பூக்காரி
3685
3
தஞ்சாவூர் பக்கம் உள்ள கட்டக்குடி என்னும் குக்கிராமம் அது… ஊரின் மையத்திலிருக்கும் அம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை ஆரம்பித்துவிட்டது. அந்த ஊர் செல்வந்தரின் மகள் தீபா, அவசரவசரமாக… பட்டுப்பாவாடை தாவணி சரசரக்க, வெள்ளிக் கொலுசுகள் கலகலக்க புள்ளிமான் போல் சந்நிதிக்கு ஓடிவந்தாள். கூட்டம் அதிகமாக இருந்தது. ஐயர் அம்மனுக்கு தீபாராதனை காட்டிக் கொண்டிருந்தார்.
‘அம்மாவே! தாயே!’ – கைகூப்பி கண்களை மூடி அம்மனை மனதில் நிறுத்தினாள் தீபா.
“பூஜ முடிய போகுதா! லேட்டாயிடிச்சா?” – கரகரப்பான பெண் குரல் அவள் செவியை கிழிக்க கண்களை திறந்து வாசல்பக்கம் பார்த்தாள். மங்கை உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தாள்.
மங்கை அந்த ஊர் சலவைத்தொழிலாளியின் மகள். அவளுக்கு வலது காது கேட்காது. இடதுகாதும் சற்று மந்தமாகத்தான் கேட்கும். அதனால்தானோ என்னவோ அவள் சாதாரணமாக பேசும் பொழுதே ‘லௌட் ஸ்பீக்கரை’ தொண்டையில் கட்டிக் கொண்டது போல் சத்தமாகத்தான் பேசுவாள். உடலில் இருந்த ஊனம் காரணமாக சிறு வயதிலேயே, பக்கத்து டவுனில் ‘டோபி’ கடை வைத்திருக்கும் பரமசிவத்திற்கு இரண்டாம் தாரமாக மணமுடித்துக் கொடுத்துவிட்டார்கள். மூன்றே வருடத்தில் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகிவிட்டாள்.
இப்போது சின்னவனுக்கு ஒரு வயதிருக்கலாம். சர்க்கரை வியாதியை சட்டை செய்யாமல் தொடர்ந்து மது அருந்தியதால் பரமசிவம் இரண்டு மாதங்களுக்கு முன் பரலோகம் சென்றுவிட்டான். நிர்கதியாய் நின்ற மங்கை இரண்டு குழந்தைகளையும் கையில் பிடித்துக் கொண்டு, தாய் வீட்டில் தஞ்சம் புகுந்துவிட்டாள். இருபத்தைந்து வயதுக் கூட இருக்காது. அதற்குள் வாழ்க்கைத் துணையை இழந்துவிட்டு தனிமரமாக தாய்வீட்டிற்கு வந்துவிட்ட இந்த பெண்ணுக்காக கட்டக்குடி கிராமமே அனுதாபப்பட்டது. தீபாவுக்கும் அதே உணர்வுதான்.
‘பாவம்…!’ – கருணையோடு அவளை பார்த்து புன்னகைத்தாள்.
அம்மனுக்குக் காட்டிய தீபாராதனையை பக்தர்களுக்குக் கொடுத்த புரோகிதர், குங்குமம் மற்றும் புஷ்பத்தை அனைவருக்கும் பிரசாதமாகக் கொடுத்தார். மங்கைக்கும் கொடுத்தார்.
அவர் கொடுத்த குங்குமத்தையும் புஷ்பத்தையும் தயங்காமல் வாங்கிக் கொண்ட மங்கை, குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு பூவை கொண்டையில் செருகிக் கொண்டாள். அதிர்ந்து போனாள் தீபா.
‘ஐயோ! என்னவாயிற்று இவளுக்கு! கணவனை இழந்த துக்கத்தில் மூளை குழம்பிவிடதா! இவ்வாறு செய்துவிட்டாளே! யாரேனும் பார்த்துவிட்டால் என்னவாகும்! கடவுளே!’ – தீபா பதட்டத்துடன் சுற்றிமுற்றிப் பார்த்தாள். நல்லவேளை… யாரும் மங்கையை கவனிக்கவில்லை. அனைவரும் அம்மனின் சிறப்பு அலங்காரத்தில் லயித்திருந்தார்கள். தீபா சைகையில் அவள் நெற்றிக் குங்குமத்தை அழிக்கும்படிக் கூறினாள். மங்கை அதை கண்டுக்கொள்ளவில்லை.
‘லூசு… அப்படியே பேக்குமாதிரி நிக்குது பாரு…’ எரிச்சலுடன் முனுமுனுத்தவள் “மங்கை… உன் தலையில பூ இருக்கு…” என்றாள் மெல்லமாக.
அவளுக்குத் தான் காது மந்தமாயிற்றே. “என்ன?” என்றாள் சத்தம் போட்டு. அனைவரும் மங்கையை திரும்பிப் பார்த்தார்கள். அவளோ தீபாவின் வாயைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த சூழ்நிலையில் அவளால் என்ன சொல்ல முடியும்? எதுவும் இல்லை என்று தலையை குறுக்காக ஆட்டினாள்.
‘போச்சு… எல்லாரும் பார்த்துட்டாங்க. ஆளாளுக்கு எதாச்சும் சொல்லப் போறாங்க… வாங்கிக்கட்டிக்கிட்டு அழுதுக்கிட்டே போகப்போறா…’ – தீபாவின் பதட்டம் அதிகமானது.
ஓரிரு நிமிடங்கள் மங்கையையும் தீபாவையும் மாற்றி மாற்றி பார்த்த கிராமவாசிகளின் கவனம் மீண்டும் கருவறை பக்கம் திரும்பியது. தான் பயந்தபடி எதுவும் நடக்காததைக் கண்டு வியந்த தீபா, ‘நல்லகாலம்… இவள் செய்துவைத்திருக்கும் அபச்சாரத்தை யாரும் கவனிக்கவில்லை’ என்று எண்ணி, அம்மன் பக்கம் திரும்பி நன்றி கூறினாள். அங்கிருந்த கூட்டம் கலைந்தது. கூட்டத்திற்குள் மங்கையும் கலந்துவிட்டாள். அவளிடம் தனிமையில் பேசலாம் என்று நினைத்து தேடிப்பார்த்த தீபாவிற்கு ஏமாற்றம்தான் கிட்டியது.
இந்த சம்பவம் நடந்த இரண்டாவது வாரத்தில் ஒருமுறை தீபா, அவளை சாலையில் பார்த்தாள். அப்போது, நெருக்கக்கட்டிய மல்லிச்சரம் ஒன்று அவள் கூந்தலை அலங்கரித்திருந்தது. இன்னொருமுறை கூட அவளை தலையில் பூவோடுதான் தெருவில் பார்த்தாள் தீபா. ஆச்சர்யமாக இருந்தது. அன்று கோவிலில் அவள் மனக்குழப்பத்தில் அவ்வாறு செய்யவில்லை என்பதை புரிந்துக் கொண்டாள்.
‘இது நகரமல்ல… கிராமம். அதிலும் வளர்ச்சியடையாத குக்கிராமம். இங்கு நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கத்தை முறிப்பதற்கு அசாத்திய தைரியம் வேண்டும். எப்படி இவளுக்கு அந்த தைரியம் வந்தது!’ – வியப்புடன் மங்கையை பார்த்தாள். அவள் நடையில் ஒரு நிமிர்வு தெரிந்தது.
‘இவளை பற்றி நம்ம ஜனங்க என்ன பேசிக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கணும்!’ – ஆர்வப்பட்டாள்.
சலவைக்கு துணிக் கொடுக்க வேண்டும் என்றுக் கூறி தாயை அழைத்துக் கொண்டு, மங்கையின் குடும்பம் குடிசைப்போட்டுக் கொண்டு வசிக்கும் ஆற்றங்கரைக்குச் சென்றாள்.
“இன்னாம்மா வோணும்?” – மங்கையின் தந்தை விசாரித்தார்.
“சலவைக்கு துணி கொண்டு வந்திருக்கோம்”
“கொண்டா இப்டி… எத்தன உருப்படி?”
“ஏழு இருக்கு”
“ஒண்ணு, ரெண்டு, மூணு…” அழுக்குத் துணிகளை பிரித்து எண்ணினார்.
“உம்பொண்ண படிக்க வைக்காம அவ வாழ்க்கைய இப்படி வீணாக்கிட்டியே முனுசாமி!” – தீபாவின் தாய் கேட்டாள்.
“இன்னாம்மா பண்றது? அது தலையெழுத்து அவ்ளோதான்… நம்ம கையில இன்னா இருக்கு சொல்லு”
“அத சொல்லு… ஆமா… எங்க இப்ப அவ?”
“ஆத்தகர புள்ளையார் கோயில்ல பூக்கட்டி விக்குது. இப்ப அங்கதான் குந்தியிருக்கும்”
தாயும் மகளும் அங்கிருந்து புறப்பட்டார்கள். வழியில் பிள்ளையார் கோவில் வந்தது. விநாயகனை வணங்கிவிட்டுச் செல்லலாம் என்று உள்ளே சென்றார்கள். வாசற்படிக்கு அருகில் மங்கை பூக்கூடையுடன் அமர்ந்திருந்தாள். வழக்கம் போல் தலைநிறைய மல்லிகைப்பூ வைத்திருந்தாள். தீபா அவளிடம் சுவாமிக்கு பூ வாங்கினாள். அம்மா எதுவும் சொல்லவில்லை. விநாயகரை வணங்கிவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் தீபா கேட்டாள்.
“ம்மா… மங்கைய கவனிச்சியா? தலையில பூ…”
“வச்சுக்கிட்டுப் போறா… சின்னக்குட்டி… இந்த வயசுல என்ன சுகத்தைக் கண்டுட்டா? இந்த சந்தோஷத்தையாச்சும் அனுபவிச்சுட்டுப் போறா…” – மகள் கேள்வியை முடிப்பதற்குள் இவள் பதில் சொல்லி முடித்துவிட்டாள்.
அதன் பிறகு அடிக்கடி தீபா ஆற்றங்கரை விநாயகர் கோவிலுக்கு வருவாள். வரும்பொழுதெல்லாம் விநாயகரோடு சேர்த்து மங்கையையும் பார்ப்பாள். அவளுடைய வியாபாரம் சக்கைப் போடுபோடுவதை பார்த்தாலே தெரிந்தது அந்த ஊரில் அவள் தாயை போலவே பலரும் சிந்திக்கிறார்கள் என்பது…
‘நம்மூரு மக்களாச்சே!’ – தீபா பெருமையாக நினைத்துக் கொண்டாள்.
3 Comments
Nalla vishayam….👍
Nice
Test comment…
நன்று…