கவியோ! அமுதோ!
4190
3
பூவரசங்குறிச்சி – அழகிய கிராமம்
அத்தியாயம் -1
காவிரி டெல்டா பகுதியின் கடைகோடி கிராமம் அது – பூவரசங்குறிச்சி. காணுமிடமெல்லாம் கதிர் அறுக்கப்பட்ட விளைநிலங்கள் மூளியாய் காட்சியளித்தன. இந்த வருடம் ஆற்றுப் பாசனம் முதல் போகத்திற்கே போதவில்லை என்பதால் இரண்டாம் போகம் நடவு நடாமல் தரிசாய் கிடக்கும் வயல்வெளியில் ஆடு மாடுகள் மேய்ந்துக் கொண்டிருந்தன. அந்த விவசாய பூமியைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து ஓடியது ஒரு கரும் தார் சாலை. அதில் ஆறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தால் ஊரின் குடியிருப்புப் பகுதியை அடையலாம்.
“ஆத்துல தண்ணி நின்னு போச்சு. மழையும் பேயல. காத்துக் கூட அனலா அடிக்குது. பூமி வறண்டுப் போயிக் கெடக்கு. ஒரு மழை பேஞ்சா நல்லா இருக்கும்ல” – படித்துக் கொண்டிருந்த செய்தித் தாளிலிருந்து பார்வையைத் திருப்பாமல் கேட்ட பழனியப்பன் முன் அறுபதுகளில் இருந்தார்.
நெடுநேரமாகியும் தன்னுடையக் கேள்விக்கு பதில் வராததால் தலையை நிமிர்த்திப் பார்த்தார். மஞ்சள் குளித்து நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமமிட்டு மங்களகரமாய் அவர் முன் நின்றாள் பவானி. கருங்கூந்தலின் இடையே அங்கும் இங்கும் எட்டிப் பார்க்கும் நரைமுடியை மறைக்காமல் சீவிக் கொண்டையிட்டு, அதில் ஒரு துண்டு மல்லிகை பூவை செருகியிருந்தாள். மின்னும் வெள்ளைக் கல் பதித்த கோஸ் மூக்குத்தி அவள் அழகிற்கு அழகு சேர்த்தது.
“என்ன பவானி. ஒண்ணும் பேசாம நிக்கிற?” – அன்பொழுகக் கேட்டார்.
“ஒண்ணும் இல்ல…” – காபி டம்ளரை கணவன் முன் நீட்டியவளின் கண்களில் தெரிந்த கலக்கத்தை அப்போதுதான் கவனித்தார்.
“என்னம்மா? ஏன் ஒருமாதிரி இருக்க?”
“நா பெத்த புள்ளையோட வாழ்க்க இங்க வறண்டு போயி கெடக்கு. நீங்க பூமியோட வறட்சியை பத்தி கவலைப்பட்டுகிட்டு இருக்கீங்க” – குற்றம் சாட்டினாள்.
“பவானி!” – ‘எனக்கு மட்டும் அந்த கவலை இல்லையா’ என்றது அவருடைய அதிர்ந்த குரல். பதில் பேசமுடியாமல் தலைகுனிந்தவள் கணவனை சமாதானம் செய்யும் விதமாக “சரி… காப்பிய குடிங்க” என்று டம்ளரை அவர் கையில் திணித்தாள்.
கண்ணாடியை கழட்டி தான் அமர்ந்திருக்கும் ஊஞ்சலிலேயே ஒரு பக்கமாக வைத்துவிட்டு, மீண்டும் மனைவியின் முகம் பார்த்தார். அவரை புண்படுத்திவிட்டோம் என்று அவளுக்கு தோன்றியது.
“குடிங்கங்க…” ஆதரவுடன் மீண்டும் கூறினாள். அவர் ஒரு பெருமூச்சுடன் காபியை குடித்து முடித்தார்.
“தேன்மொழிய கூப்பிட்டு பேசலாங்க. உங்க பேச்சுக்கு அவ என்ன மறுப்பு சொல்லப் போறா?”
அவர் மீண்டும் மனைவி மீது ஒரு ஆச்சர்யப் பார்வையை வீசினார். “என்ன சொல்ற பவானி நீ?”
“தேன்மொழிய கூப்பிட்டு காதம்பரிய பொண்ணு கேளுங்கன்னு சொல்றேன்”
“அப்போ மீராவோட கதி?”
பவானி ஓரிரு நொடிகள் அமைதியாக இருந்தாள். பிறகு, “கதிர்வேலு மீராவ கட்டிக்கமாட்டான். அப்படியே அவன் கட்டிக்க சம்மதிச்சாலும் அண்ணன் விடமாட்டார். போகாத ஊருக்கு வழி தேடாம, ஆகர கதையை பேசுங்க”
“அதுக்காக மீராவ அப்படியே விட்டுட முடியுமா. அவளோட வாழ்க்கைக்கு நாமதான் பொறுப்பு. அத மறந்துட்டு பேசுறியேம்மா” – எடுத்துக் கூறினார்.
“என்ன செய்ய போறீங்க?”
“கதிரு நல்லவன் பவானி. அவன் மீராவ கைவிட மாட்டான். நா பேசுறேன் அவன்கிட்ட”
“நீங்களா!” – அச்சத்துடன் கேட்டாள்
“ஏன்?”
“உங்கள எதாவது எடுத்தெறிஞ்சு பேசுவான். எதுக்கு?”
“அவன் நம்ம புள்ளம்மா. பேசுனா பேசிட்டு போறான். புள்ளைங்களுக்கு நல்லது-கெட்டத எடுத்து சொல்றது பெத்தவங்களோட கடமை. அதை நாம எப்பவும் சரியா செய்யணும் பவானி”
பவானி கலங்கிய கண்களுடன் மேலும் கீழும் தலையை அசைத்தாள். “நீங்க சொல்றதும் சரிதாங்க. அவன் நல்ல மனநிலையில இருக்குற நேரமா பார்த்து பேசுங்க” – கணவனுக்கு அவமானம் நேர்ந்துவிடக் கூடாதே என்கிற கூடுதல் கவலையும் வந்து சேர்ந்தது அவளுக்கு.
####
வழக்கமாக சரியாக பத்து மணிக்கெல்லாம் கட்டையை நீட்டிவிடும் பழனியப்பன் இன்று பதினொரு மணியாகியும் படுக்கச் செல்லாமல் கையில் ஒரு புத்தகத்துடன் தாழ்வாரத்திலேயே அமர்ந்துவிட்டார். சற்று நேரத்தில் ஒரு டிவிஎஸ் எக்ஸ்-எல் வண்டி வந்து வாசலில் நின்றது. அதை ஓரமாக தள்ளி வைத்துவிட்டு உள்ளே வந்தார் அரசப்பன்.
“என்ன மாப்ள, இன்னும் தூங்கலையா?”
“இல்ல, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”
“என்ன விஷயமா?”
“அது… கதிரு கல்யாண விஷயமாத்தான்” – சற்று தயக்கத்துடன் கூறினார்.
அரசப்பனின் முகம் பயங்கரமாக மாறியது. “ஏம்மாப்ள…? எம்மருமகன அவமானப்படுத்தி பாக்குறதுல அப்புடி என்னங்க உங்களுக்கு சந்தோஷம்?” – சுருக்கென்று கேட்டார்.
பழனியப்பனின் முகம் அவமானத்தில் கன்றிப் போனது. அதை திருப்தியுடன் பார்த்த அரசப்பன், “உங்க சங்காத்தமே வேண்டாம்னுதானே அவன் ஒதுங்கிப் போயிட்டான். இன்னமும் எதுக்கு அவன தொறத்துறீய? எம்மருமவனுக்கு நல்லது-கெட்டது பண்ண, மாமங்காரன் நா இருக்கேன். நீங்க உங்க ஜோலிய பாருங்க போதும்” என்று வெடுவெடுத்தார்.
“என்னங்க மச்சான் இப்புடி எடுத்தெறிஞ்சு பேசுறீய?”
“வேற எப்புடிங்க பேசணும்? நீங்களும் உங்க குடும்பமும் சேந்து எம்மருமவனுக்கு செஞ்ச துரோகத்துக்கு வேற எப்புடி பேசணுங்கிறீய? கல்யாணம் பேச வந்துட்டீயலோ கல்யாணம்?” – துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு அங்கிருந்துச் சென்றார்.
பெருமூச்சு விட்டு தன் மனதை அமைதிப் படுத்திய பழனியப்பன், ‘கடல் மாதிரி இங்க வீடு இருக்கையில, இப்படி கொல்லக்காட்டுல கேடக்குரானே. யாரு என்ன சொன்னாலும் இந்த வருஷம் அவனுக்கு கல்யாணத்த பண்ணிட்டுத்தான் மறுவேல…’ என்று தன்னுடைய அவமானத்தைப் புறந்தள்ளிவிட்டு மகனைப் பற்றியே கவலைப்பட்டார்.
“என்ன ஆச்சு? ஏன் இப்படி நிக்கிறிங்க?” – அப்போதுதான் உள்ளேயிருந்து வெளியே வந்தாள் பவானி.
“இல்ல… ஒண்ணும் இல்ல… நீ இன்னும் படுக்கல?”
“இல்லங்க, இப்பதான் அடுப்படி வேலையெல்லாம் முடிஞ்சுது” என்றபடி வாசல் பக்கம் பார்வையை திருப்பியவள் அங்கே நின்ற எக்ஸ்-எல் வண்டியைப் பார்த்துவிட்டு “அண்ணன் வந்துட்டாரா?” என்றாள்.
“ம்ம்ம்” அவருக்கு குரல் வெளியே எழும்பவில்லை.
கணவனின் இறுகிய முகத்தை கவனித்தவள் “அவருகிட்ட எதுவும் கேட்டிங்களா?” என்றாள்.
“இல்லல்ல…” – அவசரமாக மறுத்தார்.
அவருடைய முகத்தை ஊன்றி ஆழமாகப் பார்த்த பவனி, “சரி, நீங்க போயிப் படுங்க. நா இதோ வர்றேன்” என்று அண்ணனின் அறை பக்கம் செல்ல எத்தனித்தாள்.
“பவானி” பழனியப்பனின் குரல் அவளைத் தடுத்தது. நின்று திரும்பிப் பார்த்தாள்.
“மச்சானுக்கிட்ட எதையும் கேட்டுக்காத” என்றார். கணவனின் மனப்பக்குவத்தை கண்டு அவள் மனம் பெருமைக் கொண்டாலும் முகத்தில் ஒரு சோகப் புன்னகையே வெளிப்பட்டது. “சாப்பிட வாராரான்னு கேக்கப் போறேங்க” என்றாள்.
அவர் ஆமோதிப்பாகத் தலையை அசைத்து ‘சரி போ…’ என்றார்.
பவானி அரசப்பனின் அறைக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை. கொல்லைப் புறத்திலிருந்து உள்ளே வந்துக் கொண்டிருந்தார். முகம் கை கால் கழுவிவிட்டு வருகிறார் என்பது தெரிந்தது.
“சாப்பிடுறீயாண்ணே?”
“நடு ராத்திரியில என்ன சாப்பாடு. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்” என்று எரிந்து விழுந்தார்.
“கதிரு எப்புடி இருக்கான்?” அக்கறையாகத்தான் கேட்டாள். ஆனால் அவருக்கோ ஏகத்திற்கும் கோபம் வந்தது.
“அவந்தான் போன் வச்சிருக்கன்ல… நம்பர போட்டுக் கேக்குறது. எதுக்கு புருஷனும் பொண்டாட்டியும் என்னைய கொடையிறீய?” என்று கடுப்படித்தார்.
பவானியின் முகம் விழுந்துவிட்டது. இப்படித்தான் அவரிடமும் பேசியிருப்பார் என்கிற நினைவில் அவள் மனம் துக்கம் கொண்டது.
‘என்ன வாழ்க்கை இது? பெற்ற மகனை கண்ணால் பார்க்கக் கூட முடியவில்லை. கூடப் பிறந்தவனோ தேளாய் கொட்டுகிறான்’ – துக்கம் தொண்டையை அடைத்தது. அழுதுவிடக் கூடாதே என்று ஆத்திரத்தை விழுங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
3 Comments
When will the story continue mam?
Hi mam
யார் அந்த கதிர்,எதற்காக மீனாவை திருமணம் செய்ய மறுக்கணும்.
நன்றி
அடடே… கவியோ அமுதோ இப்பதான் படிக்க ஸ்டார்ட் பண்ணியிருக்கீங்களா? தேங்க் யு மீ டியர் ஃப்ரண்ட்…. உங்களுக்காகவே இந்த ஸ்டோரி அப்டேட் பண்ணனும்னு தோணுது…. கண்டிப்பா ரெகுலர் அப்டேட் கொடுக்கறேன். தொடர்ந்து படிங்க…