Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL விக்கிரமாதித்தனும் வான்பரியும் Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

PriyaPintoo

Member
Vannangal Writer
Messages
36
Reaction score
33
Points
18
அத்தியாயம் 1:





ஒரு கோடியே ஐம்பதாயிரம் ஒருதரம்...

ஒரு கோடியே ஐம்பதாயிரம் இரண்டு தரம்…

ஒரு கோடியே ஐம்பதாயிரம் மூன்று தரம்…


"நானூறு வருடங்கள் பழமையான அரிய வகை கழுகின் இறகை கொண்டுள்ள, இந்த தங்க எழுதுகோல் இனி எஸ்.எஸ். ஜூவல்லர்ஸ்க்கு சொந்தமாகிறது…" என்று ஏலத்தில் ஒருவர் அறிக்கையிட, அங்கே பலத்த கைத்தட்டலுக்கு மத்தியில் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்ட அந்த தங்க எழுதுகோலை முன்னே சென்று வாங்கிக்கொண்டான் விஜய்.

ஏலத்திற்காக சுத்தம் செய்யப்பட்ட, மழையில்லா மேகங்களை ஒத்த, தூய வெண்ணிற மென்மையான இறகை தன் தலைப்பகுதியில் கொண்டிருந்த அந்த தங்க எழுதுகோல், பல பூக்களின் வேலைப்பாடுகளை தன்னகத்தே கொண்டிருந்தது. அந்த தங்க எழுதுகோலின் ஒருமுனையில் வெண்ணிற நீண்ட இறகும், அதன் மறுபகுதியில் கத்திப்போன்ற கூறிய முனையுள்ள வெள்ளியால் செய்யப்பட்ட முள்ளும் இருக்க, அந்த இறகு எழுதுகோல் ஒரு அழகான கண்ணாடிப் பேழையில் அடைக்கப்பட்டு இருந்தது. அந்த கண்ணாடிப் பேழையை கையில் ஏந்தியிருந்தவனின் மனம் முழுவதிலும் சொன்ன வேலையை சரியாக செய்து முடித்த பெருமிதம் சூழ்ந்து இருந்தது.


சிறிது நேரத்தில் அங்கிருந்த மொத்தக் கூட்டமும் கலையத் துவங்க, விஜய் அருகில் வந்த ஒருவன் "ரொம்ப சந்தோஷமா இருக்கா… இப்பவே நல்லா சந்தோஷப்பட்டுக்கோ… இதை உன்கிட்ட இருந்து எப்படி எடுக்கனும்னு எனக்கு தெரியும்…" என்று கூறிவிட்டு தன் கருப்புக் கண்ணாடியை அணிந்தபடி சென்றுவிட்டான்.

தேற்றத்தில் பளீரென ஆங்கிலேயன் போல் இருந்த அந்த புதியவன், இவ்வளவு சரளமாக தமிழ் பேசுவதைப் கண்டு முதலில் வாயடைத்து நின்ற விஜய், பிறகு உதட்டை பிதுங்கி அவன் சென்ற பிறகு அவனுக்கு பழிப்பு காண்பித்து விட்டு "ஜஸ்கு புஸ்கு... நாங்க கஷ்டப்பட்டு வாங்குவோமாம்... இவரு ஈசியா எடுத்துட்டு போய்டுவாராம்... ஆசைதான் வெள்ளைக்கார மாமானுக்கு...." என்றபடி அந்த கண்ணாடிப்பேழையை பத்திரமாக நெஞ்சோடு அழுத்திப் பிடித்தபடி, தன் காருக்கு வந்து ஓட்டுநரின் பக்கத்து சீட்டில் அதை வைத்துவிட்டு, காரின் சக்கரங்களில் காற்று இருக்கிறதா என்று சோதித்தபடியே சுற்றிவந்து காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர, சில நொடிகளுக்கு முன் அருகில் இருந்த இருக்கையில் வைத்த அந்த கண்ணாடிப்பேழை காணாமல் போய் இருந்தது...


************

"டேய்... பைத்தியமாடா நீ... எவனாவது நூறு கிராம் தங்கத்தை ஒரு கோடி கொடுத்து வாங்குவானா...மண்டையில எதாவது உனக்கு இருக்கா... உன்னை என் புள்ளைன்னு சொல்லவே நாக்கு கூசுதுடா... உன்னையெல்லாம் நம்பி என் கடைய எப்படி ஒப்படைப்பனோ தெரியலையே..." என்று புலம்பியபடி தன் வீட்டை காலால் அளந்துக்கொண்டு இருந்தார் தமிழ் வேந்தன். விஜயின் தந்தை...

"அப்பா... நம்ம கடையுடைய ஷோ கேஸ்ல எல்லாரும் பார்க்குற மாதிரி அதை வச்சா எப்படி இருக்கும்னு தான்பா நான் வாங்கனேன்..." விஜய் தன்நிலை விளக்கம் அளித்தாலும் அதை அவர் ஏற்பதாக இல்லை...

" நம்ம கடையில நகை வாங்க வரவங்க விதவிதமான டிசைன்ல இருக்குற நகைய பார்பாங்களா... இல்ல அந்த ஒன்னுத்துக்கும் உதவாத பேனாவை பார்பாங்களா... ஐயோ... இந்த ஒன்றரை கோடி இருந்தால் தங்கத்துலயே ஒரு அம்மன் சிலை செஞ்சிருப்பனே..." நகரின் முக்கிய பகுதியில் பெயர்பெற்ற நகைக்கடை வைத்திருக்கும் அவர், தன் புலம்பலை நிறுத்தும் எண்ணத்தில் இல்லை.

"அப்பா... போதும் போதும் நிறுத்துங்க... ஏதோ உங்க காச அழிச்ச மாதிரி இவ்வளவு புலம்பு புலம்பறீங்க... இது என் அண்ணனோட காசு...அவன் வாங்க சொன்னான்... வாங்கனேன்... இதில் நீங்க தலையிடாதீங்க..." என்றவனை முறைத்த அவர்,

"மாச சம்பளகாரனுக்கு எப்படிடா இவ்வளவு பணம் வந்துச்சு..." என்று கேட்க, அதற்கு விஜய்யிடம் பதிலில்லை..‌. இவனும் இவன் அண்ணனும் தான் தன் தந்தையின் நகைக்கடையில் பொய் கணக்கு எழுதி பல ஆயிரங்களை பதுக்கி உள்ளனரே... அதைக்கூறவா முடியும்.

"வீட்டு கரண்டு பில்லக்கூட கட்ட துப்பில்லாதவனுக்கு எப்படி இவ்வளவு பணம்..." என்று அவர் கேட்க, தன் அண்ணனை குறை கூறுவதை பொறுக்க இயலாத அந்த பாசத்தம்பி தங்கக் கம்பி, "அவன் ஒன்னும் துப்பில்லாமல்லாம் கட்டாமல் இல்ல... அவன் எதுக்கு காட்டனும்னு தான் கட்டாமல் இருக்கான். அனுபவிக்கிறது நாம... அவன் ஏன் கட்டணும்..." என்று தன் அண்ணனுக்காக விஜய் எதிர்வாதம் புரிந்தான்.

"உன் ணொண்ணன் வாங்கி வச்சு இருக்கானே அந்த ரெண்டு நரியும்..." என்று ஆரம்பித்த தமிழ் வேந்தனை இடையில் தடுத்த விஜய்,

"ம்ச்... அது நரி இல்ல... சைபீரியன் ஹாஸ்கி..." என்றான் கடுப்புடன்...

"ஏதோ ஒரு நாய்... அதுங்க என்ன வெளியில படுத்து காவலா காத்துட்டு இருக்குதுங்க... நல்லா ஏசில ராஜாவாட்டாம் எப்பவும் படுத்துதான இருக்குதுங்க..."

"அப்பா... அவங்களுக்கு புழுக்கமா இருக்கும் இல்ல..." என்றவன் லேசாக விசிலடிக்க, ஓநாயின் உருவத்தை ஒத்து இருந்த இந்த இரண்டு நாய்களும் அவனிடம் வந்து செல்லம் கொஞ்ச ஆரம்பித்தன...

"இதுங்களுக்கான கரண்ட் பில் தான் அதிகமா வருது... இரு இதுங்களை கூட்டிட்டு போய் எங்கையாவாது காட்டுல விட்டுடறேன்..." என்று அவர் கோபமாக கூற, இவ்வளவு நேரம் விளையாடிக்கொண்டு இருந்த அந்த இரண்டு நாய்களில் ஆண் நாயான ஜாக் "ஐ லவ் யூ......." என்று நரிப்போல் ஊளையிட, பெண் நாயான ரோஸ் "ஐ லைக் யூ..." என்று ஊளையிட்டது...

"ஆ... வூன்னா இத சொல்லி என்னை ஆஃப் பண்ணிடுதுங்க... என்னமோ போங்க... சரி நீ சென்னபடியே அதைக்கொண்டு போய் நம்ம கடையில வை... யாராவது பார்த்துட்டாவது போட்டும்... இங்க இருந்தா அது ஒட்டடை தான் பிடிச்சு போகும்..." என்று அவர் கூற, திருதிருவென முழித்துக் கொண்டு விஜய் நின்றிருந்தான்.

"என்னடா பார்வையே சரியில்லை... எங்கடா அது..." என்று அவர் அவனை அதட்ட, "அது காணாமல் போய்டுச்சிப்பா... போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கேன்..." என்று அவன் உதித்த வார்த்தைகள், அந்த ஐம்பத்து எட்டு வயதானவருக்கு அதிக இரத்த அழுத்தத்தைக் கொடுத்து, இரண்டு நாட்கள் படுக்கைக்கு தள்ளியது.

**********

ஆர்ப்பாட்டமான கடல் தற்போது அமைதியாக இருக்க, வங்காள விரிகுடாவில் பயணித்துக் கொண்டிருந்தது ஒரு சரக்குக் கப்பல். மிகவும் பெரிய அளவில் இல்லாமலும், சிறிய அளவில் இல்லாமலும் நடுநாயகமாக இருந்த அந்த கப்பலின் ஒரு அறையில் அறுவர் குழு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
"என்னால நம்பவே முடியல... எப்படி பாஸ் இவ்வளவு சீக்கிரம் இந்த குயில் பென்னை (quill pen/feather pen) அடிச்சிட்டு வந்தீங்க... நீ போனதும் தெரியலை... வந்ததும் தெரியல... திடீர்னு பார்த்தா உன் கையில இந்த கண்ணாடி பாக்ஸ் இருக்கு... எப்படி பாஸ்..." இறகு எழுதுகோல் இருந்த கண்ணாடிப் பேழையை சுற்றிச்சுற்றி பார்த்துக்கொண்டு இருந்த ஒருவன், மற்றவனிடம் கேட்க, மற்றவனோ பதில் கூறாமல் அந்த இறகை கண்ணத்தில் வருடியபடி அதன் மென்மையில் மெய்மறந்து அமர்ந்திருந்தான்.

"ம்ச்... இது ரொம்ப முக்கியமானது. இப்படி விளையாடாத..." என்றபடி அவனின் கையிலிருந்த இறகு எழுதுகோலை பிடுங்கிய அந்த கூட்டத்தின் தலைவனான வில்லியம் என்ற ஆங்கிலேயன், அதில் இருந்த டூலிப்ஸ் மலர்களின் வேலைப்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கத் துவங்கினான்.

"வில்லியம்... இந்த பென் பத்தின ஹிஸ்டரிய எங்களுக்கும் சொல்லலாம் இல்ல..." என்று அவர்களில் ஒருவன் கேட்க, அவன் கேள்வியை பொருட்படுத்தாத வில்லியமோ வெளியே சென்றுவிட்டான். இந்த வில்லியம் தான் விஜய்யிடம் சவால் விட்ட அந்த ஆங்கிலேயன்.

"இது பிரிட்டிஷ் ஆளுங்க நம்ம நாட்டை ஆட்சி செய்தப்போ அவங்கள்ள ஒருத்தர் பயன்படுத்தின பென். அதுல இருக்கிற இறகு எனக்கு தெரிஞ்சு பருந்துடைய இறகோ, இல்ல கழுகுடைய இறகோ இல்லை... அதை விட கொடூரமான பழைமையான பறவையோட இறகு..." என்றான் ஒருவன். அவன் தான் சற்று நேரத்திற்கு முன்பு இறகை கண்ணத்தில் வைத்து வருடிக்கொண்டு இருந்தவன். அந்த பேனாவை திருடியவனான ஆதி.

"எப்படி சொல்லற... இதை ஏலம் விடும்போதே பருந்துடைய இறகுன்னு தான் சொன்னாங்க..." கூட்டத்தில் ஒருவன் கூற "பருந்துடைய இறகு இவ்வளவு சாஃப்டா இருக்காது...உயரத்துல இறையினுடைய எடைய தாங்கியபடி பறக்க இந்த சாஃப்டான இறக்கை கொண்ட பறவையால முடியாது... ஆனா எல்லா குயில் பென்னையும் பறவையோட கடைசி வரிசை இறகுல இருந்து தான் செய்வாங்க... அப்போதான் அது நல்லா இங்க் இழுக்கும்.... இந்த இறகை பார்த்தா கடைசி வரிசை இறகுல இருந்து செய்தமாதிரி இல்லை... ஒருவேளை இது எழுத இல்லாமல் வேற எதுக்காவது பயன்பட்டு இருக்கலாம்..." என்றவனை மற்ற நால்வரும் பே'வென பார்த்தனர்.

"எப்படி ஜீ உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரிஞ்சு இருக்கு... கன் மாதிரி வேலை செய்யறீங்க... யாருங்க நீங்க... உங்களை வில்லியம் எப்படி புடிச்சாரு..." என்றவனின் கேள்விக்கு மௌனமாக ஒரு சிரிப்பை உதிர்த்தவன் எழுந்து சென்றுவிட்டான்.

"டேய்... இவன் கொஞ்சம் தெளிவா இருக்கிறதால் தான் வில்லியம் இவ்வளவு பணத்தை கொடுத்து வரவழைச்சி இருக்காரு... நமக்கு கிடைக்கப்போற புதையல்ல இவனுக்கு தேவையானது போக, ஏதோ கொஞ்சம் தான் நமக்கு கொடுக்கப்போறாங்க... நீ இன்னும் இவனை ஏத்தி ஏத்தி பேசிட்டு இரு... மொத்தமும் இவனுக்கே போகட்டும்..." என பொறித்தெடுத்தான் அந்த கூட்டத்தின் சீனியரான வேலன்....

இப்பொழுது அனைவரும் சென்றுக்கொண்டு இருப்பது கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகக் கூறப்படும் தீவைத் தேடி... அதில் விலைமதிப்பற்ற தங்கத்தாலான பழங்கால மிருகமான சிம்மயாளியின் சிலைகள் பல இருப்பதாக தகவல்.

பொதுவாக தமிழக கோவில்களில் இந்த மிருகத்தின் சிலையைக் தூண்களில் காணலாம். சிங்கத்தின் முகத்தையும் உடலமைப்பையும், யானையின் துதிக்கையையும் தந்தத்தையும் கொண்டுள்ள இந்த உயிரினத்தின் தங்க சிலைகள் தான் அங்கு உள்ளதாம். வில்லியம் கூறித் தான் அவர்களுக்கு தெரிய வந்தது. இது உண்மையா பொய்யா என்று கூட தெரியாமல் கிளம்பிவிட்டனர்... வில்லியமிற்கு இதெல்லாம் எப்படி தெரியும் என்பது கேள்விக்குறி தான்.

தன் கையில் எப்பொழுதும் அணிந்திருக்கும் கருநிற கையுறையை கழட்டி தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, வில்லியமின் அறையைத் தட்டினான் ஆதி. சில நிமிடங்களுக்கு பிறகே கதவைத் திறந்த வில்லியம், அங்கே ஆதி நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு என்ன என்று விசாரிக்க, தேவையற்ற விஷயங்களை பேசி சில வினாடி நேரத்தை வீண் செய்தவன், பேச்சுவாக்கில் கதவில் வைத்திருந்த வில்லியமின் கையை ஒரு நொடி தொட்டான். பிறகு அங்கிருந்து புறப்பட்டு வந்து அமைதியான கடலை இரசித்தவன் மனதில் சற்றுமுன் வில்லியமை தொட்டதும் படமாக விரிந்த காட்சிகளே நினைவுக்கு வந்தன.

ஆதி கதவைத் தட்டுவதற்கு முன்பு, வில்லியம் அந்த இறகு எழுதுகோலை தண்ணீரில் போட, அது மிதந்து வந்து ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி திரும்பியது. தண்ணீர் வைத்திருந்த பாத்திரத்தை வில்லியம் சுழற்ற, எப்பக்கம் சுவற்றினாலும் அந்த எழுதுகோலின் வெள்ளியால் செய்யப்பட்ட முள் ஒரே திசையை காண்பித்தது.

‌ அந்த எழுதுகோல் ஒரு திசைக்காட்டி என்பதை புரிந்துக்கொண்ட நம் கதையின் நாயகன் ஆதி, தன் கையில் கையுறையை மாட்டிக்கொண்டு என்ன ஆபத்து காத்திருக்கிறதோ என்று எண்ணியபடி கடல் காற்றை இரசிக்கும் மனநிலை இல்லாமல் நின்றிருந்தான்...

ஆதி என்று அவர்களுக்கு அறிமுகமான ஆதித்தனின் முழுப் பெயர் விக்ரமாதித்தன். நல்ல நிறத்தில், நெடு நெடு உயரத்தில் ஆணழகனாக இருக்கும் அவனுக்கு, பிறப்பிலேயே கிடைத்த மிகப்பெரிய சாபம் மற்றவர்களின் கடந்த காலத்தை பார்க்கும் சக்திதான்... ஆமாம் அது அவனைப் பொறுத்தவரை சாபமே.

அதனால் அவன் அடைந்த கஷ்டங்கள் ஏராளம். தெரியாமல் யாராவது ஒருவரை தொட்டால் கூட, அவரது கடந்த காலத்தின் கசப்பான நிகழ்வுகள் அவன் கண்முன்னே படமாக விரிந்து, அவனுக்கே அந்த கசப்பான நிகழ்வு ஏற்பட்டது போன்ற ஒரு மாயை உருவாகி, அவனை வாட்டி வதைக்கும். முதலில் எல்லாம் மிகவும் கடினப்பட்டவன், தற்போது அதற்கு சற்று பழகிக்கொண்டான் என்றே கூறலாம். அதனால் தான் வில்லியமின் கடந்தகாலத்தை கடந்த மூன்று மாதங்களாக இவ்வளவு துள்ளியமாக காண்கிறான்...

விக்ரமாதித்தன் யார்... வில்லியமிற்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தீவைப்பற்றி எப்படித் தெரியும்... அந்த இறகு எழுதுகோல் எப்படி தீவின் திசையை காட்டுகிறது... நானூறு ஆண்டுகளுக்கு முன்பு அதை வடிவமைத்தது யார்... புதையலை தேடிச் செல்லும் அவர்கள் அப்புதையலை அடைவார்களா... அல்லது வீழ்வார்களா... அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம்...

விக்ரமாதித்தனும் வான்பரியும் என்ற இக்கதை முழுக்க முழுக்க என் கற்பனையே... இதில் வரும் இடங்கள், நிகழ்வுகள் எல்லாம் என் கற்பனையில் விளைந்தவை. Fantasy கதை என்பதால் உண்மைக்கு அப்பாற்பட்ட காட்சிகள் அமைந்திருக்கும். உங்கள் மனதை இக்கதை கவர்ந்திருந்தால் தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி...




Thread 'விக்கிரமாதித்தனும் வான்பரியும் - Comments' https://www.sahaptham.com/community/threads/விக்கிரமாதித்தனும்-வான்பரியும்-comments.403/
 
Last edited:

PriyaPintoo

Member
Vannangal Writer
Messages
36
Reaction score
33
Points
18
அத்தியாயம் 2:



பேரலைகள் ஏதுமின்றி அமைதியாக இருந்த ஆழியில் பயணித்துக்கொண்டு இருந்தது இரு உயிர்காக்கும் படகுகள். (lifeboat)

தனக்கு தெரிந்த அட்சரேகை, தீர்க்கரேகை குறிப்புகளை வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் சரக்குக் கப்பலை நிறுத்திய வில்லியம், இதற்கு மேல் படகில் செல்ல முடியாது என்று நினைத்து, இரவுவரை மட்டும் தனக்காக காத்திருக்குமாறு அதிக பணத்தை அந்த சரக்குக்கப்பலின் கேப்டனிடம் கொடுத்துவிட்டு, அந்த கப்பலில் இருந்த உயிர்காக்கும் படகுகள் இரண்டை எடுத்துக்கொண்டு தான் உடன் கூட்டிவந்த அறுவருடன் புறப்பட்டான்.

ஒரு படகில் வில்லியம் மற்றும் விக்கிரமாதித்தன் வர, மற்றொன்றில் மற்ற ஐவரும் வந்தனர். தன்னுடன் தனித்து விடப்பட்ட விக்கிரமாதித்தனிடன் அந்த இறகு எழுதுகோலின் அதிசயத்தை விளக்கினான் வில்லியம். முதலில் ஒரு பெரிய பிளாஸ்டிக் தொட்டியை எடுத்தவன், அதில் கடல்நீரை நிரப்பி அதில் அந்த இறகு எழுதுகோலை வைக்க, அது ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி திரும்பியது.

"வில்லியம்... இது ஒரு காம்பஸா..." என்று போலியாக ஆச்சரியம் காட்டிய விக்ரமாதித்தன் "அது எந்த திசை காட்டுது?" என்று கூறியவாறு தன் கைக்கடிகாரத்துடன் இணைக்கப்பட்ட சிறிய அளவிலான திசைக்காட்டியை அவன் பார்க்க, அதுவோ ஒருதிசையைக் காட்டாமல் எல்லாபக்கமும் மது குடித்துவிட்டு சுற்றுவதை போல் சுற்றியது.

"என்னுடைய வாட்ச் ரிப்பேர் ஆகிடுச்சு போல... டைம் டேட் கூட ஓட மாட்டீங்குது...‌" என்றவனை பார்த்து சிரித்த வில்லியம், தன் பாக்கெட்டில் இருந்த அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு திசைகாட்டியை எடுத்து அவனிடம் காட்ட, அதுவும் திசையைக் காட்டாமல் எல்லாப் பக்கமும் சுற்றிக்கொண்டே இருந்தது.

"இந்த இடமே இப்படித்தான். இங்க நாள், நேரம், திசைன்னு எதுவும் இல்லை. இது ஒரு மாய வலை. சிக்கிட்டா தப்பிக்க முடியாது... ஆனா நாம் ஈசியா போய் தங்கத்தை எடுத்துட்டு வரலாம். ஏன்னா நம்மகிட்ட தான் இது இருக்கே... இது நமக்கு வழிகாட்டும்..." என்று வில்லியம் அந்த பேனாவை காட்டி கூற, விக்ரம் அமைதியாக கேட்டுக்கொண்டான்.

இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த இந்த எழுதுகோலை, போட்டி போட்டுக்கொண்டு ஒன்றரை கோடிக்கு இவன் கொண்டுசெல்லும் போதே விக்ரம் நன்றாகவே கணித்திருந்தான் அதன் முக்கியத்துவத்தை... ஆனால் அது பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள இடத்திற்கு கூட்டிச் செல்லும் என்பதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

விக்ரம் மற்றும் வில்லியம் இருவரும் செல்லும் படகை பின் தொடர்ந்து வந்த மற்ற ஐவரில் ஒருவனான வேலன் "இருப்பது மொத்தம் ஏழு பேர். ஒரு படகில் மூவர் மற்றொன்றில் நால்வர் என்று சென்றிருக்கலாமே..‌ எதற்கு அந்த புதியவனை மட்டும் தனியாக அழைத்துச் செல்கிறார் இந்த வில்லியம்..!" என்று நினைத்து வேலன் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டு இருக்க, அவன் அருகில் இருந்த மற்றொருவனான பார்த்திபனோ தூரத்தில் தெரிந்த கூறிய முனைகள் கொண்ட பாறைகளை பார்த்து விட்டு "உங்களுக்கு தெரியுமா... அந்த பாறைகள்ல தான் கடல் கன்னி அழகான பெண் மாதிரி உட்கார்ந்துகிட்டு, கன்னி பையன்களை மயக்கி கூப்பிட்டு அவங்க வந்ததும் அப்படியே சாப்டுட்டு பசி தீர்த்துக்கும்..." என்று கூற "அப்படியா!!!!!" என்று ஒருவன் ஆச்சரியப்பட, மற்றொருவன் சிரிக்க, மற்றொருவன் முறைக்க என அந்த இந்த படகு என்னவோ ஜாலியாகத்தான் சென்றது.

பல கூம்பு பாறைகள் ஆங்காங்கே இருந்தாலும், இந்த பேனா ஒரு குறிப்பிட்ட பாறையை மட்டும் காட்ட, அதுதான் அவர்கள் தேடி வந்தது என உறுதிசெய்ய வேண்டி அந்த பாறையை அவர்கள் கடந்துசென்றனர். ஆனால் அந்த எழுதுகோலோ முன்பு காட்டிய திசைக்கு நேரெதிர் திசையில் திரும்பி அந்த பாறையையே காட்டியது...

அந்த பாறைகளில் தான் தங்கம் உள்ளது என உணர்ந்த வில்லியம், அங்கு படகை நிறுத்தி இறங்கிவிட்டு, பிறகு அதை ஒரு கயிற்றில் கட்டி வைக்க கூற, அவன் கூறியதை செய்த விக்ரம், மற்றவர்களையும் பார்த்து இறங்குமாறு கூறினான்.

அங்கிருந்த சொரசொரப்பான கூறிய பாறைகள், நீ தடுக்கி விழுந்தால் நிச்சயம் ஒரு லிட்டர் இரத்தத்தையாவது குடிப்பேன் என்பது போல அவர்களை பயம்புறுத்த, மெதுவாகவும் கவனமாகவும் காலை எடுத்து வைத்து சென்றவர்கள், ஆளுக்கு ஒரு திசைச் சென்று தங்கம் இருப்பதற்கான அறிகுறிகள் எதாவது இருக்கிறதா? என்று தேடிப்பார்த்தனர்... எவ்வளவு தேடியும் நேரம் போனதே தவிர, தங்கம் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால் கலைத்து போயினர்.

அந்த மூவாயிரத்து ஐநூறு சதுர அடி பரப்பளவுள்ள ஆபத்தான பாறைகளில், பிளாஸ்டிக் தொட்டியில் நீரை நிரப்பி அதில் அந்த 43 சென்டிமீட்டர் நீளமுள்ள எழுதுகோலை போட்டு தூக்கிக்கொண்டு திரிந்து தங்கம் உள்ள இடத்தை கண்டறிய அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லையே. நடப்பதே கடினமாக இருக்கும் போது கிட்டத்தட்ட ஐந்து லிட்டர் தண்ணீரை எங்கிருந்து சுமப்பது.

"வில்லியம்... ஒருவேளை இந்த பாறைக்கு அடியில இருக்குமா. நாம கடல்ல இறங்கி இந்த பாறைகளுக்கு அடியில தேடி பார்த்தா என்ன?" என்று விக்ரம் தன் யோசனையை கூறியதும்,

"வில்லியம்... அதெல்லாம் நடக்கிற காரியமா? நமக்கு அதுக்கெல்லாம் டைம் இல்லை. இப்பவே மதியம் ஆகிடுச்சு. இருட்டுறதுக்குள்ள நாம கப்பலுக்கு போகனும்... இல்ல நாம இங்கவே மாட்டிக்க வேண்டியது தான்..." கைக்கடிகாரம் ஓடாததால் சூரியனைப் பார்த்து நேரத்தை கணித்து தன் நிராகரிப்பை கூறிய வேலன் மனதில், விக்ரமை தன்னைவிட தாழ்த்த வேண்டும் என்ற எண்ணமே குடிக்கொண்டு இருந்தது.

கைவசம் இருந்த சேட்டிலைட் போனும் வேலைசெய்யவில்லை. சூரியன் மறைவதற்குள் கப்பலுக்கு திரும்பாவிட்டால் நிச்சயம் இங்கேயே மாட்டிக்கொள்வோம்... என்ற நிதர்சனம் உணர வில்லியம் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினான்.

இவ்வளவு செலவு செய்து இவ்வளவு தூரம் வந்தது வெறும் கையை வீசிக் கொண்டு செல்லவா... இன்னொரு நாள் தனிக்கப்பல் வைத்து ஆற அமர வந்து பார்த்து செல்ல, என்னிடம் தேவையான பணவசதி உள்ளதா என்ற எண்ணமும் எழ, ஒரு முடிவுக்கு வர முடியாமல் குழம்பினான் வில்லியம்...

"வில்லியம்... நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க... இங்க இருக்கிற பாறைகள் மேல எல்லாரும் வேகமா தண்ணீர் தெளிச்சி பார்ப்போம்! எதாவது வரைபடம் தெரியுதான்னு... நான் ஒரு ஹாலிவுட் படத்துல பார்த்து இருக்கேன். அப்படி ஒருமுறை ட்ரை பண்ணலாமே... என்னதான் நடக்குதுன்னு பாத்துடலாம். கடலை ஒட்டி இருக்குற பாறைகளுக்கு கடல்ல இருந்து தண்ணீர் எடுத்துட்டு வந்து தெளிக்கலாம். நடுவுல இருக்குற பாறைகளுக்குலாம் அங்க ஒரு குட்டை மாதிரி ஒரு இடத்துல தண்ணீர் தேங்கி இருந்துச்சு. அதுல இருந்து தண்ணீர் எடுத்து தெளிக்கலாம். ஏன்னா இவ்வளவு தூரம் கடல் தண்ணீர தூக்கிட்டு இந்த பாறைகள்ல வர முடியாது இல்ல..." படங்கள் பார்ப்பதே தீவிர வேலையாக கொண்ட பார்த்திபன் தன் கருத்தை தெரிவிக்க, விக்ரமிற்கு சட்டென்று பொறி தட்டியது.

"பார்த்தி... வெயிட் வெயிட்... என்ன சொன்ன இங்க குட்டை இருக்கா?" என்றான் கேள்வியாக.

"ஆமாம்! என்னை அந்த சைட் செக் பண்ண சொன்னீங்க இல்ல... அங்க பார்த்தேன்..." என்றான்.

"வேற யாராவது இங்க எதாவது தண்ணீர் தேங்கி இருக்கிறதை பார்த்தீங்களா?" என்று விக்ரம் பொதுவாக அனைவரிடமும் கேட்க, அனைவரும் இல்லை என்று தலையசைக்க, அர்த்தம் பொதிந்த பார்வையை வில்லியமும் விக்ரமும் பார்த்துக்கொண்டனர்.

வில்லியம் ஒரு வெற்றிப் புன்னகையுடன் விக்ரமை பார்த்து தலையசைக்க, விக்ரம் படகிற்கு சென்று அந்த இறகு எழுதுகோலை எடுத்துவந்து வில்லியமிடம் கொடுத்தான். வில்லியம் தன் குழுவுடன் அந்த குட்டைக்கு அருகில் சென்று அந்த எழுதுகோலை குட்டைத் தண்ணீரில் போட, வேகமாக சுற்றிய அது பிறகு சட்டென்று நீருக்குள் சென்றது.

தங்கம் இருக்கும் திசையை காட்டும் என்று பார்த்தால், அது படக்கென்று உள்ளே செல்லும் என்று விக்ரமும் வில்லியமும் கனவா கண்டார்கள்... மற்ற ஐவரும் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

"ஐயோ! ஒன்றரை கோடி போச்சு..." என்று உணர்ச்சிவசப்பட்டு கத்திய விக்ரமை அனைவரும் வினோதமாக பார்த்தனர். இது என்ன அவன் சொந்த காசை போட்டா வாங்கி வந்தான் என்ற எண்ணம் அவர்களுக்கு... ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை இது விக்ரமின் பணம் தான் என்று... குருவி போல் கொஞ்சம் கொஞ்சமாக விக்ரமும் அவன் தம்பி விஜயும் சேர்த்த(அடித்த) பணம்தான் இது...

அவர்களின் மனவோட்டத்தை புரிந்துகொண்டவன், "ஒன்னும் கிடைக்கலைன்னா அந்த குயில் பென்னையாவது வெளிநாட்டுல வித்து காசு பார்க்கலாம்னு நினச்சேன்..." என்று கூறி சமாளித்து வைத்தவன், கையை அந்த குட்டையில் விட்டு துழவி பார்க்க, அதன் அகலம் குறைவாக இருந்ததே தவிர ஆழம் அதிகமாக இருந்ததால், அந்த எழுதுகோலை கண்டுபிடிக்க முடியவில்லை.

வில்லியமின் ஆணைக்கிணங்க அதன் ஆழத்தை பார்க்க, ஒரு கல்லை நூலில் கட்டி அந்த குட்டையில் போட்டு பார்த்தவர்கள் அந்த நூல் முடிவில்லாமால் செல்வதை பார்த்து அது குட்டை இல்லை ஆழ்துளை கிணறு போன்றது என்பதை புரிந்துக்கொண்டனர்.

"மிஸ்டர் ஆதி... கடல்ல இறங்கி பாறைகளுக்கு அடியில தேடி பார்க்கலாம்னு ரொம்ப ஆசைப்பட்டீங்களே... அதனால நீங்களே உள்ள இறங்கி அந்த பென் எங்க போச்சுன்னு பாருங்க. அது உள்ள போனதுல உங்களுக்கு தான ரொம்ப கஷ்டமா இருக்கு... சீக்கிரம் போய் எடுத்துட்டு அப்படியே எதாவது கிடைக்குதான்னு பார்த்துட்டு வாங்க..." என்று கூற விக்ரம் ஜெர்கானான். உள்ளே என்னவெல்லாம் இருக்குமோ!

"மிஸ்டர் வேலன்... இந்த ப்ளான் ஆரம்பிச்சதுல இருந்து நானேதான் எல்லா வேலையும் செஞ்சிட்டு இருக்கேன்... அதனால இந்த தடவை இந்த வேலையை நீங்க செய்ங்க..." என்று வேலனை கோர்த்து விட்டான் விக்ரம்.

"வில்லியம் உங்களுக்கு பணத்தை வாரி வழங்கி கூட்டிட்டு வந்தது, இந்தமாதிரி ரிஸ்கான வேலையை செய்யத்தான்..." வேலனுக்கும் விக்ரமிற்கும் வாக்குவாதம் அதிகரிக்க, இடையில் வந்த வில்லியம் "விக்ரம்... நீங்க தான் உள்ள இறங்கனும். அந்த குயில் பென் உன்னுடைய பொறுப்பு தான்..." என்று காட்டமாக கூறிவிட, விக்ரமால் அதை கேட்காமல் இருக்க முடியவில்லை.

"சரி... நானே இறங்கித் தொலையறேன்..." என்று கோபமாக மேல் சட்டையையும் ஷூவையும் கழட்டி போட்டவன், நீருக்கு அடியில் நீந்தும்போது போடும் கண்ணாடியை அணிந்துக்கொண்டு, அனைத்து தெய்வங்களையும் வணங்கியவன், ஒரு ஆள் மட்டுமே செல்லக்கூடிய அளவிலான அந்த நீர்த்தேக்கத்தில் காலை மட்டும் விட்டுவிட்டு அமர்ந்து அவசரப்பட்டுவிட்டோமோ!!! என்று யோசிக்க, அவனின் தோல்பட்டைகளை இருகரம் பிடித்து நீரினுள் தள்ளியது...

மேல் சட்டையை கழட்டிவிட்டு வெறும் பனியனோடு இருந்ததால், அந்த கைகள் அவனின் உடல் பாகத்தை நேரடியாக தொட்டிருந்தது. அதனால் அந்த கைக்கு சொந்தமானவனின் கடந்தகால நினைவுகள், விக்ரமின் அனுமதியின்றி அவனுள் புக, அந்த நினைவுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாமலும் தண்ணீரில் சுவாசிக்க முடியாமலும் திணறினான்...


மூச்சுக்காக வேண்டி வெளியே சென்றால் அவன் தவிப்பதை பார்த்து நிச்சயம் யாராவது கைக்கொடுத்து தூக்க முன்வருவர்... ஏற்கனவே ஒருவனின் கடந்தகால கசப்பான நிகழ்வுகளில் சிக்குண்டு அதன் வலியில் தவிப்பவன், இப்பொழுது வேறு யாராவது தொட வந்து அவர்களின் நினைவும் ஆட்கொண்டால் நிச்சயம் ஒரு மோசமான வலிக்கும் பின்விளைவுகளுக்கும் உள்ளாவான்... தண்ணீருக்குள்ளேயே இருந்தால் மூச்சுத்திணறி உயிர்விட வேண்டியது தான்... இனி என்ன செய்வது என தெரியாமல் தவித்தவனின் கையை ஒருகரம் பிடித்து இழுத்தது...


-தொடரும்...


விக்ரமை பிடித்து இழுத்தது யார்? அவனுக்கு இந்த சக்தி வரக்காரணம் என்ன? தற்போது யாரின் நினைவு விக்ரமை ஆட்கொண்டு உள்ளது? அவனுக்கு உதவ நினைத்து அவனை இழுத்தவர்களின் நினைவும் தற்போது விக்ரமை ஆட்கொண்டுவிட்டால் அவன் நிலை என்னவாகும்? பணத்தைப்போட்டு எழுதுகோலை வாங்கியவனே அதைத் திருடக் காரணம் என்ன? உயிரை பணயம் வைத்து விக்ரம் அவர்களுடன் வருவது தங்கத்திற்காகவா? அனைத்துக் கேள்விகளுக்கான விடையையும் அடுத்தடுத்து அத்தியாயத்தில் காணலாம்...

முதல் முறை fantasy எழுதுகிறேன். நீங்க நிறைக்குறைகளை பகிர்ந்து கொண்டால் என்னை நான் திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடித்திருந்தால் தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...
 
Last edited:

PriyaPintoo

Member
Vannangal Writer
Messages
36
Reaction score
33
Points
18
வாகை:

வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழைமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. "வெற்றி வாகை சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது.

அத்தியாயம் 3:

"ஆப்ரேஷன் நடக்கனும்னா நீங்க முதல்ல பணத்தை கட்டணும்..." வெள்ளை கோட் அணிந்துக்கொண்டு ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தில் தொங்கவிட்டபடி, ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க மருத்துவர் ஒருவர் கறாராக கூறிவிட்டு செல்ல விக்ரம் மணமுடைந்து போனான்.

"ஐயா... ராசா... எப்படியாவது காசை புரட்டி என் புள்ளைய காப்பாத்துப்பா..." விக்ரமின் அருகில் இருந்த அம்மா அவனின் கையைப்பிடித்து கண்ணீர் வடிக்க, அவன் கண்களிலுமே கண்ணீர்.

"ஆத்தா... நீ கவல படாத. என் உசுர கொடுத்தாவது என் தங்கச்சிய காப்பாத்துவேன்..." என்று ஆக்ரோஷமாக கூறிய விக்ரம், கண்ணீரை துடைத்துக்கொண்டு தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த நோக்கியா பழய ரக பட்டன் ஃபோனை நோண்டியபடி வெளியேசென்றான்.

அதில் இருந்த எண்களுக்கெல்லாம் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டு மன்றாடியவன், ஆங்காங்கே அலைந்து திரிந்து அந்த நாளின் இறுதியில் இரண்டு லட்சம் புரட்டியிருந்தான். ஆனால் தேவையானதோ பத்து லட்சம் ரூபாய். மீதி எட்டுலட்சத்தை எப்படி புரட்டுவது என்று குழம்பியவனின் எதிரில் தெய்வம் போல் வந்து நின்ற ஒரு நடுத்தர வயதுடைய பெண்மணி "வேலன்... எப்படி இருக்கீங்க. என்னை தெரியுதா... இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு மால்ல தீப்பிடிச்சிடுச்சி. நீங்க தான என்னையும் என் குழந்தையையும் காப்பாத்தனீங்க..." என்று கூற, பிறகு தான் அவனுக்கு அவர்கள் யார் என்று நினைவு வந்தது. காலில் விழுந்து நன்றி கூறிய அவரை எப்படி மறந்தான் என்று தெரியவில்லை. தீயணைப்பு வீரனாக அவன் காப்பாற்றிய உயிர்கள் பல...

"நீங்க எப்படி இருக்கீங்க... பாப்பா நல்லா இருக்காலா..." என்று அவனும் விசாரிக்க, அவர் திரும்பவும் தீயில் இருந்து தன்னையும் தன் மகளையும் மீட்டு தந்ததற்கு நன்றி கூறினார்.

"என்ன இந்த பக்கம்..." என்று அவர் விசாரிக்க, தன் தங்கைக்கு விபத்து ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டு இருக்கிறது. அதற்கு பணம் வாங்க நண்பனின் வீட்டிற்கு வந்தேன் என தன் நிலைமையை எடுத்துக்கூற, அனைத்து விஷயங்களையும் விசாரித்து அறிந்த அப்பெண்மணி அறுவைசிகிச்சைக்கான முழு செலவையும் அவர் ஏற்பதாக கூறினார்.
முதலில் வேண்டாம் என்று மறுத்தவன் பிறகு அவர் என் மகளின் உயிரை காப்பாற்றியதற்காக என்று பணத்தை திணித்து விட, மகிழ்ச்சியாக மருத்துவமனைக்கு வந்தவனை அவனின் அம்மா அழுகையுடன் எதிர்கொண்டார். தன் மகள் இறந்துவிட்டதாக நெஞ்சில் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டவரை வேலன் நினைவில் இருந்த விக்ரம் கண்ணீருடன் உணர்ந்துக்கொண்டு இருந்தான்.

(Note: அங்கு நிற்பது வேலனா அல்லது விக்ரமா என்று குழம்ப வேண்டாம். அது வேலன் தான்... இந்த நிகழ்வுகள் வேலனுக்குத்தான் நடந்தது. ஆனால் நாம் இதை விக்ரமின் பார்வையில் இருந்து பார்ப்பதால் தான் விக்ரம் நின்றிருந்தான்... விக்ரம் கண்ணீர் வடித்தான் என்று கூறியுள்ளேன்... விக்ரம் சில நிமிடங்கள் வேலனாக உணர்ந்து அந்நிகழ்வுகளை அனுபவித்துக்கொண்டு இருந்தான். )

வேலன் தான் தண்ணீரில் விக்ரமை தள்ளிவிட்டிருந்தான். எதிர்பாராத அந்த தொடுகையால், விக்ரமின் அனுமதியின்றி வேலனின் கசப்பான கடந்தகாலம் அவனுள் புக, சில நிமிடங்கள் அவன் வேலனாகவே மாறியிருந்தான். என்னதான் வேலனாக விக்ரம் மாறியிருந்தாலும் இது கடந்தகாலத்தின் நினைவுகள் மட்டுமே என்பதால் விக்ரமால் வேலனின் அந்த கசப்பான கடந்தகாலத்தை மாற்ற இயலவில்லை. கடந்த காலத்தை மாற்றம் செய்ய அவன் ஒன்றும் காலப்பயணம் மேற்கொள்ளவில்லையே... நினைவுகளை மட்டும் தானே கடத்திக்கொண்டான்.

இப்படித்தான் விக்ரம் ஒவ்வொரு முறையும் யாரையாவது தொடும்போது அந்த இடத்தில் தானே இருப்பது போல, தனக்கே அந்த கொடூரமான சம்பவம் நடப்பதுப் போல உணருவான். ஆணாக இருந்தாலும் பிரசவ வலியை உணர்ந்திருக்கிறான், அவனுக்கு தாய் இல்லையென்றாலும் அந்த தாயின் பரிதவிப்பை உணர்ந்திருக்கிறான்... அவனுக்கு விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை என்றாலும் அந்த விபத்தின் வலியை உணர்ந்திருக்கிறான்... ஆசிட் வீச்சின் வலி, நெருப்பின் எரிச்சல் என்று இத்தனை ஆண்டுகளாக அவன் அனுபவிக்காமல் உணர்ந்த வலிகள் ஏராளம். தற்போது கூட உடன் பிறந்த தங்கை இல்லையென்றாலும் தங்கையின் பிரிவின் வலியை உணர்ந்தான். அந்த வலியின் தாக்கத்தால் மூடியிருந்த அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

முதலில் எல்லாம் யாரையாவது தெரிந்து தொட்டாலும் தெரியாமல் தொட்டாலும் இந்த சக்தி இல்லை இல்லை பிரச்சினை... விக்ரமை பொருத்தவரை இது பிரச்சினை, சாபம். முதலில் எல்லாம் யாரையாவது தெரிந்து தொட்டாலும் தெரியாமல் தொட்டாலும் இந்த பிரச்சினை உண்டாகிவிடும்... ஆனால் இப்பொழுது தன்னை கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டான். அதற்கு முழு காரணம் விஜய் மட்டுமே... தனக்கென எந்த தனிப்பட்ட விஷயங்களும் இல்லை... என்அண்ணன் அனைத்தையும் பார்த்துக் கொள்ளட்டும் என தன் கையை அவனே கொடுத்து தொட்டுக்கொள்... தெரிந்துக்கொள்... என்பான். அவனை தொட்டு தொட்டே தன் சக்தியை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டான் விக்ரம்.

தொடுதல் மூலமாக தேவைப்படும் நியாபங்களை மட்டும் பார்க்க கற்றுக்கொண்டவன், மற்றவர்கள் தொட்டால் தன்னை மீறிப்போகும் நினைவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டு, சாபத்தையும் வரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தவனை, விஜயின் ஒற்றை வரி தடுத்து நிறுத்தியது... அவ்வரியை விஜய் கூறாமல் இருந்திருந்தால் இந்நேரம் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கமாட்டானோ என்னவோ... தான் கூறிய சொற்கள் தன் அண்ணனின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் என்று தெரிந்திராத விஜய் அன்று மிகவும் மகிழ்ச்சியாக சுற்றித்திரிந்துக் கொண்டு இருந்தான்.

வேலனின் கடந்த காலத்தால் ஆட்கொள்ளப்பட்டு இருந்தவனின் மூடியிருந்த கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அதை அழுந்த துடைத்து விட்டவன் மெதுவாக கண்ணைத் திறந்து பார்க்க அவன் மேலே ஒரு வாகை மரம் பூத்துக்குலுங்கிக் கொண்டு இருந்தது. எழுந்து அமர்ந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க, ஏதோ காடு போல் அவ்விடம் இருந்தது. சில்லென்று அவன் காலைத்தீண்டிய கடலலை சற்று அவனுக்கு சற்று நன்றாக இருந்தது. இந்த கடலலையிலேயே காலை வைத்துக்கொண்டு இப்படியே நிம்மதியாக இருந்துவிடலாமா என்று தோன்றிய எண்ணத்தை கட்டுப்படுத்தியவன் எழுந்து எங்கே தான் இருக்கிறோம்? வேறு யாராவது இருக்கிறார்களா? தன்னை காப்பாற்றியது யார்? வில்லியம் & கோ எங்கே? என்ற கேள்விகளுடன் கால்போனப்போக்கில் நடந்தான். சிறிது தூரம் நடந்தவன், பிறகு தன்னுடன் வந்தவர்களின் பெயரை கத்திக்கொண்டே நடக்க, அவனுக்கு மிக அருகில் ஒரு புதரில் இருந்து ஏதோ மிருகம் உருமும் சத்தம் கேட்க, அமைதியாகியவன் பிறகு வேக எட்டுக்களை எடுத்து வைத்து ஓட ஆரம்பிக்க, அவன் செல்லும் திசையிலேயே அந்த புதரில் இருந்த மிருகமும் வருவது போல் தோன்ற அவனின் உயிர் அவன் கையில் இல்லை.

அவசரப்பட்டு வந்துவிட்டோமோ... என்று நூறாவது தடவையாக யோசித்தவன், ஒரு திசையில் சட்டென்று துப்பாக்கியின் சத்தம் கேட்டதால் வில்லியமாக இருக்குமோ என நினைத்து அந்த திசையில் ஓட , அவன் ஓடும் திசையெங்கும் புதர்கள் அசைந்துக்கொண்டே வர, உயிரை கையில் பிடித்துக் கொண்டு கடற்கரை மணலில் ஓடியவன் நல்லவேளையாக வில்லியமை கண்டுகொண்டான்.

"வில்லியம்... இவ்வளவு கிடச்சதே போதும். இதை எடுத்துகிட்டு நாம வீட்டுக்கு கிளம்புவோம். இதை வித்து வர பணத்துல கொஞ்சம் செலவழிச்சி நாம் திரும்ப வந்து இங்க வேற எதாவது இருக்கான்னு பார்த்துப்போம். இப்போ லேட் ஆச்சு..." என்று வேலன் வில்லியமிடம் கூற, அவர்களை நோக்கி வந்த விக்ரமின் காதிலும் வேலன் கூறியது விழுந்தது.

அவர்களின் அருகில் ஒரு பெரிய மரப்பெட்டி நிறைய தங்க வைர ஆபரணங்களை பார்த்த விக்ரம், 'முடியாதுன்னு சொல்லுவான்.‌.. எனக்கு அந்த தங்க யாளி சிலைதான் வேணும்னு சொல்லுவான். இவனை பத்தி எனக்கு தெரியாதா? ஒன்னு இங்கேயே மாட்டிகிட்டு பசில சாகனும், இல்ல இங்க இருக்கிற மிருகங்களும் இறையாகி சாகணும்...' என நினைத்தான்.

அவன் நினைத்தது போலவே வில்லியம் கூறிவிட, அவர்களிடம் வந்த விக்ரம் என்னை யாராவது தேடணீங்களா... என்று கேட்க, பார்த்திபன் மட்டும் கையை தூக்கிவிட்டு எங்க ப்ரோ போனீங்க... என்று மகிழ்ச்சியாக கட்டியணைக்க வர, கண்களை மூடி மூச்சை நன்றாக இழுத்து விட்ட விக்ரம், அவனே வேண்டுமென்றே சென்று பார்த்திபனை கட்டியணைத்து, தான் மூழ்கிப் பிறகு அங்கு நடந்ததை அறிந்துக்கொண்டான்.

வெகுநேரம் ஆகியும் விக்ரமை காணவில்லை என்றதும் அனைவருக்கும் பயம் ஆட்கொள்ளத் துவங்கியது. ஏதோ பிரச்சினை, தங்கத்துடன் ஓடிவிட்டான், வேலன் தான் அவனை தண்ணீரில் தள்ளிவிட்டு கொன்றுவிட்டான்... என பல கருத்துக்கள் எழ, வேலனே தற்போது நான் உள்ளே இறங்கிச்சென்று பார்க்கிறேன் என்று இறங்கினான். சிறிது நேரத்திற்கெல்லாம் வெளியே வந்தவன் உடனே என்கூட வாங்க... பார்க்கவே அதிசயமா இருக்கு... என்று கூறி மற்றவர்களையும் அழைத்தான். ஒருவர் பின் ஒருவராக நீரினுள் வந்தவர்கள் அந்த ஆழ்துளை கிணறு போன்றது அமைப்பு கடலில் முடிவடைவதை கண்டு அட என்ன இது திரும்ப கடலுக்கே தான் வந்துவிட்டோம் என நினைக்க, அதான் இல்லை... அவர்கள் கடலில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தால் அருகிலேயே ஒரு தீவு தெரிந்தது. அவர்கள் நிறுத்தி வைத்திருந்த படகையும் காணவில்லை. அந்த பாறைகளையும் காணவில்லை... அந்த கூம்பு பாறைகள் நிறம்பியிருந்த இடத்தில் இருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சில கூம்பு பாறைகளும் கடலும் மட்டுமே இருந்தது. ஆனால் அந்த ஆழ்துளை கிணறு போன்றது அமைப்பிற்குள் சிறிதுதூரம் மட்டுமே புகுந்து வந்து எட்டிப்பார்த்தால் ஒரு தீவே தெரிகிறதே என்று குழம்பினர்.

தன் குழப்பங்களையெல்லாம் ஓரம் கட்டி வைத்தவர்கள், அந்த ஆழ்துளை கிணறு முடியும் இடத்தை நன்றாக குறித்து வைத்துக்கொண்டு தீவினுள் இறங்கி தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட நினைக்க, தேடி வந்த தெய்வம் எதிரில் வந்து நின்றது போல ஒரு பாறைக்கு மறைவில் ஒரு மரப்பெட்டி இருந்தது. அதை திறந்து பார்க்க அதில் தங்க வைர வைடூரிய ஆபரணங்கள் நிறைந்திருந்தன. அதைக்கண்ட வில்லியமிற்கு சந்தேகம் எழுந்தது. அவ்வளவு சீக்கிரம் தங்கம் கிடைத்துவிட்டதே... தான் படித்து அறிந்தது போல் இது ஒரு பொறியா( trap) என்று சந்தேகித்தான்.

மற்ற ஐவரும் அந்த தங்க ஆபரணங்களை பார்வையிட்டுக் கொண்டு இருக்க, சட்டென்று அவர்களுக்கு துப்பாக்கியின் தோட்டா சத்தம் கேட்டது. சட்டென திரும்பி பார்த்தவர்கள் வில்லியம் கையில் துப்பாக்கி இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். தாங்கள் அனைவரையும் சுட்டுவிட்டு புதையல் முழுதையும் எடுத்துக்கொள்ளப் போகிறானோ என்று பார்த்திபன் அச்சமடைய, துப்பாக்கி ஒரு புதரின் திசையில் குறிபார்த்து இருப்பதைப் பார்த்து, மெதுவாக அங்கு சென்று பார்க்க, அங்கே ஒரு வெண்குதிரை காலில் குண்டடிப்பட்டு விழுந்துக்கிடந்தது.

விக்ரம் அங்கு வருவதற்கு முன்பாக நடந்த எல்லாவற்றையும் பார்த்திபனின் நினைவுகளின் மூலமாக அறிந்துக்கொண்டவன், மனமோ தங்கத்தை பார்க்கும் ஆவல் சிறிதுமின்றி அந்த குண்டடிப்பட்ட குதிரை எப்படி உள்ளது என்பதை அறிந்துக்கொள்ள ஏக்கம் கொண்டது.
அது எப்படி இருக்கிறது என்று பார்க்க நினைத்த மனதை அடக்கியவன், அனைவரையும் கேள்விகளால் துளைத்தான். நடந்ததை எல்லாம் அவர்கள் கூற அறிந்துக்கொண்டவன், அவர்கள் கூறிய பிறகே குதிரை ஒன்று அடிப்பட்டதை அறிந்தார் போல் நடித்து பிறகு அதை அங்கு சென்று பார்த்தான். அவன் நினைத்திருந்தால் அவர்களை கண்டுகொள்ளாமல் அதனிடம் சென்றிருக்க முடியும். அவ்வாறு செய்தால் வீண் சந்தேகங்கள் தான் எழும் என்பதால் அமைதியாக இருந்தான்.

அந்த குதிரையிடம் சென்று பார்த்தவன், அது இரத்த வெள்ளத்தில் பாதி மயக்கத்தில் இருப்பதை பார்த்தவன், மனது கேட்காமல் பார்த்திபன் தன்னுடன் கொண்டு வந்த விக்ரமின் தோல்பையில் இருந்து முதலுதவி பெட்டி எடுத்து அதுக்கு சிகிச்சை அளித்தான்.
அதைப்பார்த்த வில்லியமிற்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு சாதாரண திருடனுக்கு இவ்வளவு நேர்த்தியாக சிகிச்சை அளிக்க முடியுமா என்று... மயக்க ஊசி போடுவதாகட்டும், புல்லட்டை நேர்த்தியாக வெளியே எடுப்பதாகட்டும், தையல் போடுவதாகட்டும், கட்டு போடுவதாகட்டும் என அனைத்தையும் குறித்து வைத்துக் கொண்டான். உண்மையில் விக்ரம் ஒரு கால்நடை மருத்துவன். அரசின் கால்நடை மருத்துவமனையில் பணிபுரிகிறான். அவன் இத்துறையை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் அவனுடைய சக்திதான். மனிதர்களை தொட்டால் ஒரு நொடியில் பிரச்சனைக்கு உள்ளாகிறவன், விலங்குகளிடம் சாதாரணமாக விளையாட முடிவதால் செல்லப் பிராணிகள் என்றால் அவனுக்கு உயிர்.

"சரி... நாம டைம் வேஸ்ட் பண்ணாம உள்ள போகலாம்..." என்று வில்லியம் கூற, விக்ரமோ தான் கேட்ட அந்த கர்ஜனை சத்ததை பற்றி அவனிடம் கூறினான்.

புலியோ சிங்கமோ... எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று கூறிய வில்லியம், அவனின் தோற்பையில் இருந்து தூப்பாக்கிகளை எடுத்து அனைவரிடம் கொடுக்க, அனைவரும் அதிர்ந்தனர் விக்ரமைத் தவிர. அவன் இத்தனை வைத்திருப்பான் என்று யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
"வில்லியம்... எனக்கு என்னவோ சரியாப்படல. நாம கிடைச்சதோட போய்டலாம்..." என்று பார்த்திபன் கூற "அப்போ நீ கிளம்பு... உனக்கு ஒரு குண்டூசி கூட கிடையாது..." என்று காட்டமாக வில்லியம் கூற, பார்திபனுக்கு வேறுவழி இல்லாமல் போனது. இதற்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைத்தவர்கள் கூட ஒன்றும் கூறாமல் அமைதியாகிப்போக, காட்டிற்குள் உள்ளே செல்ல இருந்தவர்களை தடுத்தது அந்த வெண்குதிரை.

எதிரில் வந்து நின்று கனைத்துக்கொண்டு இருந்த குதிரையைக் கண்டு வில்லியம் எரிச்சல் அடைய, விக்ரம் ஆச்சரியம் அடைந்தான். மயக்க மருந்து கொடுத்தும், இவ்வளவு இரத்தம் சிந்தியப்பிறகும் எப்படி இந்த குதிரை எழுந்து நிற்கிறது என்று ஆச்சரியப்பட்டான். அது எழுந்து நின்று அவர்களின் எதிரே வந்து கனைத்துக்கொண்டும், துள்ளிக்குதித்துக் கொண்டும் இருந்ததால் விக்ரம் கட்டிய கட்டிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்ததை அவன் கவனித்தான்‌. அதன் எதிரே சென்று அதை அடக்க முற்பட அது அடங்கப்போவதாக தெரியவில்லை‌.

கோபமுற்ற வில்லியம் அதை சுட்டு சாகடிக்குமாறு ஆணை பிறப்பிக்க, விக்ரமை தவிர மற்றவர்கள் அனைவரும் தங்களின் கைகளில் இருந்த துப்பாக்கியை பார்க்க, விக்ரமோ வில்லியனிடம் வாக்குவாதத்திற்கு செல்ல, அங்கே ஒரு கைக்களப்பு ஏற்பட்டு குதிரையின் மீது பாயவேண்டிய குண்டு தெரியாமல் விக்ரமின் மீது பாய்ந்தது.


- தொடரும்.

விக்ரமிற்கு நடக்கப்போவது என்ன? அனைவரும் பத்திரமாக ஊர் திரும்புவார்களா? அந்த தங்க யாளி சிலைக்கு வில்லியம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து காரணம் என்ன? அவனுக்கு இந்த இடம் பற்றி எப்படி தெரியும்? கால்நடை மருத்துவனான விக்ரமாதித்யனுக்கு அங்கு என்ன வேலை? விஜய் அப்படி என்ன விக்ரமிடம் கூறினான்? இவற்றையெல்லாம் அறிந்துக்கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படித்து, உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பரிசுக்களை வெல்ல லாகின் செய்து கமெண்ட் செய்யுங்கள். அடுத்த அத்தியாயம் நாளை பதிப்பிக்கப்படும்... நன்றி

 

PriyaPintoo

Member
Vannangal Writer
Messages
36
Reaction score
33
Points
18
யாளி:

யாளி (Yali) என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். சிங்கத்தின் முகத்தையும் யானையின் துதிக்கையினையும் கொண்டது. தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி, இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது.

அத்தியாயம் 4:

"சிஸ்டர்... இவரு யாருன்னு தெரிஞ்சுதா இல்லையா... போலிஸ் இன்னும் என்ன பண்ணிட்டு இருக்காங்க..." ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் செவிகளில் பேச்சு சத்தம் விழ, கண்களை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டான் விக்ரம். ஆனால் அது முடியவில்லை.

'தற்போது யாரின் கடந்தகாலத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறோம் என்று தெரியவில்லையே...' என்று நினைத்தவனின் காதில் "இவரு கண்ணு முழிச்சாதான் இவரு யாருன்னு கண்டுபிடிக்க முடியும்னு சொல்லிட்டாங்க டாக்டர்..." ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

அவர்களின் பேச்சைக்கேட்டவன், தான் ஒரு மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்து, 'திரும்பவும் வேலனின் கடந்த காலத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோமா...' என நினைத்தவனுக்கு அப்போதுதான் நினைவில் வந்தது தனக்கு குண்டடிப்பட்டது.

அந்த வெண்குதிரையை வில்லியம் சுட்டு சாகடிக்க நினைத்து துப்பாக்கியை தூக்க, இடையில் புகுந்து விக்ரம் அவனின் கையை பிடித்துக் கொண்டு வேண்டாம் என்று சண்டையிட, அந்த சண்டையில் விக்ரமின் தோல்பட்டையில் வில்லியம் சுட்டிருந்தான். தெரிந்து சுட்டானா? அல்லது தெரியாமல் சுட்டுவிட்டானா என்பது விக்ரமிற்கு தெரியவில்லை. குண்டு பாய்ந்த அடுத்த நொடி மயங்கி சரிந்திருந்தான்...

நிஜ உலகத்தில் இருக்கிறோமா... அல்லது கனவுலகில் இருக்கிறோமா... சொர்க்கத்திற்கு வந்துள்ளோமா? அல்லது நரகத்தில் மாட்டிக்கொண்டோமா? என தெரியாதவன், மெல்ல கண்களை விழிக்க, அதை பார்த்த அவனின் அருகில் இருந்த மருத்துவர் "ஹலோ மிஸ்டர்... நான் பேசறது கேட்குதா? நீங்க யாரு? எங்க இருந்து வரீங்க?" தன் தோல் சுருங்கிய முகத்தை அவனின் முகத்திற்கு அருகில் கொண்டு வந்து சொடக்கிட்டு விக்ரமை அழைத்தார் அவர்.

"என்னுடைய பெயர் விக்ரமாதித்யன். நான் ஒரு வெட்னரி டாக்டர். நாமக்கல்ல ஒர்க் பண்ணறேன்..." மெல்ல கூறியவனிடம் அங்கு வந்த காவல்துறையினர் அவனை சுட்டது யார் என்று விசாரித்தனர். அதற்கு தெரியவில்லை... என்று பதிலளித்தவன், பின் தன் தம்பி விஜயின் எண்ணைக் கூறி அவனை வரச்சொல்லும்படி கூறிவிட்டு, மயக்கமாக இருப்பதாகக் கூறி அமைதியாக கண்களை மூடிக்கொண்டான் அவர்களின் கேள்விகளை தவிர்ப்பதற்காக...

வில்லியம் & கோவின் பெயர்களைக் கூறி அவனால் மாட்டிவிட்டு இருக்க முடியும். ஆனால் அது தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டிக்கொண்டதற்கு சமமாயிற்றே... அவர்களுடன் இவனும் தானே கூட்டுக் களவாணி... இப்பொழுது அவர்களை சமாளிப்பதற்காக தெரியவில்லை என்று கூறினான். பின்பு என்ன நிகழப்போகின்றது என்பது பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தான். அதனால் அவன் எங்கு இருக்கிறான்? எப்படி இங்கே வந்தான் என்பதைக் கூட அவர்களிடம் கேட்கவில்லை. அவனுக்குத் தான் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லையே!!!! என்று சிந்தித்துக் கொண்டே இருந்தவனின் அருகில் வந்த ஒரு செவிலியர், அவன் கையில் ஏறிக்கொண்டு இருந்த இரத்தத்தை கழட்ட முற்பட, விக்ரம் அந்த தொடுகைக்கு இன்னும் தயாராக இல்லாததால் "நோ!!!" என்று சட்டென்று கத்த, அதற்குள் அவனை தொட்டிருந்த அந்த செவிலியர், கையில் இருக்கும் ஊசியை எதாவது ஆட்டிவிட்டோமா? என்ற குழப்பத்தில் வெடுக்கென்று அவரது கையை எடுத்துவிட்டார்.

அந்த செவிலியர் இமைக்கும் நொடியில் அவனை தொட்டு விட்டிருந்த காரணத்தால் "போச்சு..." என்று நினைத்தவன், அவரின் கடந்த காலத்தில் பயணிக்க தயாராக, அப்படி ஒன்றும் நடக்கவில்லை. சாதாரணமாகவே இருந்தான்.

எப்பொழுதும் ஒரு நொடி தொடுகைப்போதும் அவன் மற்றவர்களின் கடந்த காலத்தை அறிய... ஆனால் கண்முன்னே அந்த செவிலியர் அவனை தொட்டிருக்க அவனுக்கு ஒன்றும் ஆகவில்லையே என்ற ஆச்சரியம் எழுந்தது.

"சார்... என்ன ஆச்சு?" விக்ரம் கத்தியதால் அந்த நர்ஸ் கேட்க, ஒன்றுமில்லை... வேலையைத் தொடருங்கள் என்று கூறியவன் ஆழ மூச்சை இழுத்துவிட்டு, வேண்டும் என்றே அந்த செவிலியரின் கடந்த காலத்தினுள் புக நினைக்க, அவனால் அது முடியவில்லை... தனக்கு என்ன ஆயிற்று என தெரியாமல் தவித்தவன் பிறகு அமைதியாக படுத்துக்கொண்டான்.

அவனால் அவனது சத்தியை உபயோகிக்க முடியவில்லை. ஆனால் அந்த சக்தி இல்லாதது பெரும் பாரம் குறைந்ததைப்போல் உணர்ந்தவன் இந்த நிம்மதி இன்னும் எவ்வளவு நாள் நீடிக்குமோ? இப்படியே இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்... நடக்குமா? என் சக்தி இவர்களிடம் மட்டும் தான் வேலை செய்யவில்லையா? என எண்ணத்தொடங்கியவன், பிறகு அவனை பரிசோதிக்க வந்த மருத்துவரின் கடந்த காலத்தினுள்ளும் பயணிக்க முயற்சி செய்து, அதிலும் தோல்வியைத் தழுவியதால் நிம்மதி அடைந்து, இது தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்று புரியாமல் மருந்துகளின் வீரியத்தில் உறங்கியும் போனான்‌.

அவன் கண்விழித்து பார்க்கும் போது விஜய் அவனின் எதிரில் அமர்ந்து கைப்பேசியை நோண்டிக் கொண்டு இருந்தான். தன் ஒரே தோழனான தம்பியை பார்த்த மகிழ்ச்சியில் அவனை பார்த்து சிரித்த விக்ரம், மெல்ல அவனின் பெயரை அழைக்க அப்போதுதான் விக்ரம் விழித்ததை பார்த்த விஜய் தன் பாசமழையை பொழிய ஆம்பித்தான்.

"அந்த மைதா மாவு மட்டும் என் கையில கிடைக்கட்டும்... ஓவன்ல போட்டு அவனை பேக்(bake) பண்ணிடறேன். வெள்ளைக்கார மாமனுக்கு எவ்வளவு கொழுப்ப பத்தியா. எல்லாம் அந்த சோடா புட்டியால வந்தது... ஒருநாள் அந்த ஆளுக்கு இருக்கு... அவன்தான் பிறவி பைத்தியம்... அவன் சொல்லறதைலாம் கேட்டுட்டு நீ தேவையில்லாமல் கிளம்பி போனப்பாரு... உன்னை சொல்லனும்... " கோபத்தில் கத்திக்கொண்டு இருந்த விஜயை சமாதானப்படுத்த முடியவில்லை விக்ரமால்...

முதலில் விஜய் கரித்துக் கொட்டிக்கொண்டு இருந்தது வில்லியமை. அவன்தான் விக்ரமை சுட்டான் என தெரிந்தபிறகு விஜய்யால் அமைதியாக இருக்கமுடியவில்லை. இரண்டாவதாக திட்டிய 'சோடா புட்டி' தான் விக்ரமின் இந்த பயணத்திற்கு காரணமாக அமைந்தவர். எனவே மாமன், வயதில் மூத்தவர் என்றும் பாராமல் அவரையும் சேர்த்துவைத்தே திட்டிக்கொண்டு இருந்தான்.

"விஜய்... கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்து இருக்கு... என்னுடைய அந்த ப்ராப்ளம் போய்டுச்சு. அதை நினைச்சி சந்தோஷப்படு..." என்றவனை அதிர்ச்சியாக பார்த்த விஜய், விக்ரமின் கையை தொட்டுப்பார்க்க முயற்ச்சிக்க, பழக்க தோஷத்தில் முதலில் சட்டென்று கையை இழுத்துக்கொண்டவன், பிறகு அவனே தன் கையை கொடுக்க விஜய் அதிர்ந்து போனான்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக விஜய் விக்ரமை தொட்டதில்லை. தொட்டதில்லை என்பதைவிட தொட விடவில்லை என்பதே உண்மை. அதற்கு முன்பெல்லாம் விஜயின் கையைப் பிடித்து தான் தன் சக்தியை கட்டுப்படுத்த முயற்சிப்பான். திடீரென என்ன ஆனது என்று விஜய்க்கு தெரியவில்லை. தனது கடந்த காலத்தில் எதாவது அவனை வருத்தும் படி பார்த்துவிட்டானா? அதனால் தன்னையும் ஒதுக்குகிறானோ என்ற எண்ணம் பலமுறை விஜய்க்கு எழுந்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு தன்னை தொட அனுமதித்த தன் அண்ணனை கட்டிக்கொண்டு கண் கலங்கிய விஜய், பிறகு இந்த அழுத்தமான சூழ்நிலையை சரிசெய்யும் பொருட்டு "என்னடாண்ணா இப்படி சொல்லிட்ட... அப்பா திரும்பவும் லாக்கர் பாஸ்வேர்ட் மாத்திட்டாரு. மேனேஜரும் என்னன்னு சொல்ல மாட்டிங்கிறாரு... உன் பவர் இல்லாமல் எப்படி அதை கண்டுபிடிக்கிறது... குருவி சேர்கிற மாதிரி சேர்த்த எல்லா பணமும் அந்த சோடாபுட்டியால பேச்சு. இனி சோத்துக்கு என்னதான் பண்ணறது..." என்று புலம்பிய விஜய் உண்மையில் கணிதத்தில் கலக்குகிறவன். கணிதத்தில் முனைவர் பட்டம் வாங்க தீயாய் உழைத்துக்கொண்டு இருப்பவன்.

விஜய்க்கும் விக்ரமிற்கும் மூன்று வயது வித்தியாசம் இருந்தது. விஜய் கணிதத்தை விருப்ப, விக்ரம் மருத்துவத்தை விரும்பினான்‌. முதலில் எல்லாம் விக்ரம் மருத்துவ பணிக்குச் செல்ல பெரிதும் விரும்பினான். சிறுவயதில் தனது பிரச்சினைக்காக ஒரு மருத்துவரால் சோதனை எலியாக நடத்தப்பட்டவன், பிறகு தானே மருத்துவராக வேண்டும் தனது பிரச்சினை எதனால் என்று தானே கண்டறிய வேண்டும் என்று முடிவெடுத்து, நன்றாக படித்து பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தவன், பிறகே தனக்கு இந்த தொழில் ஏற்புடையது அல்ல என்பதை ஒரு சம்பவத்தின் மூலம் உணர்ந்து, கால்நடை மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்தான்.

"போலிஸ் கேட்டா என்ன பதில் சொல்லறதுன்னே தெரியலைடா..." விக்ரம் தன் தம்பியிடம் புலம்ப "டேய் அண்ணா... யாமிருக்க பயமேன்! உன்னுடைய உடம்புல இருந்து எடுத்த குண்டு லண்டன்ல தயாரிச்சதுன்னு கண்டுபிடிச்சிட்டாங்க. அதனால நான் அந்த வில்லியமை நல்லா போட்டுக் கொடுத்துட்டேன். அவன் லண்டனை சேர்ந்தவன் தான். அவன்தான் போட்டிங் போக என்னுடைய அண்ணனை கூட்டிட்டு போனான். அவன் தான் சுட்டு இருப்பான்னு சொல்லியிருக்கேன். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு... அவனை வேற எங்க தேடியும் ஆளை காணும்" என்றான் விஜய்.

"ஆறு ஏழு துப்பாக்கி வச்சிருந்தான்..." என்று விக்ரம் கூற, அங்கு நடந்ததை பற்றி இப்பொழுது பேசவேண்டாம் என்று நினைத்த விஜய்,

"எல்லாம் வெளிநாட்டுல இருந்து வரவழைச்சதா தான் இருக்கும்... எப்படித்தான் இந்தியாக்குள்ள கொண்டுவந்தான்னு தெரியலை. சரி விடுடா... தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சே... அவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்..." என்று விஜய் கூற,

தலையாட்டிய விக்ரம் பிறகே நியாபகம் வந்தவனாக "ஆமா... நான் எப்படி இங்க வந்தேன். இது என்ன இடம்?" என்றான்.

"முழிச்சவுடனேயே சொல்லவேண்டிய டயலாக்கை எவ்வளவு நேரம் பொருத்து சொல்லற..." என்றவனை பார்த்து சிரித்த விக்ரம், அடுத்த அவன் கூறிய வார்த்தைகளில் அதிர்ச்சி அடைந்தான்.

"இப்போ நாம தூத்துக்குடியில இருக்கோம்... இந்த ஹாஸ்பிடல் வெளிய மயக்கமான நிலையில ஒரு ஒயிட் கலர் குதிரை மேல படுத்து இருந்தியாம். ஹாஸ்பிடல் ஆளுங்க தான் பார்த்துட்டு போலிஸ்க்கு தகவல் சொல்லி ட்ரீட்மெண்ட் பண்ணாங்களாம்..." என்றான் விஜய்.

குதிரையிலயா...? என்றவனின் குழப்பமான முகத்தை பார்த்த விஜய், ஏன் என்ன ஆச்சு என்று கேட்க "அது இப்போ எங்க?" என்றான் விக்ரம்.

"பக்கத்துல ஒரு வெட்னரி ஹாஸ்பிட்டல்ல இருக்கிறதா சொன்னாங்க..." என்று கூறிய விஜய் மேலும் தகவலுக்காக, காலில் கட்டுப்போட்டு இருந்தது... அதன் வழியே இரத்தம் கசிந்ததால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இருக்கிறார்கள் என்றவன் இப்பொழுது அது இருக்கிறதா என்று தெரியவில்லை என்று தெரிவித்தான்.

விக்ரம் இவ்வளவு நேரம் நினைத்துக்கொண்டு இருந்தான் வில்லியம் தான் தன் நிலையைப் பார்த்துவிட்டு இங்கே சேர்த்து இருப்பான் என்று... ஆனால் அந்த தீவில் இருந்த குதிரை இங்கு எப்படி வந்தது என்று அவனுக்கு புரியவில்லை. அந்த பெரிய ஆழ்துளை கிணறு போன்ற அமைப்பின் மூலமாக அதனால் வந்திருக்க முடியாது. வேறு ஏதாவது இரகசிய வழி இருக்கிறதா... வில்லியம் மற்றும் குழுவினர் என்னை காப்பாற்றவில்லையா... என்று பலவாறு எண்ணிவோட்டத்தில் இருந்தவனுக்கு தெரியவில்லை வில்லியமும் அவனின் குழுவினரும் நடுக்கடலில் சிறிய ஒற்றை படகில் வழி தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று...

"விஜய்.... நீ முதல்ல அங்க போய் அதை பார்த்து பத்திரமா ஒரு வண்டி வச்சு இங்க அதை கூட்டிட்டு வந்துடு... பார்க்கவே ரொம்ப அழகா இருந்துச்சு அந்த குதிரை. யாராவது கூட்டிட்டு போய் நல்ல விலைக்கு வித்துட போறாங்க..." என்ற விக்ரம் விஜயை துரிதப்படுத்த, வேகமாக கிளம்பிச் சென்ற விஜய் பிறகே உணர்ந்தான் தாங்கள் மிகவும் தாமதம் என்று.... அந்த குதிரை எங்கே சென்றது என்று யாரும் ஒழுங்காக தகவல் அளிக்கவில்லை. சிகிச்சை முடிந்தபிறகு ஒரு ஓரமாக படுத்திருந்தது அதுவே சென்றுவிட்டதா அல்லது யாராவது கூட்டிச்சென்றார்களா என்று தெரியவில்லை.

விக்ரம் எப்படி அங்கே வந்தான்? அந்த குதிரை எங்கே சென்றது? கடலில் மாட்டிக்கொண்ட மற்றவர்கள் தப்பிப்பார்களா? வில்லியம் யார்? விக்ரமும் விஜயும் எதற்கு பணம் சேர்க்கிறார்கள்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை அறிய தவறாமல் படியுங்கள்... கமெண்ட் செய்து பரிசுகளை வெல்லுங்கள்.

தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பர்களே. அடுத்த அத்தியாயம் கேட்ட அனைவருக்கும் மிகவும் நன்றி. கொஞ்சம் மன வருத்தத்தில் இருந்த என்னை எழுதத்துண்டியது உங்கள் அன்புதான். நன்றி... தொடர்ந்து உங்கள் ஆதரவை அளியுங்கள்... நன்றி நன்றி நன்றி...
 

PriyaPintoo

Member
Vannangal Writer
Messages
36
Reaction score
33
Points
18
கி.மு, கி.பி / பொ.ஆ.மு, பொ.ஆ.

திருவள்ளுவர் ஆண்டு நாட்காட்டி, ஜூலியன் நாட்காட்டி, மாயன் கேலண்டர் போன்ற பல்வேறு நாட்காட்டிகள் உள்ளன. பொதுவாக நாம் கி.மு, கி.பி என்று பயன்படுத்தி வருவது ஜூலியன் நாட்காட்டி. ஆனால் தற்போது காலக்கட்டங்கள் பொ.ஆ.மு, பொ.ஆ என்று பயன்படுத்தப் படுகிறது. நான் இப்பொழுது தான் இதை அறிந்துக்கொண்டேன். இது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? என்னுடன் கமெண்டில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

பொ.ஆ.மு - பொது ஆண்டுக்கு முன்.
B.C.E - Before common era

பொ.ஆ- பொது ஆண்டு.
C.E - Common era

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டிய இடம்...






அத்தியாயம் 5:


சில மாதங்களுக்கு முன்பு...

"சார்... சார்... ஒருத்தர் அங்க படிகட்டுல மயங்கி விழுந்துட்டாரு. ஹாஸ்பிடல் போகனும். உங்க கார்ல் லிஃப்ட் தரீங்களா ப்ளீஸ்... தூக்கக்கூட யாரும் இல்லை சார். உதவிக்கு வாங்களேன்..." என்றபடி விக்ரமின் காரை மறைத்து நின்றான் ஒருவன்.

விக்ரமாதித்யன் பணிபுரியும் இடமான நாமக்கலில் 'நாமகிரி' என்று அழைக்கப்படும் நாமக்கல் கோட்டை உள்ளது. 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டையில் இந்து கோவிலையும், முஸ்லீம் மசூதியையும் ஒருங்கே காண முடியும். முதல்முறையாக அதை சுற்றிப் பார்க்க வந்தவன், அதன் கட்டிடக்கலையில் வியந்துவிட்டு வீடு திரும்ப, தன் மகிழுந்திடம் வந்தபோதுதான் ஒருவன் அவனை அழைத்து உதவி கேட்டான்.

சுற்றும் முற்றும் பார்த்தவன் மதிய வெயில் நேரம் என்பதால் உதவிக்கு வேறு யாரும் இல்லை என்பதை உணர்ந்து, உதவி செய்வதாக ஒப்புக்கொண்டான். மதிய நேரத்தில் கூட்டம் இருக்காது என்பதாலேயே அந்த நேரத்தில் சுற்றி பார்க்க வந்திருந்தான்.

உதவி செய்ய மனமில்லாமல் எல்லாம் இல்லை அவனுக்கு... தனக்கே ஒரு பிரச்சினை வாட்டி வதைக்கும் போது தேவையில்லாமல் அடுத்தவருக்கு உதவிசெய்து வாங்கிக் கட்டிக் கொள்ள அவனுக்கு விருப்பம் இல்லை... இத்தனை வருடங்களில் அவன் கற்றுக்கொண்ட பாடம் இது...

புதியவன் காட்டிய திசைபக்கம் சென்றவன், அங்கே ஒரு வெளிநாட்டு ஆள் மயங்கி விழுந்திருப்பதை பார்த்து விட்டு அவனை தூக்க ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்திய படி தூக்கினான். முழுக்கை சட்டை போட்டிருந்தும் கையுறை போட்டிருந்தும் அந்த ஆங்கிலேயனின் கை லேசாக விக்ரமின் முகத்தில் பட்டுவிட்டதால், அவனின் கடந்த காலம் நோக்கி பயணித்திருந்த விக்ரம், ஏற்கனவே இப்படி நடக்கும் என்று சுதாரித்திருந்ததால் தனக்கு மயக்கம் வராமல், வலி ஏற்படாமல் தன்னை பாதுகாத்துக் கொண்டான். நீண்டநேர அந்த தொடுகையின் மூலம் சில தகவல்களையும் அறிந்துக்கொண்டான்.

வில்லியம் இளம்வயதில் இருக்கும் போது அவனின் பாட்டனார் எழுதிய புத்தகம் ஒன்று அவனுக்கு கிடைத்தது. நானூறு வருடங்கள் பழமையான அந்த புத்தகத்தில், கடற்பயணம் மேற்கொண்ட வில்லியமின் பாட்டன் ஒருவர் இந்தியாவிற்கு அருகில் ஒரு மறைக்கப்பட்ட தீவு இருப்பதாகவும், அதில் தங்க யாளி சிலைகள் பல இருப்பதாகவும், அதன் திசைக்காட்டிதான் அந்த இறகு எழுதுகோல் என்றும் பல குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். அந்த இறகு எழுதுகோலை உருவாக்கியவரே அவர்தான் என்று எழுதியிருந்தவர், அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்றெல்லாம் எழுதியிருந்தார். ஆனால் அது எப்படி இயங்குகிறது என்று எழுதவில்லை...

மேலும் அந்த இடம் பல போலியான ஆபரணங்களை அங்கு சென்றவர்களுக்கு தந்து, அவர்களை திசைத்திருப்பி, அந்த தங்க யாளிகளை காப்பாற்றும் என்றும் பல குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். ( அதனால் தான் ஒரு பெட்டி நிறைய ஆபரணங்கள் கிடைத்தும் வில்லியம் அதை ஏற்க மறுத்து, அந்த தங்க யாளி சிலைகளை அடைய ஆசைப்பட்டான்)

அப்படியெல்லாம் குறிப்பெழுதி வைத்திருந்த வில்லியமின் பாட்டனார், கடற்பயணம் மேற்கொண்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தான் வீடு திரும்பியதாகவும், வீடு திரும்பும்போது மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்ததாகவும், பிறகே இந்த புத்தகத்தை எழுதியதால் நம்பகத்தன்மை இல்லாத புத்தகம் இது என்றும் அறிந்த அவரின் சந்ததிகள், அந்த புதையலை தேடவில்லை. அந்த இற்கு எழுதுகோலையும் நல்ல விலைக்கு விற்றிருந்தனர்... வில்லியம் தான் அந்த தங்க சிலைகளை கண்டறிய வேண்டும் என்று நினைத்து, இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு தென்னிந்தியாவின் வரலாற்றை அறிந்துக்கொள்ள பல வரலாற்று தளங்களுக்கு சுற்றி வருகிறான். அப்படி நாமகிரிக்கு வரும்போதுதான் வெயிலில் தாக்கத்தால் மயக்கமடைந்து விழுந்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டான் விக்ரம்.

வில்லியமை மருத்துவமனையில் அனுமதித்தப்பிறகு தன்வேலையைப் பார்த்து கிளம்பிவிட்ட விக்ரமை அமைதியாக இருக்க விடவில்லை விக்ரம் அறிந்து கொண்ட உண்மைகள். இந்த தங்கசிலைகள் ஒருவேளை உண்மையாக இருந்தால், இந்திய பொருளாதாரம் எங்கோ போய்விடுமே... என்று நினைத்தவன், தொல்லியல் துறையில் வேலைசெய்யும் தனது மாமா விஸ்வநாதனுக்கு அழைத்து, தான் பார்த்த மற்றும் அறிந்து கொண்ட இந்த உண்மையைக் கூறினான். அவனின் சக்தி பற்றி அறிந்த ஓரிருவரில் அவரும் ஒருவர். முதலில் அவர் அதெல்லாம் இருக்காது என்று கூறிவிட்டுவிட்டார்.

ஆனால் சிறிது நாட்களுக்கு பிறகு அவனை ஒருநாள் அவர் வீட்டிற்கு அழைத்திருந்தார் விஸ்வநாதன். அங்கு வந்தவனுக்கு அவர் கூறிய செய்தி அதிர்ச்சி அளித்தது. அவரின் மகள் பூவிழி விக்ரமை ஒருதலையாக காதலிப்பதாகவும், அவளை ஏற்றுக்கொள்ளும்படியாகவும் அவன் இல்லையென்றால் பூவிழி தற்கொலை செய்து கொள்வாள் என்று கூறினார்.... தன் வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானித்து இருந்தவனுக்கு, இதை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அவர் கூறுவதும் உண்மை என்றே அவனுக்கு தோன்றியது. யாரிடமும் பேசாத பூவிழி தன்னிடம் மட்டும் அவளே வந்து பேசுவது, மரியாதையாக நடத்துவது, ஓடி ஓடி கவனிப்பது என்று அவள் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வாள் என்பதால் உண்மையாக இருக்குமோ என்று நினைத்தவன், உண்மையாக இருந்தால் அவளுக்கு புத்தி கூறி திருத்துவது நம் கடமை என்று நினைத்துக்கொண்டான்.

ஆனால் அவனுக்கு அந்த வாய்ப்பு என்றுமே கிடைக்காமலேயே போனது. விஸ்வநாதன் விக்ரமை பூவிழியுடன் பேச அனுமதிக்கவே இல்லை... என் மகளை திருமணம் செய்து கொள் என்று அவர் மிகவும் வற்புறுத்தினார். ஆனால் விக்ரம் தன் சக்தியை காரணம் காட்டி மறுக்க, விஜய் போல் அவள் உனக்கு அதை கட்டுப்படுத்த உதவிசெய்வாள் என்று கூறி அவனை சம்மதிக்க வைத்தார். விக்ரமும் தன் பிரச்சினை பற்றி நானே நேரில் அவளிடம் தெரிவித்த பிறகே இந்த திருமணம் என்ற ஒப்பந்தத்துடனே இந்த திருமணத்திற்கு சம்மதித்தான். உறவினர்கள் மத்தியிலும் அவர்களின் திருமணச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

ஒருநாள் விஸ்வநாதன் விக்ரமிடம் அவர்பொறுப்பில் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால ஓலைச்சுவடி ஒன்று தொலைந்துவிட்ட காரணத்தால் தன்னை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாகவும், அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதாகவும் அதை நீ தான் சரிசெய்ய வேண்டும் என்றும் கூறிய அவர், வில்லியமுடன் சேர்ந்து அந்த புதையல் இருக்கும் இடத்தை கண்டறிய வேண்டும் என்று கண்ணீருடன் கேட்டுக்கொள்ள, வருங்கால மாமனாரின் பேச்சை அவனால் தட்டிக் கழிக்க முடியவில்லை. இளகிய மனம் கொண்டவனான விக்ரம் அவரின் கண்ணீரில் மொத்தமாக கரைந்திருந்தான்.

அவரின் தூண்டுதலின் பேரில் வில்லியமின் முன் தன்னை திருடன் போல் காட்டிக்கொண்டவன், பிறகு மெல்ல அவனின் குழுவினருடன் இணைந்தான். வில்லியமின் நன்மதிப்பைப் பெற அந்த இறகு எழுதுகோலை விஜயையே வாங்க வைத்து, அவனிடம் இருந்து எளிதில் திருடவும் செய்து, திருட்டில் தன்னை கைத்தேர்ந்தவன் போல் காட்டிக்கொண்டான். மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு விருப்பம் இல்லாமல் செய்த எல்லா செயல்களும் ஒரு குதிரைக்கு உதவி செய்ய நினைத்து விழலுக்கு இறைத்த நீர்போல் ஆனதை நினைத்து சிரித்தவன் அந்த குதிரையும் தற்போது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையே... என்று வருந்தினான்.

"இந்த பென் இருக்கு இல்ல... இது ஒரு காம்பஸ். இதை தண்ணீர்ல போட்டா அந்த தீவுக்கு கூட்டிட்டு போகுதுடா... எனக்கு பயங்கர ஆச்சர்யம்...." என்றவன் கையில் இறகில்லாத அந்த எழுதுகோலின் தங்கப்பகுதி மட்டும் இருந்தது. மருத்துவமனையில் இருந்து விக்ரமின் பாக்கெட்டில் இருந்ததாக இந்த எழுதுகோலை விஜய்யிடம் ஒப்படைத்து இருந்தனர்.

"அந்த வேலன் இருக்கான் இல்ல... அவன் வேற என்னை தொட்டுட்டான். பாவம் அவன் தங்கச்சி செத்ததுலாம் எனக்கு தெரிஞ்சது... ரொம்ப கஷ்டமா போச்சு. அந்த நேரத்துல நான் வேற தண்ணீர்குள்ள மூழ்கியிருந்தேன். வேலனுடைய நினைவுகுள்ள போனதால என்னால மூச்சே விட முடியலை. யாரோ என்னை பிடிச்சி இழுத்து காப்பாத்தனாங்க. யாருன்னே தெரியலை. அப்புறம் பார்த்தா வில்லியமும் மத்தவங்களும் ஒரு பெட்டி முழுக்க தங்கதை வச்சிட்டு இருக்கானுங்க. அது எப்படியும் போலியாதான் இருக்கும்னு நினைக்கிறேன். வில்லியம் வேற அந்த ஒயிட் குதிரைய சுட பார்த்தான். நான் தடுத்தேன்... என்னை சுட்டுட்டான்... நான் மயக்கமாகிட்டேன். கண்விழிச்சு பார்த்தா இங்க இருக்கேன்... அவ்வளவு தான் நடந்தது..." தன் பயணத்தை பற்றி சுருக்கமாக விஜய்க்கு விளக்கினான் விக்ரம்.

"உன்னை சுட்டதும் மயங்கிட்டியா...? தப்பாச்சே... ஒருபக்க டயலாக் இந்த இடத்துல பேசி இருக்கனுமே..." என்ற விஜயின் முதுகில் ஒன்று வைத்த விக்ரம், "உயிர் பிழைச்சு வந்ததே பெரிய விஷயம். இதுல ஒருபக்க டயலாக் வேற பேசனுமா...?" என்று சிரித்தவன் அந்த "குதிரை தான் என்னை இங்க கொண்டுவந்துச்சா? ஆனா எப்படி...?" என்று குழம்பி விஜய்யையும் குழப்பினான்.

"சரி விடுடாண்ணா... நீ அதை காப்பாத்தன. அது உன்னை காப்பாத்துச்சு... பழிக்கு பழி... சாரி உதவிக்கு உதவி... விட்டுத்தள்ளு. எப்படியோ உன்னுடைய சக்தி போய்டுச்சே. அதுவே எனக்கு போதும்... ஆனா இன்னும் எனக்கு புரியலை நீ எதுக்கு அந்த ஆளுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கிற..." என்றான் விஜய் சில உண்மைகளை தெரிந்துக்கொள்ளும் பொருட்டு.

"எனக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்குன்னு தெரிஞ்சும் அவருடைய பொண்ணை எனக்கு கட்டிவைக்க நினைக்கிறாரே... அந்த நல்ல மனசுக்குதான்... எனக்கு தெரியும் உனக்கு அவரை பிடிக்காதுன்னு... ஆனா அவரு ரொம்ப நல்ல மனுஷன்டா..." என்றவன் பெருமூச்சு விட "ம்..." என்று மட்டும் பதிலளித்த விஜய், ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். விஜய்க்கு விஸ்வநாதன் மாமாவின் மேல் சந்தேகம் எழுந்திருந்தது. யாருடனும் பழகாமல் இருக்கும் விக்ரமிற்கு வெளுத்ததெல்லாம் பாலாக பட்டதோ என்னவோ..‌.

தூத்துக்குடி மருத்துவமனையில் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தவன், பிறகு விஜயின் உதவியுடன் அவன் பணிபுரியும் இடமான நாமக்கல்லிற்கு வந்து, தன் வீட்டில் ஓய்வெடுக்க துவங்கினான். உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில் சென்னைக்கு சென்று தன் தந்தையை கஷ்டப்படுத்த அவன் விரும்பவில்லை. இவ்வளவு நடந்தும் அது எதுவும் வேந்தனின் காதுகளுக்கு செல்லாமல் விஜய் பார்த்துக்கொண்டான். விக்ரம் மற்றும் அவன் தந்தை வேந்தனுக்கு சில கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் இருவரும் உண்மையில் ஒருவர் மேல் ஒருவர் அதிக பாசம் கொண்டவர்கள்தான். விக்ரமிற்கு குண்டடிப்பட்டது வேந்தனுக்கு தெரிந்தால் நிச்சயம் அவர் தாங்கிக்கொள்ள மாட்டார் என்பது விஜய்க்கு நன்றாக தெரியும்.

ஒருவாரம் தனது வீட்டில் ஓய்வு எடுத்தவனுக்கு துணையாக இருந்த விஜய், பிறகு வேந்தனின் திட்டுகளால் வேறுவழியின்றி சென்னைக்கு திரும்பவேண்டிய சூழல் ஏற்பட, வேறுவழியின்றி விக்ரம் தனியாக தங்க நேர்ந்தது. அடிப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகியிருந்தும் விஷயம் தெரிந்தும் விக்ரமை பார்க்க வராத விஸ்வநாதன், விஜய் கிளம்பிய மறுநாளே விக்ரமின் வீட்டின் முன் வந்துநின்றார்.

"என்ன விக்ரம் நீ... கொஞ்சம் கவனமா இருக்கக்கூடாதா... உனக்கு அடிப்பட்டது தெரிஞ்சதும் என் பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டா தெரியுமா?" என்று அவர் கண்கலங்கிவிட்டு, தன் கண்ணாடியை கழட்டி கண்களை கசக்கிக்கொள்ள, அவரை சமாதனப்படுத்தி அமரவைத்த "கெட்டதிலும் ஒரு நன்மை... தன் பிரச்சினை ஒழிந்தது..." என்று கூற விஸ்வநாதனுக்கு பயங்கர அதிர்ச்சி... வெளியே சந்தோஷமடைந்தது போல் காட்டிக்கொண்டார்.

"சரி... அங்க என்னலாம் நடந்துச்சி...." என்று அவர் விசாரிக்க, அனைத்தையும் கூறினான். வெறும் கையுடன் திரும்பிவந்தவனை பார்த்து மனதில் கரித்துக்கொட்டியவர், "சரி விடு விக்ரம். நீ எப்படியோ நல்லபடியா வீட்டுக்கு வந்து சேர்ந்தியே... இப்போ இல்லைனாலும் கொஞ்ச நாள் கழிச்சு நாம அங்க போய் ரிசர்ச் பண்ணலாம். அதான் உனக்கு இப்போ வழி தெரிஞ்சிடுச்சே..‌." என்று அவர் தன் அடுத்த திட்டத்திற்கான முதல்படியை எடுத்துவைக்க "திரும்பவுமா..." என்று நினைத்த விக்ரம் "கொஞ்சம் நாள் போகட்டும் மாமா... ரொம்ப ப்ளட் லாஸ் ஆகிடுச்சு. சுத்தமா என்னால முடியலை. முதல்ல வில்லியம் கிடைக்கட்டும். அப்புறம் போகலாம் மாமா... தொலைஞ்சு போன அந்த ஓலைச்சுவடி கிடைச்சிடுச்சாமே... நீங்க வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டீங்கன்னு விஜய் சொன்னான்... உங்களுக்கும் இனி பிரச்சினை இல்லை. எதுக்கு அவசரப்படனும்..., என்று கூறிவிட விஸ்வநாதனுக்கு கோபம் வந்தது.

ஆனால் அதைக் காட்டும் நேரம் இது இல்லையே என்று நினைத்தவர், முகத்தில் ஒரு பொய்யான புன்னகையைப் பூசிக்கொண்டு "இல்ல விக்ரம்... இந்த வேலை முடிஞ்சுதுனா அடுத்து கல்யாண வேலைய பார்க்க ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். உன் அப்பாவும் எப்ப கல்யாணத்தை வச்சிக்கலாம்னு கேட்டுட்டே இருக்காரு... அதான் சொன்னேன். அதோட அந்த வெளிநாட்டுக்காரன் இந்நேரம் எல்லாத்தையும் சுருட்டிட்டு அவன் நாட்டுக்கே போய் இருப்பானோன்னு சந்தேகமா வேற இருக்கு..., என்று கூற, யோசித்தவன் "எதுவா இருந்தாலும் இப்போ என்னால முடியாது மாமா. என்னுடைய உடம்பு கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு. எனக்கு சரியாகிட்ட பிறகு பார்க்கலாம்..." என்று கூற

'பார்க்கலாமா...' என்ன பிடிப்பு இல்லாமல் கூறுகிறான் என்று நினைத்தவர், "அப்போ நிச்சயதார்த்ததை அடுத்த வாரம் வச்சிக்கலாமா... ஒரு வேளை முடியும் இல்ல..." என்றார். அவரின் திட்டம் தன் மகளின் பெயரைக் கூறி விக்ரமை வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பதே... ஆனால் விக்ரம் இன்னொரு பயணம் மேற்கொள்ள தயாராக இல்லை...

"என்ன அவசரம் மாமா... இப்போ பூவிழி காலேஜ் தானே போய்ட்டு இருக்கா. முடிக்கட்டும்..." என்று அவன் கூற எப்படியாவது இவனை நம் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தவர் அங்கிருந்து விடைபெற்றார்.



விஸ்வநாதனின் அடுத்த திட்டம் என்ன? பூவிழி தான் கதையின் நாயகியா? வில்லியம் குழுவினர் என்ன ஆனார்கள்? கிடைத்த ஆபரணங்கள் போலியா? விக்ரம் தன் சக்தியை இழந்துள்ளது தற்காலிகமா நிரந்தரமா? என்பதையெல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம்.

உங்களுக்கு இக்கதை பிடித்திருந்தால் தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி...
 

PriyaPintoo

Member
Vannangal Writer
Messages
36
Reaction score
33
Points
18
இதுவரை:









விஜய் ஏலத்தின் மூலம் வாங்கிய பழமையான இறகு எழுதுகோலை விக்ரம் திருடி அவனது குழுத் தலைவனும் ஆங்கிலேயனுமான வில்லியமிடம் ஒப்படைக்க, அதை எடுத்துக்கொண்டு வில்லியம் மற்றும் விக்ரம் தங்கள் குழுவுடன் கடற்பயணம் மேற்கொண்டு பல தடைகளை தாண்டி அவ்விடத்தை அடைகின்றனர்.



கால்நடை மருத்துவனான விக்ரம் தொடுகையின் மூலம் பிறரின் கடந்தகாலத்தை அறியும் சக்தி படைத்தவன். வில்லியமின் கடந்தகாலத்தை பற்றி அறிந்துக் கொண்ட பிறகே தன் மாமா விஸ்வநாதனின் தூண்டுதலின் பெயரிலும், தம்பி விஜயின் உதவியினாலும் வில்லியமுடன் பயணித்து புதையலை கண்டறிய நினைக்கிறான். ஆனால் விக்ரமோ புதையல் உள்ள தீவில் ஒரு குதிரையை காப்பாற்றச் சென்று குண்டடிப்பட்டு மயக்கமடைகிறான்.



‌‌ கண்விழித்துப் பார்த்தால் மருத்துவமனையில் இருந்தவன், வில்லியம் மற்றும் அவன் குழுவினர் இன்னும் கடற்பயணத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பவில்லை என்றும் தன்னை மருத்துவமனை அழைத்து வந்தது அந்த தீவில் பார்த்த குதிரைதான் என்றும் உணர்ந்து அதை தேட, ஆனால் அதுவோ காணாமல் போய் இருந்தது.



குண்டடிப்பட்ட காயத்துடன் வேலைப்பார்க்கும் ஊருக்கு திரும்பிய விக்ரம் உடனேயே இருந்த அவன் தம்பி விஜய், பிறகு விக்ரம் அடிப்பட்டது பற்றி அறிந்திராத அவர்களின் தந்தை வேந்தனின் வற்புறுத்தலின் பெயரில் சென்னைத் திரும்ப, அதை அறிந்து கொண்ட விக்ரமின் மாமா விஸ்வநாதன் விக்ரமை பார்க்க வந்திருந்தார். புதையலை எடுத்து வராமல் வெறும் கையுடன் திரும்பிவந்தவனை மனதில் கடித்துக் கொண்டவர், புதையல் இருக்கும் இடம் தெரிந்து விட்டதால் மீண்டும் செல்லலாம் என்று கூற, இம்முறை விக்ரம் அவருக்கு பிடிகொடுக்கவில்லை. அடுத்து விஸ்வநாதனின் திட்டம் என்ன? மீண்டும் அந்த தீவிற்கு செல்வார்களா? வில்லியம் மற்றும் குழுவினர் என்ன ஆனார்கள்? என்பதையெல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம்...
 

PriyaPintoo

Member
Vannangal Writer
Messages
36
Reaction score
33
Points
18

அத்தியாயம் 6:


விஸ்வநாதன் விக்ரமை பார்க்க வந்து சென்ற பிறகு அமைதியாகத் தான் சென்றுக்கொண்டு இருந்தது அன்றைய நாள் அவளை காணும் வரை. அன்றிரவு மணி பத்தை தாண்டிய பிறகு, விக்ரமின் வீட்டு அழைப்பு மணி அடிக்க, கதவை திறந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி. அந்த இரவு நேரத்தில் பெண்ணொருத்தி அவனின் வீட்டின் எதிரில் நின்றிருந்தாள்‌. பார்த்தால் முன்னிருபதுகளில் இருப்பது போன்ற வயதுடையவள், அந்த இரவு நேரத்தில் முகத்தில் பதட்டத்துடன் நின்றிருந்தது விக்ரமிற்கு குழப்பமாக இருந்தது.

"யாருங்க நீங்க? என்ன ஆச்சு?" அவளின் பதட்டமான முகத்தை பார்த்து விட்டு விக்ரம் விசாரிக்க, ஓடி வந்ததில் சற்று மூச்சிறைக்க நின்றவள், பிறகு முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

"நீங்க வெட்னரி டாக்டர்னு சொன்னாங்க... அதான் முதல்ல உங்ககிட்ட வந்தேன். அங்க ஒரு தெருநாய் அடிப்பட்டு துடிச்சிட்டு இருக்கு..." என்று அவள் கூறி ஒரு திசையைக் காட்ட, இருளின் பிடியில் மூழ்கியிருந்த அந்த தெருவின் ஒரு குறிப்பிட்ட இடத்தில், உண்மையாகவே ஒரு நாய் அடிப்பட்டு இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டு இருப்பது, கொஞ்சம் மங்கலாக எரிந்துக்கொண்டு இருந்த தெருவிளக்கின் வெளிச்சத்தில் நன்றாக தெரிந்தது.

கண்ணுக்கெட்டிய தொலைவிலேயே அடிப்பட்டு கிடந்த அதை பார்த்தவுடன் துடித்துபோனவன், வேகமாக அவ்விடம் விரைந்து சென்று அதை பரிசோதிக்க ஆரம்பிக்க, அவன் பின்னாலேயே வந்த அப்பெண் அவனையும் அவனின் திறந்திருந்த அவன் வீட்டயுமே மாறி மாறி பார்த்தவள், இரண்டடி பின்னால் வைத்து அவனின் வீட்டினுள் நுழைய முற்பட அதற்குள் அவளிடம் திரும்பிய விக்ரம் "ஹலோ மேம்... ப்ளீஸ் கொஞ்சம் இதை தூக்க ஹெல்ப் பண்ணுங்களேன்..." என்று கூற, திருதிருவென முழித்தவள் எதுவும் கூறாமல் அப்படியே நின்றிருந்தாள்.

"ஏங்க... சீக்கிரம் வாங்க. இரத்தம் ரொம்ப போயிடுச்சு. இங்கேயே ட்ரீட்மெண்ட் பண்ண முடியாது..." என்று விக்ரம் பதட்டத்துடன் கூற, அதன் பிறகும் அவள் உதவ முன்வராமல் சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். வேறு எதற்கும் இல்லை... விக்ரமை அருகில் இருந்த கட்டையால் அடித்து போட்டுவிட்டு, தன் அடுத்த கட்ட திட்டத்தை நிறைவேற்றலாமா? என்ற எண்ணம் தான்...

அவள் சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு இருப்பதை கவனித்த விக்ரம், வேறுவிதமாக புரிந்து கொண்டு "யாரும் இங்க ஹெல்ப்புக்கு இல்லைங்க... நீங்க ஒரு கை பிடிச்சா தான் என்னால இவனை என் வீட்டுக்கு கூட்டிட்டு போய் ட்ரீட்மெண்ட் பண்ண முடியும். ஏன்னா எனக்கு ஷோல்டர்ல அடிபட்டு இருக்கு. தனியா தூக்க முடியலை..." என்று விக்ரம் தன்னிலை விளக்கம் அளித்தும், அவள் தன் திருதிரு முழியை மாற்றியபாடில்லை.

'சீக்கிரம் அந்த கட்டைய எடுத்து இவன் மண்டைய பொளந்துடுடி...' என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு நின்றிருந்தாள் அவள். தற்போது அவள் செய்ய நினைக்கும் வேலை அவளுக்கு புதிது என்பதால், பயத்தில் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டு இருந்தவளுக்கு அந்த நாயின் உயிர் பெரியதாகப்படவில்லை...

இந்த பெண் தனக்கு உதவமாட்டாள்... என புரிந்து கொண்டவன், தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் தன் வீட்டிற்கு அந்த நாயை தூக்கிச்சென்றான். விக்ரம் திரும்பவும் வீட்டிற்கு செல்வதை பார்த்த அப்பெண், அவன் பின்னாலேயே ஓட, அதற்குள் வீட்டை அடைந்திருந்தவன், அந்த அடிப்பட்ட நாயை ஒரு மேசையின் மீது கிடத்தி விட்டு, அவள் உள்ளே வருவதற்குள் கதவை அறைந்து சாத்தியிருந்தான். அவன் கதவை வேகமாக சாத்துவதை கவனித்தவள், தன் வேலையை நாளை தொடரலாம் என்று எண்ணிக்கொண்டு விக்ரம் வீட்டிற்கு எதிரில் இருந்த வீட்டினுள் நுழைந்து கொண்டாள்.

************

மறுநாள் காலை ஓ.எம்.ஆர் என்று அன்போடு அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில், நடுத்தர மக்கள் வாழும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இருபத்து நான்காவது தளத்தில் தன் தந்தையிடம் கத்திக்கொண்டு இருந்தாள் ஒரு பெண்ணவள்...

"உங்களுக்கு என்னை விட பணம், புகழ் தான் முக்கியம் இல்ல... பணத்துக்காக என்னையே பணயம் வைக்க ரெடியாகிட்டீங்க இல்ல... எனக்கு உங்க முகத்தை பார்க்கவே அருவருப்பா இருக்குப்பா... உங்க மனசுல துளியளவு பாசம் என்மேல் இருந்துச்சின்னா தயவு செய்து இனி என் முகத்துல முழிக்காதீங்க... இதை மட்டுமாவது எனக்காக செய்யுங்க..." விஸ்வநாதனிடம் கத்திக்கொண்டு இருந்த அவரின் மகள் பூவிழி, கண்ணீருடன் தனது அறைக்கு சென்று கதவை அடைத்துக்கொண்டாள். இவ்வளவு சீக்கிரம் இந்த விஷயம் நிச்சயதார்த்தம் வரை செல்லும் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை...

"இதெல்லாம் ஒரு நாடகம்தான்மா... எனக்கு கிடைக்க வேண்டியது கிடைச்சதும் உன்னை எந்த தொந்திரவும் செய்யமாட்டேன்... என் திட்டம் நிறைவேறிட்டா இனி நீ மகாராணி மாதிரி வாழலாம்..." என்று நினைத்தவர், தன் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார்.

விக்ரம் புதையலை தேடும் பயணத்திற்கு பிடிகொடுக்கவில்லை என்றதும், தன் மகளை வைத்து அவனை ஆட்டிப்படைக்க எண்ணியவர், விக்ரமின் தந்தையிடம் பேசி விக்ரம்-பூவிழி நிச்சியதார்த்தத்திற்கு அடிக்கலிட்டார். இதை கேள்வியுற்ற பூவிழி மனமுடைந்து போனதையெல்லாம் தற்போது அவர் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு தேவை அந்த புதையல் மட்டுமே... அதற்காக விக்ரமின் உதவி தேவைப்படுவதால் அவனை கைக்குள் வைத்திருக்க எண்ணினார். அதனால் தான் இந்த திருமண நாடகம்.

திருமணம் என்ற வார்த்தைக்கே இனி என் வாழ்வில் இடமில்லை என்று நினைத்து கொண்டு இருப்பவனுக்கு, பூவிழி போன்ற அழகான பெண் கிடைத்தால், தான் கூறியது எதையும் தட்டாமல் செய்வான் என்று கணக்கிட்டார் விஸ்வநாதன்.

இங்கு விக்ரமும் பூவிழி போன்றே கொதித்துக் கொண்டு இருந்தான். காலையிலேயே நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற ஒரு தகவலை தெரிவித்து அவனை டென்ஷனாக்கிவிட்டார் அவனது தந்தை வேந்தன். அவனும் இப்போது எதற்கு... என்று எவ்வளவு சொல்லி பார்த்தும் அவர் கேட்பதாக இல்லை‌. அதனால் தன் சக்தி பறிபோனது பற்றி கூறியவன், அது எப்படி எங்கு நடந்தது என்பதையெல்லாம் மறைத்துவிட்டான்.

தன் மகனின் வாழ்க்கை இப்படியே போய்விடுமோ???? என்று எண்ணிக்கொண்டு இருந்த வேந்தனின் காதுகளுக்கு, இந்த செய்தி நற்செய்தியாக அமைய, தற்போது என் மகனுக்கு எந்த குறையும் இல்லை... எனவே பூவிழியை விட இன்னும் நல்ல பெண்ணாக தேடலாம் என்று விக்ரமிடம் கூறி காலை கட் செய்து, விக்ரமிற்கு பெண் பார்க்கும் படலத்தில் தீவிரமாக இறங்கினார்.

சக்தி பறிபோனது தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்றே தெரியாதபோது திருமணத்திற்கு பெண் பார்ப்பதா??? என்று கடுப்பாகிப்போனவன், எப்பவும் போல் தன் தம்பி விஜய்யிடம் புலம்பித் தள்ள, விஜய்க்கு சந்தோஷப்படுவதா இல்லை துக்கப்படுவதா என்றே தெரியவில்லை...

வேந்தனை பொருத்தவரையில் பூவிழி நல்ல பெண்தான்... ஆனால் பூவிழியை விட நல்ல பெண்ணை தேடலாம் என்று நினைத்தது அவளின் தந்தையை மனதில் நினைத்து தான். என்னதான் பூவிழி நல்ல பெண்ணாக இருந்தாலும், எப்போதும் பணத்திற்கு ஆசைப்படும் விஸ்வநாதன் தன் மகளை வருங்காலத்தில் எதாவது தூண்டிவிட்டு, விக்ரமிற்கும் விஜய்க்கும் சொத்து தகராறு எதாவது உண்டு பண்ணி விட்டால் நன்றாக இருக்காதே... பாசமான அண்ணன் தம்பிக்குள் பிரிவினை வந்துவிடுமே என்று நினைத்தே வேறுபெண்ணைத் தேட நினைத்தார். ஆனால் இதை விஸ்வநாதனிடம் கூற முடியாதே... எனவே அவரை தொடர்பு கொண்டு, விக்ரமிற்கும் பூவிழிக்கும் வயது வித்தியாசம் அதிகமாக உள்ளதால், இந்த திருமணம் வேண்டாம் என்று கூறிவிட தற்போது கொதித்தெழுவது விஸ்வநாதனின் முறையாயிற்று...

அன்றே வேந்தனை நேரில் சந்தித்தவர், தன் கண்ணீர் நாடகத்தை அரங்கேற்றி, என் அக்கா இருந்திருந்தால் இப்படியெல்லாம் ஆகியிருக்குமா என்று எப்பொழுதும் கூறும் சென்டிமென்ட் டயலாக்கை இன்றும் கூற, வேந்தனால் அதற்குமேல் பேசமுடியவில்லை.... இந்த திருமணம் ஆரம்பத்திலேயே இவ்வளவு குழப்பங்கள் ஏற்படுத்துகிறதே என்று நினைத்தவர் பூவிழிக்காக இந்த திருமணத்தை நடத்த முடிவுசெய்து, நிச்சயத்திற்கான தேதியையும் குறித்தார். அதன்படி இன்னும் இருவாரங்களில் நிச்சயதார்த்தமும், பூவிழி கல்லூரி முடித்தப் பிறகு திருமணம் எனவும் முடிவுசெய்யப்பட்டது. பூவிழி கல்லூரி படிப்பை நிறைவு செய்ய இன்னும் ஆறு மாதங்கள் இருந்தன... அதற்குள் விக்ரமை அடிபணிய வைத்து, அந்த புதையல் உள்ள தீவுக்கு சென்று புதையலை அடைந்திட வேண்டும்... புதையலை அடைந்துவிட்ட பிறகு இந்த திருமணத்திற்கான தேவை இருக்காது. திருமணம் நின்றுவிட்டால் தன் அன்பு மகளின் வெறுப்பையும் சுமக்க வேண்டிய கட்டாயம் இருக்காது... என்று விஸ்வநாதன் நினைத்துக்கொண்டு இருந்தார்.


இந்த அவசர கல்யாண குழப்பத்தில் விக்ரம் டென்ஷனாக இருக்க, அவனை மேலும் டென்ஷனாக்கவே அவன் வீடு தேடி வந்தாள் நேற்று இரவு அவன் பார்த்த பெண். மாலை மங்கும் வேலையில் வந்தவளை பார்த்தவனுக்கு இந்த பெண்ணிற்கு நேரம் காலம் எல்லாம் தெரியாதா என்று நினைத்து ஆயாசமாக இருந்தது.

"நேற்று நைட் ஹெல்ப் பண்ணாததுக்கு சாரிங்க... காஸ்ட்லி ட்ரஸ் போட்டு இருந்தேன். அதான் ப்ளட் பட்டுடுமோன்னு தயங்கிட்டேன்... சாரிங்க... இதோ பாருங்க பெடிகிரீலாம் வாங்கிட்டு வந்து இருக்கேன்... அந்த டாக(dog) பார்த்துட்டு போக... இந்த பெப்சி உங்களுக்காக வாங்கிட்டு வந்தேன்..." என்று அவள் கூற, நேற்று இரவு அவள் என்ன உடை அணிந்திருந்தாள் என்று கவனிக்காத விக்ரமும் "பரவால்ல விடுங்க... முடிஞ்சிபோனதை எதுக்கு பேசிக்கிட்டு..." என்றவனுக்கு அவளை வீட்டினுள் அழைத்து அடிப்பட்ட மேக்ஸை காண்பிக்கும் யோசனை எல்லாம் இல்லை. அந்த நாய்க்கு விக்ரம் வைத்திருக்கும் பெயர் மேக்சிமஸ்... சுருக்கமாக மேக்ஸ்(Max)

போக்குவரத்து அதிகம் இல்லாத குடியிருப்பு பகுதியில் அவன் வீடு இருந்ததால், மனிதர்களின் நடமாட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்க, அவனின் பக்கத்து வீட்டு மாடியில் உலர்ந்த துணிகளை எடுத்துக்கொண்டு இருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி மட்டும் விக்ரமையும் அப்பெண்ணையுமே பார்த்துக்கொண்டு இருந்தார். அவரின் பார்வையை உணர்ந்தவன் அவளை உடனே துரத்த நினைக்க அவளோ ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தாள்.

"அந்த நாய் எப்படி இருக்கு????" என்பதில் தொடங்கி "இது என்னுடைய நம்பர் உங்க நம்பர் சொல்லுங்க...." என்றவரையில் அவளே தான் பெரும்பான்மையாக பேசிக்கொண்டு இருந்தாள். அவளை வாசலோடு பேசி வழி அனுப்பியவன், அவள் சென்றபிறகு தான் நிம்மதி அடைந்தான். எப்போதும் தனிமையை விரும்ப பழகிக்கொண்டவனுக்கு தற்போது அப்பெண்ணே வந்து பேசினாலும் அவனால் பேசமுடியவில்லை. அக்கம்பக்கத்து வீட்டினருடன் கூட ஓரிரு வார்த்தைகள் பேசிடாதவன் இப்பெண்ணிடம் இவ்வளவு நேரம் பேசியதை (அவள் பேசுவதை கேட்டதை) பார்த்தால், யாராவது எதாவது நினைப்பார்களோ என்று கவலையாக இருந்தது அவனுக்கு.

அவள் கொடுத்த பெடிகிரீ இருந்த கவரை பிரித்து பார்த்தவன், அதில் ஒரு விசிட்டிங் கார்டு இருந்ததை பார்த்து விட்டு அவ்வளவு கண்டுகொள்ளாதவன் மேக்ஸிற்கு மட்டும் அவள் வாங்கிவந்த உணவை தந்துவிட்டு, "மேக்ஸ் அந்த அக்கா சாப்பாடு வாங்கி தந்தாங்கன்னு அவங்க பின்னாடியே போய்டாத... அவங்களுக்குலாம் உன்னுடைய உயிரை விட அவங்க ட்ரஸ் தான் முக்கியம். அவங்ககிட்ட டிஸ்டன்ஸ் மெயிண்டன் பண்ணு..." என்றபடி மேக்ஸின் தலையை தடவிக் கொடுத்தவன்,

"ஜாக்கும் ரோஸூம் அப்பாகிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு படறாங்கன்னு தெரியலை. என் தலையவே இவ்வளவு உருட்டு உருட்டறாரு... அவங்களை சும்மாவா விடுவாரு..." என்று மேக்ஸிடம் விக்ரம் தன் ஹஸ்கி நாய்களை நினைத்து புலம்பியபடி இருக்க, சென்னையில் வேந்தனின் வீட்டில் ஜாக் & ரோஸ் இருவரும் சண்டையிட்டு ஒரு விலைமதிப்பு மிக்க கண்ணாடி டேபிளை உடைத்திருந்தனர்.

டேபிள் போச்சே என்று வேந்தன் தலைமீது கைவைத்து அமர்ந்திருக்க "செல்லங்களா... உங்களுக்கு ஒன்னும் அடிபடலையே... நான் பயந்தே போய்ட்டேன்..." என்று அவர்கள் இருவரையும் கொஞ்சி, தன் தந்தை வேந்தனின் முனைப்பை பரிசாக பெற்றுக்கொண்டு இருந்தான் விஜய்....


விஸ்வநாதனின் திட்டம் நிறைவேறுமா? புதிதாக வந்த பெண் யார்? அவளின் திட்டம் என்ன? பூவிழி தான் கதையின் நாயகியா? என்பதையெல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம்... பெரிய இடைவெளி எடுத்ததற்கு மன்னிக்கவும். குறிப்பிட்ட தேதிக்குள் கதையை முடிக்க முயல்கிறேன்... நீங்களும் உங்கள் வாக்குகளை மற்றும் கருத்துக்கள் அளித்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி...

இப்பகுதி உங்களுக்கு பிடித்திருந்தால் தவறாமல் உங்கள் கருத்துக்களையும் வாக்குகளையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். நன்றி...

 

PriyaPintoo

Member
Vannangal Writer
Messages
36
Reaction score
33
Points
18
அத்தியாயம் 7

ஆதவன் கீழ்திசையில் தன் வரவினை உணர்த்த, அதனை இரு விழிகள் இரசித்த வண்ணம் இருந்தன... பறவைகளின் கீச்சிடலில் அந்த அழகான நதி கவிபாட, அந்த கவிக்கு இன்னும் சிறிது அழகூட்டலாமே என்று வந்து சேர்ந்தது நதியில் நீராடிக் கொண்டிருந்த மங்கையர் இருவரின் சிரிப்பொலி...

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக நதியின் ஓரத்தில் மஞ்சள் நிற கொன்றை மலர்கள் பூத்துக்குலுங்க, அவற்றில் சில நதியின் நீரோட்டத்துடன் சேர்ந்து வந்து, மங்கையவர்களை பட்டும் படாமலும் தொட்டுச் செல்ல, அவற்றில் ஒரு மலரை மட்டும் கையில் ஏந்திய ஒரு பெண்ணோ, கரையில் அமர்ந்து புலரும் சூரியனை இரசித்த படி அமர்ந்திருந்த மற்றொருவள் மேல் அதை எறிய, அந்த மலரின் குளிர்ச்சியில் கனவில் இருந்து விழிப்பது போல் விழித்தவள், நீராடிக் கொண்டிருக்கும் மங்கையர் இருவரையும் முறைத்துப் பார்க்க, அதில் பூவை எறிந்தவள் பேசத் துவங்கினாள்.

"இளவரசி... அடுத்த வசந்த காலத்தில் கொன்றை மலர்கள் பூக்கும் தருவாயில் நீங்கள் அரியணை ஏறியிருப்பீர்கள். ஆனால் அதற்கேற்ற கவனம் உங்களுக்கு இருப்பது போல் தோன்றவில்லையே... உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியைச் செய்யாமல் கனவுலகத்தில் மிதந்துக் கொண்டு இருக்கிறீர்களே..." என்று அவள் கூற, அவளின் அருகில் நீராடிக் கொண்டிருந்த மற்றொருவள்,

"ஆம்பல்... நாம் நீராடும் போது காவல்காப்பது எல்லாம் இளவரசியின் பணியா? இது அரசரின் காதுகளுக்கு சென்றால் நம் நிலை என்னவாகும் என்று சிந்தித்தாயா? எதிலும் உனக்கு விளையாட்டு தான்..." மற்றவள் நெடித்துக்கொள்ள, "அவள் உங்களுக்குத் தான் இளவரசி... எனக்கு உற்ற தோழி..‌." ஆம்பல் என்று விளிக்கப்பட்டவள் இரண்டாமானவளிடம் அலட்சியமாக கூற, அதற்கு கரையில் அமர்ந்திருந்த இளவரசி தலையாட்டி மகிழ, அவளைப் பார்த்த ஆம்பலும் கண்கள் கலங்க மகிழ்ந்தாள்.

"குழலி... எந்த அச்சமும் கொள்ளவேண்டாம். என்னுடைய தந்தை என் எந்த செயலையும் மறுத்து ஒருசொல் கூறமாட்டார்... இந்நாட்டின் வருங்கால அரசியின் மீது அவ்வளவு நம்பிக்கை அவருக்கு..." இளவரசி ஆம்பலை கடிந்துக்கொண்டவளை சமாதானம் செய்யும் பொருட்டு தன் தந்தையைப் பற்றி பெருமையாக கூறினாள்.

"இளவரசி... நான் ஒன்று கூறினால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... ஒரு பெண் இந்த நாட்டை ஆள்வதா? என்ற எதிர்ப்பு நிறைந்த கேள்வி நம் அரசவையில் எழுந்துள்ளதாக கேள்வியுற்றேன்... ஆகவே தாங்கள் ஆசையை..." குழலி கூறிக்கொண்டு இருக்கும் போதே இடையிட்ட ஆம்பல், "எம் இளவரசியின் வாலுக்கு முதலில் பதில் கூறிவிட்டு, பிறகு அவர்களை கேள்வி எழுப்பச்சொல் குழலி... அவர்கள் உயிருடன் இருந்தால்..." என்றவள் நீரை தன் கைகளால் வாரி குழலியின் மீது தெளிக்க, குழலியும் ஆம்பலின் மீது தெளிக்க, அந்த நதிக்கரையில் மீண்டும் சிரிப்பொலி உருவாகி இதமான சூழலை ஏற்படுத்தியது.

அவர்கள் இருவரும் விளையாட ஆரம்பித்த பிறகு மீண்டும் சூரியனை பார்த்து இரசிக்க ஆரம்பித்த இளவரசியின் மனதில் அரசவையில் மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதெல்லாம் பெரிதாகப்படவில்லை. இச்செய்தி ஏற்கனவே அவளின் செவிகளில் அரசல்புரசலாக வந்திருந்தது. அதனால் தற்போது குழலி கூறுவதை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு அவசியமும் இல்லை என்றே அவளுக்கு தோன்றியது. ஏனெனில் அவள் சிறுவயதில் இருந்தே சிம்மாசனத்தில் அமர வேண்டும் என்பதற்காக தன்னையே அதற்கு உகந்ததாக செதுக்கிக் கொண்டவள்... அதோடு தன் தந்தையின் ஆசையும் அதான் என்பதால் சிம்மாசனம் ராஜ் குடும்பத்தின் ஒரே வாரிசான தனக்குத்தான் என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் இருந்தாள். அவள் இவ்வாறு சிந்தித்துக் கொண்டு இருக்க, ஒரு பணிப்பெண் மூச்சிறைக்க ஓடிவந்து அவளை நாடினாள்.

"இளவரசி... நம் நாட்டை அன்னிய நாட்டுப் படையினர் சூழ்ந்துள்ளனர். அரசர் தாங்களை உடனடியாக அரண்மனைக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கும் படி கட்டளையிட்டார்..." என்று பணிப்பெண் கூற, குழலியையும் ஆம்பலையும் பத்திரமாக அனுப்பி வைத்தவள், தன் குதிரையில் அன்னியப் படையினர் முற்றுகையிட்டிருக்கும் கோட்டையின் பிரமாண்டமான மதில்சுவருக்கு விரைந்தாள்...


***********

"ஹலோ... ஜீ.... பாஸ்.... என்னங்க ஆச்சு... எழுந்திருங்க... மிஸ்டர்... ஹலோ... சார்..." தொடர்ந்து கேட்ட குரலில் தன்னை கனவில் இருந்து மீட்டுக் கொண்ட விக்ரம் கண்விழித்து பார்க்க, எதிரே நின்றிருந்ததோ அந்த எதிர்வீட்டுப்பெண்.

ஒரு நொடி திகைத்தவன் பிறகு சுதாரித்து "நீங்க எப்படி இங்க? எதுக்கு இந்த நேரத்துல இங்க இருக்கீங்க? எப்படி உள்ள வந்தீங்க????" என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவன் அடுக்கினான் கோபமாக. ஏனெனில் அப்பெண் இரவு நேரத்தில் விக்ரமின் வீட்டிற்குள்ளேயே புகுந்திருந்தாள்...

"ரிலாக்ஸ்ங்க... நாய் குரைக்கிற சத்தம் ரொம்ப நேரமா கேட்டுகிட்டே இருந்துச்சு... வெளிய வந்து பார்த்தா உங்க வீட்டுல இருந்துதான் சத்தம் வந்தது புரிஞ்சுது. அதான் எதாவது ப்ராப்ளமான்னு பார்க்க வந்தேன். உங்களுக்கு கால் பண்ணா நாட் ரீச்சபில்னு வந்தது. சரின்னு கதவை ரொம்ப நேரமா தட்டனேன். நீங்க திறக்கவே இல்லை. அதான் உங்க வீட்டு மாடில இருக்குற படிக்கட்டு வழியா உள்ள இறங்கிட்டேன்... நான் வந்ததும் நல்லதா பேச்சு... பாருங்க உங்களுக்கு பயங்கர ஃபீவர்... வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்..." என்று கூறிக்கொண்டே அவனைக் கேட்காமலேயே அவன் கப்போட்டை திறந்து மாற்றிக்கொள்ள உடை எடுத்துக் கொடுக்க, காண்டாகியவன் "ஹலோ தயவுசெய்து முதல்ல வெளியே போறீங்களா...? பர்மிஷன் இல்லாமல் என் வீட்டுக்குள்ள வந்திருக்கீங்க... மேனர்ஸ்னா என்னன்னு உங்களுக்கு தெரியாதா? சும்மா நைநைன்னு உயிரை வாங்கறீங்க..." என்று அவன் கோபமாக கத்த, திகைத்தவள் வேகமாக அவன் வீட்டைவிட்டு வெளியேறினாள்.

"ச்சே... இவனுக்குலாம் ஹெல்ப் பண்ண நினைச்சேன் பாரு... என் புத்திய.... ச்சே..." என்று தன் வீடு செல்லும் வரையில் அந்த எதிர்வீட்டுப் பெண் புலம்பிக் கொண்டே சென்றாள். உண்மையில் அவள் விக்ரமின் வீட்டிற்குள் வரக் காரணம் அந்த தங்க எழுதுகோல்தான். இறகே இல்லாத அந்த எழுதுகோல் விக்ரமின் வீட்டில் தான் இருந்தது. அதை எடுக்கத்தான் அவள் முயற்சி செய்கிறாள். அந்த முயற்ச்சியின் ஒரு பகுதியாகத்தான் மேக்ஸிற்கு உணவும் விக்ரமிற்கு கெக்கேகேலாவும் வாங்கி கொடுத்தது. அது இரண்டிலும் மயக்கமருந்து கலந்து வைத்திருந்தாள்.


அவள் மாடி வழியாக வீட்டிற்குள் இறங்கி சோதிக்கும் போது பெடிகிரீயை உண்ட மேக்ஸ் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, விக்ரமோ காய்ச்சலில் தவித்துக் கொண்டு வேர்வையில் நனைந்தபடி உறங்கிக்கொண்டு இருந்தான். அருகில் இருந்த டேபிளில் அவள் மயக்கமருந்து கலந்து கொடுத்த கெக்ககோலா மூடி கூட திறக்கப்படாமல் கேட்பாரற்று கிடந்தது.

அவனை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு தன் வேலையை கவனிக்க அவளுக்கு மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. எனவே அவனை எழுப்பி வாய்க்கு வந்த பொய்யை கூறி மருத்துவமனை அழைத்துச் செல்ல நினைத்தாள். ஆனால் அவனே அவளை திட்டி வெளியே துரத்திவிட்டான்.

"கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல... இந்த மேக்ஸ்க்கு ஏன் திடீர்னு இப்படி ஆகிடுச்சு..." மயக்கநிலையில் இருந்த மேக்ஸை சோதித்துக் கொண்டே இருந்தவன் எதிர்வீட்டு பெண்ணையும் திட்ட மறக்கவில்லை.

மேக்ஸின் இதயத்துடிப்பு எல்லாம் சரியாக இருந்ததால், சிறிது நேரத்தில் அவனே மயக்கம் தெளிந்து எழுந்துவிடுவான் என்று தனது படுக்கைக்கு உறங்கச் சென்றவன் பிறகே நினைவுப்படுத்தினான் தன் கனவை. ஆம் நதியில் அந்த மூன்று பெண்களும் வந்தது அவனது கனவில் தான். அவர்கள் பேசியது, அந்த நதிக்கரை எல்லாம் தெளிவாகத் தெரிந்த அவனுக்கு, அவர்களின் முகங்கள் மட்டும் நினைவில் இல்லை.

இது சாதாரண கனவுதான் என்று நினைத்தவன் பிறகு தன் தூக்கத்தை தொடர, சற்றுநேரம் விட்டிருந்த காய்ச்சல் அவனை திரும்பவும் பிடித்துக்கொண்டது. எழுந்து மாத்திரையை மட்டும் போட்டுக்கொண்டு படுத்தவன் காலையில் மருத்துவமனையை அனுகியிருந்தான்.

"என்ன விக்ரம் நீங்க... நீங்களே இப்படி கவனக்குறைவா இருந்தா எப்படி? இனிமேலாவது கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க... நீங்க மொதல்ல சென்னைக்கு கிளம்புங்க... இங்க இருந்தா சரிப்பட்டு வரமாட்டீங்க. இருங்க நான் விஜய்க்கு கால் பண்ணறேன்..." என்று கூறிய மருத்துவரை தடுத்தவன், இனி ஒழுங்காக இருப்பதாக வாக்குக்கொடுத்தான்.

அந்த பெண் மருத்துவர் விஜயின் பள்ளித்தோழி என்பதால் விக்ரமிற்கு நன்றாகவே தெரிந்திருந்தாள். இரு நாட்களுக்கு முன்பு அடிப்பட்ட மேக்ஸை தூங்கியதால் அவன் தோல்பட்டையில் இருந்த காயத்தில் இரத்த கசிவு ஏற்பட்டு இருந்தது. அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத விக்ரம், அவனே மருத்துவம் செய்துக்கொள்ள, அது இன்று நன்றாக செப்டிக் ஆகி அதிக காய்ச்சலையும் ஏற்படுத்தியிருந்தது.

"இது ஒன்னும் முதல் தடவை இல்ல... விஜய் இருக்கும் போதே நீங்க ரெஸ்ட் எடுக்காமல் இதே பிரச்சினையோட வந்தீங்க... இப்போ விஜயும் கிளம்பிட்டான்... சொல்லவா வேணும்... உங்க இஷ்டத்துக்கு இருக்கீங்க... நீங்க இப்படி பண்ணிட்டே இருந்தா எப்படி காயம் குணமாகும் சொல்லுங்க..." என்று அவள் கூற, இனி இதுபோன்று நிச்சயம் நடக்காது என்று கூறிவிட்டு வெளியேறினான்.

விக்ரம் மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது அவனின் எதிரில் ஒரு ஸ்கூட்டி வந்து திடீரென நிற்க, சட்டென்று அதிர்ந்தவன் யாரென்று பார்க்க, சாட்சாத் எதிர்வீட்டு பெண்ணே தான். என்னடா இது... என்று அவன் சளித்துக்கொண்டு இருக்க, "என்னங்க காத்து இந்தப் பக்கம் வீசுது... நீங்க வெட்னரி டாக்டர் தான..." என்றால் வேண்டுமென்றே.

"உங்களுக்கு அது தேவையில்லாத விஷயம்..." என்றவன் வாசலில் பக்கம் வேலையை பார்த்துக் கொண்டு கிளம்புமாறு கைக்காட்ட "நான் வீட்டுக்கு தான் போறேன்... லிஃப்ட் வேணுமா?" என்றால் கிளம்பாமல்.

வேண்டாம் என்று மறுத்தவன் பிறகு அவளின் வீங்கியிருந்த கண்களை பார்த்து விட்டு சற்று நேரத்திற்கு முன்பு அழுதிருக்கிறாள் என்று புரிந்துக்கொண்டு ஸ்கூட்டியில் ஏறிக்கொள்ள, அவள் வேகமாக ஸ்கூட்டியை கிளப்பியப்பிறகே உயிர்பயம் பிடித்துக்கொண்டது. அவள் ஸ்கூட்டி ஓட்டிய வேகம் அப்படி...

இதுவரை ஓரிரு முறை விஜயுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்து இருக்கான் அவ்வளவு தான். மற்றபடி எங்கு செல்வதானாலும் நான்கு சக்கர வாகனத்தை தான் பயன்படுத்துவான். ஏனெனில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது யாராவது அவனை தொட்டு விட்டால் பிரச்சினை ஆகிவிடுமே அதனால் தான்... எப்பொழுதும் சுதாரிப்புடன் இருப்பவன் காரையே விரும்பினான்.

"சார்... எதுக்கு அடிக்கிற வெயில்ல எப்பப் பார்த்தாலும் ஃபுல் ஹேன்ட் சர்ட் போட்டுகிட்டு கைல க்ளவுஸ் போட்டுகிட்டே சுத்திக்கிட்டு இருக்கீங்க..." ஸ்கூட்டி ஓட்டியபடியே தன் நீண்ட நாள் சந்தேகத்தை அவள் கேட்க, "ஏங்க ப்ளீஸ் பேசாமல் ரோட்டை பார்த்து ஓட்டுங்க..." என்றான் பின்பக்கம் இருந்த கம்பியை இறுக்கமாக பற்றிக்கொண்டு.

அவனைக் கண்டு தன் துயரம் மறந்து சிரித்தவள், "பயப்படாதீங்க... கீழ தள்ளி விட்டுட மாட்டேன்..." என்று அவள் கூறியும் விக்ரம் சற்று கவனமாகவே இருந்தான். வீட்டிற்கு வந்து சேர்ந்த பிறகே அவரது உயிர் அவனிடம் வந்தது என்னவோ உண்மைதான்!

"பாஸ்... உங்களுக்கு ஒரு அட்வைஸ் பண்ணவா... உங்க உணர்ச்சிவசத்தை அடக்குங்க... கோவத்தை கட்டுப்படுத்துங்க... சரியா... ஃப்ரெண்ட்ஸ்..." என்று அவள் கை நீட்ட, முதலில் தயங்கியவன் பிறகு அவனும் கை நீட்ட ஆனால் அவளோ தன் கையை பட்டென்று எடுத்துக்கொண்டாள்.

"நாங்க என்ன உங்ககிட்ட ட்ரீட்மெண்ட்க்கு வர அனிமல்ஸா... க்ளவுஸ் போட்டுகிட்டு கை கொடுக்கறீங்க..." என்று அவள் கூற, க்ளவுசை கழட்டிவிட்டு கை கொடுத்தவன், தன் சக்தி வேலை செய்கிறதா என்பதை சோதித்தரிய மறக்கவில்லை...

தன் சக்தி திரும்ப வரவில்லை என்பதால் சற்று நிம்மதியாக இருந்தது அவனுக்கு... கூடவே ஒரு கேள்வியும் எழுந்தது... உடல்நிலை சரியில்லாததால் தன் சக்தி வேலைசெய்யவில்லையோ...??? என்ற எண்ணம் எழ, இல்லை..‌. இல்லை... எத்தனையோ தடவை உடல்நலம் குன்றி இருக்கிறதே... அப்போது இப்படி ஆகவில்லையே என்று அவனே தனக்கு பதிலளித்துக் கொண்டான்.

இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே விக்ரமின் போன் அடிக்க, எடுத்து பார்த்தவன் விஜய்தான் அழைத்திருக்கிறான் என்று உணர்ந்து சற்று சந்தேகமடைந்தான். அவன் சந்தேகத்தை சரியாக்கும் படி இருந்தது விஜயின் வார்த்தைகள்... "அண்ணா... நான் வந்துட்டே இருக்கேன். ஒரு 6ஹவர்ஸ்ல வந்துடுவேன். உன்னுடைய லக்கேஜ் எல்லாத்தையும் பேக் பண்ணி வச்சிடு... நிச்சயதார்த்தம் வேற இருக்கு. அதுக்குள்ள உன்னுடைய காயம் சரியாகனும்... நீ அங்க இருந்தா சரிப்பட்டு வரமாட்ட..." என்று அவன் கூறி விக்ரமிற்கு பேச வாய்ப்பு அளிக்காமல் கட் செய்துவிட, விக்ரமிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. விஜயின் தோழியான அந்த மருத்துவர் தான் விக்ரம் கிளம்பிய உடனே விக்ரமிற்கு செப்டிக் ஆகிய விஷயத்தை விஜய்யிடம் கூறிவிட்டிருந்தார்.

விக்ரம் தன் தந்தையின் வீட்டிற்கு செல்லத் தயங்க காரணம் அவனுக்கு அடிப்பட்டது தெரிந்தால் நிச்சயம் தனியாக வீடெடுத்து தங்கி பணிபுரிய எல்லாம் அவர் அனுமதிக்கமாட்டார். அதனால் வீண் வாக்குவாதங்கள் தான் ஏற்படும். எப்போதும் இருவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் நிகழ்வதுண்டு. அப்போதெல்லாம் காயப்பட்டு போவது அவனின் தந்தை வேந்தன் தான். இருவருக்கும் வாக்குவாதம் முத்தினால் அவனை அறியாமலேயே வேந்தனின் சில கடந்தகால நிகழ்வுகளை சொல்லி, அவரை வருத்தமடைய செய்துவிடுவான்.

அவர் காயப்பட்டு விடுவாரோ என்ற பயத்தினாலேயே அவன் அவரை தவிர்க்க, அவரோ எப்படி அமைதியாக இருந்துவிடுவார்.... தந்தையாயிற்றே... அவரின் மனைவி இறந்த பிறகு தனி ஆளாக விக்ரமையும் விஜயயும் தன் மொத்த அன்பையும், கண்டிப்பையும் காட்டி வளர்த்தவர், தன் மகன்கள் விலகினால் விட்டுவிடுவாரா என்ன?



விக்ரமின் கனவில் வந்த பெண்கள் யார்? கனவில் வந்த இளவரசிக்கு அரியணை கிடைக்குமா? எதிர்வீட்டு பெண் யார்? அவளை அனுப்பியது விஸ்வநாதனா? இல்லை புதையலைத் தேடும் இன்னொரு குழு உள்ளதா? விக்ரமின் சக்தி மீண்டும் கிடைக்குமா? நிச்சயதார்த்தம் நடக்குமா? போன்ற கேள்விகளுக்கான விடைகளை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம்.

இப்பகுதி உங்களுக்கு பிடித்திருந்தால் தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி...


 

PriyaPintoo

Member
Vannangal Writer
Messages
36
Reaction score
33
Points
18

அத்தியாயம் 8:


"உங்க பேரு என்ன? எங்க இருந்து வரீங்க? நீங்க எப்படி கடலுக்கு போனீங்க? இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க? விக்ரமாதித்யன்னு யாராவது உங்களுக்கு தெரியுமா?" என்றெல்லாம் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறிமாறி கேட்டுக்கொண்டு இருந்தார் ஒரு காக்கிச்சட்டைக்காரர். இதோடு விசாரணை செய்ய வந்தவர்களில் இவர் ஆறாம் ஆள். யார் கேட்டாலும் வில்லியம் பதிலளிப்பதாக இல்லை..‌. மன அழுத்தம் அவனை பைத்தியமாக்கிக்கொண்டு இருந்தது. புதையலைத் தேடிச் சென்று இதோடு ஒரு மாதம் ஆகியிருந்தது... இன்றுதான் அனைவரும் ஊர் திரும்பினர்.

ஒருவாரம் உணவு தண்ணீர் இல்லாமல் வெயிலிலும் மழையிலும் கடல் சீற்றத்திலும் சிக்கித்தவித்து, வழிதெரியாமல் கடலில் ஒரேயொரு படகில் சுற்றிக்கொண்டு இருந்தார்கள். ஆம் ஒரேயொரு படகுதான். இரண்டு படகில் தான் வந்தனர். ஆனால் கூம்பு பாறைகளில் கட்டப்பட்ட ஒரு படகு அலையடித்து அலையடித்து அந்த கூறிய முனைக்கொண்ட பாறைகளின் மோதி மோதி தண்ணீர் உள்ளே புகுந்து பாதி மூழ்கியிருந்தது. எனவே கைவசம் இருந்த ஒரே படகில் அனைவரும் ஏறி, வழி தெரியாமல் தவித்து, ஒரு வாரத்திற்கு பிறகு ஒரு சிறிய தீவைக் கண்டறிந்து, அதில் தஞ்சம் புகுந்து, யாராவது நம்மை காக்க வருவார்களா என்று ஏங்கிக் கொண்டு இருந்தனர். நல்லவேளையாக அந்த பக்கம் வந்த ஒரு கப்பல் இவர்களை காப்பாற்றி தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்கிவிட, உடனே அனைவரும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்‌. அவர்கள் வைத்திருந்த வெளிநாட்டு துப்பாக்கிகளை கைப்பற்றிய காவல் துறையினர் அதை ஆய்விற்கு அனுப்பினர்.

வில்லியம் அமைதியாக அமர்ந்திருந்தான் என்றால், மற்றவர்கள் அனைவரும் அனைத்தையும் உளறிக்கொட்டிக் கொண்டு இருந்தனர். அதற்கு காரணம் அவர்கள் பொத்தி பொத்தி பாதுகாத்துக் கொண்டு வந்த ஒரு பெட்டி நிறைய நகைகள் அனைத்தும் தங்கம் இல்லை என்பதை காவல்துறையினரின் ஆராய்ச்சிக்கு பிறகு அறிந்ததால் தான். ஒருமாதம் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டுவந்த நகைகள் அனைத்தும் போலியானவை என தெரிந்துக் கொண்ட அவர்களின் கோபம் முழுவதும் வில்லியமின் பக்கம் தான் திரும்பியது.

ஆராய்ச்சி செய்ததில் அவர்கள் கொண்டு வந்தது தங்கம் இல்லை என்பதை அறிந்துக்கொண்ட காவல்துறையினர், தங்கம் இருப்பதாக நம்பி இவர்கள் அனைவரும் ஏமாந்து உள்ளார்கள் என்று கருதி அந்த தீவைப் பற்றி கவலைக்கொள்ளாமல் விக்ரமை தாக்கியதற்கும், அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததற்கும் வெளிநாட்டில் இருந்து இரகசியமாய் துப்பாக்கிகளை இறக்குமதி செய்ததற்கும் என பல வழக்குகள் வில்லியமின் பெயரில் போடப்பட்டது. துப்பாக்கிகள் யார்மூலம் இறக்குமதி செய்யப்பட்டன என்பதை வில்லியமிடம் காவல்துறையினர் விசாரிக்க, சம்பிரதாயத்திற்கு தன் பெயரைக் கூட கூறாமல் அழுத்தமாக அமர்ந்திருந்தவன் தற்போது அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடுவானா என்ன?

**********

வண்ண விளக்குகள் மற்றும் பூக்களின் அலங்காரத்தால் அந்த பெரிய மண்டபம் அழகாக ஜொலித்துக் கொண்டு இருந்தது. ஆங்காங்கே தொங்கவிடப் பட்டிருந்த சிவப்பு மற்றும் வெண்ணிற வெல்வெட் துணிகளும், தரையில் பரப்பியிருந்த சிவப்பு நிற தரை விரிப்புகளும், அந்த இடத்திற்கு மேலும் அழகூட்டியது...

விக்ரம் அந்த தீவிற்கு சென்று வந்து இதோடு ஒரு மாதம் நிறைவடைந்திருந்தது. இடையில் சிலபல கருத்துவேறுபாடுகள், கோபங்கள், சென்டிமென்ட் டயலாக்குகள் என பல நடந்து விக்ரமிற்கு நிச்சயதார்த்தமும் குறித்தாகி விட்டது. தந்தை வேந்தனின் கோபத்தை பொறுத்துக்கொள்ள முடிந்த... சோகமான முகத்தை பொறுத்துக்கொள்ள முடிந்த விக்ரமால் அவரின் கண்ணீரை பொறுத்துக்கொள்ள முடியாமல் போனதின் விளைவாக, இன்னும் சில நிமிடங்களில் நிச்சயதார்த்தம் அரங்கேற இருக்கிறது.

சொந்தங்கள் அனைத்தும் சூழ்ந்திருக்க, வேந்தன் மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது. விக்ரமின் மாமா விஸ்வநாதனோ எதற்கு இந்த ஆடம்பரம்... என்று நினைத்துக்கொண்டு இருக்க, அவரின் மனைவியோ எப்படியோ பெரிய இடத்திற்கு மகளை அனுப்பப்போகிறோம் என்று மகிழ்ந்துக் கொண்டு இருந்தார்.

அவருக்கு தன் மகளின் விருப்பமின்மை பற்றி எதுவும் தெரியாது. மகளின் மேல் அவருக்கு அளவுக்கு அதிகமான பாசம் இருந்தாலும், அதை அவளுடன் பகிர்ந்து கொள்ள அவருக்கு நேரம் கிடைத்தது கிடையாது. அவர் தனியார் மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் வைப்பதற்கே அவருக்கு நேரம் பத்தவில்லை... எனவே தன் மகளுடனான உறவு விரிசலடைந்திருக்க, தன் சம்மதமின்மையை பூவிழி அவரிடம் தெரிவிக்காமல் தன் தந்தையிடம் மட்டும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாள்... ஆனால் அது எதுவும் அவளின் தந்தையிடம் எடுபடாமல் போக, இதோ நிச்சயதார்த்த விழாவும் வந்துவிட்டது...

விக்ரமிற்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் வழியாக யார் யாரெல்லாம் வருகிறார்கள் என்று நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தான் விக்ரம். அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆள் வந்ததும் வேகமாக செல்ல முயன்றவனை தடுத்த விஸ்வநாதன், உறவினர்கள் பெயர்களை கூறி ஒவ்வொருவர் கைப்பேசி எண்ணையும் எடுத்துக்கொடு... என்னுடையது தொலைந்துவிட்டது என்று கூற, கடுப்பானவன் "மாமா... நான் கொஞ்சம் முக்கியமான வேலையா போறேன். விஜய் உள்ளதான் இருக்கான். அவன்கிட்ட வாங்கிக்கோங்க...." என்றபடி நடக்க, அவனை பின்தொடர்ந்தவர் "முக்கியமான சொந்தக்காரங்க எல்லாம் இன்னும் காணும்... என்னப்பா நீ இவ்வளவு அலட்சியமா இருக்க..." என்றார்.

"மாமா... அதான் விஜய்கிட்ட வாங்கிக்கோங்கன்னு சொல்லிட்டனே... நான் பூவிழிய தான் பார்க்க போறேன். கொஞ்சம் பேச வேண்டி இருக்கு... நிச்சயதார்த்தம் ஆரம்பிக்கிறதுக்குள்ள நான் பேசியாகனும். இவ்வளவு நாள் ஏதேதோ காரணம் சொல்லி பேசவிடலை. இந்த கடைசி நிமிஷமும் எதுக்கு தடுக்கறீங்க?" என்றவனிடம் விஸ்வநாதன் பேச்சற்று நின்றார். ஏனெனில் அவர் அறிந்திருந்த விக்ரம் மிகவும் அமைதியானவன். யாரையும் எதிர்த்து பேசாதவன்... ஆனால் அவருக்கு தெரியவில்லை விக்ரமின் பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு என்று...

விஸ்வநாதன் விக்ரமை அவன் வழியில் விட்டுவிட, விக்ரம் சென்று நின்றதோ பூவிழியின் அறைக்கு வெளியில் தான். கதவைத்தட்டியவன் அவளுக்காக காத்திருக்க கதவைத் திறந்ததோ விஸ்வநாதனின் தங்கை ஒருவர். விக்ரமிற்கு அவர் சித்தி முறையாவார்.

"சித்தி... நான் பூவிழிகிட்ட கொஞ்சம் பர்ஸ்னலா பேசனுமே..‌." என்று கூற கதவை சாற்றி விட்டு வெளியே வந்தவர் "அவ இப்போ தான் கிளம்பறாப்பா... புடவை மாத்திட்டு இருக்கா... முகூர்த்த நேரம் வரப்போகுது. சீக்கிரம் ரெடியாகனும் இல்ல... அப்புறமா பேசிக்கோங்களேன்..." என்று கூறிவிட, என்ன கொடுமைடா இது என்று நினைத்தவன், தன் அறைக்குச் செல்ல, விஜய் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

அவன் அருகில் அமர்ந்த விக்ரமும் தன் சிந்தனையில் ஆழ்ந்தான். ஏதோ தவறாக இருப்பதாகப் பட்டது அவனுக்கு... சென்னை வந்து சேர்ந்த இந்த மூன்று வாரங்களில் அவன் பூவிழியுடன் பேச முயற்சித்த தருணங்கள் பல... ஒவ்வொரு முறை விக்ரம் முயற்சிக்கும் போதும் விஸ்வநாதன் ஏதாவது ஒன்றை கூறி பூவிழியுடன் பேச விடமாட்டார்.


முதலில் அவர் கூறிய சாக்கு போக்கை எல்லாம் நம்பியவன், அவளிடம் தொலைபேசி வாயிலாகப் பேச எண்ணி அவளின் எண்ணை வாங்க முயற்ச்சிக்க, சொன்னாரே ஒரு பெரிய பொய்... பூவிழியிடம் கைப்பேசியே இல்லை என்று... இந்த காலத்தில் சென்னையில் வசிக்கும் கல்லூரி செல்லும் ஒரு பெண், கைப்பேசி வைத்தில்லை என்றால் நம்பும்படியாகவா இருக்கிறது. சரி அப்படியே வைத்தில்லை என்றாலும் நல்ல விஷயம் தான். ஆனால் விக்ரம் வாங்கி கொடுத்தாலும் வேண்டாம் என்று கூறுகிறாள் என்று கூறினால் நம்பும்படியாகவா உள்ளது... அதிலும் விஸ்வநாதன் வேறு பூவிழி விக்ரமை காதலிப்பதாக கூறியிருக்கிறார் அல்லவா... காதல் வைத்திருப்பதாக சொல்லப்படும் ஒருவன், வாங்கி தந்த உயர்ரக கைப்பேசியை வேண்டாம் என்று சொல்கிறாள் என்றால் என்ன காரணமாக இருக்க முடியும். அவளுக்கு அந்த காதல் என்பது எல்லாம் இல்லை என்று தானே அர்த்தம் கொள்ள முடியும்... என்று சந்தேகித்தவன் அதன் பிறகு ஒவ்வொரு முறையும் விஸ்வநாதன் சொல்லும் சாக்குகளை ஆராய ஆரம்பித்திருந்தான். அவர் கூறிய பூவிழிக்கு செய்முறைத் தேர்வு, எழுத்துத் தேர்வு என்ற சாக்குகள் எல்லாம் பொய் என்று கல்லூரியில் விசாரித்து தெரிந்து கொண்டவன், பிறகு எதுவரைக்கும் தான் போகிறார் என்று அமைதிகாக்க ஆரம்பித்தான். நிச்சயதார்த்த விழாவும் நெருங்க, இன்று கூட பூவிழியிடம் பேசமுடியவில்லை அவனால்.

வேறு என்ன பேசப்போகிறான்... உண்மையில் இந்த திருமணத்திற்கு உனக்கு சம்மதமா... என்று தான் கேட்க முடிவு செய்திருந்தான். அவள் முழு மனதுடன் சம்மதம் என்றால், தன்னுடைய சக்தி பற்றி கூறி, பிறகும் சம்மதமா என்று கேட்க நினைத்தான். அப்படி கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மேடையில் பூவிழியுடன் சேர்ந்து நிற்கும் வரை இருந்தது. மேடை என்றும் பாராமல் அவன் அவளுக்கு மட்டும் கேட்குமாறு இந்த திருமணத்தில் உனக்கு விருப்பமா என்று கேட்க அவள் 'ஆம்' என்று மெல்ல தலையாட்டினாள்.

பூவிழி... பூப்போன்ற விழிகளை உடையவள்... மகிழ்ச்சியான தருணங்களில் அவளது விழிகள் பூப்போன்று விரிந்திருக்கும்... சோகமான தருணங்களில் அவளது விழிகள் வாடிய மலர் போன்று வதங்கி இருக்கும். சிறுவயதில் இருந்தே அவளைத் தான் அவனுக்கு தெரியுமே. அவளின் விழிகளின் அர்த்தம் தெரியாதா என்ன? அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என...

"என்ன இது மேடையில வந்து இப்படி ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க... அமைதியா இருங்க..." விக்ரமின் சித்தி பூவிழியிடம் கூறியது விக்ரமிற்கும் நன்றாக கேட்டது. அவனுக்கும் சேர்த்து தான் கூறினாரோ என்னவோ...!

காரில் இருந்து இறங்கும் போது பூவிழி அணிந்திருந்த தங்க நிற லெகங்காவை தான் இன்னும் அணிந்திருக்கிறாள். புடவையெல்லாம் மாற்றவில்லை என்பதை கவனித்த விக்ரம், பூவிழி புடவை மாற்றிக்கொண்டு இருக்கிறாள் என்று கூறி விக்ரமை பூவிழியிடம் பேசமுடியாதபடி செய்த இந்த சித்தியும், மாமாவுடன் கூட்டுக்களவானி தான் என்பதை புரிந்துக் கொண்டான்.

"ஏன் சித்தி..‌. பேசனா அப்படி என்ன குறைஞ்சிடப் போகுது..." என்ற விக்ரமை அமைதியாக இருக்கும் படி வேந்தன் கூற, அமைதியாக நின்றிருந்தான். பிறகு நிச்சயதார்த்த தட்டு மாற்றப்பட, விக்ரமின் கையில் மோதிரத்தை கொடுத்த விஜய், பூவிழிக்கு அதை அணிவிக்கும் படி கூற, பூவிழியும் தன் கையை நீட்ட, நிச்சயதார்த்தம் தானே என்று அவனும் மோதிரத்தை அணிவிக்க அவளின் கையை பிடிக்க, சட்டென்று அவனின் கருவிழிகள் இரண்டும் சுருங்க, கையில் இருந்த மோதிரத்தை கீழே தவறவிட்டான் விக்ரம்...

விக்ரம் தவறவிட்ட மோதிரத்தை விஜய் குணிந்து எடுத்து விக்ரமிடம் நீட்டியபடி அவனைப் பார்க்க, விக்ரமின் கண்கள் இரண்டும் கலங்கியிருந்தது. அவன் விஜயைத்தான் வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

"விக்ரம்... என்ன ஆச்சு. டைம் ஆகுது... சீக்கிரம் மோதிரத்தை போட்டுவிடு..." என்று விஜய் கூற "இந்த நிச்சயதார்த்தம் கேன்சல்... இந்த கல்யாணம் இனி நடக்காது" என்றவன் வேகமாக மேடையில் இருந்து இறங்கி வெளியே சென்றுவிட்டான்.

என்ன நடக்கிறது? ஏன் இப்படி செய்கிறான்? என்று புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்த விஜய்க்கு பிறகே பொறி தட்டியது சட்டென்று மாறிய விக்ரமின் கண்கள். அவன் பூவிழியின் கையைப் பிடித்ததும் தான் சட்டென்று மாறினான் என்று உணர்ந்துக் கொண்டவன், ஒருவித இயலாமையில் வேந்தனைப் பார்க்க, வேந்தனும் விஜயைப் பார்க்க, இருவரின் கண்களும் விக்ரமிற்கு சென்ற சக்தி திரும்ப வந்த விஷயத்தை பறிமாறிக் கொண்டன...





விக்ரமின் சக்தி மீண்டும் வந்துவிட்டது. இவ்வளவு நாள் வராமல் தற்போது சக்தி வந்ததற்கு காரணம் என்ன? பூவிழிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் அவள் திருமணத்திற்கு சம்மதிக்க காரணம் என்ன? விக்ரம் பூவிழியின் கையைப் பிடித்து ஏதோ ஒன்றை உணர்ந்த பின்தான் நிச்சயதார்த்த விழாவை வேண்டாம் என்று ஆணித்தரமாக கூறினான். அப்படி அவன் என்ன பார்த்தான்? விஸ்வநாதனின் அடுத்த கட்ட திட்டம் என்ன? வில்லியமால் விக்ரமிற்கு பிரச்சினை வருமா? என்ற கேள்விகளுக்கு பதில்களையெல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம்.

இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடித்திருந்தால் தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி
 
Status
Not open for further replies.
Top Bottom