Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மகளின் ஜாதகம்

Hrishikesh

New member
Messages
8
Reaction score
2
Points
3
பொதுவாகவே செல்போனில் பேசுவது என்பது எனக்கு ஒவ்வாமை. சற்றும் எதிர்பாராத நேரத்தில் என் அலைப்பேசி வேறு அடித்துக்கொண்டிருக்கிறது. வேண்டா வெறுப்பாய் கையில் எடுத்துப் பார்த்தால், புதிய எண். தமிழ்நாட்டிலேயே இருந்தாலும், நண்பர்கள் வட்டத்தில் ஆங்கிலத்தில் தான் பேசுவோம். காரணம் ஏதும் தெரியாது. இப்பொழுது பேசுபவர் என் நண்பர்களில் ஒருவருக்குத் தெரிந்தவராகக் கூட இருக்கலாம். இந்த நபரிடம் ஆங்கிலத்தில் ஆரம்பிப்பதா.... தமிழில் ஆரம்பிப்பதா என்ற குழப்பம் வேறு. தயக்கத்துடன் அழைப்பை ஏற்றேன்.

“அலோ...” கிராமத்துப் பெண் குரல்.

சற்று நிம்மதியுடன், “ஹலோ, சொல்லுங்க” என்றேன்.

“எம்பேரு சரஸ்வதி. அரியலூர்ல இருந்து பேசறேன். ஒரு ஜாதகம் அனுப்பிச்சிருந்தீங்களே.....”

“நாங்க எந்த ஜாதகமும் அனுப்பலையே” குழப்பம் இன்னும் அதிகமாயிற்று.

“என்ன சார் இப்படி சொல்றீங்க? நேத்து தானே உங்க பொண்ணு ஜாதகத்தைத் தரகர் கொண்டுவந்து காட்டினாரு...” இத்தனை மிரட்டலைத் தொனியில் காட்டியிருக்கத் தேவையில்லை.

“ராங் நம்பர்ன்னு நினைக்கிறேன்” என்று இழுத்தேன்.

“என்னது? ராங் நெம்பரா? அதெல்லாம் இருக்காது... எங்களைவிட வேற ஒரு நல்ல வரன் கிடைச்சிருக்கும். அதான் இப்படிப் பொய் சொல்றீங்க... இந்த மாதிரி நடக்கிறது எங்களுக்கு இத்தோட மூணாவது தடவை...” என்று பொரிந்து தள்ளிவிட்ட வேகத்தில் போனையும் அணைத்துவிட்டார்.

யாராவது அந்த பெண்மணிக்குப் புரிய வையுங்களேன், என் மகளின் வயது வெறும் மூன்றுதான் என்று!
 
Last edited:
Top Bottom