கொடிமலர் 9
தன்னை நிரூபிக்கும் போராட்டத்தில் நந்தனா தன் சுற்றுப்புறத்தில் இருக்கும் அனைத்தையும் மறந்து விட்டாள் என்று தான் கூற வேண்டும். ஆனால் சிலவற்றை மறக்க முடியாமல் தான் தவித்தாள். வீட்டிற்கு சென்றபோது அங்கு நடந்த விவாதங்கள் அவள் மனதை சுக்கு நூறாக கிழித்து இருந்தது. இதெல்லாம் எப்பொழுதுமே சகஜம் தான் என்றாலும் கூட, இரண்டு வருஷங்கள் கழித்து கண்ட மகளை ஆதூரமாக வரவேற்கவில்லை என்றாலும் கூட, வீட்டு பெண்ணாக மதித்தாவது நடத்தி இருந்திருக்கலாம்.
இவளை விட தகுதியில் குறைந்திருக்கும், இவளது அத்தை மகனுக்கும் சித்தப்பா மகளுக்கும், அவர்களது சொந்த அலுவலகத்தில் வேலை செய்வதற்கு அனுமதியும் கொடுத்து , நிர்வாகத்தை செய்ய தேவையானவற்றை அவர்கள் எண்ணம் போல செய்து கொடுக்கும் இதே குடும்பம், இவளை மட்டும் தூரம் நிறுத்தி வைத்திருப்பது எப்படி நிகழ முடியும் என்று அவள் மனதில் வேதனை. இந்த வேதனைகளுக்கான விடை அவளுக்கு தெரியும். ஆனால் அந்த விடையை மட்டும் வைத்துக்கொண்டு, தனக்கு கிடைத்திருப்பது பெரியது என்று சமாதானம் செய்து கொள்ள அவள் தயாராக இல்லை.
தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும், அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டிய தலைவிதி இவளுக்கு ஏன்?
மற்றவர்கள் தவறு எல்லாம் இவள் தலையில் விதிக்க, இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
"என்னால் முடிந்தவரை நான் என்னை நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன்... ஆனால் அதை மதித்து பாராட்ட கூட இந்த வீட்டில் ஆள் இல்லையே" என்று அவள் மனம் கதறியது.
தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை சொல்லும்போது கூட அவர்களது வீட்டில் இதற்கான எந்த பிரதிபலிப்பும் இல்லை. வீட்டில் பெரியவர்களோ, இவளைப் பெற்றவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நபர்களோ அப்படியா...என்பது போல் கடந்து சென்றது இவளது எதிர்மறை உணர்வுகளை தூண்டி விட்டு விட்டது.
இந்த வெறுப்பு எல்லாம் சேர்ந்து விளைவிக்கும் நிகழ்வுகள்...ஒரு காலத்தில் இதை தாங்குவதற்கு, ராம் தயாராக இருக்க வேண்டும். ஆனால் எந்த விஷயங்களையும் சொல்லாமலேயே, நந்தனா தனது வாழ்க்கையில் பயணிக்க ஆரம்பித்து விட்டாள். கூட சக பயணியாக இல்லாமல், இவளுடன் வாழ்க்கை முழுவதும் இணையாய் பயணிக்க ராமும் தயாராகி விட்டான்.
காதல் எனும் மாயவலையில் சிக்கி சந்தோஷமாக கரை சேர்ப்பவர்கள் ஒரு சிலரே! அந்த வலையால் இறுக்கப்பட்டு உயிர்விடும் மீன்கள் போல் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கும் காதலர்கள் அதிகம்.
பல வருடங்கள் காதலித்தவர்கள் கூட திருமணமாகி சில மாதங்கள் அல்லது சில வருடங்களில் பிரியும் அவலங்களையும் நாம் சமூகத்தில் பார்க்க நேரிடுகிறது.
அதற்கெல்லாம், ஒருவேளை நந்தனா போல் உண்மையை தெளிவாகச் சொல்லாமல் தான் யாரை காதலிக்கிறோமோ அவர்கள் மீது முழுமையான நம்பிக்கை கொள்ளாமல், 'கண்டதே காட்சி, கொண்டதே கோலம்' என்ற அவந்தறை அவசர காதல் தான் காரணமோ? இவற்றையெல்லாம் நந்தனா பற்றி எழுதும்போது நான் யோசித்துப் பார்க்கிறேன்.
அவள் ஆழ் மனதில் இருப்பதெல்லாம் வெறுப்பு, எரிச்சல் போன்ற வேண்ட தகாத எண்ணங்கள் தான். இவை களையப் பட வேண்டியவை.
இதுபோன்ற இருக்கும் நபர்கள் தங்களுடன் சேரும் இணையின் வாழ்க்கையையும் சேர்த்து அழித்து விடுவார்கள். ஒரு சிலர் தங்கள் மீது இருக்கும் நம்பிக்கை குறைவை தங்கள் இணையின் மீது சுமத்தி, சந்தேகப் பிராணியாகி இருவரின் வாழ்க்கையும் நரகத்தில் தள்ளி கொள்வார்கள். நந்தனா இவற்றில் எதையெல்லாம் செய்யப் போகிறாள் என்பது போகப் போக தான் தெரியப் போகிறது.
ராமின் பாட்டி சொல்வது போல பாம்பு கூட பார்ப்பதற்கு அழகுதான். அதற்காக அதை ஆபரணமாக அணிந்து கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.
ஏற்கனவே ஏனோ சியாவின் குணத்தையும், நந்தனாவின் குணத்தையும் தன்னையும் அறியாமல் ஒப்பு நோக்க தொடங்கி விட்டான் ராம்.
ஷ்யாம் சியாவிடம் இன்று மணம் செய்துக் கொள்ள கேட்பதாக இருக்கிறான். அவளை அருகில் வைத்துக்கொண்டு, சாமியார் வேஷம் போட அவனால் முடியாது. நிச்சயம் மறுப்பாள். அதற்கு மாற்று ம்ம்ம்...அவனிடம் உண்டு. அவள் மறுப்புகளை ஒன்றுமில்லாமல் செய்யும் பிரம்மஸ்திரம் அது.
ஆனால், ஆரம்பத்தில் அதை அவன் உபயோகிக்க மாட்டான்.
ஷ்யாமின் பெற்றோர்கள்,அவனுக்கான வரனை தேர்ந்தெடுத்து வைத்திருக்க, தீபாவளி பண்டிகை கொண்டாட சென்றவன் தனது மறுப்பை வெகு அழுத்தமாக பதிவு செய்துவிட்டு வந்து விட்டான்.
"மெய்ன் அபி ஷாதி நஹின் கர்நா சாதாஹ்...மேனேய் அபி விக்கலாங் வ்யக்தி கே ரூப் மே காம் கர்னா ஷுரு கியா ஹை|மேரா மர்ஜி ஸே ஷாதி ஹோனா ச்சாஹி ஹை |க்ருப்பையா இஸ்ஸே மஜ்பூர் னா கரே||"(எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம். இப்போதான் நான் தொழில்ல கால் ஊன ஆரம்பிச்சிருக்கேன். கல்யாணம் என்னோட சுய விருப்பத்தில் நடக்க வேண்டியது. என தயவு செய்து நிர்பந்தப்படுத்த வேண்டாம்)" என்று தீர்மானமாக சொல்லி விட்டு வந்துவிட்டான்.
அவனுக்கு எப்படியாவது வீட்டில் பேசும் திருமண பேச்சுக்களில் இருந்து தப்பியாக வேண்டிய நிர்ப்பந்தம். அதற்கு அவன் எவ்வளவு நேரம் எடுத்தாலும், காலம் சென்றாலும் போராட்டத் தயார். அது என்னவோ ஆரம்பம் முதலே,
தொழில் முறையிலும் சரி, அவனது அந்தரங்க விஷயங்களிலும் சரி வேறு யார் தலையிட்டாலும் அவன் அனுமதிக்கவில்லை. இன்றைய அவனது தனிமைக்கு இவைகள்தான் காரணம்.
குடும்பத் தொழிலை பார்ப்பதற்கு இல்லை என்று விட்டு வேறு எடுத்து படித்தான். அதற்கு ஏற்ற தொழிலில் இறங்கி, ஓரளவு வெற்றி கண்டவன் எந்த விஷயம் ஈர்த்தது என்று தெரியாமல் இன்று பெங்களூரில். வெற்றிக்கொடி தான் என்றாலும் கூட, இப்போதெல்லாம் குடும்பம் மொத்தமும் ஒன்றாக நிற்க தான் மட்டும் தனியாய் இருப்பது அவனுக்கு உறைக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் அவன் தன்னை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. எதற்காக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு உண்டு. அவனை அவனுக்காக அவனாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். குடும்பத்திடம் அவனது எதிர்பார்ப்பு இவ்வளவுதான்! எதற்காகவும் தன்னை நிர்பந்திக்க கூடாது. தோல்வியோ வெற்றியோ அது அவனைச் சேர்ந்தது. குடும்பத் தொழிலை தான் செய்ய வேண்டும், குடும்பத்துடன் தான் இருக்க வேண்டும் போன்ற அவர்களது வீட்டு கோட்பாடு அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
இதோ இன்று அவன் முன் சியா நிற்கிறாள். அவளிடம் திருமணத்திற்காக கேட்டாக வேண்டும். காதலை முன்னிறுத்தி கேட்பதா... இல்லை வேறு விதமாக அவளை அணுகுவதா என்று குழம்பிப் போய் உட்கார்ந்திருக்கிறான். உண்மையை சொல்லப்போனால் அவளிடம் ஈர்ப்பு உண்டு. அவளுடன் வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை உண்டு.ஆனால் அது காதல்தானா என்பது பற்றி அவனுக்கே இன்னும் தெளிவாகவில்லை. அவளுடன் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது... முழு நாளும் அவளுடனேயே மட்டும் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதற்குப் பெயர்தான் காதல் என்றெல்லாம் ஒப்புக்கொள்ள அவன் தயாராக இல்லை. ஆனால் இந்த ஜென்மத்திற்கு அவனை பொறுத்தவரை திருமணம் என்றால் அது இந்த பெண்ணுடன் மட்டும் தான்! அவன் வாழ்க்கை முழுவதும் பயணப்பட விரும்புவதும் இந்த பெண்ணுடன் தான். அது எப்படி வார்த்தை வடிவம் கொடுத்து அந்த பெண்ணிற்கு புரிய வைப்பது என்று... மனதில் ஒவ்வொரு மனிதருக்கும் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் உண்டு. அதை தெரியப்படுத்தும் விதம் மாறுபடலாம். அதைக் கேட்பவர்களுக்கு அது வேறு விதமாக எடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கலாம்.
" பாஸ் இன்னும் கிளம்பலையா நீங்க... வைய் பாஸ்... ரொம்ப சோர்வா இருக்கீங்க... இருங்க..டீ வேணுமா " என்று கேட்டவாறே பனட்டரிக்குள் நுழைந்தாள் சியா.
அவன் சோர்ந்திருக்கும் நேரங்களில் அவனுக்கு டீ வார்த்து கொடுப்பதுடன் சேர்த்து அவன் எதில் அமர்ந்து கொண்டு சிறிது நேரம் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்து விட்டு சிறிதாக அவனது உணர்வுகளை மீட்டெடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கவும், தானும் கிளம்பி என்று இதெல்லாம் அடிக்கடி சியா செய்வதுதான்! அவனது தனிமை அவனுக்கு கசப்பாக இருக்கிறது என்று அவள் புரிந்து தான் வைத்திருக்கிறாள். அவளுக்கு தன் உணர்வுகள் புரியும் என்று இவன் தான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
சியாவுக்குமே அவன் மீதான ஈர்ப்பு உண்டு. ஆனால் தனது பொருளாதார நிலை,தனது தகுதி,தனது வேலை, தனது குடும்பம், என நிறைய காரணங்களை கொண்டு தன்னை தன் நிலையிலேயே நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறாள் அந்த பெண். போதாது குறைக்கு அவனிடம் எக்கச்சக்கமாய் கடன் வேறு பெற்றாயிற்று. அவனிடம் வாய் விட்டு என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்கும் அந்தஸ்தில் அவள் நிச்சயம் இல்லை. அப்படி இருந்திருந்தால், எப்பொழுதோ தனது காதலை அவனிடம் சொல்லி இருப்பாள். ஆம்,நிச்சயம் இது காதல் தான்! இது என்னதான் வெறும் ஈர்ப்பு என்று அவளே தனக்குத்தானே சப்பை கட்டு கட்டிக் கொண்டாலும், அவனைத் தவிர வேறு ஒரு ஆண்மகனை தனது வாழ்வில் அவளால் அனுமதிக்க முடியாது. வேலை தளங்களில் எத்தனையோ ஆண்களை தினமும் சந்திக்கிறாள். அதில் அவளது அழகையும் கம்பீரத்தையும், கூடவே முகம் சொல்லும் ஒரு அப்பாவித்தனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்ள கேட்ட ஆண்களும் கூட உண்டு. இளங்கோவன் - ஊர்மிலை திருமண நிச்சயம் அன்று கூட இளங்கோவனின் பெரியம்மா, தனது மகனுக்கு சியாவை கேட்டாள் தான்!
இவளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால் அடுத்த தங்கள் நிலை என்ன என்று சியாவின் பெற்றவர்கள் ஒரு பக்கம் யோசித்துக் கொண்டிருக்க, சியா நிமிர்வாக சொல்லிவிட்டாள் " இவ்வளவு செலவையும் கல்யாண செலவையும் நான் ஆபீஸ்ல லோன் வாங்கி தான் பண்றேன் ஆன்ட்டி... திரும்பவும் லோன் எடுக்க முடியாது ".
இந்த ஆடம்பர கல்யாணத்திற்கு ஆகும் செலவு என்ன என்று தோராயமாக தெரிந்த பெரியவள் அதற்குப் பிறகு சியா இருக்கும் பக்கம் கூட வரவில்லை.
சியாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் கூட அவளது கடனை பற்றி கேட்டால், அவள் இருக்கும் திக்குக்கு கூட வர மாட்டார்கள் என்பது நிஜம் தான்!
அப்படிப்பட்ட கடன் நிலையில் இருப்பவள், கடன் கொடுத்தவனையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டால்?
இதையெல்லாம் நினைத்து நினைத்து சியாவிற்குள் பெருமூச்சு எழுந்தது. இவளது எதிர் கதிரையில் அமர்ந்து கொண்டிருந்த ஷ்யாம் இவளது முகத்தை கொண்டு இவள் யோசிப்பவற்றை அவதானித்துக் கொண்டிருந்தான். ஆனால் நிச்சயம் எந்த ஆனாலும் எந்த ஜென்மத்திலும் எந்த பெண்ணின் மனதையும் படிக்க முடியாது... ஒருவேளை ஷியாமால் சியாவின் மனதை படிக்க முடிந்திருந்தால்...