பூவை 5
இரவெல்லாம் நடந்ததை நினைத்துக்கொண்டு தூங்காமல் இருந்தவள், அதிகாலை நேரத்தில் அசந்து உறங்க ஆரம்பித்தாள். கண்மணி நன்றாக உறங்கி கொண்டிருப்பதை சிறிது நேரம் நின்று பார்த்த லதா கொண்டு வந்த காபியை டேபிள் மீது வைத்து மூடிவிட்டு மீண்டும் அறையை விட்டு வெளியே வந்தார். காபி டம்ளரை வைத்து மூடும் சத்தம் கேட்டு கண்மணி மெல்ல விழித்து பார்த்தாள், டேபிள் மேல் இருந்த டம்ளரை லேசாக பார்வைவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். தடார் என யாரோ வாசல் கதவை அடிக்கும் சத்தம் கேட்டு வெடுக்கென்று விழிகள் உறக்கத்தை பறித்து கொள்ள சட்டென்று எழுந்தாள். எதிரே அறையின் நிலையை பிடித்துக்கொண்டு லதா பயம் கலந்த கலக்கத்துடன் நின்று கொண்டு இருந்தார். என்ன? என்பது போல் கண்மணி கண்களால் கேட்டாள். லதா சற்று தள்ளி வராண்டவை காட்ட கண்மணியும் எட்டிப்பார்த்தாள். சத்தியேந்திரன் சோபாவில் அமர்ந்து தலையை குனிந்து கீழே எதையோ தேடியவன் போல் உட்கார்ந்து இருந்தான். சத்தம் இல்லாமல் கண்மணி அவன் எதிரே நின்று கொண்டு இருந்தாள். அவள் கால்கள் தெரிய சத்தியேந்திரன் தலையை நிமிர்ந்து அவளை பார்த்தான். அவள் பார்வையில் அவன் மீதான அக்கறை இருந்தது. இத்தனை காலையிலேயே ஏன் வந்தான், கண்கள் எல்லாம் சிவந்து போய் பேய் அறைந்தவன் போல இருக்கிறானே என்று தான் முதலில் அவளுக்கு தோன்றியது. இருவரும் பேசிக்கொள்ளவில்லை இருவருக்குள்ளும் அமைதி மட்டுமே. சின்ன சிறு அமைதியை களைக்கும் படியாக லதாவின் காபி டம்ளர் சத்தம் எழுப்பியது. நங்கென்று காபியை டீப்பாயில் வைத்தார் லதா. சத்தியேந்திரன் டம்ளரையும், லதாவையும் மாறி மாறி பார்த்தார். லதா தலையை குனிந்த படியே மீண்டும் அடுப்பங்கரைக்கு பயணப்பட்டார்.
“நான் நைட்டெல்லாம் தூங்கவே இல்ல..“ அவனே ஆரம்பித்தான். கண்மணி சிறிது நேரம் கழிந்து “ஏன்?“ என்றாள்.
“பிளீஸ்…நம்ம டிவோர்ஸ் பண்ணிக்கலாம்.“ அவன் சுற்றி வளைத்து இதற்கு தான் வருவான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அடுத்த கணமே “முடியாது“, என்ற பதிலை பட்டென்று அடித்தாள்.
சத்தியேந்திரன் மிகவும் அமைதியாக இருந்தவன், மெல்ல மெல்ல நிதானத்தை இழந்தவன் போல கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது. சோபாவின் கைப்பிடியை கைகளால் திருகு திருகென்று திருவினான். சட்டென்று எழுந்தான், அவளை பார்த்தான். அவனின் கண்கள் முழுவதும் கோபமே தழும்பியது. கண்மணியின் கண்களிலோ காதலும் சிறு கண்ணீரும் தழும்பி நின்றது.
“நீ டிவோர்ஸ் கொடுக்கவே வேண்டாம்.. வேண்டாம்..“ சொன்னதையே சொன்னான். லதாவிற்கு கண்ணீர் பொங்கி கொண்டு வந்தது. தன் மாப்பிளையின் நடவடிக்கைகளால் தன் பெண்ணின் வாழ்க்கை என்னாகுமோ என்ற பயத்தை அவளுக்கு விதைத்து விழிநீராய் வெளியே வந்தது அதை தன் முந்தானையில் துடைத்துக் கொண்டே நின்றார்.
“நான் செத்துடுறேன்..நான் செத்துடுறேன்.. அப்போ என்ன பண்ணுவ..உன்னாலயே நான் சாகபோறண்டி சீக்கிரம் நான் செத்துடுவேன். நீ என்ன செய்வ?“
என்ன பேசுகிறான் என்றே புரியாமல் பேசினான். கண்மணி சத்தியேந்திரனை உற்று பார்த்தாள்.
அவன் சொன்ன வார்த்தைக்கு அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. அவள் சிறிதும் தாமதிக்காமல் உடனே அவனுக்கான பதிலை கொடுத்தாள் “நானும் செத்துடுவேன்..“ அவளின் இந்த பதிலை சிறிதும் எதிர்பார்க்காதவன் கண்மணியை ஒரு முறை பார்த்தான். இப்போது அவன் கண்களில் இருந்த கோபம் எங்கோ தெரியவில்லை ஆனால் வராத கோபத்தை வரவழைத்து எதிரே இருந்த டீப்பாயை தூக்கி ஒரே அடி காபி டம்ளர் பறந்தது. லதா சத்தம் கேட்டு பதற்றமாக வெளியே வந்து பார்த்தார். சத்தியேந்திரன், லதாவையும், கண்மணியையும் மாறி மாறி பார்த்துவிட்டு வேகவேகமாக வீட்டைவிட்டு வெளியே வந்தான். கண்மணி தன் அம்மாவை பார்த்தாள் முகம் வாடிபோய் இருந்தது எதுவும் பேசவில்லை தன் அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டாள்.
************
சத்தியேந்திரன் வீட்டு வாசலில் கால் கடுக்க காத்துக்கொண்டு நின்றாள் மெர்ஸி. நீண்ட நேரமாக நின்று கொண்டு இருக்கிறாள். தன் மொபைலை எடுத்து சத்தியேந்திரன் நம்பரை டயல் செய்து டயல் செய்து பார்க்கிறாள். பலன் இல்லை, கைபேசியை வைத்துவிட்டு வீட்டு வாசலிலேயே இங்கும் அங்கும் நடந்தாள். நீண்ட நேரம் கழித்து கார் வாசலில் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. வாசலை எட்டி பார்த்தாள் சத்தியேந்திரன் காரை வாசலிலேயே நிறுத்திவிட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்தான். மெர்ஸி அவனை வித்தியாசமாக பார்த்தாள், “எங்க சார் போனிங்க நான் ரொம்ப நேரமா காத்திருக்கேன்.“ என்றாள்.
அவன் எதுவுமே பேசவில்லை பேசமால் கதவை திறந்தான். அவள் விடுவது போல இல்லை, மீண்டும் உள்ளே வந்து அதே கேள்வியை கேட்டாள். இப்போது அவனால் அந்த கேள்வியை கடந்து செல்ல முடியவில்லை. “கண்மணிய பார்க்கபோனேன்.“ எங்கயோ பார்த்து பதிலை சொன்னான்.
“மேடமையா?? இப்படியேவா?? உங்க டிரஸ்ச பாருங்க“ என்றாள். அவன் இப்போது தான் கவனித்தான் உள் பணியனும், சார்ட்சும் மட்டுமே அணிந்து இருந்தான். தலையை தடவிக்கொண்டு ஏதோ யோசனையோடு விறுவிறுவென்று தன் அறையை நோக்கி சென்றான். கதவை வேகமாக மூடிவிட்டு கட்டிலில் சரிந்தான் விழிகளை மூடிக்கொண்டான். சிறிது நேரம் தான் கழிந்தது. “சா…ர்…“ என்ற மெர்ஸியின் அலறல் வீட்டையே அதிர செய்தது. சத்தியேந்திரன் பதறிபோய் எழுந்தான். கதவை திறந்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான் “மெர்ஸி..“என்று கத்தினான். பக்கத்து அறையில் இருந்து “சார், சீக்கிரம் வாங்க“என்று மீண்டும் அலறினாள். சத்தியேந்திரன் சத்தம் வந்த பக்கம் போனான். பாக்யவதி அறையை பார்த்தான், தூக்கிவாரி போட்டது. பாக்யவதி கட்டிலில் இருந்து கீழே விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். சத்தியேந்திரன் திடீரென்று அறைக்குள்ளயே இங்கும் அங்கும் நடக்க ஆரம்பித்தான். இடம் வலம் என்று நடந்து கொண்டே இருந்தான். மெர்ஸிக்கு அவனின் நடவடிக்கைகள் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருந்தது. “சார்..“ என்று கத்தி கத்தி பார்த்தாள், அவன் காதில் எதுவும் ஏறவில்லை. மெர்ஸியே எழுந்து வந்து ஹாலில் வைத்து இருந்த தன் கைபையில் இருந்து மொபைலை எடுத்து அம்புலன்ஸ்சை அழைத்தாள். மீண்டும் அறைக்கு வந்து பாக்யவதி முகத்தில் தண்ணீரை அடித்தாள், எந்த பலனும் இல்லை அசைவற்று கிடந்தார். சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸ் வர பாக்யவதியை ஸ்டெச்சரில் வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். மெர்ஸி ஆம்புலன்ஸில் ஏறும் முன் திரும்பி சத்தியேந்திரனை பார்த்தாள், அவன் எங்கோ பார்த்து கொண்டு இருந்தான். அவனை அழைப்பதா, இல்லை செல்வதா சிறிது தயங்கினாள். என்ன நினைத்தாலோ அவனை அழைக்காமலே ஆம்புலன்ஸில் ஏறிக்கொண்டாள். ஆம்புலன்ஸ் காற்றை பிய்த்துக்கொண்டு பறந்தது.
***********
மருத்துவமனை வளாகத்தில் மெர்ஸி யாருக்காகவோ காத்துக்கொண்டு நின்றாள். ஆட்டோ ஒன்று அவளை நெருங்கி வந்து நின்றது, கண்மணி ஆட்டோவில் இருந்து இறங்கினாள். பணத்தை கொடுத்துவிட்டு ஆட்டோவை அனுப்பி வைத்தாள். பதற்றமாக மெர்ஸியை நெருங்கினாள்.
“மெர்ஸி..“
“மேடம்..“ மெர்ஸி கண்கலங்கினாள். கண்மணிக்கு இன்னும் பயம் அதிகமானது. போனை அடித்து உடனே ஹாஸ்பிட்டலுக்கு வாங்க என்று அழைத்தாளே, ஆனால் காரணம் சொல்லவே இல்லையே, இங்கு அழுதுக்கொண்டு நிற்கிறாளே, சத்தியேந்திரனுக்கு எதுவுமாக இருக்குமோ, சற்று நேரத்திற்குள் கண்மணியின் மனம் எதை எதையோ நினைத்து பயந்தது. பயத்தை மறைத்து “என்ன சொல்லு“, என்றாள்.
“மேடம், அம்மா..“ சொன்னதையோ சொல்லிக்கொண்டு கண்மணி கைகளை பிடித்து அழைத்து மருத்துவமனை உள்ளே சென்றாள். பாக்யவதியை ஐசியூக்கு வெளியே ஸ்டெச்சரில் வைத்து இருந்தனர். நெடுநெடுவென ஒருவன் காவலுக்கு நிற்பது போல அருகே நின்று கொண்டு இருந்தான். கண்மணி தயங்கி தயங்கி அருகே சென்றாள். மெர்ஸி தள்ளியே நின்று கொண்டாள் கண்மணி திரும்பி மெர்ஸியை பார்த்தாள் அவள் கண்கலங்கி கொண்டு இருந்தாள். கண்மணி பாக்யவதி அருகே சென்று அவர் முகத்தை பார்த்தாள். “நீங்க தான் அவங்க டாட்டரின்லாவா“ என்ற குரல் அவளின் முதுகுக்கு பின்னால் ஒலிக்க திரும்பி பார்த்தாள். டாக்டர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். “ஆமாம் டாக்டர்..“ அவள் குரல் மிகவும் பதற்றமாக இருந்தது.
“ஸாரி மேடம் உங்க மாமியார இங்க கொண்டு வரும் போதே உயிர் இல்ல.“ டாக்டர் சொன்னதுமே கண்மணிக்கு விழிகள் இருண்டு வந்தது. மேலும் அவரே சொன்னார், "உடம்பு சரியில்லதவங்கள இவ்வளவு அலட்சியமா கவனிச்சிருக்கிங்க. மேபி அவங்க இறந்து பத்து மணிநேரத்துக்கு மேல இருக்கும் போல முகமெல்லாம் கருத்து போய் இருக்கு. என்ன மேடம் பண்ணிக்கிட்டு இருந்திங்க கவனிக்காம?“
கண்மணியால் எந்த பதிலும் சொல்லவே முடியவில்லை. “சார்..சார்.. நான்..“என்று தயங்கி தயங்கி பதிலை சொன்னாள். “எடுத்துட்டு போங்க..“என்று டாக்டர் அவ்விடம் விட்டு சென்றார். கண்மணி பாக்யவதி அருகே சென்றாள் அடக்கி வைத்து இருந்த கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. “அத்த“ என்று கட்டிபிடித்து அழுதாள்.
“மேடம் டைம் ஆகிடுச்சி“ என்றான் நெட்டையாக நின்று கொண்டு இருந்த வாலிபன். மெர்ஸி ஆறுதலாக அணைத்துக் கொண்டாள். பாக்யவதியை மீண்டும் ஆம்புலன்ஸில் கொண்டு வந்து ஏற்றினார்கள்.
“எதும் அமவுண்டு செட்டில் பண்ணனுமா மெர்ஸி..“ கண்களை துடைத்துக்கொண்டு கேட்டாள் கண்மணி.
“இல்ல மேடம் ஆம்புலன்ஸ்கு மட்டும் தான் கொடுக்கனும்.“ இருவரும் அந்த ஆம்புலன்ஸிலேயே ஏறிக்கொண்டனர். கண்மணி வழிநெடுக அவளுக்கும், பாக்யவதிக்கும் இடையே இருந்த சில நினைவுகளை நினைத்து கண்கலங்கி கொண்டு வந்தாள். அவர் உடல்நலம் இல்லாமல் படுத்ததில் இருந்து பிள்ளையை போல பார்த்துக்கொண்டவள் கண்மணி தான். இந்த சிறிது காலமாக தான் கவனிக்காமல் போனாள், அதுவும் சத்தியேந்திரனால் இப்போது உயிரே போய் விட்டது. மெர்ஸியிடம் வந்ததுமே சத்தியேந்திரனை கேட்டு இருப்பாள். அவள் அவன் நடந்துக்கொண்டதை சொன்னதும் அவனை பற்றிய பயம் வேறு அதிகமாக கண்மணியை பற்றிக்கொண்டது. அந்த யோசனையும் ஒரு புறம் அவளுக்கு மண்டை குடைச்சலை கொடுத்துக்கொண்டு இருந்தது. ஆம்புலன்ஸ் சத்தியேந்திரன் காம்பவுண்டுக்குள் நுழைந்து இருந்தது. ஏற்கனவே கண்மணி மருத்துவமனையில் இருந்தபடியே லதாவிற்கு போன் செய்து ஏற்பாடுகளை யாரையேனும் வைத்து செய்ய சொல்லி இருந்தாள். லதாவும் சில உறவுகாரர்களை வைத்து எல்லாம் செய்து கொண்டு இருந்தார். பந்தல் போடப்பட்டு கொண்டு இருந்தது. ஆம்புலன்ஸ் வந்ததும் சிலர் வந்து கூடிக்கொண்டு அழதொடங்கினார்கள்.
பாக்யவதியின் உடல் நடுகூடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. லதா அருகே அமர்ந்து இருந்தார். கண்மணி தலைமாட்டிலேயே உட்கார்ந்து இருந்தாள். சத்தியேந்திரன் தலை வெளியே தெரியவே இல்லை. ஆண்களும், பெண்களும் வந்த வண்ணமாகவும் மாலைகள் விழுந்த வண்ணமாகவும் இருந்தது. வந்த ஆண்கள் சத்தியேந்திரனை கேட்டுகொண்டு இருந்தனர். கண்மணி உடம்பு சரியில்லை என்று சொல்லி சமாளித்தாள். சிறிது நேரம் கழித்து எழுந்து சத்தியேந்திரன் அறைக்கு சென்றாள். சத்தியேந்திரன் பித்துபிடித்தவன் போல உட்கார்ந்து கொண்டு இருந்தான். அவன் அருகே சென்று நின்றாள், அவன் சட்டையை பிடித்து மேலே எழுப்பினாள்.
“என்னதான் உங்க பிரச்சனை சொல்லி தொலைங்களேன்..சொல்லி தொலைங்க உங்கள பெத்தவ செத்து கிடக்குறாங்க, காலம்பூர உங்களுக்காக கஷ்டபட்டவங்க செத்துகிடக்குறாங்க வந்து பாருங்க“ அவனை போட்டு குலுக்கினாள். அத்தனை நேரம் அமைதியாக இருந்தவன் “ஆ..ஆ..“ என்று சத்தம் போட்டு கதறினான்.
“அய்யோஅம்..மா..அய்யோ…கடவுளே“ என்று அழுதான், கண்மணியை கட்டிக்கொண்டான். “எங்க அம்மா..என்ன அநாதையா ஆக்கிட்டாங்களே“ கதறினான். கண்மணி அவனை இறுக்கமாக கட்டி ஆறுதல் சொன்னாள்.
“என்னால இன்னும் எத்தனை பேர் சாகபோறாங்களோ.“ அவன் சொன்னது கண்மணிக்கு தூக்கிவாரி போட்டது.