல்லவா?"

"கல்லறைதோட்டத்தில் தூங்கும் ரத்னகுமாரினால் இவருக்கு இழப்பு தான் "

" எல்லா வழிகளும் அடைபடுகின்றன. ரத்னகுமாரை யார் எதற்காக கொன்றிருப்பார்கள்? அவன் கையில் எழுதப்பட்ட எண்ணிற்கு என்ன அர்த்தம்?"

"இந்த கேஸ் ரொம்ப கஷ்டமாக இருக்க போகிறது."

வெளியே சூரியன் மறைந்து கொண்டிருந்தது.

அவன் இரவின் இருளில் கத்தியை பாண்ட் பாக்கெட்டில் சொருகி கொண்டு தன் இரைக்காக காத்து கொண்டிருந்தான். இரண்டாவது வேட்டை தொடங்கியது.


 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 5


மறுநாள் காலையில் அருண் பாத்ரூமில் துண்டுடன் "ஊலல்லா" என்று பாடிக் கொண்டு இருந்த போது அவனது செல்போன் அடித்தது.

"எஸ்" என்றான் பாட்டை நிறுத்திவிட்டு ஓடி வந்து போனை எடுத்த அருண்

"நான் போலீஸ் கமிசனர் ரஞ்சன் பேசுகிறேன். ஒரு பேட் நியூஸ்"

"சொல்லுங்கள் சார். காலையில் இவ்வளவு நேரத்தில் போன் செய்திருக்கிறீர்கள் என்றால் ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்"

" யுவர் ரைட் மிஸ்டர் அருண். அந்த நெம்பர் கொலைகாரன் நேற்று இரவு மீண்டும் ஓரு கொலையை செய்திருக்கிறான்."

"இஸ் இட். இதை நான் எதிர்பார்க்கவில்லை."

"நேற்று தான் நீங்கள் கொலைகாரன் ஒரு சைக்கோபாத் மீண்டும் தொடர்ந்து கொலைகளை செய்வான் என்று கூறினீர்கள். அது அப்படியே நடந்து கொண்டிருக்கிறது. இப்போது என்னவென்றால் இதை நான் எதிர்பார்க்கவில்லை என்று சொல்கிறீர்களே?"

"கொலை செய்வான் என்று நான் நினைத்தது உண்மைதான். ஆனால் இவ்வளவு அவசரமாக சீக்கிரமாக அடுத்த கொலையை செய்வான் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை."

"ஓகே. இந்த முறை அவன் கொன்றது ஓரு பெண்ணை . கையில் 5/10 என்ற எண் கத்தியால் எழுதப்பட்டிருக்கிறது. மற்றபடி வழக்கமான முறையில் தான் கொலை செய்திருக்கிறான். நீங்கள் இருவரும் உடனே புறப்பட்டு வாருங்கள்."

"எந்த இடம் சார்"

"மாணிக்கம்பாளையம் "

"கிளம்பி விட்டேன் சார்" என்று போனை வைத்த அருண் அருகே படுக்கையில்புரண்டு கொண்டிருந்த வினோத்தை எட்டி உதைத் தான்.

"என்னாச்சு பாஸ்?" என்றான் வினோத்.

"உனக்கு பெண் பார்க்க போகிறோம். சடுதியில் தயாராகு பார்க்கலாம்" என்றான் அருண் முகத்தை சோப் போட்டு கழவியபடி.

"நிஜமாகவா?போன் செய்தது புரோக்கரா?"

"ஆமாம். ஒன்பது மணிக்குள் பெண் வீட்டில் இருக்க வேண்டுமாம். உன்னை விட நான் நன்றாக இருந்தால் பெண் என்னை பிடித்து விட்டதாக சொல்லிவிடக் கூடாதல்லவா? அதனால் தான் நான் குளிக்காமல் முகத்தை மட்டும் சோப் போட்டு கழுவியிருக்கிறேன். சீக்கிரம் ரெடியாகு பார்க்கலாம்."

" வாழ்க நீ எம்மான். பத்து நிமிடங்கள் போதும் எனக்கு. எப்படி வருகிறேன் என்று பாருங்கள்" என்ற வினோத் ஜட்டியுடன் பாத்ரூமிற்குள் பாய்ந்தான்.

பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு ரேபான் கிளாசுடன் அட்டகாசமான உடையில் தயாராகி நின்றான் வினோத். அவன் மீது பாடிஸ்பிரே வாசம் அடித்தது.

"போலாமா பாஸ்? என் மீது பொறமை இல்லையே?" என்றான் வினோத் முடியை கையால் அழகுபடுத்தியபடி.

"நீ பிறவி அழகன். உன் மீது நான் பொறமைப்பட முடியுமா? சரி கிளம்பு" என்றான்.

புறநகர் பகுதியான மாணிக்கம்பாளையத்தில் வண்டியை நிறுத்தி ரஞ்சனிடம் வழிகேட்டு சம்பவ இடத்தை அடைந்த போது வினோத்" இதற்குத்தான் பெண் பார்க்க போகிறோம் என்று என்னை ஏமாற்றினீர்களா?"

"இல்லையென்றால் பத்து நிமிடத்தில் தயாராகி வருவாயா?பெண் என்றால் பேயும் இரங்கும். நீ எம்மாத்திரம்."

"உங்களை நம்பி பாடிஸ்பிரே கூட அடித்து வந்தேன். அத்தனையும் வீண் "

"இல்லை. அதனால் யூஸ் இருக்கிறது"

"என்னது?"

"பிணத்தின் மீது ஏதாவது வாடை வந்தால் உன்னை பக்கத்தில் வைத்து கொள்ளலாம்"

"கலாய்கிறீர்களா? எல்லாம் என் நேரம் "

இருவரும் சம்பவ இடத்தில் காரை நிறுத்தினர். சற்று தூரத்தில் குழுமியிருந்த கூட்டத்தை கான்ஸ்டபிள்கள் கட்டுப்படுத்தி கலைத்து கொண்டிருந்தனர். சாலையோரத்தில் அந்த கார் கண்ணுக்கு கிடைத்தது. அதிலிருந்து இரண்டடி தள்ளி அவள் விழுந்து கிடந்தாள். டூ நாட் க்ராஸ் பெல்டினுள் பாரன்சிக் ஆட்கள் கையுறைகளோடும் ஆர்ட்பிரஸ்சுடனும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தனர். ஓரமாக நின்று அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ரஞ்சன் கான்ஸ்டபிள்களிடம் "அவர்களை உள்ளே விடு" என்றார். இருவரும் மஞ்சள் நிற க்ராஸ் பெல்டை தாண்டி ரஞ்சனிடம் வந்தனர்.

"குட் மார்னிங் சார்" என்றான் அருண்

"பேட்மார்னிங், அருண். நீங்கள் சொன்னது போலவே அவன் செய்து விட்டான். உங்கள் கணிப்பு உண்மையாகிவிட்டது."

"ஆளை அடையாளம் கண்டுபிடித்து விட்டீர்களா?"

"ம். அந்த காரின் ஹோல்டரில் ஓரு கார்டு கிடைத்தது. அது ஒரு மல்டி லெவல் மார்கெட்டிங் கம்பெனியின் பிராண்ட் கார்டு. அதில் மேரி செல்வராணி என்ற பெயர் இருக்கிறது. அந்த பெயர் இந்த பெண்ணுடையதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்."

"நேற்று அந்த நேரத்தில் கொலை நடந்திருக்கும் என்று தெரியுமா?"

"இந்த ஏரியாவிற்கான கடைசி பஸ் 10 .30க்கு .அதற்கு பிறகு இந்த சாலையில் ஆள் நடமாட்டத்திற்கு வாய்ப்பில்லை. கொலைகாரன் இவளுக்காக காத்து கொண்டிருந்திருக்கிறான். வந்தவுடன் காரை நிறுத்தி ஆளை காலி செய்திருக்கிறான்."

"நாங்கள் உள்ளே பார்க்கலாமா?"

"பார்த்து போங்கள்.உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை."

அருணும் வினோத்தும் மஞ்சள் வட்டத்திற்குள் நுழைந்தனர்.
சுற்றிலும் சாக்பீஸ் கோடுகளால் வரையப்பட்ட அவள் வாய் திறந்து கிடந்தாள். அவளது வரிசையான பற்களில் இருந்த சில ஈக்கள் எழுந்து பறந்தன. ஒரு ஓவியத்திற்கான மாடலைப் போல் அவள் விழுந்து கிடந்தாள்.அவளது தோடு, செயின் போன்றவை கழட்டப்படாமல் அப்படியே இருந்தன. உயிரோடு இருந்திருந்தால் ஏதாவது சீரியலில் அக்கா வேடத்திற்கு புக்காகி இருப்பாள். இவளைப் போய் ஏன் கொன்றான்? அதே நேரம் அருணின் கண்கள் அவளது கைகளில் நிலைத்தன. ஆட்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவே ஒரு ரோஸ் நிற சாயம் தெரிந்தது.

"வினோத். அது என்னவென்று தெரிகிறதா?" என்றான் அருண்.இந்த மாதிரி பெண்கள் விசயத்தில் வினோத் கெட்டி காரன் என்பது அருணின் கணிப்பு.

அவளது கையில் இருந்த ரோஸ் நிறத்தை பார்த்த வினோத் "அது லிப்ஸ்டிக் பாஸ். அவளுடைய உதட்டின் கல ரோடு ஒத்து போகிறது பாருங்கள்" என்றான். அவளது உதடுகளின் வண்ணமும் கையில் இருந்த நிறமும் ஒத்துப் போயின.

"உதட்டை கையால் துடைத்திருப்பாளோ?"

"அது புறங்கையால் தானே செய்ய முடியும்? இது மை பேனாவால்எழுத முயற்சித்து கையில் பட்டது போல் இருக்கிறதே?"

"ஓரு வேளை லிப்ஸ்டிக்கால் எதையாவது எழுத முயற்சித்திருப்பாளோ?"

" க்ராஸ் பெல்ட்டுக்கு வெளியே தேடு !ஏதாவது கிடைக்கிறதா என்று பார்ப்போம்."

இருவரும் வெளியே வந்து தேட ஆரம்பித்தனர்.

ரஞ்சன் என்ன இது? என்பது போல் பார்த்து கொண்டிருந்தார்.

மண்டியிருந்த புதர்களுக்கு நடுவே கிடந்த அந்த லிப்ஸ்டிக்கை வினோத் முதல் முறையாக தற்செயலாக பார்த்தான். அதை எடுக்க கையை நீட்டியவனை அருணின் குரல் தடுத்து நிறுத்தியது.

" எடுக்காதே ! பாரன்சிக் ஆட்களை அனுப்பி அதை எடுக்க சொல் " என்றான் அருண்.

அந்த லிப்ஸ்டிக் கையுறை அணிந்த பாரன்சிக் ஆள் ஓருவனது கைகளால் பாலீதின் பேப்பரில் சேகரிக்கப்பட்டது.

"பாடியை அவுட்லைனுக்கு வெளியே எடுத்து வையுங்கள்" என்றார் ரஞ்சன்

அவளது உடல்ஸ்ட்ரெச்சரில் தூக்கி வைக்கப்பட்டது. அப்போதுதான் அருண் அதைப் பார்த்தான்.

"அங்கே பாருங்கள்" என்றான் அருண் சாக்பீஸ் அவுட்லைனுக்குள் காட்டி .

சாக்பீஸ் அவுட்லைனுக்குள்ரோஸ் நிறத்தில் அந்த எழுத்து கண்ணுக்கு கிடைத்தது.

J தமிழில் ஜெ. ஜா!

உயிர்போகும் போது கொலையாளியின் பெயரை அவள் எழுத முயன்றிருப்பது அவர்களுக்கு புரிந்தது.

அது கொலைகாரனுடைய பெயரின் முதல் எழுத்து . யாரவன்? சிந்தனையில் ஆழ்ந்தான் அருண்.​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 6


வினோத்தும் அருணும் தங்கள் காரை நிறுத்திவிட்டு ஒதுக்குப் புறமாக இருந்த அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்கள். கதவை திறந்தவனின் கண்கள் அழுது சிவந்திருந்தன. முகத்தில் ஷேவிங் செய்யாத இரண்டு நாட்கள் வளர்ந்த மெல்லிய தாடி அடர்ந்திருந்தது.

"யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?" அவன் கண்களில் சந்தேகம் மண்டி கிடந்தது.

"போலீஸ் .நாங்கள் உங்களிடம் விசாரிக்க வந்திருக்கிறோம்"

அவன் முகம் ச ட்டென்று மாறியது. கதவின் சங்கிலியை அகற்றி இருவரையும் உள்ளே அனுமதித்தான். மியூட் செய்யப்பட்ட டிவியில் கெளதமி சிக்கு புக்கு இரயிலே என்று ஆடி பாடிக் கொண்டிருந்தார். டீப்பாயில் ஆபிசர்ஸ் சாய்ஸ்பாட்டில் ஒன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது. அருகில் ஒரு காலி டம்ளர் பொன்னிற திரவத்தோடு ததும்பி கொண்டிருந்தது. சுவற்றில் இன்னும் சற்று இளமையாக செல்வராணி இவனுடன் சிரித்து கொண்டிருந்தாள்.

"நான் அருண்.இவன் வினோத் " என்று கையை நீட்டினான் அருண்.

"ஐ ஆம் ஜோசப் .உட்காருங்கள் அருண்." என்று காலி சோபாவை காட்டினான் அந்த ஜோசப்

இருவரும் அவன் காட்டிய சோபாவில் அமர்ந்தனர்.

"இந்த நிலையில் உங்களை தொந்தரவு செய்வதில் எங்களுக்கு வருத்தம் தான். ஆனால் வேறு வழியில்லை. எங்களின் கேள்விகளுக்கு நீங்கள் உண்மையான பதில் சொன்னால் போதும் . எதையாவது மறைக்க நினைத்து பொய் சொல்லி பின்னால் மாட்டிக் கொள்ளாதீர்கள்"

" என்ன கேட்க வேண்டுமோ கேளுங்கள்"

"நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?"

"நான் ஐடி கம்பெனி ஓன்றில் வேலை செய்கிறேன். எனக்கு வேலை இரவு மட்டும் தான். பகல் தான் எனக்கு இரவு . பகல் முழுவதும் தூங்கி கொண்டிருப்பேன்"

"உங்கள் அப்பா அம்மா எங்கே இருக்கிறார்கள்."

"அவர்கள் என் சிறுவயதிலேயே இறந்து விட்டார்கள். செல்வராணியை நான் காதலித்து மணந்து கொண்டேன்"

"உங்கள் காதலை செல்வராணியின் பெற்றோர் ஏற்று கொண்டார்களா?"

"இல்லை. முதலில் கடுமையாக எதிர்த்தார்கள். பிறகு செல்வராணி ஒரேபெண் என்பதால் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டார்கள்."

"செல்வராணியின் பெற்றோர் எங்கே இருக்கிறார்கள்?"

அவனது முகம் மாறியது. நடுங்கும் விரல்களுடன் டம்ளரை எடுத்து கொண்டவன் "ஹேவ் இட்" என்றான்.

"எங்களின் பிராண்ட் வேறு. நாங்கள் சொந்தமாக காய்ச்சி குடித்து பழக்கப்பட்டவர்கள். இது எங்களுக்கு செட்டாகாது. எங்களின் கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லையே?

" சொல்கிறேன். இதற்கு உண்மையான பதில் வேண்டுமா? இல்லை?"

" உண்மை சொன்னால் உங்களுக்கு நல்லது "

"அப்படியானால் உண்மையை சொல்கிறேன். அவர்கள் இருவரும் உயிரோடு இல்லை "

" இதை சொல்ல எதற்கு இத்தனை பீடிகை ?"

" இருக்கிறது. எனக்கும் செல்வராணிக்கும் திருமணம் நடந்ததும் அவளின் பெற்றோர் சொத்து முழுவதையும் அவள் பெயருக்கு எழுதி வைத்து விட்டனர். அதற்கு பிறகு தான் அவளின் சுயரூபம் தெரிந்தது. அவள் அதன் பிறகு அவர்களை மதிப்பதில்லை. அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவியை கூட சரியாக செய்வதில்லை. கடைசியில் சாப்பாடு கூட சரியாக போடாமல் ... எனக்கு இவை எதுவும் பிடிக்கவில்லை. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என்னால் முடிந்த சின்ன சின்ன உதவிகளைத் தான் என்னால் செய்ய முடிந்தது. கடைசியில் ஒரு நாள் அவளின் பெற்றோர் அவள் மீது தங்களை சரியாக கவனித்து கொள்வதில்லை என்று புகார் கொடுத்து விட்டனர். அது ஒரு வழக்காக கோர்ட்டில் பதிவானது. தன் மேலிட செல்வாக்கால் நீதிபதியையே விலைக்கு வாங்க முயன்றாள் செல்வராணி.செல்வராணியின் பெயரில் இருக்கும் சொத்துகள் அவளுடைய பெற்றோர் பெயருக்கே திரும்ப எழுதி வைக்கப்படும் என்று தெரிந்ததால் செல்வராணி இறங்கி வந்தாள். தன் பெற்றோர்களை இனி கவனமாக பார்த்து கொள்வதாக உறுதி கூறி அவர்களை திரும்ப வீட்டிற்கே அழைத்து வந்தாள். அதன் பிறகு இரண்டு மூன்று மாதங்களில் இரண்டு பேரும் அடுத்தடுத்து இறந்து போயினர். "

"அவை இயற்கை மரணங்களா?"

" எனக் கே அந்த மரணங்கள் குறித்து செல்வராணியின் மீது சந்தேகம் இருக்கிறது"

"பிரேத பரிசோதனை அறிக்கை என்ன சொல்கிறது?"

"இயற்கை மரணம் என்பதால் அவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை."

"அவர்களின் மூச்சு வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டு விட்டது என்கிறீர்களா.? "

"எனக்கு உறுதியாக தெரியாது. ஆனால் செல்வராணியின் மீது லேசான சந்தேகம் இருக்கிறது."

"உங்களுக்கு பயமாக இல்லையா?"

" இருந்தது. என் சந்தேகத்தை வெளியே சொன்னால் எனக்கும் இதே கதி நேர்ந்துவிடும் என்பதால் மவுனமாக கண்டும் காணாமல் இருந்து விட்டேன்"

"செல்வராணியின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும்?"

" தோராயமாக முப்பது கோடிக்கு மேல் இருக்கலாம்"

"அதனால் தான் மவுனமாக இருந்திருக்கிறீர்கள். சரி. செல்வராணியின் கார் ஹோல்டரில் ஒரு mடm கார்டை எடுத்தோம். அது?"

"அவளுடையது தான். பொழுது போக்கிற்காக அதை செய்து கொண்டிருந்தாள். "

"அதில் எதிரிகள், பிரச்சனைகள் ஏதாவது?"

"அவள் முழுக்க முழுக்க பெண்களைசார்ந்து தான் இந்த தொழிலை செய்து கொண்டிருந்தாள். "

"அப்படியானால் பிரச்சனைகளுக்கு பஞ்சமிருக்காது.".

"அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னிடம் அதை பற்றி எதையும் அவள் பேசியதில்லை."

"வேறு ஏதாவது எதிரிகள்?"

"எனக்கு தெரிந்து இல்லை "

"யாரையாவது சந்தேகிக்கிறீர்களா?"

"இப்போதைக்கு யார் மீதும் எனக்கு சந்தேகம் இல்லை."

"உங்கள் மனைவி இரவு யாரை சந்திக்க போயிருப்பார் என்று நினைக்கிறீர்கள்?"

"நான் இரவு எட்டு மணிக்கே ஆபிசிற்கு கிளம்பி விட்டேன். என்னிடம் அவள் எதுவும் சொல்லவில்லை - நான் அலுவலகத்திற்கு போன பிறகு அவள் வெளியே போயிருக்கலாம்."

"இனி செல்வராணியின் மொத்த சொத்துகளும் உங்களுக்கு தான்."

"என்னை சந்தேகிக்கிறீர்களா?"

"இல்லை. உண்மையை சொன்னேன். உங்கள் மனைவியை கொன்றவன் உங்கள் மனைவிக்கு நன்றாக தெரிந்தவன். அதனால் தான் அவள் காரை நிறுத்தியிருக்கிறாள். இதோ இந்த புகைபடத்தை பாருங்கள். சாகும் தருவாயில் உங்கள் மனைவி அந்த கொலைகாரனின் பெயரை எழுத முயற்சி செய்திருக்கிறார். "அருண் விபஸ் டிக்கால் எழுதப்பட்ட அந்த J படத்தை நீட்டினான்.

ஜோசப் அந்த படத்தை உற்று பார்த்தான்.

"J என்ற எழுத்தில் துவங்கும் பெயர் கொண்ட யாரையாவது உங்களுக்கு தெரியுமா? உங்கள் மனைவியின் நண்பர்கள், தோழிகள் யாராவது இந்த பெயரில் இருக்கிறார்களா?"

ஜோசப் நெற்றியை தடவிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தான்.​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 7


அருணும் வினோத்தும் தங்கள் அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். "அந்த ஜோசப் Jஎன்ற எழுத்தை முதல் எழுத்தாக பெயரில் கொண்ட யாரையும் தனக்கு தெரியாது. தன் மனைவிக்கும் தெரியாது என்று சொல்லிவிட்டானே பாஸ்?இனி நாம் என்ன செய்ய போகிறோம்.?" என்றான் வினோத்.

"எனக்கும் அது தான் புரியவில்லை. பிரான்சிஸ் அன்பரசு நம்மிடம் தம்பியை கொன்றவனை கண்டுபிடியுங்கள் என்று வந்த போது கொலைகாரனை எளிதாக பிடித்து விடலாம். கேஸ் அத்துடன் முடிந்துவிடும் என்று நினைத்தேன். அந்த நினைப்பு எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தான் புரிகிறது. அவன் ஒரு சீரியல் கில்லராக இருப்பான் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை." என்றான் அருண்.

"பிரான்சிஸ் அன்பரசுவின் புண்ணியத்தில் செல்வராணிக்கும் சேர்த்து இலவசமாக வேலை செய்யப் போகிறோம். ப்ரீசர்வீஸ் " என்றான் வினோத்.

"நாம் கொலைகாரனைப் பற்றி தப்புக்கணக்கு போட்டு விட்டோம் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். கொலைகாரன் நமக்கு இரண்டு துப்புகளை விட்டு சென்றிருக்கிறான். ஓன்று கொலை செய்யப்பட்டவர்களுக்கு அவனை நன்றாக தெரிந்திருக்கிறது. இன்னொன்று அவனது பெயரின் முதல் எழுத்து J. "

"முதல் பாயிண்டை அலசுவோம். கொலைகாரனுக்கும் கொலை செய்யப்பட்டவர்களுக்கும் நல்ல உறவு இருந்திருக்கிறது. முன்விரோதம் இருந்திருந்தால் காரை நிறுத்தியிருக்க மாட்டார்கள். இரவு நேரத்தில் அவனை பார்த்ததும் காரை நிறுத்துகிறார்கள் என்றால் அவன் அவர்களுக்கு நன்றாக அறிமுகமான தெரிந்த நபராக இருந்திருக்க வேண்டும். இரண்டாவது பாயிண்ட் Jஎன்ற முதல் எழுத்து கொலைகாரனின் முதல் எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கொலைகாரன் செய்யும் தொழிலின் முதல் எழுத்தாக கூட இருக்கலாம்"

"J என்ற எழுத்தில் என்ன தொழில் இருக்கிறது பாஸ்?"

" Jewellery , Jailor இந்த மாதிரி ஏதாவது இருக்கலாம்"

"எனக்கென்னவோ அவன் கையில் எழுதி செல்லும் அந்த எண்களில் தான் ஏதோ ஒரு முக்கியமான துப்பை விட்டு செல்கிறான் போல தோன்றுகிறது."

"அதையும் கவனத்தில் வைத்திருக்கிறேன். ஆனால் அந்த எண்களுக்கு என்ன பொருள் என்று நமக்கு இந்த நிமிடம் வரை தெரியாதே?"

"நீங்கள் சொல்வது சரிதான். அந்த செல்வராணி உண்மையாகவே தன் பெற்றோரை கொன்றிருப்பாளோ?"

"அதைத்தான் உறுதிப்படுத்த முடியாது என்று ஜோசப் சொல்லிவிட்டானே ?"

" அவன் எப்படி பாஸ் வெளியே சொன்னான்? அதுவும் நாம் போலீஸ் என்று சொன்ன பின்பும்."

"அது அவன் அடித்த சரக்கு செய்த வேலை. மேலும் எதையாவது மறைத்து நாளை அந்த விசயம் நமக்கு தெரிய வந்தால் சந்தேக வளையத்திற்குள் அவனும் வந்து விடுவான் என்ற சுயநலம் தான் காரணம். "

"மனைவிக்கேற்ற கணவன் போங்கள் "

"நிஜம் தான். நாம் தேடிக் கொண்டிருப்பது ஒரு சைக்கோ கில்லர் என்பதை பிரான்சிஸ் அன்பரசுவின் காதில் போட்டு விடுவோம். அவருக்கு நாம் இதுவரை எந்த தகவலும் சொல்லவில்லை. எங்கே அவர் கொடுத்த கார்டு" என்றான் அருண்.

மேஜை டிராயரை திறந்து கார்டு ஹோல்டரில் இருந்த அந்த காஸ்ட்லி கார்டை எடுத்து நீட்டினான் வினோத். கார் டில் இருந்த நெம்பரை செல்போனில் தட்டி கொண்டிருந்த அருண்

"இந்த நம்பரை சேவ் செய்ய வேண்டும்" என்றான்.

"தேவையில்லை பாஸ். ட்ரூ காலர் ஆப்பில் பெயர் வரும். அதை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். எத்தனை பேர் எண்களை நாம் சேவ் செய்து வைப்பது? நான் அப்படித்தான் செய்கிறேன்" என்றான் வினோத்.

"நல்ல ஐடியா " என்ற அருண் பிரான்சிஸ் அன்பரசு விற்கு கால் செய்தான்.

ஒரு ரிங் கூட போகாமல் குக்கு என்ற சத்தத்துடன் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

"என்னடா ரிங்கே போகவில்லை. அவுட் கோயிங் கட்டாகி விட்டதோ என்னவோ?"

"என்ன பாஸ் பெரிய மல்டி பில்லியனர் என்றார். போன் பில் கூட கட்டாமல் இருக்கிறார். அவர் கொடுத்த செக் பவுண்சாகி விடப் போகிறது "என்றான் வினோத் கவலையுடன் .

சில நிமிட இடைவெளிக்கு பிறகு அருணின் செல்போன் சிணுங்கியது.

"அவர் தான்" என்ற அருண் போனை காதில் வைத்தான்.

"அருண்.நான்பிரான்சிஸ் அன்பரசு பேசுகிறேன். கூப்பிட்டீர்களா?என்ன விசயம் சொல்லுங்கள்." என்றது அன்பரசுவின் குரல்.

''உங்கள் தம்பி சாமுவேல் ரத்னகுமாரை கொன்ற அதே கொலைகாரன் நேற்று இரவு இன்னொரு பெண்ணை கொலை செய்திருக்கிறான்."

"இஸ் இட். யார் அந்த பெண் ?"

"மேரி செல்வராணி. இந்த பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்றான் அருண்.

"இல்லை. இந்த பெயரை கேள்விப்பட்டதில்லை. இந்த பெயரில் யாரையும் எனக்கு தெரியாது."

"உங்கள் பிரதரை கொல்ல பயன்படுத்திய அதே கத்தியைத் தான் இந்த கொலையிலும் பயன்படுத்தியிருக்கிறான்."

"சோ நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்"

"ஆசாமி ஒரு சீரியல் கில்லராக இருப்பானோ என்று சந்தேகிக்கிறோம். நீங்கள் கொடுத்த மூன்று வார கெடுவில் அவனை பிடித்து விட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை."

"எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். நான் காத்திக்கிறேன். அவன் எனக்கு உயிரோடு வேண்டும்"

" அவனது முதல் எழுத்து Jஎன்று ஆரம்பிக்கிறது. இதை மட்டும் தான் இப்போதைக்கு கண்டு பிடித்திருக்கிறோம்."

''இந்த ஒரு எழுத்தை வைத்து அவனை பிடித்து விட முடியும் என்று நம்புகிறீர்களா?"

நம்பிக்கை தானே சார் வாழ்க்கை"

"ஓகே. டூ இட். அவன் எனக்கு வேண்டும்"

"ஐ வில் டிரை சார். நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள் சார். அவனொரு ஆபத்தான சைக்கோ"

"நான் மட்டும் நார்மலான மனிதன் என்றா நினைக்கிறீர்கள்.? என்னுடைய இன்னொரு பக்கம் ரொம்பவே இருட்டானது " என்ற பிரான்சிஸ் அன்பரசு வெறியோடு போனை வைத்தார்.

" யாரடா நீ? எங்கே இருக்கிறாய்?" என்ற து அவரது மனம்.​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 8


அவன் கைவிடப்பட்ட அந்த லேத் பட்டறையில் தன்னுடைய முனை மழுங்கிய கத்தியினை கூர் தீட்டி கொண்டிருந்தான்.அவன் அந்த கத்தியை அங்குதான் தயாரித்தான். அதன் ரம்ப பற்களின் கூர்மையை விரலால் தொட்டுப் பார்த்தவன் திருப்தியின் அறிகுறியாக தன் தலையை அசைத்து சிரித்து கொண்டான்.

பிறகு எதையோ நினைத்து கொண்டவன் போல் தன் செல்போனில் யாரையோ அழைத்தான்.

"ஹலோ" என்றது எதிர்முனை.

"நான் தான் " என்றான் இவன்.

"அவள் எப்படி இருக்கிறாள்?"

"முன்பை விட இப்போது தேவலாம் .மனதளவிலும் உடலளவிலும் முன்பை விட நன்றாகவே தேறிக் கொண்டிருக்கிறாள் "

"அவளிடம் நான் பேச வேண்டும். அவளிடம் போனைக் கொடுங்கள்"

சிறிது நேரத்தில் ஒரு பெண் குரல் லைனில் வந்தது.

" எப்படி இருக்கிறாய் பெண்ணே?"

"ம். பரவாயில்லை."

" நாளை அவனுக்கு ஜட்ஜ்மெண்ட் டே. உன்னை அங்கே யார் அனுப்பினார்களோ அவனுக்கு கடைசி நாள்."

"அவனை கொன்று விடுங்கள். என் குழந்தையை கொன்று என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் அவன் தான் "

"சட்டத்திலிருந்து அவன் தப்பியிருக்கலாம். ஆனால் என்னிடமிருந்து அவன் தப்பிக்கவே முடியாது. "

" இதை நீங்கள் முன்பே செய்திருக்கலாம்."

"அப்போது என் கைகள் கட்டப்பட்டிருந்தன. மேலும் எனக்கு இப்போது அவகாசம் வெகு குறைவு .அதனால் வேகமாகவேலையை முடிக்க வேண்டியதிருக்கிறது."

"போலீஸ் உங்களை பிடித்து விடப்போகிறது. எச்சரிக்கையாக இருங்கள்."

" என் முடிவைத் தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே பெண்ணே. என்னை யாராலும் பிடிக்க முடியாது. நீ கவனமாக இரு"

"சரி. நான் போனை வைக்கிறேன்"

" விரைவிலேயே நீ வெளி காற்றை சுவாசிப்பாய். என்னை நம்பு."

அவன் போன் இணைப்பை துண்டித்தான். பிறகு அந்த கத்தியைதன்பாண்ட் பாக்கெட்டில் செருகி கொண்டான். டேபிள் மேல் இருந்த நோட்டை பிரித்து பார்த்தான். அதன் முதல் பக்கத்தில் ரத்னகுமாரின் போட்டோ பெருக்கல் குறி போட்டு அடிக்கப்பட்டிருந்தது. அதன் அடுத்த பக்கத்தில் செல்வராணியின் போட்டோவும் பெருக்கல் குறிபோடப்பட்டிருந்தது. மூன்றாவது பக்கத்தில் இரு ந்த புகைப்படத்தை உற்று பார்த்தவன் " டேவிட் .அடுத்தது நீ தான் " என்றான்.

திடிரென அவன் முகம் வலியால்மாறியது. தன் வயிற்றை பிடித்து கொண்டு மடங்கி விழுந்தவன் சற்று நேரம் வலியால் துடித்துக் கொண்டிருந்தான். தன் பாக்கெட்டிலிருந்த மாத்திரையை வாயில் போட்டு விழுங்கியவன் சற்று நேரத்தில் ஆசுவாசமாக எழுந்து உட்கார்ந்தான்.

"எனக்கு நேரம் மிக குறைவாக இருக்கிறது" என்று முணுமுணுத்து கொண்டவன் மெல்ல நடந்து அங்கிருந்து வெளியேறினான்.

அதே நேரம் அருணும் வினோத்தும் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தனர். மேஜை மீது இருந்த போஸ்ட் மார்டம் ரிப்போர்டை படித்து கொண்டிருந்த அருண் அதை டிராயரில் வைத்தான்.

"பிரேத பரிசோதனை அறிக்கையின் படி கொலைகாரனின் வயது 50 லிருந்து 60 ற்குள் இருக்கலாம்"

"என்ன பாஸ் சொல்கிறீர்கள்? கொலை நடந்த இடத்தில் தான் கொலைகாரன் வெகு கவனமாக தன்னைப் பற்றிய எந்த துப்பையும் விட்டு செல்லவில்லையே? நீங்கள் எதை வைத்து அவனது வயதை கணிக்கிறீர்கள்?"

"இறந்தவர்களின் உடலில் உள்ள கத்திகுத்தின் ஆழத்தை வைத்து தான். அவன் மிக அருகிலிருந்து முழு வேகத்தில் கத்தியை அவர்களின் உடலில் பாய்ச்சியிருந்தால் ரத்தம் நிறைய வெளியேறியிருக்கும். இங்கே கத்திகுத்து அவ்வளவு ஆழமாக இல்லை. அதனால் கொலைகாரன் உடல் வலு குறைந்தவனாக வயதானவனாக இருக்க வாய்ப்பு அதிகம் என்கிறது டாக்டரின் குறிப்பு"

"அடக்கடவுளே! போயும் போயும் ஒரு கிழவனா நமக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறான்? வெட்ககேடு " என்றான் வினோத்.

"நமக்கு எந்த துப்பும் தராமல் கொலை செய்கிறான் என்றால் இதையெல்லாம் அவன் வெகு நாட்களாக திட்டமிட்டிருக்க வேண்டும்"

"இது வரை இரண்டு பேரை அவன் கொன்றிருக்கிறான். அதற்கான காரணம் என்னவென்று நமக்கு தெரியவில்லை. ஆனால் காரணம் கொலைகாரனுக்கு மட்டுமேதெரிந்திருக்கிறது" என்றான் அருண்.

"அந்த காரணத்தை நாம் தெரிந்து கொள்ளும் முன்பாக அவன் இன்னும் நான்கு கொலைகளை செய்து விடுவான் என்று நினைக்கிறேன்."

"அந்த காரணத்தை கண்டுபிடிக்க எளிதான வழி ஒன்று இருக்கிறது."

"எப்படி பாஸ்?"

"இறந்து போன இருவருமே கிறிஸ்தவர்கள்.இவர்களை கொன்ற எக்ஸ் என்ன மதத்தை சேர்ந்தவன் என்று நமக்கு தெரியாது. இதில் ஒரு பிளஸ் பாயிண்ட் இருக்கிறது."

"என்ன அது?"

"இறந்து போன இரண்டு பேரும் ஓரே மதப் பிரிவைசேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை ஒரே சர்ச்சிற்கு போவது வழக்கமாக இருந்திருக்கிறது. சோ"

"அதனால் என்ன சொல்ல வருகிறீர்கள்?"

"பாவ மன்னிப்பு .இப்படி ஒரு விசயம் அவர்களின் மகத்தில்இருக்கிறதல்லவா? அவர்கள் செய்த பாவங்களை பாதரிடம் கூறி மன்னிப்பு கேட்டிருப்பார்கள். நமக்கு தெரியாத ஏதாவது விசயங்கள் அதில் இருக்கலாம் என்று நம்புகிறேன்"

"பாதர் அதை நம்மிடம் சொல்ல வேண்டுமே?"

"நாம் அவரிடம் பேசிப் பார்ப்போம். மற்றவர்களின் உயிரை காப்பாற்ற அவர் வாய் திறந்து தான் ஆக வேண்டும். ஒரு உயிரை காப்பாற்ற அவர் உண்மையை சொல்லித்தானாக வேண்டும். குறைந்த பட்சம் சில குறிப்புகளையாவது கொடுத்து நமக்கு உதவலாம் "

"அது அவரின்மத கோட்பாட்டுக்கு விரோதமானது. நீங்கள் நினைப்பதுபோல் நடக்க வாய்ப்பில்லை. நீங்கள் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்த சர்ச்சிற்கு வருபவர்களில் இன்னும் சிலரை கொலைகாரன் கொலை செய்யப் போகிறான் என்றா சொல்கிறீர்கள்?"

"நீ சொன்ன பாயிண்டும் சரிதான். ஆனால் அடுத்த கொலையாக வேறு எந்த மதத்து காரனையாவது கொலை செய்து விட்டால் உன் கேள்விக்கு அர்த்தமேயில்லை. உன் வாதம் சொத்தையாகி விடும். இந்த இரண்டு கொலைகளுக்கான நமக்கு தெரியாத காரணம் ஏதாவது சர்ச் பாதருக்கு தெரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்."

"சரி அந்த கோணத்தில் விசாரித்து பார்க்கலாம். நான் அந்த பாதரின் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்குகிறேன்."

"செல்வராணியின் கணவனிடம் அந்த பாதரின் பெயரையும், போன் நம்பரையும் முதலில் வாங்கு"

"சரி. ஒரு பேப்பரை கொடுங்கள். எழுதி கொள்கிறேன்."

வினோத் ெசல்வராணியின் கணவனுக்கு போன் செய்தான்.அருண் அசுவராசியமாக போனை நோண்ட ஆரம்பித்தான்.

பேசி முடித்துவிட்டு போனை வைத்த வினோத் "இந்தாருங்கள். இது தான் அவரது போன் நெம்பராம்" என்று எழுதிய காகிதத்தை அருணுக்கு முன்பாக ஆட்டி காண்பித்தான்.

அருணின் கண்கள் அந்த காகிதத்தில் நிலைத்தன.

"ஜேம்ஸ் அடைக்கலராஜ் "

அருணுக்கு ஏனோ செல்வராணியின் உடல் கிடந்த இடத்தில் எழுதப்பட்டிருந்த Jஎன்ற ரோஸ் நிற எழுத்துகள் நினைவுக்கு வந்தன.

அவன் தனது மூன்றாவது வேட்டைக்காக இரவின் இருளில் காத்து நின்றான்.
அவனது பாண்ட் பாக்கெட்டில் அவனது பிரத்யேக கத்தி மின்னியது.​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 9


பாதர் ஜேம்ஸ் அடைக்கலராஜ் மறுநாள் மாலை தன்னை சந்திக்க அவர்கள் இருவருக்கும் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருந்தார். மறுநாள் காலை அருணின் செல்போன் ஒலித்த போது அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.அருகே கனவில் காஜல் அகர்வாலுடன் கட்டி பிடித்து உருண்டு கொண்டிருந்த வினோத் எரிச்சலுடன் போனை எடுத்தான்.

"ஹலோ யார்?"

"குட் மார்னிங். நான் கமிசனர் ரஞ்சன் பேசுகிறேன்.அருண் இருக்கிறாரா?"

"தூங்கி கொண்டு இருக்கிறார். என்ன விசயம் என்று சொல்லுங்கள். நம் ஆண்டி ஹீரோ மீண்டும் தன் திருவிளையாடலை ஆரம்பித்து விட்டானா?"

"இல்லையென்றால் நான் ஏன் அதிகாலையில் உங்களை எழுப்பி குட் மார்னிங் என்று சொல்லிவிட்டு கெட்ட விசயங்களாக சொல்லி கொண்டிருக்கப் போகிறேன்."

"இந்த முறை ஆசாமி போட்டு தள்ளியது ஆணா?பெண்ணா, சார்?"

"இந்த முறை ஆண் "

" ஒரு ஆண் அடுத்தது பெண் மறுபடியும் ஆண் என்று ஏதாவது பேட்டர் னை பயன்படுத்துகிறானோ என்னவோ? நான் வேண்டுமானால் உங்களிடம் பந்தயம் கட்டுகிறேன். அடுத்தது பெண் தான் "

"வினோத் இது விளையாடும் நேரமில்லை. அடுத்ததுஆணா பெண்ணா என்பது நமக்கு முக்கியமில்லை. அடுத்த கொலை நடப்பதற்குள் நாம் அவனை பிடித்தாக வேண்டும்"

"புரிகிறது சார். இல்லையென்றால் தினமும் அதிகாலையில் இழவு செய்தியோடு நீங்கள் போன் செய்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்காகவாவது அவனை அந்த கிழட்டு பயலை பிடித்து விடுகிறோம்."

"இந்த முறை அவன் செய்த கொலையில் ஓரு வித்தியாசம் இருக்கிறது."

"என்ன சார் அது?"

"நேரில் வந்து பாருங்கள். உங்கள் பாஸை எழுப்பிக் கொண்டு சீக்கிரமாக நான் சொன்ன இடத்திற்கு வாருங்கள்."

"ஒகே சார்" என்ற வினோத் "நாங்கள் மெதுவாக வந்தால் பிணம் எழுந்து ஓடிவிடுமா? என்ன?" என்று முணுமுணுத்தான் வினோத்.

அவன் பேசுவதை காதில் வாங்கி கொண்டு கண்ணை மூடி படுத்து கொண்டிருந்த அருண் "என்னவாம்?" என்றான்.

"எனக்கு மறுபடியும் பொண்ணு பார்க்க போக போகிறோம் பாஸ்" என்றான் வினோத் கடுப்புடன்.

" அடக்கமான பெண் வேண்டும் என்பாயே? நான் வேண்டுமானால் கொலைகாரனிடம் பேசி தேடட்டுமா?"

" அவன் அடக்கமாக போகிற பெண்ணையல்லவா காட்டுவான். கிண்டல் " என்ற வினோத் தன் பிரஸ்ஸில் பேஸ்டை வைத்தபடி பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

அவன் பாத்ரூமிற்குள் நுழைந்து கதவை சாத்தியவுடன் அருண் எழுந்து உட்கார்ந்து கொண்டான். இந்த வழக்கில் கொலைகாரன் ஏதோ ஓரு ஓழுங்கமைவில் இயங்கி கொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது. அவனுக்கும் கொலை செய்யப்பட்டவர்களுக்கும் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத நூலிழை தொடர்பு இருப்பதாக அவன் நினைத்தான். அந்த தொடர்பை அவிழ்க்கும் முடிச்சு அவர்களின் கையில் எழுதப்படும் எண்ணில் இருப்பதாக அவனது உள் மனது சொன்னது.

இருவரும் குளித்து முடித்து ரெடியானதும் அருண் "பாடிஸ்பிரே போடவில்லை?" என்று வினோத்தை சீண்டினான்.

கை எடுத்து கும்பிட்ட வினோத் "எனக்கு இன்னும் வேணும் பாஸ்" என்றான்.

அருண் சிரித்தபடி தலையாட்டி கொண்டான்.

சம்பவ இடத்தில் அவர்கள் காரை நிறுத்திய போது ரஞ்சன் அவர்களை வரவேற்றார்.

"அந்த கொலைகாரனுக்கு என்ன சார் அவசரம்? ஊருக்கு போகப் போகிறவன் போல் தினமும் ஒரு கொலையை செய்து கொண்டிருக்கிறான்." என்றான் அருண்.

"அதுதான் எனக்கும் புரியவில்லை. சட சடவென்று ஒரு வாரத்தில் மூன்று பேரை கொன்று விட்டான். ஆனால் இந்த கொலைகளுக்கு முன்பே நிறுத்தி நிதானமாக கொலைகளுக்கான முஸ்தீபுகளை செய்து வைத்திருக்கிறான். அதனால் தான் அவனால் வெகு எளிதாக கொலை செய்ய முடிகிறது." என்றார் ரஞ்சன்.

"சரி வாருங்கள். பாடியை பார்க்கலாம்"
மூன்று பேரும் கூட்டத்தை விலக்கி கொண்டு நுழைந்தனர். மஞ்சள் கருப்பு ரூ நாட் எண்ட்ரி க்ராஸ் பெல்ட் அவர்களை வரவேற்றது.வழக்கமான சம்பிரதாய வேலைகளில் ஈடுபட்டிருந்தனர் பாரன்சிக் ஆட்கள்

" இவர்களுக்கு விடாமல் வேலை கொடுக்கிறான் அவன். இவர்களின் கையில் அவன் சிக்கினால் கொன்றே விடுவார்கள்" என்றான் வினோத்.

மூவரும் நின்றிருந்த காரை நோக்கி நடந்தனர். காரின் கதவு திறந்து கிடந்தது. காருக்கு அருகே மூன்றடி தூரத்தில் அவன் சர்வ நிச்சயமாக செத்து போயிருந்தான். திறந்திருந்த அவன் வாயில் சில ஈக்கள் சுதந்திரமாக போய் வந்து கொண்டிருந்தன. மார்பில் குத்துப்பட்டு வெளியான ரத்தம் உறைந்து கெட்டிப் பட்டு கருப்பு நிறமாக மாறியிருந்தது. அவன் கழுத்து அறுபட்டிருந்தது.

" சுற்றிலும் நன்றாக தேடிப் பார்த்தீர்களா? போன கொலையில் லிப்ஸ்டிக் கிடைத்தது. இந்த முறை வேறு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்கலாம்."

" சுற்றியுள்ள இடங்களை நன்றாக சலித்து விட்டோம். வேறு எதுவும் கிடைக்கவில்லை."

"இந்த முறை என்ன எண்களை எழுதி வைத்திருக்கிறானோ தெரியவில்லையே?"

"அதில் தான் ஒரு பெரிய மாறுதல் இருக்கிறது. அவனது கையை பாருங்கள்." என்றார் ரஞ்சன்

அவனது கையில் மணிக்கட்டுக்கு மேலாக ரத்த பொறுக்குகளுடன் காய்ந்து போய் அந்த எண்கள் தெரிந்தன.

7, 8, 9/10

"இது என்ன பாஸ் டீக்கடை அக்கவுண்ட் பாக்கியை கையில் எழுதி வைத்திருக்கிறான்?" என்ற வினோத்தை முறைத்தான் அருண்.

"இது வரை சிங்கிள் எண்களை வகுத்து கொண்டிருந்தான். இப்போது மூன்று எண்களை வகுக்கும் படி முன்னேறி இருக்கிறான்"

"எனக்கென்னவோ இது பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது வாத்தியார் போட்ட மார்க் போல் தெரிகிறது" என்றார் ரஞ்சன்.

"முதல் கொலை பத்துக்கு ஐந்து மார்க். இரண்டாவது கொலை பத்துக்கு ஆறு மார்க். இப்போது செய்த கொலைக்கு அவன் சிங்கிள் மார்க் போடவில்லை. மூன்று விதமான மார்க்குகளை போட்டிருக்கிறான்." என்றான் வினோத்.

" அவன் இந்த கொலைகளின் மூலம் எதையோ சொல்ல வருகிறான். அது என்னவென்று கண்டுபிடித்தால் அவனை கண்டுபிடித்து விடலாம்."

"எண்களை வரிசைப்படுத்தி பார்த்தால் அவன் இன்னும் ஒரு கொலை செய்தால் பத்துக்கு பத்து மார்க் வாங்கி விடுவான். 5, 6, 7, 8, 9 இன்னும் ஒரு கொலை பாக்கி. அத்தோடு கொலைகள் நின்று விடும் என்று நினைக்கிறேன். அதற்குள் நாம் அவனை கண்டு பிடிக்காவிட்டால் ஜாக்தி ரிப்பர் போல் கடைசி வரை கண்டுபிடிக்கப்படாத கொலைகாரனாகவே இருந்து விடுவான்."

"நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? கொலைகாரன் o, 1,2,3,4 என்று முன்னால் இருந்தும் வரலாம் இல்லையா?" என்ற ரஞ்சனை திடுக்கிட லோடு இருவரும் பார்த்தனர்.​
 
Status
Not open for further replies.
Top Bottom