Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மழை நடுவே தாயம்... சிறுகதை - ராம் ஸ்ரீதர்

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
176752003_10223298565586971_5071113554558701730_n.jpg



அன்று மாலை வழக்கமான நேரத்திற்கு முன்னாலேயே இருட்டிக் கொண்டு மின்னல் எல்லாம் வெட்டிக் கொண்டு ஒரே அமர்க்களமாக இருந்தது.


மழை வந்தால் சரி என்று நினைத்துக்கொண்டு பாஸ்கருக்கு, தன் தந்தைக்கு ஃபோன் செய்து பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் அவர் நம்பரை ஒத்தினான்.


ஏகப்பட்ட கரகரப்பு....."நான் வந்துகிட்டு இருக்கேன்..." என்று சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார் கோபிநாத்.

முதல் நாள் படிக்காமல் விட்டுப் போன பாக்கியைப் படித்து விடலாம் என்று சுஜாதா எழுதிய காயத்ரி புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டான். படித்து முடித்துவிட்டு படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டான்.


வெளியே கார் நிற்கும் சப்தம் கேட்டது. மழையில் நனைந்து கொண்டே உள்ளே வந்தார் கோபிநாத். "பாஸ்கி, வழி பூரா ஒரே மழை, சகதி, ஊதக் காத்து வேற....சரி ராத்திரி என்ன சாப்பிடற?: என்றார்.


பாஸ்கருக்கு அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. அம்மா போனபிறகு, சிங்கப்பூரில் வேலை கிடைத்து பாஸ்கரும் அங்கு போன பின் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகத் தனியாகத்தான் இருக்கிறார்.


பாஸ்கரின் அக்கா புவனா அருகில் இருந்தாலே வர யோசிப்பாள். இரண்டு பெண் குழந்தைகள், பம்பாயில் வேறு வாசம். அவள் கணவன் பரத், வாயைத் திறந்தாலே 'நான் பிஸி' என்றுதான் ஆரம்பிப்பான். எனவே அவள் வந்து செல்வதும் மிகக் குறைந்துவிட்டது.


"ஒண்ணும் கஷ்டப்பட வேண்டாம்ப்பா. ஸோமாட்டோவில் ஏதாவது சொல்லிக்கலாம்" என்றான் ஸோமாட்டோ ஆப் -ஐ நோண்டியபடி.


"எனக்கு ஒரு கஷ்டமும் இல்லப்பா, அவனுங்க இந்த மாதிரி மழைல வருவாங்களாகறது டௌட் பா" என்றார்.


"வருவங்கப்பா. கொஞ்ச நேரம் ஆகட்டும். டைம் இப்போ என்ன ஆறரைதானே" என்றான் பாஸ்கர்.


எட்டு மணிக்கு பன்னீர் புலாவ் மற்றும் ஸ்டஃப்டு பராத்தாவை ஆர்டர் செய்தான் பாஸ்கர். கூடவே இரண்டு லஸ்ஸியையும் சொன்னான். இரவு சாப்பிட்ட பின் மோர் சாப்பிடுவது தந்தையின் வழக்கம் என்பது தெரியும் அவனுக்கு.


ஒரு வழியாக ஸோமாட்டோ ஆள் விடாத மழையிலும் வந்து பாஸ்கர் ஆர்டர் செய்ததைக் கொடுத்துவிட்டு சென்ற பிறகு, சாப்பிட்டுக் கொண்டே பாஸ்கர், அவன் தந்தையிடம் மெதுவாகக் கேட்டான், "என்னப்பா, வர்ற வழில ஏதாவது பிரச்சினையா?"


சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து, "இல்லைப்பா, வர்ற வழில வயசான கிழவியைப் பார்த்தேன். கொறஞ்ச பட்சம் 80 வயசாவது இருக்கும். அந்த அடைமழைல என்ன பண்றதுன்னு தெரியாம, நடக்கவே முடியாம நடந்து வந்துகிட்டு இருந்துச்சு. பக்கத்தில் சென்று, மெதுவாக காரை நிறுத்தி,


“பெரியம்மா, இந்த மழையில எங்க போறீங்க? வாங்க, நான் இறக்கி விடறேன்” என்று சொன்னேன். “


நான் சொன்னது அவங்களுக்கு புரியவே பத்து நிமிஷம் ஆச்சு. பிறகு, ஒரு மாதிரி காரின் முன் சீட்டில் ஏற்றிக்கொண்டு அதிகபட்சம் அரை கிலோமீட்டர் வந்திருப்பேன். அந்த பெரியம்மா ரொம்பவும் ரெஸ்ட்லெஸ்-ஆ வந்தாங்க. காரில் உட்காரவே இருப்புக் கொள்ளவில்லை.


இதுல, இன்னொரு காமெடி என்னன்னா வர்ற வழியில, அந்த கொட்டுற மழையில, நாலு ரோடும் மீட் பண்ற இடத்துல ரெண்டு இளைஞர்கள், கருப்பு போட்டுக்கிட்டு நடு ரோடுல தாயம் விளையாடிக்கிட்டு இருந்தாங்க....."


குறுக்கே இடைமறித்தான் பாஸ்கர், "அந்த மழைல தாயமா, என்னாப்பா, இது?" என்றான் திகைப்பாக.


"ஆமாப்பா, எனக்கும் ஆச்சரியமாதான் இருந்தது. ஆனா, க்ளியரா பாத்தேன் . இரண்டு பேரும் கொஞ்சம் பெரிய சைஸ் வெள்ளக்கலர் டைஸ்ஸை (DICE) வெச்சுக்கிட்டு விளயாடிக்கிட்டு இருந்தாங்க. அவங்க பக்கத்துல வந்து காரை நிறுத்தி வழிகேட்டு ஹார்ன் அடிக்கும்போதுதான் கவனிச்சேன். ஒத்தன் வாயில சுருட்டு பொகஞ்சுகிட்டு இருக்கு....."


பாஸ்கர் நெர்வஸாக சிரித்தான். "என்னப்பா, எதோ திகில் சினிமால வர்ற மாதிரி சொல்றீங்க"


"எனக்கும் அப்பிடிதாம்பா இருந்தது. அந்த அடை மழைல அவங்களுக்கு அவ்வளவு சீரியஸா என்ன தாயக்கட்டம் உருட்டி விளையாட்டு.....? ஒருத்தன் தலைல கறுப்புத் தொப்பி, இன்னொருத்தன் தலைல வெள்ளத் தொப்பி....அந்த ரோட்டுல நடு மத்தியில எதுக்காகவோ குழி தோண்டிட்டு, பிறகு தற்காலிகமா அதுமேல ஒரு தகர ஷீட் போட்டு மூடியிருக்காங்க...ஒவ்வொரு முறை அந்த ஷீட் மேல டைஸ் உருளும்போதும் அவ்வளவு சத்தம் ....மழையையும் மீறி....."


பாஸ்கர் சிரித்தான், "யாராவது ரோடு வேலை பார்க்க வந்துட்டு, வேலை நடுவுல மழை வந்ததால வேலை செய்றதை நிறுத்திட்டு கொஞ்சம் நேரம் - மழை நிக்கற வரைக்கும் - விளையாடலாமேன்னு விளையாடியிருக்கலாம்..."


"இல்லைப்பா, அந்த ராட்சஸ மழைல நிச்சயம் எல்லோரும் ஓடித்தான் ஒளிஞ்சுப்பாங்க.... இவன்க ரொம்ப ஆச்சரியப் பிறவிங்கன்னு நினைக்கிறேன்....சரி அதைவிடு....அந்த இடத்தைத் தாண்டி ஒரு அரை கிலோமீட்டர் வர்ரதுக்குள்ள அந்தக் கிழவி 'நான் வீட்டுக்குப் போறேன்…..நிறுத்து' ன்னு ஒரு பத்து தடவை சொல்லியிருப்பா...".


"நான் சீரியஸா 'பெரியம்மா, இங்க பஸ் ஸ்டாப் எதுவும் கிடையாது, இன்னும் கொஞ்ச தூரம் போனா ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கு, அங்க எனக்குத் தெரிஞ்ச ஒரு ஆட்டோக்காரர் இருக்காரு....அங்க நிறுத்தி உங்களை இறக்கி விடறேன்' னு சொன்னேன்....அந்த கிழவி அழற மாதிரி ஆயிடுச்சு....'வேண்டாம், இங்கேயே இறக்கு' ன்னு கத்த ஆரம்பிக்கவே, இறக்கி விட்டுட்டேன்....என்னோட குடையையாவது எடுத்துக்கிட்டு போ பெரியம்மான்னு சொன்னேன்....காதுல வாங்கிக்கவே இல்லை.... தடுமாறி, தடுமாறி நடந்து போய்டுச்சு....அது கண்ணம்மா பேட்ட போற ரோடு...அந்த நேரத்துல அங்க என்ன வேலையோ..."


"விடுங்கப்பா...ஏதாவது லூசுக் கிழவியா இருக்கும்...."


"ஆமாம், நானும் அதையேதான் நெனச்சேன் ....ஆனா, அவ்வளவு மழைல அந்த மாதிரி விட்டுட்டு வர கஷ்டமா இருந்துச்சு....."


======================


காலையில், மழை ஒரு மாதிரி நின்றிருந்தாலும் வானம் மேக மூட்டமாகவே இருந்தது. அப்பாவுக்கு அன்று விடுமுறை என்பதால், பாஸ்கர் தன் அப்பாவுக்குப் பிடித்த கோத்தாஸ் காஃபியைப் பருகியபடி புத்தக அலமாரியிருந்த கருட புராணம் தமிழ் பதிப்பைப் புரட்டினான்....


அந்நியனில் சுஜாதாவின் வசனத்தில் அடிக்கடி வந்ததால் ஒரு புத்தகக் காட்சியில் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து அவன் அம்மாவிடம் சரியாக டோஸ் வாங்கியது நினைவுக்கு வந்தது,


"பாஸ்கி, என்ன பயித்தியக்காரத்தனம் இது, இதுலாம் வீட்ல யாராவது போய்ட்டா படிக்கறதுடா...." என்று ஆரம்பித்து நிறைய மறுத்தாதால் புத்தக அலமாரியில் ஒரு ஓரத்தில் அம்மா கண்ணில் படாமல் வைத்துவிட்டான்....


அதை இவ்வளவு நாட்கள் கழித்து எடுத்துப் புரட்டியவன், நடுவில் ஒரு பக்கத்தில் படிக்க ஆரம்பித்து திகைத்துப் போனான் ......


'பொதுவாக தற்கொலை செய்து கொள்பவர்களின் ஆன்மா உடனே மேலே போகாது....சொர்க்கமா, நரகமா என்பது முடிவாகும் வரை இங்கே, இந்த பூவுலகில், பூத உடலுடன் சுற்றி வருவார்கள்... வீட்டுக்குப் போக வேண்டும் என்ற ஒரே வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள்.....


சில சமயம் எம படர்கள் தாயம் போட்டுப் பார்த்து, இறந்து போனவர்கள் உயிருடன் இருந்த போது செய்த பாவ புண்ணியங்களை கணக்கு பார்த்து, அந்த ஆன்மாவுக்கு சொர்க்கமா அல்லது நரகமா என்று நிர்ணையம் செய்வார்கள்......


நாற்சந்தியில்,வெள்ளையும், கறுப்பும் கலந்த தாயக் கட்டையை உருட்டும் அவர்களும் அதுபோலவே வெள்ளையும், கறுப்புமாக உடையணிந்திருப்பார்கள் என்றும் சொல்லப்படுவது உண்டு".
 
Top Bottom