Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL நிறம் மாறும் நிஜம் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

sairenu

New member
Vannangal Writer
Messages
12
Reaction score
3
Points
3

நிறம் மாறும் நிஜம்​

1​


"ஹலோ தர்மா! தர்மா தானே?" ஆலயப் பிரதக்ஷிணம் ஆரம்பித்தவனைக் குரல் இழுத்து நிறுத்தியது.

"ஆமா. சார் யாருன்னு…" என்று மாஸ்க் மறைவின் வழியே கேட்டான் தர்மா.

"ஐ அம் வினீத் மேனன். நினைவிருக்கா? மூன் பேப்பர் மில்ஸ் மிஸ்டர் ஸ்ரீநிவாஸன் வீட்டுக் கல்யாணத்தில் மீட் பண்ணினோம்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார் நாற்பதுகளில் இருந்த அந்த செழிப்பான மனிதர்.

"ஓ, வணக்கம். எப்படி இருக்கீங்க சார்?"

"கொரோனாக்குப் பயந்துக்கிட்டே நல்லா இருக்கேன். உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். *மிஸ்டர் பாலகோபாலன் நம்பூதிரியை நான் சமீபத்தில் மீட் பண்ணினேன், உங்களைப் பற்றி ரொம்ப நேரம் பேசிட்டிருந்தார்" என்றார் மேனன்.

(*பார்க்க: நாக மேகலை)

"அவன் என் ஃப்ரெண்ட் தான்" என்றான் தர்மா.

"உங்க ஃப்ரெண்ட்ஷிப்பைப் பற்றி, அதோடு சமீபத்தில் நீங்களும் உங்க ஸிஸ்டர்ஸும் அவங்க ஃபேமிலிக்குச் செய்த உதவியைப் பற்றி ரொம்ப உயர்வா பேசினார். அதிலிருந்தே உங்களை மீட் பண்ணணும்னு ஆசை. அகஸ்மாஸ்தா கோவிலில் சந்திக்கும்படியா நேர்ந்திருக்கு."

"சந்தோஷம் சார். அப்புறம் மீட் பண்ணலாம்" என்றான் தர்மா நாசூக்காக.

"உங்களை நான் மீட் பண்ணணும்னு நினைச்சதுக்குக் காரணம் உங்களைப் பாராட்ட மட்டுமில்லை, உங்க உதவி கேட்கவும்தான். எனக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியுமா?" என்று கெஞ்சும் குரலில் கேட்டார் மேனன்.

தர்மா மாஸ்கின் பின்னால் புன்னகைத்தான். "என் ஆஃபீஸுக்கு வாங்களேன், விரிவா பேசலாம்" என்றான்.

"எப்போ வரட்டும்? உங்க கன்வீனியண்ட் டைம் சொல்லிட்டீங்கன்னா வசதியா இருக்கும்" என்றார் விடாக்கண்டர்.

"சரி, இன்னிக்கு மதியம் இரண்டு மணிக்கு மேல வாங்களேன்" என்று தர்மா சொன்னதும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, "ரொம்ப தாங்க்ஸ் தர்மா" சொல்லி, கோயிலின் வெளியே சென்று மறைந்தார் மேனன்.

தர்மா நிறுத்திய பிரதக்ஷிணத்தைத் தொடர ஆரம்பித்தான்.

*****​

மணி சரியாக இரண்டு.

சதுரா துப்பறியும் நிறுவனத்திற்குள் மேனன் நுழைந்தபோது, சுழல்நாற்காலியில் தர்மா வீற்றிருந்தான். அருகில் ஸ்டெனோ மேஜை போன்ற ஒன்றின் பின்னால் தர்ஷினி. இப்புற மேஜைமீது சாய்ந்துகொண்டு, தன்யா!

"வெல்கம், மிஸ்டர் மேனன்" என்று எழுந்து வரவேற்றான் தர்மா.

அறிமுகங்கள் முடிந்து எல்லோரும் அமர்ந்ததும் "சொல்லுங்க மேனன், நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?" என்றான் தர்மா.

"டிடக்டிவ் ஏஜன்சிக்கு வேறு எதற்கு வருவேன்? ஒரு கேஸோட வந்திருக்கேன்" என்றார் மேனன்.

"சரியா போச்சு. ஏற்கெனவே நாங்க கேரளக் கரைக் கேஸ்களை அதிகமா எடுத்துக்கறதா ஒரு குற்றச்சாட்டு இருக்கு…" என்று சிரித்தாள் தன்யா.

"போன தடவை அந்த நாக மேகலை கேஸ்லகூட, மல்லுவுட் தான் பிடிக்குமா, ஏன் கோலிவுட் பிடிக்காதான்னு ஒரே இ-மெயில் மழை" என்றாள் தர்ஷினி.

"அதுக்குத்தான் சொன்னேன், திரில்லர், டிடக்டிவ் ஸ்டோரீஸ் நிறைய வரதுன்னு மலையாளப் படங்களா பார்க்காதீங்கன்னு" என்று அவர்களை வம்புக்கிழுத்தான் தர்மா.

"அடடே! இவர் மலையாளப்பட்டம் பார்க்கிறதேயில்லை பாரு! த்ரிஷ்யம்-2 ரிலீஸ் ஆன அன்றைக்கே பார்த்தாச்சு. இப்போ மோகன்குமார் ஃபேன்ஸ் பார்க்கத் தவம் இருக்கார்" என்றாள் தன்யா.

"ஆமா, மம்முட்டி, மோகன்லால் த்ரில்லர் படம் ஒண்ணு விடமாட்டான். அதோட சித்திக் சாரோட பெரிய ஃபேன் ஆச்சே தர்மா. இதில் எங்களை என்ன பேச்சு?" என்றாள் தர்ஷினி.

இந்தப் பேச்சை ரசித்துக் கேட்ட மேனன் "இந்த ஸிப்லிங் பைட்டிங் கேட்கவே இனிமையா இருக்கு. அதுவும் என்னைப் போன்ற ஒற்றை மரத்திற்கு" என்றார்.

"சாரி, பேச்சு எங்கேயோ போயிடுச்சு. இதோ விஷயத்திற்கு வந்துடலாம். சொல்லுங்க மேனன்" என்றான் தர்மா.

மேனன் ஒரு பெருமூச்சுவிட்டுப் பேசத் தொடங்கினார்.

"என் பூர்வீகம் கேரளாதான், ஆனால் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில். என் மொழியும் அடையாளமும் தமிழ்தான். உங்களுக்குத் தெரிஞ்ச அளவுகூட எனக்கு மலையாளம் தெரியாது…"

தர்மா, தன்யா, தர்ஷினி புன்னகைத்தார்கள்.

"இங்கே பி எஸ் ஹைஸ்கூலில்தான் என் படிப்பு எல்லாம். டிகிரி வாங்கினதுக்கு அப்புறம் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல மேனேஜரா வேலை பார்த்துட்டிருந்தேன். ஏழு வருஷத்திற்கு முன்னாடி என் வாழ்வில் ஒரு திருப்பம்… எனக்குத் தூரத்துச் சொந்தக்காரர் ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் எங்க உறவுக்காரங்க எல்லோரையுமே போய்ப் பார்த்ததாகக் கேள்விப்பட்டேன். அப்போ இந்த விஷயத்தை நான் பெரிசா எடுத்துக்கலை.

"கொஞ்ச நாளைக்கப்புறம் எனக்குச் செய்தி கிடைச்சது – என் சொந்தக்காரர் இறந்துட்டார்னும் வாரிசில்லாத அவர் தன்னுடைய சொத்துகளையெல்லாம் என் பெயரில் எழுதியிருக்கார்னும் தெரிஞ்சுக்கிட்டேன்."

"வாவ்! வாட் அ விண்ட்ஃபால்!" என்றாள் தன்யா.

"பெரிய அதிர்ஷ்டம்தான். ஈசிஆர் ரோட்டில் கடற்கரைக்கு அருகில் பெரிய லேண்ட் அந்தச் சொத்துகளோடு எனக்குக் கிடைச்சது. என்னுடைய அனுபவத்தை நம்பி அந்த இடத்தில் ஒரு ரிசார்ட் கட்டி நடத்த ஆரம்பிச்சேன். இன்றைக்குச் சென்னையிலேயே நம்பர் ஒன் பீச் ரிசார்ட்னு பேர் வாங்கியிருக்கு சில்வர் ஸாண்ட்ஸ்."

தன்யாவுக்கும் தர்ஷினிக்கும் தூக்கிவாரிப் போட்டது.

மேனன் மென்மையாகப் புன்னகைத்தார். "உங்க ஸிஸ்டர்ஸ்க்குப் புரிஞ்சுட்டுது. ஆக்ட்ரஸ் யாமினி விவகாரமாத்தான் உங்களைப் பார்க்க வந்திருக்கேன்."

"யாமினியா? யார் அவங்க?" என்றான் தர்மா.

இப்போது தன்யாவும் தர்ஷினியும் புன்னகைத்தார்கள். தர்ஷினி சொன்னாள் - "சாரி மிஸ்டர் மேனன். மலையாளத்தில் த்ரில்லர் மூவீஸ் மட்டும்தான் தர்மா பார்ப்பான். தமிழில் க்ளாசிக் கறுப்பு-வெள்ளைப் படங்களைத் தாண்டி அவன் க்ராஜுவேட் பண்ணவேயில்லை. ஹிந்தி சுத்தம். ஆங்கிலத்தில் ஜுராஸிக் பார்க் மட்டுந்தான் பார்த்தான்…"

"…அதுக்கே அவனுக்கு ஜுரம் வந்துடுத்து" என்றாள் தன்யா குறும்பாக. தர்மா அவளை நோக்கி விளையாட்டாகக் கையை ஓங்கினான்.

மேனனும் சிரித்துவிட்டார். "அப்போ உங்களுக்கு முதல்லேர்ந்து கதை சொல்லணும். டூ யூ ஹேவ் டைம்?"

"என்ன பொன்னியின் செல்வன் கதையா சொல்லப் போறீங்க? சுருக்கமா சொல்லலாம். கோ அஹெட்" என்றான் தர்மா.

மேனன் தன் எண்ணங்களை ஒழுங்குபடுத்துபவர் போன்று சிறிதுநேரம் மௌனமாக யோசித்தார். பிறகு பேச ஆரம்பித்தார்.

"எங்க ரிசார்ட்க்கு டூரிஸ்ட்ஸ், உள்ளூர்க்காரங்க இரண்டுபேருமே வருவாங்க. ஒரு மாற்றத்தை விரும்பற குடும்பஸ்தர்கள் அதிகமாக வருவதுண்டு. குழந்தைகளுக்காகப் பாதுகாப்பான ஆக்டிவிட்டீஸ் – நீச்சல், இன்னும் பலவிதமான விளையாட்டுகள் ஏற்படுத்தியிருக்கோம். டைம்ஷேர் மாதிரி காட்டேஜ் எடுத்துக் கொண்டு மாதம் ஒருமுறை வந்து தங்கிவிட்டுப் போகிறவர்கள் உண்டு. இவர்களுக்குத் தனியாகக் காம்பவுண்ட், ப்ரைவேட் பீச் எல்லாம் உண்டு.

"இன்னொரு காம்பவுண்டில்தான் டைம்ஷேர் இல்லாத மற்ற விருந்தாளிகள் தங்குவது. அங்கே மிகப் பெரிய வசதியான ரெஸ்டாரண்ட், குழந்தைகளுக்கான பெரிய தீம் பார்க் எல்லாமே உண்டு. என்றாலும் டைம்ஷேர் காட்டேஜஸ்ல தங்குகிறவர்கள் பெரும்பாலும் இந்தக் காம்பவுண்டுக்கு வருவதில்லை. அவர்கள் அமைதியை நாடித்தானே வருகிறார்கள்?

"சினிமா, டீ வி சீரியல் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று அரசு அனுமதி கொடுத்தபிறகு, போன ஜனவரி மாதத்தில் ஒரு படப்பிடிப்புக் குழு எங்க ரிசார்ட்டில் வந்து தங்கினாங்க. ஒரு வாரத்துக்கு முதலில் தங்கப் போறதா சொன்னாங்க. ஆனால் தொடர்ந்து மூன்று வாரங்கள் எங்க ரிசார்ட்டிலேயே தங்கி ஷூட்டிங்கை நடத்தினாங்க…"

"ரிசார்ட்டிலே ஷூட் பண்ணினாங்களா?" என்று கேட்டாள் தன்யா.

"இல்லல்ல, எல்லோரும் ரிசார்ட்டில் தங்கிக்கிட்டுச் சுற்றுவட்டாரத்தில் ஷூட்டிங்கை நடத்தினாங்க. முக்கியமா பக்கத்தில் இருந்த ஒரு பண்ணையிலும் அதிலிருந்த பங்களாவிலும் ஒரு போர்ஷன் படப்பிடிப்பு நடந்தது. அதற்கு இங்கிருந்து போய்விட்டு வருவது ரொம்பச் சுலபமா இருந்தது…"

தர்மா இப்போது இடைமறித்தான். "இந்தப் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்தவங்களா யாமினி?"

"ஆமா. யாமினி டாப் நடிகையா இருந்தவங்க. நேஷனல் அவார்ட் வின்னர்" என்று தர்மாவுக்காக விளக்கினார் மேனன். "ஹீரோவும் டாப் ஆர்டிஸ்ட். பெரிய பேனர். பெரிய டைரக்டர்."

"சரி, இப்போ கேஸ் என்ன? யாமினி படப்பிடிப்பிலிருந்து ஓடிட்டாங்களா சுஜாதாவோட ப்ரியா கதையில் வருகிற மாதிரி? அவங்களைத் திருப்பிக் கூட்டிட்டு வரணுமா?" என்றான் தர்மா. அவன் குரலில் கொஞ்சம் எரிச்சல் கலந்திருந்தது.

மேனன் அவனை வியப்புடன் "அட க்ராக்கே!" என்ற பார்வை பார்த்தார். இவர்களை நம்பிக் கேஸ் தரலாமா வேண்டாமா என்றே அவர் குழம்ப ஆரம்பித்துவிட்டது போலிருந்தது.

"ப்ளீஸ் மிஸ்டர் மேனன். தர்மாவுக்கு நான் புரியும்படியா சொல்றேன்" என்றாள் தன்யா. "கடந்த பிப்ரவரி மாதம் யாமினி ரிசார்ட்டில் தன் அறையில் மரணமடைந்தாள். தற்கொலை என்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் காணப்பட்டது" என்றாள் டீவியில் செய்தி வாசிப்பவரைப் போல.

"யாமினியின் காதலன் அவளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்தார். இரண்டு மூன்று முறை இது திரும்பத் திரும்ப நிகழ்ந்தது. இப்போ ஜாமீனில் வெளியே இருக்கார்.

"இதற்கிடையில் வேறு தடயங்கள் கிடைச்சிருக்கறதாகவும், வேறு நபர்கள்மீது சந்தேகம் விழுந்திருக்கறதாகவும், இன்னும் ஏதேதோ செய்திகள் வந்துட்டேயிருக்கு. ஆனா அஃபீஷியல் போலீஸ் ந்யூஸ் ரொம்பக் கம்மி" என்று தன்யாவைத் தொடர்ந்தாள் தர்ஷினி.

"ஐ ஸீ" என்றான் தர்மா யோசனையாக.

"சரியா சொல்லிட்டீங்க" என்றார் மேனன். "இந்த யாமினியோட வழக்கைத் துப்பறிஞ்சு உண்மைகளைக் கண்டுபிடிக்கணும்னுதான் உங்களைக் கேட்டுக் கொள்ள வந்தேன்."

"இது தற்கொலை. இதிலே நாங்க கண்டுபிடிக்க என்ன சார் இருக்கு? போலீஸும் மெத்தனமா இல்லையே, ஆக்‌ஷன் எடுத்துக்கிட்டுத் தானே இருக்காங்க" என்றாள் தன்யா.

"போலீஸா? அவங்க தினமும் ஒண்ணு சொல்றாங்க. திடீர் திடீர்னு வந்து விசாரணை பண்றாங்க. பேரர்களையும் ஆஃபீஸ் ஸ்டாஃபையும் மிரட்டற வேலையை நல்லா செய்யறாங்க. என்ன ரிசல்ட் கிடைச்சிருக்கு சொல்லுங்க? என்னுடைய ரிசார்ட் பேர் கெட்டதுதான் கண்ட பலன். நாளுக்கு நாள் கெஸ்ட்ங்க குறைஞ்சுக்கிட்டே வராங்க!" என்று புலம்பினார் மேனன்.

"கெஸ்ட்ங்க குறைவதற்குக் காரணம் கொரோனாவாயிருக்கும்" என்றான் தர்மா.

"ப்ளீஸ்! என்னுடைய பிஸினஸ் ஏன் குறையறது கூடறதுன்னு எனக்கு நல்லா தெரியும். கொரோனா ஸெகண்ட் வேவ் வந்தபோது, எங்க ரிசார்ட் பாதுகாப்பானதுங்கற காரணத்திற்காகவே பல கஸ்டமர்கள் வந்து தங்கியிருந்தாங்க. இப்போ கடந்த ஒரு மாத காலமா பலர் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க, புது கெஸ்ட்களும் வரதில்லை…"

"ஓகே. உங்க க்ளையண்டீல் குறைஞ்சதுக்கு யாமினியோட மரணம்தான் காரணம்னு நினைக்கறீங்களா?"

"இல்லை. அவ இன்னும் எங்க ரிசார்ட்டில் நடமாடறதுதான் காரணம்னு நினைக்கறேன்!"

(தொடரும்)
 
Last edited:

sairenu

New member
Vannangal Writer
Messages
12
Reaction score
3
Points
3

2

2.1​

"வாட் டூ யூ மீன்?" என்றான் தர்மா, சிறிய மௌனத்திற்குப் பிறகு.

"யாமினி எங்க ரிசார்ட்டில் ஆவியா நடமாடறான்னு சொல்றேன்" என்ற மேனன் "தயவுசெய்து ஆவி, பேய்னு எதுவும் இல்லை, மூட நம்பிக்கைன்னெல்லாம் சொல்லிடாதீங்க" என்று சேர்த்துக் கொண்டார்.

தர்மா புன்சிரித்தான். "ஏன் இந்த மாதிரிக் கேஸ்கள் கொண்டு வரவங்க எல்லோருமே இதைச் சொல்றீங்க? எங்களை நீங்க கன்வின்ஸ் பண்ணணும்னு அவசியமேயில்லை. நாங்க திறந்த மனதோடுதான் எந்தக் கேஸையுமே எடுத்துப்போம். ஆவி இருக்கா, இல்லையா என்ற ஆராய்ச்சி எங்களைப் பொறுத்தவரையில் அவசியமில்லாதது. எங்க க்ளையண்ட்டைக் கஷ்டப்படுத்தும் எந்த விஷயமானாலும் ஸால்வ் பண்ணப்படணும், அவ்வளவுதான்" என்றான்.

"தாங்க் யூ" என்றார் மேனன், மனம் அமைதியடைந்தவராக.

"ஒரு கேள்வி மிஸ்டர் மேனன். நீங்க பேசறதைப் பார்த்தா ஆவி இருக்குன்னு நம்புகிறவரைப் போலிருக்கு. அப்போ ஏன் நீங்க மாந்திரீகர்களை வரவழைச்சுப் பூஜை, ஹோமம் ஏதாவது ட்ரை பண்ணக் கூடாது? எதற்காக எங்ககிட்ட வந்திருக்கீங்க?" என்று கேட்டாள் தன்யா.

மேனன் அவளைத் திருப்தியுடன் பார்த்தார். சதுரா துப்பறியும் நிறுவனத்தில் "டிடெக்டிவ்" என்று அவருக்குத் தோன்றியது தன்யாவைப் பார்த்து மட்டும்தான்.

"அதையெல்லாம் ட்ரை பண்ணாமலா நம்மகிட்ட வருவார்? மாந்திரீகத்திற்கு அடங்கலைன்னு நினைக்கறேன்" என்றாள் தர்ஷினி.

இப்போது மேனன் தர்ஷினியை ஆச்சரியமாகப் பார்த்தார். "அமைதியாக, அப்பாவிபோல் தெரிந்தாலும் இவளும் லேசுப்பட்டவளில்லை" என்று அவருள் எண்ணம் ஓடியது.

நன்றாக அவர்கள் இருவர் பக்கமும் திரும்பிக் கொண்டார். மெதுவாகப் பேசலானார். "எங்க ரிசார்ட்டில் முதல்முதலா யாமினியோட… ப்ரெசென்ஸ்… உணரப்பட்டது மூன்று மாதங்களுக்கு முன்னால். குழந்தைகள் விளையாடுவதற்கென்று ஒரு சின்ன மூடப்பட்ட இடமுண்டு. அதற்குள்ளே முழுக்க முழுக்க சாஃப்ட் ஃப்லோர்…"

"கீழே விழுந்தால் அடிபடாமல் இருப்பதற்காக…"

"எக்ஸாக்ட்லி. அதுதவிர குழந்தைகள் குதித்து விளையாடுவதற்காகக் காற்றடைத்த கோட்டை போன்ற அமைப்பு, காற்றடைத்த சறுக்கு இரண்டும் உண்டு. இதைத் தவிர மிகப் பெரிய பால் பூல் – மிருதுவான பந்துகளால் நிரம்பியது – உண்டு. இந்த இடத்திற்குள் குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி. அவர்களுக்குள் ஆளுமையையும் நட்பையும் விட்டுக் கொடுக்கும் தன்மையையும் பகிர்ந்துகொள்ளும் குணத்தையும் அதிகரிக்கும் என்று எங்கள் சைல்ட் சைக்காலஜிஸ்ட்டின் அறிவுரையின்பேரில் இந்த அமைப்பை ஏற்படுத்தினோம். பெரியவர்கள் குழந்தைகளை இதனுள்ளே விளையாட விட்டுவிட்டு, வெளியே பூங்காவில் விச்ராந்தியாக அமர்ந்திருப்பார்கள்…"

"உள்ளே குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள யாருமே கிடையாதா? அது கொஞ்சம் ரிஸ்க் இல்லை?" தன்யாவின் கேள்விக்கு "ஒரு அட்டெண்டர் உண்டு" என்று அவசரமாகப் பதிலளித்தார் மேனன். "ஆனா அவங்க கேட் கிட்ட மறைவா இருப்பாங்க. அவசியம் தேவைன்னா தவிர தலையிட மாட்டாங்க" என்றார்.

"ஓ.கே."

"மூணு மாதம் முன்னாடி, அங்கே விளையாடிட்டிருந்த குழந்தைகள் எல்லாம் ஓடிவந்து உள்ளே ஒரு ஆன்ட்டி அவங்களோட பால் போட்டு விளையாடினதா சொன்னாங்க. ஒரு ஆறு வயதுக் குழந்தை, விஜய் அங்கிளோட சினிமால வந்த ஆன்ட்டிதான் அவங்கன்னு சொன்னது. அது பார்த்த விஜய் படத்தில் நடிச்சது யாமினி.

"எங்க அட்டெண்டர் உள்ளே போய்ப் பார்த்தாங்க, ஆனா அங்கே யாருமே இருக்கல. இந்த விஷயம் எனக்கும் தெரிவிச்சாங்க, ஆனா நாங்க யாருமே அதைப் பெரிசா எடுத்துக்கல. "இது மாதிரி இரண்டு மூன்று சம்பவங்கள் நடந்தது."

சிறு மௌனம். எல்லோரும் மேனனையே உற்றுப் பார்த்தார்கள்.

2.2​

நீண்ட பெருமூச்சுவிட்டு, தொடர்ந்தார் மேனன்.

"இரண்டு மாதங்களுக்கு முன்னாடி எங்க ரிசார்ட்டில் கோவிட் குவாரண்டைன்ல இருந்த ஒருவர் டெஸ்ட்ல நெகட்டிவ் ரிசல்ட் வந்து மறுநாள் எர்லி மார்னிங் காட்டேஜைக் காலி பண்ணிட்டுக் கிளம்பறதா இருந்தார். அதற்குமுன் அவர் என்னைப் பார்த்து, பர்சனலா தாங்க் பண்ணணும்னு விரும்பினார். ஸோ அன்றைக்கு ராத்திரி நான் ரிசார்ட்டுக்கு வந்தது அங்கேயே நைட் தங்கினேன்.

"அன்று என் கார் உள்ளே வந்தபோது ஒரு பெண் நடந்து வெளியே செல்வதைப் பார்த்தேன். எனக்கு ஆச்சரியமா இருந்தது. என் ரிசார்ட்டுக்கு வரும் யாருமே வெஹிகிள் இல்லாம வரமாட்டாங்க. அதோடு வாக்கிங் செல்ல நினைக்கறவங்க உள்ளேயே வாக் பண்ணுவாங்க. வெளியே சுற்றிப் பார்க்கப் போறவங்க வெஹிகிள்லதான் போவாங்க.

"இரவு நேரம், கோவிட் காலம். ஒரு பெண் தனியா நடந்து போறது எனக்கு என்னவோ போலிருந்தது. எனவே அவளைக் கூப்பிட்டுப் பார்த்தேன். அவள் திரும்பிப் பார்க்காமல் போயிட்டாள். செக்யூரிட்டி கிட்ட 'ஒரு பெண் தனியா வெளியே போறா, நீங்க யாருன்னு கேட்கலியா? அட் லீஸ்ட், அவுட்கோயிங் ரெஜிஸ்டர்ல குறிக்கலையா?'ன்னு கேட்டேன். இரண்டு செக்யூரிட்டியும் ஒரே மாதிரிப் பதில் சொன்னாங்க – 'எந்தப் பொண்ணு? எப்போ சார் போனாங்க?'

"என் காரைக் கவனிச்ச செக்யூரிட்டிகள் அந்தப் பெண்ணை மிஸ் பண்ணிட்டாங்கன்னு நினைச்சேன். நான் பார்த்த பெண் யாமினியைப் போலவே இருந்ததா எனக்குள் ஒரு எண்ணம். பிரமையா இருக்கும்னு அதையும் இக்னோர் பண்ணிட்டேன்…"

"ஐ ஸீ" என்றாள் தன்யா. "அப்புறம் எப்போ அது யாமினிதான்னு கன்வின்ஸ் ஆனீங்க?"

மேனன் எழுந்தார். அறையிலிருந்த புத்தக அலமாரிக்கு அருகில் சென்று அதன்மேல் கையை வைத்துச் சாய்ந்துகொண்டார். இவர்களைப் பார்க்காமல் எங்கோ வெறித்தவண்ணம் பேச ஆரம்பித்தார்.

"மறுநாள் கெஸ்ட் செக்-அவுட் பண்ணிட்டு என்னிடம் வெகுநேரம் பேசிட்டிருந்தார். எங்க சர்வீசஸ்க்கு ரொம்ப நெகிழ்ச்சியாய் நன்றி சொன்னார். அப்புறம் நான் சாயந்திரம் வரைக்கும் அங்கேயே இருந்துட்டு என் வீட்டுக்குக் கிளம்பினேன். என் கார் வெளியே போனபோது அவள், யாமினி, மறுபடி உள்ளே வந்தாள்…"

ஒரு மௌனம். காற்றுப் போல ஒரு உணர்வு, ஒரு சிலிர்ப்பு எல்லோரையும் தடவிச் சென்றது.

"இப்போகூடக் கண்ணிலேயே இருக்கு அந்தக் காட்சி. புடவைதான் கட்டியிருக்காள். ஒரு மாதிரி வெளிர் பச்சை… நகைகள் ஒண்ணும் இல்லை. முகம் பளபளன்னு மாலை வெளிச்சத்தில் மின்னுது. என்னைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே உள்ளே நடந்து போகறா…

"பிரமிச்சுப் போயிட்டேன். ஆனா சுதாரிச்சுக்கிட்டுக் காரை ரிவர்ஸ் எடுத்து மறுபடியும் கேட்டுக்கு வந்தேன். அதுக்குள்ள கேட்டை மூடிட்டாங்க. என்னைப் பார்த்ததும் உடனே திறந்துவிட்டாங்க. நான் காரிலேயே அவள் போன திசையில், இன்னும் ரிசார்ட் முழுவதும் சுற்றியும்…"

"…அவள் எங்கேன்னு தெரியலை. திரும்பிவந்து செக்யூரிட்டிகளிடம் விசாரிச்சிருப்பீங்க. அவங்க அதே பதிலைச் சொல்லியிருப்பாங்க – 'எந்தப் பொண்ணு? எப்போ போனா சார்?'" என்றாள் தன்யா.

"கரெக்ட்" என்றார் மேனன். "அப்பதான் எனக்கு முதன்முதலா பயம் வந்தது. பிறகும் இதுபோல் சில நிகழ்ச்சிகள் நடந்ததா கெஸ்ட்கள் சொன்னாங்க. வந்ததுமே ரூமைக் காலிசெய்ய ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா டைம்ஷேர் காட்டேஜ்களையும் என்னிடம் திரும்பக் கொடுக்க ஆரம்பிச்சாங்க… எப்போ கொடுத்தாலும் நான் வாங்கிக்கணும் என்று காண்ட்ராக்டில் இருக்கு, ஜஸ்ட் அவங்க டெபாஸிட்ஸ், பேமெண்ட்ஸ் திரும்பக் கிடைக்காது. என் ரிசார்ட்டில் தங்கறவங்களில் முக்கால்வாசிப் பேர் அதைப்பற்றிக் கவலைப்படாத பணக்காரர்கள்!

"மந்திரவாதிகளைக் கூப்பிட்டேன், விஸ்தாரமா பூஜையெல்லாம் நடத்தினேன். அன்றிரவே யாமினி என் பேரர் ஒருத்தன் முன்னால் தெரிஞ்சிருக்கா. அவனை அறைஞ்சு 'போய் உன் முதலாளிகிட்டச் சொல்லு! என்னை மந்திரவாதிகளால் துரத்த முடியாது! என் சாவுக்குக் காரணமானவங்களைப் பழிவாங்கிட்டுத்தான் நான் இந்த இடத்தைவிட்டுப் போவேன்'ன்னு சொல்லியிருக்கா.

"நான் தவிச்சுப் போனேன். இதற்கிடையில்தான் மிஸ்டர் பாலகோபாலனைச் சந்திச்சேன். அவர் உங்களைப் பற்றி ரொம்பப் புகழ்ந்து சொல்லி, யாமினியின் சாவுக்குக் காரணமானவங்களைக் கண்டுபிடிச்சு யாமினியையும் ரிசார்ட்டைவிட்டு விரட்டக்கூடிய சக்தியும் அறிவும் உங்களுக்கும் மட்டும்தான் இருக்குன்னு சொன்னார். அதான் உங்க உதவியைக் கேட்டு வந்திருக்கேன்."

மேனன் நீளமாகப் பேசி நிறுத்தினார். மறுபடி ஒரு மௌனம்.

தன்யா அவரை உற்று நோக்கினாள். "மிஸ்டர் மேனன், நீங்க கிளம்பலாம்" என்றாள்.

"வாட்?" என்று நிமிர்ந்தார் மேனன்.

"எங்களிடம் எல்லா உண்மைகளையும் சொல்றவங்களோட கேஸை மட்டுமே நாங்க எடுத்துக்க முடியும். அதனால்தான் சொல்றேன், நீங்க கிளம்பலாம். சந்திச்சதில் மகிழ்ச்சி" என்றாள் தன்யா.

மேனன் பலத்த அதிர்ச்சியில் பேச்சிழந்து நின்றார்.


(தொடரும்)
 

sairenu

New member
Vannangal Writer
Messages
12
Reaction score
3
Points
3

3​

3.1​

மேனன் மட்டுமல்ல, தர்மாவும் தர்ஷினியும்கூடத் தன்யாவை வியப்பாய்ப் பார்த்தார்கள்.

"சார், நீங்க முதலில் யாமினியோட ஆவியைப் பற்றிப் பேசியபோது, அது குழந்தைகளோடு விளையாடினதாகச் சொன்னீங்க. அதே மாதிரியே சில ஃப்ரெண்ட்லியான நிகழ்வுகள் நடந்ததாகச் சொன்னீங்க. அப்புறம் நீங்க யாமினியைப் பார்த்ததாச் சொன்னபோதும் அவ வெறுமனே நடந்து போவதைத்தான் பார்த்திருக்கீங்க. வேறு யாருமே அவளைப் பார்க்கலை. ஸோ, ஒரு பானிக், ஒரு பீதி வந்து பலர் உங்க ரிசார்ட்டைக் காலிசெய்யற அளவுக்கு எதுவுமே நடக்கல. எந்தவிதமான அசம்பாவிதமும் உங்க ரிசார்ட்டில் ரிப்போர்ட் பண்ணப்படல.

"நீங்க பயந்து, பூஜைகளுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கீங்க. உங்க க்ளையண்ட்ஸ் இதைக் கேள்விப்படவோ, பயப்படவோ முகாந்திரமே இல்லை. உங்க ஹோட்டல் பேரர்கிட்ட யாமினி வந்து மிரட்டினப்போ யாரையோ பழிவாங்கப் போறதா சொல்லியிருக்கா. அப்படியிருந்தா அதை அவ இந்த மூன்று மாதங்களுக்குள்ளேயே பண்ணியிருக்கலாமே, எதற்காக அவ காத்திருக்கணும்?

"ஆக, யாமினியோட ஆவி என்ற காரெக்டரை நீங்களே ஏதோ காரணத்திற்காக க்ரியேட் பண்ணியிருக்கணும், அல்லது யாமினி பழிவாங்க நினைப்பது உங்களைத்தான்!"

ஒரு மௌனம்.

"இந்தக் கொரோனா காலத்தில் எல்லோருடைய பிஸினஸுமே பாதிக்கப்பட்டிருக்கு, உங்களுடையதைத் தவிர. அப்புறம் இந்த யாமினி மேட்டரால ஓரளவு குறைஞ்சிருந்தாலும், ஒரேடியா குறையறதுக்கு எல்லாம் சான்ஸ் இல்லை" என்றான் தர்மா, தன்யாவின் பேச்சைத் தொடர்ந்து சிந்தித்தவனாய்.

எல்லோரும் மேனன் பேசுவதற்காகக் காத்திருந்தார்கள்.

3.2​

மேனன் பெருமூச்சுவிட்டார். "நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கறீங்க? என்ன சொன்னா நீங்க சந்தோஷப்படுவீங்களோ, அதையே சொல்லிட்டுப் போறேன், சொல்லுங்க" என்றார் வெறுப்பாய்.

"மேனன், கோபப்படுவதில் அர்த்தமேயில்லை. இருக்கற உண்மையை எங்ககிட்டத் தெளிவா சொல்லிட்டீங்கன்னா, நாங்க வேலை செய்யச் சௌகரியமா இருக்கும். இதோ பாருங்க, நாங்க உங்ககிட்டப் பணம் வாங்கி வேலை செய்யப் போறவங்க. எங்க நேரம் உங்களைப் பற்றிய உண்மைகளைத் துப்பறியறதில் வீணானா நம்ம ரெண்டு பேருக்குமே நஷ்டம். நாங்க போலீஸ் இல்லை, வீ ஆர் நாட் ஜட்ஜ்மெண்டல். அப்புறம் உங்க இஷ்டம்" என்றான் தர்மா சமாதானப்படுத்தும் குரலில்.

மேனன் அவர்கள் மூன்று பேரையும் மாறி மாறிப் பார்த்தார். பிறகு "ஓகே. இந்த விவகாரத்தால் என் பிஸினஸ் பெரிதாகப் பாதிக்கப்படலைங்கறது உண்மைதான். ஆனால் அதைத்தவிர நான் சொன்னது எதுவுமே பொய்யில்லை" என்றார் மேனன்.

"வர்த்தகம் பாதிக்கப்பட்டதா சொன்னது எங்களைத் தேடி வந்ததற்காகப் புனைந்த காரணம், இல்லையா? அப்போ உண்மையான காரணத்தைச் சொல்லுங்க. வேறு ஏதாவது மறைச்சிருந்தா அதையும் சொல்லிடுங்க" என்றாள் தன்யா.

"வேறு ஏதாவதுன்னா?"

"மிஸ்டர் மேனன், ஆவி நடமாட்டம் ஒரு இடத்தில் இருந்ததுன்னா, அங்கே ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கலாம். ஏன்னா, மனமுடைந்த, கோபமுடைய ஆத்மாக்கள்தான் ஆவியா வருவாங்க. நீங்க சொன்ன பேரர் நிகழ்வைத் தவிர வேறு ஏதாவது சம்பவங்கள் நடந்ததா?

"சுருக்கமா சொல்லணும்னா, இந்த யாமினி விஷயத்தில் நீங்க பர்சனலா சம்பந்தப்படறது, உங்களுக்குத் தெரிஞ்சது, நீங்க ஊகிக்கறது, நீங்க நினைக்கறது, நீங்க கேள்விப்பட்டது, உங்களுக்குத் தெரியாதது, இன்னும் எக்ஸட்ரா… எல்லாம் சொல்லுங்க" என்றாள் தன்யா.

மேனன் தன்னையறியாமல் புன்னகைத்தார். "பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்குப் போகக் கூடாதுன்னாரே உங்க பிரதர்? நீங்க அதைவிடப் பெரிசா கேட்கறீங்களே?"

"ஆக, உங்களுக்கு யாமினியைப் பற்றிப் பெரிய கதை ரேஞ்சுக்குத் தெரியும்? சொல்லிடுங்களேன் சார், ஏன் கடப்பாறையால நெம்ப வைக்கறீங்க?"

மேனன் மீண்டும் புன்னகைத்தார்.

"யாமினியைப் பர்சனலா எனக்குத் தெரியாது. ஆனாலும் அவ குடும்பத்தைத் தெரியும், அவ அப்பாவை நல்லா தெரியும். யாமினியை நான் சின்னக் குழந்தையா பார்த்தது, அவ்வளவுதான்.

"இந்தப் படிப்பிடிப்புக் குழு முதன்முதலில் ஹோட்டலில் இடம் கேட்டபோது, நானும் தர்மாவைப் போலத்தான், யாமினி யார், ஹீரோ யார்னு கேட்கும் நிலையில் இருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்கிட்டேன். யாமினி என் தோழரோட மகள்னு தெரிஞ்சபோது சந்தோஷப்பட்டேன்…"

"எப்படித் தெரிஞ்சது? யார் சொன்னாங்க உங்களுக்கு?"

"யாமினியே சொன்னா. படப்பிடிப்புக் குழு வந்து ஒரு வாரமிருக்கும். அவங்க கெஸ்ட்ஸ் என்பதற்குமேல் எனக்கு எந்தச் சிந்தனையும் இல்லை, அவர்களைப் பற்றி. ஒருநாள் காலையில் நான் ரிசார்ட்டுக்கு வந்தபோது, அவங்க எல்லோரும் லௌஞ்சில் கூடியிருந்தாங்க. என்னைப் பார்த்ததும் யாமினியே ஓடிவந்து 'சார், என்னை நினைப்பிருக்கா'ன்னு கேட்டா. முதலில் தெரியலை, அப்புறம் அவங்க அப்பாவைப் பற்றிச் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டேன். சந்தோஷப்பட்டேன். வீட்டுக்கு இன்வைட் பண்ணினேன். படப்பிடிப்புக் குழுவோடு வந்திருக்கறதால இப்ப சாத்தியப்படாதுன்னும், கட்டாயம் ஒருநாள் வீட்டுக்கு வருவதாகவும் சொன்னா.

"அப்புறம் ஒருமுறை ஒரு இளைஞனோடு அவளைக் காரிடாரில் பார்த்தேன். அவன் பெயர் சக்தி சிவகுமார்ன்னும் அவள் கல்யாணம் பண்ணிக்கப் போறவன்னும் கோல்ட் ட்ரீ ப்ளாண்டேஷன் என்ற கம்பெனியோட ஓனர் என்றும் அறிமுகம் செய்து வெச்சா.

"சிறிது காலத்திற்கப்புறம் நண்பர்களோடு பேசிட்டிருந்தபோது, திவாலாகிட்ட சீட்டுக் கம்பெனிகள் பற்றிப் பேச்சு வந்தது. அப்போ ஒரு நண்பர் சீட்டுக் கம்பெனியா தான் இருக்கணும்னு அவசியம் இல்லையே, பல கம்பெனிகளும் இந்த மாதிரிப் பண்றாங்க என்று சொல்லிச் சில உதாரணங்களும் சொன்னார். அப்போ அவர் சொன்ன ஒரு வாக்கியத்தைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"'இந்த கோல்ட் ட்ரீ ப்ளாண்டேஷனையே எடுத்துக்குங்க, விவசாயத்தை முன்னிறுத்திய கம்பெனி. பலபேரிடம் பங்குகள் பெற்று கூட்டுறவு விவசாயம் பண்ணப் போறதா சொன்னாங்க. மக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்போ, இன்சால்வென்ஸி கொடுக்கற நிலையில் இருக்காங்க.' – இதுதான் அவர் சொன்னது. கேட்ட எனக்கு எப்படி இருக்கும்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க. யாமினி என் நண்பரோட மகள், என் மகள் அல்லது சகோதரி மாதிரி. அந்தப் பெண் ஏமாந்து போறாளோன்னு பயம் வந்தது.

"இந்தமுறை யாமினியை நானே வலியச் சந்திச்சுப் பேசினேன்…"

"…எங்கே?" என்று இடைமறித்தாள் தன்யா.

"ஸாரி?"

"எங்கே வெச்சுச் சந்திச்சீங்க?"

"ரிசார்ட்டில்தான்… வந்து, என் ஸூட்டில்…"

"ஓகே" என்றாள் தன்யா இயல்பாய். "கண்டினியூ."

"சத்தியமா சொல்றேன். அந்தப் பெண்ணை வார்ன் பண்ணத்தான் சந்திக்க விரும்பினேன்" என்றார் மேனன், ஒரு தன்னிலை விளக்கம் தேவைப்பட்டவராக. "அவ கொஞ்சம் தயக்கமாதான் என்னை வந்து பார்த்ததுபோல் எனக்கே தோன்றியது. நான் பண்றது தப்போங்கற பயம் எனக்கு வந்தது… நான் ஒரு ஃபேமிலி மேன். இது மாதிரி நடிகைகளை எல்லாம் சந்திச்சுப் பேசி எனக்குப் பழக்கமேயில்லை…

"முதலில் என்ன நினைச்சிருந்தாலும் அப்புறம் யாமினி இயல்பாகிட்டா. என்னுடைய நோக்கத்தில் தவறில்லேன்னு புரிஞ்சுக்கிட்டதும் என்னிடம் நல்லா பேசினா. அவ அப்பா, அம்மா, தம்பி, அவ குடும்ப நிலை, அவ நடிக்க வந்ததோட பிண்ணணி, இப்படிப் பல விஷயம் ஒரு சகோதரனிடம் பகிர்ந்துக்கற மாதிரி என்னிடம் சொன்னா.

"அவளிடம் அந்த சக்தியோட கம்பெனி பற்றி சூசகமா சொன்னேன். அதை மட்டும் காதில் போட்டுக்க மறுத்துட்டா. புதுசா ஆரம்பிச்ச கம்பெனியில் ஆரம்பகாலப் பிரச்சனைகள் இருக்கும், போகப் போகச் சரியாய்டும்ன்னுட்டா. அப்புறம் பேசப் பேசத்தான் தெரிஞ்சது, இந்தக் கம்பெனி ஆரம்பிக்கவே அவதான் பணம் கொடுத்திருக்கான்னு தெரிஞ்சது."

"எத்தனையாவது சந்திப்பில் இதைச் சொன்னாங்க?" என்றாள் தர்ஷினி அவளுடைய வழக்கமான மெல்லிய குரலில்.

மேனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"ப்ளீஸ், என்னை ஒரு கேவலமானவனா சித்தரிக்காதீங்க. நான் அப்படிப்பட்டவன் இல்லே."

"தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. இந்த விஷயம் அவங்க சுலபமா பகிர்ந்துக்கறாங்களா, இல்லை ரகசியமா காக்க நினைக்கறாங்களான்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்" என்றாள் தர்ஷினி மென்மையாக.

"நல்லா சமாளிக்கறீங்க" என்றார் மேனன் எரிச்சலாய். "நீங்க சொன்னதை உண்மைன்னு நம்பிப் பதில் சொல்றேன். முதலில் அவ இந்த விஷயம் சொல்லல. இரண்டாவது அல்லது மூன்றாவது சந்திப்பா இருக்கலாம்."

"மேனன், இதற்கே சென்ஸிட்டிவ்வா கோபப்படறீங்க. அப்படியானா என்னுடைய அடுத்த கேள்வி உங்களை நிச்சயம் அதிகமாகக் கோபப்படுத்தும். நல்லா யோசிச்சு, தயவுசெய்து உண்மையைச் சொல்லுமாறு கேட்டுக்கறேன். யாமினிக்கு, சரியா சொல்லப் போனா யாமினியோட ஆவிக்கு, உங்கமேல கோபம் வர ஏதாவது காரணம் இருக்கா?" தன்யா அழுத்தமாகக் கேட்டாள்.

ஆச்சரியமாக, இந்தக் கேள்விக்கு மேனன் கோபப்படவில்லை. சற்று யோசித்தார். பிறகு "நான் யாமினிக்கு ஒரு நல்ல நண்பனா இருந்தேன். அவள் கண்மூடித்தனமா அந்த சக்தியை நம்பறதைக் கண்டிச்சேன். அவ்வளவுதான். ஆனா நல்ல யோசிச்சுப் பார்த்தா, ஒரு காரணம் வேணும்னா சொல்லலாம். அவ தற்கொலை செய்துக்கிட்ட அன்றைக்கு, அவளுக்கும் சக்திக்கும் சண்டை வருவதற்குக் காரணமே நான்தான்" என்றார்.

(தொடரும்)
 

sairenu

New member
Vannangal Writer
Messages
12
Reaction score
3
Points
3

4​

4.1​

மூவரும் தூக்கிவாரிப் போட்டவர்களாக மேனனைப் பார்த்தார்கள்.

"என்ன மேனன், பெரிய விஷயத்தைச் சாதாரணமாகச் சொல்றீங்க? யாமினி தற்கொலை செய்துக்கிட்ட அன்றைக்கு அவளுக்கும் சக்திக்கும் சண்டை வந்ததா?" என்று கேட்டான் தர்மா. "இது ரொம்ப முக்கியமான பாயிண்ட்டாச்சே! இது போலீஸ்க்குத் தெரியுமா?"

"தெரியாம என்ன? ஒரு பேரர் கண்ணாலே பார்த்திருக்கான். நானும் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கேன்" என்றார் மேனன்.

"அதன் அடிப்படையில்தான் சக்தியை அரெஸ்ட் பண்ணினாங்களா?" என்றாள் தன்யா.

"ஆமா. அப்புறம் ஜாமீனில் விட்டுட்டாங்க. அப்புறம் ஓரிரண்டுதரம் ஏதோ புது தடயம் கிடைச்சிருக்குன்னு சொல்லி மறுபடி அரெஸ்ட் பண்ணினாங்க. மறுபடி ஜாமீனில் வெளியே வந்துட்டான். இப்போ வெளியேதான் இருக்கான்."

"சரி. நீங்க சொன்னது எதையோ வெச்சு அவர்களுக்குள் சண்டை வந்ததா…"

"ஏற்கெனவே நான் சக்தியோட பிஸினஸ் விஷயமா யாமினிகிட்டப் பேசியிருக்கேன், ஆனாக் அவ அதைப் பொருட்டாகவே எடுத்துக்கலைன்னு சொன்னேன். யாமினி மரணத்திற்குச் சில நாட்களுக்கு முன்னால் ஜி ஆர் டி க்ராண்ட் டேஸில் ஒரு கன்வென்ஷன் நடந்தது. அங்கே போயிருந்தபோது சக்தியைப் பார்த்தேன், இன்னொரு பெண்ணோட!"

"அதை யாமினிகிட்டச் சொன்னீங்களாக்கும்?" என்றாள் தன்யா சிரித்தவாறே.

"இல்லை, முதலில் எனக்கென்னன்னு விட்டுட்டேன். ரெண்டு நாளில் யாமினி என்னைச் சந்திச்சு, பிஸினஸ்க்குக் கடன் ஏற்பாடு பண்ணித் தர முடியுமான்னு கேட்டா. நான் அறிமுகம் மட்டும் செய்தா போதும்னும் செக்யூரிட்டியெல்லாம் அவ தரதாகவும் சொன்னா… அப்போதான் எனக்குப் பயம் வந்தது. ஏற்கெனவே சக்திக்கு அவ ஏகப்பட்ட பணம் கொடுத்திருக்கா. அதனால் அவ அம்மா, அப்பா, தம்பி எல்லாரையும் பகைச்சுக்கிட்டிருக்கா. மறுபடி அவ பணத்தை இழந்துடக் கூடாதுன்னும் தவிர சக்தி எப்படிப்பட்டவன்னு அவளுக்குத் தெரிஞ்சா அவ அவனைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா விலகிடுவான்னும் நினைச்சு…"

"இந்த விஷயத்தைச் சொன்னீங்க?"

"ஆமா. இதைக் கேட்டதும் முதல்முறையா யாமினிக்குச் சக்தி மேல கோபம் வந்தது. அவ அவனோடு சண்டை போட்டா. அந்தப் பெண் யாருன்னு கேட்டிருக்கா. அவ ஒரு நடிகைன்னும் ஒரு விளம்பரம் விஷயமா அவளைச் சந்திச்சுப் பேசினதாகவும் சக்தி சொல்லியிருக்கான். யார் நடிகை, என்ன விளம்பரம்னு யாமினி துளைச்சுத் துளைச்சுக் கேட்டிருக்கா. சக்திக்குக் கோபம் வந்து அவளை அறைஞ்சு கீழே தள்ளியிருக்கான்."

"இது எங்கே நடந்தது?"

"யாமினியோட அறையில்தான். கதவை மூட மறந்து போயிருக்காங்க. பேரர் ஒருத்தன் காப்பி கொண்டு போயிருக்கான். அப்போ அவங்க சண்டை போடற சப்தம் கேட்டு வெளியே தயங்கி நின்னிருக்கான். பெல் அடிக்க இருந்தவன் என் பெயர் அடிபடறதைக் கேட்டதும் நின்று கவனிச்சிருக்கான். 'உன்னை இப்படியெல்லாம் கிளப்பி விடறது யாருன்னு தெரியும், இந்த ஹோட்டல் ஓனர்தானே. அவனுக்கு வெச்சிருக்கேன் வெடி! முதலில் உன்னை ஒரு வழியா ஒழிச்சுக் கட்டிட்டு, அடுத்து அவனைக் கவனிச்சுக்கறேன்' என்கிற மாதிரிச் சொல்லி அவளை அடிச்சிருக்கான். பேரர் கொஞ்சம் சினிமா பைத்தியம், யாமினியோட ரசிகன். தவிச்சுப் போய் உள்ளே போயிட்டான். உடனே அவங்க சுதாரிச்சுக்கிட்டாங்க. சக்தி வெளியே போயிட்டான்."

"இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு எப்போ தெரிஞ்சது, சார்?"

"யாமினியோட மரணம் வெளியே தெரிஞ்சு போலீஸ் வந்ததும், பேரர் தானே முன்வந்து இந்த விஷயமெல்லாம் சொன்னான். அப்போ போலீஸ் என்னைக் கூப்பிட்டு விசாரிச்சது. எனக்குத் தெரிஞ்சதையெல்லாம் நானும் சொல்லிட்டேன்."

"யாமினியுடைய உடலை முதல் பார்த்தது யார்?"

"அவளோட அம்மா. ஏதோ ஹிந்தி ப்ரொடியூசர் கால் பண்ணிட்டே இருக்கார்னும், யாமினி ஃபோன் எடுக்கவே மாட்டேங்கறான்னும் சொல்லி அவளைத் தேடி ரிசார்ட்டுக்கு வந்தாங்க… ரூம் திறக்க வரலை, யாரும் பதிலும் கொடுக்கலைன்னதும் ஸ்டாஃப் வந்து பாஸ் கீ போட்டு ரூமைத் திறந்துவிட்டிருக்காங்க. அவங்கதான் முதலில் உள்ளே போனாங்க. யாமினி தூக்கில் தொங்கிட்டிருந்தா. பெரிசா கத்திட்டாங்க, பாவம். அப்புறம் எனக்கு ந்யூஸ் வந்து போலீஸைக் கூப்பிட்டு…"

மௌனம்.

சிறிதுநேரத்தில் தன்யா மௌனத்தைக் கலைத்தாள். "மேனன், நாங்க நடந்த சம்பவங்களைப் புரிஞ்சுக்கிட்டோம். இன்னும் நாங்க கேட்ட ஒரு கேள்விக்கு நீங்க பதில் சொல்லவே இல்லை. உங்களை யாமினியோட ஆவி துரத்துவதற்கு என்ன காரணம்? நீங்க பயந்து இந்தப் பூஜைகளை எல்லாம் செய்யறதுக்கு என்ன காரணம்? இல்லாத பிஸினஸ் நஷ்டத்தை இருக்கறதா சொல்லி, எங்களைத் தேடி வந்ததுக்கு என்ன காரணம்?"

"இதுவரை நாம பேசினதை எந்த எழுத்தாளராவது எழுதினா, அது குறைந்தபட்சம் மூணு அத்தியாயத்தைத் தாண்டி நாலாவது அத்தியாயத்திற்கும் போயிருக்கும். எங்களை வேலை செய்யவிடாம பேச்சிலேயே காலம் போய்க்கிட்டிருக்கு. சொல்லிடுங்க மேனன்" என்றறு தர்ஷினி வற்புறுத்தினாள், அவர் தயங்குவதைக் கண்டதும்.

சில விநாடிகள் கழித்தே மேனன் பேசினார். "இந்த விஷயம் நான் உங்ககிட்ட சொல்றதாகவே இல்லை… இப்போ வேற வழியில்லை. யாமினி மேல ஏற்பட்ட பரிதாபத்தால, எனக்குத் தம்பி உறவான ஒரு பையன், பெரிய பணக்காரன், அவனைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அவளை வற்புறுத்தினேன். சக்தி, இந்தப் பாழாப் போன சினிமா உலகம் இரண்டையும்விட்டு விலகி வாழ்க்கையில் செட்டில் ஆகிடச் சொன்னேன்.

"யாமினி மறுத்துட்டே வந்தா. ஒருநாள் நான் சக்தியைப் பற்றிச் சொல்லிட்டு என் தம்பியைப் பற்றி மறுபடி சொன்னேன். 'என் மேல் அவ்வளவு அக்கறை இருக்கற பட்சத்தில் நீங்களே என்னைக் கல்யாணம் பண்ணிக்கலாமே, மேனன் சார்?' அப்படின்னாளே பார்க்கணும்! வெலவெலத்துப் போயிட்டேன்."

"அதாவது, நீங்க சின்சியரா அவளை உங்க தம்பிக்குக் கல்யாணம் பண்ணிவைக்க நினைக்கலைன்னு…"

"அதெல்லாம் இல்லைம்மா, அவ சீரியஸாத்தான் சொல்றான்னு கொஞ்ச நேரத்திலேயே புரிஞ்சுக்கிட்டேன். என்னை முதல்முதலில் பார்த்த பார்வையிலேயே அவளுக்குப் பிடிச்சுப் போச்சுன்னும், முதலில் இது ஒரு மரியாதையான அன்புன்னு நினைச்சதாகவும், போகப் போகத்தான் இது காதல்னு அவ புரிஞ்சுக்கிட்டதாகவும் என்னென்னவோ சொன்னா. 'மடத்தனமா பேசாதே. எனக்குக் குடும்பம் இருக்கு' என்று அவளை அதட்டினேன். அவ அதுக்கு 'பார்த்தீங்களா, உங்களுக்கு என்மீது அன்பு இருக்கு. குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பயப்படறீங்க, அவ்வளவுதான். இதெல்லாம் நாமே போட்டுக்கிட்ட வேலி. நம்ம சந்தோஷத்துக்காக இதையெல்லாம் உடைச்சு எறிஞ்சா தப்பே இல்ல' அப்படின்னா. அப்புறம்… அவ கொஞ்சம் தண்ணி போட்டுருப்பாளோன்னு தோணுகிற மாதிரி நடந்துக்கிட்டா…"

"நீங்க என்ன பண்ணினீங்க?"

"என்ன பண்றது? 'யாமினி, நீ இப்போ உன் நிலையில் இல்லை. உன்னை அப்புறம் வந்து பார்க்கிறேன். நீ எனக்குத் தங்கச்சி மாதிரி. வேண்டாத எண்ணம் எல்லாம் வெச்சுக்காதே' அப்படின்னு சொல்லிட்டு… வெளியே வந்துட்டேன்.

"ஆனா நான் சொன்னதை அவள் நம்பவே இல்லை. எனக்கு அவ மேல அன்பு இருக்குன்னு அவளே நினைச்சுக்கிட்டா. அந்த மாதிரியே என்னோடு பழக ஆரம்பிச்சா. நான் வீட்டில் இருக்கும்போது எனக்கு ஃபோன் பண்றது, நான் ரிசார்ட்டுக்கு வரும்போது என்கிட்ட வலிய வந்து பேசறது, இப்படியெல்லாம் ஆரம்பிச்சா… என் அன்பை அவ புரிஞ்சுக்கிட்டதாகவும், சக்தியை அவ வெறுத்துட்டா, என்னைத் தேடி வரதாகவும் என்னென்னவோ உளறினா. அதான் சக்தி இன்னொரு பெண்ணோடு பழகறதை நான் அவளிடம் சொல்லவேயில்லை.

"கடைசியில் அன்றைக்கு வெறுத்துப் போய் அவளிடம் இந்த விஷயத்தைச் சொல்லிட்டு, நீ இப்படி இருக்கறதால்தான் ஒரு நல்ல பையன் உன்னைவிட்டு விலகறான்னு சொல்லி அவளைத் திட்டினேன். இனிமே என்னோடு நீ பேசவே கூடாதுன்னும் சொன்னேன். அவ பெரிசா அழுதா. தனக்கு யாரும் இல்லை, தான் ஒரு அனாதைன்னு சொல்லி, அவளைச் சக்தி கல்யாணம் பண்ணிக்கலைன்னா செத்துடுவேன்னு சொன்னா. சக்திக்கு என்னைப் பிடிக்கலை, நீங்களும் என்னைக் கைவிட்டுட்டீங்கன்னா. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. ஒழுங்கா சக்தியோடப் பழகி அவனைத் திருத்தி, அவனைச் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோன்னு புத்தி சொல்லிட்டு வந்துட்டேன்.

"நான் அவளை எந்தவிதத்திலும் தப்பா நினைக்கலை. ஆனா அவ தற்கொலை பண்ணிக்கிட்டப்போ அதுக்கு நானும் காரணமோன்னு ஒரு சின்ன உறுத்தல். அவளோட ஆவி சக்தியைத் தொடராம என் ரிசார்ட்டுக்கு வந்திருக்கறதைப் பார்த்தா எனக்குப் பயமாயிருக்கு. அதான்…"

மேனனின் இந்தப் பேச்சுக்குப் பிறகு அங்கே ஒரு மௌனம் நிலவியது.

4.2​

"ஓகே" என்றாள் தன்யா, சில விநாடிகளுக்குப் பிறகு.

"தன்யா, நாம ரிசார்ட்டில் கொஞ்சநாள் தங்க வேண்டியிருக்கும்னு நினைக்கறேன்" என்றாள் தர்ஷினி.

தன்யா தலையாட்டிக் கொண்டிருக்கும்போதே ஆஃபீஸ்பாய் மந்திரம் உள்ளே வந்து எல்லோருக்கும் டீ வழங்கிவிட்டுத் தர்மாவிடம் ஒரு கடிதத்தை நீட்டினான்.

"ரொம்ப சந்தோஷம். நீங்க மூணு பேருமே வரலாம். எல்லா வசதியும் செய்து தரேன்" என்றார் மேனன். தர்மா என்ன சொல்கிறான் என்று அவனை எல்லோரும் உற்றுப் பார்த்தார்கள்.

"யெஸ், நம்ம வேலை ரிசார்ட்டில்தான்னு தோணறது, ஆனா முதலில் நீங்க ரெண்டுபேரும் அங்கே போங்க, கேர்ல்ஸ். நான் ரெண்டொரு நாளில் வந்து ஜாயின் பண்ணிக்கறேன்" என்றான் தர்மா.

"அப்படி இங்கே என்ன வெட்டி முறிக்கப் போற?" என்று தன்யா சற்றே கோபமாகக் கேட்டாள்.

"இது புரியலையா உனக்கு? சக்தியைப் பற்றி விவரங்கள் கலெக்ட் பண்ண்ணப் போறான்" என்றாள் தர்ஷினி, தன் மெல்லிய குரலில்.

தர்மா அதை ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. "சரி, நீங்க ரெடியாகுங்க. கிளம்பறதுக்கு முன்னாடி என்னை வந்து பாருங்க" என்றான்.

"சரி தர்மா. ஓகே மேனன் சார், ரிசார்ட்டில் பார்க்கலாம்" என்று சொல்லித் தன்யாவும் தர்ஷினியும் வெளியேறினார்கள்.

"தர்மா, பேமெண்ட் விஷயம்?"

"அது கேஸ் முடிஞ்சதும் பேசிக்கலாம்" என்றான் தர்மா உறுதியாக.

மேனன் எழுந்தார். ஆனால் வெளியே செல்லவில்லை. தவித்துக்கொண்டு நின்றார்.

"என்ன சார்?" என்றான் தர்மா வியப்பாக.

"தர்மா, சத்தியமா எனக்கும் யாமினிக்கும் இடையில் எந்தக் கனெக்ஷனும் கிடையாது. என் மேல சந்தேகப்படாதீங்க" என்றார் கெஞ்சும் குரலில்.

தர்மா சிரித்தான். "மேனன் சார், நாங்க உங்க வக்கீல் மாதிரி. எங்களை நீங்க கன்வின்ஸ் பண்ண வேண்டிய அவசியமே இல்லை, நீங்க க்ரிமினலா ஏதும் செய்யாதவரை. அதோட, இந்த விஷயத்தில் நான் உங்களை நம்பறேன்" என்றான்.

மேனன் அவனை வியப்புடன் பார்த்தார். "ஏன்? எப்படி நம்பறீங்க? என்னைப் பற்றி அல்லது யாமினியைப் பற்றி உங்களுக்கு முன்பே ஏதாவது…"

"அதெல்லாம் கிடையாது, மேனன். உங்களை இன்றுதான் நான் முதன்முதலில் பார்த்தது. நீங்க சொல்றவரை யாமினின்னு ஒருத்தி வாழ்ந்தாளான்னே எனக்குத் தெரியாது. பட், நான் உங்களை ஏன் நம்பினேன்னா, ரொம்பக் கண்ணியக் குறைவா ஒரு பெண் நடந்துக்கிட்டதைச் சொல்லும்போது கொஞ்சம்கூடக் கண்ணியம் குறையாம சொன்னீங்க பாருங்க, அதனால்தான்."

மேனன் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். "ஆக்சுவலா அதை நான் சொல்றதாகவே இல்லை. எல்லாத்தையும் நான் சொல்லிடவும் இல்லை" என்றார்.

"புரிஞ்சது. கவலைப்படாதீங்க. இனி என் ஸிஸ்டர்ஸ் பாத்துப்பாங்க."

"ஆவி நடமாடற இடத்திற்குத் தங்கச்சிங்களைத் தனியா அனுப்பறீங்களே! உங்களுக்கு ரொம்பத் தைரியம்தான்!"

"ஆவி எங்கே நடமாடலை, மேனன்? இங்கே இல்லையா? அப்படி இல்லேன்னா இந்த லெட்டர் எப்படி வந்திருக்கும் எனக்கு?" எண்று சற்றுமுன் வந்த கடிதத்தை நீட்டினான் தர்மா.

மேனன் நடுங்கும் கைகளுடன் அதை வாங்கிப் பார்த்தார்.

"மேனனுக்கு நாள் குறித்தாகிவிட்டது. எமதர்மராஜனிடமிருந்து அவனைக் காப்பாற்ற எந்தத் தர்மராஜனாலும் முடியாது. முயற்சி செய்தால், முடிவு உனக்கும்!

யாமினி!
"
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom