Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 1

அத்தியாயம் – 1

தேனி மாவட்டத்தின் காம்காபட்டியின் குளுமையையும், மண் வளத்தையும் பறைசாற்றும் வண்ணம் தென்னை, கொய்யா, நெல்லி, மா, பலா, வாழை, வேம்பு, புங்கை, பூவசரம், தேக்கு போன்ற கலவையான மரங்கள் சீரான இடைவெளியில் செழிப்பாக வளர்ந்திருக்க… கத்திரி, வெண்டை, முருங்கை, அவரை, பாகை, பூசணி, தக்காளி போன்ற காய்கறி வகைகள் ஒரு பக்கம் காய்த்துக் குலுங்க… பலதரப்பட்ட கீரை வகைகள் மறுபக்கம் படர்ந்திருக்க… மல்லி, முல்லை, ரோஜா, அரளி, சாமந்தி, செம்பருத்தி போன்ற மலர்கள் ஆங்காங்கே பூத்துக் குலுங்க… பசுமையும் குளுமையுமாக இருந்தது அந்த பெரிய தோட்டம். அதன் மையத்தில் கட்டப்பட்டிருந்த மாடிவீட்டின் வாசலில் நடப்பட்டு… மாடிவரை படர்ந்திருந்த முல்லை கொடியில் அரும்பியிருந்த மொட்டுக்களை, தரையில் மரத்தாலான ஸ்டூல் ஒன்றைப் போட்டு அதன் மீது ஏறி நின்று பறித்துக் கொண்டிருந்தாள் கௌசல்யா.

‘க்ரீச்…’ என்று காம்பௌண்ட் கேட் திறக்கும் சத்தத்தைத் தொடர்ந்து கார் ஒன்று உள்ளே வருவது தெரிந்தும், கௌசல்யா திரும்பிப் பார்க்கவில்லை… அவளுக்குத் தெரியும் வருவது யார் என்று.

‘Dr’ என்ற எழுத்துக்களைத் தாங்கிய கார் வீட்டு போர்டிகோவில் வந்து நிற்க… அதிலிருந்து டாக்டர் வீரராகவன் இறங்கினார். வசீகரமான தோற்றத்துடன் மத்திய வயதிலிருந்த அந்த மனிதர், தன் வரவை சிறிதும் லட்சியம் செய்யாமல் முல்லை மொட்டுக்களைக் கொய்து கொண்டிருக்கும் கௌசல்யாவை, தலை முதல் கால் வரை பார்த்தார். அவர் பார்வை அவள் தோற்றத்தை முழுமையாக ஆராய்ந்தது.

‘மெலிந்துவிட்டாள்… கருத்துவிட்டாள்…’ அவர் மனம் வருந்தியது.

‘இவ்வளவு பெரிய தோட்டத்தையும், வீட்டையும் பராமரிக்க எவ்வளவு உழைப்பைக் கொடுத்திருக்க வேண்டும்… அதுவும் தனியாளாக…! இந்தப் பூவுடலை எதற்காக இந்தப் பாடுபடுத்துகிறாள்…?’ அவரிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது. அதற்குமேல் அங்கே தாமதிக்காமல் வீட்டிற்குள் விரைந்தார்.

அவர் மாலை குளியலை முடித்து, உடை மாற்றிக் கூடத்திற்கு வரும் பொழுது அங்கே அவருக்காகச் சூடான காப்பியும், மாலை சிற்றுண்டியும் தயாராக இருந்தது. அதைத் தயாரித்து அங்குக் கொண்டுவந்து வைத்தவளை அவர் கண்கள் தேடின. அவள் வாசலில் ஓரமாகப் போடப்பட்டிருந்த கல்பெஞ்சில் அமர்ந்து முல்லை மொட்டுக்களைத் தொடுத்துக் கொண்டிருந்தாள்.

வீரராகவன் காப்பிக் கோப்பையையும், சிற்றுண்டி தட்டையும் ஒரு ட்ரேயில் வைத்து எடுத்துக் கொண்டு, தோட்டத்தில் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியை நோக்கிச் சென்றார். அங்கிருந்து பார்த்தால் அவளை நன்றாகப் பார்க்க முடியும் என்று தோன்றியது. அவர் எண்ணத்தை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ… அவர் தோட்டத்திற்கு வந்த அடுத்த நொடி, கௌசல்யா வீட்டிற்குள் சென்று மறைந்தாள். அவர் முகத்தில் ஏமாற்றமும் சோகமும் படர்ந்தது.

‘என்னை மன்னிக்கவே மாட்டியா கௌசி…? எப்பவோ ­செய்த தவறுக்கு இன்னும் எத்தனை நாள் தான் தண்டிப்ப…? என்னால தாங்க முடியல கௌசி…!’ அவர் மானசீகமாக மனைவியிடம் பேசினார்.

பத்தாண்டுகளுக்கு முன், அந்த மோசமான நாளன்று, அவள் பேசிய வார்த்தைகள் இன்னும் அவர் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன…

“உங்களைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு… ஒரு குழந்தைக்குத் தாயும் ஆகிவிட்ட பாவத்திற்குத் தண்டனையாக, இனியும் இந்த வீட்டில் நான் இருக்கத்தான் போகிறேன். ஆனால் உங்களுடைய மனைவியாக அல்ல… என் மகளுக்குத் தாயாக மட்டும் தான் என்பது உங்கள் நினைவில் எப்பொழுதும் இருக்க வேண்டும். ஒரு நொடி அதை நீங்கள் மறந்தாலும்… அடுத்த நொடி நான் பிணமாவேன் என்பது சத்தியம்…”

அன்று அவளுடைய அழுத்தமான வார்த்தைகள் அவரைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. “உணர்ச்சிவசத்தில் பேசுகிறாள்… பத்து நாட்கள் கழிந்தால் எல்லாம் சரியாகிவிடும்…” என்று நினைத்தார். அவர் மீது கௌசல்யா கொண்டிருந்த காதல், அவரை அப்படி நினைக்க வைத்தது. ஆனால் அவருடைய நினைப்பு பொய்த்துப் போனது. பத்து நாள் என்ன… பத்து ஆண்டுகள் கழிந்தும் அவள் மனம் மாறவில்லை. அவளுடைய வார்த்தைகளில் இருந்த உறுதி, அவளுடைய செயலில் இரு மடங்காக வெளிப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை, அவள் வீரராகவனின் முகம் பார்ப்பதில்லை… அவருடன் பேசுவதில்லை… குடும்ப விஷயத்தில் எந்தக் கருத்தும் சொல்வதில்லை… அவளுடைய தேவைகளுக்கு அவரை ஒரு ரூபாய் கூடச் செலவு செய்ய அனுமதிப்பதில்லை. அப்படி ஒரு கோவம்… பிடிவாதம்… வீம்பு… வைராக்கியம்…

இது கௌசல்யாவின் தனிப்பட்ட குணம் அல்ல… அவளுடைய பிறந்த வீட்டு மனிதர்களின் ரத்தத்தில் ஊறிய குணம். பிறவிக் குணத்தைக் கடவுளால் கூட மாற்ற முடியாது. அப்படியிருக்க வீரராகவன் என்ன செய்துவிட முடியும்…? உள்ளுக்குள் மருகுவதைத் தவிர…

பள்ளிப்படிப்பைக் கூடத் தாண்டாத கௌசல்யா, தன் தேவைகளைச் சமாளிக்க மண்ணைக் கொத்தித் தோட்டம் போட்டாள். அது அவளது தேவைகளையும் பூர்த்திச் செய்து… சிறிய அளவில் சேமிப்பையும் கொடுத்தது.

தோட்ட வேலை கடினமானது என்றாலும், தன்னால் யார் தயவும் இன்றிச் சொந்தக்காலில் நிற்க முடிகிறது என்கிற அளவில் அவள் திருப்தியாக இருந்தாள். ஆனால் அவளுக்குத் திருப்தியை அளித்த அதே விஷயம் வீரராகவனுக்கு அதிருப்தியை அளித்தது. தன் சக்திக்கு மீறிய உழைப்பால் அவளுடைய உடல் பலகீனப்பட்டுக் கொண்டிருப்பதை ஒரு மருத்துவராக அவர் உணர்ந்தாலும், எதுவும் செய்ய முடியாமல் வருத்தத்துடன் மௌனியானார்.

தேனி மாவட்டம் லக்ஷ்மிபுரத்தில் பிறந்த கௌசல்யாவும், காம்காபட்டியைச் சேர்ந்த வீரராகவனும் பள்ளிப்படிப்பை லக்ஷ்மிபுரத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போதே வீரராகவனுக்கு கெளசல்யாவிடம் இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது. அது என்னவென்று அவர் புரிந்துகொள்வதற்கு முன்பே பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவம் படிக்க சென்னைக்குச் சென்றுவிட… கௌசல்யா குடும்பச் சூழ்நிலைக் காரணமாகப் படிப்பை நிறுத்திவிட்டு, திராட்சைத் தோட்டத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டாள். அதன்பிறகு வீரராகவன் கௌசல்யாவைப் பற்றி அதிகம் நினைக்கவில்லை. அவர் படிப்பை முடித்து லக்ஷ்மிபுரத்தில் ஒரு சாதாரண மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கௌசல்யாவை அந்த மருத்துவமனையில் தான் சந்தித்தார். அவள் தன் தந்தையின் எதிர்பாராத மரணத்தில் கலங்கிப் போய் நின்றாள். அருகில் அவளுடைய அம்மா அழுது புரண்டு கொண்டிருந்தாள். அவளுடைய எட்டு வயது தம்பி பயத்தில் நடுங்கியபடி தமக்கையின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு நின்றான்.

அந்த நிமிடமே கெளசல்யாவிடம் இருந்த ஏதோ ஒன்று அவரைத் தலைக்குப்புற வீழ்த்தியது. வலியச் சென்று அவளுக்கு உதவினார். பழைய நட்பு மீண்டும் உயிர் பெற்றது… நட்பு காதலாக மலர்ந்தது… காதல் கல்யாணத்தில் முடிந்தது.

திருமணத்திற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் சொர்கமாகக் கழிந்தன… அதன்பிறகுதான் அவருக்குப் பேய் பிடித்துக் கொண்டது. தன் வாழ்க்கையைத் தானே சிக்கலாக்கிக் கொண்டார். அதை அவிழ்கும் வழி தெரியாமல், இன்று வரை விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார்.

வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டுத் தன் சிந்தனைகளிலிருந்து விடுபட்டவரின் முகம் மலர்ந்தது.

“மது கண்ணா… வாடா… வாடா… வாடா…” உற்சாகமாக மகளை வரவேற்றார்.

“குட் ஈவ்னிங் பா…” மலர்ந்த முகத்துடன் தந்தைக்கு மாலை வணக்கம் சொன்ன மதுமதி, தன்னைச் சுமந்து வந்த ஆக்டிவா வண்டியை அதனிடத்தில் விட்டுவிட்டு, தந்தையிடம் திரும்பி வந்தாள்.

“என்னப்பா… தோட்டத்துல உக்காந்துட்டீங்க…?”

“சும்மாதான்டா… காத்துக்காக வந்தேன்…”

“காப்பி சாப்பிட்டாச்சா…?” மது அக்கறையாக விசாரிக்க, அவர் காலிக் கோப்பையைக் கைகாட்டினார்.

“ஓ… முடிஞ்சதா… சரிப்பா நான் உள்ளே போறேன்…” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் போக எத்தனித்த மகளை,

“இரும்மா… என்ன அவசரம்… இப்படி உட்காரு…” என்று சொல்லி அருகில் அமர்த்திக் கொண்டு,

“அப்புறம்… இன்னிக்கு காலேஜ் எப்படிப் போனது…?” என்று பேச்சுக் கொடுத்தார்.

மதுவிற்கு அவரைப் பார்க்க இரக்கம் சுரந்தது. ‘பாவம் அப்பா… பேசுவதற்கு ஆள் கிடைக்காமல் தவித்திருந்திருக்கிறார். அதனால்தான் நான் வந்ததும் கதைப் பேச முனைகிறார்…’ மனதிற்குள் தந்தைக்காக வருந்தியவள்

“ம்ம்ம்… எப்பவும் போலதான்… பிரியதர்ஷினி தெரியும்தானே… என்னோட ஃபிரன்ட்… அவளோட அப்பாவுக்கு பெங்களூருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிடுச்சாம்… அதனால இவளும் இந்த வருஷம் அங்க வேற ஏதாவது காலேஜ்ல சேரப் போறாளாம்…” என்று தந்தையிடம் பேச்சை வளர்த்தாள்.

இப்படியே தந்தையும் மகளும் அடுத்த அரை மணிநேரம் ஊர் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு அவரே,

“சரிம்மா… காலேஜ்லேருந்து வந்து நீ இன்னும் எதுவுமே சாப்பிடல… போயி முகம் கால் கை கழுவிட்டு ஏதாவது சாப்பிடு…” என்று அனுப்பி வைத்தார்.

மதுமதி வீட்டிற்குள் நுழையும் போது, வீடு படு அமைதியாக இருந்தது… எப்பொழுதுமே அப்படித்தான் இருக்கும். மற்றவர்களின் வீடுகளைப் போல் தன்னுடைய வீடும் கலகலப்பாக இல்லை என்பதில் மதுமதிக்கு ஆழ்ந்த வருத்தம் உண்டு. வீட்டில் இருப்பதே மூன்று பேர். அதில் இரண்டு பேர் ஒருவரோடு ஒருவர் பேசாமல் இருந்தால் வீட்டில் கலகலப்பு எப்படி வரும்…? முக்கியமாக, குடும்பத்தில் அனைவரையும் ஆதரித்து அரவணைக்க வேண்டிய குடும்பத் தலைவியே முறுக்கிக் கொண்டு போனால்… அந்தக் குடும்பத்தில் நிம்மதி எப்படி இருக்கும்…?

அன்றிரவு படுக்கையில் சாய்ந்த போது, மதுமதிக்கு அவ்வப்போது தோன்றும் சந்தேகம் தோன்றியது… ‘அம்மா ஏன் இவ்வளவு பிடிவாதமாக அப்பாவை அந்நியப்படுத்த வேண்டும்…! கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமே…!’ அவள் மனம் அன்னையைக் குற்றம் சொன்னது.

அவளுக்குத் தன் பெற்றோருக்கு இடையில் ஏதோ பெரிய பிரச்சனை இருக்கிறது என்பது தெரிந்திருந்தது. ஆனால் அது என்னவென்று புரியவில்லை. அவளுக்கு எட்டு வயதிருக்கும் போது, அம்மா சில நாட்கள் அதிகமாக அழுது கொண்டே இருந்தது ஞாபகம் இருக்கிறது. அவ்வப்போது அப்பாவிடம் சண்டைப் போட்டது கூட நினைவிருக்கிறது… ஆனால் என்ன பிரச்சனை என்று தெளிவாகத் தெரியவில்லை. அதைப் பற்றிப் பெற்றவர்களிடம் பேசவும் தயக்கமாக இருக்கிறது… அது அவர்களுடைய அந்தரங்கம்.

ஆனால் அவர்களுடைய பிரச்சனைத் தீர்ந்து, வீட்டில் மகிழ்ச்சி திரும்பினால்… அவளுக்கு அதைவிட சந்தோசம் எதுவும் இருக்க முடியாது. அவர்களுடைய பிரச்னையைத் தீர்க்க, அவளுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதற்காக எதையும் செய்வாள்.

# # #

அதிகாலை ஐந்தரை மணி… கீழ்வானம் பளபளவென்று விடிந்து கொண்டிருந்தது. தேனியில் உள்ள பெரிய விளையாட்டு மைதானத்தில் அங்கொருவர் இங்கொருவராக நடை பயின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவராக தர்மராஜ் கைகளை வீசி வேகமாக நடந்து கொண்டிருந்தார்.

அவருக்குப் பின்னால்… அவரை நோக்கி வெள்ளை நிற மாருதி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதைக் கவனிக்காதவர், நடைபயிற்சியில் முழுக் கவனமாக இருந்தார். கார் அவருக்கு அருகில் நெருங்கிவிட்டது. ‘ஹெட் லைட்’ வெளிச்சத்தால் சுதாரித்தவர், திரும்பிப் பார்த்தார்… கார் அவருக்கு மிக அருகில் நெருங்கியிருந்தது. அவர் ஒதுங்க நினைத்தார்… நினைத்ததைச் செயல்படுத்துவதற்குள் கார் அவர் மீது மோதிவிட்டது. மோதிய கார் நிற்காமல் கால் மீது ஏறி இறங்கவும் செய்தது. பயங்கரச் சத்தத்துடன் மயக்கமானார் தர்மராஜ். அடுத்தச் சில நிமிடங்களில், மைதானத்தில் இருந்தவர்கள் அந்தக் காரையும் அவரையும் சுற்றி வளைத்துக் கூடிவிட்டார்கள்.
1 Comment