Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வசீகரனின் யாழ் நீ!

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
அனைவருக்கும் வணக்கம்,

நான் லாவண்யா தயூ. என் முதல் கதை "வசீகரனின் யாழ் நீ" உடன் சகாப்தம் வழி எழுத்துலகில் நுழைகிறேன். வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி வசீகரனுடன் என் பயணத்தை தொடங்குகிறேன். முதல் கதை என்பதால் தவறுகள் இருப்பின் வழிக்காட்டுங்கள், திருத்திக்கொள்கிறேன்.


உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ.
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
சென்னையின் அந்த பிரபலமான உணவகத்தின் மேசை மீது வைக்கப்பட்டிருந்த செல்போனில் சிரித்தபடி இருந்தது யாழினியின் முகம். சுற்றி இருந்த மூன்று ஜோடிக் கண்களும் அதை பார்த்தது.

"என்ன ஆச்சுடா?" என்ற யஷ்வந்த்திடம் தன் போனைக் காட்டினான். யஷ்வந்த் கண்கள் இப்போது அதிர்ச்சியைக் காட்டியது.

"இன்று உன் முன் தொடங்கும் இந்த உறவு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். குறையாத அன்பும் நிம்மதியும் எங்கள் வாழ்வில் நிலைத்திருக்க வேண்டும்" என கண்களை மூடி பிரார்த்தனை செய்தவள், ஏதோ குறுகுறுப்பு உணர்வு எழ, கூப்பிய கரங்களுடன் கண்களைத் திறந்தாள்.

திடீரென திரும்பியவள், " அண்ணா, அந்த பையன் பேர் என்ன?" என கேட்டாள். அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான் மாதவன்.
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
"கனவு கண்டதிலே-ஒரு நாள்

கண்ணுக்குத் தோன்றாமல்,

இனம் விளங்கவில்லை-எவனோ

என்னகந் தொட்டுவிட்டான்.

வினவக் கண்விழித்தேன்-சகியே!

மேனி மறைந்து விட்டான்;

மனதில் மட்டிலுமே-புதிதோர்

மகிழ்ச்சி கண்டதடீ!" -

படிக்க படிக்க தெவிட்டாத பாரதியின் வரிகளில் தன்னைத் தொலைத்திருந்தாள் யாழினி. அவளுக்கு பாரதியின் எழுத்துக்கள் மீது அதீத காதல். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, பெண் உரிமை,கடவுள் பக்தி, காதல் என அனைத்தும் பாரதியின் எழுத்துக்களில் கற்றவள் அவள். பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, பாட்டுப்போட்டி என அனைத்திலும் பாரதியின் வைர வரிகள் அவளுக்கு வெற்றியைப் பெற்று தந்தன. அதிலும் இந்த பாடல் அவளுக்கு தற்போது மிகவும் பிடித்த பாடல். காரணம் சில நாட்களாக அவளைத் துரத்தும் அந்த இன்பக்கனவு.

உயரமாக வளர்ந்த கம்பீரமான ராஜகுமாரன் ஒருவன் அவள் கரத்தினைப் பற்றி ஒரு மாளிகைக்குள் அழைத்து செல்கிறான். அவன் முகம் தெரியவில்லை. அவன் வலக்கையைத் தன் இடக்கையால் பற்றியபடி அவன் வேகத்திற்கு நடந்து ஓர் அறைக்குள் நுழைக்கிறாள். அங்கு அழகிய மேசை மேல் அதை விட அழகான புல்லாங்குழல் உள்ளது. அதை அவள் விரல்களால் தொட்டுப்பார்க்க, அவள் காதோரமாய், "பிடிச்சிருக்கா?" என்று காந்த குரல் கேட்கிறது. அவன் முகம் பார்க்க நிமிர்ந்த போது உறக்கம் கலைந்துவிட்டது. பட்டென கண் விழித்த யாழினி அவனைத் தேட , அவன் அங்கு இல்லை. அவன் முகம் பார்க்கும் ஆவலில் மீண்டும் உறங்கி கனவு காண முயன்றாள். உறக்கமும் வரவில்லை, கனவும் வரவில்லை.

அன்று மட்டுமல்ல, அதற்கு பின் வந்த இரவுகளிலும் அந்த கனவை அவள் எதிர்பார்த்தாள். உறக்கம் வராமல் போனது தான் மிச்சம். கனவு வரவேயில்லை. ஆனால் அந்த கனவின் இனிமை அவளுக்கு பிடித்திருந்தது. கண்ணன் மீது தீரா அன்பு கொண்டவளுக்கு அவன் குழல் கனவில் வந்தது இன்பமாக இருந்தது. கண்ணன் அவளிடம் ஏதோ சொல்வதாய் தோன்றியது. அதிலும் அந்த ராஜகுமாரன் குரல் மீண்டும் மீண்டும் காதுகளில் ஒளித்து அவளை மயக்கியது.

அந்த குரலுக்கு சொந்தக்காரன் யார்? என்ற கேள்வி அவளை வாட்டுகிறது. ஒருவேளை அடுத்த வாரம் தன்னுடன் நிச்சயம் செய்ய இருக்கும் ஆகாஷோ? என எண்ணியவளுக்கு 'இல்லை' என்ற பதிலும் உடனே கிடைத்தது. ஏனெனில் அவன் 'கம்பீரம் என்றால் கிலோ என்ன விலை?' என கேட்கும் இனம் போல் தோன்றியது. உயரமும் அவ்வளவு இல்லை. ஆகாஷ் பற்றிய சிந்தனை வந்ததும், கனவு மறந்து தையல் கடையில் இருக்கும் உடை குறித்த நினைவு வந்தது.

அது நிச்சயத்தன்று உடுத்த வேண்டிய சேலையின் ரவிக்கை. நிச்சய பட்டு அளிக்கப்படும் முன் அணிவதற்காக அவள் அண்ணன் ஆசையாக வாங்கித் தந்தது. இப்போதே கேட்டால் தான் தையல்காரர் தருவார். இல்லையெனில் கடைசி நேரத்தில் பரபரப்பாக இருக்கும் என்ற சிந்தனை வர, அவளது கனவும் நிதர்சனமும் வேறு வேறு என்ற தெளிவுடன் தலையை அசைத்து தன் எண்ணங்களை தள்ளிவிட்டு, வேகமாக எழுந்து அறையை விட்டு வெளியில் வந்தாள் யாழினி.
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
"கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்.....
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்,
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான் உறங்க வைத்தான்"

இனிமையான பாடல் ஹாலில் இருக்கும் டிவியில் ஒளித்துக் கொண்டு இருந்தது. அதனை கேட்டபடி அறையில் இருந்து வெளியே வந்த யாழினியைப் பார்த்த அவள் தாய் பூரணி ,"முகத்துக்கு அந்த முல்தானி மிட்டியை போடு. விசேஷத்துல முகம் எண்ணெய் வழியாமல் இருக்கும்" என்றதால் முகம் கழுவ பாத்ரூம் நோக்கி போனாள். முகம் கழுவி கண்ணாடியில் முகம் பார்த்தாள். வட்ட முகம், மாநிறத்திற்கு அதிகமான நிறம், வடிவான முக அமைப்பு என அழகாக இருந்தாள். இந்த அழகும், MBA படிப்பும் அவள் டீம் லீடர் பதவியும் தான் ஆகாஷ் குடும்பத்தை யாழினியை தேடி வரவைத்தது.யாழினியின் குடும்பம் நடுத்தர வர்க்கம். ஏதோ ஒரு கம்பெனியில் ஆபிஸ் அசிஸ்டண்ட் என்ற பெயரில் குப்பைக்கொட்டி குறை சம்பளம் பெற்று அதையும் வீண்செலவு செய்யும் அப்பா, குப்பையையும் கோமேதமாக்கும் அம்மா, IT ஊழியனான அன்பான அண்ணன் என வாழ்பவள் யாழினி. ஆடை ஆபரணங்கள் என ஆசை இல்லாமல் இனிய சிரிப்புடன் வலம் வருபவள். டீம் மக்களுக்கு அன்பான கேப்டன். புத்தகம், பாட்டு என தனக்குள் வாழ்பவள்.

முகத்துக்கு பேக் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வர, "ஒரு புக் கிடைச்சா போதும், ரூமுக்குள்ளேயே கெடக்குற" என்ற தாயின் புலம்பல் கேட்டது. சிரித்தபடி வந்து தாயின் அருகில் அமர்ந்தவள், "புக் இல்லனா, உங்க மகளுக்கு வேற தோழி யாரும்மா இருக்கா?" என்றாள். "மனுஷங்க கூட பேசி பழகு. அந்த மணிமேகலை அம்மாவைப் பாத்தா, 'ஊர்கதை ஊறுகாய் போல இருக்கு. இனி அவங்க கூட பேசியாகணுமே " என்று ஆலோசனை சொன்னார்.

அடுத்தவர் வீட்டுக்கதையை ஆர்வமாக பேசும் நபருக்கு 'ஊர்கதை ஊறுகாய்' என்று பெயர் வைத்து இருந்தார் அவர். பூரணியிடம் இப்படி பட்டப்பெயர் வாங்கி இருக்கும் மணிமேகலை வேறு யாருமில்லை, ஆகாஷின் தாய். சம்பந்தி
என்றாலும் மணிமேகலையின் இந்த குணம் பூரணிக்கு பிடிக்கவில்லை. போனில் பேசும்போதெல்லாம் சீரியல் கதை முதல் பக்கத்து வீட்டுக்கதை வரை பேசிவிடுவார். எதற்கு போன் பண்ணினார் என்பதை மறந்து கதையளந்துவிட்டு கடைசியில், "அப்புறம் பூரணி , எதுக்கு எனக்கு போன் போட்ட ?" என்று கேட்டுவைப்பார். தான் அழைக்கவில்லை, மணிமேகலை தான் தன்னை அழைத்தார் என்பதை புரிய வைத்து , அவர் போன் பண்ண காரணத்தைக் கண்டுப்பிடிப்பதற்குள் பூரணிக்கு அலுப்பாகிவிடும். கதை பேசுவதில் மட்டுமல்ல தற்பெருமை பேசுவதிலும் நிபுணர்.
அவர் பெற்ற பிள்ளைகளுக்கும் அந்த குணம் இருந்தது.

மணிமேகலை-சந்திரன் தம்பதிக்கு இரு பிள்ளைகள். மூத்தவள் ஆனந்தி, இளையவன் ஆகாஷ். ஆகாஷிற்கு தான் யாழினியை நிச்சயிக்கப்போகிறார்கள். ஆகாஷ் MBA படித்தவன், ஓரளவு உயரம், பார்க்கும்படியான அழகு என தரமான மாப்பிள்ளை.ஆனாலும் யாழினிக்கு அவன் வீண் பெருமைகள் பிடிக்கவில்லை. அக்காவும் தம்பியும் ஏதோ தமிழ் தெரியாதவர்கள் போல இரண்டு தமிழ் வார்த்தைக்கு ஒரு ஆங்கில வார்த்தையை சேர்ப்பார்கள். கேட்க சகிக்காது. நிச்சய தேதி முடிவானதும் ஒருமுறை யாழினியைப் பார்க்க வந்த ஆனந்தி, "எனக்கும் அக்கிக்கும் பீட்சா மேல மோர் லவ். என் வீட்டு குட்டி சாத்தான்களை அதுங்க டாடி கிட்ட விட்டுட்டு வெரி ஆஃபன் பிட்ஸா சாப்பிட போவோம். உனக்கும் பீட்ஸா பிடிக்கும்னா, யு ஆல்சோ கென் ஜாய்ன் வித் அஸ் ஆப்டர் மேரேஜ்" என்று சொல்லி வைத்தாள்.

அந்த பூடகமான பேச்சு யாழினிக்கு புரிந்தது. உங்கள் திருமணத்திற்கு பிறகும் நானும் என் தம்பியும் தான் வெளியில் செல்வோம். உனக்கு வேண்டுமானால் எங்களுடன் வரலாம் என்று சொல்லிவைக்கிறாள். சகோதரனுடன் பிறந்த பெண்களுக்கு உரிய உணர்வு தான் அது. இத்தனை நாள் நமக்கு முதலுரிமை தந்த சகோதரன் திருமணத்திற்கு பின்பு தன்னை விட்டு விலகிவிடுவானோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு. அதை புரிந்துக்கொண்டதால் யாழினி பதில் பேசாமல் இருந்தாள். அதோடு பீட்ஸா என்ற பெயரைக் கேட்டாலே அவளுக்கு பிடிக்காது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அந்த காய்ந்த ரொட்டியை அதிக விலை கொடுத்து வாங்கி உண்ணும் விருப்பம் இல்லை. அவளது தாய் செய்யும் கார பணியாரத்தின் சுவையை இந்த பீட்ஸா தர முடியாது என்பது அவள் எண்ணம். இதை உணராத ஆனந்தி அவளது இந்த ஊட்டச்சத்து உணவைப்பற்றி ஒரு மணி நேரம் பேசி விட்டு தான் சென்றாள்.இவர்கள் குடும்பத்துடன் எப்படி வாழ போகிறோம்? என்ற எண்ணம் யாழினிக்கு தோன்றாமல் இல்லை.

தன் யோசனைகளை ஒதுக்கிவிட்டு நிச்சயத்திற்கு தயாராகி கொண்டு இருக்கிறாள். திருமணத்திற்கு பின் மாற்றிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டாள். நிச்சயத்திற்கு அவள் அலுவலகத்தில் யாரையும் அழைக்கவில்லை. நிச்சயம் பெண் வீட்டு செலவு. சிறிய கோவில் மண்டபத்தில் நடத்தப்படுகிறது. திருமணத்திற்கு அனைவரையும் அழைக்கலாம் என முடிவு செய்திருக்கிறாள். நிச்சயத்தன்று மட்டும் விடுமுறை எடுக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறாள். மனிதர்கள் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறி விடுமா என்ன?

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
”கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே"

சென்னையில் பிரபலமான அந்த உணவகத்தின் மேசை மீது வைக்கப்பட்டிருந்த போனில் சிரித்தபடி இருந்தது யாழினியின் முகம். சுற்றி இருந்த மூன்று ஜோடி கண்களும் அதை பார்த்தது. "மச்சி, சிஸ்டர் சூப்பரா இருக்காங்க" என்றான் யஸ்வந்த், ஆகாஷின் நண்பன். ஆகாஷ் ஒரு மீட்டிங்கிற்காக அங்கு வந்திருந்தான். திடீரென அங்கு அவனது கல்லூரி நண்பர்களை காணவும் ஓடிவந்து பேசினான். தனக்கு பெண்பார்த்து இருப்பதை கூறி அவள் புகைப்படத்தையும் காட்டினான்.ஆகாஷும் அவள் அழகை புகழவும் உற்சாகமாகி போனான். "யாரோட செலக்ஷன்? இந்த ஆகாஷோட செலக்சன். பொண்ணு அழகு மட்டுமில்ல MBA கோல்ட் மெடல், *** கம்பெனி ல டீம் லீட். ரொம்ப நல்ல கேரக்டர். போன் கூட பேச மாட்டேன்னு சொல்லிட்டா. எங்கேஜ்மெண்ட் முடியனுமாம். ஒரு ரிலேட்டிவ் மேரேஜ் ல பாத்தேன். பிடிச்சி போச்சி. அம்மாவும் கணிச்சாங்க. கொஞ்சம் வசதி கம்மி தான். இருந்தாலும் சம்பாதிக்கிற பொண்ணு னு ஓகே பண்ணிட்டோம்.அவங்க அண்ணன் தான் துருவல் பார்ட்டி, மத்தபடி எங்களை நல்லா மதிக்குற குடும்பம். என் அம்மா செம ஹேப்பி" என்றான் பெருமையாக.
"பேர் என்ன?" திடீரென கேட்ட குரலில் இருவரும் திரும்பி பார்த்தனர். இவ்வளவு நேரம் இவர்கள் பேசுவதை குறுக்கிடாமல் கேட்டு இருந்த மற்ற நண்பன் கேள்வி கேட்டு இருந்தான். அந்த கேள்வியில் ஆகாஷ் ஆனந்த பட்டுப்போனான். ஏனெனில் கேள்வி கேட்டவன் கோடீஸ்வரன், இவர்களுடன் இளங்கலை முடித்துவிட்டு வெளிநாடு சென்று மேல்படிப்பு முடித்துவிட்டு வந்தவன் சுயமாக 'பாரு குரூப் ஆப் கம்பனி" என்று தொழில் செய்து வெற்றிகரமான இளம்தொழிலதிபனாக இருப்பவன். கல்லூரி நாட்களில் அவனிடம் நட்பு கொள்ள ஆகாஷ் முயற்சி செய்தான். யஸ்வந் அவனுடன் பள்ளிகாலம் முதல் நெருங்கிய நண்பன் என்பதை அறிந்து, அவனிடம் நட்பு காட்டினான். ஆகாஷின் குணம் அறிந்து அவர்களை இவனை நெருங்க விடவில்லை. இப்போது இத்தனை ஆண்டுகள் கழித்து திடீரென சந்தித்ததால் யஷ்வந் பேசுகிறான். இப்படி இருக்கும் போது தானாக அவன் கேள்வி கேட்டதில் ஆனந்தமாக "யாழினி" என்றான். "நீங்க ரெண்டு பேரும் என் எங்கேஜ்மெண்ட் வரணும்" என்று மண்டபம் முகவரி தந்து விட்டு போனான்.
யஷ்வந்திற்கு குழப்பமாக இருந்தது.அவனுக்கு ஆகாஷின் குணம் தெரியும். பணம் மட்டுமே அவன் குறிக்கோள். கல்லூரியில் அவன் செய்த லீலைகளை பார்த்திருக்கிறான். பெண்கள் விஷயத்தில் நிலையான குணம் இல்லாதவன். கல்லூரி விழாவில் பெற்றோரை அழைத்து வர சொன்னபோது அவன் தாய் செய்த அராஜகம் யஷ்வந்தே பார்த்து வெறுத்து இருக்கிறான். இப்படி குடும்பத்தில் ஒரு நல்ல பெண் எப்படி சமாளிப்பாள் என்று எண்ணினான். இத்தனை ஆண்டில் மாறி இருக்கலாம். அல்லது அந்த பெண் இவர்களை மாற்றலாம் என எண்ணியபடி "கிளம்பலாமா?" என தன் நண்பனிடம் கேட்டப்படி திரும்பியவன் அதிர்ந்தான். கண்களில் வேதனையை தங்கியிருந்த நண்பனை "என்ன ஆச்சுடா?" என்று கேட்டான் யஷ்வந். அவனிடம் தன் அலைபேசியை காட்டினான். இப்போது யஸ்வந்தின் கண்கள் அதிர்ச்சியைக் காட்டியது.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
யாழ்-4
"தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே சுடர் விளக்கினைப்போல்,
நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ!
கூண்டு கிளியினைப்போல் - தனிமை கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளையெல்லாம் - மனது வெறுத்து விட்டதடீ!"
அந்த சிறிய கிருஷ்ணர் கோவிலை ஒட்டி இருந்த சிறிய மண்டபத்தில் யாழினியும் அவள் குடும்பமும் அமர்ந்து இருந்தனர். அது கோவிலுக்கு சொந்தமான இலவச மண்டபம். சிறிய அளவில் விசேஷங்கள் நடத்திக்கொள்ள கோவில் நிர்வாகம் அனுமதி தந்து இருந்தது. தனியாருக்கு சொந்தமான அந்த கோவில் இந்த நல்ல செயலை செய்து வந்தது. மண்டப வாடகை கொடுக்க முடியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இது. திருமண செலவுகள் அதிக அளவில் இருப்பதால் யாழினி வீட்டில் நிச்சயம் செய்ய இந்த கோவில் மண்டபத்தை பயன்படுத்தி கொண்டார்கள். அவர்கள் வீடு இருக்கும் இடத்தை விட்டு தூரம் இருந்தாலும் இதனையே தேர்ந்தெடுத்தார்கள். அதில் ஆகாஷின் குடும்பத்திற்கு தான் கோபம். யாழினியின் அண்ணன் மாதவன் தான் பேசி சம்மதிக்க வைத்தான்.
ஆகாஷின் குடும்பம் வந்துவிட்டது. எல்லாரும் அவர்களை வரவேற்க எழுந்து வர, அவர்கள் வேறு யாரையோ வாயெல்லாம் பல்லாக வரவேற்றுக்கொண்டிருந்தார்கள். ஆகாஷின் தாய் மணிமேகலை பூரணியிடம் ஏதோ சொல்ல அவரும் அவர்களை வரவேற்று இருக்கையில் அமர செய்தார். பின் உள்ளறையில் இருந்த யாழினியிடம் சென்று "பாரு குரூப் எம்.டி மாப்பிள்ளை பிரண்டாம். குடும்பத்தோடு வந்திருக்காங்க" என்று காதில் சொன்னார். யாழினியோ அதை கவனிக்கும் நிலையில் இல்லை. அங்கும் இங்கும் அலைந்து ஓடியாடி வேலை செய்யும் தன் அண்ணனைப் பார்த்து கொண்டே இருந்தாள். கொஞ்ச நேரத்தில் அவளை அறையில் இருந்து அழைத்து வந்து சாமி கும்பிட கோவிலுக்குள் அழைத்து போனார்கள். நிச்சயத்திற்கு முன் சிறப்பு அலங்காரத்தில் இறைவனை தரிசிக்க வேண்டும் என்று ஏற்பாடு. சாமிக்கு அலங்காரம் செய்து ஆரத்தி காட்ட,அனைவரும் கண் மூடி வணங்கினர். கண்ணனை மனமுருகி வேண்டினாள் யாழினி." இன்று உன் அருளால் தொடங்கும் இந்த புது உறவு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்.எங்கள் வாழ்வில் குறையாத அன்பும் நிம்மதியும் நிறைந்திருக்க வேண்டும்." என கண்களை மூடி பிரார்த்தனை செய்தவள், ஏதோ குறுகுறுப்பு உணர்வு தோன்ற கூப்பிய கரங்களுடன் கண்களை திறந்தாள். அங்கு வெகுஜாக்கிரதையாக அவளை தீண்டாமல் அவள் கழுத்தில் புதுத்தாலியைக் கட்டியபடி இருந்தன இரு வலிய கரங்கள்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
யாழ்-5
"பாயின் மிசை நானும் - தனியே
படுத் திருக்கை யிலே,
தாயினைக் கண்டாலும் - சகியே!
சலிப்பு வந்த தடீ!
வாயினில் வந்ததெல்லாம் - சகியே!
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன்; - சகியே!
நுங்க ளுறவை யெல் லாம்."
மின்சாரம் பாய்ந்தது போன்ற அதிர்வில் நிமிர்ந்து பார்த்தாள் யாழினி. எதிரில் நின்று யாழனியை தீர்க்கமான பார்வை பார்த்தபடி அவளுக்கு மாங்கல்யம் அணிவித்து கொண்டு இருந்தான் அவன். ஆகாஷின் நண்பன் என்று அவன் தாய் பெருமைப்பட்டுக் கொண்டு இருந்த பாரு குரூப் கம்பெனி முதலாளி. யாழினி சுதாரித்து வாய் திறக்கும் முன், சாமி தரிசனம் காண கண் திறந்த பூரணி "என்ன இது?" என அலறிய சத்தத்தில் அனைவரும் கண் திறந்தனர்.
"ஏய்!!!" என்று கூவியபடி அந்த நெடியவனின் சட்டையைப் பிடிக்க பாய்ந்த மாதவனை தடுத்தான் யஷ்வந்த். அந்த இடமே பரபரப்பானது. நிச்சயத்திற்கு வந்த இடத்தில் ஒரு திருமணமே நடந்ததால், விருந்தினர்கள் தங்களுக்குள் ஏதோ பேச தொடங்கினர். கோவிலில் கூட்டம் சேர தொடங்க, ஆகாஷின் தந்தை முதலில் சுதாரித்தார். "எதுவானாலும் மண்டபத்தில் போய் பேசலாம்" என அனைவரையும் அழைத்து சென்றார். "என்ன தம்பி இப்படி பண்ணிட்டிங்க?" என்று அவனிடம் கேட்டார். "என்னப்பா விசாரணை நடத்துறீங்க? இவன் நம்ம ஆகாஷ் மேல ஏதோ கோவம் வாச்சிருக்கான். அதுக்கு பழிதீக்க தான் இப்படி அவன் நிச்சயத்தை நிறுத்தி இருக்கான்" என்று ஆனந்தி குதித்தாள். "பெண்ணுக்கும் இந்த பையனுக்கும் முன்னமே பழக்கம் இருக்கா?" என்று ஒரு பெண்மணி கேட்டார்.கோபம் பொங்கும் முகத்துடன் "பார்த்துக்கோங்க , எல்லாரும் என்ன பேசிக்கிறாங்க தெரியுதா? என் தங்கச்சி பேர கெடுக்கதான் இந்த நிச்சயத்திற்கு வந்தீங்களா?" கத்தினான் மாதவன். அனைவரின் கேள்விகளையும் கேட்டுக்கொண்டிருந்தாலும், அதிர்ந்து நின்றிருந்த யாழினியையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அவள் கண்ணீர் விடவில்லை, பதறவில்லை, அமைதியாக தலை குனிந்து இருந்தாள். பின் மெதுவாக திரும்பி அவன் தாயைப் பார்த்தான். அவரும் உணர்வு எதையும் முகத்தில் காட்டாமல் அதிர்வுடன் நின்றிருந்தார். குற்ற உணர்வு தோன்றினாலும் அதை தனக்குள் விழுங்கிவிட்டு பூரணியை நோக்கி இருகரம் குவித்தான்."இங்க பாருங்க அத்தை, எனக்கு உங்க மகளை ரொம்ப பிடிச்சிருக்கு, முறைப்படி பெண் கேட்டு கல்யாணம் பண்ண எனக்கு அவகாசம் கிடைக்கல. அவளை வேற யாருக்கும் விட்டு கொடுக்கவும் என்னால முடியாது. அதான் என் பேரெண்ட்ஸ் கிட்ட கூட உண்மையை சொல்லாம இங்க கூட்டிட்டு வந்து என் கல்யாணத்தை நடத்திட்டேன். அவளை இனி எப்பவும் சந்தோஷமா நா பாத்துப்பேன். என்னை நம்பி என் மனைவியா அவளை என்கூட அனுப்பி வைங்க" என்றான். அரை மணி முன்பு வரை ஏதோ கதாநாயகன் போல் மணிமேகலையால் புகழப்பட்டவன், உறவுகளால் ஆச்சரியமாக பார்க்கப்பட்டவன், தன் முன் கைகூப்பி நிற்பதையும், அவர் மகளை மனைவியாக ஆக்கிக்கொண்டதையும் எண்ணி திகைத்து நின்றார். என்ன பதில் சொல்வது என குழப்பமாக இருந்தது.
அவனது தந்தை அவனின் தோள்தட்டி நான் பார்த்துக்கொள்கிறேன் என்பது போல் தலையாட்டினார். பின் அனைவரையும் பார்த்து"இங்க பாருங்க. என் மகன் இப்படி பண்ணுவானு எதிர்பாக்கல. அவன் பன்னது தப்புதான். பட் எப்படி இருந்தாலும் திருமணம் முடிஞ்சிடுச்சி. வாழ்த்திட்டுபோய் எல்லாரும் சாப்பிடுங்க" என்றார். அனைவரும் மெதுவாக சாப்பிட சென்றனர். ஆகாஷின் குடும்பத்திடமும் பேசி அனுப்பிவைத்தார்.ஆகாஷின் அம்மாவும் அக்காவும் கோபப்பட்டாலும் பாரு குரூப் குடும்பத்தின் உயரம் தெரிந்ததால் அங்கிருந்து கிளம்பினர். ஆகாஷ் உச்சப்பட்ச கோபத்திலும் இயலாமையாலும் ஓடி சென்று காரில் அமர்ந்தான்.
இப்போது இரு குடும்பம் மட்டும் தனித்து மண்டபத்தில் இருந்தனர்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
யாழ்-6
"வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !
வருவாய், வருவாய், வருவாய் !
உருவாய் அறிவில் ஒளிர்வாய் - கண்ணா !
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் - கண்ணா !
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா !
கமலத்திருவோ டிணைவாய் - கண்ணா !"
அவன் தந்தை இப்போது யாழினியின் தந்தையைப் பார்த்தார். "இங்க பாருங்க, என் பையன் செஞ்சது பெரிய தப்புன்னு எங்களுக்கே தெரியும். க்ளோஸ் பிரென்ட் எங்கேஜ்மெண்ட் டாடி, கண்டிப்பா நீங்களும் மம்மியும் வரணும் னு சொன்னான். திடீர்னு மேரேஜ் பண்ணிப்பான்னு நங்களுமே எதிர் பாக்கல. எங்களுக்கும் அதிர்ச்சி தான். ஆனா முடிஞ்சத பத்தி பேசி ஒன்னும் ஆக போறது இல்ல. எங்க குடும்பம் பத்தி எல்லாருக்கும் தெரியும் . எங்க தொழில் ஆடை உற்பத்தி. என் மகன் அவன் அம்மா பேர்ல சொந்தமா கன்ஸ்ட்ரக்ஸன் பண்றான். எப்படி நடந்திருந்தாலும் இது எங்க பையன் திருமணம். உங்க மக தான் அவன் மனைவினு நாங்க நினைக்கிறோம் . ரெண்டு நாள் டைம் எடுத்துக்கோங்க . எங்களை பத்தி விசாரிங்க, பிறகு எங்க வீட்டுக்கு உங்க பொண்ண அனுப்புங்க போதும்"என்றார். மேகநாதன் குழம்பிப் போய் நின்றார். மாதவன் தான் வாய் திறந்தான்."நாங்க இப்போ இந்த திருமணத்தால் குழம்பி போய் இருக்கோம். வீட்டுக்கு போய் பேசிட்டு சொல்றோம்." என்றான்.
இத்தனை கலவரத்திற்கும் காரணகர்த்தா இப்போது மறுபடியும் வாய் திறந்தான். "பாருங்க மச்சான்,யாழினி என் மனைவி, இப்பவே இப்படியே கூட்டிட்டு போக நா ரெடி. ஆனா என்ன பத்தி விசாரிக்க உங்களுக்கு டைம் வேணும்னு டாடி சொல்றதால ஒத்துக்குறேன். பேசி முடிவு பண்ணிட்டு எனக்கு கால் பண்ணுங்க" என்று தன் மொபைல் எண்ணை கொடுத்தான். மாதவன் எண்ணையும் வாங்கிக்கொண்டான். அவனது நிதானம் மாதவனையும் நிதானிக்க செய்தது.மாதவன் அனைவரையும் அனுப்பிவைத்தான்.தங்கையிடம் வந்தான். "யாழி வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வா" என அழைத்துக்கொண்டு போனான். வீட்டுக்கு வந்ததும் சாமி கும்பிட்டு, உடை மாற்றி வந்து அமர்ந்த மகளின் தலையை வருடினாள் பூரணி. மகளின் திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த தாய் இந்த திடீர் திருமணத்தால் வேதனைப்பட்டாள்.
உணவு உண்ணாமல் இருந்த அம்மாவையும் தங்கையையும் வற்புறுத்தி உணவூட்டி ஓய்வெடுக்க சொல்லி அனுப்பிய மாதவன் , தன் செல்போனில் யாரிடமோ பேசினான்.
தனது அறையில் ட்ரஸ்சிங் டேபிள் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தபடி அமர்ந்திருந்த யாழினி பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள். அவளது கழுத்தில் இருந்த தாலி நடந்த எதுவும் கனவல்ல என்றது. அவன் இதனை கழுத்தில் கட்டியதை நினைத்தாள். அவளது திருமணம் நடந்து இருக்கிறது, அவள் அனுமதியின்றி, பெற்றோர் சம்மதமின்றி, அறிமுகமில்லா ஒருவனுடன். ஆனால் அவனை எங்கோ பார்த்தது போல் தோன்றியது. அவன் மேல் கோபம் வந்தது. 'எவ்வளவு துணிச்சல் அவனுக்கு? என் வாழ்வை முடிவு செய்ய அவன் யார்?பிடித்தால் தாலிக்கட்டுவானா? அவனை கேட்க ஆளில்லையா? அவளது பெற்றோரும் கூட ஒன்றும் சொல்லவில்லையே! அவன் பணக்காரன் என்பதாலா? நான் எதற்கும் அடிபணிய மாட்டேன்' என்று உள்ளுக்குள் முடிவெடுத்தவள் அதை செயலிலும் காட்டினாள்
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
யாழ்-7
"பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்
பீழையிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே. "
மறுநாள் காலை எப்போதும் போல் அலுவலகத்திற்கு கிளம்பினாள். காலர் வைத்த சுடிதார் அணிந்திருந்தாள். ஆச்சரியமாக பார்த்த பெற்றோரிடம் விடைபெற்று அண்ணனுடன் அலுவலகம் வந்துவிட்டாள். மாதவனுக்கு தங்கை உடனே மனமாற்றம் அடைந்ததில் மகிழ்ச்சியே. அலுவலகத்தில் யாருக்கும் அவள் நிச்சயம் பற்றி சொல்லாததால் யாரும் கேள்வி கேட்கவில்லை. யாழினியின் தோழி லக்ஷாக்கு மட்டும் பெண் வீடு பார்க்க வருவதாக சொல்லி இருந்தாள். எனவே அவள் மட்டும் "வாட் அபௌட் எஸ்டர்டே?" என கேட்டு கண் அடித்தாள். "குட்" என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லி விட்டு வேலையை தொடங்கினாள்.
யாழினி யாரிடமும் அதிகம் ஒட்டமாட்டாள். வேலையில் இறங்கிவிட்டால், ஓரிரு வார்த்தைகளை தவிர்த்து பேசவே மாட்டாள். எனவே லக்ஷாவும் அமைதியாக வேலை செய்தாள். இப்படியே இரண்டு நாட்கள் சென்றது. எப்போதும் திங்கள் அன்று தான் யாழினிக்கு விடுமுறை என்பதால் யாழினி தலைக்கு குளித்து விட்டு ஹாலில் அமர்ந்து சாம்பிராணி போட்டுக்கொண்டு இருந்தாள். அப்போது அங்கு டிசர்ட், டிராக் அணிந்தபடி ஹால் சோஃபாவில் மாதவன் வந்து அமர்ந்தான். "அண்ணா ஆபிஸ் போகல?" என்று கேட்டாள் யாழி.
"இல்லடா ஒரு முக்கியமான வேலை.அதான் லீவ் போட்டுட்டேன்"
"அப்படி என்ன முக்கியமான வேலை உமக்கு?"
"எம் தங்கையுடன் பேசும் வேலை தான்"
இப்போது யாழினி விளையாட்டு தனம் இன்றி அவனை கூர்ந்து பார்த்தாள்."சொல்லு" என்றாள். "என்ன முடிவு பண்ணியிருக்க?" கேட்டான் மாதவன்.
"எதை பற்றி?"
"உன் கல்யாணம் பற்றி"
"நான் என்ன முடிவு பண்ணனும் னு நீ நினைக்கிற?"
"மாப்பிள்ளை வீட்டுக்கு போகும் முடிவை எடுப்பேன்னு"
"எந்த மாப்பிள்ளை?"
யாழினியின் இந்த கேள்வியில் மாதவனுக்கு கோபம் வந்தது. தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன் "பாரு யாழி,மாப்பிள்ளை பி.இ. சிவில், எம்.எஸ். ஆர்கிடெக்சுரல் இன்ஜினியரிங். அப்பா தொழில் கடல் போல இருந்தும், சொந்தமா அவங்க அம்மா பேர்ல தொழில் பண்றார். இந்த 2 நாள்ல நான் நல்லா விசாரிச்சிட்டேன். தொழில் உலகத்துல அவருக்கு இளம்சிங்கம் னு பேராம் . பெண்களை தூரத்திலேயே நிறுத்தி வைக்கிறவராம்.அழகு, அறிவு, குணம் எல்லாமே உள்ள தகுதியான பையன்.நீ பயப்படாம அவரை ஏத்துக்கலாம்" என்றான்.
அமைதியாக அவன் சொன்னதைக் கேட்டவள், "எல்லாம் இருக்கலாம் அண்ணா. ஆனா ஒரு பொண்ணோட உணர்வுகளை மதிக்கலையே. ஏதோ ரோட்டோர செடியை பிடுங்கிட்டு போவது மாதிரி என் அனுமதி இல்லாமல் தாலியைக் கட்டிட்டாரே. ஒருவேளை நா ஆகாஷ் மேல ஆசை வைத்திருந்தால் என்னாவது? பிறப்பினால் வரும் உறவுகளை நாம் முடிவு செய்ய முடியாது. ஆனால் வாழ்க்கை துணையும், நட்பும் நாம முடிவு பண்ணவேண்டிய உறவு இல்லையா? குறைந்த பட்சம் என் குடும்பம் முடிவு செஞ்சதா இருக்கலாமே. இங்கு அதுவும் இல்லையே. தாலிக்கட்டிட்டா கணவனே கண் கண்ட தெய்வம் னு நா அவன் பின்னாடி போகனுமா? உண்மைய சொல்லணும்னா அவன் பண்ணது குற்றம். நா அவனை போலீஸ்ல புடிச்சி குடுத்து இருக்கணும், அதிர்ச்சியில இருந்ததால் அதை செய்யல. நீங்களும் அவனை ஏதும் செய்யாம விட்டுட்டிங்க. இப்போ என்னடான்னா அவன் வீட்டுக்கு போக சொல்றிங்க. என்ன நியாயம் இது? " என்று குமுறிய தங்கையை அணைத்துக்கொண்டான் மாதவன்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Team
Messages
57
Reaction score
45
Points
18
யாழ்-8
"தந்திரங்கள் பயிலவுஞ் செய்குவான்;
சவுரியங்கள் பழகவுஞ் செய்குவான்;
மந்திரத் திறனும் பல காட்டுவான்;
வலிமையின்றிச் சிறுமையில் வாழ்வான்.
காலம் வந்து கைகூடும் அப்போதில் ஓர் கணத்திலேடதிதாக விளங்குவான்;
ஆல கால விடத்தினைப் போலவே,
அகில முற்றும் அசைந்திடச் சீறுவான்."
சிறிதுநேரம் அமைதியாக தங்கையை அணைத்தபடி இருந்த மாதவன் "யாழிமா அண்ணன் சொல்றத கோபப்படாம கேளுடா. நீ பேசுறது எல்லாமே சரி தான். எவனோ ஒருத்தன் தாலிக்கட்டியதும் உடனே நாங்க உன்னை அவன் கூட அனுப்பலடா. நல்லா விசாரிச்சி எல்லா வகையிலும் சரியான பையன்னு தெரிஞ்சதால அனுப்பறோம். தப்பானவனா இருந்தா நீ சொன்னபடி அவனுக்கு தண்டனை கொடுக்கலாம், ஆனா இப்போ அந்த அவசியமே இல்லடா. யோசிச்சி பாரு , உன் நிச்சயம்னு நம்ம சொந்தம் எல்லாம் வந்தாங்க. அவங்க முன்னாடி தான் உன் கல்யாணம் நடந்து இருக்கு. மாப்பிள்ளையோட தகுதி தெரிஞ்சதால தான் எல்லாரும் அமைதியா போய்ட்டாங்க. இல்லனா, பெரிய பஞ்சாயத்தே நடந்து இருக்கும். இப்போ நீ கல்யாணமான பொண்ணு. மாப்பிள்ளை வீட்டுக்கு போக மாட்டேன்னு சொன்னா, எல்லாரும் நம்மள தான் குறை சொல்வாங்க. பெரிய இடம் கெடச்சி இருக்கு. வீண் பிடிவாதம் பண்றோம்னு நெனைப்பாங்க. நாங்க பாத்த பையன்னா உனக்கு சம்மதம் தான? இவரை நாங்க தான் பார்த்திருக்கோம்னு நெனச்சிக்கோ" என்று இதமாக பேசினான்.
தலைகுனிந்து அண்ணன் சொன்னதை கேட்டுக்கொண்டு இருந்தவள், "இப்போவே நா அட்ஜஸ்ட் பண்ணவும், மனச தேற்றிக்கொள்ளவும் பழகனுமா? இன்னும் வரும் காலங்களிலும் அவன் இப்படியே இருந்தா, அதுவே என் வாழ்க்கைன்னு ஆகிடாதா? இப்போ பிடிச்சிருக்குனு தாலிக்கட்டிட்டான். நாளைக்கு பிடிக்கலனா விரட்டி விட்டுடுவானா?" என்றாள். மாதவன் தங்கையின் தலையை வருடினான் . "யாழி மாப்பிள்ளை உன் மேல ரொம்ப அன்பா இருக்கார். நா அவர்கிட்ட போனிலும் நேரிலும் பேசினேன். அப்போ உன் மேல எவ்ளோ ஆசையா பேசுறார் தெரியுமா? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லயாடா?" என்று கேட்டான்.
கண்ணில் வலியுடன் அண்ணனை பார்த்தவள் "இப்படியெல்லாம் பேசாத அண்ணா. உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லாம போகுமா? எனக்கு அந்த பையன் மேல தான் நம்பிக்கை வரல"என்றாள். "பயப்படாத யாழி, மாப்பிள்ளை உன்னை நல்லா பார்த்துப்பார்னு எனக்கு தோணுது. எதிர்காலத்தில் உனக்கு ஏதாவது பிரச்சனைனா 'அண்ணா'னு ஒரு குரல் குடு. நா பார்த்துக்கிறேன்" என விளையாட்டாக பேசியபடி மீசையை முறுக்கினான் அவன். இறுக்கம் தளர்ந்து லேசாக புன்னகைத்து " உம்மை போல புல்தடுக்கி பயில்வானை எதுக்கு கூப்பிட போறேன்? நானே பிச்சிடுவேன்" என்றாள்."அப்போ உனக்கு மாப்பிள்ளையை ஏத்துக்க சம்மதம் தானடா?" தயக்கமாக கேட்டவனை கூர்ந்து பார்த்தவள் ,"நீ எனக்கு எப்பவுமே நல்லது தான் செய்வேனு எனக்கு தெரியும். நீயே இவ்ளோ சொல்றனா சரியாதான் இருக்கும். அதனால சம்மதிக்கிறேன்" என்றாள். தங்கையின் மனம்மாறிவிட்டதை எண்ணி மகிழ்ந்தவன் "அப்போ மாப்பிள்ளைக்கு போன் போடவா?" காரியமே கண்ணாக கேட்டான் மாதவன். "எதுக்கு?"என்று கோபமாக கேட்டாள் தங்கை. "உன் சம்மதத்தை சொல்ல தான்" என்றவனை முறைத்தவள் ,"அவனே தான தாலிக்கட்டினான், அவனே மறுபடியும் கேட்கட்டும்" என்றாள். மாதவனும் சரி என தலையாட்டியபோது அவனது அறையில் இருந்து போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 
Top Bottom