Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கவியோ! அமுதோ! – 3

மீராவின் மனம் 
அத்தியாயம் – 3

அரசப்பன் பேசியதை மீரா கேட்டுவிட்டாள் என்று தெரிந்ததும் பதட்டமடைந்த பவானி, “மீரா…” என்று அழைத்தபடி அவளை சமாதானம் செய்வதற்காக சென்றாள். ஆனால் அவளோ அழுதுக் கொண்டே சட்டென்று உள்ளே ஓடிவிட்டாள்.

 

ஆவேசத்துடன் அண்ணன் பக்கம் திரும்பியவள், “போதுமா? இப்ப நிம்மதியா உனக்கு? ஒரு சின்ன பொண்ணோட மனச இப்படி நோகடிச்சுட்டியே… திருப்தியா?” என்று ஆத்திரத்துடன் சீறினாள்.

 

“நான் என்ன இல்லாததையா சொல்லிபுட்டேன்? இந்த குதி குதிக்கிற!” – குரலை உயர்த்தி அவளை அடக்கினார் அரசப்பன்.

 

“ஏண்ணே இப்படி இருக்க? மீரா யாருண்ணே? இந்த வீட்டுக்கு வாழவந்த பொண்ணு. நம்ம கீர்த்தியோட பொண்டாட்டி. உனக்கு மக மாதிரி. துணையை எழந்துட்டு தனிமரமா நின்னு தவிக்கிறா. அவளை இப்படி எடுத்தெறிஞ்சுப் பேசிப்புட்டியே! நம்மளவிட்டா அவளுக்கு யாருண்ணே இருக்கா?” மருமகளின் நிலையை விவரிக்கும் பொழுதே கண்ணீர் கொட்டியது பவானிக்கு.

 

இறுகிப் போயிருந்த அரசப்பனின் மனமோ சற்றும் இளகவில்லை. “எம்மகளா! அவளா! ஹா… இந்த உலகத்துல எனக்குன்னு இருக்குற ஒரே சொந்தம் எம்மருமகன் மட்டும் தான். நா அவன பத்தி மட்டும் தான் யோசிப்பேன்… பேசுவேன்…”

 

“அப்புடி என்ன நா உனக்கு துரோகம் பண்ணிப்புட்டேன். கூட பொறந்த பாசங்கூடவா வத்திப்போச்சு? எதுக்கு எங்குடும்பத்த இப்புடி சீரழிக்கிற? தாயோட புள்ளைய கலக்கமற பேசவிடாம குறுக்க கெடந்து மறிக்கிறியே. உம்மனசு என்ன பாறையா? பெத்த புள்ளைய மலை மாரி (மலை போல்) வாரிக் குடுத்துட்டு பாவியா நிக்கிறேனே! உம்மனசு பதரலையா? ரெத்தம் துடிக்கலையா? சொல்லுண்ணே… சொல்லு…” என்று அவர் சட்டையை பிடித்து உலுக்கினாள் பவானி.

 

“வாழற வயசுல எமனுக்கு எறையா போனானே எம்மகன்… அவன் நெனப்பு உன் நெஞ்ச உலுக்கலையா…? கதிர சொமந்த இந்த வயித்துலதானே கீர்த்தியையும் சொமந்தேன்” என்று வயிற்றில் அடித்துக் கொண்டவள் “ஒரு கண்ணுல வெண்ணையையும் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பையும் வைக்க எப்புடி உனக்கு மனசு வந்துச்சு…” என்று வெடித்து அழுதவள், கட்டவிழ்த்துக் கொண்ட உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறனில்லாமல் துவண்டு தரையில் சரிந்தாள்.

 

கோவைப்பழம் போல் சிவந்துவிட்ட அரசப்பனின் கண்கள் கண்ணீரில் மிதந்தன. தங்கையின் அவலநிலைக் கண்டு உண்மையில் அவர் மனம் துடித்தது. ஆனாலும் அவளை அரவணைத்து ஆறுதல் கூற முடியவில்லை. வீட்டிற்குள் செல்லாமல் வண்டியை எடுத்துக் கொண்டு வாசலோடு திரும்பிவிட்டார்.

 

“அவரு கெடந்துட்டுப் போறாரு. நீங்க எந்திரிங்கம்மா… இந்த நெலமையில ஐயா உங்கள பாத்தா சங்கட்டப்பட்டுப் போவாரு… எந்திரிங்க” என்று அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த பெண்கள் பவானியை தேற்றி உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார்கள்.

 

மகனிடம் பேசிவிட்டு மனம் நொந்துப் போயிருந்த பழனியப்பன் உடனே வீட்டிற்கு வர மனமில்லாமல் வயலுக்கு சென்று படுத்திருந்துவிட்டு பொழுது சாய்ந்த பிறகுதான் வீட்டிற்கு வந்தார். வீட்டில் வேலையாட்களைத் தவிர குடும்பத்தாரின் நடமாட்டம் தெரியாததால் “பவானி எங்க?” என்று வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டார்.

 

“அம்மா ரூம்புல படுத்திருக்காங்கைய்யா”

 

“படுத்துருக்காளா! ஏன், என்ன ஆச்சு?” -நாள் முழுக்க வேலை செய்து கொண்டே இருக்கும் மனைவி, இப்போது படுத்திருக்கிறாள் என்றதும் துணுக்குற்றார்.

 

“அது… வந்துங்கையா…” அந்த பெண் நடந்ததைக் கூற சங்கடப்பட்டாள்.

 

“சரி நீ போ” என்று அவளை அனுப்பிவிட்டு மனைவியைத் தேடி வந்தார்.

 

“பவானி… பவானி… என்னம்மா? ஏன் படுத்துட்ட?” அவள் நெற்றியைத் தொட்டுப்பார்த்தார்.

 

“ம்ம்ம்…. வந்துட்டிங்களா?” என்றபடி அவிழ்ந்துக் கிடந்த தன் கூந்தலை அள்ளி முடிந்துக் கொண்டே எழுந்து “காப்பி கொண்டாரவா?” என்றாள்.

 

மனைவியின் சிவந்து வீங்கியிருந்த கண்களையும் முகத்தையும் கண்டவர் “ஏன் அழுதுருக்க? முகமெல்லாம் வீங்கிக் கெடக்கு” என்றார்.

 

பவானியின் கண்கள் மீண்டும் கலங்கி கண்ணீர் கன்னத்தில் வழிந்து.

 

“பவானி!!!”

 

“உங்கள கையெடுத்துக் கும்பிடறேன். எப்பாடுபட்டாவது எம்மகன எங்கிட்ட கொண்டுவந்து சேத்துடுங்க. ஒரு புள்ளையத்தான் காலனுக்கு அள்ளிக் குடுத்துட்டேன். இன்னொன்னையாவது கைக்குள்ள வச்சுக்கணும்னு நெனக்கிறேன். அவன் என்கிட்ட வராம எட்டியெட்டி ஓடுறான். எதாவது பண்ணுங்க சாமி… எம்புள்ளைய மீட்டுக் குடுத்துருங்க” – பெற்றவள் பித்தாய் கலங்கி கண்ணீர் விட்டாள்.

 

“உனக்கு என்ன பவானி ஆச்சு? நம்ம கதிரு நம்மள விட்டு எங்க போயிடப்போறான்” – என்று மனைவிக்கு ஆறுதல் சொன்னாலும், மகன் தங்களை விட்டு வெகு தூரம் சென்றுக் கொண்டிருக்கிறான் என்பது அவருக்கும் தெரியத்தான் செய்தது.

 

“இல்லங்க… இப்பல்லாம் வீட்டுக்கே வரமாட்டேங்கிறான். என்கையால அவன் சாப்பிட்டு எத்தனையோ நாளாச்சு. எம்முகத்தப் பாத்துக் கூட பேசலைங்கிறான். பெத்த வயிறு எரியிதுங்க. எனக்கு எம்புள்ள வேணும். அப்புடி என்னதான் நா பண்ணிப்புட்டேன். என்னைய உசுரோட கொல்றானே!” – புலம்பி தவித்தாள் அந்த தாய்.

 

“பவானி… சொல்றத கேளு. அழுகைய நிறுத்தும்மா. இந்தா, இந்த தண்ணிய குடி… ம்ம்ம்… இப்ப சொல்லு. எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் பண்ணுற? கதிரு இங்க வந்து எதும் சத்தம் போட்டானா?” என்று விசாரித்தார். அவள் நடந்ததைக் கூற அவர் முகம் இறுகியது.

 

“மீரா எங்க இப்ப?”

 

“அவ ரூமுக்குள்ள போயி கதவ சாத்திகிட்டு தெறக்க மாட்டேங்கிறா. அவளா அழுது ஓஞ்சு தானா தெறந்தாதான் உண்டு”

 

“அந்த பொண்ணுதான் அழுதுச்சுன்னா, அதுக்கு ஆறுதல் சொல்லாம் நீயும் ஒரு பக்கம் உக்காந்து ஒப்பாரி வச்சியாக்கும்?” என்று மனைவியைக் கடிந்துக் கொண்டார்.

 

“எம்மனசு படுற படு எனக்குத்தானே தெரியும். உங்களுக்கு என்ன…”

 

“புரியிது பவானி. ஆனா நாம என்ன செய்ய முடியும் சொல்லு”

 

“எதையாவது பண்ணி மீராவையே கதிருக்குக் கட்டு வச்சிடணும்ங்க. அப்பத்தான் அவன் நம்மளோட இருப்பான். எங்க அண்ணன் பாக்குற பொண்ண கட்டிட்டான்னா அப்புறம் நம்ம புள்ள நமக்கு இல்ல…”

 

“நேத்து வேற மாதிரி பேசுனியே பவானி. காதம்பரிய கேக்க சொன்ன?”

 

“நேத்திக்கு இருந்த நெலம இன்னிக்கு இல்லங்க…”

 

“ம்ம்ம்… ஆனா…”

 

“ஆனா?”

 

“கல்யாண விஷயத்துல யாரையும் கட்டாயப்படுத்த முடியாதும்மா. நல்லது கெட்டதை எடுத்து சொல்லியாச்சு. இனி அவந்தானே முடிவெடுக்கணும்”

 

“அவனா எங்க முடிவெடுக்கப் போறான். எங்க அண்ணன் சொல்றதைத்தான் கேட்டுகிட்டு ஆடுவான். அதுக்கு நாம விடமுடியுமா?”

 

“வேற வழியில்ல. அவனுக்கு மீராவ கட்டிக்கிரதுல விருப்பம் இல்லன்னு நெனக்கிறேன்”

 

“அப்படின்னா தேன்மொழியை கூப்பிடுங்க. காதம்பரிய பொண்ணு கேப்போம். நம்ம குடும்பத்துக்குள்ளேயே பொண்ணு எடுக்குறதுதான் நல்லது”

 

யோசிப்போம் பவானி. எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதையும் செய்ய வேண்டாம். கொஞ்சம் பொறுமையா இரு. அவன் மனசும் கொஞ்சம் அமைதியாகட்டும். அப்புறம் பேசிக்குவோம்” என்று கூறி அப்போதைக்கு கதிர்வேலின் திருமணப் பேச்சை சற்று தள்ளிப் போட்டவர் மறுநாள் காலை மீராவையும் அழைத்துப் பேசினார்.

 

“ஏம்மா அவரு தான் வெவரங்கெட்டவரு எதையோ பேசினாருன்னா அதுக்கு போயி நீ அழுவலாமா?”

 

“…………………..”

 

“தைரியமா இருக்கனும்மா”

 

“…………………..”

 

“கீர்த்தி போயி ரெண்டு வருஷம் ஓடிட்டு. அவனோடயே உன் வாழ்க்க முடிஞ்சிடாதூம்மா. நீ பாக்க வேண்டிய நல்லதுகெட்டது இன்னும் எவ்வளவோ இருக்கு. இதுக்கெல்லாம் மனச விட்டுட்டா எப்படிம்மா?”

 

“……………………” மௌனமாக நின்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

 

“உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைய…”

 

“மாமா… ப்ளீஸ்” – அவரை இடைவெட்டினாள் மீரா.

 

“சொல்லும்மா”

 

“இன்னொரு கல்யாணத்தை பற்றி பேசாதீங்க. கீர்த்தி இருந்த இடத்துல வேற யாரையும் என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியில” – பிசிரற்றக் குரலில் தெளிவாகக் கூறினாள்.

 

அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவருக்குத் தெரிந்து கீர்த்தியும் மீராவும் காதல் திருமணம் செய்துக் கொண்டார்களே தவிர பெரிதாக மகிழ்ச்சியான வாழ்க்கையை ஒன்றும் வாழ்ந்துவிடவில்லை. எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டையும் வம்புமாகத்தான் இருப்பார்கள். அப்படியிருந்தும் கூட அவர்களுக்குள் ஏதோ ஒரு இறுக்கமான அன்பும் பிணைப்பும் இருந்திருக்கக் கூடுமோ! – அவருக்குள் சந்தேகம் எழுந்தது. தாடையை தடவியபடி யோசித்தார்.

 

“சரிம்மா… கல்யாண பேச்சை விட்டுத்தள்ளு. அடுத்து நீ என்ன பண்ணலாம்னு இருக்க. இப்படி வீட்டுக்குள்ளேயே இருந்தா உம்மனசு ஆறாதும்மா. மேல படிக்கிறியா?”

 

“இல்ல மாமா… இண்ட்ரெஸ்ட் இல்ல…”

 

“வேலைக்கு… நம்ம ஊர்ல என்ன வேலை இருக்கு!” அவர் மீசையை தடவியபடி யோசித்தார்.

 

“வேண்டாம் மாமா… எனக்கு அதிலெல்லாம் இண்ட்ரெஸ்ட் இல்ல… என்னைய இப்படியே விட்டுடுங்க”

 

“அப்படியெல்லாம் விடமுடியாதும்மா. நீ டவுன்ல வளர்ந்த பொண்ணு. இந்த கிராமத்துல எந்த வேலையும் இல்லாம சும்மா இருந்தேன்னா பைத்தியம் புடிச்சுடும். ஏதாவது செய்யனும்மா” என்று அவர் கூறியதும்,

 

“உனக்குத்தான் பாட்டு நல்லா வரும்ல.. வேணுன்னா ஒரு நாலு புள்ளையளுக்கு சொல்லிக்குடேன்” என்றாள் அதுவரை அமைதியாக நின்ற பவானி.

 

எதற்கும் மசியாமல் இறுகிப்போயிருந்த மீராவிடம் பாட்டு என்றதும் சிறு சலனம் ஏற்பட்டது.

 

“பா..ட்..டா!” – என்றாள் புருவம் சுருக்கி.

 

அதையே பிடித்துக் கொண்ட பழனியப்பன் “ஓ… உனக்கு பாட்டெல்லாம் வருமா? கீர்த்தி கூட நம்ம ஊரு புள்ளையளுக்கு ஏதாச்சும் செய்யணும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். உன்னால முடிஞ்சதை நீ செய்யேம்மா” என்றார்.

 

“நிஜமாவா மாமா!”

 

“ஆமாம்மா… உனக்கு விருப்பம்னா சொல்லு. நா ஏற்பாடு பண்ணுறேன்”

 

அவள் யோசித்தாள். ‘கீர்த்திக்கு இப்படி ஒரு ஆசையா!’ – ஆச்சர்யமாக இருந்து. ஆனால் ஆச்சர்யத்தைத் தாண்டி அவள் அன்புக் கணவனின் ஆசையை நிறைவேற்றும் வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருக்கிறது. அதை தவறவிடலாமா என்கிற எண்ணம் மேலோங்க, சற்றும் தாமதிக்காமல் “சரி மாமா…” என்றாள்.

 

பாட்டு கிளாஸ் ஆரம்பமானது. கீர்த்தியின் நினைவுகளில் மட்டுமே சிக்கிக் கொண்டிருந்த மீராவின் மனம் மெல்ல திசைதிரும்பியது. இசையும் இசையை பயில வரும் கபடமில்லா குழந்தைகளும் அவளுக்கு பெரும் ஆறுதலாய் இருந்தன. அவள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே பெற்றோர்களும் பிள்ளைகளும் ஆர்வமாக இருந்தார்கள். வெறும் நான்கு பிள்ளைகளைக் கொண்டு துவங்கிய வகுப்பில் இப்போது இருபது குழந்தைகள் பயில்கிறார்கள். அதுமட்டும் அல்ல… அவர்களுடைய ஆர்வம் விசாலமாக இருந்தது. நடனம், இசை வாத்தியங்கள், கணினி என்று அனைத்தையும் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். பெற்றோர்கள் அதற்கான கோரிக்கையை மீராவிடம் வைத்தார்கள். மீராவும் அவர்களுடைய கோரிக்கையை தன் மாமனாரிடம் கொண்டுச் சென்றாள்.

 

“பாட்டு மட்டும்தான் எனக்கு தெரியும். மத்ததுக்கெல்லாம் வேற டீச்சர்ஸ் அரேஞ் பண்ணனும் மாமா…” என்றாள்.

 

“சரிம்மா… பண்ணிட்டா போவுது”

 

“சென்னைல என் ஃப்ரண்ட் ஒருத்தி இருக்கா மாமா. நல்ல டான்சர். அவகிட்ட கேட்டுப்பார்க்கறேன். ஓகேன்னு சொல்லிட்டான்னா கூட்டிட்டு வந்துடுவோம். அப்புறம் ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் கூட அரேஞ் பண்ணனும்” – என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தவள், “கீர்த்தி என்கிட்ட இது பத்தியெல்லாம் சொன்னதே இல்ல” என்று வருந்தவும் செய்தாள். நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தால் தான் கீர்த்தியின் நினைவுகளிலிருந்து அவளால் விடுபட்டுவிட முடியும் என்றும் அதன் பிறகுதான் அவளுடைய திருமண பேச்சை எடுக்க முடியும் என்றும் தோன்றியது பழனியப்பனுக்கு.

 




10 Comments

You cannot copy content of this page