2.பொன் வசந்தமே:
என்றோ இம்மண்ணை விட்டு மறைந்த தாய் தேவகி மற்றும் நேற்று இவ்வுலக வாழ்வை நீத்த தந்தை தமிழ்வாணன் புகைப்படங்களுக்கு உரிய நேரத்தில் பூ போட வேண்டுமே என்ற பதைபதைப்புடன் அவசரமாக குளித்து ஹாலுக்கு வந்தாள், பவதாரிணி.ஆனால் அங்கே ஏற்கனவே இருவரின் படங்களையும் பூக்கள் அலங்கரித்திருந்தன.யூகிக்க பெரிதாக ஒன்றும் இல்லை.எல்லாம் நம் சர்வேஸ்வரனின் கைங்கர்யம் தாம்.அதுமட்டுமல்ல ஹாலை சுத்தப்படுத்தி ஒழுங்கு படுத்தியிருந்தான்.
அதுபோக உணவு மேசையில் ஏதோ டிபன் பார்சலும் , ஒரு ப்ளாஸ்க் காபியும் இருந்தன; கூடவே ஒரு துண்டு காகிதத்தில் சிறு குறிப்பும் இருந்தது.
"எனக்கு இன்று முக்கிய காட்சிக்கான படப்பிடிப்பு இருக்கிறது.இரவு உணவு வேளையின் போது உணவுடன் வருவேன். இப்போது நீ சமையல் செய்து சிரமம் கொள்ள வேண்டாம்.மதியத்திற்கும் உணவு வீட்டிற்கே வந்துவிடும்.பை யுவர்ஸ் சர்வா " என்று எழுதியிருந்தது.
அந்த யுவர்ஸை கண்டு 'என்ன சாமர்த்தியம் பார் ' என்று சிரிப்பும் , ' இவ்வளோ நாள் திரும்பிக்கூட பாக்காதவனுக்கு யுவர்ஸ் ஒரு கேடா' என்று கோபமும் ஒருங்கே எழுந்தன.நேர்க்குறியும் எதிர்க்குறியும் சமம்( நடுநிலை ) ஆவது போல் அவளது உணர்ச்சிகளையும் வந்த வேகத்தில் மறைந்து போயின.வயிற்றில் பசி இருந்தாலும் ஏனோ உண்ண பிடிக்கவில்லை அவளுக்கு.
எப்படி பிடிக்கும்? சின்ன வயதில் இருந்தே அவள் அறிந்த ஒரே உறவு, தந்தை.இத்தனை ஆண்டுகள் அம்மாவாய்,அப்பாவாய், ஆசானாய், தோழனாய், சில நேரங்களில் அவளுக்கு சேவகனாகவும் அதில் அவருக்கு பெருமை கூட.'எம் பொண்ணுக்கு நான் செய்வேன்.யார் கேக்குறது' என்பார்,சிரித்த வண்ணம்.எந்தக்குறையும் தெரியாமல் அவளை ஒற்றை ஆளாய் நின்று வளர்த்தவர்.இவ்ளோ காலம் வீட்டில் சமையல் கூட அவர்தான் செய்தார்.அதற்காக பவதாரிணிக்கு சமைக்க தெரியாது என்று இல்லை.
என்னதான் மகளுக்காக எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்தாலும்,மகளுக்கு எல்லாம் தெரிய வேண்டும் என்பதற்காக உரிய வயதில் உரியவற்றை உரிய விதமாக சொல்லி தந்தவர், அவர்.அவளது அம்மாவே இருந்திருந்தால் கூட சமையல் மற்றும் வீட்டு வேலைகளை இவ்வளவு நேர்த்தியாக மகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்.இப்படிப்பட்ட தந்தை இப்போது உயிருடன் இல்லை என்பதை அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.ஆதலால் தந்தையின் கூற்றுப்படி அவர் தம்முடன் தான் இருக்கிறார் இருப்பார் என தன் மனதுக்கு தானே கூறிக்கொண்டாள்.
உணவு பார்சலை திறக்க கூட விரும்பாதவளின் காதுகளில் ' மாமா இருந்தா சாப்பிடாம இருப்பியா' என சர்வேஸ்வரனின் குரல் தொடர்ந்து ஒலித்தது.ஆதலால் காலை டிபனுக்காக
அவன் வாங்கி வைத்திருந்த ஒரு செட் பூரியை கொஞ்சம் கூட வீணடிக்காமல் உண்டாள்.ஏதேதோ யோசித்த வண்ணம் சாப்பிட்டவளுக்கு தந்தையின் இறுதி செலவுகளுக்கு தான்
யாருக்கும் எந்த பணமும் தரவில்லை என்பது நினைவுக்கு வந்தது.விரைவாக உணவை முடித்துக் கொண்டு எதிர்வீட்டு சண்முகம் அங்கிளை தேடி போனாள்.
படப்பிடிப்பு தளம்,புறநகர் சென்னை.
அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தன.ஆனாலும் இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.துணை நடிகர்கள் இன்றைய காட்சிக்காக பயிற்சி எடுத்து கொண்டிருந்ததனர்.கேமரா மேன் கோணம்(ஆங்கில்) பார்த்து கொண்டிருந்தார்.கதாநாயகி ஒரு ஈஸி சேரில் அமர்ந்தபடி அனைத்தையும் இலகுவாக கவனித்து கொண்டிருந்தாள்.அவள் பின்னே மேக்கப் மேன் தேவையான பொருட்களுடன் நின்றிருந்தார்.தயாரிப்பாளர் தளம் முழுவதையும் சுற்றி நோட்டமிட்டு கொண்டிருந்தார்.சிலர் காலை டிபனை மொக்கி கொண்டிருந்தனர்.
"சார்" என ராகம் இழுத்த உதவி இயக்குநரை பார்த்து கூராக நோக்கி" எல்லாம் ரெடியா" என்று கேட்டான் சர்வேஸ்."அது வந்து சார்" என தயங்கி நின்றான், உதவி இயக்குநர்."மென்னு முழுங்காம சொல்லி தொலைடா.சூட் க்கு டைம் ஆகுது" என்றான் சர்வா அழுத்தமான குரலில்." ஹீரோ சார் மட்டும் இன்னும் வரலை சார்.அதை சொல்ல தான் வந்தேன் சார்" என்றான் பயந்த குரலில்." அவனோட மேனேஜருக்கு போன் பண்ணியா? " என்று விசாரித்தான்,சர்வா." பேசுனேன் சார்.சார் ஏதோ முக்கியமான வேலையாக வெளியே போய் இருக்காராம்
சார் " என்றான் உதவி இயக்குநர் கதை அளக்கும் பாணியில்."ஐ டோன்ட் வான்ட் எனி ஸ்டோரி ஆர் எக்ஸ்க்யூஸஸ்.ஐ வான்ட் ஹிம் பார் ஷூட் ரைட் நவ்" ( எனக்கு எந்த கதையோ காரணமோ தேவை இல்லை.அவன் படப்படிப்புக்கு உடனடியாக வேணும் ) என்றான் சர்வா.உதவி இயக்குநர் செய்வதறியாது திகைத்து நின்றான்.
சர்வாக்கு கதாநாயகன் நடிகன் மீது பயங்கர கோபம்.சொன்ன நேரத்திற்கு எல்லாரும் வந்து காத்திருக்கிறார்கள்.
அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது.கதாநாயகன் மட்டும் வந்திருந்தால் இன்னேரம் மும்முரமாக வேலை நடந்திருக்கும்.'முக்கிய வேலையாக போயிருக்கிறானாம்.அப்போ இங்கே அனைவரும் சும்மா பொழுது போக்குகிறார்களா? ' என ஆத்திரமாக எண்ணினான்,சர்வா.ஏனெனில் அந்த ஹீரோ நடிகன் இப்படி செய்வது முதல் முறையும் அல்ல.கூண்டில் சிக்கிய புலி போல் கோபமாக குறுக்கேயும் நெடுக்கேயும் நடந்து கொண்டிருந்தான்,சர்வா.
"அங்கிள் உள்ள வரலாமா? " என்றபடி சண்முகம் அங்கிளை காண எதிர்வீட்டிற்குள் நுழைந்தாள், பவதாரிணி.
அதுவரை அங்கே நிலவி கொண்டிருந்த கலகலப்பான சூழல் இவளை கண்டதும் நிறம் மாறியது.அவ்வீட்டினர் ஒரு பரிதாபமான பார்வையை இவள் மீது வீசினர்.பவதாரிணிக்கு அவர்களின் மகிழ்ச்சியில் குறுக்கிட்டு விட்டோமோ என கொஞ்சம் சங்கடமாக இருந்தது.
"வாம்மா தாரிணி " என்று வரவேற்றார், சண்முகம் மெதுவான குரலில்.மெல்லிய புன்னகையை பதிலாக தந்தாள்,தாரிணி.
"சாப்பிட்டியாமா ? முதல்ல உட்காரும்மா.தெய்வானை தாரிணிக்கு காபி கொண்டு வாம்மா " என்று கனிவாக உபச்சரித்தார், சண்முகம்.மறைந்த நண்பனை நினைத்து கொஞ்சம் கண் கலங்கினார்."ம்ம்.தமிழ் ஒரு நிமிசம் கூட சும்மாவே இருக்க மாட்டான்.எதையாவது இழுத்து போட்டு செஞ்சுட்டிருப்பான்.
அவன் இவ்வளவு சீக்கிரம் போவான்னு நினைச்சு கூட பார்க்கலையே மா" என்றார்,தழுதழுத்த குரலில்.பவதாரிணிக்கும் விழிகள் குளமாகின.
சண்முகம் மீண்டும் தொடர்ந்தார்;
"அவன் சமுதாயத்துல எத்தனையோ நல்ல மாற்றங்களை கொண்டு வரணும் ன்னு ஆசைப்பட்டான்.முடிஞ்ச மட்டும் அதுக்காக உழைச்சான்.அவனோட மிகப்பெரிய கனவுன்னா அது நீ ஐ.ஏ.எஸ் ஆகணுங்கிறது தான்.எவ்வளவோ கஷ்டம் வந்தாலும் அதை நீ மட்டும் நீ விட்டுடாத மா.தொடர்ந்து படி.என்ன உதவி வேணும்னாலும் என்கிட்ட கேளு மா" என்றார் பரிவாக." தேங்க்ஸ் அங்கிள் " என்ற இயல்பான குரலில் கூறியவள்
" அப்போவோட இறுதி காரியத்துக்கு எவ்வளவோ ஆச்சுன்னு சொன்னீங்கன்னா நான் தந்துருவேன் அங்கிள்" என்று விசயத்திற்கு வந்தாள், பவதாரிணி.அங்கிள் தவறாக நினைப்பாரோ என்ற சிறு பதைபதைப்பு அவள் மனதில் இருந்தது.அதே சமயம் இவ்வளவு பெரிய செலவை அவரை ஏற்கும்படி செய்யவும் அவளுக்கு மனதில்லை.இது தன் கடமை என்று தோன்றவும் நன்றாக நிமிர்ந்து அவரை நோக்கினாள்.
தொண்டையை செருமி விட்டு "என் நண்பனுக்காக செய்த செலவை நான் ஏத்துக்கலாம்ன்னு தாம்மா இருந்தேன்.ஆனா காலையில் சர்வா தம்பி வந்து 'எங்க கடமையை தடுக்காதீங்க ' ன்னு சொல்லி செலவான பணத்தை கொடுத்துட்டு போயிட்டாரும்மா" என்றார் தயக்கமாக.
"என்ன அங்கிள் அவன் கொடுத்த பணத்தை போய்....எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்ருக்கலாம் ல்ல" என்றாள் குரலை உயர்த்தாமலேயே." எனக்கு என்னம்மா தெரியும்? தமிழ் சாவுல தான் உனக்கும் தம்பிக்கும் ஏதோ பிரச்சினை ன்னு புரிஞ்சுது " என்று பெருமூச்சு விட்டார், சண்முகம்.
"நீங்க சொல்றதும் சரிதான் அங்கிள்.எங்க பிரச்சினை அப்பாக்கு கூட தெரியாது அங்கிள்.அது தெரியாமலே அவரும் போய் சேர்ந்துட்டாரு " என்றாள் தாரிணி விரக்தியாய்.சண்முகத்திற்கு அவளுக்கு என்ன சமாதானம் சொல்வதென்றே தெரியவில்லை. "சரி அங்கிள்.இந்த பிரச்சினையை நான் பார்த்துக்கிறேன்" என்றபடி அங்கிருந்து விடை பெற்றாள்,தாரிணி.
பதினொரு மணிக்கு மேல் சாவகாசமாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்திறங்கினான், கதாநாயகன் நடிகன்.ரசிகர்களுக்கு ஹை சொல்லிவிட்டு ,சுயபடங்கள் எடுத்து விட்டு உள்ளே வருவதற்குள் கூடுதலாக அரைமணிநேரம் ஆயிற்று.பொறுமையின் எல்லையை கடந்தான்,சர்வா.கையை மூடி திறந்து கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
சர்வாவை நோக்கி எதுவுமே நடக்காதது போல் கதாநாயகன் இயல்பாக கையசைக்கவும், இவனால் முடியவில்லை."என்ன சார் இவ்வளோ சீக்கிரம் வந்துட்டீங்க"
என்றான் சர்வா கேலியாக.
ஹீரோ நடிகனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை;ஸ்டைல் என கருதி நெற்றியை தேய்த்தான்."டைமுக்கு வர தெரியாத நீங்கல்லாம் எதுக்கு சார் படத்துக்கு கமிட் பண்றீங்க? புரொடியூசர் காச கரியாக்கவா" என்று கேட்டான்,சூடாக."மைன்ட் யுவர் வேர்ட்ஸ் சர்வா" என்றான் ஹீரோ நடிகன் எச்சரிக்கை விடுப்பது போல்."லேட்டா வந்தா நான் கேள்வி கேக்கத்தான் செய்வேன் " என்றான் சர்வா அழுத்தம் திருத்தமாக.
"உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.கால் தி புரொடியூசர் " என கத்தினான்,ஹீரோ நடிகன்.புரொடியூசரும் சில நொடிகளில் அங்கே ஆஜராகினார்.இயக்குநர் மற்றும் கதாநாயகன் என இருவரும் சண்டை கோழிகள் சாரி சேவல்களாக சிலிர்த்து கொண்டு நிற்கின்றனர். இருவருமே ஒரு படத்திற்கு முக்கியமானவர்கள்.அவருக்கு அந்த கணத்தில் என்ன செய்வதென தெரியவில்லை.
"என்ன சவுண்ட் விடுறே ? நீ என்ன பெரிய கொம்பா? டெக்னீசியன்ஸை மதிக்க மாட்ற. டைரக்டரை மதிக்க மாட்ற.அவ்ளோ ஏன் காசை கொட்டுற புரொடியூசரையும் மதிக்க மாட்ற. உன்னை இந்த இடத்துல மக்களும் திரைத்துறையில் இருக்கும் உழைப்பாளிகள் தான்.அத மறந்துட்டு ஆடாதே " என்று கடுமையாகவே வார்த்தையை விட்டான்,சர்வா.
"நேத்து பேஞ்ச மழையில முளைச்ச காளான் நீ.ஒரு வெப் சீரிஸ் சக்ஸஸ் ஆகிட்டுனா நீ பெரிய டைரக்டரா? லுக்.இது உனக்கு மொத படம்.ஆனா எனக்கு இது பத்தோட பதினொன்னு.அடக்கி வாசி.இல்ல அடையாளம் தெரியாம போயிடுவே " என்று எகிறினான், கதாநாயகன் நடிகன்.
"என்னடா சொன்ன" என பாய்ந்து போய் அவன் சட்டையை பிடித்தான்,சர்வா.
"பஞ்சபரதேசி.என் மேல கை வைக்கிறியா?" என்றபடி அவனும் இவன் சட்டையை பிடிக்க அங்கே கொஞ்சம் ரசாபாசம் ஆனது.
புரொடியூசர் தான் இடையில் புகுந்து பிரித்து விட்டார்.அவரது முகத்திற்காக விலகினர், இருவரும்.அதன்பின்பும் கொதிப்பு அடங்காமல் "சாரி சாரி.இவன் படத்துல என்னால நடிக்க முடியாது.வேற ஏதும் சான்ஸ் வந்தா என்னை கூப்பிடுங்க" என்று தயாரிப்பாளரை நோக்கி கூறிவிட்டு வந்த காரிலேயே கிளம்பி சென்றான்,ஹீரோ நடிகன்.
"உன்கிட்ட நான் இத எதிர்பார்க்கல சர்வேஸ்.என்னை டென்ஷன் பண்ணாம கிளம்பிடு.எல்லாரும் பேக் பண்ணிட்டு கிளம்புங்க.படமும் பண்ண வேணாம்.ஒன்னும் பண்ண வேணாம்.எவ்ரிபடி கோ " என்று சத்தம் போட்டார், தயாரிப்பாளர்.அவரது குரலில் விரக்தியும் ஆதங்கமும் அதிகம் இருந்தது.சமாதானமாக பேச வந்த சர்வாவை நோக்கி " நீ கிளம்பு பா.என் பிபி ஏத்தாத.ப்ளீஸ் க்ளியர் திஸ் ப்ளேஸ்.தயவுசெய்து திரும்ப என்னை தேடி வராதே " என்றார் அழுத்தமான குரலில்.அவனுக்கு மனது என்னவோ செய்தது;தன்மீதே கோபம் திரும்பியது.கோபத்தில் வேகமாக வண்டியை செலுத்தி வீட்டிற்கு சென்றான்.வழி முழுவதும் நடந்த நிகழ்வு அவனது மூளையில் ஒலிபரப்பு ஆகி கொண்டிருந்தது.
சண்முகம் அங்கிளை பார்த்து விட்டு வந்த பவதாரிணி குளித்து ரெடியாகி படிக்க அமர்ந்தாள்.ஆனால் முடியவில்லை; முழுதாய் கவனம் செலுத்த இயலவில்லை.தந்தையின் முகம் கண் முன்னே வந்து போய் கொண்டிருந்தது.புத்தகத்தை மூடி வைத்து விட்டு மேசையில் அப்படியே முகம் சாய்த்தாள்;காலிங் பெல் அடித்தது.சர்வா மதியத்திற்கு சொல்லிய உணவாக இருக்கும் என்றெண்ணியபடி கதவை திறந்தாள்.ஆனால் அவனே கையில் ஒரு பார்சல் உடன் நின்று கொண்டிருந்தான்.
அவனோடு முந்தைய காலம் போல் பேச ஆசைதான்.ஆனால் ஈகோ என்னாவது?
அவனுக்கு தர வேண்டிய பணத்தை கொண்டு வந்து மேஜையில் வைத்து விட்டு அவனிடம் கண் காட்டினாள்."எதற்கு" என்று கேட்டான் ஒற்றை சொல்லாய்."அப்பாவோட இறுதிச்சடங்கான செலவு" என்றாள், இயல்பாக.அவன் கண்கள் கோபத்தில் சிவந்தன. "என்னை பாத்தா காசு இல்லாத பிச்சைக்காரன் மாதிரி தெரியுதா? நான் அவருக்கு யாரு? மருமகன்.அதற்கு அர்த்தம் ஆவது உனக்கு தெரியுமா? அவருக்கு இன்னொரு மகன்.காசை கொடுத்து என் அன்பை கேவலப்படுத்தாத " என்று ஆத்திரமாக பேசிவிட்டு தன் மாமனார் அறைக்குள் அதான் தற்போது அவன் வசிக்கும் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவனது இந்த கோபத்தில் தாரிணி சற்று கலங்கி விட்டாள்.சோஃபாவில் சோகமாய் அமர்ந்திருந்த தாரிணிக்கு சற்று நேரத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி தந்தான்,சர்வா.ஆம் தமிழ்நேசனின் தோற்றத்தில் வந்து நின்றான்.தாரிணி கேவியபடி ஓடி சென்று அவன் மார்பில் சாய்ந்தாள்.
-தொடரும்