Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 49 (End)

அத்தியாயம் – 49

 

கார்முகிலன் மதுமதி தம்பதியுடைய குழந்தையின் பெயர் சூட்டு விழா லக்ஷ்மிபுரத்தில் வெகு விமர்சையாக நடந்தேறியது. குழந்தைக்கு ‘யாழினி’ என்று பெயரிட்டார்கள். சொந்தபந்தங்கள் ஒன்று கூடி, குழந்தையையும் தம்பதியையும் வாழ்த்தினார்கள். மதுமதி கார்முகிலனிடமிருந்து அனாவசியமாக விலகவும் இல்லை… இழையவும் இல்லை. யார் கண்ணையும் உறுத்தாத விதமாக இயல்பாக நடந்து கொண்டாள். மனைவி தன்னோடு சேர்ந்து நின்று, இயல்பாகப் பேசிச் சிரித்து, சொந்தங்களை வரவேற்று உபசரித்து, பொறுப்பான இல்லத் தலைவியாக விழாவை ஏற்று நடத்திய பாங்கில் மனம் நிறைந்து மகிழ்ந்து போனான் கார்முகிலன்.

 

தர்மராஜ் வீரராகவன் மற்றும் கௌசல்யா அனைவரும் கார்முகிலனும், மதுமதியும் இணைந்து நின்று விழாவை நடத்தியதோடு… தங்களுடைய புது வாழ்க்கையையும் துவங்கப் போகிறார்கள் என்பதில் பெரிதும் மகிழ்ந்தார்கள். கூடியிருந்த சொந்தங்கலெல்லாம் கலைந்த பிறகு, குடும்பத்தினர் மட்டும் லக்ஷ்மிபுரத்தில் அன்று தங்கினார்கள். மூன்று படுக்கையறைகளைக் கொண்ட அந்த வீட்டில்… தர்மராஜ்ஜுக்கு ஓர் அறையை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, மற்றொரு அறையில் பெற்றோரைத் தங்கிக்கொள்ளச் சொல்லிவிட்டு, குழந்தையுடன் கார்முகிலனின் அறையில் நுழைந்தாள் மதுமதி.

 

யாருடைய அறிவுரையும் இல்லாமல் இயல்பாக, அவள் கார்முகிலனின் அறைக்குச் சென்றது பெற்றவளை நிம்மதி கொள்ளச் செய்தது. ‘எல்லாம் சரியாகிவிட்டது’ என்கிற முழு நிம்மதியுடன் கண்ணயர்ந்தாள் கௌசல்யா.

 

‘பகலெல்லாம் இயல்பாக இருந்தவள் இப்போது என்ன செய்வாளோ’ என்கிற படபடப்பில் இருந்தவன், குழந்தையுடன் அவள் உள்ளே வருவதைக் கண்டு நிம்மதியடைந்தான். இதுவரை அவனிடம் ஒட்டிக் கொண்டிருந்த குழப்பத்தையெல்லாம் அவளுடைய செயல் துடைத்தெறிந்துவிட்டது… அவளுக்கும் குழந்தைக்கும் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்துவிட்டு விழா களைப்பிலும், தான் தொலைத்த பொக்கிஷம் மீண்டும் தன் கையில் கிடைத்துவிட்டது என்கிற நிம்மதியிலும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றான் கார்முகிலன்.

 

# # #

 

மதுமதி கார்முகிலனுடன் புது வாழ்க்கையைத் துவங்கி இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. இந்த இரண்டு மாதங்களில் அவள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டதாக அனைவரும் நினைத்தார்கள். தன்னுடைய கடமைகள், கணவனுடைய உரிமைகள் என்று எதையும் மறக்காமல், மறுக்காமல், இயல்பாகதான் அவளும் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

 

கணவனைக் கவனிப்பது, குழந்தையைக் கவனிப்பது, தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது என்று பொறுப்புடன் இருந்தாள். குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும் அதன் வளர்ச்சியிலும் மகிழ்ந்தாள். எல்லாம் சாதரணமாகத்தான் இருந்தது… வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகக் கழிகிறது என்றுதான் தோன்றும். ஆனால் கார்முகிலன் மகிழ்ச்சியாக இல்லை… அவனுக்கு ஏதோ ஒன்று உறுத்தலாக, திருப்தி இல்லாமல் இருந்தது. அது என்னவென்று அவனுக்கே சரியாகச் சொல்லத் தெரியவில்லை…

 

மதுமதி சிரிக்கிறாள், பேசுகிறாள், குழந்தையைக் கொஞ்சுகிறாள்… குழந்தையின் புதுப்புது செய்கைகளைக் கணவனிடம் பகிர்ந்து கொள்கிறாள். வேறு என்ன…? எது அவனை உறுத்துகிறது…? எதில் அவனுக்குத் திருப்தி இல்லை…? அவன் குழம்பினான்.

 

அன்று காலை பரபரப்புடன் கல்லூரிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவனுடைய கைப்பேசி ஒலித்தது… அதை எடுத்துப் பேச நேரமில்லாமல் சட்டையை அயர்ன் செய்து கொண்டிருந்தான். கைப்பேசி அடித்து ஓய்ந்து மீண்டும் சத்தமிட்டது. சமயலறையிலிருந்த மதுமதி,

 

“யாழினி அப்பா… ஃபோன் அடிக்குதே… எடுக்கலையா…?” என்று சத்தமிட்டாள்.

 

பொட்டில் அறைந்தது போல் அவனுக்கு விஷயம் விளங்கியது.

 

‘யாழினி அப்பா…!’ யாழினியின் அப்பா மட்டும் தானா அவன்…! அவளுக்கு ‘மாமா’ இல்லையா…! இத்தனை நாள் ‘ஏங்க… இங்க பாருங்க…’ என்று எந்த உறவுமுறையையும் சொல்லாமல், வெவ்வேறு வார்த்தைகளில் அவனைக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தவள்… இன்று ‘யாழினி அப்பா…’ என்று புதிதாக ஓர் உறவுமுறையைக் குறிப்பிட்டதும் அவன் விழித்துக்கொண்டான்…

 

அப்போதுதான்… மதுமதி சமாதானமாகி இங்குத் திரும்பி வந்தபிறகு, ஒருமுறை கூட அவனை ‘மாமா…’ என்று அழைக்கவில்லை என்பதை உணர்ந்தான். ‘மாமா… மாமா…’ என்று பூனைக்குட்டி போல் அவனையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தவள், இன்று மாமா என்கிற அழைப்பையே தவிர்க்கிறாள். அவனுக்கு வலித்தது… பொறுத்துக் கொண்டு அவளுடைய மற்ற நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்தான்.

 

“சாப்பிட வாங்க…” அழகாக மாமா என்கிற வார்த்தையைத் தவிர்த்துவிட்டு, சமையலறையில் இருந்தபடி அவனைச் சாப்பிட அழைத்தாள். தினமும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை வருத்தத்துடன் உணர்ந்தான் கார்முகிலன்.

 

இதுவே பழைய மதியாக இருந்திருந்தால், ‘மாமா… என்ன மாமா செய்றீங்க…? சாப்பிட வாங்க மாமா…’ என்று ஆயிரம் மாமாக்களைப் பேச்சில் கொண்டு வந்திருப்பாள் என்பதை அவனால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.

 

திடீரென்று மனதில் ஏறிக்கொண்ட பாரத்துடன் உணவு மேஜைக்குச் சென்றான். அவள் பரிமாறினாள். மனதில் உள்ள வலி உணவை வெளியே தள்ள, அவன் இரண்டு இட்லிகளுடன் உணவை முடித்துக் கொண்டு எழுந்தான்…

 

“சாப்பிடலையா…?” அவள் கேட்டாள்.

 

“போதும்…” இவன் பதில் சொன்னபடி கைகழுவ எழுந்து சென்றான்.

 

அவள் பதில் பேச்சின்றி, பாத்திரங்களை ஒழுங்குப்படுத்தினாள். அவளுடைய செய்கை கூர் ஆணியாக மாறி அவன் இதயத்தைத் தைத்தது… பற்களைக் கடித்து வலியைச் சகித்துக் கொண்டு, அவனுடைய அறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

‘நான் சரியாகச் சாப்பிடவில்லை என்பதைப் பற்றி உனக்குக் கவலை இல்லையா…! இதுவே பழைய மதுமதியாக இருந்திருந்தால் ஆயிரம் கேள்விகளைக் கேட்டுக் குடைந்திருப்பாளே…! ஏன் கேட்கவில்லை… என் மீது காதல் இல்லையா…? அக்கறை இல்லையா…? பிறகு எதற்காக இங்கு வந்தாள்….? எதற்காக என்னோடு சேர்ந்து வாழ்கிறாள்…? குழந்தைக்காகவா… அல்லது கடமைக்காகவா…?’ அவன் மேலே சிந்திக்க முடியாமல் திணறினான். மனைவியின் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கணிக்கமுடியால் குழம்பினான்.

 

அவசரமாகக் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவன், கைப்பேசியை எடுத்துக் கல்லூரிக்கு அழைத்து விடுப்பு சொல்லிவிட்டு… சிந்தனைகளுடன் கட்டிலில் அமர்ந்தான்.

 

மதிய உணவை டப்பாவில் அடைத்து, அதற்கான பையில் போட்டுத் தயாராக எடுத்துக் கொண்டு கணவனைத் தேடி வந்தவள்… அவன் அமர்ந்திருந்த நிலையைக் கண்டு குழப்பத்துடன்,

 

“காலேஜ் போகலையா…?” என்றாள்.

 

“இல்லை…” அவன் பதில் சொன்னான்.

 

“உடம்பு சரியில்லையா…?” அவள் குரலில் எட்டிப் பார்க்காத கவலை, அவள் மனதில் இருந்தது என்பதை அவன் அறியவில்லை.

 

“இல்ல… நல்லாதான் இருக்கேன்…” இறுக்கமான குரலில் சொன்னான்.

 

“சரி…” அவள் திரும்பிவிட்டாள். அவன் பார்வை அவள் முதுகை வெறித்தது.

 

தன் உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல், மனதிற்குள் புதைத்துச் சமாதி கட்டிவிட்டு வெளியில் போலி வாழ்க்கை வாழும் மதுமதியைக் கண்டு… ‘பெண்ணின் மனம் மிக ஆழமானது’ என்கிற கூற்று எவ்வளவு உண்மை என்பதை வியப்பும் வேதனையுமாக உணர்ந்தான் கார்முகிலன்.

 

ஏதேதோ சிந்தனைகளுடன் நீண்ட நேரம் அமர்ந்திருந்தவன், மதுமதியிடம் மனம் விட்டுப் பேசிவிடலாம் என்கிற எண்ணத்தில் அவளைத் தேடி வந்தான். குழந்தை ஹாலில் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தது. அவன் சமயலறையில் எட்டிப் பார்த்தான்… மதுமதியைக் காணவில்லை. பின் பக்கம் சென்று பார்த்தான்… பழைய பொருட்களைப் போட்டுவைக்கும் அறையில், வாசல் பக்கத்திற்கு முதுகுகாட்டி தரையில் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

 

“இந்த ரூம்ல உனக்கு என்ன வேலை… ஏதாவது வேணுன்னா என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே… பூச்சி கீச்சி ஏதும் இருக்கப் போகுது…” என்று சொல்லிக் கொண்டே அந்த அறைக்குள் நுழைந்து அவள் என்ன செய்கிறாள் என்று எட்டி பார்த்தான்… ஷாக்கடித்தது போல் உடல் விறைத்து நின்றுவிட்டான்…

 

முன்பு ஒருநாள் அவன் மூட்டையாகக் கட்டிப் போட்டிருந்த அவளுடைய பொருட்கள் தரையில் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. எதையோ தேடி வந்தவள் அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்திருக்கிறாள். இத்தனை நாட்களும் உள்ளே அழுத்தி, அழுத்தி வைக்கப்பட்டிருந்த அவளுடைய உணர்வுகள் அனைத்தும் வெளியே வெடித்துச் சிதறத் தயாராகிக் கொண்டிருந்தன.

 

“மதி… இதெல்லாம்… அப்போ… கோபத்துல…” அவன் தடுமாறினான்.

 

அவள் அவனுடைய பேச்சைக் கவனிக்காதது போல் தரையில் கிடந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பையில் போட்டாள்.

 

“நீ விடு… நானே எடுத்துட்டுப் போறேன்…” அவன் அவளிடமிருந்து அந்தப் பையை வாங்க முயன்றான்.

 

“தேவையில்லைன்னு தானே தூக்கிப் போட்டீங்க… விடுங்க நானே எடுத்துட்டுப் போறேன்…” அவள் பிடிவாதமாக அவனிடம் பையைக் கொடுக்க மறுத்துவிட்டு, தானே கீழே கிடந்த மற்றப் பொருட்களையும் உள்ளே எடுத்துப் போட்டாள்.

 

“மதி… ப்ளீஸ்… அப்போ மடத்தனமா நான் என்னென்னவோ செஞ்சுட்டேன்… இப்போ…” அவன் சமாதானம் சொல்ல முயன்றான். அவனை இடையில் கையமர்த்தித் தடுத்தவள்…

 

“எந்த விளக்கமும் வேண்டாமே ப்ளீஸ்…” என்று சொல்லிவிட்டுப் பொருட்களடங்கிய பையோடு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

 

அவன் அவள் பின்னோடு வந்து சொன்னான்… “மதி… நான் உன்கிட்ட பேசணும்…”

 

“சொல்லுங்க…” இப்போது அவளுடைய முகபாவம் முற்றிலும் மாறியிருந்தது. எதுவுமே நடக்காதது போல் சாதாரணமாகக் கேட்டாள்… அவளுடைய அந்த மாற்றம் அவனைத் திகைக்க வைத்தது. தன்னைச் சமாளித்துக் கொண்டு நேரடியாகக் கேட்டான்…

 

“மதி… உன் மனசுல என்ன இருக்கு…?”

 

“எதைப் பற்றிக் கேட்கறீங்க…?”

 

“நம்மைப் பற்றி… நம் வாழ்க்கையைப் பற்றித் தான் கேட்கறேன்… நீ சந்தோஷமா இருக்கியா…? என்னோடு சேர்ந்து வாழறதுல உனக்கு முழு விருப்பம் தானே… இல்ல அக்கா அத்தான் யாராவது கட்டாயப்படுத்தினாங்களா…?” அவன் கேட்டுவிட்டான்.

 

அவள் அவனை ஆழமாகப் பார்த்தாள்.

 

“ஏன் அப்படிக் கேட்கறீங்க…?”

 

“நீ சகஜமா இல்ல மதி…”

 

“இல்லையே நான் சகஜமாத்தான் இருக்கேன்… ”

 

“இல்ல மதி… நீ என்கிட்ட சகஜமா இல்ல… நீ என்னை மன்னிச்சுட்டேன்னு சொன்னியே… அது உண்மைதானா…? மதி ப்ளீஸ் எதையும் மறைக்காத…”

 

“உங்களை மன்னிக்காமலா உங்க வீட்டுக்குத் திரும்ப வந்து உங்களோடு வாழ்ந்துட்டு இருக்கேன்…!” – அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாள்.

 

“என் வீட்டுக்கா…? இது உன் வீடு மதி… அதை ஏன் நீ சொல்லமாட்டேங்கிற? இப்போல்லாம் நீ என்னை ‘மாமா’ன்னு கூடக் கூப்பிடறது இல்ல…”

 

“மாமான்னு கூப்பிடலன்னா என்ன… மற்றபடி உங்களோடு பேசிட்டுத் தானே இருக்கேன்…”

 

“நீ என்னோடு பேசுற… பழகற… சிரிக்கற… எல்லாமே சரிதான்…! ஆனா அது எதிலேயுமே உயிர் இல்ல… எல்லாமே நாடகம் மாதிரி இருக்கு. என்னோட பழைய மதி இப்படி இருக்கமாட்டா… வார்த்தைக்கு வார்த்தை மாமா மாமான்னு என்னைச் சுத்திக்கிட்டே இருந்த மதி நீ இல்ல… என்னோட பழைய மதி நீ இல்லவே இல்லை… சொல்லு… ஏன் இப்படி இருக்க…?”

 

“உயிர்…!!! நெஞ்சுல உங்க நினைப்பையும்… வயிற்றில உங்க குழந்தையையும் சுமந்துக்கிட்டு… பயத்துல உயிரைக் கைல பிடிச்சுக்கிட்டு… நீங்க என்னைக் காப்பாற்ற வருவீங்கன்னு நம்பிக்கையோடு காத்துக்கிட்டு இருந்தப்போ… என்னைக் காப்பாற்ற வராமல் ஏமாற்றினீங்களே… அப்போவே நான் செத்துட்டேன். யாரோ ஒரு நீலவேணி மேல வச்ச நம்பிக்கையை என்மேல வைக்காம தவறினீங்களே… அப்போவே செத்துட்டேன். செத்துப் போனவளோட பேச்சிலும் சிரிப்பிலும் உயிரை எப்படிங்க எதிர்பார்க்க முடியும்…?”

“மதி…!” அவளுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் சம்பட்டியால் ஓங்கியடித்தது போல் அவனை தாக்க நிலைகுலைந்தான். முயன்று தன்னைச் சமன்படுத்திக் கொண்டு பேசினான்…

 

“மதி… பழசை எல்லாம் உன்னால மறக்கவே முடியாதா…?”

 

“ஹா… மறப்பதா…! உங்களை நான் முழுசா தெரிஞ்சுக்க உதவி பண்ணின சம்பவங்களை எதுக்காக மறக்கணும்…?” அவள் அழுத்தத்துடன் கேட்க அவன் தவித்துப் போனான்…

 

“கடவுளே…! கடவுளே…! மதி… அந்த ஒரு சம்பவத்தை மட்டும் வச்சு நான் யாருங்கறதை முடிவு பண்ணிடாத மதி ப்ளீஸ்… நீ இன்னமும் என்னைச் சரியா தெரிஞ்சுக்கல… மதி…! உன்னை நான் லவ் பண்றேன்… ஹன்ட்ரட் பர்சன்ட்…! அத்தான் மேல இருந்த கோபம், நீலா மேல இருந்த பாசம்… இதெல்லாம் என்னோட காதலைத் திரை போட்டு மறச்சது உண்மைதான் மதி… இப்போ அதெல்லாம் எதுவுமே இல்ல… எந்தத் திரையும் என்னோட காதலை இனி மூடி மறைக்க முடியாது… நம்பு மதி… ப்ளீஸ்… என்னை நம்பு…” அவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு உண்மையான தவிப்புடன் மன்றாடினான்.

 

அவள் அவனை அவநம்பிக்கையுடன் பார்த்தாள்… அந்தப் பார்வை தாங்க முடியாமல் தலைகுனிந்தான்.

 

“மதி ப்…ளீஸ்…. ப்ளீஸ்…. அப்படிப் பார்க்காத… என்னால தாங்கமுடியல…” – மன்றாடினான்.

அவளுடைய பார்வை மாறவில்லை…

 

“என்னோட முன்கோபத்தாலும் முரட்டுப் பிடிவாதத்தாலும் உன்னை நோகடிச்சது உண்மைதான்… சொல்லு மதி… நான் என்ன செஞ்சா உன் மனக்காயம் கொஞ்சமாவது ஆறும்…? சொல்லு… எதை வேணுன்னாலும் செய்யத் தயாரா இருக்கேன்… சத்திய(ம்)…” அவன் சொல்லி முடிப்பதற்குள் அவளுடைய பார்வை, அவனுடைய கண்களுடன் நேருக்கு நேர் மோதியது. அவன் மேலே பேச முடியாமல் நிறுத்தி விட்டான்.

 

“நம்ம கல்யாணத்தன்று அக்னியைச் சாட்சியா வச்சு… என்னோட கையைப் பிடிச்சு… இன்பத்திலும் துன்பத்திலும் என்னைக் கைவிட மாட்டேன்னு சத்தியம் செய்தவர் நீங்கதான்… அன்னிக்குச் செய்த சத்தியத்தைக் காப்பாற்ற முடியாம, என்னைத் தீப்பிழம்புக்குள்ள உதறித் தள்ளின நீங்க… இன்னிக்குச் செய்ற சத்தியத்தை மட்டும் காப்பாற்றுவீங்கன்னு நான் எப்படி நம்பறது…?” குரலை உயர்த்தாமல் சாதாரணமாக அவள் கேட்ட கேள்வி, அவன் இதயத்தில் சாட்டையடியாக விழுந்தது. அவன் நிலைகுலைந்து போனான்…

 

அவளுடைய அமைதியான பேச்சும், அழுத்தமான பார்வையும் மாறி மாறிக் கொடுக்கும் அடியின் வலியை, கண்களை இறுக்கமாக மூடித் திறந்து சகித்துக் கொண்டு… முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் தொடர்ந்து பேசினான். எல்லாவற்றையும் இன்று பேசித் தெளிவாகிவிட வேண்டும் என்கிற பிடிவாதம் அவனிடம் மேலோங்கி இருந்தது…

 

“சரி… நான் தான் உன்னோட நம்பிக்கையைச் சாகடிச்சுட்டேன்… உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல… அப்படியிருக்கும் போது எதுக்காக நீ என்னை மன்னிச்ச…? எதுக்காக என்னோடு திரும்பச் சேர்ந்து வாழற…? குழந்தைக்காகவா…? இல்லை தாலிக் கட்டிக்கிட்ட கடமைக்காகவா…?”

 

அவள் கசப்புடன் புன்னகைத்தாள்.

 

“எதுக்கு…? எதுக்கு அப்படிச் சிரிக்கற…?” – தவிப்புடன் கேட்டான்.

 

“குழந்தைக்காக…! கடமைக்காக…! இதுக்காகவா நான் உங்களை மன்னிச்சேன்னு நினைக்கறீங்க..? இதுக்காகவா நான் உங்களோடு திரும்பச் சேர்ந்து வாழறேன்னு நினைக்கறீங்க…? ம்ஹும்… இல்லை…” – தலையை ஆட்டி மறுத்தாள்.

 

“லவ்…! காதல்…! நான் உங்க மேல வச்சிருக்கற காதல்…! எனக்குள்ள தீயா எரிஞ்சுக்கிட்டு இருக்கற காதல்…! நீங்க இல்லைன்னா என்னையே அழிச்சிடக் கூடிய குரூரமான காதல்…! அதோடு போட்டிப் போட முடியாமல் தான்… அதை ஜெயிக்க முடியாமல் தான் உங்ககிட்ட திரும்ப வந்தேன்…”

 

“மதி…! மதி…! மதி…! இவ்வளவு காதலை மனசுக்குள்ள வச்சிக்கிட்டு, எதுக்குடி என்னைச் சாகடிக்கற…? என்னைத் திட்டுடி… அடிச்சுக் கொல்லு… என்ன வேணுமோ செஞ்சு தொலை… ஆனா கடைசில ‘மாமா’ன்னு ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தைச் சொல்லுடி போதும்… எல்லாமே சரியாகிவிடும்… மதி… உன்னோட விலகலைத் தாங்க முடியலடி…” – ஆவேசமும் ஆத்திரமுமாக கண்கலங்கப் பேசினான்.

 

அவனுடைய ஆவேசமும், ஆத்திரமும்… அவள் மீது அவன் கொண்டுள்ள காதலால் தான் என்பதை அவள் உணர்ந்தாலும், அந்த உண்மையை அவள் மனம் நம்ப மறுத்தது. அவள் கண்களும் கலங்கின… கண்ணீர் நிறைந்த கண்களுடன் அவனை ஆழமாகப் பார்த்துப் பொறுமையாகச் சொன்னாள்.

 

“முடியலையே…! நீங்க சொல்ற எதையுமே என்னால செய்ய முடியலையே…!”

 

“ஏன்… ஏன் செய்ய முடியல…?”

 

“ஏன்னா உங்கள நான் நம்பல… என்னால உங்கள நம்பவே முடியல…! எந்தச் சூழ்நிலையிலும் நீங்க என்னைக் கைவிட மாட்டீங்கன்னு என்னால நினைக்க முடியல… உங்கள மீறி எந்த ஆபத்தும் என்னை நெருங்காதுன்னு என்னால நிம்மதியா இருக்க முடியல… பயம், எச்சரிக்கை, காதல், பாசம்… இதெல்லாம் என் மனச போட்டுப் புரட்டி எடுக்குது… நிம்மதி இல்ல… அமைதி இல்ல… சந்தோஷமும் இல்ல…” அவள் கன்னங்களில் கண்ணீர் கோடாக வடிந்தது.

 

அவன் விக்கித்துப் போனான். “மதி…” என்றான் குரலே எழும்பாமல்… அவள் தொடர்ந்தாள்.

 

“உங்க மேல நான் வச்ச காதல் இன்னமும் எனக்குள் இம்மிக் குறையாமல் அப்படியே தான் இருக்கு… ஆனால் காதலுக்கு உயிரான நம்பிக்கைதான் செத்துப் போச்சு… என் காதலோட உயிரை… உயிரை… தொலை…ச்சுட்டேன்…” அவள் விம்மி அழுதாள்.

 

அவன்மீது அவள் கொண்ட காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது… அதனால்தான் அவளும் அவனோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஆனால், அவளை வாழவைத்துக் கொண்டிருக்கும் காதலுக்கும் உயிரில்லை… அவளுடைய வாழ்க்கைக்கும் உயிரில்லை…

 

அன்று போலீஸ் ஸ்டேஷனில் அழுதவள் மீண்டும் இன்றுதான் அழுகிறாள். இன்றுதான் அவளுடைய மனக்குமுறல் முதல்முறையாக வார்த்தைகளும் கண்ணீருமாக வெளியேறுகிறது…

 

செத்து விட்டான் கார்முகிலன்… அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவனை உயிரோடு சாகடித்தன… தரையில் சரிந்து முகத்தைக் கையில் புதைத்து, குழந்தை போல் தேம்பி அழுபவளைத் தேற்றும் வழித் தெரியாமல்… துள்ளும் புள்ளி மானாக இருந்தவளை நடைபிணமாக மாற்றிவிட்டோமே என்கிற வேதனையில்… பூமியில் வேரூன்றிவிட்ட மரம் போல் இறுகிப் போய் நின்றான்.

 

இங்கு உயிரைத் தொலைத்தது யார்…? அவளா அல்லது அவனா…? இருவருமேதான்…! தொலைந்து போன உயிரை மீட்டெடுக்க வேண்டும் என்கிற வைராக்கியம் அவனை அசைத்தது. அவன் அவளுக்கருகில் அமர்ந்து இதமாக அவள் தலையை வருடினான். எந்தத் தியானமும் தூக்கமாத்திரையும் கொடுக்காத ஆறுதலை, அந்த வருடல் அவளுக்குக் கொடுத்தது… அவள் அவன் மார்பில் முகம் புதைத்துக் கண்ணீர் வடித்தாள். அவநம்பிக்கையைக் காதல் வென்று கொண்டிருந்தது… அவர்களுடைய காதல் அவர்கள் தொலைத்த உயிரை ஒருநாள் மீட்டெடுக்கும். ஆனால் அதற்குக் கால அவகாசம் தேவை… காத்திருப்போம்…!

 




5 Comments

You cannot copy content of this page