Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 46

அத்தியாயம் – 46

மதுமதியின் டைரி சொன்ன விஷயம் முழுக்க முழுக்க உண்மை என்பதை அவன் மனம் ஒத்துக்கொண்டது. நீலவேணி தங்கி இருந்த அறையில் சென்று சோதனை போட்டான்… தடையங்கள் சிக்கியது. கார்முகிலனின் சட்டை ஒன்று அவள் துணிகளுக்கிடையில் இருந்து கிடைத்தது. மதுமதியும் கார்முகிலனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்திலிருந்து, மதுமதியின் படம் நீக்கப்பட்டு அந்த இடத்தில் நீலவேணியின் படம் ஒட்டப்பட்டு… போலியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு படம் அவளுடைய புத்தகங்களுக்கிடையில் இருந்து கிடைத்தது…

 

‘நீலா…! நீலா…! நீலா…! ஏன் இப்படிப் பண்ணின நீலா… நான் உனக்கு என்ன தவறு செய்தேன்…’ அவன் புலம்பினான்.

 

அவனுக்குப் பதில் சொல்ல வேண்டியவள் உயிரோடு இல்லை. ‘அவளுக்கு என்ன நடந்திருக்கும்… எப்படி இறந்தாள்…?’ என்று சிந்தனைகள் ஓடியபோது, ஒன்றை மட்டும் அவன் உறுதியாக உணர்ந்தான்.

 

‘நீலவேணியின் மரணத்திற்கும் மதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை…!’

 

அந்தோ பரிதாபம்… உண்மை அவனுக்கு விளங்கும்போது காலம் கடந்துவிட்டிருந்தது…

 

பவித்ரமான தேவதை பெண்ணைக் குற்றம் சுமத்தி இமாலய பாவம் செய்துவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சி அவனைக் கொன்று கூறு போட்டது…

 

தான் முழுமையாக நம்பிய நீலவேணியா, தன் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டாள்…! என்று நம்பமுடியாமல் வியந்தவன் உடனே கூசிப் போனான். மதுமதியால் முழுமையாக நம்பப்பட்ட இவன், அவள் வாழ்க்கையை நாசம் செய்யவில்லையா…?!

 

‘ஐயோ மதி… உன்னை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போக விட்டுட்டேனே… நான் பாவி… பாவி…’ என்று தன்னைத் தானே வெறுத்தான்.

 

கலைந்து கிடந்த மதுமதியின் புடவைகளைத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டு சுருண்டு படுத்துவிட்டான். அடுத்து என்ன செய்வது என்பதைப் பற்றி யோசிக்க முடியாத அளவுக்கு, மூளை பழைய நினைவுகளிலேயே முடங்கிக் கிடந்தது… எவ்வளவு நேரம் அப்படியே படுத்திருந்தான் என்பது தெரியாது, மீண்டும் அவன் தன்னுணர்வு பெற்று எழும்போது நேரம் பிற்பகலாகிவிட்டது. கையில் கிடைத்த ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி விரைந்தான்.

 

# # #

 

கார்முகிலனின் மீது அந்த இன்ஸ்பெக்டரின் பார்வை எரிச்சலுடன் படிந்தாலும், அவன் கேட்ட விபரங்களை அக்குவேறு ஆணி வேறாக விளக்கிவிட்டார். மதுமதிக்குத் தான் பெரிய கொடுமை செய்துவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சி ஒரு பக்கம்… தான் உண்மையான தோழி என்று நம்பிய ஒருத்தி தன்னைப் படுமட்டமாக ஏமாற்றியிருக்கிறாள் என்கிற உண்மை மறு பக்கம்… அவனைப் பயங்கரமாகச் சோர்வடையச் செய்துவிட்டது. ஒரே நாளில் பஞ்சத்தில் அடிபட்டவன் போல் ஆளே உருமாறிவிட்டான். வீட்டிற்குச் செல்லப் பிடிக்கவில்லை. மதுமதி இல்லாத வீடு நரகம் போல் தோன்றியது. பைத்தியக்காரன் போல் தேனியை வலம் வந்தவன் கடைசியாக தர்மராஜ் வீட்டிற்குச் சென்றான்.

 

மாலைநேரம் வாசலில் சாய்வு நாற்காலியில் காத்தாட அமர்ந்திருந்தவர், கார்முகிலனின் கார் உள்ளே வருவதைக் கவனித்தார்… அவன் காரிலிருந்து இறங்கி வந்தான்.

 

‘என்ன இவன்…! ஏன் பேயடிச்ச மாதிரி இருக்கான்…!’ என்று அவனை யோசனையுடன் பார்த்தார் அந்தப் பெரியவர்.

 

“என்னடா முகிலா… ஏன் இப்படி வந்து நிக்கிற? உடம்பு ஏதும் சரியில்லையா…?”

 

“இப்ச்…” அவன் பதில் சொல்லாமல் வீட்டிற்குள் சென்றான்.

 

அவரும் அவனைத் தொடர்ந்து உள்ளே வந்தார். “என்னடா ஆச்சு உனக்கு…?”

 

“நான் பெரிய பாவம் பண்ணிட்டேன் சார்… மதியை ரொம்ப நோகடிச்சுட்டேன்…” என்றபடி இரண்டு கைகளாலும் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு நிற்க கூட வலுவில்லாதவனாக சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.

 

“முகிலா… என்னடா சொல்ற…? உனக்கு உண்மை புரிஞ்சுடுச்சா…?”

 

“ரொம்ப லேட்டா புரிஞ்சிருக்கு சார்…”

 

“இப்பவாவது உனக்கு நல்ல புத்தி வந்ததே… நீ உடனே போய் மதுவ பாருடா… நல்ல பொண்ணு உன்னை மன்னிச்சுடுவா…”

 

“அவ தேவதை சார்…! கண்டிப்பா மன்னிப்பா… ஆனா மன்னிப்புக் கேட்கும் தகுதி எனக்கு இல்லையே…! நான் எப்படி அவள் முகத்தைப் பார்ப்பேன்… முடியாது சார்… நினைக்கவே பயமா இருக்கு…” அவன் தலையைச் சிலிர்த்துக் கொண்டான்.

 

“அடேய்… தப்புப் பண்ணினா விளைவை சந்தித்துதான் ஆகணும்… பயந்து ஒளிந்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடுமா…? போடா… போய் அந்தப் பொண்ண பாருடா…”

 

அவன் இல்லை என்பது போல் தலையை அசைத்தான். பிறகு எழுந்து படுக்கையறைக்குச் சென்று மல்லாந்து படுத்துவிட்டான். காலையிலிருந்து கொலைபட்டினியாகக் காய்ந்தவன், பசியே இல்லாமல் பட்டமரம் போல் சாய்ந்து கிடந்தான்.

 

ஒரு வாரம் ஓடிவிட்டது… கார்முகிலன் மெலிந்து, கண்கள் குழி விழுந்து, கன்னம் காய்ந்து போய்… களையிழந்து, கம்பீரம் இழந்து ஆளே உருமாறிவிட்டான். உணவு குறைந்துவிட்டது… பேச்சு குறைந்துவிட்டது… எதிலும் ஆர்வமில்லாமல் போய்விட்டது… கடமைக்கு வாழ்ந்து கொண்டிருந்தான்.

 

கொஞ்சநாள் விட்டுப்பிடிக்கலாம் என்று நினைத்து அமைதியாக இருந்த தர்மராஜ்ஜின் பொறுமையை கார்முகிலனின் நடவடிக்கைகள் மிகவும் சோதித்தன. ஒருநாள் பொங்கிவிட்டார்,

 

“முகிலா… மதுவ பார்க்கப் போகலையா…?”

 

“இப்ச்…” அவன் பதில் சொல்லாமல் நகர்ந்தான்.

 

“அடேய்… என்னடா நினைத்துக் கொண்டிருக்க நீ…? தப்புப் பண்ணும்போதெல்லாம் திமிரா பண்ணிவிட்டு, இப்போ மன்னிப்புக் கேட்க மட்டும் வலிக்குதா…? கிளம்புடா… போய் யாருக்கும் தெரியாம கதவைச் சாத்திவிட்டு உன் பொண்டாட்டி கால்ல விழு… எல்லாம் சரியா போகும்…” என்றார்.

 

“நான்தான் சொல்றேனே சார்… இது எனக்கான தண்டனை. காலம் முழுக்கத் தனிமரமா நிற்க வேண்டும் என்பது என் விதி… இதை ஏன் நீங்க மாற்ற முயற்சி செய்றீங்க…?” அவன் பிடிவாதமாகச் சொன்னான்.

 

“நீ நிற்கலாம்… ஆனா மது என்னடா பாவம் பண்ணினா…? அவளை ஏன் இன்னும் தண்டிக்குற…? நீ தனிமரமா நின்னா அவள் எப்படித் தோப்பாக முடியும்… அறிவுகெட்டவனே…” ஏகத்திற்கும் ஆரம்பித்துவிட்டார்.

 

“என்ன சார் சொல்றீங்க… மதிக்குத் தான் அம்மா, அப்பா, இப்…போ… குழந்தை கூட…” தொண்டைக் கரகரத்தது, செருமிக் கொண்டு பேசினான்.

 

“எல்லாரும் இருக்காங்களே… அவ சந்தோஷமா இருக்கட்டும்…”

 

“நீ என்றைக்கு சரியா சிந்திச்சிருக்க… இன்றைக்கு சரியா சிந்திக்க…?” அவர் கடுப்புடன் கேட்டார்.

 

“என்ன…?” அவன் புரியாமல் கேட்டான்.

 

“எத்தனை பேர் இருந்தாலும் நீ தான்டா அவளுடைய சந்தோஷம். இன்னுமா உனக்கு இது புரியல…?” என்று கேட்டுவிட்டு, அவள் என்ன நிலையில் அங்கு இருக்கிறாள் என்பதை அவனுக்கு எடுத்துச் சொன்னார்.

 

அவன் மனம் வலித்தது. கண்களை இறுக்கமாக மூடி திறந்தான், அதன்பிறகு ஒருநொடி கூட அவனால் தாமதிக்க முடியவில்லை. உடனே அவளைப் பார்த்துவிட வேண்டும் என்று உள்ளம் பரபரத்தது. நிதானமாக இருப்பதாக வெளியே காட்டிக்கொண்டு மதுமதியைப் பார்க்க புறப்பட்டான்.

 

# # #

 

காம்காபட்டியில் வீரராகவனின் வீட்டு மதில் சுவருக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நடந்து சென்றான் கார்முகிலன். பத்துப்பேர் எதிர்த்து நின்றாலும் ஒற்றை ஆளாகச் சமாளிக்கக் கூடிய பலசாலி, மதுமதியை இன்னும் கொஞ்சநேரத்தில் பார்க்கப் போகிறேம் என்கிற படபடப்பில்… கால்கள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ள நடக்கமுடியாமல் சிரமப்பட்டான். அது குற்றம் செய்துவிட்டவனின் மிரட்சி…! மனபலத்தை ஒன்று திரட்டி என்ன நடந்தாலும் சமாளித்தாக வேண்டும் என்கிற பிடிவாதத்தில் கொஞ்சம் நிமிர்ந்தே நடந்தான்.

 

‘கௌசல்யாவும் வீரராகவனும் கேவலமாகத் திட்டக்கூடும்… கொஞ்சம் தரமிறங்கி வீரராகவன் கைகலப்பில் கூட ஈடுபடலாம்… எல்லாவற்றையும் பொறுமையாகச் சமாளிக்க வேண்டும்…’ என்று எண்ணமிட்டுக் கொண்டே வீட்டுவாசல் வரை சென்றவன்… வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்த கௌசல்யாவைப் பார்த்ததும் நடையின் வேகத்தைக் குறைத்து, தயங்கி நின்றுவிட்டான். இருவருக்கும் பத்தடி தூரம் இடைவெளி இருந்தது.

 

எதிர்பாராத சந்திப்பால் கண்களில் கண்ணீர் கசிய, உதடுகள் துடிக்க, திகைத்து நின்றுவிட்ட கௌசல்யாவின் கையிலிருந்த பாத்திரம் நழுவி தரையில் விழுந்தது.

 

வேதனைப்படிந்த முகத்துடன் “தம்பி…!” என்று காற்றாக வந்தது கௌசல்யாவின் குரல்…

 

அங்கிருப்பவர்கள் தன்னைப் பார்த்ததும் திட்டிச் சபிக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பில் வந்தவனுக்கு, கௌசல்யாவின் நடவடிக்கை ஆச்சர்யமாக இருந்தது. அவன் விழித்துக்கொண்டு நின்றான்.

 

“இப்படிப் பண்ணிட்டியேடா தம்பி…! உன்னை நம்பி வந்த பெண்ணை நடைபிணமாக்கி விட்டியேடா…!” கண்ணீருடன் அவள் கேட்ட கேள்வி அவனைக் குத்தியது.

 

“நான்… வந்து… மன்னிச்சிடுங்க… தெ…ரியாமல்…” மன்னிப்புக் கேட்கமுடியாமல் தடுமாறினான்.

 

“ச்ச… ச்ச…” என்று பாய்ந்து வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டவள்,

 

“மன்னிப்பெல்லாம் எதுக்குடா தம்பி… நீ என்ன தெரிஞ்சா தப்புப் பண்ணின. எல்லாம் நேரம்… விட்டுதள்ளு…” அழுகையினூடே சொன்னாள். தம்பியின் சங்கடத்தைச் சகிக்க முடியவில்லை. அந்த நொடி கௌசல்யா அவன் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினாள்.

 

கௌசல்யாவும் வீரராகவனும் தன் தாயைக் கொன்றுவிட்டதாகக் குற்றம் சாட்டி, ஆண்டுக்கணக்கில் அவர்களைத் தள்ளி வைத்துத் தண்டித்தவன் இதே கார்முகிலன் தான். அவனே இன்று அவர்களுடைய மகளின் மனதைக் கொன்றுவிட்டு, தன்னை நம்பி வந்தவளை நடைபிணமாக்கிவிட்டு வந்து நிற்கிறான்… அவனை இந்த கௌசல்யா ஒரு வார்த்தைத் தவறாகச் சொல்லாமல், அவனுக்கே ஆறுதல் சொல்கிறாள். எவ்வளவு உயர்ந்த உள்ளம்… இந்தப் பாசத்தை இவ்வளவு நாள் புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டோமே என்று நொந்து போனான் அவன்.

 

“அக்கா… உன்னை நான் புரிஞ்சுக்கவே இல்லக்கா… பெரிய தப்புப் பண்ணிட்டேன்… எனக்கு மன்னிப்பே இல்லக்கா…” அவன் வார்த்தைக்கு வார்த்தை அக்கா என்று அழைத்ததில் கௌசல்யாவிற்கு உடல் சிலிர்த்தது.

 

“தம்பி…” என்று அவன் தோளில் சாய்ந்து விம்மினாள். அவன் கண்களும் கலங்கின.

 

அந்த நேரத்தில் தான் வீரராகவன் வெளியே வந்தார். கார்முகிலனைப் பார்த்ததும் திகைத்தார். ஏதோ சண்டைப் போட வந்திருப்பானோ என்று ஒருநொடி நினைத்தவர், கௌசல்யா அவன் தோளில் சாய்ந்து அழுததையும்… அவன் ஆறுதலாகத் தமக்கையைத் தட்டிக் கொடுத்ததையும் பார்த்த மாத்திரத்தில் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.

 

வீரராகவனின் அரவரம் கேட்டுத் தம்பியின் தோளிலிருந்து கௌசல்யா தலை நிமிர்த்திப் பார்த்த அதே கணம்… கார்முகிலனும் அவரின் முகத்தைப் பார்த்தான்.

 

கெளசல்யாவிற்கு உதறலெடுத்தது. தம்பியை ஏதேனும் மனம் நோக சொல்லிவிடுவாரோ என்று பயத்துடன் கணவனின் முகம் பார்த்தாள். அந்த பார்வையின் யாசகத்தைப் புரிந்து கொண்டவர்… அவன் மீது இருந்த கொலைவெறியை மென்று விழுங்கிவிட்டு மனைவிக்காக மருமகனை மன்னித்தார்.

 

“உள்ள வா… ஏன் இங்கேயே நின்னுட்ட…? கௌசி… முகிலனை உள்ள கூட்டிட்டு வா…” என்றார்.

 

அந்த நொடி கௌசல்யாவின் மனம் வீரராகவனின் காலடியில் விழுந்தது… அவள் மனதில் கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த கோபம், வீம்பு, பிடிவாதம் அனைத்தும் அவருடைய காதலில் கரைந்து காணாமல் போய்விட்டது. இப்போது அவள் கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீர் கணவனுக்கானது. மூத்த தம்பதிகள் தங்கள் உணர்வுகளைக் கணப்பொழுதில் கண்களாலேயே ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

 

தண்டனையை அனுபவிப்பது எளிதானது… மன்னிப்பை அனுபவிப்பதுதான் மிகக் கொடுமையானது என்பதை அன்று கார்முகிலன் புரிந்துகொண்டான். கெளசல்யாவோ வீரராகவனோ அவன் சட்டையைப் பிடித்துச் சண்டைப் போட்டிருந்தால், அவனால் சமாளித்திருக்க முடியும். ஆனால் மன்னிப்பைக் கேட்கக்கூட விடாமல்… அதற்கு முன்பே மன்னித்து, அவனைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கிவிட்டார்கள். அவன் சங்கடத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

 

வீரராகவன் கார்முகிலனிடம் மிகச் சகஜமாக நடந்து கொண்டார். நடந்தது என்ன…? இப்போது எப்படி அவனுக்கு உண்மை தெரிந்தது என்பதைப் பற்றியெல்லாம் அவனிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அவன் மதுமதியைப் பார்க்க வேண்டும் என்று கேட்டதற்கு, தாரளமாகச் சென்று பார்க்கும்படி சொன்னார். மதுமதி குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருக்கும் படுக்கையறையை நோக்கி கார்முகிலன் சென்றான்.
Comments are closed here.

You cannot copy content of this page