Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited by a moderator:

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
வணக்கம் சகாப்தம் வாசகர்களே,🙏

நான் உங்கள் ஆதிரை..🥰
முதன் முதலாக இந்த சகாப்தம் தளத்தில் ஒரு கதையை, அதுவும் ஒரு போட்டிக்காக
கதையை எழுதுகிறேன். நிறைய தளங்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன். பலர் என்னுடைய
எழுத்துக்களைப் பாராட்டி சொல்லும் போது கிடைக்கும் சந்தோஷமே அலாதி தான். உண்மையான பரிசே
உங்களுடைய பாராட்டுக்களும், விமர்சனங்களும் தான். அதை எப்போதும் நான் ஏற்கிறேன். என்னுடைய
எழுத்துக்களில் ஏதேனும், குறை இருந்தாலும், அதை நீங்கள் சுட்டிக் காட்டுங்கள். அது என்னுடைய வளர்ச்சிக்கு
வழி வகுக்கும். இதோ, என்னுடைய முதல் கதையை இந்தத் தளத்தில் பதிவிடுவதற்க்கு மகிழ்ச்சி கொள்கிறேன்.
இதற்க்கு உதவிய, மற்றும் இப்படி ஒரு அழகான வண்ணங்கள் போட்டியை நடத்த ஏற்பாடு செய்த நித்யா கார்த்திகன் சகோகதரிக்கு என் மனமார்ந்த நன்றிகள், மற்றும் பாராட்டுக்கள். எப்பொழுதும் போல உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்,

ஆதிரை....🥰😌😊☺️
 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 1


ராக்கம்மா கையத்தட்டு..

புது ராகத்தில் மெட்டுக்கட்டு..

அடி ராக்கோழி மேளம் கொட்டு..

இந்த ராசாவின் நெஞ்சத் தட்டு..

ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜா..

ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜா..”


“யப்பா டேய்.. இன்னைக்கு என்ன பஞ்சாயத்து நடக்கப் போகுது.? நீ என்னடான்னா ரேடியோல ராக்கம்மாவ கையத்தட்டச் சொல்லி பாட்டு போட்டுட்டிருக்க.? கொஞ்ச நேரம் நிறுத்தறியாப்பா.” என்று ஊரில் முக்கியமானவர் ஒருத்தர் டீக்கடைக்காரரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“ஏங்கய்யா. ரேடியோல அவங்களா பாட்டுப் போட்டா, நான் என்ன பண்றது.? ஏதோ, கடைல வந்து டீ குடிச்சுட்டு போறவங்களுக்கு பொழுது போகுமேன்னு தான் ரேடியோவப் போட்டு விடறேன். அது உங்களுக்குப் பொறுக்கலையா.?” என்றார் டீக்கடைக்காரர்.

“ஏண்டா, எங்களுக்குப் பொழுது போறதுக்கா.? இல்ல, உனக்கு பொழுது போறதுக்கா.?” என்றபடி சூடாகப் போட்ட வடையை ருசித்தபடியே கேட்டார் இன்னொருவர்.

“எப்படியோ எல்லாருக்கும் பொழுது போகும் தானுங்களே.? அப்படியே உலக நடப்பையும் தெரிஞ்சுக்கிட்ட மாதிரி இருக்கும். நமக்கு இந்த பேப்பரெல்லாம் படிக்க வராதுங்க.” என்றார் டீக்கடைக்காரர் அன்றைய செய்தித்தாளை ஒருவருக்கு கொடுத்தபடி.

“ஆமாண்டா, பேப்பர் படிக்கத் தெரியாது. ஆனா, பேப்பர விக்க மட்டும் தெரியும்.” என்று இன்னொருவர் நக்கலாகப் பேசினார்.

“அது பொழைப்பாச்சுங்களே. தெரிஞ்சாலும், தெரியாம இருந்தாலும் செஞ்சுதான ஆகணும். உங்க எல்லாரையும் ஒண்ணு கேக்கறேன். காலங்காத்தாலயே என்னை வம்பிழுக்க சேர்ந்தாப்படி வந்துட்டிங்களா எல்லாரும்.?” என்று டீயை ஒருவருக்கு ஆற்றியபடியே பேசினார் டீக்கடைக்காரர்.

“உன்னை வம்பிழுத்து எங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது.? சும்மா பேசறது தான். ஏம்பா இன்னைக்கு நம்ம பஞ்சாயத்துல நம்ம பெரியசாமி பக்கம் தீர்ப்பு வருமா.? இல்ல அந்த ரங்கா பக்கமா தீர்ப்பு சொல்லுவாங்களா.?” என்று ஒருவர் சுவாரஸ்யமாய்க் கேட்க,

“அட, இதென்னாப்பா கேள்வி. கண்டிப்பா நம்ம பெரியசாமி பக்கமாத்தான் தீர்ப்பு வரும். பஞ்சாயத்து தலைவருக்கு அவன் வலது கையாச்சே. அவன் தப்பே பண்ணிருந்தாலும், அவன எப்படியும் நம்ம பஞ்சாயத்து தலைவரு தப்பிக்க விட்டுடுவாரு. இதுல என்னய்யா உனக்கு சந்தேகம்.?” என்றார் அவரின் சந்தேகத்தை தீர்த்து வைத்தவாறு இன்னொருவர்.

“எப்படியும் ஏழை ஜனங்களுக்கு தீர்ப்பு சாதகமா இல்லாம, பாதகமாத்தான் வரும்னு சொல்ற.?” என்றபடியே இவர்களின் கலந்துரையாடலுக்கு நடுவே வந்து நுழைந்தார் அழகேசன்.

அந்த ஊரின் பஞ்சாயத்து நடுவர்களில் ஒருவர். நியாயவாதி. அரசுப் பள்ளியில் வாத்தியார். ஊரில் உள்ள முக்கியமான பிரமுகர்களில் ஒருவர். அந்தக் காலத்திலேயே அந்த ஊரில் மெத்தப் படித்தவர் என்பதால், இவரைக் கேட்காமல் எந்த ஒரு நிகழ்வும் பஞ்சாயத்தில் நடப்பதில்லை.

“ஏப்பா. நாங்க அப்படியா சொன்னோம்.? நாங்க பாட்டுக்கு சும்மா பேசிட்டிருந்தோம். அவ்ளதான்.” என்று சற்று அடக்கி வாசித்தார்.

“நீங்க எல்லாரும் என்ன வேணும்னாலும் பேசுங்க. ஆனா, என்னைக்குமே தப்புக்கு கூட நிக்காதிங்க. ரங்கனுக்கு ஆதரவா இல்லாட்டியும் பரவால்ல. அவனுக்கு எதிரா யாரும் சொல்லாம இருந்தாலே போதும். உங்கள மாதிரி ஆளுங்கலால தான் இப்போ வரைக்கு நியாயங்கள் எல்லாமே செத்து போயிட்டிருக்கு.” என்று சற்று பொங்கி எழுந்தார் அழகேசன்.

“என்னப்பா அழகேசா, நாங்க ஏதோ பொழுது போகலன்னு இன்னைக்கு பஞ்சாயத்து நடக்கப் போறதப் பத்தி பேசிட்டிருந்தா, நீ என்னமோ நாங்க கொல குத்தம் பண்ண மாதிரியில்ல பேசிட்டிருக்க.” என்றார் இன்னொருவர் அவரை சாந்தப்படுத்த.

“சில சமயம் இந்த மாதிரி சிலர் பேசற விஷயங்கள் கூட, பெரிய அளவுல முடிஞ்சிருக்கு. அதனால, அதுவும் கொலைக் குற்றங்களுக்கு சமம் தான்.” என்றார் அவர்.

“ஏப்பா. நீ விட்டா, நாங்க பேசினதுக்கு எங்களுக்கு தண்டனையே வாங்கிக் கொடுத்துடுவ போலயே.? இவரு எப்பவுமே இப்படித்தான். நியாயம், தர்மம்னு பேசிக்கிட்டு.” என்று சலித்துக்கொண்டனர்.

அவர் அதன் பிறகு எதுவும் பேசவில்லை. அவர் அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அவர்களோ அவரைக் கண்டுகொள்ளாமல், அடுத்ததாக வேறு ஒரு விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்தனர்.

டீக்கடையில் பேசிய வார்த்தைகள் அனைத்தும் நிஜம். ஆனால், உண்மை எது.? பொய் எது.? என்று அவர் மட்டுமே அறிவார். இன்று 8 மணிக்கெல்லாம் பஞ்சாயத்து கூடி விடும். அதனால், அவர் மனம் முழுக்க அந்த ஒரு விஷயம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.

பொள்ளாச்சியின் வடக்கு மண்டலத்திற்க்கு உட்பட்ட கிராமம் தான் சங்கம்பாளையம். பஞ்சாயத்து வழக்குகளுக்குப் பெயர் போன கிராமம். இதன், மூன்று தலைமுறைகளாக பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டவரின் வாரிசுகளே, வழி வழியாக பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டனர். அதன் வழியில் வந்த மாணிக்கம் இப்போதைய பஞ்சாயத்துத் தலைவர்.

பெயர் வேண்டுமென்றால் மாணிக்கம். ஆனால், நிஜத்தில் இவருடைய பெயருக்கு இருக்க வேண்டிய குணம் இருக்காது. அநியாயங்களுக்கே இவர் உரித்தானவர். பணம் இருப்பவர்களை மட்டுமே மதிப்பார். கீழ்த்தட்டு மக்களைக் கண்டால் இவருக்கு ஆகவே ஆகாது. எள் அளவும் மதிக்க மாட்டார்.

இவருக்கு இந்தப் பதவியை ஏன் கொடுத்தார்கள் என்றால், இவருடைய தாத்தாவும், அப்பாவும் ஒரு நம்பிக்கையான தீர்ப்பைத்தான் இதுவரை மக்களுக்கு அளித்தார்கள். அதன் வழி இவரும் வந்ததால், அவர்களைப் போலவே இவரும் இருப்பார் என்று அனைவரும் நம்பியது தான் உண்மை. ஆனால், இவர் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இவரின் லட்சணங்கள் ஊர் முழுக்க தெரிந்துவிட்டது.

பணம் ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு, ஊரில் உள்ள சில பெரிய மனிதர்களை தன்னுடைய ஜால்ராக்களாக மாற்றி விட்டார். அதில் ஒருவர் பெரியசாமி. இன்னொருவர் சாத்தப்பன். இருவரும் ஒருவரையொருவர் மிஞ்சும் அளவுக்கு மாணிக்கத்திற்கு ஒரு ஐஸ் பெட்டியையே தலையில் வைப்பர்.

இவர்களை தனக்குக் கீழ் வேலை செய்பவர்களாக அவரே நியமித்தார். ஆனால், அழகேசனின் மெத்தப் படித்த திறமையும், நேர்மையான நடத்தையுமே அவரை அந்தப் பஞ்சாயத்தின் முக்கியமான அங்கமாக இருக்குமாறு அந்தத் தொகுதிக்கு உட்பட்டவர்கள் நியமித்தனர்.

அழகேசனின் வாதம் எப்பொழுதும் நியாயம் பக்கமே இருக்க, இவர்களோ அதை எதிர்க்கும் விதமாகவே எப்பொழுதும் பேசுவர். கடைசியில் அவர்களே ஒரு தீர்ப்பையும் வழங்கி விடுவர். இதில் அழகேசனுக்கு எந்த உடன்பாடும் இருக்காது. இதை மக்களும் நன்கு அறிவர். ஆனால், பணம் செய்யும் வேலையால் நடுத்தர மற்றும் பாமர மக்களும் எந்த நியாயமும் கிடைக்காத இந்த பஞ்சாயத்தை வெறுத்து ஒதுக்குகின்றனர்.

முதல் அளவுக்கு இந்தப் பஞ்சாயத்தில் யாரும் கலந்து கொள்வதில்லை. சில பேர் அநியாய தீர்ப்பால் பக்கத்து ஊரின் பஞ்சாயத்தில் சென்று நியாயம் கேட்கும் அளவிற்கு ஆகிவிட்டது. இப்பொழுதும், இந்த பஞ்சாயத்து நடக்கப் போவதற்க்கான காரணமே இதில், பெரியசாமி சம்பந்தப்பட்டிருப்பதால். அவரும் பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவராக இருப்பதால் வேறு வழியில்லாமல் நடக்கப் போகிறது.

எப்படியும் அவருக்கு சாதகமாகவே இந்தப் பஞ்சாயத்து தீர்ப்பு இருக்கும் என்றாலும், ஒரு ஆறுதலுக்காகவாவது தங்களது தரப்பு நியாயத்தை சொல்ல வேண்டும் என்று ரங்கராஜன் – கோகிலா தம்பதியிர் முறையிட்டுள்ளனர். இவர்கள் பக்கம் நியாயம் இருந்தாலும், அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்பது தான் கேள்விக்குறி.

இவையனைத்தையும் யோசித்துக்கொண்டே பஞ்சாயத்து கூடும் அந்த ஊரின் பெரிய ஆலமரத்தடிக்கு வந்தார் அழகேசன். சிலர் மட்டுமே கூடியிருந்தனர். அனைவர் பேச்சும் இதைப் பற்றித்தான். சிறிது நேரத்தில் ரங்கராஜன் – கோகிலா இருவரும் வந்து சேர்ந்தனர்.

சரியாக 8 மணிக்கு மாணிக்கம் தன் புதிய வெள்ளை நிற அம்பாசிடர் காரில் பந்தாவாக வந்திறங்கினர். ( நீங்கள் நினைப்பதைப் போல் நாட்டாமை பட சரத்குமாரைப் போல குதிரை வண்டியிலோ, அல்லது சின்னக்கவுண்டர் பட விஜயகாந்தைப் போல மாட்டு வண்டியிலோ வந்திறங்குவார் என்று எதிர்பார்த்தால் அது ஏமாற்றமே.) அவருக்குப் பின்னாடியே, பெரியசாமியும், சாத்தப்பனும் புல்லட் வண்டியில் வந்து இறங்கினர். அவர்கள் வருவதைப் பார்த்து அனைவரும் எழுந்து நின்றனர்.

அவர் வந்து அமர்வதற்க்கு முன்னரே ஒருவன், இலை, தழைகள் மற்றும் காக்கையின் எச்சம் காய்ந்து கிடந்த அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து, அவர்கள் அமர்வதற்க்கு ஒரு சிறிய ஜமக்காளத்தை விரித்து வைத்திருந்தான்.

அதனால், எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் அந்த இடத்தில் வந்து அமர்ந்தார். கூடவே பெரியசாமியும், சாத்தப்பனும் வந்து அமர்ந்தனர். பெரியசாமி வந்து அமர்ந்ததுமே ஒரு காக்கையின் எச்சம் அவர் சட்டை மேல் விழுந்தது.

“ஏய்.. அடச்சே.. இந்தக் காக்காவ, இன்னைக்கு தான் புது சட்டைய வாங்கி போட்டு வந்தேன். இது இப்படி பண்ணிட்டு போயிடுச்சு.” என்றபடி அருகில் இருந்த ஒரு ஆலமர இலையை எடுத்து, “டேய் பையா, இங்க வா. இந்தா இத இந்த இலைய வச்சு எடுத்துப் போடு.” என்று சொல்லிக்கொண்டிருக்க, ஒட்டுமொத்த பஞ்சாயத்தும் அவரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தது.

பலர் சிரித்துக்கொண்டிருந்தனர். “பண்ற அநியாயத்துக்கு இது தேவை தான்” என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர்.

சிலர் அதைப் பார்த்து, “அந்தாளுக்கு நல்லா வேணும். புது சட்டையப் போட்டுட்டு வந்த மூஞ்சியப் பாரு.” என்று திட்டிக்கொண்டிருந்தனர்.

இது ஒருபுறமிருக்க, அவன் இலையை எடுத்து எச்சத்தை தூக்கிப் போட்ட பிறகுதான் நிம்மதியாக அமர்ந்தார் பெரியசாமி. அதைப் பார்த்த சாத்தப்பனும் சிரித்துக்கொண்டிருந்தார். மாணிக்கமும், “என்றா பெரியசாமி. இன்னைக்கு உனக்கு ஆரம்பமே ரொம்ப அமர்க்களமா இருக்கும் போல இருக்குது.?” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டே கேட்டார்.

“தலைவரே இந்த சாத்தப்பன் தான் சிரிக்கிறான்னா, நீங்களுமா.?” என்று முகத்தை பாவமாய் வைத்தவாறு கேட்டுக்கொண்டிருந்தான். இவர்களின் உரையாடலை சட்டை செய்யாத அழகேசன், “ஏப்பா. பஞ்சாயத்து கூடிடுச்சு. இன்னும், எதுவும் பேசாம இருந்தா எப்படி.? நேரம் ஆகுது. சட்டுபுட்டுன்னு ஆரம்பிங்க.” என்று சற்று அதட்டலாகவே பேசினார்.

மூவரும் அவரை முறைத்தவாறே ஆரம்பித்தனர். முதலில் மாணிக்கம், “சரி சரி, எண்டா ரங்கா, சொல்லு உனக்கு என்ன பிரச்சன.? எதுக்கு புருஷனும், பொண்டாட்டியும் பஞ்சாயத்தக் கூட்ட சொன்னீங்க.?” என்று எதுவும் தெரியாத்தைப் போலவே பேசினார்.

“அய்யா, உங்களுக்குத் தெரியாதது இல்லீங்க. நாங்க ரொம்ப வருஷமா பெரியசாமி அய்யாவோட நிலத்த குத்தகைக்கு எடுத்து அதுல விவசாயம் பண்ணிட்டு வரோம்ங்க. எத்தனை நாளைக்கு தான் இப்படி குத்தகை நிலத்துல பண்றது.? அந்த நிலத்த நாமளே வாங்கிடலாம்னு முடிவு பண்ணி, சிறுகச் சிறுக சேமிச்ச பணத்த பெரியசாமி அய்யாகிட்ட குடுத்து அந்த நிலத்தை சொந்தமா வாங்கிக்கலாம்னு நினைச்சேனுங்க. என் பொண்டாட்டியோட அஞ்சு பவுன் நகையும், அப்பறம் கொஞ்சமா சேமிச்ச பணத்தையும் கொடுத்து பெரியசாமி அய்யாகிட்ட கொடுத்து நிலத்த வாங்கிக்கறேன்னு சொன்னேனுங்க. அவரும், சரின்னு சந்தோஷமா தரேன்னு தாங்க பேசினாரு. ஒரு மாசம் போகட்டும் அதை உனக்கு எழுதித் தரேன். அதுக்கு பதிவு பண்ற வேலை நிறைய இருக்குன்னு சொன்னாருங்க. நானும், அவர் மேல இருக்கற நம்பிக்கைல தாங்க போனேன். பெறவு பாருங்க, நான் ஒரு மாசம் கழிச்சு அந்த நிலத்தோட பத்திரம் வேணும்னு கேட்டப்ப தான், இவரு எந்த நிலம்னு கேட்டாரு.? எனக்கு ஒரு நிமிசம் பிடி தாங்கலங்க. அன்னைக்கு கொடுத்தேனே நகையும், பணமும்னு சொன்னா, இவரு நீ எப்போ அதெல்லாம் கொடுத்த.? நான் எப்போ வாங்கின.? என்னை ஏமாத்தறியா.? அப்படின்னு கேட்கராருங்க. என்கிட்ட இருந்த எல்லாத்தையுமே கொடுத்துட்டேனுங்க. பொண்டாட்டி போட்டிருந்த நகையும் கழட்ட சொல்லி குடுத்தேனுங்க. அவ கழுத்துல, காதுல இப்போ ஒண்ணுமில்லங்க. இவரு இப்படி சொல்றாருங்க. நாங்க ஏழை, பாழைங்க தான். ஆனா, பொய் சொல்லமாட்டோமுங்க. நீங்க தான் கொஞ்சம் அவர்கிட்ட விசாரிச்சு சரியான வழிய சொல்லனுமுங்க.” என்று தனது வாதத்தை முன்வைத்தார் ரங்கராஜன்.

“ஏய்யா பெரியசாமி, அவன் சொல்றது சரியா.? நீ சொல்லு என்ன நடந்தது.?” என்று மாணிக்கம் அவரைக் கேட்க, அதற்க்குள் அழகேசன் இடையில் புகுந்தார். “ஏப்பா, நீயும் இந்த வழக்க சேர்ந்தவந்தான.? நீ என்னதான் இந்த பஞ்சாயத்தோட ஒரு அங்கமா இருந்தாலும், நீயும் அவங்கள மாதிரி அங்க போய் நின்னு தான் எதுவா இருந்தாலும் பேசணும். அது தெரியாதா உனக்கு.” என்றார்.

பெரியசாமி அவரை முறைக்க, மாணிக்கமோ பஞ்சாயத்து மரியாதை கெடக்கூடாது என்பதற்க்காக, “அட, நம்ம வாத்தியாரு தாஞ் சொல்றாரு. நீதான் அங்க போய் நின்னு பேசேன்யா.” என்று சொன்னார். வேறு வழியில்லாமல் இறங்கிப் போய் அவர்களுக்கு எதிரே நின்று பேசினார்.

“எல்லாரும் ஒரு விஷயத்தப் புரிஞ்சுக்கோங்க. எங்கிட்ட கிட்டத்தட்ட மூணு ஏக்கரா நிலம் இருக்கு. அதுல, ஒரு சின்ன இடம் தான் இவங்க குத்தகைக்கு எடுத்திருக்கிறது. அதுல விவசாயம் பார்த்து எனக்கு மாசா மாசம், பணம் குடுக்கவே இவனுக்கு வருமானம் பத்தாது. போதாக் குறைக்கு ஒரு பொம்பளப் புள்ளைய வேற பெத்து வெச்சிருக்கான். அதுக்கு ஒரு நல்லது, கெட்டது பார்க்கறதுக்கே இவன் இன்னும் முக்கணும்.” என்று சொல்லிக்கொண்டிருக்க, பஞ்சாயத்தில் திடீர் சலசலப்பு.

“இங்க பாரு பெரியசாமி, பஞ்சாயத்துல தேவையான விஷயத்த மட்டும் தான் பேசணும். நீ பாட்டுக்கு பொம்பளப் புள்ள, அது இதுங்கற.? தேவையில்லாததெல்லாம் பேசாத.” என்று சற்று மிரட்டலாக அழகேசன் பேசினார்.

மாணிக்கமோ, “யோவ். உனக்கு அறிவு இருக்காயா.? எதுக்கு தேவையில்லாம பேசற.? என்னத்த சொல்லணுமோ, அத மட்டும் சொல்லுயா.” என்று சற்று அதட்டலாகப் பேசினார்.

தேவையில்லாமல் வாங்கிக் கட்டிக்கொண்டதை நினைத்து சற்று முழித்தவாறே, “அதாங்க, நான் என்ன சொல்றேன்னா. அதுக்கு தேவை செய்யறதுக்கே இவங்களுக்கு சரியாப் போகுமில்லைங்களா. அப்படி இருக்கும் போது அஞ்சு பவுன் நகை, அப்பறம் பணம் இதெல்லாம் எப்படிங்க என்கிட்ட கொடுக்க முடியும்.? நாஞ் சொல்றதும் சரிதானுங்களே.? அவன் பொண்டாட்டி நகைய எங்கயோ ஒளிச்சு வைச்சுட்டு, இப்படி புருஷனும், பொண்டாட்டியும் நாடகமாடுறாங்க. பெரிய மனுஷனப் பத்தி என்ன வேணும்னாலும் சொல்லலாம். எப்படியும் அவங்களுக்குத் தான் தீர்ப்பு சாதகமா வருன்ற நெனப்புல எம் மேல இப்படி ஒரு பழியப் போடறாங்க. சத்தியமா நான் எந்தப் பணமோ, நகையோ வாங்கலீங்க. இத நீங்க தானுங்க என்னன்னு பார்த்து விசாரிச்சு சரியான தீர்ப்பா சொல்லனுங்க.” என்று பெரியசாமியும் அவர் தரப்பு வாதத்தை வைத்து விட்டு வந்து அமர்ந்தார்.

அவரின் முகத்தில் எப்படியும் தனக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்ற மிதப்பு தெரிந்தது. மாணிக்கம் சாத்தப்பனுடனும், பெயருக்கென்று அழகேசனுடனும் விவாதித்தார்.

சில தரப்பு நியாயங்களைக் கேட்டார். “ஏண்டா ரங்கா, நீ பணம், நகையெல்லாம் குடுத்தேன்னு சொல்ற.? அதுக்கென்னடா சாட்சி. யாராவது முன்னாடி குடுத்தியா.? இல்ல நீ ஏதாவது எழுதி வாங்கின ஆதாரமாவது இருக்கா.?” என்று கேட்க,

“இல்லைங்கய்யா. நான் அவர்கிட்ட பணம் குடுக்கும் போது ஒருத்தருமே இல்லைங்க. அவர் மேல இருக்கற நம்பிக்கைல நான் எதுவும் எழுதி வாங்கலங்க. அதுதாங்க நான் பண்ண பெரிய தப்பு.” என்று தலைகுனிந்தார் ரங்கராஜன். அருகே, கோகிலா அழுதுகொண்டிருந்தார்.

“ஏண்டா பண்ற தப்பெல்லாம் நீ பண்ணிட்டு, இருக்கறவங்கள மாட்டி விடப் பார்க்கறியா.? நீ நிஜமாலுந்தான் பணம் குடுத்தியான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.” என்றார் சாத்தப்பன்.

“அய்யா. அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நாங்க ஏழைங்க. எங்களுக்கு அடுத்தவங்கள ஏமாத்தி கஞ்சி குடிக்கனும்னு ஒண்ணும் தலையெழுத்து இல்லைங்க. நாங்க ஏமாந்துட்டதாவே இருக்கட்டும். எங்களுக்கு அந்தப் பணமும், நகையும் வேண்டாம். பணத்த எப்ப வேணும்னாலும் சம்பாதிக்கலாம். போதும், நாங்க பஞ்சாயத்துக்கு வந்தது தப்பு தான்.” என்று அழுகையுடன் சொன்னார் கோகிலா.

“சரிடா ரங்கா. நான் வேணும்னா ஒண்ணு பண்றேன். நீ ஏதாவது சாட்சியோ, இல்ல ஆதாரமோ கொண்டு வா. உனக்காகத் தீர்ப்ப நான் அடுத்த மாசத்துக்கு கூட தள்ளி வைச்சிடறேன். சரியா. சந்தோஷமா.?” என்று மனசாட்சியே இல்லாமல் கேட்டார் மாணிக்கம்.

“சரிங்கப்பா. இதோட இன்னைக்கு பஞ்சாயத்து முடியுது. என்னைக்கு ரங்கா சாட்சியோ, ஆதாரமோ கொண்டுட்டு வரானோ, அன்னைக்கு இதுக்கு தீர்ப்பு வழங்கறேன். சரிதான.?” என்று ஏதோ உச்சநீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியதைப் போல் அங்கிருந்து கிளம்பினார் மாணிக்கம். கூடவே, பெரியசாமியும், சாத்தப்பனும் அவர்களை முறைத்துக்கொண்டே கிளம்பினர்.

என்றைக்கிருந்தாலும், இதற்க்கு நியாயமான தீர்ப்பைக் கொடுக்க மாட்டார்கள் என்று ஆணித்தரமாகத் தெரிந்தது. எதற்க்காக இவர்கள் பஞ்சாயத்துக்கு வந்தார்கள் என்றே பலரும் பேசினர். ஆனால், மாணிக்கம், பெரியசாமி மற்றும் சாத்தப்பன் மட்டுமே சிரிப்புடன் சென்றனர்.

நியாயமற்ற முறையில் நடந்த பஞ்சாயத்தில் தங்களுக்கு எந்தவித நியாயமும் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர் ரங்கராஜனும், கோகிலாவும். அவர்களுக்கு எந்தவித முறையிலும் உதவி செய்ய முடியவில்லையே என்று கவலையுடன் சென்றார் அழகேசன்.

இங்கே, நியாயம் என்பது கண்ணைக் கட்டி காட்டில் விட்ட ஆட்டைப் போல் ஆனது. எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் முடிந்து போன பஞ்சாயத்தை எண்ணி பலர் ஆத்திரத்தில், “இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா.?” என்று ஆளாளுக்குத் திட்டித் தீர்த்தது தான் மிச்சம்.

(தொடரும்...)

வார்த்தைகள் எண்ணிக்கை:1605
 
Last edited:

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

வாய்ப்பளித்ததற்க்கு நன்றி சகோதரி... 🥰 🙏
 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 2

பஞ்சாயத்தில் அவர்களுக்கு நடந்த அநியாயத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டே வீடு திரும்பினார் அழகேசன். பூட்டைத் திறந்து உள்ளே வந்தவர் வெருச்சோடிக் கிடந்த வீட்டில், எப்பொழுதும் போல அவர் அமரும் நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்தார். திரும்பவும் அதே யோசனை.

“அவர்கள் என்ன தவறு செய்தார்கள்.? ஏன் அவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை.? தான் எவ்வளவோ முயன்றும் அவர்களுக்கு எந்த ஒரு நியாயத்தையும் வழங்க முடியவில்லையே. மாணிக்கம் போன்றவர்களை பஞ்சாயத்திற்கு நடுவராக வைத்தால், நியாயம் என்பது காற்றில் பறக்கும் காத்தாடி போல, ஒரு நிமிடம் விட்டால் வேறெங்காவது பறந்து போய் கிழந்துவிடும். முட்டாள் தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இது போன்ற அநியாயங்களையும், அக்கிரமங்களையும் செய்ய முடியும்.? அனைத்தையும் இறைவன் எனும் ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். செய்த தப்பிற்க்கான தண்டனையை அவனே அளிப்பான்.” என்று மனதுக்குள் தனியாக பேசிக்கொண்டிருந்தார்.

திரும்பியவர் எழுந்து வந்தார். அங்கே மாலை அணிவித்திருந்த தன் மனைவியின் போட்டோவைப் பார்த்து உற்று நோக்கினார். அதில் அவரது பிம்பம் தெரிந்தது. அ.மணியம்மை, தோற்றம்:7/5/1963, மறைவு:15/9/1985 என்றிருந்தது அதில். மணியம்மை அதில் அழகாய் சிரித்துக்கொண்டிருந்தார். எப்பொழுதெல்லாம் தன் மனதுக்கு ஏதேனும் சங்கடம் வருகிறதோ அந்த நேரங்களில் எல்லாம் அழகேசன் அந்த போட்டோவின் முன் நின்று சிறிது நேரம் பேசுவார்.

அவரிடம் சொன்ன பிறகு, அவருக்கு மனது சிறிது லேசாகும். அதன் பிறகு அவர் அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவார். மணியம்மை இறந்து 9 வருடங்கள் ஆகிறது. ஆனால், இதுவரை அவருக்கு வேறு கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணமே வரவில்லை.

அழகேசனின் சொந்த ஊர் உடுமலைப்பேட்டை அருகே சிறிய கிராமம். பத்து ஏக்கரைக் கொண்ட சொந்த விவசாய நிலத்தை பராமரித்து விவசாயம் செய்து வந்தனர். அழகேசனின் கூடப்பிறந்தவர்கள் ஒரு அண்ணன், ஒரு தங்கை. அண்ணன் பட்டாளத்தில் போரின் போது இறந்து விட்டார். அவருக்கு கல்யாணம் ஆகவில்லை. வயதான தந்தை, தாய் மற்றும் தங்கையை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அவருக்கு வந்தது.

படிப்பில் ஆர்வம் கொண்டவர் 10-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று, பிறகு அந்தக் கால பி.யூசியை பொள்ளாச்சியில் கல்லூரியில் பயின்றார். ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்று, அரசுப் பள்ளி ஆசிரியராக ஆனார்.

இதற்க்கிடையில் அவரது தங்கை விசாலாட்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் திருவிழா கூத்து, நாடகங்கள் போடும் கோஷ்டியில் உள்ள நடேசன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டாள்.

நடேசனின் கூடப்பிறந்தவர்கள் அண்ணன் இரண்டு பேர், தம்பி ஒருவன். மூன்றாவதாகப் பிறந்தவர். அவரது அப்பா மேடை, கூத்து நாடகங்களில் பங்கேற்பவர் என்பதால், அப்பாவின் வழியே அதையே கற்று எந்த ஊர் என்றாலும், சென்று அதில் தன் திறமையை வெளிப்படுத்துவார்.

அப்படி ஒருமுறை உடுமலைப்பேட்டை அருகே நடந்த கூத்து நாடகத்தில் நடிக்கச் சென்றவரை மனதில் நினைத்தாள் விசாலாட்சி. அவரும் இயல்பாக பேசும் போது பழக ஆரம்பித்தவர்கள் பழக்கம், நெருக்கமான பழக்கம் ஆனது. அது வயிற்றில் குழந்தை உண்டாகும் வரை போய்விட்டது.

விசாலட்சியோ விஷயம் தெரிந்தால், வீட்டில் கண்டிப்பாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதே போல், உடனடியாக திருமணம் செய்யவில்லை என்றால் குழந்தை உண்டான விஷயமும் தெரிந்து விடும் என்று யாருக்கும் சொல்லாமல் அவனைத் திருமணம் செய்து கொண்டாள்.

நடேசனின் பெற்றோருக்கு விஷயம் தெரிந்து முதலில் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், அதன் பிறகு வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், தங்களுக்குத் தெரியாமல் நடந்த இந்தத் திருமணத்தால் பெரும் மனவருத்தத்திற்க்கு ஆளாயினர் அழகேசனின் பெற்றோர்கள். அவளை ஒதுக்கி வைத்தனர். அதன் பிறகு, அவளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று கேள்விப்பட்டு மனம் கேளாமல் சென்று பார்த்தனர். அதன் பிறகு, விசாலாட்சி மகன் குமரேசனுடன் அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு வந்து செல்வாள்.

குமரேசனுக்கு 2 வயது இருக்கும் போது, அழகேசனுக்கும் பொள்ளாச்சி அருகே உள்ள சங்கம்பாளையம் கிராமத்தில் இருந்த மணியம்மைக்கும் திருமணமானது. திருமணமான ஒரு வருடம் கழித்தே, அமுதன் வயிற்றில் உண்டாகினான். அவன் வயிற்றில் இருக்கும் போதிலிருந்தே மணியம்மைக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போனது.

அவருக்கு ஆசிரியர் பணி மாற்றலாகி சங்கம்பாளையம் அரசுப் பள்ளியிலேயே பணியாற்றினார். அதனால், மணியம்மை அவரது பெற்றோரின் கவனிப்பிலேயே விட்டுச் செல்வார். நிறைமாத கர்ப்பிணியாய் இருக்கும் போது, அவரது உடல்நிலை இன்னும் மோசமானது. பிரசவ வலி வந்த போது, அருகே உள்ள மருத்துவம் பார்க்கும் ஒரு வயதான பாட்டியே வந்து பிரசவம் பார்த்தார்.

ஆனால், அமுதன் பிறந்த போது அந்த நேரத்தில் ஏற்பட்ட அதிக உதிரப்போக்கின் காரணமாய், அப்பொழுதே அவர் இறந்து விட்டார். பிறந்து சில நொடிகளே ஆன, பிஞ்சுக் குழந்தையாய் அமுதனை விட்டு விட்டு மணியம்மை சென்றதை அறிந்து, அந்த ஊரே கண்ணீர் வடித்தது.

வேறொரு கல்யாணம் செய்து கொள்ள மனமில்லாமல் அவர் நினைப்பிலேயே வாழ்ந்து வந்தார் அழகேசன். பிஞ்சுக் குழந்தைக்கு பால் ஊட்டி, தாலாட்டி வளர்த்த்து அவனது அத்தை விசாலாட்சியே. அவன் பாதி நேரம் அவர்கள் ஊரில் தான் இருப்பான். அவ்வப்போது மட்டுமே இங்கு கூட்டிக்கொண்டு வருவார் அழகேசன்.

அமுதன் பிறந்து இரண்டு வருடங்கள் கழித்து விசாலாட்சிக்கு பெண் குழந்தை பிறந்தது. நடேசனும், அவரது குடும்பத்தினரும் அடைந்த சந்தோஷத்திற்க்கு அளவே இல்லை. ஏனென்றால், அவர்களது குடும்பத்தில் இரண்டு தலைமுறைகளாக பெண் குழந்தையே பிறக்கவில்லை. நடேசனின் பெற்றோருக்கும் சரி, அவரது அண்ணன் தம்பிமார்களுக்கும் சரி, பிறந்தவர்கள் அனைவருமே ஆண் குழந்தைகள். ஏன், நடேசனுக்கே முதலில் ஆண் குழந்தை தானே பிறந்தது.

அவர்கள் தலைமுறையே சாபம் அடைந்ததைப் போல் ஒருவருக்கு கூட பெண் வாரிசே இல்லாமல் இருந்தது. இதோ, இப்போது விசாலாட்சி இரண்டாவது உண்டாகி இருக்கும் போது,

“இதுவும் ஆண் குழந்தையாகத் தான் இருக்கும். நம் தலைமுறைக்குத் தான் மஹாலட்சுமியின் வாசமே கிடைக்கவில்லையே.” என்று அடிக்கடி அவளது மாமியார் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆனால், அவை அனைத்தையும் முறியடிக்கும் விதமாக வந்து அந்தப் பெண் குழந்தை பிறந்ததை எண்ணி நடேசனின் சொந்த, பந்தங்கள் அனைவருமே ஆச்சர்யப்பட்டனர்.

“டேய். நடேசா, நீ ஏதோ ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டன்னு கேள்விப்பட்டப்போ கொஞ்சம் சங்கடமா தான் இருந்தது. ஆனா, இப்போ தான் சந்தோஷமா இருக்கு. உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்குன்னு கேள்விப்பட்டோம். நீ ஏதோ ஜென்மத்துல புண்ணியம் பண்ணிருக்க.” என்று வாயார வாழ்த்தினர்.

சந்தோஷம் பிடிபடவில்லை அவர்கள் குடும்பத்துக்கு. நடேசன் அப்போதே, மனதில் அந்தக் குழந்தைக்கு ஒரு பெயரை சூட்ட வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அதை எவருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தார். விசாலாட்சிக்குக் கூட தெரியாது.

சொந்த, பந்தங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். ஊரே திருவிழா போல் திரண்டு நிற்க, பெயர் சூட்டு விழா என்ற ஒன்றே இல்லாத அந்தக் காலத்திலும், அதை வெகுவிமரிசையாக கொண்டாடினர். அனைவரும் என்ன பெயர் என்று கேட்ட போது கூட நடேசன் சொல்லவில்லை.

பெயர் சூட்டும் நேரம் வந்த போது, “இங்க பாருங்க, எங்க குடும்பத்துக்கு ரெண்டு தலைமுறையா பெண் வாரிசே இல்லாம போச்சு. எல்லாரும் சாபம்னு சொன்னாங்க. ஆனா, நான் நம்பினேன் எனக்கு பெண் குழந்தை பிறக்கும்னு. இதோ வந்து பிறந்துட்டா என் வீட்டு மஹாலட்சுமி. இவளுக்கு நான் ஒரு பெயர் சூட்டனும்னு இவ பிறந்தப்போவே நினைச்சி வச்சிருந்தேன். எங்க குடும்பமே இவள கோலாகலமா கொண்டாறாங்க, அதனால இவளுக்கு கோலாகலம்னு பெயர் வைக்கறேன்.” என்று சொல்லி குழந்தையின் காதில் மூன்று முறை அந்தப் பெயரை ஓதினார் நடேசன்.

அதைக் கேட்டு பலர் சிரித்தனர். “ஏம்பா. பொம்பளப் புள்ளைக்கு இப்படியா பேர் வைப்பாங்க.? வேற ஏதாச்சும் ஒரு நல்ல பேரா வைங்கப்பா.” என்று ஒரு பெரியவர் சொல்ல.

“பெரியவரே, அவர் சொன்னது சரிதான். அந்தப் பேருக்கு என்ன குறை.? எல்லாம் நல்லா தான் இருக்கு. அதே வைச்சுடலாம்.” என்று சொல்லி, விசாலாட்சி தன் குழந்தையின் காதில் மூன்று முறை பெயரை ஓதினாள்.

பெற்றவர்களே சொல்லும் போது, மற்றவர்கள் என்ன சொல்ல முடியும்.? அதனால், அந்தப் பெயரையே அவளுக்கு வைத்தனர். அழகேசனும், விசாலாட்சியின் பெற்றோரும் அந்தக் குழந்தைக்கு செய்ய வேண்டியதை அந்தந்த நேரத்தில் செய்தனர்.

கோலாகலம் பிறந்தாலும், விசாலாட்சி அமுதனை விடவில்லை. தன் குழந்தையோடு சேர்த்து அமுதனையும் பார்த்துக்கொண்டாள். விவரமில்லா அமுதன், குழந்தையை ஏதேனும் சீண்டினாலோ, வேறு எதற்க்கேனும் குழந்தை அழுதாளோ, அமுதனால் தான் அனைத்தும் நடப்பதாய் நடேசனின் பெற்றோர்கள் சொல்ல, விசாலாட்சி சண்டைக்கே சென்று விடுவாள். அந்த அளவிற்க்கு அமுதனின் மேல் அவள் பாசம் வைத்திருந்தாள்.

வளர, வளர அந்தக் குழந்தையும் அமுதனின் மேல் பாசம் கொண்டது. எப்போதும் அமுதன் கூடவே விளையாடுவாள் கோலாகலம். குமரேசனை விட அமுதனே அவளுக்கு மிகவும் பிடித்தவனானான். ஐந்து வயது வரை அமுதனை விசாலாட்சி பார்த்து வர, அதன் பிறகு ஒரு நாள் அழகேசன் அவனைத் தன்னுடன் அழைத்துப் போக வந்திருந்தார்.

அதைக் கேட்டதும், விசாலாட்சி அதிர்ச்சியானாள். “அண்ணா, அமுதா என் கூடவே இருக்கட்டும். அவனப் பிரிஞ்சு இருக்கறது எனக்கு முடியாத காரியம். எனக்கு அவன் பெறாத மகன்.” என்றாள் விசாலாட்சி.

“இல்ல விசாலா, உனக்காவது ரெண்டு பேர் இருக்காங்க. எனக்கு அவன் ஒருத்தன் தானே. எனக்கு மட்டும் யார் இருக்கா.? ஏதோ, அவன் குழந்தையா இருக்கானேன்னு தான் உன்கிட்ட விட்டிருந்தேன். இப்போ, அவனுக்கு அஞ்சு வயசு ஆகுது. அவனப் பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்டுட்டு அப்படியே நான் அவனப் பார்த்துக்கறேன். அதனால தான் கூட்டிப் போக வந்தேன். பள்ளிக்கூடம் லீவு விட்டா வேணும்னா அவன் வந்து இங்க இருக்கட்டும்.” என்றார் ஒரே பேச்சாக.

ஆயிரம் தான் அவள் வளர்ந்தாலும், பெற்றவர் வந்து கேட்கும் போது, எப்படி முடியாது என்று சொல்ல முடியும். மனதே இல்லாமல் அமுதனை அனுப்பி வைத்தாள் விசாலாட்சி. அதே எண்ணமே மூன்று வயதாகிய கோலாகலத்திற்கு வந்தது.

தன் அண்ணனை விட அதிகமாக அமுதனுடன் தான் அவள் இருந்திருக்கிறாள் எனும் போது, அவளால் அவனது பிரிவைத் தாங்க முடியவில்லை. அந்த வயதில் விவரம் தெரியாமல் இருந்தாலும், கூடவே இருப்பவர்கள் திடீரென்று சென்று விட்டால் ஏற்படும் வலியை அந்த வயதிலேயே அவள் உணர்ந்திருந்தாள்.

அப்போதிலிருந்து அமுதன் எப்பொழுது வருவான்.? அவளுடன் விளையாடுவான்.? என்று எதிர்பார்த்தபடியே அந்த விவரமில்லா மூன்று வயது குழந்தை காத்திருக்கும். அதே காத்திருப்பு நாளடைவில் ஆசையாக மாறியது. அவன் தான் அவளுக்கு எல்லாமுமாக என்று மனதில் ஒரு பேராசையை விதைத்துக்கொண்டிருந்தாள். அதில் மேலும் உரமாக விசாலாட்சி அவன் தான் உன் கணவன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தாள். அது இன்னும், அவள் மனதில் பிடுங்கமுடியாத மரமாக வளந்து கொண்டே போனது.

ஆனால் அமுதனோ அழகேசனுடன் வந்தாலும் பெரிதாக எதையும் இழந்த்தாய் எண்ணவில்லை. அந்த அளவிற்கு அழகேசன் அவனுடன் நேரம் ஒதுக்கி அவனைப் பார்த்துக்கொண்டார்.

பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, அவனுக்கு பலகாரங்கள், திண்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பார். சில சமயம் அதை வீட்டிலேயே அவனுக்கு செய்து தருவார். அடிக்கடி அவனை வெளியே அழைத்துச் செல்வார். ஒவ்வொரு நாளும் அவனுக்கு நடக்கின்ற விஷயங்களைப் பற்றி அவனிடம் கலந்துரையாடுவார்.

அவனை எப்பொழுதுமே தனிமை என்ற நிழலில் தங்கவே விட்டதில்லை. அப்பாவுக்கு அப்பாவாக, சில சமயம் தாயுமானவராக அமுதனுக்கு அழகேசன் இருந்தார். யார் யாரிடம் எப்படிப் பழக வேண்டும்.? எப்படி நடந்து கொள்ள வேண்டும்.? எப்படிப் பேச வேண்டும்.? என்று அனைத்தையும் அவனுக்குக் கற்றுக்கொடுத்தார்.

அதே போல், அவனது பேச்சுத் திறமையைக் கண்டு அவனுக்கு அது சம்பந்தமாக பயிற்சி அளித்தார். நல்ல நல்ல நூல்களை அவனுக்கு பரிசாகக் கொடுத்து, அதை படிக்கச் சொல்லி ஊக்குவிப்பார். அவன் ஏதேனும் ஒரு போட்டியில் பங்கு பெற்றால், அதற்க்கு என்னென்ன உதவிகள் அவனுக்கு செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார்.

அவருடைய முழுமையான வளர்ப்பில், அமுதன் அன்னைக்கான பாசத்தைத் தேட வாய்ப்பில்லாமலே போனது. அவ்வப்போது விடுமுறையில் அவன் அத்தை வீட்டிற்க்கும், பாட்டி வீட்டிற்க்கும் சென்று வருவான். ஏன், இப்போது கூட விடுமுறையில் அவன் அத்தை வீட்டிற்க்குத் தான் சென்றிருக்கிறான்.

ஆனாலும், அவனுக்கு இங்கு இருப்பது தான் பிடித்திருந்தது. அவனது ஆறு வயது முதல் அவனுக்கு அவனது சொந்த ஊரில் இருப்பது தான் பிடிக்கும். அதற்க்குக் காரணம் அவனது தந்தை மட்டுமல்ல. அவனது உயிர்த்தோழி தமிழினி.

அது ஏன்.? தமிழினி அவ்வளவு சிறந்தவளா.? அப்படி என்ன அவளிடம் உள்ளது.? ஆசை ஆசையாய் மாமனுக்காகக் காத்திருக்கும் கோலாகலத்தை விட அவள் உயர்ந்தவளா.? இப்படி பல கேள்விகளுக்கான விடை விரைவில் கிடைக்கும்..

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1246


உங்களுடைய விமர்சனங்களை கீழே உள்ள லிங்கில் அளிக்கவும் தோழைமைகளே...

 
Last edited:

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 3

அழகேசன் மனது கேளாமல் அப்படியே கால் போன போக்கில் ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாய் வந்தார். அதோ அங்கே, ரங்கராஜன்-கோகிலாவின் இல்லம் இருந்தது. அதைப் பார்த்தவர் கால்கள் நேராக அவர்களது இல்லத்தை நோக்கி பயணித்தது.

சிறிய அளவிலான கொட்டகை போன்ற வீடு, முன்னால் ஒரு மரம். வீட்டைச் சுற்றிலும் வேலிகள், பின்னால் சுற்றியும் வயல் வெளிகள். சிறிது தூரம் சென்றால் இருக்கும் வாய்க்கால், பெரிய அரசமரம். அதன் அடியில் இருக்கும் பிள்ளையார். என்று அவர்கள் வீடு இருக்கும் இடம் ஏதோ சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்தாற்போல் இருக்கும் ஒரு அழகான அம்சம்.

வீட்டிற்குள்ளே, ஆடு, மாடு, கோழிகள், வைக்கோல் புல். தண்ணீர் பிடித்து வைக்கும் தொட்டி. அதனின் சாணம் விழுந்து கிடக்கும் இடம் என்று கிராமத்து வாசனை வீசும். அதே போல், அவர்களின் வீடு பனைக்கீற்றில் வேயப்பட்ட உறுதியான மேற்கூரை. அவர்களே சொந்தமாக அமைத்துக்கொண்டது. அதே போல், வீட்டிற்க்கு இருபுறமும் வருபவர்களுக்கும், அவர்கள் அமர்வதற்க்கும் வசதியான, ஷோஃபாவை விட மேலான திண்ணைகள் இருந்தன.

அழகேசன் அவை அனைத்தையும் நோட்டமிட்டவாறு அவர்களின் வேலி போன்ற மரக்குச்சிகளால் ஆன, கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார். “க்க்குக்கு க்க்குக்க்..” என்று கோழிகளின் சத்தம், “ம்மே.. ம்மே..” என்ற ஆடுகளின் சத்தம், “ம்மா.. ம்மா..” என்ற மாடுகளின் சத்தம் அனைத்தும் அவர் வந்திருக்கிறார் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதமாகக் கேட்டன.

அந்த நடமாடும் உயிருள்ள ஜீவராசிகள் தான், அவர்களுக்கு காலிங்க் பெல் போன்றவை. சத்தம் கேட்டு, “ஏண்டா பசங்களா, எல்லாரும் ஒரே நேரமா சத்தம் போடுறீங்க.?” என்று கேட்டபடி வெளியே வந்தாள் அந்தச் சின்னப்பெண்.

அழகேசன் வருவதைப் பார்த்ததும் புன்னகைத்தவள், “வணக்கம் ஐயா.. வாங்க..” என்று அவரை மரியாதையாக அழைத்தவள், “அம்மா, சீக்கிரம் வாங்க. யார் வந்திருக்கா பாருங்க.” என்று தன் பெற்றோருக்கு குரல் கொடுத்தபடியே உள்ளே ஓடினாள்.

அவளது சத்தம் மட்டுமில்லாமல், ஆடு, மாடு, கோழிகளின் சத்தமும் கேட்டதால் வெளியே வந்தனர் ரங்கராஜனும், கோகிலாவும். பார்த்தவர்கள், “ஐயா.. வாங்க, வாங்க உட்காருங்க..” என்றபடி அருகே இருந்த திண்ணையை தனது துண்டால் தூசி தட்டியபடி அமரச் சொன்னார் ரங்கராஜன்.

“என்னங்கய்யா. இவ்ளோ தூரம்.?” என்று கோகிலா கேட்டுக்கொண்டிருக்கும் போதே, ஓடி வந்த சின்னப்பெண், “இந்தாங்கய்யா.. குடிங்க..” என்று சொம்பில் பானையில் ஊற்றிய நீரை பருகக் கொடுத்தாள். அவர் குடித்ததும் வாங்கியவள், உள்ளே சென்று விட்டாள்.

சில்லென்று இருந்த அந்த நீரைக் குடித்தவர் உள்ளம் நெகிழ்ந்தார். “இந்த சின்ன வயசிலயே எவ்ளோ மரியாதை கொடுக்கணும்னு தெரிஞ்சு வைச்சிருக்க பொண்ணு, உங்க வளர்ப்புலயே எவ்ளோ உண்மைகள். ஆனா, இன்னைக்கு நடந்த பஞ்சாயத்துல உங்கள பொய் சொல்றதா சொல்லி அநியாயத்துக்கு பேசிட்டாங்க. எனக்கு மனசு கேட்கல ரங்கா. அதான் அப்படியே கால் போன போக்கில நடந்து வந்துட்டிருந்தேன். உங்க வீட்டப் பார்த்ததும் அப்படியே கொஞ்ச நேரம் காத்தாட உட்கார்ந்து பேசிட்டுப் போலாம்னு வந்தேன்.” என்றார் அழகேசன்.

“அதுக்கென்னங்கய்யா.? நீங்க எப்ப வேணும்னாலும், தாராளமா வந்துட்டுப் போங்க. உங்கள மாதிரி பெரிய மனுஷங்க காலடி பட்டாத்தான் எங்களுக்கு சந்தோஷம். அதுவும் நீங்க பள்ளிக்கூட வாத்தியார். எல்லாருக்கும் குரு, தெய்வம் மாதிரி எங்களுக்கு. நீங்க வரதுக்கு நாங்க தான் புண்ணியம் பண்ணிருக்கணும்.” என்று அவரை புகழ்ந்து கொண்டிருந்தார் ரங்கராஜன்.

“ரங்கா, நீ வெள்ளந்தியான மனுஷன். அதனால தான், எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், அதை வெளிப்படுத்திக்காம வந்தவங்கள மரியாதையா நடத்தணும்னு நினைக்கிற. ஆனா, உனக்குப் போய் எப்படி இந்த மாதிரி அநியாயம் பண்ண அவங்களுக்குத் தோணுச்சு.? இன்னுமே என்னால இன்னைக்கு நடந்த சம்பவத்த ஜீரணிச்சுக்க முடியல. அவ்ளோ மனவேதனை. எப்படியெல்லாம் அநியாயம் நடக்குது.? உண்மை என்னன்னு தெரிஞ்சும், என்னால எதுவுமே பண்ண முடியலன்னு நினைக்கும் போதுதான் ரொம்ப வேதனையா இருக்கு.” என்று தன் மனவேதனையை அவர்களிடம் சொன்னார் அழகேசன்.

“நீங்க என்னய்யா பண்ணுவீங்க.? உங்களால முடிஞ்ச அளவுக்கு நீங்க எங்களுக்கு சாதகமா சொன்னீங்க. ஆனா, அவங்க அத ஏத்துக்கலன்னா அதுக்கு நீங்க பொறுப்பாக முடியும்ங்கலா.?” என்று சொன்னார் ரங்கா.

“அவனுங்க என் பேச்சை மதிச்சாத்தானே. நான் அந்தப் பஞ்சாயத்துல இருக்கறதே ஏதோ ஒரு பேருக்கு தான், என்கிட்ட கலந்துக்கறது கூட அப்படித்தான். கடைசில பாரு, அவனுங்க என்ன பேசி முடிவெடுக்கறாங்களோ, அதுதான் முடிவு. அவனுங்க என் பேச்சை எங்க மதிக்கறாங்க.? ஹூம்ம்..” என்று சலித்துக்கொண்டே சொன்னார் அழகேசன்.

“அய்யா. அவங்க உங்களையே இப்படிப் பண்றாங்களே, அப்போ, நாங்கெல்லாம் எம்மாத்திரம்.? அதனால தான், இன்னைக்குப் பஞ்சாயத்துல காசில்லா தூசியா எங்களத் தட்டிவிட்டுட்டு போயிட்டாங்க. எங்கள மாதிரி அடித்தட்டு மக்கள எப்பவுமே கேவலமா தான் பார்க்கறாங்க. அதனால தான, ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு இடத்துல எங்கள இருக்கச் சொல்லிட்டாங்க. பொம்பளப் புள்ளைய தனியா வைச்சிட்டு ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ, ஏது நடக்குமோன்னு பயந்துட்டு வாழற வாழ்க்கை எங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதெல்லாம் அவங்களுக்கு எங்க புரியப் போகுது. இருந்ததையும் எல்லாம் கொடுத்தாச்சு. இனி, எங்களுக்குன்னு இருக்கறது இந்த கொட்டகை வீடும், ஆடு, மாடு, கோழிங்க தான்.” என்று கோகிலா குரல் தழுதழுக்க சொன்னாள்.

“நீ ஏம்மா அப்படி நினைக்கிற.? உனக்கு எதுவும் இல்லாம போனாலும், நீங்க வைரம் மாதிரி பெத்திருக்கீங்களே உங்க பொண்ணு அவ உங்களுக்கு என்னைக்கும் ஆதரவா இருப்பா. ரொம்ப புத்திசாலி பொண்ணு, தைரியமான பொண்ணு. இன்னைக்கு நீங்க இப்படி இருக்கலாம். ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல அவ வளர்ந்து பெரியவ ஆகும் போது, உங்களுக்கு எல்லா விதத்துலயும் இவ உதவியா இருப்பா. அதுக்காகத்தானே, அவ்ளோ போராட்டங்களுக்கு இடையில தமிழினிக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கறேன்.” என்று அவளை நினைத்து பெருமிதமாகச் சொன்னார் அழகேசன்.

ஆம் அந்தச் சின்னப்பெண் தமிழினி. ரங்கராஜன் – கோகிலாவின் ஒரே தவப்புதல்வி. தைரியமானவள், திறமையானவள், விவேகமானவள், துறுதுறுப்பானவள், படிப்பில் கெட்டிக்காரி. ஒருமுறை சொல்லிக்கொடுத்தாள் அனைத்தையும் மனதில் ஆழமாய் பதிய வைத்துக்கொள்ளும் புத்திசாலி. கோதுமையும், பாலும் கலந்த நிறத்தில் இருக்கும் அழகு குட்டிப் பெண். இவள் நிஜமாலுமே அவர்களின் பெண் தானா.? என்று நிறைய பேர் சந்தேகமாகக் கூட கேட்டதுண்டு. ஆனால், அவள் இவர்களின் பெண்ணாகப் பிறந்தது தான் அவள் செய்த பாவமாக நினைத்து, அவளை அனைவரும் ஒதுக்கியே வைத்தனர். அதை நினைத்து தான் கோகிலாவும் அவரிடம் சொன்னாள்.

“ஆனா, அது ஊர்ல இருக்கற நிறைய பேருக்கு கண்ணுக்கு உறுத்தலா தானுங்களே இருக்கு. அத நினைக்கும் போதுதான் ரொம்ப சங்கடமா இருக்குங்க. எந்தப் பசங்களுமே அவள விளையாட்டுக்குக் கூட சேர்த்துக்க மாட்டிங்கறாங்கன்னு அவ வந்து சொல்லும் போது, எங்க நிலைமைய நினைச்சு எப்படி வருத்தப்படறதுன்னே தெரியாதுங்க ஐயா.” என்றாள் கோகிலா.

“ப்ச்ச்.. வேற பசங்கள விடு கோகிலா. அமுதன் எப்பவும் தமிழினி கூட தானே இருக்கான். அவன் எப்பவும் அவளப் பத்தி மட்டுமே தான் பேசிட்டிருப்பான். தமிழினின்னா அவ்ளோ புடிக்கும் என் பையனுக்கு. சொல்லப்போனா, அவன் இன்னைக்கு உயிரோட இருக்கறதுக்குக் காரணமே தமிழினி தானே.?” என்றார் அழகேசன்.

ஆம், தமிழினி இல்லை என்றால் அமுதன் இல்லை. அழகேசன் தனது ஆறு வயது சிறுவனான அமுதனை பள்ளியில் சேர்த்து விட்டிருந்தார். அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அவனுக்கு ஏதாவது புதியதாய் சமைத்துக்கொடுக்க நினைத்தார்.

மண்ணென்னை அடுப்பில் தணல் எரிந்து கொண்டிருக்க, அதில் அவர் வைத்த கறிக்குழம்பு நிஜமாலுமே பசியில் இருப்போரை சுண்டி இழுக்கும் விதமாக இருந்தது. ஏற்கனவே பசியில் இருந்த ஆறு வயது அமுதன் எப்பொழுது அப்பா, கறிக்குழம்பை இட்லிக்கு தொட்டுக்கக் கொடுப்பார் என்று பேராவலில் காத்துக்கொண்டிருந்தான்.

அந்த சமயம் பார்த்து ஒருவர் வந்து, “பஞ்சாயத்து அவசரமா திடீர்னு கூடியிருக்குங்கய்யா. மாணிக்கம் அண்ண உங்கள உடனே கூட்டிட்டு வரச் சொன்னார்..” என்று சொல்லிவிட்டுப் போக, அவருக்கு பிடிபடவில்லை.

“எதற்க்கு திடீரென்று பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.? என்னவாக இருக்குமென்று தெரியவில்லையே.” என்று யோசித்துக்கொண்டே இருந்தவர், அடுப்பில் குழம்பு வெந்து கொண்டிருப்பதை மறந்து, அமுதனை சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லி பக்கத்து வீட்டு அம்மையாரிடம், “கொஞ்சம் பார்த்துகோங்க..” என்று சொல்லி அவர் பொறுப்பில் விட்டுவிட்டு அவசரமாய்ச் சென்றார் அழகேசன்.

அந்த அம்மையாரோ, வீட்டில் அவருடைய கணவர் எங்கே திட்டுவாரோ என்று நினைத்து, அவனிடம் ஒரே நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று அவரும் சொல்லிவிட்டு வெளியே கதவைச் சாத்தி விட்டு சென்று விட, அமுதனுக்கோ பசியைப் பொறுக்க முடியவில்லை. அப்பா சென்றுவிட்டார், பக்கத்து வீட்டு அத்தையும் சென்று விட்டார். இனி யார் தனக்கு குழம்பை எடுத்து ஊற்றுவார் என்று நினைத்தவன், அதன் பக்கமாக சென்றான்.

அருகே இருந்த கரண்டியை எடுத்து அதன் உள்ளே வைத்தவன், குழம்பு கொதித்துக் கொண்டிந்ததால் அதன் சூடு பொறுக்காமல் அந்தக் கரண்டியை குழம்பு சட்டிக்குள்ளே போட்டு விட்டான். எப்படியாவது அதை எடுக்க வேண்டும் என்று நினைத்தவன், அருகே இருந்த ஒரு கட்டையை எடுத்து அதை எடுக்க முயன்றான். கட்டை இடறி குழம்பு ஒரு பக்கமாய் அனைத்தும் கொட்டி விட்டது.

அவனுக்கு அதை எப்படி சுத்தம் செய்வது என்று தெரியவில்லை. அப்பா வந்தால் எங்கே அடித்து விடுவாரோ என்று நினைத்தவன், தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்யலாம் என்று நினைத்து தண்ணீருக்கும், மண்ணென்ணைக்கும் வித்தியாசம் தெரியாமல் அதை ஊற்றி சுத்தம் செய்ய முயல, மண்ணென்ணை இருந்த கேன் முழுதும் கொட்டிவிட்டது. அங்கே அடுப்பில் கொழுந்து விட்டு தணல் எரிந்துகொண்டிருக்க, ஒரு வித வாடை அடிக்கிறதே என்று, சுத்தம் செய்யும் துணியை வைத்து அதை அவன் துடைக்க முயலும் போது அருகில் இருந்த அடுப்பு கவிழ்ந்து விழுந்து அந்த இடம் முழுவதும் பரவியிருந்த மண்ணென்ணையில் தீப்பற்றியது. ஒரே நேரத்தில் அந்த அறை முழுக்க தீ எளிதில் பற்றிக்கொண்டது.

நெருப்பு சுடுவதை உணர்ந்த அமுதன் அலற ஆரம்பித்தான். கத்தினான். அந்த நேரம் பார்த்து தமிழினி அந்தப் பக்கமாய் வர, அவள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே தைரியமாக நுழைந்தாள்.

உள்ளே அவன் இருக்கும் இடம் அனைத்தும் தீப்பற்றியிருந்தது. சாக்குப்பை எங்கேனும் உள்ளதா என்று தேடியவள் நல்லவேளையாக அங்கே ஒரு பெட்டியின் மேல் போர்த்தி வைக்கப்பட்டிருந்த சாக்குப்பையை எடுத்துக்கொண்டு ஓடிச் சென்று அந்த நெருப்பின் வீரியத்திலும் தைரியமாக அவனை அந்த சாக்குப்பையால் சுற்றி, இழுத்தபடி வெளியே கூட்டிக்கொண்டு வந்து விட்டாள் தமிழினி. அதற்க்குள் அமுதனின் கூச்சல் சத்தம் பெரிதாகக் கேட்க, அக்கம், பக்கத்தினர் அனைவரும் கூடிவிட்டனர்.

நல்லவேளையாக சிறிய தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தான் அமுதன். காப்பாற்ற சென்ற தமிழினிக்கு சிறிய தீப்புண்கள் ஆனது. ஆனால், அவனின் அலறல் தான் அவளால் கேட்க முடியவில்லை.

அங்கிருந்தவர்கள், அமுதனை உடனடியாக வைத்தியரிடம் அழைத்துச் சென்றனர். தமிழினியைப் பார்த்தவர்கள் அவளுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க,

“ஏண்டா ராமா, என்ன செய்யறது இப்போ.? இந்தப் புள்ளைய கூட்டிட்டு போலாமா.? பின்னாடி ஏதும் பிரச்சினை வந்துடாதே.?” என்றார் ஒருவர்.

“யோவ்.. அந்தப் புள்ள உயிர, இந்தப் புள்ள தாண்டா காப்பத்திருக்கு. பாவம், காயம் ஆயிருக்கு பாரு. எரியும் இல்ல. நம்ம புள்ளையா இருந்தா விடுவோமா.? எந்த்ப் பிரச்சினையா இருந்தாலும் அப்பறம் பாத்துக்கலாம். மொதல்ல வைத்தியர் கிட்ட கூட்டிட்டுப் போகலாம்..” என்று சொன்னபடி அவளையும் கூடவே கூட்டிக்கொண்டு சென்றனர்.

மறுபுறம், வீட்டில் பற்றியிருந்த தீயை அணைக்க சிலர் தங்களால் முயன்றவரை தண்ணீரை ஊற்றி அணைத்தபடி இருந்தனர். அதற்க்குள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அங்கே இருந்த ஒருவர், ஓடிச் சென்று பஞ்சாயத்துக்காகக் கூடியிருந்தவர்களிடம் உடனே தகவலைச் சொன்னார்.

அழகேசன், அழுதுகொண்டே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினார் வைத்தியர் வீட்டிற்க்கு.

“என்றா சொல்ற.? நிசமாலுமே தீப்பத்திக்கிச்சா.? பையனுக்கு எதுவும் இல்லையே.?” என்று மாணிக்கம் கேட்க,

“தெரியலைங்க அய்யா. ஆனா, நம்ம ரங்கனோட பொண்ணு தான் வாத்தியார் பையனக் காப்பத்தியிருக்குங்க.” என்று சொன்னார்.

“என்னது, ரங்கனோட பொண்ணா.? அதுக்கு என்றா வயசிருக்கும்.? அந்தப் புள்ள எப்படிப் போய் காப்பாத்திச்சு.? எப்படி அங்க போச்சு.?” என்று மாணிக்கம் குழம்பிக்கொண்டிருக்க,

“ஏங்க தலைவரே, நீங்க ஆராய்ச்சி பண்றதுக்குள்ள அங்க என்ன நடக்குமோன்னு தெரியல.? பஞ்சாயத்த இப்போதைக்கு ஒத்தி வைச்சுடுங்க.” என்று சாத்தப்பன் சொல்ல, பெரியசாமி அதை ஆமோதித்தார்.

“சரி பா. நாஞ் சொறது என்னன்னா, இப்போதைக்கு அவசரமா பஞ்சாயத்த அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கறேன். நம்ம வாத்தியார் பையனுக்கு என்னாச்சுன்னு ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடுவோம். சரிதான.?” என்று மாணிக்கம் சொல்ல, ஒட்டுமொத்த பஞ்சாயத்தும் வைத்தியர் வீட்டுக்கு விரைந்தது.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1256

உங்கள் விமர்சனங்களை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள் தோழமைகளே...


 
Last edited by a moderator:

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 4

“அய்யோ.. எம்புள்ளைய எப்படியாவது காப்பத்துங்க அய்யா.. எனக்குன்னு அவன் ஒருத்தன் தான் இருக்கான். அவனுக்கு ஏதாவதுன்னா நானும் மேல போயிடுவேன்.” என்றபடி வைத்தியரிடம் அழுதுகொண்டே மன்றாடினார் அழகேசன்.

ஒட்டுமொத்த பஞ்சாயத்தும், ஊரும் ஒன்று கூடி நின்றபடி அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

“அழகேசா, கொஞ்சம் அமைதியா இருப்பா. அவனுக்கு ஒண்ணும் இல்ல. அங்கங்க கொஞ்சம் கொஞ்சம் காயம் தான் ஆயிருக்கு. ஆறு வயசு தான ஆகுது. கொஞ்சம் இளசு தேகம். அதனால, வலி பொறுக்காம் அலறுறான். நீ ஒண்ணும் பயப்படாத.” என்று அவரைச் சமாதானம் செய்தார்.

அருகே, தமிழினிக்கும் அவர் சிகிச்சை அளித்தார். அப்போதுதான் அழகேசன் அவளை கவனித்தார். “என்ன பார்க்கற அழகேசா, இந்தப் பொண்ணுக்கு எப்படி தீக்காயம் ஆச்சுன்னா.? இந்தப் பொண்ணால தான் உன் பையன் ஏதோ சின்னச்சின்ன காயத்தோட உயிர் தப்பிச்சிட்டான். தன்னோட உயிரப் பணயம் வைச்சு இந்தப் பொண்ணு உன் பையனக் காப்பாத்திருக்கா. நீ இந்தப் பொண்ணுக்கு என்ன கைமாறு செஞ்சாலும் பத்தாது.” என்றார்.

அதற்க்குள் விஷயம் கேள்விப்பட்டு ரங்காவும், கோகிலாவும் ஓடி வந்தனர். தமிழினிக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்ததும் தான் அவர்களுக்கு உயிரே வந்தது. அதே போல், அவள் அமுதனைக் காப்பற்றினாள் என்று அறிந்ததும் அவளை நினைத்துப் பெருமையாக இருந்தது. வெளியே வந்த அழகேசன் எதுவும் யோசிக்காமல், அவர்கள் கையைப் பிடித்து நன்றியுணர்வில் அழுதார். அவர்களுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

ஏனென்றால், அவர்களை அவ்வளவு சீக்கிரம் யாரும் நெருங்கிவிட மாட்டார்கள். அடித்தட்டு மக்கள் என்ற சாயம் பூசி அவர்களை சாதாரண மனிதர்கள் போல் இல்லாமல், தீண்டத்தகாதவர்கள் என்ற பெயர் சூட்டி ஒதுக்கி வைத்துள்ளனர். ஆனால், அவர்களை இன்று அழகேசன் தொட்டதும், மாணிக்கமும், அவரின் ஜால்ராக்களும் கூடி நின்று கிசுகிசுத்துக் கொண்டனர்.

“யோவ்.. எப்பப்பாரு இந்த அழகேசன் நாம என்ன சொல்றோமோ அதுக்கு எதிரா தான்யா எல்லாமே பண்றான். அவங்கள யாரும் சேர்த்துக்காதீங்கன்னு தானே சொன்னது. இப்போ அவன் என்ன பண்றான்.?” என்று மாணிக்கம் மெல்லப் பேச,

“தலைவரே, நம்ம புள்ளைகளுக்கு ஏதாவது ஒண்ணு ஆகி இந்த மாதிரி அவங்க காப்பாத்துனா யாரா இருந்தாலும், இதைத்தான் செய்வாங்க. என்ன பண்றது.? உயிர் விஷயமாச்சே..” என்று பெரியசாமி சொன்னார்.

“அட நீ வேற யா.. நம்ம தலைவருக்குத்தான் புள்ளைங்களே இல்லையே. அப்பறம் எப்படியா அந்த அருமை புரியும்.?” என்று சந்தடி சாக்கில் மாணிக்கத்திற்க்கு பிள்ளைகள் இல்லை என்பதை சொல்லிக் காட்டினார் சாத்தப்பன்.

“ஏன்யா.. நான் என்ன பேசிட்டிருக்கேன்.? நீங்க என்னத்த சொல்லிட்டிருக்கீங்க. எனக்கு வாய்ச்சவ தான் அத்துக்கிட்டு போயிட்டா. பின்ன எங்கிருந்து புள்ளைங்க வரும்.” என்று சலித்துக்கொண்டே பேசினார்.

“இந்த மாதிரி அநியாயம் பண்ணா எவ கூட இருப்பா.? எப்படி புள்ளைங்க பொறக்கும்.? எல்லா பாவத்தையும் செஞ்சுட்டு இந்தப் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.” என்று மறைவாய் நின்றிருந்த சிலர் அவர்களின் பேச்சைக் கேட்டவாறு திட்டிக்கொண்டிருந்தனர்.

அது அவர்களின் காதில் விழ, எவருக்கும் தெரியாதவாறு நின்று கொண்டிருந்தனர். அப்படியே அழகேசனும், ரங்காவும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டனர்.

அழகேசன் தனது நன்றியை எப்படிக் காட்டுவது என்று தெரியாமல்தான் ரங்காவின் கையைப் பிடித்து அழுதார். அதிர்ச்சியான ரங்கா, “ஐயா.. நீங்க போய் எங்க கையப் புடிச்சு..” என்று பேச,

“இல்ல, ரங்கா. நிஜமாலுமே எனக்கு எப்படி உங்களுக்கு நன்றி சொல்றதுன்னு தெரியல. என்ன கைமாறு பண்ணப் போறேன்னு தெரியல. எனக்கு என்னோட உயிரையே, உங்க பொண்ணு அவ உயிரப் பணயம் வைச்சு திருப்பித் தந்திருக்கா. அப்படிப்பட்ட பொண்ண நீங்க பெறலைன்னா, என்னோட பையன என்னால உயிரோட பார்த்திருக்கவே முடியாது. எனக்கு எல்லாமே அவன் மட்டும் தான்.” என்று திரும்பவும் அழுதார்.

“இருக்கட்டுங்க ஐயா. அழாதீங்க. உங்க பையனுக்கு இது மறு ஜென்மம். அவனுக்கு இனி ஒண்ணும் ஆகாது. அவன நல்லபடியா பாத்துக்கங்க.” என்று ரங்கா சொன்னார்.

இவர்கள் உரையாடலைப் பார்த்து மாணிக்கமும், பெரியசாமி மற்றும் சாத்தப்பனும் சப்பு கொட்டினர். அடுத்து, அழகேசன் தமிழினியிடம் வந்தார்.

“கண்ணு.. நீ தாண்டா என் உயிரத் திருப்பிக் கொடுத்திருக்க. எப்படி நீ அங்க போன.? நான் போகும் போது அவனப் பக்கத்து வீட்டு அம்மாகிட்ட சொல்லி விட்டுட்டு தான போனே. ஆனா, எப்படி இந்த மாதிரி ஆச்சு.?” என்று கேட்க,

“நான், உங்க வீட்டு பக்கத்துல இருக்கற ஆலமரத்துல எப்பவும் விளையாட வருவேன். நான் அங்க போகும் போது, இவன் அழற சத்தம் கேட்டுச்சு. ஜன்னல் வழியா வீட்டுக்குள்ள பார்த்தா, தீப்பத்தி இருந்துச்சு. வெளிய கதவு தாப்பா போட்டிருந்துச்சு. நான் உடனே, கதவத் திறந்துட்டு உள்ள போனேன். அவன் நின்னுட்டிருந்த இடம் எல்லாமே தீயா இருந்துச்சு. அவனுக்கு எப்படி வெளில வரதுன்னு தெரியல. அப்பறம் நான், சாக்குப்பை இருக்கான்னு தேடுன, அங்க ஒரு பெட்டி மேல இருந்துச்சா, அத எடுத்துட்டு போய் அவன் மேல சுத்தி அவன அப்படியே இழுத்துட்டு வெளிய வந்துட்டேன்.” என்றது அந்த ஆறு வயது சிறுமி வெள்ளந்தியாய்.

“உனக்கு எப்படிம்மா, சாக்குப்பைய சுத்தனும்னு தெரிஞ்சது.?” என்றார் அழகேசன்.

“ஆஆ. அதுதான் நீங்க பள்ளிக்கூடத்துல சனிக்கிழமையானா, ஏதாவது கூட்டம் போடுவீங்களே. நான் அதை எப்பவுமே வெளியே உட்கார்ந்து பார்ப்பேன். அப்போ ஒரு நாள், தீயணைப்பு வீரர் வந்திருந்தாரே.? அவர் எங்கயாவது தீப்பத்திக்கிச்சுன்னா எப்படி செஞ்சு தீயை அணைக்கனும், அப்பறம் தீயில யாராவது சிக்கிட்டா அவங்கள எப்படி செஞ்சு காப்பாத்தணும்னு சொல்லிக்கொடுத்தாரே, அது எனக்கு ஞாபகம் வந்துச்சு. அதனால தான் அப்படிப் பண்ணேன்.” என்றாள் அழகாய் சிரித்துக்கொண்டே.

அழகேசன் அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடத்தில் நடத்தும் பாடங்கள் தவிர, மற்ற விஷயங்களையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்த விஷயம் தான் இன்று அவரின் மகனின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது.

வாரம் ஒருமுறை சனிக்கிழமைகளில் செயல்பாட்டுக் கல்விமுறையை அமல்படுத்தினார். செய்முறை விளக்கங்களுக்காக அந்தந்த துறையில் இருப்பவர்களை வரவழைத்து அவர்களுக்கு அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொடுப்பார்.

தமிழினியை பள்ளியில் அனுமதிக்கக் கூடாது என்பது பஞ்சாயத்து முடிவு. அடித்தட்டு மக்களுக்கு கல்வியும் கூடாது என்ற நல்லெண்ணத்தில் வழங்கப்பட்ட அநியாயத் தீர்ப்பே அது.

ஆனால், தமிழினிக்கு கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் என்று ரொம்ப ஆசை. ஆனால், அவளுக்கு அங்கே அனுமதி இல்லாத காரணத்தால், பள்ளிக்கு அருகே இருக்கும் ஆலமரத்தடியில் அமர்ந்து கொள்வாள். அங்கிருந்து பார்த்தால் அவளுக்கு பள்ளியின் உள்ளே நடப்பது நன்றாகவே தெரியும்.

சனிக்கிழமை பள்ளியின் மரத்தடி நிழலிலேயே அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கும். அதே போல் அவர்கள் அனைவரும் சத்தமாகவே அனைத்தையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதால் அவை தமிழினியின் காதுகளுக்கு நன்றாகவே எட்டும்.

எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறமை அவளுக்குள் இயல்பாகவே இருந்ததால், அதை மனதில் எளிதில் பதிவு செய்து கொண்டாள். அப்படிச் செய்த ஒரு விஷயம் தான், இன்று அமுதனின் உயிரைக் காப்பாற்றும் துணிவை அவளுக்குத் தந்துள்ளது.

ஆறு வயதே ஆனாலும், எத்தனை தைரியமாக தன் மகனைக் காப்பற்றியிருக்கிறது. அதை நினைத்த அழகேசன், தமிழினியை அணைத்துக் கொண்டார். மாணிக்கம் குழுவினர் கோப மூச்சொன்றை உதிர்த்தபடி,

“ஆங், அதான் பையன் பொழச்சுட்டான்ல. போய் எல்லாரும் அவங்கவுங்க வேலையப் பாருங்க. போங்க, போங்க..” என்று வடிவேலு ஸ்டைலில் அனைவரையும் துரத்தி விட்டபடி கிளம்பினார் மாணிக்கம்.

தமிழினியின் இந்த வீரத்தைக் கண்ட அழகேசன் அந்த வருடம், வீர, தீர செயல் புரிந்தமைக்கானவர்களின் தமிழக அரசு விருதுக்காக அவளை பரிந்துரை செய்திருந்தார். ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று, தமிழினி முதலமைச்சரிடம் வீர, தீர செயல் புரிந்தமைக்கான விருதை வாங்கினாள். அழகேசன் தான் ரங்காவையும், தமிழினியையும் மெட்ராஸூக்கு கூட்டிக் கொண்டு போனார்.

முதலமைச்சர் உன் விருப்பம் என்ன.? என்று கேட்ட போது, தான் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை முன்வைத்தாள் தமிழினி. அப்போதே, அவர் யார்.? என்ன.? என்று விசாரித்து அவளைக் கட்டாயம் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தகவல் அடங்கிய தாளை, தன் கையெழுத்தோடு அழகேசனிடம் கொடுத்தார்.

முதலில் இதை மாணிக்கத்திடம் தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார் அழகேசன். ஊரே அன்று தமிழினிக்காக பஞ்சாயத்தில் கூடியிருந்தது.

“ஏன்யா அழகேசா. நீ நெசமாலுந்தான் சொல்றியா.? இது முதலமைச்சரே கொடுத்தனுப்பினாரா.? இல்ல நீதான் எங்கள ஏமாத்தறியா.?” என்று மாணிக்கம் சந்தேகமாகக் கேட்க,

“ஹூம்ம். தெரியும் யா. நீங்கள்லாம் இதை நம்ப மாட்டிங்கன்னு. அதுக்கு தான் அவங்க அலுவலக போன் நம்பரையும் வாங்கி வந்திருக்கேன். உங்க வீட்ல தான் போன் இருக்கே, நீ போன் பண்ணித்தான் கேட்டுப்பாரேன்.”

“போன் நம்பரா.? ஏன்யா, பெரியசாமி இவன நம்பலாமா.? வேண்டாமா.?” என்று அவரிடம் வினவ,

“தலைவரே, அந்தப் புள்ள கையில வைச்சிருக்க பரிசு, விருது, எல்லாம் பார்த்தா நெசமாலுந்தான் சொல்றாருன்னு தோணுது. அதுவும் இல்லாம, நமக்கு தான் இந்தப் பொய், பித்தலாட்டமெல்லாம் வரும். அழகேசனுக்கு அந்த அளவுக்கு வருமான்னு தெரியலையே.?” என்று சொல்ல,

“யோவ்வ்.. உனக்கு வரும்னு சொல்லு.. என்னையும் உங்கூட கூட்டுக்களவாணியா சேத்துக்கற.?” என்றார் மாணிக்கம்.

“க்கும்ம்.. இவர் இதெல்லாம் பண்றதே இல்லையாக்கும். நம்மள மட்டும் சொல்றாரு.” என்று வாய்க்குள் முனகினார் பெரியசாமி.

“யோவ்.. நீ முணகாத, எனக்கு எல்லாமே கேக்குது.” என்று சொல்ல, தன் புருவத்தை தூக்கி வாயை மூடினார் பெரியசாமி.

“நீங்க இன்னும் நம்பாம இந்தப் புள்ளைய பள்ளிக்கூடத்துல சேர்த்துக்கலன்னா, உடனே தகவல் சொல்லுங்க, அந்தப் பஞ்சாயத்துத் தலைவர, அந்தப் பதவியில் இருந்து தூக்கிடறேன்னும் கூட முதலமைச்சர் சொன்னாரு.” என்று அழகேசன் சொல்ல, அவர்களுக்கு தலையில் இடி விழுந்ததைப் போல் ஆனது.

“யோவ். என்னய்யா சொல்ற.?” என்று அதிர்ச்சியில் கேட்டார் மாணிக்கம்.

“அதான், அப்போவே போன் பண்ணிக் கேளுங்கன்னு சொல்லிட்டேன்.” என்று தன் இரு கைகளையும் பின்னால் கட்டியபடி நின்றார் அழகேசன்.

“தலைவரே, விடுங்க அந்தப் புள்ளைய பள்ளிக்கூடத்துல சேர்த்துக்கட்டும். இல்லன்னா, நம்ம வேலைக்கு உலை வைச்சுடுவாங்க போல இருக்கே.” என்று பயந்தபடியே சொன்னார் சாத்தப்பன்.

“சரியா அழகேசா, முதலமைச்சரே சொல்லிட்டாரு. இனி நாம் என்ன செய்ய முடியும்.? அந்தப் புள்ளைய பள்ளிக்கூடத்துல சேர்த்துக்கோ. ஆனா, அந்தப் புள்ளையோட யாரும் சேரலன்னா, அதுக்கு நாங்க பொறுப்பு கிடையாது.” என்று சொன்னார் மாணிக்கம்.

“உங்கள மாதிரி ஆளுகளோட சேர்ந்து இருக்கறத விட, அந்தப் புள்ள தனியா இருக்கறதே மேல். நான் இருக்கேன்யா அந்தப் புள்ளைக்கு.” என்றபடி தமிழினியையும், ரங்காவையும் கூட்டிக்கொண்டு போனார் அழகேசன்.

மாணிக்கத்தை அவமானப்படுத்தியது போல் இருந்த்து அவனது பேச்சு. என்ன செய்வது, அவர் வாத்தியாராய் போய் விட்டார். அரசின் ஒரு அங்கமாய் இந்தப் பஞ்சாயத்து பொறுப்பிலும் இருக்கிறார் என்பதால், அவரை எதுவும் சொல்ல முடியவில்லை.

“பாருங்க தலைவரே, அழகேசன் எப்படி உங்கள எதிர்த்துப் பேசிட்டு, உங்கள அவமானப்படுத்திட்டு போறார்னு.?” என்று சாத்தப்பன் சொல்ல,

“ஹூம்ம். அவனுக்கு குளிர் விட்டுப் போச்சு யா. விடு அந்தப் புள்ள எப்படிப் படிக்குதுன்னு பார்த்துக்கலாம்.” என்று வில்லத்தனமான வார்த்தைகளை விட்டார் மாணிக்கம்.

அடுத்த நாளில் இருந்து தமிழினி பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தாள். நல்ல துணிமணிகள் இல்லாத காரணத்தால், அழகேசன் தான் சில துணிகளை அவளுக்கென்று எடுத்துக் கொடுத்தார். அவளுக்குப் புதுத் துணிகளைப் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷம். ஒவ்வொன்றாய் வைத்து வைத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதில் ஒன்றைத்தான் இன்று அவள் முதல் நாள் பள்ளிக்கு அணிந்து வந்திருந்தாள். ஆனாலும், அவளின் கூட வருவதற்க்கு ஒருவருமே விருப்பம் கொள்ளவில்லை. தனியாகவே நடந்து வந்தாள். அதுவே அவளுக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.

பள்ளிக்கு உள்ளே வந்ததும், முதலில் காலை பிரார்த்தனையுடன் பள்ளி துவங்கியது. அனைவரும் வகுப்பு வாரியாக வரிசையில் நிற்க, அவளுக்கு எங்கு நிற்பது என்று கூடத் தெரியவில்லை. அருகில் ஒருவரும் நிற்க விடவில்லை. வாடிப் போனது அந்த சிறிய மனது.

அவளது அசௌகரியத்தை உணர்ந்த அழகேசன், அவளை தன் மகன் அமுதனின் அருகில் நிற்க வைத்தார். அமுதன் சிரித்தான். தான் உயிரோடு இருப்பதற்க்குக் காரணம் அவள் தான் என்பதை அவன் அறிந்திருந்ததால் அவனுக்கு அப்பொழுதே அவள் மேல் அன்பு பிறந்தது.

பள்ளி வகுப்பில் சென்று அமரும் இடத்தில், எந்தப் பிள்ளைகளும் அவளுடன் அமரத் தயாராக இல்லை. அப்போது, அமுதனே தானாக வந்து அவளது அருகில் அமர்ந்து கொண்டான்.

தமிழினி சிரித்துக்கொண்டே கேட்டாள், “என்னை யாருன்னு தெரியுதா.?” என்றாள் தன் அழகான பிள்ளை மொழியில்.

“ம்ம்ம். தெரியுமே.. நீ தமிழ். அன்னிக்கு நீதான என்னக் காப்பத்துன.? எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. ஆமா, நான் கத்தற சத்தம் கேட்டுச்சா.? நீ எப்படி வந்த உள்ள.?” என்றான் சிறு வயது அமுதன்.

“ம்ம்.. ஆமா, எனக்கு நீ கத்தறது நல்லாவே கேட்டுச்சு. பாவம் உனக்கு என்ன ஆகுமோன்னு பயந்து தான் தாப்பாள திறந்துட்டு உள்ள வந்தேன். அதுக்கப்பறம் தான் உன்ன வெளில கூட்டிட்டு வந்துட்டேனே. அதுசரி, இப்போ காயம் எல்லாம் ஆறிடுச்சா.? எரிச்சல் இல்லையே.?” என்றாள் தமிழினி அக்கறையுடன்.

“இல்ல, இல்ல. இப்போ பரவால்ல. எங்கப்பா தினமும், மருந்து போட்டுவிடுவாரா, அதனால எல்லாம் கொஞ்சம் ஆறிடுச்சு.” என்றான் அமுதன் சிரித்துக்கொண்டே.

“சரி, நீ என்கூட இங்கயே எப்பவும் உட்காருவியா.?” என்றாள் தமிழினி.

“ம்ம். உட்கார்ந்துக்கறேன். ஆமா, ஏன் எல்லாரும் உன்கூட பேசமாட்டிங்கறாங்க.? உட்காரமாட்டிங்கறாங்க.?” என்றான் அமுதன் புரியாமல்.

“தெரியலையே. ஆனா, அம்மா அடிக்கடி சொல்லுவாங்க, நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மங்கன்னு. அப்படின்னா என்னன்னு எனக்கும் தெரியாது.” என்றாள் தமிழினி பாவமாக.

“சரி, நீ ஒண்ணும் கவலப்படாத. நான் எப்பவும் உன்கூடவே இருக்கேன். உனக்கு எல்லா பாடமும் சொல்லிக் கொடுக்கறேன் சரியா.?” என்று அமுதன் சொல்லிவிட்டு வெள்ளந்தியாய் சிரிக்க, தமிழினி, “சரி நண்பா.” என்று தலையை ஒருபுறமாய் ஆட்டிச் சிரித்தாள்.

அவள் அப்படிச் செய்ததும், அமுதனுக்கு சிரிப்பு தாங்கவில்லை. பயங்கரமாக சிரித்தான். வகுப்பு முழுதும் உள்ள பிள்ளைகள் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தன. அதன் பிறகு, ஆசிரியர் வந்ததும் அமைதியாயினர். அழகேசன் வந்ததும், தமிழினியை அழைத்து, அனைவர் முன்னிலையிலும் நிற்க வைத்து,

“இதோ பாருங்க பிள்ளைங்களா, இது தமிழினி. உங்க வகுப்புக்கு புதுசா வந்திருக்கற பொண்ணு. ரொம்ப தைரியமான பொண்ணு. நீங்க கேள்விப்பட்டிருப்பீங்களே, அமுதனை இவ தான் தைரியமா நெருப்பில இருந்து காப்பாத்தினா. அதுக்கு தான் தமிழக அரசோட விருதும் இவளுக்கு கிடைச்சிருக்கு. இப்படி ஒரு பொண்ணு உங்க கூட படிக்க நீங்க தான் பெருமைப்படணும். அவள யாரும் ஒதுக்கி வைக்கக் கூடாது. வீட்ல அம்மா, அப்பா சொன்னாலும் அவளப் பத்தி நல்லவிதமா அவங்ககிட்ட சொல்லணும். அவளுக்கு எந்த உதவின்னாலும் செய்யணும். நீங்கள்லாம் சின்ன பசங்க, பெரியவங்க மாதிரி தப்பா நடந்துக்கக் கூடாது.” என்று சில அறிவுரைகள் வழங்கினார்.

“சரி, எல்லாரும் இப்போ தமிழினியோட செயலுக்காக கைத்தட்டுங்க பார்க்கலாம்.” என்று சொல்ல, முதல் கைத்தட்டலே அமுதனுடையதாய் இருந்தது.

அனைவரும் அமைதியாய் இருக்க, “பாருங்க, அமுதன் மட்டும் தான் நல்ல பையனா கைத்தட்ட சொன்னதும், கைத்தட்டறான். நீங்கல்லாம் ஏன் தட்டல.? கைத் தட்டுங்க பசங்களா.” என்று அழகேசன் சொல்ல, இப்போது ஒட்டுமொத்த வகுப்பும் தமிழினிக்கு கைத்தட்டியது.

அமுதன், அவளைப் பார்த்து சிரித்தவண்ணம் கைத்தட்டிக்கொண்டு இருக்க, அவளும் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

(தொடரும்...)

வார்த்தைகளின் எண்ணிக்கை : 1508


உங்களுடைய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. விமர்சனங்களை கீழே உள்ள
கமெண்ட்ஸ் லிங்கில் அளியுங்கள் நட்புக்களே...







 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 5

ஒன்பது வயதாகிய தமிழினி அப்பொழுதிலிருந்து, இப்பொழுது வரை நடந்ததை நினைவு கூர்ந்தபடி, வெளியே அழகேசன் அவளின் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருக்க, உள்ளே அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள் அவள்.

வெளியே அழகேசன் அவளது திறமைகளைப் பற்றி அவர்களுக்கு விவரித்து எதற்க்கும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தார். அந்த வயதிலேயே அனைத்துத் திறமைகளும் அவளுக்குள் அடங்கியிருந்தன.

பாடங்களை விரைவாக கற்பதிலாகட்டும், படிப்பதிலாகட்டும், எழுதுவதிலாகட்டும், புரிந்து கொள்வதிலாகட்டும், அவளுக்கு நிகர் அந்தப் பள்ளியிலேயே எவரும் இல்லை என்று அழகேசன் பலமுறை சொல்லியிருக்கிறார்.

அதே போல், விளையாட்டிலும் அவள் சலித்தவளில்லை. பல்லாங்குழி, பாண்டியில் ஆரம்பித்து, பள்ளிக்கூடத்தில் ஓட்டப் பந்தயம், வாலிபால், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், என்று விளையாட்டில் அவளின் ஆர்வத்தைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இந்த மூன்று ஆண்டுகளில் அவளுக்கே பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் முதல் பரிசு கிட்டியுள்ளது.

எந்த ஒரு விஷயம் புதிதாக அவள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும், அது ஏன்.? எதற்க்கு.? எவ்வாறு.? என்று தைரியமாகக் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆசிரியர்களையே அதிர வைப்பாள். பலர் அவளின் திறமையை எண்ணி வியந்தாலும், இன்னும் அவளை சிலர் ஒதுக்கிவைக்க நினைப்பது தான் வேதனைக்குறிய விஷயம்.

அந்த நேரங்களில் அமுதன் மட்டுமே அவளுக்கு பக்கபலமாக இருப்பான். “நீ ஒண்ணும் கவலப்படாத. நான் இருக்கேன். சரியா.?” என்று அவளை ஒவ்வொரு முறையும் தேற்றுவான்.

விடுமுறை நாட்களில், அவள் காலையில் அமுதன் வீட்டுக்குக் கிளம்பினால், மாலையில் தான் திரும்புவாள். இருவரும் அழகேசனோடு ஊர் சுற்றக் கிளம்பி விடுவார்கள். அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு டவுனுக்கு செல்வார். அங்கே நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் அவர்கள் இருவருக்கும் விளக்கமளிப்பார்.

எங்கே, எப்படிப் பொருள் நியாயமான முறையில் வாங்க வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார். திண்பண்டங்கள் வாங்கித் தருவார். தூரியில் விளையாடுவார்கள். சில சமயம் எங்கேயும் போகவில்லை என்றால், கிணத்தடிக்கு கூட்டிச் செல்வார் இருவருக்கும் நீச்சல் கற்றுத் தருவார்.

நீச்சலை நன்றாகப் பழகிய பிறகு, கிணறு, ஆறு, வாய்க்கால் என அனைத்திலுமே நீச்சல் அடித்தவாறு இருவரும் விளையாடிக் கொண்டிருப்பர். அதன் பிறகு மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருப்பர். மாந்தோப்புக்கு சென்று மாங்காய் பறித்துத் திண்பர். தமிழினியின் வீட்டில் இருக்கும், ஆடு, மாடு, கோழிகளுடன் விளையாடிக்கொண்டிருப்பர்.

சில சமயம், அவரின் நிலத்தில் விவசாய வேலைகள் சிலவற்றைத் தெரிந்து கொண்டு இருவரும் செய்வர். சின்ன வயதுப் பிள்ளைகளாய், சந்தோஷமாய் சுற்றித் திரிந்த நாட்களை மறக்க முடியாமல் இருந்தாள் தமிழினி. ஆனால், இப்போது அமுதன் இங்கே இல்லை. அவனது அத்தை வீட்டில் இருக்கிறான்.

ஏதோ ஒரு நினைவு வந்தவளாய் வெளியே இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது வந்து நின்றாள். அவள் வந்ததும், “வாடா மா..” என்று அழைத்து தன் பக்கமாக நிற்க வைத்துக் கேட்டார் அழகேசன், “சொல்லு தமிழ். இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டிருந்த.?” என்று கேட்டதற்க்கு,

“ஐயா.. நீங்க எனக்கு பிறந்த நாளப்போ ஒரு கதை புத்தகமும், பொது அறிவுப் புத்தகமும் வாங்கிக் கொடுத்தீங்களே, அதை தான் தினமும் படிக்கிறேன் ஐயா. பொது அறிவு விஷயங்களை நினைவுபடுத்திக்க, அதை தினமும் படிச்சு ஒரு நோட்டில் எழுதிப் பார்க்கிறேன் ஐயா.” என்று மரியாதையுடன் சொன்னாள் தமிழினி.

“பலே, பலே.. அருமை. இப்போ பள்ளி விடுமுறை விட்டிருந்தாலும், நீ நேரத்த வீணடிக்காம எவ்வளவு பயனுள்ளதா செலவழிக்கற.? நான் வாங்கிக் கொடுத்த பரிச நீ தான் உபயோகமானதா செய்யற. அதுக்கே உன்னைப் பாராட்டணும்.” என்று அவளது கன்னத்தை செல்லமாகத் தட்டினார்.

சிரித்தவள், “ஐயா. நான் ஒண்ணு கேட்கலாமா.?” என்றாள்.

“ஓ.. தாராளமா கேளு. கேள்வி கேட்டாதான் தமிழினி. நீ கேள்வி கேட்கலன்னாதான் அதிசயம். என்ன கேட்கணுமோ கேளு.” என்றார் அழகேசன்.

“ஐயா. இது பாடங்களைப் பற்றியான கேள்வி இல்ல. நான் அமுதனைப் பற்றிக் கேட்கணும். அமுதன் அன்னைக்கே, என்கிட்ட ஒரு விஷயம் சொன்னான். அது உண்மையா.? இல்லையான்னு எனக்குத் தெரியல. நீங்கதான் அதைச் சொல்லணும்.” என்றாள்.

அவள் என்ன கேட்க வருகிறாள் என்பதை முன்கூட்டியே அவர் அறிந்திருந்தார். ஆனாலும், அவளாகவே கேட்கட்டும் என்று அமைதி காத்தார்.

“அமுதா நிஜமாலுமே இனிமேல் இங்க வரமாட்டானா.? அவன ஏன் வேற பள்ளிக்கூடத்துல சேர்க்கப் போறீங்க.? அவன் ஒருத்தன் தான் என்கூட நண்பனா இருந்தான். வேற யாரும் என்கூட அவ்வளவா பழகமாட்டாங்க. அடுத்த வருஷன் நான் யாரு கூட பள்ளிக்குப் போவேன்.? யாரு கூட சாப்பிடுவேன்.? யாரு கூட விளையாடுவேன்.? உங்களக் கெஞ்சிக் கேட்கறேன் ஐயா. அவன இங்கயே கூட்டிட்டு வாங்க.” என்று கெஞ்சினாள்.

அவளின் கெஞ்சலைத் தாங்க முடியாமல், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறினார் அழகேசன். அவள் சொல்வது அனைத்துமே நிஜம். அமுதனை, விசாலாட்சி கூட்டிக்கொண்டு சென்று விட்டாள். அவன் தமிழினியிடம் பழகிய பிறகு நிறைய மாற்றங்கள் உண்டானதை கவனித்திருந்தாள்.

எங்கே அவன் திசை மாறிப் போய் விடுவானோ, தங்கள் அனைவரையும் மறந்து விடுவானோ என்று அச்சம் கொண்டு இந்த முறை வருட பள்ளி விடுமுறை விட்டதும், அவனை அழைத்துக்கொண்டு போக அவளே வந்து விட்டாள்.

“அண்ணா, தயவு செய்து என்னை தப்பா நினைக்காத.? போன முறை வந்தப்பவே, அமுதன் கிட்ட நிறைய மாற்றங்கள் இருந்துச்சு. அவன் எப்பவும் அந்தப் பொண்ணப் பத்தி தான் பேசிட்டே இருக்கான். வந்தா ரெண்டு நாள்லயே உடனே ஊருக்கு என்னைக் கூட்டிட்டு போங்கன்னு சொல்றான். உங்க நினைப்பா இருக்குன்னு சொன்னா கூடப் பரவால்ல ணா. அவன் எப்பவோ கோலாக்கு தான்னு மனசுல முடிவு பண்ணி வைச்சிருக்கேன். ஆனா, அவன் இப்போவே வேற பொண்ண நினைக்கறான். ம்ஹூம்ம்.. இதெல்லாம் ஒண்ணும் சரிப்பட்டு வராது. நான் ஒரு முடிவெடுத்துட்டு தான் வந்திருக்கேன். அமுதன நான் ஊருக்கு கூட்டிட்டுப் போறேன். அவன அங்கயே பள்ளிக்கூடத்துல சேர்த்துடறேன். குமரேசனும், கோலாகலமும் போற அதே பள்ளிக்கே அவனும் போகட்டும். ஏதோ உன்னைப் பார்க்கணும்னு சொன்னான்னா அப்பப்போ கூட்டிட்டு வரேன். இல்லன்னா நீயே வந்து அவனப் பார்த்துட்டுப் போயிடு. என்னடா இவ இப்படி சொல்றாளேன்னு நினக்காத ணா. இந்த மாதிரி விஷயத்த எல்லாம் முளையிலேயே கிள்ளி விட்றணும். இல்லன்னா, வளர்ந்துக்கிட்டே போகும்.” என்று சொல்லி முடித்தாள்.

முளையிலேயே கிள்ளி விட வேண்டியது யார் எண்ணத்தை.? அமுதனின் எண்ணத்தையா.? கோலாகலத்தின் எண்ணத்தையா.? சிறிய வயதில் இருந்தே “அவன் உனக்காகப் பிறந்தவன்” என்ற விதையை அவள் மனதில் தூவியது யார்.? பிஞ்சு மனதில் தேவையில்லா ஆசை எனும் விதையை விதைத்தது யார்.?

பெற்றோர்கள் எப்பொழுதுமே தங்கள் பிள்ளைகளுக்கு எதைக் கற்றுத் தரவேண்டுமோ, அதைத்தான் கற்றுத்தர வேண்டும். மாறாக, இதைப் போன்று அவர்கள் அறியா பருவத்திலேயே ஆசையை மனதில் விதைத்தால் அது அவர்களுக்கு அழியா பேராசையாகத்தானே உருவாகி விடும். 6 லிருந்து 8 வயதிற்க்குள் நாம் என்ன கற்றுத் தருகிறோமோ, அதுதான் அவர்களுக்கு அடிமனதில் ஆழமாய்ப் பதியும்.

பல பேர், இப்படிப்பட்ட செயல்களை இன்றுவரை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். மாமா மற்றும் அத்தை முறை பையனோ, பெண்ணோ இருந்தால், அவர்களுக்குள் இதுபோன்ற எண்ணத்தை விதைத்து அவர்களுக்குள்ளாகவே திருமணம் எனும் பந்தத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

அவர்கள் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுதந்திரம் அவர்களுக்கும் வேண்டும் என்று சிறிதும் நினைக்காமல், சொந்த உறவை நீட்டிக்கும் ஆசையில் இப்படிச் செய்கிறார்கள். அது தவறான செயல் அல்ல, பெரியவர்களின் ஈடுபாடு இல்லாமல் எல்லாம் தானாகவே அமைந்தால் சரிதான்.

அப்படிப்பட்ட உலகில் அதற்க்கு நேர்மாறான கருத்துக்களை உடையவர் தான் அழகேசன். இரத்த சொந்தங்களில் திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை அவர் அன்றே அறிந்திருந்தார். அவரின் எண்ணங்கள் எவருக்கும் எட்டாதவை. அவற்றைப் புரிந்து கொள்ள சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அமுதனுக்கும், தமிழினிக்குமான உறவு என்னவென்று அழகேசனுக்கு மட்டுமே தெரியும்.

அமுதன், அவளோடு பழகிய நாட்களில் இருந்தே அழகேசன் அமுதனிடம் கூறும் ஒரு விஷயம் என்னவென்றால், “உனக்கு ஒரு அருமையான தோழி கிடைத்திருக்கிறாள். தோழி என்பவள் கடைசி வரை தோழியாக மட்டுமே இருப்பதென்பது யாருக்குமே கிடைக்காத ஒன்று. ஆனால், நீ அதை தக்கவைத்துக்கொள்வது உன் கையில் மட்டுமே இருக்கிறது.” என்று கூறியிருக்கிறார். அதிலிருந்து அவனும் அவன் மனதில் தமிழினியை ஆருயிர்த் தோழியாக மட்டுமே இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறான்.

அதே போல், இருவரும் அழகேசனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் எப்பொழுதும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விஷயம், “சின்ன வயதில் நீங்கள் இருவரும் நண்பர்களாக இருப்பது பெரிய விஷயமில்லை. பெரியவர்களாக வளரும் பொழுதும் அந்த எண்ணம் மாறாமல் அப்படியே உங்கள் மனதில் இருக்க வேண்டும்.” என்று கூறியிருக்கிறார். அதிலிருந்து அவர்கள் இருவரும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

சிறிய பிள்ளைகள் கூட அதைப் புரிந்து கொண்டு அதற்க்குத் தகுந்தாற் போல் தான் பழகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவற்றை யார் விசாலாட்சிக்குப் புரிய வைப்பது.? ஏதாவது கூறினால், சண்டைக்கு வருவாள். இப்போதைக்கு எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டும் என்று எண்ணினார் அழகேசன்.

“சரி, நான் அமுதன் கிட்ட பேசறேன்.” என்று மட்டும் சொன்னார். அவர் பதிலில் விசாலாட்சிக்கு திருப்தி இல்லை என்றாலும், அவள் அமைதியாக இருந்தாள்.

விசாலாட்சியை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு, அமுதனை கூட்டிக்கொண்டு வெளியே சென்றார். “ஏன்.. இங்கயே பேசினா ஆகாதோ.? கூட்டிட்டுப் போய் தனியாதான் பேசணுமா ணா.?” என்று கிளம்பும் போதே தன் கேள்வியை அழகேசனிடம் வைத்தாள்.

“விசாலம், அவன் என்கிட்ட எதுவா இருந்தாலும் சொல்லுவான். வேற யார் இருந்தாலும் வெளிப்படையா சொல்லத் தயங்குவான். அதனால தான் நான் அவனை வெளில கூட்டிப் போறேன். கொஞ்ச நேரத்துல வந்திடறோம்.” என்று அவளின் மறு பதிலுக்குக் காத்திராமல் அமுதனோடு சென்றார்.

“அப்போ, நான் வேற யாரோன்னு சொல்லாம சொல்லிட்டுப் போறார். ஹூம்ம்..” என்று தலையில் அடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் விசாலாட்சி.

இருவரும் வயல்வெளியில் இருந்த கிணற்றுக்கு அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர். “அமுதா, நான் ஒரு விஷயம் சொல்லுறேன் நீ எதுவும் என்னை தப்பா நினைக்காத.” என்று அழகேசன் சொல்ல, “ஏன்பா. இப்படி சொல்றீங்க.? என்னன்னு சொல்லுங்கப்பா.” என்றான் அமுதன்.

“உனக்கு இப்போ ஒன்பது வயசு ஆச்சு. 4-ம் வகுப்பு போகப் போற, உன்னை உங்க அத்தை அவளோட ஊருக்கே அழைச்சுட்டுப் போறாளாம். உன்னை அங்கயே குமாரும், கோலாவும் போற அதே பள்ளிக்கூடத்துலயே சேர்த்து விடறாளாம். நான் அப்பப்போ வந்து பார்த்தா போதுமாம். இல்லன்னா ஏதாவது ஒரு நாள் உன்னை இங்க கூட்டிட்டு வராளாம். அதுவும், கையோட கூட்டிட்டு போயிடுவாளாம்.” என்று சொன்னதும், அதுவரை சாதாரணமாய் இருந்த அமுதனின் முகம் வாடிப் போனது.

அவனின் முகவாட்டத்தை உணர்ந்தவர், அவனின் தாடையை நிமிர்த்தி அவன் தோள்களில் கையைப் போட்டபடி சொன்னார். “எனக்குத் தெரியும் அமுதா, உனக்கு இங்க இருக்கறதுதான் இஷ்டம்னு. ஆனா, நான் சொன்னா உங்க அத்தை கேட்க மாட்டிங்கறா.? உனக்கு வரதுக்கு விருப்பம் இல்லன்னு சொன்னா அவ ஒத்துக்க மாட்டா. அவளப் பொறுத்தவரைக்கும் எதுவுமே நேரடியா காட்டணும். அப்போதான் நம்புவா, ஒத்துக்குவா. அதனால நீ இப்போதைக்கு அவளோட ஊருக்கு லீவுல போய் இரு. அங்க உன்னால இருக்க முடியுமா, முடியாதான்னு யோசி. உனக்கு அங்க என்னென்ன அசௌகரியம் இருக்குன்னு பாரு. உனக்கு ஒத்து வருதுன்னா நீ தாராளமா அங்கயே இரு. உங்க அத்தை சொன்ன மாதிரி, நான் கூட உன்னை வந்து பார்த்துட்டுப் போறேன். உன்னால இருக்க முடியாதுன்னா, அதை நீ தான் தெளிவா அவங்க எல்லார்கிட்டயும் சொல்லணும். உனக்குத்தான் பேச்சுத்திறமை அதிகமாவே இருக்கே. இந்த வயசுலயும், நீ அபாரமா பேசறியே.” என்றார்.

அதாவது, அவர் போக வேண்டும் என்றும் சொல்லவில்லை. போக வேண்டாம் என்றும் சொல்லவில்லை. எதுவாக இருந்தாலும், நீயே முடிவெடு என்று அவனை சுதந்திரமாக செயல்படுத்தினார்.

அவனும் சிறிது நேரம் யோசித்து விட்டு, “சரிப்பா.. நான் அப்படியே பண்றேன்.” என்று சிரித்துக்கொண்டே சொன்னவனை ஆரத்தழுவிக்கொண்டு வீட்டிற்க்குக் கிளம்பினார். வரும் வழியில் அவன் தமிழினியை நினைத்தான்.

“அப்பா, அதோ தமிழினி வீட்டுக்கு ஒரே நிமிஷம் போயிட்டு அவ கிட்ட சொல்லிட்டு வந்திடறேன் பா.” என்று அவரிடம் கேட்க,

“தாராளமா போய் சொல்லிட்டு வா..” என்று அனுப்பி வைத்தபடி அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்.

போன சிறிது நேரத்திலேயே அவன் வந்தான். “ஏன் அமுதா, அதுக்குள்ள அவகிட்ட பேசிட்டியா.?” என்றார் அழகேசன்.

“ம்ம்ம்.. பேசிட்டேன் பா. போலாம்..” என்று அவன் சாதாரணமாக இருந்ததில் அவருக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

அவர்கள் வீடு வந்து என்ன சொல்வார்களோ, என்ற பயத்துடனே காத்திருந்த விசாலாட்சியிடம் அவர் வந்தவுடனேயே, “அமுதன் உன்னோட வரதுக்கு சம்மதிச்சுட்டான். நீ கூட்டிட்டுப் போ.” என்று சொன்னார்.

அவர் சொன்னதும் வாயெல்லாம் பல்லாக, “அப்பா.. வாடா என் ராசா.. வா.. வா...” என்று அமுதனை அழைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் விசாலாட்சி.

அமுதன் மேல அளவு கடந்த பாசம் அவளுக்கு இருக்கிறது என்றாலும், அவனுக்கென்று சில ஆசைகளும், எண்ணங்களும் இருப்பதையும் கொஞ்சமாவது யோசிக்க வேண்டும் என்று ஏன் அவளுக்குத் தோணாமல் போனது.?

அவன் வர சம்மதம் சொல்லி விட்டான் என்ற உற்சாகத்தில், பஸ்ஸூக்கு செல்லும் வழியில் இருந்த பெட்டிக்கடையில் அவனுக்குப் பிடித்த, தேன்மிட்டாய் ஒரு பாக்கெட், பொரி உருண்டை ஒரு பாக்கெட், சுக்கு மிட்டாய் என்று அனைத்தையும் வாங்கி ஒரு வயர் கூடையில் போட்டபடி அவனது கையைப் பிடித்துக்கொண்டு கிளம்பினாள் விசாலாட்சி.

தமிழினி கேட்ட நிமிடங்களில், நடந்த இவையனைத்தும் அவர் கண் முன்னே வந்து போயின. அவள் கேட்டதற்க்கான பதிலை அவர் இன்னும் சொல்லவில்லை. ஆனாலும், பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

“அமுதன் ஊருல இருக்கற அவங்க அத்தை வீட்டுக்குப் போயிருக்கான். அவன் கண்டிப்பா திரும்பி வந்துடுவான். நீ ஒண்ணும் கவலப்படாத.” என்று அவளை சமாதானப்படுத்தும் நோக்கில் அவளிடம் சொன்னர் அழகேசன். அவளும் சந்தோஷமாக, “சரிங்கய்யா..” என்று தலையை ஆட்டினாள்.

அமுதன் வருவானா.? இவர்களின் நட்பு தொடருமா.? காத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

(தொடரும்...)

வார்த்தைகளின் எண்ணிக்கை : 1389

உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட் லிங்கில்
கொடுக்கவும் நட்புக்களே...


Click to Comment
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.
Top Bottom