Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மௌன ராகம்

அவன் மீது அவளுக்கு அக்கறை இல்லை. அவனை நேசிக்கவும் இல்லை… உணர்வுப்பூர்வமாக அவனோடு எந்த பிணைப்பும் இல்லை. உண்மையில் அவர்களுக்குள் இருக்கும் ஒரே தொடர்பு என்னவென்றால், அவள் தன்னுடைய வீட்டை அவனோடு பகிர்ந்துக் கொண்டிருக்கிறாள். இல்லையில்லை… அவன்தான் தன் வீட்டையும் வருமானத்தையும் அவளோடு பகிர்ந்துக் கொண்டிருக்கிறான். உலகத்தைப் பொருத்தவரை அவர்கள் ஒரு ஆத்மார்த்தமான தம்பதி. ஆனால் உண்மையில் அந்நியர்கள்… முற்றிலும் அந்நியர்கள்.

 

அவளுடைய அனைத்து உணர்வுகளும் இறுக்கமாகக் கட்டப்பட்டு இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் வீசி எறியப்பட்டுவிட்டது. அதை எப்போதும் அவள் வெளியே வர அனுமதித்ததில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக அவை அனைத்தும் அவளுடைய கட்டுப்பாட்டை மீறி வெளியேற துடித்துக் கொண்டிருக்கின்றன.

 

“ப்ரீத்தி…” – கார்த்திக்கின் குரல் கேட்டு சிந்தனையிலிருந்து மீண்டு அவன் பக்கம் திரும்பினாள். கையில் ஒரு கோப்புடன் நின்றுக் கொண்டிருந்தான் அவன்.

 

“இந்தா… ரொம்ப நாளா நீ எதிர்ப்பார்த்துட்டு இருந்த ஃபைல்” – அவள் கையில் கோப்பைக் கொடுத்துவிட்டு அலுவலகத்திற்கு விரைந்தான்.

 

திறந்துப் பார்க்காமலே அது என்னவென்று அவளுக்கு புரிந்துவிட்டது. அதோடு அதை திறந்துப் பார்க்கும் தைரியமும் அவளுக்கு இல்லை. எனவே அதை மேஜையில் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, அதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் அங்கிருந்து சென்றுவிட்டாள். அதை பற்றி சிந்திக்கக் கூடாது என்பதற்காகவே அன்று முழுவதும் தன்னை பிஸியாக வைத்திருக்க முயற்சி செய்தாள். ஆனால் பாவம்… செய்வதற்கு வீட்டில் ஒரு வேலையுமே இல்லாத போது அவள் எப்படி பிஸியாக இருக்க முடியும்?

 

கார்த்திக்கின் பெற்றோர் திருமணப் பரிசாகக் கொடுத்த ஒரு பெரிய வீட்டில் தான் அவர்கள் வசித்து வந்தார்கள். அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அந்த வீட்டில் சிறு பூந்தோட்டமும், புல்வெளியும்(லான்) கூட இருந்தது. அவள் மனம் சோர்ந்திருக்கும் பொழுதெல்லாம் அந்த பூக்களோடுதான் நேரத்தைக் கழிப்பாள். அந்த வீட்டில் இரண்டு படுக்கையறை, ஒரு கூடம், சமையலறை, டைனிங் ஹால் மற்றும் பூஜை அறையும் கூட இருந்தது. ப்ரீத்திக்கு உதவி செய்வதற்கு ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்திருந்தான் கார்த்திக். தினமும் வீட்டை கூட்டி பெருக்கி சுத்தம் செய்துவிட்டு, ப்ரீத்தி என்ன சொல்கிறாளோ அந்த உணவை சமைத்தும் வைத்துவிடுவாள் அந்த பெண். அவள் சமைக்கும் உணவு ப்ரீத்திக்கு மட்டும் தான். ஏனென்றால் கார்த்திக் காலையும் மதியமும் அலுவலகத்திலேயே உணவை பார்த்துக்கொள்வான். இரவும் ஏதாவது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவான். அல்லது வாங்கிக் கொண்டு வந்துவிடுவான்.

 

அன்று இரவு கார்த்திக் வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக “அந்த ஃபைலை படிச்சு பார்த்தியா? சைன் பண்ணினியா?” என்றுதான் கேட்டான்.

 

“இல்லை” என்று அவள் பதில் சொன்னாள்.

 

“ஏன்?”

 

“இன்னிக்கு வீட்ல வேலை அதிகம். நாள் முழுக்க ரொம்ப பிஸியா இருந்தேன். டைம் கிடைக்கல….” – பொய் சொன்னாள்.

 

“நீ எதுக்காக எல்லா வேலையையும் செஞ்ச? house maid வரலையா?” – அவனுடைய வார்த்தைகளில் சிறு கவலை தெரிந்தது. அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். அதில் எதை புரிந்துக் கொண்டானோ,

 

“இந்த ஃபைலவிட வேற என்ன உனக்கு முக்கியமா இருக்க முடியும்?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டுவிட்டு படுக்கையறையை நோக்கி சென்றான்.

 

அன்று இரவு அவளால் உறங்க முடியவில்லை. அவள் மனம் முற்றிலும் கலங்கியிருந்தது. இது அவள் விரும்பிக் கேட்ட ஒன்றுதானே! எதற்காக நாம் இவ்வளவு யோசிக்கிறோம் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். இதற்கு முன் அவள் விரும்பிக்கேட்ட ஒன்று இப்போது தேவைப்படவில்லையோ என்று தோன்றியது. சிந்தனைகளோடு உழன்றுக் கொண்டிருந்தவள் எப்போது உறங்கினால் என்றே தெரியவில்லை… காலை ஒன்பது மணிக்குத்தான் எழுந்தாள். வேலைக்காரி அவளுக்காக காலை உணவை தாயார் செய்துவைத்துவிட்டு சென்றுவிட்டாள். ஒரு காபி கப்புடன் கார்த்திக் அவள் அருகில் வந்தான்.

 

“நீ நல்லா தூங்கிட்டு இருந்ததால காபி போடணுமான்னு வேலைக்காரங்க என்கிட்ட கேட்டாங்க. ப்ளாஸ்க் உடைஞ்சிடிச்சுன்னும் சொன்னனாக. அதனால அவங்கள காபி போட வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்று அவளிடம் அந்த காபியைக் கொடுத்தான்.

‘அப்போ இந்த காபி!’ – அவளுக்கு குழப்பமாக இருந்தது.

 

“இது உனக்காக நான் தயாரித்த காபி…”

 

ஒரு மிரடு குடித்துவிட்டு “ரொம்ப நல்லா இருக்கு. முதல் தடவ ட்ரை பண்ணியிருக்கிங்க. இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்கு”

 

“இது முதல் முறையல்ல. இதற்கு முன் மூன்று முறை நான் உனக்காக காபி போட்டிருக்கிறேன்” – அவன் இடையிட்டான்.

 

ஆம். அவன் சொல்வதுதான் சரி. வேலைக்காரி லீவ் எடுத்துக் கொண்ட போதெல்லாம் மேஜையில் காபிநிரைந்த ஃபிளாஸ்க் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் அது எப்படி வந்தது என்பதைப் பற்றி அவள் கவலைப் பட்டதில்லை.

 

“தேங்க் யு கார்த்திக்” என்றாள். அவளுடைய வார்த்தையை காதில் வாங்காமல் “ப்ரீத்தி… அந்த பேப்பர்ஸ்ல சீக்கிரம் சைன் பண்ணிடு” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

‘இந்த கொடுமையை எனக்கு செய்யாதிங்க கார்த்திக்’ – அவள் அழுதாள். கண்களில் நிறைந்த கண்ணீர் கன்னத்தில் உருண்டோடியது.

 

அவள் படுக்கையறைக்கு சென்று அந்த பைலை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். கண்ணீர் நிறைந்திருந்த கண்களுக்கு எந்த வார்த்தைகளும் புலப்படவில்லை… ‘DIVORCE’ என்கிற ஒற்றை வார்த்தையைத் தவிர.

 

இதை பற்றி அவளுக்கு ஏற்கனவே தெரியும் என்றாலும் இப்போது மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

சிறு வயதிலிருந்தே ப்ரீத்திக்கு காதல், கல்யாணம் என்றால் வெறுப்பு. எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் பெற்றோரை பார்த்து வளர்ந்ததின் விளைவு அது. அவள் வளர வளர அவளுடைய பெற்றோரின் சண்டையும் வளர்ந்துக் கொண்டே சென்றது. காதல் மற்றும் திருமணத்தின் மீதான வெறுப்பும் அவளுக்குள் விருட்சமாய் வளர்ந்தது.

 

அதன்பிறகு அவளுக்கு 21 வயதானதும் எல்லா பெற்றோரையும் போல அவளுடைய பெற்றோரும் அவளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். மகளின் விருப்பம் என்ன என்பதை பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. பெற்றோரின் முடிவை எதிர்க்கும் பழக்கம் ப்ரீத்திக்கு இல்லை என்பதால் அவளும் அமைதியாகவே இருந்துவிட்டாள்.

 

ஒரு நாள், அவளுக்கு ஒரு வரன் அமைந்திருக்கிறது என்றும், அவர்கள் அவளை பெண்பார்க்க வருகிறார்கள் என்றும் அம்மா சொன்னாள். ஒரு கவரை கொடுத்து அதை பிரித்துப் பார்க்கும்படிக் கூறினாள். அவளுக்கு புரிந்துவிட்டது. அதில் ஒரு இளைஞனின் ஃபோட்டோ தான் இருக்க வேண்டும்.

 

“பையன் ரொம்ப அழகா இருக்கான். உனக்கு பொருத்தமா இருப்பான்” – அம்மா கூறினாள். ஆனால் அவள் அந்த கவரை பிரித்துப் பார்க்காமலே ஏதோ ஒரு மூலையில் தூக்கியெறிந்துவிட்டாள்.

 

அன்று மாலை மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்தார்கள். அவர்களுக்கு ப்ரீத்தியையும் அவள் குடும்பத்தையும் பிடித்திருந்தது. அந்த மாப்பிள்ளை மட்டும் வரவில்லை. அவன் அன்றுதான் அமெரிக்காவிலிருந்து வந்திருப்பதால் மறுநாள் பெண்ணை பார்க்க வருவான் என்று கூறினார்கள். அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்தார்கள். அவளுடைய கருத்தை யாரும் கேட்கவில்லை.

 

மறுநாள் காலை அவன் வருவதாகக் கூறி அம்மா அவளை தயாராகும்படிக் கூறினாள். லைட் பிங்க் நிற சுடிதார் அணிந்து மிதமான அலங்காரத்துடன் தயாரானாள் ப்ரீத்தி. கார்த்திக் என்கிற அவனுடைய பெயரை தவிர அவனைப் பற்றி அவளுக்கு வேறு எதுவும் தெரியாது.

 

அவன் வந்துவிட்டான். இருவரும் ஹாலில் எதிரெதிர் சேரில் அமர்ந்திருந்தார்கள். எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

 

“ப்ரீத்தி…” – சமையலறையிலிருந்து அம்மா அழைத்தாள். அவள் எழுந்துச் சென்றாள். அவளிடம் காபி ட்ரேயை கொடுத்து மாப்பிள்ளைக்குக் கொடுக்கும்படி சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

“ஆன்டி… உங்க மகளை பக்கத்துல இருக்க காபி ஷாப்புக்கு கூட்டிட்டு போயிட்டு வரலாமா?” – அவளுக்கு பின்னால் வெகு அருகிலிருந்து ஒலித்தது அவன் குரல். அவன் எப்போது அங்கு வந்தான் என்று அவள் குழம்பிக் கொண்டிருக்கும் பொழுதே, பெற்றோர் இருவரும் ஒருசேர, “ஓ… போயிட்டு வாங்க” என்று அனுமதி கொடுத்தார்கள். தன்னுடைய கட்டுப்பட்டியான பெற்றோர் இதற்கு எப்படி சம்மதித்தார்கள் என்று அவளுக்கு அதிர்ச்சியும் குழப்பமுமாக இருந்தது.

 

அவர்கள் ஒரு காபி ஷாப்பிற்கு வந்தார்கள். இரண்டு காபியை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார்கள். அவள் முதல் முறையாக அவனை நிம்ரிந்துப் பார்த்தாள். சுமாரை விட சற்று கூடுதல் அழகாய் இருந்தான். வெய்ட்டர் காபியை பரிமாறினான். அவள் ஒரு மிரடு கூட அருந்தவில்லை. அவனுடைய போன் அடித்தது. அவன் தாய்தான் அழைத்திருந்தாள். எடுத்து, அவளை திருமணம் செய்துக்கொள்ள தனக்கு சம்மதம் என்று கூறினான்.

 

‘நம்மிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் எப்படி இவன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னான்!’ என்று அதிர்ச்சியாக இருந்தது அவளுக்கு. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதிக்காத்தாள். அவன் ‘பில்’லை செலுத்தியதும் இருவரும் காருக்குள் ஏறினார்கள். வீட்டை அடைய சிலமீட்டார் தொலைவுதான் இருந்தது… அப்போது பேசினான் அவன்.

 

“உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு தெரியாது. நானும் உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லமாட்டேன். இந்த சந்திப்பு ஒரு சம்பிரதாயத்துக்காக நடந்ததுதான். உன்னை பார்க்காமலே நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் ஒரு பெண்ணை லவ் பண்ணினேன். அவ என்னை விட்டுட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா. இருந்தாலும் என்னால அவளை மறக்க முடியில. என்னோட அப்பா அம்மாவை நான் காயப்படுத்த விரும்பல. அதனால்தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். அதோடு என்னுடைய கடந்தகாலம் உனக்கு தெரிஞ்சிருக்கணும். கல்யாணத்திற்கு பிறகு என்னால உன்னோடு நெருக்கமா இருக்க முடியாது. நான் எல்லாத்தையும் மறந்துட்டு நார்மல் ஆகறதுக்கு நிறைய டைம் வேணும். இதையெல்லாம் நீ தெரிஞ்சுக்கணும்னு தான் உன்னை மீட் பண்ண வந்தேன்” என்று கூறி முடித்தான்.

 

கார் அவளுடைய வீட்டு வாசலில் வந்து நின்றது. அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல்… அவனை திரும்பியும் பார்க்காமல் அவள் உள்ளே சென்றாள்.

 

விரைவிலேயே திருமணம் முடிந்தது. கார்த்திக் ப்ரீத்தியோடு மும்பைக்கு வந்துவிட்டான். அவர்கள் வசித்த வீட்டை மௌனமே ஆட்சி செய்தது. அவர்களுடைய திருமணம் முடிந்து ஆறுமாத காலம் ஆகிவிட்டது. ஒருவரைப் பற்றி மற்றவருக்கு பெயரைத்தவிர வேறெதுவும் தெரியாது. அனைத்தும் சுமூகமாக சென்றுக் கொண்டிருந்தது… கார்த்திக்கின் ஒன்றுவிட்ட சகோதரனின் திருமண அழைப்பு அவர்களுக்கு வரும் வரையில்…

 

கார்த்திக்கின் குடும்பம் மிகவும் பெரியது. இனிமையானது. கார்த்திக்கின் தந்தை தன் சகோதரர்களோடு சேர்ந்து கட்டுமானத் தொழில் செய்துக் கொண்டிருந்தார். கார்த்திக் ஒருவனுக்கு மட்டும் அந்த தொழிலில் ஈடுபாடு இல்லை. மற்றவர் அனைவரும் ஒரே வீட்டில்தான் வசித்தார்கள். அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ப்ரீத்தியை நேசித்தார்கள். மதித்தார்கள்.

 

அவர்கள் கலந்துக் கொண்ட திருமணம் இனிமையாக முடிந்தது. திருமணத்தன்று இரவு நடந்த ரிசப்ஷனில் தான் அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தை மாற்றிய அந்த சம்பவமும் நடந்தது.

 

அவளுக்கு நடனமாடத் தெரியாது. ஆனால் இளசுகள் கட்டாயப்படுத்தியதால் கார்த்திக்கோடு சேர்ந்து நடனமாடத் துவங்கினாள். அந்த அறையை மங்கலான வெளிச்சமும் இனிய மெல்லிசையும் நிறைத்திருந்தது. அவனுடைய ஒரு கை அவள் இடையை வளைத்துக்கொள்ள, மறு கை அவள் விரல்களோடு பின்னிக் கொண்டன. அவளும் தன் கையை அவன் மீது படரவிட்டாள். இருவரும் இசையின் ரிதத்திற்கு ஏற்ப மெல்ல அசைந்தார்கள். முதலில் இருவருக்கும் சந்கோஜமாகத்தான் இருந்தது. அதிலும் ப்ரீத்திக்கு சொல்ல முடியாத அளவிற்கு கூச்சமாக இருந்தது. ஆனால் எல்லாம் சில நிமிடங்களுக்குத்தான். வெகு விரைவிலேயே அவர்களுக்கு அந்த சூழ்நிலை பழகிவிட்டது. அவன் பார்வை அவள் கண்களுக்குள் ஊடுருவியது. மிகவும் ஆழமாக. அந்த பார்வை அவளிடம் எதையோ சொன்னது. அது என்ன என்பதை அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் உணர்ந்தாள்… இதயம் தித்திக்கும் என்பதை அன்றுதான் அறிந்தாள்.

 

மறுநாளே அவர்கள் மும்பைக்கு வந்துவிட்டார்கள். அன்று ஞாயிற்றுக் கிழமை. அவனுக்கு விடுமுறை நாள். கிரிக்கெட் பார்ப்பதில் பிஸியாக இருந்தான். போன் ரிங் ஆனது. எடுத்துப் பேசினான். அவனுடைய நெருங்கிய நண்பன் ஒருவன் பார்ட்டிக்கு அழைப்பு விடுத்தான். உண்மையில் ப்ரீத்தி மிகவும் சோர்வாக இருந்தாள். அதை அவள் முகம் பிரதிபலித்தது.

 

“உன்னை தொந்தரவு செய்வதற்கு மன்னித்துவிடு ப்ரீத்தி… நீ மிகவும் சோர்வாக இருக்கிறாய். அதை உன் முகமே சொல்கிறது. ஆனால் நாம் இந்த பார்ட்டிக்கு சென்றாக வேண்டும்”

 

“ம்ம்ம்” என்றாள் அவள்.

 

அன்று மாலை, அழகிய ஜமிக்கி வேலைபாடு செய்யப்பட்ட கருநீல நிற அனார்க்கலி சுடிதாரையும் அதற்கு பொருத்தமான அணிகலன்களையும் அணிந்துக் கொண்டு அறையிலிருந்து அவள் வெளியேறியபோது, ஹாலில் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்த கார்த்திக்கின் விழிகள் ஒரு நொடி பிரம்மிப்பில் விரிந்தன.

 

“இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு” என்று பாராட்டினான். அவன் ஆடையை அழகென்றானா அல்லது அவளை அழகென்றானா என்பது விளங்கவில்லை ப்ரீத்திக்கு.

 

“தேங்க்ஸ்…” என்று புன்னகைத்தாள்.

 

ஒரு ஆடம்பரமான ஹோட்டலில் பார்ட்டி ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. கார்த்திக்கின் நண்பர்கள் பலர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். அனைவரும் அவர்களை அன்போடு வரவேற்றார்கள். பலரும் அவளுடைய அழகை பாராட்டினார்கள். கார்த்திக் ஆண்களோடு பேசிக்கொண்டிருக்க இவளை பெண்கள் கூட்டம் சூழ்ந்துக்கொண்டது. கேலியும் கிண்டலுமாக நேரம் கழிந்தது. அப்போது ஒரு பெண் சொன்னாள்… “கார்த்திக் ரொம்ப ஸ்மார்ட் இல்ல…”

 

ப்ரீத்தி கார்த்திக் நின்றுக் கொண்டிருந்த திசையை திரும்பிப்பார்த்தாள். நல்ல உயரம்… கருகருவென்ற கேசம்… அழகான முகம்…. அகன்ற தோள்கள்… துறுதுறுப்பான கண்கள்… ஆண்மையின் கம்பீரம்… எந்த ஒரு பெண்ணுக்கும் அவனை நிச்சயம் பிடிக்கும். இப்போது அவள் கண்களுக்கு அவன் ஆணழகனாக தெரிந்தான். முதல் முறையாக அவனை ரசித்தாள்.

 

விரைவிலேயே பார்ட்டி முடிந்து வீடு திரும்பிவிட்டார்கள். அவளுக்கு உறக்கம் வரவில்லை. ஹாலுக்கு வந்து பார்த்தாள். அவன் ஏதோ ஒரு காமிடி சேனலில் மூழ்கியிருந்தான். அவளும் அங்கே அமர்ந்து சற்று நேரம் நகைச்சுவையை ரசித்து மனம்விட்டு சிரித்தாள். சற்று நேரத்தில் கரன்ட் கட் ஆகிவிட்டது. ப்ரீத்தி மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தாள். காற்றுக்காக ஜன்னல்களை திறந்துவிட்டாள். முழுநிலவின் ஒளி வீட்டிற்குள் ஊடுருவியதும்தான் தெரிந்தது அன்று பௌர்ணமி என்று. இருவரும் வீட்டை ஒட்டியிருக்கும் புல்வெளிக்கு சென்று அருகருகே அமர்ந்து முழுநிலவையும் நட்சத்திரங்களையும் ரசித்துப் பார்த்தார்கள்.

 

“பௌர்ணமி அன்னிக்கு நிலவை ரசிக்கும் பழக்கம் உனக்கும் இருக்கா?” – கார்த்திக் கேட்டான்.

 

“பொர்ணமி அன்னிக்கு மட்டும் இல்ல… ஒவ்வொரு நாளுமே நிலவை ரசிப்பேன். மின்னும் நட்சத்திரங்களை பார்க்கும் பொழுது மனசுல இருக்க கவலையெல்லாம் மறந்துடும்”

 

இருவரும் சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள்.

 

“இன்னிக்கு பார்டி எப்படி இருந்தது ப்ரீத்தி? என்ஜாய் பண்ணுனியா?”

 

“எனக்கு சுத்தமா பிடிக்கல. ஒரே போர்…”

 

“ஆனா மனோஜ் கல்யாணத்தை என்ஜாய் பண்ணின இல்ல…”

 

“ம்ம்ம்… ரொம்ப என்ஜாய் பண்ணினேன். முதல் முறையா நான் ஒரு கல்யாணத்தை என்ஜாய் பண்ணினேன். உங்க குடும்பத்துல எல்லாரும் ரொம்ப கேரிங் அண்ட் அஃபெக்ஷனா இருக்காங்க”

 

“என்னுடைய குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ரீத்தி. அவங்களை வருத்தப்படுத்தறதை நான் எப்பவுமே விரும்பமாட்டேன். ஆனா தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு முறை அதை செஞ்சுட்டேன். அதுக்காக இப்பவும் வேதனைப்படறேன்”

 

அவனுடைய வேதனை எதை பற்றியது என்பது அவள் அறிந்த ஒன்றுதானே! முன்னாள் காதலியை பற்றி வருந்துகிறான் போலும். – அவளுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. அமைதியும் சங்கடப்படுத்தியது. எனவே “மனோஜ் – பவித்ரா ஜோடி ரொம்ப நல்லா இருந்துச்சு இல்ல? அவங்ககிட்ட ஒரு புரிதல் இருந்ததை நான் கவனிச்சேன்” என்றாள்

 

“ம்ம்ம்…. அவங்க மட்டும் இல்ல. எங்க குடும்பத்துல எல்லா ஜோடியுமே ரொம்ப கூல் அண்ட் கியூட் தான். ஈவன்… அம்மா அப்பாவை எடுத்துக்கோ… ரொம்ப சில்லித்தனமா சண்டைப் போட்டுக்குவாங்க. ஆனா ஒவ்வொரு சண்டை முடிவிலேயும் இன்னும் க்ளோஸ் ஆயிடுவாங்க”

 

“சின்ன சண்டைனா பரவால்ல… அதுவே பெருசுன்னா?” – ப்ரீத்தி தன் மனதை திறக்க முயற்சித்தாள். ஆனால் கார்த்திக் பேச்சின் திசையை மாற்றினான்.

 

“வாழ்க்கை இப்படியே போயிட்டு இருக்கக் கூடாது ப்ரீத்தி. இந்த வாழ்க்கை எனக்கு போர் அடிக்குது” – அப்பொழுதுதான் அவளுக்குப் புரிந்தது. எவ்வவளவு மந்தமான வாழ்க்கையை தான் அவனுக்குக் கொடுத்திருக்கிறோம் என்று. மனம் வருந்தினாள்.

 

“இதை சரி பண்ண என்ன செய்யணுமோ செய்யுங்க”

 

“சரி சொல்லு… நான் என்ன செய்யணும்னு நீ நினைக்கிற?”

 

“சுவாரஸ்யம் இல்லாத வாழ்க்கையை உங்களுக்கு கொடுத்தவங்க யாரா இருந்தாலும் அவங்களை விளக்கி நிறுத்தத்துக்க. லவ்வா இருந்தா பிரேக் அப்… நட்பா இருந்தா விலகிடனும்… கல்யாணமா இருந்தா விவாகரத்து…” – அவள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே கரண்ட் வந்துவிட்டது.

 

*********************

 

“ஒருவழியா சைன் பண்ணிட்டியா?” – கார்த்திக் உள்ளே வந்தான். அவள் கையிலிருந்த பேப்பர்ஸை பார்த்துவிட்டு “என்ன ப்ரீத்தி இது…? நீ இன்னும் சைன் பண்ணலையா! ஏன் இவ்வளவு லேட் பண்ணற? சீக்கிரம்…” என்று கூறிவிட்டு ஹாலுக்கு வந்தான். அவளும் அவனை பின்தொடர்ந்து வந்தாள். அவள் கண்களில் கண்ணீர் கசிந்துக் கொண்டிருந்தஹ்டு.

 

“ஓ… ப்ரீத்தி! நீ அழறியா! ஏன்?”

 

“அது.. நான்… என்னோட அப்பா அம்மாவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. நான் அவங்கள ரொம்ப மிஸ் பண்ணறேன்” என்று பொய் உரைத்துவிட்டு அழுதுக் கொண்டே படுக்கையறைக்குள் ஓடி மறைந்தாள். சற்று நேரத்தில் ஹாலிலிருந்து கார்த்திக் அழைக்கும் குரல் கேட்டது. மெத்தையில் கவிழ்ந்தபடி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவள் எழுந்து வந்தாள். அவன் வீடியோ கால் ஏற்பாடு செய்திருந்தான். ப்ரீத்தி தன் பெற்றோருடன் பேசினாள்.

 

மறுநாள் காலை அவள் அவன் கொடுத்த பேப்பரில் கையெழுத்திட தயாராகிவிட்டாள். அதற்கு மேல் அவன் உணர்வுகளை புண்படுத்த அவள் விரும்பவில்லை. அவன்தான் அவளை பிரிவதில் அத்தனை ஆர்வமாக இருக்கிறானே! இனியும் மறுப்பு சொல்வது முறையல்ல. பேனாவைத் திறந்தாள். காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்தாள். கொரியர் மேன் நின்றுக் கொண்டிருந்தான்.

 

“நீங்க தான் ப்ரீத்தியா?” என்றான். அவள் ஆமாம் என்றதும், ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பார்சலைக் கொடுத்துவிட்டுச் சென்றான். அதில் ‘To my dear wife’ என்று எழுதியிருந்தது. வழியும் கண்ணீருடன் அதை பிரித்துப் பார்த்தாள்.

 

உள்ளே ஒரு அழகிய ப்ரேஸ்லெட்டோடு கடிதமும் இருந்தது. அதை பிரித்துப் படித்தாள். அந்த காகிதத்தில் அவன் தன் மன உணர்வுகளை எழுதியிருந்தான். அவன் பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டு இவளுக்காக உருகிக் கொண்டிருக்கிறான். ஆம்… அன்று இரவு இருவரும் இனைந்து நடனமாடும் பொழுது அவன் தன் பார்வையால் அவளுக்கு உணர்த்தியது காதலைத்தானே…! இவள் தான் புரிந்துக்கொள்ளவில்லை. கடவுளே! “ஐ லவ் யு கார்த்திக்” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். ப்ரேஸ்லெட்டை அணிந்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றாள்.

 

“ஹ்ம்ம்…. ஒருவழியா சைன் பண்ணிட்ட போலருக்கு. கொடு” அவளுக்கு முதுகுக்காட்டி நின்றபடி கேட்டான் கார்த்திக். அவன் தோள்தொட்டு தன்புறம் திருப்பி கையிலிருந்த காகிதத்தைக் கொடுத்தாள். “என்ன இது? ஏன் இந்த பேப்பர்ஸை கிழிச்சுட்ட?”

 

“என்கிட்ட ஏன் மறச்சிங்க?”

 

“என்ன! நான் எதை மறச்சேன்?”

 

“உங்க பீலிங்க்ஸ.. உங்க தாட்ஸ… உங்க லவ்வ… ஏன் இப்படி பண்ணுனிங்க கார்த்திக்?” அவன் விழிகளை ஊடுருவியது அவள் பார்வை. அவள் விழியீர்ப்பு விசையிலிருந்து விலகமுடியாமல் சிக்கிக்கொண்டு திணறினான் கார்த்திக்.

 

“நான் ஒத்துக்கறேன் கார்த்திக்.  நா உன்ன லவ் பண்ணறேன். ரொம்ப லவ் பண்ணறேன். நீ நெனச்சு பார்க்க முடியாத அளவுக்கு. எஸ்… ஐ லவ் யு… லவ் யு சோ மச்…” – அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே “ப்…ரீ…த்…தி…” என்று உடைந்துபோய் அவளை இழுத்து அனைத்துக் கொண்டான்.

 

“ஐ லவ் யு ப்ரீத்தி. ஐம் சாரி… நான் உன்ன ரொம்ப கஷ்ட்டப்படுத்திட்டேன். உன்னோட மனச புரிஞ்சுக்க ட்ரை பண்ணவே இல்ல… எக்ஸ்ட்ரீம்லி சாரி டியர்…” – நெற்றியில் இதழ்பதித்து அவள் கண்களில் வழியும் கண்ணீரை தன் விரல்களால் துடைத்துவிட்டான். அப்பொழுதுதான் அவள் கையில் அணிந்திருந்த ப்ரேஸ்லெட்டை பார்த்தான்.

 

“ஹேய்… இது எப்படி!” – ஆச்சர்யப்பட்டான்.

 

“கொரியர் வந்தது. நீங்கதானே அனுப்பியிருந்திங்க”

 

“ஆனா… நான் அதை கான்செல் பண்ணிட்டேனே!”

 

“தெரியில. நான் இந்த பேப்பெர்ஸ் சைன் பண்ண போனேன். காலிங் பெல் அடிச்சது. யாருன்னு பார்த்தேன். கொரியர் மேன் நின்னுட்டு இருந்தாரு” என்று சொல்லிக் கொண்டிருந்தவள் ஏதோ தோன்ற, “ஆமாம்… நீங்க ஏன் அனுப்பின கொரியரை கான்செல் பண்ணுனிங்க?” என்றாள்.

 

“அன்னிக்கு நைட் அந்த பார்ட்டில உன்கூட சேர்ந்து டான்ஸ் பண்ணினேனே…. அன்னிக்குத்தான் எனக்கு புரிஞ்சது ப்ரீத்தி. நா உன்கிட்ட விழுந்துட்டேன். என்னோட வாழ்க்கை… உயிர்… எல்லாமே நீதான்…”

 

அவனுடைய போன் ரிங் ஆனது. எடுத்துப் பேசினான். சாரி சார்… நீங்க அனுப்பின கொரியரை கான்செல் பண்ண முடியல” – கொரியர் ஆபீசிலிருந்து பேசினார்கள்.

 

“ஹேய்…. சாரில்லாம் சொல்லாதீங்க. என்னோட வாழ்க்கையையே காப்பாத்தியிருக்கீங்க. நான்தான் நன்றி சொல்லணும்” – கார்த்திக் நன்றி கூறினான்.

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். அவர்கள் வாழ்க்கையின் புதியதொரு அத்தியாயம் துவங்கியது.

 

– முற்றும் –




8 Comments

  • Gayathri Selvam says:

    Nice story.. Really interesting 👏👏

  • Anandhi Prabhu says:

    Very Romantic

  • Daisy Mary says:

    its very nice… gud….

  • Nataraj Nataraj says:

    Hi Nithya அழகான அமைதியான காதல் ராகம் super

  • Thara V says:

    Very nice story

  • admin says:

    Nice

  • Sasikalamuthukumaraswamy says:

    Hi Nithya mam,
    Short and sweet story. ஒரு முழு நீள நாவல் படித்ததை போல் இருந்தது. இரு கதாப்பாத்திரங்களை கையாண்ட விதம் மிக அருமை. மௌன ராகம் பாகம் 2 😃

    • Nithya Karthigan says:

      ஹேய் சசி… என்ன இது புதுசா மேம்! எப்பவும் போல நித்தி-ன்னு கூப்பிடுங்க ஓகே? ஹும்ம்ம்… மௌன ராகம் பார்ட் 2 தான்… 😀 கொஞ்சம் லேட்டஸ்ட் ட்ரெண்ட்ல… இன்ஸ்பரேஷன்மா… நத்திங் எல்ஸ்… 😉

You cannot copy content of this page