Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மறும(ன)ம் - ஹரிணி ஶ்ரீகாந்த்

Harini

Member
Vannangal Writer
Messages
43
Reaction score
45
Points
18
"மித்திரன் என்ன டா பகல் கனவா இல்ல அவளை பற்றின நினைவா " ஒரு நக்கல் சிரிப்புடன் கேட்டான் சித்தார்த்தன் .

"ஹான் , இல்ல சித்து அவகிட்ட எப்படி சொல்ல, அதான் யோசிக்கிறேன் " , சொன்ன மித்திரன் குரலில் தீவிரம் இருந்தது .

"என்னமோ பள்ளிக்கூடம் போற பாப்பா பாரு காதல் சொல்ல பயப்படுற? 31 வயசானது ஞாபகம் இருக்கா இல்லையா ? "

"இல்ல டா , இவ மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல. எனக்கு அவள ரொம்ப புடிச்சிருக்கு . மித்த பொண்ணுங்கள சும்மா அம்மா சொன்னதுக்காக தான் பார்த்தேன்." , மித்திரன் முகத்தில் அப்பட்ட தவிப்பு இருந்தது .

"சரி விடு , நல்லதே நடக்கும் " , வெளியே நண்பனுக்காகச் சொன்னாலும் உள்ளே இவனுக்கு ஒரு நல்லது நடக்கவேண்டும் என்ற வேண்டுதல் இருந்தது சித்துவிற்கு.

"வாங்க சாரே , என்ன ஒரு அதிசயம் , என் கடைப் பக்கம் உங்க காத்து வீசுது ? போன்ல தானே பேசுவிங்க ? " அவனைப் பார்த்த சந்தோசம் அவள் முகம் எங்கும் தெரிந்தது.

"உன்ன நான் பாக்க வரக்கூடாத அனு ?" ஏக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது.

அவன் குரலா அது? மித்திரனுக்கே சந்தேகம் வந்தது .

"இல்ல சொல்லுங்க"

"அனு நான் நேரவே கேக்குறேன் , உனக்கு வீட்ல கல்யாணம் பேசுறாங்களா ? " அவள் கண்ணைப் பார்த்துக் கேட்டான்.

"ஆமா . உங்களுக்கு எப்படி.. ?"அனு முடிப்பதற்குள் அவன் தொடர்ந்தான்.

"எப்படின்னு கேக்காத . அதுக்கு முன்னாடி இத சொல்றேன் கேட்டுக்கோ. எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. உனக்கு என்ன பிடிச்சிருக்கா ? "

"பிடிச்சிருக்கு"

அவள் கண்களை ஊடுருவிய அவன் கண்களைத் தளராமல் பார்த்தாள் .

வெக்கம் அது இது என்று இழுத்தடிக்காமல் அவள் நேர்படப் பேசுவது அவனுக்குப் பிடித்தது.



அதன் பின்னர் எல்லோரும் போல ஏதேதோ பேசினார்கள் , சிரித்தார்கள்.

மித்திரன் தனி உலகத்திலிருந்தான்.

அவன் உல்லாசத்திற்கு முற்றுப் புள்ளியிட்டது சித்து தான் .

"மித்ரா நீ அவகிட்ட உன்ன பத்தி எல்லாம் சொல்லிட்டியா ? எனக்கு இல்லன்னு தோணுது. இது சரி இல்ல."

"சித்து என்ன பாத்தா அவள கழட்டி விடற மாதரியா உனக்கு தெரியுது ? "

"நீ கழட்டி விட மாட்ட மச்சி . உன்ன பத்தி தெரிஞ்சா .. "

"போதும் நிறுத்து சித்து. அவள பத்தி அப்படி தப்பா கூட நெனைக்காத. இன்னிக்கி நான் அவள வீட்டுக்கு கூட்டிட்டு போக போறேன்."

"சரி. ஏமாறாத . எல்லா பொண்ணுங்களும் ஒரு மாதிரி தான். எதுனாலும் எனக்கு சொல்லு."

அவன் அக்கறை மித்ரனுக்கு புரிந்தது , இருந்தும் அவளை பற்றி அவன் சொல்வதை ஏற்க முடியவில்லை.

"அனு , உனக்கு ரெண்டு அதிர்ச்சி காத்திருக்கு என் வீட்டுல. "

" என்ன மித்து இன்ப அதிர்ச்சியா ? "

"அது எனக்குச் சரியா தெரியல. ஒரு விஷயத்துல உனக்கு என் மேல கோவம் வரும் . ஆனா நீ என்ன புரிஞ்சிக்கோ , அது உன்ன காதலிக்கிறதால தான்".

"என்ன நங்குரம் மாதிரி நச்சுனு போடுதிய? " பேச்சிலிருந்த துள்ளல் முகத்தில் இல்லை.

வழி நெடுகிலும் மௌனம் தான்.

அவளுக்குத் தெரியும் அவன் மணமானவன் ! அவள் தோழி சொன்னது தான். அதைத் தான் சொல்லப் போகிறான்.

இருந்தும் மற்றது என்ன என்று நினைத்துக் குழம்பியது மனது. வீடும் வந்தது, அவன் மௌனத்தை உடைத்தான் .

" அனு மா , எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு... என் பொண்டாட்டி இறந்து இரண்டு வருஷம் ஆகுது. எனக்கு ஒரு பொண்ணு இருக்கா.... அக்ஷிதா , அவளுக்கு இப்போ நாலு வயசு. "

இதை அவள் எதிர் பார்க்கவில்லை. அது அவள் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. அவளது முகபாவனை அவனுக்கும் ஏமாற்றமே !

இவளை அக்ஷிதாவுடன் விட்டுவிட்டு , அவன் அறைக்குச் சென்றான். அவன் மனதைக் கட்டுப்படுத்த நேரம் தேவைப்பட்டது.

இவன் உள்ளே சென்று வருவதற்குள் அனு - அக்ஷி பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவன் பார்த்த காட்சி ஏதோ மனதிற்குச் சொல்ல, ஒன்றும் புரியாமல் இருந்தான். அவன் அம்மாவிற்கு அவளைப் பிடித்திருந்தது.

நேரமாயிற்று என்று அனுவை கிளம்பச் சொன்னான் .

இரண்டு தெரு தாண்டியதும் , அனு சொன்ன வார்த்தை அவனைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றது.

"நமக்கு இப்போ கல்யாணம் எதுக்கு ? தள்ளி போட்டுக்கலாமா மித்து ?"

"தள்ளி போடணுமா இல்ல நிறுத்திடனுமா ? சை நீ கூட எல்லார மாதிரி தான் ? "
"மித்து கத்தாதிங்க . நா சொல்றத கொஞ்சம் கேளுங்க !!"

"ஏண்டி பொண்டாட்டி செத்தவனுக்கெல்லாம் காதல் வரவே கூடாதா , இல்ல ஒரு பொண்ண பெத்தவனுக்கு காதல் வரக்கூடாதா ?"

சித்து காலையில் சொன்னது மட்டும் நினைவிருந்தது . அவள் குணம் மறந்திருந்தது.

இவன் பேசியதில் அவள் பொறுமையும் பறந்தது.

"நான் சொன்னேனா ? பொண்ணு பெத்தவருக்கு காதல் வரலாமா வேணாம்னு எனக்கு தெரியல . ஆனா பொறுப்பு வரணும். உங்களுக்கு அது இல்ல."

"என்ன பொறுப்பில்ல ? நான் உன்ன காதலிச்சேன் இல்லன்னு சொல்லல. ஆனா நீ அக்ஷிதாவுகும் நல்ல அம்மாவா இருப்பனு நெனச்சேன். "

"உங்க ஆசை உங்க விருப்பம் பத்தி சொல்றிங்களே ? " அவள் பேசுவதற்குள் அவன் இடை மரித்தான்.

"அப்போ உனக்கு என் மேல ஆசை இல்ல. விருப்பம் இல்ல ? "

அனுவிற்கு ஐயோ என்றிருந்தது.

" சரி. ஆமா. எனக்கும் விருப்பம்தான். நம்ம ஆசை பத்தி பேசுறிங்களே , அக்ஷு மனசு உங்களுக்குத் தெரியுமா ? அவளுக்கு அவ அம்மா இடத்துக்கு இன்னொருத்தர் வரது பிடிக்கலை . இது தெரியுமா ?"

"என்ன சொல்ற அனு ?"

"ஹப்பா , ரொம்ப சீக்கிரம் கேட்டிங்க. அக்ஷு என்கிட்ட பேசினப்போ உங்கள நான் அவகிட்ட இருந்து பிரிச்சிடுவேனு பயப்படறா . அதான், அவளுக்கு நான் அப்படி இல்ல , அவங்க அப்பாவுக்கு பொண்டாட்டியா இருக்கறத விட அவளுக்கு அம்மாவா இருக்க நெனைக்கிறேனு புரிய வைக்க நேரம் வேணும். அதான் கல்யாணத்த தள்ளி போட்டுக்கலாமா மித்துனு கேட்டேன் " .

இப்போது அவளுக்குக் கோபம் போயிருந்தது . அப்பாவை போன்ற பெண் என்று அக்ஷு என நினைத்து அவளுக்குப் புன்முறுவல் கொடுத்தது .

தன்னை விட அக்ஷுவை இவள் நன்றாகப் பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையில் , அவன் முகம் மலர்ந்தது. அவன் முகம் பார்த்த அவளுக்கும் தான்.
 
Top Bottom