Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சுடும் நிலவு!!! சுடாத சூரியன்!!!

Messages
15
Reaction score
6
Points
3
1 💕...

"ஓன் நெனப்பு நெஞ்சுக் குழி வர இருக்கு உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்திக் கெடக்கு..." சினிமாப் பாடல் பூக்குடி வீதியில் இருக்கும் மக்களைத் தூங்க விடாமல் அக்கல்யாண மண்டபத்தில் ஒலித்துக் கொண்டு இருந்தது. "ஏம்ப்பா சுந்தரம் மணிதான் ஒன்பதுத் தாண்டிருச்சுல்ல புள்ளங்க நாளைக்கு வெரசா எந்திக்கனும் பாட்ட அமத்த சொல்லேன் யா..." என்று வயதான பெருசு சொல்ல...


"சரிங்க தாத்தா நான் சொல்றேன்" என ஐந்தரை அடி, ஆஜானுபாகுவான உடல், டிராக் பேன்ட் டீஷர்ட்டு, முறுக்கிய மீசை உடன் நின்று கொண்டிருந்தான் சுந்தரத்தின் மூத்த மகன் நேத்ரன்.


காலையில் நிச்சயத்திற்கு தேவயானவை வந்துவிட்டதா என சரிப்பார்த்துக் கொண்டிருந்த சுந்தரத்தின் வேஷ்டியைப் பிடித்து இழுத்து


"தாத்தா தாத்தா பொதிஉண்ட நாக்கு நம்ப வீத்துக்கு வத மாத்தாலா😖😖( பொரி உருண்ட நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர மாட்டாளா???)" என சிணுங்கினான் நேத்ரனின் 3 வயது மகன் ரவிவர்மன்.


"டேய் வர்மா... அத்தய பொரி உருண்டனு சொல்லக்கூடாதுனு எத்தன தடவ சொல்லிருக்கேன்😠😠" என்றாள் நேத்ரனின் பத்தினி வைஷ்ணவி.


"விடுமா வைஷி அவ மட்டும் இவன மாங்கா மண்டனு கூப்ட்டு சிரிக்குறால அதான் நானும் அந்த சாப்பாட்டு ராணிக்கு பொரி உருண்டனு 😂😂பேரு வச்சு வர்மன கூப்ட சொன்னேன்..என் ராசா ஆச்சிப் பேச்சத் தட்ட மாட்டான் "


என்று தன் பேரனை தூக்கித் தலைக்கு மேல் ஒரு சுற்று சுற்றி தன் இடுப்பில் வைத்துக் கொண்டாள் வைஷுயின் மாமியார் முத்தரசி.


"என்னங்க அத்த இது!!!....நேத்து வர அவ நம்ம வீட்டு பொண்ணு ஆனா நாளைக்கு இன்னொரு வீட்டு மருமக..நாமளே அவள இப்டி கேலி பேசலாமா???.."என்றாள் வைஷி.


சட்டென்று சுந்தரம் தன் கண்ணீரைத் துடைக்க வைஷி பதறி விட்டாள்.


"சாரி மாமா நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா.." -- வைஷி.


"இல்லமா நேத்து தான் அவள சின்னப் புள்ளயாத் தூக்கிட்டு வந்த மாதிரி இருக்கு நாளைக்கு இன்னொரு வீட்டு மருமக.. நாளன்னில இருந்து அவ சத்தம் இல்லாம வீடே நல்லா இருக்காதேம்மா...அதான் கஷ்டமா இருக்கு"-- சுந்தரம்.


"ஆமாப்பா அந்த சண்டிராணி இல்லாம வீடே ரொம்ப அமைதியா இருக்கும்" -- நேத்ரன்.


"லேய் நேத்ரா அவ உங்க அப்பாக்கு சின்ன ராணி டா நீ அவள சண்டிராணினு சொல்லி வசவு வாங்காத..." -- முத்தரசி.


என்ன அரசி எல்லாரும் இங்க இருக்கோம் அப்ப பாப்பாக் கூட யாரு தான் இருக்கா புள்ள தனியா பயப்படப்போகுது என்றார் சுந்தரம்.


"அம்மா வைஷி உன் மாமா ரொம்ப ஓவராப் போறாரு சொல்லிவை... அந்த வாயாடிப் பயப்படப் போறாளாவாம். இன்னேரம் அங்க யார்க் கூடவாச்சு ரகளயக் கூட்டாம இருந்தா தான் ஆச்சரியம் "
என்று சுந்தரத்தைப் பார்த்து நொடித்துக் கொண்டு மணமகள் அறையை நோக்கி சென்றார் முத்தரசி.


மனதுக்குள் எதயாச்சு இந்தப் பொண்ணு யோசிச்சுட்டு இருப்பாளே..நான் வைஷி இருப்பானு இவள தனியா விட்டுட்டு வந்துருக்கக் கூடாதோ... என்று நினைத்துக் கொண்டே நடையைய் எட்டிப் போட்டார் அப்பெண்ணரசி .


இவ்வளவு நேரம் சுந்தரத்தால் "சின்னராணி "யாகவும் , முத்தரசியால் "சாப்பாட்டுராணி" யாகவும், நேத்ரனால் "சண்டிராணி"யாகவும் அழைக்கப்படும் சுந்தரம் முத்தாரசியின் இளைய மகள் சவிதாவிற்கே விடிந்ததும் திருமணம்.


மணமகள் அறை உள் தாழ்ப்பாழ் போடப்பட்டு இருந்தது.
முத்தரசி வேகமாய் கதவைத் தட்ட...


இளம் பச்சை நிற சல்வாரில், உயர்த்திப் போட்ட கொண்டையுடன்,சரியே கழுவப்படாமல் அரைகுறையாய் இருக்கும் கண்மையுடன்,அணிகலன் அற்று மாநிறமாய்,உயரமாய்,
குழந்தைத் தனமான முகத்துடன் நின்றுகொண்டு இருந்தாள் சவிதா ...😍


"ஏண்டி கதவ மூடி தாழ் போட்டுருக்க?"


"டிரஸ் மாத்திட்டு இருந்தேன் மா..." என்று கூறிவிட்டு கட்டிலில் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டாள் அவள்.


வீட்டில் நண்டு சிண்டு முதல் பெரியவர்கள் வரை ஆனந்தமாய் இருக்க கல்யாணப் பெண்ணான சவிதாவின் முகமோ சிறு புன்னகை இன்றி நிர்மலமாய் இருந்தது.


என்ன இவ முகத்துல ஏதோ யோசனத் தெரியுதே இல்லன நான் கேட்டக் கேள்விக்கு ஒரு வரில பதில் சொல்லிட்டுப் படுத்துருக்க மாட்டாளே என முத்தரசி மனதில் புலம்பிக்கொண்டிருந்தார்.


"ஏம்மா சவி என்னாச்சிமா ஏதும் பயமா இருக்கா...இல்ல அம்மா,அப்பா,அண்ணா,அண்ணி, பொறந்த எடத்தலாம் விட்டுட்டுப் போனும்னு வருத்தப்படுறியா"


"அதெல்லாம் ஒன்னு இல்லமா மொத லைட் ஆப் பண்ணு காலேல வேமா எந்திக்கணும்" எனக் கூறிக்கொண்டேத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.


"இல்லடாமா..." என்று முத்தரசி ஆரம்பிக்க... வேகமாய் எழுந்து தன் Cellphone னை எடுத்து Headphones சைக் காதில் மாட்டிப் பாட்டுக் கேட்க ஆரம்பித்து விட்டாள்.


கொழுப்பு👿 கொழுப்பு 👿நல்லாச் செல்லம் குடுத்துக் கெடுத்து வச்சுருக்காங்க....நான் பேசிட்டே இருக்கேன் காதுல Headphone னை மாட்றத பாரேன் என மனதுக்குள் பொருமினாலும் முத்தரசியின் கண்களோ தன் மகளை வாஞ்சையாய் வருடியது....
என்னனாலு எங்களப் பிரியக் கஷ்டமா இருக்கும்ல என எண்ணிக்கொண்டேத் தன் மகளின் அருகில் படுத்து சிறிது நேரத்தில் உறங்கி விட்டாள்.


உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த சவிதா படக்கென எழுந்து அமர்ந்தாள்.


அவள் தன் அம்மா ஏதேனும் பேசிக்கொண்டிருப்பாள் என Headphone னை மட்டும் காதில் மாட்டினாள் எந்தப் பாடலயும் கேட்கவில்லை.....தற்போது அவள் ரிங்டோன் ஒலிக்க பதறிவிட்டாள்.
அமைதியாய் போனுடன் குளியல் அறைக்கு சென்றுக் கதவைத் தாழிட்டாள்.


காலை ஏற்றுப் பேசியவள் முகம் மாற வெளியே வந்து டிரஸ்ஸிங் டேபிள் மேல் இருக்கும் கார் சாவியை எடுத்துக்கொண்டாள்.
தன் அண்ணியும், மாங்கா மண்டயும்(ரவி வர்மன்)தரையில் படுத்திருக்க அவர்களை மிதிக்காமல் நடந்து ரூம் கதவைத் திறந்து வெளியேப் போனாள்.


அந்த ஹால் முழுதும் கும் இருட்டு மெது மெதுவே போனில் வெளிச்சம் பரப்பி நடந்து சென்று வெளி வாசலை அடைந்தாள்.
நுழைவாயிலில் இருந்த பெரிய கட் அவுட்டில் அவளது உருவத்தைப் பார்த்தாள்.


ஒரு நிமிடம் தான் செய்யப்போவதை எண்ணி மனத்திற்குள் தன் செல்ல அப்பாவிற்கு ஒரு Sorry யை சொல்லிக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தாள்.


அவள் பயணமோ "ஆனந்தா மேன்சன்" னை நோக்கி இருக்க அவளது மனமோ தான் செய்யப்போகும் செயல் சரிதானா என தனக்குள் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருந்தது.


- தொடரும்
 
Messages
15
Reaction score
6
Points
3
2 💕...

அதிகாலை 4 மணி...


மண்டபத்தின் வாயிலில் வாழை மரம் கட்டப்பட்டிருக்க ;ராக்காயி சவுண்ட் சர்வீஸ் உதவியில் அத்தெரு முழுதும் சினிமாப் பாடல் கேட்டுக் கொண்டிருந்தது.


அதன் அருகில் மேஜைப் போட்டு அதில் வெவ்வேறு கிண்ணங்களில் கல்கண்டு,சந்தனம்,குங்குமம் வைக்கப்பட்டு இருந்தது.


இளவயது பெண்கள் இருவர் பட்டுச்சேலை உடுத்தி,சடையிட்டு,
பூச்சூடி வருவோரைப் பன்னீர்த் தெளித்து வரவேற்றுக் கொண்டும்,
தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டும்,வெண்ணிறப் பற்கள் தெரிய சிரித்துக்கொண்டும் இருந்தனர்.


அரும்பு மீசையை முறுக்கி விட்டவாரே இளவட்டங்கள் தங்கள் எதிர்காலத்தைத் தேடிக்கொண்டிருந்தனர்.
(அதாங்க கலர் கலர் ஆ பொண்ணுங்களப் பாத்து சைட்டடிச்சிட்டு இருக்காங்க...பாவம் அவுங்களு சீக்கிரம் செட்டில் ஆகனும்ல..😉😉)


அந்நேரம் மண்டபத்தின் உள்ளே இருந்து மணப்பெண்ணின் உறவுகள் வாயிலுக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தம் கண்களில் ஒரு எதிர்ப்பார்போடு சாலையைப் பார்த்திருந்தனர்.
சவிதாவின் சகோதரி முறைப்பெண்கள் ஆரத்தித் தட்டுடன் நின்று கொண்டிருந்தனர்.


கண்களைக் கவரும் வண்ண உடைகளில்,உதட்டில் புன்னகையும், கண்களில் குறும்பும் கொண்டு ஓடி விளையாடிக் கொண்டிருந்தக் குட்டி வாண்டுகள்..
தன் உடம்பு முழுதும் சிவப்பு, வெள்ளை ரோஜா பூவால் அலங்கரிக்கப்பட்ட சாம்பல் நிற மாருதி ஸ்விப்ட்டைக் கண்டு ..."அய்யா............மாமா
( மாப்பிள்ளை) வந்தாச்சு😍😍" என்று குதுகலித்தனர்.


ஸ்விப்ட்டின் கதவை நேத்திரன் திறக்க இறங்கினான் மணமகன்"மதிநந்தன்".


அந்நாந்துப் பார்க்க வைக்கும் உயரம்,கண்களைக் கூச வைக்கும் கலர்,எப்போதும் உதட்டில் உறைந்திருக்கும் புன்னகை என பச்சை சட்டை, சாம்பல் பேண்ட் ,கழுத்தில் ரோஜாப் பூ மாலையுடன் நின்று கொண்டிருந்தான்.


சவிதாவின் சகோதரிகள் ஆரத்தி எடுக்க...தன் எதிரெ இருந்த கட்அவுட்டில் தன் வருங்கால மனைவியை சைட்டடித்துக்கொண்டிருந்தான்.


"இதோ உன் மச்சான் வந்துட்டேன்டி என் ஜின்னுக் குட்டி" என மனதிற்குள் வழிந்துக் கொண்டிருக்க....


"இரு இரு ஜின்னு வா அப்டினா???..." என அவன் மனசாட்சிக் கேட்க...


"அது நான் சவிதாக்கு வச்ச செல்ல பேரு..."


"அடப்பக்கி உனக்கு லவ்ஸ் வந்தாலு வந்துச்சு அதுக்குனு பன்னுனா செல்லப் பேரு வைப்ப" என்க...


"ஏய் என் பொண்டாட்டி நான் என்னமோ கூப்புடுறேன் உனக்கு என்ன நீ முடிட்டு போ"என மதிநந்தன் தனது மனசாட்சியை அடக்க..


அதுவோ "எனக்கெதுக்கு வம்பு நீ பன்னு,பிரட்டு,பிஸ்கட்னு கூட கூப்பிட்டுக்கோ.."என சரண்டராகிவிட்டது...


ஆரத்தி எடுத்தப் பின்னும் உள்ளே செல்லாமல் அவன் நின்று கொண்டிருக்க


"Excuse me boss... இப்போ MN groups of companies Managing Director,MN Solutions Chairman Mr.MadhiNandhan & My one and only bro மதி கார்ல இருந்து எறங்குனாரு அவர் எங்கனு சொல்ல முடியுமா பிளிஸ்" என மதிநந்தனின் காதில் முணுமுணுத்தாள் அவனின் செல்லத் தங்கை தாரணி.


கட்டவுட்டில் சவிதாவைக் கண்டு அவன் ஜொள்ளியதை தாரணி கிண்டலடித்தாள்.


'அடியே ஜின்னு...உன்ன போட்டோல பாத்ததுக்கே சுத்தி உள்ளது மறக்குது நேர்ல பாத்தா....இவ்ளோ நாள் கட்டிக் காப்பாத்துன இமேஜ் டேமேஜ் ஆயிரும் போலயே இப்ப எப்புடி இந்த குள்ள வாத்த சமாளிக்க.. "என எண்ணிக்கொண்டே "அது வந்து தாரு மா "என்று ஒரு வெட்க சிரிப்பை உதிர்த்தான்.


" அட விடு தாரா இன்னிக்கு ஒரு நாள் தான் மச்சான் சிரிச்சி,சந்தோஷமா இருக்க முடியும் இனி அவனுக்கு இந்த ஆப்பர் எப்பக் கெடைக்குமோ"என மதியின் தோளில் கைப்போட்டவாரு வந்து நின்றான் MN Solutions Joint chairmanனும்,தாருவின் கணவனுமான விஷ்வா...


விஷ்வா சொன்னதைக் கேட்ட தாரு கோபமாய் ஏதோ சொல்ல வர...


"என்ன தாரு இன்னு உள்ள வராம இங்க நின்னுட்டிருக்கிங்க சவிதாவோட அப்பாவும்,அண்ணனும் உங்கள வரவேற்க தான் பார்த்துட்டு இருக்காங்க சீக்கிரம் உள்ள வாங்க" என கூறிச் சென்றார் மதி ,தாரு வின் தாய்,MN Groups of companies Joint chairman மகாலட்சுமி.


மகாலட்சுமி கூறிய பிறகே சுற்றுப்புறம் புரிய மூவரும் உள்ளே நுழைந்தனர்.அவர்களை நேத்ரனும்,சுந்தரமும் வரவேற்றனர்.


மதி நேரே மணமகன் அறைக்கு செல்ல அவன் பின்னே சென்ற விஷ்வாவை "விஷீ" என தாரணி அழைத்தாள்.


நம்ம பொண்டாட்டி கூப்புடுற டோனே சரி இல்லயே என நினைத்துக்கொண்டே விஷ்வா திரும்ப...அவன் நினைத்தது போல் அவள் உக்கிரமாய் முறைத்துக்கொண்டிருந்தாள்.


"ஏன் விஷு கல்யாணம் ஆனா ஆண் பிள்ளைகள் சந்தோஷம் போயிடுமா....சொல்லப்போனாப் பெண்கள் எங்களுக்கு தான் வருத்தம் அதிகம்."


"பிறந்து,வளர்ந்த எடத்தை விட்டுட்டு பார்த்து பழகுனதே இல்லாத எடத்துக்கு கணவன மட்டுமே நம்பி வந்து அவன் சொந்த பந்தங்களோட அனுசரிச்சி வாழறோம்" என தாருக் கேட்டுக்கொண்டிருக்க..


எல்லாப் பொண்ணுங்களுமே இத சொன்னா கோபப்படுவாங்க இவ லக்சரர் சும்மாவா விடுவா... மதியக் கலாய்ச்சு இவக் கிட்ட மாட்டிக்கிட்டேனே என மனதில் புலம்பிக் கொண்டிருந்தான் விஷ்வா...


"அது மதியக் கலாய்க்க சொன்னது தாரா மா நீயேன் சீரியசா எடுத்துக்குற.." என விஷ்வா சமாதானப்படித்திக் கொண்டிருக்க


"தாரு மா சித்து அழறான் இந்தாடாமா அவன கவனி "என கையில் தாருவின் ஆறு மாதக் குழந்தை சித்தார்த்தை ஏந்திக்கொண்டு நின்றார் அக்குடும்பத்தின் தலைவர், MN group of companies chairman வைத்தியநாதன்.


"அச்சச்சோ சித்துக்கண்ணா சாப்பிடலாம் வாங்க "என தந்தையின் கையில் இருக்கும் மகனை வாங்கிக் கொண்டு பசியாற்ற சென்றாள்.


"என்ன மாப்ள உங்க பிரண்ட்ஸ்குலாம் விலாசம் சொல்லிட்டிங்களா?எல்லாரும் எங்க வந்துட்டு இருக்காங்க".


"மதுரத் தாண்டிட்டாங்க மாமா..லோகேஷன் ஷேர் செஞ்சுட்டேன் ஒரு 1ஹவர்ல வந்துருவாங்க" என்றான் விஷ்வா.


மாப்பிளை அறையில் மதி தன் வாய்க்குள் காதல் பாடலை முணுமுணுத்தவாரே கட்டிலில் படுத்திருந்தான்.


அப்பொழுது தாருவிடம் வாங்கிய திட்டில் தலையை தொங்க விட்டுக்கொண்டு அவ்வறைக்குள் நுழைந்தான் விஷ்வா.


"வா மாப்ள ஏன் சோகமா இருக்க. அடி பலமோ"என மதி கிண்டல் செய்ய


"எப்டி மச்சான் கரெக்டா கண்டுபுடிச்ச"


"நீ தாருவ லவ் பண்ண காலத்துல இருந்தே அவளுக்கு புடிக்காதத செஞ்சு அவகிட்ட திட்டு வாங்கிட்டு உன்னோட முகத்தை சோகமா வச்சுப்ப.எனக்கு இத பாத்து பழகிடுச்சு டா..இன்னிக்கு கூட அவகிட்ட வாங்கி கட்டணுமா கொஞ்சம் அவள கோவப்படுத்தாமா இரேன்டா."என மதி சிரிக்க


"என்ன பாத்தா நக்கலா இருக்குல. இருடி மச்சான் நீயும் நாளைக்கு என் தங்கச்சி சவிதா கையால அடிவாங்குவேல அத பாத்து நானும் இதேபோல சிரிப்பேன் டா.."என திரைப்பட வில்லன் போல விஷ்வா எக்ஸ்பிரஷன் கொடுத்தான்.


அதே நேரம் மணமகள் அறை....


"என்ன அரசி மாப்பிள்ளை, சம்மந்தி எல்லாரும் வந்தாச்சு நீ அவுங்கள வரவேற்க வராம இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க" என சுந்தரம் கேட்டுக்கொண்டே உள்ளே வர...


வைஷுவும்,அரசியும் கண்ணில் நீருடன் அவரைத் திரும்பிப் பார்த்தனர்.


"என்னமா ஏன் அழறிங்க பாப்பா எங்க ரெடி ஆகிட்டாளா இப்ப அரை மணில அய்யர் நிச்சயத்துக்கு அழைச்சிருவாரு"என அவர் பதற...


"மாமா...சவிதாவ காணும்"


"என்ன!!!" என அதிர்ந்து தொப்பென கட்டிலில் அமர்ந்துவிட்டார் சுந்தரம்.

- தொடரும்.
 
Messages
15
Reaction score
6
Points
3
என் கதை சுடும் நிலவு!!! சுடாத சூரியனோடு வாசகர்களாய் பயணிப்பவர்கள் அதில் இருக்கும் நிறை குறைகளை கமெண்ட்ஸ் மூலம் சுட்டிக் காட்டினால் ஆசிரியருக்கு கதையை வேகமாக எழுத ஊக்கமாக இருக்கும்.
 
Messages
15
Reaction score
6
Points
3
Sure... Planned to update daily... If readers give huge response will post two episodes in a day😊..

Lets enjoy the double damaka just by giving simple comments. It may be positive or negative.

These are the only motivation for the author who spends his/her time and creativity. 😊

Thank u for your comment sis👍🏻

Stay tuned :)
 
Messages
15
Reaction score
6
Points
3
3 💕...

JK திருமண மண்டபம் மணமக்களின் சொந்தங்களால் நிறைத்திருந்தது. மஹாலில் நுழைந்ததும் பெரிய ஹால் இருக்க அதன் ஒருப்பக்கம் போட்டிருந்த மனையின் வலதுபுறம் இருந்த அறையில் இருள் சூழ்ந்திருக்க..

கட்டிலில் கால்களைச் சுருக்கி, கைகளை தலைக்கடியில் தலையணையாய் வைத்து அமைதியான துயிலில் இருந்தாள் சவிதா.

காதில் பாட்டு சத்தம் கேட்டுத் தன் இமைகளைப் பிரிக்க அவள் முயல... அயன் ராடால் அடித்தது போலத் தலை பாரமாக இருந்தது.

சிரமப்பட்டுக் கண்களைத் திறந்தவள் தனக்கு எதிரே ஏதோ ஓர் உருவம் இருப்பதைக் கண்டாள்.

அது யாரெனத் தெரியாமல் கண்களைக் கசக்கி விட்டுப் பார்க்க ஒரு நொடி அதிர்ந்தவள் மறுநொடி

"வியா பேபி" என அவ்வுருவத்தைக் கட்டிக்கொண்டாள்.அவ்வுருவமும் "சவி" என இவளை அணைத்துக் கொண்டது.

தன்னில் இருந்து அவ்வுருவத்தைப் பிரித்த சவிதா

"ஏன் நேத்து மாப்பிள்ளை அழைப்புக்கு வரல....நான் உன் மேல கோவமா இருக்கேன்" என முகத்தைத் திருப்பிக்கொள்ள....😏😏

(ஏம்பா இந்தப் புள்ளைக்கு தலேல அடிப் பட்டிருக்குமோ..இதுக்கே கல்யாணம் புடிக்காம தான் வெளிய வந்துச்சு..இப்போ அந்த வியாப் புள்ள வரலனுக் கோச்சிக்குது...)

தன் கைக் கொண்டு அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பிய வியா , "சவி..அத்து எமர்ஜன்சி கேஸ்னு ஹாஸ்பிடல் போய்ட்டார்.அவர் வந்ததும் கெளம்பி வர்ரோம்னு சொன்னேன்ல டி....பிளீஸ் கோச்சுக்காத டீ" என கெஞ்சிக்கொண்டிருக்க....

அவ்வறையில் இருந்த குளியல் அறையில் இருந்து வெளிவந்தான்
சவிதாவால் வியா பேபி என அழைக்கப்பட்ட விகல்யாவின் கணவன்(அத்து )டாக்டர் ஹரி.

"என்ன வியா உன் பிரண்ட் ஏன் நேத்து ட்ரான்ஸ்பார்மர்க் கூட சண்டப்போட்டுட்டு இருந்தானுக் கேட்டியா???"என விகல்யாவிடம் கேட்டுக்கொண்டே சவியை முறைத்தான் ஹரி.

"ஏன்டா ஆந்தக்கண்ணா(ஹரி),நான் வியாக்கு மட்டும் தான் பிரண்டா!உனக்கில்லையா?" என பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டாள் சவிதா.

"நான் சொன்னதை கேட்காதவங்கல என்னோட பிரண்ட்ஸ் லிஸ்ட்ல வச்சுக்கிறது இல்லை " ஹரி காரமாய் மொழிய அதில் நாடியை தோள்பட்டையில் இடித்து பழிப்புக் காட்டினாள் சவிதா.

"இவன பாரு வியா பேபி. நான் அவன் பிரண்ட்ஸ் லிஸ்ட்ல இல்லனு சொல்றான். உன் அத்துவ என்னனு கேளு?" என சவிதா வியாவிடம் புகார் குடுத்தாள்.

"அவர கேட்கறது இருக்கட்டும்.நீ கார் எடுத்துட்டு எங்க கிளம்புன சவி?அதுதான் அத்து கோவமா இருகாங்க."என வியா வினவ.

அவளின் கேள்வி நேற்று இரவு தான் கார் எடுத்துக்கொண்டு செல்ல
திட்டமிட்டிருந்த இடத்தை நினைவு படுத்த இருவரையும் பார்த்துத் திரு திருவென முழித்தவள்...

"நான் கல்யாணம் வேண்டான்னு தான வெளிய போனேன் என்னை மறுபடியும் மண்டபத்துக்கே கூட்டிட்டு வந்துட்டீங்களா?"என வியாவின் கேள்விக்கு சம்மந்தம் இல்லாத கேள்வியை சவி கேட்க

மற்ற இருவரும் அவளை வெட்டவா!குத்தவா! என பார்த்தனர்.

"முதல்ல வியா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு சவி "என்றான் ஹரி

"அது மதிநந்தன் கிட்ட கல்யாணத்த நிறுத்த முடியுமானு இன்னோரு தடவ கேட்கலாம்னு நெனச்சேன்."

"அவரோட போன் நம்பர் என்கிட்ட இல்ல..அதான் அவர் ஸ்டே பண்ணிருந்த ஆனந்தா மேன்ஷனுக்கே போய் அவர பாத்து பேசலாம்னு கார் எடுத்துட்டு கிளம்புனேன் "என்றாள் சவிதா தலையைக் குனிந்தவாரே...

அவளின் பதிலில் அவளை பைத்தியமோ என பார்த்த ஹரி

"இங்க பாரு சவி, நீ பயப்படுற அளவுக்கு கல்யாணம் ஒன்னும் பயங்கரமான விஷயம் இல்ல.. நீ மதிக்கு வைப் ஆகணும்கிறது விதி. இல்லனா இந்தக் கல்யாணத்த நிறுத்த நீ எவ்வளவோ முயற்சிப் பண்ணியும் ஏன் முடியல?? என கோவமாய் கேட்டான்.

ஆமா! ஹரி கேக்கறதும் சரி தான எல்லா விஷயத்துலயும் என் சந்தோஷத்த மட்டும் யோசிக்கிற அப்பா நான் எவ்வளவோ தடவ வேண்டானு சொல்லியும் இந்த கல்யாண விஷயத்தில மட்டும் காம்ப்ரோமைஸ் ஆகவே இல்ல.

பொண்ணு பாக்க வந்த அன்னிக்கே அந்த வெள்ள பூதம் (வேரயாரும் இல்ல மதிய தான் இவ்ளோ மரியாதையா நினைக்கிறா.....😝😝)கிட்ட கல்யாணத்துல இஷ்டம் இல்லனு சொல்லியும் ஏதேதோ பேசி நம்மள கன்பியூஸ் பண்ணி ஒத்துக்க வச்சுட்டான்.

நேத்தும் நான் பண்ண பிளான் சொதப்பி இந்த ஆந்தக்கண்ணன்டயும்(ஹரி),
அமுக்குனிட்டயும்(வியா) மாட்டிக்கிட்டேன்...என நினைத்தவாரே ஹரியையும்,வியாவையும் பார்த்தாள்.

"அதுவும் இல்லாம காலம் பூராவும் ஔவையார் மாதிரி கல்யாணம் பண்ணாமயே வா இருக்க போற?"அவளை கிண்டலடித்தான் ஹரி.

அவளுக்கும் அப்படி இருக்க விருப்பம் தான் எனினும் தாய், தந்தை அனுமதிக்க வில்லையே! மேற்படிப்பு படித்து நல்ல வேலைக்கு செல்ல ஆசைக் கொண்டவளை ஆயிரம் காலத்து பயிர் என என்னும் உறவுக்குள் பினைக்க முயல்கின்றனர்.

ஹரியின் கேள்வியில் அங்கு ஏற்பட்ட அமைதியை விரட்டியது வியாவின் வினா...

"நைட் போன் பண்றப்போ மண்டபத்துல இருக்கறதா சொன்னியே. எப்போ வெளிய போன சவி?".

"நீ பேசிட்டு வச்சதும் கிளம்பிருப்பா.. நம்ம வந்துட்டா தான் மேடமால எந்த திருட்டு வேலையும் பாக்க முடியாதே"என கடுகடுதான் ஹரி.

"ஏன்டா எண்ணைல போட்ட கடுகு போல பொறிஞ்சுட்டே இருக்க?"என பாவமாய் கேட்டாள் சவிதா.

"கல்யாணத்துக்கு முதல் நாள் நைட் யாருக்கும் தெரியாம மண்டபத்த விட்டு ஓடுனா உன்ன திட்டாம கொஞ்சவா செய்வாங்க. ஏதோ வழில நாங்க பாத்தோம் அதுனால உன்னைய திரும்ப இங்கயே கூட்டிட்டு வந்துட்டோம். இதே நீ வெளிய போனது எல்லாருக்கும் தெரிஞ்சுருந்தா எவ்ளோ பிரச்சனை ஆகியிருக்கும்?" படபடத்தான் ஹரி.

சவிதா உம்மென்று இருக்க..

"இங்க பாரு சவி ... உன்னைய ரொம்ப புடிச்சு தான் மதி கல்யாணம் பண்ணிக்கப் போறாரு. இல்லனா பொண்ணு பாக்க வந்த அன்னிக்கு நீ "Not interested in marriage"னு சொல்லியும் உன்னய சம்மதிக்க வச்சு இப்போ கல்யாணம் வர வந்துருப்பாரா?" வியா மென்மையாய் வினவ

"பொண்ணு பாக்க வந்தப்போ மதிநந்தனும், நானும் செஞ்சுகிட்ட ஒப்பந்தமும்,நா கல்யாணம் வேண்டானு சொல்றதுக்கான காரணமும் நல்லவேளை இவுங்களுக்கு தெரியாது. அது மட்டும் தெரிஞ்சுது ஹரி என்னைய தோல் உரிச்சு உப்பு கண்டம் போட்டுடுவான்."என சவிதா தன் மனதோடு பேசிக்கொண்டிருக்க..

" பாப்பா" என அழைத்துக்கொண்டே சுந்தரம் அவ்வறைக்குள் வர அவர் பின்னே நேத்ரன்,அரசி,வைஷி வந்து கொண்டிருந்தனர்.

கட்டிலில் சவியின் பக்கத்தில் அமர்ந்து அவள் தலையைத் தடவிய தந்தையின் தோளில் வாகாய் சாய்ந்துக்கொண்டாள் .

" ஒரு நிமிஷம் உன்னக் காணாம...
உனக்கு எதும் ஆபத்தோனு பயந்து போயிட்டேன்டா" எனத் தன் கண்களில் வழிந்தக் கண்ணீரை சுந்தரம் துடைக்க....

இந்தக் கண்ணீருக்கு காரணம் நீ தான் என ஹரியின் குற்றம் சாட்டும் பார்வையில் தன் தலையைக் குணிந்துகொண்டாள் சவிதா.


- தொடரும்.
 
Last edited:
Messages
15
Reaction score
6
Points
3
4 💕...

சவிதா தங்கள் அறையில் இருக்கும் காரணத்தை சொல்லத் தொடங்கினான் ஹரி.

"சாரி மாமா ....நேத்து மாப்பிள்ளை அழைப்புக்கு வராததால நைட் 10க்கு விகல்யா கால் பண்ணி சவிய சமாதானம் பண்ணா..."

"இன்னும் அரைமணில நாங்க மண்டபத்துக்கு வந்துடுவோம்னு சொன்னதும் எங்கள நேர்லப் பாத்து மிச்ச சண்டயப்போட தூங்காம சவி வெயிட் பண்ணிட்டு இருந்தா...நாங்க வந்ததும் எங்களுக்கான ரூம் கீ வாங்க நேத்ரன் அண்ணா ரூமுக்கு நான் போயிட்டேன்".

"அதே நேரம் சவிதா அவ ரூம்ல இருந்து வெளிய வந்து விகல்யா கிட்ட பேசிட்டு இருந்தா...நான் கீ வாங்கிட்டு வந்ததும் மூணு பேரும் இந்த ரூமுக்கு வந்துட்டோம்."

"இவுங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிட்டே இருந்துட்டு அப்டியே தூங்கிட்டாங்க.காலேல எந்திச்சதும் தான் எனக்கு சவியத் தேடுவிங்களேனு தோணுச்சு."

"அதான் நேத்ரன் அண்ணாக்கு போன் பண்ணி சவி எங்க ரூம்ல இருக்கத சொன்னேன்." என தனது தாய் மாமனான சுந்தரத்திடம் பொய் பாதி மெய் பாதி கலந்து கூறினான் ஹரி.

அவன் கூறியவற்றை வாய் பிளந்து ஆவெனப் பார்த்துக் கொண்டிருந்தனர் சவியும் ,வியாவும்.

அதே நேரம் நேற்று இரவு நடந்ததை நினைத்துப் பார்த்தாள் வியா...

ஹரியும்,வியாவும் காரில் மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

"ஏன்டா உம்முனு இருக்க" -- ஹரி.

"நீங்க ஹஸ்பிடல் போயிட்டிங்க அதான் இன்னிக்கு பங்ஷனுக்கு வர முடியலனு சொல்லிட்டு இருக்கும்போதே போன கட் பண்ணிட்டா.அடுத்து நான் கால் பண்ணப்பவும் சவி அட்டெண்ட் பண்ணல அத்து " -- வியா.

"அவ நம்ம வரலயேனு கோபமா இருந்துருப்பா.இப்ப கால் பண்ணு அட்டெண்ட் பண்ணுவா." -- ஹரி.

வியா சவிக்கு கால் செய்து ஸ்பீக்கரில் போட்டாள்.

" சொல்லுடி"-- சவிதா .

"டீ... சவி , சாரி டி செல்லம்.இதோ மதுரைல இருந்துக் கெளம்பிட்டோம் டீ....இன்னு 30 Mins ல அங்க இருப்போம்." -- வியா.

" சரி டி..வாங்க..." -- சவிதா .

"எதும் கோபமா டி" -- வியா.

"இல்ல லூசி.சீக்கிரம் வாங்க.I am waiting..."-- சவிதா

''ஹான் சரிடி பாய்" -- வியா.

போனைக் கட் செய்ததும் "கரெக்டா சொன்னிங்க அத்து அவ அட்டெண்ட் பண்ணி ஹாப்பியாப் பேசிட்டா.."என்றாள் வியா.

"இல்ல வியா அவ ஹாப்பியாப் பேசல."-- ஹரி.

"என்ன அத்து சொல்றிங்க..."--வியா.

" ஆமா டா..அவ எதோ யோசிச்சிட்டு இருக்கா.இல்லனா நம்ம பங்ஷனுக்கு போகாம இருந்ததுக்கு உன்னயும்,என்னயும் நாலு நல்ல வார்த்தை சொல்லி அர்ச்சனப் பண்ணாம போன வச்சிருக்கமாட்டா. அவ நம்மப் போறதுக்குள்ள ஏதோப் பண்ணப் பிளான் பண்ணீட்டா." எனக் கூறிக்கொண்டேக் காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.

வியாவின் முகத்திலோ கடவுளே நாளைக்குக் கல்யாணம் நல்ல படியா நடக்கனும் என வேண்டுதலும், சவி என்ன பண்ணக் காத்திருக்காளோ என்ற பீதியும் மாறி மாறி பிரதிபலித்தது...

அதே நேரம் மண்டபத்தில் இருந்து காரைக் கிளப்பிக் கொண்டு சென்ற சவிதாக்கோ தான் செய்யப்போவது சரிதானா என்ற குழப்பம் இருந்தது.

எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்த மனத்திற்கு; மூளை அவள் செய்யப்போவது சரியே என அறிவுரை வழங்கிக் கொண்டே எதிரே வந்த லாரியை கவனிக்கிமால் விட்டது.

ஒரு சில நொடிகளில் தான் செய்யப்போவது சரியென ஒரு முடிவுக்கு வந்தவள் அசுர வேகத்ததில் வந்து கொண்டிருந்த லாரியைப் பார்த்து அதிர்ந்தாள்.

அது காரை உரச வரும் சமயம் சுதாரித்து ஸ்டேரிங்கை ஒடித்துத் திருப்ப அருகில் இருந்த ட்ரண்ஸ்பாமரில் மோதி நின்றது கார்.

வேகமாய் மோதியதில் அவள் தலை ஸ்டியரிங்கில் மோத இவ்வளவு நேரம் நடத்தியப் பட்டிமன்றத்தில் மனதும் மூளையும் களைத்துப் போக சிரிது சிரிதாக கண்கள் சொருக மயங்கிச் சரிந்தாள்.

ஹரியும்,வியாவும் மண்டபத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
கிளைச் சாலையில் வண்டியைத் திருப்பப் பச்சைப் போடில் வெள்ளை நிறத்தில் பூக்குடி வீதி என எழுதப்பட்டு இருந்தது.

வழிகாட்டியின் பக்கத்தில் இருந்த ட்ரண்ஸ்பாமரில் ஒரு கார் மோதி நிற்பதைக் கண்ட இருவரும் அதிர..

"அத்து..." என அழைத்துக்கொண்டே அவனை நோக்கி வியாத் திரும்ப...
ஹரி இறங்கி அக்காரினை அடைந்திருந்தான்.

அவன் பின்னோடு சென்றாள் வியா.

ஹரியோ கதவைத் திறக்க முயல அது உள்ளே லாக் செய்யப் பட்டிருந்தது.

"அத்து...யாராயிருக்கும்?" பதட்டமாய் வியா வினவ

"நம்பர் பிளேட்டப் பாரு.நேத்ரன் அண்ணாக் கார் தான்" என்றான் அவள் கணவன்.

"அச்சோ...அத்து சீக்கிரம் கதவ திறக்கப் பாருங்க..."

காரைச் சுற்றி வந்து மறுப்பக்கம் பார்க்க..அக்கதவின் கண்ணாடி சிறிது இறங்கியிருந்தது.

அதன் இடைவெளியில் கையிட்டு லாக்கை விடுவித்து கதவைத் திறந்தான்.

ஸ்டியரிங்கில் தலைக் கவிழ்த்திருந்த சவியைக் கண்டு இருவரும் பதறினர்.

வியா அவளை நிமிர்த்த...

தன் காரில் இருந்த ஸ்டெத்தும்,
பஸ்ட்டு எய்டு கிட்டும் எடுத்து வந்து அவளைப் பரிசோதித்தான் ஹரி.

"அத்து...என்னாச்சு?"😢😢

"தலேல அடிப்பட்டு மயக்கமாயிட்டா. ஸேடேட்டிவ் போட்டுட்டேன் நல்லாத் தூங்குவா.".

"தலேல அடிப்பட்டுருக்கே வேறேதும் பிரச்சனை இருக்காதுல அத்து"

"இல்லமா. பெயின் இருந்தா ஸ்கேன் எடுத்துப் பாத்துக்கலாம்.இப்போ சீக்கிரமாக் கெளம்பலாம்.
மண்டபத்துல சவியக் காணுமேனுத் தேட ஆரம்பிக்கக்குள்ள இவளக் கூட்டிட்டுப் போயிடனும்."

"நான் இந்தக் கார டிரைவ் பண்றேன்.நீ நம்மக் கார் எடுத்துட்டு என்னயப் பாலோப் பண்ணு."என்றான் ஹரி.

சவிதாவைப் பின் சீட்டில் படுக்க வைத்துவிட்டு...டிரைவர் சீட்டில் அமர்ந்து சவி ஓட்டி வந்தக் காரை ஸ்டார்ட் செய்தான் ஹரி.

வியாவும் மற்றொரு காரில் ஹரியைப் பின் தெடர்ந்தாள்.

"யாரப் பாக்க இன்னேரம் கெளம்பி வந்துருக்கா!வந்தது தான் வந்தா கவனமானாச்சு கார ஓட்டீர்காளா! இடியட்...இப்டி தலேல அடிப்பட்டு..சே.."என மனதில் சவியை திட்டிக் கொண்டே மண்டபத்தை நெருங்கி இருந்தான்.

நுழைவு வாயிலை அடைந்ததும் ஹரி மட்டும் உள் சென்று நேத்ரனிடம் இருந்து தங்களுக்கான அறை சாவியை பெற்று வந்தான்.

கணவன்,மனைவி இருவரும் கை தாங்கலாய் சவிதாவை அவர்கள் தங்க போகும் அறைக்கு அழைத்து வந்து கட்டிலில் படுக்க செய்தனர்.

"அத்து... சவிய அப்பா அம்மா தேடுவாங்களே. அவ இங்க இருக்கத நேத்ரன் அண்ணா கிட்ட சொல்லலியா நீங்க."

"இல்ல வியா. அண்ணா நல்ல தூக்கத்துல இருந்தாங்க. அண்ணாவோட ரூம்ல இருந்த ஒருத்தர் தான் சாவிய எடுத்து தந்தாரு. அதுனால காலேல எந்திச்சதும் சொல்லிக்கலாம். இப்போ எல்லாருமே தூங்கிட்டு இருப்பாங்க."

"சரி அத்து "

"நீ இரு.கார்ல இருந்து நம்ம லக்கேஜ்ஜ எடுத்துட்டு வரேன்."

"ம்ம்...அத்து,சவி வந்த கார் சாவி இந்தாங்க"

"ஹான் காலேல நேத்ரன் அண்ணாட்ட கீழ இருந்து எடுத்ததா சொல்லிக் குடுத்துக்கலாம் "
அதை வாங்கி தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டான்.

ஹரி பேகை எடுத்து வந்ததும் உடை மாற்றிவிட்டு தரையில் பெட்ஷீட் விரித்து படுத்துவிட்டனர் இருவரும்.

இரவு நேரம் கழித்து தூங்கியதால் காலையில் கண் விழிக்க தாமதம் ஆகிட சவிதாவை காணவில்லை என அவள் பெற்றோர் அறிந்த பின்பே சவி இங்கிருக்கும் விஷயத்தை நேத்ரனுக்கு சொன்னான் ஹரி.

ஒருவாறு சவிதா வெளியே சென்றது யாருக்கும் தெரியாமல் சூழ்நிலையை அழகாக சமாளித்த தனது கணவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த வியாவின் கவனத்தை "நேரம் ஆயிட்டது. சீக்கிரம் பாப்பாவ கூட்டிட்டு போய் ரெடி பண்ணுங்க "என்ற சுந்தரதின் வாக்கியமே கலைத்தது.

"நீங்களும் குளிச்சுட்டு வெரசா வாங்க பா.."என வியா, ஹரியை பார்த்தார். அடுத்த நொடி பரபரவென திருமண வேலைகளில் இறங்கிவிட்டார் அந்த அன்பு தந்தை.

-தொடரும்.
 
Top Bottom