Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மன்மதன் மைவிழி

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
வணக்கம் நட்புக்களே... மீண்டும் உங்கள் மேகலா அப்பாதுரை எழுத்தாளராய் உங்கள் முன். சில பல காரணங்களால் எழுதமுடியாமல் இருந்தவள் அதையெல்லாம் ஒதுக்கி விட்டு மீண்டும் புத்துணர்வோடு உங்கள் முன். எந்த தடையும் என்னை நிறுத்தாது என்று நிரூபிக்கவே இந்த படைப்பு .
இது எனக்கான சவால். என் எழுத்தின் மீதுள்ள நம்பிக்கை.. தேடிபார்க்கிறேன் காற்றினிலே ஞாயிறு அன்று இரண்டு அத்தியாயங்கள் பதிவிடப்படும். அதன் பின் தொடர்ந்து சீக்கிரம் உங்கள் செழியனை உங்களுக்காகவே தருகிறேன்.
இப்பொழுது எனது அடுத்த படைப்பாக
"மன்மதன் மைவிழி" படித்துவிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க
தாமஸ் மார்லன் ஜெர்மனியில் இருந்து தமிழ் ஆராய்ச்சி படிக்கவரும் வெளிநாட்டு இளைஞன் தான் நம்ம ஹீரோ.
ஜானவி கட்டுப்பாடுகள் நிறைந்த அய்யர் ஆத்து பெண். இவர்களுக்கிடையேயான சுவாரஸ்ங்களும், இன்னும் சில பல மனிதர்களின் மனங்களும், அதை தாண்டிய மனிதமுமே கதை. என் எண்ணத்தை எழுத்தாக்கி உங்கள் முன் படைக்கிறேன். உங்களது கருத்துக்களை பகிருங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~
அத்தியாயம் - 1
மாலை நேரத்துச் சூரியன் லேசாய் மயங்கிச் சாய்ந்துக் கொண்டிருந்தான் எழுந்துக் கொண்டிருந்த நிலாவின் பேரழகில் மயங்கி. மாலை வெயில் அந்த அடர்ந்த கானகத்தின் மரங்களில் பட்டு இலைகளின் வழியே ஊடுருவிக் கொண்டிருந்தது. அந்த அடர்ந்த கானகத்தின் நிசப்த்தத்தை உடைத்துக் கொண்டு கேட்டது குதிரையின் குழம்பொழிச் சத்தம்.
காற்றைத் கிழித்துக் கொண்டு புயலென விரைந்தது வந்து கொண்டிருந்த அக்கருப்பு நிறக் குதிரையில் தன் அடர்ந்த சிகை காற்றில் பறக்க, வெள்ளியில் வார்த்தெடுத்ததைப் போன்ற வெண்மையான தேகத்தில் கருமைநிற உடையும், கருமை நிற முககவசமும் அணிந்து அமர்ந்திருந்தான் ஆஜானுபாகுவான வீரனொருவன்.
கருமை நிற உடையில் வெள்ளியில் வார்த்தெடுத்தது போலிருந்த அவனுருவத்தில் அந்தி வெயிலின் தங்ககதிர்கள் பட்டுத் தகதகத்துக் கொண்டிருந்தது.
"ஜான்வி" என்று உச்சரித்தபடியே குதிரையில் இருந்த அவ்வீரனின் கைகள் நீள
சட்டென ஒரு சொம்பு நீர் முகத்தில் மோதி தெறிக்க அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் ஜானவி.
"அசமஞ்சம் அசமஞ்சம் நோக்கு தெனமும் சொல்றேனே ஏர்றதா உம்மரமண்டைல.. காலம்பற பிரம்ம முகூர்த்துல எழுந்து குளிச்சு, வாசல் பெருக்கி, கோலம் போட்டு சுவாமிக்கு விளக்கேத்துன்னு சொன்னா.. ஜாமம் வரைக்கும் அந்த கர்மம் புடிச்ச போனை வெச்சின்டு நோண்டின்டு கெடக்கறது பிறகு விடியறவரை தூங்கறது.... எல்லாம் உங்கப்பாவை சொல்லனும் பொம்மனாட்டிக்கு என்னத்துக்குடா இந்த கர்மம்னு சொன்னா கேட்டானா.." என தலையிலடித்தபடியே வசைபாடிக்கொண்டிருந்த தன் அத்தை பேச்சைக் கேட்க ஜானவி அங்கு இல்லை.
குளித்து முடித்து ஈரத்தலையை முடிந்தபடி அரக்கு நிற பார்டர் வைத்த மஞ்சள் பட்டிற்கு மேட்சாய் அரக்கு நிற தாவணியில் தங்கசிலையென வந்தவளை எதிர் கொண்டாள் அவள் தங்கை பார்கவி.
"ஏக்கா இன்னைக்கும் சுப்ரபாதமா.... அத்தையோட சுப்ரபாதம் கேட்டு கண்விழிக்கறதே நோக்கு பொழப்பா போச்சு.." என்றவளிடம்
"அடியே பாரு.. இன்னைக்கும் அந்த கனவு வந்துச்சுடி.." என்றவாறே விழிவிரித்தவளிடம்
"எது அந்த கருப்பு குதிரைல வெள்ளை வெளேர்ன்னு வர்றவனா.. நீ இந்த நார்னியா, ஹாரிபார்ட்டர் மாதிரி படமெல்லாம் பாக்குறதை நிப்பாடு சித்த, உனக்கு கனவே வராது.." என்று அலுத்துக்கொண்டவள் தான் பார்கவி, ஜானவியின் தங்கை.
"நான் வாசலுக்கு தண்ணிர் தெளிச்சு பெருக்கிட்டேன். இன்னைலேர்ந்து உன் டர்ன் நீதான் தண்ணீ தெளிச்சு, கோலம் போடுறது. போய் கோலம் போடு மறுபடி அத்தை வந்து பேசப் போறா.." என்றபடியே உள்ளே சென்றவளை பார்த்து முனுமுனுத்தபடியே வாசலை அடைந்தவள் வழக்கம் போல் ஆண்டாள் பாசுரத்தைப் பாடியபடியே கோலம் போட்டு முடிக்கவும் அவள் தந்தை சீனிவாசன் நடைபயிற்சி முடித்து அத்தெருவின் முனையில் நுழைவது தெரிந்தது.
"பெருமாளே அப்பா வந்துட்டாரே.." என்றபடியே அவசரமாய் உள்ளே ஓடினாள் ஜானவி. அதற்குள் பார்கவி பூக்களை பறித்து, பூஜையறையின் விளக்குகளை துடைத்து வைத்திருக்க, இருவரும் சேர்ந்து சுவாமிக்கு பூக்களை வைத்து தீபமேற்றி அபிராமி அந்தாதியை பாட ஆரம்பித்தனர்.
இது இவ்வீட்டில் ஜானவி குழந்தையாய் இருக்கும் போதிருந்தே தொடரும் பழக்கம்.
ஜானவியும், பார்கவியும் சிறுமிகளாய் இருந்தவரை இவ்வேலைகள் அனைத்தையும் பார்த்தவர் அவர்களின் தாய் சந்தானலட்சுமி. பெண்கள் வளர வளர தாயோடு மகள்களும் கட்டாயம் வீட்டின் ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டுமென்பது அவ்வீட்டின் எழுதப்படாத சட்டமாய் போனது.
ஜானவியும், பார்கவியும் விவரம் தெரிந்தது முதல் அதிகாலை நீராடி அபிராமி அந்தாதியில் தொடங்கி திருப்பாவை, திருவெம்பாவை என் தன் தாயும், அத்தையும் கற்றுக்கொடுத்த பாடல்களை ஒன்று விடாமல் அட்சுரசுத்தமாய் தங்கள் இனிமையான குரலில் பாடுவர்.
அப்படி அவர்கள் பாடும் இந்த நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஜானவியின் அத்தை.. சீனிவாசனின் தமக்கை அம்புஜவல்லி மாமியின் குரல்.
சிறுவயதிலேயே தன்கணவனை இழந்து பெண் குழந்தை ஒன்றோடு வீடு வந்தவர். தன் மகளையும் திருமணம் செய்து வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு தன் சகோதரனின் வீட்டில் ஆட்சி நடத்துபவர்.
சந்தானலட்சுமி ஒரு வாயில்லாப்பூச்சி கணவரின் அதிகாரப் பார்வைக்கும், அவர்தம் தமக்கையின் குத்தல் பேச்சுக்கும் பயந்தே கூட்டுக்குள் ஒடுங்கிப் போன ஒரு அப்பாவி குடும்பத்தலைவி.
குடும்ப கௌரவம் ஆச்சார அனுஷ்டானங்களை ஒரு பிரமணனாய் முறைதவறாது கடைபிடிப்பத்தாலும், தன் கற்ற கல்வி மற்றும் வேலையால் சீனிவாசனின் நடவடிக்கைகளில் நாகரீகம் மிளிரும்.
அரசு கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராய் பணியாற்றுபவர் சீனிவாசன். தன் மகள்களை ஆச்சாரத்தோடு வளர்த்தாலும் இன்றைய நாகரீகத்தோடு இணைத்தே வளர்த்தார். கல்லூரி இறுதியாண்டு படிக்கும் பொழுது ஜானவிக்கு அவள் கேட்காமலேயே கைபேசி வாங்கி கொடுத்தார். தன் பெண்களின் மேல் அலாதி பாசம் கொண்டவர். என்ன ஒன்று அதைக் காட்டத்தான் அவருக்கு தெரியாது.
காலை வேலைகளை மளமளவென முடித்துக் கொண்டு கல்லாரிக்கு கிளம்புவதற்குள் தன் தாய் மாமியிடம் வாங்கு ஏச்சுபேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்தவள் தன் தங்கையிடம்
"ஏன்டீ பாரு.. இந்த அப்பா கேட்க்கவே மாட்டாரா இதை. இந்த அத்தையோட அட்டகாசம் தாங்கல டீ.. இந்த அம்மாவும் தேமேன்னு இருக்கா... " என்று ஜானவி சலித்துக்கொள்ள
"நேக்கு மாப்ள பாக்கறச்சயே சொல்லிடுவேன்.. இந்த மாதிரி கெழகட்டைங்க இல்லாத வீடா பாருங்கோன்னு.." என்ற தங்கையிடம்
"அடிப்பாவி என்னடீ பேச்சு பேசுற, பெரிய மனிஷியாட்டமா பேசுற, வாய்லயே ஒன்னு போட்டேன்னா, காலேஜுக்கு நாழியாச்சு கெளம்பு போ.." என விரட்டியவளை
"போக்கா நான் செகன்ட் இயர் பிஎஸ்சி மேத்தமெடிக்கிஸ் படிக்கிறேனாக்கும், இன்னும் நா ஒன்னும் கொழந்த இல்ல.. போக்கா போய் அம்மா காலைக்கு பொங்கலும், மதியத்துக்கு புளியோதரையும் கெளறிருக்கா சாப்ட்டு கெளம்பலாம் இல்ல அதுக்கும் மாமிட்ட பாட்டு வாங்கனும்.." என்று கூறியவளின் காதை திருகியவாறே
"வாலு ஒன்னு தாண்டீ நோக்கு இல்ல இந்த வாயெல்லாம் வீட்ல தான் தெருமுனை தாண்டவே பயப்படுற உன்னையெல்லாம் என்ன செய்யறது சரி சரி கெளம்பு.." என்றவளை இடைமறித்த பார்க்கவி
"அக்கா அந்த மங்கூஸ்மண்டையன் நேத்து வர்றச்சயே வழிமறிச்சு வம்பு பண்ணான்க்கா.. இனி சாய்ங்காலம் வர்றச்சேயும் சேர்ந்தே வரலாங்கா" என்று கூறிய தங்கையிடம்,
அதற்குமேல் பேசிகொண்டிருந்தால் கல்லூரிக்கு நேரமாகிவிடும் என்று நினைத்தவாறே "சரி சரி சீக்கிரமா கிளம்பு போ" என்று விரட்டியவள் தானும் உண்டுவிட்டு தங்கயோடு கல்லூரி கிளம்பியவளை தடுத்து நிறுத்தியது அத்தையின் குரல்.
"ஏன்டீ ஜானு அந்த சல்மாவோட சவகாசத்த விடலயா நீ.. அவா வந்து வாசல்ல வெய்ட் பண்ணின்டு இருக்கா.. என்ன கருமத்தைல்லாம் திம்பாளோ அவாளோட நோக்கென்ன சவகாசம் வேண்டிகெடக்கு.." என்று கத்திய அத்தையின் பேச்சை காதில் வாங்காது வெளியேறி இருந்தனர் சகோதரிகள் இருவரும்.
முகவாட்டத்தோடு நின்றிருந்த தோழியின் தோளில் ஆறுதலாய் கைபோட்டபடி "அத்தையை விட்றீ சல்மா.. இன்னைக்கு உன் பொறந்தநாளு ஸ்பெஷல் ட்ரீட் வெச்சே ஆகனும்.. என்ன.." என்றவளின் அந்யோன்யத்தில் தானாய் முறுவல் பூத்தாள் சல்மா.
உம்மூ சல்மா ஜானவியின் பள்ளித் தோழி. பள்ளி கல்லூரி என எத்தனை நட்புகள் வந்தாலும், போனாலும் சல்மாவுடனான நட்பு மட்டுமே ஜானவியை தைரியமாக்கியது எனலாம்.
சிறுவயதில் பாட்டு கிளாஸிற்கும், வீணை கிளாஸிற்கும், நான்கு தெரு தள்ளி செல்லும் போது, இடையே அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் உம்மு சல்மாவின் வாப்பா( அப்பா)‌ சிறுவர்களுக்கு காராத்தே கற்றுக் கொடுப்பதை நின்று வேடிக்கை பார்ப்பாள். சல்மாவும் அவளை ஒத்த வயதுள்ள சிறுமிகளும், சிறுதும், பெரிதுமாய் பல வயதுள்ள பெண்களும் கராத்தே பழகுவதை பார்த்து ஆச்சர்யத்தில் வாய்பிளந்து நிற்பாள் ஜானவி. அப்படி நின்ற தோழியை கைபற்றி அழைத்து கராத்தே வகுப்பில் நிற்க வைத்தாள் சல்மா.
கூடுதலாய் ஒரு மணிநேரம் பாட்டு கிளாஸ் முடிந்து பாடிட்டு வர்றோம் என தன் அத்தையிடம் கதை கட்டிவிட்டு கராத்தே வகுப்பை தொடர்ந்த ஜானவி தன் தந்தையிடம் அனுமதி வாங்கி கராத்தே வகுப்பை தொடர்ந்தாள். ஆரம்பத்திலேயே அதில் நாட்டமில்லாத பார்கவி நடனவகுப்பிற்கு சென்றாள்.
ஜானவி கராத்தே, பாட்டு, வீணை, பரதம் மட்டுமல்ல சல்மாவின் வாப்பாவால் சிலம்பமும் கூட கற்றுத் தேர்ந்தாள். தன் மாமியின் எதிர்ப்பு இருந்தாலும் தந்தையின் பாசத்தால் அதை சாதித்துக் கொண்டாள்.
பேசியபடியே வழக்கம் போல் பேருந்தில் கல்லூரி நிறுத்தத்தில் இறங்க.. அங்கே நின்றிருந்த இருவரை பார்த்து தன்னிச்சையாய் பார்கவியின் கைகள் ஜானவியின் கைகளைப் பற்ற, அதில் தெரிந்த நடுக்கத்தில் ஜானவி துணுக்குற்றாள்.
அவர்களை கடந்து செல்கையில் அதிலொருவன் "ஏய் மாமி என்ன உங்க அக்கா கூட வந்தா உன்னை ஒன்னும் கேக்கமாட்டாங்களா.. நான் கேட்டதுக்கு பதில் சொல்ட்டு போடி" என்றவாறே பார்கவியின் துப்பாட்டாவின் பின்புறமிரண்டுயும் சேர்த்து பிடித்து கைகளில் சுருட்டி இழுக்க.. கழுத்து இறுக்கபட்டு பின்னால் விழப்போன பார்கவியை சட்டென சல்மா தாங்கிபிடிக்க
ஒரே எட்டில் துப்பட்டாவை பிடித்திருந்த கைகளின் மணிக்கட்டை தன் கைகளைக் கொண்டு காராத்தே ஸ்டைலில் ஒர் வெட்டு வெட்டிவிட மணிக்கட்டைப் பிடித்துகொண்டு அலறியவனின் வயற்றில் தன் கை முஷ்டியை இறுக்கி முரட்டுத்தனமாய் அடுத்த ஒரு குத்து விட நிமிரவே முடியாமல் சரிந்து விழுந்தது துடித்து அலறியவனை கூட பார்க்காமல் ஜானவியையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் மற்றவன்.
அதிரடி தொடரும்....
 
Top Bottom