3....
நேற்று நடந்தது குழப்பமாகவே இருந்தது. நேற்று அதிகாலை பீச்சுக்கு போனேன். ஆனால் வீடு திரும்ப இரவாகியிருந்தது. போய் சாப்பிட்டு நன்றாக போர்த்து படுத்துக்கொண்டேன். ஒரு முழு நாளா அங்கே இருந்தோம் என்று தடுமாற்றம் ஏற்பட்டது. நான் தனியாக இருந்த போது பயம் இருந்தாலும், ஐந்து பேர் சேர, கொஞ்சம் தைரியம் வந்தது.
வகுப்பறையில் தனித்தனியாக இருந்தாலும் எங்கள் மனம் ஒரேபோல் சிந்தித்தது. திரும்பிதிரும்பி பார்த்து கள்ளச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தோம். பள்ளி எப்போது முடியும் என்று காத்திருந்து , அவசர அவசரமாக கிளம்பினோம்.
சாயந்திரம் அதே இடத்தில் நாங்கள் குழுமினோம். பிரகதி எங்கள் கைகளில் ஒரு கறுப்பு நிற கயிறை கட்டினாள். சாமி படத்துக்கு முன் வைத்து எடுத்ததாம். ஷகீல் மட்டும் அதை வாங்கி பாக்கட்டில் வைத்துக்கொண்டான். அவர்கள் வீட்டில் பார்த்தால் திட்டுவார்கள். அனைவரும் கடலை பார்த்தபடி உட்கார்ந்திருந்தோம். ஏதும் வெளிச்சம் வரும் அறிகுறிகூட இல்லை.
“என்ன உருவம் நினைச்சீங்க…?” என்றான் ஷகீல்.
“வந்து…. நான் நம்ம கிளாஸ்ல இருந்து போனவருஷம் உடம்பு சரியில்லாம இறந்துட்டானே.. ஜீவா, அவனை நினைச்சேன்” என்றாள் பிரகதி.
“நானும்தான் “ என்றான் ஜோசப்.
உண்மையில் என் மனதிலும் அவன் உருவம்தான் தோன்றியது. அவன் ரொம்ப நல்ல பையன். சாது. அதிகம் பேசமாட்டான். ஆனால் படிப்பில் வெகு சுட்டி. ஏதோ இதயத்தில் பிரச்சினை என்றும் மிக செலவாகும் என்றும் பேச்சு இருந்தது. கடைசிநாள் வரை வகுப்புக்கு வந்துகொண்டிருந்தான். படித்து டாக்டர் ஆகி இதுபோல இருப்பவர்களுக்கு இலவச ஆஸ்பிடல் கட்டுவேனென்று அடிக்கடி சொல்லுவான். ஆஸ்பிடலில் மிகவும் செலவாகியிருக்கும் போல. அவர்கள் கொஞ்சம் கஷ்டப்படும் குடும்பம்தான். முடிந்தவரை அவன் அப்பா முயற்சித்தார். மயக்கம் தெளியாமலேயே இறந்துவிட்டான். இன்று சொல்லிவைத்தார்போல் அவன் ஞாபகம் எங்கள் எல்லோருக்குமே வந்தது அதிசயமாக இருந்தது.
“சரி… எல்லாரும் அவனையே நினைச்சாச்சு.. வருமா பாக்கலாம்..” என்றான் ஷகீல்.
“எனக்கு இது எல்லாமே நம்ம கற்பனையோன்னு தோணுது. ஏதாவது படம் பாத்தோமா நேத்து. அது பாத்து கற்பனை பன்ணிட்டோமான்னு நினைக்கிறேன்..” என்றேன் நான்.
“நானும் அப்படிதான் நினைக்கிறேன் “ என்று எங்கள் பின்புறம் இருந்து குரல் கேட்க, திடுக்கிட்டு திரும்பினோம். அதிர்ந்து போனோம்.
அங்கே ஜீவா இருந்தான். போனவருஷம் பார்த்த அதே ஜீவா. அதிர்ச்சியில் பிரமித்து இருக்க, பிரகதி ஜீவாவின் கால்களில் விழுந்து வணங்கினாள்.
“ சாமி… உங்களை தப்பா நினைச்சிட்டோம்… மன்னிச்சு எங்களுக்கு நல்ல படிப்பு குடுங்க….” என்றாள் அவள். ஜீவா வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான்.
“உங்களுக்கு எல்லாம் ஏதாவது கம்பேர் பண்ணியே பழக்கமாச்சு… இல்லியா…” என்றான் ஜீவா.
நாங்கள் திருதிருவென்று முழிக்க,
“ஒரு விஷயம் பார்த்தா அதை ஏற்கனவே நம்ம மனதில் பதிச்சு வச்சிருக்கிற ஏதாவது ஒரு சம்பவமோ இல்லைனா, கற்பனையோ அதுகூட சம்மந்தபடுத்தி பாக்கறது. நேத்து உங்களை சந்திக்க கொஞ்சம் ஆர்ப்பாட்டமா வந்திட்டேன். உடனே இது உங்க கற்பனையில் இப்படிதான் இருக்கும்னு முடிவு பண்ணிடறீங்க…” என்று சிரித்தபடியே ஜீவா சொல்ல,
“அப்ப நீ…. வந்து… நீங்க யாரு….” என்று மெதுவாக கேட்டான் ஜோசப்.
“அது ரகசியம்… ரகசியம்கூட சரியான வார்த்தை இல்லை. குழம்பிடுவீங்க. நான் உங்களைபோல் ஒரு ஜீவன்தான்… அதான் ஜீவா வா வந்திட்டேன்…” என்று ஏதோ பெரிய நகைச்சுவை சொன்னது போல சிரித்தான் ஜீவா. நாங்கள் சிரிக்காமல் இருக்க, கொஞ்சம் ஓவராக போனதாய் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.
“எங்களை ஏன் சந்திக்கணும்.. ஏதாவது எங்களுக்கு முக்கியத்துவம் இருக்கா….?”என்றேன் நான். எனக்கு அவன் ஜீவாவாக இருக்க கொஞ்சம் தைரியம் வந்திருந்தது.
“அதெல்லாம் அப்புறம் சொல்றேன். முதலில் உங்களுக்கு கொஞ்சம் தைரியம், நம்பிக்கை வரணும். என்னோட பழக உங்களுக்கு மனசில இருக்கிற பயம் போகணும். அதுதான் என் முதல் வேலை . உங்க ஆசை ஏதாவது இருந்தா சொல்லுங்க” என்றான் ஜீவா. அவன் முகத்தில் அந்த மர்மபுன்னகை அப்படியே பதிந்து இருக்கும் போல. அது எங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுத்தது.
“நாங்க ஒண்ணும் பயப்படலை. திடீர்னு ஒரு … பே…..ய்… மாதிரி வந்தா நீயும்தான் பயப்படுவ….” என்றான் ஷகீல். அவன் கைகளில் நேற்றைய தினம் இருந்த பயத்தின் மெல்லிய நடுக்கம் இன்னும் குறையாமல் இருப்பதை ஓரக்கண்ணால் பார்த்து ஜீவா மெல்லிய சிரிப்புடன் தொடர்ந்தான்.
“ ஹாஹா….. தெரியுது ஷகீல் பையா… நீ ரொம்ப தைரியசாலிதான். நேத்துபிரகதி கையை எவ்வளவு பயமா பிடிச்சிருந்தன்னு பாத்தேனே… இப்பயும் உன் பாக்கட்டில் அவ கொடுத்த கறுப்பு கயிறை யாருக்கும் தெரியாம தொட்டு தொட்டு பாத்துக்கறியே… ஹாஹா…..” என்று சிரித்தான். கறுப்பு கயிறு கொடுத்தது இவனுக்கு எப்படி தெரியும் என்று வியப்பு ஏற்பட்டாலும், இவனின் சக்தி எங்களை மீறியது என்பது எனக்கு புரிந்தது. அவன் மேலும் தொடர்ந்தான்.
“ நான் ஏற்கனவே சொன்னதுதான். ஒரு குழந்தை என்னை பார்த்தால், அது நான் வந்த விதத்தை ரசிக்கும், என்னோட விளையாடும். சிரிக்கும். அதுக்கு பயம் கிடையாது. புதிய விஷயங்களை ஆர்வமாக பார்க்கும். ஆனா நீங்க கொஞ்சம் வளர்ந்துட்டீங்க. உங்க மனசில் சில விஷயங்கள் பதிச்சிட்டீங்க. அதை ஒப்பிட்டு என்னை அளக்க நினைக்கறீங்க. அது இல்லாமல் புதுசா உங்களால யோசிக்க முடியல. அதில்லாம இன்னும் பெரிய ஆளா ஆகிட்டா, இன்னும் பல விஷயங்கள் உங்களுக்கு பதியும். இன்னும் வேலை, குடும்பம்னு மாற உங்களுக்கு புதிதாக எதையும் கற்றுக்கொள்ள, யோசிக்கவே முடியாது. உங்க மனசு அது தாண்டி போக முடியாது. இப்ப கொஞ்சம் குழந்தைத்தனம் மீதி இருப்பதால்தான் என்னை மறுபடி சந்திக்கணும்னு வந்திருக்கீங்க. இதுவே உங்க அப்பாக்கள் முன்னால் வந்திருந்தா இன்னேரம், கோயில் மசூதி, சர்ச்னு போய் நடுக்கமா வேண்டிட்டிருப்பாங்க….”
“அது தப்பா….” என்றான் ஜோசப்.
“தப்பில்ல… மனிதருக்கு ஏதாவது ஒரு நம்பிக்கை தேவைப்படுது. சில பயங்களை, எதிர்பார்ப்பை கொண்டுபோய் கொட்டிட்டு, நிம்மதியா இருக்க அது உதவியா இருக்கு. அதுக்கு ஒவ்வொருவரும் ஒரு வழி வச்சிக்கறாங்க..... ம்..ம்… நீங்களே பாருங்க… பிரகதி கொடுத்த ஒரு கறுப்பு கயிறு இல்லன்னா இன்னும் உங்களுக்கு பயம் வந்திருக்கும்.”
“நான் காலைல ஏசுவை நினைச்சுட்டுதான் வந்தேன். எனக்கு கயிறு தேவையில்லை…இதோ ஷகீலும் அவங்க சாமிட்ட ப்ரே பன்ணிட்டுதான் வந்திருக்கான்…” என்றான் ஜோசப்.
“ஆமா… நானும்தான் “ என்றேன் நான்.
“எல்லாம் சரி…. இதுல யாருக்கு பவர் அதிகம்? “ என்றான் ஜீவா.
“ வந்து… எல்லாருமே பவர்தான்… சிலதுக்கு ஜீசஸ் சக்தி தருவார். சில நேரம், எங்க அம்மன் பாதுகாக்கும். அவங்கவங்க எப்பப்ப வரணுமோ அப்ப வருவாங்க.” என்றாள் ரம்யா.
“ ஆனா, அவங்க உங்க கூடயேதான் இருக்காங்கன்னு உங்களுக்கு தோணலையா… அப்பப்ப வர அவங்க என்ன ஜாப்லயா இருக்காங்க?” என்று ஜீவா கேட்க, அவன் கேட்ட தொனியை கண்டு நாங்கள் சிரித்துவிட்டோம்.
“ இதான்… இந்த சிரிப்பின் காலம்தான் உங்களை பார்க்க சரியான நேரம். அதான் வந்தேன். பெரியவங்களாயிட்டா, இந்த சிரிப்பும் போயிடும். இன்னேரம், எங்க சாமிதான் பெரிசுன்னு ஆரம்பிச்சிருப்பீங்க. உண்மையில் அந்த சக்தி என்பது எங்கயும் இல்லை. உங்க மனசுதான். உலகையே படைத்த சாமின்னு சொல்வீங்க. சில சாமிகள் சில எல்லைகளையே தாண்டறது இல்லை. பிரபஞ்சம் வரை ஒரே நாள்ல படைச்சார்னு பேசுவீங்க. ஆனா பக்கத்து நாட்ல இருக்கற மனிதனை சாமி எதிரியா பாக்க சொல்லுதுனு பேசுவாங்க. வேடிக்கையா இல்ல?”
“எங்களுக்கு புரியலை…. “ என்றேன் நான்.
“ சொன்னதை மனசில் வச்சிக்கோ. கொஞ்ச நாள் ஆனா புரியும். எது உண்மைன்னு. எல்லா சக்தியும் உங்க மனசுதான். அது உருவாக்கறதுதான் அத்தனை சாமியும், பூதங்களும். ஒரு குழந்தைக்கு, மிருகங்களுக்கு, பறவைகளுக்கு மீனுக்கு, உன் கையில் இருக்கற பேனாவுக்கு இந்த பயமோ, நம்பிக்கையோ தேவைப்படறதில்ல. அது வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு அனுபவிக்கிறாங்க. இது புரிய கொஞ்சம் நாளாகணும்."
“ குழப்பமாதான் இருக்கு. இப்ப நாங்க என்ன செய்யறது…” என்றாள் ரம்யா.
“குழப்பத்தை தூக்கி சின்னதா ஒரு குழிதோண்டி இப்போதைக்கு புதைச்சு வைங்க. அது ஒரு பக்கம் கிடக்கட்டும். இந்த நிமிடம், என்ன ஆசைன்னு சொல்லுங்க. அவ்ளோதான்.” என்றான் ஜீவா.
“எனக்கு பசிக்குது… ஏதாவது சாப்பிட்டே பேசலாமே….” என்றான் ஜோசப். அவன் பசி தாங்கமாட்டான். எப்போதும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பான்.
“ ஆமா, நம்ம ஐயங்கார் பேக்கரில கேக் சாப்பிடலாமா… “ என்றாள் ரம்யா.
“எனக்கு சூடா ஸமோசா…” என்றான் ஷகீல்.
“ ஆனா நான் காசு எடுத்து வரலையே “ என்றாள் பிரகதி. பெரும்பாலும் அவள்தான் அதிகமாக வங்கிதருவாள். அவளின் பாக்கட் மணி தினமும் இருபது ரூபாயாவது இருக்கும். இன்று ஜீவா வேறு இருக்க, அவன் எவ்வளவு சாப்பிடுவானோ என்ற பயமும் அவளுக்கு வந்துவிட்டது.
“சரி… முதலில் சாப்பிட போலாம்… எழுந்திருங்க…. “ என்று ஜீவா எழுந்தான். அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் மணலில் தடமே இல்லை என்பதை நான் கவனித்தேன். மனதில் அடங்கி இருந்த பயத்தை, இப்போது தோன்றிய ஆர்வம் அடக்கிவிட்டதையும் கவனித்தேன். ஜீவா சொன்னதுபோல், புதியதை கவனித்து ரசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று தோன்றியது. நாங்கள் அனைவரும் எழ, எங்களை கைகளை கோர்த்துக்கொள்ளச்சொன்னான். கண்களை மூடச்சொன்னான். அடுத்த நொடி என்ன நிகழ்ந்தது என்று எனக்கு சொல்லத்தெரியவில்லை. அது ஒரு பரவச நிலை போல் இருந்தது. கண்களை திறக்க முடியவில்லை. ஏதோ பறப்பதுபோல் இருந்தது. ஒரு சில விநாடிகள்தான். மெதுவாக கண்களை திறக்க, நாங்கள் ஐயங்கார் பேக்கரியின் உள்ளே இருந்தோம்.
***********
ஐயங்கார் பேக்கரி என்பது எங்களுக்கு கனவுப்பிரதேசம். என் அப்பா ஒரு நகராட்சி ஊழியர். ஜோசப்பின் அப்பா ஒரு ஏஜென்சியில் கணக்கு எழுதுவார். ரம்யாவின் அம்மாவும், அப்பாவும் கிழங்குமில்லில் வேலைக்கு போகிறார்கள். அடிக்கடி, சீவிய வரவள்ளிக்கிழங்கோ, அல்லது வேகவைத்தோ, அவள் கொண்டுவருவாள். நசூரின் தந்தைக்கு சின்ன மளிகை கடை உள்ளது. சிலநேரம் அவன் கடையில் இருந்து பிஸ்கட்டுகள் அல்லது சின்ன சின்ன மிட்டாய்களை அப்பாவிடம் கேட்டு எடுத்து வருவான். பிரகதிதான் கொஞ்சம் வசதி. அவளின் அப்பா மின்சாரத்துறையில் லைன்மேனாக இருப்பவர், ஆனாலும் அவர்களின் பூர்வீக வீடுகளின் வாடகை மூலம் நல்ல வருமானம் உண்டு. எங்களின் பெரும்பாலான தீனி செலவுகளைஅவள்தான் பார்த்துக்கொள்வாள். அவரவர் வீட்டில் இருந்துதான் ஸ்னாக்ஸ் எடுத்து வருவோம். தினப்படி கிடைக்கும் பாக்கட் மணியை செலவு செய்யாமல் எடுத்து வைத்து, வார இறுதி நாளிலோ அல்லது லீவிலோ இந்த பேக்கரிக்கு வருவோம். ஏதாவது குறிப்பிட்ட இனிப்பு கார வகை, ஒரு ஜூஸ், அல்லது ஐஸ்க்ரீம் உடன் அன்றைய பொழுது கழியும். அடுத்த வாரம் என்ன வாங்கலாம் என்று திட்டமிடுவோம். கண்கள் அங்கு அழகாக அடுக்கியிருக்கும் இனிப்புகளை அளந்து வைக்கும். சிலவற்றை விலை கேட்க, மயக்கம் வரும். முந்திரி கேக் வாங்கித்தின்ன வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஒரு தடவை ஊரில் இருந்து வந்திருந்த ஒரு அண்ணா வாங்கிவந்திருந்தார். என் பங்காக கொஞ்சமாக தான் கிடைத்தது. ஆனால் அது நூறுகிராமே ஐம்பது ரூபாயோ என்னவோ. அது போல அவரவர்க்கும் சின்னசின்ன ஆசைகள். பெரியனாகி இதுபோல் ஒரு பேக்கரி திறந்து முழுதும் நாம் சாப்பிடவே வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஜோசப் சொல்லுவான்.
“ஜீவா… இது என்ன மாயம்… எப்படி கண்மூடி கண் திறக்க இங்க வந்தோம்…? “ என்றாள் ரம்யா.
“ எனக்கு கொஞ்சம் மாயாஜாலமும் தெரியுமில்ல…” என்று கண்ணை சிமிட்டினான் ஜீவா. அதை கேட்டதும் ஜோசப் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தான். சரியான டான்ஸ். குதித்து குதித்து ஆடினான். அவனால் அதை நிறுத்தவே முடியவில்லை. எங்களுக்கு வெட்கமாக போய்விட்டது.
“ டேய்… நிறுத்துடா…. எல்லாரும் பாக்க போறங்க….” என்றேன்.
“ ஆடட்டும் விடு… யாரும் பாக்கலை” என்றான் ஜீவா. அப்போதுதான் கவனித்தேன். அங்கே நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள், இனிப்புகளை வாங்கிக்கொண்டிருந்தவர்கள் அத்துடன் கடைக்கார ஊழியர்கள் என்று யாருமே எங்களை கவனிக்கவில்லை. அவரவர் அவர்களது வேலையில் கவனமாக இருந்தார்கள். நாங்கள் யார் கண்ணிலும் படாமல் மறைந்து இருப்பது புரிந்தது. நம்பமுடியாமல் ஜீவாவை பார்க்க, அவன் எப்போதும் போல அந்த மர்மபுன்னகையை வீசினான்.
யாரும் கவனிக்கவில்லை என்றவுடன், ஜோசப்புக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. நேராக லட்டு இருக்கும் இடத்துக்கு போனான். ஒரு நான்கைந்து லட்டுகளை எடுத்துக்கொண்டு அருகில் காலியாக இருந்த சேரில் உட்கார்ந்து அவன் பாட்டுக்கு சாப்பிட ஆரம்பித்தான். திடீரென்று என்ன தோன்றியதோ ஜீவாவை பார்த்து அனுமதி கேட்பதுபோல பார்வையால் கேட்க, ஜீவா தன் கையால் சைகை காட்ட, ஜோசப் திருப்தியாக வாய் நிறைய திணித்துக்கொண்டான். நான் நேராக முந்திரி கேக் இருந்த இடத்துக்கு ஓடினேன். அழகழகாய் அடுக்கி வைத்திருந்தது. அதிலிருந்து அப்படியே அள்ளி அங்கே நின்றபடியே சாப்பிட ஆரம்பித்தேன். ஷகீல் அந்தப்பக்கம் சென்று சமோசாவில் ஆரம்பித்தான். அது அவனுக்கு ரொம்ப பிடிக்கும். ரம்யா ஐஸ்க்ரீம் இருந்த குளிர்பெட்டியை திறந்தாள். கலர்கலராக இருந்த ஐஸ் குச்சிகள், சில கேக் வகை ஐஸ்க்ரீம்கள், அப்புறம் ப்ளாக் ஃபாரஸ்ட் ஒரு டப்பா எல்லாம் எடுத்து அருகில் இருந்த ஒரு ட்ரேயில் அடுக்கி அள்ளிவந்தாள். அதை ஒரு டேபிளில் வைத்துவிட்டு மறுபடி ஓடினாள். என்னவென்று நான் பார்க்க, என்னை அருகில் கூப்பிட்டு காட்டினாள். அந்த குளிர்சாதன பெட்டியில் ஒரு பாதி நிறைய சாக்லேட்டுகள். வகைவகையாக, விதவித வடிவில். சிலது மிகவும் விலை அதிகம். நாங்கள் இருவரும் சேர்ந்து இன்னமும் அள்ளிக்கொண்டு அந்த டேபிளில் ஒதுங்கினோம். பாதி தின்றவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு அலமாரியில் அடுக்கி இருந்த ஜிலேபி, மைசூர்பா பக்கம் திரும்பினோம். ஜோசப் இன்னொரு பக்கம் லட்டை பாதியிலேயே விட்டுவிட்டு வட இந்திய இனிப்புகளான மில்க் ஸ்வீட்களை அள்ளிக்கொண்டிருந்தான்.
பிரகதியை காணாததை நான்தான் கண்டுபிடித்தேன். ரம்யாவிடம் கேட்க, அவளும் நானும் எழுந்து பிரகதியை தேடினோம். அவள் ஜீவாவின் பின்புறம் நின்று எங்கள் எல்லோரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
நாங்கள் கைகாட்டி கூப்பிட, அவள் வரவில்லை. நான் எழுந்து சென்றேன்.
“ஏன்பா… வா… வந்து ஜாலியா சாப்டு….”
“போடா… இவ்வளவு பேர் இருக்காங்க… கூச்சமா இருக்கு.”
“ அட…. இப்ப பாரு….” என்ற நான் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஒரு அண்ணாவின் முன் தட்டில் இருந்த ஒரு பப்ஸை எடுத்து வந்தேன். அந்த அண்ணா வுக்கு இது எதுவுமே தெரியவில்லை. அதை பிரகதி இன்னும் ஆச்சரியமாக பார்த்தாளே தவிர வரவில்லை. நான் செய்ததை பார்த்து, ஜோசப்புக்கு இன்னும் ஜாலியாகிவிட்டது. அங்கே அலமாரியில் இருந்த ஒரு பெரிய கேக்கை எடுத்து கவுண்ட்டரின் நடுவில் இருந்த ஒரு ஊழியரின் தலைமேல் கவிழ்த்தான். அது க்ரீம் கேக் வேறு. அந்த ஊழியரின் முகமெல்லம் வழிந்தது. உடையெல்லாம் கேக்கின் சிதறல்கள். அவர் அதை சட்டை செய்யாமல் நடந்து ஓடி… வியாபாரத்தை கவனிக்க எங்களுக்கு ஒரே வேடிக்கையாக இருந்தது.
“ஏன்… ஜோசப்…. பாவம்பா….” என்றான் ஷகீல்.
“போடா… போனவாரம் நான் வந்தப்ப இந்தாள் என்னை திட்டிட்டான். அதான் பழிக்குப்பழி… வஞ்சத்துக்கு வஞ்சம்….” என்று சொல்லியபடி, தூரத்தில் இருந்து கேக்குகளை குறிவைத்து அவரை பார்த்து எறிந்து கொண்டிருந்தான்.
ஜீவா பிரகதியை பார்த்தான். பின் தன் கையை லேசாக ஆட்டினான். என்ன ஆச்சரியம். அந்த பேக்கரியில் இருந்த அத்தனை பேரும் காணோம். நான் ஓடிப்போய் தெருவில் எட்டிப்பார்த்தேன். அங்கேயும் அவர்கள் இல்லை. அத்துடன் தெருவில் எந்த மனிதரோ, போக்குவரத்தோ இல்லை. உள்ளே வந்து பார்க்க அசந்து போனேன். இதுவரை அமைதியாக இருந்த பிரகதி, ஆவேசம் வந்தவள் போல அத்தனை வகைகளையும் வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தாள். நாங்கள் அவளைச்சுற்றி உட்கார்ந்து அவள் சாப்பிடும் அழகை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.
ஓரளவு ஆசை அடங்கியதும். மீதமுள்ள இனிப்புகளை ஒருவர்மீது ஒருவர் எறிந்து விளையாட ஆரம்பித்தோம். ஐஸ்க்ரீம்கள் எங்கள் மேல் வழிந்து ஓடியது. பாதுஷாக்கள் பந்துகளாக பறந்தன. டிவியில் பார்த்ததுபோல் சின்ன சின்ன சாக்லேட்டுளை கீழே கொட்டி அள்ளி வீசிக்கொண்டிருந்தோம். அந்த பேக்கரியே ஏதோ பூகம்பம் வந்து. சூறாவளியில் மாட்டிய இடம் போல் இருந்தது.
“டேய், ஜீவாவை சாப்பிட சொல்லவேயில்லையே. அவனும் நம்மளைப்போலதானே” என்றான் ஷகீல்.
“ஆமால்ல…. அடடா…ஜீவா…. நீ சாப்பிடலையா…” என்றான் ஜோசப்.
எங்கள் அருகில் வந்து அமர்ந்த ஜீவா, “ நீங்க சாப்பிட்டது நான் சாப்பிட்ட மாதிரி” என்றான்.
“அதெப்படி…” என்றான் ஜோசப்.
“உணர்ந்துக்கறதுதான். நீ லட்டு சாப்பிட்ட… ஆசையா ஒண்ணுதான். அதுக்கப்புறம், அந்த மில்க் ஸ்வீட்ஸ் எடுத்து ஆரம்பிச்ச… ஒண்ணு ரெண்டுதான் சாப்பிட்ட. அது உனக்கு திகட்ட ஆரம்பிச்சிட்டது..”
“ ஆமாப்பா. அது கலர்கலரா இருக்கே தவிர எல்லாம் ஒரே மாவு… ஒரே இனிப்பு… முடியல…” என்றான் ஜோசப்.
“இவங்க ஐஸ்க்ரீம், ஆரம்பத்தில் முழுசா ஒண்ணு ரசிச்சு காலி பண்ணினாங்க. அதுக்கப்புறம் இருக்கற வகைகளை எல்லாம் எடுத்து விளையாட ஆரம்பிச்சுட்டாங்க. பெரும்பாலும் சாப்பிட்டது கம்மிதான். வீண் செய்ததுதான் அதிகம்” என்று ஜீவா சொல்ல எங்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. எங்கள் முகம் மாறியதை கண்ட ஜீவா,
“ அது தப்பில்ல. இயற்கை அதுதான், உங்களுக்கு தேவைக்கு கிடைக்காதப்ப கொஞ்சமா கிடைச்சாகூட போதும்னு ஒரு வேகம் இருக்கும். ஒரு முந்திரி கேக் கிடைச்சா கூட ரசிச்சு சாப்பிட தோணும், அதுவே நெறைய குடுத்தா அது மேல ஒரு அலட்சியம் வந்துடும்”
என்னை பார்த்தே சொன்னது போலிருந்தது. தின்றது போக மீதம் வைத்து நான் ஒரு சீட்டுகட்டு மாளிகை போல அடுக்கி விளையாடியிருந்தேன்.
“இது பரவாயில்லை. பெரியவர் ஆனதும், வாழ்வதற்காக பணம் சேர்க்க ஓடுவார்கள். தேவைக்கு கிடைக்க, சிக்கனமாய் குடும்பம் நடத்துவார்கள். ஒரு சிலர் பாத்தீங்கன்னா தேவைக்கு அதிகமா சேர்த்து அதுக்கப்புறம் அதை வைத்து என்ன பண்றதுன்னு தெரியாம இப்படிதான் நிறைய வேஸ்ட் செய்வார்கள். அவர்களும் சாப்பிடாமல், சாப்பிட முடியாமல் இருந்தாலும் மத்தவங்களுக்கு குடுக்கவும் மனசு வராது. ஆனா இந்த வயசில் உங்களுக்கு அதிகமா இருக்கறதை மத்தவங்களுக்கு குடுக்க தோணும். அதான் இந்த சிறு வயதின் அழகு.”
“ அது சரி, நாங்க போனதும் இந்த பேக்கரி இப்படி பன்ணிருக்கமே, கடைக்காரருக்கு நஷ்டம்தானே. இப்பதான் எங்களுக்கு நிஜமாவே கஷ்டமா இருக்கு…” என்றாள் பிரகதி.
“அது நீங்க கவலைப்பட வேண்டாம். நான் பாத்துக்கறேன்” என்று எப்போதும்போல் கண்ணடித்தான் ஜீவா.
“அவனுக்குதான் மாயாஜாலம் தெரியுமில்ல… கண்ணு ராஜா… அது எப்படி மாயமா இங்க வந்தோம்.. அது சொல்லேன்….” என்றான் ஜோசப்.
“ஹா… ஹா… மாயாஜாலம்னு எதுவுமே இல்ல ஜோ…. வந்து… உங்களுக்கு அறிவியல் பாடம் இருக்கா…?” என்று கேட்டான் ஜீவா.
“இருக்கு…இருக்கு…” என்றோம் கோரசாக. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜோசப் சென்று ஒரு தட்டு நிறைய உருளைக்கிழங்கு சிப்ஸும், சில குளிர்பான பாட்டில்களும் கொண்டு வந்தான். அந்த டேபிளில் அவற்றை அடுக்க, ஒரு பெரிய மீட்டிங் நடக்கும் சூழல் தெரிந்தது.
“ம்ம்… அதில் க்வாண்டம் மெக்கானிக்ஸ்னு ஒரு பாடம் வருதா…”
“அப்படியா… அது கேட்டதேயில்லையே….” என்று நான் சொல்ல, “ இந்த பேர்ல எங்க அண்ணன் ஒரு புக் வச்சிருக்கான்” என்றான் ஷகீல்.
“ஒகே… அப்ப அது பெரியவங்க படிக்கற பாடம்தான். நிஜம்தான். இப்ப உங்களால புரிஞ்சுக்க முடியாதுதான். புரியறமாதிரி சொல்றேன். இப்ப நாம் சக்தின்னு ஒண்ணு சொல்றோமில்லையா… அது முழுசா இல்லன்னா என்ன ஆகும்?”
“சோர்ந்து போவோம்… கொஞ்சம் சிப்ஸ் சாப்ட்டா தெம்பாவோம்” என்றான் ஜோசப். அவனை செல்லமாய் முறைப்பது போல் பார்த்த ஜீவா தொடர்ந்தான், “ சரிவிடு… சக்தின்னா எல்லா இடத்திலயும் இருக்கு. சக்தியே இல்லாம ஒரு இடம் இருக்கும். அதை ஸீரோ ன்னு வச்சுக்கலாம். அதுக்கு கீழ ஏதாவது இருக்கான்னா…. இருக்கு. அதை நெகடிவ் சக்தின்னு சொல்வாங்க. அதை பயன்படுத்தி, காலம் இடம் எல்லாத்தையும் சுருங்க வைக்கலாம். அதான் இங்க நடந்தது. அது பயன்படுத்தினேன். ஒரு நொடியில இங்க வந்தாச்சு. இதுபோல எங்க வேணா போகலாம்”
“ஹை, அது எப்படின்னு எங்களுக்கும் சொல்லிக்குடேன்….” என்றள் ரம்யா.
“இல்லபா, அது சொல்லித்தந்து வரதில்ல.. அது மனிதருக்கு இப்போதைக்கு எட்டாத விஷயம்தான். சொல்லப்போனா இப்படி இருக்கலாம்னு க்வாண்டம் மெக்கானிக்ஸ்ல கற்பிதமா படிக்கற அளவில்தான் இருக்கு. ஆனா நிஜம்ங்கிறதை மாற்ற முடியாது இல்லையா. இந்த பூமி , பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் இருந்ததை நெகடிவ் சக்தின்னு சொல்லலாம். “
“ இதைதான் சினிமால, பழைய கதைகளிலே மறைஞ்சு வரமாதிரி காட்டறாங்களா…” என்றேன் நான்.
“அதெல்லாம் மனிதனின் ஜாலியான கற்பனை, சரிவிடு… இப்ப அடுத்து எங்க போலாம்…?” என்றான் ஜீவா.
“ரொம்ப நேரமாச்சு… அம்மா தேடும்.. வீட்டுக்கு போகணும். நாலை வரோம்” என்றோம்.
ஜீவா எழுந்தான். கையை மெதுவாக ஆட்டினான். சட்டென்று அந்த சூழல் மறைந்து பீச்சில் இருந்தோம். மிக நேரம் ஆனதால் ஆளாளுக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்தோம். நாளை ஜீவாவிடம் சொல்லி பறப்பதுபோல் ஏதாவது மந்திரம் சொல்லவேண்டும் என்று தோன்றியது. நான் செல்லும் வழியில் ஐயங்கார் பேக்கரியை பயமாய் எட்டிப்பார்த்தேன். ஆனால் மனம் முழுக்க ஆச்சரியம் ஏற்பட்டது. நாங்கள் வந்த சுவடே இல்லாமல் அது முழு சுத்தமாக இருந்தது. அப்படியானால் இதெல்லாம் வெறும் பிரமையா என்று தோன்றியது. ஆனால் வாயில் இன்னும் மறையாத தித்திப்பு அது பொய்யில்லை என்று காட்டியது. அந்த முந்திரி கேக் இருந்த இடத்தில் நான் எடுத்து சாப்பிட்ட ஒரு பீஸ் குறைந்திருப்பதை கண்டேன்.
மௌனப்புன்னகையுடன் வீட்டுக்கு வர,
“என்னடா… போனதும் வந்திட்ட… விளையாட உன் ஃப்ரெண்ட்ஸ் வரலியா…?” என்று அம்மா கேட்க, என் கையில் இருந்த எலெக்ட்ரிக் வாட்சை பார்த்தேன். பிரமிப்பில் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். நான் வீட்டில் இருந்து சென்று நிற்காமல் திரும்பி வரும் அதே இருபது நிமிடங்கள்தான் ஆகியிருந்தது.
மாயாஜாலம் தொடரும்…