Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL நீ அறியாயோ முகிலினமே! - Tamil Novel

Status
Not open for further replies.

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
வானத்தில் முழு நிலவு ஒளிர்ந்து கொண்டிருக்க மொட்டை மாடி சுவற்றில் சாய்ந்து கொண்டு, நிலவோடு சேர்ந்து அவர்கள் திருமணத்தை பார்க்கக் கூடியிருந்த முகிலினங்களையே பார்த்திருந்தான் கெளதம் சித்தார்த்.

அப்போது கையிலருந்த தாலியை அவனது கண் முன்னே ஆட்டியபடியே அவன் முன்னே வந்து அழகாய் சிரித்தது அவனது காதல்.

“நான் ரெடி கெளதம்”

அவள் சொன்ன விதத்திலேயே அவனது இதழ்களில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. அவளது விழிகளில்தான் எத்தனை காதலும்? எத்தனை சந்தோஷமும்?

“சல்வார்லே இருக்கேன். உங்களுக்கு ஓகே தானே கெளதம்? இல்லை ஸாரி மாத்தணுமா?” கேட்டவளை அள்ளிக் கொண்டு முத்தமிட விழைந்த மனதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது அவனுக்கு.

“இதிலேயே சும்மா தேவதை மாதிரி இருக்கே” என்றபடியே தாலியை கையில் வாங்கிக் கொண்டான் கெளதம் சித்தார்த்.

"இப்போ நீ இதை வாங்கிக்கலைன்னா, நீ போற இடத்துக்கு எல்லாம் ஒரு பொக்கே வரும். ஆயிரம்ன்னாலும் சரி ரெண்டாயிரம்னாலும் சரி நீ வாங்கிக்குற வரைக்கும் உன்னை என் பூங்கொத்துகள் துரத்தும்” அவளை தன்னிடமிருந்து ஒற்றை பூங்கொத்தை வாங்கிக் கொள்ள வைக்க இவன் மிரட்டி நான்கு நாட்கள் இருக்குமா? ஒரு வாரம் இருக்குமா?

இன்று அவளே வந்து அவன் முன்னால் வந்து அவனது கையால் தாலி வாங்கிக்கொள்ள மன்றாடுவாள் என்றெல்லாம் ஒரு மணி நேரம் முன்னால் கூட நினைக்கவில்லை.

அவன் ஒரு மிகப் பெரிய குற்றத்தை செய்திருக்கிறான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிகிறது. அதே நேரத்தில் அவன் தன் மீது வைத்திருக்கும் காதலில் எந்த குற்றமும் இல்லை என்று புரிகிறது. அவன் அன்றொரு நாள் சொன்னதைப் போல அவன் இருக்கும் வரை அவனது இதயம் அவளுக்காகவே துடித்துக் கொண்டிருக்கும் என்பதும் தெரிகிறது.

அடுத்த நிமிடத்தில் வாழ்க்கை அவர்களுக்கென எதை சேமித்து வைத்திருக்கிறது என்ற கேள்விக்கான எந்த பதிலும் இல்லை. அவளுடனான இந்த வாழ்கை எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி நேரங்கள் தொடரப் போகிறது என்பதற்கான எந்த உறுதியும் இல்லை.

இருந்தாலும் அவன் முன்னால் திருமணம் வேண்டி நிற்பது அவனது சஞ்சனா எனும் ஒற்றை எண்ணம் அவனை சந்தோஷ கடலில் திளைக்க வைத்துக் கொண்டிருந்தது. தாலி கட்டப் போவது கெளதம் எனும் எண்ணம் அவளை மேகத்தில் நடை பயில செய்து கொண்டிருந்தது.

ஒரு முறை வானத்தை பார்த்து விட்டு அவள் முகம் பார்த்தான் கெளதம். அதை விழிகளால் ரசித்து ரசித்து பருகிக் கொண்டான்.

வானத்தை பார்த்து கரம் கூப்பி விட்டு அவன் முகம் பார்த்தாள் சஞ்சனா. சொல்லி வைத்தார் போல் சிறு தூரலை சிதற வைத்தனர் அவனது முகிலினத் தோழிகள்.

முகம் நிறைய சிரிப்புடனும், மனம் நிறைய காதலுடனும் அவள் கழுத்தில் அந்த திருமாங்கல்யத்தை அணிவித்தான் கெளதம் சித்தார்த்.

அடுத்த நொடி அவளை இழுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான் “லவ் யூ சஞ்சனா”. அழுகு புன்னகையுடன் அவனோடு ஒட்டிக் கொண்டு அவனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் சஞ்சனா.

“எனது காதல் எனது கை சேர்ந்தே விட்டதா? எனது சஞ்சனா எனது மனைவியாகி விட்டாளா?” உண்மை இப்போதுதான் மெல்ல மெல்ல அவனுக்குள்ளே இறங்கியது.

“ஸோ?. சஞ்சனா தி கிரேட் கைனகாலிஜிஸ்ட் என் பொண்டாட்டி” கலகலவென சிரித்தாள் அவள். அவன் முகத்தில் ரசிப்பின் ரேகைகள்.

அவள் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டான் அவள் எத்தனை நாட்கள் அவளது புகைப்படத்தை மட்டுமே பார்த்து ரசித்து ரசித்து ஏங்கி இருப்பான். இப்போது நிஜம் அவனது கைகளில் தவழ, சின்ன வெட்க புன்னகையுடன் அவனை விலக்கி விட்டு விலகினாள் அவள்.

“ஹேய்” என்றான் ஏக்கமும் தவிப்புமாக “பக்கத்திலே வா சஞ்சனா”

“அதெல்லாம் முடியாது” என்றபடியே அவள் பின்நோக்கி நடக்க அவன் அவளை நோக்கி வர சுவற்றோடு அவளை தடுத்து கைகளால் அணைக் கட்டிக் கொண்டான்.

“இனிமே என்கிட்டேர்ந்து தப்பிக்கவெல்லாம் முடியாது. கைனகாலிஜிஸ்ட் மேடம். டைரெக்டா இனிமே ஃபர்ஸ்ட் நைட்தான்” என அவளது நெற்றியில் துவங்கியவன் அவளது இரண்டு கண்களிலும் தனது இதழ்களை ஒத்தி எடுத்தான்.

“கௌதம்” என சிணுங்கியவவளின் இடைவளைத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான். அதன் பின் அவளது கன்னங்கள் அந்த அதிர்ஷ்டத்தை பெற்றன. அங்கிருந்து வழுக்கி அவன் அவள் இதழ்களை அடைந்த நேரத்தில் அவனை விலக்கி நிறுத்தினாள் அவள்.

“எவனாவது வீடியோ எடுக்கப் போறான் பாருங்க. அப்புறம் கெளதம் சித்தார்த் வீடியோ நெட்லே வைரல் ஆகிடும்”

“ஸோ?” என்று அவளைப் பார்த்து கண் சிமிட்டினான் “இங்கே வேண்டாம் பெட்ரூம் போய்டலாம்னு சொல்றே” என்று மலர்ந்து சிரித்தவனின் பார்வை அவளது கழுத்தில் இருந்த தாலியின் மீது படற இப்போது அவனது முகத்தில் நிறையவே யோசனைகள்.

தாலிக் கயிறு பெண்களிடம் மட்டும்தான் மாயம் செய்யுமா என்ன?

இதுவரை அவளை காதலித்து மட்டுமே வந்து வரையில், நீ எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று சூளுரைத்துக் கொண்டிருந்த வரையில் இல்லாத ஏதோ ஒரு பயமும் பொறுப்பும் அவனுக்குள் வந்துவிட்ட உணர்வு.

“சஞ்சனா” இதமாய் அழைத்தான் அவளை.

“ம்?” என்றாள் அவன் மார்பில் மறுபடியும் முகம் புதைத்த படியே.

“நாளைக்கு மறுநாள் என்னோட பிறந்த நாள்டா”

“ஹேய்.. கிரேட்.....எனக்கு உங்க பர்த்டே சரியா ஞாபகம் இல்லை கெளதம். இந்த தடவை அசத்திடுவோம் விடுங்க”

“அதை விட முக்கியமா நம்ம கல்யாணத்தை அன்னைக்கு ரிஜிஸ்டர் பண்ணிடலாம் சஞ்சனா. நான் அதுக்கான ஏற்பாடு எல்லாம் பண்றேன்” என்றான் யோசனையுடன்.

“அவ்வளவு அவசரமா கெளதம்?” கேட்டாள் அவன் கண்களுக்குள் பார்த்து.

“எனக்கு கண்டிப்பா அவசரம். நாளைக்கு எனக்கு ஏதாவது ஒண்ணு ஆகிட்டா என்னோட சொத்து முழுக்க லீகலா உனக்கு வரணும் இல்லையா?”

“கெளதம் எந்த நேரத்திலே என்ன பேசறீங்க?” அவள் கொஞ்சம் அதிர்ந்து போய் கேட்க

“இல்லடா கண்ணா. நான் சீரியஸாதான் சொல்றேன். கோடிக் கணக்கிலே கொட்டி கிடக்கு. உனக்கு அதைப் பத்தின எல்லா விவரமும் உடனே தெரியறது நல்லது. சீக்கிரம் எல்லாமே சொல்றேன் உனக்கு” அவள் நெற்றி முட்டினான் அவள் கணவன் “இப்போ இருக்கும் நிலையிலே என்னையே என்னாலே நம்ப முடியலை சஞ்சனா. நானே என்னை எப்போ வேணும்னாலும் அழிச்சிக்க வாய்ப்பு இருக்கு”

“கெளதம்!!!” அவள் திகைக்க அழகாய் சிரித்தவன்

“கொஞ்சம் வேலை இருக்கு. வா கீழே போகலாம்” என விறுவிறுவென கீழே இறங்கினான். இரண்டு நிமிடங்கள் முன்னால் இருந்த அவனது மனநிலையில் இப்போது தலைகீழ் மாற்றம் வந்திருந்தது.

கீழே வந்தவன், அறை சுத்தமாக இருப்பதை கவனித்து விட்டு தனது மடிக்கணினியை பிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“சாப்பிட்டீங்களா கௌதம்?” அவன் பின்னாலிருந்து அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள் மனைவி

“இல்லையே. மறந்துட்டேன்” என்றான் திரையில் தெரிந்த ஏதேதோ எழுத்துக்களில் மூழ்கியவனாக.

நிமிடங்கள் கடக்க கையில் அவனுக்கான உணவுடன் அறைக்குள் நுழைந்தாள் சஞ்சனா. இன்னமும் மடிக்கணினியையே காதலித்துக் கொண்டிருந்தான் அவன்.

“சாப்பிட்டு வேலை எல்லாம் பார்ப்பீங்களாம்” என அவனை எழுப்பி மேஜையில் அமர வைத்தாள். அங்கே இருந்த இனிப்பை ஒரு ஸ்பூன் எடுத்து அவனது வாயருகே கொண்டு வந்து நீட்டினாள்.

“இன்னைக்கு நமக்கு கல்யாணம் பாஸ். அதுக்காக” அதை வாங்கிக் கொண்டவன் இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டு அவள் முகம் பார்த்து ரசித்தான் இன்னொரு ஸ்பூனில் இனிப்பை எடுத்து அவளுக்கு ஊட்டினான் அவன்.

“அச்சோ போச்சு போச்சு உங்களுக்கு கையிலே அடி பட்டிருக்கு. சாப்பிட முடியாது. அதனாலே நானே எல்லாம் ஊட்டி விடுவேனாம்”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஸ்பூனாலே நல்லா சாப்பிடலாம்”

“இல்லை இல்லை ரொம்ப ரொம்ப கஷ்டம்” என அவசரமாக மறுத்து உணவை எடுத்து அவனுக்கு ஊட்டி விடும் மனைவியை ரசிக்காமல் இருக்கவே முடியவில்லை அந்த ராக்ஷசனால்.

வாழ்கை முழுவதும் இப்படி ஒரு வரம் கிடைத்தால் அது எத்தனை பெரிய ஆனந்தம்? என்று தோன்றியதுதான் அவனுக்கு. அதே நேரத்தில் அதெல்லாம் சாத்தியம் இல்லை எனும் இன்னொரு எண்ணமும் அதனோடே ஒட்டிக் கொண்டு வந்தது.

“நீயும் சாப்பிடு சஞ்சனா” அவன் சொல்ல

“இதோ எனக்கும் சேர்த்துதான் எடுத்திட்டு வந்தேன். உங்களுக்கு ஊட்டி விட்டு சாப்பிடுவேன்” என்றாள் அவன் தலை கோதி

“வேண்டாம் சஞ்சனா.. இதெல்லாம் பழக வேண்டாம்..அப்புறம் உனக்குத்தான்.... ” அவன் சொல்லி முடிப்பதற்குள்

“இப்போ என்ன ரெண்டு நாளிலே நான் போயிடுவேன் அதானே சொல்லப் போறே. சரி போ..ய்..யா.. ஆனா போற வரைக்கும் சந்தோஷமா இருந்திட்டு போயேன். அதிலே என்ன பிரச்சனை உனக்கு?” அவள் சட்டென ஒருமைக்கு தாவ மலர்ந்து சிரித்தே விட்டான் நமது சதுரங்க நாயகன்.

இருவரும் மாற்றி மாற்றி ஊட்டிக் கொண்டு ஒரு வழியாக சாப்பிட்டு முடிக்க

“நேத்து மாதிரி இன்னைக்கும் வீ வில் ஹேவ் எ டான்ஸ் கெளதம்” என்றாள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு.

“தூங்கு சஞ்சனா. நான் இப்போ வேறே மூட்லே இருக்கேன்” தவிர்க்கத் தான் பார்த்தான்.

“என்ன மூடா இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கலாம். இந்த ஒரு நாளை எனக்குக் குடுங்க கெளதம். ப்ளீஸ்..” கெஞ்சினாள் சஞ்சனா. தளர்ந்தான் அவன்.

விளக்கை அணைத்து விட்டு இரவு விளக்கை ஒளிர விட்டு அவர்கள் பாடலை ஒலிக்க விட்டாள்.

இசையோடு இணைந்து குழைந்து அவன் கரத்தோடு தனது கரம் கோர்த்துக் கொண்டாள். அவனை தன்னோடு சேர்த்துக் கொண்டாள். அவள் பயணிக்க ஆரம்பிக்கும் பாதை எங்கே சென்று நிற்கும் என்பது அவனுக்கு கண்டிப்பாகத் தெரியும். அந்தப் பாதையின் பயணத்தை தவிர்க்கத் தான் பார்த்தான்.

ஆனாலும் அவனைத் தவிர்க்க விடாமல் தவிக்க விட்டது அவனது காதல். இத்தனை நாட்கள் அவனை ஏங்க மட்டுமே வைத்த அவனது காதல், இன்று அவனை ஆராதித்தது. அவன் எல்லாவற்றுக்கும் அணைக்கட்டப் பார்த்தும் அவனை அணைத்தே நின்றது அது.

அவனுக்கு சில நாட்களுக்கு முன்னால் ஏற்பட்ட அந்த தீக்காயங்களுக்கு கூட அவளது இதழ் ஒத்தடங்கள் இன்று மருந்தானது.

ஒரு முறை, இரண்டு முறை, மூன்று முறை என அவர்களின் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்க, முதல் முறையாக இத்தனை நெருக்கத்தில் இருந்த பெண்மை எனும் பெருமழை அவனை ஆட்கொண்டது.

முத்தம் கொடுத்தாள். கொடுத்ததை அவனை ஏமாற்றியே திரும்ப எடுத்தாள்.

எத்தனை முயன்றும் ஒரு கட்டத்துக்கு மேலாக, தன்னை ரசித்து ரசித்து ஆராதித்த காதலை துதிக்காமல் இருக்கவே முடியவில்லை அவனால்.

அணைத்தான் சிரித்தாள். கொஞ்சினான் கெஞ்சினாள். ரசித்தான் உருகினாள். சுவாசித்தான் சிலிர்த்தாள். சிரித்தான் சிலாகித்தாள். கடைசியில் இருவரும் ஒருவருக்குள் ஒருவராக கரைந்து மகிழ்ந்து போனார்கள்.

சில மணி நேரங்களுக்கு பிறகு அசந்து களைத்து உறங்கி விட்டிருந்தாள் பெருமையும் மகிழ்ச்சியுமாய் அந்த அரக்கனை தனதாக்கிக் கொண்ட தேவதை.

அவனுக்குத்தான் உறங்கும் வரம் வாய்க்கவில்லை. மனம் எங்கெங்கோ சுற்றித் திரிய ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு ஞாபகத்தில் அவனது இதழோரம் வந்து நின்றது ஒரு வெற்றிப் புன்னகை.

அடுத்த நிமிடம் தனது மடிக்கணினியை எடுத்துக் பால்கனிக்கு வந்தவன், படுக்கை அறையின் கண்ணாடிக் கதவை வெளிப்பக்கமாக பூட்டினான்.

அவள் நன்றாக உறங்குகிறாள் என்பதை கவனித்துக் கொண்டு, தனது குரல் அவளுக்கு கேட்காது என்பதையும் உறுதி செய்து கொண்டு மடிக்கணினியை உயிர்பித்தான்.

சில நிமிடங்களில் அவனது திரையில் வந்தான் நந்தா! அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில் தரையில் உறங்கிக் கிடக்கும் நந்தா.

“கெளதம் சித்தார்த்” சீறிய இவனது குரல் அந்த அறையின் சுவற்றில் பட்டு எதிரொலித்தது. இவனது குரலில் அரண்டு போய் எழுந்தான் நந்தா.

“என்னடா தூக்கமா? அதெல்லாம் வேறே வருதா உனக்கு? வரக் கூடாதே தப்பாச்சே?” என்றான் கேலி கலந்த குரலில்.

அரை குறை உறக்கத்தில் அவன் ஏதும் புரியாமல் சுற்றிச் சுற்றிப் பார்க்க

“என்னடா முழிக்குறே? ஓ... தூக்கக் கலக்கமா சாருக்கு? இப்போ நான் சொல்றே விஷயத்தை கேட்டா உனக்கு ஜென்மத்துக்கு தூக்கம் வராது ” என்றவன் “எனக்கும் சஞ்சனாவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுடா பைத்தியக்காரா” என்றான் குரலில் சூடு பறக்க.

தலையில் இடி ஒன்று விழுந்து விட்டதைப் போல் அதிர்ந்து போய் எழுந்து அமர்ந்தான் நந்தா.

எத்தனை நாட்கள் உண்ணா விரதம் இருக்க முடியும்?. இன்று கொஞ்சம் சாப்பிட்டு இருந்தான் அவன். அதனாலேயே பேசும் சக்தி கிடைத்திருந்தது அவனுக்கு.

“என்னடா நம்ப முடியலையா?” வாய்விட்டுச் சிரித்த கௌதமின் சிரிப்பொலி அந்த அறை முழுவதும் எதிரொலிக்க தவிப்புடன் கத்தினான் நந்தா.

“டேய்.. பொய் சொல்லாதே. அப்படி ஒண்ணு நடக்க வாய்ப்பே இல்லை”

“நடந்திடுச்சேடா. நடந்திடுச்சே. என்னாலேயே நம்ப முடியலை. நான் உயிருக்குள்ளே வெச்சு பூஜை பண்ண என் தேவதை தன்னாலே என்னைத் தேடி வந்து கல்யாணம் பண்ணிட்டாளே” என்று சொன்னவன் சத்தமாக சிரித்தான்.

“இதிலே ஒரு பெரிய விஷயம் என்னன்னா இந்தக் கல்யாணத்துக்கு ஆசீர்வாதம் பண்ணி தாலி எடுத்துக் கொடுத்தது உங்க தாத்தா. அது உங்க பாட்டியோட தாலின்னு கேள்விப் பட்டேன். இது எப்படி இருக்கு?”

“டேய்... பொய்தான் சொல்றே. நீ கண்டிப்பா பொய்தான் சொல்றே” அவன் பைத்தியம் பிடித்தவன் போல் கத்த..

“நம்ப மாட்டியா நீ? நம்பித்தான் ஆகணும். இது சத்தியம். எ..ன் அ..ம்..மா மே...லே ச..த்,, தி..ய..ம்” கடைசி வரியில் அவன் கொடுத்த அழுத்தத்தில் ஆடிப் போனான் நந்தா.

தனது அன்னை மீது பொய் சத்தியம் செய்ய மாட்டான் கெளதம் என நன்றாக அறிந்தவன் நந்தா.

“அப்படி என்றால் நிஜமாகவே திருமணம் முடிந்து விட்டதா?” உயிர் அறுந்தது நந்தாவுக்கு. அவனுக்கு இது எத்தனை பெரிய அடி என்பதை நன்றாக புரிந்தவன் கெளதம் சித்தார்த்.

உண்மை உள்ளுக்குள் இறங்க, நந்தா உடைந்து போவது புரிந்தது கௌதமுக்கு. அவன் தரையில் ஓங்கி ஓங்கி குத்துவது தெரிந்தது. ஆற்ற மாட்டாமல் சுவற்றில் சென்று முட்டிக் கொள்வது தெரிந்தது. கடைசியில் செயலற்றுப் போய் அவன் தேம்பித் தேம்பி அழுவதும் புரிந்தது நமது சதுரங்க வீரனுக்கு.

“அழறியாடா நந்தா? அழு. தேம்பித் தேம்பி அழு. அன்னைக்கு என்னைப் பார்த்து இடுப்பிலே கையை வெச்சிட்டு சிரிச்சியே இப்போ தேம்பித் தேம்பி அழு. காலம் பூரா நீ இழந்ததை நினைச்சு தேம்பித் தேம்பி அழு” சீறினான் கெளதம்.

அதன் பிறகு அவன் தவிப்பதை, அவன் அழுவதை சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தவன் காட்சியை அணைத்து விட்டு இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டான்.

சில நொடிகளில் பால்கனியின் கண்ணாடிக் கதவு படபடவென தட்டப் படுவது தெரிந்து கண்திறந்தான். கதவுக்கு அந்தப் பக்கம் நின்றிருந்தாள் சஞ்சனா.

இதழோரம் கூடிய புன்னகையுடன் கதவை திறந்தான் அவன். வெளிறிப் போய்க் கிடந்தது அவள் முகம்.

“நான் கொஞ்சம் கண் அசந்து தூங்கிட்டேன்” என்றாள் பயமும் கலக்கமும் கலந்த குரலில்.

“ஸோ?” அழகாய் மலர்ந்து சிரித்தான் கெளதம் “டாக்டர் மேடம் எனக்கு காவலா நிக்கணும்ன்னு நினைச்சீங்களா?”

அவனது சிரிப்பில் கொஞ்சம் நிம்மதியான சுவாசம் எழுந்தது அவளிடம்

“என்ன சஞ்சனா நீ ? அதுக்குள்ளே நான் கொலை பண்ணி முடிச்சிட்டேன்னு பயந்துட்டியா என்ன ? ச்சே ச்சே அப்படி எல்லாம் அவசரமா எல்லாம் கொலை பண்ணிட முடியாது. அதை ரசிச்சு ரசிச்சு பண்ணனும்”

அவன் படு இயல்பாக சொல்ல பக்கென்றது அவளுக்கு.

“அப்படி எல்லாம் சொல்லாம கொள்ளாம எதுவும் செய்திட மாட்டேன் கவலைப் படாதே. அப்படி நான் சொல்லிட்டு போகும் போதும் உன்னாலே என்னை எதுவும் செய்ய முடியாது. ஏன்னா நான் கெளதம் சித்தார்த்”

அவளைப் பார்த்து அவன் கண் சிமிட்டி அழுத்தம் திருத்தமாக சொன்ன விதத்தில் அவளுக்குள் பய அமிலங்கள்

“அதுக்கு முன்னாடி எனக்கு நம்ம சொத்து சம்மந்தமா சில வேலைகள் இருக்கு. அதை எல்லாம் முடிச்சிட்டுத்தான் இது. கண்டிப்பா உன்கிட்டே சொல்லிட்டுத் தான் போவேன். அந்தக் கடமையும் எனக்கு இருக்கு. ஸோ அது வரை நிம்மதியா தூங்கு” என்று அவள் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு நகர்ந்தான் கெளதம்.

“டீ குடிக்கப் போனால் உன்னிடம் சொல்லி விட்டு போகிறேன்” எனும் ரீதியில் பேசி விட்டு செல்பவனை விக்கித்துப் பார்த்திருந்தாள் அவன் மனைவி.

தொடரும்
அடுத்த அத்தியாயம் 12/08/2021
உங்கள் கருத்துகளை இந்தத் திரியில் தெரிவியுங்கள் தோழமைகளே!

நீ அறியாயோ முகிலனமே கருத்துக்கள்
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
நீ அறியாயோ முகிலினமே! 15



இரவு முழுவதும் உனக்கென கவிதைகள் எழுதி குவிக்கிறேன் நான் .

உந்தன் ஒற்றை முத்தத்தில் எனது கவிதைகளை அணைத்துக் கொள்கிறது குப்பைத் தொட்டி




மறுநாள் காலை தோட்டத்தில் நின்றிருந்தார் தாத்தா. அவருடைய நாளின் ஐம்பது சதவிகித பகுதி தோட்டத்தில் இயற்கையோடு இயற்கையாகவே கழியும்.

நேற்று அடித்த மழைக் காற்றின் வேகம் தாங்காமல் சாய்ந்து நின்றிருந்தது ஒரு அங்கே இருந்த ஒரு வாழை மரம். அதை பார்த்தவுடனே அவரிடம் வாட்டம் மட்டுமே பரவியது.

“ஒண்ணும் இல்லைமா சரியாகிடும்” என்று மரத்தை வருடிக் கொடுத்தவர் மண் வெட்டியை எடுத்து மரத்தை சுற்றி இருந்த பாத்தியை நேர்படுத்தி மரத்தோடு சுற்றி மண்ணை குமித்து இரண்டு மூங்கில்களை எடுத்து மரத்திற்கு அண்டை கொடுத்து நிறுத்தினார்,

அந்த மரத்தின் அடியிலேயே முளைத்து இருந்த ஒரு சிறு வாழைக் கன்று அவரைப் பார்த்து புன்னகைப்பதை போலவே இருந்தது.

அப்போது கௌதம் அவரது மனதில் வந்து நின்றான். அதன் பிறகு நந்தா.. இருவரும் அவருக்கு ஏதோ ஒரு வகையில் பேரன்கள்தானே. அவர் நேற்று சுரேந்தரிடம் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.

“நீ உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை நேர்மையா செய். ஆண்டவன் போடற கணக்கு எப்பவுமே சரியா இருக்கும். அதன்படி எல்லாம் சரியா நடக்கும்”

‘எந்த ஒரு செயலுக்குமே அதற்கு இணையான ஒரு எதிர்வினை இருக்கும் என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. இறைவன் போடும் கணக்கும் அப்படித்தானே. யாரென்றாலும் செய்த செயல்களுக்கான எதிர்வினை நடந்தே தீரும். அதைத் தடுக்க வழியில்லை’ சொல்லிக் கொண்டார் அவர்.

அதே நேரத்தில் அங்கே கோவையில்

சஞ்சனாவின் கைப்பேசிக்கு வந்திருந்தன சில குறிப்புகள். அதைப் பார்த்ததும் மெலிதாக ஒரு புன்னகை எழுந்தது. அவனைத் தாக்கிவிடும் மிகப் பெரிய ஆயுதம் ஒன்று தனது கை சேர்ந்து விட்ட மகிழ்ச்சி அலை அவளுக்குள்.

தன்னை மறந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த அந்த அரக்கனை ரசித்துப்பார்த்திருந்தாள் அவன் மனைவி.

‘அப்படி எல்லாம் நீ என்னை ஜெயித்து விட முடியாதடா எனது அத்தை மகனே’ அவன் உறக்கம் கலையாமல் அவனது கேசம் கோதினாள் சஞ்சனா..

“ஆம்!” அவன் வரலக்ஷ்மி அத்தை நீலகண்டன் மாமா இருவரின் மகன் என்பது உறுதியாகி இருந்தது. நீலகண்டன்தான் அவனது தந்தை என்பதை உறுதி செய்து இருந்தது அந்த மருத்துவ அறிக்கை.

அன்றொரு நாள் தொலைகாட்சியில் வந்த கௌதமின் விளம்பரத்தை பார்த்து கூவிய அத்தையின் வார்த்தைகளில் இவளது மனதில் முதல் சந்தேக விதை விழுந்தது.

இந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காகவே, அன்று தீக்காயத்திற்காக கெளதம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, அவன் அரை குறை மயக்கத்தில் இருந்த நேரத்தில் அவனது மரபணு மாதிரிகளை சேகரித்து இருந்தாள் சஞ்சனா.

தீ விபத்தைப் பற்றி விசாரிக்க நீலகண்டன் அழைத்திருந்த போதுதான் இதைப் பற்றி அவரிடம் கேட்டும் விட்டாள் இவள்.

அப்போது இவளின் நலம் விசாரித்தவர் “கெளதம் எப்படிம்மா இருக்கான்?” என்றார். “நேத்து உங்க அப்பா கால் பண்ணதில் இருந்து மனசுக்கு நம்மதியே இல்லை” பரிதவிப்பும், பயமும், கவலையும் சரி விகிதத்தில் இருந்தது அவர் குரலில்.

“அவருக்கு என்ன மாமா? ஜம்முனு இருக்கார் ” என்றாள் இவள்.

“நிஜமா சொல்லு. அவனுக்கு பயப்படும்படியா ஒண்ணுமில்லைதானே. வரலக்ஷ்மி வருஷத்துக்கு ஒரு தடவைதான் அவன்கிட்டே பேசணும்னு என்கிட்டே சத்தியம் வாங்கியிருக்கா. இல்லைனா நானே அவன்கிட்டே பேசிடுவேன். நிஜமா சொல்லேன் அவன் நல்லாதானே இருக்கான்?” அவர் படபடத்து முடிக்க

“மாமா அவர் நிஜமா நல்லா இருக்கார்” என்று சொன்னவள் “நான் உங்ககிட்டே ஒண்ணு கேட்கலாமா மாமா?”

என்னதுமா?”

“அத்தை ஏன் நீங்க கெளதம்கிட்டே வருஷத்துக்கு ஒரு தடவைதான் பேசணும்னு சத்தியம் வாங்கி இருக்காங்க?” மெதுவாக கேள்வியை தொடுத்தாள்.

“அது.. அது நான் வந்து.. ஏதோ குழப்பத்திலே. ஏதோ உளறிட்டேன்மா.” தடுமாறித்தான் போனார் நீலகண்டன்.

“இல்லை மாமா. அன்னைக்கு ஒரு நாள் அத்தை கெளதம் நடிச்ச ஆட் பார்த்திட்டு அவன் என் ரத்தம். நான்தான் அவனை உருவாக்கினேன்னு திரும்பத் திரும்ப சொன்னாங்க. அவங்க சொன்னது உண்மைதானோன்னு அப்போவே தோணிச்சு. கெளதம் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட். அதனாலே அவன் பத்தி தெரிஞ்சுக்கலாம்ன்னு கேட்டேன். நீங்க என்கிட்டே சொல்லலாம்னா சொல்லுங்க மாமா. வேண்டாம்னா விட்டுடுங்க நான் கம்பெல் பண்ணலை” என்றாள் சஞ்சனா.

மாமாவுக்கு என்ன தோன்றியதோ? நந்தாவும் இல்லையோ எனும் நிலையில் கௌதமை மனம் நாடியதோ? அல்லது வேறு என்ன காரணமோ தெரியவில்லை.

“இல்லைமா நான் உன்கிட்டே சொல்றேன். வாய்ப்பு கிடைச்சா நீ கௌதமுக்கு நடந்ததை புரிய வை” என தொடர்ந்தார்.

கௌதமின் அன்னை சரஸ்வதியின் தந்தை கட்டிய மருத்துவமனைதான் இந்த ஜி.எஸ் ஹாஸ்பிடல்ஸ். சரஸ்வதியின் கணவர் ஒரு காவல்துறை அதிகாரி.

கோவையில் இருக்கும் ஜி.எஸ் மருத்துவமனையில்தான் வரலக்ஷ்மி அப்போது வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கும் நீலகண்டனுக்கும் திருமணம் முடிந்திருந்தது.

இரண்டு ஜோடிகளுக்குமே திருமணம் முடிந்து பல வருடங்களாக குழந்தை இல்லை.

வரலக்ஷ்மியின் கர்ப்பப்பைக்கு குழந்தைகளை தாங்கும் சக்தி இல்லை என்றால், சரஸ்வதியின் கருக்குழாயில் அடைப்பு. வரலக்ஷ்மி ஒரு பிரபலமான மகளிர் நல மருத்துவர் எனும் முறையில் அவரிடம் சிகிச்சைக்காக வந்திருந்தனர் சரஸ்வதி தம்பதியினர்.

நாட்கள் கடக்க வரலக்ஷ்மி சரஸ்வதிக்கு நல்லத் தோழியாகவும் மாறியிருந்தார்.

பல முயற்சிகளுக்கு பிறகு சோதனைக் குழாய் மூலம் கருவை உண்டாக்கி சரஸ்வதியின் கர்ப்பபைக்குள் செலுத்துவதே சிறந்த வழி எனும் முடிவுக்கு வந்திருந்தார் வரலக்ஷ்மி .

சரஸ்வதியின் கரு முட்டையையும் அவளது கணவரின் உயிரணுக்களையும் வரலக்ஷ்மி சேகரித்துக் கொள்ள, இன்னும் சில நாட்களில் தங்கள் வீட்டில் குழந்தை தவழும் எனும் மகிழ்ச்சியுடன் கிளம்பிச் சென்ற அந்த தம்பதியினரை பிடித்துக் கொண்டது ஒரு துரதிர்ஷ்டம்.

யாரோ ஒரு குற்றவாளியை பிடிக்கச் சென்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்டார் சரஸ்வதியின் கணவர். துடுப்பிழந்த ஓடமாக நின்ற சரஸ்வதியின் ஒரே நம்பிக்கை வரலக்ஷ்மி உருவாக்கி தரப்போகும் கரு.

வரலக்ஷ்மி சரஸ்வதிக்கு ஆறுதல் சொல்ல சென்ற போது கூட “எனக்கு அவர் குழந்தையை உருவாக்கிக் கொடுத்திடு லக்ஷ்மி. இனிமே அதுதான் என்னோட வாழ்கை. அது இல்லைனா நான் தற்கொலைதான் பண்ணிக்கணும்” என்று கதறிய சரஸ்வதி வீட்டுக்கு வந்த பிறகும் வரலக்ஷ்மியின் கண்களில் இருந்து அகல மறுத்தாள்.

சரஸ்வதியை பிடித்துக் கொண்ட துரதிர்ஷ்டம் அவளை விடவில்லை என்றுதான் சொல்ல வேண்டுமோ? சரஸ்வதியின் குழந்தையை சோதனைக் குழாயில் உருவாக்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்து இருந்தார் வரலக்ஷ்மி.

“இந்த செய்தியை எப்படி நான் எப்படி எனது தோழியிடம் சொல்வேன்? தாங்கிக் கொள்வாளா அவள்? அதன் பின் உயிர் வாழ்வாளா அவள்” அங்கலாய்த்துக் கிடந்தது வரலக்ஷ்மியின் மனது.

வரலக்ஷ்மியின் கர்ப்பப்பையில் பிரச்சனை என்று இருந்த போதும் வாடகைத் தாய் முறையில் கருவை உருவாக்கிக் கொள்வதை பற்றியெல்லாம் இதுவரை அவர்கள் யோசித்தது இல்லை.

இந்த சூழ்நிலையில்தான் நீலகண்டனை நாடினார் வரலக்ஷ்மி “நம்ம ரெண்டு பேர் குழந்தை சரஸ்வதி வயித்திலே வளர்ந்தா எப்படி இருக்கும் நீலா?”

முதலில் ஒப்புக் கொள்ளவே இல்லை நீலகண்டன்

“அவளுக்கு காலத்துக்கும் இந்த விவரம் தெரியவே வேண்டாம். அவ குழந்தையாவே அது எப்பவும் வளரட்டும். நான் அதை உருவாகின டாக்டரா தூரத்தில் இருந்து பார்த்து சந்தோஷப் பட்டுக்குவேன். அவ உயிரோட இருக்குற வரைக்கும் அவளுக்கு இந்த விவரம் எல்லாம் தெரியாமலே போகட்டும். விஷயம் நம்ம ரெண்டு பேருக்கு மட்டுமே தெரிஞ்சதா இருக்கட்டும்”

“சரியா வாராது லக்ஷ்மி. நாமும் மனுஷங்கதானே. என்னைக்காவது நம்ம குழந்தையோட பேசணும் பழகணும்னு நம்ம மனசு ஏங்காதா?”

“நாம ஒரு உறுதி எடுத்துக்கலாம். வருஷா வருஷம் அதோட பிறந்தநாளைக்கு மட்டும் அதைப் போய் பார்த்திட்டு திரும்பிடலாம். உங்களுக்கு நம்ம குழந்தை இந்த பூமிக்கு வரணும்னு ஆசையில்லையா? நம்ம வம்சம் தழைக்க வேண்டாமா?” என ஏதேதோ பேசி கடைசியில் ஒரு வழியாக நீலகண்டனையும் இதற்கு உடன் பட வைத்திருந்தார் வரலக்ஷ்மி.

இவர்கள் கருவும் வெற்றிகரமாக உருவாகி விட அது சரஸ்வதியின் வயற்றில் கௌதமாக இடம் பிடித்திருந்தது. அது நடந்தேறும் வரை தங்கள் கரு சரஸ்வதியின் வயிற்றில் சரியாக இடம் பிடிக்குமா எனும் பயம் இருந்து கொண்டே இருந்தது வரலக்ஷ்மிக்கு.

கடைசியில் தான் கற்ற கல்வியை வைத்து ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் கொண்ட பெருமை வந்திருந்தது வரலட்சுமிக்கு.

மாதங்கள் கடக்க கரு வளர வளர சரஸ்வதியின் மகிழ்ச்சிக்கு ஒரு எல்லை என்பதே இருக்கவில்லை. பத்து மாதங்கள் அத்தனை கவனமாக இருந்தும், கடைசியில் குறிப்பிட்ட நாளுக்கு முன்னாலேயே வலி எடுத்து போராடி பெற்றெடுத்தார் கௌதமை.

வயிற்றில் சுமந்த அன்னைக்கு முன்பாகவே கௌதமை கையிலெடுத்து உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டார் அவனுக்கு உருவம் கொடுத்த அன்னை.

சில நிமிடங்கள் குழந்தையை கையில் ஏந்திக் கொள்ளும் உரிமை மட்டுமே இருந்த போதும், ஆவலாக மருத்தவமனைக்கு வந்து மகனைப் பார்த்து ரசித்து விட்டு கையில் ஏந்தி முத்தமிட்டு விட்டு சென்று விட்டார் நீலகண்டன்.

“இவங்க வரலக்ஷ்மி டாக்டர். சாமிதான் நம்மை எல்லாம் உருவாக்கும். அதனாலே இவங்கதான் உனக்கு சாமி மாதிரி” சிறுவயதில் இப்படிதான் வரலக்ஷ்மியை கௌதமுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சரஸ்வதி.

அவன் பிறந்த பிறகு கோவை மருத்துவமனை வேலையை விட்டு சென்னைக்கு தனது வேலையை மாற்றிக் கொண்டார் வரலக்ஷ்மி. கௌதமின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மட்டுமே கோவைக்கு வந்தனர் கணவனும் மனைவியும்..

தனது குடும்பம் பற்றி, அதில் இருப்பவர்களை பற்றி என எந்த விவரங்களையும் அவனிடம் சொன்னதில்லை வரலக்ஷ்மி.

சஞ்சனா அங்கே வேலைக்கு சேர்ந்த போது கூட எதையும் கௌதமிடம் சொல்லவில்லை அவர். தனது குடும்பத்தோடு அவனுக்கு ஏற்படும் எந்த ஒரு பந்தமும் சரஸ்வதியை பாதிக்குமோ என்ற பயம் வரல்க்ஷ்மிக்கு.

கௌதமை பற்றிய உண்மைகள் அவருக்கு தெரிந்தால் அதை சரஸ்வதியால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதை நன்றாகவே உணர்ந்தவர் வரலக்ஷ்மி.

சஞ்சனா அங்கே வேலைக்கு சேருவதை பற்றி வரலக்ஷ்மியிடம் சொன்ன போதுதானே அவர் கௌதமின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவன் வீட்டுக்கு செல்வதே அவளுக்குத் தெரியும். அதைப் பற்றியெல்லாம் அவனிடம் பேசும் சந்தர்ப்பம் கூட அவளுக்கு அப்போது வாய்க்கவில்லையே.

ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வந்து செல்லும் அந்த தம்பதியரை தானாகவே பிடித்துப் போனது அவனுக்கு.

கௌதமுக்கு விவரங்கள் தெரிய ஆரம்பித்த பிறகு “அப்பாவோட உயிரணுவும் என்னோட கருமுட்டையையும் வெச்சு உன்னை உருவாக்கின தெய்வம்டா நம்ம டாக்டர். நீ என் வயத்துக்குள்ளே வர்றதுக்குள்ளே உங்க அப்பாவை கொன்னுட்டாங்க. அப்படியும் உன் அப்பாவோட பையனான நீ என் வயத்துக்குள்ளே பத்திரமா வர்றதுக்கு வரலக்ஷ்மி டாக்டர் அப்படிங்கிற தெய்வம்தான்டா காரணம். அவங்களும் ஒரு பிரம்மாதான்“ சொல்லி இருக்கிறார் சரஸ்வதி.

அதனாலேயே மகளிர் நல மருத்தவர்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு கௌதமுக்கு.

“சஞ்சனா தி கிரேட் கைனகாலிஜிஸ்ட்” என அவன் அடிக்கடி சொல்வதற்கும் காரணம் அதுதான்.

ஆனால் இவர்கள் இருவர்தான் அவன் உருவாகக் காரணமான பெற்றோர்கள் இவர்கள் இருவரும் .என்பதை இந்த நிமிடம் வரை அறிந்தவன் இல்லை கெளதம் சித்தார்த்.

கெளதம் பிறந்து ஒன்றிரண்டு வருடங்களுக்கு பிறகே நந்தாவை தத்து எடுத்துக் கொண்டனர் நீலகண்டன் தம்பதியினர்.

நீலகண்டன் இந்த விவரங்களை சஞ்சனாவிடம் சொன்ன பிறகு தான் கௌதமின். மரபணு மாதிரிகளை எடுத்து அவளது நண்பனான ஒரு மருத்துவர் மூலம் சென்னைக்கு விமானத்தில் அனுப்பியும் இருந்தாள். இதோ இன்று அதை நீலகண்டனின் மரபணுக்களுடன் ஒப்பிட்டு அதற்கான அறிக்கையும் வந்திருக்கிறது.

கையில் கண்டிப்பாக ஆதாரம் இருக்க வேண்டும். அப்போதுதானே நம்புவான் நமது சதுரங்க வீரன்.

இனி, இந்த விவரங்கள் தெரிந்த பிறகு அவனுக்கு உயிர் கொடுத்த பெற்றோர்கள் வளர்த்த மகனுக்கு தீங்கு செய்யும் தைரியம் வருமா அவனுக்கு.

ஆனாலும் இந்த விஷயங்களை அவனுக்கு எப்படி சொல்வது. அதை எப்படி எடுத்துக் கொள்வான் அவன்? யோசனையுடன் அமர்ந்திருந்தாள் சஞ்சனா.

நாளை அவனுடைய பிறந்தநாள். வருடா வருடம் அவனது பிறந்தநாளைக்கு இங்கே வருவது வரலக்ஷ்மியின் வழக்கம்தானே? இந்த வருடமும் அவரை அழைத்தால் என்ன?

அதற்குள் இவனுக்கு எல்லாவற்றையும் தெளிவுப் படுத்தி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவளுக்குத் தெரிந்த விஷயங்கள் எல்லாவற்றையும் ஒரு கடிதமாக எழுதி ஒரு அதை அந்த மரபணு அறிக்கையை இணைத்தாள்.

ஒரு முடிவுக்கு வந்தவள் குளித்து முடித்துவிட்டு, அவனது அறையை விட்டு கீழே வந்து நீலகண்டனை அழைத்தாள்.

தனது அவசர திருமணம் பற்றியும் மேலோட்டமாக சொன்னாள் அவள். ஹரிஹரன் அதைப் பற்றி அவரிடம் ஏற்கனவே பேசி இருக்க இவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. அதன் பிறகுதான் கௌதமின் பிறந்தநாளுக்கு அழைத்தாள் அவர்களை.

“எனக்கும் ஞாபகம் இருக்குமா அவன் பிறந்தநாள். மறக்க முடியுமா அதை ? அவளையும் கூட்டிட்டு நாளைக்கு காலையிலே கிளம்பி வரேன். அவ இருக்குற நிலையிலே ஃப்ளைட் முடியாது காரிலே வரோம்” முடித்தார் நீலகண்டன்.

அதுவரை ஆழ்ந்த உறக்கத்தில்தான் இருந்தான் கெளதம் சித்தார்த்.

நேரம் மதியம் பன்னிரெண்டு மணியை தொட்டிருந்தது.

அவன் இன்னும் விழித்துக் கொள்ளவில்லையோ எனும் யோசனையுடனே இவள் சமையல் அறையில் எதையோ செய்து கொண்டிருந்த அந்த நேரத்தில் அவளுக்கு பின்னால் நிழலாட, அவளே அறியாமல் ஏற்பட்ட ஒரு பகீர் குலுக்கலுடன் திரும்பினாள் சஞ்சனா.

இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு கம்பீரமாக நின்றிருந்தான் அவள் கணவன்.

“கெளதம் சித்தார்த்!” என்றான் அவளை ஏற இறங்க பார்த்தபடியே.

இந்த மரபணு விஷயமே அவளது தலையை ஆக்கிரமித்து இருக்க, இதழ்களில் கஷ்டப்பட்டு ஒரு துளி புன்னகையை ஒட்டிக் கொண்டாள் சஞ்சனா.

“ஸோ?” கண் சிமிட்டினான் “சஞ்சனா தி கிரேட் கைனகாலிஜிஸ்ட் என்னைப் பார்த்து பயந்துட்டாங்க ரைட்?”

“இ.. இல்..லையே நான் ஏன் பயப்படணும்?” திடீரென விக்கல் வந்த உணர்வு அவளுக்கு.

“சரி” உன்னோட கொஞ்சம் பேசணும் மாடிக்கு வா சொல்லிவிட்டு நகர்ந்தான்.

சில நிமடங்கள் கழித்து தட்டில் உணவுடன், அந்த அறிக்கை, கடிதம் என எல்லாவற்றையும் எடுத்துக் மாடிக்கு சென்றாள் சஞ்சனா.

“வா வா வா இப்படி என் பக்கத்திலே வந்து உட்காரு மை லவ்” என்று அவள் கரம் பிடித்து தனது அருகில் அமர்த்திக் கொண்டான்.

கையிலருந்த உணவுகளை அவனது எதிரில் இருந்த டீ பாயின் மீது வைத்து விட்டு அவனருகில் அமர்ந்தாள். கடிதம் அவள் மடியில் இருந்தது.

“காலையில் இருந்து எதுவுமே சாப்பிடலை. முதலிலே சாப்பிடுங்க கெளதம்”

“சாப்பிடலாம். சாப்பிடலாம் உட்காரு” என்றவன்

தன்னுடைய வங்கி கணக்குகள் பற்றிய விவரங்கள் துவங்கி, அவனது மருத்துவமனை பங்குதாரர்கள் பற்றிய விவரங்கள், அவனுடைய எல்லா வித கடவு சொற்கள் என எல்லாவற்றையும் பற்றி அவளுக்கு விளக்கலானான் .

அவனது பல கடவுச் சொற்கள் சஞ்சனா என்பதாகவே இருந்தது அவளுக்கு சற்றே வியப்புத்தான்.

“பாஸ் நேத்துதான் நமக்கு கல்யாணம் ஆகியிருக்கு பாஸ். ஏதாவது ரொமான்ஸ் பண்ணத்தான் மாடிக்கு கூப்பிடறீங்கன்னு பார்த்தா நீங்க உட்கார்த்தி வெச்சு பிசினஸ் மேனேஜ்மென்ட் கிளாஸ் எடுக்கறீங்க” என்றாள், அவன் தோள் சாய்ந்து கொண்டு. “எனக்கு சொத்தெல்லாம் வேண்டாம். நீங்க மட்டும் போதும் கெளதம்”

“நீ ஒரு மனுஷனை கல்யாணம் பண்ணி இருந்தா இந்த மாதிரி டயலாக் சொல்றதிலே கொஞ்சமாவது அர்த்தம் இருக்கு. ஆனா நீ கல்யாணம் பண்ணது ஒரு அரக்கனை. அரக்கன்னா மரணம் எப்பவும் அவனோட முதுகு மேலே உட்கார்ந்திட்டே இருக்கும். தெரிஞ்சுக்கோ”

“கெளதம் ப்ளீஸ்..” கெஞ்சலுடன் அவள் எழுந்து நிற்க சின்ன சிரிப்புடன் அவனும் எழுந்து நின்றான். அவள் முகம் பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ அவளது கீழுத்தட்டை விரல்களால் பற்றி குவித்து சற்றே முன்னிழுத்து அதன் மீது மெலிதாக முத்தமிட்டான்.

“இப்போதைக்கு இதுதான் ரொமான்ஸ்..”

“கௌதம்.. நீங்க..”

“பீ ப்ராக்டிகல் சஞ்சனா. நான் சொன்ன விவரங்களை எல்லாம் மறுபடியும் பார். நீ ஒரு டாக்டர் ஸோ ஹாஸ்பிடல் மானேஜ்மென்ட் உனக்கு ஈஸிதான். கத்துக்கோ. ஏதாவது சந்தேகம் இருந்தா என்னை உடனே கேளு ரைட்?”

“சரி கெளதம்” வேறு வழி இல்லாமல் தலை அசைத்தாள் கௌதமின் மனைவி.

அவள் கன்னத்தில் சிறு முத்தம் பதித்து விட்டு சென்று கை கழுவிக் கொண்டு வந்து வெகு இயல்பாக சாப்பிட ஆரம்பித்து இருந்தான் அவள் கணவன்.

அவன் சாப்பிட்டு முடித்ததும் “கெளதம்” அழைத்தாள் தயக்கத்துடன்.

“ம்?”

“உங்களுக்கு ஒரு சில டாகுமென்ட்ஸ் அப்புறம் ஒரு லெட்டர் வெச்சிருக்கேன் கெளதம். படிங்க. நான் கீழே போயிட்டு வரேன்“ அவசரமாக சொல்லிவிட்டு அவன் அடுத்தக் கேள்வி கேட்பதற்குள் கிட்டதட்ட ஓடி வந்திருந்தாள் என்று சொல்ல வேண்டும்.

அவனிடம் எதையும் நேரிடையாக சொல்லும் தைரியம் இல்லை அவளுக்கு. கீழே வந்தும் கூட அவளது படபடப்பு அடங்கவில்லை என்பது வேறு விஷயம்.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
நேரம் மதியம் ஒரு மணியை தொட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் ஹரிஹரன்.

இனிப்புகளும், பழங்களும் அவர்கள் இருவருக்கான உடைகளும், தங்க வைர நகைகளும் என எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு வந்து சேர்ந்திருந்தார் மனிதர். அப்பாவின் முகத்தை நேருக்கு நேராக பார்க்கக் கூட உடல் கூசியதுதான் மகளுக்கு.

அப்போதுதான் அறையை விட்டு வெளியே வந்தான் கெளதம் சித்தார்த். மாடியிலிருந்து ஒவ்வொரு படியாக இறங்கி வருபவனை இமைக்காமல் பார்த்திருந்தாள் அவன் காதலி.

“அவன் கடிதத்தை படித்தானா இல்லையா?” தெரியவில்லை. ஆனால் அவனது கம்பீரத்தில் முப்பது சதவிகிதம் அதிகரித்து இருப்பதைப் போலவே தெரிந்தது அவளுக்கு..

“வாங்க வாங்க அங்கிள்” பளீர் சிரிப்புடன் அவர் முன்னால் வந்து நின்ற மருமகனை மார்போடு அணைந்துக் கொண்டார் மாமனார்.

அவன் முகத்தில் கொஞ்சம் கூட சலனமில்லாதது பெரிய வியப்பு சஞ்சனாவுக்கு. பெற்றோர் யாரென்பதே மாறி இருக்கும் நிலையில் கொஞ்சம் கூடவா அதிர்ச்சி இல்லை அவனுக்கு?

சற்று நிதானித்துக் கொண்டு அவள் அவன் முகம் பார்க்க, அதைப் புரிந்து கொண்டவனாக தந்தையின் பாதம் தொட்டு வணங்கினான் கெளதம். அவனோடு சேர்ந்து அவளும் அவர் பாதம் தொட்டு வணங்கினாள்.

தனது கையில் இருந்த சங்கிலி வைர மோதிரம் என எல்லாவற்றையும் மகளுக்கும் மருமகனுக்கும் அணிவித்தார் ஹரிஹரன்.

“எப்போதும் சந்தோஷமா ஆரோக்யமா நூறு வருஷம் நல்லா இருங்கப்பா ரெண்டு பேரும்” மனதார வாழ்த்தினார் மனிதர். அது நிஜமாகவே பலித்து விடாதா எனும் ஏக்கம் பிறந்தது அவளுக்கு.

“நூறு வருஷமா நீங்க வேறே அங்கிள் அவ்வளவு எல்லாம் நம்மாலே ஆகாது. இருக்கிற வரைக்கும் உங்க பொண்ணு கண்ணிலே தண்ணி வராம பார்த்துக்கறேன்ன்னு வாக்கு கொடுக்க முடியும்” அவன் சிரித்தபடியே சொல்ல

“என்னப்பா என் பொண்ணை இப்படி உன் பைத்தியமா மாத்தி வெச்சிருக்கே?” என்றார் தந்தை.

“அதுதான் அங்கிள். அவ திடீர்னு எப்படி இப்படி ஆனான்னு எனக்கும் ஒண்ணும் புரியலை. உங்க ஊரு லவ் எங்க ஊரு லவ் எல்லாம் இல்லை. அதி பயங்கர லவ். அதான் உங்ககிட்டே கூட சொல்லாம நடு ராத்திரி கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு” என்றான் அவளைப் பார்த்து கண்சிமிட்டி

அவனது பார்வையில் அத்தனை காதல். அப்படியே எனக்காக எல்லாவற்றையும் விட்டு மொத்தமாக இளகிவிடேன் என கெஞ்சியது அவள் மனது.

அடுத்த நொடி தந்தையின் பக்கமும் தாவியது மகளின் மனது.

“சாரிப்பா. நீங்க இல்லாம கல்யாணம் பண்ணிகிட்டேன்பா” சஞ்சனாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“அட இதுக்கு போய் யாரவது அழுவாங்களா?” என்று மகளை நிமிர்த்தி அவள் கண்களைத் துடைத்தார் ஹரிஹரன் “அப்பாவோட லவ் ஸ்டோரி முழுசா தெரியுமே உனக்குத்தான். என் பொண்ணு என்னை மாதிரிதானே இருப்பா” என்று சிரித்தவர் “இரு என் லவ் ஸ்டோரி கௌதமுக்கு சொல்வோம்” என தொடர்ந்தார்.

“எங்கப்பாவுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் கழிச்சு பிறந்த செல்ல மகன் நான். அவர் எங்க ஊரிலேயே ரொம்ப செல்வாக்கு உள்ள மனுஷன். நிறைய தான தர்மம் எல்லாம் பண்ணுவார். அவருக்கு அந்த ஊரிலே நிறைய மரியாதை உண்டு”

தாத்தாவை பற்றி தந்தை சொல்லும் போது பேத்தியின் முகத்தில் புன்னகை.

“நான் சரியா படிக்கலை. பிசினஸ் பண்ணிட்டு இருந்தேனே தவிர, நான் வீட்டுக்கு அடங்காத தறுதலையாத்தான் இருந்தேன். பல பொண்ணுகளை லவ் பண்ணி இருக்கேன். நான் கடைசியா லவ் பண்ண பொண்ணு இவ அம்மா. அவளுக்கும் என்னை ரொம்ப பிடிச்சது. ஆனா பாரு அவளுக்கு அவ வீட்டிலே கல்யாணம் நிச்சியம் பண்ணிட்டாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி நாள், நடு ராத்திரி யாருக்கும் தெரியாம சுவரேறி குதிச்சு, அவ வீடு புகுந்து அவளைத் தூக்கி, மறுநாள் காலையிலே கோவிலிலே வெச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” என்று சிரித்தார் தந்தை.

“சூப்பர் அங்கிள் கையை குடுங்க” கெளதம் சிரித்துக் கொண்டே அவர் கை குலுக்கினான்.

“எங்க அப்பாவுக்கு அப்போ என் பேர்லே ரொம்ப வருத்தம்பா. . ஆனா வெளியிலே எதையும் காட்டிக்கலை. என்னாலே அவர் கௌரவம் ரொம்ப கெட்டுப் போச்சு. ஆனாலும் எங்க ரெண்டு பேரையும் ஒரு வார்த்தை கூட கேட்காம, அப்படியே ஏத்துக்கிட்டார். ஆனா ஒரு விஷயம் சத்தியம். நாம செய்யற எந்தத் தப்பும் வீணாக போறதே இல்லை. நாம அதை ஒரு கட்டத்திலே உணர்ந்து அதுக்கு பரிகாரமாவது பண்ணனும். இல்லேன்னா ஏதாவது ஒரு ரூபத்திலே அது நம்ம கிட்டேயே திரும்ப வந்திடுது கெளதம் ” சொன்ன ஹரிஹரனின் குரல் இறங்கியே போயிருந்தது.

இப்போது கௌதமின் மனதிற்குள் நந்தா வந்து போனான்.

“எக்ஸ்கியூஸ் மீ அங்கிள். இப்போ ஆன்லைன்லே ஒரு இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு எனக்கு. நான் முடிச்சிட்டு வந்திடறேன். நீங்க குளிச்சு சாப்பிடுங்க” என சட்டென விலகினான் கெளதம் சித்தார்த்.

அவன் அந்த கடிதத்தையும் மருத்துவ அறிக்கையையும் பார்த்தானா இல்லையா என்னும் கேள்விக்கு மட்டும் பதிலே கிடைக்கவில்லை அவளுக்கு.

என்னதான் நடந்தது? எதற்கு இந்த திடீர் திருமணம்? கேட்கத்தான் விழைந்தது தந்தையின் உள்ளம். ஆனால் அதை சொல்லும் நிலையில்தான் மகள் இல்லை.

“எங்கள் திருமணத்தை வைத்து நந்தாவின் மரணத்தையும் அப்படி ஒன்று நிகழ்ந்து விட்டால் அடுத்த நிமிடம் நிகழ்ந்து விடக் கூடிய கௌதமின் மரணத்தையும் தடுத்து வைத்திருக்கேன். அல்லது சற்றே தள்ளிப் போட்டாவது வைத்திருக்கிறேன்” என்று சொல்லிக் கொள்ள இயலவில்லை அவளால்.

“நீங்க தப்பா நினைச்சுக்காதீங்கபா. எந்த சூழ்நிலையிலே எங்க கல்யாணம் நடந்ததுன்னு நீங்க புரிஞ்சுக்கற காலம் வரும் போது நான் கண்டிப்பா சொல்றேன்பா” என்றாள் அவர் எண்ணத்தை புரிந்து கொண்ட மகள் “உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன். நீங்க குளிச்சிட்டு வாங்க” என விலகினாள் அவள்.

அன்று இரவு வரை அவன் அந்த கடிதத்தை பார்த்தானா இல்லையா என்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. அதை அவனிடம் கேட்கும் தைரியமும் அவளுக்கு இல்லை.

மறுநாள்

புதிதாக திருமணம் செய்து கொண்ட அந்த இரண்டு மனங்களுக்கிடையிலும் ஆயிரம் கேள்விகளும் ஆயிரம் பதில்களும் வெளி வராமல் தேங்கி இருந்தாலும் அவனுடைய பிறந்தநாளை முத்தங்களாலேயே துவக்கி இருந்தாள் சஞ்சனா.

“நம்ம மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷன்க்கு உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிடு. ரொம்ப கிராண்ட் ஃபங்க்ஷன் ஏற்பாடு பண்ணி இருக்கேன்” நேற்றே சொல்லி இருந்தான் அவன்.

நேரம் காலை ஏழு மணி.

“இதெல்லாம் பிடிச்சிருக்கா பாரு” அவள் அன்று காலையில் அணிந்து கொள்வதற்கு மாலையில் அணிந்து கொள்வதற்கு என தனித்தனியாக உடைகள், நகைகள் என எல்லாவற்றையும் அவள் கண் முன்னே அடுக்கி வைத்துவிட்டு அவள் முகம் பார்த்து கண் சிமிட்டினான் கெளதம்.

இதையெல்லாம் எப்போது தேர்ந்தெடுத்தான், எப்படி வரழைத்தான் என்பதெல்லாம் அவளுக்கு புரியவே இல்லை.

“எதுக்கு கெளதம் இவ்வளவு?”

“எதுக்கா? அது சரி.” என்றான் அவளை ஏற இறங்கப் பார்த்தபடி. “நீ இன்னும் உன் பொசிஷன் என்னன்னு புரிஞ்சுக்கவே இல்லை. யூ ஆர் மிசஸ் கெளதம் சித்தார்த். அதை இன்னைக்கு நான் எல்லாருக்கும் அறிவிக்கப் போறேன். அதோட ஜி.எஸ் ஹாஸ்பிடல்ஸ் ஓட இன்னொரு டைரக்டரா உன்னை அறிவிக்கப் போறேன். அதைப் புரிஞ்சு நடந்துக்கோ சஞ்சனா”

“கெளதம்..”

“உனக்கு ட்ரெஸ் பண்ணி விட பியூட்டிஷியன் வர சொல்லி இருக்கேன். சோ பீ ரெடி. அண்ட் இன்னைக்கு லஞ்சுக்கு நிறைய கெஸ்ட்ஸ் கூப்பிட்டு இருக்கேன். அவங்க முன்னாடி நம்ம கல்யாணம் ரிஜிஸ்டர் பண்ணப் போறேன். அதுக்கு அப்புறம் உன்னை நிறைய பேருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். எல்லாரையும் கவனமா தெரிஞ்சு வெச்சுக்கோ சரியா?”

எதுவுமே பேசாமல் தலை அசைத்தாள் சஞ்சனா. அவன் எதையோ முடிவு செய்து விட்டு அதை நோக்கி வேகமாக நகர்ந்து செல்வதைப் போலவே தோன்றியது அவளுக்கு.

“உன்னையும் நந்தாவையும் எல்லாவற்றிலும் இருந்து காப்பாற்றி விட நினைக்கிறேன். கொஞ்சம் ஒத்துழைக்க மாட்டாயா கெளதம்?” அவள் உள்ளுக்குள் அங்கலாய்க்க

“அண்ட் இந்த சாரி உங்க ‘வரலக்ஷ்மி அத்தை’ வரும்போது கட்டிக்க. அவங்க எப்படியும் ஈவினிங் தானே வருவாங்க” என்று மெல்ல மெல்ல பார்வையை நிமிர்த்தி அவள் முகம் பார்த்தான் கெளதம்..

‘நான் அவர்களை அழைத்ததை அதற்குள் யூகித்து விட்டானா இவன்?’ ஒரு ஆழ் மூச்சு அவளிடம்.

“கெளதம்” தயக்கத்துடன் தொடர்ந்தாள் சஞ்சனா “அவங்க ரெண்டு பேரும் உங்க பிறந்தநாளைக்கு வருஷா வருஷம் வருவாங்கதானே கெளதம். அதுதான் இந்த வருஷமும் வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அதான் வரச் சொல்லி இருக்கேன். நீங்க வேண்டாம்னு நினைச்சா, நான் அவங்ககிட்டே வர வேண்டாம்னு சொல்லிடறேன் கெளதம்” என்றாள் ஸ்ருதி இறங்கிய குரலில்.

“நோ.. நோ.. நோ.. வரட்டும். சொல்லப் போனா வரணும். கண்டிப்பா வரணும். இந்த வருஷம் அவங்க வந்தே ஆகணும்.” என்றான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டு.

அவன் முகம் படிக்க முடியவில்லை அவளுக்கு.

“கௌ.. கௌதம.. லெட்டர் படிச்சீங்களா?” தாங்க முடியாமல் கேட்டும் விட்டாள்.

மெல்லத் திரும்பி அவள் முகத்தை நேராகப் பார்த்தான் அந்த ராக்ஷசன்.

“எஸ் எஸ் படிச்சேனே. உன் கையெழுத்து மணி மணியா அழகா இருக்கு” என்று வெகு இயல்பாக அவள் கன்னம் தட்டிவிட்டு “நீ ரெடியாகு” என அறையை விட்டு வெளியேறினான் கெளதம் சித்தார்த்.

காலை பத்து மணி. இரண்டு பெரிய ரோஜாப் பூ மாலைகள் அந்தப் பெரிய கூடத்தின் நடுவில் இருந்த பெரிய மேஜையில் வீற்றிருக்க இவர்கள் திருமணத்தை பதிவு செய்வதற்காக பதிவாளர் வந்து அங்கே காத்திருந்தார்.

அவனது கம்பீரத்தை இரு மடங்காகக்கிக் காட்டும் சந்தன நிற ஷெர்வானி உடையில் அவளெதிரே வந்து நின்று, அவளது அலங்காரத்தை பார்த்து திருப்தியாக புன்னகைத்துக் கொண்டவனை விட்டு எத்தனை முயன்றும் பார்வையை விலக்கிக் கொள்ள இயலவில்லை அவளால்.

உள்ளுக்குள் எரிச்சலையும் வலியையும் கொடுத்துக் கொண்டிருக்கும் அவனது தீக்காயங்களின் தன்மையை நன்றாக அறிவாள் அவள்.

அதையும் மீறி யாருமே இல்லாமல் நடந்து விட்ட அவர்கள் திருமணத்தை எல்லார் முன்னிலையிலும் பிரகடனப் படுத்தும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறான் என்பது நன்றாகவே புரிந்தது அவளுக்கு.

“கம் லெட்ஸ் கோ” அவளோடு கரம் கோர்த்துக் கொண்டு நடந்தவன் மாடியிலிருந்து கூடத்துக்குள் இறங்கும் அந்த பெரிய படிகளில் கம்பீரமாக இறங்கினான்.

ஒரு பேரரசனின் பட்டத்து ராணியாக அவள் மாறியிருக்கிறாள் எனும் உணர்வே அந்த கூடத்தில் கூடியிருந்த கூட்டத்தை பார்த்ததும்தான் வந்தது அவளுக்கு.

சீரான தாளத்துடன் கைத்தட்டல்கள் அரங்கேற அவள் கரம் கோர்த்துக் கொண்டு ஒவ்வொரு படியாக இறங்கினான் கெளதம் சித்தார்த். கேமரா வெளிச்சங்கள் அவர்களை சில நிமிடங்கள் விடவே இல்லை.

ஒரே நாளில் எப்படி இத்தனை கூட்டத்தை அழைத்தான் என்பதே அவளுக்கு மிகப் பெரிய வியப்பு.

அவளது தந்தை அவர்கள் அருகிருக்க வந்திருந்த அத்தனை பேரின் கைத்தட்டல்களுடன் அவர்கள் திருமண பதிவிற்கான கையெழுத்தை போட்டு விட்டு அங்கிருந்த ரோஜா மாலையை எடுத்து அவளுக்கு சூட்டினான்.

என்னதான் தன்னை கம்பீரமானவன் என்று வெளியில் காட்டிக் கொண்டாலும், அரக்கனாக வெளிப்படுத்திக் கொண்டாலும் அவள் அவனுக்கு மாலையை சூட்டிய போது அவளது காதலன் கண்களில் எழுந்த குழந்தைத் தனமான பரவசத்தை கண்டிப்பாக படித்துக் கொண்டாள் சஞ்சனா.

‘இதுதான் உன்னுடைய சுயரூபம். இதற்கே திரும்பி விடேன் கெளதம்.’ அவளது மானசீக கெஞ்சல்கள் அவனது காதில் விழுந்தால்தானே.

அங்கே வந்திருந்த அந்த மருத்தவமனையின் பங்குதார்கள் அனைவர் முன்னிலையிலும் இவளையும் ஒரு நிர்வாகி என அறிமுகப் படுத்தினான். அதற்கு தேவையான சட்டப் பூர்வமான நடைமுறைகளை கூட துவக்கி இருந்தான் கெளதம் சித்தார்த்.

அவனது காரியதரிசி தாரிணியும் வந்திருந்தாள் விழாவுக்கு. அவளை அழைத்து சஞ்சனாவுக்கு அறிமுகப் படுத்தினான் கெளதம்.

அவளை அவ்வபோது மருத்துவமனையில் பார்த்திருந்தாலும் அவளது நேரடியான அறிமுகம் இப்போதுதான். அவளது முகத்தில் இருந்த தெளிவான பாவமும், நேர்த்தியான பேச்சும் முதல் பார்வையிலேயே பிடித்திருந்தது சஞ்சனாவுக்கு.

“ஷீ இஸ் தாரிணி. நானே இல்லைனா கூட ஐ மீன் நான் ஊருக்கு எங்கேயாவது போயிருந்தா கூட ரெண்டு மூணு நாள் நான் இல்லாமலே என்னுடைய வேலைகள் எல்லாத்தையும் தனியா மேனேஜ் பண்ணிடுவாங்க தாரிணி ” என முடித்தான்.

அவளுடன் கைக்குலுக்கினாள் சஞ்சனா.

“ஸோ” என்றான் கெளதம் “நானும் சஞ்சனாவும் இனிமே வேறே வேறே இல்லை. இதுவரை என்கிட்டே எப்படி நடந்துக்கிடீங்களோ அதே மாதிரி சஞ்சனாகிட்டேயும் நடந்துப்பீங்கன்னு எதிர்ப்பார்கிறேன்”

“ஷூர் சார்” வாக்களித்தாள் அவள். சஞ்சனாவுக்குத்தான் அவனது வார்த்தைகளில் மனம் தளர்ந்து போனது.

“சீக்கிரமே ஒரு குட்டி சஞ்சனாவை எதிர்ப்பார்க்கிறோம் மேடம்”

“குட்டி சஞ்சனாவா?” கெளதம் கேட்க

“ஆமாம் சார். இப்போ நீங்க எங்க எல்லாருக்கும் ஒரு சக்கரவர்த்தியா இருக்கீங்க. ஆனா உங்களுக்குன்னு ஒரு பொண்ணு பிறந்திட்டான்னு வெச்சுக்கோங்களேன் அப்புறம் அவ உங்களுக்கு மகாராணியாகிடுவா”

“எனக்கு பொண்ணா?” கேள்வி கேட்டவனின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தாள் சஞ்சனா. ஆனால் அதில் இருந்த பாவத்துக்கான அர்த்தம் என்ன என்பதுதான் அவளுக்கு புரியவில்லை.

அதற்கும் ஏதாவது கணக்கு போட்டு வைத்திருக்கிறானா இந்த சதுரங்கக்காரன்? தெரியவில்லை.

கணக்கில்லா வாழ்த்துக்கள் அவர்கள் இருவர் மீதும் பொழிந்து அவர்களை நனைத்துக் கொண்டிருந்தன. இதில் ஒன்றாவது பலித்து அவர்கள் இருவரும் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட முடியாதா? நந்தா விஷயத்தில் கெளதம் ஒரு நல்ல முடிவை எடுத்து விட மாட்டானா என்று மட்டுமே ஏங்கிக் கிடந்தது அவள் மனது.

வந்திருந்த விருந்தினர்கள் எல்லாரும் மதிய உணவை முடித்துக் கொண்டு கிளம்பியிருந்தனர். வரலக்ஷ்மி அத்தை வரப் போகிறார் என்பதற்காகவே மதியத்தோடு இவர்களை எல்லாம் அனுப்பி விட்டானோ என்று தோன்றியது சஞ்சனாவுக்கு.

நேரம் மாலை ஆறு மணியை தொட்டிருக்க அவனுடைய வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர் நீலகண்டன் தம்பதியினர்.

“நாம கெளதம் வீட்டுக்குத் தானே போறோம்?” காலையில் இருந்து எண்பத்தி ஆறாவது முறையாக கேட்டிருந்தார் வரலக்ஷ்மி டாக்டர்.

“ஆமாம்மா அவன் வீட்டுக்குதான் போறோம். அவனுக்கு இன்னைக்கு பிறந்தநாள்.” சளைக்காமல் இதே பதிலை காலையில் இருந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார் நீலகண்டன்.

வழக்கம் போல அவனுக்கென ஏதேதோ பரிசுகளை அள்ளிக் கொண்டுதான் வந்திருந்தார் அவர்..

இங்கே வீட்டில் கெளதம் சஞ்சனா அவளது தந்தை மட்டுமே இருந்தனர். வேலையாட்களுக்கு கூட மதியத்துக்கு மேலே விடுப்பு கொடுத்து அனுப்பி இருந்தான் நமது சதுரங்க வீரன்.

அவர்கள் வந்ததும் வெட்டுவதற்காக கேக் தாயராக இருந்தது. அவன் வாங்கி வைத்திருந்த புடவையும் நகைகளையும் அணிந்து கொண்டாலும் மூச்சு விடக் கூட முடியாத அளவு படபட உணர்வு அவளை இழுத்து வைத்திருந்தது.

நிமிடத்துக்கு ஒரு முறை அவன் முகத்தையே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள் சஞ்சனா.

‘என்னதான் செய்யப் போகிறானாம் அவன்? இன்னும் சிறிது நேரத்தில் எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் தானே?’

எதுவுமே பெரிதாக நடந்து விடவில்லை எனும் பாவத்துடன் கூடத்து சோபாவில் அவளது தந்தை ஹரிஹரனுடன் அமர்ந்து அரசியல் நிகழ்வுகளை விவாதித்துக் கொண்டிருந்தான்.

அந்த மனிதருக்குத்தான் எதுவுமே தெரியாதே. அவர் வெகு இயல்பாக தனது மருமகனுடன் சுவாரஸ்யமாக விவாதித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்துக் கொண்டே அவர்களுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து இருந்தாள் சஞ்சனா.

அப்போது உள்ளே நுழைந்தனர் அவனை உருவாக்கிய பெற்றோர்கள். உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி மேலோங்க நிமிர்ந்தாள் சஞ்சனா.

ஹரிஹரன் எழுந்து அவர்களை நோக்கி நகர இப்போது ஒரு முறை திரும்பி சஞ்சனாவை பார்த்து கண் சிமிட்டினான் கெளதம்.

“கெளதம்” உள்ளே நுழையும் போதே ஒலித்த வரலக்ஷ்மியின் குரல் கேட்கிறதுதான் அவனுக்கு. அவனது முகத்தில் துளியிலும் துளி சலனமாவது ஏற்பட்டு விடாதா எனத் தேடிப் பார்க்கிறாள் சஞ்சனா. சத்தியமாய் அதற்கான அறிகுறியே இல்லை.

வெகு இயல்பாக அவர்களை நோக்கித் திரும்பியவன் “வாங்க வாங்க” என்றபடியே எழுந்து அவர்களை நோக்கி நடந்தான்.

“கெளதம்.. கெளதம்.. நீ எப்படி இருக்கே கெளதம்?” பரபரத்தார் அவனை ஓடி வந்து அணைத்துக் கொண்ட வரலக்ஷ்மி டாக்டர். அவனை மட்டும்தான் அவருக்கு தெளிவாக அடையாளம் தெரிந்தது அங்கே.

“நான் நல்லா இருக்கேன் வரலக்ஷ்மி டாக்டர்” உணர்வுகள் எதுவுமே காட்டாத முகத்துடன் புன்னகைத்தான் அவர் உருவாக்கிய அவரது மகன்.

“கெளதம்” மெல்ல அழைத்தார் அவனை விட்டு பார்வையை அகற்றாத நீலகண்டன்.

“ஆங்.. நீலகண்டன் சார். எப்படி இருக்கீங்க?” உள்ளம் கொள்ளை கொள்ளும் ஒரு புன்னகையுடன் அவர் கரம் பற்றி குலுக்கினான் கெளதம் சித்தார்த்.

கொஞ்சம் திகைத்து போனார் நீலகண்டன். எல்லா விவரங்களும் கௌதமுக்கு தெரியுமா தெரியாதா எனும் கேள்வி தாங்கிய பார்வையுடன் அவர் சஞ்சனாவின் பக்கம் திரும்ப அவள் ஆம் என்பதாகவே கண் அசைத்தாள்.

‘தெரிந்துமா என்னை அவன் அப்பா என்று அழைக்கவில்லை?’ யோசனைகள் அவரை அழுத்த

“கெளதம்.. கெளதம்.. நீ என் பையன் கெளதம். நீ என் ரத்தம் கெளதம். நான்தான் உன்னை உருவாக்கினேன் கெளதம். இது யாருக்குமே தெரியாது நான் நான் மறைச்சு மறைச்சு வெச்சிட்டேன் கெளதம் கெளதம். நீ என்னை அம்மான்னு சொல்லேன்.” அவனது கன்னம் வருடி தலை கோதி கை பிடித்து முத்தமிட்டு கெஞ்சிக் கொண்டிருந்தார் வரலக்ஷ்மி.

அவருக்கு மனநலம் கொஞ்சம் பாதிக்கப் பட்டிருக்கிறது என்பது நன்றாக புரிகிறது கௌதமுக்கு. அதற்கு காரணம் நந்தா என்பதும் அவனுக்கு நன்றாகவே புரிகிறது. இருந்தாலும் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அவன்.

“கெளதம் என்னை அம்மான்னு சொல்லேன் ப்ளீஸ்..” அவர் இன்னுமாக கெஞ்சிக் கொண்டே இருக்க

“வரலக்ஷ்மி டாக்டர், சின்ன வயசில் இருந்து நான் கேக் வெட்டும் போது முதல் பீஸ் உங்களுக்குத்தான் கொடுப்பேன். வாங்க வாங்க எனக்கு ஹேப்பி பர்த்டே பாடுங்க வாங்க” என வெகு சாதாரணமாக அவரின் தோள்களை அணைத்துக் கொண்டு நடந்தானே பார்க்கவேண்டும்.

மூச்சு மட்டுமே வந்து கொண்டிருக்க சஞ்சனாவினுள்ளே இருந்த மற்ற அனைத்து அணுக்களும் செத்து போய் விட்டிருந்தது.

அங்கே நின்றிருந்த ஹரிஹரனுக்கு எதுவுமே புரியவில்லை. பின்னால் எல்லா விவரங்களையும் சொல்கிறேன் என்பதாக தலை அசைத்தார் நீலகண்டன்.

“கெளதம் ஒரே ஒரு தடவை அம்மான்னு சொல்லு கெளதம்” வரலக்ஷ்மி கேட்க சஞ்சனாவின் கண்களிலேயே களுக்கென நீர் கட்டிக் கொண்டது.

ராக்ஷசன். அரக்கன், கொடூரன், கிராதகன் இன்னும் என்னனென்ன பெயர்கள் சொல்லி அவனை அழைக்க என்பது அவளுக்கே புரியவில்லை.

அவரை அந்த மேஜையின் அருகே கொண்டு நிறுத்தியவன் “வரலக்ஷ்மி டாக்டர்” என்றான் நிதானமாக “நாம இப்போ கேக் வெட்டலாமா?”

“கெளதம்” அருகே வந்தார் நீலகண்டன்.

“ஆங் நீலகண்டன் சர். யூ நோ சின்ன வயசிலே வரலக்ஷ்மி டாக்டர்தான் எனக்கு மேகங்களை ஃப்ரெண்டாக்கி விட்டாங்க. இன்னைக்கு வரைக்கும் நானும் கிலௌட்சும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்” என்றபடியே கேக்கை வெட்டலானான் கெளதம் சித்தார்த்.

அவனுக்கு அவரை அப்பா என்று அழைக்கும் எண்ணம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டிருந்தது அவருக்கு .கேக்கை வெட்டி முதல் துண்டை எடுத்து வரலக்ஷ்மிக்கு ஊட்டி விட்டான் கெளதம்.

சிலையாகி விட்டதைப் போலவே நின்றிருந்தாள் சஞ்சனா.

“கெளதம் என்னை அம்மான்னு சொல்லு கெளதம்” வரலக்ஷ்மி இன்னொரு முறை சொல்ல

“அத்தை நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க முதலிலே” மனம் தாங்கமால் அருகில் வந்து வந்து விட்டிருந்தாள் சஞ்சனா.

“இல்ல இல்ல பொண்ணே. இவன் கெளதம். என் பையன்” விடவில்லை அவர்.

“நான் உங்க பையன் இல்லை வரலக்ஷ்மி டாக்டர். உங்க பையன் பேரு “நந்தா”

அந்தப் பெயரை அவன் அழுத்தம் திருத்தமாக உச்சரித்த போது அவனது முகத்தில் இருந்த பாவத்தின் அர்த்தத்தை அங்கே இருந்த சஞ்சனாவால் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்திருந்தது.

“நந்தா.. ஆங்.. ஆமாம்.. நந்தா என் பையன்.... அவன் காணாம போயிட்டான் கெளதம். ஆமாம் கெளதம். நீ அவனை தேடிக் குடு கெளதம். ஆமாம் கெளதம் நீ அவனை தேடிக் குடு கெளதம்..ப்ளீஸ்.. கெளதம்..நந்தா கெளதம்..” படபடபடவென பேசியவர் அப்படியே மயங்கி கௌதமின் மீதே சரிந்திருந்தார்.

அவரைத் அப்படியே தாங்கிக் கொண்ட அந்த மகனின் முகத்தில் அப்போது கூட சலனமில்லை என்பதை தாங்கிக் கொள்ளவே இயலவில்லை சஞ்சனாவால்.

சஞ்சனா அவருக்கு அவசரமாக முதலுதவிகளை செய்ய, வெகு இயல்பாக ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுக்கும் அவளது கணவனை மனித வர்கத்தில் சேர்ப்பதா வேண்டாமா என்பதே பெரிய யோசனையாக இருந்தது அவளுக்கு..

முதலுதவிகளுக்கு பிறகும் அவருக்கு நினைவு திரும்பாமல் போக அவரை ஏற்றிக் கொண்ட ஆம்புலன்ஸ் மருத்துவமனை நோக்கி பறந்து கொண்டிருந்தது.

நீலகண்டன், ஹரிஹரன் ஆம்புலன்ஸில் கிளம்பி விட இவள் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் அவள் முன்னால் வந்து நின்றான் கெளதம். நிமிர்ந்தாள் அவள்.

“ஸோ? மேடம் டி.என் ஏ டெஸ்ட் எல்லாம் எடுத்து ரொம்ப கஷ்டப் பட்டிருக்கீங்க போலிருக்கே?” மெல்லக் கீறினான் கெளதம்.

பதில் பேசாமல் தனது பையின் ஜிப்பை மூடினாள் அவள்.

“நான் கெளதம் சித்தார்த்” என்று அவள் முகம் பார்த்து அழுத்தம் திருத்தமாக சொன்னான் “இதிலே இந்த சித்தார்த் எங்க அப்பாவோட பெயர். அது மட்டும்தான் எங்க அப்பாவோட பெயர். அவர் எங்க அம்மா சரஸ்வதியோட கணவர். அண்டர்ஸ்டுட்?”

அவன் கண்களில் தெரிந்ததே அதன் பெயர்தான் எரிமலையா என்ன?

சில நொடிகள் அங்கே கனத்த மௌனம்.

“ஸோ? இந்த விஷயம் தெரிஞ்சவுடனே நான் இந்த சினிமாவிலே எல்லாம் வர மாதிரி அம்மா செண்டிமெண்ட்லே மாட்டி அப்படியே கண்ணீர் விட்டு, அப்புறம் அப்படியே நீ நினைச்ச மாதிரி...” என்று நிறுத்தியவன் குனிந்து அவள் கண்களுக்குள் பார்த்தான்.

“நான் கெளதம் சித்தார்த்! நீங்க நினைச்சது எதுவும் நடக்காது டாக்டர் மேடம்”

அவள் உடல் முழுவதும் ஒரு கலவர அலை ஓடி முடிந்தது.

“அதுக்கு மேலே சொல்லணும்னா அவங்க என் அம்மாவை ஏமாத்தி இருக்காங்க. அவங்க குழந்தையான என்னை எங்க அம்மா வயித்திலே வெச்சு அவங்களை புத்திசாலித்தனமா ஏமாத்தி இருக்காங்க. இட்ஸ் அ கிரைம். டூ யூ நோ தட்?” உச்சக் கட்டத்தில் எகிறிய அவனது குரலில் மிதமிஞ்சிய ஆத்திரத்தை தவிர வேறே ஒன்றுமே இல்லை.

“கெளதம். அது உங்க அம்மாவுக்காக அவங்க செஞ்சது கெளதம். இது வரைக்கும் அவங்க உங்ககிட்டே எந்த உரிமையும் எடுத்துக்கலை. அதுவும் உங்க அம்மாவுக்காகத் தான்”

அத்தையை விட்டுக் கொடுக்க முடியாமல் பேசினாள் சஞ்சனா. அவள் சொல்வது உண்மைதான் என்பது அவனது உள்ளுணர்வுக்கும் புரிந்துதான் இருக்க வேண்டும். இருந்தாலும் பாய்ந்தான்

“நான்..சென்ஸ். எப்படி மாத்தி மாத்தி சொன்னாலும் ஏமாத்தினது ஏமாத்தினதுதான். அண்ட் எனக்கு அம்மான்னா அது எங்க எங்க சரஸ்வதி அம்மா மட்டும்தான். அதை யாராலும் மாத்த முடியாது புரிஞ்சதா”

கரும் பாறையாய் இறுகி நிற்பவனை அவள் திகைப்புடன் பார்த்திருக்க

“ஸோ அவங்களுக்கும் எனக்கும் நடுவில் எந்த பந்தமும் இல்லை. அதனாலே நான் நந்தா மேலே இரக்கம் காட்டுவேன்னு நீ நினைக்கறதிலே எந்த அர்த்தமும் இல்லை. அண்டர்ஸ்டுட்?” என அவள் விழிகளுக்கு முன்னால் நீண்டது கெளதம் சித்தார்த்தின் ஆள்காட்டி விரல்.

தொடரும்
உங்கள் கருத்துகளை இந்தத் திரியில் தெரிவியுங்கள் தோழமைகளே!

நீ அறியாயோ முகிலினமே கருத்துக்கள்
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
நீ அறியாயோ முகிலினமே 16



என்னை கடந்து செல்லும் போதெல்லாம் முத்த வரி கட்டச் சொல்லும் வரிச் சாவடியாய் நான்.

முறைத்துக் கொண்டேனும் நின்று வரி கட்டி செல்லும் வாகன ஒட்டியாய் நீ.




எதுவுமே பேசாமல் மருத்துவமனை நோக்கி கிளம்பி விட்டிருந்தாள் சஞ்சனா, அதே நேரத்தில் இங்கே மடிக்கணினியின் முன்னால் அமர்ந்திருந்தான் கெளதம் சித்தார்த்.

சில நிமிடங்களில் நந்தா அடைத்து வைக்கப் பட்டிருக்கும் அந்த அறையில்

“கெளதம் சித்தார்த்!” எதிரொலித்தது அவன் குரல். “உங்க அம்மாவுக்கு என்ன ஆச்சு தெரியுமாடா. கெளதம் கௌதம்னு புலம்பியே மயக்கம் போட்டுட்டாங்க. இப்போ நினைவே இல்லை. அவங்களுக்கு நான் பையனாம்” அவனிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது கௌதமுக்கு.

அவன் பதற்றத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என்று தோன்றியது கௌதமுக்கு.

பல வித மாற்றங்கள் எழுந்தன நந்தாவின் முகத்தில். ஆனால் அவனது உடல் மொழியிலிருந்தும் முக பாவத்தில் இருந்தும் இந்த விஷயம் அவனுக்கு முன்பே தெரியும் என்றே தோன்றியது கௌதமுக்கு.

“ஸோ? இந்த விஷயம் உனக்கு முன்னாடியே தெரியுமா? ஆங்?”

அவன் நறுக்கத் தெரித்தார் போல் உண்மையை கேட்க வேறு பக்கம் திரும்பிக் கொண்டான் நந்தா.

“ச்சை.. “ என்று வெறுப்பை மொத்தமாக உமிழ்ந்தான் கெளதம். “அந்த வெறுப்புதானடா உனக்கு என் மேலே. நான் உன் இடத்துக்கு வந்திடுவேன் அப்படிங்கிற அந்த வன்மம் தானா? தப்பே இல்லை. உன்னை கொன்னு போடறதிலே தப்பே இல்லை”

வெறி பிடித்தவன் போல் கத்திவிட்டு காட்சியை துண்டித்து விட்டு இருக்கையின் பின்னால் சாய்ந்தான் கெளதம் சித்தார்த்.

நேரம் நள்ளிரவை தாண்டிக் கொண்டிருந்தது. சஞ்சனா இன்னும் வீட்டுக்கு வந்திருக்கவில்லை. வரலக்ஷ்மி அவனது மருத்துவமனையிலேயேதான் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவர் நினைவில்லாமல் இருக்கிறார் எனும் செய்தியும் அவனை எட்டி இருந்தது.

ஒரு நாள் கடந்திருந்த நிலையில் அன்று மதியம் வீட்டுக்கு வந்திருந்தாள் சஞ்சனா. அவள் வந்த நேரத்தில் எதுவுமே நடக்கவில்லை என்பதைப் போன்றதொரு பாவத்துடன் அவனது அறை உணவு மேஜை மீதிருந்த பலவகை உணவு வகைகளை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் கெளதம் சித்தார்த்.

பசியும் உறக்கமில்லா சோர்வும் அவளை அழுத்துவதை அவளைப் பார்த்ததுமே கண்டு கொண்டான் அவன்.

“வாங்க வாங்க மேடம். இப்படி உட்காருங்க சாப்பிடலாம்” தனது பக்கத்தில் இருந்த இன்னொரு இருக்கையை காட்டினான்.

“எனக்கு வேண்டாம் கெளதம்” சொன்னாலும் அவன் கோபத்தில் நந்தாவை எதுவும் செய்து விட்டானோ எனும் பயம் அவளை ஆடக் கொண்டது. வரலக்ஷ்மி பற்றிய கவலையில் நந்தா மனதை விட்டு சற்று பின்னே சென்று விட்டானோ?

வழக்கம் போல் அவளது தவிப்பான பார்வையை படித்தான் கெளதம்.

“கெளதம் சொன்னா சொன்னதுதான். உனக்குத் தெரியாம நான் எந்த பெரிய முடிவும் எடுக்க மாட்டேன்” என்றபடியே மேஜை மீதிருந்த இனிப்பை ரசித்து சுவைக்கலானான் கெளதம்.

பதில் எதுவுமே சொல்லாமல் பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள் அவள்.

சில நிமிடங்கள் கழித்து வந்தவள், தண்ணீரை அருந்தி விட்டு நேராக கட்டிலுக்கு சென்று படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.

“சாப்பிட்டு தூங்கு சஞ்சனா. உன் முகம் பார்த்தாலே நீ ரொம்ப நேரமா சாப்பிடலைன்னு புரியுது.”

“எஸ் நேத்து நைட்லேர்ந்து சாப்பிடலை கெளதம்” அவள் சாதரணமாக சொல்ல அதை தாங்கிக் கொள்ளவே இயலாதவனாக சுரீரென பொங்கினான் அவன்.

“ஹேய்.. என்ன உண்ணா விரதமா? அதை வெச்சு என்னை மிரட்டலாமன்னு பிளானா?”

“அப்படி எல்லாம் இல்லை கெளதம்” எழுந்து அமர்ந்தாள் “எனக்கு சாப்பிடணும்னு தோணும் போது நான் கண்டிப்பா சாப்பிடுவேன். உங்களை எல்லாம் மிரட்ட எல்லாம் மாட்டேன் கெளதம். பிகாஸ் ஐ லவ் யூ” சொல்லிவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டாள்.

அவள் சொன்ன எல்லாவற்றையும் விட அந்த லவ் யூ அவனை என்னவோ செய்தது. அதில் அவளது ஆதங்கம் மொத்தமும் கலந்திருந்தது போலவே இருந்தது.

மாலையில் உறக்கம் கலைந்து எழுந்தாள் அவள். அடுத்து சில நிமிடங்கள் கடக்க முகம் கழுவி தயாராகி மருத்துவமனை நோக்கி கிளம்பியிருந்தாள். அவள் இன்னமும் எதுவும் சாப்பிடவில்லை என்பது புரிந்தாலும் அவன் எதுவும் சொல்லாமல் தனது வேலையை பார்த்துக் கொண்டிருக்க

“லவ் யூ கெளதம். நான் ஹாஸ்பிடல் போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்திருந்தாள் அவன் மனைவி.

அவள் திரும்பி வரும்போது நேரம் பதினோரு மணியை தொட்டிருந்தது. முகத்தில் அப்படி ஒரு சோர்வு. உடை மாற்றிக் கொண்டு வந்து நீரை அருந்திக் கொண்டிருந்தவள் அருகில் வந்து நின்றான் கெளதம் சித்தார்த்.

“சாப்பிட்டியா சஞ்சனா?”

“லவ் யூ கெளதம்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தவளின் கரம் பிடித்து இழுத்து தனதருகில் நிறுத்திக் கொண்டான்.

“என்னடி நினைச்சிட்டு இருக்கே உன் மனசிலே?” சீற முயன்றான் தனது காதலியைப் பார்த்து.

“லவ் யூ கெளதம்” அவள் சற்றே உறுதியுடன் சொல்ல இப்போது இன்னும் கொஞ்சம் ஏறியது அவன் கோபம்.

“ஸோ? உங்க அருமை அத்தை வ..ர..ல..ஷ்..மிக்காகவும் அவங்க பையன் நந்தவுக்காகவும் மேடம் சாப்பிடாம என்னை பழி வாங்கறீங்க?”

“லவ் யூ கௌதம்” அவள் மறுபடியும் சொன்னாள்.

அந்த வார்த்தையில்தான் கோப எரிமலையின் உச்சியில் ஏறி நின்றிருந்தான் கெளதம் சித்தார்த். அவளது கன்னங்களை பிடித்து முகத்தை தனதருகில் இழுத்து அவளது கண்களுக்குள் பார்த்தான்.

“உன்னை வளர்த்த உன் அத்தையை கொஞ்சம் பரிதவிக்க வெச்சதுக்கே உனக்கு என்னை பழி வாங்கணும்னு தோணுதே அப்போ.....” என அவன் சொன்ன வார்த்தைகளில் பகீர் மாற்றம் சஞ்சனாவின் முகத்தில்.

பழைய நினைவுகள் இருவரிடத்திலும்.

சிறு வயது முதலே இவன் கண்களில் கண்ணீர் வந்த சந்தர்ப்பங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.! அந்த கருப்பு நாளில் கூட இவனுக்கு கண்ணீர் வரவில்லை. அந்த நாளின் நினைவுகள் இருவரையும் அழுத்தின.

அதே நேரத்தில் நந்தாவின் எண்ணங்களும் அதே புள்ளியில் இருந்தன.

சஞ்சனா கௌதமின் மருத்துவமனையில் வேலைப் பார்ப்பதையும் அவனது சதுரங்க ஆட்டத்தை காண பத்து நாட்கள் சென்று விட்டு வந்ததையும் நந்தாவால் ஜீரணித்துக் கொள்ளவே இயலவில்லை.

சில நாட்களில் கௌதமை விட்டு விலகி நான் மேல் படிப்புக்கு அமெரிக்காவுக்கு சென்று விடுவேன் என்ற அவளது சமாதானத்தையும் நந்தாவால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.

அதற்கும் மேலாக வரலக்ஷ்மி எதற்காக ஒவ்வொரு கௌதமின் பிறந்த நாளுக்கும் அவனைக் காண செல்கிறார் எனும் கேள்வியும் அவனை உறுத்திக் கொண்டே இருக்க அவனது தேடுதலுக்கு விடையாக அவன் கண்ணில் பட்டுத் தொலைத்தது அந்த மருத்துவ அறிக்கை.

கெளதம் பிறக்கும் நேரத்தில் எதற்கும் இருக்கட்டும் என்று எல்லா விவரங்களையும் வைத்து வரலக்ஷ்மி தயாரித்து வைத்திருந்த மருத்துவ அறிக்கை. ஒரு மருத்துவ நண்பனின் உதவியுடன் அதில் இருக்கும் விவரங்கள் என்னனென என்பதை முழுவதுமாக புரிந்து கொண்டான் நந்தா.

அதன் பிறகு கெளதம் தனக்கு எல்லா விதத்திலேயும் போட்டியாக வந்து விடுவானோ எனும் எண்ணம் அவனது தலையை ஆக்கிரமித்தது.

சஞ்சனா ஒரு வேளை கௌதமை கைக்காட்டி விட்டால் வரலக்ஷ்மி தனது மகனுக்கு அவளைக் கொடுத்து விட மாட்டாரா? சொந்த மகனை விட வளர்ப்பு மகன் முக்கியமாக இருப்பானா என்ன? நீலகண்டனும் அந்த வழியில் தானே செல்வார்?

அதன் பிறகு எனக்கு அம்மா அப்பா மனைவி என எதுவுமே கிடையாதா? நான் அநாதையா? அவனது எண்ணங்கள் பல விதமாக சுழன்றன.

வரலக்ஷ்மி அப்படி எல்லாம் எப்போதுமே நினைத்தது இல்லை என்பது இன்று வரை புரியவில்லை நந்தாவுக்கு. மொத்ததில் எல்லார் மீதும் நம்பிக்கை போனது. எப்படியாவது கௌதமை அழித்து விட முடியாதா என்றே யோசிக்கலானான்.

நமது எண்ணங்களே நமது செயல்களையும் வாழ்க்கையையும் வடிவமைகின்றன என்பது எத்தனை உண்மை.

ஆதித்யா!

அவன் கெளதம் வீட்டில் வேலைப் பார்த்த ஓட்டுனரின் மகன். அவனுக்கு ஒரு தங்கையும் உண்டு. அந்த ஓட்டுனரின் மரணத்திற்கு பிறகு, தந்தை தாய் இருவரும் இல்லாமல் நின்ற அவரது இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து ஆளாக்கியது இவனது அன்னை சரஸ்வதி.

குழத்தை வரம் இல்லாமல் பல ஆண்டுகள் தவித்தார் ஆயிற்றே அவர். கண்ணெதிரே பெற்றோரரை இழந்து நிற்கும் இரண்டு குழந்தைகளை நிர்கதியாக விட்டு விட முடியுமா என்ன அவரால்?

கௌதமின் மனதில் வடுவாய் பதிந்து நிற்கிறதே அன்றைய தினம் ஆதித்யாவின் தங்கையின் திருமணம். நான்கு மாதங்களுக்கு முன்னான நாள் அது.

அவளது திருமணத்தை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தார் சரஸ்வதி. தனது சொந்த மகளின் திருமணத்தை நடத்துவது போலவே அத்தனை மகிழ்ச்சியாய் செய்து கொண்டிருந்தார் சரஸ்வதி.

அந்த சதுரங்க போட்டிகளில் கெளதமுடன் இருந்து அவனை மீட்டெடுத்தவள் என்ற எண்ணத்தில் சஞ்சனாவின் மீது நிறையவே அபிமானம் வந்திருந்தது சரஸ்வதிக்கு.

அந்தப் போட்டிகள் முடிந்து கிட்டதட்ட நான்கு மாதங்கள் கடந்திருந்த நேரம் அது.

அந்த போட்டிகள் நடக்கும் போது கௌதமும் சஞ்சனாவும் பேசிய பழகிய விதத்தை வைத்து அவள்தான் கௌதமுக்கு பொருத்தம் என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவர்.

“சஞ்சனா நீ இந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும். நீ ஏதாவது காரணம் சொல்லி வராம இருந்திடலாம்னு மட்டும் நினைக்காதே. அப்படி பண்ணேன்னா உன்னோட சரஸ்வதி மேம் ரொம்ப வருத்தப் படுவேன். நான் உன்னை எதிர்ப்பார்த்திட்டே இருப்பேன். கண்டிப்பா வந்திடனும்” கோவையில் அவள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று நேரில் அழைத்திருந்தார் சரஸ்வதி.

அந்த சதுரங்க போட்டிகள் நடந்து முடிந்த பிறகு அவள் கௌதமை சந்தித்து இருக்கவில்லை. அவன் தனது காதலை சொன்ன பிறகு, நாசூக்காக விலகிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வெளிநாட்டில் சென்று படிப்பதற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்து இருந்தாள் அவள்.

எதனால் அவள் திருமணதிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று அவனது அன்னை நினைத்தார் என்று இந்த நாள் வரை யோசித்து யோசித்து பார்க்கிறான் கெளதம். இது வரை பதில் கிடைத்ததில்லை.

அவள் அன்று வந்திருக்கவில்லை என்றால் இவனால் இன்று வாழ்ந்து கொண்டிருந்ததிருக்க முடியாதே. அவள் வந்தது துரதிர்ஷ்டத்தில் வந்த அதிர்ஷ்டமா? தான் இன்று வாழ்ந்து கொண்டிருப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? அவனுக்கே தெரியவில்லை.

கோவையில் அவர்கள் மருத்துவமனையில் அவள் கவனிக்க வேண்டிய நோயாளிகளை எல்லாம் கவனித்து விட்டு முதல் நாள் இரவு முழுவதும் பயணித்து காலையில் சென்னை வந்து சேர்ந்திருந்தாள் அவள். இரவு முழுவதும் உறக்கம் இல்லை என்பதை அவளது முகமே சொல்லியது.

அவள் அந்தத் திருமணத்திற்கு செல்வதில் கூட விருப்பமே இல்லை நந்தாவுக்கு. அவள் பிடிவாதமாக கிளம்ப அவளுடனே ஒரு காவல் போலவே கிளம்பியிருந்தான் நந்தா.

மண்டபத்தின் வெளியே கௌதமின் பி.எம்.டபிள்யூ வை பார்த்தபோதே எரிச்சல் மண்டியது நந்தாவுக்கு.

அவர்கள் இருவரும் ஒன்றாக வருவதை சற்றே தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம் அவர்கள் ஜோடியைப் பார்த்து இவனுக்குள் கொதிப்பலைகள் எழுந்ததா என்ன?

“இல்லவே இல்லை” என்று கண்டிப்பாக சத்தியம் செய்ய முடியும் கௌதமால். அந்த நிமிடம் வரை வெகு இயல்பாகத்தான் இருந்தான் அவன்.

சஞ்சனாவை அவன் தனது சுவாசமாக நினைத்திருந்த போதிலும் ஒரு பெண்ணின் விருப்பத்தை மீறி அவளை தன்னவளாக்கி கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்தது இல்லை கெளதம். அப்படி அவனை வளர்க்கவும் இல்லை சரஸ்வதி.

அவள் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதில் துளியும் விருப்பம் இல்லை நந்தாவுக்கு என்பதை அவனது உடல் மொழியும் முக பாவமுமே அறிவித்துக் கொண்டிருந்தது.

“வா வா வா சஞ்சனா” அவளை வாசலுக்கு வந்து வரவேற்றார் சரஸ்வதி. “இது யாரும்மா?”

“இது என் அத்தைப் பையன் நந்தா மேம்” அறிமுகப் படுத்தி வைத்தாள் அவனை. அதற்கு மேல் அவனைப் பற்றி வேறெதுவும் சொல்லவில்லை அவள்.

“உட்காருங்கமா ரெண்டு பேரும். கெளதம் எங்கே போனான்னு பார்க்கிறேன்” என நகர்ந்தார் அவர். அந்த நிமிடம் வரை அவளைத் தனது மருமகளாகவே மனதில் நிறுத்தி இருந்தார் போலும்.

“இவங்கதான் கெளதம் அம்மாவா ?”

“எஸ் நந்தா” புன்னகை முகமாக சொன்னாள் சஞ்சனா.

“அது ஏன் உன்னைப் பார்த்து இவ்வளவு கொழையறாங்க. கடுப்பா இருக்கு” நந்தாவும் சஞ்சனாவும் பேசிக் கொள்வது, அவர்கள் பின்னால் வந்த கௌதமின் செவிகளில் தெளிவாக விழுந்தது.

‘இவனுக்கு ஏன் கடுப்பாக இருக்கிறதாம்?’ இவனுக்குள்ளே சுறுசுறுவென ஏறுவதற்குள் அவளே பேசியிருந்தாள்.

“உனக்கு ஏன் கடுப்பாகுது? அவங்க எங்க சரஸ்வதி மேம். எங்களுக்கெல்லாம் அவன்களை அவ்வளவு பிடிக்கும். அவங்களோட பத்து நிமிஷம் பேசினாலே உனக்கும் அவங்களை பிடிச்சிடும். ரொம்ப நல்லவங்க” என்றாள் அவள்.

இப்போது இவன் அவர்கள் முன்னால் சென்று நின்றால் நந்தாவின் எரிச்சல் இன்னமும் அதிகமாகும் என்பது புரிந்துதான் இருந்தது கௌதமுக்கு. அதற்காக அவளிடம் பேசாமல் எல்லாம் இருந்து விட முடியுமா என்ன கௌதமால்?

கைகளை தனது பேன்ட் பாக்கெட்டுக்குள் விட்டுக் கொண்டு நடந்தவன் அவர்கள் முன்னால் சென்று நின்று புன்னகைத்தான்

“ஸோ?” சஞ்சனா தி கிரேட் கைனகாலிஜிஸ்ட் இஸ் ஹியர். ஆங்?”

முன்னால் நிற்பவரின் முகத்தை அப்படியே பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடியின் தன்மையுடன் அவனது புன்னகை முகத்தை அப்படியே தானும் பிரதிபலித்தாள் சஞ்சனா.

“ஹாய் கெளதம். நலமா?” என்றாள் மலர்ச்சியுடன். “பார்த்து ரொம்ப நாள் ஆச்சு”

“எஸ் சஞ்சனா. ரொ..ம்..ப.. நாள் ஆச்சு” இவனது ‘ரொ..ம்..ப’ எரிச்சலை கொடுத்தது நந்தாவுக்கு.

அது அவளது அபிமான சதுரங்க வீரன் அவன் என்ற காரணத்தால் எழுந்த மலர்ச்சியா அல்லது வேறே எதுவும் காரணமா என்றெல்லாம் அப்போது ஆராயத் தோன்றவில்லை கௌதமுக்கு.

ஆனால் அந்த வேலையைத்தான் செய்து கொண்டிருந்தான் நந்தா என்பது தெள்ளத் தெளிவாக புரிந்திருந்தது கௌதமுக்கு. அவள் முகத்தில் இருந்த சந்தோஷ பாவத்துக்கு நேர் எதிர்பதமான பாவம் வந்திருந்தது நந்தாவின் முகத்தில்.

“ஹாய் நந்தா. ஹவ் ஆர் யூ?” இவனது நலம் விசாரிப்புக்கு ஒரு வெறுமையான தலையசைப்பை மட்டுமே கொடுத்தான் நந்தா.

“நீ அழிந்து போகவே மாட்டாயா?” இப்படி ஒரு எண்ணம்தான் கௌதமை பார்த்ததும் நந்தாவின் மனதிற்குள் எழுந்தது. அதை அவனது முகமும் கொஞ்சம் பிரதிபலிக்க அதை நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது அந்த சதுரங்க வீரனால்.

ஏதோ ஒன்று தவறாக நடக்கப் போகிறதோ என்று சொன்னது அவனது உள்ளுணர்வு. சட்டென சஞ்சனாவிடம் விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தான் அவன்.

ஆதித்யாவின் தங்கையின் திருமணம் முடிந்திருக்க, உணவுக் கூடத்தை நோக்கி நடந்தனர் சஞ்சனாவும் நந்தாவும்.

இருவருமே ஜோடியாக நடக்க எதிர்ப்பட்டார் சரஸ்வதி. அவளது முகம்தான் அவரின் புன்னகைக்கான விசை என்பதை என்று சொல்வதைப் போலவே மொத்தமாக மலர்ந்து நின்றது அவர் முகம்.

“வா சஞ்சனா. சாப்பிடலாம் வா. கெளதம் கூட வெயிட் பண்றான் அங்கே” அவள் கரம் பிடித்துக் கொண்டே அவளுடன் நடந்தார் சரஸ்வதி. அவர்கள் உணவுக் கூடத்தை அடைய அதற்குள் அங்கே சாப்பிடத் தயாராக அமர்ந்திருந்தான் கெளதம் சித்தார்த்.

அன்னையை பார்த்ததும் அழகாய் புன்னகைத்தான் மகன். அருகில் வந்து அமர்ந்து கொள் என்று அன்னைக்கு அவன் கண் ஜாடை காட்ட, அதை புரிந்து கொண்ட போதிலும் அவர் சஞ்சனாவின் பக்கம் திரும்பினார்.

“போ..ம்மா.. போய் கெளதம் பக்கத்திலே உட்கார்ந்து சாப்பிடு போ” மனதில் இருந்த ஆசை தந்த உந்துதலில் அவர் சொல்லி விட ,

“சரஸ்வதி மேடம் “ உடனே எழுந்தது நந்தாவின் நெருப்புக் குரல் “நான் அவளோட அத்தை பையன். எனக்கும் அவளுக்கும்தான் கல்யாணம்ன்னு ஏற்கனவே முடிவாகியிருக்கு. நீங்க அதை தெரிஞ்சுக்க வேண்டிய காட்டாயத்திலே இருக்கீங்கன்னு நினைக்கிறேன்”

“நிஜமாவா சஞ்சனா?” என அவர் அவளைப் பார்க்க

“ஆமாம் மேம்” என்றாள் அவள்.

நல்ல பசியில் இருக்கும் நேரத்தில் வாயின் அருகே கொண்டு சென்ற உணவை யாரோ தட்டி விட்டு விட்ட பாவம் வந்து நின்றது சரஸ்வதியின் முகத்தில். அவரது முக வாட்டத்தை கவனித்து “அ.ம்..மா” என கெளதம் குரல் கொடுக்க அதற்குள்

“எங்க ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் எப்படி. அதைச் சொல்லுங்க” வேண்டுமென்றே கேட்டான் நந்தா.

ஒரு நிமிடம் அவரை வருத்தப்படுத்தி பார்க்கவே அவன் விழைந்தான் என்றே சொல்ல வேண்டும்.

சரஸ்வதி அருகருகே நின்றிருந்த இருவரையும் சில நொடிகள் மாற்றிப் மாற்றி பார்த்தார். அவருக்குள் சொல்ல முடியாத அளவுக்கு ஆதங்கம் பொங்கிக் கொண்டிருந்தது மட்டும் உண்மை.

“என்ன மேடம் எப்படி இருக்கு எங்க ஜோடி?” விடவில்லை நந்தா

“ஜோடிப் பொருத்தம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா நீதான் அவளை விட உயரம் கொஞ்சம் கம்மி. பொண்ணை விட மாப்பிளை உயரம் கம்மியா இருந்தா நல்லா இருக்குமா நீயே சொல்லு?” கேட்டே விட்டார் அவர்.

ஒரு முறை சஞ்சனாவுமே திரும்பி அருகில் நின்றவனின் உயரத்துடன் தனது உயரத்தை ஒப்பிட்டுக் கொண்டாள். நந்தா சஞ்சனாவை விட சற்றே உயரம் குறைவுதான் என்பது உண்மைதான். அது அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்தவுடன் தெரியத்தான் செய்தது.

நந்தாவின் முகத்தில் கூட்டத்தின் நடுவில் உடையை இழந்த பாவம் வந்து நிற்க, அதற்குள்

“ம்..மா.. நீ இங்கே வந்து உட்காரு முதலிலே” எனக் குரல் கொடுத்திருந்தான் கெளதம் சித்தார்த்.

சரஸ்வதி அதற்கு மேல் எதுவுமே பேசாமல் கெளதமின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார். சஞ்சனாவும் நந்தாவும் கூட அதற்கு மேல் பேசாமல் சாப்பிட அமர்ந்து விட்டிருந்தனர்.

சில நிமடங்கள் கழித்து சாப்பிட்டு முடித்து விட்டு கெளதம் எழுந்து கை கழுவ செல்ல அதே நேரத்தில் சஞ்சனாவும் எழுந்தது அவர்கள் இருவருமே திட்டமிடாத செயல்.

கைகழுவிக் கொண்டு எதுவும் பேசிக் கொள்ளாமல் ஒன்றாக நடந்தார்கள் இருவரும். இயல்பாக சஞ்சனா கௌதமின் பக்கம் திரும்பி அவனை சற்றே பார்த்த அந்த நொடியில் நந்தா அவர்கள் முன்னே வந்து நிற்க, அனிச்சை செயலாய் சட்டென சொல்லி விட்டான் கெளதம்.

“சந்தேகமே வேண்டாம். நான் கண்டிப்பா உன்னோட உயரம்தான்”

சற்று நேரம் முன்னால் தனது அன்னையை சீண்டிய நந்தாவுக்கு பதிலடி கொடுக்க நினைத்ததா அவனது அடி மனது? அது அவனுக்கே புரியவில்லை.

அவன் சொல்லி முடிக்க தீயை மிதித்த பாவத்துடன் நின்றிருந்தான் நந்தா. அதன் பிறகு விறுவிறுவென சென்று கையை கழுவிக் கொண்டு, யாரிடமும் பேசாமல் தனது பின்னால் ஓடி வந்த சஞ்சனாவை கூட கண்டு கொள்ளாமல் காரை கிளப்பிக் கொண்டு பறந்திருந்தான் நந்தா.

அவன் செய்கை தந்த அவமானத்தில் உடல் கூசித்தான் போனது சஞ்சனாவுக்கு.

“கெளதம் ஆயிரம் பேசி இருக்கட்டும். இவனுக்கு கோபம் வந்தது நியாயமாகவே இருக்கட்டும். ஆனால் அதை அவன் கௌதமிடம் காட்டுவதில் கூட ஒரு அர்த்தம் இருக்கிறது. இத்தனை பேர் முன்னிலையில் என்னிடம் எதற்கு அவன் இப்படி நடந்து கொள்ள வேண்டுமாம்? அப்படி என்றால் நான் கௌதமின் உயரத்தை கணிக்கத் தான் நான் அவன் பக்கம் பார்த்தேன் என்று நினைக்கிறானா?”

மனம் ஆறவில்லை சஞ்சனாவுக்கு.

“அவன் போனா போகட்டும் விடு. நான் உன்னை டிராப் பண்றேன்” சொன்னான்தான் கெளதம்

“வேண்டாம் கெளதம்” என மறுத்தவள், அப்போது சென்னையில் இருந்த தனது தந்தையை அழைத்திருந்தாள்.

“ஏதோ வேலையிருக்குன்னு எங்கேயோ போயிட்டான்பா நந்தா. நீங்க என்னை வந்து பிக் அப் பண்ணிக்கறீங்களா?” என்றாள் அவள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டில் இருந்த இன்னொரு காரை எடுத்துக் கொண்டு திருமண மண்டபத்துக்கு வந்திருந்தார் தந்தை.

நலம் விசாரிப்புகள் உபசாரங்கள் முடிய அப்படியே கிளம்பி இருக்கலாம் இருவரும். அப்படி செய்திருந்தால் எல்லாம் சரியாக நடந்திருக்குமோ? கௌதமின் விதிதான் அவரை அப்படிக் கேட்க வைத்ததோ?

“கெளதம் நீ எப்போபா கோவை ரிடர்ன்?”

“இன்னைக்கு நைட் அங்கிள். கார்லே. நானும் அம்மாவும்”

“இந்தப் பொண்ணையும் கூட்டிட்டு போறியாபா” என்று கேட்டு விட்டார் அவர். நந்தா சற்று முன் நிகழ்த்திய கோப தாண்டவத்தை அவர் எங்கே அறிந்தார்.

“நேத்து நைட் எல்லா வேலையும் முடிச்சிட்டு. ஃபிளைட்லே எதுவும் டிக்கெட் இல்லைன்னு சொல்லி நடு ராத்திரி பஸ்லே கிளம்பி வந்திருக்கா. நைட் முழுக்க தூங்கலை. இன்னைக்கு மறுபடியும் பஸ்லேதான் போறாளாம். நான் நைட் டெல்லி கிளம்பணும் இல்லேன்னா நானே கோவையிலே டிராப் பண்ணிடுவேன்.”

“கண்டிப்பா அங்கிள். பி.எம்.டபிள்யூ. மேடம் நிம்மதியா தூங்கலாம்” என்றான் அவன்.

நந்தாவை நினைத்து மறுக்கவே நினைத்தாள் அவள்.

“நான் ஈவினிங் நீங்க கிளம்பறதுக்குள்ளே சொல்றேன் கெளதம்” சொல்லி இருந்தாள் அவள்.

நேரம் மாலை ஆறு மணியை தொட்டிருந்தது. நந்தா இன்னும் வீட்டுக்கு வரவில்லை. அவன் வந்தால் ஒரு வேளை தன்னை கோவைக்கு காரில் கொண்டு விடுவானோ எனும் எண்ணத்துடன் அழைத்த இவளது அழைப்புகளையும் துண்டித்துக் கொண்டே இருந்தான் அவன்.

நாளை மருத்துவமனையில் அவள் கவனிக்க வேண்டிய நோயாளிகள் காத்திருக்க கோவை சென்றே தீர வேண்டிய நிலை.

அதே நேரத்தில் நெடுஞ்சாலைகளில் கார் ஒட்டி பழக்கமும் இல்லை அவளுக்கு. அதுவும் இரவு நேரத்தில் அப்படித் தனியே காரை எடுத்துக் கொண்டு அத்தனை உசிதமாகப் படவில்லை அவளுக்கு. அதோடு அவளுக்கு ஆரம்பித்தது ஏனென்றே தெரியாத மெலிதான காய்ச்சல்.

நந்தாவை அழைத்து அழைத்து ஏமாந்து , ஒரு கட்டத்தில் அலுத்துப் போனவள் கெளதமுடன் செல்ல முடிவு செய்தாள்.

அதுதான் அவள் செய்த தவறோ?

தொடரும்
உங்கள் கருத்துகளை இந்தத் திரியில் தெரிவியுங்கள் தோழமைகளே!

நீ-அறியாயோ-முகிலனமே - கருத்துக்கள்
 
Last edited:

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
நீ அறியாயோ முகிலினமே 17



பிரளயம் நிகழ்ந்து வானம் பிளந்து என்னை அள்ளிப் போக விழையும் நேரத்திலும்

என் உயிர் மூடி என்னை அடைக்காத்து கொள்கிறது உன் முத்தக் கருவறை.


கிளம்பும் முன் எப்போதும் போல் தாத்தாவை வணங்கி விட்டுத்தான் கிளம்பினாள் அவள். அவரது முகத்தில் எப்போதும் இருக்கும் அழகான புன்னகை இன்று இல்லை. எத்தனை முயன்றாலும் நடக்கப் போவதை அவரால் தடுக்க முடியாது என்பதை உணர்ந்த ஞானி தானே அவர்.

“பத்திரமா போயிட்டு வா மா” என்றார் நிதானமாக. “அந்த ஆண்டவனும் நீ படிச்ச படிப்பும் உனக்கு எப்பவும் துணையா இருப்பாங்க”

அவர் சொன்னதன் பொருள் அப்போது புரியவில்லை அவளுக்கு.

கொஞ்சம் பாரம் ஏறிய மனதுடனே அவளுக்கு விடை கொடுத்தார் தாத்தா.

அவரது முகபாவம் அவளுக்கு குழப்பத்தை கொடுத்தாலும் கடமை அவளை அழைத்துக் கொண்டே இருந்தது. கிளம்புவதை எந்த வகையிலும் அவளால் தவிர்க்க முடியவில்லை.




அடுத்த சில மணி நேரத்தில் அவளது தந்தை அவளை கௌதமின் சென்னை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு டெல்லிக்கு கிளம்பி விட்டிருந்தார்.

அடுத்த சில மணி நேரத்தில் கோவை நோக்கி செல்ல ஆரம்பித்தனர் மூவரும். நேரம் இரவு பன்னிரெண்டை தாண்டி இருக்க சென்னையைத் தாண்டி நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது கௌதமின் பி.எம். டபிள்யூ

கொஞ்சம் பொறுமையாக யோசித்து இருக்கலாமோ நந்தா. சொல்லப் போனால் அவனது பொறுமையான அணுகுமுறை அவனுக்கு சஞ்சனாவை கூட பெற்றத் தந்திருக்கலாம்.

ஆனாலும் ஒரு சில விஷயங்களை இழக்கும் போது அல்லது இழந்து விடுவோமோ என்ற பயம் வரும்போது அதே போல தன்னம்பிக்கையை இழக்கும் போதும் அல்லது நம்மை சுற்றி இருப்பவர்களின் மீது இருக்கும் நம்பிக்கையை இழக்கும் போதும் அறிவு மரித்துப் போகிறது.

மனம் தனது போக்கில் தறிகெட்டு சிந்திக்கிறது. அப்படித்தான் ஆகிக் கொண்டிருந்தது நந்தாவின் நிலையும்.

எல்லாம் சரியாகதான் போய் கொண்டிருந்தது என்றாலும், சஞ்சனாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள் என்றாலும் அன்று கிளம்புவது உசிதம் அல்ல என்று கௌதமின் உள்ளுணர்வு அவனை எச்சரித்துக் கொண்டே இருந்தது.

அவனது மனப் பிரதேசத்தின் பிரத்தியேகக் குயில் ஒன்று இது வேண்டாம் இது வேண்டாம் எனக் கூவிக் கொண்டே இருந்தது. பொதுவாக உள்ளுணர்வுதான் அந்த சதுரங்க வீரனின் மிகப் பெரிய வழிகாட்டி.

அதை அதன் வார்த்தைகளை நிராகரித்தானே அதுதான் அவன் செய்த மிகப் பெரிய தவறா?

இப்படி ஒரு எண்ணம் எனக்குத் தோன்றுகிறது என்று சொல்லி இருந்தால் அவனது அன்னை கண்டிப்பாக கிளம்பியிருக்க மாட்டாரே. அவரிடம் சொல்லாததுதான் மிகப் பெரிய குற்றமா?

காரை செலுத்திக் கொண்டே கண் முன்னால் வானத்தில் இருந்த முகிலினங்களை பார்த்தான் கெளதம் சித்தார்த். அவைகள் அவனிடம் என்ன சொல்ல விழைந்தன என்பதெல்லாம் அப்போது அவனுக்கு புரியவில்லை.

காற்றினால் அலைக் கழிக்கப்பட்டு திசைக்கொன்றாய் கலைந்து சென்று அலைந்து கொண்டிருந்தன அவை.

சற்று முன் காய்ச்சல் அதிகமாகி இருக்க அதற்கான மருந்தை எடுத்துக் கொண்டிருந்தாள் அவள். நேற்றிரவு சரியாக உறங்காதது, மருந்தின் தாக்கம் இரண்டுமே சேர்ந்து அவளை அழுத்த அந்த சொகுசு காரின் பின் இருக்கையில் தன்னையும் அறியாத ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றிருந்தாள் சஞ்சனா.

அவளது கைப்பையின் அடியில் கிடந்த கைப்பேசி ஒலிக்கும் சத்தம் கூட அவளுக்கு கேட்கவில்லை.

அவனது அன்னை சரஸ்வதி காரின் முன் பக்கம் அவன் அருகில் அமர்ந்து அவனுடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டே வர, காரை ஒட்டிக் கொண்டிருந்தான் கெளதம் சித்தார்த்.

சில நிமிடங்கள் கடக்க தனக்குப் பிடித்த பாடல்களை கேட்க தனது காதில் ஹெட் ஃபோனை பொருத்திக் கொண்டார் அன்னை.

“போச்சு! இதை மாட்டிக்கிட்டியா நீ? இப்போ உனக்கு இனிமே இந்த உலகமே தெரியாதே. அப்படியே நீ வேறே உலகத்துக்கு போயிடுவியே” என்றான் அவர் நிஜமாகவே வேறொரு உலகத்துக்குப் போகப் போவதை அறியாத கெளதம் சித்தார்த்.

“அப்படி வேறே உலகத்துக்கு போனாலும் உன்னை விட மாட்டேன்டா. உனக்கே மறுபடியும் பொண்ணா வந்து பிறப்பேன்” எது செலுத்தியது என்று தெரியமால் சொல்லியும் விட்டார் ஹெட் போனை தாற்காலிகமாக காதிலிருந்து விலக்கிய அன்னை.

“அம்மா” அலறி விட்டான் இவன் “என்னமா பேசறே?”

“ஏன்டா இப்படி அலறுறே? நான் உனக்கு பொண்ணா பிறந்தா வளர்க்க மாட்டியா? விட்டுட்டு ஓடிடுவியா? அப்புறம் நான் என்னடா செய்வேன்?”

“அம்மா தயவு செய்து அந்த பேச்சை விடு. நீ பாட்டே கேளு. அதுதான் நல்லது” அப்போதைக்கு முடித்து வைத்தான் மகன்.

சஞ்சனா வீட்டை விட்டு கிளம்பி இரண்டு மணி நேரம் கழித்துத்தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் நந்தா.

“யாரைக் கேட்டு அவளை அந்த கெளதம் கூட அனுப்பினீங்க?” தனது அன்னை வரலக்ஷ்மியிடம் வெடித்ததான் அவன்.

“இப்போ என்னடா ஆச்சு? நல்லப் பையன்டா அவன்.” என்றார் வரலக்ஷ்மி. அந்த அன்னை அப்படி சொல்லாமல் இருந்தால் தானே வியப்பு.

“நல்ல பையனா.என்னை விட உங்களுக்கு அவன்தானே முக்கியம் பொறுக்கி நாய்” தன்னை மறந்து கத்தினான் நந்தா. எல்லாரும் தன்னை ஏமாற்றி விட்டதாகவே நினைத்தான்.

ஏதோ கௌதமும் சரஸ்வதியும் அவளைக் கடத்திக் கொண்டு சென்று விட்டதைப் போன்றதொரு வெறி பிறந்தது நந்தாவுக்கு. அவர்கள் அவளை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்வார்கள் எனும் பயம் வேறு.

அவளை நந்தா கைப்பேசியில் அழைத்துப் பார்க்க உறங்க ஆரம்பித்து இருந்தவள் அவனது அழைப்பை ஏற்கவில்லை.

“விட மாட்டேன் அவளை அவங்ககிட்டே விட மாட்டேன் எனக் கத்தியவன் அவனது அன்னை எத்தனை தடுத்தும் கேட்காமல் தனது டஸ்டரை கோவை நோக்கி செல்லும் சாலையில் பைத்தியம் பிடித்தவன் போல் செலுத்தலானான்.

காலையில் பார்த்த கௌதமின் காரும் அதன் எண்ணும் அவன் மனதில் ஓட அது எங்கேனும் கண்ணில் படுகிறதா என்று பார்த்தபடியே காரை செலுத்திக் கொண்டிருந்தான் அவன்,

அவனது எண்ணம் முழுவதும் கௌதமை அழித்து விட வேண்டும் என்ற அளவு வெறி மட்டுமே இருக்க அதுவே அவனை செலுத்திக் கொண்டிருந்தது.

நேரம் இரவு பன்னிரெண்டரையை தொட்டிருக்க அந்த நேரத்தில் விளையாட ஆரம்பித்தது கௌதமின் விதி.

நெடுஞ்சாலையில் வாகன நடமாட்டம் கூட குறைந்திருந்த அந்த நேரத்தில் ஏனென்றே தெரியாமல் வேகம் குறைந்தது அவனது கார், சற்றே சமாளித்து அதை அவன் சாலையோரம் கொண்டு சென்று நிறுத்தினான்.

சில நிமிடங்கள் முயன்ற பிறகும் காரில் என்ன பழுது என்பதை அவனால் கண்டு பிடிக்க முடியாமல் போனது.

அதே நேரத்தில் அவர்கள் இருந்த அந்த பகுதிக்கு அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்தது நந்தாவின் டஸ்டர்.

“இதுக்குதான் டிரைவரை கூட்டிட்டு வரலாம்ன்னு சொன்னேன். நீதான் நான் ஹை வேஸ்லே கார் ஓட்டி ரொம்ப நாள் ஆச்சுன்னு சொன்னே. இப்போ பாரு நடு ரோட்டிலே நிக்கறோம். உனக்கு செஸ் தவிர வேறே ஒண்ணுமே உருப்படியா தெரியாதுடா”

அம்மாவின் அர்ச்சனைக்கு சிரித்தபடியே இன்னொரு காரை கொண்டு வரச் சொல்வதற்காக கைப்பேசியை எடுத்தான் கெளதம் சித்தார்த்.

கார் நின்றது கூடத் தெரியாமல் அத்தனை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சஞ்சனா.

அவன் வேறு பக்கம் திரும்பி கைப்பேசியில் ஆழ்ந்திருந்த நேரத்தில் காதில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு பாடல்களை கேட்கலானார் சரஸ்வதி.

கவனம் முழுவதும் அந்த பாடலில் இருக்க இவன் கவனம் முழுவதும் கைப்பேசியில் இருக்க அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தது கண் மண் தெரியாத வேகத்தில் வந்துக் கொண்டிருந்த நந்தாவின் டஸ்டர்.

கவனக் குறைவுடனே அந்த நெடுஞ்சாலையின் நடுப்பகுதிக்கு சரஸ்வதி சென்று விட்ட நேரத்தில் தான் கௌதமின் கண்களில் விழுந்தது அந்த டஸ்டர். ஆனால் நந்தா இவர்கள் வாகனம் அங்கே ஓரத்தில் நிற்பதை கவனிக்கவில்லை.

கண்மூடித்தனமான வெறியுடன் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு சரஸ்வதியை நெருங்கும் போதுதான் யாரோ ஒரு பெண் சாலையின் நடுவில் வருவது தெரிந்தது. அது சரஸ்வதி என்பது அப்போது அவனுக்குத் தெரியவில்லை.

அவன் வந்த வேகத்தில் அவனால் உடனே வாகனத்தின் வேகத்தையும் குறைக்க இயலவில்லை.

“அ..ம்..மா” கெளதம் அலறிக் கொண்டு சரஸ்வதியை நோக்கி ஓடி வர, என்ன நடக்கிறது என்பதை கெளதம் உணர்வதற்குள், கெளதம் சரஸ்வதி என இருவரையும் தூக்கி அடித்து விட்டு சற்றே தள்ளிச் சென்று நின்றது நந்தனின் டஸ்டர்.

“அ..ம்,,மா..” என்று அலறிக் கொண்டே கீழே விழுந்த கௌதமின் பார்வையில் விழுந்தது அந்த டஸ்டரின் எண்.

சரஸ்வதி எங்கே என்று பார்வையால் தேடிய கௌதமால் தான் விழுந்த இடத்தை விட்டு அசையக் கூட இயலவில்லை. சற்றே தூரத்தில் சரஸ்வதி விழுந்து கிடப்பது மட்டும் புரிந்தது அவனுக்கு.

அவரிடம் அசைவுகள் இருப்பது மட்டும் அவனுக்குப் புரிய ஒரு வித நிம்மதி பிறந்தது அவனுக்கு. சஞ்சனாவை உதவிக்கு அழைக்க வென அவன் தனது கைப்பேசியை தேடினான்.

அவன் விழுந்த வேகத்தில் அப்போது கையிலருந்த அது எங்கே தெறித்து விழுந்தது என்பதே புரியவில்லை அவனுக்கு.

உடலின் எந்தெந்த பாகத்தில் காயம் என்று உணரக் கூட முடியாத அளவுக்கு பூதாகர வலி எடுக்க, அப்போது கீழே விழுந்தது யாரென்றே தெரியாமல் அவன் அருகில் ஓடி வந்த நந்தாவின் முகம் கௌதமை பார்த்தவுடன் மாறிப்போனது.

“நீயாடா? விழுந்தது நீ தானா?” ஒரு கிண்டலான பார்வை வந்திருந்தது அவனிடத்தில். சொல்லப் போனால் அவன் விழுந்து விட்டதில் ஒரு வித மகிழ்ச்சி வந்தது நந்தாவுக்கு என்றே சொல்ல வேண்டும்.

இத்தனை நாட்கள் அவனது எண்ணங்களில் ஊறி இருந்த வெறி அவனை ஆட்டி வைத்துக் கொண்டிருந்ததே என்ன செய்ய?

“நந்தா.. நந்தா.. எங்க அம்மா அங்கே இருக்காங்க அவங்களுக்கு என்னாச்சுன்னு பாரு ங்க... என்னாலே.. நகரக் கூட..”

“நகர முடியலையா? வெரி குட்” வாய் விட்டுச் சிரித்தான் நந்தா “காலையிலே நீ என்னை விட உயரம்னு சொன்னியே இப்போ நகரக் கூட முடியலையே”

சரஸ்வதியும் நகர முடியாத வேதனையில் இருக்க அரை மயக்கத்தில் கௌதமின் பக்கம் பார்த்துக் கொண்டே இருந்தார். அவர் கைப்பேசியும் அவர் வசம் இல்லை.

இருவரும் அப்படிக் கிடந்த இருந்த நிலையிலும் நந்தாவிடம் இரக்கம் வந்து விடவில்லை என்றால் அவன் மனதில் கௌதமின் மீது எத்தனை வன்மம் இருந்திருக்க வேண்டும் என்பதற்கு கணக்கில்லை.

வானத்தில் பரவிக் கிடந்த முகிலினங்கள் இங்குமங்கும் தெறித்து ஓட ஒன்றோடு ஒன்று மோதி பலமான இடி சத்தம் கேட்டது அங்கே.

அவனது சிரிப்பு கௌதமின் மனதில் அழுத்தமாக பதிய அந்த நேரத்தில் கௌதமின் மூச்சு முட்ட ஆரம்பித்தது.

“ந..ந்..தா.. காரிலே சஞ்சனா அவளைக் கூப்பி..டு.. என்னை வி..டு அம்மாவை மட்டும் காப்..பாத்து ப்ளீஸ் ”

“என்னாலே முடியாது. நீங்க எல்லாம் இருந்தா என்னாலே நிம்மதியா இருக்க முடியாது. நீதான்டா எனக்கு எல்லாத்துக்கும் போட்டி”

வெறி பிடித்தவன் போல சொன்னவனின் முகத்தை கெளதம் பார்த்த அந்த நேரத்தில் அவனது இதயத்தில் சுரீர் வலி ஏற்பட அவன் இழுத்த மூச்சு அப்படியே நின்று போக கௌதமின் தலை சரிந்து விட்டிருந்தது.

அங்கே மின்னல் வெடித்து இடி சத்தம் வானைப் பிளந்தது.

ஏதோ புரிந்ததைப் போல் அங்கே கிடந்த அம்மாவின் முகம் இன்னுமாக வெளிற அப்போதுதான் பயம் பற்றிக் கொண்டது நந்தாவுக்கு.

‘இறந்துவிட்டானா? நான் அவனை கொன்று விட்டேனா? அதற்கு மேல் அங்கே ஒரு நொடி கூட நிற்க விரும்பவில்லை.

சஞ்சனாவை கூட அழைக்காமல் சாலையில் அடுத்த வாகனம் வருவதற்குள் ஓடிச் சென்று தனது டஸ்டரை கிளப்பிக் கொண்டு பறந்திருந்தான்.

சில நிமிடங்கள் கடக்க எது உலுக்கியதோ திடுக்கென விழித்துக் கொண்டு சஞ்சனா.

சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியாமல் கார் கதவை திறந்து கொண்டு, மடியில் இருந்த கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் அவள். நல்ல வேளையாக திறக்கும் நிலையில் இருந்தது காரின் கதவு.

சாலையில் சூழ்ந்திருந்த இருட்டில் காரின் பானெட் திறந்திருக்க, அவர்கள் இருவரும் கண்ணில் படவில்லை அவளுக்கு.

அவள் குழப்பத்துடன் சுற்றி சுற்றிப் பார்த்த நிலையில் அப்போது சரேலென கடந்து சென்ற ஒரு வாகனத்தின் ஒளியில் கண்ணில் பட்டான் கீழே விழுந்து கிடந்த கெளதம்.

“கௌ..த.. ம்..” உச்சகட்ட அலறலுடன் அவனை நோக்கி ஓடினாள் சஞ்சனா. அசைவன்றி கிடந்தான் அவளையே உயிராக நினைத்து வாழ்ந்தவன்.

அவனது முகிலினத் தோழிகள் அவசரமாக விலகி முழு நிலவொளி அவன் மேல் விழ உதவினர். அவனுக்கு சுவாசம் இல்லை என்பது நன்றாகவே புரிந்தது அந்த மருத்துவருக்கு.

“கௌதம் என்னாச்சு கெளதம்? எழுந்திருங்க கெளதம்” அவனது தோள்களை பிடித்து உலுக்கினாள் அவள். சலமின்றிக் கிடந்தான் அவன். உயிர் உடைந்து போனாள் இவள்.

“முருகா” இறைவனை வாய் விட்டு அழைத்தாள் அவள். எத்தனை நேரமாக இப்படி கிடக்கிறான் என்பது தெரியவில்லையே.

அப்போதுதான் கண்ணில் பட்டார் சரஸ்வதி. அவர் அருகில் ஓடினாள் சஞ்சனா. ரத்த வெள்ளத்தில் கிடந்தார் அவர். உடனடியாக அவருக்கான முதலுதவிகளை செய்ய முயன்றாள் அவள்.

“கெ..ள..த..ம்.. பா..ரு..” அவர் அரை மயக்க்கத்தில் உதடசைக்க அவனருகில் ஓடினாள்

“கெளதம் எழுந்திருங்க கெளதம். நான் உங்க சஞ்சனா வந்திருக்கேன் கெளதம்” கதறல் வெடிக்க அதே நேரத்தில் அவன் என்னை விட்டு போக மாட்டான். நான் அழைத்தால் எப்படியும் எழுந்து விடுவான் என்றொரு அழுத்தமான நம்பிக்கை பிறந்தது அவளுக்கு .

கழுத்தில் கை வைத்து அவனது கரோடிட் துடிப்பை ஒரு முறை பரிசோதித்து விட்டு ஒரு முடிவுக்கு வந்தாள்

திடீரென துடிப்பை நிறுத்தி விடும் இதயங்களை செயல் பட வைக்கும் சி.பி.ஆர் சிகிச்சை முறையில் பயிற்சி பெற்றவள்தான் அவள்.

“ஓம் நம சிவாய ஓம் நம சிவாய” உதடுகள் முணுமுணுக்க, மல்லாந்து படுத்திருந்தவனின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.

தனது கைப்பேசியில் ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்து விட்டு அதன் ஸ்பீக்கரை உயிர்ப்பித்து தான் இருக்கும் இடத்தின் அடையாளங்களை சொல்லிக் கொண்டே தனது ஒரு உள்ளங்கையை அவனது மார்பு கூட்டின் மீது வைத்து தனது இன்னொரு கை விரல்களை அதனோடு கோர்த்துக் கொண்டு, தனது உள்ளங்கையின் பின் பகுதியால் முழு வேகத்துடன் அவனது நடு மார்பை அழுத்தலானாள் அந்த மருத்துவர்.

ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருக்க

“ஓம் நம் சிவாய ஓம் நம சிவாய” உதடுகள் அதையே சொல்லிக் கொண்டிருக்க தனது முழு சக்தியையும் திரட்டி அவனை உயிர்பிக்க முயன்று கொண்டிருந்தாள் அவள்.

உடலின் சக்தி குறைந்து கொண்டே இருந்த போதிலும் மயங்கி மயங்கி விழித்த போதிலும் மகன் பிழைக்க வேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே இருந்தது சரஸ்வதியினிடத்தில்.

“ஓம் நம் சிவாய ஓம் நம சிவாய” தொடர்ந்தாள் அவள், “கெளதம் நீங்க எப்பவும் என் கூட இருக்கணும் கெளதம். எழுந்திருங்க கெளதம்”

நிமிடத்துக்கு ஒன்று என்ற ரீதியில் வாகனங்கள் அவர்களை கடந்து சென்று கொண்டிருந்தாலும் யாரும் இவர்களை கவனித்ததாக தெரியவில்லை.

அவனது மார்புக் கூடு அவள் தந்த அழுத்தத்தில் இறங்கி இறங்கி ஏறியது. அவளின் உடல் வலு குறைவது போலத் தோன்றினாலும், ஏதோ ஒரு நமபிக்கையில் தன்னை மறுபடி மறுபடி மீட்டுக் கொண்டு அவனுக்குள் மறுபடியும் சுவாசத்தை புகுத்தி விடும் தனது முயற்சியை தொடர்ந்தாள் அவள்.

ஓம் நம் சிவாய ஓம் நம சிவாய” கால் மணி நேரம் இடை விடாத முயற்சி “கெளதம் எழுந்திருங்க கெளதம் ப்ளீஸ் கெளதம். நான் உங்க சஞ்சனா கெளதம்”

கிட்டத்தட்ட பதினைத்து நிமிடங்கள் கடந்திருக்க ஒரு கட்டத்தில் அவனது உடலில் ஒரு திடீர் குலுக்கல் எழ முழு வேகத்துடன் மார்புக் கூடு மேலுழும்ப அசைய ஆரம்பித்து இருந்தான் கெளதம். மூடியிருந்த அவனது இமைகளின் அடியினிலும் அசைவுகள் தெரிந்தன.
 
Last edited:

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
“ஓம் நம் சிவாய ஓம் நம சிவாய” அலறின அவள் உதடுகள். அதுதான் மறுபடியும் பிறந்தவனின் காதுகளில் முதலில் விழுந்தது.

“கெளதம் கெளதம் மூச்சு விடுங்க கெளதம். நீங்க பிழைச்சிட்டீங்க கெளதம். நான் உங்க சஞ்சனா கெளதம்” “கௌதம் மூச்சு விடுங்க கெளதம்.”

இமைகளுக்கடியில் கருமணிகள் அவசரமாக அலைந்தன.

“கெளதம் நீங்க எப்பவும் என் கூட இருக்கணும் கெளதம். மூச்சு விடுங்க கெளதம்” தனது அருகில் இருப்பது சஞ்சனா எனப் புரிகிறது அவனுக்கு.

“கெளதம் நீங்க பிழைச்சிட்டீங்க கெளதம்” குலுங்கி குலுங்கி அழுது கொண்டே அவன் கரத்தை பிடித்து அதில் மீண்டும் மீண்டும் முத்தமிட்டாள் அவள். “நீங்க என்னோட கெளதம்” மகிழ்ச்சியில் உடைந்து குலுங்கினாள் ஜெயித்து விட்ட அந்த மருத்துவர். அவனது நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து நிமிர்ந்தாள்.

மகன் பிழைத்த விட்டான் எனும் உண்மை சஞ்சனாவின் உடல் மொழியில் இருந்து புரிந்தது சரஸ்வதிக்கு. அவள் முத்தமிடுவதை பார்த்துக் கொண்டே உதடுகளில் சிறு புன்னகை வர, ஒரு பெரிய மூச்சிழுப்புடன் கண் மூடியிருந்தார் அன்னை.

அப்போது அங்கே வந்து நின்றது அவள் அழைப்பு விடுத்த ஆம்புலன்ஸ். அடுத்த சில நிமிடங்களில் அவன் அம்புலன்சினுள் ஏற்றப்பட பிராணவாயு செலுத்தப்பட ஆரம்பித்தது அவனுக்கு.

சரஸ்வதியும் உள்ளே ஏற்றப்பட அப்போது அவசரமாக கையில் எடுத்தாள் அதை. அவன் அவளுக்கு பரிசளித்த அந்த ஸ்டேதொஸ்கோப்பை. அது அப்போது அவளுக்கு சட்டென சொல்லியது அவளுக்காக அந்த இதயம் இன்னுமாக துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை.

அரை குறை மயக்கத்தில் அசைந்து கொண்டிருந்தான் கெளதம். அடுத்து சரஸ்வதியை நோக்கி இவள் திரும்ப அவர் இந்த பூமியில் இல்லை எனும் உண்மையை உணர்த்தியது அவரது நிலை.

“அம்..மா” கசங்கலாக அசைந்தன அவனது உதடுகள். அவனுடன் இணைக்கப் பட்ட ஈ.சி.ஜி திரை அவனது இதயத் துடிப்பின் வடிவங்களை காட்டிக் கொண்டிருந்தது.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் மருத்துவமனையை அடைத்த போதிலும், அவனுக்கு செய்த அதே முதலுதவிகளை அவருக்கும் சஞ்சனா செய்து கொண்டே இருந்த போதிலும் அவரை காப்பாற்ற இயலவில்லை.

உயிர் பிழைத்திருந்தாலும் இரண்டு கால்களிலும், கைகளிலும் என ஏற்பட்டிருந்த எலும்பு முறிவுகளில் கௌதமால் அசையக் கூட இயலவில்லை.

மறுநாள் காலையிலேயே அவளுக்கும் சற்றே பரிச்சயமான அவனது வக்கீலை அழைத்திருந்தாள் சஞ்சனா. இந்த செய்தி பெரிதாக ஊடங்கங்களில் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள் அவள். அவன் அதை விரும்ப மாட்டான் என்பது தெரியும் அவளுக்கு. இதனாலேயே இந்த செய்தி வரலட்சுமியை எட்டவில்லை. அதனால் அவர் வரவும் இல்லை.

உடல் சற்று தேறியவுடன் அவனது அம்மாவின் மரண செய்தி அவனை எட்டியது. அழவில்லை, துடிக்கவில்லை, துளிக் கூட கலங்கவில்லை அந்த மகன். பாறையாய் மாறிப் போயிருந்தான் என்றே சொல்ல வேண்டும்.

சஞ்சனா மற்றும் ஹரிஹரனின் உதவியுடன் சக்கர நாற்காலியில் இருந்து அன்னையின் இறுதிச் சடங்கை முடித்தான் கெளதம்.

“எனக்குத் தெரியலை கெளதம். நல்ல தூக்கத்திலே இருந்தேன். நான் எழுந்து வர்றதுக்குள்ளேயே ஆக்சிடென்ட் நடந்து கால் மணி நேரம் ஆகியிருக்கும்ன்னு நினைக்கிறேன். என்னாலே முடிஞ்சதை செய்தேன். ஆனாலும் இன்னும் கொஞ்சம் சீக்கிரம் ஹாஸ்பிடல் வந்திருந்தா அம்மா பிழைச்சு இருப்பாங்க கெளதம். “ சொன்னாள் சஞ்சனா.

அந்த விபத்து நடந்தது நடந்தது நந்தாவினால் என்பது அவளுக்குத் தெரியவில்லை. கௌதமும் இதுவரை அவளிடம் சொல்லவுமில்லை. அவளென்று இல்லை இன்று வரை இதை ஆதித்யா தவிர வேறே யாரிடமும் சொல்லவில்லை அவன். சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக தோன்றவில்லை.

விபத்து நடந்து இரண்டு மூன்று நாட்களளிலேயே கோவையில் இருக்கும் தனது மருத்துவமனைக்கு மாறியிருந்தான்.

துளிக் கூட கண்ணீர் வரவில்லை அவனுக்கு. சில நொடிகள் முன்னால் சிரித்து பேசிக் கொண்டிருந்த அம்மா திடீரென இல்லாமல் போனதை ஏற்க மறுத்தது அவனது மனது. வீடு வெறுமையை மட்டுமே தாங்கி நின்றது.

“நீங்க என்னோட கெளதம்” அப்போது சொன்னாளே அவள். அந்த நினைவுகளே இரண்டு மூன்று அறுவை சிகிச்சைக்கு பிறகும் அவனை எழுப்பி அமர வைத்தன.

அவன் உடல் நலம் சற்று தேறிய பிறகே மேல் படிப்புக்காக அமெரிக்காவுக்கு கிளம்பினாள் சஞ்சனா.

அதன் பிறகே தனிமை என்றால் என்னவென்று புரிய ஆரம்பித்தது, .எந்த போதையும் எப்போதும் பழக்கம் இல்லை. இசைக்குள் முழுகினான்.

அதே போல் தளர்ந்து விழும் நேரமெல்லாம் சஞ்சனாவின் காதலைத்தான் இறுக்கமாக பிடித்துக் கொண்டான். ஒவ்வொரு நாளும் அவளை அழைத்து லவ் யூ என்பான்.

சண்டையே போட்டாலும் அவளது நினைவுகளே அவனை கரை சேர்த்தது என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் ஜென்ம ஜென்மமாய் அவளுக்கு கடன் பட்டிருக்கிறான் கெளதம் சித்தார்த்.

இறுகிப் போய் கிடந்தவனின் மனதிற்குள் நந்தாவின் சிரிப்பு மட்டுமே அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தது. எத்தனை முயன்றும் அவனது அன்னை அலறிக் கொண்டு விழுந்த காட்சியை மறக்கவே முடியவில்லை.

அப்படி ஒரு கொடுமையை செய்தவன் உடனே உதவியிருந்தாலாவது என் அன்னை இன்று என்னுடன் இருந்திருப்பாள் தானே? உயிரில் தீ எரிந்தது கௌதமுக்கு.

“தனது எதிரில் மனிதர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போதும் தனது வன்மத்தை காட்ட ஒருவனால் முடிகிறது என்றால் அவனுக்கு இந்த பூமியில் வாழ தகுதி இருக்கிறதா என்ன?”

அப்போது துவங்கிய நந்தா மீதான் வன்மம் இன்று ஆல விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. இதற்கு மேல் அதை வெட்டி சாய்க்கும் வாய்ப்பு என்பது இல்லவே இல்லை.

அவனை சட்டத்திடம் ஒப்படைக்கும் எண்ணமும் வரவில்லை கௌதமுக்கு. அதற்கு சாட்சிகள் வேண்டும். அப்படியே எதாவது செய்து அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாலும் அது இவனது மனதின் ரணங்களை ஆற்றப் போவதில்லை.

அவனுக்கு தண்டனை என்றால் என்ன என்பதை காட்ட இவனால் மட்டுமே முடியும்.

இனி நந்தனுக்கு சஞ்சனா இல்லை. ஏன் நந்தனுக்கு இனி வாழ்கையே இல்லை என்று அந்த ஓய்வில் இருக்கும் நாட்களில் முடிவு செய்திருந்தான் கெளதம்.

அவன் லவ் யூ சஞ்சனா எனும் போதெல்லாம் நந்தனே சஞ்சனாவின் கண்களில் வந்து நிற்பான். அன்று என்ன இன்று வரை அந்த மிகப் பெரிய விபத்துக்கு காரணம் நந்தன் என்பதை அறியவில்லையே அவள்.

என்னதான் அவன் அன்று சாலையில் கிடந்த நிலையில் அவனுக்காக போராடினாலும். அவன் பிழைத்த பிறகு அத்தனை மகிழ்ந்து அவனை முத்தமிட்டிருந்தாலும் நந்தனையும் அத்தையையும் தாண்டி கௌதமை மணந்து விட முடியும் என அப்போதெல்லாம் தோன்றியது இல்லை சஞ்சனாவுக்கு.

என் நிலை தெரிந்தும் இவன் ஏன் என்னை துரத்துகிறான் எனும் கோபமே அவளுக்கு அப்போதெல்லாம் இருந்தது. அவனை விலக்கி வைக்கவே முயன்றவளை காலம் இப்போது வேறு விதத்தில் புரட்டிப் போட்டிருக்கிறது.

அந்த விபத்து நடந்த இடத்தை விட்டு உடனே ஓடிவிட்ட நந்தாவுக்கு பிரச்சனையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாகவே புரிய ஆரம்பித்தது. கௌதமின் அன்னை இறந்துவிட்டார் எனும் செய்தியும் அவனது நண்பர்கள் மூலம் அவனை எட்டி இருந்தது.

ஆனாலும் அந்த விபத்துக்கு காரணம் அவன்தான் என்பதை அவனது நண்பர்களிடம், ஏன் சுரேந்த்ரிடமே சொல்லியது இல்லையே அவன். அவன் நண்பர்களை பொறுத்தவரை நந்தா எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத சொக்கத் தங்கம்.

அவனது தனிமையான நேரங்களில் மட்டும் தான் ஒரு கொலைக்காரன் என அவனை புரட்டி எடுக்கும் அவனது மனசாட்சி.

அதனால் இந்த நான்கு மாதங்களாகவே தனிமையை மட்டும் தவிர்த்து, அன்னை தந்தை என வீட்டில் இருக்கும் எல்லாரையும் விட்டு மனதளவில் விலகி நண்பர்களுடனே சுற்றிக் கொண்டிருந்தான் நந்தா.

சஞ்சனா வெளிநாடு சென்று விட்டது அவனுக்குப் பெரிய நிம்மதி. உண்மைகள் எதுவும் தெரியாத நிலையில் அவனிடம் இயல்பாகவே இருந்தாள் சஞ்சனா.

அதே நேரத்தில் கெளதம் அவளிடம் உண்மைகளை சொல்லி விடுவானோ எனும் பயம் மட்டும் அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது. அவள் அழைக்கும் போதெல்லாம் ‘கெளதம் பேசினானா என்ன? என்பதை கேட்டுக் கொள்வான் அவன்

அதே நேரத்தில் அவர்கள் வீட்டில் அவன் செய்த இந்த வேலையை அவரது சக்தியால் உணர்ந்து கொண்டவர் தாத்தா ரங்கநாதன் மட்டுமே.

அது இன்று வரை தெரியவில்லை கௌதமுக்கு. அவர் யாரென்றே தெரியாமல் அவரை ஒரு முறை சந்தித்தும் இருக்கிறான் பேசியும் இருக்கிறான். அவரின் வார்த்தைகளில் வியந்தும் இருக்கிறான்.

அது ஒரு பக்கம் இருக்க இன்று வரை தான் நந்தாவை அடைத்து வைத்திருப்பதில் எந்த ஒரு வருத்தமும் இல்லை கௌதமுக்கு. தான் செய்வது குற்றம் என்ற எண்ணம் ஒரு துளியும் இல்லை அவனுக்கு .

இதோ இன்னும் நான்கைந்து நாட்கள். தன்னுடைய சொத்துகள் அத்தனையும் தனக்கு பிறகு சஞ்சனாவையே சேரும் என்பதை முழுவதுமாக உறுதி செய்து விட்டால் அதன் பிறகு நந்தாவின் முடிவை இவன் தீர்மானித்து விடுவான்.

அதே நேரத்தில் ஒரு கொலையை செய்து விட்டு அதன் பிறகு இந்த சமூகத்தில் ஒரு பெரிய அந்தஸ்தில் இருக்கும் இவனால் தலை நிமிர்ந்து நடமாட முடியாது என்பதும் புரிந்துதான் இருந்தது.

அதனால் நந்தாவின் முடிவுடன் கௌதமின் முடிவும் சேர்ந்தே வரும். அது உறுதி.

சுரேந்தர் நந்தாவை பற்றிய எல்லா விவரங்களையும் சேகரிக்கும் முழு பொறுப்பையும் சஞ்சனாவிடம் கொடுத்திருக்கிறான் என்றும் புரிந்தது கௌதமுக்கு. அதனால்தான் அவனது பக்கத்தில் இருந்து சில நாட்களாக எந்த அசைவும் இல்லை.

‘பொறுப்பை யார் ஏற்றுக் கொண்டாலும் வெற்றி கெளதம் சித்தார்த்துக்கு மட்டும்தான். அந்த வெற்றி மரணத்தின் ரூபத்தில் கூட வரலாம். அதையும் ஏற்றுக் கொள்ள தயாராகவே இருக்கிறான் இந்த கெளதம் சித்தார்த்!’

“நீங்க எல்லாரும் போய் எங்க வரலக்ஷ்மி டாக்டரை சீக்கிரம் வரச் சொல்றீங்களா?” சிறு வயதில் கெஞ்சியவன் உணர்வுகளை துடைத்து எரிந்து விட்டு அவரை வருத்தி இருக்கிறான்.

சென்ற வருடம் பார்த்ததை விட இந்த வருடம் நிறையவே இளைத்து தளர்ந்து போயிருக்கிறார்தான். அவரது கம்பீரம் மொத்தமாக காணாமல் போயிருக்கிறதுதான்.

சென்ற வருடம் வரை அவர் வந்ததும் அவரை ஓடிச் சென்று வரவேற்றிருக்கிறான். அவர் அருகில் அமர்ந்து நேரம் போவது தெரியாமல் பேசி இருக்கிறான்.

சரஸ்வதி இறந்த செய்தி வரலட்சுமியை எட்டவில்லை. அதனால் அவர் வரவும் இல்லை. அந்த செய்தி சென்ற மாதம்தான் அவருக்கு எட்டி இருக்க வேண்டும். அப்போது அவனை அழைத்து பேசியிருந்தார்கள் நீலகண்டனும் வரலக்ஷ்மியும். அப்போது வரை அவர்கள் இப்படி செய்திருப்பார்கள் என்று எண்ணக் கூட தோன்றவில்லை கௌதமுக்கு.

இப்போது அவரது உடல் நலமும் மன நலமும் குன்றி இருக்கும் நிலையில், அதுவும் அவரும் இவனுக்கு ஒரு அன்னை என்பது புரிந்த போதும், பிறந்தது முதலே அவன் பார்த்தேயிராத தந்தை எனும் உறவு கண் முன்னே வந்து நின்ற போதும் எந்த உணர்வையும் வெளிக்காட்டிகொள்ளவில்லை கெளதம் சித்தார்த் எனும் இந்த அரக்கன்.

அரக்கர்கள் உருவாகும் போது மிருகங்களை மனிதனாக மாற்றும் மனசாட்சி எனும் மாயப் பேயை கொன்று விட்டே உருவெடுக்கிறார்கள். இவன் தனது வாழக்கை அந்த கருப்பு இரவை ஒரு ஆயுதமாக்கி தனது மனசாட்சியை கொன்று விட்டான்.

மறுபடியும் அதை உயிர்ப்பிக்க அவனது காதலால் கூட இயலாது. அதை செய்வதற்கு இந்த பூமியில் வேறே யாரவது பிறந்துதான் வர வேண்டும்.

அதே நேரத்தில் அங்கே சுருண்டு கிடந்தான் நந்தா. கடந்த சில நாட்களாக இவன் கிடக்கும் இருட்டறையும் தனிமையும் அவனிடம் பல கேள்விகளை கேட்கத் தவறவில்லை

என்னதான் எல்லாரிடமும் நல்லவன் வேடம் போட்டுக் கொண்டு திரிந்தாலும் நீ ஒரு கொலைக்காரன்தான் என்று உயிரின் மீது கத்தி வீசியது மனசாட்சி.

அது சொல்வது எல்லாம் உண்மை என்று தெரிந்தாலும் அதை ஒப்புக்கொள்ளும் மனநிலைதான் அவனுக்கு இல்லை. எந்த நிலையிலும் கௌதமிடம் தோற்றுப் போகும் எண்ணமில்லை அவனுக்கு.

‘அந்தப் பெண் அலட்சியமாய் நடு சாலையில் வந்து நின்றால் நான் என்ன செய்வேனாம்? அவர் இறந்து போனதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது. என்னை இங்கே அடைத்து வைத்ததற்கு கௌதமுக்குத்தான் தண்டனை கிடைத்தாக வேண்டும். என்னை அடைத்து வைத்துவிட்டு சஞ்சனாவை திருமணம் செய்து கொண்டான் அந்த அரக்கன். அவன்தான் அழிய வேண்டும்’ பொருமிக் கொண்டான் தனக்குள்ளே.

இங்கே பழைய நினைவுகள் இருவரையுமே புரட்டி எடுத்து முடிக்க அவள் கண்களுக்குள் எரிக்கும் பார்வை பார்த்தான் கெளதம்.

“சொல்லு. உன்னை வளர்த்த உன் அத்தையை கொஞ்சம் பரிதவிக்க வெச்சதுக்கே உனக்கு என்னை பழி வாங்கணும்னு தோணுதே அப்போ என்னை வயத்திலே சுமந்து பெத்து எடுத்து உயிருக்குள்ளே வெச்சு வளர்த்த எங்க அம்மாவை நடு ரோட்டிலே காராலே அடிச்சு கொன்னானே நந்தா அவனை துண்டு துண்டா வெட்டி கழுகுக்கு போடணும்னு நான் நினைக்கறதிலே எதுவும் தப்பு இருக்கா சஞ்சனா?” ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாக உச்சரித்தான் கெளதம் சித்தார்த்.

அந்த வார்த்தைகள் அவளுக்கு புரிய வைத்த செய்தியிலும் அது தந்த அதிர்ச்சியிலும் அவளது விழிகள் பெரிதாக விரிய அதிலே நீர்த் துளிகள் சேர ஆரம்பித்தன.

“ந..ந்..தாவா கெளதம்?” நடுங்கியது அவள் குரல்.

“யெஸ் அன்னைக்கு நீ கார்லே தூங்கிட்டு இருந்தே. உனக்கு எதுவுமே தெரியாது. அவன் அனேகமா உன்னைத் தேடித்தான் நம்ம காரை துரத்தி இருக்கணும் அவன். அசுர வேகத்திலே வந்த அவன் காராலே எங்க ரெண்டு பேரையும் தூக்கிட்டு வந்து என் முன்னாடி நின்னான். எங்க அம்மாவை கொஞ்சம் காப்பாத்துடான்னு கெஞ்சறேன். இடுப்பிலே கையை வெச்சுகிட்டு என்னைப் பார்த்து சிரிச்சான் பார் அந்த படுபாவி...”

அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் கொழுந்து விட்டு எரியும் தீயின் தன்மையில் இருந்தது. “அவன் கொஞ்சம் உதவியிருந்தா இன்னைக்கு எங்க அம்மா இருந்திருப்பாங்க. என்னாலே நகரக் கூட முடியலை. எங்களை அப்படியே விட்டுட்டு காரை எடுத்திட்டு கிளம்பிட்டான் சஞ்சனா அவன்”

உறைந்து போன தன்மையுடன் நின்றிருந்தாள் சஞ்சனா.

“கொலைக்காரன் சஞ்சனா அவன். எங்கம்மாவை கொன்னுட்டான் சஞ்சனா அவன். துப்பாக்கி எடுத்து சுடப் போறேன் அவனை. ஒவ்வொரு குண்டா அவன் உடம்பிலே பாயணும். அவன் உடம்பில் இருந்து ரத்தம் வழியறதை நான் பார்க்கணும்” அவளது கண்களுக்குள் தனது கண்களால் ஊடுருவி உறுமினான் கெளதம் சித்தார்த்.

அவள் கண்களில் இருந்த கண்ணீர் இப்போது கன்னம் தொட்டது.

“ஏதாவது பேசு சஞ்சனா”

“ல..வ்.. யூ கெள..த...ம்”

அவளது குரல் நடுநடுங்க, வந்த “லவ் யூ” அவனது இதயத்தை வருடிக் கொடுக்க மெல்ல மெல்ல தளர்ந்தது அவன் பிடியும் அழுத்தமான பார்வையும். அவளது கன்னத்தை அழுத்திக் கொண்டிருந்த அவனது விரல்கள் மெல்ல இறங்கின

அன்றொரு நாள் வந்த அந்த கருப்பு இரவில் நடந்த நிகழ்வுகளும் நினைவுகளும் அதன் பிறகு அவள் அலறிய அந்த “ஓம் நாம சிவாய” வும் இருவரையுமே தொட சில நொடிகள் மௌனம் மட்டுமே நிலவியது அங்கே.

அதன் பிறகு

“யார் மேலேயோ இருக்கிற வெறியை உன் மேலே காட்டிட்டேன். அன்னைக்கு பெரிய போராட்டத்தை நடத்தி மேலே போயிட்ட என்னை திரும்ப பூமிக்கு கூட்டிட்டு வந்த என் பொண்டாட்டி மேலே காட்டிட்டேன்” என புன்னகைத்து அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தான்.”

“இதுவரை இந்த விஷயம் வேறே யாருக்குமே தெரியாது சஞ்சனா. இன்னைக்கு உன்கிட்டே சொல்லிட்டேன். பரவாயில்லை. நல்லதுக்குத்தான். உனக்கும் உண்மைகள் தெரியணும்தானே”

என அவளது கன்னங்களை ஈரமாக்கிக் கொண்டிருந்த கண்ணீர்ரை துடைத்தான் அவன்.

“லவ் யூ கெளதம்” இப்போது தெளிவாகவே சொன்னாள் அவள். அழகாய் சிரித்தான் கெளதம்.

“நல்லா லவ் பண்ணிக்கோ. இன்னும் நாலஞ்சு நாளைக்கு என்னை நல்லா லவ் பண்ணிக்கோ. என் சொத்துக்கள் சம்மந்தமா சில வேலைகள் பார்த்திட்டு இருக்கேன். அது முடிஞ்சதும் அந்த நந்தாவும் இருக்க மாட்டான் நானும் இருக்க மாட்டேன்.”

சட்டென அவன் சட்டையை பற்றிக் கொண்டாள் “லவ் யூ கெளதம்” என்றன அவளது அதரங்கள்.

என்னை விட்டுப் போய் விடாதே என்ற தவிப்பு இருந்தது அந்த லவ் யூவில். அதை புரிந்து கொண்டவனாக அவளது கரங்களை சேர்த்து தனது கன்னங்களின் மீது வைத்துக் கொண்டான்.

“மனசை எல்லாத்துக்கும் ரெடி பண்ணிக்கோ சஞ்சனா. வேறே வழி இல்லை. சரி இப்போ ஒரு நல்ல பொண்டாட்டியா இந்த புருஷன் ஊட்டி விடறதை நீ சாப்பிடுவியாம்” என அவனது அறையில் இருந்த உணவு மேஜையை நோக்கி அவன் நகர மனதின் ஓரத்தில் இருந்த ஒரு சின்னஞ்சிறு நம்பிக்கையை மட்டும் இறுக பற்றிக் கொண்டு நின்றிருந்தாள் சஞ்சனா.

தொடரும்
உங்கள் கருத்துகளை இந்தத் திரியில் தெரிவியுங்கள் தோழமைகளே!

நீ-அறியாயோ-முகிலனமே - கருத்துக்கள்
 
Last edited:

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
நீ அறியாயோ முகிலினமே 18​



உயிர் உருக்கி உள்ளம் உடைத்து உன்னை உதறிவிட்டு உள்ளுக்குளே உழல்கிறேன்.

இறுக்கங்களை இளகவைத்து இன்னல்களை இறக்கிவைத்து இதழோடு இழுத்து வைக்கிறது உன் முந்தைய முத்த ஈரம்.




ஐந்தாறு நாட்கள் கடந்திருந்தன. இந்த நாட்களில் காதலென்ன, பரிசுகளென்ன பரிவுகளென்ன அவளை மகிழ்ச்சியில் திளைத்து திளைத்து மூழ்க செய்திருந்தான் கெளதம் சித்தார்த்.

அதே நேரத்தில் ரசித்து ரசித்து வாழ்ந்து முடிக்கிறானோ என ஒரு பயம் அவளை அலைக்கழித்துக் கொண்டே இருந்ததும் நிஜம்.

கடந்த சில நாட்களாக அவளிடம் பல கையெழுத்துக்களை வாங்கிக் கொண்டு அவன் தனது சொத்துக்கள் சம்மந்தமாக செய்ய வேண்டிய வேலைகள் எல்லாவற்றையும் முடித்து விட்டான் என்பது அன்று காலையிலேயே புரிந்திருந்தது சஞ்சனாவுக்கு.

இந்த நான்கைந்து நாட்களிலேயே அவனது மருத்துவமனையின் பங்குதார்கள் பற்றி அவர்கள் குணங்கள் சில பல வியாபார நுணுக்கங்கள் என பல விஷயங்களை அவளுக்கு விளக்கிக் கொண்டே இருந்தான் அவள் கணவன்.

“இந்தப் பேச்சு போதும் கெளதம்” அவள் சொல்ல அழகாய் சிரித்தான் அவன்.

“தெரிஞ்சு வெச்சுக்கோ. கேட்டு வெச்சுக்கோ. கொஞ்ச நாள் கழிச்சு உனக்கு கண்டிப்பா உபயோகப் படும்”

“பார்க்கலாம் கெளதம்” சொன்ன மருத்துவரின் மனது அப்போதும் ஏதோ கணக்குகளை போட்டுக் கொண்டே இருந்தது.

அன்று காலையில்

“தரையில் விழுந்து கிடக்கிறான் கெளதம் சித்தார்த். அசைவில்லை அவனிடத்தில் . அவன் மீது இருக்கிறது நந்தாவின் கால். இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு வாய்விட்டு சிரிக்கிறான் அவன்’ அப்படி ஒரு கனவு அவளை அலைகழிக்க அந்தக் கனவின் தாக்கத்தில் வியர்வை வழிய திடுக்கிட்டு எழுந்தாள் சஞ்சனா.

எதற்காக எனக்கு இப்படி ஒரு கனவு எனக்கு. அதை நினைக்க நினைக்க ஏனோ அழுகை மட்டுமே வரும் போல இருந்தது சஞ்சனாவுக்கு.

அது வெறும் கனவுதானே? அது பலிக்க வேண்டும் என்று என்ன கட்டாயம். தன்னைத் தானே சமாதான படுத்திக் கொள்ள முயன்றாள் அவள்.

“அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவன் தீர்காயுசா இருப்பான்” அப்படின்னு தாத்தா சொன்னார் சஞ்சனா. அன்று சுரேந்தர் சொன்னது பதைக்க வைத்தது அவளை. தாத்தா சொல்லும் வார்த்தைகள் சத்தியம் அல்லவா?

இதை எல்லாம் சொன்னால் ஏற்றுக் கொள்பவனா அவள் கணவன்?

அன்று மதியம் ஒரு முடிவுக்கு வந்தவளாக அவனை நோக்கி சென்றாள் சஞ்சனா.

அன்று மாலை ஆறு மணி.

அப்போது அவனது மருத்துவனையில் இருந்தனர் சஞ்சனாவும் கௌதமும். சஞ்சனா சில பரிசோதனைகளின் மருத்துவ அறிக்கைகளை வாங்கிக் கொள்ள அவனது பிரத்தியேக அறையில் காத்திருக்க இவன் அவளிடம் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி விட்டு கீழே இறங்கி வந்தான்.

வரலக்ஷ்மி படுத்திருக்கும் தீவிர சிகிச்சை பிரிவினுள் நுழைந்தான். இன்று வரை அவரது உடலின் அடிப்படை இயக்கங்கள் கூட நிறையவே ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் அதற்காக தன்னுடைய எந்த முடிவையும் மாற்றிக் கொள்பவன் எல்லாம் இல்லை இந்த கௌதம் சித்தார்த். அவர் அருகில் சென்று நின்றான் அவன். சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது அவரது மூச்சு.

சில நிமிடங்கள் சலனமற்று பார்த்திருந்தான் அவரை. அவரிடம் மானசீகமாக ஏதேதோ பேசினானோ? என்ன பேசினான் என்பது கெளதம் சித்தார்த் மட்டுமே அறிந்த ரகசியம். அதன் பிறகு ஏதோ ஒரு பெரிய கடமையை முடித்து விட்டதைப் போலவே வெளியில் வந்தான் அவன்.

அந்த நேரத்தில் ஏனென்றே தெரியாமல் அவனது அருகில் வந்து அவனது கால்களை கட்டிக் கொண்டது ஒரு அழகு பெண் குழந்தை. அதன் கண்கள் முழுவதும் கண்ணீர்.

ஐந்து வயது தான் இருக்கும் அந்த வட்ட முக பிஞ்சுக்கு. அதை தூக்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது இந்த அரக்கனுக்கு. இதுவரை அவன் குழந்தைகளுடன் எல்லாம் அதிகம் பழகியது இல்லை.

“யாரு பாப்பா நீ? எதுக்கு அழறே? உங்க அப்பா எங்கே?” அதை தூக்கி வைத்துக் கொண்டு கேட்டான் அதனிடம்.

“எனக்கு அப்பா இல்லை” தேம்பிக் கொண்டே சொன்ன அதன் குரல் அவனை என்னவோ செய்தது.

அப்போது அங்கே வந்து நின்றாள் சஞ்சனா.

“அப்பா இல்லையா ஏன் பாப்பா?” சஞ்சனாவின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு அவன் அந்தக் குழந்தையிடம் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் அருகில் வந்து நின்றார் ஒரு பெண்மணி.

“இவ எங்க வீட்டு குழந்தைதான் சர்” என்றவள் அதை வாங்கிக் கொண்டாள்

அவள் அந்த குழந்தைக்கு எந்த வகையில் உறவு என்பது எல்லாம் தெரியவில்லை.

“எருமை. ஒரு இடத்திலே இருக்க மாட்டியா?

சுள்ளென அந்தக் குழந்தையின் முதுகில் ஒரு அடி வைத்தபடியே நகர்ந்தாள் அவள். வீரிட்டு அழுதுக் கொண்டே அவளுடன் சென்று கொண்டிருந்தது அந்த பெண் குழந்தை.

அந்தக் காட்சி அவனை கொஞ்சம் பாதித்து இருக்க வேண்டும். அவனது முகத்தில் ஏற்பட்ட பலவகை மாற்றங்களை படித்துக் கொண்டிருந்தாள் சஞ்சனா.

பின்னர் அவன் அவள் பக்கம் திரும்ப “ஸோ?” அவன் பாணியிலேயே அவனைக் கேட்டு விட்டிருந்தாள்.

“என்ன ஸோ?” அந்தக் காட்சியை விட்டு சுதாரித்து கொண்டு விட்டவனின் முகத்தில் கோப ஊசிகள்.

“இல்ல இல்ல சும்மா.. நீங்க ரிபோர்ட்ஸ் பாருங்க” கையில் இருந்த காகிதங்களை அவன் கையில் திணித்தாள் அவள். அதில் இருப்பதையும் கொஞ்சம் விளக்கினாள்.

இந்த மருத்துவ அறிக்கை அவனுக்கு என்ன உணர்வை கொடுத்ததாம்? அதையே அசையாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அவன்.

“ஏதாவது சொல்லுங்க கெளதம்” கலைத்தாள் அவள்.

“சந்தோஷம்” படு நிதானமாக சொல்லிவிட்டு அந்த காகிதங்களை அவள் கையில் கொடுத்து விட்டு “கிளம்பலாமா’ என நகர்ந்தான் அவன்.

“கெளதம் கெளதம் நில்லுங்க” என ஓடி வந்து அவனது கரம் கோர்த்துக் கொண்டு நடந்தாள் அவன் மனைவி. “என்ன பாஸ் இப்படி சைலென்ட்டா நடந்தா என்ன அர்த்தம்?”

“வேறே என்ன செய்யலாம் நீ சொல்லு” என்றான் குரலில் எந்த பாவத்தையும் காட்டாமல்.

“எனக்கு ரெண்டு முழம் மல்லிகைப்பூ வாங்கித் தரீங்களா ப்ளீஸ்?”

“மல்லிகைப் பூவா?” நின்று திரும்பினான் அவன்.

அவளது கண்களில் அத்தனை கெஞ்சலும் காதலும். அதற்குள் தொலைந்தே போய் விட வேண்டும் என்று கூட கொஞ்சம் ஆசை வந்தது கௌதமுக்கு. முயன்று திரும்பிக் கொண்டான்.

“ஆமாம். அதுக்கு ஏன் ஷாக் ஆகறீங்க? எனக்கு மல்லிகைப்பூ ரொம்பப் பிடிக்கும். ஒரு புருஷனா லட்சணமா வாங்கிக் கொடுங்க.”

அந்த மருத்துவமனை வாசலில் இருந்த ஒரு சாலையோர பூக்கடையை நோக்கி நடந்தனர் இருவரும். மழைக்காற்று வீச ஆரம்பித்து இருந்தது. சிறு சிறு தூறல்கள் கூட விழ ஆரம்பித்து இருந்தன.

சாலையோரம், ஒரு தார்பாலின் கூரையுடன் அமைக்கப் பட்டிருந்த அந்த மிகச் சிறிய கடையில் அந்த கடைக்காரரின் அருகே அமர்ந்திருந்தாள் அவரது அழகு மகள். நான்கு வயது இருக்குமா அந்த குழந்தைக்கு.

குளிர் காற்று தீண்டி விடாத வண்ணம் அந்தப் பெண்ணை ஒரு போர்வைக்குள் சுற்றி தனது மடியில் வைத்து அணைத்துக் கொண்டு அதற்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

“ரெண்டு முழம் மல்லிகைப்பூ குடுங்க” என்றபடியே அவரிடம் ஐநூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான் கெளதம்.

“இருங்க சார். பிள்ளை இப்போதான் சாப்பிடுது. அது முடிக்கட்டும்” என்றார் அந்தக் கடைக்காரர்.

“யோவ்.. நான் யார் தெரியுமா? உன் பொண்ணு சாப்பிடற வரைக்கும் நான் காத்திருக்கணுமா? இந்த ஐநூறு ரூபாய் நீ மொத்தமா வெச்சுக்கோ. எனக்கு இப்போ ரெண்டு முழம் மல்லிகைப்பூ வேணும்” வழக்கமான கெளதம் சித்தார்த் இருந்தான் அந்தக் குரலில்.

“ மன்னிச்சுக்குங்க சார். நீங்க யாரா இருந்தாலும் சரி. ஐநூறு என்ன ஐயாயிரம் கொடுத்தாலும் சரி. என் பொண்ணு சாப்பிடும் போது நான் வியாபாரம் பார்க்க மாட்டேன். எனக்கு அவ மட்டும்தான் முக்கியம். நீங்க முடிஞ்சா காத்திருங்க. இல்லைனா வேறே கடை பார்த்துக்கோங்க” கடைக்காரரின் தொனியில் உறுதி மட்டுமே இருந்தது.

அடுத்து மகளின் பக்கம் திரும்பி அவளுக்கு ரசித்து ரசித்து உணவு ஊட்டி விட ஆரம்பித்து இருந்தார் அவர்.

“நீ வா நாம வேறே கடை பார்ப்போம்” அவன் சஞ்சனாவை இழுத்துக் கொண்டு நகர்ப் போக

“இல்லை கெளதம். இங்கேயே வாங்குவோம். வெயட் பண்ணுங்க” என்றாள் சஞ்சனா.

“ஹேய்.. அவன்..”

“ப்ளீஸ்.. கெளதம்.. எனக்கு இங்கேதான் வாங்கணும். என்னைப் பொறுத்தவரை ஒரு அப்பான்னா இப்படித்தான் இருக்கணும். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் சொல்றதை எல்லாம் கேளுங்களேன் ப்ளீஸ்”

தூறல் சற்றே வேகமெடுத்த போதும் அந்த கடைக்கு அருகிலேயே பிடிவாதமாக நின்றாள் சஞ்சனா.

என்னதான் விறைப்பாக நின்றாலும், அதைப் பார்க்காதே பார்க்காதே என்று அவனது சுய கௌரவம் அவனைத் தடுத்தாலும் மகளுக்கு உணவு ஊட்டி விடும் அந்தத் தந்தையை தவிர்க்கவே முடியாமல் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தான் கெளதம் சித்தார்த்.

கடைக்காரர் உணவு ஊட்டி முடிக்க ஒரு ஆழ் மூச்சு மட்டுமே எழுந்தது அவனிடத்தில்.

அடுத்த சில நிமிடங்களில் பூவை வாங்கி அவன் கையால் சூடிக் கொண்டாள் அவள். அதன் பின்னர் இருவரும் மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்தனர்.

“வாட் நெக்ஸ்ட்?” அவன் கேட்க

“உங்களுக்கு மேட்டுப் பாளையம் தாண்டி ஒரு பண்ணை வீடு இருக்குன்னு சொன்னீங்களே அங்கே போகலாமா கெளதம்?” சடக்கென திரும்பினான் கெளதம்.

அங்கே தான் சென்று வந்ததை அவளிடம் சொல்லித்தான் இருந்தான் சுரேந்தர். அங்கே நந்தா இருக்கக் கூடும் என்பது அவளுக்கும் நன்றாகவே தெரியும். கெளதம் கடந்த சில நாட்களாக இருந்த நிலையில் நந்தாவை கண்டிப்பாக இடம் மாற்றி இருக்க மாட்டான் என்றும் தோன்றியது அவளுக்கு.

கௌதமின் முகத்தில் அவள் அதிர்ச்சியை எதிர்ப்பார்த்தாளோ அவள்? ஆனால் அதன் அடையாளம் கூட வரவில்லை அங்கே.

இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு அவளை சில நொடிகள் ஏற இறங்க பார்த்தவன் முகத்தில் அழகானதொரு சிரிப்பும் எழுந்தது.

“புத்திசாலிடி கண்ணு நீ”

மெலிதாக ஒரு புன்னகை வந்தது அவள் முகத்தில்.

“சரி வா. நம்ம வீட்டுக்கு போயிட்டு அப்புறம் கிளம்பலாம்” இவர்கள் இருவரும் காரை நோக்கி நடக்க அங்கே கைக்கெட்டும் தூரத்தில் இவர்கள் பேசியதை உள்வாங்கிக் கொண்டு நின்றிருந்தான் சுரேந்தர்.

என்னதான் கடந்த சில நாட்களாக அவன் நந்தா விஷயத்தில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றாலும் அவனது நண்பர்கள் உதவியுடன் நடப்பதை எல்லாம் ஓரளவு கவனித்துக் கொண்டுதான் இருந்தான் என்று சொல்ல வேண்டும்.

வரலக்ஷ்மியின் நிலையை நீலகண்டன் மூலம் அறிந்து அவரை காண வந்திருந்தவனின் பார்வையில் இவர்கள் இருவரும் விழுந்தனர். அவர்கள் பேசியதையும் கேட்டுக் கொண்டவனுக்கு, நந்தா அந்த பண்ணை வீட்டிலேயேதான் இன்னும் இருக்கிறான் என்றும் தோன்றியது.

அதோடு சஞ்சனா இன்று எதாவது செய்து விடுவாள் எனும் ஒரு சிறு நம்பிக்கையும் வந்திருந்தது.

அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவுக்கும் வந்திருந்தான் அவன்.

அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் வீட்டுக்கு இருவரும் வந்து சேர்ந்திருந்தனர். அவன் எதற்கு வீட்டுக்கு வந்தான் என்பது அப்போதுதான் புரிந்தது அவளுக்கு.

தனது பாதுகாப்புக்காக வாங்கி வைத்திருக்கும் கைத் துப்பாக்கியை எடுத்து வைத்துக் கொண்டான் அவன். அவள் எதிரிலேயேதான் அதை செய்தான் என்பது அவளது அதிர்ச்சியை இருமடங்காக்கி வைத்தது.

அவன் என்ன செய்கிறான் என்பது அவளுக்கு புரிந்து போக நந்தா கண்டிப்பாக அந்த வீட்டில்தான் இருக்கிறான் என்பதும் உறுதியாக, சற்றே யோசிக்கலானாள் சஞ்சனா.

கௌதமுக்கும் சரஸ்வதிக்கும் அந்த விபத்து நடந்த நாள் முதலாகவே எங்கு சென்றாலும் அவசர மருந்துகள் முதலுதவி சாதனங்கள் அடங்கிய பெட்டியை எடுத்துச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள் அவள், இப்போது அதனுள்ளே கிடக்கும் ஒரு மயக்க மருந்தின் நினைவு வந்தது அவளுக்கு.

அந்த மருந்தை அவனது வைத்து அவனை மயங்க செய்வதுதான் இருவரையும் காப்பாற்ற இருக்கும் சரியான வழி என்று தோன்றியது. அங்கே சென்றவுடன் நந்தா இருக்கும் இடம் எதுவென்று ஓரளவுக்கு தெரிந்து விட்டால் கௌதமை மயங்க வைத்து விடுவதுதான் சரி என்று தோன்றியது.

அவனது உயிரையும் நந்தாவின் உயிரையும் அப்போதைக்கு காப்பாற்றுவதற்கு இதை விட வேறு வழி இருப்பதாக தெரியவில்லை அவளுக்கு.

அவனறியாமல் அவள் அதை எடுத்து தனது கைப்பையில் வைத்துக் கொண்டு அவன் அருகில் வந்த போது

“நான் எனக்குத் தேவையானதை எடுத்திட்டேன். நீ உனக்குத் தேவையானதை எடுத்துட்டியா சஞ்சனா” அவள் முகம் பார்த்து கேட்டுவிட்டான் கெளதம் சித்தார்த்.

“கண்டு பிடித்து விட்டனா என்ன?” அவனது வார்த்தைகளில் பய உணர்வுகள் ஒன்று சேர்ந்து அழுத்தினாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கிளம்பினாள் அவள்.

இடி மழையும் மின்னலும் ஒன்று சேர்ந்து விளையாட ஆரம்பித்து இருந்தன.

கார் சீரான வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்க, காரை செலுத்திக் கொண்டிருந்தவனிடம் வெகு இயல்பாக ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டே வந்து கொண்டிருந்தாள் சஞ்சனா. அவனுமே சூழ்நிலை மறந்து தனது காதலியின் சிரிப்பிலும் பேச்சிலும் இளகிக் கொண்டிருந்தான்.

ஆனாலும் கைப்பையில் இருந்த அந்த மயக்க மருந்து இமலாய கனம் கனப்பது போலேவே இருந்தது.

“என்னவனை நான் மனதார ஏமாற்றப் போகிறேனா? அது என்னால் முடியுமா? அது நான் அவனுக்கு செய்யும் துரோகம் இல்லையா? அப்படியே நான் அதை செய்து விட்டால் அவனால் தாங்கிக் கொள்ள இயலுமா?

கொஞ்ச நேரம் கடந்திருக்க மனதில் இருந்த பாரங்கள் எல்லாவற்றையும் சற்றே தள்ளி வைத்து விட்டு

“கெளதம் கெளதம் கொஞ்ச நேரம் ஓரமா காரை நிறுத்துங்களேன்.” திடீரென கூவினாள் அவள்.

“இங்கே எதுக்குடா?”

“ஒரு பெரிய குடை எடுத்திட்டு வந்திருக்கேன். ரெண்டு பேரும் ஒரே குடையிலே அப்படியே நடந்திட்டு வரலாம்” அடுத்த நிமிடம் கார் சாலையோரம் சென்று நின்றிருந்தது.

அழகு குடை தலைக்கு மேலே விரிய அவனது முகிலினத் தோழிகள் சாரல் தூவ ஒற்றைக் குடைக்குள்ளே ஒன்றிக் கொண்டு நடந்தார்கள் இருவரும்.

‘நான் கொஞ்ச நேரத்தில் உன்னை ஏமாற்றப் போகிறேன் கெளதம். என்னை மன்னித்து விடு’ மானசீகமாக கெஞ்சிக் கொண்டவள்

“கிஸ் மீ கெளதம்” என்றாள் கெஞ்சலான குரலில். அந்த நேரத்தில் அவளுக்கு அது கண்டிப்பாக தேவையாக இருந்தது.

“ஆங்?”

“கிஸ் மீ கெளதம் ப்ளீஸ்” உள்ளத்தில் அலையடிக்கும் பல விதமான உணர்வுகளின் கலவையாய் வந்தது அவள் குரல்.

அடுத்த நொடி யாருமில்லாத அந்த சாலையில் குடைக்குள்ளே நடந்தது ஒரு ஆனந்த யாகம். விலகவே மனமில்லாத இதழ் அணைப்பில் திளைத்து இருந்தார்கள் இருவரும். அவளது கூந்தலில் இருந்த மல்லிகையின் மணம் அந்த யாகத்துக்கு சாமரம் வீசியது.

இதழ்களின் ஈரமா கண்களின் ஈரமா இல்லை மழையின் சாரல் தானா? இருவருக்குமே தெரியவில்லை. அவனது கரம் அவளது இடை வளைத்து அவளது வயிற்றை மெல்ல வருடியது.

அவனை சில முறைகள் மறுபடி மறுபடி தனக்குள்ளே இழுத்துக் கொள்ளவே செய்தாள் அவள். இந்த நொடி அப்படியே நின்று விடாதா எனும் அவளது ஏக்கம் அவனுக்கு புரியாமல் எல்லாம் இல்லை. அதே ஏக்கம் அவனையும் சூழ்ந்து நின்றதே!

ஆனால் நிதர்சனம் அவர்களை தூரத்தில் இருந்து அழைத்துக் கொண்டே இருந்தது.

காருக்கு திரும்பலாம் என்று முடிவெடுத்து நகர்ந்து திரும்ப அவளை இழுத்து அணைத்து எதையோ பிரிய மனமில்லாது போனதைப் போலவே அவளது வயிற்றை இன்னொரு முறை வருடினான் கெளதம் சித்தார்த்.

சில நிமிடங்கள் மழையோடு கலந்து நடந்து விட்டு திரும்பும் போதுதான் கார் நின்றிருந்த அந்த இடத்தை சரியாக கவனித்தான் கெளதம். அதைப் பார்த்ததும் அவனுக்குள்ளே ஏதேதோ ஞாபகங்கள்.

சில மாதங்களுக்கு முன், அந்த விபத்தில் தனது அன்னையை பறி கொடுத்து விட்டு நின்ற நேரமது. அவனது உடல் நிலை ஓரளவுக்கு தேறி இருந்த நேரத்தில், சஞ்சனா வெளிநாடு கிளம்பியிருந்தாள்.

அவனது மூளைக்குள் நந்தா எனும் பெயர் தீயாய் எரிந்து கொண்டிருக்க மருத்துவர்கள் பரிந்துரைத்த சில மாத ஓய்வுக்காக இவன் உதகை நோக்கி கிளம்பினான்.

அவனது ஓட்டுனர் சச்சிதானந்தன் காரை செலுத்திக் கொண்டிருந்தார். பாதி வழியில் இதே இடத்தில்தான் நின்று போனது கார். அது பழுதானதுமே அந்த கருப்பு தினத்தின் நினைவுகள் அவனை வாட்ட ஆரம்பித்தன.

சச்சிதானந்தன் காரின் பழுதை நீக்க முயன்று கொண்டிருக்க இவன் சாலையோரம் இருந்த ஒரு மர நிழலில் இருந்த மேடையில் சென்று அமர்ந்தான்.

அடுத்த சில நிமிடங்கள் கழித்து அவனருகே வந்து அமர்ந்தார் அந்த மனிதர். அவர் வேறு யாருமல்ல. நம் ரங்கநாதன்தான். அவர் யாரென இவனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லையே.

வருடா வருடம் இவனது பிறந்த நாளைக்கு வந்து விட்டு அவனது புகைப்படத்தை கொண்டு வந்து வீட்டில் சேமித்து வைப்பாரே வரலக்ஷ்மி.

அதில் ஒன்றிரண்டை பார்த்திருப்பதால் இவனை நன்றாகவே தெரியும் அவனது தாத்தாவுக்கு. அதே போல இவன் அவரது பேரன் என்பதை தனது ஞானத்தால் அறிந்து கொள்ளும் அளவுக்கு திறன் படைத்தவர்தான் ரங்கநாதன்.

பொதுவாக அவர் இந்த வயதில் வெளியில் எங்கும் செல்வதில்லை எனும் போதிலும் அந்தப் பகுதியில் இருக்கும் அவரது குலதெய்வ கோவிலின் கும்பாபிஷேகத்துக்கு வந்து விட்டு திரும்பும் வழியில்தான் இங்கே அமர்ந்திருக்கும் கெளதம் கண்ணில் பட்டான். உடனே தான் பயணித்துக் கொண்டிருந்த காரை நிறுத்த சொல்லிவிட்டு பேரனின் அருகில் வந்து அமர்ந்தார் மனிதர்.

“கெளதம்” இதமாக அழைத்தவரின் கரம் அவனது தோள்களை அணைத்துக் கொண்டது.

திடுக்கிட்டு நிமிர்ந்தான் அவன். “யார் சார் நீங்க?”

“நான் ஒரு வயசான மனுஷன். அதை விடு. உனக்கு என்னைத் தெரியாதுபா. ஆனா எனக்கு உன்னைத் தெரியும். நீ உன் அம்மா பத்தி யோசிச்சு ரொம்ப தளர்ந்து போயிடாதேபா. அவ திரும்ப உன்கிட்டேயே வருவா. அதைச் சொல்லத்தான் வந்தேன்”

விக்கித்து நிமிர்ந்தான் அவன்

“நீங்க யார் தாத்தா?”

“அதான் தாத்தான்னு சொல்லிட்டியே. அப்படியே இருக்கட்டும். அன்னைக்கு உன்கிட்டே கார்லே சொன்னது மாதிரி உங்க அம்மா உனக்கு பொண்ணா வந்து பிறப்பா. இது சத்தியம். இதை மட்டும் நீ மனசிலே வெச்ச்சுகோ என்ன? நான் வரேன்” சொல்ல வந்ததை சொல்லிவிட்டு கிளம்பி நகர்ந்தார் அந்த மனிதர்.

சில நிமிடங்கள் ஒன்றுமே புரியாமல்தான் அமர்ந்திருந்தான். அவனது அன்னை கடைசியாக சொன்ன அந்த வார்த்தைகள் அவனைத் தவிர வேறே யாருக்குமே தெரியாதே! இதை எப்படி தெரிந்து கொண்டார் அந்த மனிதர்?

இந்த சம்பவம் சில நாட்கள் அவனது மனதில் ஓடிக் கொண்டிருந்தாலும் அதன் பின் வந்த சூழ்நிலைகளால் அதை மறந்தே போனான். இப்போது தலையில் அடித்து நிமிர்த்தியதைப் போல் நினைவுக்கு வருகிறது அது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பண்ணை வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர். அங்கிருந்த ஆதித்யாவுக்கு அவர்கள் வருகையை முன் கூட்டியே சொல்லி இருந்தான் கெளதம். அவன் வாசலுக்கு வந்து வரவேற்றான் இருவரையும்.

இரவு உணவை முடிந்துவிட்டு ஒரு முடிவுடன் ஆதித்யாவை பார்த்து புன்னகைத்தான் கெளதம்.

“உன் வேலை முடிஞ்சது ஆதி. இனி நான் பார்த்துக்கறேன் எல்லாத்தையும் நீ கிளம்பு”

“கெளதம்?” அவன் அதிர

“கிளம்பு” என்றான் உறுதியான பார்வையுடன். “உனக்கு சில விவரங்கள் ஈமெயில் பண்ணி இருக்கேன். அது எல்லாம் பாரு உனக்கு எல்லாம் புரியும். உனக்குத் தேவையான பணமும் உன் அக்கவுன்ட்லே இருக்கு. உனக்கு சிங்கபூர் டிக்கெட்ஸ் ரெடியா இருக்கு. நீ இப்போ கிளம்பினா ராத்திரி ஒரு மணி ஃப்ளைட்டுக்கு கரெக்டா இருக்கும்”

ஏதேதோ புரிந்தது போலே இருந்தது அவனுக்கு. சில நிமிடங்களில் தனது காரை கிளப்பிக் கொண்டு நகர்ந்தான் அவன்.

அநாதையாக நின்ற தன்னையும் தனது தங்கையையும் ஒரு அன்னையாய் இருந்து வளர்ந்தெடுத்த சரஸ்வதியின் மரணத்துக்கு எதாவது ஒரு வகையில் நியாயம் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இத்தனை நாட்கள் நந்தாவுக்கு காவல் இருந்தான் ஆதித்யா.

இது வரையிலும் இனிமேலும் கௌதமின் வார்த்தைகளை மீறி எதையும் செய்யும் எண்ணமில்லை அவனுக்கு.

கௌதமின் வார்த்தைகளில் சஞ்சனாவுக்குமே ஏதேதோ புரிந்தது போலே இருந்தது. இருந்தாலும் நம்பிக்கையை மட்டும் விடவே இல்லை அந்தப் பெண்.

“இந்த வீட்டை சுத்தி பார்க்கலாமா கௌதம்?” அவன் முகம் பார்த்து கேட்டாள் அவள். இப்பொது அவனது இதழோரம் அழகு சிரிப்பு.

“ஸோ? மேடம் திட்டமெல்லாம் போடறீங்க ஆங்?”

“அதெல்லாம் இல்லை கெளதம். சும்மா பார்க்கத்தான்”

“ஓகே.. பார்க்கலாமே” என்றவன் அவளது தோள்களை அணைத்துக் கொண்டு நடந்தான்.

வீட்டின் ஒவ்வொரு ஜன்னலையும், கதவையும், கப்போர்ட்களையும் கூட கண்களால் அளவெடுத்துக் கொண்டேதான் நடந்தாள் பெண். அது அவளது கணவனுக்கும் புரியாமல் இல்லை. எல்லா பக்கமும் சுற்றிப் பார்த்து விட்டு வீட்டின் பின் பக்கம் நகர்ந்தார்கள்.

இத்தனைக்கு பிறகும் இப்பொழுது வரை கௌதமின் முகத்தில் இருந்த புன்னகை மட்டும் மாறவே இல்லை.

அதே நேரத்தில் அந்த பண்ணை வீட்டில் இருந்து கைக்கெட்டும் தூரத்தில் வந்து நின்றது அந்தக் கார். அது சுரேந்தரின் கார்.

எப்படியும் சஞ்சனா எதாவது செய்து விடுவாள். அதன் பிறகு தன்னை அழைப்பாள் எனும் நம்பிக்கையுடன் அந்தக் காரிலேயே அமர்ந்திருந்தான் அந்த உண்மையான நண்பன்.

அவனை சுரேந்தர் கவனிக்கவில்லை என்றாலும் அவனது கார் அங்கே வருவதை பார்த்துக் கொண்டேதான் அந்தப் பகுதியைக் கடந்தான் ஆதித்யா. அந்தச் செய்தி உடனே குறுஞ்செய்தியாக சென்று அடைந்திருந்தது கௌதமை.

“இது என்ன ரூம் கெளதம்? கதவே வித்தியாசமா இருக்கு?” நந்தா இருந்த அந்த அறையின் இரும்புக் கதவு சட்டென அவளது கவனத்தை ஈர்த்தது.

“அதுவா? அது சந்திரமுகி ரூம். அவங்களை எதுக்கு டிஸ்டர்ப் பண்றே? வா நாம நம்ம ரூம்க்கு போகலாம்” அவள் தோள்களை அணைத்து கிட்டதட்ட இழுத்துக் கொண்டு படுக்கை அறை நோக்கி நடந்தான் கெளதம் சித்தார்த்.

அந்த அறையில்தான் நந்தா இருக்கிறான் என்பதை கிட்டதட்ட உணர்ந்திருந்தாள் சஞ்சனா. இருவரும் படுக்கை அறையை அடைந்து, உடை மாற்றிக் கொண்டு அங்கே இருந்த கட்டிலில் சாய்ந்தனர்.

அவனை மயங்க வைக்கும் தருணம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறது என்பது அவளுக்கு மெது மெதுவாக புரிய உடல் முழுவதும் ஒரு வித நடுக்கமே ஓடியது.

என்ன தோன்றியதோ அருகில் இருந்தவன் பக்கம் திரும்பி அவனை ஆழ்ந்து முத்தமிட்டாள். சிரித்தான் அவன்,

“மேடம் இன்னைக்கு செம மூட்லே இருக்கீங்க போலிருக்கே?” கேட்டானே தவிர அவளது உடலின் நடுக்கத்தை நன்றாக உணர முடிந்தது அவனால்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை கெளதம். தூங்குங்க” விலகிப் படுத்தாள்

சில நிமிடங்கள் கடக்க அவன் கண்களை மூடி படுத்துக் கிடந்தான். மயக்க மருந்து அவளது நினைவில் வந்து வந்து நின்றது. ஆனால் அதை உபயோகிக்கும் தைரியம் மட்டும் இன்னும் வரவே இல்லை சஞ்சனாவுக்கு..

‘இப்போது நான் அதை உபயோகித்தால் மயங்கிப் போவான் கெளதம். நந்தா காப்பாற்றப் படுவான். அதன் பிறகு? கெளதம் தோற்றுப் போவான். அந்தத் தோல்வியை அவனால் தாங்கிக் கொள்ள இயலுமா? அதற்கடுத்து என்ன செய்வான்?’

‘தன்னைத் தானே அழித்துக் கொள்வானா? அப்படி என்றால் கெளதம் இல்லாமல் போய் பெரிய குற்றம் செய்த நந்தா பிழைத்துக் கொள்வானா? இது எந்த வகையில் நியாயம்?’

காலையில் வந்த கனவு கண் முன்னே வந்து போனது. அது பலித்து விடக் கூட வாய்ப்பு இருக்கிறதா என்ன? நினைக்கும் போதே உடல் வெலவெலத்து வியர்த்தது சஞ்சனாவுக்கு.

அறையில் பரவிக் கிடந்தது இரவு விளக்கின் ஒளி. அறையில் இருந்த ஒரு கடிகாரத்தின் நொடி முள் நகரும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது அங்கே.



 
Last edited:

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
எது சரி எது தவறு என்னும் குழப்பத்திலேயே அவள் படுத்திருக்க

திடீரென “ச..ஞ்..ச..னா” மெல்ல எழுந்தது அவன் குரல் “மயக்க மருந்து எல்லாம் கொண்டு வந்தே போலிருக்கே. என்னை மயங்க வைக்க ட்ரை பண்ணலையா?”

‘முன்பே கவனித்து விட்டானா?’ எழுந்து அமர்ந்தே விட்டாள். ஆனால் இதில் பெரிதாக வியப்பு எல்லாம் இல்லை அவளுக்கு. அவன் அப்படித்தான் என்று தெரியுமே.

“ஏன் ட்ரை பண்ணித்தான் பாரேன்” என்றான் அவள் முகம் பார்த்து “நான் கெளதம் சித்தார்த், அதற்கும் வேறே பிளான் வெச்சிருக்கேன். வா விளையாடிப் பார்போம்”

இடம் வலமாக அசைந்தது மனதால் தளர்ந்து இருந்தவளின் தலை. எழுந்து அமர்ந்து அவளை தலை முதல் கால் வரையாக ரசித்தபடியே மலர்ந்து சிரித்தான்.

“ஏன் அப்படி?”

“பிகாஸ் ஐ லவ் யூ கெளதம்.” அவள் சொல்ல அவனது முகத்தில் கொஞ்சம் நெகிழ்ச்சி.

“லவ் யூ டூ” என்றவன் அவளை இழுத்து முத்தமிட்டான்.

“உனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்த்திட்டு கிளம்பலாம்ன்னு பார்த்தேன். அது நடக்கலை. சரி இனி தாமதிக்க முடியாது” என்றவன் அவளது அருகில் இருந்த கைப்பேசியை எடுத்து தன்னிடம் வைத்துக் கொண்டான். “எல்லாம் முடிஞ்ச பிறகு நீ என் பேக்கட்டில் இருந்து இதை எடுத்துக்கோ”

“கெளதம்” அலறினாள் சஞ்சனா.

“அந்த சுரேந்தர் இருக்கானே அவன் இங்கேதான் தெரு முனையிலே காத்திருக்கான். நீ இறங்கிப் போய் அவனை கூட்டிட்டு வா. அதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சிடும்” என்றான் கட்டிலை விட்டு இறங்கி நின்ற படியே.

சில நொடிகளில் அவனது கையை சேர்ந்து இருந்தது அவனது துப்பாக்கி. அவன் முகத்தில் மெல்ல மெல்ல பரவியது ஒரு வித வெறி.

“இப்போ என்ன? துப்பாக்கியை குடுங்க. நான் போய் அவனை கொலைப் பண்ணிட்டு வந்திடறேன்” அவள் சொல்ல

“ஆங்? ஆங்?” என மறுபடியும் சிரித்தான் “அவனை நான்தான் கொல்லணும். அடிச்சு அடிச்சு கீழே தள்ளி அதை ரசிச்சிட்டு அதுக்கு அப்புறம் சுட்டுத் தள்ளணும்”

“அதிலே உங்களுக்கு என்ன கிடைக்கும்?”

“சந்தோஷம் நிம்மதி எல்லாம் கிடைக்கும்”

“கெளதம்” அவள் அவன் அருகில் வர

“இதுக்கு மேலே நீ எதாவது பேசினா இப்போவே துப்பாக்கி குண்டு என் தலையிலே வெடிக்கும்” வெகு நிதானமாக சொன்னான் கெளதம். “உனக்கு அதைப் பார்க்கணுமா?” என அவன் துப்பாக்கியை கிட்டதட்ட அழுத்தி விட்டான்.

‘கெள...த...ம் ப்...ளீ..ஸ் கெள...தம் வேண்..டா...ம் கெள...தம்” பதறிப் போனாள் அவள்.

“அப்போ என்னை என் போக்கிலே விடு. நீ என்னை நேசிக்கறது உண்மைன்னா இதுக்கு மேலே எதுவும் செய்ய முயற்சிக்காதே ” மொத்தமாக தடுப்பணை போட்டான் அவளுக்கு.

அவனது துப்பாக்கி அவனது தலைக்கே குறி வைத்தபடி இருக்க அவள் செயலற்று அப்படியே நின்று விட அவனுக்கு என்னதான் தோன்றியதோ

“பத்திரமா இருந்துக்கோடா” என அவளது அருகில் வந்து அவளது நெற்றியில் இதழ் பதித்தவன் “என்னை கொஞ்சம் ஞாபகம் வெச்சுக்கோ என்ன?” என்றான்

களுக்கென என கண்ணீர் கட்டியது அவளுக்கு இப்போது அவன் மண்டியிட்டு அவளது வயிற்றை நோக்கி நகர

“என் பொண்ணுக்கு நீங்க முத்தம் கொடுக்காதீங்க” வெடுக்கன நகர்ந்து எழுந்து நின்றாள் சஞ்சனா.

இன்று மதியம்தான். அவளது வயிற்றில் அவனது கரு உருவாகி இருப்பதை அவனுக்கு சொல்லி இருந்தாள் சஞ்சனா.

“கல்யாணம் ஒன்பது நாள் ஆச்சா? அதுக்குள்ளே என்ன கதை பேசறே நீ?” கொக்கி போட்டான் கெளதம்.

“ஒன்..ப..து நாள் ஆகிடுச்சு கெளதம்” என்று அந்த ஒன்பது நாள் எத்தனை பெரிய விஷயம் என கண் சிமிட்டி சிரித்தாள் சஞ்சனா.

“பொதுவா எல்லா பொண்ணுங்களுக்கும் நாள் தள்ளி போனாத்தான் குழந்தை வந்ததற்கான முதல் அடையாளம் தெரியும். ஆனா நான் ஒரு டாக்டர் கிராண்ட் மாஸ்டர் சர். நீங்க எப்பவும் சொல்றா மாதிரி சஞ்சனா தி கிரேட் கைனகாலிஜிஸ்ட். எப்போ என்ன பண்ணா கரு உண்டாகும்னு எனக்குத் தெரியாதா சர்? இந்த ஒன்பது நாளிலே என் வயத்திலே கரு உண்டாகிடுச்சுன்னு சில டெஸ்டுகளை வெச்சு என்னாலே சொல்லிட முடியாதா சர்? நான் இப்போவே அடிச்சு சொல்றேன் உங்க பொண்ணு என் கரப்பப்பையிலே உட்கார்ந்து இருக்கா”

“பொண்ணா?”

“ஆமாம் நம்ம பொண்ணு வடிவிலே வந்திருக்கிற உங்க அம்மான்னு வெச்சுக் கோங்களேன்” இதுவும் எப்படி தோன்றியதோ சொல்லியே விட்டாள் அவள்.

“அது.. அது ... அம்மா.. எல்லாம் இல்லை..” என்றவன் கரங்கள் நடுங்க மெல்ல அவள் வயிற்றை தொட்டுப் பார்த்தான்.

“அம்மாதான்” என்றாள் அவள் உறுதியாக.

“அதெல்லாம் இல்லை” எதிலிருந்தோ தப்பித்து ஓடுவதைப் போலவே அங்கிருந்து விலகி அறையை விட்டு விறுவிறுவென வெளியேறினான்.

அதன் பிறகுதான் அவனைக் கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்று தனது கர்ப்பப்பையில் கரு தங்கி இருப்பதை சில பரிசோதனைகள் மூலம் உறுதி செய்தாள்.

“கடைசியா ஒரே ஒரு தடவை சஞ்சனா” இங்கே அவளது வயிற்றில் இருக்கும் தனது மகளுக்கு முத்தமா தர கெஞ்சினான் கெளதம் சித்தார்த்.

“தேவை இல்லை. நீங்க போய் அவனை சுட்டுட்டு நீங்களும் சுட்டுக் கோங்க. உங்க வெறி அடங்கிடும். நான் எந்த சுரேந்தரையும் கூப்பிடலை. யாரையும் காப்பாத்தலை அவன் செஞ்ச பாவத்துக்கு நந்தாவும் நீங்க செஞ்ச பாவத்துக்கு உங்க பொண்ணும் அனுபவிக்கட்டும். யாரையோ பழி வாங்க நீங்க எங்களை இழக்கப் போறீங்க” அவள் வெடிக்க

“கத்தாதே துப்பாக்கி இப்போவே வெடிச்சிடும்” சீற்றமாக அறிவித்தான் அவன் அவனது துப்ப்பாக்கி நெற்றிக்கு அருகிலேயே இருக்க

“நான் என் பொண்ணுக்கு முத்தம் கொடுத்திட்டுதான் கிளம்புவேன்”.

என அவளது வயிற்றில் இரண்டு மூன்று அழுத்தமான முத்தங்களை பதித்து “பத்திரமா இருந்துக்கோ பாப்பா” குழந்தையிடமும் சொல்லிவிட்டு எழுந்தான் கெளதம்.

“அதுக்கெல்லாம் வாய்ப்பு கம்மிதான்.” பட்டென சொல்லி விட்டாள் அவள் “உங்களுக்கு அப்புறம் எனக்கு என்ன ஸ்ட்ரெஸ் இருக்கும்னு தெரியாது. முதலிலே அவ ஒழுங்கா வெளியிலே வராளான்னு பார்ப்போம்”

மகளுக்காக சட்டென மாறிப் போனது அவன் முகம். அதை அவள் சற்றே ரசித்தாள் என்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆயுதமாக உபயோகித்ததில் இது சற்று வேலை செய்வதைப் போலவே தோன்றியது.

“அதெல்லாம் வருவா. அவ என் பொண்ணு. எல்லா ஸ்ட்ரெஸ்சையும் தாண்டி வருவா” கொஞ்சம் இறங்கிய குரலில்தான் வந்தன வார்த்தைகள்.

“பார்க்கலாம். உங்களுக்கே அவ மேலே அக்கறை இல்லாத போது எனக்கென்ன?” அலட்சியத்தை சேர்த்துக் கொண்டாள் தொனியில்.

“நீ என்ன சொன்னாலும் யாருக்காகவும் என் முடிவிலே மாற்றம் இல்லை சஞ்சனா. கெளதம் சித்தார்த் முடிவு எடுத்தா எடுத்ததுதான்.” இப்போது மறுபடியும் அவனது குரலில் வெறி ஏறியிருந்தது. ஆனாலும் முகத்தில் ஒரு துளி பதற்றம் இல்லை.

“கெளதம் உங்க உயிரை ஒரு தடவை மீட்டுக் கொடுத்திருக்கேன். அதுக்காகவாவது நான் சொல்றதை கேளுங்க கெளதம் ப்ளீஸ்” இது கடைசி இறைஞ்சலாக வர

“நீ என்னை காப்பாத்தினதே இதுக்குதான்ன்னு நினைச்சுக்கோ” என்று உறுதியாக சொன்னவன் “ என் பேன்ட் பாக்கெட்டிலே இருக்கிற என் பர்ஸ்லே போலிஸ் ஐ. ஜி. க்கு ஒரு டீடைல்டு லெட்டர் எழுதி வெச்சு இருக்கேன். அதை எடுத்து அவர்கிட்டே சேர்த்திடு. அதுக்கு அப்புறம் உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது” என்றான்.

சதுரங்கம் விளையாடுவதைப் போல கொலை செய்வதை கூட கணக்குப் போட்டே செய்கிறான் என்று தோன்றியது அவளுக்கு.

“இப்போ உன்னை இந்த ரூம்குள்ளே வெச்சு கதவை சாத்திட்டு கீழே போகப் போறேன். வாசல் கதவை திறந்து வெச்சிட்டு நந்தா கதையை முடிச்சிட்டு சுரேந்தருக்கு போன் பண்ணி சொல்லிட்டு அதுக்கு அப்புறம் என்னை முடிச்சுக்குவேன். அதுக்கு அப்புறம் சுரேந்தர் வந்து உன்னை திறந்து விடுவான். நீ தைரியமா இரு” சொல்லிவிட்டு ஒரு முடிவெடுத்தவனாக துப்பாக்கியுடன் நகர்ந்தான் கெளதம் சித்தார்த்.

அவள் மனதில் அந்தக் கனவு மட்டும் ஏனோ வந்து வந்து போய்க் கொண்டிருந்தது.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்

உங்கள் கருத்துகளை இந்தத் திரியில் தெரிவியுங்கள் தோழமைகளே!

நீ-அறியாயோ-முகிலனமே - கருத்துக்கள்

 
Last edited:

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
நீ அறியாயோ முகிலினமே 19​



இமைகளை மூடிக் கொண்டு நிலவொளிக் கால முத்த சங்கீதம் இசைக்கிறாய்!

அதை ரசித்து ரசித்து பூமழை பொழிகிறது நமக்கு குடையாய் நிற்கும் பவழமல்லி மரம்.




நொடிப் பொழுதில் கடைசி ஆயுதம் ஒன்று கையில் கிடைத்தது அவளுக்கு.

“கெளதம்” கதவை மூடப் போனவனை உரக்க அழைத்தாள். நின்றான் அவன்.

“நானும் உங்க கூட வரேன் கெளதம்” அவளிடமும் எந்தப் பதற்றமும் இல்லை இப்போது.

“எங்கே?” புருவங்கள் சுருக்கினான் அவன்.

“நீங்க எங்கே போனாலும் அங்கே”

“எதுக்கு அங்கேயும் வந்து என் முகத்திலே மயக்க மருந்து வைக்கவா?” கொக்கிப் போட்டான் ராட்ஷசன். சட்டென அங்கிருந்த ஒரு கயிற்றை எடுத்தாள் அவள்.

“இந்தாங்க என் கையை கட்டிப் போட்டுடுங்க. நான் அங்கே வந்து உங்க பக்கத்திலே மட்டும் நிக்கறேன். வேறே எதுவும் செய்ய மாட்டேன். நானும் உங்க பொண்ணும் சேர்ந்து நீங்க என்ன பண்றீங்கன்னு மட்டும் வேடிக்கை பார்க்கிறோம். நாளைக்கு அவ வெளியிலே வந்தா நான் அவளுக்கு எல்லா கதையும் சொல்லணும் இல்ல”

அவன் முகத்தில் யோசனைகள் கூட

“ஏன் பயமா இருக்கா?” என்றாள் சட்டென.

“இப்போ நீ மட்டும் இல்லை. உனக்குள்ளே என் பொண்ணு வளர ஆரம்பிச்சு இருக்கா சஞ்சனா” அவனுக்குள் மகளைப் பற்றிய பயம் மெல்ல உருவாவதை அவளால் உணர முடிந்தது.

“பொண்ணைப் பத்தி அத்தனை கவலை இருந்தா நீங்களும் போக வேண்டாமே கெளதம்” மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு அவனை நேராகப் பார்த்தாள்.

“ஸோ?” என்றான் “நீங்க வந்தா நான் கொலை பண்ணாம விட்டுடுவேன்னு திட்டம் போடறீங்க மேடம். யார் வந்தாலும் நான் நினைச்சதை செய்தே தீருவேன்” சீறும் சிங்கத்தின் பாவம் மறுபடியும் வந்திருந்தது அவன் குரலில்.

“அப்போ வாங்க கெளதம் நானும் வரேன். அன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கும் போதே நீங்க எங்கே போனாலும் கூட வருவேன்னு சத்தியம் பண்ணேன்தானே. இப்போ நான் மட்டும் தப்பிச்சுகிட்டா எப்படி? என்னையும் கூட்டிட்டு போங்க” என்று நீட்டினாள் கயிற்றை.

அவள் அருகில் வந்து கயிற்றை வாங்கி ஒரு ஓரத்தில் போட்டு விட்டு “சரி வா” என்றான் அவன் “உன் மடியிலேதான் என் வாழ்க்கை முடியணும்னா எனக்கு ரொம்ப சந்தோஷம் ” என அவள் முகம் பார்த்து சொல்லி விட்டு நடந்தான்.

“இனி வாழ்வோ முடிவோ அது உன்னோடு நடக்கட்டும். நீ எங்கே செல்கிறாயோ அங்கே நானும் உன் மகளும் வருகிறோம்” என்ற உறுதியான எண்ணத்துடன் நடந்தாள் சஞ்சனா.

சொல்லிவிட்டான்தான். ஆனால் மனம் ஒரு நிலையில் இல்லை. தனது மகளை தானே ஆபத்துக்குள் அழைத்து செல்வதைப் போல ஒரு உணர்வு. அங்கே வந்து அந்தக் காட்சிகளை கண் முன்னே பார்த்தால் என் மனைவிக்கும் மகளுக்கும் எதுவும் பெரிதாக நேர்ந்து விடுமோ ?

‘“லவ் யூ கெளதம்” “லவ் யூ கெளதம்” என அவனையே சுற்றி சுற்றி வருபவள் கண் முன்னே தான் மடித்து விழுந்தால் தனது தேவதை எப்படி அலறுவாள் கதறுவாள் என அப்போதுதான் யோசிக்க ஆரம்பித்தான் கெளதம் சித்தார்த்.

தனக்கு பிறகான அவளது வளமான வாழ்கையை பற்றியே இத்தனை நாட்கள் யோசித்துக் கொண்டிருந்தவன், அதற்கு பிறகான அவளது மன நிலையை பற்றி முதல் முறையாக யோசிக்கலானான்.

ஏதேதோ யோசனைகளுடன் வாசல் கதவை திறந்து வைத்தான்.

“இது எதுக்கு கெளதம்?”

“இல்லை .. உ..உ..னக்கு எதாவது அ..வ..சரம்னா யார..வது உள்ளே வரணும் இல்ல அதுக்குதான் கதவைத் திறந்து....” கெளதம் சித்தார்த்தின் குரல் கூட கொஞ்சம் நடுங்கியது.

அங்கே காரில் இருந்த சுரேந்தருக்கும் மனம் நிலை கொள்ளவில்லை. ஒரு முறை அந்த பண்ணை வீட்டை ஒரு சுற்று சுற்றி வந்தால் என்ன என்று தோன்றியது. அந்த வீட்டை நோக்கி நடந்தான் அவன்.

அதே நேரத்தில் அங்கே தியானத்தில் அமர்ந்திருந்த ரங்கநாதனின் மனம் கௌதமை நாடிக் கொண்டிருந்தது.

அவளை திரும்பிக் கூட பார்க்காமல் கொஞ்சம் வேகம் குறைந்த நடையுடன் கெளதம் நந்தா இருந்த அந்த அறைக்குள் நுழைய அதிர்ந்து எழுந்து நின்றான் நந்தா. அவன் பின்னாலேயே உள்ளே நுழைந்தாள் சஞ்சனா.

இங்கே வந்த பிறகு கெளதம் அவனை நேருக்கு நேராக பார்ப்பது இதுவே முதல் முறை. அவனைப் பார்த்தவுடன் கௌதமின் வெறி தலைக்கேறியது.

“கெளதம் சித்தார்த் வந்திருக்கேன் டா” அந்தக் கதவை இழுத்து சாத்தியபடியே உறுமினான் கொதித்து பொங்கும் எரிமலையின் ரூபமாய் அவன் முன்னே நின்ற கெளதம்.

வான் மேகங்கள் வெளியே கோரமாக இடித்துக் கொண்டிருந்தன.

அப்போதுதான் நந்தாவின் பார்வையில் விழுந்தாள் சஞ்சனா.

“சஞ்சனா” அவன் அவளை நெருங்க முயல நந்தாவின் நெற்றிப் பொட்டில் நின்றது கௌதமின் துப்பாக்கி.

“அவகிட்டே என்ன பேச்சு? என்கிட்டே பேசு”

“வாடா வா இப்போதான் என் முன்னாலே வந்து நிக்க தைரியம் வந்ததா?” இப்போதும் அவன் முன்னால் நிமிர்ந்து நின்றான் நந்தா “ஆம்பிளையாடா நீ?”

“டேய்..” கெளதம் உறும

“என்னடா டேய் உங்க அம்மா பைத்தியம் மாதிரி நடு ரோட்டிலே வந்து நின்னு காரிலே அடிப்பட்டு செத்து போனா அதுக்கு நான் பொறுப்பா?” அவன் கேட்க இடியாய் அவன் முகத்தில் விழுந்தது கௌதமின் அடி.

நந்தாவின் வார்த்தைகளிலும் கௌதமின் செயலிலும் கண்களை மூடிக் கொண்டாள் சஞ்சனா. அவன் சுருண்டு கீழே விழ அவன் நெற்றியில் நின்றது கௌதமின் துப்பாக்கி.

“உன்னை கொன்னு போட்டாதான்டா என் வெறி அடங்கும்”

இப்போது சட்டென அவனது நினைவில் வந்து நின்றது ரங்நாதனின் முகம்.

“அன்னைக்கு உன்கிட்டே கார்லே சொன்னது மாதிரி உங்க அம்மா உனக்கு பொண்ணா வந்து பிறப்பா. இது சத்தியம். இதை மட்டும் நீ மனசிலே வெச்ச்சுகோ” இப்போது அவனது காதில் கேட்பதைப் போலவே இருந்தது.

“ஏன்டா இப்படி அலறுறே? நான் உனக்கு பொண்ணா பிறந்தா வளர்க்க மாட்டியா? விட்டுட்டு ஓடிடுவியா? அப்புறம் நான் என்னடா செய்வேன்?” அடுத்து அன்னையின் கடைசி கேள்வி அவனை உலுக்கியது.

“எனக்கு அப்பா இல்லை” மருத்துவமனையில் அழுத குழந்தையின் முகம் நினைவுக்கு வந்தது.

“நான் இல்லாமல் போனால் என் மகளும் அப்படித்தான் சொல்வாளா என்ன?”

ஏதேதோ எண்ணங்களில் அவனது துப்பாக்கி சற்றே தளர அதை சட்டென தள்ளிவிட்டு நந்தா எழ அவனது முகத்தில் விழுந்த இன்னொரு அடியில் மறுபடியும் சுருண்டு விழுந்தான் நந்தா. அவனது நெற்றிக்கு மறுபடியும் போனது அவனது துப்பாக்கி.

கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அசையாமல் நின்றிருந்த சஞ்சனாவின் பக்கம் திரும்பவே கூடாது என்று அவன் தீர்மானமாக நின்றாலும், அறிவு சுடு என்று கட்டளை இட்டாலும் அவனைச் சுட முடியவில்லை கௌதமால்.

அங்கே நிற்பது சஞ்சனா என்பதை விட அவனது மகள் அவனை கண் கொட்டாமால் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றதொரு உணர்வு அவனது முதுகுத் தண்டை துளைத்து எடுத்தது.

“ஓம் நமசிவாய ஓம் நமசிவாய” அவளது உதடுகள் விடாமல் சொல்லிக் கொண்டிருந்தன.

மேகங்கள் முழங்கிக் கொண்டே இருந்தன. “நீ அவனை விட்டுவிடு கெளதம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அவை சொன்னதாமா?”

“அப்பாவை கூப்பிடேன்” உள்ளே இருந்த குழந்தையிடம் கெஞ்சினாள் அவள்.

அப்போது அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை தாண்டி குதித்த சுரேந்தரின் பார்வையில் விழுந்தது திறந்து கிடந்த வாசல் கதவு.

நந்தா எதாவது சொல்வதும் அவன் மீது பாய்ந்து அவனை கெளதம் சுட முயல்வதும் அதன் பின் உணர்வுகளில் சிக்கி தளர்வதும் என இந்தப் போராட்டம் சில முறைகள் மறுபடி மறுபடி தொடர்ந்தது.

ஒரு கட்டத்தில் சிலையாய் நின்றிருந்த மனைவியின் பக்கம் திரும்பியும் விட்டான்தான் அந்த அரக்கன்.

அவளது கண்களில் இருந்து இறங்கிய கண்ணீர் கன்னங்களை தொட்டிருந்தது. அவன் ரசித்து ரசித்து நேசித்த தேவதையின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்க வேண்டும் என்று பதறியது அவனது உள்ளம்.

வேண்டாம் வேண்டாம் கரையாதே என்று கட்டளை இட்டது அவனது வெறி.

இப்போது அவனது பார்வை அவளது வயிற்றுக்குப் போனது. யாரிடமும் , தன்னை உருவாக்கிய அன்னையிடம் கூட தோற்காத கெளதம் சித்தார்த் இன்னும் முழு வடிவம் கூடப் பெற்றிராத தனது மகளிடம் தோற்றுக் கொண்டிருந்தான் என்றே சொல்ல வேண்டும் .

கௌதமின் கவனம் கொஞ்சம் திசைத் திரும்பி இருந்த அந்த நேரத்தில் நந்தா அவன் மீது பாய எதிரே பாராமல் தடுமாறி கீழே விழுந்திருந்தான் கெளதம் சித்தார்த்.

தான் கனவில் கண்ட தருணம் இதுதானோ? பயந்து போனாள் சஞ்சனா.

இப்போது சிரித்தான் நந்தா. கௌதமை மிதிக்க அவனது கால் மேலே எழ அடுத்த நொடி உள்ளே புகுந்து அவனை தள்ளியே விட்டிருந்தாள் சஞ்சனா.

அதற்குள் கெளதம் துள்ளி எழுந்து சுழன்ற வேகத்தில் இவர்கள் இருவருக்கும் நடுவில் இருந்த சஞ்சனா தடுமாறி தனது பின்னால் இருந்த சுவற்றில் மோதிக் கொண்டாள்.

அவ்வளவுதான் அவனது அம்மா மீது நந்தாவின் கார் மோதிய போது எழுந்ததே அதே பதற்றம் சூழ்ந்தது கௌதமை.

“சஞ்சனா.. சஞ்சனா ஒண்ணுமில்லைல. உனக்கு ஒண்ணுமில்லைல. பாப்பாக்கு ஒண்ணுமில்லைல்ல” அவளை தாங்கி நிமிர்த்தி அவளது வயிற்றை அவசரமாக வருடினான்.

ஒரு திறமையான சதுரங்க வீரனாய், ஒரு காதலனாய், ஒரு கணவனாய் ஏன் ஒரு அரக்கனின் வடிவத்தில் கூட பார்த்து விட்ட கௌதமை இன்று ஒரு தந்தையின் ரூபத்தில் பார்த்து புன்னகைத்தாள் சஞ்சனா.

“அதெல்லாம் ஒண்ணுமே இல்லை கெளதம்”

இப்போது உச்சக் கட்ட வெறியுடன் பாய்ந்தான் நந்தாவை நோக்கி. அவன் மூளையை குறி பார்த்து நின்றது கௌதமின் துப்பாக்கி. அப்போது அந்த அறையின் கதவு பலமாகத் தட்டப்பட்டது.

சுரேந்தர் உள்ளே வந்திருப்பான் என்று புரிந்தது கௌதமுக்கு. கெளதம் ஜெயிப்பதற்கு இன்னும் சில நொடிகளே பாக்கி இருந்தன. அதற்குள் நந்தாவை கொன்று விட்டு தானும் சுட்டுக் கொள்ள வேண்டும்.

அதை செய்வதில் அவனுக்கு எந்த பயமும் இல்லை என்றாலும் அதை கண் முன்னே பார்த்துவிட்டு தாங்கிக் கொள்வார்களா என் மனைவியும் மகளும்? அவர்கள் இருவருக்கும் எதுவும் நேர்ந்து விட்டால்?

“இந்த கிராதகனுக்காக என்னுடைய இரண்டு பொக்கிஷங்களை நான் இழக்கத்தான் வேண்டுமா என்ன?” மனம் தட்டாமாலை சுற்றியது. “என்னவள் எனக்கு பரிசளித்த உயிரை இவனுக்காக இழக்க வேண்டுமா?”

அந்த நிலையில் அவனது அறிவும் மனமும் ஒன்று சேர்ந்து வேண்டாம் வேண்டாம் என்று அலற தன்னிலை விட்டு தளர்ந்து நின்றான், இத்தனை நாட்கள் நந்தா பட்ட வேதனைகளை எல்லாம் ரசித்திருந்த கௌதமெனும் கிராதகன்.

பல நாட்களுக்கு பிறகு அவனுக்கு தான் வாழ வேண்டும் எனும் எண்ணத்தை கொடுத்திருந்தாள் அவனது மகளெனும் தேவதை.

அந்த நொடியில் தான் தோற்றுப் போவதென மனதார முடிவெடுத்தான் கெளதம் சித்தார்த் எனும் தந்தை. அதனால் வரும் விளைவுகளை சந்தித்துக் கொள்வதெனவும் முடிவெடுத்தவன் அடுத்த நிமிடம் தானே கதவைத் திறந்து தடுமாறி எழுந்து நின்ற நந்தாவை வெளியே பிடித்து தள்ளி இருந்தான் அவன்

“போய்த் தொலைடா. நான் என் பொண்ணோடவும் பொண்டாட்டியோடவும் சந்தோஷமா வாழணும்”

இவன் தள்ளிய வேகத்தில் அங்கே நின்றிருந்த சுரேந்தரின் மேலே போய் விழுந்தான் நந்தா.

“டே..ய்.. உன்னை அப்படி எல்லாம் வாழ விட மாட்டேன்டா” என கெளதம் மீது பாய முயன்ற நந்தாவை தாங்கிக் பிடித்து நிறுத்தினான் சுரேந்தர்.

ஒரு எரிமலையின் பலவித பரிமாணங்களுடன் நின்றிருந்த கௌதமை தாண்டி சஞ்சனாவை நன்றியுடன் தொட்டது சுரேந்தரின் பார்வை.

“மற்றதை பிறகு பேசிக் கொள்ளலாம். அவனை அழைத்து செல்” என்று சஞ்சனா கண்களால் சொல்ல அவளுக்குத் தலை அசைத்து விட்டு கௌதமை நோக்கி கூவிக் கொண்டே இருந்த நந்தாவை இறுக்கிப் பிடித்து தள்ளிக் கொண்டே நடந்தான் சுரேந்தர்.

அடுத்த நொடி அந்த அறையின் கதவை சாத்திக் கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தான் கெளதம் சித்தார்த். அவனது கண்களில் கண்ணீர் சரம் சரமாய் வழிந்தது. அது அவனது அன்னை சரஸ்வதிக்கான கண்ணீர்.

“அ..ம்..மா” வாய்விட்டு அழைத்தான் அவன் “நீ என்கிட்டேயே திரும்ப வந்துட்டியாமா? நீ எனக்கு வேணும்மா”

இத்தனை நாட்கள் அவனுக்குள் அடங்கி அடங்கி அழுந்திக் கிடந்தத் துயரம் எல்லாம் கண்ணீரின் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது.

அதைத்தான் அவனது முகிலினத் தோழிகளால் தாங்கிக் கொள்ள இயலவில்லையோ என்னவோ?. உறுமி மின்னி இடித்துத் தீர்த்தன.

ஒரு வழியாக நந்தாவை ஒரு நிலைக்கு கொண்டு வந்து தனது காரின் கதவைத் திறந்து கொண்டு சுரேந்தர் உள்ளே அமர்ந்த அந்த நேரத்தில் பளீர் என அடித்தது ஒரு மின்னல்.

அடுத்த நொடி “அ..ம்...மா” வென கேட்டது காருக்கு வெளியே நின்றிருந்த நந்தாவின் அலறல்.

இங்கே தனது அன்னையை நினைத்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தவன் அருகில் அமர்ந்து அவனை தனது மடியில் சாய்த்து கொண்டாள் அவனது மனைவி.

நிமிடங்கள் சில கடக்க அவளது மடியில் கரைந்து கொண்டிருந்தன அவனது ஆழ் மனத் துயரங்கள். அவனது கேசத்தை இதமாகக் கோதிக் கொண்டிருந்தன அவனை தனது காதலால் ஜெயித்து விட்ட அந்த வளை கரங்கள்.

சில நிமிடங்கள் கடந்து சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து நின்றான் கெளதம். கைக்குட்டை எடுத்து முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டான். தனது பர்சில் இருந்த அந்த ஐ.ஜிக்கான கடிதத்தை சுக்கல் சுக்கலாக கிழித்துக் போட்டான்.

“கெளதம் சித்தார்த்” என்று நிமிர்ந்து நின்றான். ரசித்து புன்னகைத்தாள் சஞ்சனா.

“ஸோ பிறக்குறதுக்கு முன்னாடியே இந்த கௌதம் சித்தார்த்தை ஒரு புரட்டு புரட்டிட்டா என் பொண்ணு” அவள் வயிற்றை வருடினான் கெளதம் சித்தார்த். “இது எங்க அம்மாதானே?”

“கண்டிப்பா” அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள் அவன் காதலி.

“நாம சரஸ்வதின்னே பெயர் வெச்சுக்கலாம் சஞ்சனா”

“நிச்சியமா கெளதம்” நெற்றியில் முத்தமிட்டாள் அவனை. இறுக்கிக் கொண்டாள் தன்னோடு.

காதலனாக இருப்பவர்கள் கூட காதலிகளை ஏமாற்றி விடுகிறார்கள். ஆனால் தந்தைகள் மகள்களை ஏமாற்றுவது இல்லை எனும் அவளது நம்பிக்கை அங்கே ஜெயித்து இருந்தது.

“நானும் அந்த பூக்கடைக்காரர் மாதிரி என் பொண்ணை உயிருக்குள்ள வெச்சு பார்த்துக்குவேன்” என சொன்னவனை நிமிர்த்தி அவனது முகத்தில் மாறி மாறி முத்தமிட்டாள் சஞ்சனா.

“உங்கப் பொண்ணு உங்களைக் காப்பாத்திடுவான்னு எனக்குத் தெரியும்” அவள் சொல்ல.

“ஏன் என் பொண்டாட்டி முகமும் சேர்ந்துதான் என்னை காப்பாத்திடுச்சு” என்று அவனது தோளில் முகம் புதைத்துக் கொண்டான் கெளதம்.

அடுத்த பகுதி >>>​
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
ஒரு வாரம் கடந்திருந்த நிலையில், கௌதமின் காரியதரிசி தாரிணியிடம் அனுமதி பெற்று அவனது மருத்துவமனையின் பிரத்தியேக அறையில் அவனை சந்திக்க வந்திருந்தான் சுரேந்தர்.

நேரம் மதியம். அதே மூன்று மணி.

“எஸ் கம் இன் மிஸ்டர் சுரேந்திரன்” கெளதம் சித்தார்த்தின் குரல் நமது உதவி ஆணையரை மிகக் கம்பீரமாக வரவேற்றது.

கௌதமின் முயற்சி மூலமாக அவனது பணியிடை நீக்கம் திரும்பப் பெறப்பட்டு பணியில் மறுபடியும் சேர்ந்திருந்தான் நமது உதவி ஆணையர்.

அவன் பணியில் சேர்ந்ததும் தன்னைத் தேடி வருவான் என்பதை கண்டிப்பாக எதிர்பார்த்திருந்தான் அவன். சின்ன புன்னகையுடன் உள்ளே நுழைந்தவனின் மிடுக்கை கண்டிப்பாக ரசித்தான் கெளதம்.

அதே நேரத்தில் இத்தனைக்கு பிறகும் பயம் என்ற சொல்லுக்கு அர்த்தமே அறியாதவன் போல் தனது சுழல் நாற்காலியையே சிம்மாசனமாகப் பாவித்து ஒரு சக்கரவர்த்தியை போல் அமர்ந்திருந்த கெளதம் சித்தார்த்தின் கம்பீரத்தை இப்போதும் சிலாகிக்காமல் இருக்கவே இயலவில்லை சுரேந்திரனால்.

இன்றும் அவனது மேஜை மீது அடுக்கப் பட்டு இருந்தன சதுரங்க காய்கள்.

அவனது மேஜைக்கு அருகில் வந்து அவனை நோக்கி கை நீட்டினான் சுரேந்திரன். எழுந்து நின்று அவன் கைப்பற்றிக் கொண்டான் கெளதம்.

இது அனிச்சை செயலா, போலிஸ் புத்தியா என்று பிரித்தறிய முடியாத படி சுரேந்தரனின் பார்வை இப்போதும் அவனது கை பிரேஸ்லெட்டுக்கு போனது.

இப்போது அங்கே பளபளத்துக் கொண்டிருந்தது ஜி.எஸ் என்ற எழுத்துக்கள் மின்னிய பிரேஸ்லெட்.

“பிரேஸ்லெட் நல்லா இருக்கா ஏ.ஸி. சர். அன்னைக்கு போட்டிருந்ததை விட இது நல்லா இருக்கில்ல? உண்மையை சொல்லுங்க” அவனது பார்வையை படித்த கௌதமின் வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள்

மெல்ல சிரிக்கத்தான் முடிந்தது சுரேந்திரனால்.

“சரி உட்காருங்க ஏசி சர்” என்று அமர்ந்தான் கெளதம்.

சரியாக அந்த நேரத்தில் இரண்டு கோப்பை காபிகள் வந்தன அவனது அறைக்கு.

“காபி குடிங்க ஏஸி சர் அப்புறம் பேசுவோம்” என்றான் புன்னகையுடன்.

அந்த சுழல் நாற்காலியில் அமர்ந்து காபியை பருகிக் கொண்டிருந்த சதுரங்க வீரனின் பார்வை போட்ட கணக்குகள், நந்தா செய்த எல்லாவற்றையும் அறிந்து கொண்டுதான் வந்திருக்கிறான் இந்த அருமை நண்பன் என்று சொல்லின.

அந்த போலிஸ் அதிகாரியின் முகத்தில் வாட்டம் மட்டுமே இருந்தது. இதுவரை அவன் தனது நண்பனை ஒரு உயிரை பறித்து விட்டவனாக நினைத்துப் பார்த்திருக்கக் கூட நியாயம் இல்லை.

“சொல்லுங்க ஏ.சி சர். இப்போ நான் என்ன செய்யணும்?” சுழல் நாற்காலியில் சாய்ந்து கொண்டு மெலிதாக ஆடிக் கொண்டிருந்த கெளதம் சித்தார்த்தின் பார்வை சுரேந்திரனை நேராக சந்தித்தது.

தனது சதுரங்க வாழ்கையில் பல சிக்கல்கள் வரலாம் என்பது தெரிந்தும் கூட தான் செய்து விட்ட குற்றங்களுக்காக சட்டத்தின் எந்த நடவடிக்கையையும் சந்திக்கத் தயாராகவே இருந்தான் கெளதம்.

“இனிமேலாவது நீங்க நிம்மதியா இருக்கணும் அதை செய்யுங்க போதும்” பட்டென சொல்லியே விட்டான் சுரேந்தர்.

“புரியலை ஏசி சர்” நெற்றி சுருக்கினான் கெளதம் சித்தார்த். முதல் முறையாக ஒரு கணக்கு புரியாமல் போனது நமது சதுரங்க வீரனுக்கு.

“நந்தாக்கு மின்னல் தாக்கி பார்வை போயிடுச்சு தெரியுமில்லையா உங்களுக்கு?” மெல்லக் கேட்டான் சுரேந்தர்.

“எஸ் தெரியும். ஸோ?”

“நீங்க அவனுக்கு காட்டின அந்த தனிமையையும் இருட்டும் கத்துக் கொடுக்காத ஒரு பாடத்தை இயற்கை தந்த அந்த நிஜ இருட்டு கத்து கொடுத்திருக்கு. என்கிட்டே நிறைய பேசினான் சர். அந்த கருப்பு ராத்திரிலே நடந்த எல்லாத்தையும் என்கிட்டே சொல்லிட்டான் சர்” சொன்ன அந்த நியாயமான போலிஸ் அதிகாரியின் குரலில் நிறையவே வேதனையும் வருத்தமும் “நியாயமா அவனுக்குப் பெரிய தண்டனை கிடைக்கணும். இந்த விஷயத்திலே உனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ அதை செய்யுன்னு என்கிட்டே சொல்லிட்டான் சர். நான் என்ன செய்யட்டும்?”

கௌதமுக்கு எதிரே இருந்த அந்த சதுரங்க அட்டையில் காய்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன.

“உங்களுக்கு என்ன தோணுது? நேர்மையா உண்மையை சொல்லுங்க” சில நொடிகள் கழித்து அவன் முகம் பார்த்து கேட்டான் கெளதம்.

“அவன் இருக்கிற நிலையிலே அவனை இதுக்கு மேலே எதுவுமே செய்யத் தோணலை சர் எனக்கு.” சொன்னான் அந்த நண்பன்.

அழகாய் வாய்விட்டு சிரித்தான் கெளதம் “யூ ஆர் எ வெரி கிரேட் ஃப்ரெண்ட் ஏசி சர்”

“இல்லை கெளதம். நீங்க இதை சட்டப்படி மூவ் பண்ண சொன்னா நான் என்னாலே முடிஞ்சதை கண்டிப்பா செய்யறேன்” படபடத்தான் சுரேந்தர். இப்போது கௌதமின் சிரிப்பு சற்றே தேய்ந்து புன்னகை ஆனது.

“தேவை இல்லை சுரேந்தர்” என்றான் நிதானமாக “இத்தனை நாள் கடவுள் இயற்கை இது மேலே எல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை எனக்கு. ஆனா இப்போ கொஞ்சம் வந்திருக்கு. நந்தாவுக்கு கிடைக்க வேண்டிய தண்டனையை அந்த இயற்கை கொடுத்திடுச்சுன்னு தோணுது. ஸோ நீங்க விட்டுடுங்க” என்றான் நிதனாமாக

“அதுக்கும் மேலே நான்தான் இத்தனை நாள் கெளதம் பண்ணை வீட்டிலே விருப்பத்தோட தங்கி இருந்தேன். அவன் எதுவுமே செய்யலைன்னு சொல்லிட்டான் சர் நந்தா.” படபடத்தான் சுரேந்தர்.

நந்தா மாறிவிட்டான் என்பதை கௌதமுக்கு சொல்ல வேண்டிய அவசரம் அதில் இருந்ததைப் போலவே இருந்தது.

“அவன் யார் சர் இதை சொல்ல? நான் சொல்றேன். நான் தப்பு பண்ணி இருக்கேன்னு. நீங்க என் மேலே என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுங்க. ஐ ஆம் ரெடி ஃபார் எவ்ரிதிங் “ இது கெளதம் சித்தார்த்.

நந்தா விட்டுக் கொடுத்ததை அவனால் ஏற்றக் கொள்ள முடியவில்லை என்று தோன்றியது சுரேந்தருக்கு.

“இல்ல இல்ல இல்ல கெளதம். இனிமே அவனே சொன்னாலும் நான் உங்க மேலே எந்த நடவடிக்கையும் எடுக்கறதா இல்லை. உங்க இழப்பு ரொம்ப பெருசு கெளதம். அவன் செஞ்ச தப்பு ரொம்ப பெருசு. சில இழப்புகளுக்கான சில குற்றங்களுக்கான பதிலை இயற்கையே கொடுத்திருச்சு. நாம இனிமே அதை கிளறாம இருப்பது கூட நல்லதுதான் சர்” என்று தனது பையில் இருந்த அந்த உலக உருண்டையை எடுத்து கௌதமின் மேஜை மீது வைத்தான் சுரேந்தர்.

“இதை உங்ககிட்டே கொடுக்க சொன்னான் சர் அவன்”

ஏதேதோ எண்ண ஓட்டங்கள் அவனை சூழ அந்த உலக உருண்டையை கையில் எடுத்து அதில் இருந்த சஞ்சனாவை பார்த்திருந்தான் கெளதம்.

நடந்தவைகள் ஒவ்வொன்றாக இருவர் மனதிலும் ஓடி மறைய சில நிமிடங்கள் அங்கே அமைதி மட்டுமே நிலவியது. இப்போது அந்த சதுரங்க அட்டையில் காய்கள் மெல்ல நகர்ந்தன.

நான்கு நாட்கள் முன்பு

அங்கே கௌதமின் மருத்துவமனையில்தான் படுத்துக் கிடந்தான் நந்தா. அந்த நேரத்தில் அவளது தந்தை ஹரிஹரன் எப்போதும் போல தொழில் விஷயமாக வெளியூர் கிளம்பியிருந்தார்.

வரலக்ஷ்மி சற்று உடல் நிலை தேறி இருந்தார். இருவரும் ஒரே மருத்துவமனையில் இருக்க, வரலக்ஷ்மியை சந்திக்க சென்றிருந்த சஞ்சனாவை நந்தாவை பார்க்க அழைத்துக் கொண்டே இருந்தார் நீலகண்டன்.

அவருக்கு நடந்த கதை எதுவுமே தெரியாதே.

ஏதேதோ சாக்கு சொல்லி மறுத்து மறுத்து பார்த்துவிட்டு ஒரு கட்டத்தில் கௌதமை அழைத்து விஷயத்தை சொல்லி இருந்தாள் அவள்.

சஞ்சனாவை அவனைப் பார்ப்பதிலிருந்து தடுக்கவே இல்லை கெளதம்.

ஒரு அரசனைப் போல இத்தனை நாட்கள் வாழ்ந்து பழகிய நந்தாவை திடீரென சூழ்ந்து விட்ட அந்த இருள் மொத்தமாக புரட்டிப் போட்டிருந்தது.

நந்தா அந்த பண்ணை வீட்டிலிருந்து திரும்பி வந்ததும் “எங்கேடா போயிட்டே கண்ணா?” என அவனை அணைத்து கொண்டு நீலகண்டன் கதறிய போதுதான், தான் அவர்களை பற்றி எல்லாம் நினைத்தது தவறு என்று மெல்ல புரிய ஆரம்பித்தது அவனுக்கு.

“அம்மா எப்படி இருக்காங்கபா. என்னாலே பார்க்கவே முடியலை” இவன் தந்தையிடம் அழுத போது

“நந்தா.. நந்தா.. எங்க அம்மாக்கு என்னாச்சுன்னு பாரேன். என்னாலே.. நகரக் கூட முடியலை ” என்று அன்று கெளதம் கெஞ்சியது நினைவில் வந்து ருத்ர தாண்டவம் ஆடியது.

அதன் பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் தான் செய்த அந்த செயலின் கோர முகத்தை நினைவில் இருந்து அகற்ற முடியாமல் தவித்தான் அவன்.

“நந்தா” அப்போது அவனைக் காண வந்த சஞ்சனாவின் குரலை அவனுக்கு அடையாளம் தெரிய மகிழ்ந்து போனான் அவன்.

“என்னைப் பார்க்கத்தான் வந்தியா சஞ்சனா. கெளதம் ஒண்ணும் சொல்லலையா?” முதல் கேள்வியாக கேட்டான் அவன்.

“அதெல்லாம் ஒண்ணும் சொல்லலை” என அவன் கரம் பிடித்துக் கொண்டாலும் அவளது சரஸ்வதி மேடம் மனதிற்குள் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்.

“தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணி எடுத்து தர முடியுமா சஞ்சனா. இருட்டு இன்னும் பழகலை. தட்டுத் தடுமாறி பழகிக்குவேன்” என்றான் மெதுவாக.

ஒரு ஆழ்ந்த மூச்சுடன் அவனுக்கு தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தவள்

“எல்லாம் சரியாகிடும் நந்தா.” என அவனுக்கு தைரியம் சொன்னாளேயொழிய சரஸ்வதிக்கும் கௌதமுக்கும் இவன் செய்ததைப் பற்றி ஒரு கேள்விக் கூட கேட்கவில்லை. அதுவே அவனை உறுத்தி இருக்க வேண்டுமோ?

“சரியாகலாம். நான் செஞ்ச தப்பை உணர்ந்தா கொஞ்சமாவது சரியாகலாம்” சொன்னான் அவன்.

இதையெல்லாம் கௌதமிடம் சொல்லி இருந்தாள்தான் சஞ்சனா. மனித மனங்களையும் வாழ்கையையும் நிமிடத்தில் புரட்டிப் போடும் இயற்கையின் சக்தியை கௌதமால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஏதேதோ யோசனைகளிலிருந்து சற்று நேரத்தில் சுரேந்தர் கெளதம் என இருவர் மனமும் ஒரு நிலைக்கு வந்திருக்க

“தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங் கெளதம். நான் கிளம்பறேன்” என எழுந்தான் சுரேந்தர். இவனிடம் மறுபடியும் கைக்குலுக்கி விட்டு அவன் கதவை நோக்கி நகர ஏதேதோ யோசனைகளுடன் அமர்ந்து இருந்தான் கெளதம்.

நந்தாவின் அந்த கருப்பு இரவின் சிரிப்பு இன்னமும் நினைவில் இருக்கிறதுதான் கௌதமுக்கு. நியாயமாக நந்தாவின் இன்றைய நிலை அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்க வேண்டும்தான். ஆனாலும் அப்படி எதுவும் இல்லாதது அவனுக்கே வியப்பாகத் தான் இருந்தது.

மாறித்தான் போயிருக்கிறான் கெளதம் சித்தார்த். ஆனாலும் அவனது அன்னைக்கு நேர்ந்த அந்த கொடுமைக்கு காரணமானவனை அத்தனை எளிதில் மன்னித்து விட முடியும் என்றெல்லாம் தோன்றவில்லை அவனுக்கு .

அவனது காயங்கள் அடி மனதில் எப்போதும் தேங்கிததான் நிற்குமா? அல்லது மகள் பிறந்ததும் கொஞ்சம் ஆறுமா அவனுக்கே தெரியவில்லை. வரலக்ஷ்மியையும் நீலகண்டனையும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியுமா தெரியவில்லை. காலமே எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்.

திடீரென ஒரு நிலைக்கு வந்தவன் போல

“கிளம்பறீங்களா சுரேந்திரன்? அவ்வளவு ஈஸியா போக விட்டுடுவேனா உங்களை ஆங்?” கௌதமின் இடிக்குரல் கதவருகே சென்ற சுரேந்திரனை தொட்டது.

எதுவுமே புரியாமல் திரும்பினான் அவன். அவனை நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான் கெளதம். அவனது ஷூக்களின் அழுத்தமான ஒலி அந்த அறையில் எதிரொலித்து ஓய்ந்தது.

“எனக்குன்னு நெருக்கமான நண்பர்கள் ரொம்ப குறைவு சுரேந்திரன். எஸ். அன்னைக்கு நீங்க பண்ணை வீட்டிலே பார்த்தீங்களே அந்த ஆதித்யா இருக்கான்தான். அவன் நான் சொன்னதை எல்லாம் செய்வான் அப்படின்னாலும் மனசிலே இருக்கிறதை எல்லாம் கொட்டிடற அளவுக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட்.ன்னு யாரும் இல்லை. நீங்க எனக்கு அப்படி ஒரு ஃப்ரெண்டா இருப்பீங்களா?”

அவனை நோக்கி தனது கரத்தை நீட்டினான் கெளதம் சித்தார்த்

“உண்மையிலேயே நீங்க நந்தா மேலே வெச்சிருக்குற நட்பை பார்த்து எனக்கு பிரமிப்பா இருக்கு”

அவனது கண்களுக்குள் மாற்றி மாற்றி பார்த்த சுரேந்தரின் இதழ்களில் புன்னகை ஓடியது. கௌதமின் கையை இரு கரங்களாலும் பற்றிக் கொண்டான் சுரேந்தர்.

“வாவ்” என்றான் சிலாகித்து “உங்க ஃப்ரெண்டா இருக்கிறது எனக்கு பெரிய பெருமை சர். ஆனா என்னை ஃப்ரெண்டா ஏத்துகிட்டா உங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம் கெளதம்”

“ஸோ?” வாய்விட்டு சிரித்தான் கெளதம். “ஃப்ரெண்ட். ஆனாலும் என்னை கார்னர் பண்ணுவதை நிறுத்த மாட்டேன்னு சொல்ல வரீங்க ஆங்? நான் உங்களை புரிஞ்சு வெச்சிருக்கறது சரின்னா நீங்க கொஞ்ச நாள் கழிச்சு அவனை மன்னிச்சு, உங்க அருமை நண்பனுக்கு பார்வை வர உதவி செய்ய முடியுமான்னு கேட்டாலும் கேட்பீங்க”

சுரேந்திரனும் அவனது சிரிப்பில் இணைந்து கொள்ள ஒரு பெருமூச்சை எடுத்துக் கொண்டான் கெளதம்.

“மன்னிப்பு அப்படிங்கிற வார்த்தையில் எனக்கு நம்பிக்கை இல்லை சுரேந்தர். தெரியாமல் தவறி செய்யுற தப்புக்குத்தான் மன்னிப்பு. தெரிஞ்சே செய்யற தப்புக்கு தண்டனை மட்டும்தான். இழப்பை காரணம் எந்த தப்பையும் நியாயப் படுத்தவே முடியாது. நான் உட்பட எல்லாருமே தெரிஞ்சே செய்யுற தப்புக்கு தண்டனை அனுபவிச்சுதான் ஆகணும். எப்படி பார்த்தாலும் நான் நந்தாவை கடத்தி வெச்சிருந்ததும் பெரிய குற்றம்தான், பார்க்கலாம். காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்” என அந்த அருமை நண்பனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் கெளதம் சித்தார்த்.

அங்கே சென்னையில் அவரது தோட்டத்தில் அமைதியாக தியானத்தில் அமர்ந்திருந்தார் தாத்தா அப்போது மெலிதான புன்னகை வந்து நின்றது அவரின் இதழ்களில். பேரனின் வார்த்தைகள்தான் அந்த புன்னகைக்கு காரணமோ?

அவருக்குத் தெரியாததா? எல்லா செயலுக்கும் ஒரு எதிர்வினை கண்டிப்பாக உண்டு. செய்யும் தவறுகளை உணர்ந்து சில பரிகாரங்களை தேடிக் கொண்டால் அந்த தண்டனையின் தாக்கம் குறையலாம்.

அன்றிரவு தனது இசை கீபோர்டின் அருகில் அமர்ந்து அதனோடு விளையாடிக் கொண்டிருந்தான் கெளதம்.

“வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா?

விளையாட ஜோடி தேவை”


மனம் அத்தனை லேசாகிப் போயிருந்தது. அப்போது அவனை பின்னாலிருந்து கட்டியணைத்தாள் சஞ்சனா.

“ஹேய்.. கட்டி எல்லாம் பிடிக்காதே. வயித்திலே இருக்கிற என் மகளுக்கு வலிக்கும்” சட்டென திரும்பி மனைவியை தள்ளி நிறுத்தினான் கெளதம்.

“அடப்பாவி இன்னும் பத்து மாசம் எதுவுமே கிடையாதா?”

“கண்டிப்பா கிடையாது” அவன் மறுபடியும் இசைக்க ஆரம்பிக்க

“போ.. உனக்கு என்னை விட உன் பொண்ணைத்தானே ரொம்பப் பிடிக்கும். நான் உன் கூட பேசக் கூட மாட்டேன்” அவள் பொய் கோபத்துடன் விலகிப் போக எத்தனிக்க அடுத்த இரண்டாம் நொடியில் அவன் மடியில் இருந்தாள் அவள்.

“இப்போ கூட வெண்ணிலவே வெண்ணிலவேன்னுதான் வாசிக்கிறேன். அதிலிருந்தே உனக்கு எல்லாம் புரிய வேண்டாமா? நம்ம பொண்ணுக்கு இனிமேதான் உயிர் கொடுக்கப் போறே. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு உயிரை மீட்டுக் கொடுத்த தேவதை சஞ்சனா நீ” என அவள் நெற்றியில் தொடங்கி இதழ்களில் முடித்தான் தனது இதழ் பயணத்தை. “நீ இல்லைனா நான் இல்லை. எப்பவுமே”

அவனது அணைப்பில் அவனுக்குள் லாவகமாக புதைந்து கொண்டாள் அவன் மனைவி.

“ஸோ” என கண்சிமிட்டினான் அவன் “என் பொண்டாட்டி தி கிரேட் கைனகாலிஜிஸ்ட்க்கு தெரியாததா? அவங்க என்ன சொன்னாலும் சரிதான்”

நீண்ட நாட்களுக்கு பிறகு அன்றிரவு, தனது மனைவியுடனும் வரப் போகும் மகளுடனும் நிம்மதியாக உறங்கிப் போனான் கெளதம் சித்தார்த்!

நிறைந்தது
உங்கள் கருத்துகளை இந்தத் திரியில் தெரிவியுங்கள் தோழமைகளே!

நீ-அறியாயோ-முகிலனமே - கருத்துக்கள்
 
Status
Not open for further replies.
Top Bottom