Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-40

 

அத்தியாயம் – 40

 

காடு மேடெல்லாம் சுற்றி… கல்லும் முள்ளும் நிறைந்த கடுமையான பாதையில் நடந்து… அலுத்துக் களைத்து வீடு வந்து சேர்ந்துவிட்ட நிம்மதியை ஆசுவாசமாக அனுபவித்தபடி மொட்டைமாடியின் பக்கவாட்டுச் சுவற்றில் சாய்ந்தமர்ந்திருந்த கார்முகிலன் தன்மீது கொடி போல் படர்ந்திருந்த மதுமதியை இருகரம் கொண்டு வளைத்திருந்தான்.

 

மாலை நேர தென்றல் காற்று… சுகமாக அவர்களை வருடிச் சென்றது. அவன் சாய்ந்திருந்த சுவறின் ஒரு பக்கம் படர்ந்திருந்த முல்லைக்கொடியில் அரும்பியிருந்த மொட்டுக்கள் வெடித்து மனம் பரப்பி சூழ்நிலையை ரம்யமாக்கியது. கூடு தேடி பறந்து கொண்டிருந்த பறவைகளும், அவர்களைக் கடந்து செல்லும் போது குரலெழுப்பி வாழ்த்திவிட்டுச் சென்றன. மனதோடு உடலும் லேசாகி காற்றில் மிதப்பது போல் உணர்ந்தவன் மௌனத்தை மொழியாக்கி மனைவியின் மனதோடு பேசிக் கொண்டிருந்தான். நெடுநேரம் நீடித்த மோனத்தில் மதுமதியின் மிக மெல்லிய குரல் இடையிட்டது.

 

“…..ர்…யீ… மா…” – அவள் ஏதோ சொல்கிறாள் என்பது தான் புரிந்ததே தவிர என்ன சொல்கிறாள் என்பது புரியவில்லை. மனைவியின் முகத்தைக் குனிந்து பார்த்தான். அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை… அதற்குமேல் எதுவும் பேசவும் இல்லை…

 

“என்ன சொன்ன..?”

 

ஒரு நொடி தயங்கிவிட்டு மீண்டும் மெல்லிய குரலில் கூறினாள், “சா…ரி… மாமா…”

 

“ஹாங்..” காதில் விழுந்த வார்த்தையை நம்ப முடியாமல் மீண்டும் கேட்டான்.

 

“சாரி மாமா… ரொம்ப சாரி… ரொம்ப ரொம்ப சாரி மாமா…”

 

அவனுக்குள் இன்னும் ஆழமாகப் புதைந்து கொண்டே அவள் மன்னிப்புக் கேட்ட விதம் அவன் இதயத்தில் சாரலடிக்கச் செய்தது. அவளுடைய ‘மாமா’ என்கிற அழைப்புத் தேனெனக் காதில் பாய்ந்து இனித்தது. இதற்கு முன்பும் ஓரிரு முறை அவள் அவனை ‘மாமா’ என்று அழைத்திருக்கிறாள் என்றாலும் இந்தமுறை தான் அவளுடைய அழைப்பு அவன் கருத்தில் அழுத்தமாகப் பதிந்தது. மனம் சிலிர்த்துப் போய் அவளை இறுக்கியணைத்து உச்சியில் இதழ்பதித்தான்.

 

“மன்னிச்சுடுங்க மாமா… ப்ளீஸ்… என்ன மன்னிச்சுடுங்க… தப்புப் பண்ணிட்டேன்…” தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள்.

 

“எதுக்கு சாரி..? மன்னிக்கற அளவுக்கு நீ என்ன தப்புப் பண்ணின?” – கொஞ்சிக்கொண்டே குழைந்த குரலில் கேட்டான்.

 

“எல்லாமே தப்புத் தான் மாமா… நேத்து நீங்க போலீஸ் ஸ்டேஷன்ல இருந்ததுக்குக் கூட நான் தான் காரணம். எல்லாமே என்னால தான்” – நைந்து போன குரலில் கூறினாள்.

 

“ஹேய்… பைத்தியம்… எதுக்கு இப்படில்லாம் பேசற? நேத்து நடந்த பிரச்னைக்கும் உனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல… சும்மா மனச போட்டுக் குழப்பிக்காத. அவனுக்குத் திமிரு… அடி வாங்கிகிட்டான். அதுக்கு நீ என்ன பண்ணுவ..?”

 

“இல்ல… தாத்தா சொன்னாங்க… நான் கலைவாணிகிட்டச் சண்டை போட்டதால தான் அவரு காலேஜுக்கு வந்து பிரச்சனை பண்ணியிருக்காரு… நான் தான் எல்லாத்துக்கும் காரணம்… நான் தான் உங்கள பழிவாங்கிட்டேன். பழைய கோபத்தையெல்லாம் மறக்காம மனசுல வச்சிருந்து என்னென்னவோ பண்ணிட்டேன். என்னோட கோபம் தான் உங்கள இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டுடுச்சு…” – மனம் வருந்த மீண்டும் கலங்கினாள்.

 

“பழிவாங்கறதா? என்ன பேசற நீ..? பழிவாங்கறவ தான் பதறியடிச்சுக்கிட்டு நேத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வந்தியா..? அப்படிப் பார்த்தா இதே மாதிரி ஒருநாள் நீ பிரச்சனையில மாட்டியிருந்தப்ப நான் வந்து கூடப் பார்க்கலையே…! என்னை என்ன பண்ணலாம்… ம்ம்ம்?”

 

“அந்த ஒரு சம்பவத்துக்காக நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டுட்டீங்க மாமா… நானே உங்கள எப்படி இவ்ளோ கஷ்டபடுத்தினேன்னு தெரியவேல்ல… அதையெல்லாம் இனி நினைக்கவே நினைக்காதீங்க மாமா…” – குரல் நடுங்க கூறினாள்.

 

“கரெக்ட்… நினைக்கக் கூடாது தான். அதை மட்டும் இல்ல… நேத்து நடந்த பிரச்னைக்கு நீ தான் காரணம்னு நினைக்கறப் பாரு… அந்த நினைப்பும் உன் மனசுல இனி இருக்கக் கூடாது…”

 

“ஆனா… நான் தானே…”

 

“மதி… வாழ்க்கையில சில சமயம் சில சம்பவங்கள் நம்மள மீறி நடந்துடும். அதுக்கெல்லாம் நம்மள நாமே காரணம் காட்டிக்கிட்டுக் கவலைப்பட்டுட்டு இருந்தோம்னா நிம்மதி எப்படி இருக்கும்..? நேத்து நடந்தது கூட அப்படி ஒரு சம்பவம் தான். விட்டுத்தள்ளு… ஆனா ஒரு விஷயம்…”

 

“என்ன..?”

 

“கொஞ்சம் சினிமா டயலாக் மாதிரி தான் இருக்கும்… ஆனா வேற வழி இல்ல… உண்மைய சொல்லணும்னா டயலாகெல்லாம் பேசித்தான் ஆகணும்…”

 

“என்ன டயலாக்..?” – புரியாமல் கேட்டாள்.

 

“நீ இப்படில்லாம் என்கூடப் பசை போட்ட மாதிரி ஒட்டிக்குவேன்னா டெய்லி ஒருத்தன போட்டுத் தாக்கிட்டு ஸ்டேஷன விசிட் பண்றதுன்னா கூட எனக்கு ஓகே தான்…” – சிரிக்காமல் கூறினான். ஆனால் அவன் சொன்ன விதத்தில் அவளுக்குச் சிரிப்பு வந்தது. கொஞ்சம் வெட்கம் கூட வந்தது. இறுக்கம் தளர்ந்து சற்று இயல்பானவள், “போங்க மாமா…” என்று அவன் நெஞ்சில் செல்லமாகக் குத்திவிட்டு மேலும் அவனோடு ஒட்டிக் கொண்டாள். கீழேயிருந்து கௌசல்யா அழைக்கும் குரல் கேட்டது.

 

“அம்மா கூப்பிடறாங்க மாமா…”

 

“ம்ம்ம்… டிஃபன் எடுத்து வைக்கச் சொன்னேன்…”

 

“ஓ… இன்னும் எதுவுமே சாப்பிடலயா நீங்க..? என்ன மாமா…! பசியோட உட்கார்ந்து தான் இவ்ளோ நேரம் டையலாக் பேசிட்டு இருந்தீங்களா..? வாங்க வாங்க…” சட்டென்று எழுந்தவள் பரபரப்புடன் அவனையும் எழுப்பினாள். இவள் தான் அவனுடைய பழைய மதி. சில காலங்களுக்கு முன் அவன் தொலைத்த பொக்கிஷம். இன்று அவனுக்குள் தொலைந்து கொண்டிருக்கும் பொக்கிஷம்…

###

 

“இப்போ எதுக்குடி இப்படி மூக்க உறிஞ்சிக்கிட்டு நிக்கற..? இந்தப் பிரச்சனைக்கே காரணகர்த்தா நீதான்… இன்னமும் அடங்காம அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு இருக்க… மரியாதையா வாய மூடிகிட்டுப் போய்டு…” – மேகலை மகளிடம் எரிந்து விழுந்தாள்.

 

“நான் என்ன பண்ணினேன்? எல்லாம் இவனால தான் வந்தது” கையில் கட்டுடன் சோபாவில் அமர்ந்து மட்டன் சூப்பை சுவைத்தபடி டிவி பார்த்துக் கொண்டிருக்கும் அண்ணனை வெறுப்புடன் பார்த்தாள் கலைவாணி.

 

“அவனை எதுக்குடி குறை சொல்ற? நீ தொட்டதுக்கெல்லாம் அழுது தொலைச்சா வீட்டுல இருக்கிறவங்க என்னத்தைக் கண்டாங்க? என்னமோ ஏதோன்னு பதறத்தான் செய்வாங்க…”

 

“மேகலா… எதுக்குச் சத்தம் போடுற? விடு…” – ஊஞ்சலில் அமர்ந்து ஏதோ கடை கணக்கை சரி பார்த்துக் கொண்டிருந்த கலைவாணியின் தந்தை மனைவியை அடக்கினார்.

 

“என்னை எதுக்கு அதட்டுறீங்க? எருமமாடு மாதிரி வளர்ந்திருக்கா… கொஞ்சமாவது அறிவு வேணாம்? இவ நீலிக்கண்ணீர பார்த்துட்டுத் தேவையில்லாம இவன் வேற போயி அடி வாங்கிகிட்டு வந்து கெடக்குறான்”

 

“எதுக்குப் போனான்..? நா போகச் சொன்னேனா..? இவனுக்குக் குடிச்சுட்டு யார்கிட்டயாவது வம்பிழுக்கணும். எவன்டா சிக்குவான்னு பார்த்துக்கிட்டு இருந்திருப்பான். அதான் சான்ஸ் கிடச்சோன்ன எங்க சார்கிட்ட வம்பு பண்ணி வாங்கிக் கட்டிக்கிட்டான். இவனால என் ப்ராஜெக்ட்டே இப்போ அந்தரத்துல தொங்கிக்கிட்டு இருக்கு” – தொண்டையடைக்க ஆத்திரத்துடன் பேசினாள்.

 

“உங்க சாரா…! இன்னிக்கு சார் சார்னு உருகறவ எதுக்குடி அன்னிக்கு அழுத?”

 

“அழுதா உடனே சண்டைக்குப் போய்டுவீங்களா..?”

 

“போகாம என்ன செய்வாங்க? வீட்ல இருக்கிற பொம்பள புள்ள அழுதா என்ன ஏதுன்னு கேக்க மாட்டாங்களா?”

 

“இவன் கேட்டுட்டு மட்டுமா வந்தான்? குடிச்சுட்டுப் போயி அசிங்க அசிங்கமாத் திட்டியிருக்கான். அதுக்குத்தான் எங்க சார் நல்லா கவனிச்சு அனுப்பியிருக்காரு…” – அண்ணன் தனக்காகத்தான் சண்டையிட்டு கையை உடைத்துக் கொண்டு வந்திருக்கிறான் என்கிற எண்ணம் சிறிதுமில்லாமல் அசால்டாகப் பேசினாள்.

 

அதுவரை அமைதியாக டிவி பார்த்துக் கொண்டிருந்த கதிரவனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. “யாரு யாரக் கவனிச்சது..? அந்தக் கருப்பாண்டி என்ன கவனிச்சானா? தெரியாத்தனமா அவன் எடத்துல போயி சிக்கிட்டோம். பத்து பேரு சேர்ந்து புடிச்சு எங்கள மடக்கிட்டானுங்க. அவன் மட்டும் வெளியே எங்கயாவது என் கைல மாட்டட்டும். அன்னிக்கு வச்சுக்குறேன் அவனுக்குத் தீபாவளி…” – குப்புற விழுந்த பிறகும் ‘என் மீசையில் மண்ணே ஒட்டவில்லை பார்’ என்பது போல் சிலிர்த்துக் கொண்டான்.

 

“எதுக்கு..? இன்னொரு கையையும் தொட்டில் கட்டி தொங்கவிடறதுக்கா?” – சற்று ஏளனமாகவே கேட்டாள். தங்கையின் ஏளனமான அவளின் பார்வையும் குரலும் அவனை மேலும் கோபம் கொள்ளச் செய்தது.

 

“ம்மா… இந்த லூச ஒழுங்கா வாய மூடிக்கிட்டுப் போகச் சொல்லு… இல்லன்னா… அப்புறம் அவ்ளோ தான்…”

 

“ஹேய்… யாருடா லூசு… நீதான் லூசு… அறிவுக்கெட்டத்தனமா போயி அடிவாங்கிட்டு வந்து நிக்கற… நீ என்ன சொல்றியா?”

 

“கலை…” – அதுவரை பொறுமையாக அமர்ந்திருந்த குடும்பத் தலைவர், பிள்ளைகளின் வாக்குவாதம் வலுப்பதைக் கண்டு மகளை அதட்டினார். தன்னிடம் அன்பை மட்டுமே காட்டும் தந்தை திடீரென அதட்டியதும் அதிர்ந்து போய்த் திரும்பினாள் கலைவாணி.

 

“என்ன பேச்சு பேசற? அவன் யாரு? உன் அண்ணன் தான? உனக்காகக் கேக்கப் போய்த் தான இவன் இப்படிக் கையை உடைச்சுக்கிட்டு வந்து நிக்கறான்..? அந்த எண்ணம் உன் மனசுல கொஞ்சமாவது இருக்கா? வரவர உன் சிறுபிள்ளைத்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டு. பேசாம உள்ள போ…”

 

தந்தையின் கோபத்தை எதிர்கொள்ள முடியாத கலைவாணியின் கண்களில் கண்ணீர் திரண்டது. “தப்புப் பண்ணினவனை ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறீங்க. இதுல என்னையே திட்டுறீங்க? சார் மேல வேற கேஸ் போட்டிருக்கீங்க… இப்போ நான் எப்படி என்னோட ப்ராஜெக்ட்டை முடிக்கறது?” – ஆத்திரத்தை அடக்க முயன்றபடி கேட்டாள்.

 

“ப்ராஜெக்ட்டாவது… கிராஜெக்ட்டாவது… ஏதோ புது வாத்தியாரு வந்திருக்காருன்னு சொன்னியே… அவர வச்சு முடிக்க முடிஞ்சா முடி… இல்லன்னா விட்டுத் தள்ளு… நீ படிச்சு வேலைக்குப் போயி தான் சாப்பிடணுங்கிற நிலமையில இங்க யாரும் இல்ல… வேலைய பாரு போ…” – சிறிதும் தயக்கமில்லாமல் சற்றுக் கடுமையாகவே பேசி மகளை அடக்கிவிட்டார்.

 

“ஹும்…” கோபத்தில் மேல் மூச்சு வாங்க கலைவாணியும் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றுவிட்டாள்.

 

தன்னால் கார்முகிலனுக்குப் பிரச்சனை வந்துவிட்டதே என்கிற உறுத்தலும் தவிப்பும் தான் வீட்டில் உள்ளவர்களிடம் அவளை அப்படிப் பேசவைத்தது. ஆனால் அவளுடைய பேச்சு அங்கிருந்தவர்களிடம் எடுபடவில்லை. ‘இவள் இப்படித்தான்…’ என்பது போல் போய்விட்டார்கள். பெற்றோரிடம் எரிந்து விழுவதும்… அண்ணனைத் திட்டுவதுமாக இருந்தாலும் அதற்குமேல் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.




4 Comments

You cannot copy content of this page