அத்தியாயம் - 9
ரத்தினவேல் பாண்டியனை நெருங்கிய போது தான் புரிந்தது அவனுக்கு ஏதோ உடல்நலம் குன்றியிருக்கிறது சற்று அசதியில் நாற்காலியில் சாய்ந்திருக்கிறான் என்று.
"பாண்டியன், நான் கயல் வந்துருக்கேன்" என்று தட்டி எழுப்பிய அடுத்த நொடி அவன் எழுந்துவிட்டு ஆச்சரியத்துடன் பார்த்தான்.
"என்ன நீ , இங்கே வந்துருக்க. மொய் விருந்துக்கு போலயா?என்று ஆச்சரியத்துடன் கேட்க.
"அதெல்லாம் போய்ட்டு வரப்ப தான் உன்னை பார்த்துட்டு போலாமேனு வந்தேன்"என்று அணுசரனையோடு அவள் கூறியது ஒருபக்கம் இருந்தாலும் இப்படி யாருமே இல்லாத க்ளீனிக்கில் இவர்கள் இருவர் மட்டுமே உரையாடிக்கொண்டு இருப்பது ஏதோ மனதுக்குள் உறுத்தலாக இருந்தது.
"சரி கிளம்புவோம் வா" என்று எத்தனிக்கும் போது தான் கதவு வெளிப்பக்கமாக தாழிடபட்டது என்பதை புரிந்துக்கொண்டனர் இருவரும்...
"இது என்ன? யார் பண்ணிருப்பா"என்று வினவினான்.
"தெரியலையே நான் வரப்ப டம்முனு சத்தம் கேட்டுச்சு ஆனால் காத்துக்கு கதவு வேகமா சாத்திருக்கும்னு நினைச்சிட்டு. விட்டுட்டேன்" என்க பதற்றத்துடன் கதவை திறக்க முயன்றான் ஆனால் முடியாமல் போனது.
சற்று நேரத்தில் ஒரே மக்களின் கூச்சல் சத்தம் கேட்கத்துவங்கியது யாரோ பட்டென்று கதவை திறந்தும்விட்டனர்.
அச்சோ இப்படி உள்ளே மாட்டிக்கொண்டோம் என்ற வருத்தத்தில் அவள் தோள்சாய்ந்திருந்ததை பார்த்துவிட்டு தவறாக புரிந்துக்கொண்டு...
"என்ன அசிங்கம் இதெல்லாம்" என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆரம்பிக்க..
"அய்யோ நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னுமில்லை. அவள் எனக்கு என்ன ஆச்சு என்று பார்க்க வந்தாள். யாரோ வெளிப்பக்கமாக பூட்டியிருந்தாங்க திறக்க முடியாமல் நாங்க அவஸ்தை பட்டோம். அதுக்குள்ள நீங்க வந்து திறந்திங்க இவ்வளவு தான் நடந்துச்சு" என்றதும் ஊர் மக்கள் அதை காதில் வாங்கியபோதும் அவர்களை நம்ப தயாராக இல்லை...
உடனே ஊர் பஞ்சாயத்து கூடியது. பயத்துடன் நின்றிருந்தாள் கயல்விழி. நம்ம எதுவும் தவறு செய்யவில்லை என்ற தைரியத்தில் துணிச்சலான பார்வையுடன் ரத்தினவேல் பாண்டியன்.
"ஆனாலும் இந்த டாக்டர் தம்பி இப்படி பண்ணிருக்க கூடாதுபா" என்று கூட்டத்தில் ஒருவன் கூறியது காதில் விழுந்தது.
",தம்பி உன் தரப்புல நீ என்ன சொல்ல வர..."என்று பஞ்சாயத்து தலைவர் கேட்கவும் அமைதியாக நின்றான் ரத்தினவேல் பாண்டியன்.
"இப்படியே அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்?"என்று வினவினார் தலைவர்.
"எப்படியும் நான் சொல்றதை யாரும் புரிஞ்சிக்க போறது இல்லை அப்றம் நான் எதுக்கு சொல்லிக்கிட்டு" என்றதும்.
"அப்படி சொன்னால் எப்படி"
"சரிங்க நான் சொல்றதை அப்போவே புரிஞ்சிக்கிட்டு இருந்தா இந்த பஞ்சாயத்து தேவைப்பட்டுருக்காது. இப்ப முதல்ல நீங்க எதை வச்சு தப்பா புரிஞ்சிக்கிட்டிங்கனு தெரிஞ்சிக்லாமா"
"ஒரே அறையில் இரண்டு பேரும் கதவு தாழிட்டு உள்ளவே இருந்தா வேற என்ன தப்பு தானே பண்ணிருப்பிங்க" என்று பஞ்சாயத்து தலைவர் கூறியதை கேட்டவன்.
"சரிங்கய்யா நீங்க சொல்ற மாதிரியே வச்சுப்போம். அப்படியே தப்பு நடந்திருந்தாலும் அது எங்களோட தனிபட்ட விஷயம் இதுல பஞ்சாயத்து கூட என்ன இருக்கு"
"இந்த ஊருக்குன்னு ஒரு மானம் மரியாதை இருக்கு. அப்படியெல்லாம் விட்டுட முடியாது"
"சரி அப்படினா ஒன்று பண்ணுவோம். நான் அவள் கழுத்தில் தாலி கட்டிட்டா எல்லாம் சரியாகிடும் தானே?"
"அட இதானே வழக்கம் கற்பை யாரிடம் இழந்தாங்களோ அவங்களுக்கு கட்டிதருவது தானே நியாயம்"
"ரைட்டு அப்படினா நான் அவள் கழுத்தில் தாலி கட்டிடுறேன். எதாவது அபராதமும் இருக்கா" என்றவனை ஏறிட்டு பார்த்தாள் கயல். இது ஏனடா இல்லாத தவறை ஒப்புக்கொள்ள தயாராகுகிறாய் என்றாற்போல் அவனை பார்த்தாள்
"அபராதம் எல்லாம் கிடையாது. அவளை கட்டிக்கிட்டு இந்த ஊரை விட்டு தள்ளி இருக்கணும். இது தான் தண்டனை"....
பஞ்சாயத்து தீர்ப்பில் கயலுக்கு சிறிதளவும் உடன்பாடு இல்லை. தான் கற்பை இழந்தவள் போல் சித்தரிக்கப்பட்டதை அவளால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
"நான் தாலி கட்டிக்க மாட்டேன்" என்று பிடிவாதமாக இருந்தாள் கயல்.
"இது தான் நல்ல வாய்ப்பு ஏனடி நழுவ விடுகிறாய்" என்று பார்வையால் அவளிடம் உரைத்துக்கொண்டிருந்தான் ரத்தினவேல் பாண்டியன். ஒருவழியாக கயல் கழுத்தில் தாலி ஏறியது. ஊர் விட்டு தள்ளி இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் இருவரும் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு சிறிய டவுனில் வீடு பார்த்து எடுத்துக்கொண்டு தங்கத்துவங்கினர்.
நாட்கள் இப்படியே காணாமல் போனது. கல்லூரிக்கு மட்டும் சென்று வீடு வந்து சேர்வாள் கயல். ரத்தினவேல் பாண்டியனுக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வேலையும் கிடைத்துவிட்டது.
எட்டிப்பிடித்தால் காய்கறி மார்க்கெட். வீட்டுக்கு அருகாமையில் ரயில்நிலையம். என்று சகலவசதிகளுடன் இருந்தது அவர்கள் தங்கியிருக்கும் வீடு. இவர்கள் இங்கு வந்த பின்பு லட்சுமியிடம் எந்தவித தொடர்பும் இல்லை கயலுக்கு. ஆனால் படிப்பு மீது ஒரு பிடிப்பு இருந்துக்கொண்டே இருந்தது.
திருவலங்காடனூரிற்கு செல்ல இயலவில்லை என்ற வருத்தமும் அவ்வப்போது வந்து சென்றது. காலையில் எழுந்து தன்னால் இயன்ற சிற்றுண்டி தயாரித்து விட்டு கல்லூரிக்குச் சென்று வருவாள். ஆனால் மாலை நேரத்தில் தனிமை வாட்டியது. எதையாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு இருந்துக்கொண்டு இருந்தது.
இதற்கிடையில் ஆடிமாதம் வந்தது. கணவன் மனைவி இருவரும் தனிதனித்தனியே இருக்கவேண்டும் என்பது ஐதீகம். ஆனால் அவளை அம்மா வீட்டிற்கு அழைத்து வந்து சம்பிரதாயம் செய்ய இயலவில்லை என்று லட்சுமிக்கு உருத்தலாகவே இருந்தது.
எனவே தன்னுடைய சித்தி மகள் (தங்கை முறை) மதுரையில் இருப்பதால் அவளுக்கு தகவல் அனுப்பி ஒருமாதம் ஆடி வரை கயலை தன்னுடன் வைத்துக்கொள்ளுமாறு கூறினாள் லட்சுமி.
"இவ்வளவு தானே நான் பார்த்துக்குறேன் " என்று சித்தி மகள் கூறிவிட்டு உடனே அவளை அழைத்து செல்ல ஏற்பாடும் செய்தார்.
"ஏண்டா அழகர்,உனக்கு இம்புட்டு நாள் அக்கா தங்கை இல்லைன்னு ரொம்ப வருத்தப்பட்டல இனி அந்த கவலை உனக்கில்லை. கயல் அக்கா இங்கே வரப்போறா" என்றதும் மகிழ்ச்சியில் துள்ளினான் அழகர்.
"அப்படியா மா எம்புட்டு நாள் இருக்கும் கயல் அக்கா" என்று வெகுளியாய் கேட்டான் ஆறாவது படிக்கும் அழகர் என்கிற அழகர்சாமி.
"ஒருமாசம் இங்கே தான் டா" என்றாள் அவனுடைய அம்மா.
"அப்படினா ஜாலிதான்" என்றான் அழகர் சிறித்துக்கொண்டு. அவனுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். இவ்வளவு நாள் உடன்பிறந்தவர்கள் இல்லை என்று வருந்தியவனுக்கு அவள் வருகைத்தருவது எல்லையற்ற மகிழ்ச்சி அளித்தது.
"அக்கா வந்தா மதுரை முழுக்க சுத்திக்காட்டனும்" என்று துள்ளி குதித்தான்.
கயலும் அவ்வாறே கிளம்பி தன் சித்தி வீட்டிற்கு வந்தாள். தன்னால் இயன்ற வரிசை தட்டுகளுடன் வரவேற்றாள் மகளை.
"சித்தி உன் வீடு சூப்பரா இருக்கு. நல்லா பளிங்கு மாதிரி டைல்ஸ் எல்லாம் போட்டு அட்டகாசமா இருக்கிறது" என்று வியந்தாள்.
"நீ சின்ன வயசுல ஒருவாட்டி வந்துருக்க இங்கே அதுகப்புறம் இங்கே வரவேயில்லை. சொல்லப்போனால் விவரம் தெரிஞ்சு இப்பதானே வர " என்றார் சித்தி.
சித்தி சித்தப்பா அழகர் என அனைவரிடமும் நன்றாக பழகினாலும் தன்னுடைய கல்லூரியையும் பாண்டியனையும் ரொம்பவே மிஸ் பண்ணாள் கயல்.
"அக்கா வரியா இன்னைக்கு மீனாட்சி அம்மன் கோவில் போலாம்" என்றழைத்தான் அழகர்.
"இல்லை அழகர் எனக்கு மனசு சரியில்லை நான் வரலை"
"அட என்னக்கா நீ. அப்றம் என்னதான் பண்ணப்போறே வீட்ல. சும்மா தானே இருக்க வாயேன் போலாம்" என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றான். என்னவோ தெரியவில்லை அந்த தூங்கா நகரமானது அவளை மெல்ல ஈர்த்தது.
கோவிலில் தரிசித்துவிட்டு வெளியே அழகருடன் வந்தவள்.
"அழகர் இங்கே ஜிகிர்தண்டா ரொம்ப பேமஸ் தானே வாடா வாங்கி சாப்பிடலாம்" என்றழைத்தாள்.
"அக்கா நல்ல வேலை நியாபகம் படுத்தினியே " என்று அவளை அழைத்துக்கொண்டு தனக்கும் அவளுக்கும் ஜிகிர்தண்டா வாங்கினான்.
"ஏன்கா....."
"என்ன அழகர்"?
"உனக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லைன்னு என்னைக்காவது கவலை பட்டுருக்கியா"
"இல்லை டா, எனக்கு என் கிராமமும்,வீடும் படிப்புமே போதும்னு இருந்தது. நமக்குனு யாரும் இல்லையேனு ஏன் நினைக்கனும். எல்லாரும் இருக்கிறதே நமக்காக தான்னு நினைச்சிக்க வேண்டியது தான்" என்க...
"யக்கா ஆனாலும் நீ ரொம்பவே பாஸிட்டிவ் " என்று சிரித்து வைத்தான்.
"ஏண்டா அப்படினா நீ ஃபீல் பண்றியா யாரும் இல்லைனு" என்றதும்.
"ஆமாம் ஆனால் இப்ப அந்த ஃபீல் போயிடுச்சு"
"எப்படி"
"அதான் இப்ப நீ வந்துருக்க ல"
இருவரும் இப்படியே பேசிக்கொண்டு நடந்ததில் வீடு வந்து சேர்ந்தனர்.
"ஏய் கயலு உன் போன் அடிச்சிட்டே இருந்துச்சு. அனேகமாக உன் வீட்டுக்காரு தான் நினைக்கிறேன். எடுத்து பேசிடு"
தன் கைப்பேசியை கையில் எடுத்து அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
"ஹலோ மேடம் ரொம்ப பிஸி போலருக்கு"
"ஆமாங்க நான் அழகர்கூட மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்"
"ம்ம்ம் என்னமோ தெரியல நீ போனதுல இருந்து மனசுக்கு ஒருமாதிரி இருக்கு. எதுக்கு தான் இந்த சம்பிரதாயமோ " என்று சலித்துக்கொண்டான்.
"ஹாஹா ஆமாங்க ஆடிமாதம் கருவுற்றாள் சித்திரை மாசம் குழந்தை பிறக்கும் அதனால தான் இந்த சம்பிரதாயம்" என்க.
"அடிப்போடி பைத்தியம். அதெல்லாம் குழந்தை பெத்துக்க தினைக்கிறவங்களுக்கு. நம்ம தான் தள்ளி வச்சுருக்கோமே உன் படிப்பு முடியுற வரைக்கும்" என்றதும்.
"அதுசரி இதையெல்லாம் பெரியவங்க கிட்ட எப்படி சொல்றதாம். ஏதோ ஒருமாசம் தானே. இருந்துட்டு திருப்பி ஊருக்கு வந்திடப்போறேன் விடுங்கள்"
"எது எப்படியோ நீ அங்கே சந்தோஷமாக தானே இருக்கே" என்றதும்.
"அதற்கு ஒரு குறையும் இல்லை. உங்கள் நினைப்பு அடிக்கடி வந்தாலும் இங்கே அழகர் கூட இருக்கிறது அவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா" என்றதும்.
"எப்படியோ எனக்கொரு மச்சான் இருக்கானே "உட்சாகமாக கூறியதும் சிரித்து வைத்தவள்
"சரிங்க உங்கள் உடம்பை பார்த்துக்கோங்க நான் அப்றம் பேசுறேன் பை" என்று கைப்பேசியை அவள் வைக்கும் முன்பு...
"ஐ...மிஸ்...யூ கயல்" என்றான் உமிழ்ந்த குரலில்...அவன் உரைத்ததும்.
"நானும் தான்" என்று பட்டும்படாமல் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு அழகருடன் வரவேற்பு அறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்க துவங்கியவள்.
"சித்தி எதாவது ஹெல்ப் பண்ணணுமா" என்று சமையலறையில் இருக்கும் தனது சித்தியிற்கு குரல் கொடுக்க...
"வேண்டாம் வேண்டாம் டிவி பாரு அவன்கூட " என்று சொல்லியவாறு இரவு உணவை தயாரித்துக்கொண்டிருக்க...அழகருடைய தந்தை சட்டென்று உள்ளே நுழைய அவர் மதுஅருந்தியுள்ளதை தெரிந்துக்கொண்ட கயல்...
சங்கடத்துடன் "ச்சு என்ன சித்தப்பா இதெல்லாம்" என்று முகம் சுளிக்க. அவன் அளித்த பதிலில் திடுக்கிட்டுப்போனாள்.
"என்ன சித்தப்பா சொல்றீக"என்று புருவத்தை உயர்த்தியபடி கேட்க..
சமையலறையில் இருந்த அவரது மனைவியும் ஓடிவந்து "என்னங்க சொலீறீங்க " என்று கேள்விக்குறியாய் நிற்க...அழகருக்கு ஒன்றும் புரியவில்லை.
"அப்பா"....என்றான் பதற்றத்தில்.
தொடரும்.
கயலின் சித்தப்பாவிற்கு என்ன கவலை எதனால் மது அருந்தினார். பதில் அடுத்த அத்தியாயத்தில்.