Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL மனிதமே மடியாதிரு - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

மகா சமுத்ரா

New member
Vannangal Writer
Messages
20
Reaction score
18
Points
3

தாய் மண்ணே வணக்கம்


“எங்கும் புகழ் துவங்க..


இங்கு நானும் நான் துவங்க..

அன்னையான சுந்தரியே..

ஞான தங்கமே..

பறக்க விட்டு தேடலானோம்

தேவதையைக் காணோமே..


தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த பாடலை மாற்றியது ரிமோட்டை எடுத்தவனின் கை.

“ப்ச்” என்ற சலிப்புடன் ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டே வர ஒரு செய்தி சேனலில் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் விரிந்தன அவனது இமை மயிர் நிரம்பிய கண்கள்.

“மார்ச் இருபத்தி நான்காம் தேதியிலிருந்து தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபடுகிறது... அதனால் மக்கள் யாரும் அவர்கள் இருக்கும் மாவட்டத்தை விட்டு வெளியேற முடியாது” என்று செய்தி வாசிப்பாளர் அவனது நெஞ்சில் ஆயிரம் அணுகுண்டுகளை அனாயசமாக அள்ளிப் போட

“வாட் த __? காட் இன்னும் எத்தன நாளைக்கு இந்த பட்டிக்காட்டுலையே நாளக் கடத்துறது” என்று வாய் விட்டு புலம்பியவன்

“டேடி” என்று கத்தியபடி எழுந்து சமயலறையினுள் சென்றான்.

அவன் போய் “டேட் ந்யூஸ் பாத்....” என்று சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே அவனது வாய்க்குள் குலோப்ஜாமூனை அமுக்கிவிட்டிருந்தார் அவனது தந்தை.

“எப்டி இருக்குடா? எப்பயும் போல உன் அப்பா தான சமையல்ல கிங்?” என்று அவர் மித்தபாக கண்ணடித்துக் கேட்ட நேரத்தில் வாயில் இருந்ததை தின்று முடித்திருந்தவன்

“யோவ்... ஒன்னு சொல்ல வந்தா சொல்ல விடுறியா?” என்று சலித்தபடி அவரது கையைப் பிடித்து ஹாலுக்கு இழுத்துச் சென்றான்.

“டேய் ரித்விக் விடுடா... இன்னொரு அடுப்புல வடை போட்டுட்டு இருக்கேன்டா... இப்போ வடைய சட்டில இருந்து எடுக்கலைனா கருகிரும்டா” என்று அவர் பதற

“ஆமா இப்போ அந்த ஓட்ட வடை தான் ரொம்ப முக்கியம்... இங்க பாருங்க” என்று அவன் தொலைக்காட்சியைச் சுட்டிக் காண்பிக்க, அதில் ஓடிக் கொண்டிருந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் ஆணி அடித்தார் போல் நின்றுவிட்டார் அவனது தந்தை ரகுநந்தன்.

“டேய் என்னடா இப்டி சொல்லிட்டாங்க? இப்போ எப்டிடா கெனடா போறது” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க

“என்னப்பா? கனடாவுக்கு என்ன? “ வெளித் திண்ணையிலிருந்து வந்தது அந்தத் தளர்வான குரல்.

அப்பனும் மகனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அது.. அது... கெனடால இருக்க என்னோட ப்ரெண்ட்ஸ் பத்தி பேசிட்டு இருந்தேன் கிரான்ட் பா” குரல் வந்த திசை நோக்கி நகர்ந்தபடி சொன்னான் ரித்விக்.

“ஓ.. மறுபடியும் அங்க போகப் போறீங்களாய்யா” என்று ஒருவித பரிதவிப்புடன் கேட்டவரைப் பார்த்த அவரது பேரன் ரித்விக் “இல்ல கிரான்ட் பா.. சும்மா பேசிட்டு தான் இருந்தோம்” திண்ணையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து சங்கடமான நெளிவுடன் அவன் சொல்ல

அவனது கன்னத்தை ஆசையாக வருடியவர் “இந்தக் கெழவனோட ஆசைக்காக உன்ன இங்க இருக்க சொல்லி வற்புறுத்துறனாய்யா?” தலையை தொங்கபோட்டபடி சோகக் குரலில் கேட்டார் அந்த எழுபத்து நான்கு வயது முதியவர்.

அவன் எதுவும் பேசாமல் தலை குனிந்தபடி நிற்க அவனைப் பார்த்து தொய்ந்தவர்

“வாயா.. வா” என்று திண்ணையில் நகர்ந்து அமர்ந்து அவன் அமர இடம் கொடுத்தார்.

அவன் அமர்ந்தவுடன், வெள்ளிகள் கண்சிமிட்டும் வானத்தை நோக்கியவரிடமிருந்து ஒரு பெருமூச்சு எழுந்தது.

“தஞ்சாவூரு மண்ணு எடுத்து

தாமிரபரணி தண்ணிய விட்டுன்னு தமிழ்ல ஒரு பாட்டு இருக்கு கேட்டுருக்கையாயா?” என்று அவர் கேட்க இவனது தலை இடவலமாக அசைந்து இல்லை என தெரிவித்தது.

“அந்த பாட்டுல தான் காதலிக்குற பொண்ண வர்ணிச்சு ஒரு குயவன் பாடுவான்..”

“குயவனா?” புரியாமல் கேட்டான்.

அவனது கேள்வியை உள்வாங்கிக் கொண்டவர் ஒரு வேதனைச் சிரிப்போடு “குயவன்-னா மண்பானை செய்றவன்...” என்று சொல்ல

“ஓ..” என்று விழிவிரித்தவனுக்கு கதை கேட்கும் ஆர்வம் கண்களில்.

“அந்தக் குயவன் தமிழ்நாட்டுல இருக்க ஒவ்வொரு ஊரா சொல்லி தங்க வயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு.. வானம்பாடி மண்ணெடுத்தே கண்ணுக்குன்னு பாடிகிட்டே அந்த பொண்ணோட மண் சிற்பத்த செய்வான்..”

“ம்ம்..” தலையை அசைத்தபடி அவன் உம் கொட்ட அவனைப் பார்த்து மென்மையாக சிரித்தவர் தொடர்ந்தார்.

“இந்தப் பாட்ட எழுதுனவரு வைரமுத்து... வைரமுத்து வந்து”

“ம்ம்ம்... லிரிசிஸ்ட் தான... அப்பா சொல்லி கேள்விப்பட்டிருக்கேன் கிரான்பா”

“அவரு ஒருக்கா சிங்கப்பூருக்கு போயிருந்தாராம்”

“ம்ம்ம்”

“அப்போ அங்க ஒரு பூங்கால நடந்து போயிட்டு இருக்கும் போது வைரமுத்துவோட வழியில போன ஒரு பெரியவர் இவரப் பாத்ததும் நின்னுட்டு ‘நீங்க வைரமுத்து தான?’ன்னு கேட்டாராம்..”

“சேரி”

“வைரமுத்துவும் ஆமாங்கன்னு சொல்லிட.. அந்தப் பெரியவரோ ‘நீங்க எழுதுன பாட்டுளையே எனக்கு தஞ்சாவூரு மண்ணெடுத்து பாட்டு தான் ரொம்ப பிடிக்கும்னு சொன்னாராம்..”

“ஏவா?” ஆர்வமாகக் கேட்டான்.

“இதையே தான் வைரமுத்துவும் கேட்டாராம்... ‘ஏ உங்களுக்கு அந்த பாட்டு தான் ரொம்ப பிடிக்கும்னு, பதிலுக்கு அந்த பெரியவர் சொன்னாராம் ‘என்னோட பூர்வீகம் தமிழ்நாடு... எங்க மூதாதையர்கள் அவுங்க காலத்துலையே இங்க இடம் பெயர்ந்துட்டாங்க.. புலம் பெயர்ந்து வந்தாலும் நா இன்னைக்கும் ஒரு தமிழன் தான்.. ஆனா என்னோட பூர்வீகம் எதுன்னு எனக்குத் தெரியாது... மூனு தலைமுறைகளுக்கு முன்னாடி புலம் பெயர்ந்து வந்துட்டோம்.... இந்த பாட்ட கேக்கும் போது இதில குறிப்பிட்டு இருக்க ஊர்களுக்குள்ள எதோ ஒரு ஊர் தான் என்னோட பூர்வீகமோன்ற ஏக்கத்த என்னோட நெஞ்சுக்குள்ள எழுப்புது.. அதனால இந்த பாட்டு வரும்போது எல்லாம் பாஞ்சாலங்குறிச்சியா? கஞ்சனூரா? எது என்னோட ஊரா இருக்கும்னு என் மனசு தேடி தேடி பரவசப் படுகிற பாட்டு இது...’ன்னு சொன்னாராம்..”

சொல்லிவிட்டு திரும்பி ரித்விக்கைப் பார்த்தார்.

இம்முறை அவன் உம் கொட்டவில்லை.

அவனது புருவங்கள் நெளிந்து ஒன்றோடு ஒன்று ஒட்ட முற்பட்டுக் கொண்டிருந்தது.

ஏதோ யோசிக்கிறான் என்று புரிந்துக் கொண்டவர்

“அந்தப் பெரியவர் யாரு தெரியுமா? ராசா” என்று கேட்டார்.

அதில் விழித்தவன் “யாரு கிரான்பா?” என்று கேட்டான் தானும்.

தாத்தனும் பேரனும் பேசிக் கொள்வதை முகப்பறையிலிருந்து(Hall) கேட்டுக் கொண்டிருந்த ரகுநந்தன் மனதில் அவனது தந்தை சொன்ன வார்த்தைகள் பிசைய ஆரம்பிக்க, யோசனை படிந்த முகத்துடன் சமையலறையினுள் நுழைந்தார்.

கேள்வியைக் கேட்டுவிட்டு பதிலுக்காக ஆர்வமாக காத்திருக்கும் பேரனைப் பார்க்கும் பொழுது, தான் இத்தனை வருடங்கள் வாழ்ந்த விரக்தி நிறைந்த வாழ்க்கையெல்லாம் அவன் கண் பார்வையில் கரைவது போலிருந்தது தவசிக்கு.

“சிங்கப்பூரோட முன்னாள் அதிபர் நாதன் தான் அந்தப் பெரியவர்” என்று சொல்லியபடி திண்ணையை விட்டு எழுந்தவர் அவனது தோளில் தட்டிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டார்.

ரித்விக்கோ ஆச்சரியத்தில் சில வினாடிகள் வார்த்தையின்றி உறைந்திருந்தான்.

ரித்விக் ரகுநந்தன்!

இருபத்தி நான்கு வயது ஆண்மகன்.

சந்தோஷம், சௌகரியமும் மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்துக் கொண்டிருப்பவன்.

தாயின் அன்பையும் சேர்த்து வழங்கிக் கொண்டிருக்கும் தந்தையை வாய்க்கப்பெற்றவனுக்கு தனத்திலும் மனதிலும் குறைவேதுமில்லை.

பிறந்ததிலிருந்தான வெளிநாட்டு வாசம், தாய் மண்ணிற்கு ஏங்க விடவில்லை.

இந்தியா எனும் பெயரே வெறும் கற்பனை பிம்பமாகவும், தந்தையின் வாய் வார்த்தைகளாகவும், காணொளி நினைவுகளாகவுமே அவனது நினைவு அடுக்குகளில் ஒளிந்துக் கிடந்தன.

ஆம் கிடந்’தன’ தான், கிடக்கின்றன அல்ல.

காரணம்?

அவன் இந்தியா வந்து இன்றோடு இரண்டாவது நாள் ஆகிவிட்டது.

ஓவியங்கள் உயிர்பெற்று எழுவது போல், இத்தனை வருடங்கள் இந்தியா பற்றி நினைவடுக்கின் இடுக்குகளில் கிடந்த கற்பனைகள் எல்லாம் உயிர்பெற்று கண் முன்னால் கிடக்க அவற்றை உள்வாங்கிக் கொள்ள ஆரம்பித்திருந்தான்.

அவன் வசித்த கெனடாவிற்கும், இப்பொழுது வந்திருக்கும் இந்தியாவிற்குமான வித்தியாசங்கள் அவனது மனதில் பெரிய மலைப்பை உண்டாக்கியது என்னவோ உண்மை தான்.

வயல்களில் அறுப்புக்காக விளைந்து நின்று கொண்டிருந்த நெற்கதிர்கள் இவனைப் பார்த்து தலையாட்ட, மரங்களில் கொஞ்சி விளையாடும் பறவைகளின் கீச்சுகள் கெனடாவின் நயகராவாக அவனது காதுகளையும் மனதையும் குளிரச் செய்ய, மக்களின் மாறுபட்ட மனநிலைகளும், மனிதர்கள் உடுத்தும் ஆடைகளும் அவனது கண்களை விரியச் செய்தன.

இந்தியா பற்றிய காணொளிகள் பலவற்றைக் கடந்து வந்திருந்தாலும் அவனது பார்வை வெளிநாட்டில் வாழ்ந்தவனின் பார்வையாக இந்தியாவைப் பார்த்ததே தவிர, தாய் நாட்டை, சொந்த மண்ணை பார்ப்பவனின் பார்வையாக இல்லை.

இதை உணர்ந்துக்கொண்ட அவனது தாத்தா தவசியின் மனதில் ஈட்டி சொருகியது போலொரு வலி எழுந்தது.

“சொந்த மண்ணையே அந்நியனாட்டம் பாக்குறானே” என்று அவரது மனது குமுறியது.

“இதே நிலைமை இனி வரப்போகும் தனது சந்ததிகளுக்கும் வந்தால் தன் குலம் எப்படி நிலைக்கும்?” என்ற கேள்வி அவரது மனக்கண் முன் பூதகரமானதாக எழ நொடிந்துப் போனார் தவசித்தேவர்.

ஏற்கனவே பெற்ற மகனின் முன் தனது உடல் கூனிக்குருகி நிற்கிறது என்பது போல் அவருக்குள் ஒரு எண்ணம் எழுந்து அவரை வாட்டி எடுக்க ஆரம்பித்திருந்தது.

பழைய ஞாபகங்கள் கண் முன் தாண்டவம் ஆட தடுமாறி தன் பக்கத்தில் இருந்த கல்லின் மீது அமர்ந்தார்.

“என் வாழ்க்கையையே அழிச்சிட்டிங்களேப்பா... இப்போ சந்தோசமா?”

என ரகுநந்தன் பல வருடங்களுக்கு முன்னாள் கேட்ட கேள்வி இன்றும் அவரது காதுகளில் கூர் ஈட்டிகளைப் பாய்த்துக் கொண்டே இருந்தன.

அன்று தான் அவரது ஆசை மகன் அவரை அப்பா என்று அழைத்த கடைசி நாள் என்ற எண்ணம் எழ கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடி விழுந்தது தவசிக்கு.

தந்தை – பிள்ளை உறவு என்பது என்ன சாதாரண பந்தமா?

உன்னதத்திலும் உன்னதமானது அல்லவா?

‘அந்த உன்னதத்தை குழைக்க பிறந்த பாவியாகிவிட்டேனா நான்?’ என்ற கேள்வி அவரது சுருக்கம் விழுந்த நெஞ்சில் எழ வேதனையில் வெந்துருகிப் போனார் மனிதர்.

இருபது வருடங்களுக்கு மேலாகியும் வற்றாது வழியும் அவரது கண்ணீரைக் கொண்டு காவிரியை மீட்டுவிடலாம் போலும்.

“கெடுகவென் ஆயுள்

என பாண்டியர் ஆட்சியின் சிறப்பு தன்னால் பிழைபட்டுவிட்டதே என்று இறந்த பாண்டியனைப் போல என் மகனின் சந்தோசத்தைக் கெடுத்த என் மூச்சு அப்பொழுதே பிரிந்திருக்கக் கூடாதா? நித்தம் நித்தம் நிந்தித்து என்னை அழிப்பது தான் உன் முடிவா எம்பெருமானே? ஐயோ போதுமப்பா என்னால் முடியலையே... என் பேரன் என்னையும், இந்த மண்ணையும் அந்நியமா பாக்குறதையே என்னால தாங்கிக்க முடியலையே ” என்று கத்திக் கதறியது அவரது உள்ளம்.

தவசி ஒரு விவசாயி, சொந்த நிலங்கள் கொஞ்சமும், இருக்கும் வீடும், தொழுவத்தில் கட்டியிருக்கும் மாடும் அதன் கன்றும், சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் இருநூறு ரூபாயும், உள்ளே அலமாரியிலிருக்கும் நெல் விற்ற பணமும் மட்டுமே அவரது சொத்து.

இத்தனை வருடங்களாக இருந்த தனிமை இரண்டு நாட்களுக்கு முன் விடை பெற்றிருக்க, அதைத் துரத்திவிட அவர் செய்த செயல்களும் பட்ட பாடும் அவருக்கும் தெருமுக்கு அரை டிரவுசர் என அழைக்கப்படும் ஒரு சிறுவனுக்கும், லிங்கத்திற்கும் மட்டுமே தெரிந்த இரகசியங்கள்.

பல வருடங்களுக்கு முன்பே கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்ட மகனை எப்படி அழைப்பது, எப்படி அணுகுவது என திணறிக்கொண்டிருந்தார் விஞ்ஞான வளர்ச்சியை பாகற்காய் பொரியலைப் போல் கண்டுக்கொள்ளாது ஒதுக்கி வைத்திருந்த தவசி.

அன்று...

மனதில் ஓடிக்கொண்டிருக்கும் சலனங்களோடு வாணிக்கருப்பசாமி கோவிலில் அமர்ந்திருந்த தவசியிடம் வந்தமர்ந்தான் தெருமுக்கு அரை டிரவுசர்.

கையில் நவீன ரக அலைபேசி.

அந்த அலைபேசியில் பல்லைப் பல்லைக் காட்டி ஆனந்த களிப்பில் ஏதோ செய்துக்கொண்டிருந்தவனுக்கு தான் செய்துவிட்ட சரித்திர நிகழ்வை யாரிடமாவது பெருமை பொங்க பகிர்ந்துக்கொள்ள வேண்டுமென்ற அவா!

அவனது பற்கள் மின்னும் அவாவை எல்லாம் கண்டுகொள்ளும் பரந்த மனநிலையிலில்லை தவசி.

“தவசி பெரியப்பாஆஆஆ” கண்களும் பற்களும் மின்ன ஆசையாக அழைத்தான் அரை டிரவுசர்.

ஆறாம் வகுப்பு படிக்கும் அரை டிரவுசருக்கு எழுபத்து நான்கு வயதான தவசி பெரியப்பாவா?!

ஆம்! எந்த வகையில் என்று சொல்கிறேன் கேளுங்கள்.

தவசியின் இரண்டு விட்ட சித்தப்பாவின் ஏழாவது மகனுக்குப் பிறந்தவன் தான் இந்த அரை டிரவுசர்.

“ம்ம்ம்ம்” என்றார் தவசி கண்களை மூடிய நிலையிலேயே

“இங்கன பாருங்களேன்... நா என்ன செய்துருக்கேன்னு” என்று சிரித்தவனின் பற்கள் ‘ஆஹா வைரங்கள்!’ என பார்ப்பவர் பறித்துக் கொள்ளும் அளவிற்கு மின்னின.

“சும்மா நச நசங்காத டே...” அவர் சலிப்பாகச் சொல்ல

“பெரிப்பா ஒரு தரம் பாருங்களேன்” கேட்டால் கற்களும் கசிந்துருகிவிடும் அளவிற்கு கெஞ்சியது அவனது குரல்.

கண்களைத் திறந்தவர் “என்ன தாம்ல வேணு உனக்கு” என்க

“நானுஊஊ.. பேசுபுக்ல அக்கவுன்ட்டு தொறந்துருக்கேன்” ஆசையும் பெருமையும் பொங்க அவன் சொல்ல

“என்னடே சொல்றவ... பேங்குல தான அக்கவுன்ட்டு தொறக்க முடியும், பொஸ்தகத்துல எப்புடி அக்கவுன்ட்டு தொறக்க முடியும், வெளையாண்டுட்டு இருக்காம கம்முனு போல” அவர் கத்தி விட

“பெரிப்பா பேசுபுக்குன்றது புஸ்தகம் கெடையாது... அது ஒரு ஆப்பு”

என்று அவன் எடுத்துரைத்த விதத்தில் மேலும் எரிச்சலான தவசி “ஏடே கெளம்புதியா இல்ல புளியமரத்துக்கெளைய ஒடைக்கவா... ஆப்பாம் ஆப்பு, ஏந்திருச்சு போல” என்றதும் அரண்டு போன அரை டிரவுசர் அமர்ந்திருந்த திண்டிலிருந்து குதித்தபடி “பெரிப்பா ஆப்புனா போனுல இருக்கது... இதுலதா ஒலகமே குடியிருக்கு” என்று அவன் விடாக்கண்டனாக எடுத்துரைக்க

சில வினாடிகள் சிந்தித்த தவசி “ஒலகமிருக்குதா? என்னடே சொல்லுற?” புரியாமல் கேட்டார்.

“இதுல நா கணக்கு தொறந்துருக்க மாதிரியே உலகத்துல இருக்க எல்லோரும் தொறந்துருப்பாய்ங்க... இதுல போனா உலகத்துல இருக்க யாருட்ட வேணுனா நாம பேசலாமாம்” அவன் அவனுக்கு தெரிந்தது போல் எடுத்துரைக்க, தவசியின் கண்கள் மின்ன ஆரம்பித்தன.

“இங்க வாடே... வாடே..” என்றபடி அவனை அழைத்து தனக்கருகே அமர வைத்தவர் “எம்மவே கணக்கு இதுல இருக்குமா?” என்று கேட்க

“யாரோடதுனாலும் இப்படி போய் பேருபோட்டு தேடி பாத்தா அவுங்க கணக்கு தெரியுமாம்.. எனக்கு நேத்து கணக்கு வகுப்பப்போ புளியமரத்துக் கொம்பே சொல்லிக் குடுத்தான்” என்று சொல்லிவிட்டு அரை டிரவுசர் பெருமையாகச் சிரிக்க

“அது எவம்டே?” என்றார்

“அதா பெரிப்பா, ஒத்தகரி சித்தப்பா மாவே சிங்கமுத்து” என்று சொல்ல

“ஓ அவனா.. சேரி சேரி... இப்போ எம்மவன இதுல கண்டுபிடிச்சு தா” என்று சொன்னார். இந்த முகப்புத்தகக்கணக்கு என்பதெல்லாம் என்னவென்று அவருக்கு தெரியாமல் இருந்தாலும், அது பொய்யாகவே கூட இருந்தாலும் அவரது மகனைக் கண்டுபிடிக்கும் ஒரு வழியென்ற ஒரே காரணத்திற்காக அவர் அதை முயற்சிக்க நினைத்தார்.

‘செர்ச்’-சைத் தட்டியவன் “அண்ணே பேர் சொல்லும் இங்கிலிஷுல” என்று சொல்லவும்

“ஆரு-ஏ-ஜி-யூ” என்று ரகுநந்தனின் ஆங்கில எழுத்துக்களை சொன்னார் தவசி.

“எப்புடி பெரிப்பா இங்கிலிஷுலா கூட பேசுற?” அரை டிரவுசர் வாயைப் பிளக்க

“எல்லா எம்மவே கத்துக்குடுத்தது தாம்டே...” பெருமையாய் மீசையை நீவி விட்டுக் கொண்டே சொன்னார் தவசி.

வரிசையாகத் தெரியும் ரகுநந்தன்களை அரை டிரவுசர் எடுத்துக் காண்பிக்க “என்னடே இது இம்புட்டு பேர் இருக்காய்ங்க?” ஆச்சரியமாகக் கேட்டார் நச்சினார்.

“நாந்தே சொன்னேல பெரிப்பா..” என்றவன் “இவுகள்ள அண்ணே எதுன்னு பாருங்க” என்றான்.

“ரகுநந்தன்” என இடப்பட்டிருந்த எழுத்துக்களுக்கு சம்பந்தமான அத்தனைப் பேரும் அதில் வந்து விழுந்திருக்க ஒவ்வொன்றாக தேட ஆரம்பித்தனர் இருவரும்.

இதுவரை எடுத்துப் பார்த்துவிட்டு அவனில்லை என விடுத்த ஆட்களின் எண்ணிக்கை எழுபதைத் தாண்ட ஆரம்பித்தது.

சலிப்படைய ஆரம்பித்தது அரை டிரவுசருக்கு.

“பெரிப்பா நாம நாளைக்கு பாப்போம்... இப்போ போயி நா சாப்பிட்டு வாரேன்” என்று அவன் சொன்னது கூட அவரின் காதுகளில் போய் சேர்ந்ததா எனத் தெரியவில்லை.

கோபமான அரை டிரவுசர் “பெரிப்பா” என்றபடி அவரது கையைப் பிடித்து உழுக்க

மும்முரமாகத் தனது மகனைத் தேடிக் கொண்டிருந்தவர் அவரது கவனம் இடைப்பட்டுப் போனதில் “என்னடே” என்று முகதத்தை திருப்பிக் கத்த, நடுங்கிப் போனான் அரை டிரவுசர்.

“ப்..போனு.. லிங்கோ அண்ணனோடது... நா அவே அசந்த நேரமா பாத்து எடுத்துட்டு வந்துட்டே.. கண்டிபுடிச்சா திட்டுவியான்” அவரை ஒரு பார்வையும் மண்ணை ஒரு பார்வையும் மாற்றி மாற்றி பார்த்தபடி சொன்னான்.

“ஏது லிங்கோ டவுனுல இருந்து வந்துருக்கானா?” அவர் கேட்க

“ஆமா பெரிப்பா.. நேத்து ராவுல தான் வந்தியான்.. விடிஞ்சும் தூங்கிட்டு இருக்கவே பாலு குடுக்க போன நா அவெம்போன தூக்கியாந்துட்டே” கள்ள விழிகளை சுற்றியும் முற்றியும் உருட்டியபடி சொன்னான்.

இவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே செருப்பை மாட்டியிருந்தவர் “வாலே போய் பாத்துட்டு வருவோம்” என்று கிளம்ப

“ஐயோ பெரிப்பா... நாந்தா போன எடுத்துட்டு வந்தேன்னு தெரிஞ்சா என்னைய வெளித்துடுவியான்... நீ மொதல்ல போனக் குடு.. அவே போனக் காணோமுன்னு ஊரக் கூட்டரதுக்குள்ள போய் வைக்கணும்”

இதற்கு மேலும் தவசி அலைபேசியை கொடுக்க மறுத்தால் மண்ணில் புரண்டு அடம் பிடிப்போமா என்ற யோசனையோடு சுற்றி கற்கள் இல்லாத இடம் எங்கிருக்கிறது என்று கண்களால் தேடியபடி அவன் சொல்ல, தவசியோ கருப்பசாமி கோயில் வாசலைத் தாண்டி வலது பக்கம் திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்.

‘ஆத்தி... இன்னைக்கு நம்ம முதுக பழுக்க வைக்காம விடமாட்டாரு போலயே இவுரு..’ என்று நினைத்தவன் “பெரிப்பா... நில்லுப்பா” என்றபடியே அவரின் பின்னால் ஓடினான்.

லிங்கம், தவசி, அரை டிரவுசர் ஆகிய மூவரும் லிங்கம் வீட்டிலிருந்த ஒற்றைப் படுக்கையறையில் கூடினர்.

ஒரு வழியாக ரித்விக் மற்றும் ரகுவின் முகநூல் கணக்குகளைக் கண்டறிந்தவன், ரகுவினுடையதை எடுத்து தவசியிடம் நீட்ட,

அதிலிருந்த முகப்பு படத்தில் தனது மகனை வருடியவரின் கண்களில் ஆனந்த ஊற்று பெருக்கெடுத்தது.

ரகுவிற்கு முகநூல் கணக்கின் மூலம் அழைப்பு விடுத்த லிங்கம், தன்னைப் பற்றிய விபரம் சொல்லி ரகுவிடம் பேச, அவனது குரலை அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த தவசி துண்டை வாயில் பொத்திக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

தனது தந்தையின் உற்சாகமான குரலில், தன் வேலையை மறந்து ரகுவிடம் வந்து நின்று அவன் பேசுவதையே ஆவென பார்த்துக் கொண்டிருந்தான் ரித்விக்.

ரகுவை இவ்வளவு சந்தோசமாய் அவன் இத்தனை வருடங்களில் பார்த்ததே இல்லை.

“இந்தியா வரலாம்லண்ணே” என்று லிங்கம் அழைத்துப் பார்க்க, ரகுவின் சிரிப்பு அழிந்து போனது.

“இல்லப்பா... இங்க வேலையிருக்கு” எனச் சமாளிக்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த தவசியின் குமுறல் அதிகமானது.

இதைப் பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அரை டிரவுசர்,

குடுகுடுவென வீட்டிற்கு வெளியே ஓடிவிட்டு மீண்டும் வெளியே இருந்து “இந்திரா பெரிம்மா... லிங்கோ ண்ணே” என்று தனது வீல் குரலில் பெருங்குரலெடுத்து கத்தியபடி உள்ளே ஓடி வர,

அப்பொழுது சில நிமிடங்களுக்கு முன் தான் வீட்டிற்குள் வந்து அடுக்களையில் நுழைந்திருந்த இந்திராவோ இவன் சத்தத்தில் நெஞ்சு பதை பதைக்க கையிலிருந்த பாத்திரத்தை டமாரென போட்டுவிட்டு ‘என்னவோ ஏதோ’ என வெளியே ஓடி வர,

“தவசி பெரிப்பா கருப்பசாமி கோவிலுல நெஞ்ச புடிச்சுகிட்டு விழுந்துட்டாரு...” என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு அந்த வாண்டு கத்த, அதிர்ச்சி அடைந்த இந்திராவோ “ஐயோ மாமா” என்று நெஞ்சில் அடித்தபடி ஓட,

இதற்கிடையில் இவன் குரலைக் கேட்டு “ஒரு நிமிஷம் ண்ணே” என்று ரகுவிடம் அழைப்பில் சொல்லிவிட்டு, அலைபேசியோடு தனதறை விட்டு வெளியே வந்திருந்த லிங்கமோ நடந்த சம்பவங்களைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றான்.

“அண்ணே நா திருப்பி கூப்பிடுறேன் ண்ணே” என்று ரகுவின் அழைப்பை துண்டித்துவிட்டு

“எலேய் என்னல சொல்ற?” உள்ளே கற்சிலை போல் அமர்ந்திருக்கும் பெரியப்பாவை இப்படி சொல்கிறானே என்ற எண்ணத்தோடு லிங்கம் அதட்ட,

அவனது கையிலிருந்த கைபேசி அதிர்ந்து அழைப்பு வருவதை அறிவித்தது.

யாரென்று பார்க்க, ரகுவின் முக நூல் கணக்கிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.

காலின் கட்டை விரலை நிலத்தில் அழுத்தி, எட்டி லிங்கத்தின் கையிலிருந்த அலைபேசியைப் பார்த்துவிட்டு “ஹ்ம்ம்... எஸ் எஸ்” என்று நாக்கை மடித்துக் கொண்டு கை முட்டிகளை பின்னுக்கித் தள்ளிக் காற்றில் குத்திய அரை டிரவுசர் பின்னர் “தட்ஸ் ஆல் மை ஆனர்” என்று சொல்லியபடி கைகளை விரித்து லிங்கத்தின் முன் உடலை வளைக்க

“டேய் என்னலே இது?” என்று கேட்டான் லிங்கம் பீதி நிரம்பிய கண்களோடு. அவனது மனதில் ‘பையன ஏதும் காத்து கருப்பு கீது அடிச்சுருக்குமோ?’ என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

விடாமல் அதிர்ந்துக் கொண்டிருந்த அலைபேசியை ஒரு வெற்றி புன்னகையும் வில்லன் சிரிப்புமாக லிங்கத்திடமிருந்து பறித்தவன்

அழைப்பை ஏற்று முகத்திலிருந்த சிரிப்பைத் துடைத்துவிட்டு “அலோ.. யாரு?” என்றான் அழுகை வடிந்த குரலில், அரை டிரவுசரின் இந்த அடிதடியான முக, மொழி மாற்றங்களைப் பார்த்த லிங்கம் “அடப்பாவி” எனும் விதமாக வாயில் கையை வைத்து நிற்க,

“ஹெலோ நா ரகுநந்தன் பேசுறேன்... தவசி, எங்கப்பா தான் அவருக்கு என்னாச்சு?” மறுபக்கம் பதைபதைப்பது அவ்வறையை நிறைத்தது.

“அண்ணே ரகுண்ணே... நீதானா ண்ணே? எம்பைய இல்லாத வாழ்க்க எனக்கு வேணாம்னு எப்பயும் பெரிப்பா பொலம்புமே... இப்போ அது எண்ணபடியே அந்த வாணிக்கருப்பன் அது உசுர எடுத்துக்க பாக்குறானே...” என்று அழ,

அவனது நடிப்பைக் கண்டு வாயில் கைவைத்து விழிகளை விரித்தான் லிங்கம்.

“ஏய்... என்ன சொல்லுற? அவருக்கு என்ன ஆச்சு? லிங்கம் எங்க? அவன்கிட்ட போனக் குடு” என்று ரகு மறுபுறம் இருந்து பதட்டத்தில் அதட்டுவதும் “அப்பா ரிலாக்ஸ்... கொஞ்சம் பொறுமையா இருங்க..” என்று ரித்விக் சொல்வதும் கேட்க, லிங்கத்தின் அறையின் கதவருகே நின்று கொண்டிருந்த தவசியின் கண்களில் அருவிக் கொட்டியது.

“லிங்கோ அண்ணே போனப் போட்டுட்டு கோயிலுக்கு ஓடிட்டியான்... நீங்க சீக்கிரம் இங்க வாங்கண்ணே” என்று மூக்கை உரியும் சத்தத்தோடு அழுதுக்கொண்டே பதில் சொன்னான் அரை டிரவுசர்.

அதற்கும் அடுத்த இரு நாட்களிலேயே மகனோடு இந்தியா வந்திறங்கி இருந்தான் ரகுநந்தன்.

அதற்கு அரை டிரவுசர் பண்ணிய அட்டூழியங்களை நினைக்கும் பொழுது இன்றும் இளநகைப் பூத்தது தவசியின் முகத்தில்.

கருத்துக்களைப் பகிர சொடுக்கவும்:
 

மகா சமுத்ரா

New member
Vannangal Writer
Messages
20
Reaction score
18
Points
3

காக்கை கரைய;விருந்து வரும்



மஞ்சள் வெயில் மா வெளிகளை நிறைத்திருக்க, முன் கோடை காலக்காற்று உஷ்ணத்தை சுமந்துகொண்டு வியர்வை வழியும் அவனது உடலில் தழுவி மேலும் சூட்டைக் கிளப்பியது.

அடர் கருப்பு நிறத்திற்கும் மாநிறத்திற்கும் இடைப்பட்ட நிறமுடையான் அவன்.

தலையில் தலப்பாக்கட்டு கட்டியிருக்க, ‘டேய் மடிச்சு கட்டுடா விழப் போறேன்டா’ என்று கத்திக் கொண்டிருந்த இடுப்பில் மடித்துக் கட்டப்பட்டிருந்த லுங்கி, அவன் காலை எட்டி வைத்ததில் தனது இணை பாகத்தை விட்டுப் பிரிந்து கீழே வந்து அவனது காலைத் தொட, அதன் நுனியைப் பிடித்து எடுத்தவன் குனிந்து அதன் முன் பாகத்தில் முகத்தைத் துடைத்து நிமிர்ந்த பொழுது எதிரே சாப்பாட்டுக் கூடையோடு வந்து கொண்டிருந்த பெண்ணைப் பார்த்ததும் வியர்வை ஜொலிப்பைத் தாண்டி அவனது பற்கள் அதிகமாக ஜொலித்தன.

பச்சை நிற மேல் சட்டைக்கு துளியும் சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு தாவணியின் பூபோட்ட பாவடையை கட்டியிருந்தவள் தலைக்கு வழிய வழிய எண்ணை வைத்து இரட்டை ஜடையிட்டு ரிப்பன் வைத்துக் கட்டியிருந்தாள். அவனின் இடைப்பட்ட நிறத்தையே தானும் கொண்டிருந்தவளின் தோல் இப்படி தினமும் மதிய வெயிலில் சுற்றுவதால் மேலும் கருப்பாகிக் காணப்பட்டது.

புருவங்களுக்கு மத்தியில் சாந்து பொட்டால் தீச்சுடர் போல் கோபுர வகைப் பொட்டு வரையப்பட்டிருக்க, நெற்றியின் மத்தியில் ஆங்காங்கே வகுட்டிலிருந்து எண்ணை வழிந்துக் கொண்டிருக்க, வரப்பிலிருந்து நிமிர்ந்த அவளது பார்வை தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்ததும் சிரிப்பால் சுருங்கியது.

“மாமோய்... மித்தவிங்களையும் கூட்டியா, சாப்டுவோம்” வரப்பிலிருந்தபடியே கத்திவிட்டு நிழலிருந்த மரத்தடிப் பக்கம் திரும்பியது அவளது நடை.

கை கால்களை கழுவிக் கொண்டு வந்தவனின் பார்வை அவள் சோத்துக் கூடையின் மேல் வைத்திருந்த அரிவாளிற்கு சென்றது.

“ஏய் கிளி... ஒரு தரோ சொன்னா கேக்கமாட்டியா?” என்று கத்த

கூடையில் ஓரமாக இருந்த சின்ன கிண்ணங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

அவள் பாட்டுக்க அவள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏன்டி இங்குட்டு ஒருத்தே கழுதையா கத்துறேன்...”

“கழுத அதுபாட்டுக்க கத்திகிட்டே தான் இருக்கும் மாமா... அதுகிட்ட போய் நாம என்ன விஷயம்னு கேக்க முடியுமா?” நக்கலாக அவள் கேட்க,

“வர வர உனக்கு எகத்தாளம் கூடிப் போச்சுடியேய்” என்றபடி அவள் முன் அவன் அமர,

“கிளியோய்! என் மச்சான் என்ன சொல்லுறியான்?” என்று கேட்டபடி அவனருகே வந்து அமர்ந்தான் முத்து.

“மாமா அவுகளையே கழுதன்னு சொல்லிக்குதுண்ணே” அப்பாவியாக இமைக் கொட்டியபடி சொன்னாள் கிளி.

“சரியாத் தானே சொல்லிருக்கியான்” என்று சொல்லிவிட்டு முத்து தனது முத்துப் பற்கள் தெரிய பெரிதாகச் சிரிக்க, இரு காதுகளிலும் புகை வர அவனை திரும்பிப் பார்த்தான் வீரசேகரன்.

அதில் அவனுக்கு வெடித்த சிரிப்பு நின்று போக, “சோத்தப் போடுமா சாப்புடுவோம்” என்று வயிற்றை வட்டமாக தடவிக் கொண்டு கிளியின் பக்கம் திரும்பிக் கொண்டான் முத்து.

அவர்களின் மற்ற கூட்டாளிகளும் வந்தமர, அவர்களுக்கு கொண்டு வந்த உணவை பரிமாறியவள் “வேணும்ன்ற அளவுக்கு எடுத்துப் போட்டு சாப்புடுங்க... எனக்கு வைக்க வேணாம்... நா சாப்டுட்டு வந்துட்டேன்” என்றபடி கூடையில் இருந்த அரிவாளை எடுத்தவள் நகர,

“அப்போ எங்களுக்கு யாரு உக்காந்து சோறு பரிமாற?” இலையில் இருந்த சோற்றை அள்ளி வாயில் போட்டு மென்று கொண்டிருந்த தர்மன் கிளியைப் பார்த்து முறைப்பாகக் கேட்க,

திரும்பியவள் “ஏ சாப்பிடுறவுகளுக்கு போட்டுக்க தெரியாதோ?” என்று கேட்டாள் உதட்டை நெளித்துக் கொண்டு.

அடுத்து தர்மன் ஏதோ கூற வர, இடை புகுந்த முத்து

“நீ போத்தா... நாங்க பாத்துக்குறோம்” என்றான்.

அவள் சென்றதும் “இதென்ன மச்சா புது பழக்கமா இருக்கு? வீட்டு ஆம்பளைங்க சாப்பிடும் போது பொட்டச்சிக உக்காந்து பரிமாறாம இப்படித்தான் சிலுப்பிகிட்டு போறதா?” என்று கடுப்பாக கேட்டான் தர்மன்.

“எலேய் மெதுவா பேசுடா... கிளி காதுல விழுந்துச்சு... நாள் முழுக்க பாடம் எடுக்க ஆரம்பிச்சுடுவா...” என்று அதட்ட

“என்ன மச்சா பொட்டபிள்ளைக்கு போய் பயந்துகிட்டு திரியுறைங்க? இப்படியே போன நாளைக்கு அவ போற வீட்டுல நம்ம வீட்டு மானம் தான காத்துல பறக்கும், இப்படி சிலிப்புகிட்டு திரியுறவளுகளை எல்லாம் கால ஓடிச்சு கொள்ளையில உக்கார வச்சிரணும்” என்று சொல்லி முடித்த பொழுது இடுப்பில் விழுந்த உதையில் தடுமாறி அருகிலிருந்த முத்துவின் மீது சாய்ந்திருந்தான் தர்மன்.

அத்தோடு அவனை விடாமல் குனிந்து இடது கையால் தர்மனின் வலது கையை வளைத்த வீரா

“கால ஒடிப்பியோ? அதுக்கு முன்ன பேசுற உன் வாயும், உடைக்கப்போற உன் கையும் இருக்கான்னு பாப்போமா?” என்றபடி தர்மனின் கையை மேலும் பலமாகத் திருகினான்.

“டேய் வீரா.. விடுடா அவன...” என்று முத்து கத்த

“நீ சும்மாரு மச்சா! இந்தா பார்ரா அவள நாந்தே கட்ட போறேன்.. என் வீட்டுக்குதேன் மருமகளா வரப் போறா... கவலைப்பட வேண்டிய நாங்களே பொத்திகிட்டு இருக்கும் போது உனக்கு எங்குட்டு நோகுது?” என்று வீரா விடமால் குதற, வாயைப் பூட்டிக் கொண்டான் தர்மன்.

சிலருக்கு தான் குறை சொல்ல ஒரு இடம் கிடைத்துவிட்டால் அங்கே தான் உயர்ந்தவன் என்ற மிதப்பு வந்துவிடும் போலும்... அப்படிப் பார்த்தால் உண்மையில் சிலுப்பிக் கொண்டு திரிவது தர்மன் போன்ற ஆட்கள் தான். அதிலும் வக்கணையாக வாய் பேசும் இவனை எதிர்த்து ஒருவன் பேசிவிட்டாலும் பம்ம ஆரம்பித்துவிடுவான்.

இது அங்கிருந்த மற்றவர்களுக்கும் நன்றாக தெரியும். அதனால் தான் முத்து அமைதியாக இருந்தான். இல்லையென்றால் தன் ஒன்றுவிட்ட சித்தப்பா மகள் கிளியை ஒரு வார்த்தை சொன்னதற்கே இந்நேரம் தர்மனின் வாய் வெத்தலைப் பாக்கு போட்டிருக்கும்படி செய்திருப்பான்.

ஆனால் வீராவால் மற்ற விசயங்களில் தர்மனைப் பொறுத்துப் போவது போல் அவனின் கிளி விசயத்திலும் பொறுத்துப் போக முடிந்திருக்கவில்லை.

அதனால் தான் இடுப்போடு சேர்த்து ஒரு உதைவிட்டிருந்தான்.

இதையெல்லாம் அறியா கிளியோ வேர்க்க விறுவிறுக்க தனக்கு முன்னிருந்த கருவேல மரத்தை “ஷ்! ஷ்” என்று மூச்சுவிட்டபடி வெட்டிக் கொண்டிருந்தாள்.

“ஏ புள்ள... உன்னைய இங்கன வர வேணாமுன்னு எத்தன தரோ சொல்லிருக்கேன்...” என்று தானும் அரிவாளைக் கொண்டு அம்மரத்தின் ஒரு கிளையை வெட்டியபடி சொன்னான் அவளருகே வந்து நின்ற வீரா.

திரும்பி அவன் முகம் பார்த்து ஆள்காட்டி விரலை எடுத்து காதுக்குள் விட்டு ஆட்டியபடி “ஆஆ... நெதமும் ஒரே டயலாக்க சொல்லி வெறுப்பேத்தாத மாமா... காது நோவுது” என்று அவள் கண்களைச் சுருக்கிச் சொல்ல

“நோவும்டி நோவும்... எல்லா எங்க அத்தையையும் மாமானையும் சொல்லணும்... யூபிஎஸ்சிக்கு படிக்குற புள்ளைய காட்டுப் பக்கம் விட்டுகிட்டு...” என்று அவன் குறைப்பட்டுக்கொள்ள,

“மாமா.... அம்மாவும் அப்பாவும் போக வேணாமுன்னுதேன் சொன்னாக... உனக்குதேன் தெரியுமே அப்பா வீட்டுல என்னைய ஒரு வேலையும் செய்யவிடாது... இப்புடியே படிக்கவும் தின்னுட்டு தூங்கவும்னு இருந்தா ஒடம்பு கெட்டுப் போயிரும்னுதே இங்குட்டு வர்றது” என்று விளக்கியவள் “என்ன இப்புடி வெயிலுல வந்துவந்து எங்கலருதே கொஞ்சம் கொறைஞ்சுச் போச்சு” என்று கருத்திருந்த தனது கைகளை வருடியபடி முகத்தைத் தொங்கபோட

அவளைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் “எல்லாஞ்சரிதேன்.... நீ எப்ப டி கலரா இருந்தே?” என்று தாடையில் கை வைத்து யோசித்தபடி கேட்டான்.

“என்ன மாமா நீயும் கிண்டல் பண்ணுற?” என்று சிணுங்கியபடி அவள் முறைக்க

அவளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தவன் “பின்ன என்ன ‘அத்திப்பழம் சிவப்பா? என் அத்த மக சிவப்பா? ஒரு வெள்ளக்காரப் பொண்ணு இந்தியா வந்தாலும் உன்னைக் கண்டுத் திகைப்பா’ன்னு மரத்து சுத்தி டூயட் பாடுவேன்னு நெனைச்சியா?” என்று நக்கல் மொழியில் கேட்க,

ஒரு கையில் அரிவாள் இருக்க, மறு கையை இடுப்பில் வைத்து அவனைப் பார்த்து முறைத்தபடி புசுபுசுவென கோப மூச்சுகளை வெளியிட்டவளை இரசனையோடு பார்த்தவன் அதை மறைத்துக் கொண்டு

“போடி போ... எல்லாரும் சாப்டுட்டாங்க... இடத்த காலி பண்ணு” அதட்டலான குரலில் சொன்னான்.

கோப நடையோடு விறுவிறுவென அவள் நடந்து வந்துவிட,

அவ்வழியில் வந்து கொண்டிருந்த முத்து “என்ன கிளி கிளம்பிட்டியா?” என்று கேட்டான்.

“அண்ணே, உம்மச்சாங்கிட்ட சொல்லி வை... வகுந்துப்புடுவேன் வகுந்து” என்று அவள் அரிவாளைத் தூக்கிக் காட்ட அரண்டவன்

“என்னாச்சுமா?” என்று கேட்க

“ஏய் கருவாச்சி... அங்க என்னடி சலப்பிகிட்டு நிக்குறவ?” என்று வீரா அங்கிருந்தபடியே கத்த

அவனைத் திரும்பிப் பார்த்தவள் “போடா கழுத” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்துவிட்டாள்.

அதைக் கேட்ட வீராவுக்கு கோபம் வராமல் சிரிப்பு தான் வந்து தொலைத்தது.

கண்களில் மின்மினிகள் தெறிக்க, உதட்டை உள்மடித்து சிரித்தவனைக் கண்ட முத்து தலையில் அடித்துக் கொண்டான்.

தீபாஞ்சலி கிளிமொழியாள், இதுவரை இருக்கும் பழனி சுந்தரம் – மருதாணியின் மகள் என்ற அடையாளத்தோடு மாவட்ட ஆட்சியர் என்கிற அடையாளத்தையும் பெற வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கும் இருபத்திரண்டு வயது பெண்.

பிடித்தவர்களிடம் கோபத்தைக் கூட காட்டத் தயங்கி ‘பாத்து நடந்துக்க சொல்லுங்க’ என்று மற்றவரிடம் சொல்லிவிட்டுச் செல்பவள். ஆனால் அக்கோபத்தின் காரணத்தை எல்லோரிடத்திலும் கடை பறப்பமாட்டாள். அதே நேரம் அவளுக்கு பிடித்தவர்கள் பட்டியலில் இல்லாதவர்கள் என்றால் ரவுண்டு கட்டி அடிப்பதில் வல்லவள்.

கதைகள் பல பேசி கலகலவென அவள் சிரிக்கும் சிரிப்பில், பார்ப்பவரின் முகத்திலும் சிரிப்பு உயிர்பெறும்.

இவளது தாய்வழி முறை மாமன் தான் வீரசேகரன்.

பன்னிரண்டாவதோடு படிப்பை நிறுத்திவிட்டாலும் சிறந்த பாட்டாளி.

இவனுக்கு தீபாஞ்சலி என்றால் அத்தனை இஷ்டம். அவளிடமிருக்கும் நிறைகளை இரசிப்பதோடு, குறைகளையும் ஏற்றுக் கொண்டவன்.

“கீச் கீச் என்றது கிட்ட வா என்றது” என்று தலையை ஆட்டி பாடியபடி நடந்து போய்க் கொண்டிருந்தவளின் காதுகளில் விழுந்தது அந்தக் கூச்சல்.

“ஹெல்ப்.... ஹெல்ப்....” என்ற கூச்சல் எங்கிருந்து கேட்கிறது என்று சுற்றியும் முற்றியும் கவனித்து திசையைக் கண்டறிந்து ஓடியவளுக்கு கிணற்றுக்குள் யாரோ விழுந்த சத்தம் கேட்க அவளது கால்கள் மேலும் வேகம் எடுத்தது.

கிணற்றின் அருகே வந்துவிட்டவள் எட்டி உள்ளே பார்க்க, ஒருவன் தத்தளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அது பழங்காலக் கிணறு. அப்பொழுது இருந்த நீரளவிற்கு மட்டுமே படிகள் வைக்கப்பட்டிருந்தது.

கூடையைக் கீழே போட்டவள் கடகடவென கிணற்றின் உள் செல்லும் படிகளில் இறங்கி இறுதிப் படியிலிருந்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மூச்சைப் பிடித்துக் கொண்டு கிணற்றினுள் குதித்திருந்தாள்.

உள்ளே நீந்தி நீரின் மேலே வந்து வந்து போபவனின் கையைப் பற்றி இழுத்தவளுக்கு அவனது கை வழுக்கி விட, முடியைக் கொத்தாகப் பிடித்து மேலே தூக்கினாள், பின்னர் அவனது கழுத்தைச் சுற்றி இடது கையைப் போட்டு இழுத்தபடி தண்ணீரின் உள்ளே விழுந்து தொங்கிக் கொண்டிருந்த கயிற்றின் பக்கம் கொண்டு வந்துவிட்டு “ஏய்.. கண்ண தொற” என்றாள் அவனது கன்னங்களைத் தட்டி.

கண்களைத் திறந்தவன் நெஞ்சைப் பிடித்து தான் உயிரோடு இருப்பதை தன்னிடமே உறுதி செய்துக் கொண்டிருந்த நேரம்,

“இதோ இந்தக் கயிறு புடிச்சுக்கிட்டு மேல ஏறு” என்று அவனை ஏவினாள்.

கிணற்றின் பாதி வரையும் தான் படிகள் இருந்தன. அந்தப் படிகளை அடைய கயிறுகொண்டு தான் ஏற முடியும்.

அவள் சொன்னபடியே செய்து படியை அடைந்திருந்தவனிடம் “அந்தக் கயிற தூக்கிப் போடு” என்றாள்.

அவன் செய்ய, அதைப் பிடித்துக் கொண்டு சரசரவென மேலே ஏறியவளை வாயைப் பிளந்தபடி பார்த்தான்.

“தடிமாடு கணக்கா வளந்துருக்கே இன்னும் நீச்சல் தெரியாதா?” என்று பொரிய,

அவன் பதில் சொல்ல வரும் முன்

“இல்ல கண்ணு தெரியாதுன்னா யாரையாச்சும் கூட கூட்டிட்டு வரனும் அதுவுமில்லையா கைல குச்சியவாச்சும் வச்சு வழித்தடத்த தட்டிப் பார்க்கணும்” என்று குனிந்து தன் பாவாடையை பிழிந்துக் கொண்டே கத்திக் கொண்டிருந்தவள் பதிலேதும் வராமல் நிமிர்ந்துப் பார்க்கவே அவன் இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி ‘முடிச்சுட்டையா?’ என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்து மேலும் கடுப்பானவள் “எதுக்கு பிடிச்சு வச்ச புள்ளையார் மாதிரி இங்கயே நின்னுகிட்டு இருக்கவறவன்? மேல போ..” என்றபொழுது அவளது வாயை வலது கையால் பொத்தினான்.

அவள் ஒரு வினாடி அதிர்ச்சியில் விழி விரிக்க

“லெட் மி டாக், ப்ளீஸ் ஷட் ஃபார் எ வொய்ல்” என்று சொல்லிவிட்டு இரு புருவத்தையும் கேள்வியாய்த் தூக்க

அவனது கைத்தண்டை தனது கையை வைத்து பலமாகத் தட்டிவிட்டவள்,

“ஏ அத அங்கன இருந்தே சொல்ல முடியாதோ?” என்று கேட்டு முறைக்க

“என்னைய பேச விட்டாதான?” அவன் கேள்வியாய் நிறுத்த,

அப்பொழுது தான் அவளுக்கு அது புரிந்தது.

‘ஐயோ ஒரு உயிர் தத்தளிக்கிறதே’ என்ற படபடப்பு இன்னும் அவளுள் மிச்சமிருப்பதை கவனித்தாள். அதன் வெளிப்பாடாக தான் இப்படி கத்தி இருக்கிறோம் என்பது புரிய நெற்றியைத் தேய்த்தவளுக்கு அவளின் தலையில் இருந்த எண்ணையெல்லாம் கையோடு சேர்ந்து அப்பிக்கொண்டு வர, ‘மறுபடியும் குளிக்கனுமா?’ என்ற கேள்வி மனதினுள் தோன்ற இத்தனை நேரமிருந்த படபடப்பு போய் எரிச்சல் வந்து ஒட்டிக்கொண்டது.

அதில் அவள் தன்னையே பார்த்தபடி நிற்பவனை கண்டுக்கொள்ளாது படபடவென மேலே ஏற விழித்தான் ரித்விக்.

‘என்ன இந்த பொண்ணுக்கு மரியாதையே தெரியல’ என நினைத்தவன் கடகடவென ஏறிச் சென்று அவளின் வழியில் தன் கை நீட்டித் தடுக்க, அவன் கையை பார்த்தவள் நிமிர்ந்து அவனை முறைத்தாள்.

“ஸீ!” என அவன் ஆரம்பித்த பொழுது இத்தனை நேரம் கிணற்றுக்கு அருகே நின்று கொண்டிருந்த மாடு இவர்கள் பக்கம் வருவது தெரிய வேகமாக அவளது கையைப் பற்றியவன் மீண்டும் உள்படிகளில் இறங்க அதிர்ந்தவள் “ஏய் என்ன பண்ணுற? விடு” என்று கத்தினாள்.

“அந்த மாடு...” என்றான் மேலே சுட்டிக்காட்டி. இத்தனை நேரமில்லாத ஏதோ ஒரு மெல்லிய பயத்தை அவனது கண்களில் பார்த்தவள் அமைதியாய் நின்று கவனிக்க,

“அந்த மாடு... அந்த மாடு தான் என்னைய உள்ள தள்ளி விட்டுருச்சு” என்றவனை வினோதமாகப் பார்த்தவள் புரியாதப் பார்வையை அவனுக்கு பதிலாக அளிக்க,

“ப்ச்” என்றவன் “நா வளந்த நாட்டுல இப்படி மாடலாம் அதிகம் பக்கத்துல பாத்ததில்ல... அதனால அது பக்கத்துல போய் அதோட கண்ணு, மூக்கு, வாயெல்லாம் ஆர்வமா பாத்துட்டு இருந்தேன்... பர்ஸ்ட் அமைதியா இருந்த மாடு என்னைய ஒட்டி ஒட்டியே வர, நா நகர ஆரம்பிச்சேன்... அது விடாம என்னைய தொரத்த ஆரம்பிச்சுருச்சு... ‘ஹெல்ப் ஹெல்ப்’ன்னு கத்திகிட்டே ஓட ஆரம்பிச்சப்போ சரியா பாக்காம கால் தடுக்கி இந்த வெல்(WELL)குள்ள விழுந்துட்டேன்” என்று அவன் முழு கதையையும் ஒரே மூச்சில் சொல்லி முடிக்க, பீறிட்ட சிரிப்பை வாய்க்குள் அடக்காமல் வெடித்துச் சிரிக்க ஆரம்பித்தாள் கிளி.

பார்த்துக் கொண்டிருந்தவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

இடுப்பின் இருபக்கமும் இரு கையையும் ஊன்றியவன் கைகளை இடுப்பினில் அழுத்த உள்ளே சினோவியல் ப்லூயிட் வெடித்து நெட்டை சத்தத்தை உருவாக்கியது.

‘ஆளு ஊருக்கு புதுசு போல’ என்று நினைத்தவளின் பார்வை அவனை அளவெடுத்தது.

அவன் அணிந்திருந்த சாம்பல் நிற டி-ஷர்ட்டும், கட்டம் போட்ட பைஜாமுவும், மேனியின் பாதாம் நிறமும், காலைக் கவ்வியிருந்த பூட்ஸ்சும் அவனை அவ்விடத்தை விட்டு அந்நியப்படுத்திக் காட்ட, அவளின் சிரிப்பின் சென்டிமீட்டர்கள் குறைந்து மில்லிமீட்டர் ஆனது.

அந்த மாட்டைச் சுட்டிக் காட்டியவள் “அவம்பேரு காளியன், பாக்க தான் முரடனா தெரிவான்... பாசக்காரப் பய, நீங்க ஏதோ வாசமா சென்ட்டு போட்டுருக்கீகள்ள அது வாசத்துக்குத்தேன் உங்க பக்கமே வந்துருப்பியான்... மத்தபடி பயப்பட ஒன்னுமில்ல” என்று இத்தனை நேரமில்லாத அந்நிய குரலில் சொன்னவள் படிகளில் ஏறியபடி “யார் வீட்டு விருந்தாளி நீங்க?” என்று கேட்டாள்.

‘இவ மாட்டையா அவன் இவன்னு சொல்லிட்டு இருக்கா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவன் அவளது கேள்வியில் “விருந்தாளி?” என்று கேட்டான் புரியாமல்

‘ம்ஹ்ம்.. இதுவேறையா?’ என்று சலித்துக் கொண்டவள் “யார் வீட்டுக்கு ‘கெஸ்ட்டா’ வந்துருக்கீகன்னு கேட்டேன்” என்றாள் உச்சிப்படியை அடைந்தபடி

தானும் அவள் பின்னே ஏறிக் கொண்டிருந்தவன் யோசனையோடு “கெஸ்டில்ல... ம்ஹ்ம்ம்.. யூ க்னோ தவசித்தேவர்?” என்று கேட்டான்.

சராலென திரும்பியவளின் கண்களோடு சேர்த்து புருவங்களும் லேசாக சுருங்க “ஆமாஆஆ..” என்று யோசனையோடு இழுக்க

“ஹாஆ..! அவரு என்னோட கிரான்ட்பா” என்றான் சிரித்த முகமாக.

“ஓ...” என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தனது கூடையை எடுத்துக் கொண்டு நகர,

அவள் முன்னே சென்று நின்றவன் “திஸ் இஸ் ரித்விக்” என்றபடி அவள் முன் கை நீட்டினான். அதிகம் ஆட்கள் யாரையும் தெரியாத ஊரில் ஒத்த வயதுடைய அவளை நட்பாக்கிக் கொள்ளும் நோக்கமிருந்தது அக்கை நீட்டலில்.

அவன் முகத்தையும் கையையும் மாற்றி மாற்றி இருமுறைப் பார்த்தவள் “இருந்துட்டு போ” என்றுவிட்டு நகர,

“வாட்ஸ் திஸ்? நா என்னைய இன்ட்ரோ பண்ணா நீயும் உன்னைய இன்ட்ரோ பண்ணனும் தான?” என்று அவன் விடாக் கண்டனாக தொடர,

“அப்படி எதாச்சும் கண்டிஷன் இருக்கா?” புருவத்தை உயர்த்தியபடி அழுத்தமான பார்வையில் அவள் கேட்க, கையைக் கீழே போட்டவன் “இல்ல.. பட் இந்த ஊர்ல எனக்கு அதிகம் யாரையும் தெரியல... அதான் ப்ரென்ட் ஆகலான்னு நெனைச்சேன்...” என்று அவன் தயங்கிய குரலில் சொல்ல,

மெல்லிய சுவாரசியச்சிரிப்பு எட்டிப் பார்த்தது அவளது முகத்தில்.

அப்பொழுது காளியன் வந்து அவனை உரச,முதலில் நெளிந்தவன் பின்னர் அதன் தலையை தடவியபடி இவளைப் பார்த்து அசட்டு சிரிப்பு சிரிக்க,

“என் பேரு தீபாஞ்சலி கிளிமொழியாள்” என்றாள் அவனது முகத்தை கூர்மையாகப் பார்த்தபடி.

அவள் தனது பெயரைச் சொல்வாள் என்று எதிர்பார்த்திருக்காதவன் அவளின் ‘நீண்ட’ பெயரில் விழித்தபடி “என்ன?” என்று கேட்டான் மீண்டும்.

அவளது சிரிப்பு அதிகமானது.

தலையை அசைத்துச் சிரித்தவள் எட்டி நடைபோட, அவளது கிண்கிணி சிரிப்பை இரசித்தவனது இதழ்கள் “தீபா?” என முணுமுணுத்துக் கொண்டன.

வேக நடையோடு வீட்டிற்கு வந்தவள் வெளியே திண்ணையில் அமர்ந்து பாக்கை ஒரு இடியும், வாசலை ஒரு பார்வையும் பார்த்தபடி அமர்ந்திருந்த பாட்டி சின்னாத்தாளைப் பார்த்தபடி “என்னத்த வெளிய வெளிய பாத்துகிட்டு இருக்கே?” என்று கேட்க

“இல்லடி... மதியத்துல இருந்து நம்ம வீட்டு முன்னாடியே நின்னு காக்கைங்க கரைஞ்சுட்டு கெடக்குதுங்க... அதான் விருந்தாளி யாரும் வருவாகளான்னு பாத்துகிட்டு கெடக்கேன்” என்று கூற தலையில் அடித்தவள் “ஐயோ பாட்டி இதையெல்லாம் இன்னுமா நம்பிக்கிட்டு இருக்கீக?” என்று சிறிது அங்கலாய்ப்புடன் கேட்டாள்.

“ஏன்டி நம்ம மூதாதையரு எல்லாம் சும்மா சொல்லி வச்சுருப்பாங்கன்னு நெனைக்கிறியோ? அவுங்கலாம் நம்ம போல இல்ல... புத்திமானுங்க” என்று பாட்டி கொடிபிடிக்க,

கூடையை எதிர் திண்ணையில் போட்டபடி தானும் அதிலேறி அமர்ந்தவள்

“அவுங்க புத்திமானுங்க இல்ல முட்டாளுன்னு நா இப்போ சொன்னனாக்கும்? மூதாதையர் சொல்லி வச்சதெல்லாம் உண்மையாவே இருக்கட்டும் ஆனா அதுக்கான பின்னணியா தெரிஞ்சுகிட்டு, அது இன்னைக்கும் தேவையான்னு புரிஞ்சுகிட்டு செய்யனும் பாட்டி” என்று அவள் விளக்க ஆரம்பிக்க,

தாடையில் விரல் வைத்து தனது பேத்தியின் விளக்கத்தைக் கவனிக்க தயாரானர் பாட்டி சின்னத்தாயி.

அவள் பேசும் ஒவ்வொரு விசயத்திற்கும் ஒரு விளக்கவுரை இல்லாமல் வரமாட்டாள் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

“சங்க இலக்கியங்கள்ள சொல்லப்படுற கடல் பயணங்கள் எதுவும் ஆழ்கடல் பயணங்களா இருந்தது கிடையாதாம்... கரையோரமாவே கப்பல கொண்டு வந்து வணிகம் செய்துட்டு மறுபடியும் கரையோரமாவே கப்பல செழுத்தி ஊர் திரும்புவாங்க...”

“இந்த மாதிரி பயணம் செய்திட்டு இருக்கும் போது, ராத்திரி நேரங்கள்ள படகு திசை மாறி ஆழ்கடல் திசை பக்கம் போயிட்டாலோ, இல்லனா இந்த புயல், காத்துன்னு எதாவது ஒன்னு கப்பல திசை மாத்தி கரைய தாண்டி ஆழ்கடல் பக்கம் கொண்டு போயிருச்சுனாலோ.. இப்போ மறுபடியும் அந்த கப்பல கரை ஓரமா கொண்டு வரணும்ல... ஆனா திசை மாறி போனதுனால கரை எந்தபக்கம் இருக்குன்னு தெரியாதாம்... அப்போ கப்பல்ல கூண்டுல காக்காங்கள அடைச்சு வச்சு எடுத்துட்டு வந்துருப்பாங்களாம், அதுல ஒன்ன தூக்கி பறக்கவிட்டா... அந்த காக்கா கரை இருக்க திசைய நோக்கி பறக்க ஆரம்பிக்குமாம்... இவுங்களும் படக வளைச்சு காக்கா பறக்குற திசை நோக்கி ஒட்ட ஆரம்பிச்சுருவாங்களாம்... இப்போ கரையோரம் நெய்தல் நிலத்துல வேலைப் பாக்குற நம்ம மனுஷங்க நடுக்கடல் பக்கமிருந்து காக்கா பறந்து வந்து பசியில கரையுரதப் பாத்துட்டு, பின்னாடியே கப்பலும் அதில மனுஷங்களும் வரப் போறாங்கன்னு முடிவு பண்ணிருவாங்களாம்...”

“இப்போ இது மூலமா என்ன தெரியுது... வரப்போறது நம்ம சொந்தக்காரங்க கிடையாது... நம்ம பண்பாட்டோட விருந்தினர்கள்... வேத்து நாட்டுல இருந்து இங்க வணிகம் பண்ண வர்றவுங்க... ஆனா இந்த ஒத்த வரியா மட்டும் வச்சுகிட்டு பின்னணி புரியாம இத்தனாயிரம் வருஷங்களா நாமளும் காக்க கரைஞ்சா விருந்தாளிங்க வரூவாங்கன்னு சொல்லிகிட்டே இருக்கோம்” என்று கிளி முடித்தபொழுது, சின்னத்தாயி, பேச்சின் இடையில் வந்திருந்த பழனி சுந்தரம், மருதாணி என எல்லோரும் ஆவெனப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“என்னத்தா சொல்லுற? உண்மையாவா?” இன்னும் நம்ப முடியாமல் கேட்டார் பழனி.

“ஆமாப்பா... மெசபட்டோமியான்ற இடத்துல அகழ்வாராய்ச்சி நடத்துனப்போ ஒரு சிதைஞ்ச கப்பல்ல ஒரு முத்திரை கெடைச்சுதாம்... அதுல படகுல நிக்குற ஒரு ஆண் கையில காகத்த ஏந்தி பறக்க விடுற மாதிரி இருந்ததாம்... அதப்பத்தி மேலும் ஆராய்ச்சி பண்ணும்போது தான் இது சிந்துவெளி நாகரீகத்தைச் சேர்ந்த முத்திரைன்னு தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு முடிவுல அறிவிச்சுட்டாங்க... “ என்றாள்.

மற்ற மூவரும் ஆச்சரியத்தில் அசந்துப் போய் அமர்ந்திருந்தார்கள்.

‘பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தைய கதை இன்றும் பேசப்படுகிறதா?’ கேட்கவே பிரமிப்பாக இருந்தது அனைவருக்கும்.

மக்களே கதைப் பற்றிய கருத்தை கீழிருக்கும் திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள், கருத்து சொல்லுங்க பரிசை வெல்லுங்க

 
Last edited:

மகா சமுத்ரா

New member
Vannangal Writer
Messages
20
Reaction score
18
Points
3

3.1 பகுத்து அறி

யாரோ உள்ளே கத்திக் கொண்டிருக்கும் சத்தம் கேட்க, புருவம் சுருங்க வேக நடையுடன் வீட்டிற்குள் வந்தான் ரித்விக்.

அங்கே ஒரு இள வயது ஆடவன் வீட்டினுள்கூட்டும் விளக்கமாற்றின் பின்புறத்தை வாய்க்கு அருகில் மைக்கைப் போல் வைத்துக் கொண்டு “யு மேட் மி ய, மேட் மி ய பிலீவர்... பிலீவர்’ என்று உணர்ச்சி பொங்க கண்களை மூடி கழுத்து நரம்புகள் புடைக்க கத்திப் பாடிக் கொண்டிருந்தான்.

இக்காட்சியைக் கண்ட ரித்விக்கிற்கு சிரிப்பு குபுக்கெனப் பொத்துக் கொண்டு வந்தது.

இவனின் சிரிப்பு சத்தத்தில் கண்களைத் திறந்த அந்த வாலிபனின் முகத்தில் அசட்டுத்தனமும் ஆராய்தலும் வந்து ஒட்டிக் கொண்டது.

அப்பொழுது “வீட்டக் கூட்டச் சொன்னா என்னடா பாட்டு லோலாய் கேக்குது?” என்றபடி வீட்டின் பின்புறத்திலிருந்து சிலிர்த்துக்கொண்டு வந்த ஆதீஸ்வரி ரித்விக்கைக் கண்டு நின்றார்.

அவரது கண்கள் விரிந்து ஆச்சரியத்தையும் சந்தோசத்தையும் பூசிக் கொண்டன.

“யய்யா நீதான் ரித்விக்கா?” என்றபடி வேகமாக வந்து பாசத்தோடு தன் கன்னம் தொடுபவர் யாரென்று புரியாமல் விழித்தான் ரித்விக்.

“என்னைய்யா பாக்குற... நா ஆதீஸ்வரி, உனக்கு அத்தை முறையாகுது” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே,

வாட்டிய ஆட்டின் கால்களை தட்டில் வைத்தபடி அதே பின்வாசலில் இருந்து உள்ளே வந்தார் ரகுநந்தன்.

“ஹ்ம்ம் உங்களப் பத்தி அப்பா சொல்லிருக்காரு... ஹாய்” புது ஆள் என்றதும் சங்கடச் சிரிப்புடன் சொன்ன ரித்விக், அடுத்து அந்த இளவயதுடையானைப் பார்க்க,

“இன்டெர்ஸ்டெல்லார் எடுத்தது க்ரிஷ்டோபர் நோலன், என் பேரு சிங்காரவேலன்” என்றான் கை நீட்டி.

தனது வெளிநாட்டுக்கார மச்சானிடம் பவுசு காட்டும் தோரணை இருந்தது அவனிடம்.

அவனை வினோதமாகப் பார்த்த ரித்விக் “ஹ..ஹெலோ.. சி..ங்..கார வேலன்” என்றான் ரித்விக்கும் வேலனுக்கு கை கொடுத்தபடி

“அட என்ன பேர் சொல்லிக்கிட்டு, மச்சான்னு கூப்டு உரிமையா” என்றான் வாய் முழுக்க வழிந்த சிரிப்புடன்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரகுநந்தனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

ஊர் முழுக்க சொந்தமாக பிறந்த வளர்ந்தவருக்கு, ‘அப்பா’ என்ற குடும்ப உறவைத் தாண்டி வேறு எதையும் அனுபவிக்காத மகனைப் பார்க்கும் பொழுதெல்லாம் கண்கள் கரித்துப் போகும்.

எத்தனை நண்பர்கள் இருந்தாலும் தன்னைத் தாண்டி உறவு என்று சொல்லிக் கொள்ள ஒருத்தன் ரித்விக்கிற்கு வேண்டும் என்று அவர் பல நாட்கள் ஏங்கியிருக்கிறார்.

ஏனோ தான் வீம்பை விடுத்து இந்தியா வர எடுத்த முடிவு சரியென்று தோன்றியது ரகுநந்தனுக்கு.

அதுவும் கூட பிறந்தவர்கள் யாருமில்லாதவருக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா மகளான ஆதீஸ்வரி என்றால் சிறு வயதிலிருந்தே கொள்ளைப் பிரியம்.

ஆதீஸ்வரியின் தந்தையும் தாயும் சிறு வயதிலேயே இறந்திருக்க, பாட்டி வளர்த்தாலும் அவள் அதிகம் வளர்ந்தது தவசியின் வீட்டில் தான்.

எப்பொழுதும் ‘ரகுண்ணே, ரகுண்ணே’ என்று நாயுருவியாய் ஒட்டிக் கொண்டே திரிபவளை என்றும் எங்கும் விட்டுக் கொடுத்ததே இல்லை ரகுநந்தன்.

ஆனால் அவனது அன்புத் தங்கை ஆதீஸ்வரியின் திருமண வாழ்க்கை சில வருடங்களிலேயே அவளது கணவன் இறந்துவிட்டதால் வெறுமையாகிவிட்டது என்பதே அவனுக்கு இன்று தான் தெரிய வந்தது.

யாருமில்லாமல் மகனுடன் நின்றவளை அணைத்துக் கொண்டது தவசி தான் என்று சொல்லி அவள் கண்ணீரை முந்தானையில் மறைக்க முற்பட்ட பொழுது ரகுநந்தனின் நெஞ்சில் தோன்றிய வலி! அப்பப்பா இன்னும் அதன் சுவடு போகமால் அவனது நெஞ்சிலேயே நின்று குத்திக் கொண்டிருக்கிறது.

ஊர் மாறி நாடு மாறி சென்றிருந்தாலும் ஆதீஸ்வரியுடனும் தொடர்பை துண்டித்து இருக்கக் கூடாதோ என்று சிந்ததது அவனது மனது.

வேலன் டவ்னில் தங்கி மேற்படிப்பு படித்து வருவதாகவும் அவனைப் பார்க்கப் போன ஆதீஸ்வரி அவனுடன் இரு நாட்கள் தங்கி இருந்துவிட்டு வரும்பொழுது ஏதோ கொரோனா கட்டுப்பாடு என்று சொல்லி கல்லூரியில் விடுமுறை அறிவித்துவிட்டதால் அவனையும் உடன் அழைத்து வந்துவிட்டதாக சொல்லியிருந்தார் ஆதீஸ்வரி.

ஆட்டுக்கால் வாட்டும் வேலையில் இருபத்து மூன்று வருட கடந்த காலத்தையும் புரட்டி எடுத்திருந்தார்கள் அண்ணனும் தங்கையும்.

ஒரு வாரம் போல் கடந்திருந்தது.

அவர்கள் வாழும் இக்கிராமத்தில் கொரோனா கட்டுப்பாடு எதுவும் பின்பற்றப்படுவது போல் தெரியவில்லை.

செய்தியாளர்கள் என்னதான் உயிரைக் கொடுத்து கூவினாலும் இங்கு மக்கள் எப்பொழுதும் போல் எல்லா வேலைகளையும் செய்த வண்ணம் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.

ரித்விக்கிற்கும் அவ்வூரில் கிடைக்கும் புது அனுபவங்கள் பிடித்திருந்தது.

இப்பொழுதெல்லாம் சிங்காரவேலனோடு சேர்ந்து லூட்டியடிக்க ஆரம்பித்திருந்தான்.

பார்த்த நாளிலிருந்தே மச்சான் மச்சான் என்று தோளோடு தோள் சேர்ந்து பழகுபவனிடம் எல்லாமும் பிடித்திருந்தாலும் அடிக்கடி அவன் சொல்லும் கடி ஜோக்குக்கள் ஏற்படுத்தும் கோபத்தைப் பற்களைக் கடித்து கட்டுப்படுத்துகிறேன் என்று நிறைய முறை நாக்கைக் கடித்து இரத்தமும் வந்தாகிவிட்டது ரித்விக்கிற்கு.

ஆனால் சிங்காரவேலனின் கடிஜோக்குகள் மட்டும் நின்றபாடில்லை.

என்ன செய்வது? வேலனைத் தவிர மற்ற சொந்தங்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஊர்க்காரர்கள் எல்லாம் இவனிடம் ஏதோ ஒரு ஒதுக்கத்தைக் காண்பிப்பது போல் தோன்றியிருந்தது.

முதலெல்லாம் அதைப் பற்றி யோசித்தவனை எதுவும் யோசிக்கவிடாதபடி அட்டையாக இவனோடு ஒட்டிக்கொண்டு சுற்ற ஆரம்பித்துவிட்டான் வேலன்.

இதோ இப்பொழுதும் கூட “வா மச்சா அப்புடியே ஒரு வாக் போயிட்டு வருவோம்” என்று கூறி எங்காவது சிக்னல் கிடைக்குமா என்று அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த ரித்விக்கை இழுத்து வந்திருந்தான்.

“ஆகா ஆகா என்னா காத்து... என்னா ஊத்து... கிராமோ கிராமந்தாயா” லுங்கியை ஏத்திக்கட்டியபடி கண்களை மூடி இரசித்து சொல்லும் வேலனைப் பார்த்து மென்மையாக சிரித்தான் ரித்விக்.

“ஹா... இந்த நிமிஷத்துக்கு ஒரு நல்ல கடிஜோக்கு தோனுது” என்று வேலன் ஆரம்பிக்க, ரித்விக்கின் முகத்திலிருந்த கொஞ்ச நஞ்ச சிரிப்பும் நின்று போனது.

“அ..அதோ அந்த மரத்தைப் பாரேன்... அது பேரென்ன?” என்று கேட்டபடி ரித்விக் வேகமாக முன்னால் நடக்க ஆரம்பிக்க,

அவனது பின் காலரைப் பிடித்து இழுத்து தன் பக்கத்தில் நிறுத்திய வேலன் “இப்போ நா கடி ஜோக்கு சொல்லப் போறேன்! நீ கேட்டுத்தேன் ஆகணும்” என்று அழுத்தமான குரலில் சொன்னவன், ரித்விக்கின் பதிலை எதிர்பாராமல் தனது கடி ஜோக்கை ஆரம்பித்தான்.

“கடல் தண்ணி ஏன் தெரியுமா உப்பா இருக்கு?” தீவிரமான யோசனைப் படிந்த முகத்துடன் வானை நோக்கியபடி கேட்டவனைப் பார்த்தவனுக்கு திரும்பி கெனடாவிற்கே ஓடிப் போய்விடலாமா என்ற எண்ணம் மேலெழுந்தது.

“ஏன்னு கேளு மச்சான்” பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்த ரித்விக்கைத் தூண்டினான் வேலன்.

“ஏ மச்ச்ச்சான்?” எரிச்சலோடு இழுத்தான் ரித்விக்.

“ஏன்னா இனிப்பா இருந்தா எறும்பு வந்துரும்டா” என்று சொல்லிவிட்டு பெரிதாகச் சிரித்தவனைக் கண்டு நமட்டைக் கடித்துக் கோபத்தை அடக்கியவன் வேகமாக நடக்க ஆரம்பித்த பொழுது அவனது காதில் பறந்து வந்து விழுந்தது பல விசில் சத்தங்கள்.

சத்தம் வந்த பக்கம் திரும்பிப் பார்த்தவனின் கண்கள் விரிய புருவங்கள் உயர்ந்தன.

காற்றின் வேகத்தோடு போட்டிப் போட்டபடி கம்பு சுழற்றிக் கொண்டிருக்கும் அந்தப் பெண். அவள் முகம் பரிட்சியமானதாகத் தெரிய,முன்னே நகர்ந்து மேலும் கண்களை கூர்மையாக்கினான் ரித்விக்.

அங்கிருந்த ஆண்கள் எல்லாம் மரத்திற்கு அடியில் நிழலோடு ஒதுங்கி நிற்க, வெட்ட வெயில் வெளியில் பாவாடையை கால் தட்டாமல் எடுத்து இடுப்பில் நருக்கென சொருகியிருந்தவளின் கைகள் அந்தக் கம்பை சுழற்றிய வேகத்தைக் கண்டு வாயைப் பிளந்தது நின்று கொண்டிருந்த ஆண்கள் கூட்டத்தின் மத்தியில் ஒருவனது கண்களில் மட்டும் பெருமிதமும் இரசனையும் அளவில்லாமல் வழிந்துக் கொண்டிருந்தது.

நண்பனின் தோல் மீது ஒரு கையை மடக்கி வைத்து நின்று கொண்டிருந்தவனின் பார்வை அவனுக்கு உரிமைப்பட்டவளாக நினைப்பவளின் உச்சி முதல் பாதம் வரை அலைபாய்ந்துக் கொண்டிருந்தன.

சுற்றியிருந்த வாண்டுப் பசங்கள் எல்லாம் “கிளிக்கா, கிளிக்கா” என்று கை தட்டி கரகோஷம் எழுப்பிக் கொண்டிருந்த நேரம்

“பொட்டலிலே போகும் ஒத்தையடி பாத உச்சந்தல வகுடாச்சே..

உச்சிமலை ஏறும் வண்டி தடம் போல ரெட்டை ஜடை விழுதாச்சே..

கண்ணு ஆடும் கரகாட்டம் இவன் நெஞ்சு மேல மழை மூட்டம்

கட்டிப் போட்ட புயல் போல இவகிட்ட போக பயம் காட்டும்”
என்று வீராவிற்கு மட்டும் தனி பீஜிம் கேட்டுக் கொண்டிருக்க அவனது முகத்தில் படிந்திருந்த கள்ளமும் ரசனையும் நிற்பதாய் இல்லை.

அதே நேரம் சிலம்பம் சுற்றிக் கொண்டிருப்பவள் அன்று இவனைக் காப்பாற்றிய ‘தீபா’ என்று உணர்ந்துக்கொண்ட ரித்விக்கின் மனதில் அவளின் மீதான வியப்பும் சுவாரசியமும் அதிகமானது.
 
Last edited:

மகா சமுத்ரா

New member
Vannangal Writer
Messages
20
Reaction score
18
Points
3
3.2 பகுத்து அறி

அப்பொழுது “அடிச்சுத் தூக்குறா பாரு கிளி...” என்று அவளை பாராட்டியபடி ரித்விக்கின் அருகில் வந்து நின்றான் வேலன்.

அவனைத் திரும்பிப் பார்த்த ரித்விக் “உனக்கு அந்தப் பொண்ணு யாருன்னு தெரியுமா?” என்று கேட்டான் விரிந்த விழிகளோடு

“இதென்ன மச்சா டவுனா? எல்லா ஊருக்காரைங்களும் ஒன்னா இருக்க? இது கிராமம்லே இங்க இருக்க எல்லாம் ஒரே ஊர்க்காரைங்கதேன்... அதும் கிளியெல்லாம் எங்கூட படிச்சப்புள்ள” என்று அசால்ட்டாகப் பேச

விழிகளை மேலும் விரித்தவன் “ஓ” என்றபடி “நாமளும் அங்க போகலாம் வா” என்று சொல்லியபடி முன்னே நடக்க

திருதிருவென விழித்த வேலன் “எலேய்... வேணாம்... வா..” என்றான் ரித்விக்கின் கையைப் பிடித்தபடி

“ஏன் என்னாச்சு? எல்லாரும் இங்க ஒன்னுக்குள்ள ஒன்னு தான? நாம போய் பழகலாம்ல?” புரியாமல் கேட்டான்.

“வேணாம் மச்சா...பாக்கத்தான் ஊரு ஒன்னு... உள்ளுக்குள்ள ஆயிரம் பிரச்சன இருக்கு... அதுவும் இவுங்க குடும்பம்... வேணா ராசா வந்துடு” என்று ரித்விக்கை இழுத்து வந்துவிட்டான் வேலன்.

“என்ன பண்ற வேலன்.. ஏன் நா அவுங்க கூட பழகக்கூடாதுன்னு சொல்லுற...?” என்று ரித்விக் சிறு புகைச்சலோடு கேட்க, திருதிருவென விழித்தபடி தலையைச் சொரிந்த வேலன்

“அதெல்லாம் காலம் காலமா இருந்து வர்ற பகை மச்சா... நமக்கெதுக்கு?” என்று சொல்ல

“இப்போதான அந்தப் பொண்ணு உன்கூட படிச்சவன்னு சொன்ன.. அப்ப உன்கிட்ட பகைன்ற அளவுக்கு எந்த கோவமும் தெரியலையே...? அதோட ஐ க்னோ ஹெர் அல்ரெடி” என்று ரித்விக் எடுத்துரைக்க அவனை அதிர்ந்துப் பார்த்தான் வேலன்

“எ..என்ன சொல்ற மச்சா? எப்புடி?” என்று தட்டுத்தடுமாறிக் கேட்டவனைக் கண்கள் சுருங்கப் பார்த்தவன் “இதுக்கும் முன்னாடியே நாங்க மீட் பண்ணிருக்கோம்.. கிரான்பாவோட லேண்ட்ல..” என்றான்.

“ஓ.. கிளி எதாச்சும் சொல்லுச்சா? மொதல்ல உன்கிட்ட பேசுச்சா? இல்ல முகத்த திருப்பிகிட்டு போயிடுச்சா? நீ யாருன்னு அந்தப் புள்ளைக்குத் தெரியுமா?” என்று வேலன் பரபரக்க, அவனை அமைதியோடு உறுத்துவிழித்த ரித்விக் மீண்டும் கிளி இருக்கும் திசை நோக்கித் திருப்பி நடக்க,

“மச்சா நில்லு..” அவனோட நடந்தபடி சொன்னபொழுது

“பட் வொய்? அந்தப் பொண்ணு...” என்றபடி கண்களை சுழலவிட்டு வார்த்தைகளைத் தேடி “ஷி...ஷி ஃபேஷினேட்ஸ் மீ... சோ நா அவளப் பத்தி இன்னும் அதிகமா தெரிஞ்சுக்கனும்னு நினைக்குறேன்... நீ ஏன் தடுக்குற?” என்று ரித்விக் சிறு எரிச்சலோடு கேட்க,

அதில் திடுக்கிட்ட வேலன் அவனை அழுத்தமாகப் பார்த்தபடி “ம..மச்சான்.. ஒருவேள.. நீ.. அந்தப் பொண்ண லவ் எதாவது...?” என்று இழுக்க

முதலில் வேலனின் தடுமாற்றத்தை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் வேலனின் ‘லவ்’ என்ற வார்த்தையில் “வாட்??” என்று கேட்டபடி வெடித்துச் சிரித்தான்.

“வேலன் யூ ஆர் ஜஸ்ட்.... ஹாஹாஹா” என்று மீண்டும் சிரித்தவன் “ஒரு பொண்ணப்பத்தி தெரிஞ்சுக்கனும்னு நெனைச்சா அதுக்கு அவள லவ் பண்றது தான் காரணமா இருக்கனுமா என்ன? நீயா ஏன் ஒரு அர்த்தத்த உருவாக்கிக்குற?” என்று புருவம் உயர்த்த, அப்பொழுது தான் வேலனுக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.

“செத்த நேரத்துல இப்புடி பதறவச்சுட்டானே” என்று வேலன் வாய்விட்டு புலம்ப “எதுக்கு இவளோ டென்ஷன்?” என்று கேட்டான்.

“சொல்றத கேளு மச்சான்... நீ எந்த எண்ணத்துல பண்ணுனாலும் இந்த ஊர பொருத்தவரைக்கும் ஒத்த வயசுல இருக்க கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணும் பையனும் பேசிக்கிட்டா அதுக்கு காதலுன்னுதேன் முத்திர குத்தப்படும்... அதும் கிளி வேறசாதி புள்ள... தேவையில்லாம ஊருக்குள்ள சாதிக்கலவரம் வந்துத் தொலைஞ்சா வம்பாப் போகும் புரிஞ்சுக்க..” என்று கெஞ்ச அவனைப் புருவம் சுருக்கிப் பார்த்துக் கொண்டிருந்த ரித்விக்

“வெய்ட்.. இந்த சாதின்னு சொல்றில... அந்த வேர்ட்க்கான மீனிங்க என்ன?” என்று கேட்டான் புரியாமல்.

விழிகள் விரிய ரித்விக்கை நம்பாப் பார்வைப் பார்த்த வேலன் “ப்ச்.. விளையாடாத மச்சான்” என்றான் கடுப்புடன்.

“இல்ல.. அம் சீரியஸ்.. நா இந்த வேர்ட்ட இதுக்கு முன்ன கேள்விப்பட்டதில்ல” என்று சொல்ல, வேலன் ரித்விக்கின் முகத்தை ஆழப்பார்த்தான்.

ரித்விக்கின் கண்களிள் விளையாட்டுத்தனமோ பொய்யோ இல்லை.

‘ஏன் இதற்கு முன்புகூட நிறைய தடவை பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான் பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் விழித்திருக்கிறானே’ என்று வேலன் யோசித்துக் கொண்டிருக்க,

இவர்களைக் கண்டுகொள்ளாமல் வியர்வை வழியும் முகத்தைத் துடைத்தபடி போய்க் கொண்டிருக்கும் கிளியைப் பார்த்த ரித்விக் “தீபா” என்று அழைத்தான்.

யோசனையில் இருந்த வேலனோ ‘தீபாவா அது யாரு?’ என்றபடி திரும்ப அங்கே நடையை நிறுத்திவிட்டு திரும்பி இவர்களைப் பார்க்கும் கிளியைப் பார்த்துத் திடுக்கிட்டவனுக்கு ஞாபகம் வந்தது கிளியின் முழு பெயர்.

“எலேய் என்ன பண்ணுற?” என்று பற்களைக் கடித்தான் வேலன்.

அதற்குள் இவர்களை நெருங்கிவந்திருந்த கிளி வேலனைப் பார்த்து புருவம் உயர்த்தி “வேலண்ணே நீங்க எப்போ டவுனுல இருந்து வந்தீக? படிப்பெல்லாம் எப்படிப் போகுது?” என்று சிரித்த முகமாக கேட்க

“இப்போ ஒரு வாரமிருக்கும்.. நீ யூபிஎஸ்சிக்கு நல்லா படிக்குறியா?” என்று கேட்டான் திருப்பி

“ம்ம்ம்ம்... அதெல்லாம் நல்லபடியா போகுது..” என்று சொன்னவள் ரித்விக்கை தனது ஞாபக இடுக்குகளில் இருந்து உருவி எடுத்தபடி கேள்விக் கண்களோடு அவன் பக்கம் திரும்பினாள்.

“எதுக்கு கூப்ட்டீக?” என்று கேட்டாள் தாடையை உயர்த்தி,

“சாதினா என்ன?”

அவன் அறியாமையோடு கேட்டக் கேள்வியில் அவளது கண்கள் அதிர்ந்து சுருங்கின.

அவனை ஒரு பார்வை பார்த்தவள் திரும்பி வேலனைப் பார்க்க, அவனோ என்ன விதமான உணர்வை வெளிப்படுத்த என்று தெரியாமல் கலவையான உணர்வுகளோடு நின்றிருந்தான்.

மீண்டும் திரும்பி ரித்விக்கின் கண்களைக் கூர்மையாகப் பார்த்தாள். ‘சாதி’ என்ற வார்த்தைக்கான அர்த்தங்கள் இதுவரையிலும் அவனது மூளையில் நிரப்பப்படவில்லை. வெள்ளைத்தாளாக இருக்கும் அவனது வினாத்தாளில் இவள் சொல்லப்போகும் வார்த்தை விடையாகப் போகிறது என்பது புரிந்தது.

“உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனுனா... சாதின்றது ஒரு வெர்ப்... (வினைச்சொல்...) அதுக்கு இங்க்லீஷ்ல ஆப்ட்டான வேர்ட் “Achieve”! மனுஷங்க சாதின்ற வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள கண்டுபிடிச்சு வச்சுருக்காங்க... ஆனா ‘அச்சீவ்’ன்ற அர்த்தத்த மட்டும் தான் நா நம்புறேன்” என்று சொல்லியபடி அவன் முகம் பார்த்து “நீங்களும் இத மட்டும் நம்புனா நல்லாருக்கும்” என்றவளின் உதடுகள் மெலிதாக விரிந்து சுருங்கின.

பின்னர் வேலனைக் கூர்மையாக ஒரு பார்வை பார்த்தவள் விடுவிடுவென நடந்து சென்றுவிட்டாள்.

-----------------------------------

மாலை இளங்கதிர் மென்மையாக முத்தமிட்டுக் கொண்டிருக்க, போட்டிக்கு வந்த அந்தி வேலைக் காற்று அவளை உரசிச் சென்று கொண்டிருந்தது.

நமட்டைக் கடித்தபடி, சுருங்கிய கூர்மையான கண்களோடு யூபிஎஸ்சி சம்பந்தமான அந்த யூட்யூப் வீடியோவை மேய்ந்துக் கொண்டிருந்தவள், காது இடுக்கில் சொருகப்பட்டிருந்த பென்சிலை எடுத்து மடியிலிருந்த நோட்டில் அடிக்கடி குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தாள்.

மலைக்குன்று போன்று அந்த இடமும், அந்த அந்தி நேர வேலையும் அலாதி அமைதியை கொடுத்திருக்க, அவளது கவனம் படிப்பைத் தவிர அங்கு இங்கு சிதறவில்லை.

அப்பொழுது அலைபேசியை ஒரு கையால் தூக்கிப் பிடித்தபடி அக்குன்றின் மேல் ஏறி வந்தான் ரித்விக்.

அவனது பார்வை அலைபேசியின் பின்னால் தெரிந்த பெண்ணின் முதுகிற்கு சென்றது.

கையை தாழ்த்திவிட்டு, கழுத்தோடு சேர்த்து உடலையும் வலப்பக்கமாக வளைத்து அவள் முகம் பார்க்க முயற்சித்தான்.

படிப்பின் தீவிரம் நிறைந்திருந்த அவளது விரல்கள் பென்சிலை இப்பொழுது வளைத்து நெளித்து சுற்றிக் கொண்டிருக்க, முகம் தெரியாமல் போகவும் தோளைக் குழுக்கியபடி நகரப்போனவனின் கண்களில் பட்டது பென்சிலைக் காதிடுக்கில் சொருகியபடி நிமிர்ந்த கிளியின் முக வரி வடிவம்.

மூளையில் மின்னல் வெட்ட, பூத்த முகத்துடன் அவளிருக்குமிடம் சென்றான்.

ஓசைக் கேட்டு புருவம் சுருங்க திரும்பிப் பார்த்தவளைப் பார்த்தவன் நட்புப் புன்னகை ஒன்றை அவள் மீது வீசினான்.

அவள் உதிர்த்த பதில் புன்னகையில் நட்பை விட தயக்கமே அதிகம் வழிவதாக தோன்றியது அவனுக்கு.

இயல்பாக அவன் அவள் பக்கம் அமர, சிறு அதிர்வோடு வெடுக்கென எழுந்து நின்றவளின் கண்கள் அவ்விடத்தைச் சுற்றி ஆராய்ந்தன.

நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவனின் கண்களில் குழப்பமும், கேள்வியும் அப்பியிருந்தன.

அது அவனது வாய் வழி வருமுன் அவள் அவனுக்கு முதுகு காட்டி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

எழுந்தக் கேள்விகளை தன் பக்கமாக திருப்பிக் கொண்டவன் சில வினாடிகள் கழித்து எழுந்து அவள் சென்றவழி போய் பார்த்த பொழுது அவள் குன்றின் பின்பக்கமாக அமர்ந்து படிக்க ஆரம்பித்துவிட்டது தெரிந்தது.

இவனது ஓசைக்கேட்டு திரும்பிப் பார்த்தவளின் கண்களில் சிறு எரிச்சல் இருந்ததோ?

இம்முறை அவள் பக்கம் அமராமல் இடையில் இரு ரயில்கள் செல்வது போல் இடம் விட்டு அமர்ந்தான்.

அவனது செய்கையிலும் பாவனையிலும் அவளது முகத்தில் மின்னல் போல் வெட்டிச் சென்றது சிரிப்பு.

“பக்கத்துல உக்காந்த கூட தப்பா?” அவள் முகம் பார்க்காமல் அருகே கிடந்த சிறு கற்களை எடுத்து இலக்கில்லாமல் எரிந்தபடி கேட்டான் ரித்விக்.

நோட்டை விட்டு திரும்பி அவன் முகம் பார்த்தவள் “இதெல்லாம் தெரியாமலா தமிழ்நாட்டுக்கு வந்தீக?” கேட்டாள்.

“தமிழ்நாட்ட பத்தி பெருமையான விசயங்கள மட்டும் தான் நா இருந்த நாட்டுல பேசிருக்காங்க... இப்டி பொண்ணும் பையனும் பக்கத்துல பக்கத்துல உக்காரக் கூடாதுன்ற சில்லியான விசயங்கள்லாம் தமிழ்நாட்டுல இன்னும் பாலோ பண்ணுறாங்கன்னு இங்க வந்துதான் தெரிஞ்சுகிட்டேன்”

சிறு ஏமாற்றத்துடன் வெளிவந்த அவனது பதிலில் தலை தாழ்ந்தவள் “அப்போ இன்னும் நெறைய ஏமாற்றத்த சந்திக்க தயாராகுங்க” என்றவளின் குரலில் வெளிப்பட்ட உணர்வு என்ன வகையானது என்று ரித்விக்கிற்கு விளங்கவில்லை.

நன்றாக அவள் பக்கம் திரும்பி அமர்ந்தவன் “அப்போ நா சின்ன வயசுல இருந்து தமிழ்நாட்ட பத்தி கேட்டு வளந்த பெருமை எல்லாம பொய்யா?” அறியாக் கண்களோடு கேட்டான்.

“பொய்யெல்லாம் இல்ல... அந்த நெசத்த நெசமாவே வச்சுருக்க ஆட்கள் தான் கொறஞ்சு போய்ட்டாங்க”

“அது ஏன் அப்படி சொல்லுற? ஏன் ஜல்லிக்கட்ட நிறுத்தக்கூடாதுன்னு போராட்டம் நடக்கலையா? அது நம்ம கலாச்சாரத்துக்கான போராட்டம் தான... நா கூட வெளிநாட்டுல இருந்தபடியே கலந்துகிட்டேன்” சிறிது கர்வம் தெரிந்தது அவனது குரலில்.

அதைக் கண்டுக்கொண்டவள் மெலிதாக சிரித்தபடி “என்ன போராட்டம்?” என்றாள் புருவம் உயர்த்தியபடி.

அதில் புருவம் சுருக்கியபடி “ஜல்லிக்கிட்டு போராட்டம்” என்று சொன்னான் மீண்டும்.

“எல்லாத்துக்கும் அர்த்தம் கேப்பிங்களே... சல்லிக்கட்டுனா என்னனு தெரியுமா?”

அவள் இப்படி கேட்டதும் திருதிருத்து கண்களை சுழற்றியவன் “அதான்... மாடு பிடிக்கிறது தான...” என்று சொல்ல

“தமிழ்ல எந்த ஒரு பெயர்ச்சொல்லையும் வாய்க்கு வந்த மாதிரி வைக்க மாட்டாங்க... எல்லா வார்த்தைகளுக்கும் வேர்ச் சொல்லும் மூலமும் இருக்கும்... அதுல சல்லிக்கட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?” அவள் பொறுமையாக கேட்க, அவனது திருதிருப்பு அதிகமானது.

“அ..அது.. ஜல்லிக்கட்டுனா... ம்ம்ம்...”

“அது ‘ஜ’ல்லிக்கட்டு இல்ல... ‘ச’ல்லிகட்டு... தமிழ் படம்லா பாத்துருந்திங்கன்னா தெரியும் ‘சல்லிப்பய’.. ‘சல்லிக்காசு கூட தரமாட்டேன்’ன்னு நெறைய வசனங்கள் சல்லின்ற வார்த்தைய வச்சு இருக்கும்... சல்லினா ரொம்ப மதிப்பு குறைவான காயின்ஸ்... துணில நிறைய சல்லிகளப் போட்டு மாட்டோட கழுத்துல ‘கட்டி’விடுவாங்க... தைரியம் நிறைஞ்சவன் அந்த கட்ட அவித்து காச அள்ளிக்கலாம்” என்று விளக்கியவளின் பார்வை பேசிய மொழியை அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

“மூலமே தெரியாம தமிழோட கலாச்சாரம் என்றதுக்காக மட்டுமே அந்த போராட்டத்துல கலந்துகிட்டவுங்க பலர்... இங்க இருக்க பல மனுஷங்க அப்டிதான் இருக்காங்க... எங்க கலாச்சாரம் அப்புடி இப்புடின்னு பெரும பேசிக்குறாங்களே தவிர... அதுல பாதி பேருக்கு அவுங்க பாலோ பண்ற விசயத்துக்கான மூலம் தெரியறது இல்ல... மீதிப் பேர் ‘தமிழன்டா தமிழன்டா’ன்னு மார்தட்டிகுறாங்களே தவிர அது சொல்லுற ஒழுக்கங்கள பின்பற்றது இல்ல.... இன்னும் வெளிப்படையா சொல்லப்போனா வேஷ்டி கட்டுறது மூலமாவும் சேலை கட்டுறது மூலமாவும் நா தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் காப்பத்துறேன்னு பெருமைபாடிட்டு திரியுறாங்க... “ என்றவள் அவன் முகம் பார்த்து

“வேஷ்டி கட்டுறவுங்களும் சேலை கட்டுறவுங்களும் தான் தமிழ் ஆளுங்கன்னா அப்போ யார் வேணுனாலும் அதப்பண்ணலாமே... தமிழன்ன்றது பிறப்பு மூலமாவோ உடை மூலமாவோ வெளிப்படுற விசயம் கெடையாது... அது தமிழ்மேல நம்ம வச்சுருக்க பற்றுல இருந்தும் மரியாதைல இருந்தும் வெளிப்படுறது...” என்றாள்
 

மகா சமுத்ரா

New member
Vannangal Writer
Messages
20
Reaction score
18
Points
3

4 - கூத்தகராதி

கிளி பேசுவதையெல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தவன் ‘ஹ்ம்மம்ம்ம்ம்’ என்று ஒரு பெரும் மூச்சை வெளியிட்டபடி “ரொம்ப புரட்சி பேசுற...” என்றான் மென் புன்னகையுடன்

இதைக் கேட்டவள் ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தி “புரட்சியா?” என்று கேட்டாள்.

“ஹ்ம்ம்.. புரட்சி தான்.. அதனால தான சாதின்ற சொல்லுக்கான மத்த மீனிங்ஸ்ச எங்கிட்ட இருந்த மறைச்ச..?..”

இதைக் கேட்டவள் “மறைச்சனா?” என்று கேட்டு மென்மையாகப் புன்னகைத்தாள்.

“இதுல நா மறைக்க என்ன இருக்கு? நாளைக்கு என் புள்ள வந்து ‘அம்மா சாதினா என்ன?’ன்னு கேட்டா நா உங்களுக்கு என்ன பதில சொன்னேனோ அதையே தான் சொல்லிருப்பேன்...” என்று அவள் முடிக்க

“அப்போ நா உனக்குப் பாக்க குழந்தையாட்டம் தெரியுறனா?” துடுக்காக் கேட்டான் புருவம் உயர்த்தி.

அக்கேள்வியில் உதட்டை சுழித்து நெளித்தவள் பதில் எதுவும் பேசாமல் எழ, “என்ன எதுக்கு எழுந்திருக்குற?” என்று கேட்டான் பரபரப்பாக

அவனை நிமிர்ந்து முறைத்தவள் “பின்னே இங்கயே ரா முழுக்க தங்க முடியுமா? பொழுது சாஞ்சுருச்சு வீட்டுக்குப் போகுற வழியப் பாருங்க” என்றுவிட்டு தளதளக்கும் முடி பின்னே பெண்டுலமாக அசைந்தாட நடந்துப் போனாள்.

அதைப் பார்த்தவன் தானும் எழுந்து அவள் கூடே செல்ல, திரும்பிப் பார்த்தவள் “ப்ச்... இப்போ என்னாத்துக்கு எம்பின்னாடி வாரீக? உங்களுக்கு வழி அந்தப்பக்கமுல இருக்கு” என்று மூக்கை விடைத்து புருவம் சுழித்து எரிச்சலும் படபடப்பும் கலந்து சொல்ல

அவனோ “நீ தெனமும் இங்க வருவியா?” என்று கேட்டான்.

யாரும் தங்களைப் பார்க்கிறார்களா என்று விழிகளைச் சுழற்றிக் கொண்டிருந்தவளுக்கு இதைக் கேட்டு கடுப்பு அதிகமானது.

எதுவும் பேசாமல் மீண்டும் திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டவளைப் பார்த்த ரித்விக்கிற்கும் கூட சிறு எரிச்சல் துளிர்த்தது.

‘என்ன இவ எப்போ பாத்தாலும் பேசிகிட்டு இருக்கும்போது மரியாதையே தராம நடக்க ஆரம்பிச்சுடுறா?’ என்று நினைத்தவனுக்கு வேலன் இவனை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

இவனுக்கு முன்னே நடந்து போய்க் கொண்டிருந்த கிளியோ வேலனிடம் தானாக நின்று பேச, ரித்விக்கிற்கு ஏகக்கடுப்பு.

‘நா பேசப்பேச நிக்காமப் போறவ, தாம் பாட்டுக்கு வர்றவன நிக்கவச்சுப் பேசுறா பாரு’ என்று இவன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது கிளி இவனைத் திரும்பிப் திரும்பிப் பார்த்து வேலனிடம் எதுவோ சொல்வதும், கிளியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும் வேலனும் இவனை பார்ப்பதும் தெரிய, தன்னைப் பற்றித்தான் ஏதோ பேசிக் கொள்கிறார்கள் என்று புரிந்து கொண்டவன் வேக நடையுடன் அவர்களிருவரை நெருங்கினான்.

“சரிண்ணே அப்போ நா வாறே” ரித்விக் அருகே வந்தபொழுது இதை வேலனிடம் சொல்லிவிட்டு விடுவிடுவென நடக்க ஆரம்பித்துவிட்டாள் கிளி. இப்பொழுது ரித்விக்கின் முகத்தில் கடுப்பு வெளிப்படையாகவே தெரிந்தது.

“என்ன பத்திதான பேசுனிங்க?”

“அ..அது மச்சா... நா சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு... நீ உன்னோட பாரீன் ப்ரெண்ட்ஸ்கூட பேசுறேன்னு சொன்னதுனால தான் சிக்னல் இங்க நல்லா கெடைக்கும்னு சொன்னதோட நா வேற வேலையா போயிட்டேன்... ஆனா கிளி இங்க படிக்க வர்றான்னு எனக்கு தெரியல... தெரிஞ்சுருந்தா உன்னைய இங்க அனுப்பிருக்கவே மாட்டேன்.. அந்த புள்ள விலகி விலகிப் போறானா புரிஞ்சுக்கோ மச்சா... இப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிக்குறத ஊரில் ஒருத்தன் பாத்துருந்தாலும் அது இந்நேரம் ஊரு முழுக்க பரவியிருக்கும்... தேவையில்லாத பிரச்சனை!” புரிய வைத்துவிடும் நோக்கோடு வேலன் சொல்ல.

புரியா பார்வைப் பார்த்தான் ரித்விக்.

இந்த ஒரு விஷயத்தை அவனால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.

“நாங்க ரெண்டு பேரும் பேசிக்குறதுக்கும் ஊருக்கும் என்ன சம்பந்தம்?” புருவங்களை உயர்த்தியபடி பற்களைக் கடித்துக்கொண்டுக் கேட்டான் ரித்விக்.

அவனுக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது.

நண்பர்களாக இருக்கும் ஒரு பெண்ணும் பையனும் படிப்பிற்காக ஒன்றாக தங்குவதிலிருந்து லிவின் வரையிலுமே அவன் பார்த்திருக்கிறான்.

அப்படி ஒரு சூழ்நிலையோடு வளர்ந்தவனுக்கு இப்படி ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.

‘எங்க ரெண்டு பேரோட தனிப்பட்ட விஷயம் ஏன் அடுத்தவுங்க கவனத்த ஈர்க்கனும்?’ இந்தக் கேள்வி நேற்றிலிருந்தே அவனைக் குடைந்துக் கொண்டே இருக்கின்றது.

வேலனிடம் கேட்டால் ‘இந்த ஊர் அப்டிதான்டா’ என்பான் என்று நினைத்தவன் “சரி வா... வீட்டுக்குப் போகலாம்” என்றுவிட்டு ரித்விக் கிளி போன வழியில் நடக்க ஆரம்பிக்க, “மச்சான் வழி இந்தப்பக்கம்” என்றான் வேலன்.

இருவரும் ஏதேதோ பேசியபடி வீட்டை நோக்கி நடை போட “ஆமா தீபாவும் நீயும் படிக்கும் போது ஒரே கிளாஸ்ன்னு சொன்ன... அப்பறம் ஏன் அவ உன்னைய அண்ணனு கூப்பிடுறா?” என்று கேட்டான் ரித்விக்.

இதைக் கேட்டவுடன் “அ..அது” என்று அசடு வழிந்தவன் “நா ஸ்கூல் ல கொஞ்ச வருசம் பெயிலா போயிட்டேன் மச்சா... அது நல்லா படிக்குற புள்ள... அதான்” என்று சொல்லி முழுப்பல்லையும் காட்ட, அவனது பாவனையில் உதடுகளை மடித்து சிரிப்பை உள்தள்ளியவன் வேறு பேச்சை எடுத்தான்.

இருவரும் வீடு வந்து சேர்ந்த பொழுது அங்கே வீட்டாட்கள் எல்லோரும் திண்ணையில் கூடியிருந்தனர்.

புது நபர்களும் சிலர் இருப்பது தெரிய, ரித்விக் அமைதியாக தனது தந்தையின் அருகில் போய் அமர்ந்துக்கொண்டான்.

அப்பொழுது இவனருகே வந்த அந்தச் சிறுவன் இவனின் இரு கன்னங்களையும் பிடித்து ரித்விக்கின் முகத்தை இந்த பக்கமும் அந்தப் பக்கமுமாக திருப்பி திருப்பிப் பார்த்துவிட்டு “ஹ்ம்ம் எம்மவேன்னு சொல்லிக்குற அளவுக்கு அழகாத்தான் இருக்கியான்” என்று சீரியசான குரலில் அறிவிக்க, ரித்விக்கைத் தவிர மற்ற எல்லோரும் குபீரென வெடித்துச் சிரித்தனர்.

அவன் கைகளிலிருந்து தனது முகத்தை வெடுக்கென எடுத்துக் கொண்டவன் முகத்தை சுருக்கிக்கொண்டு “வாட்?” என்று கேட்க

“என்னா ரகுண்ணே நா இவருக்கு சித்தப்பன்னு நீ சொல்லிக் குடுக்கைலையா?” என்று அரை டிரவுசர் தோரணையாகக் கேட்க

ரித்விக் அதிர்ந்து தன் தகப்பனின் முகம் நோக்கினான்.

ரகு சிரிப்பை வாய்க்குள் மறைத்துவிட்டு “ஆமா ஆமா... பாத்துக்க ரித்விக் இதோ இவரு தான் உன் சித்தப்பா முத்துவேல்” என்று முத்துவேலான அரை டிரவுசரை சுட்டிக்காட்டி அவனுக்கு ஒத்து ஊத, அதைக் கேட்டு முகத்தைச் சுருக்கிய அரை டிரவுசர் “அண்ணே!” என்று பட்டென அதட்ட, பயம் போல் விழித்துப் பார்த்தார் ரகு.

“அந்தப் பேரு அம்மாப்பா வச்சது... எனக்கு நானே ஒரு பேர் வச்சிருக்கேன்...” என்று சொல்லி நிறுத்தியவன் ஒரு காலை ஊன்றி மற்ற காலை தரையோடு இழுத்து நின்று, கைகள் இரண்டையும் பின்னால் கொக்கிப்போட்டபடி கட்டி விண்ணைப் பார்த்து “இப்போ எம்பேரு... ஷாரூஊக்க்கான்.” என்று மிதப்பாக அறிவிக்க,

“ஹாஹாஹா” என்று உருண்டு புரண்டு கெக்கபெக்கவென சிரிக்க ஆரம்பித்தான் சிங்காரவேலன்.

மற்றவர்களும் சிரிப்பை அடக்குவதைக் கண்டு கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திய அரை டிரவுசர் “பாரு சிங்கார வேலா... எங்கக்காளுக்கு தான் நீ பொறந்துருக்க, மொறப்படி நா உனக்கு மாமான்... இப்படியெல்லாம் மரியாதை இல்லாம நடந்துக்கப்புடாது” என்று பொறுமையாக எடுத்துச் சொல்ல

“ஏலேய் பொடிப்பயலே! நல்லா அரையடி இருந்துகிட்டு நீ எனக்கு மாமனா?” என்று வேலன் சிரித்துக்கொண்டே வார,

உஷ்ண மூச்சுகளை வெளியிட்ட அரை டிரவுசர் “பாருக்கா... நீ சொல்லு... நா உந்தம்பி தான? அப்போ உன் பையனுக்கு நா மாமெ மொற தான ஆகுது” என்று சிணுங்க, இன்னுமே சிரித்துக் கொண்டிருந்த வேலன் “இப்..இப்போ எனக்கு ஒரு கடி ஜோக்கு தோனுது” என்று சிரிப்பின் ஊடே சொல்ல, சலித்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டான் ரித்விக்.

“வேணா... நா பொல்லாதவன்” விரலை நீட்டி உஷ்ணத்தோடு அறிவித்தான் அரை டிரவுசர்.

“இருந்துட்டு போ.. நா என் மனசுல தோனுன கடிசோக்க சொல்லியே தீருவேன்” என்று அறிவித்த வேலன், அடுத்தவர்களை பேச விடாமல் தொடர்ந்தான்.

“ரெண்டுபேரு சண்ட போட்டுக்கிட்டு இருந்தப்போ அதுல ஒருத்தன் ஆக்ரோஷமா சொன்னானாம் ‘நா இந்த ஊர்லையே பொறந்து வளந்தவன்டாஆஆஆ’ன்னு அதுக்கு எதுத்தாப்புல இருக்கவேஞ் சொன்னானாம் ‘இந்த ஊருல பொறந்தேன்னு சொல்லு வளந்தேன்னு சொல்லாத’ன்னானாம் அவன மேலையும் கீழையும் பாத்தபடி” என்று சொல்லிவிட்டு வேலன் மேலும் சத்தமாக சிரிக்க, (இதுபோன்ற சோக்குகள் இன்றும் வழக்கத்தில் உள்ளதால் குறிப்பிட்டேன், வாசகர்ளுக்கு பரிந்துரைக்கமாட்டா!)

தனது பலவீனத்தில் கைவைத்துவிட்ட வேலனை உயிரோடு பாடைக்கட்டிவுடும் எண்ணத்தோடு முறைத்தான் அரை டிரவுசர்.

அவன் ஆறாம் வகுப்பு படித்தாலும் வயதிற்கேற்ற வளர்ச்சி இல்லை அவனிடம். ஆறேழு வயது பையனின் உயரம் தான். அதனால் தான் அவனது குட்டையான உயரத்தை சுட்டிக்கட்டி நகையாடுகிறான் வேலன் என்று தெரிந்தது “ஏலேய் இன்னைக்கு உன்னைய வெட்டி பொலி போடுறேனா இல்லையா பாரு” என்று புயலென உருமாறி வந்த அரை டிரவுசரையும் வேலைனையும் பிரித்தெடுக்க படாத பாடுபட்டுப் போயினர் மற்றவர்கள்.

கெனடாவில் இருந்து இங்கு வந்ததிலிருந்து நேர மாற்றம் காரணமாக தினமும் நன்றாக உறங்காமல் புரண்டுக்கொண்டிருந்த ரித்விக்கிற்கு இன்றுதான் தூக்கம் சிறுகசிறுக பிடிபட்டது.

இரவு தூங்கும் நேரமெல்லாம் தனது தந்தையின் சிரித்த முகத்தையே நெஞ்சில் புதைத்தபடி தூங்கிப் போன ரித்விக்கின் உதட்டின் ஓரத்தில் புன்னகை ஓரம் கட்டியே இருந்தது.

தினம் தினம் பல்கிப் பெருகும் கொரோனாவைப் பற்றியே இரவு பகலாக செய்தி தொலைக்காட்சிகள் எல்லாம் கொக்கரித்துக் கொண்டிருக்க, ‘கொரோனாவா? அப்டினா?; என்பது போல் தான் அவ்வூரில் மக்கள் எல்லோரும் அவரவர் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அதிகாலையிலேயே சேவலின் “கொக்கரக்கோ கோ..ஓஓ” என்ற டீபால்ட் அலார்மில் கண்களை கசக்கிக் கொண்டு கைகளை சுழற்றி சோம்பல் முறைத்தபடி எழுந்து வாசலுக்கு வந்த ரித்விக்கின் மனதில் அதிகாலையின் ஆழ்ந்த வாசம் அலாதியாய் ஒரு ஆலாபனையை அரங்கேற்றியது.

அதை ஆழமாக உள் இழுத்து இரண்டொரு வினாடிகள் அனுபவித்தவன் கண்களை திறந்தபொழுது ஆதீஸ்வரி வாசல் தெளித்து கோலம் போடுவது தெரிய, தானாக ஒரு மென்னகை அவனது முகத்தில் வந்து உரசிச் சென்றது.

கோலம் போட்டுக் கொண்டிருந்தவர் இவனின் காலடி ஓசையில் நிமிர்ந்துப் பார்த்துவிட்டு “எழுந்துட்டியாய்யா... சமயக்கட்டுல காப்பி வச்சுருக்கேன்... பல்லகில்ல வெளக்கிட்டு போய் எடுத்துக் குடி போ” என்றார் அன்பிலும் அன்பு ஊறிப் போயிருந்த குரலில்.

ஏனோ அந்தப் பாசம் ஒழுகிய குரல் அவனது மனதில் தனி ஒரு இதத்தைப் பரப்பியது.

“நீங்க கோலம் போடுறதப் பாத்துட்டு போறேன்” என்றான் ரித்விக்.

ஆதீஸ்வரி ஏதேதோ பேசியபடியே கோலம் போட்டுக்கொண்டிருந்தாலும் அவனது கண்கள் இரண்டும் இலாவகமாக வளைந்துக் கொண்டிருக்கும் ஆதீஸ்வரியின் வலது கை விரல்களையே பின் தொடர்ந்து கொண்டிருந்தது.

கூர்மையை சூடியிருந்த அவனது கண்கள் ஆர்வமாய் விரிந்து அவற்றை உள்வாங்கிக் கொண்டிருந்தன.

இடையிடையே கேட்கும் மாடு கத்தும் சத்தமும், சேவல்களின் கூவலும், இருளிலேயே உதித்துவிட்ட சூரியன் போல் சுறுசுறுப்பாக சுற்றித் தெரியும் மக்களின் இயக்கங்களும் அவனுக்கு புது விதமான இதங்களை இதயத்தில் இசைத்துக் கொண்டிருந்தது.

நிச்சயமாக அவனுக்கு அது ஒரு பொன்காலைப் பொழுது தான்.

காலையிலேயே குளித்து தனது டீ ஷர்ட்டையும், ட்ராக் பேன்ட்டையும் அணிந்தவன் ஷூவை மாட்டிக் கொண்டு ஜாக்கிங் என்ற பெயரில் ஊரை சுற்றிவர ஆரம்பித்தான்.

அப்பொழுது அன்று கிளி சிலம்பம் சுற்றிய இடம் வந்ததும் தானாக நின்றன அவனது கால்கள்.

நிறைய பேர் சிலம்பப் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

சில நிமிடங்கள் கண்ணுக்கு எதிரே தெரியும் காட்சியை சில உற்று நோக்கியன் அவ்விடத்தை நோக்கி அடிகளை எடுத்து வைத்து நடந்தான்.

பயிற்சி செய்து கொண்டிருந்த சிலர் இவனைப் பார்த்துவிட்டு சிலம்பம் சுற்றுவதை நிறுத்தியபடி தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.

ஆட்களுக்கு மத்தியில் நின்றிருந்த ஒரு கட்டையான ஆள் “எலேய் சேகரு, கம்பு சுத்தாம என்னலே வேடிக்க?” என்று பொரிய, அவனது பார்வை தன் முதுகின் பக்கம் மையம் கொண்டிருப்பதைக் கண்டவர் ‘அப்புடி என்னத்த பாக்குறவன்?’ என்று நினைத்தபடி பின்னால் திரும்பிய நேரம் கூட்டத்தினுள் ஒருவனாக இவரை நெருங்கி வந்திருந்தான் ரித்விக்.

அவனைப் பார்த்து புருவம் சுருக்கியவரின் விழிகள் மேலும் கூர்மையாய் அவனது முகத்தை நோக்கிய நொடி,கடந்த காலம் மூளையில் மின்னல் போல் வெட்டிச் செல்ல, அவரது கண்கள் அதிர்ந்து அவனை நோக்கின.

இதையெல்லாம் கவனியாதவன் இவர்களை எப்படி அணுகுவது என்று தயக்கத்தோடு சுற்றி இருந்தவர்கள் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க,

“என்னலே என்ன வேணு?” என்று அதட்டலான குரலில் கேட்டான் வீரசேகரன்.

“எனக்கும் சிலம்பம் டீச் பண்றிங்களா?” என்று கேட்டான் சிறு தயக்கம் நிறைந்த குரலில்.

இதைக் கேட்டு அந்தக் கட்டை மனிதர் அதிர்ந்து விழிக்க, மற்றவர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

எல்லோரும் தன்னை ஒரு மாதிரி பார்ப்பதைக் கண்டு ‘எதாச்சும் தப்பா கேட்டுட்டோமா?’ என்று யோசித்தவன் “அ..அதாவது சிலம்பம் கத்து குடுக்குறிங்களா?” என்று கேட்டவனின் இரு புருவங்களையும் முழுதாக உயர்த்தாமல் அவற்றின் ஆரம்ப இடத்ததை இடத்தை மட்டும் மெலிதாக உயர்த்த, அவன் முகத்தில் வேறு ஒரு முகத்தைக் கண்ட அந்தக் கட்டை மனிதர் பட்டென முகத்தை திருப்பிக் கொண்டார்.

“முடியாது! கெளம்பு!” அதிகாரமாகச் சொன்னான் வீரசேகரன்.

புது மனிதர்கள் முன் கிடைத்த முகத்திலடித்தார் போன்ற பதிலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அவமான உணர்வுடனும் சங்கடமும் சேர்ந்துக் கொள்ள

“நா..நா கரக்ட்டா பீஸ் குடுத்துருவேன்... எவளோனாலும் னோ இஸூஸ்” மீண்டும் சங்கடத்தோடும் படபடப்போடும் அவன் சொல்ல, முதுகு காட்டியபடி நின்றிருந்த அந்தக் கட்டை மனிதர் இதைக் கேட்டு கண்களை இறுக மூடினார்.

“நீ கோடி ரூவா குடுத்தாலும் உனக்கு இங்க பயிற்சி குடுக்க முடியாது.. ஒழுங்கா வந்த வழியே திரும்பிப் போயிடு” பட்டெனச் சொன்னான் வீரா.

“இல்ல.. நா ஊருக்கு புது ஆளா இருக்கவும் யோசிக்கிறிங்களா? ரகுநந்தன் தெரியுமா.. இல்ல இல்ல... தவசி.. ஹா தவசி தேவர் தெரியுமா அவருதான் எங்க தாத்தா... நானும் இதே ஊர்க்காரன் தான்”

“முடியாதுனா முடியாது! அவளோ தான்” என்று அழுத்தமாகச் சொன்ன வீரசேகரன் பின்னால் திரும்பி “இங்க என்ன படமா காட்டுறாய்ங்க... வேலையப் பாருங்கடா வெண்ணைங்களா!” என்றபடி நகர்ந்துவிட

இதற்கு மேலும் எப்படி வினவுவது?என்று சங்கடத்தோடு தலை குனிந்த ரித்விக், நிமிர்ந்து யார் முகத்தையும் பார்க்க விரும்பாமல் பின்னே திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

நடக்க ஆரம்பித்தவிட்டவனை திரும்பிப் பார்த்த அந்தக் கட்டை மனிதரின் கண்கள் சிறிது கலங்கியிருந்தனவோ?

விடுவிடுவென வீட்டிற்கு வந்துவிட்டான் ரித்விக்.

ஏனோ எல்லோர் முன்பும் தான் அவமானப்படுத்தப்பட்டது போலொரு உணர்வு.

கோபம் வராமல் ‘ஏன் அப்படி பேசினார்கள்?’ என்ற கேள்வி தான் வந்து தொலைத்தது.

சுணங்கிப் போன முகத்துடன் வீட்டினுள் நுழைபவனைப் பார்த்த ரகுநந்தன், வேகமாக எழுந்து வந்து “என்ன ரித்விக்? ஏ ஒரு மாதிரி இருக்கே?” என்று கேட்டார் தன் ஒரே மகனின் வாடிய முகத்தை காண சகிக்காமல்.

“டேட், எனக்கு சிலம்பம் கத்துக்கனும்” தந்தையின் முகம் பார்த்து அவன் உரைத்த செய்தியில் அதிர்ந்து விழித்தனர் ரகுநந்தனும், தவசியும்.

பல வருடங்களுக்கு முன்பு இதே விசயத்தை ரகு தவசியிடம் சொன்னதும் அதன்பின் நடந்த சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகம் வர, இருவரது மனநிலையும் கலங்கியது.

“எ..என்ன ரித்விக் திடீர்னு?” முகத்தை சாதாரணமாக வைக்க முயற்சித்தபடி கேட்டார் ரகுநந்தன்.

“நா டெய்லியும் ஜாக்கிங் போகுற வழியில சிலம்பம் கிளாஸ் நடந்துகிட்டு இருக்கு... நானும் ஜாயின் பண்ணிக்குறேன்னு போய் கேட்டேன்... பட்....” அவன் முகத்தை தொங்க போட, துடித்தது ரகுவின் மனது.

“பட்?”

“கத்துக்குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க”

“இ..இதுக்கு போய் டல்லாகலாமா ரித்விக்? சியர் அப்... அப்பா இந்த விசயத்த பாத்துக்குறேன்” என்று ரகுநந்தன் உறுதி அளிக்க, ஜொலிக்கும் கண்களோடு முகத்தை நிமிர்த்திய ரித்விக் “யூ ஆர் தி பெஸ்ட் டாடி” என்றபடி அவரைச் சென்று கட்டிக்கொண்டான்.

நடப்பவற்றை எல்லாம் தவசி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாலும் அவரது மனதினுள் ஏதோ ஒரு அபயாமணி ஒலிக்க ஆரம்பித்தது.

---------------------------

இன்றும் நேற்று கிளியை சந்தித்த அதே மலைக்குன்றுக்கு அதே நேரத்திற்கு சென்றான் ரித்விக்.

பாறையின் முன்பக்கம் அவளைக் காணாமல் போகவே, சுற்றி பின் பக்கம் சென்றான்.

அவன் எதிர்பார்த்தது போலவே அங்கு தான் அமர்ந்திருந்தாள் கிளி.

நேற்று போலவே இரு ரயில்கள் இடையே செல்லும் இடைவெளிவிட்டு அமர்ந்தான் ரித்விக்.

அவள் கவனிக்கவில்லை.

எதையோ தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தாள்.

“ங்க்ரும்” தொண்டையை சத்தமாக அவன் செரும, திரும்பிப் பார்க்காமலேயே யார் அது என்று கிளிக்கு புரிந்தது.

ஆனால் அவள் இவன் பக்கம் திரும்புவதாய் இல்லை.

“நானும் சிலம்பம் கத்துக்கப்போறேன்” நொடித்துக் கொள்வது போல் சொன்னான்.

ஆச்சரியத்தில் விரிந்த விழிகளோடு இவன் பக்கம் திரும்பினாள் கிளி. இதை எதிர்பார்த்திருந்தவனின் முகம் வெற்றிப் புன்னகையை சூடிக்கொண்டது.

அவன் பக்கம் திரும்பும் பொழுதே அவளது முகம் எதையோ நினைத்து பொழிவிழந்தது.

“யாருகிட்ட கத்துக்கப் போறீங்க?” கேள்வி பிறந்தது அவளிடம்.

“நீ அன்னைக்கு ஒரு மரத்துப் பக்கத்துல கம்பு சுத்துனில.. அங்க நிறைய பேர் இன்னைக்கு ப்ராக்டிஸ் பண்ணுறத பாத்தேன்... அவுங்ககிட்ட தான் போய் கேட்டேன்” என்று அவன் சொல்லும் பொழுதே, அவன் யாரைக் குறிப்பிடுகிறான் என்று புரிந்துக்கொண்டவள்

“என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள் பதட்டமாக.

அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தவன் “முடியாதுன்னுட்டாங்க.. உங்ககுடும்பத்துக்கும் எங்கக் குடும்பத்துக்கும் தான் பகைன்னு வேலன் சொன்னான்... ஆனா அவுங்கள்ளாம் ஏ இப்டி நடந்துக்குறாங்க... ஒருவேல ஊரு முழுக்க எங்கக் குடும்பத்துக்கு பகையா இருக்குமோ?” என்று தனது மனதில் இருப்பவற்றை பேசிக் கொண்டே போனவன் “என்னமோ போ... இந்த மாதிரி பைட்ஸ்ல-லாம் எனக்கு எந்த இண்டரஸ்ட்டும் இல்ல... லாக்டவ்ன் முடிஞ்சு எல்லாம் ப்ரீயானோன நா கெனடாவுக்கு பறந்துருவேன்” என்று கையை விமானம் போல் இயக்கிக் காண்பித்தான்.

கிளியோ ‘அப்போ சீக்கிரமா லாக்டவ்ன் முடியனும்’ என்று மனதினுள் வேண்டிக் கொண்டாள்.

ரித்விக்கோ “ஆனா அந்த ஷார்ட்டா இருந்த ஆளு, என்னைய பாத்தோன ஏன் முதுக காமிச்சு நின்னுட்டாருன்னு தான் இன்னும் எனக்கு புரியல... அவரு முஷ்டாச்ச(மீசைய) நீ பாத்துருக்கனுமே... ஹா... ஹா.. ஹா... வெரி ஃபன்னி” என்று சொல்லி ரித்விக் சிரிக்க,

அவனை முறைத்துப் பார்த்தவள் “அது எங்க அப்பா” என்றாள் பற்களைக் கடித்தபடி, அதில் சிரிப்பை சட்டென நிறுத்தியவன் விரிந்த விழிகளோடு அவளை திரும்பிப் பார்த்து “வாட்?” என அதிர்ந்து “ஓ.... உங்க அப்பா சிலம்பம் டீச்சரா? அவரு தான் அங்க நின்னு எல்லாருக்கும் சொல்லிக் குடுத்துட்டு இருந்தாரு” என்று சொல்ல

“எங்கப்பா கூத்துக்கட்டுறவரு... மாசியில இருந்து ஆவணி வரையும் தான் எங்க தொழில்ல வருமானம்... அதையும் இப்போ கொரோனா வந்து கெடுத்துருச்சு” என்று தகவலோடு தனது சொந்த ஆதங்கத்தையும் சேர்த்து பொருமினாள் கிளி.

“அப்டினா?” எப்பொழுதும் அவனிடம் பிறக்கும் கேள்வி இப்பொழுதும்.

இம்மாதிரியான கேள்விகள் வந்தாலே குஷியாகிவிடுவாள் கிளி. அவளுக்குத்தான் நீண்ட விளக்கம் கொடுக்க ரொம்பப் பிடிக்குமே...

அவன் பக்கமாக நன்றாக திரும்பி அமர்ந்தவள் “கூத்துனா.. உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா... ம்ம்ம்.. தியேட்டர்ன்னு சொல்லுவாங்கள்ள... நடிகர்கள் எல்லாம் ஒரு ஸ்டோரிய அங்க லைவா ஆக்ட் பண்ணுவாங்களே அந்த மாதிரி...” என்று அவள் விளக்க

“ஆக்டர்னு சொல்லுறியா?” என்று கேட்டான்

“இல்ல.. இல்ல... ம்ம்ம்ம்... ஆர்டிஸ்ட்! எங்கப்பா பண்ணுறது ஃபோக் ஆர்ட்...” என்று சொல்ல

“ஓ...” “இந்த ரோமியோ ஜூலியட்... மாதிரி லிட்டரேச்சர் வொர்க்ஸ்ச ஆக்ட் பண்ணுவாங்களா?”

“இல்ல... ஃபோக் ஆர்ட்ஸ்ல நிறைய வகை இருக்கு... ஃபோக் ஆர்ட்ச நாட்டுப்புறக்கலைகள்ன்னு சொல்லுவாங்க... அப்டினா நம்ம நாட்டோட தனிப்பட்ட ஒழுக்கம், அரசர்கள், போர்கள், தொழில்கள், லைப் ஸ்டைல், கடவுள் இதப் பத்தியெல்லாம் பேசுறது... ம்ம்ம்.. நா ஸ்கூல் படிக்கும் போது தமிழ்ல முத்தமிழ்ன்னு ஒரு பாடம் வந்தது.. அதுபடி சொல்லனும்னா தமிழ இயல் இசை நாடகம்னு மூனா பிரிக்குறாங்க... இப்போ நம்ம சங்க இலக்கியங்கள் எல்லாம் நம்ம முன்னோர்களோட வாழ்க்கை முறைய பத்தி பேசுது இல்லையா... படிப்பறிவு இல்லாதவுங்களுக்கு அதையெல்லாம் படிக்கத் தெரியாது... சோ நாடகத்தமிழ் உள்ள வந்தது.. நாடகங்களும் மக்களோட வாழ்க்கை முறைய பத்தி தான் பேசுது... ஏன் நம்ம சிலப்பதிகாரத்துல கூட கொடுகொட்டி, பாண்டுரங்கம், அல்லிக்கூத்து, மல்லாடல், துடிக்கூத்து, குடைக்கூத்து, குடக்கூத்து, பேடிக்கூத்து, மரக்கால்கூத்து, பாவைக் கூத்து, கடையக்கூத்துன்னு மொத்தம் மாதவியோட பதினொரு வகையான கூத்துக்கள பத்தி சொல்லுறாங்க...அது நடந்து பல நூறு ஆண்டுகள் கழிச்சும் இன்னமும் பாவைக் கூத்து, மரக்கால் கூத்துலாம் இருந்துகிட்டே தான் இருக்கு...”

“கூத்துக்கட்டுற போது வர்ற பாட்ட ‘தரு’ன்னு சொல்லுவாங்க... கூத்து ஆரம்பிக்கும் போது எல்லாரும் உள் நுழையற போது பாட்டு பாடிகிட்டே வருவாங்க... அது பேரு பிரவேச தரு... அதுக்கப்பறம் நடக்குற விவாத பாடல்கள சம்வாத தருன்னு சொல்லுவாங்க... ஏன் கூத்தநூல்ன்னு ஒரு புக்கே இருக்கு... அதுல நாடகம் எப்படி பிறந்ததுன்னு சொல்லுறாங்க” என்றவள் கடகடவென கூகிளில் அதைத் தட்டி எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்,

“மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்

உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே

ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே

இசையில் பிறந்தது ஈட்டத்து இயல்பே

ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே

கூத்தில் பிறந்தது நாட்டியக்கொப்பே

நாட்டியம் பிறந்தது நாடக வகையே”

“கூடவே கூத்துக் கட்டும் போதெல்லாம் எவளோ கடுமையா விரதம் இருந்து பண்ணுவாங்க தெரியுமா?” என்று ஆச்சரியமாக சொல்லியபடி திரும்பி ரித்விக்கின் முகத்தைப் பார்க்க,

அவனோ இவளை ‘ஞே’வென பார்த்துக் கொண்டிருந்தான்.

(கூத்த நூல் பாடலின் பொருள் :

இறைவனது உடுக்கையிலிருந்து ஓசையும், ஓசையிலிருந்து கூத்தும், கூத்திலிருந்து நாட்டியமும், நாட்டியத்திலிருந்து நாடகமும் தோன்றின என்கிறது.)
 
Status
Not open for further replies.
Top Bottom