Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL வான்சூழ் உலகு - Tamil Novel

Status
Not open for further replies.

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 50


அடுத்த நாள் மதியத்திற்கு மேல், பயணத்தில் வாடி வதங்கிப் போயிருந்தனர் ஸ்வேதாவும் ரோஷினியும். வருணிடம் மறுபேச்சுக் கூடப் பேச முடியாமல், அவனது தோளில் சாய்ந்தபடி நடந்து கொண்டிருந்தாள் ஸ்வேதா.


"இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்" என்று ஸ்வேதா கேட்க


"அதோ அந்த முந்திரித் தோப்பைத் தாண்டுனா வந்துடும். முன்னாடியே சொல்லிருந்தா பைக் வந்துருக்கும் கூப்பிட்டுப் போக" என்றான் வருண்


"அப்போ அவங்களுக்குத் தெரியாதா, நாம வரோம்ணு" என்று ஸ்வேதா கேட்டிட


"நான் வரேன்னு தெரியும்..." என்று இழுத்தான் வருண்


"என்ன நிறைய பேர் இருக்காங்க. எதாவது ஃபங்க்ஷனா" என்ற ஸ்வேதா வருணிடம் இருந்து விலகி நடக்க


அவளது கையை இழுத்துத் தன் தோளில் வைத்துப் பிடித்துக் கொள்ளச் செய்த வருண் "ஆமா நிச்சயதார்த்தம்" என்று பதில் மொழிந்தான்


"யாருக்கு உங்க தம்பிக்கா" என்று ஸ்வேதா கேட்க, வருண் மெதுவாகப் புன்னகைத்துத் தலையாட்டினான்


"இன்னும் கொஞ்சம் முடி வளந்த பிறகு வந்துருக்கலாம். எல்லாரும் விநோதமா பாக்கப் போறாங்க" என்றபடி ஸ்வேதா தனது தலையை வருடிக் கொள்ள


"போதும் போதும். இப்போ தான் பெங்களூர் ஃபிகர் மாதிரி இருக்க" என்று கண் சிமிட்டினான் வருண்


"ரோஷினி முன்னாடி..." என்று ஸ்வேதா சீற்றத்துடன் முறைக்க


"இப்படிலாம் பேசக் கூடாதா. அவளுக்குக் காதுல விழுந்துருக்காது விடேன்" என்றான் வருண்


"உங்கள அப்புறமா கவனிச்சுக்குறேன்" என்று ஸ்வேதா முணுமுணுக்க, சுற்றி இருந்தவர்கள் இவர்களையே கவனிக்க ஆரம்பித்தனர்


"இவங்களாம் உங்க சொந்தக்காரங்க தான. ஏன் பேச மாட்டங்குறாங்க" என்று ஸ்வேதா கேட்க


வருணின் அருகில் அவசரமாய் வந்த அவனது தம்பி, அவனது பெட்டியை வாங்கிக் கொண்டபடி


"எவ்ளோ மெதுவா வர. என் வாழ்க்கையே அங்க ஊசலாடிட்டு இருக்கு. ஏன்டா இதுலயுமா லேட் பண்ணுவ" என்று பதற்றத்துடன் கேட்டான்


"அதான் வந்துட்டேன்ல... இது" என்று வருண் அறிமுகப்படுத்த நினைக்க


"எனக்குத் தெரியும். ஸ்வேதா அண்ணியும் ரோஷினியும் தான. ஹாய் அண்ணி, நாம அப்புறம் பேசலாம்" என்றவன் அவர்களிடம் இருந்து நழுவிக் கொண்டான்


வருண் வாசலில் போய் நிற்க, அனைவரின் பார்வையும் அவர்களின் மீதே இருந்தது. அவள் மெதுவாகத் தன் கையை விலக்க முயல, அவனோ விடாமல் பிடித்துக் கொண்டான்.


வெளியில் வந்த வருணின் அப்பா "யாருடா இது... உன் ஃப்ரெண்டா" என்று கூர்ந்த பார்வையுடன் கேட்க


வருணோ ரோஷினியைக் கையில் தூக்கிக் கொள்ள, கொட்டாவி விட்டபடி இருந்தவள் "தூக்கம் வருதுப்பா" என்றபடி அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்


அடுத்த நிமிடம் அங்கு பெரிய சலசலப்பு ஏற்பட, ஸ்வேதா முதலில் எதையும் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள். வருணின் தந்தை சத்தம் போட, பதிலுக்கு இவனும் பேச, நடுவில் வந்த வருணின் தாயார் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தபோது தான் சற்றே இரைச்சல் அடங்கியது. அவர்கள் பேசியதில் இருந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிச்சயதார்த்தம் வருணுக்காக தான் என்பதை ஸ்வேதாவால் புரிந்து கொள்ள முடிந்தது.


இறுதியாக அந்தப் பெண்ணின் தந்தை "உன்ன நம்பி தான அவள வச்சிருந்தேன். இப்போ திவ்யாவ யாரு கட்டிப்பா" என்று முறையிட


"நான் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லனு எத்தனையோ தடவ சொல்லிட்டேன் மாமா. என்னால தான் உங்க பொண்ணு வாழ்க்கைக் கெட்டுப் போச்சுனு சொல்லாதீங்க. எனக்கு பதிலா என் தம்பி அவளைக் கட்டிப்பான்" என்று வாக்களித்தான் வருண்


"நீயே இப்படிக் கல்யாணம் ஆனதைக் கூட மறைச்சுப் பிள்ளையோட வந்து நிக்குற. உன் தம்பிய மட்டும் எப்படி நம்புறதாம்" என்று திவ்யாவின் தாய் வாய்ப் பொத்தி அழ


"தருண்... இங்க வாடா. இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதம் தான" என்று வருண் சத்தமாகக் கேட்டான்


"நீங்க சொன்னா சரிங்க தான் அண்ணா" என்று தருண் பவ்யமாகக் கூற


"அப்புறம் என்ன மாமா. இதே வீடு வாசல்ல அவனுக்கும் பங்கு இருக்கு. நல்ல வேலைலயும் இருக்கான். உங்க பொண்ணுக்கு வேணா விருப்பமானு கேட்டுக்கோங்க. என் தம்பி நான் சொல்லுறத மீற மாட்டான்" என்று வருண் சொன்னான்


"என் பொண்ணும் என் பேச்சை தான் கேப்பா" என்றபடி துண்டை உதறித் தோளில் போட்டார் வருணின் மாமா


மாலைக்குள் தருணுக்கும் திவ்யாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிய, ரோஷினியைத் தன் தாயிடம் தூங்க வைத்த வருண் ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு முந்திரி தோப்பினுள் சென்றான்


வருண் ஒரு மரத்தின் மேல் ஏறி அமர, "இங்க என்ன தான் நடக்குது. எனக்கு ஒன்னும் புரியல" என்றாள்

ஸ்வேதா சலிப்புடன்
அவளின் கையைப் பற்றி மேலே தூக்கியவன் "ஷார்ட்டா சொல்லணும்னா, எங்க அம்மாவுக்கும் தம்பிக்கும் எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, குழந்தை இருக்குனு ரொம்ப நாள் முன்னவே சொல்லி வச்சுட்டேன். திவ்யாவும் தருணும் லவ் பண்ணிட்டு இருந்தாங்க, அவங்களையும் இப்போ சேத்து வச்சாச்சு. அவ்ளோ தான்" என்றான் காதருகில்


"அவ்ளோ தான் உங்க வீட்டுல இருக்கறவங்களோட ரியாக்ஷனா... ரோஷினி உன் குழந்தைனு சொன்னதும் நம்பிட்டாங்களா" என்று ஸ்வேதா வியப்புடன் கேட்க


"நான் வருஷக் கணக்கா ஊர்ப் பக்கமே வரல. அதனால உடனே நம்புறாங்க. அது தான நமக்கும் வேணும்" என்றவன் அவளது இடுப்பைப் பற்றி அருகில் இழுக்க, கால்களில் இருந்த செருப்பு நழுவிக் கீழே விழுந்தது


"ஹே... என்ன பண்ணிட்டு இருக்க நீ. விழுந்துடப் போறோம். கைய எடு" என்று ஸ்வேதா முதல் தொடுகைக்கே சிணுங்க


"ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... சத்தம் போடாத. யாராச்சும் கேட்டா தப்பா நினைப்பாங்க" என்றவன் அவளை இறுக்கி அணைத்தான்


அவளுக்கு உடலெல்லாம் கூசி, வெட்கம் பொங்கி வழிந்த கணத்தில் "ஆஹ்ஹ்ஹ்" என்று கத்தி வைத்தாள்


அவள் காதோரம் முகத்தை வைத்தவன் "இன்னும் எதுவுமே பண்ணலையே" என்றான் கிசுகிசுப்பாய்


"ம்ப்ச்ச்... கட்டெறும்பு கடிச்சுருச்சு" என்றாள் ஸ்வேதா வலியில் முகம் சுளித்து


"எங்க" என்றவன் எறும்பு கடித்து வீங்கியிருந்த தோள்பட்டையில் அதை விட வலுவாகக் கடித்து வைக்க, எறும்பு கடித்த விறுவிறுப்பிலும் இவன் செய்ததால் ஏற்பட்ட குறுகுறுப்பிலும் தாமதிக்காமல் மரத்திலிருந்து கீழே குதித்து இருந்தாள் ஸ்வேதா


"ஏய், எங்க போற" என்று வருண் பரிதாபமாகக் கேட்க


"போடா ஃப்ராடு" என்றவள் தோள்பட்டையைத் தேய்த்தபடி வீட்டை நோக்கி ஓடினாள்


வீட்டினுள் நுழைந்தவளை வருணின் அப்பா முறைத்துப் பார்க்க, அங்கு வந்த வருணின் அம்மா "வாம்மா குளிக்கப் போகலாம்" என்று அழைத்துச் சென்றார்


"நீயும் இதுக்கெல்லாம் கூட்டா... நடத்துடி நடத்து" என்று தந்தை சிடுசிடுப்புடன் கூற


"அவரு கிடக்குறாரு. முரட்டு மனுஷன் எப்பவும் இப்படி தான் பேசுவாரு" என்ற வருணின் அன்னை ஸ்வேதாவுடன் சிறிது நேரத்தைக் கழித்தார்


நன்றாகக் குளித்து உண்டு முடித்த ஸ்வேதா அப்படியே படுத்து உறங்கியும் போனாள். அவள் எழுந்த போது அருகில் தூங்கிக் கொண்டிருந்த ரோஷினியைக் காணவில்லை. ரோஷினி எங்கே என்று ஸ்வேதா தேடிச் செல்ல, அவளோ வருணின் உறவினர் ஒருவர் வைத்திருந்த குழந்தையின் அருகில் அமர்ந்து இருந்தாள்.


"தம்பிய என் கிட்டத் தாங்க" என்று ரோஷினி கேட்க


"இது தம்பி இல்ல பாப்பா" என்றார் அக்குழந்தையின் அம்மா


"எனக்குத் தம்பி தான் வேணும்" என்று ரோஷினி சொல்ல


அருகில் இருந்த தருண் "உனக்குத் தம்பி தான வேணும்" என்று கேட்டபடி அவளைத் தூக்கிக் கொண்டு, தங்கள் தாயிடம் பேசிக் கொண்டிருந்த வருணிடம் சென்றான்


"டேய் அண்ணா... ரோஷினிக்கு என்னமோ வேணுமாம் கேளு" என்று தருண் சொல்ல


பின்னாலே வந்து நின்றிருந்த ஸ்வேதா அவசரமாய் "அதெல்லாம் எதுவும் இல்ல. ரோஷினி வா கார்ட்டூன் பாக்கலாம்" என்றாள் முந்திக் கொண்டு


"அம்மா... என்னமா அண்ணி இப்படி வெக்கப்படுறாங்க" என்று தருண் புன்கையுடன் சொல்ல


"ஏன் என்ன நடந்துச்சு. ரோஷினி தங்கம் என்ன வேணும்... கேளுமா" என்றார் வருணின் தாய்


"எனக்கா... தம்பி வேணும்" என்று ரோஷினி உரக்கச் சொல்லிக் கொண்டிருக்க, ஸ்வேதா அங்கிருந்து வேகமாக நழுவினாள்


தெடர்ந்து வந்த அவர்களின் சிரிப்பொலியோ அவளைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தது. இப்போது கண்களைக் கூட மூட முடியாமல், ஸ்வேதா படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். நேரம் கழித்து ரோஷினியோடு வருண் உள்ளே வர, உடனே கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். ரோஷினியை அவளுக்கு அருகில் படுக்க வைத்தவன், அதற்கு பிறகு எந்தச் சத்தமும் எழுப்பவில்லை. என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக ஸ்வேதா திரும்ப, வருண் அப்போது தான் வெறும் வேஷ்டியுடன் நின்றபடி அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.


மறுபடியும் கண்களை மூடிக் கொள்ளலாம் என அவள் திரும்ப "தூக்கம் வரலையா" என்று கேட்டான் வருண்


ஸ்வேதா முகத்தை அவனுக்குக் காட்டாமல் அமைதியாகவே படுத்திருக்க, "ஏமாத்துக்காரி" என்று இதழ் விரித்துச் சொல்லியபடி அருகில் வந்தான்


"ஏய் எழுந்திருடி" என்று அவன் சொல்ல, போர்வையை இழுத்து முகத்தில் மூடிக் கொண்டாள் ஸ்வேதா


வெட்கத்தில் சுருண்டு கிடந்தவளை அப்படியே தூக்கியவன், கட்டிலில் இருந்து தள்ளிச் சென்று அவளைக் கீழே கிடத்தினான்


அவளுடன் அவன் ஒரு போர்வையில் தஞ்சம் புக "உங்களுக்குத் தூக்கம் வரலையா" என்றாள் ஸ்வேதா வேறெங்கோ பார்த்தபடி


அவளது முகத்தை நேராக்கிப் பார்த்தவன் "நான் சொன்ன நாள் வந்துடுச்சு பாப்பு. இனி என் கிட்டருந்து தப்பிக்க முடியாது" என்றான் மர்மப் புன்னகையுடன்


"ரோஷினி சின்ன பொண்ணு. விவரம் தெரியாம கேட்டுட்டா" என்று ஸ்வேதா சமாளிக்க


"சரி விடு. எத்தன நாளைக்கு தான் இப்படியே இருக்கன்னு பாக்குறேன்" என்றவன் அவளிடம் இருந்து விலகி எழுந்தான்


எழ முயன்றவனைத் தோளோடு இறுக்கிப் பிடித்தவள் உணர்ச்சி வசத்தில் அவன் முதுகில் முத்தம் பதித்து ஒன்றினாள்


"பெரிய பாப்பாக்கும் எதோ தரணும் போலவே" என்றவன் அவள் இதழ்களை வலிக்க வலிக்கப் பருக, வலி கலந்த சுகத்தில் கண்களை மூடிய ஸ்வேதா அதற்கு பிறகு கண்களைத் திறக்கவே இல்லை


இருவரும் ஒருவரின் உள் மற்றவர் வெளிவர முடியாமல் புதைய முயல, நேரம் அவர்களது நெருக்கத்தின் தகிப்பில் கரைந்தோடியது. வருண் அவனது வேகத்தைக் காட்டிக் கொண்டிருக்க, இரு மடங்காகத் தன்னை இழந்து கொண்டிருந்தாள் ஸ்வேதா. மனமும் உடலும் ஒருவித திருப்தி நிலையை அடைய, ஒருவர் அணைப்புக்குள் மற்றொருவர் அடைக்கலம் புகுந்தனர்.


அவனது மார்பில் படுத்துக் கொண்டு நிமிர்ந்து முகம் பார்த்த ஸ்வேதா "எதுக்காக உண்மைய சொல்லாம, ரோஷினிய உன் குழந்தைனு சொல்லிட்டு இருக்க. இதனால உனக்குத் தேவையில்லாத கெட்டப் பேரு தான்" என்றாள் வருந்தி


"உண்மைய தான சொன்னேன். ரோஷினி என்னோட பொண்ணு" என்று வருண் உறுதியாய் சொல்ல


"டூ ஐ டிசர்வ் யூ" என்றாள் ஸ்வேதா மெல்லியக் கலக்கத்துடன்


"லூசு பாப்பா... வி ஆர் க்யூட் அன்ட் ஸ்வீட் லிட்டில் ஃபேமிலி, ரைட்" என்று வருண் கனிவாகக் கேட்டிட


"தெரியுமா... லவ் யூ சோ மச்" என்றவள் அவன் உதட்டில் தீமூட்டி மீண்டும் அவனிடம் தொலையத் தயாரானாள்


எத்தனை நாள் ஏக்கம்
என்னில் உந்தன் தாக்கம்
மீள முடியா தயக்கம்
தந்து போனாய் மயக்கம்
 

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
பிற்பகுதி


மாறன் இப்போது தன்னுடையப் பகுதியின் மதிப்பு மிக்க சட்டமன்ற உறுப்பினர். ஆண்டுகள் கடந்து கிடைத்த அவனுக்கான பொறுப்பில் முடிந்த மட்டும் அக்கறையோடு இருந்தான். ராம்கி திறந்து வைத்தக் கதவின் வழியாக அவனே செம்மையான பாதையை உருவாக்கிக் கொண்டான். தொடக்கத்தில் எத்தனையோ தடுமாற்றங்களும் ஏமாற்றங்களும் இருந்தாலும், இப்போது தன்னை நல்ல நிலையில் உறுதிப்படுத்திக் கொண்டான். ஃபஹிமா பானு உண்டாக்கியப் பொறியில் தீயாக ஆரம்பித்தாள். மாறன் வெளிவேலை என்றே முக்கால்வாசி நேரம் சுத்த, ஃபஹிமா யூ ட்யூப்பில் மூழ்கி முத்தெடுத்தாள். இருவருக்கும் இப்போது இரு பிள்ளைகள் இருந்தனர். மூத்தவன் வித்யாதரன், பக்தியும் சாந்தமுமாய் அப்படியே தாத்தா சுந்தரலிங்கம் மாதிரியே; நமச்சிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க என்று அவனது உதடுகள் இயல்பாய் முணுமுணுக்கும். மாறனின் மறுஉருவம் இளையவள் நதிரா; படுசுட்டியும் கூர்சிந்தனையும் கொண்டவள். இப்போது கூட புர்கா அணிய காரணம் கேட்டு ஃபஹிமாவிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாள். மாறன் இவர்களில் யாரையும் அவர்களின் பாதையில் இருந்து மாற்ற முயற்சி எடுப்பதில்லை. நண்பன் மகேஷ் எம். எல். ஏ. மாறனின் தனிச்செயலாளர் போலவே மாறிப் போனான்.


ஜீவாவுக்கு வேலையில் இடமாறுதல் கிடைக்க, இப்போது பானுவும் அவனும் திருச்சியில் வசிக்கின்றனர். பேரன்கள் ஆர்யனையும் அயனையும் கவனித்துக் கொள்ளவே வள்ளி கிராமத்திலிருந்து வந்து இங்கே தங்கி விட்டார். ஜீவா பானுவை எதாவது படிக்கிறாயா? வேலைக்குப் போகிறாயா? என்று இன்றளவும் கேட்டுக் கொண்டிருக்க, அவளோ இருக்கும் இரண்டு பிள்ளைகளையும் காலையும் மாலையும் ஸ்கூட்டியில் வைத்து அழைத்துச் செல்லவும் அழைத்து வரவுமே நேரம் சரியாக இருப்பதாகக் காரணம் சொல்லுவாள். ஆனால், மறைமுகமாக எப்படியும் அடுத்ததாக ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்வது என்ற நிலைப்பாட்டில் இருந்தாள். ஜீவா இரு மகன்களையும் படிப்பின் பக்கம் திருப்ப முயல்வதும் பானு அவர்களை மிரட்டும் ஹாலிவுட் படங்களின் பக்கம் திருப்ப முயல்வதுமாக இருக்க, அவர்கள் இருவரும் யார் பக்கமும் சாயாமல் கணினி விளையாட்டில் மூழ்கி விடுவர். கணினியில் இருந்து அவர்களைப் பிரிப்பது இவர்களின் பாடு.


குரு அதித்தன் இந்துஜாவை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று, சில காலங்கள் வைத்திருந்தான். அவ்வப்போது குடும்பத்தினரிடம் இருந்து இந்துஜாவுக்கு வரும் அவச் சொற்களைத் தாங்க முடியாமல், சென்னையில் இருவரும் அபார்ட்மெண்ட் வாசிகளாக மாறிப் போயினர். இருவருக்கும் ஒரே ஒரு மகன் சுதர்ஷன். அவன் இருவருக்கும் முற்றிலும் மாறாக அமைதியானவனாகவும் படிப்பாளியாகவும் இருப்பதை எண்ணிப் பெற்றோர் வியக்காத நாளே இல்லை. ஒருவேளை ஜீவாவின் சாயல் வந்து விட்டது போல என்று இருவரும் சொல்லி மகிழ்வர். ஜீவா அவ்வப்போது பேசுவான்; வீடுவரை வந்து செல்வது மட்டும் அரிதாகவே நடக்கும். ஃபஹிமாவின் மூலம் பானுவின் அக்கறையைத் தெரிந்து கொண்ட இந்து, தோழியிடம் மறுபடியும் இணக்கமாகிப் போனாள். எந்த சந்தேகமாக இருந்தாலும் முதல் அழைப்பு அவளுக்கு தான் போகும். எப்போதும் அண்ணி என்ற மரியாதையுடனே பேச்சு மாறிப் போனது. இரு தோழிகளின் பேச்சும் குடும்ப நலனுக்கானதாய் இருந்தது.


காலப் போக்கில் அனுவின் போக்கு அரசியல் களமாகவும் ப்ரவீனின் போக்குத் தொழில் சார்ந்ததாகவும் மாறிப் போனது. இருவரின் வீட்டினரிடம் இருந்து சிறிய எதிர்ப்புக் கூட இல்லாமலே திருமணம் சுமூகமாக முடிந்தது. ராம்கி இப்போது மாநிலத்தின் முக்கியமான அமைச்சர். அவரது மருமகள் அனு, அரசியலில் நுழைந்த குறைந்த காலத்திலே கட்சியின் மகளிரணித் தலைவியாகிப் போனாள். அவளது அரசியல் சாணக்கியத்தைக் கண்டு ராம்கியே வியந்து போவதுண்டு. ப்ரவீனுக்கு ஏனோ அரசியல் வாடையே பிடிப்பதில்லை. ஆனால், பெங்களூர் போன்ற மாநகரில் தொழில் நடத்த, அவன் கடைசியாக உதவித் தேடி நிற்க வேண்டியது அனுவிடமாகத் தான் இருக்கும். அவனது அடுத்தக்கட்ட நோக்கம் தமிழ்நாட்டிலும் தனது தொழிலை ஸ்தாபிதம் செய்வதே. அதற்கு நிச்சயமாக மாறனையும் உடன் இணைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு இடையில் உள்ளத் தொடர்பு அறுந்து போகாமல் இருப்பதால் ப்ரவீனின் நோக்கம் எளிதில் நிறைவேறும். அனுவின் தாய் பங்கஜம் பேரனோ பேத்தியோ வேண்டும் என்று மன்றாட, அனுவும் ப்ரவீனும் தங்கள் நோக்கத்திலே குறியாக இருந்து வருகின்றனர். திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் மூணாறு, ஷிம்லா, சுவிட்சர்லாந்து என்று வாரக்கணக்கில் காதல் பயணம் கிளம்பி விடுவதும் உண்டு.


ரோஷினியின் தம்பி பவித்ரன் பிறந்து வருடங்களாகியும் ஸ்வேதாவின் மீதான ஆர்வம் வருணுக்கு இன்றளவும் குறைந்தபாடில்லை. அவன் செய்யும் காதல் சேட்டைகள் குழந்தைகள் கண்ணில் படாமல் இருக்கவே தினம் தினம் ஸ்வேதா போராடி ஓய்வாள். காலையில் வேலைக்குச் சென்று மாலை வீடு வந்ததும் இரு குழந்தைகளின் குறும்புகளிலே லயித்துக் கிடக்கும் தன்னவளைத் தன்பால் திருப்ப வருண் செய்யும் அட்டூழியங்களைப் பட்டியலிட்டு மாளாது. வெளியில் வாய் பேசியே எல்லாவற்றையும் சாதிப்பவன், வீட்டிற்கு வந்ததும் பேச்சிற்கு பூட்டுப் போட்டு விட்டு வேறுவிதமாக இறங்கி விடுவான். அவன் கழுத்தைச் சுற்றிக் கொண்டே இருக்கும் ரோஷினிக்கும் பவித்ரனுக்கும் விளையாட்டுக் காட்டி விட்டு, எப்படித் தன்னிடம் வந்து சேருகிறான் என்பதே ஸ்வாதாவுக்குக் காதலின் கண் கட்டு வித்தைப் போல தான் இருக்கும். பல தடைக்கற்களைத் தாண்டி வந்தவளுக்குக் காதலின் ஆலமர நிழல் ஆசுவாசம் அளிக்கவே செய்தது. இருவரும் இப்போது சொந்த இடம் வாங்கி வீடு கட்டுவதில் முனைப்பாய் இறங்கி உள்ளனர். புது வீட்டில் குடும்பத்தினரை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே அவளது கனவாக இருந்தது.


ஸ்வேதாவும் வருணும் வற்புறுத்தி உடனிருக்க அழைத்துப் பார்த்தும், சான்ட்ராவும் பாக்கியமும் துர்காவின் வீட்டிலேயே தொடர்ந்து வசித்து வந்தனர். பார்த்திபனுக்கும் துர்காவுக்கும் செல்லப் பிள்ளையாக மாறிப் போனான் யுகி. முதலில் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வாடகை வாங்குவதை நிறுத்திக் கொண்டே வந்த துர்கா, திடீரென்று ஒருநாள் அந்த வீட்டினை யுகியின் பெயருக்கே எழுதி வைக்கப் போவதாகக் கூற பெண்கள் இருவரும் விக்கித்து நின்றனர். பாக்கியம் வீட்டினை மாற்றிக் கொண்டு சென்று விடலாம் என்ற முடிவிற்கே போய்விட, துர்கா அவரை விடுவதாக இல்லை. துர்கா நட்பின் சாட்சியாக மறுப்பு சொல்லக் கூடாதென்று சொல்லி விடவும் பாக்கியம் எதிர்ப்புக் காட்ட வழியின்றி அமைதியானார். பார்த்திபனே தன்னிடம் வந்து இறங்கிப் பேச, சான்ட்ராவிற்கு மறுப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போனது. அந்த வீடு மட்டும் யுகியின் பெயரிலும், பார்த்திபனின் மற்ற சொத்துக்கள் அவரது பெயரால் ஆரம்பிக்கப் பட்டிருக்கும் புது அறக்கட்டளைக்கும் ஒரே நாளில் எழுதி வைக்கப்பட்டது. அஷ்வினின் இறப்பிற்கு பிறகே அவனைப் பற்றி துர்காவின் வழியாகப் பலதும் கேட்டறிந்த பார்த்திபனின் மனதில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அதற்கு பின்னர் தான் அவருக்கு ஏழை மாணவர்களுக்காக அறக்கட்டளை ஆரம்பிக்கும் எண்ணமே வந்தது.


அறக்கட்டளையின் முக்கியமான பொறுப்பில் சான்ட்ராவும் அமர்த்தப்பட்டாள். பாக்கியம் எப்போதும் அவளுக்கு பக்கபலமாய் இருக்க, மகிமை ராஜா மாதம் ஒரு முறையாவது பேரனைப் பார்க்க வந்து விடுவார். கடுமையும் கட்டுக்கோப்புமாய் இருந்தவர், மகளின் வாழ்க்கையில் நடந்த பல மாற்றங்களால் உள்ளூர உடைந்து இப்போது கருணையின் உருவாக மாறிப் போனார். வாழ்க்கையில் எத்தனையோ பேரை சுட்டுத் தள்ளியவர், இப்போது மனித உரிமை ஆணையத்தின் கீழ் பணியில் அமர்ந்தார். அவரது அனுபவங்களைப் பகிர்வதையும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதையும் பொழுது போக்காய் மாற்றிக் கொண்டார். மனம் திருந்திய நீரவ், சான்ட்ராவைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றெண்ணிக் கோரிக்கை வைத்தான். அதனைத் தொடர்ந்து மற்றொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி பாக்கியமும் சில முறை மருமகளிடம் சொல்லிப் பார்த்தார்.


மறுமணத்திற்கு உட்படாமல் சான்ட்ராவின் மனம் காதலைக் கடந்து நின்றது. அஷ்வினின் மறைவுக்குப் பிறகு, அவள் கண்கள் வாழ்க்கையை வேறு விதமாகப் பார்க்கத் தொடங்கி விட்டது. அவளுக்கு இப்போது ஆசைகள் எதுவும் இல்லை; சில ஆக்கப்பூர்வமான கனவுகளை மட்டுமே நெஞ்சில் சுமந்திருந்தாள். யுகியே அவளது வாழ்வின் பெரும் பகுதியாகிப் போனான். அவனது ஒளி சிந்தும் முகம் எப்போதும் உற்சாகமூட்டுவதாக இருந்தது. ஒருமுறை யுகியை பார்த்துப் பழகியவர் அவனை எளிதில் மறந்துவிட முடியாது. அவனுள் இருந்து வெளிப்படும் எதோ ஒன்று எல்லாரையும் கட்டிப் போட்டு விடும். வருடா வருடம் நடக்கும் அவனது பிறந்தநாள் விழாவிற்கு அனைவரும் கூடுவது வழக்கம். மாறனும் குருவும் யோகேஷும் கூட தமிழ்நாட்டில் இருந்து குடும்பத்துடன் வந்து விடுவார்கள்.


இன்று யுகியின் ஏழாவது பிறந்த தினம்; வருணும் ஸ்வேதாவும் முழுமூச்சுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பாக்கியமும் சான்ட்ராவும் வந்திருப்பவர்களுக்கு உணவு தயார் செய்து கொண்டிருக்க, யுகி வீடெங்கும் ஆரவாரத்துடன் சுற்றி வந்தான். மெழுகுவர்த்திகளை ஊதி, கேக் வெட்டி முடித்து, விருந்துண்டு அனைவரும் பேசிக் களித்திருந்த நேரம் அது. குழந்தைகளில் சிலர் அசதியில் உறங்கியிருக்க, மற்றவர்கள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் யுகியைக் காணாது ஒரு நொடி ஸ்வேதா திகைத்தாள். ஸ்வேதா சான்ட்ராவிடம் சொல்ல, மகிழ்ச்சியாக இருந்த இடத்தில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.


குருவும் வருணும் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட, மாறனும் யோகேஷும் வீட்டருகினில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிந்தனர். எதற்கும் கலங்காத சான்ட்ரா ஏனோ மனம் தாளாமல் அழுது கரைய, இந்துஜாவும் ஃபஹிமாவும் லாவண்யாவும் சமாதானப்படுத்த முயன்றனர். பாக்கியமும் துர்காவும் அந்த பெரிய வீட்டின் கீழிருந்து மாடி வரை அலச, ஸ்வேதா மற்ற குழந்தைகளிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில், மாறன் சான்ட்ராவுக்கும் வருணுக்கும் அழைத்து யுகி கிடைத்து விட்டதாக சொன்னான்.


மாறனும் யோகேஷும் யுகியுடன் வீடு திரும்ப, "எங்கடா போன. அம்மா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா. இனிமே இப்டி பண்ணாத" என்ற சான்ட்ரா யுகியைக் கட்டியணைத்துக் கரைந்தாள்


வருண் மாறனிடம் "எங்க கண்டுபிடிச்சீங்க" என்று கேட்டிட


"ஐஸ்க்ரீம் வண்டிய பாத்துட்டுப் பின்னாடியே போய்ட்டான் போல. மெயின் ரோடு வரைக்கும் போய் க்ராஸ் பண்ணி வரத் தெரியாம மாட்டிக்கிட்டான். அப்புறம் வேற ஒரு பையன் தான், யுகிய பிடிச்சு பத்ரமா ஓரமா நிக்க வச்சிருந்தான்" என்றான் மாறன்


"அவனைக் கூப்பிட்டு வந்துருக்கலாம்ல. அவனப் பாத்து ஆயிரம் தேங்க்ஸ் சொல்லணும் போல இருக்கு" என்று ஸ்வேதா நிம்மதிப் பெருமூச்சு விட


"கூப்டோம். வரலைனு சொல்லிட்டான். அவனோட பேர மட்டும் தான் சொன்னான்" என்று துக்கம் மேலோங்க சிரித்தான் யோகேஷ்


அவனது சிரிப்பின் அர்த்தம் புரியாமல் மற்றவர்கள் விழிக்க, மாறன் வாய் திறந்து "யுகிய காப்பாத்துனப் பையன் பேரு அஷ்வின்" என்று கூறினான்
அன்றிரவு கேமராவின் முன்பு பாடுவதற்காக அமர்ந்த சான்ட்ரா, கண்களை மூடி மனமுருகிப் பாடத் துவங்கினாள்


விதிகள் இல்லாத ஓடம்
பாதை எங்கும் உன் தடம்
காற்றிலே கரைந்த கானம்
நெஞ்சில் இன்றும் உன் மணம்
யார் அழைத்துப் போனாய்
அவசரமாய் கடவுள் ஏன் ஆனாய்


~முற்றும்~
 
Status
Not open for further replies.
Top Bottom