Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பால்மனம் மாறாக் கவிதை

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
வணக்கம் பிரெண்ட்ஸ்!

வண்ணங்கள் போட்டிக்காக நான் பதிவிடும் முதல் கதை

"பால்மனம் மாறாக் கவிதை"

கதை:

யோசிக்கும்பொழுதே தலைசுற்றியது வசுந்திரனுக்கு.

"கடவுளே! இவங்கல்லாம் மனுஷங்களா இல்ல மிருகங்களா? தெரியலை. மிருகங்கள்கூட இந்த மாதிரி இரக்கம் இல்லாம இருக்காதுங்க" என்றான் மிகுந்த கோபமாய்.

"என்னாச்சு வசு?" என்று அவன் அருகில் வந்து மரத்தடியில் அமர்ந்தாள் திருவிழி.


"நான் பெண் சிசு கொலைகள் பத்தி ஒரு ஆய்வு செய்துட்டு இருக்கேன்னு சொன்னேன்ல விழி?" என்று கேட்டான் வசுந்தரன்.

"ஆமா!" என்றாள் திருவிழி.

"அதை பத்தி தெரிஞ்சுக்க தெரிஞ்சுக்க மனசு பதறுது. ரொம்ப கஷ்டமா இருக்கு. குழந்தைகள்னு கூட பார்க்காம எவ்ளோ கொடூரமா கொல்றாங்க?" என்றான் வசுந்த்ரன்.

"ஹ்ம்ம்!" என்றாள் விழி.

"இன்னைக்கு பெண் குழந்தைகள் தெய்வம் அவங்களை பாதுகாக்கணும்னு எவ்ளோ பேர் சொல்றாங்கள்ல? உண்மையா 'பேட்டி பச்சாவ்' (Save the girls) என்று பெண் குழந்தைகளை காக்குமாறு அறிவுறுத்தும் இந்த அரசு, பெண் சிசுக் கொலைக்கு துணை புரிந்திருக்கிறதுன்னு சொன்னா நம்புறதுக்கு கடினமா தான் இருக்கும் ஆனா அது தான் உண்மை.

1970களில் மக்கள் தொகை பெருக்கம் மிகப்பெரிய பிரச்னையாக உருப்பெற்றபோது அதை எப்படி தடுக்கலாம்ன்னு அப்போ இருந்த ஆட்சியாளர்கள் ஆலோசித்தனர். மக்கள் ஆண் குழந்தை பெறும் வரை குழந்தைகளை பெற்றுக் கொள்வதால் தான் மக்கள் தொகை வேகமாக பெருகுகிறதுன்னு தெரிஞ்சுது. பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டறிந்து பிறக்காமல் தடுத்தாலே மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்கலாம்னு எய்ம்ஸ் (AIIMS) யோசனையை அரசுக்கு முன்மொழிந்தது. அதனால அரசின் ஊக்கத்துடன் முக்கிய மருத்துவமனைகளில் பாலின பரிசோதனை நடத்தப்பட்டன.

கர்பப்பையில் சிசுவின் வளர்ச்சி, பனிக்குட நீரின் அளவு, நஞ்சுக் கொடியின் நிலை போன்றவற்றைப் பற்றி அறிய உதவும் வரமாக கிடைத்த அல்ட்ராசவுண்ட் மூலம், பாலின பரிசோதனை செய்ய முடிவதால், அல்ட்ராசவுண்டே லட்சக்கணக்கான பெண் சிசுக்களுக்கு எமனா மாறிடுச்சு.

முன்னெல்லாம் பெண் குழந்தை பிறந்த பிறகு அதை கள்ளிப்பால் ஊற்றி, அரலிவிதை, நெல்விதைன்னு நிறைய வழிகளில் பெண் குழந்தைகளை கொல்லும் முறை இவ்ளோ ஏன் பெண்பிள்ளைன்னு அறிவாள்மனைல அறிஞ்ச கொடூரம் கூட அல்ட்ராசவுண்ட் வந்தபிறகு பிறப்பதற்கு முன்பே கருவிலேயே அபார்ஷன் என்ற பெயரில் கொல்வதாய் மாறிப்போனது. 1951 சென்செக்ஸில் 1000 ஆண்களுக்கு 946 பெண்களாக இருந்த ஆண்-பெண் விகிதாச்சாரம் 1991 சென்செக்ஸில் 927 ஆக குறைந்த போதுதான் இந்திய அரசு விழித்துக்கொண்டது. பாலியல் பரிசோதனையை தடுப்பதற்காக 1994ல் PNDT சட்டத்தை கொண்டு வந்தது..
பெண் சிசுக்கொலையை தடுக்க வந்த சட்டம் என்ன சொல்லதுன்னா கர்ப்பப்பையில் உள்ள சிசுவின் பாலின பரிசோதனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.


மருத்துவரொருவர் பாலின பரிசோதனை செய்தது நிரூபிக்கப்பட்டால், ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்; மேலும் ஐந்து ஆண்டுகள் அவரது அங்கீகாரம் பறிக்கப்படும். இந்த குற்றத்தை மீண்டும் புரிந்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்; அவரது அங்கீகாரம் பறிக்கப்படும். பாலின பரிசோதனை செய்வதற்காக மருத்துவரையோ, பரிசோதனை நிலையங்களையோ அணுகுபவருக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றத்தை மீண்டும் புரிந்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்னு அந்த சட்டத்தில் இருக்கு.

சட்டம் கொண்டுவந்தாலும், இந்த சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் பேர் தான். இதுவரை தண்டிக்கப்பட்ட எந்த மருத்துவரோட அங்கீகாரமும் பறிக்கப்படலை. ஒவ்வொரு நாளும் இந்தியால மட்டும் 7000 பெண் சிசுக்கள் அபார்ஷன் என்ற பெயரில் கொல்லப்படுவதாக ஐ.நா. கூறுகிறது. அல்ட்ராசவுண்ட் வந்த இந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 12 மில்லியன் பெண் சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளன.

இதை மிகப்பெரிய இனப்படுகொலை என்றுதானே கருத முடியும்? ஜி20 நாடுகளில் பெண்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத நாடு என்ற அவப்பெயரை 2012ல் நமது நாடு சம்பாதித்தது. சண்டிகர், டெல்லி, ஹரியானா, காஷ்மீர், சிக்கிம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 1000 ஆண்களுக்கு 900க்கும் கீழ்தான் பெண்கள் உள்ளனர். மேலும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆண்-பெண் விகிதாச்சாரம் 950க்கும் கீழ்தான் இருக்கு.

அவ்ளோ ஏன்? உண்மையா நடந்தது இது, தன் அனுமதி இல்லாமல், கருவிலிருந்த தனது குழந்தைகளின் பாலினத்தை சட்டத்திற்கு புறம்பாக கண்டறிந்த தனது கணவர் மற்றும் துணை போன மருத்துவமனைக்கு எதிராக PNDT சட்டத்தின் கீழ் முதல் வழக்கை பதிவு செய்தவர் டாக்டர். மீத்து குரானா. பெண் சிசுக்கொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் செய்யத முதல் பெண்மணி

குழந்தைகள் நல மருத்துவரான மீத்து என்ன சொன்னாங்க தெரியுமா, "2004ல் மூட்டு நிபுணர் டாக்டர் கமல் குரானாவை மணந்து அவரது வீட்டில் அடி எடுத்து வைத்தது வரைதான் என் வாழ்வில் மகிழ்ச்சி இருந்தது. வரதட்சணையைக் குறைவாக கொண்டு வந்ததால், கணவர் மற்றும் அவரது குடும்பத்தால் தினமும் அவமானப்படுத்தப்பட்டேன். 2005ல், நான் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகப் போவதை அறிந்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


ஆனா, கருவிலுள்ள குழந்தை ஆணா? பெண்ணா?ன்னு தெரிஞ்சுக்க பாலின பரிசோதனைக்கு உட்படனும்னு என் கணவரும், மாமியாரும் கட்டாயப்படுத்தினாங்க. ஒரு அறையில், மூன்று நாட்கள் உணவில்லாமல் பூட்டி வைக்கப்பட்டேன். முட்டைக்கு அலர்ஜியான என்னை, வலுக்கட்டாயமாக முட்டையில் செய்யப்பட்ட கேக்கை சாப்பிட வைத்தனர். அதனால் அலர்ஜி ஏற்பட்டு மயக்க நிலையில், டெல்லியிலுள்ள ஜெய்ப்பூர் கோல்டன் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டு, கிட்னியை அல்ட்ராசவுண்ட் எடுப்பதாக பொய்யாக கூறி, இரண்டு குழந்தைகளும் பெண்கள் தான் என்று அல்ட்ராசவுண்ட் மூலம் அறிந்தததும், அபார்ஷன் செய்ய கட்டாயப்படுத்தினர். அதற்கு சம்மதிக்காத என்னை துன்புறுத்தினர்.

ஒரு கட்டத்தில் படிக்கட்டிலிருந்து தள்ளிவிடும் வரை போன பின், என் குழந்தைகளைக் காக்க ரத்தம் வழிய என் தாய் வீட்டை சென்றடைந்தேன். காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்ற எனக்கு 'உங்க கணவர் கேட்கற மாதிரி ஒரு ஆம்பள குழந்தைய பெத்து தர வேண்டியதுதானே' என்ற கிண்டல்களும், அறிவுரைகளும் தான் கிடைத்தன. பெண்ணின் கருமுட்டையுடன் சேரும் ஆணின் விந்திலுள்ள க்ரோமோசோம் y ஆக இருந்தால் அது ஆணாகவும், x ஆக இருந்தால் அது பெண்ணாகவும் வளர்கிறது. குழந்தை பெண்ணாக இருந்தால் அதற்கு காரணமான ஆணை குற்றம் கூறாமல் அப்பாவியான பெண்ணை குற்றம் கூறும் ஆணாதிக்க சமூகம் இது. காவல் நிலையத்தில் நீதி கிடைக்காததால் இறுதியில் நீதிமன்றத்தில் சட்டத்திற்கு புறம்பாக பாலியல் பரிசோதனை செய்த ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனை மற்றும் எனது கணவருக்கு எதிராக வழக்கு தொடுத்தேன். கடந்த எட்டு வருடங்களாக நீதிக்காக போராடி வருகிறேன். கருவிலுள்ள ஒவ்வொரு பெண் சிசுவும் கொல்லப்படாமல் தடுக்க எனது போராட்டம் தொடரும்" என்றார்.

பிரபல மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்ததால், மீத்துவின் வேலை பறிபோனது. எனினும் விடாமுயற்சியுடன் தனது இரட்டை பெண் குழந்தைகளுடன் தனது குடும்பம் மற்றும் பெண்கள் அமைப்புகளின் உறுதுணையுடன் நாடு முழுவதும் பெண் சிசுக்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 'இந்தியப் பெண் குழந்தைகளின் பாதுகாவலர்' என்று மீத்துவை வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன.

மீத்துவைப் போல், இந்தியாவில் நடக்கும் சட்டத்திற்கு புறம்பான பாலின பரிசோதனையை தோலுரித்துக் காட்டியவர்கள் மீனா ஷர்மா மற்றும் ஸ்ரீபால் ஷக்தவாத் ஆகிய இரு பத்திரிகையாளர்கள். 2005ல் ஜெய்ப்பூரில் சட்டத்திற்கு புறம்பாக சிசுவின் பாலின பரிசோதனைத் தேர்வை நடத்திய 140 மருத்துவர்களைத் தங்களது ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அடையாளப்படுத்தினர். ஜெய்ப்பூரில் மட்டுமே 140 பேர் என்றால், இந்தியா முழுதும், பாலின பரிசோதனை செய்யும் மருத்துவர்களின் எண்ணிக்கையை கற்பனை செய்யவே பயமா இருக்கு." என்றான் வசுந்த்ரன்.

"அப்போ பெண் சிசுக்கொலையை தடுக்கவே முடியாதா?" என்றாள் திருவிழி.

"கண்டிப்பாக தடுக்க முடியும். ஹரியானாவின் நவான்ஷகர் மாவட்டமே அதற்கு நடைமுறை சான்றாகும். நம்ம நாட்டில ஆண்-பெண் விகிதாச்சாரம் குறைவாகவும் பெண் சிசுக்கொலை அதிகமாகவும் காணப்படும் மாநிலம் ஹரியானாவாகும் (1000 ஆண்களுக்கு 877 பெண்கள்) .

அதிலுள்ள நவான்ஷகர் மாவட்டத்துக்கு புதிதாக வந்த டெபுடி கமிஷ்னர் கிருஷ்ண குமார் பெண் சிசுக்கொலை எதிராக புதிய ஹெல்ப் லைன் நம்பர் உருவாக்கினார்; மாவட்டத்திலுள்ள அனைத்து அல்ட்ராசவுண்ட் பரிசோதனை நிலையங்களிலும் பாலியல் பரிசோதனை நடத்தப்படுகிறதா என்று ஆய்வு நடத்தினார்.

மாவட்டம் முழுவதும் பேரணிகள், நாடகங்கள்னு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக 2001 சென்செக்ஸில் 1000 ஆண்களுக்கு 785 பெண்கள் என்றிருந்த விகிதாச்சாரம் 2011 சென்செக்ஸில் 71 புள்ளிகள் உயர்ந்துள்ளது." என்றான் வசு.

"பெண் சிசு கொலைக்கெதிரா நடந்த எந்த கேசுக்கும் நியாயம் கிடைக்கிலையா?" என்றாள் திருவிழி.

"நம்பிக்கையளித்த முதல் தீர்ப்பு என்ன தெரியுமா?

2006ல் சட்டத்திற்கு புறம்பாக சிசுவின் பாலியல் பரிசோதனை நடத்திய டாக்டர் அனில் சபானிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி பல்வால், தனது தீர்ப்பில் குறிப்பிட்ட சில வரிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ''தன்னை தற்காத்துக் கொள்ளும் திறனுள்ள ஒருவரை கொல்வது கொடூரமான குற்றமாகும்; அதை விட கொடூரமானது தற்காத்துக் கொள்ளும் திறனில்லா ஒருவரை கொல்வது. சிசுவின் பாலியல் பரிசோதனை செய்வதன் மூலம் சிசு பெண் என்று அறிந்தால் அதை கருவிலேயே கொல்கிறார்கள். இனிமேல் இந்த கொடூரச் செயலை மற்றவர்கள் செய்யாமல் இருக்க இந்த தண்டனை அளிக்கப்படுகிறது". இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

மனித உயிரை காக்க வேண்டிய மருத்துவர்களே காசுக்காக பெண் சிசுக்களுக்கு எமனாவது நமது நாட்டின் சாபக்கேடு! சாதனையாளராக வரவேண்டிய பெண்கள் பலர், பிறப்பதற்கு முன்பே கொல்லப்படும் கொடுமைக்கு முடிவு வராதான்னு தெரியலை" என்றான் கண்கள் கலங்க.

அவனின் வேதனை அவளையும் தொற்றிக்கொள்ள,

"வசு! என்னை எவ்ளோ நாளா உனக்கு என்னை தெரியும்?" என்றாள் திருவிழி.

"எட்டு மாசம் உனக்கு தெரிஞ்சது. ஒன்றரை வருஷம் எனக்கு மட்டும் தெரியும்" என்று சிரித்தான்.

"என்னை விரும்பறேன்ன்னு நீ எவ்ளோ நாளா என்கிட்ட சொல்ற?" என்றாள் திருவிழி.

"நாளையோட அஞ்சு மாசம்" என்றான் புன்னகையுடன்.

"என்னை பத்தி என்ன தெரியும் உனக்கு?" என்றாள் திருவிழி.

"சின்ன வயசுலயே உன்னோட பேரண்ட்ஸ் இறந்துட்டாங்க. கஷ்டப்பட்டு தனியாளா படிச்சு நீ இப்போ ஒரு நல்ல வேலை செய்துகிட்டு இங்க விமென்ஸ் ஹாஸ்டலில் தங்கி இருக்க" என்றான்.

"வேற?" என்றாள் புருவம் உயர்த்தி.

"வேற என்ன? உனக்கு குழந்தைகள்னா கொள்ளை பிரியம். ரோஜா பிடிக்காது. வாசனையும் அழகும் உள்ள நம்ம மல்லி தான் பிடிக்கும். ஆடம்பரம் பிடிக்காது. எளிமையா இருக்கிறவங்க உன் பக்கத்துலையே இருக்கலாம். வேற... எனக்கு உன்கிட்ட பிடிச்சது இன்னைக்கு ஒரு பேங்க் மேனேஜரா நீ இருந்தாலும் அந்த கர்வம் உன் தலைக்கு ஏறவிட்டதில்லை. அப்புறம் இந்த அழகான முகத்துல இருக்க சின்ன ஒற்றைக்கல் மூக்குத்தி, ஒரே ஒரு கல் வச்ச தோடு பிடிக்கும். ஹ்ம்ம்... ரொம்ப மெல்லிசா நீ போட்ருக்க செயின்கூட பிடிக்கும். என்னடா இவன் நகைய சொல்றானேன்னு பார்க்காத. அங்கங்கே பொண்ணுங்க போட்றதுக்கு இடமில்லாமையோ, இல்ல என்கிட்ட எல்லாமே இருக்குன்னு சொல்றதுக்காக நகைகளை போட்டுகிறாங்க. ஆனா, நீ இவ்ளோ சிம்பிள்லா இருக்கிறது தான் பிடிக்கு. வேற நீயே சொல்லு" என்றான்.

மெதுவாய் சிரித்தவள். "இன்னும் இருக்கு வசு. உனக்கு மட்டுமில்ல யாருக்குமே தெரியாத ரகசியங்கள் இருக்கு. அதெல்லாம் தெரிஞ்சா எங்க நீ என்னைவிட்டு போய்டுவியோன்னு தான் உன்னை நட்பு வட்டத்தில் மட்டும் வச்சிருக்கேன். நீ மட்டுமில்ல எனக்கு வேற யாரையும் வாழ்க்கை துணையா ஏத்துகிற எண்ணம் இல்லை." என்றவள் சிறிதுநேரம் மௌனமாய் வேடிக்கை பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

"எங்க அப்பாவும் அம்மாவும் செங்கல் சூலைல கூலி வேலை செய்றவங்க. வீட்ல ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்க. பெரியவங்க ரெண்டு பேர் குழந்தைங்க ரெண்டு பேர்னு நாலு பேருக்கும் சேர்ந்தாப்புல மூணு வேளை சாப்பாடு கிடைக்காது. வீட்ல அவ்ளோ கஷ்டம். பிள்ளைகளுக்கு சாப்பாடு கிடைக்கும்னே பசங்க ரெண்டு பேரையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினாங்க. நாலு வருஷம் கழிச்சி நான் நின்னேன். குழந்தை வேணாம் கலைச்சிடலாம்னு எல்லோரும் சொல்ல ஒருவேளை பையனா இருந்தா? இருக்கட்டும்னு விட்டுட்டாங்க. ஆனா துரதுஷ்டவசமா மூணாவதும் பொண்ணா நான் பிறந்துட்டேன்." என்று நிறுத்தினாள்.

அவளின் திடீர் மௌனம் அவனை தாக்க மெல்ல, அவளருகில் நகர்ந்தாலும் இருவருக்கும் இடைவெளி இருக்குமாறு அமர்ந்தான். அவளின் வலகரத்தை மெல்ல இடகரத்தால் வருட, இருவரின் மேனியிலும் ஒரு சிலிர்ப்பு தட்டியது.

"விழி! உனக்கு கஷ்டமா இருந்தா விட்ரு. அது என்ன விஷயமா இருந்தாலும் பரவால்ல.. எனக்கு தெரிஞ்சாலும் பரவாயில்லை நான் அப்பவும் உன்னை விரும்புவேன். என் உடல்ல உயிர் இருக்கிற வரைக்கும் இதுல எந்த மாறுதலும் வராது." என்று சிரித்தான்.

அவன் விழிகளை தன் விழிகளில் கரைத்தவள், "இல்ல இன்னைக்கு நான் பேசுறேன் வசு. இத்தனை வருஷம் என் மனசுக்குள்ள பொத்தி வச்சிருந்த விஷயங்களை உன்கிட்ட சொல்லணும். மனசு ரொம்ப சுமையா இருக்கு வசு. உண்மையா ஒருத்தர் இருந்தாக்கூட இறக்கி வைக்கலாம்னு எவ்ளோ நாளா இல்ல எவ்ளோ வருஷமா என் மனசு ஏங்குதுன்னு உனக்கு தெரியாது வசு." என்றாள் கண்களில் வழியும் கண்ணீரின் உப்பு சுவையை இதழ்களில் சுவைத்தபடி.

"நீ காத்துகிட்டு இருந்த ஒரு தருணம் இதுதான்னு நினைச்சா இறக்கி வச்சிரு விழி. நான் கேக்குறேன். அதுமட்டுமில்ல உன் விரல் பிடிச்சிக்கிட்டு கடைசி வரைக்கும் உன்கூட நான் வருவேன்" என்று விழிகள் மூடி ஆதரவாய் அவள் கரம் அழுத்தினான்.

அந்த சின்ன புரிதலில் அவன் மீதான அன்பு பலமடங்காக உயர்ந்தது திருவிழிக்கு. தனக்கான தன்னோடு சேரப்போகும் உயிர் இது தான் என்று முடிவு செய்தாள்.

தன் மனம் திறக்க நினைத்தவள், "இவ்ளோ வருஷம் கழிச்சு அழிக்காமல் விட்ட உயிர் மீண்டும் பெண்ணாக பிறக்க உலகில் உள்ள ஒட்டு மொத்த வெறுப்பாக தெரிந்தேன் அவர்களுக்கு. எங்கு எது நடந்தாலும் நான் காரணமானேன். கஞ்சில்லாமல் பட்டினாயாய் ஜீவன்கள் வாடும் வீட்டில், எங்கப்பாக்கு காசு எப்படி வரும் என்று தெரியாது ஆனால் மறக்காமல் குடிச்சிட்டு வந்து கண்ணு மண்ணு தெரியாம பச்சைப்புள்ளைன்னுகூட பார்க்காம அடிவிழும் எனக்கு." என்று கூறினாள்.

"அடகடவுளே! இவ்ளோ மோசமாவா சின்ன குழந்தைகிட்ட நடந்துப்பாங்க?" என்றான் வசுந்த்ரன்.

"இதே மோசம்னா? இதுக்குப்பிறகு நடந்தது தெரிஞ்சா என்ன சொல்வ?" என்று கேட்டாள் திருவிழி வேதனை சிரிப்பொன்றை உதிர்த்து.

"என்ன நடந்தது?" என்றான் வசு.

"என் வாழ்க்கை போச்சு? அதான் நடந்தது" என்றாள் கண்ணீருடன்.

"விழி?" என்றான் லேசான அதிர்வுடன்.

"ஆமா வசு. பிடிக்கலைன்னா ஏன் கள்ளிப்பால் கொடுத்து கொல்லலைன்ற அளவுக்கு ஆறு வயசு வரைக்கும் நரகத்தை அனுபவிச்சேன். இதெல்லாம் பத்தாதுன்னு என் அப்பா குடிக்க காசில்லைன்னு ஒரு பணக்கார குடிகாரனுக்கு என்னை அடிமையா வித்துட்டு குடிக்க போய்ட்டார்." என்றாள் திருவிழி.

"அடப்பாவி! இவனெல்லாம் ஒரு அப்பாவா?" என்றான் வசு.

"பெண் குழந்தைகளை கண்ணுக்குள்ள வச்சு காப்பாத்துற இதே இடத்துல தான் என் அப்பா போல ஒரு சில அப்பாக்களும் இருக்காங்க" என்றாள்.

சில நிமிடங்கள் பேசாவிட்டாலும் அந்த நேரத்தில் மௌனம் கூட அழகாய் தெரிந்தது இருவருக்கும்.

"அதுக்குபிறகு என்னை அடிமையாய் வாங்கினவன் அடிமையை விட என்ன நாயைவிட கேவலமா நடத்தினான். அந்த வீடுன்ற நரகத்தில் இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியலை. நின்னா தப்பு உக்கார்ந்தா தப்பு. அந்தம்மா சின்ன புள்ளைன்னுகூட பார்க்காம நிறைய வயசுக்கு மீறின வேலை வாங்கும். அந்த மனுஷன் அவனை மனுஷன்னு சொல்ல முடியாது. ஆறு வயசு பொண்ணுகூட பார்க்காம குடிவெறில என்கிட்ட ஒரு நாள்..." என்று நிறுத்தி முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழ, ஆறுதலாய் அவளின் தலையை கோதினான் வசு.

"குடிகார பய... இவனுங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது. அப்படி என்ன தான் பெண்களோட உடல்ல தேடறானுங்களோ தெரியலை? சரி, இருபது வயசு பொண்ணுகிட்ட தான் பருவமங்கன்னு மயங்கி அவள் உடல் வாகுல கவருது அதுக்கு அந்த பொண்ணு போட்ற உடை தான் காரணும்னு முதல்ல சொன்னானுங்க.. ஆனா பருவமடையாத எட்டு வயது சிறுமி என்ன பண்ணா? அவளை பார்க்கும் போது அவன் மகளோட முகம் தெரியலையா? தான் யாருன்னு தனக்கே தெரியாத நிலையில் பருவமடைந்து சித்ரவதை அனுபவிக்கும் மாற்று திறனாளி பெண் குழந்தை என்ன பண்ணா? இவ்ளோ ஏன் உறவுகள் பத்தி முழுசா தெரியாத மூணு வயது குழந்தை சிரித்து கொண்டு போகும்போது அதை தவறாய் பார்ப்பது யாரோட தவறு? இதுவே கொடுமைன்னா ஒன்பது மாத குழந்தைக்கு என்ன தெரியும் அதோட பிஞ்சு உடல்ல என்னடா இருக்கு? பெண்னு பிறந்துட்டாலே அவளோட சதைமட்டும் தேவை மற்றபடி அவளோட மனசுன்றது ஒரு பொருட்டே இல்லன்னு நினைக்கிற எந்த ஒரு ஆணும் நல்ல குடும்பத்துல இருந்து வந்துருக்க முடியாது. உண்மையான மகள், மனைவி, அம்மா, பேத்தி, தங்கைன்னு பாசம் வைக்கிற எந்த ஒரு ஆணும் தன் மனைவியை மட்டும் தான் நேசிப்பான். மனைவிக்கிட்ட மட்டுமே தனக்கு தேவையான எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வான்." என்று தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தான் வசுந்தரன்.

"நீ சொல்ற எல்லாமே உண்மை தான் வசு. அன்னைக்கு அந்த குடிகாரபய தூங்கிட்டு இருந்த என்னை தேவையில்லாம தொட்டப்ப எனக்கு எந்த விவரமும் தெரியாது. ஆனா எனக்கு பிடிக்கலை அதனால தள்ளிவிட்டு எழுந்து வெளியே கத்திக்கிட்டே ஓடினேன். அவனோட பொண்டாட்டி வெளிய வர நடந்ததை சொன்னப்ப, என்ன தான் அவ கொடுமைக்காரியா இருந்தாலும் இந்த விஷயத்துல அவ புருஷனை வறுத்து எடுத்துட்டா. அன்னைக்கு ஏழு வயசுல என் பெண்மை தப்பிச்சுது. இருந்தாலும் தினமும் பயந்து உயிரோட சாக முடியாதே? அந்த நரகத்துல இருந்து தப்பிக்க நேரம் பார்த்துகிட்டு இருந்தப்ப தான் குடும்பத்தோட திருத்தணி கோவிலுக்கு போனாங்க. அங்க பக்கத்துல நிறைய குழந்தைகளோட ஒரு இல்லத்துல இருந்து வந்தாங்க. அவங்களை பார்த்துக்கிட்டே இருந்தேன். அங்க இருந்த குழந்தைகள்கிட்ட நட்பா பேசினேன். அது நல்ல இடம்னு தெரிஞ்சுது. அவங்க கிளம்புற நேரம் யாருக்குமே தெரியாம குழந்தைகளோடு குழந்தைகளா வேன்ல ஏறிட்டேன். அவங்க என்னை அடையாளம் கண்டுபிடிச்சி கேட்கும் போது பாதி தூரம் வந்தாச்சு. இப்போ இறக்கி விட்டாகூட வேற எங்கயாவது போய்டலாம்னு நடந்ததை அவங்ககிட்ட சொன்னப்ப இனி நாங்க இருக்கோம்னு கூட்டிட்டு வந்துட்டாங்க. அப்புறம் அங்க தான் படிச்சேன். வெறியோடு படிச்சேன். பொண்ணா பிறந்தா குப்பைன்னு யாரு நினைச்சங்களோ அவங்க முன்னாடி நல்லா வாழனும்னு படிச்சேன். சைடில் கிடைக்கிற வேலையெல்லாம் செஞ்சேன். இதோ இப்போ பேங்க் மேனேஜர். ஆனா இன்னமும் என்னை மாதிரி பெண்களுக்கு நடக்கிற கொடுமை மட்டும் நிற்கவில்லை. அதனால ஒரு முடிவு பண்ணேன்." என்று நிறுத்தினாள்.

"கடைசியா ஐ. நா வெளியிட்ட தகவல் படி இதுவரைக்கும் ஐம்பது மில்லியன் இந்திய பெண்கள் மாயமாகி இருக்காங்க. அதாவது பெண் சிசு வதை, பெண்கள் கற்பழித்து கொலை, வரதட்சணை கொடுமை, வேறு சில காரணங்களினால் கொல்லப்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் இறந்த பெண்களின் எண்ணிக்கை இது. அதனால என்னை போல வேணாம்னு தூக்கி எறியபட்ற குழந்தைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவனும் மூணு வருஷத்துக்கு முன்னாடி தான் ஒரு அமைப்பை ஆரம்பிச்சேன். இது வரைக்கும் இருபது பெண்கள் இருபது சிறுமிகள் இந்த அமைப்புல இருக்காங்க. அவங்களுக்கு மகளிர் குழுவில் சேர வைத்து சின்ன கை தொழில் வேலைகளை சொல்லி கொடுத்துக்கோம். இன்னும் நிறைய செய்யனும்" என்றாள் மன நிறைவுடன் நிறைய கனவுகளோடு.

அவளின் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கண்டு பிரமித்து போனான் வசுந்த்ரன்.

"ரியலி யூ ஆர் கிரேட் விழி" என்று அவளை லேசாக ஒரே நொடி அணைத்து விடுவிடுத்தான்.

"விழி உனக்கு ஒன்னு தெரியுமா? உன்னை எனக்கு கடந்த பதினாலு வருஷமா தெரியும்" என்று கண்களில் ரசனையோடு வசுந்தரன் எங்கோ பார்த்து சொல்ல.

"என்ன?" என்றாள் அதிர்ச்சியாய்.

"அது.." என்று தலையை சொறிந்தவன், "சரி.. சொல்றேன் எல்லாத்தையும் சொல்றேன். பொறுமையா கேளு" என்று அவளை நோக்கினான்.

மெல்ல தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சின்ன புகைப்படத்தை எடுத்து அவளிடம் நீட்டினான். அதை வாங்கி பார்த்தவள் லேசான அதிர்வுடன் விழிகளில் நீரோடு அவனை நோக்கினாள்.

"இது எப்படி உங்ககிட்ட வசுந்தரன்?" என்றாள் அதிர்ச்சியாக.

"விழி! உன்னை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் பார்த்ததே இல்ல. ஆனா, உன்னோட மிக பெரிய பேன் நான். ஹ்ம்ம். பதினாலு வருஷத்துக்கு முன்னாடி நீ பாதுகாப்பா வந்து சேர்ந்தது எங்க இல்லத்துக்கு தான்." என்றான் புன்முறுவலோடு.

"அப்படின்னா?" என்றாள் சந்தேகமாய்.

"எங்கம்மா தான் உன்னை கூட்டிட்டு வந்தது. உன்னோட கடந்த காலத்தை பத்தி இப்போ வரைக்கும் நீ சொல்லாம எனக்கு தெரியாது. ஆனா அதுக்கப்புறம் உன்னை பத்தி எல்லாமே எனக்கு தெரியும். எங்கம்மா நீ இல்லத்துல இருந்த வரைக்கும் உன்னை பத்தி தான் பேசுவாங்க. ஒரு நாள் தவறாம உன் பேர் எங்க வீட்ல அடிபடும். நீ அதை செஞ்ச, நீ இதை செஞ்ச, நீ படிப்புல கெட்டி, இன்னும் நிறைய. முதல்ல உன்மேல ஒரு மரியாதை வந்துச்சு. அப்புறம் உன்னை பார்க்கணும்னு ஆசை வந்துச்சு. உனக்கு தெரியாமலே உன்னோட ரசிகனானேன். நாள்டைவில உன்மேல ஒரு ஈர்ப்பு உன் முகம் முகவரி எதுவும் தெரியாமலே காதலிக்க ஆரம்பிச்சேன். எனக்கு மனைவின்னா இந்த ஜென்மத்தில் அது நீ மட்டும் தான்னு முடிவு பண்ணேன். நீ பெண் குழந்தைகளுக்கு ரொம்ப உதவி பண்றது மூலமா நீ பாதிக்க பட்ருக்கன்னு மட்டும் புரிஞ்சுகிட்டேன். ஆனாலும் உன் மீதான என் அன்பு மட்டும் குறையவே இல்ல. முகம் தெரியாத உனக்கு என் மனசுல முகம் கொடுக்க ஆசைப்பட்டு உன்கிட்ட நட்பா பழகினேன். என் விருப்பத்தையும் கூறினேன். இருந்தாலும் உன்னோட கடந்தகால வாழ்க்கை என்னை சீக்கிரம் நம்ப மறுத்தது. என் வாழ்நாள் முழுசும் உன் மடில தூங்கனும்னு ஆசைப்படறேன் விழி. இந்த பதினாலு வருஷ ஆசை தவம் கனவு எல்லாமே நீ தான்." என்றான் விழிகளில் ஆயிரம் கனவுகள் மின்ன.

"உன் பாதி வாழ்க்கையை எனக்காக கொடுத்த உன்னை என் வாழ்க்கையா ஏத்துகிறதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை" என்று சிரித்தாள் திருவிழி.

"அம்மா எப்படி இருக்காங்க?" என்ற அவளின் கேள்வியில் சற்று ஆட்டம் கண்டவன்.

"அம்மாக்கு ஒரு வருசத்துக்கு முன்னாடி ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட், தலைல அடிபட்டு நினைவு போயிடுச்சு" என்றான் வேதனையாய்.

"அப்படின்னா?" என்றாள் அவளும் அதே வேதனையுடன்.

"ஹ்ம்.. கோமா தான். ஒரு வருஷமா தனியா பார்த்துக்குறேன். தனியா இருக்குறதால ஒரு வெறுமை.. அம்மா எப்போ கண் விழிப்பாங்கன்னு காத்திட்டு இருக்கேன். ஒரு அம்மாவ இல்லத்துல இருந்து கூட்டிட்டு வந்து அம்மாவ பார்த்துக்க வீட்லயே தங்க வச்சுருக்கேன்." என்றான் வசூந்தரன்.

"எனக்கு அவங்களை பார்க்கணும்" என்றாள் விழிகளில் நீரோடு.

"போலாம். ஆனா, இப்போ இல்லை. நாளைக்கு ரொம்ப லேட் ஆகிடுச்சு." என்றான் வசு.

"நானும் மறந்துட்டேன். பிள்ளைங்க நோட்ஸ் கேட்டுருந்தாங்க. வாங்கிட்டேன். கொண்டுபோய் கொடுக்கணும். நான் வருவேன்னு காத்துட்டு இருப்பாங்க." என்றாள் திருவிழி.

"நானும் வரலாமா?" என்றான் வசு.

"தாராளமா வாங்க" என்றாள் திருவிழி.

இருவரும் அவரவர் வாகனத்தில் விழியின் இடதிற்கு சென்றனர்.

இவர்களை கண்டதும் இருபது பிள்ளைகள் ஓடி வந்தனர்.

"அக்கா! அக்கா! இன்னைக்கு இவ என்னை தள்ளி விட்டுட்டுடா" ஒரு குழந்தை.

"இல்லைக்கா. நான் விழபோறான்னு பிடிக்கபோனேன் தவறுதலா விழுந்துட்டா." என்றது இன்னொரு குழந்தை.

"சரி சரி... இனி இது மாதிரி நடக்க கூடாது" என்றாள் லேசான கண்டிப்பு கலந்த அன்புடன்.

"சரிக்கா" என்றனர் குழந்தைகள்.

"சரி. இன்னைக்கு நம்ம இடத்துக்கு ஒரு விருந்தாளி வந்துருக்காங்க. இவர் பேர் வசுந்தரன். இவங்க இல்லத்துல தான் நான் படிச்சு வளர்ந்தேன்." என்றாள் திருவிழி.

"வணக்கம் அண்ணா!" என்றனர் குழந்தைகள்.

"வணக்கம் குழந்தைகளா!" என்று சிரித்தான் வசு.

"எங்க இன்னைக்கு ஒரு புது வரவு வந்துருக்காங்கன்னு சொன்னாங்களே?" என்றாள் திருவிழி.

"இதோ" என்று ஐந்து வயது சிறுமியை தூக்கிக்கொண்டு வந்தார் வயதான பெண்மணி ஒருவர்.

"ஹாய் குட்டி! வாங்க!" என்று ஆசையாய் தூக்கி கொண்டாள் விழி.

மிரண்ட விழிகளுடன் தன்னை பார்க்கும் குழந்தையை காண மனம் வலித்தது அவளுக்கு.

"உங்க பேர் என்ன?" என்றாள் விழி.

பதில் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்த குழந்தையிடம், "எனக்கு சோட்டா பீம் ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு என்ன பிடிக்கும்?' என்றாள் யோசிக்கும் தோரணையில்.

"எனக்கு தோதா" என்றது லேசான புன்னகையுடன்.

"டோராவா? எனக்கும் ரொம்ப பிடிக்குமே. நாம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் ஆகலாமா? நான் இங்க வரும் போதெல்லாம் ஒண்ணா பார்க்கலாம்" என்றாள் குதூகலமாய்.

தன் பிஞ்சு நெஞ்சில் சோகத்தை மறந்து அவளின் குதூகலத்தில் அதுவும் கலந்து கொண்டது.

"சதி... நாம ப்ரெண்த்ஸ். தோதா பார்க்கலாம்" என்றது குழந்தை பெருந்தன்மையாய்.

"ஹை! ஜாலி" என்றாள் விழி.

"என் பேரு விழி. உங்க பேர்?" என்றாள்.

"என் பேது ஜானு" என்றது குழந்தை.

"சூப்பரா இருக்கே பேர்" என்று குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு இறக்கிவிட்டாள்.

"ஜானு குட்டி நீங்க போயி விளையாடுங்க. நான் நாளைக்கு வந்து உங்க கூட விளையாட்றேன்" என்றாள் விழி.

"ஹிம்.." என்று உள்ளே ஓடியது குழந்தை.

"எங்க இருந்த குழந்தைக்கா?" என்றாள் விழி.

"நம்ம சுதா தான் மா கூட்டிட்டு வந்தா. அவளோட பக்கத்து வீட்ல எல்லோரும் தூங்கிட்டு இருந்தப்ப கூரை வீடு விடியற்காலை ஆறு மணிக்கு இடிஞ்சு விழுந்ததுல எல்லோரும் இறந்துட்டாங்க. இந்த குழந்தை முழிச்சிருந்ததால வெளிய விளையாடிட்டு இருந்திருக்கு. அதனால தப்பிச்சுது. அவங்க அப்பா அம்மா காதல் திருமணம்ன்றதால யாரும் அவங்களை வீட்ல சேர்த்துக்கலை. சுதா அவங்க சொந்தக்காரங்ககிட்ட குழந்தைய கொடுக்க போனப்ப எங்களால பார்த்துக்க முடியாது எங்கயாவது அனாதை இல்லத்துல விடுங்கன்னு சொல்லிட்டாங்களாம். அதான் இங்க கொண்டு வந்துட்டா" என்றார் அந்த பெண்மணி.

"நல்லதா போச்சு. யாராவது அந்த குழந்தையா தேடி சொந்தக்காரங்க வரவரைக்கும் இங்கயே இருக்கட்டும்" என்றாள் திருவிழி.

"சரிம்மா" என்று உள்ளே சென்றுவிட்டார் அவர்.

பிள்ளைகளிடம் திரும்பியவள்.

"யார் யார்க்கு என்ன கேட்டீங்க ஞாபகம் இருக்குல்ல? இன்னைக்கு யாரு இங்க லீடர்?' என்றாள் திருவிழி.

"நான் தான் கா" என்று முன்னே வந்தாள் ஒரு பத்து சிறுமி.

"நீ தானா வசந்தி. இந்தா இந்த பைல இருக்க திங்க்ஸ் எல்லாத்தையும் எல்லோருக்கும் நீ தான் பொறுப்பா பிரிச்சு கொடுக்கணும். புரியுதா?" என்றாள் திருவிழி.

"சரிக்கா" என்று பையை வாங்கிக்கொண்டு நகர அவளின் பின்னே அனைவரும் சென்றனர்.

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த வசுந்தரன்.

அவ்நிடம் திரும்பியவள். "என்ன வசு? ஏன் அப்படி பார்க்கிற?" என்றாள் திருவிழி.

"உன்னை பார்த்தா பிரம்மிப்பாவும் பெருமையாவும் இருக்கு விழி." என்றான் வசுந்தரன்.

"நீ வேற சும்மா இரு வசு" என்று சிரித்தவள்.

"இங்க வாங்க எல்லோரும் " என்றாள் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த குழந்தைகளிடம்.

அவளிடம் ஓடி வந்த குழந்தைகளிடம், "உங்க பேரை எல்லோரும் அறிமுக படுத்திக்கோங்க" என்றாள் விழி.

"என் பேர் மது. நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்" என்று முன்னே வந்தாள் ஒரு பெண்.

"இவ பிறந்தப்பவே அம்மா இறந்துட்டதால அப்பா ரெண்டாவது திருமணம் பண்ணிக்கிட்டார். அம்மாவா பார்த்துப்பாங்கன்னு நினைச்ச சித்தியோட கொடுமை தாங்க முடியாம வீட்டை விட்டு ஓடி வந்தப்ப நான் பார்த்து கூட்டிட்டு வந்தேன்" என்றாள் விழி.

"என் பேர் ஸ்ரீமித்ரா. நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன்" என்றாள் இன்னொரு சிறுமி.

"கல்குவாரில குழந்தை தொழிலாளியா வேலை செஞ்சவ. நேரம் பார்த்து அங்க இருந்து தப்பிச்சு வந்துட தெரிஞ்ச ஒரு நல்லவங்க இங்க கொண்டுவந்து சேர்த்தாங்க." என்றாள் விழி.

"என் பேர் யமுனா. நான் நாலாம் வகுப்பு படிக்கிறேன்" என்று இன்னொரு சிறுமி கூற.

"இவளும் ஸ்ரீ மாதிரி தான் பட்டாசு பேக்ட்ரில ரொம்ப கஷ்டபட்ட குழந்தை அங்க நடந்த தீ விபத்துல அம்மா அப்பா ரெண்டு பேரையும் இழந்தவ. எப்படியோ இங்க வந்து சேர்ந்தா." என்றாள் விழி.

"என் பேர் மிதுனா. நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்" என்றாள் இன்னொரு பெண்.

"இவ..." என்று விழி இழுக்க.

"நானே சொல்றேன்கா. எங்க அப்பா விவசாயி. விவசாயம் செய்ய கந்துவட்டி வாங்கினார். மழை வராததால விவசாயம் செழிக்கல. வட்டியும் பணமும் திருப்பி தராததால எங்க அப்பாவ கந்துவட்டி காரங்க ரொம்ப கெட்ட வார்தைளால வீட்டு முன்னாடி நிற்க வைச்சு திட்டினாங்க. விவசாயி இல்லையா? ஊருக்கே சோறு போட்டவங்க நாங்க. ரோஷம் ஜாஸ்த்தி. அதான் வீட்ல எல்லாரும் அரளி விதைய பால்ல கலந்து கொடுத்துட்டாங்க. நைட் நான் ரொம்ப நேரம் படிச்சிட்டு இருந்ததால பால குடிக்க மறந்து அப்படியே தூங்கிட்டேன். காலைல எழுந்து பார்த்தா எங்க வீட்ல எல்லோரும் வாயில நுரை தள்ளி இறந்திருந்தாங்க." என்று கண் கலங்கியவளை தன்னோடு அணைத்துகொண்டாள் திருவிழி.

"உறவுக்கார மாமா என்னை அங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு. எங்க அப்பா மேல இருந்த பாசதுல தான் கூட்டிட்டு போறாருன்னு நினைச்சேன். ஆனா, அப்புறம் தான் தெரிஞ்சுது அவங்க வீட்ல சம்பளம் இல்லாத வேலைக்காரியா என்னை மாத்திக்க தான் கூட்டிட்டு போனாருன்னு. சரி. இருக்க ஒரு இடம் மூணு வேளை இல்லன்னாலும் ரெண்டு வேளையாவது கிடைக்குதேன்னு இருந்தேன். ஆனா, அவங்க பையன் தப்பான எண்ணத்தோட வீட்ல யாருமில்லாத நேரத்துல என்னை தொட முயற்சி பண்ண, அதை அவங்க வீட்ல சொன்னப்ப அந்த மாமா என்கிட்ட தனியா பேசணும்னு சொன்னார். 'இங்க பாரு உன்னை தண்டத்துக்கு இந்த வீட்ல வச்சிருக்கேன். என் பையனை மட்டும் இல்ல என்னையும் சேர்த்து அட்ஜ்ஸ்ட் பண்ணிக்க நீ நிரந்தரமா இங்கயே தங்கிக்க ஏற்பாடு பண்றேன்'னு என்னை தொட முயற்சி பண்ணார். அப்பா அம்மா வேணா இல்லாம இருக்கலாம் அதுக்காக மானத்தை இழந்து உயிர் வாழ்வேனா என்ன? சொல்லுக்காக உயிர்விட்டவங்க என் குடும்பம்னு பக்கத்துல இருந்த கத்திய எடுத்து என் கைய கிழிச்சிக்கிட்டேன். ரத்தம் சொட்றதை பார்த்து பயந்து என்னை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு போனவங்க தான். அதோட வரலை. அங்க வந்த அக்கா தான் என்னை இங்க கூட்டிட்டு வந்தாங்க." என்றாள் அந்த பெண்.

"எல்லோரும் போயி சாப்பிட்டு தூங்குங்க." என்றாள் திருவிழி.

"இப்படி ஒவ்வொருத்தர் ஒரு ஒரு காரணத்தால பாதிக்கபட்டவங்க வசு. என்னால முடிஞ்ச வரைக்கும் உதவி பண்றேன். பாரதியார் ஆசைபட்ட கனவு கனவா தான் இருக்கு இன்னைக்கு வரைக்கும். பெண்களை தவறா பார்ப்பதே தவறு. முதல்ல பருவ பெண்களை தவறாக பார்த்த கண்கள் இன்னைக்கு மூணு வயசு குழந்தையும் அதே கண்களோட தான் பார்க்குது. குழந்தைகளை சுதந்திரமா விளையாட விடுங்க. மொபைல் கொடுக்காதீங்க. கம்ப்யூட்டர் கேம்‌ஸ் கொடுக்காதீங்கன்னு சொல்றாங்க. ஆனா, ஒரு பெண் குழந்தை கூட அஞ்சு நிமிஷம் வெளிய தனியா விளையாட வைக்க கூட பயமா இருக்கு. எவன் வந்து குழந்தைய தூக்கிட்டு போவான்னு. குழந்தைகளை அவங்க வியலியாத்ரா பருவத்தில வைளையாட வைக்க முடியாம அடக்கி வைக்க வேண்டிய நிலைமைல இருக்கு இன்னைக்கு சமுதாயம்." என்றாள் விழி.

"உண்மை தான் விழி நீ சொல்ற எல்லாமே உண்மை தான். பெண்களை அவங்க அனுமதி இல்லாம தொந்தரவு பண்ற எல்லாருக்கும் கடுமையான தண்டனை கொடுக்கணும். இனி தவறா நடந்தா கடுமையான தண்டனை இருக்குனு தெரியணும்" என்றான் வசுந்தரன்.

"ஹிம்" என்றாள் விழி.

"சரி விழி. எனக்கு நேரமாச்சு. அம்மா தனியா இருப்பாங்க. நான் கிளம்புறேன்." என்றான் வசு.

"சரி வசு. நான் நாளைக்கு வந்து அம்மாவ பார்க்கிறேன். அதோட அம்மாகூட இனி நான் இருக்கேன். அதுக்கு என்ன செயலாம்னு பாருங்க" என்றாள் விழி.

முதலில் ஒன்றும் புரியாமல் முழித்த வசு. அவள் கூறிய வார்த்தைக்கான அரத்தம் புரிய, அவளை நெருங்கியவன்.

"அம்மாக்கு நான் உன்னை விரும்புறது தெரியும் விழி. அவங்களும் உன்னை எப்போ வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்னு காத்திட்டு இருந்தாங்க. சீக்கிரமே நல்ல நாள் குறிச்சிட்டு வரேன். தயாரா இரு." என்று வெளியேறினான்.

அவனின் வருகைக்காக புன்னகைத்தபடி உள்ளே சென்றாள்.

சகோதரியை, மகளை தாயாய் நோக்கும், மனைவியை மட்டும் தாரமாய் பார்க்கும் ஆண்மகன்களும் மற்ற பெண்களை மதிப்புடன் இன்றும் கண்ணியமாய் நோக்கும் சகோதரன், கணவன், நண்பன், தந்தை, தாத்தாக்கள் வாழும் இதே மண்ணில் தான் பெண் என்று கேட்டாலே போகப்பொருளாய் நோக்கும் கழிசடைகளும் இருக்க தான் செய்கின்றன. இது மாதிரி நச்சுகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்வதை மக்கள் வரவேற்பார்கள்.​
 
Top Bottom