மனதோடு ஒரு ராகம் -1
19325
11
அத்தியாயம் -1
மாலை ஐந்து மணியிருக்கும்… சேலம் பெரியபுதூர் பகுதி… பணக்காரர்கள் வசிக்கும் வசதியான ஏரியாவில் அமைந்துள்ள அந்தப் பெரிய வீட்டின் தோட்டத்தில் வட்டமாகப் போடப்பட்டிருந்த மூன்று நாற்காலிகளும், வெள்ளை வேட்டியும் முண்டா பனியனும் அணிந்திருந்த ஆசாமிகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. வீட்டிற்குள்ளேயிருந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணிக் கையில் ‘ட்ரே’யுடன் வெளிப்பட்டாள். போர்ட்டிக்கோவைத் தாங்கி நின்ற தூணில் கட்டிவைக்கப்பட்டிருந்த ‘ரோச்சர்’ வாலை ஆட்டியபடி அந்தப் பெண்மணியிடம் தாவ முயன்றது.
“ரோச்… பேசாமப் படு… இது உனக்கு இல்ல…” – சங்கிலியை இழுத்துக் கொண்டு தன்னிடம் தாவும் நாயை அதட்டிவிட்டுத் தோட்டத்திற்கு வந்தாள்.
“டீ எடுத்துக்கோங்க…” – ட்ரேயை நீட்டிய சரளாவின் மேனியில் தங்க நகைகள் நிறைந்திருந்தாலும் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை. மாறாகத் தீராத சோகம் படர்ந்திருந்தது.
“ஒரு பிரச்சனை முடிஞ்சு மூணு மாசம் கூட ஆகல… அதுக்குள்ள எதுக்கு முருகா விஷப் பரிட்சை?” – மனைவி நீட்டிய ட்ரேயிலிருந்து ஒரு கோப்பையைக் கையில் எடுத்தபடித் தம்பியிடம் கேட்டார் ஜெயராமன்.
“பூர்ணி ஆசைப்படறா… அதான் யோசனையா இருக்கு” – வேல்முருகன் நெற்றியை நீவினார்.
“முருகா… அவக் குழந்தைடா… அவளுக்கு என்ன தெரியும்…?” வேல்முருகனின் இரண்டாவது அண்ணன் குலசேகரன் கேட்டார்.
“தாயில்லாத பொண்ணு… பிடிவாதம் பிடிக்கறா…” – வேல்முருகனின் புருவம் மேலும் சுருங்கியது. முடிவெடுக்க முடியாமல் அவர் குழம்புவது அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“நீங்க கவலைப்படாதீங்கத் தம்பி. பூர்ணி நான் வளர்த்தப் பொண்ணு. அவளை நம்பி எந்த ஊருக்கு வேணுன்னாலும் அனுப்பலாம்.” – சரளா இடையில் புகுந்துக் கூறினாள்.
“அப்போ ராஜீய யாரு வளர்த்தது? போடி உள்ள…” – ஜெயராமன் மனைவியிடம் சீறினார். அவர் முகத்தில் கோபத்தணல் கொட்டிக் கிடந்தது. சரளாவின் முகத்தில் வேதனையின் நிழல் படிந்தது. கண்கள் கலங்கின. பதில் பேசாமல் உள்ளே சென்றுவிட்டாள்.
“எதுக்குண்ணே அண்ணிகிட்டச் சத்தம் போடுற? ராஜி பண்ணினதுக்கு அவங்க என்ன செய்வாங்க?” – குலசேகரன் அண்ணனைக் கடிந்து கொண்டார்.
“எல்லாம் இவப் பொண்ண வளர்த்த லட்சணம்டா சேகரா… வந்துட்டாப் பேச… அவளோடயே சேர்த்து இவளையும்…” ஏதோ சொல்ல வாயெடுத்தார். ஆனால் அவருடைய பேச்சை தன் அதட்டலால் துண்டித்தார் வேல்முருகன்.
“அண்ணிய விடுண்ணே. பூர்ணி பிரச்சனைக்கு வா”
“முருகா… இதுக்கு ஒரே முடிவுதான். நம்ம ஊர்லேயே ஒரு நல்ல காலேஜா பார்த்துச் சேர்த்து விடுவோம். படிப்பை முடிச்சதும் உடனே கல்யாணம் பண்ணி வச்சுடலாம்”
அண்ணன் கூறுவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் புறக்கணிக்கவும் முடியாமல் குழப்பமான மனநிலையில் இருந்தார் வேல்முருகன். அவர் மகள் மீது கொண்டுள்ள அதீத பாசம்தான் அதற்குக் காரணம். அவருடைய செல்ல மகள் பூர்ணிமா ஒரு விஷயத்தைக் கேட்டு அதை அவர் மறுப்பதா…? ஆனால் அதற்காக அவளைச் சென்னைக்கு அனுப்பிவிட்டு நான்கு ஆண்டுகள் அவர் வயிற்றில் நெருப்பைக் கட்டுக் கொண்டும் இருக்க முடியாதே…! இதற்கு என்னதான் வழி…?
திருமணம் முடிந்துச் சில ஆண்டுகளிலேயே மனைவியை இழந்துவிட்டாலும் அதன் பிறகு தனக்கென்று ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ளாமல் மகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் வேல்முருகன் ஒரு ஜாதிக்கட்சி ‘எம்எல்ஏ’ என்பதும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அந்தக் குடும்பம் செழிப்பானது அவருடைய அரசியல் வளர்ச்சியால்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சகோதரர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கேட் திறக்கும் சத்தம் கேட்டது. மூவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தார்கள். இளம் வயது வாலிபன் ஒருவன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
“யாருப்பா நீ? என்ன வேணும்…?” – குலசேகரன் குரல் கொடுத்தார்.
வந்தவன் அவர் பக்கம் திரும்பவே இல்லை. வேல்முருகனின் மீது மட்டுமே பார்வையைப் பதித்தபடி அவர்களை நெருங்கியவன், பின்னால் கையை விட்டுச் சட்டையில் செருகியிருந்த நீண்ட அரிவாளை எடுத்து, “வெறி புடிச்ச நாயிங்களா… சாவுங்கடா…” என்றபடிச் சரம்வாரியாக வெட்டத் துவங்கினான்.
அவன் கையைப் பின்னால் கொண்டு சென்றதுமே ஏதோ சரியில்லை என்று உணர்ந்து சுதாரித்துக் கொண்ட சகோதரர்கள் நாற்காலியிலிருந்து எழுந்துவிட்டார்கள். அடுத்து அவன் அரிவாளை எடுத்ததும் அதிர்ந்து பின்னடைந்தார்கள். கையில் கிடைத்த சேர்… டீப்பாயையெல்லாம் எடுத்து அவன் மீது வீசினார்கள். போர்ட்டிக்கோவில் கட்டிக்கிடந்த ரோச்சர் சங்கிலியை அறுத்துக் கொண்டு வர முயன்றபடி பயங்கரமாகக் குரைத்தது.
அவனோ எதற்கும் அசைந்துக் கொடுக்கவில்லை. அவனுடைய கவனம் முழுவதும் வேல்முருகனை தாக்குவதில்தான் இருந்தது. தடுக்க வந்தவர்களின் மீதும் அவனுடைய அரிவாள் பாய்ந்தது. பயந்து பின்னடைந்தவர்கள் ஒருகட்டத்தில் வீட்டுக்குள் நுழைந்துவிட அவனும் அரிவாளுடன் உள்ளே நுழைந்தான். உள்ளே இருந்த வேலைக்காரர்களும் வீட்டுப் பெண்களும் கூச்சலிட்டபடி ஆளுக்கு ஒரு பொருளை அவன் மீது எடுத்து வீச… ஆண்கள் அவனைச் சுற்றி வளைக்க முயல… வந்தவன் சமாளிக்க முடியாமல் வெளியேறி ஓடினான்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு…
ஆங்காங்கே பழமையான பெரிய மரங்கள்… அதில் பூத்துக்குலுங்கி தரையில் அள்ளித் தெளித்த வண்ண மலர்கள்… மலர்வாசத்தைச் சுமந்து வீசும் காலை நேர தென்றல் காற்று… ரம்யமான இந்தச் சூழ்நிலையை அனுபவித்தபடிச் சிறுசிறுக் குழுக்களாக ஆங்காங்கே குழுமி நின்று தங்களைக் கடந்து செல்லும் இளம்பெண்களை ரசித்துத் தங்களுக்குள் கேலி செய்து மகிழும் மாணவர்கள் என்று உயிர்ப்புடன் இருந்தது சென்னையில் அமைந்துள்ள அந்தப் பிரபலமான கல்லூரி வளாகம்.
“என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா
என்னோடு உள்ளதெல்லாம் இளஞ்சிங்கம் படையப்பா
நெஞ்சிலாறு படையப்பாப் பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒண்ணு வருகையில் பத்து விரல் படையப்பா…” – பொறியியல் இறுதி ஆண்டு மாணவன் கதிர் திடீரென்று பாடினான். அருகிலிருந்த அவன் நண்பர்களும் “படையப்பா… படையப்பா… படையப்பா…” – என்று கோரஸ் கொடுத்தார்கள்.
“என்னடா…?” – நண்பர்களின் இந்தத் திடீர் கனமழைக்குக் காரணம் புரியாத சித்தார்த் கேட்டான்.
“மச்சி… அக்கட ச்சூடு…” – கதிர் சுட்டிக்காட்டிய திசையில் திரும்பிப்பார்த்த சித்தார்த்தின் பார்வையில் ஒரு மாணவன் தென்பட்டான். ஜீன்ஸ் பேன்ட், டி-ஷர்ட், கத்தரித்த தலைமுடி… காலில் கான்வாஸ் ஷூ, இரண்டு தோளிலும் மாட்டி முதுகில் தொங்கும் பை, கைகளை வீசி கால்களை எட்டிப்போட்டு நடக்கும் ரஜினி ஸ்டைல் நடை… அவன் அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தான்… இல்லை இல்லை… அவள்… ஆம்… அவள்தான்… ஆண் போல் உடையணிந்து வேக நடைபோட்டுக் கல்லூரி வளாகத்திற்குள் வந்து கொண்டிருப்பவள் ஒரு பெண்தான்… சித்தார்த்தின் முகத்தில் கீற்றாக ஒரு புன்னகைத் தோன்றியது…
“யார்ரா இவ…?”
“இவதான் நம்ம காலேஜ் பொம்பள படையப்பா… ஃபர்ஸ்ட் இயர் ஈசிஈ… ஒரு வாரமா நீ காலேஜ் பக்கம் வரலல்ல… அதான் உனக்குத் தெரியல”
“ஓ… நம்ம ஜூனியர் தானா…? கதிர்… ம்ம்ம்…” – அவளை அழைக்கச் சொல்லி நண்பனிடம் கண்ஜாடைக் காட்டினான்.
“வேண்டாம்டா… அவ சேலம் எம்எல்ஏ வேல்முருகனோட பொண்ணு. எட்டி நின்னுக் கிண்டலடிக்கரதோட நிறுத்திக்கோங்க… அவ்வளவுதான் நான் சொல்லுவேன்” – அந்தக் கூட்டத்தில் பயந்தவன் போல் இருந்த ஒருவன் எச்சரித்தான்.
“எம்எல்ஏ வேல்முருகனோட பொண்ணா…!” – சித்தார்த்தின் முகத்தில் மின்னல் வேகத்தில் ஓர் அதிர்வு வந்து மறைந்தது.
“எம்எல்ஏ பொண்ணுன்னா என்ன… பெரிய இவளா…? காலேஜின்னு வந்துட்டா இங்க சீனியர் ஜூனியர் ரெண்டே வர்க்கம்தான்… கதிர்… கூப்பிடறா அவள…” – சித்தார்த்தின் வார்த்தைகள் சீற்றத்துடன் வெளிப்பட்டன.
“ஓய்… படையப்பா…” – தங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தவளைக் கூவி அழைத்தான் கதிர்.
“ஹ்ம்ம்…” – சட்டென்று நின்றுத் திரும்பிப் பார்த்தவள் “மீ?” என்று கேள்வியாக நோக்கினாள்.
“உன்னத்தான்…. இக்கட ரா…”
சிறிதும் தயக்கம் இல்லாமல் அதே வேக நடையுடன் அவர்களை நோக்கி வந்தவள் “என்ன???” என்றாள் தலையை நிமிர்த்தி. முகத்தில் பயத்திற்கான அறிகுறிச் சிறிதும் இல்லை.
கதிர் சித்தார்த்தை திரும்பிப் பார்த்தான். ‘என்னடா இவ இப்படி மெரட்றா…?’ என்று கேள்விக் கேட்டது அவனுடைய பார்வை. அவனோ நண்பனைக் கவனிக்காமல் அந்தப் படையப்பாவையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நண்பனிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காததை அடுத்து அந்தப் பெண்ணிடம் திரும்பிய கதிர், அவளுடைய கேள்விக் கேட்டும் பார்வைக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான்.
“ம்ம்ம்… ம்ஹும்… ம்ம்ம்ம்…” என்று சைகையில் ‘என்னைக் கேட்காத… இங்க கேளு…’ என்று சித்தாத்தை கைகாட்டினான்.
“ம்ம்ம்… ம்ஹும்…” – கதிரை போலவே சைகை பாஷையில் ‘அப்படியா… ஓகே…’ என்று தோள்களைக் குளுக்கியவள் சித்தார்த்தின் பக்கம் திரும்பி “ம்ம்ம்ம்…?” என்று புருவம் உயர்த்தி ‘என்ன…?’ என்று கேட்டாள்.
‘கொழுப்பு…’ – மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் “பேரென்ன…?” என்றான்.
“பூர்ணி… பூர்ணிமா…” – துள்ளலுடன் பதில் கூறினாள்.
“பூசணி… பூசணிக்காய்… நல்லா இருக்கே பேரு…” – அவளைப் போலவே சித்தார்த்தும் குரலில் துள்ளலை வரவழைத்துக் கொண்டு பேசினான்.
“ஹாங்… பூசணி…?”
“ம்ம்… பூசணிக்காய்தானே உன் பேரு?”
“பூசணிக்காயா…! ஹலோ… என் பேரு பூ..ர்..ணி..மா…” என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு கூறினாள்.
“பூ…ச…ணி…க்காய்… வாவ்… வாட் எ பெர்ஃபெக்ட் சாய்ஸ் ஆஃப் நேம் ஃபார் யூ பூசணி… ஐ லைக் இட்…” – அவளை ஏற இறங்கப் பார்த்தபடி நக்கலாகக் கூறினான்.
அவளுடைய பூசினார் போன்ற உடல் அமைப்பைக் கேலிச் செய்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. அதுவரை அந்த இடத்தில் இயல்பாக நின்றுக் கொண்டிருந்தவளுக்குச் சற்றுச் சங்கடமாக இருந்தது. ‘என்னவோ சொல்லிக்க… எனக்கென்ன வந்தது…’ என்பது போல் சட்டென்று திரும்பி அங்கிருந்து நகர முற்பட்டாள்.
“ஏய் நில்லு… என்ன பேசிட்டு இருக்கும் போதே கிளம்புற…? அவ்வளவு திமிரா?” – கடுமையாகக் கேட்டான்.
“என்ன சார் உங்க பிரச்சனை…? ராகிங் பண்ணனுமா…? சீக்கிரம் பண்ணிட்டு அனுப்புங்க… எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு…” – கைகடிகாரத்தை ஒரு முறைத் திருப்பிப் பார்த்துவிட்டு சித்தார்த்தின் முகம் பார்த்துக் கூறினாள்.
‘எவ்வளவு திமிர்…!’ – சித்தார்த் மனதிற்குள் வெகுண்டான்.
‘வாங்குனாண்டாச் செம்ம மொக்கை…’ – அங்கிருந்த சித்தார்த்தின் நண்பர்கள் அவனை இரக்கத்துடன் பார்த்தார்கள். அதுவரை ஹீரோவாக இருந்த தன்னுடைய இமேஜ் சற்றுச் சரிவது போல் உணர்ந்தான் சித்தார்த்.
“ஓஹோ… அவ்வளவு தைரியமா? அப்போ டீ பிரேக்ல கேண்டீனுக்கு வா… அங்க பேசிக்கலாம்… இப்போ கிளம்பு…” – ஆழ்கடலின் அமைதியுடன் ஒலித்தது அவன் குரல்.
“ஓகே…” – அலட்சியத்துடன் தோள்களைக் குளுக்கியவள் கல்லூரிக் கட்டிடத்தை நோக்கி நடையைக் கட்டினாள்…
11 Comments
thangalakshmigolda@gmail.com
Where is the full stories
Nice
How to open
issue cleared
Nice epi
Nice
😍
Nice starting akka….
Super starting sis
Nice