Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed புரிதல்

Hrishikesh

New member
Messages
8
Reaction score
2
Points
3
காலை எட்டரை மணி வரை ஒருவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்றவுடன் ஆச்சரியப்படாதீர்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை. அதனால் அசௌகரியமாக இருந்தாலும் சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன். கனவு ஏதேனும் வந்ததா இல்லையா என்று கூட தெரியாமல் ஏதோ ஒரு வித மயக்க நிலை உறக்கம். அதைக் கெடுப்பதற்கு எப்படிதான் ராஜேஷிற்கு மனசு வந்ததோ தெரியவில்லை. படபடவென்று தன்னிடம் இருந்த சாவியால் கதவைத் திறந்து தடாலென்று அடித்தான். அந்த சத்தமே என்னை திடுக்கிட்டு எழச் செய்தது. மிகவும் சிரமப்பட்டு தலையை திருப்பிப் பார்த்தால், அங்கே வாசலில் என்னை முறைத்தப்படி ராஜேஷ் நின்றுக்கொண்டிருந்தான்.


“முறைக்காதே நண்பா... நியாயமாய் பார்த்தால் நான்தான் உன்னை முறைக்க வேண்டும்” என்றேன்.


“சொல்லுவடா நீ... நேத்து நைட்டு வீட்டில ஒரு பெரிய பூகம்பத்தை கிளப்பிட்டு இங்க வந்து, காலையில இவ்வளவு நேரமாகியும் தூங்கிக்கிட்டு இருக்க...”



நேற்று இரவு நடந்த விவாதத்தை அம்மாதான் ராஜேஷுக்கு போன் மூலம் சொல்லியிருக்க வேண்டும். எங்கள் இருவரின் வீடும் நாங்கள் பயிலும் கல்லூரிகளிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால், நகரத்தின் மைய பகுதியில் அபார்ட்மெண்ட்டில் வாடகைக்கு குடியிருக்கிறோம். முந்தையை இரவு நடந்த விவாதத்திற்கு பின்பு, வீராப்புடன் இங்கு வந்து விட்டேன், அதுவும் பைக்கில்.



“நான் என்னடா பெருசா பண்ணிட்டேன்... என் மனசுல இருந்தத் தானே சொன்னேன்!”



“சொல்லலாம் தப்பில்லை... ஆனா அப்பாகூடவா சண்டை போடுவது?”



“உனக்குத் தெரியாததா ராஜேஷ்... ஆரம்பத்திலிருந்தே எனக்கு இந்த இன்ஜினியரிங் பிடிக்காது... வேணாம் வேணாம்ன்னு நான் சொன்னதை கேக்காம என்னைக் கொண்டு போய் அதிலேயே சேர்த்தாங்க... அதுவும் ஐ.டி டிபார்ட்மெண்ட்ல...”



“எல்லாம் சரி... நேத்து என்ன நடந்துச்சு.. முதல்ல அத சொல்லு..” என்றபடி என்னருகில் வந்தமர்ந்தான்.



“வழக்கமான உரையாடல்லதான் ஆரம்பிச்சது... ஆனா முடிஞ்சது என்னவோ பெரிய விவாதத்துல... முதல் வருஷத்துலேயே காலேஜுல எங்களப் போட்டு எப்படி புழிஞ்சு எடுக்குறாங்கங்கற... ஐ’ம் வெரி டையர்ட்” என்றேன் அலுப்புடன்.



“என்னடா... சேர்ந்த மூணு மாசத்திலேயே சோர்ந்துட்ட?” என்று ஆச்சர்யப்பட்டான்.



“யாராயிருந்தாலும் சரி... பிடிக்காத எந்த வேலையை செய்தாலும் உடனே சோர்வு வந்துடும்.. எங்கேயும் எழுதப்படாத தியரி”



“அப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்லு”



“இதையெல்லாம் அப்பாக்கிட்ட சொன்னேன்... அதுக்கு அவரோ, ‘இன்னும் ஒரு மூணு மாசம் மட்டும் இதே காலேஜுல படி... ரொம்பவும் பிரச்சனையா இருந்தா அதுக்கபுறம் உனக்கு பிடிச்ச ஃபைன் ஆர்ட்ஸ் சம்பந்தமான கோர்ஸ்ல செர்த்துவிற்றேன்னாரு’...”



“உனக்கு இதில உடன்பாடில்ல... ‘இன்னும் மூணு மாசம் ஏன் பொறுத்துக்கணும்? இப்பவே இந்த படிப்பை விட்டுட்றேன்... விட்டுட்டு மண் பானைகளுக்கு பெயிண்ட் அடிக்கிறேன்... பழைய சிற்பங்கள தூசி தட்டி வைக்குறேன்னு’ சொல்லியிருப்ப... அதுல சண்டை வந்திருக்கும்...” என்றான் மிக சாதாரணமாக. இதை இத்தனை சுலபமாக எப்படி இவனால் கூற முடிகிறது? ராஜேஷ் என் நண்பன் என்று என் மனதில் உள்ளதை மறைக்காமல் சொன்னேன். அவனோ என்னை கேலியாக அல்லவா பேசுகிறான்.



கல்லூரி ப்ராஜெக்ட்களுக்காக எத்தனை இரவுகளில் போதுமான உறக்கமின்றி தவித்திருப்பேன்? ஓய்வின்றி அதே அசதியுடன் அடுத்த நாள் காலையில் வண்டி ஓட்ட வேண்டும். அப்படி ஓட்டும் பொழுது தவறுதலாக மற்றவர்கள் வண்டி மேல் பட்டுவிட்டால் கிடைக்கக் கூடிய வெகுமதி என்னவென்று உங்களுக்கே நன்றாகத் தெரிந்திருக்கும். குடைமிளகாய்க்கும் பீன்ஸுக்கும் வித்தியாசம் கண்டறிய அவகாசமின்றி பல அவசரமான உணவு நேரங்களை கடந்திருக்கிறேன். உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வெறும் இரண்டு மூன்று நாட்கள் சென்றால் கூட, லாப்டாப்பை உடன் எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம். இந்த ஆதங்கத்தை யாரிடம் எங்கு சென்று முறையிடுவது? ஒருவேளை எனக்கு பிடித்த ஃபைன் ஆர்ட்சை எடுத்திருந்தால் இவ்வாறெல்லாம் நிகழ்ந்திராதோ? பதினெட்டு வயதில் இத்தனை கவலையும் விரக்தியும் வந்திருக்காதோ என்னவோ! வாழ்க்கையில் கலை என்னும் ஒரு அம்சம் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை என்பது என்னுடைய தீர்க்கமான கருத்தாகும். சாதாரண வாழ்க்கை முறையிலிருந்து சிறிது மாறுபட்ட வழியில் பயணத்தை செலுத்துவதற்காகத் தான் கலை என்னும் அதியற்புத புதையலை மனிதன் கண்டுபிடித்திருக்க வேண்டும். இல்லையெனில் கல் தோன்றிய காலத்திலேயே குகையின் சுவர்களில் சித்திரம் வரைந்திருக்க முடியுமா? அத்தகைய உன்னதமான கலை பிரிவில் உள்ள ‘ஃபைன் ஆர்ட்ஸ்’ என்னும் பாடத்தின் மேல் எனக்கு அளவிலா மோகம். அதற்கு முழுமுதற்தடையாக விளங்குவது என் தந்தை என்பது பெரும் வேதனையை அளிக்கிறது. இந்த மனக்குமுறலை ராஜேஷிடமாவது சொல்லலாமென்று இருந்தேன். அதுவும் முடியாமற்போகும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.



எட்டாம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து வந்தோம் ராஜேஷும், நானும். எனக்கு இருக்கும் மிக நெருங்கிய நண்பன் என்றால் ராஜேஷ் மட்டும் தான். எங்கள் இருவரிடையில் மிகப் பெரிய ரகசியம் ஒன்றும் இல்லாதபோதிலும், எங்களுக்குள் அத்தனை பிணைப்பு. பள்ளிப்படிப்பு முடித்ததும், ஒரே கல்லூரியில் பயில்கிறோம், வெவ்வேறு துறையில். நான் ஐ.டியில், அவன் மெக்கானிக்கலில். எங்களது ஐந்தரை வருட நட்பில் ஒரு முறை கூட ஒருவர் மனதை இன்னொருவர் புண்படும்படியோ, கோபப்படும்படியோ பேசியதே இல்லை. இன்று என்னவென்றால் அவன் சொன்ன வார்த்தைகள் என்னை மிகவும் காயப்படுத்தின. இருப்பினும் அந்த வலியை வேறு விதமாக வெளிப்படுத்த முற்பட்டேன்.



“உங்களுக்கு என்ன சார்... ஸ்கூல்ல டாப் ராங்க் எடுத்தவர்... காலேஜூலையும் நல்ல மார்க் தான் வாங்குறீங்க... அதனால உங்க வீட்டில நீங்க சொன்னதெல்லாம் எடுபடும்.. என் நிலைமை அப்படியா...” ஏதோ மனதில் இருந்ததை ஒரு வேகத்தில் உளறிவிட்டேன்; அது சரியா தவறா என்று கூட உணராமல்.



இதைக் கேட்டு சற்று அதிர்ந்தவனாய், ”டேய் லூசு... ஏண்டா எப்படி சம்பந்தமே இல்லாம பேசுற? உங்க அப்பாகிட்ட பொறுமையா உட்கார்ந்து பேசாம, சண்டைப் போட்டுட்டு, ராத்திரியோட ராத்திரியா நம்ம ப்ளாட்ல வந்து தூங்கியிருக்க... இந்த விஷயத்தில எங்க வீட்டை ஏண்டா இழுக்குற?”



இப்போது ராஜேஷும் சிறிதளவாவது வருத்தத்தில் இருப்பான். அவன் மனதை குழப்பவேண்டும் என்பதற்காகவெல்லாம் சொல்லவில்லை. ஏதும் பேசாது மௌனம் காத்தேன். ஒரு வழியும் புலப்படுவதாக தெரியவில்லை. சிறிது நேர அமைதியான யோசனைக்கு பின்பு, ராஜேஷ் தான் தொடர்ந்தான்.



“இது ஒண்ணும் அத்தனை பெரிய பிரச்சனையில்லை... நம்ம பேரெண்ட்செல்லாம் அந்த காலத்து மனிதர்கள்... ஜெனரேஷன் கேப் வேற... அவங்கள பொறுத்தவரைக்கும் டாக்டர், என்ஜினியர், டீச்சர் போன்ற உத்தியோகங்கள் தான் சேஃபானவை... உன்னுடைய கனவு படிப்பைப் பத்தி கொஞ்சம் நிதானமா உங்க அப்பாவுக்கு புரியும்படி எடுத்து சொன்னா போதும்...”



இதைக் கேட்டதும் என் கோபம் எவரெஸ்ட் மலை உச்சியை தொட்டது.



“ஆரம்பித்திலிருந்தே யாரு கிட்ட பிரச்சனையோ அவுங்களுக்கே சப்போர்ட் பண்ற பாத்தியா? சே... உன்கூட இவ்வளவு நேரம் பேசுனதே வேஸ்ட்...” என்று அவனது பதிலுக்கு எதிர்பாராமல் வாசலை நோக்கி விரைந்தேன்.



“இப்பவும் சொல்றேன்... உங்க அப்பா என் அப்பாவைவிட ரொம்ப சாது... அதிர்ந்து கூட பேச மாட்டார்... அவரையே கோபப்பட வச்சிருக்கன்னா தப்பு உன் பேர்ல தான்டா” என்றான் விடாமல்.



எனக்குத் தெளிவாக புரிந்து விட்டது, இவனிடம் பேசுவதிலும் துளி பயனில்லை என்று. வாயிலைக் கடந்து காலணியை போட்டுக் கொள்ளும் போது, ‘இவனிடம் பேசியதிற்கு பதிலாக...’ என்று மெதுவாக முணு முணுத்துகொண்டேன். நல்லவேளை, ராஜேஷின் செவிகளை இவை எட்டவில்லை. இல்லையேல், ‘தைரியமிருந்தால் சொல்லவந்ததை முழுசாக சொல்லிவிட்டு போ கோழையே’ என்றிருப்பான். அடுத்த அதிர்ஷ்டம், பைக் சாவி எனது சட்டை பாக்கெட்டில் இருப்பது. ஆச்சரியம் என்னவென்றால், நான் சினத்துடன் வெளியேறியும் என்னை தடுக்கவோ, நிறுத்தவோ அவன் முயற்சிக்காததுதான். வண்டிக்கு சாவிக் கொடுக்கும் போதுதான் உணர்ந்தேன், எல்லா மனிதர்களும் சுயநலம் கொண்டவர்களே! எல்லோருக்கும் ஒரு தேவை இருக்கத்தான் செய்கிறது. அதை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொருவரும் தாய், தந்தை, மகன், மகள், கணவன், மனைவி, தோழர்கள் என வேஷம் பூசிக்கொள்கின்றனர். உண்மையில் அவரருக்கு அவர்களது கொள்கையும், வெறுப்பு விருப்பங்கள் மட்டும் தான் முதன்மையானவை. அதனால் அவர்களை நம்பி நம் மனதில் உள்ள ஆசைகளை கொட்டக் கூடாது. ஏனெனில், அதை செவிமடுத்து கேட்கக் கூட சில சமயம் அவர்களுக்கு கசக்கலாம்.



குறிப்பாக எங்கே செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கவில்லை. மனம் போன போக்கில் சென்று கொண்டிருந்தேன். அதற்குள் அடுத்த தெருவை அடைந்திருந்தேன். முன் பத்தியில் சொன்ன வார்த்தைகள் சத்தியம் என்று நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது. அதிக வாகனப் போக்கு வரத்தில்லாத சாலை தான். எனினும் ஒரு விபத்து அங்கே... அசம்பாவிதமான நிகழ்வொன்று நடந்தேறியதால் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர தொடங்கியது. வரிசையான தனித்தனி வீடுகள். வெளிர் நிற மஞ்சள் வீட்டிற்கு முன்னாலிருந்த வேப்பமரத்திற்கு முன்பு விபத்து. நான், இரண்டு வீடுகளிலிருந்தும் கோபித்துக் கொண்டு அவசரமாக வெளியேறியது என்னவோ உண்மைதான். ஆனால் அவசரமாக செய்து முடிக்க வேண்டிய காரியம் ஒன்றுமில்லையே!



சற்று மெதுவாக, இங்கே நடந்த விபத்தை பார்த்துவிட்டே போகலாம் என்று எண்ணி அந்த கூட்டத்தை நெருங்கினேன். அருகில் சென்று பார்த்ததும் திக்கென்றிருந்தது. அந்த வேப்பமரத்திற்கு முன்னால் அடிவாங்கி கீழே விழுந்து கிடந்த பைக்கும், அதனருகே தலையில், முழங்கை மற்றும் கால்களில் காயங்களுடன், மூக்கிலிருந்து ரத்தம் எட்டிப்பார்க்க , ஆறேழு வயதேயிருக்கும் சிறுவனொருவன் நின்று அழுது கொண்டிருந்தான். அவனிடம், “தம்பி, அழதாப்பா... சரியாபோயிடும்” என்று சமாதானம் கூறியவாறே அவனுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. இந்த மகாசம்பவத்திற்கு காரணமான புண்ணியவான், அந்த சிறுவனின் தந்தை, தள்ளாடிக்கொண்டு, “எம்பொண்ணு எங்க?” என்று கேட்டுகொண்டிருந்தார். துரதிஷ்டவசமாக, அவரைவிட அந்த சிறுவனுக்குத் தான் பலமான அடி. எனக்குப் புரிந்துவிட்டது. காலை நேரம் என்று கூட பார்க்காமல், மது அருந்திவிட்டு, மகனை வைத்துக் கொண்டு வண்டியோட்டியிருக்கிறார். இப்படிப்பட்டவர்களுக்கு சுயநினைவு எங்கே இருக்க போகிறது? வண்டியை கட்டுப்படுத்த இயலாமல், வேப்பமரத்தில் மோதி, வண்டியுடன் இருவரும் கீழே விழுந்திருப்பர் போலும்.



“யோவ், காலங்காத்தல குடிச்சுட்டு வண்டியோட்டுனது மட்டுமில்லாம, குழந்தைய ஏன்யா கூட்டிட்டு வந்த?” என்று அங்கிருந்தவர்களில் சிலர் வினவினர். மகனுக்கும் மகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாத மனிதரிடம் கேட்கப்பட்ட கேள்வியானது விடையின்றி அனாதையாக நின்றது. அவருடைய செல்போனை நாற்பது வயதிருக்கும் ஒருவர் பறித்து, அந்த உத்தமரின் வீட்டிற்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அவரே அவ்விருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானார்.



அதற்குமேல் அங்கு நிற்க எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஏனெனில், அங்கு விழுந்துகிடந்த பைக்கின் எடையை விட என் மனம் அதிகமாக கனத்தது. கூட்டத்திலிருந்து மெல்ல என்னை விலக்கிக்கொண்டு வண்டியை நோக்கி நடந்தேன். அந்த சிறுவனின் முகம் பார்க்கும் இடங்களிலெல்லாம் வந்து போனது. நானும் ஏதேனும் உதவியிருப்பேன். ஆனால், என்னிடம் இருப்பது வெறும் ஐம்பது ரூபாயே. நேற்று இரவு நடந்த போராட்டத்தில் பர்சை எடுத்துக் கொள்ள மறந்து விட்டேன்.



சின்ன பையனை வைத்துகொண்டு, சிறிதளவுக்கூட அக்கறையில்லாது, மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டியவரை என்னவென்று சொல்வது! மகனின் உயிரைவிட மதுதான் முக்கியம் என்றிருந்த அந்த தந்தை, தன் தவறை எப்பொழுது உணர்வாராம்? இவ்வளவுதானா மனிதர்கள்? இதுதானா மனிதம் என்பது? பசிஃபிக் பெருங்கடலில் சுமார் எத்தனை டெசிபலில் அலையோசை கேட்கும்? அவற்றின் சீற்றத்தினை என் மன வேதனை மிஞ்சிவிடும்.



தீர்வில்லாத சிக்கலை நினைத்து நொந்துக் கொள்வதில் பயனில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே அடுத்த தெருவை அடைந்திருந்தேன். இன்னுமொரு சுவாரசியமான சம்பவம் எனக்கே எனக்காகவென்று இந்த தெருவில் காத்திருந்தது போலும். அங்கே, சுமார் ஐந்து வயதிருக்கும் சிறுவனுக்கு அவனது தந்தை சைக்கிள் ஓட்டக் கற்றுகொடுத்துக் கொண்டிருந்தார். ராஜஸ்தானி குடும்பத்தவர் என்று அவர்களது முகமே சொன்னது. ஒரு கையை ஹாண்டில் பாரிலும் இன்னொரு கையை சீட்டிலும் மிகவும் கெட்டியாக பிடித்திருந்தார். இருப்பினும் அந்த சிறுவனின் முகத்தில் ஏதோவொரு கலக்கம் இருக்கத்தான் செய்தது. ‘இங்கே நடக்கவிருக்கும் நிகழ்வையும் பார்த்துவிட்டு போ’ என்று என்னுடைய உள்ளுணர்வு சொல்வதாக உணர்ந்தேன். ஒரு ஓரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். நான் இங்கு நிற்பது அவர்களுக்குத் தெரிய நியாயமில்லை.



சற்று பாலன்ஸ் செய்ய முடிந்ததும் வேகத்தை கூட்ட ஆரம்பித்தான் சிறுவன். “தீரே சே ஜானா பேட்டா...” (மெதுவாகப் போ) என்று அவன் தந்தை சொல்லி முடிப்பதற்குள் பாலன்ஸ் தவறவிட்டான். இங்கேயும் சிறுவனுக்குத் தான் காயம்ப்பட போகிறது என்ற என் நினைப்பை தவுடுப்பொடியாகினார் தந்தை. கீழே விழப்போகும் சைக்கிளை தாங்கி பிடிக்க முயற்சித்தார். சற்றென்று அவருடை கால் இடரி, அவர் விழ, அவர் மேல் சைக்கிளும் விழ, அதன் மேல் சிறுவனும் விழுந்தான். இம்முறை நான் தாமதிக்கவில்லை. விரைந்தோடி அவர்களுக்கு எழுந்து நிற்க உதவி செய்தேன். கடவுள் புண்ணியத்தில், சிறுவனுக்கு எந்த அடியும் படவில்லை.



தனது தந்தையின் நிலையைக் கண்டு “சாரி பப்பா...” என்று உடைந்து அழும் குரலில் கெஞ்சினான் சிறுவன்.



அவனிடம், ”கோய் பாத் நஹி பேட்டா” (பரவாயில்லை மகனே) என்று சொல்லியவர், மகனின் அருகில் சென்று அவனுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டிருகிறதா என்று கவனித்தார். அவ்வாறு ஏதும் இல்லாததால் நிம்மதியுடன் என்னிடம் திரும்பி, ”தேங்க்ஸ் சார்” என்றார் நெகிழ்வுடன். அவரது நெற்றியிலிருந்தும் கைகளிலிருந்தும் லேசாக ரத்தம் வரத் தொடங்கியிருந்தது.



“ஹாஸ்பிடல்...” என்று சொல்ல வருவற்குள், “இட்ஸ் ஓகே சார்... ஐ’ம் ஆல்ரைட்” என்றார் சிறு புன்னகையுடன். இவர் நினைத்திருந்தால் தன் வார்த்தைகளுக்கு மதிப்புத் தராமால் சைக்கிளின் வேகத்தை கூட்டிய மகனை திட்டியிருக்கலாம். அல்லது மகனை இங்கேயே விட்டுவிட்டு, அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போட வீட்டிற்கு சென்றிருக்கலாம். இதையெல்லாம் அதிகம் பொருட்படுத்தாது, கைகளை உதறிவிட்டு, திரும்பவும் ஓட்டுனர் பயிற்சியில் மூழ்கினார். என் தந்தையை இவர் ஏனோ ஞாபகப்படுத்தினார்.



ஒரே நாளில் இருவேறு வகை மனிதர்களின் சம்பவங்களை சந்திக்க நேர்ந்தது. அதில் இருந்த ஒரே வித்தியாசம் அவர்களின் சுபாவம் மட்டுமே. தன்னலம் மட்டுமே குறிக்கோள் என்று எல்லோரும் இருப்பதில்லை. எல்லா காலக்கட்டங்களிலும் எல்லா வகை மனிதர்களும் வாழ்கின்றனர். நாம் தேடும் தன்னலம் கருதா தங்கங்களின் விகிதம் தான் சற்றே குறைவாக உள்ளது.



முந்தைய இரவின் உரையாடல் மனதில் வந்து போனது. சாவகமாக சோபாவில் அமர்ந்துக்கொண்டு பேஸ்புக்கில் ஆழ்ந்திருந்தார் அப்பா.

“அப்பா... என்னுடைய கோர்சை டிஸ்கண்டின்யு பண்ணலாம்ன்னு இருக்கேன்” என்று நான் தான் முதலில் ஆரம்பித்தேன்.

“என்னாச்சு? ஏன் திடீர்னு?” முன்னமே நான் இவ்வாறு கூறுவேன் என்று எதிர்பார்த்திருப்பார் போலும். போனிலிருந்து கண் அகட்டவில்லை.

“காலேஜுல சேர்ரதற்கு முன்னாடியே எனக்கு இந்த கோர்ஸ் பிடிக்கலேன்னு சொன்னேன்லப்பா... நீங்களும் ‘கொஞ்ச நாள் படிச்சு பாரு... சுத்தமா ஒத்துவரலேன்னா உனக்கு பிடிச்ச ஃபைன் ஆர்ட்ஸ்லேயே சேர்த்துவிடறேன்னு’ சொன்னீங்களேப்பா அதான்...” என்று ஒருவழியாக கோர்வையாக சொல்லி முடித்தேன்.


“சரிடா, சேர்ந்த மூணுமாசத்திலேயே டிஸ்கண்டின்யு பண்றேங்குறது நியாயமா? இன்னும் ஒரு மூணு மாசம் படிச்சுடேன்... ஒரு செமஸ்டர் முடிஞ்ச மாதிரியாவதிருக்கும்”


இந்த இடத்தில் கோபம் எட்டிப்பார்க்க துவங்கியதால் சற்றே குரலை உயர்த்தி பேசத் தொடங்கினேன். “என்னப்பா இது! அப்ப ஒரு மாதிரி பேசிட்டு இப்ப வேற மாதிரில்ல பேசுறீங்க?”


விஷயம் சூடுபிடிக்க துவங்கிவிட்டததென்பதை உணர்ந்தவராக, இத்தனை நேரம் சீரியலில் மூழ்கியிருந்த என் தாயார் எங்களிடம் கவனத்தை திருப்பலானார். “ எதுக்குடா இப்ப கத்துற?” என்று தொடங்கினார். முடிந்தவரை விலாவரியாக சொல்லி முடித்தேன் அம்மாவிடம்.


“பாத்தியா நிர்மலா... உன் பையன் பேசுறதை... என்னுடைய அபிப்பிராயம் முழுசா தப்பாம்... அவரு சொல்ற ஏதோ ஆர்ட்ஸ் தான் உலகத்திலேயே இருக்குற சிறந்த படிப்பாம்”


“ஐயோ அப்பா... நான் சொன்னதென்ன நீங்க சொல்றது என்ன?”


“அப்பாவையே எதிர்த்து கேள்வி கேக்குற அளவுக்கு வளர்ந்துட்டான் என் மகன்” என்றார் அப்பா நக்கலாக.


இனி விவாதம் செய்து பயனில்லை. இனி இங்கிருந்தால் அப்பாவின் கண்ணில் படும் ஒவ்வொரு முறையும் என்னை குறை சொல்லிக் கொண்டேயிருப்பார். வெடுக்கென்று எழுந்தென். அறையிலிருந்த மேஜை மீதுதான் என்னுடைய சாவி பௌச் இருந்தது. நான் பயன்படித்தும் அத்தனை சாவிகளையும் அந்த பௌச்சில் வைத்துகொள்வது வழக்கம். அதை அவசரமாக எடுத்துக்கொண்டேன்.


“குட் நைட்! நான் அபார்ட்மெண்ட்க்கு போறேன்... உங்ககிட்ட பேசுறது சுத்த வேஸ்ட்... என் மூடை நல்லா ஸ்பாயில் பண்ணதுக்கு நன்றி...” என்று யாருடைய பதிலுக்கும் காத்திராது வெளியேறினேன். இந்த இடத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென அப்பாவையும் என்னையும் பார்த்துக்கொண்டிருந்தார் அம்மா. பிறகு எங்கு சென்றிருப்பேன் என்று உங்களுக்கே நன்றாக தெரியும்.


எனக்கு நன்மை செய்வதாக நினைத்துகொண்டு தானே பொறியியல் கல்லூரியில் சேர்த்தார். இதில் பிசகோன்றும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சராசரி பெற்றோரின் மனநிலையில் அவர் இருக்கிறார். சரியாக அரைமணி நேரம் கூட என் மனதில் உள்ளதை, குறிப்பாக கலையின் மீதிருந்த தீரா தாகத்தினை அப்பாவிடம் ஒழுங்கான முறையில் சொல்லவே இல்லையே! என் கனவை பற்றி பெற்றோரிடம் ஆலோசிக்க போதுமான நேரம் ஒதுக்காமல் இவ்வாறு கோபத்தில் வெளியேறுவதில் என்ன புண்ணியம்? பாவம், சமாதானம் செய்ய வந்த ராஜேஷையும் திட்டிவிட்டேனே! எனக்காகவல்லவா வந்தான்! என் சொந்த அப்பாவிடம் தானே பேசி புரிய வைக்க வேண்டும்? இதில் விரோதத்திற்கும் கோபத்திற்கும் எந்த இடமும் அளிப்பதாக இல்லை என்று முடிவு செய்தேன்.


மார்க்கமின்றி சுற்றித் திரிந்தவனின் வாகனம் இப்போது தன் வீட்டிற்கு செல்லும் வழியில் பயணிக்கத் துவங்கியது.
 
Top Bottom