Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 2

அத்தியாயம் – 2

இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று தான் தர்மராஜுக்கு நினைவுத் திரும்பியது. அவர் மெல்லக் கண் விழித்துப் பார்த்தார். அவருக்கு எதிரில் வெள்ளைச் சீருடை அணிந்த செவிலியப் பெண் நின்று கொண்டிருந்தாள்.

 

“குட் மார்னிங் சார்… இப்போ எப்படி இருக்கு…?” என்று முகத்தில் புன்னகையுடன் கேட்டவள், அவர் கையைப் பிடித்து ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தாள்.

 

அவருக்கு மயக்கமடைவதற்கு முன் என்ன நடந்தது என்பதெல்லாம் நினைவுக்கு வந்தன.

 

“ம்ம்ம்… பரவால்ல… ஆனா… நான் இங்க… எப்படி…?” அவர் தீனக்குரலில் கேட்டபடி குழப்பத்துடன் அந்தப் பெண்ணைப் பார்க்க…

 

“உங்களை இங்க கொண்டுவந்து சேர்த்தவர் வெளியே இருக்கார்… வரச் சொல்றேன்… அதுக்கு முன்னாடி நீங்க கொஞ்சம் அசையாம படுத்துக்கோங்க… நான் இந்த ஊசியை மட்டும் போட்டுட்டு போயிடறேன்…” என்றாள் முகத்தில் பூத்திருந்த புன்னகை மாறாமல்.

 

‘அதை நான் கண் முழிக்கிறதுக்கு முன்னாடியே போட்டுத் தொலச்சிருக்கக் கூடாதா…?’ என்று மனதில் நினைத்தபடி பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டு அசையாமல் படுத்திருந்தார் தர்மராஜ்.

 

அவள் ஊசியைப் போட்டு முடித்த பிறகுதான் கவனித்தார்… அவர் அசைய நினைத்தாலும் அவரால் அசைய முடியாதபடி இடுப்பிலிருந்து கணுக்கால் வரை பெரிய கட்டு இரண்டு கால்களிலும் போடப்பட்டிருந்தது.

 

“ஏம்மா… என்னம்மா… என்ன ஆச்சு என் காலுக்கு…?” அவர் பதட்டமாகக் கேட்டார். பதட்டத்தில் அவர் குரல் கூடச் சற்று உயர்ந்திருந்தது.

 

“எலும்பு முறிவு சார்… எப்படியும் ஆறு மாசம் ஆகும், எழுந்து நடக்க…” அந்தப் பெண் ஒரு பெரிய இடியை அவர் தலையில் போட்டுவிட்டுப் போய்விட்டாள்.

 

அந்தப் பெண் சொல்லிவிட்டுச் சென்ற செய்தியை அவர் ஜீரணிப்பதற்கு முன் கார்முகிலன் உள்ளே வந்தான். ஆறடி உயரமும், கம்பீரமான உருவமுமாக நிலைவாசல்படியை அடைத்துக் கொண்டு உள்ளே வருபவனைப் பார்த்தவர், தன் துன்பத்தைக் கூட மறந்துவிட்டு அகமும் முகமும் மலர…

 

“முகிலா… நீயா…? வாடா… வாடா… நீ எப்படிடா…” அவர் கேட்டு முடிப்பதற்குள் அவன் பதில் சொன்னான்.

 

“அன்னிக்கு நானும் வாக்கிங் வந்திருந்தேன். சத்தம் கேட்டுப் பக்கத்துல வந்து பார்த்தா… நீங்க! உடனே இங்க கொண்டு வந்துட்டேன்…”

 

“ஓ… யாருடா அது..? என் மேல யாருக்கு இத்தனை கோபம்…?”

 

“கோபமெல்லாம் ஒண்ணுமில்ல சார்… புதுசா டிரைவிங் கத்துக்கிட்ட சின்னப் பையன்… மோதிட்டான். பதட்டத்துல ஆக்சிலேட்டருக்கும் பிரேக்குக்கும் வித்தியாசம் தெரியாம ஆக்சிலேட்டரை அழுத்திட்டான்… கார் கால்ல ஏறிடுச்சு…”

 

“நல்லா விசாரிச்சியாடா…?”

 

“விசாரிக்காம…! நாந்தான் ஸ்பாட்லயே அவனை மடக்கிட்டேனே. அதுசரி, பின்னாடி வண்டி வர்றது கூடத் தெரியாம… அப்படி என்ன கவனத்துல நீங்க நடந்துகிட்டு இருந்தீங்க…?”

 

“ப்ச்… எல்லாம் என் நேரம்டா…”

 

“சரி சரி விடுங்க… எல்லாம் சரியாகிடும்… வலி இருக்கா…?”

 

“ம்ஹும்… வலியெல்லாம் இல்ல…” அவர் முகம் கவலையைக் காட்டியது.

 

“என்ன ஆச்சு சார்…?”

 

“எப்படிடா சமாளிக்கப் போறேன்…? ரெண்டு காலையும் அசைக்க முடியலையே…” திருமணம் செய்துகொள்ளாமல் தனிக்கட்டையாகக் காலத்தை ஒட்டிக் கொண்டிருந்த தர்மராஜ் கலங்கினார். அவர் கண்களும் கலங்கின…

 

“நான் இருக்கேன் சார்… உங்களை நான் பார்த்துக்க மாட்டேனா…?”

அவர் முகம் தெளிவாகவில்லை.

 

“இன்னும் என்ன சார்…?”

 

“…….” அவர் தலை குனிந்திருந்தபடி மௌனம் சாதித்தார்.

 

“இனி நீங்க என் பொறுப்புன்னு சொல்றேனே… என்னை நீங்க நம்பலையா…?”

அவர் அவனைச் சட்டென நிமிர்ந்து பார்த்தார்.

 

“இதே வார்த்தையை நான் உன்னிடம் ஒருமுறை சொல்லியிருக்கேன். ஞாபகம் இருக்கா…?”

 

அவன் ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தான்.

 

“அப்போ நீ என்ன சொன்ன…? நான் யாருக்கும் பாரமா இருக்க மாட்டேன்னு சொன்னியா இல்லையா…? இப்போ நான் மட்டும் உனக்குப் பாரமா இருக்கலாமா…?”

 

“ப்ச்… இதெல்லாம் ஒரு பேச்சா…? அப்போ உங்களை யாருன்னே எனக்குத் தெரியாது… அதனால அப்படிப் பேசிட்டேன்… ஆனால் இப்போ நான் உங்களுக்கு மகன் மாதிரி இல்லையா… மகனுக்கு அப்பா பாரமாக முடியுமா…!” அவன் அவரை மடக்கிவிட்டான்.

 

கலங்கியிருந்த கண்களிலிருந்து நீர்மணிகள் அந்த முதியவரின் கன்னங்களில் உருண்டன…

 

“நன்றிடா…”

 

அவன் புன்சிரிப்புடன் சொன்னான்… “நன்றி சொல்லி அந்நியப்படுத்தாமல் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுங்க… நான் போய் டாக்டரைப் பார்த்துவிட்டு வர்றேன்…”

 

அவனுடைய கால்கள் மருத்துவரைத் தேடிச் சென்றாலும், சிந்தனைகள் பன்னிரண்டு வருடங்கள் பின்னோக்கிச் சென்றன…

 

அன்று அவன் ஒரு மெக்கானிக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தான். ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து கொண்டிருந்த தர்மராஜ், அவருடைய காரைப் பழுது பார்க்க அங்கு வந்திருந்தார். அந்தக் கடையில், கிட்டத்தட்ட ஆறு ஏழு பேர் கார்முகிலனைப் போல வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்ட தர்மராஜ், கார்முகிலனை மட்டும் அழைத்தார்…

 

“டேய்… தம்பி… இங்க வா…”

 

“என்ன சார்…?” அவன் அவருக்கு அருகில் வந்து கேட்டான்.

அவனுடைய முகத்தைப் பார்த்தார். அந்த முகத்தில் என்ன எழுதியிருந்ததோ…

 

“என்னடா படிச்சிருக்க…?” என்றார் எடுத்த எடுப்பில்.

 

“பன்னிரெண்டாவது சார்…”

 

“பாசா…?”

 

“ம்ம்ம்…”

 

“என்ன மார்க்…?”

 

“1187 ” – அவருடைய முகம் சட்டெனப் பிரகாசமானது… “மாவட்டத்துல நீதானே முதல் மார்க்…?”

 

“ஆமா சார்…”

 

“உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்ததேன்னு நினைத்தேன்டா… உன்னோட ஃபோட்டோ பேப்பர்ல வந்தது… சரிதானே…?”

 

“ஆமாம் சார்…”

 

“மேல ஏன்டா படிக்கல…?” அவர் அக்கறையாகக் கேட்டார்.

 

அவன் முகம் இறுகியது. கோபத்தில் கண்கள் சிவந்தன… நாசி விடைத்தது. அவர் அவனுடைய மாற்றத்தைக் கண்டு துணுக்குற்றார்.

 

“பெத்தவங்க இருக்காங்களா…?” என்றார் நேரடியாக பாயிண்ட்டைப் பிடித்து.

 

“இல்ல…” அவனுடைய கோபம் குறையவில்லை என்பதை அவனது இறுகிய குரலிலிருந்து தெரிந்துகொண்டார்.

 

“படிக்கிற ஆர்வம் உனக்குக் கட்டாயம் இருக்கும்னு நம்புறேன்…”

 

“இருக்கு… ஆர்வம் மட்டும் இருந்து என்ன செய்றது…?” விரக்தியில் தோய்ந்திருந்தது அவனது வார்த்தைகள்.

 

அவனுடைய குரலில் இருந்த விரக்தி அவரைப் பாதித்தது. நன்றாகப் படிக்கக் கூடிய ஒரு மாணவனின் எதிர்காலம் எக்காரணம் கொண்டும் வீணாகக் கூடாது என்று முடிவு செய்துவிட்டார்.

 

“நீ படிக்கிறதுக்கு நான் ஏற்பாடு செய்றேன்… படிக்கிறியா…?”

 

“எப்படி…?” அவன் நம்பாமையுடன் கேட்டான்.

 

“என் சொந்தச் செலவுல நானே படிக்க வைக்கிறேன்…”

 

“……..” அவன் எதுவும் பேசவில்லை.

 

“இனி நீ என் பொறுப்புன்னு சொல்றேனே… என்னை நீ நம்பலையா…?”

 

“நான் யாருக்கும் பாரமா இருக்க மாட்டேன்…” பட்டென்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான்.

 

‘போனா போடா… எனக்கென்ன வந்தது…?’ என்று அவர் விடவில்லை. அவன் மனதில் ஏதோ காயம் ரணமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். அதனால் அதற்குமேல் அன்று அவனிடம் எதுவும் பேசாமல் சென்றுவிட்டு மீண்டும் அடுத்த நாள் வந்தார்…

 

“கார் ரெடியா இருக்கா…?” என்று அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

 

“ரெடியா இருக்குச் சார்…”

 

“உன் பேர் என்னப்பா…? நேத்துக் கேட்காமல் விட்டுட்டேன்…”

 

“கார்முகிலன்…”

 

“ம்ம்ம்… கார்முகிலா… எனக்கு நீ பாரமா இருக்க வேண்டாம். ஆனா உன்ன மாதிரி ஏழைப் பிள்ளைகள் படிக்க பேங்க்ல லோன் தர்றாங்களே… நீ ஏன் முயற்சி செய்யக் கூடாது…?”

 

“முயற்சி செஞ்சா… குடுத்துடுவாங்களா…? செக்கியூரிட்டி கேக்குறாங்களே… அதை யாரு கொடுப்பாங்க…?”

 

“அதை வேணுன்னா நான் கொடுத்துடறேனே… அதுல எனக்கொண்ணும் சிரமம் இல்ல. பேங்க் உனக்கு லோன் கொடுக்கப் போகுது, நீ அதைத் திருப்பிக் கட்டப் போற… எனக்கு ஒரு சிரமமும் இல்ல… என்ன சொல்ற…?” அவர் ஆர்வமாகக் கேட்டார்.

 

படிக்க ஆசையும் திறமையும் இருந்தும், வழியில்லாமல்… தாய் தந்தை இல்லாமல் அனாதையாகத் தெருவில் நின்ற பிள்ளைக்கு, அவர் காட்டிய ஆர்வமும் அக்கறையும் மனதைத் தொட்டது. அவன் கண்கள் கலங்கின…

 

“நன்றி சார்…” குரல் கம்ம மனதார நன்றி சொன்னான்.

 

அந்த ஆண்டே அவன் டிப்ளமோவில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் படித்தான். அடுத்து வேலை பார்த்துக் கொண்டே நேரடியாக இரண்டாம் ஆண்டில் இன்ஜினியரிங் சேர்ந்தான். மூன்று வருடம் அதை முடித்தான். அடுத்துப் பொறியியல் படிப்பிலேயே முதுகலை பட்டம் பயின்றான். தேனியில் ஒரு நல்ல கல்லூரியில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.

 

நல்ல சம்பளம்… வளமான வாழ்க்கை… சில நண்பர்கள்… அக்கறையும் அன்பும் காட்டி உரிமையோடு ‘டா’ போட்டு அழைக்கத் தந்தைக்கு நிகரான தர்மராஜ்… இத்தனையும் இருந்தும், மனதில் அமைதி மட்டும் இல்லை…

 

அதற்குக் காரணம் அவனுக்கு மனிதர்களைப் படிக்கத் தெரியாது. சிலரைச் சட்டென நல்லவர்கள் என்று நம்புவான். அப்படி அவனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுக்காக எதையும் செய்வான். அவர்கள் மீது கண்மூடித்தனமாக அன்பைக் காட்டுவான். அதேசமயம் முன்கோபமும் அதிகம். அவனுடைய கோபம் வார்த்தைகளில் வெளிப்படாது. ஆனால் அவனுடைய முரட்டுத்தனமான நடவடிக்கைகளால் எதிராளியை நசுக்கிவிடுவான். மொத்தத்தில் அவனை ஒரு மாடர்ன் மூர்க்கன் என்று சொல்லலாம்…
Comments are closed here.

error: Content is protected !!