வணக்கம் பிரெண்ட்ஸ். மௌரியனின் மயூரி முதல் அத்தியாயம்.
அத்தியாயம் – ஒன்று
கதிரவன் ஓய்வெடுக்கச் செல்லும் மாலை வேளை . அரவமில்லா அந்த ராஜபாதையில் இரு புரவிகளின் காலடிச் சத்தம் சற்று மெல்லியதாகவே இருக்க, அதில் அமர்ந்து இருந்த வாலிபர்களும் களைப்புடனே காணப்பட்டனர். இருவரின் முகக் குறிப்பும் அவர்கள் நெடுந்தூரம் பயணம் செய்து வந்ததை உணர்த்தியது. இருவர் மத்தியிலும் எந்த விதமான சம்பாஷனையும் இல்லாமல், அமைதியாகவே வந்து கொண்டு இருந்தனர்.
அவர்களின் களைப்பைப் போக்குவது போல மெல்லிய தென்றல் காற்று இருவரையும் வருடிச் செல்ல, அதில் குளுமையும் கலந்தே இருந்தது. அந்தக் குளுமையை அவதானித்த இருவரில் ஒரு வாலிபன்,
“அருகில் நீரோடை இருக்கிறது யுவராஜ்” என்றான்.
அந்த வாலிபனின் கூற்றைக் கேட்டதற்கு அடையாளமாக தலை மட்டும் அசைத்த மற்றவன், தன் புரவியைத் தென்றல் வந்த திசையில் நடக்க விட்டான்.
அவனைப் பின்பற்றி முதலாம் வாலிபனும் தன் புரவியோடு அதே திசையில் சென்றான்.
கிட்டதட்டக் கால் யோஜனை தூரம் சென்றப் பின்பு அழகிய வனம் ஒன்றைக் கண்டனர். வனம் முடியும் இடத்தில் தெளிவான நீரோடையும் கண்டனர். இருவரும் அந்த நீரோடை நோக்கிச் செல்ல, அருகில் சென்றதும் வியந்தனர்.
காரணம் அது நீரோடை அல்ல. ஆற்றங்கரை. தற்போது முதலாம் வாலிபனால் யுவராஜ் என்றழைக்கப்பட்டவன்,
“இது நீரோடை அல்ல ரதகுப்தா” என,
“ஆம் யுவராஜ்” என்றுப் பதில் கூறினான்.
இருவரும் புரவிகளில் இருந்து இறங்கி, அதனைத் தட்டிக் கொடுக்க, புரவிகள் இரண்டும் தங்கள் எஜமானர்களின் கழுத்தைத் தன் நாவால் தடவிக் கொடுத்து விட்டு , நீரோடை நோக்கிச் சென்றன.
வாலிபர்கள் இருவரும் தங்கள் களைப்பை நீக்கிக் கொள்ள, நீர் அருந்தியும், கை , கால் , முகங்களை நீரால் துடைத்தும் கொண்டனர்.
ரதகுப்தன் வேகமாகச் சென்று வனத்திலுள்ள மரங்களில் இருந்து சில கனிகளைப் பறித்து வந்தான்.
ஆற்றில் இருந்த அல்லி மலர் இலைகள் சிலவற்றைப் பறித்து அதில் கனிகளை வைத்து யுவராஜ் முன் நீட்டினான்.
“உனக்கு எங்கே ரதகுப்தா?”
“நீங்கள் பசியாருங்கள் யுவராஜ். மேலும் வேண்டும் என்றால் பறித்து வருகிறேன்.”
“எனக்கு இவையே அதிகம் தான். நீயும் இதைப் பகிர்ந்துக் கொள் “
“நான் எனக்குப் பறித்து வருகிறேன். நீங்கள் முழுமையாக எடுத்துக் கொள்ளுங்கள் “
“சொன்னால் கேட்க மாட்டாயா? இன்னும் இரு யோஜனைத் தூரத்தில் இந்திரப்பிரஸ்தம் நகரம் வந்து விடும். அங்கே இருவரும் தங்கிக் கொண்டு, புரவிகளையும் இளைப்பாற விடலாம் என்று எண்ணி இருக்கிறேன். இப்போது இவை முழுதும் நான் எடுத்து கொண்டால், என்னால் இனி பயணம் செய்ய முடியாது. இங்கு தங்குவதும் பாதுகாப்பு அல்ல” என்றுக் கூறவும், மற்றுமொரு அல்லி இலையைப் பறித்து யுவராஜ் முன் வைக்க, தன் இலையில் இருந்து கனிகளை எடுத்து வைத்தான் யுவராஜ்.
இருவரும் கனிகளை உண்ட பின், மீண்டும் அந்த ஆற்றில் நீர் பருகி , மேலும் தங்கள் நீர்க் குடுவைகளிலும் நிரப்பிக் கொண்டனர்.
புரவிகள் சற்று நேரம் அருகில் இருந்த புல் வெளியில் மேய்ந்து விட்டு வரட்டும் என்று எண்ணிய யுவராஜ், அவன் நண்பன் ரதகுப்தனுடன் உரையாடிக் கொண்டு இருந்தான்.
“ரதா , இப்படி ஒரு கனிச் சோலை இந்த இடத்தில் இருப்பது விசித்திரமாய் இருக்கிறதே”
“இதில் என்ன விசித்திரம் யுவராஜ்?
“ஆற்றங்கரை அருகில் சோலைகள் இருந்தால் கார்காலத்தில் இந்த மரங்கள் பிழைக்குமா?
“யுவராஜ் சற்று நன்றாகப் பாருங்கள். இந்த சோலை காலத்திற்கும் நிலைத்து நிற்க உருவாக்கப்பட்டவை அல்ல “
“எப்படிச் சொல்கிறாய் ?
“இங்குள்ள கனிகள் அனைத்தும் கோடைக் காலத்தில் உடல் உஷ்ணம் தணிப்பதற்கு உண்டானவை. அதனால் இதன் ஆயுள் சில காலமே. கார் காலத்தில் மரங்கள் காற்றிலும், மழையிலும் முறிந்து விடும். “
“யார் ஏற்பாடு இது? இப்படி ஒரு சோலை உண்டாக்க வேண்டிய அவசியம் என்ன?
“இவை ஆற்றின் நீர் ஆதாரத்தை தேக்கிக் கொள்ளவும், சில விலங்குகளைப் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் மனிதர்களின் தேவைக்காகளுக்காக இயற்கையாய் உண்டான வனங்களை அழிப்பதற்கு பதில், இது போன்ற செயற்கை வனங்களை உண்டாக்கி, அதை நமக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட சோலை”
“இந்த ஏற்பாடுகளின் சூத்திரதாரி யாரோ ?
“நம் மௌரிய சாம்ராஜ்ஜியத்தில் எந்த ஒரு காரியமும் ஆச்சார்யர், மற்றும் சாம்ராட் அறியாமல் நடக்க வாய்ப்பில்லை யுவராஜ். அத்தோடு இது சாம்ராட் அவர்களின் கட்டளை என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்’
“ஓஹ். வனங்களைக் காப்பாற்ற எண்ணிய சாம்ராட் மனைவியைக் காப்பாற்ற மறந்தது ஏனோ ? மரங்களுக்கும் கீழாகப் போய்விட்டார்களா மகாராணி ?
யுவராஜின் பதிலில் ரதகுப்தன் அதிர்ந்து பார்க்க , யுவராஜ் விழிகளோ எங்கேயோ நிலைத்து நின்றது.
சற்று நேரம் அமைதியாகக் கழிய, இருவரின் புரவிகளும் அவர்கள் அருகில் வந்தன. அதன் அரவத்தில் தன் நிலைக்குத் திரும்பிய யுவராஜ்
“தேஜா , உன் வயிறு குளிர்ந்ததா?” என்று வினவ, கேள்வி புரிந்தது போல புரவி தலையசைக்க, அதன் மேல் லாவகமாக ஏறிய யுவராஜ்,
“செல்லலாம் ரதா “ என்றான். அவனின் உத்தரவில் ரதகுப்தனும் தன் புரவி மீது ஏறி யுவராஜைப் பின் தொடர்ந்தான்.
யுவராஜ் என்றழைக்கப்பட்ட பிந்துசாரா மௌரியப் பேரரசின் சாம்ராட் சந்திரகுப்தரின் புதல்வன். மௌரிய சாம்ராஜியத்தின் குரு ஆச்சாரியார் சாணக்கியரின் பிரதான சீடன். அவரின் உத்தரவின் பேரில் தக்ஷஷீலா பல்கலைக் கழகத்தில் சர்வ கலைகளும் கற்று நாடு திரும்பிக் கொண்டு இருக்கிறான். ரதகுப்தா பல்கலைக் கழகத்தில் யுவராஜோடு இணைந்து கல்வி பயின்றவன். சில நாட்களில் நெருங்கிய நட்பு இருவருக்கும் உண்டாக, தன்னோடு பாடலிபுத்திரத்திற்கு அழைத்து வந்தான்.
தக்ஷசீலம் நாட்டின் வடமேற்கில் இருக்க, தலைநகர் பாடலிபுத்திரமோ அதற்கு எதிர்க் கோடியில் இருந்தது. இரு இடங்களுக்கும் இடையேயான பயணகாலம் சில நாட்களே ஆகும். எனில் சாம்ராஜியத்தின் விஸ்தீரணம் சொல்லவும் வேண்டுமோ?
அத்தனை பெரிய சாம்ராஜியத்தின் யுவராஜன் பிந்துசாராவுடன் பயணித்துக் கொண்டிருந்த ரதகுப்தன் மனதில் கேள்விகள் பல இருந்தன.
இவர்கள் இருவர் மட்டுமில்லாமல், புரவிகளும் நன்றாகவே இளைப்பாறி இருந்ததால், அவர்கள் எண்ணியதை விட விரைவாகவே இந்திரபிரஸ்தம் சென்று விட்டனர்.
மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் உருவாக்கிய இந்த பிரதேசம் இன்றும் அதே பெயரால் அழைக்கப்படுகிறது. பாண்டவர்களுக்காக தேவ சிற்பி மயன் உருவாக்கிய இந்நகரம் இன்றும் எழில் நிறைந்த நகரம். சம காலத்தில் மௌரிய நகரங்களே நாகரிகத்தில் உச்சம் பெற்றவை. ஆனால் அவை எல்லாம் இந்திரபிரஸ்தம் என்ற நகரின் அருகில் கூட நெருங்க முடியவில்லை.
நேர்த்தியான அரண்மனைகளும், சத்திரங்களும், வளமான சோலைகளும், வண்டிப்பாதைகளும் நிறைந்த நகரம். இங்குள்ள மக்கள் சகல கலைகளிலும் வல்லவர்கள். எத்தனை படையெடுப்புகள் நடந்த போதிலும் அங்குள்ள கட்டடங்களை சேதப்படுத்த இதுவரை எந்த அரசர்களும் முயலவில்லை.
சந்திரகுப்தருக்கு முந்தைய காலம் வரை சிற்றரசாக இருந்த இந்த பிரதேசம் , மௌரியர் ஆட்சிக்காலத்தில் அவை பிராந்தியங்களாகக் கருதப்பட்டன. அரசின் சார்பில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் அங்கிருந்து கண்காணித்தனர். இங்குள்ள மக்களும் கட்டுப்பாடு மிகுந்தவர்கள்.
பிந்துசாராவும், ரதகுப்தனும் நகருக்குள் செல்ல, அந்த நேரத்தில் நகரின் சந்தடி வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. பெரிய வீதிகளின் வழியாக செல்ல முயலும் போது காவலர்கள் இவர்கள் யார் என்று விசாரிக்க, ரதகுப்தனை பதில் சொல்ல விடாமல் , பிந்து சராவே காவலர்களுக்கு பதில் சொல்லத் தொடங்கினான்.
“நாங்கள் இருவரும் உஜ்ஜையின் மாகாணத்தை சேர்ந்தவர்கள்”
“இந்த இரவு நேரத்தில் இங்கே வரக் காரணம் ?”
“நாங்கள் தக்ஷசீலத்தில் குருகுலம் முடித்து விட்டுத் திரும்பி கொண்டு இருக்கிறோம்”
“அதற்கு வேறு பாதை இருக்கிறதே? இந்த வழியாக ஏன் வந்தீர்கள்?”
“நாங்கள் ஊர் திரும்பும் முன் வாரணாசி நகரில் கங்கா ஸ்நானம் செய்துவிட்டு, ஈசனைத் தரிசனம் செய்ய எண்ணினோம். பொழுது போய்விடவே, இன்று இரவு இந்நகருக்குள் தங்கி , நாளை பயணத்தைத் தொடரலாம் என்று நகருக்குள் வந்தோம்”
“சரி. சரி. இந்த வீதிகளின் வழியாக செல்ல வேண்டாம். அடுத்த வீதியின் கோடியில் செல்லும் பாதை வழியாக சென்றால் சத்திரங்கள் உள்ளன. அங்கே செல்லுங்கள்” என்று கூறி இருவரையும் திருப்பி அனுப்பினர் காவலர்கள்.
அவர்களிடம் “சரி” என்று கூறிய பிந்துசாரா, ரதாவிடம் தலை அசைக்க , இருவரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
யுவராஜ் தான் யார் என்று ஏன் கூறவில்லை என்று யோசித்தபடியே ரதா பின் தொடர, பிந்துசாராவோ அங்கிருந்த சத்திரம் ஒன்றிற்கு சென்றான். புரவியை விட்டு இறங்கி நிற்கவும், ரதா கேள்வியாகப் பார்த்தான்.
யுவராஜ் முகக் குறிப்பில் தானும் இறங்கி சத்திரம் உள்ளே சென்றான். அதற்குள் உள்ளிருந்து வெளியே வந்த ஒருவர்,
“யார் நீங்கள் ? இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள்?” என்று வினவினார்.
ரதா “ஐயா, நாங்கள் வெகு தொலைவில் இருந்து வருகிறோம். இன்று இரவு நாங்கள் தங்கி இளைப்பாற இடம் கிடைக்குமா?” என்று கேட்டான். “
“தற்பொழுது அரசாங்க அலுவலாக மௌரிய பேரரசின் மகாகுருவும், அவரின் கீழ் இயங்கும் நேரடி அதிகாரிகளும் இந்திரபிரஸ்தம் வந்து இருக்கிறார்கள். அவர்களின் வேலையாட்கள் , மற்றவர்கள், குதிரைகள் தங்குவதற்காக அனைத்து சத்திரங்களும் பயன்படுத்தப்பட்டு விட்டன. ஒரே ஒரு அறை மட்டுமே மீதம் இருக்கிறது . அதுவும் சற்று சிறியது. வேண்டுமென்றால் அதில் தங்கிக் கொள்ளலாம். “ என பொறுப்பாளர் கூறவும்,
ரதா “ என்ன ? இவரை யார் என்று அறியாமல் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் ஐயா?” என்று சற்று இரைந்தான். சத்திரத்தின் பொறுப்பாளாரோ
“நல்ல உயர் ஜாதிக் குதிரைகளும், தங்கள் தோற்றப் பொலிவும் வைத்து என்னால் உணர முடிகிறது வீரரே! தாங்கள் இருவரும் நிச்சயம் பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் என்று. ஆனால் தற்போதைய நிலைமை இதுவே. பேரரசர் தங்கும் மாளிகை தவிர மற்ற அனைத்துமே நிரம்பி வழிகின்றது. “ என்று கூறினார்.
“ஐயா, நாங்கள் அந்த சிறிய அறையில் தங்கிக் கொள்கிறோம். எங்களுக்கு உணவு எதுவும் கிடைக்குமா?” பிந்துசாரா வினவ,
“நல்ல காலம். இங்கு தங்கிருக்கும் அனைவரும் நல்ல உழைப்பாளிகள் மற்றும் வீரர்கள். அவர்களுக்கு உணவு தேவை அதிகமாக இருக்கும். அதனால் சற்று அதிகமாகவே தயார் செய்து கொண்டு இருக்கிறோம். தங்களுக்கும் போதுமானதாகவே இருக்கும்” என்றார்.
“நன்றி ஐயா . நாங்கள் சற்று இளைப்பாறி விட்டு வரலாம் இல்லையா?”
“தாராளமாக. இன்னும் சொல்ல போனால் மகாகுருவின் உத்தரவு எல்லா காலமும் அன்னதானம் செய்ய வேண்டும் என்பதே. அதனால் நகரின் ஒரு பகுதியில் எப்பொழுதும் உணவு கிடைக்கும். வழிப் போக்கர்கள் அங்கே உணவு உண்டுவிட்டு இளைப்பாறி செல்லலாம்”
அதற்கு மேல் பேச்சுக் கொடுக்காமல் “ரதா, புரவிகளை கொட்டடியில் கட்டி விட்டு வா. பசியாறி விட்டு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்” “ என்றார் பிந்துசாரா.
“சரி. நான் உள்ளே சென்று தலைமை பரிசாரகரிடம் உங்கள் இருவரின் உணவிற்கும் கூறி விடுகிறேன். உங்கள் வேலைகளை முடித்து விட்டு வாருங்கள்” என்று சத்திரத்தின் பொறுப்பாளர் சென்று விட, அவர் சென்றதும் ,
ரதா “யுவராஜ், தங்கள் மாளிகையில் தங்குவதை விடுத்து, இந்த இடத்தில் தங்க வேண்டிய அவசியம் என்ன ?” என்று வினவினான்.
“தேவையில்லாமல் எவரையும் சந்திக்க விரும்பவில்லை ரதா”
“ராஜகுரு விஜயம் பற்றி தாங்கள் அறிவீர்களா யுவராஜ்?”
“அறிவேன் “
“நாம் இருவரும் ஒன்றாகத் தானே பயணம் செய்து வந்தோம் யுவராஜ்? எப்போது அறிந்து கொண்டீர்கள்?”
“இந்திரபிரஸ்தம் நகரம் தன் நிறைவு பெற்ற நகரம். அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவர்களே உற்பத்தி செய்து கொள்பவர்கள். அதனால் மக்கள் கதிரவன் மறைந்த பிறகு தங்கள் வீடுகளில் அடைந்து கொள்பவர்கள் என்று அறிவேன். இன்றைக்கு நாம் நகருக்குள் நுழையும் போதே அதிகப்படியான நடமாட்டாங்களை உணர்ந்தேன். நாம் முக்கிய வீதிகளின் வழியாக வரும்போது காவலர் கண்காணிப்புகளும் பலமாகவே இருந்தது. அதனால் அமைச்சர் அளவில் யாரோ வந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ராஜகுரு என்று எண்ணவில்லை”
தன்மையாக பதில் சொல்லிக் கொண்டிருந்த பிந்துசாரா , முடிக்கும் போது மட்டும் குரலில் ஏளனம் கலந்து இருந்ததோ என்று ரதாவிற்கு தோன்றியது. ஆனால் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
ரதா புரவிகளைக் கட்டிவிட்டு வரவும், இருவரும் சத்திரத்தின் உள்ளே சென்றனர். சிறு பாதை வழியாக உள்ளே செல்ல, எதிரில் சற்று விசாலமான கூடம் இருந்தது. அந்தக் கூடத்தில் அழகான பெர்ஷிய நாட்டு ரஜாய் விரிக்கப்பட்டு இருக்க, ஓரங்களில் அழகான உருளை வடிவ தலையணைகள் அடுக்கப்பட்டு இருந்தது. ஆங்கே ஆங்கே பல நாட்டு அலங்கார விளக்குகள் அலங்கரிக்க , அவற்றில் தீபம் ஏற்றப்பட்டு இருந்தது. அத்தோடு பெர்ஷிய நாட்டின் நறுமண அகிலும் மணம் பரப்பியது.
பிந்துசாராவின் கண்கள் ரசனையுடன் அந்தக் கூடத்தை அளவெடுத்தது. ரதா அருகில் வரவும் ,
“ரதா , இந்த சத்திரம் நடத்துபவர் மிகுந்த செல்வாக்கான நபர் போல இருக்கிறது” என்றான்.
“எப்படிக் கூறுகிறீர்கள் யுவராஜ்?
“இதோ இங்கே உள்ள கலைப் பொருட்களை எல்லாம் பார். மிகுந்த விலை என்பதோடு எளிதாக கிடைக்கக் கூடியவை அல்ல. அனைத்தும் வெளிநாட்டு வணிகர்கள் கொண்டு வரக் கூடிய பொருட்கள். “
ரதாவும் ஒருமுறை தன் கண்களால் அளவிட்டு
“உண்மை தான் யுவராஜ் “ என்றான்.
பிந்துசாராவின் கண்கள் அளவிட்டது மட்டுமில்லாமல், ஏதோ சிந்தனையிலும் இருப்பதாக ரதாவிற்கு தோன்றியது. யுவராஜ் எதுவும் கூறுவாரோ என்று ரதா காத்து இருந்தான்.
ரதாவிடம் எதுவும் வாய்மொழியாக கூறாமல், தலையசைவால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறைக்குச் செல்லும்படி கூறினான்.
அந்த அறை சிறியதாக இருந்தாலும் இருவர் தங்கும் அளவிற்கே இருந்தது. அதே போல அறையில் வசதிகளும் ஓரளவு நன்றாகவே இருந்தது. இளவரசருக்கு ஏற்ற அலங்கார ஸ்வரூபமாய் இல்லை என்றாலும், சுத்தமான மெத்தை விரித்து தரமான ரஜாய் விரிக்கப்பட்டு இருந்தது.
மேலும் ஒரு மெத்தை தரையில் விரிக்கப்பட்டு இருந்தது. மெத்தை தற்போது தான் போட்டு இருக்க வேண்டும். இவர்கள் புரவிகளை கொட்டடியில் விட்டு விட்டு வருவதற்குள் ஏற்பாடு செய்யபட்டு இருந்ததைக் கண்டு இருவரின் கண்களும் வியப்பில் விரிந்தன.
அறையில் தாழ்வாரமும் இருக்க, அதன் வழியாக வெளியே செல்லவும் வசதி இருந்தது. இருவரும் தங்கள் உடைமைகளை அறையில் வைத்து விட்டு, தாழ்வாரம் வழியாக பின்புறம் சென்றனர். பின்புறத்தில் ஒருபுறம் பெரிய தோட்டம் இருக்க அதற்கு நீர் ஆதாரமாக மறுபுறம் சிறிய அளவில் ஓடை ஒன்று இருந்தது. நல்ல கோடை காலத்திலும் இந்த இடம் குளுமையாக இருக்கும் என்று உணர்ந்தனர். தங்களைச் சுத்தபடுத்திக் கொண்டு மீண்டும் உள்ளே வரவும், சத்திரத்துப் பொருப்பாளார் இருவரையும் பசியாற அழைத்தார்.
சுவையும், சத்தும் நிறைந்த உணவு வகைகளே பரிமாறப்பட்டது. இருவரும் நன்றாக உண்டபின் தங்கள் அறைக்கு உறங்க சென்றனர்.
நெடுந்தூரம் பயணம் செய்த களைப்பில் நன்றாக உறங்கினர். குருகுல வழக்கமாக உதய காலத்தில் இருவரும் எழுந்தனர்.
காலை கடன்களை முடித்து விட்டு , இருவரும் சூரிய நமஸ்காரம் செய்த பின் தங்கள் அறைக்குள் செல்ல, அங்கே ஒரு வீரன் நின்று இருந்தான். அவனோடு சத்திரப் பொறுப்பாளரும் நின்று இருந்தார்.
அவரைப் பார்த்த பிந்துசாரா “என்ன விஷயம் ஐயா ?” என்று வினவ,
அவர் மண்டியிட்டு “யுவராஜ் என்னை மன்னித்தருளுங்கள். தாங்கள் மௌரிய சாம்ராஜ்ய இளவரசர் என்று அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டுகிறேன் “ என்றார்.
பிந்துசாரா ரதாவின் முகம் பார்க்க , ரதாவோ பொறுப்பாளரிடம்
“தங்களுக்கு யார் கூறியது ஐயா ?” என்று வினவினான்.
“இதோ இந்த வீரன் தான் கூறினார் “ என்று கூற, பிந்துசாரா அந்த வீரனை நேராகப் பார்த்தான்.
வீரனோ “யுவராஜ், தங்களை உரிய மரியாதையுடன் தங்கள் அரண்மனைக்கு அழைத்து வர உத்தரவாயிருக்கிறது. சத்திரத்தின் வாயிலில் வீரர்களும், அதிகாரிகளும் தயாராக இருக்கின்றனர் “ என்றார்.
“என்னை அழைத்து வர உத்தரவா?”
“ஆம் யுவராஜ்”
“உத்தரவிட்டவர் எவரோ ?”
“மௌரிய பேரரசின் ராஜகுரு ஆச்சாரியார் சாணக்கியார் “
ரதா திடுக்கிடலோடு யுவராஜ் முகம் பார்க்க, பிந்துசாராவோ சிந்தனையோடு நின்று இருந்தார்.
பின் வீரரிடம் “ஹம்.. சற்று நேரத்தில் கிளம்பலாம்” என்று கூறினான்.
அந்த வீரன் மறுபடியும் மண்டியிட்டுவிட்டு வாயில் நோக்கிச் செல்ல, சத்திரப் பொறுப்பாளர் அங்கேயே நின்று இருந்தார்.
“ஐயா , நீங்களும் செல்லலாம்” என பிந்துசாரா கூறவும்,
“தங்களை ஆச்சாரியாரிடம் சேர்க்கும் வரை என் பொறுப்பு தீராது யுவராஜ்” என்று அங்கேயே நின்றார்.
பிந்துசாரா விருப்பமில்லா தலையசைவுடன் தங்கள் அறைக்குள் சென்றார். ரதாவும் இணைந்து உள்ளே சென்று , தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டான்.
சத்திரத்தின் பொறுப்பாளாரிடம் ஒரு பனா வெள்ளி நாணயத்தைப் பரிசாக வழங்கினான் பிந்துசாரா.
“வேண்டாம் யுவராஜ். தாங்கள் இந்த ஏழையின் சத்திரத்தில் தங்கியதே பெரும் பாக்கியமாகும்.” என்று மறுத்தார்.
பிந்துசாரா “இது யுவராஜின் கட்டளை” என, வாங்கிக் கொண்டார்.
பின் யுவராஜ், ரதா இருவரும் வாயில் நோக்கிச் செல்ல, அங்கே வீரர்கள் புடை சூழ ஒரு பாலக்கி (பல்லக்கு) தயாராக இருந்தது. அதைக் கண்ட யுவராஜ் , அந்த குழுவின் தலைவன் யார் என கேட்டான்.
முதலில் வந்த வீரனே வந்து நிற்க,
“இது என்ன ?” என்று சிவிகையைப் பார்த்துக் கேட்க,
“யுவராஜ் , தங்களை தகுந்த பெருமையோடு அழைத்து வர எங்களுக்கு கட்டளை இடப்பட்டு இருக்கிறது” என்றான்.
“ஓஹ். ஒரு இளம் வயது வீரனை இப்படி அழைத்து வருவது தான் பெருமையோ?”
“சாதாரண வீரன் என்றால் புரவிகள் புடை சூழ அழைத்து வரலாம். ஆனால் தாங்கள் சாம்ராட் இளவரசர். தங்களை மற்ற வீரர்கள் போல அழைத்து வருவது தவறு என்று தான் இவ்வாறு ஏற்பாடு செய்து இருக்கிறோம் யுவராஜ்”
“இதுவும் உங்கள் ராஜகுருவின் உத்தரவா?”
வீரன் தலை குனிந்து பதில் பேசாமல் நிற்க,
“ராஜகுரு வயதானவர். அவருக்கு வேண்டுமானால் சிவிகை தேவைப்படலாம். என்னை போன்ற வீரனுக்கு அவனின் புரவியே பெருமை. உங்கள் பால்கியை திருப்பி அனுப்புங்கள். அத்தோடு இத்தனை பேர் என்னோடு வர வேண்டாம். இரு வீரர்கள் மட்டும் இருக்கட்டும்”
வீரர் தலைவன் மற்றவர்களை திருப்பிச் சொல்ல உத்தரவிட்டு விட்டு, இரு வீரர்களை மட்டும் தன்னோடு நிறுத்திக் கொண்டான். வீரர் தலைவனிடம் பிந்துசாரா உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் போதே, ரதா புரவி கொட்டடிக்கு சென்று இருவரின் புரவிகளையும் தயார் செய்து இருந்தான்.
பிந்துசாரா வாயால் சிறு சப்தம் எழுப்ப, புரவி ஒன்று வந்து நின்றது. அதன் அருகில் சென்று
“தேஜா , தயாரா?” என்று வினவ, அது கணைத்து தன் பதிலைத் தெரிவித்தது.
அதைக் கண்ட யுவராஜ் சிரித்தபடி அதனை தடவிக் கொடுத்து விட்டுப் புரவியின் மீது ஏறினான். ரதாவும் தன்னுடைய புரவியில் ஏறிட , வீரர் தலைவனைப் பார்த்து தலையசைத்தான். அவர்களும் தாங்கள் வந்த புரவியில் அமர்ந்து முன்னால் செல்ல, யுவராஜ் தொடர்ந்தான்.
முந்தைய இரவில் செல்ல மறுக்கப்பட்ட மாளிகை வீதிகளின் வழியாக இப்போது யுவராஜ், ரதா இருவரும் சென்றனர்.
இரவை விட, தற்போது வெளிச்சத்தில் ஒவ்வொரு மாளிகையின் அழகும், அமைப்பும் வெகுவாகக் கவர்ந்தது. அதை விட அந்த நகரத்தின் கட்டமைப்பு இவர்களுக்கு மிகுந்த வியப்பைத் தந்தது. கிட்டத்தட்ட யுகங்கள் தாண்டி இந்த நகரம் நிலைத்து நிற்பதில் அதிசயம் ஏதுமில்லை என்று உணர்ந்தார்கள்.
அரை யோஜனை தூரம் சென்றபின் ஒரு மாளிகையில் வீரர்கள் தலைவன் நிற்க, யுவராஜ் அவனை என்ன என்பது போலப் பார்த்தான்.
“சாம்ராட் மாளிகை இதுதான் யுவராஜ். தாங்களும் இங்கே தங்க ஏற்பாடு செய்யபட்டு இருக்கிறது “
யுவராஜ் முகத்தில் சில உணர்ச்சிகள் வந்து செல்ல, கண்கள் மூடி தன்னை சமன் செய்து கொண்ட பின்,
“முதலில் ஆச்சாரியரை தரிசிக்க வேண்டும். அவரின் மாளிகைக்கு அழைத்துப் போ “ என்று உத்தரவிட்டான்.
“தற்போது ஆச்சாரியார் நித்ய அனுஷ்டானங்களில் இருப்பார். சில நாழிகைகள் சென்ற பின் சென்று தரிசிக்கலாமே யுவராஜ்”
“இங்கே நான் யுவராஜா அல்லது .. “ என்று முடிக்காமல் விட, ரதா சட்டென்று வீரர் தலைவனிடம்
“ஆச்சாரியார் இங்கிருக்கும் போது அவரிடம் ஆசி பெறாமல் இளவரசர் மேற்கொண்டு எந்த காரியமும் செய்ய மாட்டார். அத்தோடு ஆச்சாரியாரின் பூஜையிலும் கலந்து கொள்ள வேண்டும். அழைத்துச் செல்லுங்கள் “ என்று கூறவும், மேற்கொண்டு எதுவும் பேசாமல் வந்த வழியில் சற்று தூரம் சென்று வேறு ஒரு பாதையில் அழைத்துச் சென்றான்.
வீரர் தலைவன் ஆச்சாரியார் மாளிகை அழைத்துச் செல்வான் என்று எண்ணி இருக்க, அவனோ யமுனை ஆற்றங்கரை அருகில் அழைத்துச் சென்றான்.
சரி ஆச்சாரியார் நீராடிக் கொண்டு இருக்கலாம் என்று பார்க்க, அங்கேயோ ஆற்றின் அருகில் புதிதாக போடபட்ட குடிசை அருகில் சென்று வீரர் தலைவன் நின்றான்.
பிந்துசாராவும் ,ரதாவும் ஒருவரை ஒருவர் பார்க்க, உள்ளிருந்து கணீர் என்ற குரலில் மந்திரம் உச்சாடனை கேட்டது.
சட்டென்று புரவியில் இருந்து இளவரசனும், ரதாவும் இறங்கினர். குடிசை வாயிலின் ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தங்கள் கை , கால்களைச் சுத்தம் செய்துகொண்டு குடிசைக்குள் சென்றனர்.
பூஜையின் நடுவில் பிரசாதம் அம்சிதை செய்வதற்கு ஆச்சாரியார் காத்து இருக்க , அந்த நேரம் தங்கள் வரவை கூறும் பொருட்டு
“வணக்கம் ஆச்சாரியாரே “ என்று இருவரும் கூறினார்.
அவர்களை ஏறெடுத்துப் பார்த்த ஆச்சாரியார் கைகளை மட்டும் தூக்கி ஆசீர்வதித்து விட்டு பூஜையைத் தொடர்ந்தார்.
- தொடரும்-
அத்தியாயங்களுக்கு கருத்துக்கள் பகிர கீழே உள்ள லிங்க் பயன்படுத்தவும். இந்த திரியில் கதை மட்டுமே பதிவிடப்படும்.
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com